Friday, April 30, 2021

சிற்பியின் நரகமும் சிலை கடத்தலும்

 

சிற்பியின் நரகமும்
சிலை கடத்தலும்

2002 அல்லது 2003 இல் ஈழக் கவிஞர் அ.யேசுராசா அவர்களுடன் தஞ்சைப் பெரிய கோயில் சென்றிருந்தேன். திருச்சுற்றுச் சுவர்ப் பகுதிகளிலிருந்த கிறுக்கல்கள் கண்டு வேதனையுற்றார்.
இலங்கையின் சிறு சிறு சைவ, பெளத்தக் கோயில்கள் கூட,  பொறுப்பாகப் பேணப்படுவதையும்,  இவ்வளவு பெரிய கோயிலைப் பொறுப்பின்றிச் சிதைப்பதையும் சொல்லி அங்கலாய்த்தார்.
இத்தனைக்கும் , ஒப்பீட்டளவில் நன்கு பேணப்படும் கோயில்களுள் ஒன்று பெரிய கோயில்.

வழிபாட்டில் உள்ள, கைவிடப்பட்ட தொன்மை வாய்ந்த பல கோயில்களின்  - குறிப்பாகச் சைவக் கோயில்களின் - நிலை பரிதாபமானது .

பரிவார தேவதைகள் செல்வாக்காகவுள்ள கோயில்களின் நிலை மேலும் பரிதாபமானது. அவற்றுக்கெனத் தனிக் கட்டுமானத்தை ஏற்படுத்திக் கோயிலின் அமைப்பொழுங்கைச் சகிக்க இயலாதவாறு சிதைத்து விடுவார்கள்.

நம்பிக்கை சார்ந்த செல்வாக்கும் செல்வாக்குச் சார்ந்த வருமானப் பெருக்கமும் ஏற்பட்டுவிட்டால் வசதிகளின் பேரால் வளத்தின் அடையாளமாய்ச் செய்யப்படும் அபத்தங்களைச் சொல்லி மாளாது. கருவறை உட்சுவர்களில் வெண் சலவைக் கல் பாவி விடுவார்கள். திருச்சுற்றுத் தரையிலும் வழுவழுப்பான ஓடுகள் பதிக்கப்படும். அங்கப்பிரதட்சணம், எண்ணெய் தடவுவது , வெண்ணெய் எறிவது முதலியவற்றால் ஈரமாகிவிட்டால், கவனக்குறைவாகக் காலடி வைப்போருக்கு வீடு பேறு எளிது.

அப்புறம் ஒவ்வொரு வாயிலிலும்  நேரே நுழைந்து திருச்சுற்றுகளில் வலம் வந்து வழிபடும் கோயில் அனுபவத்தைப் பலி கொடுத்து, கும்பல் கட்டுப்பாடு கருதிச் சுற்றிச் சுழன்று நெளியும் புதிர் வரிசையில் தள்ளுண்டு நெருக் குண்டு  நகர்ந்து இறைக் காட்சி காண்பதில் அசட்டு நம்பிக்கை நிறைவு தவிரப் பயனில்லை.

வாழைப்பழத் தோலில் தீபமேற்றுவது , எலுமிச்சம் பழத் தலைமாலை அணிவது என்றெல்லாம் புதுப் புதுச் சடங்குகளை ஏதோ வேத காலத்திலிருந்தே வந்தவை போலச் சொல்லும் பிழைப்புவாதப் பூசகர்களின் தந்திரங்கள் (இவற்றுக்கு ஒத்தூதிப் பரப்பும் ஊடக வணிகர்கள் ) ஒரு பக்கம்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

கோயில் கலைச் சீர் குலைவில் வறட்டுப் பகுத்தறிவு, நாத்திகவாதிகளுக்கு இடம் - இல்லாமலில்லை - மிகக் குறைவு .

                        * * * * * * * *
புதுமைப்பித்தனின் அற்புதமான சிறுகதைகளுள் ஒன்று 'சிற்பியின் நரகம்'. அந்தக் காலக் காவிரிப்பூம்பட்டின அந்திமாலைக் கடற்கரைக் காட்சிகளின் இயக்கப் பின்னணியில் யவனனும் நிரீசுவரவாதியுமாகிய பைலார்க்கஸ் அமர்ந்திருப்பதைச் சொல்லிக் கதையைத் தொடங்குவார் பு.பி.
அடுத்து நீறு துலங்கும் நெற்றியுடன் வரும் சைவச் சந்நியாசி. இருவரும் தத்தம் கருத்து நிலை நின்று முரண்படும் உரையாடலுடனும் கருத்து முரண் கடந்த நட்புணர்வுடனும் கதை நகரும். பைலார்க்கஸ் பேச்சில் புதுமைப்பித்தன் சாயலை - கேலியை - காணலாம்.
இருவரும் சிற்பி சாத்தனைப் பார்க்க நாளங்காடி நோக்கிப் புறப்படும்போது எதிரே, எண்பது வயதிலும் வலிமையும் தீட்சண்யமும் குன்றாத சாத்தனே வந்து விடுகிறான். சிற்பியும் சைவ சமய நம்பிக்கையாளன்தான்.
மூவரும் இரட்டைமாட்டு வண்டியில் போகும் போதே சாத்தன் தனது ஆடல்வல்லான் (நடராசன்) படிம உருவாக்கத்தில் தாக்கம் செலுத்திய தோற்றங்களை விளக்கி நிறைவாக, பின்னிருந்து ஓர் அர்த்தமுள்ள வஸ்து தூண்டியதால் படைப்பு சாத்தியமாயிற்று என்கிறான்.

அதை மறுத்து, " நீதான் சாதித்தாய்... நீதான் பிரம்மா ! நீதான் சிருஷ்டித் தெய்வம்" என்று பைலார்க்கஸ் அடுக்கிக் கொண்டேபோகிறான்.
                                        *

மூவரும் படிம அறைக்குள் நுழைகின்றனர்.

மங்கிய தீப ஒளியில் ஜீவத் துடிப்புடன் ஆடல்வல்லான் படிமம்!
சந்நியாசி பாடத் தொடங்கிவிடுகிறார் 

குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிழ்சிரிப்பும் 

பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண் ணீறும் 

இனித்தங் கசிய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால் 

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

(  திருநாவுக்கரசர் பாட்டை இரவல் வாங்கிப் பயன்படுத்துகிறார் பு. பி.)

படிமத்தை அரசன் அமைக்கும் கோயிலில் வைக்கப் போவதாகச் சொல்கிறான் சிற்பி.



" என்ன! இந்த அசட்டுத்தனத்தை விட்டுத் தள்ளு... அரசனுடைய அந்தப்புர நிர்வாண
உருவங்களின் பக்கலில் இதை வைத்தாலும் அர்த்தம் உண்டு... இதை உடைத்துக் குன்றின் மேல் எறிந்தாலும் அந்தத் துண்டுகளுக்கு அர்த்தம் உண்டு..."
என்று வெறிபிடித்தவன் போல் பேசினான் பைலார்க்கஸ். பேச்சில் முரண்பாடு முற்ற பைலார்க்கஸ் சினத்துடன் வெளியேறி விடுகிறான்.
                                                          * * *
பெருவிழாக் கொண்டாட்டங்களுடன் படிமம் கோயிலில் நிறுவப்படுகிறது. அதில் பங்கேற்க பைலார்க்கஸ் உயிருடன் இல்லையே என்ற வருத்தம் மேலிடத் திரும்புகிறான் சிற்பி. சோர்வு .கண்ணயர்வு .
                                                         * * *
கோயிலில் எவரும் சிலையை ஏறிட்டுப் பார்க்கவில்லை. எனக்கு மோட்சம்! எனக்கு மோட்சம்' என்று குனிந்து வணங்கும் கூட்டம்.

கதை முடிவு :

நாட்கள், வருஷங்கள், நூற்றாண்டுகள் அலைபோல் புரள்கின்றன. அந்த அனந்த கோடி வருஷங்களில் ஒரு சாயையாவது ஏறிட்டுப் பார்க்கவேண்டுமே!

"எனக்கு மோட்சம்...!" இதுதான் பல்லவி, பாட்டு, எல்லாம்!

சாத்தன் நிற்கிறான்...

எத்தனை யுகங்கள்! அவனுக்கு வெறி பிடிக்கிறது. "உயிரற்ற மோட்சச் சிலையே! உன்னை உடைக்கிறேன்! போடு! உடை! ஐயோ, தெய்வமே! உடைய மாட்டாயா! உடைந்துவிடு! நீ உடைந்து போ! அல்லது உன் மழு என்னைக் கொல்லட்டும். அர்த்தமற்ற கூத்து...!" இடி இடித்த மாதிரி சிலை புரள்கிறது - சாத்தனது ஆலிங்கனத்தில், அவன் ரத்தத்தில் அது தோய்கிறது... ரத்தம் அவ்வளவு புனிதமா! பழைய புன்னகை!...

சாத்தன் திடுக்கிட்டு விழித்தான். வெள்ளி முளைத்துவிட்டது. புதிய கோவிலின் சங்கநாதத்துடன் அவனது குழம்பிய உள்ளம் முட்டுகிறது.

"என்ன பேய்க் கனவு, சீ!" என்று விபூதியை நெற்றியில் அணிந்து கொள்கிறான்.

"பைலார்க்கஸ் - பாவம் அவன் இருந்தால்..." சாத்தனின் மனம் சாந்தி பெறவில்லை.

                                                      *

 'சில்பியின் நரகம்' என்ற பெயரில் மணிக்கொடியின்  25-08-1935 ஆம் நாள் இட்ட இதழில் இக்கதை வெளியாகி உள்ளது. அதற்குப் பத்து மாதங்களுக்கு முன்பே புதுமைப்பித்தன்  ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அந்தக் கட்டுரை இந்தக் கதையின் திறவுகோல்.

தமிழர்கள்தான் கலையின் மேதையை, அதன் உன்னதத்தை அறிந்தவர்கள். அவர்கள்தான் சிருஷ்டியின் ரகஸியத்தைக் கலையினால் இதற்கு முன்னும், இதற்குப் பின்னும் செய்கின்றவண்ணம், கலையின் முடிவுச் சிகரமாகச் சிருஷ்டித்து விட்டார்கள். அதுதான் நடராஜ விக்கிரகம். கலையின் மேதையை எவ்வளவாகப் பாவித்தார்கள் தமிழர்கள் என்பதற்குப் பின்வரும் பாட்டே சான்று

என்று 'குனித்த புருவமும் ... ' என்னும் நாவுக்கரசர் பாட்டைத் தருகிறார். 

ஒரு பக்தன். அவன் கவிஞன், கலைஞன். உலகத்தை விட்டுவிடுவது பந்தத்தைக் களைவது என்பதெல்லாம் சாதாரண உணர்ச்சி. மனிதப் பிறவி வேண்டாம் என்று பாடிவிடுவது எளிது.  இந்தக் கவிஞனுக்கு அப்படிப்படவில்லை. மனிதப் பிறவியின் அவசியத்தை அவன் பாடுகிறான். எதற்காக?.... ...மனிதப் பிறவி வீண் என்று அழுவதில் அர்த்தமில்லை. மனிதப் பிறவி எடுக்காவிட்டால் நடராஜ விக்கிரகத்தின் கலையழகை அனுபவிக்க முடியுமா? அதற்காகவே மனிதப் பிறவி அவசியம் என்கிறான் கவிஞன்.

இதுதான் தமிழ்நாட்டின் கலை இலட்சியம். சமய உணர்ச்சி. இந்த நாடியின் ரகஸியத்தை அறிந்தால் தமிழ் இலக்கியத்தை அனுபவிக்க முடியும்.

ஆனந்த குமாரசாமியின்  Dance of Siva கலை அனுபவத்தில் தோய்ந்த ஆய்வுக்கட்டுரை.

சிற்ப சாத்திரங்கள் ஆடல் வல்லான் சிலை நுட்பங்களை விளக்கியுள்ளன.

நாட்டிய சாத்திரங்கள் அவிநயங்களையும் மெய்ப்பாடுகளையும் காட்டியுள்ளன.

மெய்யியல்  நூல்கள் உள்ளார்ந்த கருத்துகளைப் புலப்படுத்தியுள்ளன.

ஆனால் திருநாவுக்கரசர் இப்பாட்டில் கலையாக உணர்ந்து இலக்கியமாகப் பதிவு செய்திருக்கிறார்.

புதுமைப்பித்தன் அதைத் தம்  பார்வையில் மீட்டுருவாக்கி நவீன இலக்கிய உயிர் கொடுத்திருக்கிறார்.

நம்மூர் நம்பிக்கையாளர்களின் கோயில்களை விட , நிரீசுவர வாத பைலார்க்கஸ்களின் மேலை அருங்காட்சியகங்களில் சிற்பங்கள் பேணப்படுவது நல்லதுதானோ!


இலக்கணவியல் - நூலறிமுகம்

 இலக்கணவியல்






தமிழ்கூறு 'நல்'லுலகில் கோட்பாட்டு நோக்கில் ஆராய்கிறேன் என்று , அரைகுறையாகச் சில சொற்களைச் செவிமடுத்ததே தகுதியாய்க் கிளம்பி அஞ்சறைப்பெட்டியில் பிரித்துப்போடுவது அல்லது அடாவடியாக அடித்து நொறுக்குவது என்கிற போக்கைக் கண்டு கண்டு கோட்பாடு என்னும் சொல்லின் மீதே ஓர் ஒவ்வாமை எனக்குண்டு.


பேரா.சு.இராசாராம் அவர்களின் 'இலக்கணவியல்- மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்' என்னும் நூல் 2010இலேயே வந்துவிட்டது. அப்போதே நானும் வாங்கிவிட்டேன். என்றாலும் படிக்கவில்லை . இரண்டு காரணங்கள். 1. அது கோட்பாட்டு நூல்.  2.அப்போது நானும் 'பேர்' ஆசிரியனாகக் குழுக்கூட்டம் அறிக்கை, அறிக்கை  அறிக்கை குழுக்கூட்டம், குழுக்கூட்டம் குழுக்கூட்டம் அறிக்கை ... ...என்று பேராசிரியப் பணியிலிருந்தேன் ( இடையிடையே பாடமும் நடத்தலாம், நடத்தினேன்!)


பிறகு ? 


அப்படியொன்றும் எடுத்தேன் படித்தேன் என்கிற வகைப்பட்ட நூலாக இது இல்லை. எடுத்தேன் வைத்தேன் என்று சில நாட்களான பின், துண்டுத்துக்காணிகளாய்ப் படிப்பதும் எழுதுவதுமாய்- முகநூலில்தான் - இது புத்தக அடுக்குகளுக்குள் மறைந்துபோனது. இப்படிப்போனவை பல. போகட்டும்.


கடந்த நாலைந்து நாளாய்ச் சில இடையீடுகளையும் கடந்து படித்து முடித்துவிட்டேன் (முள்முடித்தொற்றுநோய் - 19க்கு நன்றி என்று சொல்வது குரூரமாயிருக்கும்)


ஆழ்ந்த தமிழிலக்கணப் புலமையுடனும்பரந்த மொழியியல் அறிவுடனும் ஆன்றவிந்தடங்கிய நிதானத்துடனும் ஆற்றொழுக்கான நடையில் 500 பக்க நூலை எப்படித்தான் எழுதினாரோ! என்னும் வியப்பே விஞ்சியது.


இது வழக்கமாக மொழியியல் நோக்கில் எழுதப்படும் மரபிலக்கண ஆய்வு நூலன்று ; மரபிலக்கணங்களைப் பயில்வதற்கும் ஆராய்வதற்குமான இலக்கணவியல் என்கிற புதிய  துறைப்படிப்பை (discipline) நிலைப்படுத்துகிற நூல்.


------------------------------------------------


" கோட்பாடு என்றால் என்ன? கருத்தியலான கொள்கைகள் அடங்கியதும் , சாதாரண அறிவுக்கு எட்டாததும், யதார்த்த நிகழ்வுகளிலிருந்து தள்ளி நிற்பதுமான ஒரு கட்டுமானப் புதிர் கோட்பாடு என்று நாம் பொதுவாகக் கருதுகிறோம். இது தவறு. எந்த யதார்த்த நிகழ்வுகளிலிருந்து கோட்பாடு அப்பாற்பட்டது என்று கருதுகிறோமோ அதே யதார்த்த நிகழ்வுகளை மையமாகக் கொள்வது என்பதுதான் அதற்குரிய யதார்த்தமான விளக்கம்.

" ஒரு கோட்பாடு சிறந்த கோட்பாடு என ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் அது நம்மைச் சுற்றி நிகழும் மொழி மெய்நிகழ்வுகளைக் குறித்துச் சிந்திக்க வேண்டும்" என்கிறார் பேரா. இராசாராம்(ப.410).


என் போன்ற கோட்பாட்டு ஒவ்வாமையரை - என் போன்ற என்ன, என்னை - இடித்துரைப்பதுபோலவே உணர்ந்தேன். ஆம், இதுதான் கோட்பாடு. இந்த அடிப்படையில்  மரபிலக்கண மீக்கோட்பாடொன்றைக் கண்டடைந்து இலக்கணவியல் என்னும் துறைப்படிப்பை இந்நூலில் முன்வைக்கிறார்.


இதற்குப் பின்னரும் கோட்பாட்டு ஒவ்வாமையாளர் இருப்பின் அவர்கள் தொல்காப்பியந் தொட்டுத் தொடரும் தமிழ் மரபிலக்கணங்களின் திறனாய்வு நோக்கிலான வரலாறாக இந்நூலின் பகுதிகளைப் பயில முடியும். தொல்காப்பியத்திற்கு முந்தைய அகத்திய, ஐந்திர மரபுகளின் தடங்களையும் தேடி இணைக்கும் முயற்சியையும் இதில் காணலாம்.





