Wednesday, February 23, 2022

அறிவியலாளரும் தொழில்நுட்பரும்

 அறிவியலாளரும் தொழில்நுட்பரும்


நான் ஆசிரியப் பணியேற்றுச் சில ஆண்டுகளில் - 1980 களின் நடுப்பகுதியில் - நடந்தது.


அவர் அறிவியல் தொழில் நுட்பத் துறையில் உச்ச நிலைகளில் பணியாற்றியவர்; கல்வித் துறை வல்லுநராகவும் பல பொறுப்புகளில் இருந்தவர்; தமிழ் வரிவடிவச் சீர் திருத்தவாதி.அவரன்னோர் எளிவந்து தமிழ் வளரச்சிப் பணிகளில் ஈடுபடுவது பெருந்தன்மையின் அடையாளம். 


அவர் ஒரு கட்டுரையில் 'பண்டிதர்கள் வேறு, படைப்பாளிகள் வேறு. பழமை பேணும் தமிழ்ப் பண்டிதர்கள் தம்மைப்  படைப்பாளிகளாகக் கருதிக் கொள்கிறார்கள். படைப்பாளிகள் புதுமைகளுக்கேற்ப மாறுதல்களைச் செய்பவர்கள். புதிய கருவிகளில் தமிழைக் கொண்டு செல்வதற்குரிய மாறுதல்களுக்குப் பண்டிதர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்' என்னும் கருத்துப்பட  எழுதியிருந்தார்.




நான், அந்தக் கட்டுரை வெளிவந்த இதழுக்கு , 'ஆம். தொழில்நுட்பர்கள் தங்களை அறிவியலாளர்களாகக் கருதுவது போல்தான் ... தொழில்நுட்பர்கள் இருக்கும் எந்திரத்துக்குள் வராதவற்றை ஏற்பதில்லை; சீர்  திருத்தி எந்திரத்திற்கேற்ப மாற்ற வேண்டும் என்பார்கள். அறிவியலாளர்கள் புதியன கண்டுபிடித்துப் புதிய எந்திரத்தை உருவாக்குவார்கள்' என்று கடிதம் எழுத எண்ணினேன்.


எம் கல்லூரி முதல்வர் பி.விருத்தாசலம் ஐயாவிடம் அன்று மாலை , பேச்சுவாக்கில் வழக்கம்போல் அது பற்றிச் சொன்னேன்.

" அனுப்பிட்டியா?" என்றார். "அனுப்பப் போகிறேன்" என்றேன். "நீ நினைப்பது சரிதான். ஆனால்,வேண்டாம். நீ வளர வேண்டியவன். இது போன்ற ஆட்களிடம் வம்பு வேண்டாம்" என்று விளக்கினார்.

இது போதாதா எழுத்துச் சோம்பேறியான நான் கைவிடுவதற்கு .


அந்தக் கல்வியாளரின் கால்தூசிக்குக் கூட  என் படிப்பு ஈடாகாது. ஆனால், அறிவியல் என்பது படிப்பு, கல்வி, பயிற்சி, ஆய்வகம் முதலியவற்றை மட்டும் சார்ந்ததன்று; அடிப்படையில் அது பார்வை சார்ந்தது.


 இன்றைய நிலையில் அறிவியல்  மேம்பாட்டுக்கு மிகப் பெரும் கட்டமைப்புகள் தேவை; அவற்றில் பணியாற்ற உரிய கல்விப் பின்னணி தேவை. இவற்றை அரசோ மிகப் பெரும் முதலீடு செய்யும் நிறுவனங்களோதாம் செய்ய முடியும். இவற்றால், மக்கள் திரளிடம், அறிவியல் இதுதான் என ஒன்றைக் குறித்த பிரமையை உருவாக்கி விட முடியும்.


தனக்குச் சாதகமான தொழில்நுட்பாதிக்கர்களை (Technocrats) ஆளும் வர்க்கம் அறிவியலாளர் என்று கூட அன்று, அறிவியல் மேதை என்றே தூக்கிப் பிடிக்கும். அதிலும் அந்தத் தொழில்நுட்பாதிக்கர் எளிமை, அறம் முதலியவற்றைக் கடைப்பிடிக்கும் தோற்றத்தோடு சில வினோதமான அன்றாட நடைமுறைகளைக் கொண்டவராகவும்   ஒரு பிரம்மச்சாரியாகவும் இருந்து விட்டால் அவர் ஓர் அறிவியல் ஞானி என்னும் பிம்பத்தை ஆளும் வர்க்கம் உருவாக்கிவிடும்.  ஆளும் வர்க்கத்திற்குச் சாதகமான    'அறிவியல் ' விளக்கங்களை அவர் தருவார்.


நான், தனிப்பட்ட எவரையும் குறிப்பிட வில்லை; பொதுமைப் படுத்தியிருக்கிறேன்.

பொதுமை தனிப்பட்ட - ஆமாம். நீங்கள் நினைக்கிற - அவரையும் உள்ளடக்கியது தான்.( படத்திற்கு  நன்றி interest.co.nz)

Tuesday, February 22, 2022

தமிழ்ச் சொல்லாக்கம்

 



பேராசிரியர் முனைவர் ஆ.திருநாகலிங்கம் (Thirunagalingam Arumugam) தம் முகநூல் இடுகையில் ஒரு பழைய விவாதத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார் : 

நாட்டுப் புறவியலா? நாட்டார் வழக்காற்றியலா? என்ற Folklore இன் தமிழாக்கம் பற்றிய விவாதம் புதிதன்று.


நான் நாட்டுப்புறவியலாளன் அல்லேன். தயக்கத்துடனேயே இதில் நான் தலையிடுகிறேன். 


ஒரு மொழியிலிருந்து (தருமொழி) பிறிதொரு மொழி(பெறுமொழி) சொல்லை / சொற்றொடரைப் பெற்றுத் தன்வயமாக்கும்போது, பெறுமொழியில் ஏற்கெனவேயுள்ள சொற்களையே ஒருபுடை ஒப்புமை கருதிப் பயன்படுத்த நேருகிறது. 

ஆங்கிலம் (தருமொழி) > தமிழ் (பெறுமொழி) என்று கொள்வோம். Folklore ஐயே எடுத்துக் கொள்வோம்.

அது, ஆங்கிலத்தின் வழியாகத் தமிழுக்கு அறிமுகமான

தொடக்க காலத்தில் தமிழ்ச் சமூகம் அதனை எவ்வாறு உள்வாங்கியதோ அந்த உணர்வுக்கேற்ற தொடரைத் தமிழிலிருந்தே ஆக்கிக் கொண்டது .


'நாட்டுப்புறம்' என்னும் சொல் தமிழ் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் இருப்பதாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) சுட்டுகிறது; தமிழில் பெருங்கதையிலேயே," நாட்டுப்புறமாக்களும் வேட்டுவத் தலைவரும் " ( உஞ்சைக்.43.54) என்னும் தொடர் இருப்பதைக் காட்டுகிறது; countryside, moffussil ; பட்டிக்காடு என்று பொருள் தருகிறது. தமிழின் அன்றாட வழக்கிலும் இது நிலவுகிறது. அதிலிருந்து, நாட்டுப்புறம் + இயல் = நாட்டுப்புறவியல் என்ற புதுத் தொடரை Folklore க்கு இணையாகப் படைத்துக் கையாளும் வழக்கம் ஏற்பட்டு நிலைபெற்றது. ( நாட்டுப்புரம் ?)


