Sunday, March 3, 2024

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத்துச் சீர்திருத்த, சேர்திருத்த, இலக்கண மறுப்புக் குழுக்களும். 

தமிழில் அரசாணை வழி எழுத்துச் சீரைத் திருத்தியது தவறான முன்னுதாரணம்.

தமிழில் கிரந்த வடிவங்கள் சில புழங்குகின்றன ; மிகுதியாகப் புழங்குகின்றன. ஆனாலும் அவை  அயல் வரவு என்கிற நிலையில்தான் கற்பிக்கப்படுகின்றன. அவற்றையும் வேறுபல கிரந்த வடிவங்களையும் தமிழில் சேர்க்க வேண்டுமென்கிறவர்கள் பேசாமல் தெலுங்கு அல்லது கன்னடத்தை வரித்துக்கொள்வதுதான் நேர்மை. குறைந்தது மலையாளத்தின் பக்கம் போய்விடலாம்.

சங்கத வருக்க எழுத்துகளையும் பிறவற்றையும் ஏற்றபின்னும் - மலையாளத்தை விட்டு விடுவோம் - தெலுங்கும் கன்னடமும் இருவேறு மொழிகளாக இயங்குவது ஏன் ? ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய தனித்தன்மை உண்டு.

மொழி என்பது பயன்படு கருவியாகவும் பண்பாட்டுச் சொத்தாகவும் ஒருசேர இயங்குவது. உள்ளார்ந்து நிகழும் மாற்றங்களையும் பிறமொழி ஆதிக்கத்தால் நேர்ந்த மாற்றங்களையும் காட்டி , வலிந்து மாற்றங்களைத் திணிக்கக் கூடாது. 

பயன்பாடு கருதி ஆங்கிலம் போன்ற அயல் மொழிகளை - அவ்வவற்றின் இலக்கணம் பிறழாமல் - கற்கும்போது ; கற்க முடியும்போது, தமிழுக்கு மட்டும் இலக்கணம் வேண்டாம் என்பது உள்நோக்கமுடையது.



இந்த உள்நோக்கத்துக்கு வரலாற்று, அறிவியல் முலாம் பூசி மருட்டும்போது தாழ்வு மனப்பான்மையுள்ள தமிழ்த் துறையினர் சிலர் ஆமாஞ்சாமி என்கின்றனர்.

இலக்கணம் தமிழ் மொழிக்கு மட்டுமன்று ; உலகத்து மொழி யாவற்றுக்கும் உண்டு. மரபார்ந்த மொழிகள் வெறும் தற்காலப் பேச்சு வழக்கை மட்டுமே கணக்கில் கொள்ளக்கூடாது. தமிழ் போன்ற இரு நிலை ( பேச்சு, எழுத்து) வழக்கு மொழிகளில் எழுத்து வழக்குக்கும் உயிர் உண்டு. 

விதிவிலக்குகள் இருக்கலாம் ; கருத்து வேறுபாடுகள் , விவாதங்கள் இருக்கலாம்,

'கல்த்தாரைக் கல்த்தாரே காமுறுவர் 'என்பது போன்ற - டி.கே.சி. வகையறாக் - குறுக்குச் சால்கள் இருக்கலாம்.

இவை இலக்கண மறுப்பிற்குரிய நியாயங்கள் அல்ல. இலக்கணம் இருப்பதால்தான் இவை உயிர்த்திருக்கின்றன.

இலக்கணம் தெரியாதிருப்பது குற்றமில்லை. மொழிப் பயிற்சி காரணமாக இலக்கணம் தெரியாமலே , மீறியே கூட, தம் நடையில் நுட்பங்களைக் கொணர்ந்த எழுத்தாளர் பலருண்டு.

வானொலி நேர்காணல் ஒன்றில், " தமிழ்'ல எழுதறவாளுக்குத் தமிழ் இலக்கணம் தெரிஞ்சிருக்கணுமா என்ன ?" என்று,போகிற போக்கில் , எதிர்மறையான விடைக்குக் கொக்கிபோடும்  உள் நோக்க வினாவைத் தொடுத்தார் அந்த எழுத்தாள அம்மையார்.