மேலை - கிரேக்க, இலத்தின் - இலக்கண வரலாறு, இந்திய - சமற்கிருத, பிராகிருத - இலக்கண வரலாறு,ஆகியவற்றின் போக்கைத் தமிழோடு ஒப்புநோக்குகிறார்;

சமற்கிருத இலக்கண மரபு இந்திய மொழிகளின் மீது செலுத்திய தாக்கம், தமிழின் மீது செலுத்திய செல்வாக்குஆகியன பற்றி விவாதிக்கிறார்; இவையன்றி வேறு சில மொழிகளோடும் தமிழ் ஊடாட நேர்ந்ததையும் கணக்கில் கொள்கிறார்; உலகெங்கும் இலக்கண உருவாக்கத்தில் தத்துவப் பார்வைக்கு இடமிருந்ததையும்  

 மேலோட்டமாகவோ ஆழமாகவோ சமயச் சார்பு இருந்ததையும் சுட்டுகிறார்.


இத்தகு தாக்கம், செல்வாக்கு , தொடர்பு ஆகியவை சமூக, அரசியல் சார்ந்த புற அழுத்தங்களின் விளைவு என்று சான்றுகளுடன் நிறுவ முற்படுகிறார்;ஓர் அரசின் ஆட்சிப்பரப்புப் பல்வேறு மொழியாளர் பகுதிகளில் பரவும்போது மொழி பற்றிய பார்வை அரசுக்குத் தேவைப்படுவதையும் தத்தம் தன்மைக்கேற்ப அரசுகள் மொழிகளைக் கையாள்வதையும்  சுட்டுகிறார்.


இவற்றின் பின்னணியில் தமிழிலக்கண மரபுகளாக 1) அகத்திய மரபு, 2) தொல்காப்பிய மரபு, 3) வீரசோழிய மரபு, 4) பிரயோக விவேக மரபு ஆகியவற்றைக் கண்டடைகிறார்.


தொல்காப்பியம் ஒரு தனி நிலைக் கோட்பாட்டு இலக்கணம் (pure/ theoretical grammar) ,பிந்தைய தமிழிலக்கண நூல்கள் யாவும் பயனாக்கக் கோட்பாட்டு இலக்கணங்கள்(applied grammar), வீரசோழியம் புடை மாற்று ஒப்புமைக்கோட்பாட்டைத் (theory of transfer) தழுவியது, பிரயோக விவேகம் கொடைமொழி ஒப்புமை இலக்கணம் (Donor language based comparative grammar) என்று விரிவான தரவுகளைக் கொண்டு விவாதித்து, தமிழ் இலக்கண நூல்களின் கோட்பாட்டு அடிப்படைகளை ஆராய்ந்து நிறுவுகிறார்.


இந்தக் கோட்பாடுகள் இன்ன பிற கோட்பாடுகள் அனைத்தையும் கொண்டு ஒரு மீக்கோட்பாட்டை உருவாக்கி அந்த மீக்கோட்பாடு கொண்டு மரபிலக்கணங்களை - தமிழ் இலக்கணங்களை மட்டுமன்றிப் பேரளவு பிறமொழி மரபிலக்கணங்களையும்  கூட - ஆராயும் ஒரு துறைப்படிப்பாக (discipline) இலக்கணவியல் என்பதை இந்நூல் நிலைப்படுத்த முனைகிறது.


---------------------------------------------


இந்நூலுக்குப் பேராசிரியர் இ.அண்ணாமலை அவர்கள் எழுதிய அணிந்துரையை இப்படி நிறைவு செய்திருப்பார்: " இலக்கணவியலை அறிவியல் ஆய்வாகப் பார்க்கும் போக்கு இலக்கண ஆராய்ச்சிக்குப் பலரை ஈர்த்தால் இந்த நூலின் பயன் நிறைவடையும்"


பத்தாண்டுகளுக்குப் பின்பும் , எனக்குத் தெரிந்து ஓரிரு சிறு முயற்சிகள் தவிரக் காத்திரமான ஆய்வுகள் நிகழவில்லை என்றே தோன்றுகிறது (அப்படி நிகழ்ந்திருக்குமானால், பேரா.சு.இராசாராம் அவர்களை விடவும் நான் மகிழ்வேன். அவற்றைப் பெரியமனத்துடன் எனக்குத் தெரிவித்தால் நன்றியென்)இலக்கணமும் மொழியியலும் பயின்ற அறிஞர் வட்டம் கூட (தமிழுலகில் இந்த வட்டம் சிறியதுதான்) போதிய அளவு இந்நூலைப் பொருட்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது.

Tuesday, April 27, 2021

மனைவி உயர்வும் கணவன் பணிவும் - தொல்காப்பியம் !

 

"ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை"

"ஆணும் பெண்ணும் நிகர் " - முதலியவை இருபதாம் நூற்றாண்டு முழக்கங்கள்.


ஆனால்,


தொல்காப்பியர் மனைவி உயர்வையும் கணவன் பணிவையும் அன்றே சொன்னாரா? 


ஆம்.

 

காமக் கடப்பினுட் பணிந்த கிளவி

காணுங் காலைக் கிழவோற் குரித்தே

(தொல்காப்பியம், கற்பியல்)


காமக் கடப்பு = காம உணர்ச்சி கைமீறிப் போதல் ; பணிந்த கிளவி = பணிவாகப் பேசுதல் ;கிழவோற்கு = கிழவோன் (தலைவன்) + கு = தலைவனுக்கு


மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்

நினையுங் காலைப் புலவியுள் உரிய

(தொல்காப்பியம், பொருளியல் ) 


புலவி = ஊடல் (புலவி, ஊடல், துனி இவற்றிடையே சிறு சிறு வேறுபாடு உண்டு என்பார்கள்)


இவ்வாறு தொல்காப்பியம் கூறுவன கற்புக் காலம் கருதி.


இந் நூற்பாக்களுக்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் நடப்பியற் சாயலுள்ள கலித்தொகையிலிருந்தே எடுத்துக் காட்டுகள் தருகின்றனர். 


இவற்றில் உச்ச நிலை எது தெரியுமா? மனைவி காலிலேயே கணவன்  விழுந்து விடுவதுதான். தொல்காப்பியரே சொல்கிறார் :"அடிமேல் வீழ்ந்த கிழவன்" (' அவனறி வாற்ற... ' என்னும் தொல்., கற்பியல் நூற்பா).


எப்போது? தலைவன் பரத்தையிடம் சென்று திரும்பி வந்து தலைவியிடம் தன்னை ஏற்குமாறு கெஞ்சும் போது.


இதற்குப் பூரணரும் நச்சரும் கலித்தொகை 95 ஆம் பாட்டையே எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.


இதில் தலைவன், தப்பு செய்துவிட்டேன். கருணை காட்டு ("பிழைத்தேன் அருள் இனி " )என்று கெஞ்சுகிறான்


இவையெல்லாம் திருமணத்திற்குப் பிந்தைய கற்புக் காலத்தில் .


இளம்பூரணர் காட்டும்," மருந்திற் றீராது மணியினாகாது" என்னும் பாட்டின்  ( 'காதல் வெறும் ஏட்டுச் சுரைக்காய்' என்னும் எனது கட்டுரை காண்க) "ஆடு கொடி மருங்கின் அருளின் அல்லது பிறிதின் தீராது" என்பதில் தலைவனின் மெய்யுறு புணர்ச்சி வேட்கையை உணர்ந்து சுட்டுகிறார் இளம்பூரணர் .அது திருமணத்துக்கு முந்தைய களவுக்காலம்.


சொல்லளவில் அன்றி, பொறுக்கவியலாத காதல் நோய் காரணமாகத் தலைவன் இரந்து கெஞ்சி , தலைவியின் அருள் வேண்டும் களவுக்காலப் பாடல்கள் சிலபலவுள.


உண்மையில் நம் சங்கச் சான்றோர்தம் செவ்வியல் இலக்கியங்களில், குறிப்பாகக் குறிக்கோள் நிலை மீதூர்ந்த - குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகைப் பாடல்களில் -களவிலும் கற்பிலும் தலைவி தலைவனின் அருளை வேண்டி நிற்குமிடங்கள்தாம்  நனி மிகுதி. விதிவிலக்குகள் மிகச் சிலவே.


" வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்

  மனையுறை மகளிர்க் காடவர் உயிர் "

                                (குறுந்தொகை , 135 )

                                           

என்னும் இக் குறுந்தொகைப் பாட்டின் முதல் இரண்டடிகள் , இலக்கிய மெருகினூடாகச் சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமான இடத்தையும் உணர்வையும் செறிவாக வரையறுத்துச் சொல்லிவிடுகின்றன.


தொல்காப்பியரும் , மனைவி உயர்ந்து கணவன் பணிவதை விதிவிலக்காகவே விதிக்கிறார்.


                                                                ♥╣[-_-]╠♥

                                 


இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகத்தின் வெகுசனநிலைப் பார்வையில், குறிப்பாக ஆணாதிக்கம் நீக்கமற நிறைந்து கிடந்த , கிடக்கிற தமிழ்த் திரைக் கேளியுலகின் பார்வையில், பெரிய மாற்றம் ஒன்றுமில்லை. '  இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள ' என வலியுறுத்தப்பட்டது ( பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி ; படம் : விவசாயி ; கதைத் தலைவராக நடித்தவர் : 'புரட்சித் தலைவர்' ம.கோ.இரா.)


தமிழ் - ஏன் இந்திய - திரையுலகில் ஒலி, ஒளி, இசை, காமிராக்கோணம் முதலிய கூறுகளில் ஒன்றாகப் பாடலும், காட்சிச் சூழலுக்கும் இசை மெட்டுக்கும் கட்டுப்பட்டு , உருப்பெற்றது. பாடலாசிரியர்களும் ஒரு வகைத்தொழில் நுட்பப் பணியாளர்தாம் ( திரைப்பட விவரங்கள் தரும் விக்கிப்பீடியா கட்டுரைகள் பலவற்றில் பாடலாசிரியர் பெயர் இல்லை)


ஆனால் பாடல்கள் திரைக்கதையிலிருந்து விலகிய தனித்த இயக்கமும் கொண்டவை.பாடற் காட்சிகளையே  தனித்துப் பார்க்கும் வாய்ப்புப் பெருகிவிட்ட இந்தக் காலக்திலும்  காட்சியிலிருந்து தனித்து இயங்கும் பாடல்களின் வலிமை குன்றிவிடவில்லை.


இந்தப் பின்னணியில் கண்ணதாசன் அவர்களைப் பார்க்க வேண்டும். அநாயாசமான திரைப்பாடலாக்கச் செய்நேர்த்தி கைவரப் பெற்ற கண்ணதாசன், தம் பாடல்களில் கவிதையின் வண்ணங்களைக் குழைத்தளித்தார்; கவிதையேயாகவும் சிலபல தந்தார்.


" நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே!" என்ற ஒன்று போதாதா?


வாழ்வின் பல்வேறு நிலைகளில் உணர்ச்சி முனைப்பான தருணங்களில் உள்ளம் முணுமுணுக்கும் பாடலடிகளைத் தந்தவர் கண்ணதாசன்("ஆலம் விழுதுகள்போல் உறவு ஆயிரம் வந்துமென்ன, வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடா திருந்தேன்" என்னும் அடிகளை என் உள்ளம் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது)


வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் மட்டுமன்றி, பயின்று ஊறிய இலக்கிய உணர்வுகளும் அவர் பாடல்களுக்கு மெருகேற்றின. 


" அத்திக்காய் காய் காய் " முதலிய சொல் விளையாட்டுகள், "கண்வண்ணம் அங்கே கண்டேன், கை வண்ணம் இங்கே கண்டேன்" முதலிய சொற்பின் வருநிலைகள், " வீடு வரை மனைவி வீதி வரை உறவு" முதலிய கருத்து எளிமையாக்கங்கள் என்னும் இவற்றில் அவர் பயின்ற இலக்கியங்களைச் சமகாலத்தமிழில் வெகுசன ஊடகத்திற்கேற்ப எடுத்தாண்டிருப்பார். சற்றே முயன்றால் இவை போன்ற வெளிப்படையான செல்வாக்குக் காணப்படும் இடங்களைத் தொகுத்து விடலாம் .


உள்ளார்ந்த இடங்களும் உண்டு. அதில் ஒன்றைச் சொல்லத்தான் இந்தச் சுற்றி வளைப்பு. 




சீழ்க்கையொலி இடைமிடைந்த , எனக்குப் பிடித்த (காட்சியில் புகைத்தல் எரிச்சலூட்டுவது) 'பார் மகளே பார்' படப்பாடலின் அடிகள் :


தலைவன் : " நான் காதலென்னும் 

                          கவிதை தந்தேன்

                          கட்டிலின் மேலே

தலைவி    :    " அந்தக்

                          கருணைக்கு நான்

                          பரிசு தந்தேன்

                          தொட்டிலின் மேலே "

                          

 தலைவி 'கவிதைக்கு நான் பரிசு தந்தேன்' என்று பாடியிருந்தால் இயல்பானது; ஓசைகுன்றாதது ; தருக்க ரீதியிலானது;சமத்துவமானது; எனவே, சரியானது.


கண்ணதாசன் கருத்தளவில் மட்டுமன்றி நடை முறையிலும் ஆண் மேன்மையை ஏற்றவர் என்பதை நான் நிறுவ வேண்டியதில்லை.


கட்டிலில் தலைவனின் (படத்தில் கணவன் ) 'காதல்' அவனுக்குக் கவிதை; ஆனால் தலைவிக்கு (மனைவிக்கு) அவன் காட்டும் கருணை .


ஐயத்திற்கிடமின்றி இந்தப் பாட்டடிகள் 'காதலில்' ஆண் மேன்மையைப் பொதிந்துவைத்துள்ளன.


இதற்குக் காலநிலையும் கண்ணதாசனின் கருத்து நிலையும் மட்டுமே காரணங்களா?


சான்றோர் செய்யுட்களின் அருள், கண்ணதாசனிடம் கருணையாகியிருக்கிறது.

'காதல் வெறும் ஏட்டுச் சுரைக்காய்' - தொல்காப்பியர் கருத்து ?

 


'அன்பொடு புணர்ந்த ஐந்திணை'க்(தொல்காப்பியம்) காதலை, ' அன்புடை நெஞ்சம் தாம்கலந்த'  (குறுந்தொகை )  காதலை, 'புவியினுக்கணியாய , சான்றோர் கவி' ( கம்பர்)கண்ட காதலை, தமிழ்க் காதலை (வ.சுப. மாணிக்கனார்) , தொல்காப்பியர் ஏட்டுச் சுரைக்காய் என்பாரா? 


                                                                   (๑♡⌓♡๑)           

                                         

தொல்காப்பியம் முழுமைக்கும் உரை கண்ட முதல் உரையாசிரியர் - 'முழுமுதல்'உரையாசிரியர் - இளம்பூரணர் . இளம்பூரண அடிகள் சமணர் என்பது பெரும்பான்மையோர் கருத்து . சமய மெய்யியல், சமய உணர்ச்சி வெளிப்பாடு முதலிய அகச் சான்றுகளால் அந்தணர் குலத்திற் பிறந்த சைவ சமயத் துறவி என்கிறார் அடிகளாசிரியர்¹.சமயம் எதுவாயினும் அவர் துறவி என்பது பொதுக்கருத்து .        


ஆனால்,


அகப்பொருள் இலக்கண உரைகூறும் போது அவர்  காதற்சுவை தோன்ற எழுதிய இடங்கள் சில  உள்ளன. 


அவற்றுள் தலையாயதாய் என்னை ஈர்த்த இடமொன்றைக் காட்டுகிறேன்.


i.தலைவனும் தலைவியும் தாமே காதல் வயப்பட்டுச் சந்தித்தல், ii.பின்னரும் பிறரறியாமல் சந்தித்துக் கொள்ளுதல், iii.தலைவனின் தோழன் மூலம் சந்தித்தல், iv.தலைவியின் தோழி மூலம் சந்தித்தல் என்கிற நான்கு கட்டங்களும் களவு எனப்படும். 

இவற்றைக் குறிக்கத் தனித்தனிக் கலைச்சொற்கள் உள்ளன. எனவேதான் இவை இலக்கணத்திற்குள் இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. 


களவு என்பது திருமணத்துக்கு முந்தையது. இந்தக் களவுக்காலத்தில் மெய்யுறு புணர்ச்சி (உடலுறவு) நிகழலாமா?

                  

தொல்காப்பியக் களவியல் முதல் நூற்பா உரை விளக்கத்தில் இளம்பூரணர் சொல்கிறார் :

" இயற்கைப் புணர்ச்சி இடையீடு பட்டுழி வரைந்தெய்தல் தக்கதன்றோ எனின், வரைந்தெய்துந் திறம் நீட்டிக்குமாயின் வேட்கை நிறுத்தல் ஆற்றாதார் புணர்ச்சி கருதி முயல்ப"


'காதலிக்கும் காலத்தில் இடையீடு நேர்ந்தால் , திருமணம் செய்து கொண்டு தலைவியைப் பெறுவதுதானே முறை என்றால், திருமண முயற்சி நீட்டிக்கு மானால், உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் உடலுறவுக்கு முயல்வார்கள்' என்பது கருத்து .


ஆக, திருமணத்துக்கு முன் மெய்யுறு புணர்ச்சிக்கு முயல்வதும் உண்டு என்கிறார் இளம்பூரணர் . அடுத்து,

" இவ்வாறு சான்றோர் செய்யுள் வந்தனவும் உளவோ எனின், சான்றோர் செய்யுளுள்ளும் இவ்வாறு பொருள் கொள்ள ஏற்பன உள" என்றும் கூறுகிறார்.


