எங்களுக்கு _____ என்னும் ஓர் ஆசிரியர் இருந்தார் (இன்னும் சிலரும் இருந்தனர். தனியே சொல்லவேண்டும்). அவர் பயின்ற காலத்தில் நன்றாகப் படித்தவர்தான். அவருடைய ஆசிரியர்கள் சொல்லியிருக்கின்றனர். நம்பகமானதுதான்.
ஆனால்,
அவர் எங்கள் ஆசிரியர் ஆன காலத்தில் , மாணவராயிருந்து பயின்றதெல்லலாம் பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்ப் போய்விட்டது. பாவம்!
எங்களுக்கு யாப்பருங்கலக் காரிகை நடத்தினார். புத்தகத்தைத் தூக்கிக்கொண்டுவருவார்; படிப்பார் ; பொருள் சொல்வார்; புரிவது பற்றிக் கருதமாட்டார்.
மாணவர்கள் ஐயம் கேட்கக் குறுக்கிட்டால் அரட்டல் உருட்டல்கள்தான். அவருக்கு உரத்த குரல் வேறு." நேத்து நடத்துனது புரிஞ்சுதா? சொல்லு" என்பார். சொல்லிவிட்டால் முந்தாநாள், அதற்கு முந்தின நாள் என்று அதட்டலில், கேட்டவனைத் திக்குமுக்காட வைத்துக் கடைசியில், " உக்காரு . இலக்கணமெல்லாம் படிப்படியா புரிஞ்சுகிட்டு வரணும். போய்ப்படி. என் நேரத்த வீணாக்காதே " என்று படிக்கத் தொடங்கிவிடுவார்.
என் கல்லூரி நண்பர் கலியமூர்த்தி எங்கள் மேலவீதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தார். நானும் நண்பர் கலியமூர்த்தியும் ஒன்றாகப் படிப்போம். ஆசிரியர்கள், பாடங்கள், தேர்வுகள் முதலியவை பற்றி அரட்டை இல்லாமலிருக்குமா? அரட்டைக்கிடையில்தான் படிப்பு என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அப்படி ஓர் அரட்டையில் 'அவரு'க்குப் பாடம் புகட்ட முடிவு செய்தோம்.
பாயிரம் , அவையடக்கம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி, முதல் காரிகை (சூத்திரம்) நடத்தி முடித்திருந்தார். இது சற்று விரிவாக நடத்த வேண்டிய காரிகை. சில வகுப்புகள் ஓடின. இதில்தான் மாணவர்கள் ஐயம் எழுப்பினார்கள்.
இரண்டாவது காரிகை நடத்த வேண்டும். அவருடைய ஆயுதம் மறைவானதல்லவே. எனவே பாயிரம் , உரை என அனைத்தையும் புரிந்துகொண்டு , உரை உட்பட , மனப்பாடமாகவும் பதியவைத்துக்கொண்டோம்.
இப்போது கொஞ்சம் இலக்கணம். கடினமில்லை. குறில் , நெடில், ஒற்று ஆகியவை தெரிந்தால் போதும் . எண்களை மட்டும் பின்பற்றுங்கள் புரியும்.
" குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில்நெடிலே
நெறியே வரினும் நிரைந்தொற்(று) அடுப்பினும் நேர்நிரைஎன்(று
அறிவேய் புரையுமென் றோளி யுதாரணம் ¹ஆ²ழி³வெள்⁴வேல்
⁵வெறியே ⁶சுறா⁷நிறம் விண்டோய் ⁸விளாம்என்று வேண்டுவரே "
(யாப்பருங்கலக் காரிகை, 5)
இந்தக் காரிகை உதாரணத்தையும் கொண்ட காரிகை (¹ முதல் ⁸ வரை உதாரணங்கள்)
௧) [குறில்] குற்றெழுத்துத் தனியே வரினும் (²ழி)*
௨)[ நெடில் ]-நெட்டெழுத்துத் தனியே வரினும் (¹ஆ)
௩) [குறிலும் ஒற்றும்] - குற்றெழுத்து ஒற்றடுத்து வரினும் (³வெள்)
௪) [நெடிலும் ஒற்றும்] -நெட்டெழுத்துஒற்றடுத்து வரினும் (⁴வேல்) - நேர் அசை
௫)குறில் இணைந்து வரினும் (⁵வெறி)
௬)குறில் நெடில் இணைந்து வரினும் (⁶சுறா)
௭)குறில் இணைந்துஒற்றடுத்து வரினும் (⁷நிறம்)
௮)குறினெடில் இணைந்து ஒற்றடுத்து வரினும் (⁸விளாம்) நிரை அசை.