இங்கு ஒன்றைக் கருதுதல் வேண்டும். சொற்கள் பொருளைக் குறிப்பனவேயன்றிப் பொருளுடையன அல்ல. எனவே, Folklore என்ன பொருள் குறிக்கிறதோ அதை நாட்டுப்புறவியலும் குறிக்கும். துல்லியம் கருதி வேறு பிற தொடர்களைப் படைத்து இடர்ப்பட வேண்டியதில்லை.


ஆனால், பிறழ உணர்ந்து சற்றும் பொருந்தாமல் ஆக்கப்படும் சொற்களைத் துல்லியம் நோக்கிக் கைவிடலாம். புனைகதைக் கூறுகளுள் ஒன்றாகிய

plot என்பதைச்  சூழ்ச்சி, சதி, கரு என்றெல்லாம் தமிழாக்கியதுண்டு. இவை பொருந்தா. புதுமைப்பித்தன் கதைப் பின்னல் என்றார். இது ஏற்புடையது. கதைக் கோப்பு, கதைப் புணர்ப்பு முதலியனவும் ஏற்புடையன எனினும், புதுமைப் பித்தனின் ஆக்கம் நிலை பெற்றுவிட்டது. 


தமிழாக்கத்தில் பிறிதொரு சிக்கல் இருப்பதையும் கருத வேண்டும். Romanticism என்பது புனைவியல் என்று தமிழாக்கப்பட்டது [புனைவியம் எனலே பொருந்தும். இது பற்றிய எனது 'இயமும் இயலும் ' என்னும் (Jul 22, 2018) முகநூல் இடுகை காண்க]. 


புனைவியல் பற்றிய சில கட்டுரைகளில் புனைவு என்னும் தமிழ்ச் சொல்லின் முந்தைய பொருள்களையும் எடுத்து, புனைவியலைக் குழப்பியிருப்பது கண்டேன்.

Romanticism என்னும் ஆங்கிலச் சொல் குறிக்கும் பொருளை மட்டுமே புனைவியலும் குறிக்கும். 

புனைவியல் என்பது ஒரு புடை ஒப்புமை கருதிய புதுச் சொல்லாக்கம். புனைவு என்பதன் முந்தைய பொருள் அனைத்தையும் இது குறிக்காது.


சில வேளை, நயமுடை இணை கிடைத்துவிடும். கணினித் துறையின் mouse தமிழில் 'சுட்டெலி'யானது. இது தருமொழியை விடவும் நயமானது எனலாம்.

Friday, February 18, 2022

தடுத்தாட்கொள்ளும் தமிழ்ப்பேராசான்!

 

தில்லைத்தானம் நடராச ஐயர் இராமச்சந்திரன்!


முதுமுனைவர் சேக்கிழாரடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன்!


நாங்கள் டி என் ஆர் என அஞ்சியும் அன்புபட்டும் அகலாது அணுகாது அழைத்து மகிழ்ந்த பேராசானைக் காலம் கொண்டுவிட்டது.


தஞ்சை, செல்வம் நகர் இல்லத்தின் - ஒரு பல்கலைக்கழகம்! - தாழ்வாரத்தில் ஊசலாடியவாறே அவர் உரையாடும் காட்சி மனக்கண்ணில் நிற்கிறது; கணீர்க் குரல் நெஞ்சில் நிற்கிறது. 


" ஐயாறப்பா " என நெஞ்சார வாயார அசைவு தோறும் வழிபட்டுக் கொள்வார்.தம் குல மரபில் வழுவாது ஒழுகியபோதிலும்  " சைவம் நான் நெஞ்சறிந்து மேற்கொண்ட சமயமையா " என்றார் ஒருமுறை. 


போப்பையரின் (G.U.Pope) நாலடியார் மொழிபெயர்ப்பின் வழியாகவே தமிழின் ஆழமுணரத் தலைப்பட்டதாக ஒருமுறை சொன்னார்.


காண்போரை வயப்படுத்தும் முகக்கனிவும் , நீறு துலங்கும் நெற்றியும் , தாம்பூலம் மணக்கும் வாயும்,  சொல்தோறும் தென்படும்  நூலறிவார்ந்த நுண்ணறிவும் ,  பேச்சிலும் எழுத்திலும் தமிழெனில் தமிழே ஆங்கிலமும் அவ்வாறே என ஒன்றிலொன்று கலவாத மொழித் திறமும் , எழுத்தில் மட்டுமன்றிப் பேச்சிலும் ஒலிப்பு முறைமை பிறழாமையும் , தமிழினின்றும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும்போது இருமொழி மரபின் செம்மாப்பும் குன்றாமல் பேணுவதும் , சேக்கிழாரையும் சேக்சுபியரையும் கம்பனையும் மில்டனையும் (மாமுநி மில்டனார் என்பார்) தொடர் வகுப்புகளில்  கேட்டார்ப்பிணிக்கும் தகையவாய்ப் பொழிவதுவும், இன்னும் திருமுறைகள், திவ்வியப் பிரபந்தம் முதலிய பற்பல இலக்கிய இலக்கணப் புலமையும் ,எந்நிலை அறிவினராயினும் அவரவர் உளங்கொளச் சைவ சித்தாந்தத்தை உணர்த்துவதும் ,    பாரதி , பாரதிதாசன் , புதுமைப்பித்தன் , திருலோக சீதாராம் (அவரது சிவாஜி இதழின் பிற்கால ஆசிரியர் டி.என்.ஆர். ) என நவீனத் தமிழ் இலக்கியங்களுக்குள்ளும் புகுந்து புறப்படுவதும் , கேட்போர் காலமென ஒன்று உண்டென்பதையே கருதாத அளவிற்குப் பல்துறை அறிவின் விரிவோடு நகை முதலாய சுவை பொதிந்த துணுக்குகளால் தடுத்தாட் கொள்ளுவதும் ,   இன்னும் இன்னும் என் சிற்றறிவுக் கெட்டாத மேதைமை கொண்ட பேராசான்.


அடிப்படையில் அவர் திறமான வழக்கறிஞர். ஆனால், அவரது தேர்வு இலக்கியமும் மெய்யியலும். இவைதாம் அவருக்குப் புகழ் ஈட்டித்தந்தன ; அவர்தம் அடையாளமுமாயின.


 தலைமையாசிரியர் திரு. நடராசன் தம் 55 ஆம் அகவையில் தம்மினும் இளையனான என் மேற்பார்வையில் - அறிமுகத்துக்கு மேல் நான் அறியாத - சைவசித்தாந்த சாத்திர நூல்களின் உவமைகள் பற்றி ஆராய முற்பட்டார் . நான் தயங்கினேன். ஒருவழியாக

 டி என் ஆர் அவர்களைச் சரணடைந்தோம். ஆய்வாளர் நெறியாளர் இருவரும் வந்தால்தான் நடத்துவேன் என்று நிபந்தனை விதித்தார் டி என் ஆர்.


