Thursday, February 15, 2024

அம்மாவின் உறுதி! (பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)



 அம்மாவின் உறுதி! 

(பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)


சென்னைப் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இளநிலைப் பட்ட வகுப்புகளுக்குப் பகுதி I தமிழில் பாலசுந்தரனாரின் ' புலவர் உள்ளம் (தொண்டு) ' பாடமாக வைக்கப்பட்டுவிட்டது. அந்தக் காலத்தில் திங்கள் தோறும் ஊதியம் வராது. கீழ்த்திசை (Oriental) மொழியாசிரியர்களுக்கு ஊதியமும் குறைவு.பெரும் எண்ணிக்கையில் அச்சிட அவரிடம் பணமில்லை. வெளிப் பதிப்பகங்களுக்குக் கொடுக்க மனமில்லை (இது சரியானது).


இந்த நிலையில் வேறு வழி தோன்றாமல்  மாமனாரிடம் - கடனாகத்தான் -  கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணம் எழுந்ததது .  துணைவியார் பங்கசவல்லி அம்மையாரிடம் தெரிவித்தார். இது பற்றி 1971 பிப்பிரவரி 20 ஆம் நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.


துணைவியார் மறுத்துவிடுகிறார். 


       கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்     

       கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் ( நற்றிணை 110)


 என்றது  இலக்கியக்  குறிக்கோளன்று ; நடப்பு - இருபதாம் நூற்றாண்டிலும்.


அம்மாவிடமிருந்த இந்தச் சமரசமற்ற உறுதியை, பிடிவாதத்தை, கடுமையை நான் நன்குணர்ந்தவன். இதனால் உறவினர் பலரும் அவரிடம் ஒரு பாதுகாப்பான தொலைவைப் பேணிக்கொண்டிருந்தார்கள். 


இத்தகைய சூழல்களில் பிடிவாதமான நிலையெடுத்து நிற்கும் குணம் ஓரளவாவது என்னிடம் இருப்பதற்குக் காரணம் அம்மாதான் என்று எண்ணுகிறேன்.


அப்பாவுக்கு நண்பர் உதவியதை பிப்.22 ஆம் நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.

நிருவாகம் : அதிகாரப் பொழுதுபோக்கும் வக்கிரமும் (பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)

 நிருவாகம் : அதிகாரப் பொழுதுபோக்கும் வக்கிரமும்

(பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)


ஆசிரியர் x நிருவாகம் → பணி நீக்கம்

சம்பளப் பிடித்தம் என்னும் அச்சுறுத்தல் 

- ஆகிய இரண்டு இடுகைகளில் , 31.01.1969 ஆம் நாளிட்ட  சம்பளப் பிடித்தம் பற்றிய கடித நகலைத் தந்து பாலசுந்தரனாருக்கு நிருவாகம் இடையூறு செய்தது பற்றி முகநூலில் எழுதியிருந்தேன்  (31 Jul 2023)  . தொடர்ந்தும் ஏதேனும் வாய்ப்புகள் தேடி இடையூறிழைத்து - முதல்வர் கு.சிவமணி அவர்களைப் போல் - வெளியேற்றி விடுவதே நோக்கம். பாலசுந்தரனாரும் அந்த மன நிலைக்கு வந்து விட்டதை இந்த நாட்குறிப்புகள் புலப்படுத்துகின்றன.






1970 மார்ச் 23 : வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முன்னனுமதி பெற வேண்டும் என்று விதித்து, இது, ஒரு முறைமைக்கான ஏற்பாடுதான் , போய் வந்தபின் தெரிவித்தால் கூடப்  போதும்  என்று சொல்லி [ இது அண்டியவர்களுக்கானது], அப்புறம் முன்னதாகத்  தெரிவிக்காமல் போனது பற்றி எச்சரிக்கும் இத்தகு நடைமுறைகள் நிருவாகத்தின் அதிகாரப் பொழுதுபோக்கு.


