அறிவியலாளரும் தொழில்நுட்பரும்
நான் ஆசிரியப் பணியேற்றுச் சில ஆண்டுகளில் - 1980 களின் நடுப்பகுதியில் - நடந்தது.
அவர் அறிவியல் தொழில் நுட்பத் துறையில் உச்ச நிலைகளில் பணியாற்றியவர்; கல்வித் துறை வல்லுநராகவும் பல பொறுப்புகளில் இருந்தவர்; தமிழ் வரிவடிவச் சீர் திருத்தவாதி.அவரன்னோர் எளிவந்து தமிழ் வளரச்சிப் பணிகளில் ஈடுபடுவது பெருந்தன்மையின் அடையாளம்.
அவர் ஒரு கட்டுரையில் 'பண்டிதர்கள் வேறு, படைப்பாளிகள் வேறு. பழமை பேணும் தமிழ்ப் பண்டிதர்கள் தம்மைப் படைப்பாளிகளாகக் கருதிக் கொள்கிறார்கள். படைப்பாளிகள் புதுமைகளுக்கேற்ப மாறுதல்களைச் செய்பவர்கள். புதிய கருவிகளில் தமிழைக் கொண்டு செல்வதற்குரிய மாறுதல்களுக்குப் பண்டிதர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்' என்னும் கருத்துப்பட எழுதியிருந்தார்.
நான், அந்தக் கட்டுரை வெளிவந்த இதழுக்கு , 'ஆம். தொழில்நுட்பர்கள் தங்களை அறிவியலாளர்களாகக் கருதுவது போல்தான் ... தொழில்நுட்பர்கள் இருக்கும் எந்திரத்துக்குள் வராதவற்றை ஏற்பதில்லை; சீர் திருத்தி எந்திரத்திற்கேற்ப மாற்ற வேண்டும் என்பார்கள். அறிவியலாளர்கள் புதியன கண்டுபிடித்துப் புதிய எந்திரத்தை உருவாக்குவார்கள்' என்று கடிதம் எழுத எண்ணினேன்.
எம் கல்லூரி முதல்வர் பி.விருத்தாசலம் ஐயாவிடம் அன்று மாலை , பேச்சுவாக்கில் வழக்கம்போல் அது பற்றிச் சொன்னேன்.
" அனுப்பிட்டியா?" என்றார். "அனுப்பப் போகிறேன்" என்றேன். "நீ நினைப்பது சரிதான். ஆனால்,வேண்டாம். நீ வளர வேண்டியவன். இது போன்ற ஆட்களிடம் வம்பு வேண்டாம்" என்று விளக்கினார்.
இது போதாதா எழுத்துச் சோம்பேறியான நான் கைவிடுவதற்கு .
அந்தக் கல்வியாளரின் கால்தூசிக்குக் கூட என் படிப்பு ஈடாகாது. ஆனால், அறிவியல் என்பது படிப்பு, கல்வி, பயிற்சி, ஆய்வகம் முதலியவற்றை மட்டும் சார்ந்ததன்று; அடிப்படையில் அது பார்வை சார்ந்தது.
இன்றைய நிலையில் அறிவியல் மேம்பாட்டுக்கு மிகப் பெரும் கட்டமைப்புகள் தேவை; அவற்றில் பணியாற்ற உரிய கல்விப் பின்னணி தேவை. இவற்றை அரசோ மிகப் பெரும் முதலீடு செய்யும் நிறுவனங்களோதாம் செய்ய முடியும். இவற்றால், மக்கள் திரளிடம், அறிவியல் இதுதான் என ஒன்றைக் குறித்த பிரமையை உருவாக்கி விட முடியும்.
தனக்குச் சாதகமான தொழில்நுட்பாதிக்கர்களை (Technocrats) ஆளும் வர்க்கம் அறிவியலாளர் என்று கூட அன்று, அறிவியல் மேதை என்றே தூக்கிப் பிடிக்கும். அதிலும் அந்தத் தொழில்நுட்பாதிக்கர் எளிமை, அறம் முதலியவற்றைக் கடைப்பிடிக்கும் தோற்றத்தோடு சில வினோதமான அன்றாட நடைமுறைகளைக் கொண்டவராகவும் ஒரு பிரம்மச்சாரியாகவும் இருந்து விட்டால் அவர் ஓர் அறிவியல் ஞானி என்னும் பிம்பத்தை ஆளும் வர்க்கம் உருவாக்கிவிடும். ஆளும் வர்க்கத்திற்குச் சாதகமான 'அறிவியல் ' விளக்கங்களை அவர் தருவார்.
நான், தனிப்பட்ட எவரையும் குறிப்பிட வில்லை; பொதுமைப் படுத்தியிருக்கிறேன்.
பொதுமை தனிப்பட்ட - ஆமாம். நீங்கள் நினைக்கிற - அவரையும் உள்ளடக்கியது தான்.( படத்திற்கு நன்றி interest.co.nz)
No comments:
Post a Comment