ஏறத்தாழ ஆறு மாதம் அவரது நேர வசதி சார்ந்து பாடம் கேட்டோம். ஒரு நல் வாய்ப்பு.


நண்பர் பேரா. அரங்க. சுப்பையா பெரியபுராணப் பதிப்புகள் பற்றி ஆராய எடுத்துக்கொண்டதே சேக்கிழாரடிப்பொடி   டி என் ஆர் வழிகாட்டலையும் அவரது இல்லத்தின் மிகுபெருநூலகத்தையும் கருத்தில் கொண்டுதான். அப்போதும் நெறியாளனான நானும் உடன் வரவேண்டும் என்பது நிபந்தனை.


இன்னும் பற்பல நிகழ்ச்சிகள். 


தமக்கென உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவராயினும் கருத்து வேறுபாடுகள் கருத்துநிலை மாறுபாடுகள் கருதாமல் உரையாடுவார் ; தம் அரும்பெரும் நூலகத்தைத் தடையின்றிப் பயன்கொள்ள இசைவார். அறிவொழுக்கம்!


கடைசியாகத் தி.ஜானகிராமன் நூல்களின் முதல் பதிப்புகள் பற்றி உசாவ அவரைச் சந்தித்து நான்காண்டுகளாகியிருக்கலாம். பாரதிதாசன் பல்கலைக் கழகப் புத்தொளிப் பயிற்சி ஒன்றிற்கு வல்லுநராக வந்திருந்தார். நான் ஓய்வு பெற்றுவிட்டேன் எனினும் அவரைச் சந்தித்திருக்கலாம். யாது காரணத்தாலோ இயலாமற் போயிற்று. 


அவர் சென்னை வாசியாகிவிட்டார். சந்திக்கும் வாய்ப்புக் கிட்டத்தட்ட அற்றுப்போய்விட்டது. இனி வாய்ப்பே இல்லை.

Wednesday, February 16, 2022

கொஞ்சம் இலக்கணம் கொஞ்சம் கலகம் ! (ஆசிரியரைப் படிக்க வைத்த கதை)


 எங்களுக்கு _____ என்னும் ஓர் ஆசிரியர் இருந்தார் (இன்னும் சிலரும் இருந்தனர். தனியே சொல்லவேண்டும்). அவர் பயின்ற காலத்தில் நன்றாகப் படித்தவர்தான். அவருடைய ஆசிரியர்கள் சொல்லியிருக்கின்றனர். நம்பகமானதுதான்.

ஆனால்,
அவர் எங்கள் ஆசிரியர் ஆன காலத்தில் , மாணவராயிருந்து பயின்றதெல்லலாம் பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்ப் போய்விட்டது. பாவம்!

எங்களுக்கு யாப்பருங்கலக் காரிகை நடத்தினார். புத்தகத்தைத் தூக்கிக்கொண்டுவருவார்; படிப்பார் ; பொருள் சொல்வார்; புரிவது பற்றிக் கருதமாட்டார்.

மாணவர்கள் ஐயம் கேட்கக் குறுக்கிட்டால் அரட்டல் உருட்டல்கள்தான். அவருக்கு உரத்த குரல் வேறு." நேத்து நடத்துனது புரிஞ்சுதா? சொல்லு" என்பார். சொல்லிவிட்டால் முந்தாநாள், அதற்கு முந்தின நாள் என்று அதட்டலில்,  கேட்டவனைத் திக்குமுக்காட வைத்துக் கடைசியில், " உக்காரு . இலக்கணமெல்லாம் படிப்படியா புரிஞ்சுகிட்டு வரணும். போய்ப்படி. என் நேரத்த வீணாக்காதே " என்று படிக்கத் தொடங்கிவிடுவார்.

என் கல்லூரி நண்பர் கலியமூர்த்தி  எங்கள் மேலவீதியில்  அறை எடுத்துத் தங்கியிருந்தார். நானும் நண்பர் கலியமூர்த்தியும்  ஒன்றாகப் படிப்போம். ஆசிரியர்கள், பாடங்கள், தேர்வுகள் முதலியவை பற்றி அரட்டை இல்லாமலிருக்குமா? அரட்டைக்கிடையில்தான் படிப்பு என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அப்படி ஓர் அரட்டையில்  'அவரு'க்குப் பாடம் புகட்ட முடிவு செய்தோம்.

பாயிரம் , அவையடக்கம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி, முதல் காரிகை (சூத்திரம்) நடத்தி முடித்திருந்தார். இது சற்று விரிவாக நடத்த வேண்டிய காரிகை. சில வகுப்புகள் ஓடின. இதில்தான் மாணவர்கள் ஐயம் எழுப்பினார்கள்.
இரண்டாவது காரிகை நடத்த வேண்டும். அவருடைய ஆயுதம் மறைவானதல்லவே. எனவே பாயிரம் , உரை என அனைத்தையும் புரிந்துகொண்டு , உரை உட்பட , மனப்பாடமாகவும் பதியவைத்துக்கொண்டோம்.

இப்போது கொஞ்சம் இலக்கணம். கடினமில்லை. குறில் , நெடில், ஒற்று ஆகியவை தெரிந்தால் போதும் . எண்களை மட்டும் பின்பற்றுங்கள் புரியும்.

" குறிலே  நெடிலே குறிலிணை ஏனைக் குறில்நெடிலே
   நெறியே வரினும்  நிரைந்தொற்(று) அடுப்பினும் நேர்நிரைஎன்(று
   அறிவேய் புரையுமென் றோளி யுதாரணம்  ¹ஆ²ழி³வெள்⁴வேல்
   ⁵வெறியே ⁶சுறா⁷நிறம் விண்டோய் ⁸விளாம்என்று வேண்டுவரே "
     (யாப்பருங்கலக் காரிகை, 5)

இந்தக் காரிகை உதாரணத்தையும் கொண்ட காரிகை (¹ முதல்  ⁸ வரை உதாரணங்கள்)

௧) [குறில்] குற்றெழுத்துத் தனியே வரினும்                             (²ழி)*
௨)[ நெடில் ]-நெட்டெழுத்துத் தனியே வரினும்                         (¹ஆ)
௩) [குறிலும் ஒற்றும்] - குற்றெழுத்து ஒற்றடுத்து வரினும்   (³வெள்)
௪) [நெடிலும் ஒற்றும்] -நெட்டெழுத்துஒற்றடுத்து வரினும்    (⁴வேல்)    - நேர் அசை


௫)குறில் இணைந்து வரினும்                                                         (⁵வெறி)
௬)குறில் நெடில் இணைந்து வரினும்                                           (⁶சுறா)
௭)குறில் இணைந்துஒற்றடுத்து வரினும்                                     (⁷நிறம்)
௮)குறினெடில் இணைந்து ஒற்றடுத்து வரினும்                       (⁸விளாம்)   நிரை அசை.

(*²,¹ என வரிசை மாறியுள்ளது காண்க)

நாங்கள் அப்பாவித்தனமாய்ப் பாடம் கேட்டோம். ஒரே வகுப்பில் நடத்திவிட்டார். அது போதுமானது. கலியமூர்த்தி எழுந்து , " ஐயா குறிலே நெடிலே என்று இலக்கணம் கூறி உதாரணத்தில் வரிசையை மாற்றியிருப்பது ஏன்?" என்றார்.