மருந்தின் தீரா மண்ணின் ஆகாது

அருந்தவ முயற்சியின் அகற்றலும் அரிதே

தான்செய் நோய்க்குத் தான்மருந் தாகிய

தேனிமிர் நறவின் தேறல் போல

நீதர வந்த நிறையருந் துயரம் நின்

ஆடுகொடி மருங்கின் அருளின் அல்லது

பிறிதின் தீரா தென்பது பின்நின்று

அறியக் கூறுதும் எழுமோ நெஞ்சே

நாடுவளங் கொண்டுபுகழ் நடுதல் வேண்டித்தன்

ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த

பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன்

கொற்கையம் பெருந்துறை குனிதிரை தொகுத்த

விளங்குமுத் துறைக்கும் வெண்பல்

பன்மாண் சாயல் பரதவர் மகட்கே



தலைவி நெய்தல் நிலத்தவள் (பரதவர் மகள்). அவளைச் சந்திப்பதில் இடையூறுகள் நேர்கின்றன. திருமணமும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. தலைவன் ஏங்கித் தவிக்கிறான். தாபம் நோயாகவே மாறிவிட்டது. மருந்து, மணி, தவம் எதனாலும் அந்நோய் தீரவில்லை.

 

அவள் தந்த நோய்க்கு அவள்தான் மருந்து. நோய் துயரமாக முற்றிவிட்டது. தலைவியிடம் "அசைகின்ற கொடிகளின் பக்கத்திலே , நின் அருளால் அன்றி என் நோய் தீராது என்று கூறிவிடுவோம் ; வா போவோம்" என்று தன் நெஞ்சத்திடம் கூறிக்கொள்கிறான் தலைவன்.


இதில், மெய்யுறு புணர்ச்சி பற்றி எதுவுமில்லையே ? என்று தோன்றும் . எனவேதான் இளம்பூரணர் சுட்டிக்காட்டுகிறார் : " ஆடு கொடி மருங்கின் " . அசைகின்ற  கொடிகளின் பக்கத்தில் (மருங்கு = பக்கம் )  என்பது நேர்ப் பொருள். அசைகின்ற கொடி போன்ற இடையால் (மருங்கு = இடை) என்று உவமைத் தொகையை விரித்து வேறொரு பொருளும் கொள்ளலாம். இனியும் நான் விரித்துரைக்க வேண்டியதில்லை; கூடாது.




அவர் எடுத்துக் காட்டிய பாடலையும் அப்பாட்டில் அவர் சுட்டிக்காட்டிய அடிகளையும் படித்துணர்ந்தபோது, காதல் பாட்டில் தோய்ந்து தலைவனின் மெய்யுறு புணர்ச்சி வேட்கையை நுட்பமாக இனங்கண்டு காட்டுகிற  அடிகள் (!)  சமணரோ சைவரோ துறவிதானா?  


இவ்வாறுதான் பொருள் கொள்ள வேண்டும் என்று அடித்துச் சொல்லாமல், "இவ்வாறு பொருள் கொள்ள ஏற்பன உள" என்பதில் புலப்படும் ஆன்றவிந்தடங்கிய நிதானமும், 

மெய்யுறு புணர்ச்சியை விழையும் தலைவன் கூறுவதில் பொதிந்துள்ள சான்றோர் கவிமரபின் நாகரிக நுண்மையை இனங்காட்டலும் 

இளம்பூரணர் துறவைத் துறவாமலேயே இலக்கியக் காதலில் ஈடுபட வல்லவர் என்பதைப் புலப்படுத்துகின்றன.


ஆனால், 


" இந் நூலகத்து [தொல்காப்பியத்தில்] ஒருவனும் ஒருத்தியும் நுகருங் காமத்திற்குக் குலனும் குணனும் செல்வமும் ஒழுக்கமும் இளமையும் அன்பும் ஒருங்கு உளவழி இன்பம் உளதாம் எனவும் கைக்கிளை ஒருதலை வேட்கை எனவும் பெருந்திணை ஒவ்வாக் கூட்டமாய் இன்பம் பயத்தல் அரிதெனவும் கூறுதலான் , இந்நூலுடையார்[தொல்காப்பியர்] காமத்துப்° பயனின்மை உய்த்துணர வைத்தவாறு அறிந்து கொள்க" என்று பொருளதிகார முதல் நூற்பாவுரையின் இறுதியில் தம் கோட்பாட்டை நிறுத்துகிறார். (° காமம் = காதல்)


காதல் இன்பம் என்பது ஏட்டுச் சுரைக்காய். அது கறிக்கு உதவாது என்பது தொல்காப்பியர் கருத்தென்று இளம்பூரணர் உய்த்துணர்கிறார். அவர் துறவி. 

நுண்ணிய நூல்பல கற்பினும் உண்மையறிவே மிகும்.


தமிழ் அகப்பொருள் மரபிலும் சான்றோர் செய்யுள் வழக்கிலும்  உடல் கடந்த  காதல் (Love)  x  உடல் சார்ந்த காமம்(Lust) என்னும் முரண்நிலையோ, ஒன்றுக்கு மட்டும் அழுத்தம் தருவதோ இல்லை. காமம் என்ற சொல்லும் பழந்தமிழ் இலக்கண,இலக்கியங்களில் காதல் என்னும் பொருளையே குறித்தது.


மெய்யுறு புணர்ச்சி இழிந்ததன்று . கலவி எழுத்து (pornography) கலை நுட்பமற்ற புலனின்ப எழுத்து; மதிப்புக் குறைவானது.பாலுணர்விலக்கியம் (erotic literature) உள்ளத்தின் ஈடுபாட்டையும் கோருவது; கலவி எழுத்தினும் மேலானது; தனக்கேயுரிய வகையில் இலக்கிய மதிப்புடையது. இவை இந்திய மரபில் இல்லாதனவல்ல ; ஆனால், பழந்தமிழில் ஏறத்தாழ இல்லையென்றே சொல்லிவிடலாம்.


--------------------------------------------------------------------------------------------------------------

1. அடிகளாசிரியன் (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை , 1969 , ப.xxvi.

Saturday, April 24, 2021

கொஞ்சம் அனுபவம் கொஞ்சம் ஆராய்ச்சி

 கொஞ்சம் அனுபவம்

கொஞ்சம் ஆராய்ச்சி





22.05.2019 அன்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த உலகப் புத்தக நாள் விழாவில் நான் பேச்சு வடிவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:


யுனெஸ்கோ ஏப்ரல் 23 ஆம் நாளை உலகப் புத்தக நாளாக அறிவித்தது; 1995 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனை இன்று (22.05.19) கொண்டாடலாமா?

இந்த ஏப்ரல் 22 இரவு என்  முகநூலில் " நாளை மட்டுமா? நாளும் புத்தக தினம்தான் " என்று எழுதியிருந்தேன். எந்த நாளிலும் அதைக் கொண்டாடலாம்


பேராசிரியர்கள் மன்னிக்க . பேராசிரியர்கள்தாம் புத்தக நாள் உரையாற்ற வேண்டும் என்பதில்லை.

நூலகர்கள் மன்னிக்க . நான் அரிதினும் அரிதாகவே எம் பல்கலைக்கழகப் பொது நூலகம் சென்றிருக்கிறேன்.


இது தான் புத்தக நாளில் உரையாற்றத் தகுதி போலும் என்றும் அவசரப்பட்டு முடிவு செய்து விடாதீர்கள்.

ஃபீனா டாட் காம் (faena.com) என்னும் இணையத்தளம்

ஓர் இல்ல நூலகம் என்றால் குறைந்தது 80 நூல்கள்   இருக்க வேண்டும் என்கிறது. 


என் பத்தாவது வயதிலேயே - என் தந்தையாரின் நூல்கள் அல்லாமல்- எனக்கேயுரியவையாக 80க்குக் குறையாத நூல்கள் இருந்தன; பெரும்பாலும் சோவியத் சிறுவர் நூல்கள். தமிழில், நல்ல தாளில், பெரிய எழுத்துகளில், வண்ண மயமாக 5-15 காசு விலையில் அவை கிடைத்தன. வாண்டுமாமாவின் தமிழ், லீ ஃபாக்கின் 'முகமூடி'  தமிழ் மொழி பெயர்ப்புப் படக் கதைகள் (Comics) சிலவும் இருந்தன. இவை படிப்பார்வத்திற்குப் பாதை சமைத்தன.


அடுத்த கட்டமாகத் தமிழ்வாணனின் , படமில்லாத சங்கர் லால் துப்பறியும் கதைகளும், புனைவில்லாத(Non fiction) எழுத்துகளான கல்கண்டு இதழ்த் துணுக்குகளும் வாசிப்புச் சுவையின் வாயில் திறந்தன.


இதழ்களில், குறிப்பாக ஆனந்த விகடனில் வந்த சிறுகதைகள் , தொடர்கதைகள் ஆகியவற்றுள் தேர்ந்தெடுத்துத் தனியே பிரித்தெடுத்து, தொகுத்து,என் தந்தையாரே தைத்து அட்டை போட்டு வைத்திருந்த நூல்கள், அவர் வாங்கி வைத்திருந்த மு.வ. முதலியோரின் சில புனைகதை நூல்கள், வங்க, மராத்திய, உருசியப் புனைகதைகளின் மொழிபெயர்ப்புகள், குத்தூசி குருசாமியின் 'பலசரக்கு மூட்டை ' போன்ற கட்டுரை நூல்கள் எனப் பலவும் வகைவகையான வாசிப்பில்

பயணம் செய்ய வைத்தன.


இந்தப் பயணத்தின் முதல் திருப்பம் ஜெயகாந்தன். அவருடைய புனைகதைகளிலும் புனைவிலா எழுத்துகளிலும் இழையோடும் தருக்க நடைநயத்திற்கு ஆட்பட்டேன். 

அடுத்தடுத்த திருப்பங்களை விரிப்பின் அகலும்.


எனது கவிதை வாசிப்பு ஒப்பீட்டளவில் பலவீனமானது.


தமிழ் இளங்கலை பயின்ற காலத்தில் அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரிப் பேராசிரியர்கள் அ. தட்சிணாமூர்த்தி, ந.மெய்ப்பொருள் முதலியோர் ஆய்வு நூல்கள் பலவற்றை அறிமுகப்படுத்தினர். ச.வையாபுரிப்பிள்ளை, க.கைலாசபதி ஆகிய இருவர்தம்

ஆய்வு முறையும் ஆய்வு நடையும் என்னைக் கவர்ந்தன.


நாங்கள் படித்த நூல்களைப் பற்றி எங்களிடம் மாணவர் -ஆசிரியர் என்னும் நிலை கடந்து உரையாடும் பேரா. மெய்ப்பொருள் அவர்கள் நூல்களை வாங்கிப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டினார்;நூல்கள் வாங்குவது பொருளாதார நிலையைப் பொறுத்ததல்ல என உணர்த்தினார்.

அடிக்கடி சென்னை சென்று வரும் பேரா. பா.மாசிலாமணி அவர்கள் கிடைக்கும் புதிய நூல்கள் பற்றிச் சொல்வார். அவர் மூலம் புத்தகங்கள் பலவற்றை வாங்கினோம். என்னுடைய வேகம் சற்றுக் கூடுதலானது.

 என் தந்தையார் மர அலமாரி செய்து கொடுத்தார்; என் வேகங் கண்டு தயங்கினார்.


பேரா. சண்முகவேல் அவர்கள் ஒரு முறை , " மதி! நீ கண்டதையும் படிக்கிறே. உனக்குன்னு ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து ஆழமாப் படி. அப்போதான் பேரெடுக்க முடியும் " என்றார். 

அவர் சொன்னது உண்மைதான். ஆனால் நான் வாசிப்புச் சுவை கருதியே படித்தேன்; என்னை ஈர்த்த நூல்களைப் படித்தேன். 


பாட நூல் படிப்பையும், ஆய்வுப் பட்டத்திற்கான படிப்பையும் வாசிப்பின் வகைக்குள் அடக்கவேண்டியதில்லை என்பது என் கருத்து .


ஆனால், என் ஆய்வுக்கான தேடலின் போது நான் கண்டடைந்த வியத்தகு பெரியவர் அமரர் கோட்டையூர் ரோஜா முத்தையா செட்டியார் அவர்களை இந்தக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிற்கும் போது நினைவு கூராமல் இருக்க இயலாது.

புத்தகக் காதலர்களை அவர் இனங்காணும்

திறனையும் அப்படிக் கண்டு விட்டால் அவர்கள் பால் கொள்ளும் அன்புரிமையையும் அனுபவித்தோரே உணர்வர். நான் அனுபவித்தோருள் ஒருவன் .நிற்க.


நான் பல இடங்களில் சொல்வதுண்டு,’திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்'

என்கிறார்களே,அப்படிஎல்லோரும் உருகுகிறார்களா?


இராமலிங்க அடிகளார் பாடுகிறார்:


வான் கலந்த மாணிக்கவாசக நின்வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே

தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிதீஞ்சுவை கலந்து

ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே


இதில் அடிக்கோடிட்டுப் படிக்க வேண்டியது " நான் கலந்து பாடுங்கால் " என்பது. ஒரு நூல் தானாக ஈர்க்காது. நாமும் கொஞ்சம் ஈடு கொடுக்க வேண்டும். 


வள்ளலாரின் திருவாசக வாசிப்பு உலகியல் கடந்தது. உலகியல் சார்ந்த வாசிப்பு அனுபவமே அற்புதமானது; நமக்குப் போதுமானது. அந்த வாசிப்பிலேயே உவட்டாமல் இனிக்கும் அனுபவம் பெறலாம். 

சரி.

கொஞ்சம் ஆராய்ச்சி !


கண்டு களிக்கும் ஓவியம், சிற்பம் முதலியவை உலகளாவியவை; தொன்று தொட்டுத் தொடர்பவை.

 பாவைக் கூத்து, நாட்டியம், நாடகம் முதலியனவும் தொன்று தொட்டு வருவன.

 நிழற்பாவைக் கூத்தின் தொழில் நுட்ப வளர்ச்சிக் காலச் சாத்தியமாகச் சலனப் படம் வந்தது. 

ஒலி, ஒளி, வண்ணம், தொலைவு, அண்மை,கோணங்கள், வேக ஏற்ற இறக்கம் எனச் சலனப் படம் , பாய்ச்சல் வேகத்தில் திரைப்படம் என்னும் தனிக்கலையாக, கேளிக்கையாக வந்து சேர்ந்தது. ஆனால், திரைப்படத்தைப் போய்ப் பார்க்க வேண்டும்.தொலைக்காட்சி வீட்டிற்குள் வந்துவிட்டது.

திறன் பேசி  செல்லுமிடமெல்லாம் உடன் வரும் கையடக்கக் குட்டித் திரையாகி விட்டது.


சென்ற வாரம்தேஜஸ் தொடர்வண்டியில் பயணம் . அதிலுள்ள குறுந்திரை இயங்கவில்லை. எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த மூத்த வழக்கறிஞர்

திறன் பேசியை எடுத்துச் செவியொலி கருவியைப் பொருத்திக் கொண்டு கையடக்கத் திரையில் இலயித்து விட்டார்.காப்பி வந்தபோதுதான் என் பக்கம் திரும்பினார்.

பொன்னியின் செல்வன் கதை கேட்கிறாராம். எனக்கும் பரிந்துரைத்தார். காலத்தின் கோலம்.


புத்தகம் காலாவதியாவது இயற்கைதானே

ஓலைச்சுவடி போய் அச்சுப் புத்தகம் வரவில்லையா?

இனிப் புத்தகம் தேவையில்லைதானே!


அறிவுத் துறை நூல்கள் , ஆவணங்களுக்கு வேண்டுமானால் ஓரளவு அச்சு நூல் தேவைஎன்று சொல்லலாமா?


வாசிப்பு (Reading)

வெளியீடு(Publishing)

காப்புரிமை (Copy right) 

இவற்றை ஊக்குவிப்பது யுனெஸ்கோ நோக்கம்.


வாசிப்பைப் பற்றி மட்டுமாக என் உரையை வரையறுத்துக் கொண்டிருக்கிறேன். 

பதிப்புரிமை பற்றிய ஒரு நூலை மட்டும் இங்கு அறிமுகப்படுத்த ஆசைப்படுகிறேன். அது, ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய 'பாரதி: கவிஞனும் காப்புரிமையும் - பாரதி படைப்புகள் நாட்டுடைமையான வரலாறு' . இதை அவர் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். 


என் மகன் தமிழ் படிக்கத் தெரிந்தவன்தான். இதன் ஆங்கில வடிவத்தில்  பின்னணித் தகவல்கள் சில கூடுதலாக இருப்பதால் ஆங்கிலத்தில் படிக்க வசதியாயிருக்கிறது என்று வாங்கி விட்டான். இக்காலத்தில் தமிழ் படிக்கிறவர்களின் எண்ணிக்கையும் குன்றி வருகிறது. எனக்குத் தமிழும் அவனுக்கு ஆங்கிலமுமாக வேறு சில நூல்களையும் வாங்க நேர்ந்துவிட்டது; நேரும்.


"அறம் பொரு ளின்பம் வீடடைதல் நூற்பயனே" என்பார்கள். ஒரு மொழி நூல்களின் பெருக்கம் கடந்து , இரு மொழி நூல்களால் எங்கள் வீடு அடைகிறது. 


