Thursday, August 19, 2021

நடை நெகிழ்த்த விதி



நான் ஒரே கட்டுரையிலேயே , ' மிகு பெரு நூலகம் ' , ' அரும்பெரும் நூலகம் ' என்னும் தொடர்களைக் கைப்பழக்கத்தில் எழுதிவிட்டேன்;பிறகுதான் பார்த்தேன். இலக்கண மரபின்படி பெருநூலகம் என்பதே சரியானது.ஆனால் அரும் பெரும் நூலகத்தைத்  'திருத்த' முற்படவில்லை.

பெரு(மை)* என்னும் பண்புப்பெயர் நின்று  நாற்கணங்களும் வரும்போது புணரும் மரபைப் பார்ப்போம்.


உயிர்க் கணம்

பெரு(மை) + அணி = பேரணி

பெரு(மை) + ஆசிரியர் = பேராசிரியர் 

பெரு(மை) + இடி = பேரிடி

- இவற்றில் வருமொழி முதலில் நிற்பவை உயிரெழுத்துகள் (அ , ஆ , இ ...)


வன்கணம்

பெரு(மை)+ கடல் = பெருங்கடல்

பெரு(மை) + சிறப்பு =பெருஞ்சிறப்பு

பெரு(மை) + தன்மை =பெருந்தன்மை

பெரு(மை) + புகழ் =பெரும்புகழ்

- இவற்றில் வருமொழிமுதலில் நிற்பவை வல்லெழுத்துகள் ( க் , ச் , த் , ப்). 

மென்கணம்

பெரு(மை) + ஞானம் =பெரு ஞானம்

பெரு(மை) + நகர் =பெரு நகர்

பெரு(மை) + மன்றம் =பெரு மன்றம்

 இவற்றில் வருமொழிமுதலில் நிற்பவை மெல்லெழுத்துகள் ( ஞ் , ந் , ம்). 

இடைக்கணம்

பெரு(மை) + யாறு= பேரியாறு°

பெரு(மை) + வாழ்வு =பெரு வாழ்வு

இவற்றில் வருமொழிமுதலில் நிற்பவை இடையெழுத்துகள் ( ய், வ்). 

முப்பெரு விழா என்பது மரபு. முப்பெரும் விழா என்பது  வழக்கில் பெருகி விட்டது;  குற்றமன்று. முப்பெருவிழா எனலே நல்லது.

ஆனால், அரும்பெரு நூலகம் என்றால் சமனிலையின்றி,  ஓசை குன்றுவதாகத் தோன்றுகிறது. அரும் , பெரும் என்னும் எதுகை  நடையில் இறுதி மகரங்கள் நின்று சமனிலை பேணுகின்றன ; ஓசை நயம் நல்குகின்றன.

-------------

* நன்னூல் நெறியில்  பண்புப் பெயர் நிலை மொழிகள் மை விகுதிபெறும். இதுபற்றிக் கருத்து வேறுபாடு உண்டு.

° நம் காலத்தில் இவ்வாறு யகர வருமொழி வரின் (குற்றியல்) இகரம் பெறுதல் வழக்கில் இல்லை (பேரியாறு →பெரியாறு  என்றாகி , பெரியாறு→பெரியார் எனத் திரிந்து பிழைபட்டது)


Monday, August 16, 2021

தொல்காப்பியத்தை ஏன் பயில வேண்டும் ?

 


உயர் கல்வி நிலையில், தமிழ் இலக்கியப் பாடங்களில் ஒன்றாகத் தொல்காப்பியம் இடம் பெற்றுள்ளது. சில பாடத் திட்டங்களில் நோக்கங்களுள் ஒன்றாகத்  'தமிழைப் பிழையறப் பேசவும் எழுதவும் பயிற்றுவித்தல்' என்னும் பல்லவி காணப்படுகிறது.மாறாகத், தமிழைப் பயின்றோர்தாம் தொல்காப்பியம் பயில இயலும். தமிழ் மொழி கற்கத் தொல்காப்பியத் துணை தேவையில்லை.