1970 அக்டோபர் 12 :தனிப்பாடல் திரட்டு, சம காலத்தில் விவாதத்திற்குரிய எதுவும் இல்லாத ஒரு தொகை நூல்;  சரசுவதி மகால்  வெளியீடு. இத்தகு பதிப்புப் பணியில் ஓர் ஆசிரியர் ஈடுபடுவது அவர் பணியாற்றும் நிறுவனத்தின் மதிப்பைக் கூட்டும். ஆனால் நிருவாகங்கள் அதிகாரப் பொழுதுபோக்கில் தொடங்கி வக்கிர முடிவுகளை எடுக்கும் எல்லைவரை போவதை இன்றும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.


1970 டிசம்பர் 18 : ஒரு வக்கிரம். முதல்வர் கு.சிவமணி அவர்களுடன் நிருவாகம் முரண்பட்டது. அவரும் வெளியேறிவிட்டார். ஆனால் கரந்தைத் தமிழ்ச் சங்க/ புலவர் கல்லூரி நிருவாகம் திரு .கு.சிவமணி அவர்களின் தந்தையார் என்னும் ஒரே காரணத்திற்காகத்  திரு. சிவ.குப்புசாமி பிள்ளையவர்கள் மறைந்த போது கூட உரிய மரியாதை செய்யாமல் புறக்கணித்தது வக்கிரத்தின் உச்சம். 


இத்தனைக்கும் திரு. சிவ.குப்புசாமி பிள்ளையவர்கள் தமிழவேள் உமா மகேசுவரனாராலேயே மதிக்கப்பட்டவர்; வெள்ளிவிழா மலரில் படம் இடம்பெறுமளவு முதன்மை பெற்றவர் ; ஓய்வுக்குப் பின்னும் சங்கப் பணிகளில் ஈடுபட்டவர். தமிழ்ப் பொழிலில் குன்றக் கூறலாக  ஒரு குறிப்பு இடம் பெற்றதே நிருவாகத்தின் ' பெருந் ' தன்மை என்று கொள்ளவேண்டியதுதான். (நானும் என் பங்கிற்குக் கல்லூரி நிருவாகத்தின் வக்கிரத்தால் துன்புற்றவன்தான்!)

"தேவாரத் திருமுறைகளுக்கு ஒரு நல்ல பதிப்பு"பாலசுந்தரனார் நாட்குறிப்பு




 " தேவாரத் திருமுறைகளுக்கு ஒரு நல்ல பதிப்பு"-மூதறிஞர் நீ.கந்தசாமிபிள்ளை

______________________________________________________________________________________


பாவலரேறு ச.பாலசுந்தரனார் நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தை 1970 இலிருந்து  தொடங்கியிருக்கவேண்டும். 1970 முதல் 2003 வரை அவர் எழுதியுள்ள நாட்குறிப்பேடுகள் - இடையில் ஓரிரு ஆண்டு விடுபாடுகளுடன் - கிடைத்துள்ளன.


அவர் நாட்குறிப்பேடுகளை விலை கொடுத்து வாங்கியதில்லை ;  அன்பளிப்பாகக் கிடைத்தவற்றில் எழுதியுள்ளார்.  முந்தைய ஆண்டின் ஏட்டில் அச்சிடப்பட்ட நாள் முதலியவற்றைத் திருத்தியும் , தாமே தைத்த ஏட்டில் நாளிட்டும் எழுதியுள்ளார். 


கல்லூரி நிகழ்வுகள், ஊதியம், வங்கி இருப்பு , பணம் எடுத்தல் போடுதல், கொடுக்கல் வாங்கல்கள், நிகழ்ச்சிகளுக்குச் செல்லல், மதிப்பூதியம் , நூலாக்கத்திற்கான புற அகத் தூண்டல்கள், நூல் அச்சாக்கம்,  நூல்களை விற்பனைக்கு அனுப்புதல், நூலக ஆணை,வரவு செலவு , மாதாந்திர அன்றாடச் செலவுகள் , இவற்றால் நேரும் இன்ப துன்ப மன நிலைகள் , சந்திப்புகள் , உடல் நலக்குறைவு , ஆங்காங்கு இவை சார்ந்த கருத்துகள் முதலியன இடம் பெற்றுள்ளன. 