 சலபதியின் நூல் ஆய்வு நூல். அதனைச் சுருங்கச் சொல்லிக் கருத்தை விளக்கிவிடலாம். ஆனால் , படித்தால்தான் மொழி வளமும் நடை நயமும் தருக்க ரீதியான ஓட்டமும் தரும் சுவையை நுகர முடியும். 

அவர் வரலாற்றுப் பேரறிஞர். நான் தமிழாசிரியன். அவரது தமிழ் நடை என் பொறாமையைத் தூண்டும்.


இந்தப் பேருரையை நிகழ்த்த வேண்டுமென்று மாண்பமை துணைவேந்தர் அவரைத்தான் முதலில் கேட்டார். அவர் வந்திருந்தால் உலகளாவிய தரத்திலான ஓர் உரையை நீங்கள் கேட்டிருக்கலாம். அவர் நண்பர் என்பதால் நானும் அவையிலமர்ந்து செவிமடுக்க வந்திருப்பேன். அவரால் வர இயலாததால் , துணைவேந்தர் பொன் வைக்கிற இடத்தில் பூ வைத்துவிட்டார். 


உலகப் புத்தக நாள் 2019 இன் அடிக் கருத்து-Theme : Share a story


Story வெறும் கதை மட்டுமல்ல; அறிவுத் துறை நூல்கள் உட்படச் சுவையாகப் படிக்கத் தக்க  அனைத்தும்தான்.


யுனெஸ்கோ ஏன் 'காலாவதி'யாகிப் போன வாசிப்பை ஊக்குவிக்க முயல்கிறது?


என் நூலகச் சுயபுராணத்தைத் தொடர்கிறேன்


புத்தகப் பித்தனாகிய என் இல்ல நூலகத்தில் இப்போது12 ஆயிரத்துக்குக்குறையாத நூல்கள் சேர்ந்து விட்டன.தேவையான, ஆர்வமுள்ள நூல்களை இயன்றவரை வாங்கி விடுவேன். எனவேதான் பல்கலைக்கழகப் பொதுநூலகம் செல்லும் தேவை பெரிதாக ஏற்படவில்லை.


இன்னொன்று, வாங்கும் நூல்களையெல்லாம் உடனடியாக வரி விடாமல் படிக்க முடியாது; தேவையுமில்லை. முன்னுரை முதலியவற்றால் அறிமுகப்படுத்திக் கொண்டு தேவைக்கேற்பப் படிக்கலாம் என்பது என் கருத்து ; அனுபவம்.


இப்போது இட நெருக்கடி, பராமரிப்பதில் உள்ள சிரமம்  முதலியவற்றால் வாங்கும் எண்ணிக்கை குறைந்திருக்கிறது; படிப்பும்தான். முற்றாக நின்று போகவில்லை. 

எனது விரலி(Pendrive) ஒரு நடமாடும் நூலகம் . ஏறத்தாழ 1000 நூல்கள் உள்ளன. செல்பேசித்திரையிலேயே ஓரளவு பார்த்துவிடலாம்.


கிண்டில் போன்ற மின்னணுக் கருவிகள் வரவேற்கத்தக்க வைதாம். அச்சு நூல் போல் அதில் படிக்க முடியவில்லை என்றாலும் புதிய தலைமுறையினர் அதை இயல்பாகக் கையாள்கிறார்கள். இவை வாசிப்புக்கு உதவும் நவீன வடிவங்கள்.


 வாசிப்பின் முதல் நிலையாகிய, எழுத்து - வரிவடிவம் (Script) - மனித குலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கருத்தாலும் கரத்தாலும் உழைத்து இழைத்த  அரும்பொருள்.


தமிழ்ச் சமூகம் எழுத்தைக் கொண்டாடிய தொல் சமூகங்களில் ஒன்று


ஏறத்தாழப் பொ.கா.மு. ( பொதுக் காலத்திற்கு முன், BCE ) 5 ஆம் நூற்றாண்டிலிருந்தே

தமிழ்ப் பிராமி எனப்படும் தமிழி எழுத்துப் பொறிப்புகளைக் காண முடிகிறது.


பந்நவணா சுத்த என்னும் சமண நூல், பொ.கா.மு.  முதல் நூற்றாண்டிலேயே தமிளி எனத் தமிழி வரிவடிவத்தைச் சுட்டியது.


தமிழகத்தின் வணிகம் சாராத ,அரசு சாராத பகுதிகளில் மட்பாண்ட எழுத்துக் கீறல்கள் கிடைப்பதையும் அவை சுட்ட பின் கீறப்பட்டவை  என்பதையும் கொண்டு தமிழக எழுத்தறிவுப் பரவலை உய்த்துணர்ந்தார் தொல் எழுத்தியலறிஞர்  ஐராவதம் மகாதேவன்.


சமற்கிருத, பிராகிருத மொழிகளில் இல்லாத தமிழுக்கேயுரிய வரி வடிவங்கள் தமிழியில் உள்ளன. அசோகர் பிராமியில் கூட்டெழுத்து உண்டு. அதே காலத் தமிழிக் கல்வெட்டுகளில் கூட்டெழுத்து இல்லை. இது தமிழ் இயல்பு.


வேட்கோவர்-வேளார் - எனப்பட்ட குயவர் மரபினரின் மேன்மையான அந்தஸ்தையும் எழுத்தறிவையும் பற்றிப் பானைப் பாதை(Pot route) பற்றிய தம் ஆய்வில் பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் . விளக்கியுள்ளார்.


வெளியிடப்பெற்ற தென்னகக் கல்வெட்டுகளில் மொழி வாரி எண்ணிக்கை:

தமிழ் 28 600

கன்னடம் 11000

தெலுங்கு 5000  


தமிழ் இலக்கிய வரலாறு ஏறத்தாழப் பொ. கா.மு.  2ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. சங்க இலக்கியத்திலுள்ள பெயர்கள் பல அக்காலக் கல்வெட்டுப் பெயர்களோடு ஒத்துப் போவதும் பழந்தமிழ் இலக்கியக் காலக் கணிப்புக்கு இணங்குகின்றன.


தொல்காப்பியம் இலக்கணத்தை நூல் என்கிறது. தொல்காப்பியத்தின் முதல் இயலுக்கு நூல் மரபு (நூன்மரபு) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. நூன் மரபில்

தமிழ் எழுத்து எண்ணிக்கை, பெயர்கள், வைப்பு முறை, வரிவடிவம் முதலியன கூறப்பட்டுள்ளன.


Grammar என்பதற்குரிய சொற்பிறப்பு வேரைப் (etymology)பார்த்த போது, gramma/grammat (Greek - letter of the alphabet, thing written

grammatike tekhne (Greek) - art )of letters - எனக் கிரேக்கத்தில் எழுத்து என்னும் பொருள் குறித்த சொல் காட்டப்பட்டுள்ளதைக் கண்டேன்.


தமிழிலும் நூல் என்பது எழுத்தைக் குறித்து, பின்பு

இலக்கணத்தைக் குறித்து , இப்போது

எல்லாப் புத்தகங்களையும் குறிக்கிறது என்று உய்த்துணர்கிறேன். எனவேதான் எழுத்து மரபைக் கூறும் இயலுக்கு நூன்மரபு எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. அறிஞர் வேங்கடராசுலு ரெட்டியார் இதனை முன்பே ஊகித்து எழுதியுள்ளார். ஒப்பியல் அதனைப் பேரளவு உறுதி செய்கிறது.


எல்லாமே எழுத்தில்தான் தொடங்குகின்றன.


"எழுத்தறிவித்தவன் இறைவன்"

"எழுத்தறியத் தீரும் இழி தகைமை" 

" ஆரணங் காணென்பர்" என்று தொடங்கிச் சிற்றம்பலக் கோவையைப் பாராட்டும் பாட்டின் " எழுத்தென்ப இன் புலவோர்" என்னும் தொடர்களில் வரும் ' எழுத்து' என்பதற்கு இலக்கணம் எனப் பொருள் கொள்வது மரபு.

வரிவடிவத்தைக் குறிப்பதாகவும் இலக்கியத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். இவை ஒன்றோடொன்று தொடர்புடையவை,


சி.சு.செல்லப்பா தம் இதழுக்கு 'எழுத்து' என்று பெயரிட்டதே நவீனத்தன்மையின் அடையாளம் என்பார்கள்; Writing என்பதன் தமிழ் வடிவம் என்பார்கள்.

இருக்கலாம். எழுத்து என்பதுஇலக்கண (இப்போது இலக்கியக் கொள்கை / கோட்பாடு என்கிறோம்), இலக்கியங்களைக் குறிப்பது தமிழ் மரபுமாகும்.


எழுத்துக்குப் பொருளில்லை. சொல்லுக்கும் கூட பொருள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே " என்கிறது தொல்காப்பியம்."பொருள் உடையனவே " என்று சொல்லவில்லை. சொல் பொருளைக் கொண்டிருப்பதில்லை; பொருளைக் குறிக்கும். ( தெய்வச் சிலையார் உரை காண்க)


சுவை

நயம்

ஆழம்

நுட்பம்

ஊன் கலப்பது

உயிர் கலப்பது

உவட்டாமல் இனிப்பது - இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.


 பொருள் குறியாத எழுத்துகள்

 தமக்கெனப்பொருள் கொண்டிராதசொற்கள் 

 இவற்றினூடாகப் 

 பருப்பொருள்களையும்

 நுண்பொருள்களையும் 

 உணர முடிகிறதே!


பொருளின்மையிலிருந்து 

பொருள்!


புத்தக வாசிப்பை ஒரு கலை -

Art of reading - என்கிறது யுனெஸ்கோ அறிக்கை.


எவை எவையெல்லாம் தெய்வம் என்று அடுக்குகிற பாரதி

நிறைவாக," எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்" என்று எழுத்தைத் தெய்வ நிலைக்கு உயர்த்திவிடுகிறார்.


எழுத்து ஓர் அதிசயம்,

எழுத்துகளால் ஆன சொல் ஓர் அதிசயம்,

இவற்றாலான புத்தகம் ஓர் அதிசயம் .

வாசிப்பு ஒர் அற்புத மாயா சாலம் என்பதற்கு

நானே சான்று.


நான் மட்டுமா?

இந்த மாயா சாலத்தில் மயங்கித் திளைத்தோர் பலரும் சான்று.


தன்னுள் ஆழும் ஒருவரின்

படைப்புணர்வைக் கோருகிற 

படைப்புணர்வைத் தூண்டுகிற

படைப்புணர்வைத் துலங்கச் செய்கிற

வாசிப்புக்கு இணையான வேறொன்று இல்லவே

இல்லை.


வாய்ப்புக்கு நன்றி.

வணக்கம்.

Sunday, April 18, 2021

Que será, será ≠ வெண்ணிலா நிலா நிலா

 Que será, será  ≠  வெண்ணிலா நிலா நிலா 





பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பிறந்தநாளுக்கான  வானொலி உரைக்காகக் குறிப்பெடுத்த போது , காட்சிகளோடு கூடிய அவருடைய பாடல் தொகுப்புகள் சிலவற்றையும் யூடியூப்பில் கேட்டேன்.நான் 1980களில் ஆய்வு செய்தபோது இப்போதைய வசதிகள் இல்லை.இப்போது பெரும்பாலான படங்களும் கிடைப்பதால் முழுப் பின்னணியோடு பாடல்களைக் கண்டு கேட்கவும் வாய்ப்புள்ளது.

அவர் 'ஆரவல்லி' (1957) படத்திற்கு எழுதிய ' சின்னப்பெண்ணான போதிலே ' என்னும் பாட்டு உடன் எனக்கு ' என்ன ஆகும் எனது வாழ்க்கை?/ அன்றொரு நாள் அம்மாவைக் கேட்டேன் / என்ன ஆகும் எனது வாழ்க்கை ?  ' என்னும் மாலனின் நடப்பியக் கவிதையை நினைவூட்டியது.

திரைப் பாடல் மேலைமெட்டில் அமைந்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அது பற்றியும் சிறிது தேடியபோது, பல்லாண்டுக்கு முன்பே சிலர் அதன் ஆங்கில மூலப்பாட்டைத் தொடர்பு படுத்தி வெளியிட்டிருந்தது கண்டு வியந்தேன்.

அப்புறமென்ன! தேடல் ' The Man Who Knew Too Much ' (1956)என்கிற இட்சுகாக் (Hitchcock) படத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்த்தது. அந்தப் படத்தைப் பார்த்தேன். 

நீள் விடுமுறையில் டாக்டர் பெஞ்சமின்[மனைவி ஜோசஃபைன் , மகன் (சிறுவன்) ஆங்க்]குடும்பத்தினர் பிரஞ்ச்சு மொரோக்கோவுக்குச் செல்கின்றனர். அங்கு லூயிசு பெர்னார்ட் என்கிற பிரெஞ்சுக்காரரைச் சந்திக்கின்றனர். அவருடைய நடவடிக்கைகள் ஐத்திற்குரியவையாக இருக்கின்றன. 

மறுநாள் மொரோக்கோ சந்தையில் காவலர்கள் ஒருவனைத் துரத்திவருகின்றனர். ஓடுகிறவன் முதுகில் குத்துப்பட்டு , சாகும் தறுவாயில் பெஞ்சமினை நோக்கி வந்து சரிந்து விழுகிறான். அது மாறுவேடத்தில் உள்ள பெர்னார்ட் என்று பெஞ்சமினுக்குத் தெரிகிறது. 

அப்போது பெர்னார்ட் , இலண்டனில் அயலகத் தூதர் ஒருவர் படுகொலை செய்யப்படவிருப்பதாகவும் , அதுபற்றி உயரலுவலர்களிடம் சொல்லுமாறும் முணகிவிட்டு மடிகிறார்.

மறுபுறம் சிறுவன் ஆங்க்கைக் கடத்திய கொலைத்திட்டக் குழுவினர் , உண்மையைச் சொன்னால் ஆங்க்கைக் கொன்றுவிடுவோம் என்று அச்சுறுத்துகிறார்கள். 

மகனைத் தேடிப் பதைப்புடன் பெஞ்சமின் இனணயர் இலண்டன் செல்வதும் , கொலையாளிகளின் நடவடிக்கைகளுமாகப் படம் விறுவிறுப்புடன் போகிறது.

Que será, será பாட்டும் ஒரு மாந்தர் என்றே சொல்லவேண்டும். இந்திய , தமிழ்ப் படங்களின்  'குடும்ப்பாட்டு ' நமக்குத் தெரியாததல்ல. அப்படி Que será, será மகனைக் கண்டடையப் பெற்றோருக்கு உதவுகிறது.

ஜே லிவிங்ஸ்டன் , ரே இவான்சு  (Jay Livingston, Ray Evans)இருவரும் இணைந்து புனைந்த 'பாப்' பாட்டு அது. படத்தில் அமெரிக்கத் திரை நடிகையும் பாடகியுமான டோரிசு டே (Doris Day ) பாடி நடித்துள்ளார்.

படத்திற்கு முன் தனிப்பாட்டாகவும் ,பின்பு படப்பாட்டாகவும்  மிகவும் பிரபலமாகியிருக்கிறது.

படத்தின்  மர்ம முடிச்சுக்கு முந்தைய காட்சியில் தாயும் மகனும் பாடிக்கொள்வதுபோல் இயல்பாக அறிமுகமாகும் பாட்டு உச்சத்தில் முழுமையாக, நம்மை நாற்காலி நுனிக்கு நகர்த்துகிறது.

Que será, será என்பதன் மூலம் இத்தாலி என்றாலும் கருத்து ஸ்பானிசுக்கு இணக்கமாயிருப்பதாக ஒரு குறிப்புக் கிடைக்கிறது. இந்தப் பிறமொழித் தொடர் ஒரு பல்லவி போல வருவது பாட்டின் ஈர்ப்பைக் கூடுதலாக்கியிருக்கலாம். 

அதன் பொருள்: Whatever Will Be, Will Be /' எது நடக்குமோ அதுதான் அதுதான்' ; மர்மத் தொங்கல்கள் கொண்ட ஒரு படத்திற்குப் பொருத்தமானது. படத்தைவிடவும் பாட்டிலுள்ள வாழ்வியல்  நோக்கின் அடர்த்தி கூடுதல் என்று சொல்லலாம் ( நீர்வழிப் படூஉம் புணைபோல் /ஆருயிர் முறைவழிப் படூஉம்)

ஆங்கிலப் பாட்டின் அடர்த்தியும் இசை நயமும் கதையோடு கூடிய இயைபும் தமிழில் இல்லை. இதற்குப் பாடலாசிரியரை மட்டும் குறை சொல்லமுடியாது .அந்த மெட்டில் பாட்டெழுதச் சொன்னவர் மாடர்ன் தியேட்டர் சுந்தரமாக இருக்க வேண்டும் (தேட நேரமில்லை) . அவர் இந்த அளவு தமிழில் வந்ததே போதுமென்று கருதியிருக்கவேண்டும். ஆங்கிலப் பாட்டையும் தமிழ்ப்பாட்டையும் காண்க:

When I was just a little girl 

I asked my mother, what will I be

Will I be pretty

Will I be rich

Here's what she said to me


Que será, será

Whatever will be, will be

The future's not ours to see

Que será, será

What will be, will be


When I grew up and fell in love

I asked my sweetheart, what lies ahead

Will we have rainbows

Day after day

Here's what my sweetheart said


Que será, será

Whatever will be, will be

The future's not ours to see

Que será, será

What will be, will be


Now I have children of my own

They ask their mother, what will I be

Will I be handsome

Will I be rich

I tell them tenderly


Que será, será

Whatever will be, will be

The future's not ours to see

Que será, será

What will be, will be

Que será, será


சின்னப்பெண்ணான போதிலே

சின்னப்பெண்ணான போதிலே

அன்னையிடம் நான் ஓருநாளிலே

எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா 

அம்மா

நீ சொல் என்றேன் ?