" தெரிந்திருக்கக் கூடாதா என்ன ?" என்று தாமொரு கொக்கியை விடையாக மாட்டினார் ஜெயகாந்தன்.

தமிழ்த் துறையாளர்கள் இலக்கணப் பெருமிதத்தை அணிந்து நின்றிடுக.

[ கொசுறு : சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எனக்கு இலக்கணம் தெரியாது. அதனாலேயே இலக்கண மறுப்புக்குத் தலையாட்டுவது ... தனம்]

Thursday, February 15, 2024

அம்மாவின் உறுதி! (பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)



 அம்மாவின் உறுதி! 

(பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)


சென்னைப் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இளநிலைப் பட்ட வகுப்புகளுக்குப் பகுதி I தமிழில் பாலசுந்தரனாரின் ' புலவர் உள்ளம் (தொண்டு) ' பாடமாக வைக்கப்பட்டுவிட்டது. அந்தக் காலத்தில் திங்கள் தோறும் ஊதியம் வராது. கீழ்த்திசை (Oriental) மொழியாசிரியர்களுக்கு ஊதியமும் குறைவு.பெரும் எண்ணிக்கையில் அச்சிட அவரிடம் பணமில்லை. வெளிப் பதிப்பகங்களுக்குக் கொடுக்க மனமில்லை (இது சரியானது).


இந்த நிலையில் வேறு வழி தோன்றாமல்  மாமனாரிடம் - கடனாகத்தான் -  கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணம் எழுந்ததது .  துணைவியார் பங்கசவல்லி அம்மையாரிடம் தெரிவித்தார். இது பற்றி 1971 பிப்பிரவரி 20 ஆம் நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.


துணைவியார் மறுத்துவிடுகிறார். 


       கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்     

       கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் ( நற்றிணை 110)


 என்றது  இலக்கியக்  குறிக்கோளன்று ; நடப்பு - இருபதாம் நூற்றாண்டிலும்.


அம்மாவிடமிருந்த இந்தச் சமரசமற்ற உறுதியை, பிடிவாதத்தை, கடுமையை நான் நன்குணர்ந்தவன். இதனால் உறவினர் பலரும் அவரிடம் ஒரு பாதுகாப்பான தொலைவைப் பேணிக்கொண்டிருந்தார்கள். 


இத்தகைய சூழல்களில் பிடிவாதமான நிலையெடுத்து நிற்கும் குணம் ஓரளவாவது என்னிடம் இருப்பதற்குக் காரணம் அம்மாதான் என்று எண்ணுகிறேன்.


அப்பாவுக்கு நண்பர் உதவியதை பிப்.22 ஆம் நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.

நிருவாகம் : அதிகாரப் பொழுதுபோக்கும் வக்கிரமும் (பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)

 நிருவாகம் : அதிகாரப் பொழுதுபோக்கும் வக்கிரமும்

(பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)


ஆசிரியர் x நிருவாகம் → பணி நீக்கம்

சம்பளப் பிடித்தம் என்னும் அச்சுறுத்தல் 

- ஆகிய இரண்டு இடுகைகளில் , 31.01.1969 ஆம் நாளிட்ட  சம்பளப் பிடித்தம் பற்றிய கடித நகலைத் தந்து பாலசுந்தரனாருக்கு நிருவாகம் இடையூறு செய்தது பற்றி முகநூலில் எழுதியிருந்தேன்  (31 Jul 2023)  . தொடர்ந்தும் ஏதேனும் வாய்ப்புகள் தேடி இடையூறிழைத்து - முதல்வர் கு.சிவமணி அவர்களைப் போல் - வெளியேற்றி விடுவதே நோக்கம். பாலசுந்தரனாரும் அந்த மன நிலைக்கு வந்து விட்டதை இந்த நாட்குறிப்புகள் புலப்படுத்துகின்றன.