ஒரு கட்டத்தில் தொடர்ந்த குருதிப் போக்கும், பிற்காலத்திய தலை சுற்றலும் பற்றி அவ்வக் கட்டத்தில் மீண்டும் மீண்டும் எழுதியுள்ளார்.


சில நாள்களில் , "எங்கும் செல்லவில்லை "  என்று மட்டுமே இருக்கும் ; ஓரிரு சொற்களில் காரணத்தை எழுதுவதுமுண்டு. சில நாள்கள் எதுவும் எழுதாமல் விடுவது முண்டு.


ஒரு கட்டத்தில் துணிகளைத் துவைத்துப் பெட்டி போட்டது பற்றி அவ்வப்போது எழுதியுள்ளார்.¹


சலிப்பூட்டும் குறிப்புகளோடும் ,இடையிடையே சில போது , குடும்பம், உறவு, நட்பு , தமிழ்ப் புலமையுலகம் முதலியன பற்றிய நெருடலான குறிப்புகளோடும் அவர் எழுதியவற்றை  அப்படியே  இப்போது வெளிப்படுத்த இயலாது; கூடாது ( அவர் இருந்திருந்தால் நானே கூட இவற்றில் தலையிட்டிருக்கமாட்டேன்).


வெளிப்படுத்த வாய்த்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்து - காலவரிசை கருதாமல் - அவ்வப்போது பகிர்ந்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்.


1970 பிப்பிரவரி 02 ஆம் நாள், " மாலை N.K. அவர்களிடம் சென்றிருந்தேன்... தேவாரத் திருமுறைகளுக்கு ஒரு நல்ல பதிப்பு அடையாறு நூல் நிலையத்திற்காகச் செய்ய வேண்டுமென்றார் " என்று எழுதியுள்ளார் ச. பா.

தொடர்ந்து ,  பிப்பிரவரி 13 அன்று நீ.க. 26 பதிகங்களைப் பிரித்தெழுதச் சொன்னதாகவும் , மார்ச் 03 அன்று பிரித்தெழுதிய தாள்களை ஒப்படைத்ததாகவும் எழுதியுள்ளார். ஆனால் இப்பதிப்பு வந்ததாகத் தெரியவில்லை. கையெழுத்துப் படிகள் ஏதும் அடையாறு ( பிரம்ம ஞான சபை ?) நூலகத்தில் இருக்குமா? ²


-----------------------------------------------------


1.   துணிகளை வாரிப்போட்டு - சோப்பும் வீணாகாமல் துணியும் நோகாமல் மாங்கு மாங்கென்று துவைத்து , காயப்போடும் போதே முடிந்த வரை சுருக்கம் நீக்கிவிடுவார்.


பெட்டி போடுவதற்குச் சடங்கு போன்ற வரிசையான செயல்முறைகள் உண்டு. முதலில் தரையில் ஒரு கெட்டிச் சமுக்காளம் பரப்பி அதன்மேல்  தூய விரிப்பைச் சுருக்கமில்லாமல் மெத்தென்று விரித்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரையும் ஒரு துணி முடிச்சையும் ஆயத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பெட்டி போடப்படும்  துணியில் சுருக்கம் இருந்தால் நீரைத் துணியில் நனைத்து நீவவேண்டியிருக்கும். இருப்புச் சலவைப்பெட்டியில் கரி நிரப்பி எரியூட்டிச் சூடேற்ற வேண்டும்.  சலவைப்பெட்டியின் வழவழப்பான கீழ்ப்பக்கத்தைத் தரையில் வைக்கக் கூடாது; அதற்கென்று உள்ள மனையில்தான் வைக்க வேண்டும். அவ்வப்போது கரியில் பூக்கும் சாம்பலை விசிறிவிட வேண்டும்.தீப்பொறி படாதவாறு காற்றுக்கு எதிர்த்திசையில் அமர வேண்டும்.  பொறி விழாதவாறு துணிகளையும் அத்திசையில் வைத்துக் கொள்ள வேண்டும். சலவைப்பெட்டியின் எடை ஒரு கிலோவுக்குக் குறையாது. குத்துக் காலிட்டுத் தரையில் அமர்ந்து சலவைப் பெட்டியைத்தூக்கித் துணியின்மேல் வைத்துக் குறிப்பிட்ட திசையில் தேய்ப்பதற்குக் குறைந்தபட்சத் தொழில் திறனும், உடல் வன்மையும் வேண்டும். ஏறத்தாழ முப்பது துணிகளை ஒரே அமர்வில் பெட்டிபோட்டுவிடுவார்.அப்புறமும் துணிகளை அடுக்கி வைத்தல் பெட்டியிலுள்ள சாம்பல் பூத்த கரியைக் கொட்டிவிட்டு , பெட்டியில் கீறல் விழாமல் உரிய இடத்தில் வைத்தல் முதலியவற்றையும் நறுவிசாகச் செய்து முடிப்பார். 