யாப்பருங்கலக் காரிகை உரை ,  இத்தகைய வரிசை  மாற்றத்தை,   " தலை தடுமாற்றம் " என்று கூறும்.  இப்படித் தலை தடுமாற்றமாகக் கூறுவதை, " தலை தடுமாற்றம் தந்து புனைந்துரைத்தல் " என்னும் உத்தியாகக் கூறுவது மரபு. இவ்வாறான வரிசை முறை மாற்றத்தைக் கொண்டு தொடர்புடைய மேலதிகமான இலக்கணக் கூறு விளக்கப்படுவது வழக்கம். ஆனால் உரை இதுபற்றி மூச்சே விட வில்லை.

கலியமூர்த்தி வினாவுக்கு " அட, சொல்ல வந்தது புரியுதா இல்லியா? சொல்லாதத ஏன் கேக்குற ? உக்காரு " என்று ஆணையிட்டார்.
நான் எழுந்தேன் , " ஐயா தலை தடுமாற்றத்திற்குக் காரணம் இல்லாமல் இருக்காதுன்னு தோனுது " என்றேன்.


அவர் வழக்கம்போல் வினாக் கணை தொடுக்கத் தொடங்கினார் . இரண்டு வினாக்களிலேயே பயனில்லை என்பதை மட்டுமன்றி, நாங்கள் திட்டமிட்டே இதில் இறங்கியிருக்கிறோம் என்பதையும் புரிந்துகொண்டார்.

முதன் முதலாக, " பாத்து சொல்றேன் " என்று பின்வாங்கினார்.

அடுத்தடுத்த நாட்களில் அவரது வேகம் மட்டுப்பட்டது. நாங்களும் எங்கள் ஐயத்தைத் தொடர்ந்து வற்புறுத்தாமல் விட்டுவிட்டோம். ஆனால் அவ்வப்போது ஐயக்குறி தோன்றுவதுபோல் பாவனையாக அவரைப் பார்ப்பதை விளையாட்டாகச் சிலநாள் தொடர்ந்தோம்.
அவரும் அரட்டல் உருட்டல்களைக் குறைத்துக்கொண்டதோடு படித்துக்கொண்டுவந்து ஐயங்களை எதிர்கொள்ளவும் தொடங்கினார்.


குறிலே நெடிலே ...என்று வைத்து , உதாரணங்களை நெடிலும் (ஆ) , குறிலும் (ழி), எனத் தலைதடுமாற்றமாகக் கூறக் காரணம் யாப்பின் அமைப்பு (யாப்பமைதி)தான்; வேறொன்றுமில்லை.முடிந்தவரை எளிமையாகச் சொல்கிறேன். 

குறிலே  நெடிலே  குறிலிணை  யேனைக் குறினெடிலே
நெறியே  வரினு  நிரைந்தொற் றடுப்பினு நேர்நிரையென்
றறிவேய்  புரையுமென்  றோளி  யுதாரண மாழிவெள்வேல்
வெறியே சுறாநிறம் விண்டோய் விளாமென்று வேண்டுவரே
(யாப்பருங்கலக்காரிகை, 5)

மூன்றாவது அடியின் இறுதி இரு சீர்கள் : " உதாரண     மாழிவெள்வேல் "  (உதாரணம் ஆ ழி வெள் வேல் ).

உதா - குறில் நெடில்                  -நிரை அசை
ரண- குறில் இணை                   -நிரை அசை
( நிரைநிரை  என்னும் இச்சீரின் வாய்பாடு    கருவிளம்.)

மா  -  நெடில்                                          - நேர் அசை
ழிவெள் - குறில் இணை ஒற்று      - நிரை அசை
வேல் - நெடில் ஒற்று                           - நேர் அசை
(நேர்நிரைநேர்  என்னும் இச்சீரின் வாய்பாடு   கூவிளங்காய்) 

வாய்பாடுகளும்  குறிப்பிட்ட அசைச் சேர்க்கை கொண்டவையாகவே அமையும். அதனால்தான் அவை வாய்பாடுகளாகக் கொள்ளப்படுகின்றன. 

கரு|விளம்  - நிரைநிரை  

கூ|விளங்|காய் - நேர்நிரைநேர்.

உதாரண           மாழிவெள்வேல்
          ----------           ---
                  /              \
            விளம் முன் நேர்
            - ரண     →        மா -
இவ்வாறு ' விளமுன் நேர் ' என்றால்தான் அது வெண்டளை[வெண் (பா) தளை] ஆகும்.இவ்வாறு வெண்டளையாக வரவேண்டும் என்பது கட்டளைக் கலித்துறை இலக்கணம்.யாப்பருங்கலக் காரிகை கட்டளைக் கலித்துறையால் ஆனது. எனவேதான் காரிகை ஆசிரியர்  அமிதசாகரர் நெடிலும் குறிலுமாக (ஆ ழி என) வைத்துள்ளார். இந்தச் சீரைக் குறில்நெடிலாக அமைத்தால் தளை தட்டும் (தளை மாறுபடும்; பிழைபடும்).

இந்த யாப்பில் எழுத்து எண்ணிக்கையும் வரையறுத்து அமையும்.

கட்டளைக்கலித்துறை இலக்கணம்:
(1)நெடிலடி நான்காய் வரும்.
(2)முதல் நான்கு சீர்களிடையில் வெண்டளை அமையும்.
(3)ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீராகவே முடியும்.
(4)அடியின் முதல்சீர் நேரசையில் தொடங்கினால் ஒற்று
நீங்க 16 எழுத்தும், நிரையசையில் தொடங்கினால் ஒற்று
நீங்க 17 எழுத்தும் வரும்.
(5)ஈற்றடியின் இறுதிச் சீர் ஏகாரத்தில் முடியும்.
( நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்)

பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்களின் சிறு தலையீடு:

யாப்பருங்கலம் நூற்பா யாப்பில் அமைகிறது; உதாரணம் கூறவில்லை. ஆனால் நேரசைக்கான நூற்பா,

நெடில்குறில் தனியாய் நின்றும்ஒற்று அடுத்தும்
நடைபெறும் நேரசை நால்வகை யானே. (யாப்பருங்கலம், 6)

என  ‘நெடில்குறில்’ என்பதில் தொடங்குகிறது. குறிலைக் கூறிப் பின் நெடிலைக் கூறுவதுதானே சரி? ஆனால் யாப்பருங்கலம் நெடிலைக் கூறிப் பின் குறிலை வைப்பது ஏன்?