1970 மார்ச் 23 : வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முன்னனுமதி பெற வேண்டும் என்று விதித்து, இது, ஒரு முறைமைக்கான ஏற்பாடுதான் , போய் வந்தபின் தெரிவித்தால் கூடப்  போதும்  என்று சொல்லி [ இது அண்டியவர்களுக்கானது], அப்புறம் முன்னதாகத்  தெரிவிக்காமல் போனது பற்றி எச்சரிக்கும் இத்தகு நடைமுறைகள் நிருவாகத்தின் அதிகாரப் பொழுதுபோக்கு.


1970 அக்டோபர் 12 :தனிப்பாடல் திரட்டு, சம காலத்தில் விவாதத்திற்குரிய எதுவும் இல்லாத ஒரு தொகை நூல்;  சரசுவதி மகால்  வெளியீடு. இத்தகு பதிப்புப் பணியில் ஓர் ஆசிரியர் ஈடுபடுவது அவர் பணியாற்றும் நிறுவனத்தின் மதிப்பைக் கூட்டும். ஆனால் நிருவாகங்கள் அதிகாரப் பொழுதுபோக்கில் தொடங்கி வக்கிர முடிவுகளை எடுக்கும் எல்லைவரை போவதை இன்றும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.


1970 டிசம்பர் 18 : ஒரு வக்கிரம். முதல்வர் கு.சிவமணி அவர்களுடன் நிருவாகம் முரண்பட்டது. அவரும் வெளியேறிவிட்டார். ஆனால் கரந்தைத் தமிழ்ச் சங்க/ புலவர் கல்லூரி நிருவாகம் திரு .கு.சிவமணி அவர்களின் தந்தையார் என்னும் ஒரே காரணத்திற்காகத்  திரு. சிவ.குப்புசாமி பிள்ளையவர்கள் மறைந்த போது கூட உரிய மரியாதை செய்யாமல் புறக்கணித்தது வக்கிரத்தின் உச்சம். 


இத்தனைக்கும் திரு. சிவ.குப்புசாமி பிள்ளையவர்கள் தமிழவேள் உமா மகேசுவரனாராலேயே மதிக்கப்பட்டவர்; வெள்ளிவிழா மலரில் படம் இடம்பெறுமளவு முதன்மை பெற்றவர் ; ஓய்வுக்குப் பின்னும் சங்கப் பணிகளில் ஈடுபட்டவர். தமிழ்ப் பொழிலில் குன்றக் கூறலாக  ஒரு குறிப்பு இடம் பெற்றதே நிருவாகத்தின் ' பெருந் ' தன்மை என்று கொள்ளவேண்டியதுதான். (நானும் என் பங்கிற்குக் கல்லூரி நிருவாகத்தின் வக்கிரத்தால் துன்புற்றவன்தான்!)

"தேவாரத் திருமுறைகளுக்கு ஒரு நல்ல பதிப்பு"பாலசுந்தரனார் நாட்குறிப்பு




 " தேவாரத் திருமுறைகளுக்கு ஒரு நல்ல பதிப்பு"-மூதறிஞர் நீ.கந்தசாமிபிள்ளை

______________________________________________________________________________________


பாவலரேறு ச.பாலசுந்தரனார் நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தை 1970 இலிருந்து  தொடங்கியிருக்கவேண்டும். 1970 முதல் 2003 வரை அவர் எழுதியுள்ள நாட்குறிப்பேடுகள் - இடையில் ஓரிரு ஆண்டு விடுபாடுகளுடன் - கிடைத்துள்ளன.


அவர் நாட்குறிப்பேடுகளை விலை கொடுத்து வாங்கியதில்லை ;  அன்பளிப்பாகக் கிடைத்தவற்றில் எழுதியுள்ளார்.  முந்தைய ஆண்டின் ஏட்டில் அச்சிடப்பட்ட நாள் முதலியவற்றைத் திருத்தியும் , தாமே தைத்த ஏட்டில் நாளிட்டும் எழுதியுள்ளார். 