(சின்னப்பெண்ணான போதிலே)


வெண்ணிலா நிலா 

என் கண்ணல்ல வா கலா

உன் எண்ணம் போல் வாழ்விலே 

இன்பம் தானென்றாள்

வெண்ணிலா நிலா


கன்னியென்னாசை காதலே 

கண்டேன் மணாளன் நேரிலே

என்னாசை காதல் இன்பம் உண்டோ

தோழி நீ சொல் என்றேன்

வெண்ணிலா நிலா 

என் கண்ணல்ல வா கலா

உன் எண்ணம் போல் வாழ்விலே 

இன்பம் தானென்றாள்

வெண்ணிலா நிலா


கண் ஜாடை பேசும் என்னிலா

கண்ணாளன் எங்கே சொல் நிலா

என் கண்கள் தேடும் உண்மை தனை

சொல் நிலவே  என்றேன்.


*வெண்ணிலா நிலா 

என் கண்ணல்ல வா கலா

உன் எண்ணம் போல் வாழ்விலே 

இன்பம் காணலாம்

(*காதலன் பாடுதல்)

 



                                                               ————×———— 










Thursday, April 15, 2021

சேர்ப்பதா ? பிரிப்பதா ? - துணைவினைச் சிக்கல்

 சேர்ப்பதா ? பிரிப்பதா ? - துணைவினைச் சிக்கல்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°




" தனித்து + இருப்பதாய் + சொன்ன = தனித்திருப்பதாய்ச்  சொன்ன (அல்லது) தனித்திருப்பதாய்ச்சொன்ன என்று எழுதலாமா? (மூன்று சொற்களைச் சேர்க்கக் கூடாது என்று ஒருவர் கூறுகின்றார்) விளக்கம் வேண்டும் " என்று கேட்டிருந்தார்    தா.இளங்குமரன் அவர்கள்.

                                                            ~~~~~~~~~~~~


தனி - (செயப்படுபொருள் குன்றிய) வினை¹

தனித்து - வினையெச்ச வடிவம்

இரு - துணைவினை²

தனித்திரு - வினையடி

தனித்திருப்பது - தொழிற்பெயர்

ஆய் - வினையெச்ச ஈறு


இவற்றை, தனித்திருப்பதாய் என்று  சேர்த்தெழுதவேண்டும்.


தனித்திருப்பதாய்ச் சொன்ன - என்பது சரியானது.


அமரர் வ.பொன்முடி அவர்கள் ,  ' தனித்திருப்பதாய்ச்சொன்ன ' என்று ஒரே தொடராய் எழுதவேண்டும் என்பார். ஒருவகையில் இது சரிதான் என்றாலும் அச்சு வசதி நோக்கிக் கண்சோர்வு தவிர்க்க, ' சொன்ன ' என்பதைத் தனியாக எழுதலாம் ; அச்சிடலாம்.


தனித்திரு என்பதை மேலும் எளிமை கருதி, தனித்து இரு-(இதனடியாக உருவாகும் தனித்து இருந்தான் முதலிய முற்றுகள், தனித்து இருந்த, தனித்து இருந்து ஆகிய எச்சங்கள் முதலியன) என எழுதும் வழக்கம் உள்ளது. 


இத்தகையவற்றைப் பிரிப்பப்பிரியா வினையடியாகக் கொள்வது ஏற்புடையது.


பிரித்தால் என்ன ? வழக்காடு மன்றக் காட்சி ஒன்றைப் பார்ப்போம்:







தொடுப்பவர்: மாண்பமை நடுவர் அவர்களே , இதோ சான்று.

(வழக்குமன்ற உதவியாளர் சட்டியை நடுவரிடம் காட்டுகிறார். செம்பளிங்குபோன்ற பரப்பினுள் கரண்டி சிக்கியிருக்கிறது)

நடுவர் : சொல்லுங்கள்.

தொடு. : ஐயா, குற்றவாளிக்கூண்டில் நிற்கிறாரே[கு.கூ.நி.]மடை மன்னாரு அவரு     

                   எழுதிய புத்தகத்தைப் பார்த்து, சாப்பிடும் ஆர்வத்தோடு அல்வா செய்தேன்.

                   சட்டி , கரண்டி , அல்வா எல்லாம் போச்சு. அவர் இழப்பீடு தரவேண்டும்.

நடு. : (கூண்டில் நிற்பவரைப் பார்த்து) நீங்கள் சொல்லுங்கள்.

கு.கூ. நி. : மா. நடுவர் அவர்களே, என் புத்தகத்தைத் தங்கள் மேலான பார்வைக்கு முன் 

                 வைக்கிறேன் (வ. மன்ற உதவியாளர் புத்தகத்தைக் காட்டுகிறார்)

நடு. : இது நீங்கள் எழுதியதுதானே ?

கு.கூ. நி. : ஆம்.

நடு. : அல்வா செய்முறை உங்களுடையதுதானே ?

கு.கூ. நி.: ஆம்.

நடு. : வழக்குத் தொடுத்தவர் இதே முறையில்தானே செய்திருக்கிறார் ?

கு.கூ. நி .: ஆம்.

நடு. : அப்படியானால் குற்றத்தை ஒத்துக்கொள்கிறீர்கள் ?

கு.கூ. நி. : இல்லை.

நடு. : ஏன்?

கு.கூ.நி. : மா.நடுவர் அவர்களே புத்தகத்தின் தலைப்பைப் பார்க்குமாறு வேண்டுகிறேன்.

                (உதவியாளர் மேலட்டை தெரியுமாறு காட்டுகிறார்)

நடு. : சமைத்துப்  பார்!³(வினாக்குறியுடன் நிமிர்கிறார்)

கு.கூ. நி. : சமைத்து , பார்க்கத்தான் எழுதியிருக்கிறேன் ; சாப்பிட அல்ல.


                                      [ வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது ]

                                      

ஆவணச் சான்றின்படி வழக்கைத் தள்ளுபடி செய்வதைத் தவிர வேறு வழியில்லை😀.


ஒரு வேளை நூலின் தலைப்பு ஒரே தொடராகச்  'சமைத்துப்பார்' என்று இருந்திருந்தால் தீர்ப்பு வேறாகியிருக்கும். இதிலுள்ள பார் என்பது தனி வினையன்று ; துணைவினை. 


சமைத்திருக்கிறார் , சமைத்துவிட்டார் , சமைத்துப்பார்த்தார் - என ஒவ்வொன்றும் (அடிப்படையில் சமைத்தலே ஆயினும்) வேறு வேறு பொருட்கூறு உணர்த்துதல் காண்க. இவற்றைச்  சமைத்து / இருக்கிறார், சமைத்து/  விட்டார்சமைத்துப் /பார்த்தார் - என்று பிரித்து எழுதக்கூடாது.


சமைத்திரு -

சமைத்துவிடு-

சமைத்துப்பார் -

 என்பனவே வினையடிகள். இவற்றில் உள்ள இரு , விடு , பார் முதலியன தனி வினைகள் அல்ல. ஒரு துணைவினை வடிவமே ஒன்றுக்கு மேற்பட்ட கூறுகளை உணர்த்தலாம்.

 

- இரு என்னும் துணைவினையைப் பார்ப்போம்:


அவர் ஏற்கெனவே சமைத்திருக்கிறார். அஞ்சாமல் சாப்பிடு .

- என்கிற தொடரில் அனுபவ நிலை புலப்படுகிறது.


நான் கூட எதிர்பார்க்கவில்லை. அவர் நன்றாகச் சமைத்திருக்கிறார் .

- என்கிற தொடரில் நிறைநிலை புலப்படுகிறது.




இத்தகைய பலவற்றை முனைவர் பொற்கோ அவர்கள் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார்கள். அவற்றுள் வினைக் கூறுகளை (ASPECTS) உணர்த்துவன :


1. கொண்டிரு(தொடர் நிலை) - வந்து கொண்டிருந்தார்

2. இரு ( நிறை நிலை)                  - வந்திருந்தார்

3. விடு(உறுதிநிலை)                    - வந்துவிட்டார்

4. பார்(சோதிப்பு நிலை)              - எழுதிப்பார்த்தார்

5. காட்டு (உணர்த்து நிலை)      - படித்துக்காட்டினார்

6. கொள் I  (தன்வசநிலை)         - வாங்கிக்கொண்டார்

7. கொள் II (பரிமாற்ற நிலை)   - அடித்துக்கொண்டார்கள்

8. போ (தற்செயல் நிலை)          - தொலைந்துபோயிற்று

9. தொலை (வெறுப்பு நிலை)   - வந்துதொலைத்தார்

10. வை (காப்பு நிலை)                  - வாங்கிவைத்தார்

11. அருள் (வழங்கு நிலை)         - வழங்கியருளினார்

12. வா (வழக்கநிலை)                    - ஆண்டுவந்தார்


இவற்றோடு கொடு , உதவு , உள் முதலியனவும் துணைவினைகளாக ஆளப்படுகின்றன என்கிறார்⁴. 


'முதலியனவும்'  என்றது கருதத்தக்கது. ஒரு துணுக்கு. நடந்த நிகழ்ச்சி.


" ஐயா, கவிதை நூல் வெளியிட்டு விழாவுக்கு வருவீங்கன்னு பாத்தேன் " என்றார்

    கவிஞர்.

" வந்திருப்பேன் . வேறொரு தொந்தரவு " என்றேன் நான்.

 " பத்து வருசத்துக்கு முன்னாலே என் முதல் கவிதைத் தொகுப்பு வெளியிட்டப்ப ,

   வந்திருந்திங்க " - கவிஞர்.

    " வந்திருப்பேன் . நினைவில்ல " - நான்.

" இந்தாங்க " என்று வெளியிட்ட கவிதை நூலைக் கொடுத்தார் கவிஞர். 

" எவ்வளவு ? " என்றேன் நான்.

" ஐயா , பணமெல்லாம் வேணாம். படிச்சுக் கருத்து சொல்லுங்க " என்றார் கவிஞர்.

" பணமே கொடுத்திடறேனே " என்றேன் நான்.

                                                                😀😀😀

                                                                

              " வந்திருப்பேன் . வேறொரு தொந்தரவு " என்பதில் ,  - இருப்பு- இயலாமைக்

                 குறிப்புடையது.

                " வந்திருப்பேன் . நினைவில்ல " என்பதில் - இருப்பு - ஐயக் குறிப்புடையது.

எப்படியெல்லாம் துணைவினைகள் வரக்கூடும் என்பதற்கு இவை மாதிரிக்காட்டுகள்.


இவையன்றி வினைநோக்கு (MODALS) உணர்த்தும் துணைவினைகள் சிலவற்றையும் முனைவர் பொற்கோ தந்துள்ளார். இவை செயவென் எச்சத்தின்பின் வரும் என்கிறார்⁵.

போ(எதிர்பார்ப்பு நிலை) -  வரப்போகிறது

பார்( முயற்சி நிலை) -  ஓடப்பார்த்தான்

கூடு(ம்) ( வாய்ப்பு நிலை) - வரக்கூடும்

வேண்டு(ம்) ( யாப்புறவு - பார்க்க வேண்டும் 

- முதலியன.


ஒரு முதல்வினை ஒன்றுக்கு மேற்பட்ட துணைவினைகள் பெற்று நீளக்கூடும். பார்ப்போம்.


பற - என்னும் வினைப்பகுதி தன்மைப் பன்மையில்,

I  )பறந்தோம்         (இறப்பு)

II )பறக்கிறோம்     (நிகழ்வு)

III)பறப்போம்           (எதிர்வு)  - முக்காலத்திலும் வரும். 


i  )நாங்கள் நேற்று இந்நேரம் விமானத்தில் பறந்துகொண்டிருந்தோம்.

ii )நாங்கள்  இப்போது  விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறோம்.

iii)நாங்கள் நாளை இந்நேரம் விமானத்தில் பறந்துகொண்டிருப்போம்.


என்னும் தொடர்கள் (கொண்டு + இரு என்னும் இரண்டும் இணைந்து ஒன்றான) கொண்டிரு என்னும் துணைவினையால் தொடர்நிகழ்வை உணர்த்துகின்றன ; மரபான கால இடைநிலைகளைத் தக்கவைத்துக்கொண்டுள்ளன.


பறந்து / கொண்டு / இருந்தோம், பறந்து  / கொண்டிருந்தோம் - என்றெல்லாம் - தொடர்நிகழ் பொருளில் - பிரித்தெழுதக்கூடாது .


பதினைந்துக்கு மேற்பட்ட எழுத்துகளாலான ஒரே வினை! 


இப்போது மேலும் சில , இயலக்கூடிய ,  தொடர்களைப் பார்ப்போம் :


௧)அன்று நாங்கள் விமானத்தில் பறந்துகொண்டிருந்திருக்கிறோம் ( ஆனால் அதை நாங்கள் உணரவேயில்லை)


௨)நேற்று இந்நேரம் நாங்கள் விமானத்தில் பறந்துகொண்டிருந்திருப்போம் (ஆனால், பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் முடியாமல் போய்விட்டது)


௩)நேற்று இந்நேரம் நாங்கள் விமானத்தில் பறந்துகொண்டிருந்திருக்கவேண்டும் (ஆனால், பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் முடியாமல் போய்விட்டது )


க - இறப்பில் தொடர்நிகழ்வு . வினை நிகழ்ந்திருக்கிறது. நிகழ்கால இடைநிலை வடிவம் தக்கவைக்கப்பட்டுள்ளது. ஆனால் இறந்தகால நிகழ்ச்சி. மரபிலக்கண நிலைநின்று காலமயக்கம் என்று கொள்ளலாம்.


௨ &௩ - இறப்பில் தொடர்நிகழ்வு .ஆனால் நிகழவில்லை.


௨ - பறந்துகொண்டிருந்திருப்போம் ( கொண்டிருந்து + இருப்பு + ஓம்) - என்பதில் உள்ள 

         ' இருப்பு ' என்பது துணைவினை என மேலே பார்த்தோம். இரு +ப் + ஓம் எனப்

          பகுக்கக் கூடாது. இதில் - ப் - கால இடைநிலையில்லை. - இருப்பு - என்னும்

           இயலாமைக் குறிப்புடைய துணைவினை.

         

          III)பறப்போம்

          

          iii) பறந்துகொண்டிருப்போம்    என்பவற்றில் உள்ள - ப் - எதிர்கால   இடைநிலை.

           

பறந்து கொண்டு இருந்து இருக்க வேண்டும்  என்பதில்  பற(ந்து), கொள் ( கொண்டு ) , இரு (ந்து) ,  இரு (க்க) - ஆகிய நான்கும் வினையெச்ச வடிவில் நின்று வேண்டும் என்பதோடு முற்றுகின்றன. பற - முதல் வினை ; பிற யாவும் துணைவினைகள்.


இருபதுக்குமேற்பட்ட எழுத்துகளாலான துணைவினைகள் பல சேர்ந்த ஒரே வினை!! 

சேர்த்துத்தான் எழுதவேண்டும்😡

அச்சில் வாய்ப்புக்கேற்பச் சற்றே சமரசம் செய்துகொள்ளலாம்.


விவாதம்

×××××××××


சேர்ப்பதா ? பிரிப்பதா ? என்பதைக் கடந்து துணைவினைகள் தேவையா ?  என்பது பற்றி விவாதம் விரிந்துவிட்டது.


திரு. இரவீந்திரன் வேங்கடாசலம்Raveenthiran Venkatachalam :

பழந்தமிழில் துணைவினைகொண்டு எழுதும் வழக்கம் இல்லை. அது ஆங்கிலத்தின் continuous tense ,  perfect tense ஆகியவற்றைத் தமிழில் எழுத முயன்ற அபத்தம். பம்மல் சம்பந்த முதலியார்க்கு உவேசா இதைப் போதித்த வரலாறு ஒன்று உண்டு. 



மதிவாணன் பாலசுந்தரம் :

" பொதுவாகத் துணைவினைகள் பழந்தமிழில் காணப்படுவதில்லை என்றும் தற்காலத் தமிழில்தான் காணப்படுகின்றன என்றும் அறிஞர்கள் சிலர் எண்ணியிருந்தனர். இதற்குக் காரணம் மேனாட்டு மொழிகளின் செல்வாக்கு என்பர். ஆனால் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராயின் துணைவினைகளில் சில அன்றே தமிழ் மொழியில் வழக்கில் இருந்துள்ளன என்பது தெரியவரும். இன்றைய தமிழில் காணப்படும் வளர்ச்சி அன்று இல்லையாயினும் அக்காலத்தில் துணைவினைகள் இருந்திருந்தன என்பதும் காலப்போக்கில் மிக வளர்ந்து உள்ளன என்பதும் தெரியவரும் "⁶ - என்று முனைவர் ச.அகத்தியலிங்கம் அவர்கள் தக்க சான்றுகளோடு எழுதியுள்ளார். 



நீங்கள் அபத்தம் என்கிறீர்கள். அகத்தியலிங்கனார் வளர்ச்சி என்கிறார். நான் காலப்போக்கில், அகநிலையாலும் புறத்தாக்கங்களாலும் , நேர்ந்த மாறுதல்கள் என்பேன்.