காரிகையின் தலைதடுமாற்றத்திற்கும் யாப்பருங்கலம் நெடில்குறில் எனக் கூறுவதற்கும் ஒரே காரணம்தான். ‘குறில்நெடில்’ என்னும் வரிசையில் வைத்து ஒரு சொல்லை நேரசைக்கு உதாரணம் காட்ட முடியாது.  ‘ஆழி’ என்னும் சொல்லே இருநூல்களின் உரைகளிலும் உதாரணமாக வருகிறது. ஆ – தனிநெடில்; நேரசை. ழி – தனிக்குறில்; நேரசை. இதே காரிகையில்  ‘குறில்நெடில்’ வரிசையில் இரு உதாரணங்கள் வருகின்றன.  ‘சுறா’ என்னும்  சொல்  ‘குறில் நெடில்’  நிரையசைக்கான உதாரணம். ‘விளாம்’ என்பது  ‘குறில் நெடில் ஒற்று’ நிரையசை உதாரணம்.   ‘குறில் நெடில்’ என்னும் வரிசையில் உதாரணம் காட்டினால் அது நேரசைக்கான உதாரணமாக அமையாமல் நிரையசைக்கான உதாரணம் ஆகிவிடும். ‘குறில் நெடில்’ என முறைப்படி காரிகை தொடங்கினாலும் இக்குழப்பத்தைத் தவிர்க்கவே  உதாரணம் ‘நெடில் குறில்’ என்னும் வரிசையில் அமைகிறது. குறில் நெடில் என்னும் வரிசையில் உதாரணம் கூற இயலாது என்பதால் யாப்பருங்கலம் ‘நெடில் குறில்’ என்றே கூறிவிடுகிறது.

எனது விளக்கம்:
இதில் சிறிய சிக்கல் இருக்கிறது. ' ஆழிவெள்வேல் ' ஒரே சீர்.
'ஆ|ழிவெள்|வேல்' என அசைகள் அமைந்துள்ளன. எனவே இங்கும் நெடிலுக்கு மட்டுமே உதாரணமாகி, ழிவெள் என நிரையசையாகிக் குழம்ப வாய்ப்புண்டு .

Saturday, February 12, 2022

தனித்தமிழ் என்னும் தமிழ்மரபு !

          இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர்வினை

            எனஇரண்(டு) ஆகும்  இடைஉரி அடுத்து

            நான்குமாம் திசைவட சொல்அணு காவழி (நன்னூல், 269)

  ௸ நூற்பாவில் நான்கு கருத்துக்கூறுகளைக் காணலாம்:

1. இயற்சொல் , திரி சொல் (இயல்பு).

2. பெயர், வினை (ச்சொற்கள்) என இரண்டு. அடுத்து...

3. இடை, உரி(ச்சொற்கள்) [ஆக] நான்கு.

4. திசை, வடசொற்கள் அணுகாவழி ...

 பெயர், வினை என இரண்டு; இடை, உரி அடுத்து நான்கு என இரு வகைப்படுத்தி, இவற்றுக்கு  மட்டுமே தொகை கொடுத்திருக்கிறார்  பவணந்தியார்;

இயல், திரி சொற்களுடன் திசை,வட சொற்களை ஒருங்கு கூறினாரல்லர்.

இயல்திரி சொற்களுக்குத் தொகை தராவிடினும், 'அவை அணுகாவழி' என ஒதுக்கப்படவில்லை.

இந்நூற்பாவிற்கு உரையெழுதும்போது , நன்னூலின் முதல் உரையாசிரியரான¹ மயிலைநாதர்

திசை வடசொல் அணுகாவழி ' எனவே இப்பகுதிப்படுவது தமிழ்நாட்டிற்குரிய சொல்லென்பதூஉம் , திசைச்சொல்லும் வட சொல்லும் ஈண்டுச் சேரவும்  பெறுமென்பதூஉம் , சேர்தல் ஒரு தலையன்மையின் அவற்றிற்கு இலக்கணம் ஈண்டுக்  கூறார் என்பதூஉமாயிற்று

- என விளக்குகிறார். 

" சேரவும் பெறும்" என எதிர்மறையும்மையாற் கூறுவது நோக்கத்தக்கது. திசை,வடசொற்கள் ஒருதலையல்ல (கட்டாயமல்ல)  ; காரணம்,அவை தமிழ்நாட்டிற்குரியனவல்ல.

இனித் திசைச்சொல் பற்றிய நூற்பாவிற்கு அவர் தரும் விளக்கம் காண்போம்

செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்

ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தினும்

தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப (௸,272)

செந்தமிழ்நிலத்தைச்சேர்ந்த பன்னிருநிலத்தினும் இருவகைத்தமிழாம் ஒருமொழிநிலத்தையொழிந்த பதினேழ்நிலத்தினும் தத்தங்குறிப்பினான் வழங்குவனவற்றைத் திசைச்சொல்லென்று சொல்லுவர், ஆசிரியர் என்றவாறு.

செந்தமிழ்நிலமும் அதனைச்சேர்ந்த பன்னிருநிலமும் மற்றைப் பதினேழ்நிலமுமாக நிலம்முப்பதாம்பிறவெனின், ஆகாது; பதினெண்பூமி பதினெண்மொழியென்றே உலகத்து வழங்கிவருதலின். அவற்றுள், ஈண்டொழித்த தமிழொன்றே இப்பதின்மூன்றுபாலும் பட்ட தென்க. அவற்றுள்ளும் ஒன்று செந்தமிழென்றும் அல்லன கொடுந்தமிழென்றும்கூறப்படும். 

இருவகைத்தமிழாம் ஒருமொழிநிலம் - என்பது ஓசை நயமும் வரையறைச் செறிவும் ஒருங்கமைந்த தொடர். நூற்பாவில் பன்னிரு நிலம் எனப்படினும் ஒருமொழி நிலந்தான் என வரையறுத்துத் தெளிவுபடுத்துகிறார் மயிலைநாதர். 

செந்தமிழ் நிலம் ஒன்றும் அதனைச் சேர்ந்த [கொடுந்தமிழ் வழங்கும்]பன்னிரு  நிலமும் ஆகிய பதின்மூன்று பாலும் [பகுதியும்]பட்டது ஒற்றைத் தமிழ் நிலமே என்று மேலும் தெளிவுபடுத்துகிறார். 

பிற்சோழர் காலத்தில் (பொதுக் காலம் 850 - 1270) பேரரசில் வழங்கிய மொழிகளென ஏழு மொழிகளைக் குறிப்பிடலாம்; இவை தவிரத் தென்கிழக்காசிய நாடுகளுடன் சோழப்பேரரசு கொண்டிருந்த வணிக உறவு, நட்புறவுகளால் வேறு பல இந்தோ ஆரிய, திபெத்திய பர்மிய மொழிகளும் அறிமுகமாகியிருந்தன; இவற்றுள் சிங்கள , பர்மிய மொழிகள் குறிப்பிடத்தக்கன எனக் காட்டுகிறார்   பேராசிரியர் சு.இராசாராம். மேலும் பல்லவர்காலந் தொட்டே சமயம், இலக்கியம், மெய்யியல் எனப் பண்பாட்டு நடைமுறைகளில்  சமற்கிருதச் செல்வாக்கு மேலோங்கி அது தொடர்பு மொழியின் தேவையையும் நிறைவு செய்ததாக அவர் விளக்கியிருக்கிறார்( இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும், காலச்சுவடு, 2010, பக்.203 - 217).