கல்லூரி நிகழ்வுகள், ஊதியம், வங்கி இருப்பு , பணம் எடுத்தல் போடுதல், கொடுக்கல் வாங்கல்கள், நிகழ்ச்சிகளுக்குச் செல்லல், மதிப்பூதியம் , நூலாக்கத்திற்கான புற அகத் தூண்டல்கள், நூல் அச்சாக்கம்,  நூல்களை விற்பனைக்கு அனுப்புதல், நூலக ஆணை,வரவு செலவு , மாதாந்திர அன்றாடச் செலவுகள் , இவற்றால் நேரும் இன்ப துன்ப மன நிலைகள் , சந்திப்புகள் , உடல் நலக்குறைவு , ஆங்காங்கு இவை சார்ந்த கருத்துகள் முதலியன இடம் பெற்றுள்ளன. 


ஒரு கட்டத்தில் தொடர்ந்த குருதிப் போக்கும், பிற்காலத்திய தலை சுற்றலும் பற்றி அவ்வக் கட்டத்தில் மீண்டும் மீண்டும் எழுதியுள்ளார்.


சில நாள்களில் , "எங்கும் செல்லவில்லை "  என்று மட்டுமே இருக்கும் ; ஓரிரு சொற்களில் காரணத்தை எழுதுவதுமுண்டு. சில நாள்கள் எதுவும் எழுதாமல் விடுவது முண்டு.


ஒரு கட்டத்தில் துணிகளைத் துவைத்துப் பெட்டி போட்டது பற்றி அவ்வப்போது எழுதியுள்ளார்.¹


சலிப்பூட்டும் குறிப்புகளோடும் ,இடையிடையே சில போது , குடும்பம், உறவு, நட்பு , தமிழ்ப் புலமையுலகம் முதலியன பற்றிய நெருடலான குறிப்புகளோடும் அவர் எழுதியவற்றை  அப்படியே  இப்போது வெளிப்படுத்த இயலாது; கூடாது ( அவர் இருந்திருந்தால் நானே கூட இவற்றில் தலையிட்டிருக்கமாட்டேன்).


வெளிப்படுத்த வாய்த்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்து - காலவரிசை கருதாமல் - அவ்வப்போது பகிர்ந்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்.


1970 பிப்பிரவரி 02 ஆம் நாள், " மாலை N.K. அவர்களிடம் சென்றிருந்தேன்... தேவாரத் திருமுறைகளுக்கு ஒரு நல்ல பதிப்பு அடையாறு நூல் நிலையத்திற்காகச் செய்ய வேண்டுமென்றார் " என்று எழுதியுள்ளார் ச. பா.

தொடர்ந்து ,  பிப்பிரவரி 13 அன்று நீ.க. 26 பதிகங்களைப் பிரித்தெழுதச் சொன்னதாகவும் , மார்ச் 03 அன்று பிரித்தெழுதிய தாள்களை ஒப்படைத்ததாகவும் எழுதியுள்ளார். ஆனால் இப்பதிப்பு வந்ததாகத் தெரியவில்லை. கையெழுத்துப் படிகள் ஏதும் அடையாறு ( பிரம்ம ஞான சபை ?) நூலகத்தில் இருக்குமா? ²


-----------------------------------------------------


1.   துணிகளை வாரிப்போட்டு - சோப்பும் வீணாகாமல் துணியும் நோகாமல் மாங்கு மாங்கென்று துவைத்து , காயப்போடும் போதே முடிந்த வரை சுருக்கம் நீக்கிவிடுவார்.