(*²,¹ என வரிசை மாறியுள்ளது காண்க)
நாங்கள் அப்பாவித்தனமாய்ப் பாடம் கேட்டோம். ஒரே வகுப்பில் நடத்திவிட்டார். அது போதுமானது. கலியமூர்த்தி எழுந்து , " ஐயா குறிலே நெடிலே என்று இலக்கணம் கூறி உதாரணத்தில் வரிசையை மாற்றியிருப்பது ஏன்?" என்றார்.
யாப்பருங்கலக் காரிகை உரை , இத்தகைய வரிசை மாற்றத்தை, " தலை தடுமாற்றம் " என்று கூறும். இப்படித் தலை தடுமாற்றமாகக் கூறுவதை, " தலை தடுமாற்றம் தந்து புனைந்துரைத்தல் " என்னும் உத்தியாகக் கூறுவது மரபு. இவ்வாறான வரிசை முறை மாற்றத்தைக் கொண்டு தொடர்புடைய மேலதிகமான இலக்கணக் கூறு விளக்கப்படுவது வழக்கம். ஆனால் உரை இதுபற்றி மூச்சே விட வில்லை.
கலியமூர்த்தி வினாவுக்கு " அட, சொல்ல வந்தது புரியுதா இல்லியா? சொல்லாதத ஏன் கேக்குற ? உக்காரு " என்று ஆணையிட்டார்.
நான் எழுந்தேன் , " ஐயா தலை தடுமாற்றத்திற்குக் காரணம் இல்லாமல் இருக்காதுன்னு தோனுது " என்றேன்.
அவர் வழக்கம்போல் வினாக் கணை தொடுக்கத் தொடங்கினார் . இரண்டு வினாக்களிலேயே பயனில்லை என்பதை மட்டுமன்றி, நாங்கள் திட்டமிட்டே இதில் இறங்கியிருக்கிறோம் என்பதையும் புரிந்துகொண்டார்.
முதன் முதலாக, " பாத்து சொல்றேன் " என்று பின்வாங்கினார்.
அடுத்தடுத்த நாட்களில் அவரது வேகம் மட்டுப்பட்டது. நாங்களும் எங்கள் ஐயத்தைத் தொடர்ந்து வற்புறுத்தாமல் விட்டுவிட்டோம். ஆனால் அவ்வப்போது ஐயக்குறி தோன்றுவதுபோல் பாவனையாக அவரைப் பார்ப்பதை விளையாட்டாகச் சிலநாள் தொடர்ந்தோம்.
அவரும் அரட்டல் உருட்டல்களைக் குறைத்துக்கொண்டதோடு படித்துக்கொண்டுவந்து ஐயங்களை எதிர்கொள்ளவும் தொடங்கினார்.
குறிலே நெடிலே ...என்று வைத்து , உதாரணங்களை நெடிலும் (ஆ) , குறிலும் (ழி), எனத் தலைதடுமாற்றமாகக் கூறக் காரணம் யாப்பின் அமைப்பு (யாப்பமைதி)தான்; வேறொன்றுமில்லை.முடிந்தவரை எளிமையாகச் சொல்கிறேன்.
குறிலே நெடிலே குறிலிணை யேனைக் குறினெடிலே
நெறியே வரினு நிரைந்தொற் றடுப்பினு நேர்நிரையென்
றறிவேய் புரையுமென் றோளி யுதாரண மாழிவெள்வேல்
வெறியே சுறாநிறம் விண்டோய் விளாமென்று வேண்டுவரே
(யாப்பருங்கலக்காரிகை, 5)
மூன்றாவது அடியின் இறுதி இரு சீர்கள் : " உதாரண மாழிவெள்வேல் " (உதாரணம் ஆ ழி வெள் வேல் ).
உதா - குறில் நெடில் -நிரை அசை
ரண- குறில் இணை -நிரை அசை
( நிரைநிரை என்னும் இச்சீரின் வாய்பாடு கருவிளம்.)
மா - நெடில் - நேர் அசை
ழிவெள் - குறில் இணை ஒற்று - நிரை அசை
வேல் - நெடில் ஒற்று - நேர் அசை
(நேர்நிரைநேர் என்னும் இச்சீரின் வாய்பாடு கூவிளங்காய்)
வாய்பாடுகளும் குறிப்பிட்ட அசைச் சேர்க்கை கொண்டவையாகவே அமையும். அதனால்தான் அவை வாய்பாடுகளாகக் கொள்ளப்படுகின்றன.