11 ஆம் நூற்றாண்டில் -  சோழப்பேரரசன் பேரால் - வடமொழிவழித் தமிழ் இலக்கணமான வீரசோழியம் தோன்றிவிட்டது. நூலாசிரியர் புத்தமித்திரனாரின் மாணாக்கராகிய , உரையாசிரியர் பெருந்தேவனார், " தமிழ்ச் சொல்லிற்கு எல்லாம் வட நூலே தாயாகி நிகழ்கின்றமையின் , அங்குள்ள வழக்கெல்லாம் தமிழுக்குப் பெறும் " என்று அடித்துச் சொல்லிவிட்டார்.

அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் சோழப்பேரரசு சரிந்துகொண்டிருந்தது. 13ஆம் நூற்றாண்டில்  [சோழரொடு முரணியோருள் ஒருவனாகிய!] சீயகங்கன் என்னும் சிற்றரசன் வேண்டுகோளுக்கிணங்கப் பவணந்தி,   'முன்னோர் நூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்' என்கிறது சிறப்புப் பாயிரம். மயிலைநாதர் 14 ஆம் நூற்றாண்டினர். 

நன்னூல் வடமொழிச் செல்வாக்கையும் தமிழில் அதன் தடத்தையும் மறுக்கவில்லை; ஆனால், மரபில் தமிழையே பேணியது. அதனாற்போலும் அது நன்னூல் - நல்ல நூல் - எனப்பட்டது.

'தமிழ்ச் சொல்லிற்கு எல்லாம் வடநூலே தாய்' என்றதற்கு மாறாகத்  தொல்காப்பியந் தொட்டுத் தொடரும் 'முன்னோர் நூலின்' வழி நன்னூலும் வட சொல்லுக்கு  நான்காம் இடமே² தந்தது. இது தற்செயலான வைப்புமுறையன்று. 

இதனை உணர்ந்து உள்வாங்கிய மயிலைநாதரும், திசைச்சொல்லும் வட சொல்லும் சேர்தல் ஒருதலையன்று என்றார்.

தனித்தமிழ், அயல் அலைகள் பலவற்றின் கலப்பினூடாகவும் தமிழ்மரபாய்த் தலை நீட்டிக்கொண்டேயிருக்கின்றது.

இங்குள்ள சிக்கல் ஒன்றையும் கருதுதல் வேண்டும்.

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும்

தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொல். எச்ச. 4)

என்னும்தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றி, ' ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத் ' தை இடைமிடைந்து நூற்பாவாக்கியுள்ளார் பவணந்தி. பவணந்தி கால மொழிச் சூழலில் அவர் தமிழும் சங்கதமும் அல்லாத பிற மொழிகளுக்கும் இடம் தர நேர்ந்தது இயல்பானதே. இம்மொழிகளையும் உள்ளடக்கி நால்வகைச் சொற்கள் என்னும் தொல்காப்பிய மரபையும்  பேண முயன்றதுதான் சிக்கலை ஏற்படுத்திவிட்டது.  

செந்தமிழ் நிலம் சேர்ந்த பன்னிரு வட்டாரக்கிளைமொழிகளோடு , செந்தமிழ் நிலம் சேராத பிறமொழிகளையும் பவணந்தி ஒன்றாக வகைப்படுத்திவிட்டார். ' திசை வடசொல் அணுகாவழி ' என நூற்பாச்செறிவில் கருத்துச் செலுத்திய பவணந்தி, திசைச்சொல்லுள் கொடுந்தமிழும் சிக்கிக்கொண்டதைக் கருதினாரா என்று அறிய இயலவில்லை.

ஒருவேளை பவணந்தியார் கொடுந்தமிழும் அடங்கிய தனித்தமிழின்³ வேறாகக் கொடுந்தமிழ் தவிர்ந்த தூய தமிழை⁴ இயற்சொல் எனக் கருதினராகலாம் .

குறிப்புகள்

1. நன்னூலின் பழைய உரையாசிரியர் மயிலைநாதர். அவருடைய உரையில் காணப் படும், "இதற்குப் பிறவாறு சொல்லுவாரும் உளர்." (நன். 271) என்பது போன்ற சொல்லாட்சி மயிலைநாதருக்கு முன்னரோ அல்லது அவர் காலத்திலோ நன்னூலுக்கு வேறு உரை இருந்திருக்கலாம் என்ற கருத்தைத் தோற்றுவிக்கிறது. அது ஆசிரியர் மாணவர் வழியில் வாய்மொழியாக வழங்கிய உரையா? எழுத்து வடிவில் ஏட்டில் நிலவிய உரையா என்று சொல்வதற்குப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. எனவே கிடைத்துள்ள நன்னூல் உரைகளில் மயிலைநாதர் உரையே காலத்தால் முந்தியது 

- அ. தாமோதரன்(பதிப்பாசிரியர்), 'பதிப்புரை', பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் செய்து சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட புத்தம் புத்துரை என்னும் விருத்தியுரையும்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,1999, ப.21.

2. பிற இந்திய - குறிப்பாகத் தென்னிந்திய - மொழி மரபிலக்கணங்கள் பெரிதும் தற்சமம், தற்பவம் எனச் சங்கதத்திற்கு முதன்மை தந்து பின்னரே தேசியம் , கிராமியம் எனத் தத்தம் மொழிகளை வைத்தன.

3.தனித்தமிழ் = பிறமொழி கலவாத் தமிழ்

4.தூய தமிழ்    = வட்டார வழக்குத் 'திரிபு'களும் தவிர்ந்த தமிழ்




 



  

Friday, February 11, 2022

அதிகாரம் : ஊ ழல்

 


1.ஆட்சியிற் பேராற்றல் யாவுள மற்றெந்த

   சூழ்ச்சியினும் முந்துறும்ஊ  ழல்

- இதன் கருத்தாவது ஆட்சியின் ஆற்றல் ஊழலே என்பது.


2.பெற்றதனால் ஆயபய னென்கொல் பதவி

   உற்றபின்செய் யாக்கால்ஊ  ழல்

-(இ - து) பதவியால் ஆய பயன் ஊழலே என்பது.


3.அவரவர் ஆனவரை செய்யலாம் ஆமாம்

    இவரும்செய் தாலென்ஊ  ழல்

- (இ - து) ஊழலின் நடப்பியல் அறம் இன்னதென்பது.


4. வழக்கெனினென் வாட்டும் சிறையெனினென் ஆள்வார்க்(கு)

   அடிபணிந்தே செய்திடின்ஊ ழல்

- (இ-து) இடையூறு நிகழினும் பொருட்டன்று என்பது.


5.திட்டம்  நிதியொதுக்கீ  டொப்பந் தமிம்மூன்றால்

   வெட்டுக வெல்லும்ஊ  ழல்

6.பெரிதின் பெரிதாய்க் கடன்பெற்றோர்  ஓட

    உரியன செய்தலும்ஊ  ழல்

7. நடுவ ணரசின்தாள் சேர்ந்தவர் தம்வழக்கைத்

   தடுத்துத்தப் பச்செயும் ஊ  ழல்

8.வேண்டியோர்க்(கு)  ஆக்கம்  விளைய விதிவளைத்துத்

   தாம்தூயர் ஆதலும்ஊ  ழல்

- இவை நான்கும் ஊழற்கு வரைவிலக்கணம்.


9.ஊழலை ஊழலால் வெல்வர் வாழ்முறையாக் 

     கொள்வா ரதுவும்ஊ  ழல்

- (இ-து) ஊழலை வெல்லும் வழி ஊழலே என்பது.