பெட்டி போடுவதற்குச் சடங்கு போன்ற வரிசையான செயல்முறைகள் உண்டு. முதலில் தரையில் ஒரு கெட்டிச் சமுக்காளம் பரப்பி அதன்மேல்  தூய விரிப்பைச் சுருக்கமில்லாமல் மெத்தென்று விரித்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரையும் ஒரு துணி முடிச்சையும் ஆயத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பெட்டி போடப்படும்  துணியில் சுருக்கம் இருந்தால் நீரைத் துணியில் நனைத்து நீவவேண்டியிருக்கும். இருப்புச் சலவைப்பெட்டியில் கரி நிரப்பி எரியூட்டிச் சூடேற்ற வேண்டும்.  சலவைப்பெட்டியின் வழவழப்பான கீழ்ப்பக்கத்தைத் தரையில் வைக்கக் கூடாது; அதற்கென்று உள்ள மனையில்தான் வைக்க வேண்டும். அவ்வப்போது கரியில் பூக்கும் சாம்பலை விசிறிவிட வேண்டும்.தீப்பொறி படாதவாறு காற்றுக்கு எதிர்த்திசையில் அமர வேண்டும்.  பொறி விழாதவாறு துணிகளையும் அத்திசையில் வைத்துக் கொள்ள வேண்டும். சலவைப்பெட்டியின் எடை ஒரு கிலோவுக்குக் குறையாது. குத்துக் காலிட்டுத் தரையில் அமர்ந்து சலவைப் பெட்டியைத்தூக்கித் துணியின்மேல் வைத்துக் குறிப்பிட்ட திசையில் தேய்ப்பதற்குக் குறைந்தபட்சத் தொழில் திறனும், உடல் வன்மையும் வேண்டும். ஏறத்தாழ முப்பது துணிகளை ஒரே அமர்வில் பெட்டிபோட்டுவிடுவார்.அப்புறமும் துணிகளை அடுக்கி வைத்தல் பெட்டியிலுள்ள சாம்பல் பூத்த கரியைக் கொட்டிவிட்டு , பெட்டியில் கீறல் விழாமல் உரிய இடத்தில் வைத்தல் முதலியவற்றையும் நறுவிசாகச் செய்து முடிப்பார். 


அது , ஏறத்தாழ முழு நாளை எடுத்துக் கொள்ளும். எனவேதான் அதனைக் குறிப்பிட்டுள்ளார் என்று தோன்றுகிறது.



2.  பிரஞ்சு இந்தியக் கழகம் வாயிலாக,  பேரறிஞர் பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர் பதிப்பித்து மூன்று பகுதிகளாக (1984, 1985, 1991 ) வெளியிட்ட தேவாரம் - பண்முறைப் பதிப்பு , தேவாரப் பதிப்புகளின் உச்சம். தேவார ஆய்வுத்துணை என்னும் மூன்றாம் பகுதி ஒரு தேவாரக் களஞ்சியம். இப்பதிப்புக்கு நீ. க. அவர்களின் திருவாசகப் பதிப்பை முன்னோடி எனலாம் ]

Sunday, February 4, 2024

' மட்டையாட்ட மான்மியம் '

 ' மட்டையாட்ட மான்மியம் ' 



 2015ஆம் ஆண்டு டென்னிசு விளையாட்டாளர்  மரியா சரபோவா, ' சச்சின் டெண்டுல்கர் யாரென்று தெரியாது ' என்று சொல்லப்போக  அப்போது  அவரைச் சமூக ஊடகங்களில் மாற்றி மாற்றி வறுத்தெடுத்துவிட்டனராம்.  

இப்போது  ' உழவர் போராட்டம் எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை '  என்றும் ' இந்திய இறையாண்மை ' என்றும்  டெண்டுல்கர் கீச்சிட , போராட்ட  ஆதரவு உணர்வுடன்,    அப்போது  ‘சச்சினைத் தெரியாது’ என்று கூறிய மரியா சரபோவாவிடம் மன்னிப்புக் கேட்டுச் சரமாரியாகக் கீச்சிடுகிறார்களாம். இது செய்தி.


இனிக் கதை !


நாங்கள் தஞ்சாவூர் வடக்கு வீதியில் வசித்துவந்தோம். இருபுறமும் நான்கைந்து மணித்துளிகளில் நடந்து சென்றடைய வாய்ப்பாகத் தூய பேதுரு பள்ளி, கலியாண சுந்தரம் பள்ளி ஆகிய புகழ்மிகு பள்ளிகள் இருந்தன. 


ஆனால், ஏறத்தாழ இருபது மணித்துளிகளுக்குக் குறையாமல் நடந்து செல்லும் தொலைவிலிருந்த , நகரம் சிற்றூர் இரண்டுக்கும் இடைப்பட்ட, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் உமாமகேசுவரர் பள்ளியில் நான் படித்தேன். சங்கம் நடத்திய புலவர் கல்லூரியில் பணியாற்றியதால் அப்பா என்னையும் உடன் அழைத்துச் சென்றார்கள்.