இப்போதும் தமிழ்ப் பயிற்சியில், பயன்பாட்டு நிலையில் , நன்னூல்தான் ஓரளவு செல்வாக்குச் செலுத்தி வருகிறது.  தற்காலத் தரப்படுத்தமுற்றுள்ள தமிழைக் கற்க நன்னூல் மட்டுமே போதாது. அதே வேளையில் மரபார்ந்த இலக்கணக் கலைச்சொற்களை இயன்றவரை விட்டுவிடாமல் தற்காலத் தமிழ் இலக்கணம் அமைதல் வேண்டும். (தமிழ் பயின்றபின் செழுமைக்குத் தொல்காப்பியம் முதலியன துணைபுரியலாம். இது பயில்வு நிலை கடந்து புலமை நோக்கி  நடக்கும் நிலை)


சரி. வேறு எதற்காகத் தொல்காப்பியம் பயில வேண்டும்.

1 ) மரபார்ந்த பண்பாட்டு மதிப்பு

தமிழ்ச் சமூகத்தின் மரபார்ந்த கலை, இலக்கியம்,  பண்பாட்டுச் சின்னங்கள் முதலியவற்றின் வரிசையில்  இடம் பெறத்தக்க மதிப்புடையது தொல்காப்பியம். தொல்காப்பியம் பயில்வதென்பது, அதனைப் பேணும் முறைகளுள் ஒன்று. தொல்காப்பிய முற்றோதல்முயற்சியைச் சிலர் மேற்கொண்டனர் (கொள்கின்றனர்?) .

2)பழந்தமிழ் இலக்கியப் பயிற்சிசார்  பயன்பாடு
   
எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, திருக்குறள், இரட்டைக் காப்பியங்கள், பெருங்கதை இன்ன பிறவற்றைப் பயிலத் தொல்காப்பியம்  இலக்கணம் என்னும் நிலையில் பெரிதும் துணை நிற்கும்(முற்றும் தொல்காப்பியமே போதும் என்று சொல்ல இயலாது).

3) புதிய போக்குகளை விளங்கிக் கொள்வதற்கான  அடிப்படைக் கூறுகளின்   இழையோட்டம்

மொழியியல், குறியியல் முதலிய அண்மைக்கால அறிவுத் துறைகளுக்குள், தொல்காப்பியப் பயிற்சியுடையோர் எளிதாக நுழைந்துவிடலாம்.
ஆனால், எல்லாம் தொல்காப்பியத்திலேயே இருக்கிறது என்று வாதிடுவது வளர்ச்சிக்குத் தடை ; தாழ்வு மனப்பான்மையின் விளைவு.

4)இன்றளவும் இழையோடும் தமிழ்த்தன்மையின்  மூல ஊற்று

காலந்தோறும் மொழிமாறும் என்பதை உணர்ந்தவர்; புறனடைகளில் சுட்டியவர் ; அதே வேளையில் தமிழின் பொதுமையையும் புலப்படுத்தியவர் தொல்காப்பியர்.  பரணர் தமிழ் முதல் பாரதி தமிழ் வரை , 'தமிழ்' எனப்படுவதன் பொது ஊற்றுக்கண்களைத் தொல்காப்பியத்தில் காணலாம். 'என்றுமுள தென் தமிழ்' என்றான் கம்பன்.

5) உரையாசிரியர்களால் கையளிக்கப்   பெற்றவற்றைப் பேணுதல்

தொல்காப்பியத்தின் பழைய உரையாசிரியர்களாகிய இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலியோர் தமக்கெனத் தனித் தகுதியுடையோர். எனவேதான், இளம்பூரணம், சேனாவரையம், பேராசிரியம், நச்சினார்க்கினியம் என்றெல்லாம் போற்றுகிறோம். இவர்தம் விளக்கங்களும், விளக்கங்களினூடான நுட்பங்களும், பங்களிப்புகளும் பயின்றுணரவும் சுவைத்து மகிழவும் தக்கவை.

6)புதிய அறிவுத்துறைகளால் துலக்குதல்

புதிய அறிவுத் துறைகளால் தொல்காப்பியம் துலங்கத் துலங்க அறிதோறறியாமை கண்டு இன்புறலாம்.

7)புதியன பெறுதற்குரிய வாய்ப்பு

தொல்காப்பியத்தைத் தேடல் சார்ந்துபயிலும்போது சில புதிய பார்வைகளைப் பெறவும் வாய்ப்புண்டு.