திரு. இரவீந்திரன் வேங்கடாசலம்Raveenthiran Venkatachalam :

திரு. அகத்தியலிங்கம் எழுதியதை நான் படிக்கவில்லை. "பழங்காலத்தில் பெரும்புலவர்கள் இருந்திருக்கிறார்கள்" என்பது அபத்தமல்லவா? ஏன் இரண்டு "இருத்தல்" வரவேண்டும்? "இப்போது கம்பராமாயண பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்" என்பதை "இப்போது க.ரா பாடம் சொல்கிறார்கள்" எனலாமே? ஏன் "கொண்டு"கூட்ட வேண்டும்? இது "Now they are teaching kambaramayanam" என்ற ஆங்கிலத்தைத் தமிழாக்கிய அவலமல்லால் வேறென்ன? துணைவினைகள் சங்கத்தமிழில் அரிதாகவே காணப்படுகிறது. அகம் புறம் நற்றிணை ஆகியவற்றில் நான் பார்த்ததில்லை. கலித்தொகையில் மட்டும் அரிதாகப் பார்த்திருக்கிறேன். தமிழின் கால இலக்கணம் விரிவாக ஆராயப்பட வேண்டும். ஆங்கிலத்தைப்போல perfect tense, continuous tense, முதலியவை தமிழில் கிடையாது என்பது என் கருத்து. தாங்கள் சொல்வதுபோல் 15க்கும் மேற்பட்ட எழுத்துக்களால் வார்த்தைக்கோப்பு (word string) அமைவது தமிழின் ஒலிப்பினிமையைக் குலைப்பதாகக் கருதுகிறேன். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு இலக்கண மரபு உண்டு; அது பேணப்படவேண்டும் என்பதே நான் வலியுறுத்த விழைவது. மரபழித்த மாற்றம் வளர்ச்சியன்று என்பேன்.


மதிவாணன் பாலசுந்தரம் :

௧. " சில , இயலக்கூடிய ,  தொடர்களைப் பார்ப்போம் " என்றுதான் எழுதியுள்ளேன். அத்தகு நெடுவினைகளைப் பரிந்துரைப்பது என் நோக்கமன்று. 


௨. ஒலிப்பினிமை என்பது மொழி நடை குறித்தது;நல்லது.இலக்கணம், இயலக்கூடிய ,  அனைத்து வகைத் தொடர்களையும் கருதுவது.


௩. மொழி இடத்தாலும் காலத்தாலும் மாறுதல்களுக்கு ஆளாவது , கண்டுணரப் பட்ட இலக்கண வரம்புகளுக்கு அப்பாலும் சிலபல கூறுகளுக்கான சாத்தியம் கொண்டது என்பதனால்தான் , விதிமுறை சார்ந்த மரபிலக்கண நூல்களிலும் புறனடைகள் இடம்பெறுகின்றன.


இதுபற்றி அவரிடம் பேசுகிறேன்*

( *இங்கு இறப்பல்கால வினையாக எதிர்வு குறித்து நிற்கிறது; விரைவு குறித்த காலமயக்கமாகவும் கொள்ளலாம்)

இதுபற்றி அவரிடம் பேசியிருக்கிறேன்/பேசியுள்ளேன்

இதுபற்றி அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்

இதுபற்றி அவரிடம் பேசிக்கொண்டேயிருக்கிறேன்

இது பற்றி அவரிடம் பேசிக்கொண்டுதானிருக்கிறேன்

இதுபற்றி அவரிடம் பேசிக்கொள்கிறேன்

இதுபற்றி அவரிடம் பேசிப்பார்க்கிறேன்

இதுபற்றி அவரிடம் பேசிப்பார்த்திருக்கிறேன்

இதுபற்றி அவரிடம் பேசிவிடுகிறேன்

இதுபற்றி அவரிடம் பேசிப்பார்த்துவிடுகிறேன்

இதுபற்றி அவரிடம் பேசிவருகிறேன்

...     ...         ...            ...


- இவற்றின் அடிப்படை பேசுதல்தான் என்றாலும் ஒவ்வொன்றுக்கும் பொருட்குறிப்பில் வேறுபாடு உண்டு; நடைப் பன்மைக்கும் நல்வாய்ப்பு.

பழந்தமிழில் இல்லை என்பதற்காகப் பயின்று கலந்துவிட்ட இவற்றை விட்டுவிடவேண்டியதில்லை என்பது என் கருத்து.



குறிப்புகள்


1)சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி (Tamil Lexicon): 


தனி²-த்தல் taṉi- , 11 v. intr. < தனி¹. 

1. To be alone, single, solitary; ஒன்றியாதல். (W.) 2. To be separate, detached from company; ஏகாந்தமாதமல். தனித்தே யொழிய (கலித். 114). 

3. To have no equal or match; நிகரற்றிருத்தல்.

4. To be deserted, forsaken, helpless, as by the departure or death of friends; உதவியற்றிருத்தல். (W.)


2)இரு - என்னும் துணைவினை , ஒரு செயலின் நிறைநிலை காட்டுவது என்பார் முனைவர் பொற்கோ அவர்கள்(இக்காலத் தமிழ் இலக்கணம், பூம்பொழில் வெளியீடு, சென்னை 2002 , ப.56)


3)  சமைத்துப் பார் - என்பது ஒரு காலத்தில் தமிழகத்தின் பிரபலமான சமையல்

     புத்தகம். அதற்கும் இந்த வழக்குக்கும் பெயரளவில் மட்டுமே தொடர்பு. அதன்

      படத்தை மட்டும்  நன்றியோடு எடுத்துக்கொண்டேன்.

4)  பொற்கோ , ௸ , பக்.52 - 62

5)  ௸, பக்.64 - 68.

6) சங்கத்தமிழ் 4, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , சென்னை , இரண்டாம் பதிப்பு 2010(முதற்பதிப்பு 1984) , ப. 104.

- ஏப்பிரல் 13-15 , 2021 முகநூல் இடுகைகளின் செவ்விதாக்கிய தொகுப்பு






Sunday, April 11, 2021

பேரா. மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்

 


பேரா. மா.ரா.அரசு:  நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்                  
-----------------------------------------------------------------------------------------------------

தாராளமும்  எதையும் தன் கட்டுக்குள்  வைத்துக் கொள்ள வேண்டும் என்னும்
தலைமைத் தன்மையும் கொண்ட  புரவலர் உள்ளம் -

எடுத்த பணியைத் துடிப்புடன் செம்மையாகச் செய்துமுடிக்கும் செயல்வேகம் -

அன்றாட நடவடிக்கை முதல்  இலக்கியப் பார்வை வரை,    எங்கும் எதிலும் ,  கச்சிதம் -

இவற்றில் அவர் கொண்டிருந்த உறுதி அல்லது பிடிவாதம்-

இவை யாவும் இயைந்த ஆளுமை  பேராசிரியர் மா.ரா.அரசு.

முன்பு  11 ஆண்டுகளில் பள்ளிக்கல்வி நிறைவு,   கல்லூரியில் ஓராண்டுப் புகுமுக வகுப்பு, அப்புறம் பட்டப்படிப்பு - என்னும் முறை இருந்தது.1970 களின் இறுதியில் பள்ளிக்கல்வியில் 10 + 2 என மாற்றம் செய்யப்பட்டது. அப்போது அரசு உதவிபெறும் தனியார் கல்லூரி ஆசிரியர் பலர் மிகை (Surplus) யாயினர். அவர்களுக்கு , ஊதியத்திலும் பணித் தரநிலையிலும் மாற்றமின்றிப் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்புத் தரப்பட்டது. ஆனால் , கல்லூரி ஆசிரியர்சங்க எதிர்ப்புக் காரணமாக, மிகை ஆசிரியர்கள் பிற தனியார் கல்லூரிகளின் காலிப் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக அனுப்பப்பட்டனர்.

அப்படி மா.ரா. அரசு அவர்கள் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலிருந்து 1980களின் தொடக்கத்தில், தஞ்சை, கரந்தைப் புலவர் கல்லாரிக்கு வந்து பணியாற்றிய காலத்தில் அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றோருள் ஒருவன் நான்.

அப்போது பேராசிரியர்கள்  சா.வளவன், க.பூரணச்சந்திரன், ஜெயராணி ராஜதுரை  முதலியோரும் புலவர் கல்லூரியில் பணியாற்ற வந்திருந்தனர். இவர்கள் நவீன இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள். பேரா.அரசு இதழியல் வரலாற்றிலும்,  ஆர்வம் கொண்டு பணியாற்றி வந்தார்.

நானும்  நவீன இலக்கிய ஈடுபாட்டாளன் என்பதாலும், கல்லூரி மாணவனாக இருந்தபோதே எனக்கொரு பார்வை வாய்த்ததனாலும் நான் அவர்களோடு - இணங்கியும் வேறுபட்டும் முரணியும் - உரையாட முடிந்தது.

கல்லூரி ஆசிரியர் அறை அன்றாடம் படிப்பு, நூல்கள், விவாதம் எனக் கல்வி சிறந்திருந்த காலம் ; மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்ட காலம்; நினைந்தேங்கும் காலம்.

பேரா.அரசு அவர்களின் ஆலோசனையை ஏற்று, எனது முனைவர் பட்டத்திற்காக ,  டி. எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் இதழியல் பணி பற்றி ஆராய்வதென்று முடிவு செய்தேன். தரவுகள் திரட்டப் பேருதவி புரிந்தார். என் ஆய்வுப்பணிகளில்  முன் பாதி அவர் ஒத்துழைப்புடன் நிறைவேறியது. அக்காலத்தில் அவர் வழி அறிமுகமான இதழாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள்,  நண்பர்கள் , நிறுவனங்களின் நினைவுகள் சில இப்போது மங்கலாக எழுந்து மறைகின்றன.

பேரா.அரசு எப்போதும் தம்மைச் சென்னைக்காரராகவே உணர்ந்தார். ஆண்டுக்கணக்கில் தஞ்சையில் பணிபுரிய நேர்ந்த போதும் , தஞ்சைப் புதாற்றுக் கரையில் பிலால் உணவகத்திற்குப் பக்கத்தில் இருந்த ராஜராஜன் விடுதியில்தான் தங்குவார். வார இறுதியிலும் பிற விடுமுறை நாட்களிலும் சென்னை சென்றுவிடுவார்.

அப்போது கல்லூரி மாலை 04.15க்கு முடியும். முதல்வர் பேரா.பி.விருத்தாசலம் ஐயா அதன் பிறகும் ஓரிரு மணிநேரம் பல்வேறு பணிகளின் பொருட்டு இருப்பார்.

பேரா.அரசு அவர்களும் ஆசிரியர் அறையிலிருந்து சில பணிகளை மேற்கொள்வார். திருவாளர்கள் சார. செந்தில்குமார், மோ. தமிழ்மாறன், இரா.குணசேகரன், த.திலிப்குமார் , துரை.பன்னீர்செல்வம் முதலிய மாணவர் குழாம் அவருடன் இருக்கும். திரு.ஆ.இளங்கோவன்  சில பல நாட்கள் அவருடன் விடுதியிலேயே தங்கிவிடுவார் (இவர்கள் பின்னர் பேராசிரியர்களாக அரசு அலுவலர்களாக ஆயினர் ). பேரா.மு.செல்லன்  அவர்களையும் (இவர் சென்னையில் பேரா.அரசு அவர்களின் மாணவராயிருந்தவர்) என்னையும் மாணவர் குழாத்தினர் என்றே சொல்லிவிடலாம்.

இளைஞர்களை ஊக்குவிப்பதில் இனிமை கண்டவர் பேரா.அரசு. இதழ்களில் எழுத, வானொலியில் உரையாற்ற, நூல்கள் இதழ்கள் வெளியிட வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். வெவ்வேறு அளவில் கருத்தரங்குகள் நடத்துவிப்பார்.

எனது ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேட்டை நூலாக்கத் தூண்டித்துணை நின்றார். துணை என்றால், அவருடைய நூலொன்றை வெளியிடுவது போன்றே ஓவியர் அமுதோனை அறிமுகப்படுத்தி, அட்டைப்படம் வரைவித்து, அச்சுக்கட்டை செய்வித்து அச்சகத்தையும் ஏற்பாடு செய்து தந்தார் (நான் இற்றைப்படுத்த முயன்றேன். முடியவில்ல. நூல் வராமலேயே போயிற்று. அவருக்கு வருத்தம்)

பெரும்பாலான நாட்கள் மாலை 05.30 மணியளவில் கல்லூரியிலிருந்து பேசிக்கொண்டே நடப்போம். நான் கொடிமரத்து மூலையில் திரும்பி வடக்கு வீதி வழியாக வீட்டுக்குப் போகவேண்டும். ஆனால், பேசிக்கொண்டே  பேருந்துநிலையம் வரை போகலாம் என்று கொடிமரத்து மூலையில் முடிவாகும்.   தஞ்சை (பழைய) பேருந்துநிலையத்தை ஒட்டிய உணவகங்களில் மாலைச் சிற்றுண்டி உபசாரம். பிறகும் நடந்துகொண்டே பேசுவோம். ராஜராஜன் விடுதி வாயிலிலேயே பேச்சுத் தொடரும். இரவு உணவும் அவருடன் உண்பதுண்டு. நள்ளிரவு அல்லது விடியலில் கூட மிதிவண்டியில் வீடு திரும்புவேன்

பேரா.அரசு உணவில் நுண்சுவைப் பேரன்பர். ஒரே வேளையில் ஓர் உணவகத்தில் இட்லி சாம்பாருடன்;பிறிதோர் உணவகத்தில் தோசை சட்னியுடன்;பிலால் உணவகத்தில் தம் தேனீர் (Dum tea) .மறுநாள் உணவு வகை மாறும். ஆனாலும் ஒன்றுக்கு மேற்பட்ட உணவகங்களில்தான்.

அசைவ வகைகளாயினும் அப்படித்தான்.காரணம் ஒவ்வோர் உணவகத்தில் ஒவ்வொரு வகை உணவும் தொட்டுக் கொள்வனவும் சுவையில் மேம்பட்டிருப்பதுதான். பெரும்பாலும் மாறாதது பிலால் தேனீர்.

இதில் நிகழ்ச்சிச் சுவைகளும் உண்டு.

ஒருமுறை பரிமாறுகிறவரைப்(server) பக்கத்தில் அழைத்து , " மொறுமொறு என்று நடுவில் மாவு தேங்காமல் பொன்னிறமாக ரவா தோசை . போய் , சொல்லிப் போட்டுக்கொண்டு வாப்பா " என்றார்.
பரிமாறுகிறவர் உடன் , " நாலு ரவா " என்று குரல் கொடுத்தார்.
இவருக்குச் சினம் தலைக்கேறி முகம் சிவந்து விட்டது. " ஏம்பா, இவ்வளவு சொல்றேன். நீ இங்கிருந்தே கத்துறியே?" என்றார்.
" சார் ! அது அந்த டேபிளுக்கு. உங்களுக்கு உள்ள போய் சொல்றேன் சார் " என்றார் பரிமாறுகிறவர் ; எத்தனை பேரைப் பார்த்திருப்பார். இது போல் பரிமாறுகிறவரை முறைத்த சூழல்கள் பல - சென்னையிலும்.

அவர் இல்லத்தில் விருந்தினர்களுடன் - பெரும்பாலும் உடன் தாம் உண்ணாமல் -  அமர்ந்துவிடுவார்; விருந்தினரின் முகக் குறிப்பில் சுவையுணர்ந்து , பார்த்துப் பார்த்துப் பரிமாறுவார். " என்பொடு தடிபடும் இடமெல்லாம் எமக்கீயும் மன்னே! " என்கிற அதியமான் உணர்விலான விருந்துபசாரம்.

சில நாட்கள் பெரிய கோயில் புல்தரையில் வட்டமாக அமர்ந்து, பிரசாதக்கடையில் வாங்கிய கொறிப்பு வகைகளை அசைபோட்டுக் கொண்டே உரையாடுவோம்.அது பின்னர், 'கொறிப்பு' என்னும் இலக்கிய அமைப்பாக உருப்பெற்றது. அதே பெயரில் ஒரு தட்டச்சு இதழும் கொணரச்செய்தார்.

இளையோரின் சாதனைகளைப் போற்றுவது, படைப்புகளை வெளியிடுவது என்னும் நோக்கில் 'இளமையின் குரல்' என்னும்  அச்சு இதழும் அவர் முயற்சியால் வந்தது.

ஒருமுறை 'கொறிப்பு'க்கூட்டத்தில் எழுத்தாளர் சி. எம்.முத்து அவர்களின் 'நெஞ்சின் நடுவே' நாவல் பற்றி விவாதம் எழுந்தது. பேரா. அரசு  'ஆபாசம்' மேலோங்கியிருப்பதாக ஒட்டுமொத்த நாவலையும் மறுத்தார்.  நான் சி.எம்.முத்து அவர்களையே 'கொறிப்பு'க்கு அழைத்துப் பேசலாம் என்றேன். முத்து வந்தார். அவரது நாவலின் ஆபாசம் பற்றி வினவினோம்.
" ஆமாங்க ஆமாங்க " என்று தம் தாம்பூலச் செந்நாவால் ஆமோதித்தார்.
"ஆமாவா?" என்றோம்.
" ஆமாங்க ஒழிக்கணுங்க " என்றார்.
" நீங்க தானே எழுதிருக்கிங்க." என்றார் பேராசிரியர் எரிச்சலுடன்.
  " அங்க நடக்கறது ஒழிஞ்சா என் எழுத்துலயும் ஒழிஞ்சு போய்டுங்க" என்றார் முத்து.ஒழுக்க சீலராக வாழ்கிற , ஒழுக்கவாதியான பேராசிரியருக்கு உடன்பாடில்லை என்றாலும் விருந்தினரை முறைப்படி போற்றி வழியனுப்பிவைத்தார்.

பேரா.அரசு அவர்களின் இலக்கியம் பற்றிய பார்வை, கு.ப.ரா. சொன்ன கலைமகள் மனப்பான்மையில் உருப்பெற்றது : " கற்பனையிலும் வாழ்க்கையிலும் பெருமையையும் பேரையும் அந்தஸ்தையும் கௌரவத்தையும் போற்றுவது இதன் இயற்கை" (கு.ப.ரா.)