எனக்குப் பள்ளி நண்பர்கள் வேறு; தெரு நண்பர்கள் வேறு. 


உமாமகேசுவரர் பள்ளியில் அப்போது சாஃப்ட் பால் அல்லது பேஸ்பால் எனப்படும் குண்டாந்தடி ஆட்டத்தில் வல்ல உடற்பயிற்சி ஆசிரியர் இருந்ததால் அதுவே பயிற்றுவிக்கப்பட்டது.


நான் வேடிக்கை பார்ப்பேன். விளையாடியதில்லை.


தூய பேதுரு பள்ளி விளையாட்டுத் திடலில் இக்பால் அரங்கில் , ஆண்டுதோறும் ஒருவார காலத்திற்குக் குறையாமல்  நடக்கும் அனைத்திந்திய அளவிலான கூடைப்பந்துப் போட்டிகளைத் தவறாமல் பார்ப்பேன்.  கூடைப்பந்தில் ஆர்வமிக்க பார்வையாளர்கள் கணிசமாக வருவார்கள். ஆனால் ,தெரு நண்பர் எவருக்கும் அதில் ஆர்வமில்லை. நான் தனியாகத்தான் செல்வேன்.பெரிய அளவுக்கு விதிகளோ ஆட்ட நுணுக்கங்களோ தெரியாவிட்டாலும் அதன் விறுவிறுப்பு என்னை ஈர்த்தது. 


கோலிக்குண்டு , கிட்டிப்புள் , பம்பரம் (தலையாரி என்றொரு ஆட்டம் விறுவிறுப்பானது) முதலியவற்றில் தெரு நண்பர்களோடு நானும் விளையாடுவேன் ; குறிப்பாகக் கிட்டிப்புள் நன்றாக ஆடுவேன். கிட்டிப்புள்ளில் இருந்துதான் கிரிக்கெட் வந்தது என்று கலைச்சொல்லறியாக் காலத்திலேயே பண்பாட்டாராய்ச்சிப் பகடி செய்திருக்கிறேன்.


அப்போது, தெருவில் சந்து பொந்துகளில் எல்லாம் சிறுவர்கள் தாமே அமைத்துக் கொண்ட  சிறுசிறு மட்டையாட்டக் குழுக்கள்  இருக்கும். ஒவ்வொரு குழுவுக்கும் நீள் வடிவ ஓவிய ஏடு  ஆட்டப் பதிவேடாக இருக்கும் . குழுக்களுக்குள் கையெழுத்துப் பந்தயம்(மேட்ச்)நடக்கும். ஓட்டங்களும் விக்கெட்டுகளும் இன்ன பிறவும் முறையாகப் பதிவாகும். இரு அணியின் வெற்றி தோல்விகள் பதிவாகும். ஆட்டம் உணர்ச்சிகரமாக இருக்கும். சண்டை சச்சரவுகள் சிலவேளை அடிதடியாகக் கூட முற்றிவிடும்.


தெருக் குழுக்களில் வேறுபாடற்றுச் சிறுவர்கள் உறுப்பினர்களாக இருந்தார்கள். என்றாலும் என் விருப்பின்மைக்கு விறுவிறுப்பின்மை மட்டுமல்ல , மட்டையாட்டம் மேட்டுக்குடி/மேற் சாதிச் சார்புடையது என்று உள்ளத்தில் பதிந்து போனதே  காரணம்.

அலட்டுவார்கள். 


ஆனால் , தெருக் குழுக்களின் பந்தயங்களில் பார்வையாளனாக மணிக்கணக்கில் கலந்துகொள்வேன்.  அப்போது , திரைப்படச் செய்திக்காட்சியில் சில மணித்துளிகள் பெரிய ஆட்டத்தின் முனைப்பான காட்சிகளைக் காண்பது தவிர , ஏடுகளில் வரும் படங்களும் வானொலி நேர்முக வருணனைகளும்தாம் வடிகால்கள். 