(தொல்காப்பியத்தை மட்டுமன்றி வேறு பல மரபிலக்கணங்களைப் பயில்வதற்கும் பேரளவு மேற்கூறிய காரணங்கள் பொருந்தும்; தமிழ்த் தொல்லிலக்கணமான தொல்காப்பியத்திற்கு முற்றிலும் பொருந்தும்)

Monday, August 9, 2021

'இலக்கணக் குறிப்பு'- ஒரு குறிப்பு

 


அண்மையில் கல்லூரி ஆசிரியர்களுக்கான புத்தொளிப் பயிற்சியில் (06.08.2019) இலக்கணக் குறிப்புப் பற்றி உரையாட நேர்ந்தது.


இலக்கணக் குறிப்பு என்பது இலக்கணப் புலமை காட்டுவதன்று; மொழிப் புழக்கத்தில் சொல்/ தொடரின் பொருளைப் புரிந்து கொள்ள உதவுவது.


'ஒரு தனிச்சொல்லுக்கோ  சில சொற்களால் அமைந்த தொடருக்கோ தனித்து இலக்கணக் குறிப்புத் தரலாம்தான்.

ஆனால், அவை வரும் இடம், முன் பின் தொடர்ச்சி அறிந்து  இலக்கணக் குறிப்புத் தரும் போதுதான் அது சரியானதாக அமையும்' என்றேன் நான்.


இதற்காகவே நான் கைவசம் 'மெல்லிலை' யை வைத்திருக்கிறேன். 


'மெல்லிலைக்கு இலக்கணக் குறிப்புக் கூறுங்கள்' என்றேன். பலரும் பண்புத்தொகை என்றனர். எவரும் வினைத் தொகை என்று சொல்லவில்லை.


"நச்சினார்க்கினியர் வினைத் தொகை என்கிறார்" என்றேன். 


"பண்புத்தொகை என்பது தவறா?" என்று வினவினார் ஒருவர்.


"தவறென்று சொல்ல முடியாது... " என்று இழுத்தேன் நான்.


அப்புறம்?


சீவக சிந்தாமணிப் பாட்டடியையும் உரையையும் இலக்கணக் குறிப்பையும் எடுத்துச் சொன்னேன்





மெல்(லுதல்) + இலை = மெல்லிலை . மெல்லுதற்குரிய இலையாகிய வெற்றிலை . மெல்- வினையடி .

இதில் நச்சினார்க்கினியக் 'கைவரிசை' ஏதுமில்லை. திருத்தக்க தேவரே வெற்றிலை என்னும் பொருளில் மெல்லிலை என்பதை ஆண்டுள்ளார். 


இந்தப் பாட்டில் (62/2) முதன்முதலில் வரும்போது நச்சினார்க்கினியர் வினைத் தொகை என்று குறிப்புத் தருகிறார். பின்னரும்

நான்கு இடங்களில் மெல்லிலை இதே பொருளில் ஆளப்பட்டுள்ளது.


மென்மை+ இலை = மெல்லிலை எனில் பண்புத்தொகை .


                                (❛ ᴗ ❛)


வள்ளுவச் சொல் விளையாட்டொன்றையும் சொன்னேன். ஒரே குறளில் இரு வேறு எதிரெதிரான பொருளில் முழுதொத்த வடிவங்களை ஆண்டுள்ளார்.




திருக்குறள் வெறும் அற நூலன்று; அற இலக்கியம். அதனைக் காட்டும் இடங்களுள் ஒன்று இது. (இத்தகு சொல் விளையாட்டுகளையே இலக்கிய அடையாளமாகச் சுட்ட முடியாதுதான். ஆனால் இவற்றுக்கும் சற்று இலக்கிய மதிப்பு இல்லாமலில்லை. சொல்லைக் கலை நுட்பங்களோடு கையாளும் இலக்கியக் கலைஞன், சொற்களோடு விளையாடுவதும் ஒரு கலை. அதிலும் அறத்தை இலக்கியமாக்குவது கல்லைப் பிசைந்து கனியாக்கும் கடும் பணி. வள்ளுவன் விளையாடிச் சோர்வு நீக்கிக் கொள்கிறான்.) 


என் + அல் 

இங்கு -அல் என்பது வியங்கோள் விகுதி. என்க/ என்று சொல்க என்பது பொருள் ;  - க என்பது வியங்கோள் விகுதி. 


- அல் தொழிற்பெயர் விகுதியாக வழங்குவது நம் காலத் தமிழில் பெரும்பான்மை. 