அது , ஏறத்தாழ முழு நாளை எடுத்துக் கொள்ளும். எனவேதான் அதனைக் குறிப்பிட்டுள்ளார் என்று தோன்றுகிறது.



2.  பிரஞ்சு இந்தியக் கழகம் வாயிலாக,  பேரறிஞர் பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர் பதிப்பித்து மூன்று பகுதிகளாக (1984, 1985, 1991 ) வெளியிட்ட தேவாரம் - பண்முறைப் பதிப்பு , தேவாரப் பதிப்புகளின் உச்சம். தேவார ஆய்வுத்துணை என்னும் மூன்றாம் பகுதி ஒரு தேவாரக் களஞ்சியம். இப்பதிப்புக்கு நீ. க. அவர்களின் திருவாசகப் பதிப்பை முன்னோடி எனலாம் ]

Sunday, February 4, 2024

' மட்டையாட்ட மான்மியம் '

 ' மட்டையாட்ட மான்மியம் ' 



 2015ஆம் ஆண்டு டென்னிசு விளையாட்டாளர்  மரியா சரபோவா, ' சச்சின் டெண்டுல்கர் யாரென்று தெரியாது ' என்று சொல்லப்போக  அப்போது  அவரைச் சமூக ஊடகங்களில் மாற்றி மாற்றி வறுத்தெடுத்துவிட்டனராம்.  

இப்போது  ' உழவர் போராட்டம் எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை '  என்றும் ' இந்திய இறையாண்மை ' என்றும்  டெண்டுல்கர் கீச்சிட , போராட்ட  ஆதரவு உணர்வுடன்,    அப்போது  ‘சச்சினைத் தெரியாது’ என்று கூறிய மரியா சரபோவாவிடம் மன்னிப்புக் கேட்டுச் சரமாரியாகக் கீச்சிடுகிறார்களாம். இது செய்தி.


இனிக் கதை !


நாங்கள் தஞ்சாவூர் வடக்கு வீதியில் வசித்துவந்தோம். இருபுறமும் நான்கைந்து மணித்துளிகளில் நடந்து சென்றடைய வாய்ப்பாகத் தூய பேதுரு பள்ளி, கலியாண சுந்தரம் பள்ளி ஆகிய புகழ்மிகு பள்ளிகள் இருந்தன. 


ஆனால், ஏறத்தாழ இருபது மணித்துளிகளுக்குக் குறையாமல் நடந்து செல்லும் தொலைவிலிருந்த , நகரம் சிற்றூர் இரண்டுக்கும் இடைப்பட்ட, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் உமாமகேசுவரர் பள்ளியில் நான் படித்தேன். சங்கம் நடத்திய புலவர் கல்லூரியில் பணியாற்றியதால் அப்பா என்னையும் உடன் அழைத்துச் சென்றார்கள்.


எனக்குப் பள்ளி நண்பர்கள் வேறு; தெரு நண்பர்கள் வேறு. 