மட்டையடி, பந்துபிடி முதலியன இயக்க விறுவிறுப்புடன் காட்சி வடிவில் ஏடுகளில்  இடம்பெறும். அவற்றைக் கத்தரித்து விவரங்களுடன் ஏட்டில் ஒட்டி மட்டையடிப் படத்தொகுப்புகளாகப் பலரும் வைத்திருப்பார்கள். எம் தெருச் சிறுவர்கள் அத்தகு நிலைக் காட்சிகளை உளங்கொண்டு , பந்தை அடித்தல் பிடித்தல் முதலியவற்றின்போது சில நொடிகள் நிலைக்காட்சியில் உறைந்திருப்பார்கள்.சிறுவர்களின் பாவனைகள் - அவர்களையொத்தவனே ஆனாலும் - எனக்குக் கேலிக்கூத்தாய் நகை நல்கும் ; கிண்டலடித்துக்கொண்டிருப்பேன். அதுஎன் இரசனை. மற்றபடி அந்த ஆட்டம் பற்றித்  தானாக வந்து சேர்ந்ததற்கு மேல்  நான் ஏதும் தெரிந்துகொள்ள முயலவில்லை. (என் இரசனை முறையால் நண்பர்கள் எரிச்சலுறுவார்கள் . வாயாலாகாதவர்கள் கை ஓங்குவதும் உண்டு. எனினும்  என்னைத் தவிர்க்க மாட்டார்கள்) இன்றளவும் தொலைக்காட்சியில் போகிறபோக்கில் கூட அதைப் பார்ப்பதில்லை.


அந்தக் காலத்தில் வானொலிப் பெட்டியில் நேர்முக வருணனை கேட்காத மட்டையாட்டப் பித்தர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம். 


கல்லூரி மாணவர் சிலர் கையடக்க வானொலியை ஒய்யென வருணனை  இரையக் காதில் வைத்துக்கொண்டு போவார்கள். 'முற்போக்காளர்' கள் சிலர் கூட இதற்கு விதிவிலக்கில்லை. கையடக்க வானொலி அரிதான காலத்தில் ,

பித்து இல்லையென்றாலும் கொஞ்சம் தொற்று உள்ளவர்கள் ஓட்ட எண்ணிக்கை , விக்கெட் வீழ்ச்சி பற்றியெல்லாம் ' அவல் மெல்லு 'மளவுக்காவது கேட்டறிவார்கள். அதுவும் தெரியாதவர்கள்  

நவீன இந்திய வாழ்க்கைக்கே இலாயக்கற்றவர்களாகிவிடுவார்களே ! இந்த மனநிலையிலிருந்துதான் மரியா சரபோவாவை அன்று பார்த்திருக்கிறார்கள்.


கையடக்க வானொலிக் கால்நடைகளைக் கண்டால் பற்றிக்கொண்டு வரும். கல்லூரிக் காலத்தில் ,கையடக்கக் குறள் நூல் எனக்குக் கைகொடுத்தது. அதைக் கைக்குட்டையில் சுற்றிக் காதருகே பிடித்துக்கொண்டு உற்றுக் கேட்பது போன்ற பாவனையில் ( மட்டையடி வருணனை கேட்பதற்கென்றே வியப்பை, அதிர்ச்சியை இன்ன பிறவற்றைக் காட்டும் ஒரு பாவனை உண்டு)  நடப்பேன். பின்தொடர்வோர்   சிலர் பலராகி " ஃபிரண்டு ரன் எத்தன? " என்பார்கள் . எதுவும் சொல்லாமல் கைக்குட்டையைப் பிரித்துக் குறளைப் பிற புத்தகங்களோடு சேர்த்துக்கொண்டு நடப்பேன். வக்கிரம் !