10.சட்டம்  ஒறுப்பினும்  நீங்கினுயிர் ஈகநினை

      கட்டிடமும் நல்கும்ஊ ழல்

- (இ-து)ஊழல் ஈகப்புகழ் நினைவகம் தரும் என்பது.


[பாவிலன்றி ஊழல் பழகிலேன் நாவிலிவை 

வந்தவா  றேநவின்றேன் நான்]

கட்டுரைப் பயிற்சியும் கருப்பட்டி அல்வாவும்


 

i) 'மொழிப் பொறுப்பு' என்பதொன்று உண்டு. எந்த மொழியானாலும் பொறுப்பின்றி ஆளக் கூடாது. தமிழோ இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுக்கு மேற்பட்ட ஏடறிந்த வரலாற்றைக் கொண்டது;எத்தனையோ ஊறுகளை எதிர் கொண்டு கடந்தது; இன்றளவும் தொடர்வது.நம்மால் அதற்கு எதுவும் நேர்ந்துவிட்டால் அது பாவச்செயலாகிவிடும்.

ii)ஐந்திலிருந்து பத்து மணித்துளிகள் நம் உடல் நிலை பற்றி ஆய்ந்தறியும் மருத்துவருக்கு ஆலோசனைக் கட்டணம் நியாயமென்றால், மெய்ப்புப் பார்க்கவும், அதனின் மேலாகச் செவ்விதாக்கம் செய்யவும் கட்டணம் கோருவது நியாயமல்லவா! அந்தக் கட்டணத்தை மனமுவந்து தரவேண்டுமல்லவா! தராவிடினும் அதன் மதிப்புணர வேண்டுமல்லவா!

 -இந்த இரண்டும் என் பயிற்றுரையின் முத்தாய்ப்பு.

                 *************

மதுரைத் தமிழ்ச்சங்கச் செந்தமிழ்க் கல்லூரியும் சான்லாக் ஆய்விதழும் இணைந்து  நடத்திய,  ஆய்வுக்கட்டுரை எழுதுவதன் அடிப்படைகளைப் பயிற்றும் , அரங்கில் (10. 02.2020) பிற்பகலில்ஆய்வு நடையின் அடிப்படைகளை அறிமுகப்படுத்துவது என் பணி. 

முற்பகலைக் கோயிலில் செலவிடும் நோக்கில் துணைவியார், அவர் தோழி ,  என் தம்பி மகள் எனக் குழுவாய்ப் புறப்பட்டோம்.

மதுரைத் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வெளியே வந்ததுமே எதிர் வரிசையில் லாலா கடை . அதைக் கடந்துதான் அங்கயற்கண்ணி அம்மன் கோயில் செல்லவேண்டும். கருப்பட்டி இனிப்பில் விருப்பு மீதூர மாலையில் வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். கால்நடையாக (!)மேலக்கோபுர வாயில் அடைந்தோம் ; அம்மையையும் அப்பனையும் வழிபட்டோம்.

நான் பயிலரங்கு நோக்கிச் சென்றேன்!

                                                 *************

திரு. முருகேசபாண்டியன் அவர்களிடம் விடைபெற்றபோது, தொடர் வண்டி நிலையம் சென்று , லாலா கடை இனிப்பை வாங்கிக்கொண்டு , மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் போகும் திட்டத்தைச் சொன்னேன்.

" ஏன் அலைகிறீர்கள் . மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எதிரிலேயே ஒரு கடை திறந்துவிட்டார்கள் " என்று என் இனிப்புத்தேடலுக்கும் வழிகாட்டினார்.

என் நலனுக்கெதிர் இரைப்பும் ¹ கொழுப்பும் ² ; நல்லவேளை இனிப்பு ³ இல்லை. மதுரை, மதுரை கடந்து தென் தமிழகம் செல்வதெனில்  நாட்டுப்புற இனிப்புகளின் நினைப்பே நாவூறச்செய்துவிடும்.

பிரேமா விலாசில் , முதலில் 50 கிராம் ... தணியவில்லை.(நான் மட்டும்) மேலும் 50 கிராம் - 100 கிராமையும் இடைப் பிற வராமல் அல்ல்ல்வாவாகவே உண்டேன். ' சூடும் சுவையும் ' என்கிற பிரிவிலாத் தொடரின் பொருள் நாக்கில் கரைய உள்ளம் உணர்ந்தது. அப்புறம் 25 கிராம் அளவு மிளகு காரச்சேவும் வடி காப்பியும்... அடடா!

கருப்பட்டி அல்வாவைப் பொட்டலமாகவும் வாங்கிக் கொண்டேன். 

                                      ************,****

திரு நீறும் குங்குமமும் இட்ட நெற்றியோடுதான் பயிலரங்கிற்குச் சென்றேன். முற்பகல் 11.00 மணியளவில் இட்டவை, வீடு திரும்பி ஆடியில் பார்த்தபோது, இரவு 09.00 மணிக்கும் எந்தமிழ் போல் அழியாது துலங்கின. ஆய்வாளர்களால் தமிழுக்கு ஒன்றும் ஆகிவிடாது என்ற நம்பிக்கையோடு துயிலத் தொடங்கினேன்.

------------------

1. Wheezing  2.Cholesterol , 3.Diabetes

(ஆய்வு நடை பற்றிப் பேசிவிட்டு அடிக்குறிப்பு இல்லையென்றால் எப்படி!)

Thursday, February 10, 2022

இல்லம் : உணர்வு, இலக்கியம், இலக்கணம், வழக்கு

 



 இல்லம் என்பது வெறும் இருப்பிடமன்று. அதற்கு ஒரு பண்பாட்டுப் பின்புலம் உண்டு. 

நண்பர் சலபதி (பேரா.ஆ.இரா.வேங்கடாசலபதி) மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபோது பாளையங்கோட்டையில் ,  வசித்துவந்தார். 

நான் நெல்லை செல்ல நேரும்போது  முந்தைய நாள்  "நாளைக்கு உங்கள் அறைக்கு வந்துவிடட்டுமா?" என்பேன். " ஏங்க, அறையா? வீடுங்க " என்பார். 

உண்மை. வரவேற்புக்கூடம், படுக்கையறை, வசிப்பறை,சமையலறை, வழிபாட்டு அறை யாவும் கொண்ட  முழுவீடு .ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் இதனை ஒத்த உரையாடல் நிகழ்ந்திருக்கிறது.

ஆனால், என் மனத்தில்  அது, ஓர் அறையாகவே பதிந்திருந்தது. ஆம். அப்போது அவருக்கு மணமாகவில்லை.   

பேரா. ய. மணிகண்டன் மீட்டுக் கொணர்ந்த பாரதியாரின் 'திமிழ்' என்னும்  கட்டுரை (காலச்சுவடு, டிசம்பர் 2019) தமிழ்ச் சொல்லாய்வுகள் , இலக்கணச் சிலம்பாட்டங்கள் முதலியன பற்றிய எள்ளற் கட்டுரை. தொடர்பில்லாத வேர்களையும் விளக்கங்களையும் வருவிக்கும் பண்டிதச் சாமர்த்தியத்தைப் புலவர் நெட்டைப் பனை முதலியார்- சீடப்பிள்ளை கும்பகர்ண முதலியார் உரையாடலின் ஊடாகத் தமக்கேயுரிய முறையில் பாரதி நகையாடியிருப்பார். 