உமாமகேசுவரர் பள்ளியில் அப்போது சாஃப்ட் பால் அல்லது பேஸ்பால் எனப்படும் குண்டாந்தடி ஆட்டத்தில் வல்ல உடற்பயிற்சி ஆசிரியர் இருந்ததால் அதுவே பயிற்றுவிக்கப்பட்டது.


நான் வேடிக்கை பார்ப்பேன். விளையாடியதில்லை.


தூய பேதுரு பள்ளி விளையாட்டுத் திடலில் இக்பால் அரங்கில் , ஆண்டுதோறும் ஒருவார காலத்திற்குக் குறையாமல்  நடக்கும் அனைத்திந்திய அளவிலான கூடைப்பந்துப் போட்டிகளைத் தவறாமல் பார்ப்பேன்.  கூடைப்பந்தில் ஆர்வமிக்க பார்வையாளர்கள் கணிசமாக வருவார்கள். ஆனால் ,தெரு நண்பர் எவருக்கும் அதில் ஆர்வமில்லை. நான் தனியாகத்தான் செல்வேன்.பெரிய அளவுக்கு விதிகளோ ஆட்ட நுணுக்கங்களோ தெரியாவிட்டாலும் அதன் விறுவிறுப்பு என்னை ஈர்த்தது. 


கோலிக்குண்டு , கிட்டிப்புள் , பம்பரம் (தலையாரி என்றொரு ஆட்டம் விறுவிறுப்பானது) முதலியவற்றில் தெரு நண்பர்களோடு நானும் விளையாடுவேன் ; குறிப்பாகக் கிட்டிப்புள் நன்றாக ஆடுவேன். கிட்டிப்புள்ளில் இருந்துதான் கிரிக்கெட் வந்தது என்று கலைச்சொல்லறியாக் காலத்திலேயே பண்பாட்டாராய்ச்சிப் பகடி செய்திருக்கிறேன்.


அப்போது, தெருவில் சந்து பொந்துகளில் எல்லாம் சிறுவர்கள் தாமே அமைத்துக் கொண்ட  சிறுசிறு மட்டையாட்டக் குழுக்கள்  இருக்கும். ஒவ்வொரு குழுவுக்கும் நீள் வடிவ ஓவிய ஏடு  ஆட்டப் பதிவேடாக இருக்கும் . குழுக்களுக்குள் கையெழுத்துப் பந்தயம்(மேட்ச்)நடக்கும். ஓட்டங்களும் விக்கெட்டுகளும் இன்ன பிறவும் முறையாகப் பதிவாகும். இரு அணியின் வெற்றி தோல்விகள் பதிவாகும். ஆட்டம் உணர்ச்சிகரமாக இருக்கும். சண்டை சச்சரவுகள் சிலவேளை அடிதடியாகக் கூட முற்றிவிடும்.


தெருக் குழுக்களில் வேறுபாடற்றுச் சிறுவர்கள் உறுப்பினர்களாக இருந்தார்கள். என்றாலும் என் விருப்பின்மைக்கு விறுவிறுப்பின்மை மட்டுமல்ல , மட்டையாட்டம் மேட்டுக்குடி/மேற் சாதிச் சார்புடையது என்று உள்ளத்தில் பதிந்து போனதே  காரணம்.

அலட்டுவார்கள். 


ஆனால் , தெருக் குழுக்களின் பந்தயங்களில் பார்வையாளனாக மணிக்கணக்கில் கலந்துகொள்வேன்.  அப்போது , திரைப்படச் செய்திக்காட்சியில் சில மணித்துளிகள் பெரிய ஆட்டத்தின் முனைப்பான காட்சிகளைக் காண்பது தவிர , ஏடுகளில் வரும் படங்களும் வானொலி நேர்முக வருணனைகளும்தாம் வடிகால்கள். 