ஆடல், பாடல், பேசல் முதலியன தொழிற்பெயர்களாகப்   பரவலாக வழங்குகின்றன. ஆடுதல், பாடுதல், பேசுதல் என, - தல் என்னும் தொழிற்பெயர் விகுதியும் பரவலான வழக்குத்தான்.


அதே குறளில்,  எனல் = என்று சொல்லற்க (என்று சொல்லாதிருப்பீர்களாக) என்னும் பொருளிலும் இடம் பெற்றுள்ளது. இங்கு - அல் எதிர்மறை வியங்கோள் விகுதி. 


ஒன்றை உடன்பாடாகவும் (என்று சொல்லுக), மற்றொன்றை எதிர்மறையாகவும் (என்று சொல்லற்க) அவற்றை நேர்ப் பேச்சின் தொனிகளால் உணர்த்த முடியும். வேறு சில குறட்பாக்களிலும் இத்தகு பேச்சுத் தொனி உண்டு.

-------------


தெய்வ சுந்தரம் நயினார்:


// 'ஒரு தனிச்சொல்லுக்கோ சில சொற்களால் அமைந்த தொடருக்கோ தனித்து இலக்கணக் குறிப்புத் தரலாம்தான்.

ஆனால், அவை வரும் இடம், முன் பின் தொடர்ச்சி அறிந்து இலக்கணக் குறிப்புத் தரும் போதுதான் அது சரியானதாக அமையும்' - பேரா.மதிவாணன் பாலசுந்தரம்.// 100 விழுக்காடு உண்மையான கருத்து. கணினிவழியாக இன்றைய தமிழை ஆராயும்போது, இதுதான் சிக்கல். 'வருகிறது ' என்பது 'மாடு வருகிறது' என்பதில் வினைமுற்று. 'அங்கு வருகிறது எது?' என்பதில் வினையாலணையும்பெயர். 'நீ வருகிறது எனக்குப் பிடிக்கவில்லை' என்பதில் தொழில்பெயர். முன்பின் வருகிற சொல்களையும் தொடர்களையும்கொண்டுதான் இங்குச் சரியான விடையைப் பெறமுடியும். மூன்றிலுமே பகுப்பாய்வில் கிடைக்கிற உறுப்புகள் ஒன்றுதான். வா { கிறு+ அது  ; சில இடங்களில் இரண்டு வேறுபட்ட உறுப்புகள் கிடைக்கும். 'வந்தவரை ' = வந்த + வரை ; வா + ந்த் + அர் + ஐ ; முதலில் கிடைப்பது வினையடையாகப் பயன்படுகிற வினையெச்சம்; இரண்டாவதில் கிடைப்பது வினையாலணையும்பெயர் + 2 ஆம் வேற்றுமை விகுதி; இதுபோன்ற சிக்கலைத் தீர்ப்பதுதான் கணினிமொழியியல். இந்த மயக்கத்தைத் தீர்ப்பதற்கான கருவிகளே இயற்கைமொழி ஆய்வுக்கருவிகள் ஆகும் Concordancer, N-gram போன்ற கருவிகள் இச்சிக்கலைத் தீர்க்கப் பயன்படுகின்றன.


Magudeswaran Govindarajan:

மெல்லுதல் என்னும் வினைவழியே பெறப்படும் பண்புதான் மென்மை. கடினமாயுள்ளதை வாயிட்டு நீர்விட்டு அரைத்து மென்மையாக்கும் செயலே மெல்லுதல். மெல்லுதலால் ஒன்றின் கடுமை, திண்மை நீக்கி மென்மையாக்குகிறோம். அதனால் மென்மை என்னும் பண்புக்கும் மெல் என்னும் வினையடியே தோற்றுவாய். அதன்படி மெல்லிலை என்பதனைப் பண்புத் தொகையாய்க் கருதுவதைக் காட்டிலும் வினைத்தொகையாய்க் கொள்ளலே சிறப்பு.


(முகநூலில் ...10 Aug 2019)

Wednesday, August 4, 2021

அவளா இவள் !


திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரித் தமிழ் முதுகலை மாணவர்களிடையே உரையாற்ற நேர்ந்தது (02.08.2019) . ஒரு காலத்து ஆசிரியனான என்பால், அக்கல்லூரித் தமிழ்த்துறை ஆசிரியர் மூவரும் (பிற ஆசிரியர்களும்)அன்பைப் பொழிந்தனர். 