கச்சிதம் அவருடைய அசைவுகள் அனைத்திலும் துலங்கும். புத்தகப் பேணலில் இருக்காதா !  பழைய நூல்கள் கூட கட்டுவிடாமல் மூலை மடங்காமல் உறைநெகிழாமல் இருக்கும். "இவ்வே பீலியணிந்து..." என்னும் தொண்டைமான் படைக்கலங்கள்தாம். ஆனால் , படிப்பார். முக்கியமென்று கருதும் வரிகளின் கீழ் அளவுகோல் வைத்துத்தான் அடிக்கோடிடுவார் . கோடு இம்மியும் முன்பின் பிசகாது.

இழுப்பறை இல்லாத சிறிய மேசைகள் கொண்ட ஆசிரியர் அறையில் - எண்மர் இருக்கும் அறை - தம் மேசை மீது புத்தகங்களின் நீள அகலம் பார்த்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைத்திருப்பார். அது மேசையின் நீள அகலத்திற்கு இசைவாக ஒரு பக்கத்தில் இருக்கும்.
ஒருமுறை வகுப்பிலிருந்து திரும்பி வந்து " என்னப்பா இந்த ஊர்ல எல்லாம் காட்டானா இருப்பானா? " என்றார்.
" ஐயா, என்னங்கையா? " என்றேன்.
" புத்தகத்த எவனோ கலச்சிருக்காம்பா " என்றார்.
ஒரு நூலிழையளவு நகர்ந்திருக்கலாம். ஆனால், அவரால் அதை உணரமுடியும். கச்சிதம் !

சிறிய , தட்டச்சிடப்பட்ட , ஒரு பக்க அளவிலான , தமிழ்த் துறைக்குள் மட்டுமே சுற்றுக்கு விடப்படும் அழைப்பிதழாயினும் அமைப்பழகில் கூர்ந்து கருத்துச் செலுத்துவார். கையில் எழுதுகோலைச் சற்றே அசைத்துக்கொண்டு மெய்ப்புப் பார்க்கும்போது , எதுவும் தப்பிவிடாமல் குறிபார்த்து அம்பு எய்ய முனையும் வேட்டைத் துல்லியம் தென்படும்.தட்டச்சர், நண்பர் நவநீதம் படும்பாடு சொல்லிமாளாது.

புத்தகம், மலர் முதலியவற்றைக் கொணர்வதில் அவர் எதிர்பார்க்கும் நேர்த்தி உருவாகும் வரை  பரபரப்புடன்  பணியாற்றுவார்.

அவர் நடத்தும் கருத்தரங்குகளில் மேடை அணிகள், மேடை இருக்கையமைப்பு, பார்வையாளர் இருக்கை வரிசை, நிழற்படக்காரர், வரவேற்பு மேசை ,  சிற்றுண்டி பேருண்டி , உரையாளர் வரிசை , கால அளவு யாவற்றிலும் தரமும் முறையும் நிலவும். இதனை  இதனால் இவர் முடிப்பார் என்று ஆய்ந்து பணிகளை ஒப்படைப்பார். சிறு குறைபாடெனினும் சினம் தலைக்கேறிவிடும். பெரும்பாலும் நண்பர்களும் அன்பர்களும் சீடர்களும்,   தாம் முந்துற்றுப் பணியாற்றுவர்.

அவர்  பச்சையப்பன் கல்லூரிப் பணிக்கு மீண்டபின் , 1980 களின் பிற்பகுதியில் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தமிழ் இதழியல் தொடர் கருத்தரங்கு அவருடைய சாதனைகளுள் ஒன்று. இவற்றில் முன்வைக்கப்பட்ட கட்டுரைகளைப் பத்துக்கு மேற்பட்ட தொகுதிகளாக நூலாக்கினார்.

ஆராய்ச்சி என்பது மெய்ம்மைகளைத் தேடித் தொகுத்து முறைப்படுத்திக் கொடுப்பதே என்பது அவர் கருத்து. கடுமையாக உழைத்துத் தேடித்தரவுகள் திரட்டுவார். விளக்குறுத்தல்கள்(interpretation) - அவற்றுள்ளும் கோட்பாட்டு நோக்கு விளக்குறுத்தல்கள் - வழியாக  முடிவுகளை எட்டுவது  நடுநிலைப் பிறழ்வுகள்; ஆய்வாகா என்பார்.

ஆனால், தரவுகளையும் மெய்ம்மைகளையும் அடுக்கும்  ஆய்வுரைகளையும் கூட கச்சித அழகியல் நோக்கிலான நடையில் நயமாகத் தருவார். உரையாற்றுவதிலும்   அந்தக் கச்சித அழகியல் இழையோடச் செய்வார்.  கம்பீரமான குரல். அரிய மொழித்திறன் வாய்க்கப்பெற்ற அறிஞர்.

அவர் வ.உ.சி . ஆய்வு முன்னோடிகளுள் ஒருவர். சாகித்திய அகாதமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் வந்த 'வ.உ.சிதம்பரனார்' , வ.உ.சி. கட்டுரைகள், இலங்கை வீரகேசரி இதழில் தொடராக வந்ததன் தொகுப்பான,  வ.உ.சி.யின் 'திலக மகரிஷி' முதலியன அவரது குறிப்பிடத்தக்க நூல்கள். 'திலக மகரிஷி'யை வெளியிட்டுப் பேசிய தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் இது ஒரு வரலாற்று ஆவணம் என்று மதிப்பிட்டார்.

தமிழ்ப் பேரறிஞர் மா.இராசமாணிக்கனாரின் மைந்தர் என்பதும்  அவர் மதிப்பிற்கு மதிப்பைச் சேர்ப்பது இயல்புதானே!

அவர் 06.09.2020 அன்று மறைந்துவிட்டார் . அதைக் கேள்வியுற்றதிலிருந்து என் நினைவில் நிழலாடிய  அவரோடு பழகிய காலத்து  நிகழ்வுகளை மனம் அசைபோட்டது. அவருடைய அன்பு மாணாக்கராகிய பேராசிரியர் மு.செல்லன் அவர்களிடம் உடன் என் இரங்கலைத் தெரிவித்தேன்; குடும்பத்தார்க்குத் தெரிவிக்க வேண்டினேன். அவரும் துக்கம் மீதூர்ந்திருந்தார்.

அண்மையில்  பேரா. மா.ரா.அரசு அவர்களைச் சந்திக்க ஓரிரு வாய்ப்புகள் நேர்ந்தன. ஆனால், முடியாமல் போனது என்னுள் குற்ற உணர்ச்சியைத் தூண்டுகிறது.


         ------------------------- x ---------------------------------------------------x ---------------
 

அஞ்சலி : பேராசிரியர் இராம. சுந்தரம்

 






அஞ்சலி : பேராசிரியர் இராம. சுந்தரம் 


1980களில் , தமிழ்ப் பல்கலைக்கழக வரவு தஞ்சை வட்டாரத்தின் கல்வியுலகில் - குறிப்பாகத் தமிழியற் கல்வியுலகில் - சிறிய அளவிலாவது   மேல்நோக்கியதொரு அசைவியக்கத்தைத் தொடங்கிவைத்தது. இந்த அசைவியக்கத்துக்குப் பல்கலைக்கழகத்துக்குள் நிகழ்ந்த கல்விசார் பணிகளை விடவும்  ,  பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர் சமூகத்தோடு கொண்ட தொடர்பே  முதற்காரணம்.  அப்படி தஞ்சைக்குக் கிடைத்த அறிஞர்களுள் ஒருவர், நாங்கள் ஆர் எம் எஸ் என்று அன்போடு அழைக்கும் ,  பேராசிரியர் இராம.சுந்தரம் .

பிற தகுதிகளிருப்பினும் , எளிதில் பழகும் அவரது இயல்பு நோக்கியே துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியம் அவரைத் தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் திட்ட இயக்குநராகப் பணியமர்த்தினார். நடைமுறையில் ,  ' அறிவியல் தமிழ்த் தொடர்பாளர் ' என்பதாகப் பேரா.இராம.சுந்தரம் அவர்களின் பணி தொடங்கியது. தொடர்ந்த பதினெட்டாண்டுகளில் சார்ந்ததன் வண்ணமாகி, ' அறிவியல் தமிழறிஞர் ' என்பதே அவரது அடையாளமாகிவிட்டது.

பேராசிரியரிடம் பேசிப் பெற்ற கேள்வி ஞானம்,  மார்க்சிய அரிச்சுவடியைப் படித்துத் தலைசுற்றி ஆடிக்கொண்டிருந்த ஆய்வு மாணவனான  என்னைக் கொஞ்சம் நிதானப்படுத்தியது. தஞ்சைப் பழைய பேருந்து நிலையக் கடையில் நின்று தேநீர் அருந்தியவாறே அவருடன் பேசிக்கொண்டிருக்கலாம். அவரது எளிமை பலரை ஈர்த்தது எனில் , எள்ளல் என்னை ஆட்கொண்டது என்றே சொல்லலாம்.

நேர் உரையாடலாயினும் மேடைப் பொழிவாயினும் மொழி வழக்கில் பெரிய வேறுபாடிருக்காது. மேடையிலும் பேச்சுவழக்குச் சாயல் மேலோங்கி நிற்கும்.




தஞ்சை பெசண்ட் சிற்றரங்கில் ஒரு கூட்டம். வையாபுரிப்பிள்ளை பற்றிப் பேரா. இராமசுந்தரம் உரையாற்றினார். ஓரிடத்தில் வையாபுரிப்பிள்ளையின் எழுத்துப்பகுதி ஒன்றை மேற்கோள் காட்டினார். அதில் 'உதய சூரியன் ' என்ற தொடர் இடம்பெற்றிருப்பதை அவருக்கேயுரிய முறையில் போகிற போக்கில் சொல்லிச் சென்றார். அவையில் அமர்த்திருந்த கழகக் கண்மணி -  அகவை முதிர்ந்த தமிழாசிரியர் - சினம் பொங்கி எழ , கூச்சலிட்டார். நல்லவேளை உரை நிறைவுக் கட்டம் அது. இராம.சுந்தரம் எள்ளல் நோக்கில் அதைச் சொல்லவும் இல்லை. இயல்பாக அடக்கமாக அவரது பேச்சில் இழையோடும் எள்ளல் தொனியை இதிலும் இருப்பதாகக் கருதிச்  சினந்தெழுந்து 'சின்ன'ப் பிரச்சினையைப் பெரிதுபடுத்திவிட்டார் தமிழாசிரியர்.

" ஐயா, நீங்க பெரியவங்க. நீங்களே இப்படி ஆவேசப்படலாமா?" என்று சமாதானம் செய்யத்தான் நான் போனேன். சின்ன எள்ளல் காரன் படிமம் எனக்கும் உண்டாதலின் அவர் வெடித்தே விட்டார். பின்னர், பேரா.இராமசுந்தரம் அவர்களே வந்து என் சார்பில் அவரைச் சமாதானப்படுத்தியது நகைமுரண்.

அவர் போலந்து சோசலிச நாடாக இருந்த காலத்தில் வார்சா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர் (1972-1979) . குறிப்பாகப் போலந்து மக்களிடம் காணப்பட்ட படிப்பார்வம் பற்றி வியந்து விவரிப்பார். நமது பெட்டிக் கடை போன்ற சிறிய கடைகளில் கூட புத்தகங்கள் இருக்குமாம்,மக்கள் தம் அன்றாட நடவடிக்கைகளினூடாகவும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்துக்கொண்டேயிருப்பார்களாம்.

சொந்த அனுபவம் ஒன்றைச் சொன்னார்:

அங்குப் பணிபுரிந்த காலத்தில்,    அவரும் நண்பர்கள் சிலரும் ஒரு முறை மகிழுந்தில் பக்கத்து நாட்டுக்குச் சிற்றுலா சென்றனர் .போலந்தில் எரிபொருள் விலை குறைவு என்பதால் , வண்டியில் நிரப்பியது போக மேலும் சில கலன்களில் இருப்பு வைத்துக் கொண்டனர்.  எல்லையோர இராணுவச் சோதனைச் சாவடியில் வண்டி நிறுத்தப்பட்டது. இவர்கள் எதையும் மறைக்கவில்லை. என்றாலும் சிறு நடுக்கம். படை வீரர் மேல் அலுவலரிடம் அழைத்துச் சென்றார். பேராசிரியரின் பெயரைக் கேட்டதும் மேல் அலுவலர் முகத்தில் படைக் கடுமை குன்றியது. மேசை இழுப்பறையைத் திறந்து ஒரு நூலை எடுத்தார். அது போக்டன் கெபார்ஸ்கி  (Bohdan Gębarski) செய்த திருக்குறளின்போலந்து மொழிபெயர்ப்பு ; பேரா.இராமசுந்தரம் சற்றே செவ்விதாக்கம் செய்தது ; வந்த சில நாட்களுக்குள் எல்லையை எட்டி விட்டது. அதிலிருந்த பேராசிரியரின் பெயரைச் சுட்டி "நீங்களா?" என்றார் அலுவலர்  "ஆமாம்" என்றார் பேராசிரியர். "அருமையான வாழ்வியல் நூல் . மிக்க மகிழ்ச்சி .நன்றி" என்று முகம் மலரக் கை கொடுத்து அனுப்பி வைத்தார். 

வகுப்பறை அனுபவங்கள் சிலவற்றையும் சொல்லியிருக்கிறார். ' கயல்விழி ' என்கிற உவமையைக் கேட்டுப் போலந்து மாணவர்கள் சிரித்தார்களாம். அங்குக் கயல்விழி என்பது நாம் முட்டைக் கண் என்பதுபோல் கேலிக்குரியதாம்.

அவர் ஒரு சோசலிச நாட்டின் முழுதளாவிய வளர்ச்சியை நேரில் கண்டவர் ; மார்க்சியக் கொள்கையாளர்; தாம் விரும்பி அன்பு செலுத்தும் இரண்டாம் தாயகம் போலந்து  என்றெழுதியிருக்கிறார்;  ஆனாலும் விமரிசனமின்றி எதையும் ஏற்காதவர். விமரிசனங்களை எள்ளல் இழையோட வெளிப்படுத்துவது அவரது இயல்பு.அவர் பணியாற்றிய காலத்தில் அங்கு உலவிய இரும்புத்திரை நகைத்துணுக்குகளையும் சுவை சொட்டச் சொல்வார்.

அங்கு வரும் நாளேட்டுச் செய்திகளில் முழு உண்மை , பகுதி உண்மை ,  உண்மைக்கு முற்றிலும் மாறானவை  என்று மூன்றுவகை உண்டு என்பார்களாம். இரங்கல் செய்திகள் முழு உண்மை ; காலநிலை அறிக்கைகள் பகுதி உண்மை ; அரசு, அரசியல் செய்திகள்  உண்மைக்கு முற்றிலும் மாறானவையாம்.

பணியாளர்களின் மெத்தனம் கண்டு, " நம்ம பாட்டாளி வர்க்கம் " என்று நகைப்பார்.அவர்களே கூட கேட்டுச் சிரித்துக்கொள்வார்கள்.கடுமையானவர்களிடம் கடமை தவறாமல் செயல்படும் பணியாளர்கள் , இவரிடம் எடுத்துக்கொள்ளும் உரிமையே மெத்தனம் என்றும் சொல்லலாம் 

 'மதி! மார்க்சிய நூல்களுக்கு அமெரிக்கப் பதிப்புகள் துல்லியமானவை ' என்று ஒருமுறை சொன்னார்.

கலாநிதி கைலாசபதியிடம் பெருமதிப்புக்கொண்டவராயினும்  கால்டுவெல், தனித்தமிழ் இயக்கம் முதலியன பற்றிய அவரது பார்வைக் கோணலைக் 'கட்சி மார்க்சிய'த்தின் விளைவு என விமரிசிக்கத் தயங்கவில்லை (கலாநிதி க. கைலாசபதி, சாகித்திய அகாதெமி, 2007, ப.113 - 115)சுந்தரம் திராவிட மொழியியலில் கைலாசபதியைவிடவும் மேம்பட்டவர் என்பது வெளிப்படை.

நகை தவழும் முகமும் பாசாங்கற்றுப் பழகுவதும் எந்த வகை இறுக்கமுமின்றி உரையாடுவதும் புலமைத் தோரணையின்றி, கலைச்சொல் அச்சுறுத்தலின்றி அறிவார்ந்து விளக்குவதும் பல்கலைக்கழகப்பணிகளில் கருத்தூன்றி உழைப்பதும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் நியாயத்தின் பக்கம் சமரசமின்றி நிற்பதும் நடையுடை பாவனைகளில் எளிமையும் இவற்றினூடே இயல்பாக  இழையோடும் அங்கதமும்தாம்  பேராசிரியர் இராம.சுந்தரம்.

                                                                  ***

சிவகங்கை மாவட்டம் அலவாக்கோட்டையில் , திருவாளர்கள் இராமனாதன் - அன்னபூரணி தம்பதியர்க்கு மகனாகப் பிறந்த சுந்தரம் அருகிலிருந்த நாட்டரசன்கோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில்

ஒளவை துரைசாமிப்பிள்ளை, மா.இராசமாணிக்கனார், அ.கி.பரந்தாமனார் , சுப. அண்ணாமலை முதலிய அக்காலத்தின் குறிப்பிடத்தக்க தமிழறிஞர்களிடம் தமிழ் பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.ஆனர்ஸ் சேர்ந்து அ.சிதம்பர நாத செட்டியார் முதலியோரிடம் பயின்றார்.

தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுநராகப் பணியாற்றி, முதுகலைப் படிப்பையும் முடித்துக்கொண்டார். அக்கல்லூரி நூலகர் திருமலை முத்துசாமி தம் நண்பரான பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியத்திடம் இராம.சுந்தரத்தை ஆற்றுப்படுதினார். திருவனந்தபுரம் சென்று அவரிடம் மொழியியல் பயின்று ,டென்மார்க் மொழியியல் அறிஞர் எம்ஸ்லெவ் (Hjelmslev) - இன் மொழிக் கூறியல் ( Glossematics) அடிப்படையில் பத்துப்பாட்டை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார் (1967).  வ.அய்.சு.அவர்களையே தம் ஞானத்தத்தையாக வரித்துக்கொண்டார் . இது  மார்க்சியம் அவரை ஈர்த்த காலமுமாகும்.

அக்காலத் தமிழகச் சூழலில், கல்வி பயின்ற சூழலில் திராவிட இயக்க ஈடுபாட்டாளராக அவர் இருந்தது இயல்பானது. இதனால் அவர் கண்டுகொள்ளாமலிருந்த வையாபுரிப்பிள்ளை , தெ.பொ.மீ. நூல்களை நல்லவேளை , ஓர் ஆசிரியரின் தூண்டுதலால் படித்தார்.  மொழியை உணர்ச்சிகரமாக மட்டும் பார்க்கக்கூடாது என்பது தெளிவாயிற்று. பின்பு பயின்று தேர்ந்த மொழியியலும் மார்க்சியமும் அவரது மொழியுணர்வைச் செழுமைப்படுத்தின.

முனைவர் பட்ட ஆய்வேட்டை அளித்தபின்  , தெக்கணக் கல்லூரியில் பல்கலைக்கழக நல்கை ஆணையத்தின் இளநிலை ஆய்வாளராகச் சேர்ந்தார் (1964-66) ;  பேராசிரியர் காடகே (A.M.Ghatage) மேற்பார்வையில் திராவிடமொழிகளின் வகைப்பாட்டியல் (Typology) ஆய்வு முதலியவற்றை மேற்கொண்டார். தொடர்ந்து முதுநிலை ஆய்வாளராக (1969 - 71) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் வார்சா பல்கலைக்கழக இந்தியவியல் துறையில் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்து போலிஷ் மொழி பயின்றுகொண்டே அதன் வழித் தமிழும் மலையாளமும் கற்பித்தார்;  தமிழிலக்கிய வரலாறு , பல்வேறு காலகட்டத்துத் தமிழ் இலக்கியங்கள் முதலியவற்றை போலந்து மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார்.

1960களிலிருந்தே ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வந்த சுந்தரத்தின் முதலாவது நூலாக, ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பாக, அவர் வார்சாவில் பணியாற்றியபோது வந்தது , ' சொல்புதிது சுவை புதிது'. இலக்கியம் பயின்று மொழியியல் துறைக்குள் நுழைந்ததால் புறவயமான ஆனால் நயமான ஆய்வு நடை அவருக்கு வாய்த்தது.

" ஒரு தர்க்கவாதி மொழி இலக்கணத்தை அணுகுவதற்கும் , ஒரு மொழியியல்வாதி மொழி இலக்கணத்தை அணுகுவதற்கும் உள்ள வேறுபாடே சேனாவரையத்துக்கும் தெய்வச்சிலையத்துக்கும் உள்ள வேறுபாடு " (சொல்புதிது சுவை புதிது , 1978, ப.5) என்பது ஒரு சான்று.

பாரதியின் மொழித் திறனைப் பாரதியின் தொடரையே தலைப்பாகத் தந்து கட்டுரையாக்கினார். பழந்தமிழ் இலக்கணம்  தொட்டு நவீன இலக்கியம் வரை  அவருக்கிருந்த ஆய்வார்ந்த தோய்வுக்கு இத்தொகுப்பே கட்டியம் கூறி நிற்கிறது.

சொல்புதிது சுவை புதிது (1978), வையாபுரிப்பிள்ளை (1993), பொருள் புதிது வளம் புதிது (1994), தமிழக அறிவியல் வரலாறு (2004) ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க நூல்கள். தொகுக்கப்படாத -  தமிழ் , ஆங்கில, போலிஷ் - கட்டுரைகள் பல( முனைவர் க.பரிமளா அவர்கள் பேரா.இராம. சுந்தரம் அவர்கள் பற்றி எழுதி அச்சுக்குக் காத்திருக்கும் நூல். வேறு சில தகவல்களும் இதிலிருந்து எடுத்துக்கொண்டேன்.நன்றி)

போலந்தில் பணி முடித்த சுந்தரத்திற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் பணி கிடைத்தது (1979 - 81). தகுதிகாண் பருவம் (Probation period) முடியும் முன்பே,  பல்கலைக்கழக ஊழியர் சங்கப் போராட்டத்தை ஆதரித்து இயங்கியதால் பேராசிரியரின் பணி நீட்டிக்கப்படவில்லை.

அப்போதுதான் தொடங்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகம் அவர் தகுதி காட்ட வாய்ப்பளித்தது. அவரது தகுதியுணர்ந்திருந்த துணைவேந்தர் வ.அய்.சு. பணியமர்த்திக்கொண்டார். முன்பே சுந்தரம் தந்த சங்க இலக்கியப் பொருட்களஞ்சியத் திட்டத்தை ஏற்றிருந்த வ.அய்.சு. அதனை ஒத்திவைக்கச் சொன்னார்.

தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கியபோது  வ.அய்.சு. பலரைச் சந்தித்து அவர்களின் நாடி பிடித்துப் பார்த்துக்கொண்டார். அப்படி சந்தித்தவர்களுள் ஒருவர் ம.பொ.சி.     வ.அய்.சு. தமிழகத்திற்கு அவ்வளவாக அறிமுகமாகாதவர். எனவே அவரால் என்ன செய்துவிட  முடியும் என்று கருதினார் ம.பொ.சி. ஆனால் , திட்டமிட்டும் விரைவாகவும் வேலை வாங்கும் நிருவாகத்திறன்மிக்க வ.அய்.சு. ஒன்பதே மாதத்தில் உயர்கல்வி நிலையில் மருத்துவம், பொறியியல் முதலியவற்றுக்குத் தமிழில் பாட நூல்களை ஆக்கிவிட முடியும் என்று சொல்லியிருக்கிறார்.

இலக்கியம் , இலக்கணம், மொழியியல் துறைகளில் தம் திறனை நிறுவிய இராம.சுந்தரம் அறிவியல் தமிழ் என்னும் புதியதொரு துறைக்குள் நுழைந்தார். அது மிகவும் கடினமானதும் சவாலானதுமான பெரும்பணி. தமிழில் பாட நூல்களை ஆக்குவதோடு  பயிற்றுவித்து மருத்துவர்களையும் பொறியாளர்களையும் உருவாக்குவதே நோக்கம்.

அந்த அளவு அறிவியல் தெரியாததையே  தகுதியாகக்கொண்டு தம்மை வ.அய்.சு பணியமர்த்தியதாகக் குறிப்பிடுகிறார் சுந்தரம்.

(நேர்காணல்: புத்தகம் பேசுது,  செப்டம்பர் 2010)இப்பணியில் தஞ்சை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மருத்துவர் நரேந்திரன், திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரிப் (REC)பேராசிரியர் சம்பத் முதலியோர் ஒத்துழைப்பு நல்கினர். பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி, ஆய்வு நிறுவனங்கள் என ஒரு மாதம் சுற்றிச் சுழன்று முதல் இரண்டு ஆண்டுக்கான பாடத் திட்டங்களை அமைத்துக்கொண்டார் சுந்தரம். இவற்றோடு , ' கேரள சாஸ்திர சாகித்திய பரிசத் ' தை முன்மாதிரியாகக் கொண்டு பொதுமக்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் திட்டத்தையும் முன்வைத்தார்.

தமிழில் எழுத முன்வந்தோருக்கு உடனடி இடையூறு கலைச்சொற்கள். பொறியியலுக்குப் பதின்மூன்றாயிரம் , மருத்துவத்திற்குப் பன்னிரண்டாயிரம் என  முந்தைய கலைச்சொற்கள் தொகுக்கப்பட்டன. இவற்றில் சீர்மை காணக் கலைச்சொல்லியல் நோக்குத் தேவைப்பட்டது. அவ்வாறு சீராக்கியவை பாடநூல் ஆசிரியர்களுக்கு உதவியாயின. புதிய கலைச்சொற்களும் உருவாக்கப்பட்டன.

ஏறத்தாழ 1½ இலட்சம் சொற்களிலிருந்து தேர்ந்தெடுத்த 80,000 சொற்கள் ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டன.

தமிழறிஞர்கள்  நடையையும் ,பாட வல்லுநர்கள் பொருளையும் மேற்பார்த்தபின் மீண்டும் நூலாசிரியர்கள் வழியாகப் பாடநூல்கள் நிறைவுபெற்றன. முதல் இரண்டாண்டுக்கான பாடநூல்கள் ஆயத்தமாயின. பாதை போட்டுக்கொண்டே பயணம் செய்வது போன்ற பணி வெற்றிகரமாக நிறைவேறியது.

அந்நூல்கள் தமிழால் முடியும் என்பதை  நிறுவின. தமிழ்ச் சமூகத்தின் அவப்பேறாக , அவை நடைமுறைக்கு வரவில்லை. என்றாலும் நூல்கள் செலவாகிக்கொண்டிருந்தன. செவிலியர் பயிற்சியாளர்களுக்குத் தமிழ்வழி மருத்துவ நூல்கள் பெரிதும் உதவின.

பலனை எதிர்பாராக் கடமையாளராகச் சுந்தரம் பணியாற்றினார். முன்னரே மொழிபெயர்ப்பில் இறங்கிய அவர், 'உடல்நலம்' , 'பாலூட்டிகள்', 'மூலிகைகள்'  முதலிய அறிவியல்சார்ந்த நூல்களையும் மொழிபெயர்த்துத் தந்தார்.

சர்வாதிகாரி எனத் தக்க  வ.அய்.சு. வின் நம்பிக்கைக்குரியவராக, நடைமுறையிலும் அவர் எண்ணியாங்கு இயங்கிய செயல்வீரராக இருந்த சுந்தரம் , வ. அய்.சு. காலத்திலேயே பல்கலைக்கழக நிருவாகத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களில் கலந்துகொள்ளவும் செய்தார்.

அடுத்து வந்த துணைவேந்தர் பேராசிரியர் ச. அகத்தியலிங்கம் காலத்தில் தொடங்கப்பட்ட (1987) அறிவியல் தமிழ்க் கழகத்தின் செயலாளராகப் பல்லாண்டுகள் பணியாற்றிக் கருத்தரங்குகளை நடத்தி, கட்டுரைத் தொகுப்புகளை வெளிக்கொணர்ந்தார். அக்கட்டுரைகள் வெவ்வேறு தரநிலைகளில் அமைந்தாலும் , அறிவியல் தமிழ் பற்றிய உணர்வை விரிவாக்க உதவின.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்  அறிவியல் களஞ்சியத் (Encyclopaedia) தொகுப்புகளுக்குக் கலைச்சொல்லாக்கம், அறிவியல் தமிழ் மன்றம் ஆகியவற்றின் பணிகள் உறுதுணையாயின. சுந்தரம் அவர்களே அறிவியல் களஞ்சியத் தொகுதிகள் சிலவற்றுக்கு முதன்மைப் பதிப்பாசிரியராக இருந்து பதிப்பித்துள்ளார்.

' தமிழக அறிவியல் வரலாறு ' என்னும் அவரது ஆய்வு நூலின் (2004)முன்னுரையில்,

" நிலவுடைமைச் சமுதாயத்தில் இடம் பெற்ற அறிவியல் - தொழில்நுட்ப அறிவும் , தொழில்மயமான முதலாளித்துவ சமுதாயத்தில் இடம் பெற்ற அறிவியல் - தொழில்நுட்ப அறிவும் ஒன்றாக இருக்க முடியாது. பல்வேறு சோதனைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் பயன்படுத்தலுக்கும் ஆளான முதலாளித்துவ அறிவியலுக்கு,

சோதனைக்கு அதிகம் ஆளாகாத அனுபவத்தாலும் கூர்ந்த நோக்காலும் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலவுடைமை அறிவியல் ஈடுகொடுக்க முடியாது " (ப.i) என்கிறார்.

" தமிழர்களின் அறிவியல் உணர்வும் தொழில்நுட்பச் செயல்பாடுகளும் இந்தியப் பின்புலத்தில் வைத்துக் காணவேண்டியவைகளாகும் ; தனித்துப் பார்க்க இயலாதவை. அதேபோல பண்டைய இந்திய அறிவியல் - தொழில்நுட்பச் சிந்தனைகளை அக்காலத்திய அரேபிய - கிரேக்க - ரோமானியச் சிந்தனைகளோடு ஒப்ப வைத்துக் காணவேண்டியுள்ளது. அப்படி ஒப்பிடும்போதுதான் அறிவியலின் உலகளாவிய தன்மை வெளிப்படுகிறது " (௸,ப.ii) என்கிறார்.

மேலும் , தொல்காப்பியர் உயிர்களை ஆறாக வகைப்படுத்துவது உமாஸ்வாதி என்ற சைனரின் தத்துவார்த்திகம சூத்திரக் கருத்தோடும் , திருக்குறளின் ' மருந்து ' சரக சம்ஹிதை கூறும் குறிப்புகளோடும் ஒத்திருப்பதைச் சுட்டுகிறார்; ' தனதாக்கம் ' என்கிற போக்கில் இவை தமிழ்மயமாகியிருக்கின்றன என்கிறார்.

பணி ஓய்வுக்குப் பின்னரும் பல்கலைக்கழகம் சார்ந்தும் சாராமலும் அறிவியல் தமிழ்ப் பணிகளில் ஈடுபாடு காட்டினார். பின்வந்தோரும் அவரை மதித்துப் போற்றினார்கள்.

பாடநூலாக்கம், கலைச்சொல் தொகுப்பு, அறிவியல் தமிழ்க் கட்டுரை & நூல் விவரத் தொகுப்பு முதலியன கடந்து ' அறிவியல் தமிழ் ' என்பது, பெயரளவிலன்றி ,  தனியொரு துறையாகவே கொள்ளத் தகுதியானது என்பதை  நிறுவினார் சுந்தரம். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவர் வழி காட்டலில் அறிவியல் தமிழ் சார்ந்தே முனைவர் , ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பல்கலைக்கழகப் பணிநிறைவுக்குப் பிந்தைய அவரது குறிப்பிடத்தக்க சாதனை ,

'திராவிடச் சான்று - எல்லிஸும் திராவிட மொழிகளும் ' (2007)என்னும் மொழிபெயர்ப்பு நூல்.  தாமஸ் டிரவுட்மன் அவர்களின்  Languages and Nations : The Dravidian Proof in Colonial Madras' என்னும் நூல் ஆங்கிலத்தில் அச்சாவதற்கு முன்பே , தட்டச்சு வடிவத்தைக் கொண்டு தமிழாக்கினார் சுந்தரம்.

" இந்நூல் எளிதில் மொழி பெயர்க்கக்கூடியது அல்ல - முக்கியமாக முதல் இரண்டு இயல்கள். மொழியியல், மானிடவியல், வரலாறு முதலான துறைகளில் புரிதலும் பயிற்சியும் வேண்டும் பணி இது. மொழியியலில் ஆழங்கால்பட்டவரும், திராவிட மொழிக்குடும்பம் என்ற கருத்தாக்கத்தின் புலமை நியாயத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவருமான பேராசிரியர் இராம. சுந்தரம் இந்நூலை மொழிபெயர்த்துள்ளது மிகப் பொருத்தமானது " (௸ நூல்,ப.21)என்கிறார் அறிஞர் ஆ.இரா.வேங்கடாசலபதி .

உண்மை.

நூல் அச்சாகும் முன்பு அதன் தமிழ் நடையோட்டத்தைப் பார்க்கும் பணி எனக்கு.அதற்குமேல் பொருள் நுட்பம் குன்றாமல் தமிழாக்குவது அரிது. நூல் வெளிவந்த பின்னர்தான் எனது இந்தப் பணி பற்றி அறிந்து வழக்கம் போல் என்னிடம் மனந்திறந்த மகிழ்ச்சியுடன் பேசினார்.

                                                                             ***

தஞ்சை வட்டாரத் தமிழியற் கல்வியுலகின், தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்ந்த மேல்நோக்கிய அசைவியக்கம்  இப்போது பெரும்பாலும் பணி நிறைவுற்றோரால்தான்  தொடர்ந்து கொண்டிருக்கிறது.  அவர்கள் உதிர உதிர அந்த இயக்கம் குன்றிவருகிறது. அந்த வகையில் தஞ்சைக்கும் தமிழ்கூறு நல்லுலகிற்கும் பேராசிரியரின் மறைவு  ஈடுசெய்ய முடியாத இழப்பேயாகும்.

தமிழ்ப் பல்கலைக்கழக நாடக விழாவொன்றில் (மார்ச், 2019) நேரில் சந்தித்தபோது நிரந்தரமான தஞ்சைவாசியாகிவிட்டதாகச் சொன்னார். இனிச் சந்திப்பது எளிது என்று நம்பி , மகிழ்ந்து சொன்னேன். வெறும் நம்பிக்கையாகவே போய்விட்டது. காலம் தன் கடமையை ஆற்றாமலிருக்குமா.

தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டிய ஆளுமை பேராசிரியர் முனைவர் இராம.சுந்தரம் !



இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...