மட்டையடி, பந்துபிடி முதலியன இயக்க விறுவிறுப்புடன் காட்சி வடிவில் ஏடுகளில்  இடம்பெறும். அவற்றைக் கத்தரித்து விவரங்களுடன் ஏட்டில் ஒட்டி மட்டையடிப் படத்தொகுப்புகளாகப் பலரும் வைத்திருப்பார்கள். எம் தெருச் சிறுவர்கள் அத்தகு நிலைக் காட்சிகளை உளங்கொண்டு , பந்தை அடித்தல் பிடித்தல் முதலியவற்றின்போது சில நொடிகள் நிலைக்காட்சியில் உறைந்திருப்பார்கள்.சிறுவர்களின் பாவனைகள் - அவர்களையொத்தவனே ஆனாலும் - எனக்குக் கேலிக்கூத்தாய் நகை நல்கும் ; கிண்டலடித்துக்கொண்டிருப்பேன். அதுஎன் இரசனை. மற்றபடி அந்த ஆட்டம் பற்றித்  தானாக வந்து சேர்ந்ததற்கு மேல்  நான் ஏதும் தெரிந்துகொள்ள முயலவில்லை. (என் இரசனை முறையால் நண்பர்கள் எரிச்சலுறுவார்கள் . வாயாலாகாதவர்கள் கை ஓங்குவதும் உண்டு. எனினும்  என்னைத் தவிர்க்க மாட்டார்கள்) இன்றளவும் தொலைக்காட்சியில் போகிறபோக்கில் கூட அதைப் பார்ப்பதில்லை.


அந்தக் காலத்தில் வானொலிப் பெட்டியில் நேர்முக வருணனை கேட்காத மட்டையாட்டப் பித்தர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம். 


கல்லூரி மாணவர் சிலர் கையடக்க வானொலியை ஒய்யென வருணனை  இரையக் காதில் வைத்துக்கொண்டு போவார்கள். 'முற்போக்காளர்' கள் சிலர் கூட இதற்கு விதிவிலக்கில்லை. கையடக்க வானொலி அரிதான காலத்தில் ,

பித்து இல்லையென்றாலும் கொஞ்சம் தொற்று உள்ளவர்கள் ஓட்ட எண்ணிக்கை , விக்கெட் வீழ்ச்சி பற்றியெல்லாம் ' அவல் மெல்லு 'மளவுக்காவது கேட்டறிவார்கள். அதுவும் தெரியாதவர்கள்  

நவீன இந்திய வாழ்க்கைக்கே இலாயக்கற்றவர்களாகிவிடுவார்களே ! இந்த மனநிலையிலிருந்துதான் மரியா சரபோவாவை அன்று பார்த்திருக்கிறார்கள்.


கையடக்க வானொலிக் கால்நடைகளைக் கண்டால் பற்றிக்கொண்டு வரும். கல்லூரிக் காலத்தில் ,கையடக்கக் குறள் நூல் எனக்குக் கைகொடுத்தது. அதைக் கைக்குட்டையில் சுற்றிக் காதருகே பிடித்துக்கொண்டு உற்றுக் கேட்பது போன்ற பாவனையில் ( மட்டையடி வருணனை கேட்பதற்கென்றே வியப்பை, அதிர்ச்சியை இன்ன பிறவற்றைக் காட்டும் ஒரு பாவனை உண்டு)  நடப்பேன். பின்தொடர்வோர்   சிலர் பலராகி " ஃபிரண்டு ரன் எத்தன? " என்பார்கள் . எதுவும் சொல்லாமல் கைக்குட்டையைப் பிரித்துக் குறளைப் பிற புத்தகங்களோடு சேர்த்துக்கொண்டு நடப்பேன். வக்கிரம் !


ஊடகங்களில் என்னை மீறிப் புலன்களில் படும் பட்டோடி நவாப் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை பெயரளவில் மட்டுமே சிலரை அறிவேன். இப்போது தமிழ்நாட்டு நடராசனை மேட்டிமை ஊடகங்கள் கையாளும் முறை பற்றி மட்டுமே கருத்துச் செலுத்தினேன். மற்றபடி மிக மிக மிகப் பெரும்பாலான மட்டையாடுநரை இன்றளவும் எனக்குத் தெரியவே தெரியாது.


வாணாள் வீணாள் கழித்துவிட்டேன். அகவை அறுபத்துமூன்று கடந்துவிட்டது.

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...