ஒப்பியல் இலக்கியம் குறித்த ஒன்றரை மணி நேர உரை. 


" இதனாற் பயன் என்னை மதிப்பதோ எனின், புலன் அல்லாதன புலனாதலும் அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம் பயத்தலும் " என்று இளம்பூரணர் உவமைக்குச் சொன்னவற்றை அப்படியே ஒப்பிலக்கியத்திற்கும் கொள்ளலாம் என்று தொடங்கினேன்; என்றாலும் மிகை எளிமைப்படுத்திவிடக் கூடாதென்று எச்சரித்தேன்.


கோட்பாடுகளைத் தொட்டுக் காட்டி , ஒப்பிலக்கியத்தின் ( இலக்கிய ஒப்பியல் எனலாம் என்பார் பேரா. கா.சிவத்தம்பி) காத்திரத்தை விட்டுவிடாமல்  , ஒப்பு நோக்க வாய்ப்பான இலக்கியப் பகுதிகள் சிலவற்றை இயன்றவரை சுவை குன்றாமல் சொல்வதற்கு மிகுந்த நேரம் எடுத்துக் கொண்டேன். 




குறுந்தொகைப் பாடலொன்றுடன், மராட்டியப் பிராகிருதத்தில் இயற்றப்பட்ட காதா சப்த சதிப் பாடலை ஒப்பு நோக்கிச் சற்றே அலசினேன். 


ஜகந்நாதராஜா பா யாப்பில் தமிழாக்கியிருக்கிறார்.

அதனால் கவித்துவம் சற்றுக் கை நெகிழ்ந்திருப்பதாகத்

தோன்றுகிறது. அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா மொழியாக்கம் கவித்துவ நெருக்கம் கொண்டதாகத் தோன்றுகிறது. இவற்றை வைத்து நானும் தமிழாக்கிப் பார்த்தேன். அதிகப்பிரசங்கித்தனம்தான். ஆசை வெட்கமறியாது.


குறுந்தொகை   

                          

(312. தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறிக் கொள்கிறான்)


இரண்டறி கள்விநங் காத லோளே 

முரண்கொள் துப்பிற் செவ்வேன் மலையன் 

முள்ளூர்க் கான நாற வந்து 

நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள் 

கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச் 

சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி 

அமரா முகத்த ளாகித் 

தமரோ ரன்னள் வைகறை யானே. 

                                                                - கபிலர்

 [ நம்  காதலி இரண்டும் தெரிந்த கள்ளி. 

 

 நள்ளிரவில் 

 - பகை வெல்லும் வேலினை உடைய மலையனின்முள்ளூர்க் காடு போல் மணக்கும்படி வந்து -  நமக்கேற்ப நடந்து கொள்வாள்.

 

விடியலில்

நாம்  சூட்டிவிட்ட மலர்கள் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டுத் தலையில் எண்ணெய் தடவிச் சீவி முடித்துக்கொண்டு , 

நம்மைக் கண்டும் காணாதவள் போல், தன்னைச் சார்ந்தவர்களோடு இருந்துகொள்வாள்.]


                                                                


                                 (❛‿❛) 

                                 

                    காதா சப்த சதி

                       (பாடல் 23)                      


                         I

களித்தின் புறுங்கால் கன்னம் மின்னக்

கட்டளை நூறிடும் காரிர வினிலே!

பகலில் குனிந்த தலைநிமி ராதே!

அவளே இவளென நம்புத லரிதே!                


                       

                     

                         II


At night , cheeks blushed

     With joy , making me do

A hundred different things ,

     And in the morning too shy

To even look up , I don't believe

     It's the same woman.

     

                       

                       

                          III

                     

இரவில் 


கன்னஞ் சிவக்கக்

காதலில் திளைத்து


நூற்றுக் கணக்கில்


என்னென்னவோ செய்ய

என்னைப் பணித்தாள்


விடியலில்


காணவும் தவிர்த்து 

நாணம் மிகுத்தாள்


அவளா இவள்!


I.   மு.கு.ஜகந்நாதராஜா

ll . Arvind Krishna Mehrotra

III. [தன்னடக்கம். ஈஇ! நான்]

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...