ஓரிடத்தில், " வீடு என்பதைக் கும்பகர்ணன்  மனைவி  என்றான் " என்று எழுதுகிறார்  பாரதி.

சரி. நாம் கலித்தொகைப் பாட்டின் (8: 19 - 23) வழியாக நச்சினார்க்கினியரிடம் போவோம். 

தலைவன், தலைவியிடம் சொன்னால் வருந்துவாள் என்று கருதி, சொல்லாமலே பொருள் தேடப் பிரிந்து செல்ல முடிவு செய்கிறான். அதனை உணர்ந்த தோழி , பொருளின் நிலையாமையை விளக்கி, இல்வாழ்க்கையே பொருள் என்று சுட்டி, அவன் பிரிந்து செல்லாமல் தடுக்கிறாள். இது பாலைக் கலிப் பாட்டு. 

நிறைவுப்பகுதி :

நச்சல் கூடாது² பெரும¹ இச்செல

வொழிதல் வேண்டுவல்⁴ சூழிற் பழியின்று³

மன்னவன் புறந்தர வருவிருந்தோம்பித்

தன்னகர் விழையக் கூடின்

இன்னுறழ் வியன்மார்ப அதுமனும் பொருளே

¹தலைவா, ²பொருளை விரும்பாதே.³எண்ணிப் பார்த்து, பழி நேராத வகையில்,  ⁴நீ தலைவியைப் பிரிந்து செல்வதைக் கைவிட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.மன்னன் ,  தம்மைக்  காக்கவேண்டி வரும் விருந்தினரைப் பேணித் தன் மனைவி விரும்பும்படி அவளுடன் கூடியிருந்தால், இனிய தழுவலையுடைய அகன்ற மார்பனே! அதுதான் நிலையான பொருள்(கருத்து நச்சினார்க்கினியருடையது.நடை என்னுடையது)

நகர்= பேரில்( மாளிகை), இல்லம்(நகர் என்பது கோயில், நகரம் என்னும் பொருள்களையும் குறிக்கும்)

ஆனால், இங்கு , மனைவி என்று பொருள் கொண்டு , " நகர் : ஆகுபெயர் " என்று இலக்கணக் குறிப்புத் தருகிறார் நச்சர்.

இக்காலத்திலும் இவ் வழக்கு உண்டு.

மணமான ஒருவர் " வீட்'ல பேசிக்'கிட்டு சொல்'றேன்" என்றால் , "மனைவியிடம் கலந்தாலோசித்துச் சொல்கிறேன்" என்பது பொருள்.

'வீடு' என்பதற்கு 'மனைவி' என்று பொருள் கொள்வதை எள்ளிநகையாட வேண்டியதில்லை. 'திமிழி'ன் வேறு சிலவும் எள்ளலுக்குரியனவல்ல.

மனைவி இல்லாத - ஆனால், எல்லா வசதிகளையும் கொண்ட- வெற்று இருப்பிடம் இல்லமாகாது.மனைவி இருந்தால் ஓர் அறையே கூட இல்லமாகும்.

அவள் இல்லாள். இதற்கு இணையான ஆண்பால் இல்லை (பெண்ணியத்தார் என்ன சொல்வரோ! அறியேன். நான் மாற்றத்திற்கு எதிரியல்லன் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன்)



தப்பட் '* என்னும் இந்தித் திரைப்படத்தைச் சற்றே பார்ப்போம்.

அமிர்தா  செவ்வியல் நடனத்தில் தேர்ந்தவள். கணவன் விக்ரம் டெல்லியிலுள்ள கார்ப்பரேட் கம்பெனியில் பணியாற்றுகிறான். இயல்பாய் , இனிதாய்த் தொடங்கி நகர்கிறது இல்லறம். அவன் கனவு கண்டவாறே -  நடுத்தர வர்க்கக்  கார்ப்பரேட் குழுமப் பணியாளர்களின் கனவுதான் - மேல் அலுவலர் பதவிக்கு உயர்கிறான். பணி இலண்டனில். மனைவியோடு இலண்டனில் நடத்தும் வாழ்க்கை, குறிப்பாக இலண்டன் இல்லம் பற்றி மகிழ்ச்சி அலையடிக்கிறது. அதனைக் கொண்டாடச் சிறு கூடுகை (பார்ட்டி). 

 இலண்டன் போய்ப் பணியாற்றலாம் ஆனால் பதவி உயர்வு இல்லை என்று கூடுகையின்போது தெரிகிறது. காரணம் அலுவலக உள்ளரசியல். கூடுகையிலேயே உடன் பணியாளனுடன் சச்சரவு. தடுக்கப்போகிறாள் அமிர்தா. கனவு சிதைந்ததால் உணர்ச்சிவயப்பட்டிருந்த விக்ரம் சுற்றமும் நட்பும் சூழ்த்திருந்த கூடுகையில்  அவளை அறைந்துவிடுகிறான்(* தப்பட்= அறை) . அவள் ஒரு மனிதப் பிறவியாக, தன்மான இழப்பில்  நிலைகுலைந்துபோகிறாள். ஆனால், அவன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவளது முரண் மெல்ல மெல்ல முற்றுகிறது.

மணவிலக்குக் கேட்டு வழக்குமன்றத்தில் முறையிடுகிறாள். அவள் கருவுற்றிருப்பது தெரியவருகிறது. விக்ரம் அவளைச் சமாதானப்படுத்த முயன்று தோற்கிறான்.

மாமியார் தன் மருமகளின் உணர்வைப் புரிந்துகொள்கிறாள். அவர்களிடையே முரணில்லை. 

விக்ரம் தனியே இலண்டன் செல்கிறான். 

மண விலக்குக் கிடைக்கிறது. தன் தவறுணர்ந்த விக்ரம் அன்று வழக்குமன்றத்தில் அமிர்தாவிடம் மனம்விட்டுப் பேசுகிறான். அது, உள்ளார்ந்தது என்று அமிர்தாவும் உணர்கிறாள். மீண்டும் புதிதாக நட்பிலிருந்து தொடங்கலாம் என்கிறான்.

கதையையோ உணர்ச்சிப் பன்மைகளை, மோதல்களை  அடக்கமான நடிப்பாற்றலால் புலப்படுத்தியிருக்கும் நடிகர்களின் திறனையோ பிறவற்றையோ விவரிக்கப்போவதில்லை.ஆனால், பார்க்க வேண்டிய படம் என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன். 

வேறு ஒன்றைச் சொல்லத்தான் இத்தனை முன்கதை . 

நிறைவுக் காட்சியில் விக்ரம் அமிர்தாவிடம் பேசும்போது, " இலண்டன் வாழ்க்கை, பணி எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். நீலக் கதவுடைய கனவு இல்லம் , இல்லமாகவே இல்லை. உண்மையில் நீதான் என் இல்லம்" என்கிறான். 

கார்ப்பரேட் காலத்து இந்தியாவிலும் மனைவிதான் இல்லம்.





இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...