கரு|விளம் - நிரைநிரை
கூ|விளங்|காய் - நேர்நிரைநேர்.
உதாரண மாழிவெள்வேல்
---------- ---
/ \
விளம் முன் நேர்
- ரண → மா -
இவ்வாறு ' விளமுன் நேர் ' என்றால்தான் அது வெண்டளை[வெண் (பா) தளை] ஆகும்.இவ்வாறு வெண்டளையாக வரவேண்டும் என்பது கட்டளைக் கலித்துறை இலக்கணம்.யாப்பருங்கலக் காரிகை கட்டளைக் கலித்துறையால் ஆனது. எனவேதான் காரிகை ஆசிரியர் அமிதசாகரர் நெடிலும் குறிலுமாக (ஆ ழி என) வைத்துள்ளார். இந்தச் சீரைக் குறில்நெடிலாக அமைத்தால் தளை தட்டும் (தளை மாறுபடும்; பிழைபடும்).
இந்த யாப்பில் எழுத்து எண்ணிக்கையும் வரையறுத்து அமையும்.
கட்டளைக்கலித்துறை இலக்கணம்:
(1)நெடிலடி நான்காய் வரும்.
(2)முதல் நான்கு சீர்களிடையில் வெண்டளை அமையும்.
(3)ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீராகவே முடியும்.
(4)அடியின் முதல்சீர் நேரசையில் தொடங்கினால் ஒற்று
நீங்க 16 எழுத்தும், நிரையசையில் தொடங்கினால் ஒற்று
நீங்க 17 எழுத்தும் வரும்.
(5)ஈற்றடியின் இறுதிச் சீர் ஏகாரத்தில் முடியும்.
( நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்)
பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்களின் சிறு தலையீடு:
யாப்பருங்கலம் நூற்பா யாப்பில் அமைகிறது; உதாரணம் கூறவில்லை. ஆனால் நேரசைக்கான நூற்பா,
நெடில்குறில் தனியாய் நின்றும்ஒற்று அடுத்தும்
நடைபெறும் நேரசை நால்வகை யானே. (யாப்பருங்கலம், 6)
என ‘நெடில்குறில்’ என்பதில் தொடங்குகிறது. குறிலைக் கூறிப் பின் நெடிலைக் கூறுவதுதானே சரி? ஆனால் யாப்பருங்கலம் நெடிலைக் கூறிப் பின் குறிலை வைப்பது ஏன்?
காரிகையின் தலைதடுமாற்றத்திற்கும் யாப்பருங்கலம் நெடில்குறில் எனக் கூறுவதற்கும் ஒரே காரணம்தான். ‘குறில்நெடில்’ என்னும் வரிசையில் வைத்து ஒரு சொல்லை நேரசைக்கு உதாரணம் காட்ட முடியாது. ‘ஆழி’ என்னும் சொல்லே இருநூல்களின் உரைகளிலும் உதாரணமாக வருகிறது. ஆ – தனிநெடில்; நேரசை. ழி – தனிக்குறில்; நேரசை. இதே காரிகையில் ‘குறில்நெடில்’ வரிசையில் இரு உதாரணங்கள் வருகின்றன. ‘சுறா’ என்னும் சொல் ‘குறில் நெடில்’ நிரையசைக்கான உதாரணம். ‘விளாம்’ என்பது ‘குறில் நெடில் ஒற்று’ நிரையசை உதாரணம். ‘குறில் நெடில்’ என்னும் வரிசையில் உதாரணம் காட்டினால் அது நேரசைக்கான உதாரணமாக அமையாமல் நிரையசைக்கான உதாரணம் ஆகிவிடும். ‘குறில் நெடில்’ என முறைப்படி காரிகை தொடங்கினாலும் இக்குழப்பத்தைத் தவிர்க்கவே உதாரணம் ‘நெடில் குறில்’ என்னும் வரிசையில் அமைகிறது. குறில் நெடில் என்னும் வரிசையில் உதாரணம் கூற இயலாது என்பதால் யாப்பருங்கலம் ‘நெடில் குறில்’ என்றே கூறிவிடுகிறது.
எனது விளக்கம்:
இதில் சிறிய சிக்கல் இருக்கிறது. ' ஆழிவெள்வேல் ' ஒரே சீர்.
'ஆ|ழிவெள்|வேல்' என அசைகள் அமைந்துள்ளன. எனவே இங்கும் நெடிலுக்கு மட்டுமே உதாரணமாகி, ழிவெள் என நிரையசையாகிக் குழம்ப வாய்ப்புண்டு .
No comments:
Post a Comment