ஊடகங்களில் என்னை மீறிப் புலன்களில் படும் பட்டோடி நவாப் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை பெயரளவில் மட்டுமே சிலரை அறிவேன். இப்போது தமிழ்நாட்டு நடராசனை மேட்டிமை ஊடகங்கள் கையாளும் முறை பற்றி மட்டுமே கருத்துச் செலுத்தினேன். மற்றபடி மிக மிக மிகப் பெரும்பாலான மட்டையாடுநரை இன்றளவும் எனக்குத் தெரியவே தெரியாது.


வாணாள் வீணாள் கழித்துவிட்டேன். அகவை அறுபத்துமூன்று கடந்துவிட்டது.

Monday, October 2, 2023

வரலாற்று நகைமுரண்*

 


 “சங்க நூல்களெல்லாம் புத்தசமண சமயச் சார்புடையன ; 

   அவைகளைப் பயிலுதல் கூடாது"

நமது சமாஜம் சங்க இலக்கியத்தை வெளியிடுதல் பொருத்தமாகுமா என்றுசிலர் ஐயுறுதல் கூடும். “சங்க நூல்களெல்லாம் புத்தசமண சமயச் சார்புடையன ;  அவை களைப் பயிலுதல் கூடாது" என்று எனதுஇளமைப்பருவத்திற் சில சிவனடியார்கள் கூறியதுண்டு. இக்காலத்தின் நல் வினைப் பயனாக இக்கொள்கை மறைந்துவிட்டது.

என்று சமாஜக் சைவசித்தாந்த மகா சமாஜக் காரியதரிசி எழுதியிருப்பினும் அக் கொள்கை மறைந்துவிடாமல்  எச்ச சொச்சம் இருந்ததை அவர் தொடர்ந்து எழுதியுள்ள ஒன்றரைப் பக்கம் உணர்த்துகிறது.


நம்பியாண்டார்நம்பிகள்  , திருஞானசம்பந்தர்,சேக்கிழார் ஆகியோர் குறிப்புகள், சிவபெருமான் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகள், திருவிளையாடற் புராணக் கதை , சிவஞான முனிவர் தம் உரைகளுள் சங்கப் பாடல்களை எடுத்தாண்டமை என அடுக்கடுக்கான சான்றுகளால்  சங்க இலக்கியங்கள் சைவத்திற்கு முரணானவையல்ல என்று நிறுவ முற்படுகிறார்¹.


அச்சாக்கக் காலத்தில் சான்றோர் செய்யுள் மீட்பு   சி.வை.தாமோதரம்பிள்ளையின் கலித்தொகைப் பதிப்பில் தொடங்கியது(1887). மொழியாராய்ச்சியில் பாய்ந்த புதுவெளிச்சம் பழந்தமிழ்ச் சான்றோர் செய்யுள்களை மீட்கத் தூண்டியது.அந்த உணர்வெழுச்சியைத் தாமோதரனாரின் வீரசோழிய,கலித்தொகைப் பதிப்புரைகளில் காணலாம்².அதற்கு அரை நூற்றாண்டுக்குப் பின்னும் , பாட்டும் தொகையும் முழுவதும் தனித்தனி நூல்களாக வெளிவந்தபின்னும், அவை சைவத்திற்கு முரணானவை என்னும்  கடுஞ்சைவக்  கொள்கை எஞ்சி நின்றது .


ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம்.


பொதுக் காலம் 12 ஆம் நூற்றாண்டு தொடங்கிச் சான்றோர் செய்யுள்களுக்கும் தொல்காப்பியத்திற்குமான  பழையவுரைகள் கிடைக்கின்றன. 

இடைக்காலத்தில் சங்கத் தமிழின் இனிமை, தெளிவு, சுருக்கம், நேர்மை முதலிய பண்புகள் நீங்கி , வடமொழிச் சொற்களும் காவிய மரபுகளும் புகுந்தன.இவற்றால் பல நல்லியல்புகள் வந்தமைந்தாலும் தீமைகளாக அலங்காரங்களும் ஆடம்பரங்களும் ஓங்கி, தமிழுக்கு இயற்கையாய் அமைந்திருந்த ஆற்றல் சிறுகலாயிற்று. கல்வியில் தலைசிறந்தோர் சிலர் அந்நல்லியல்புகள் தமிழில் மீண்டும் தழைக்க வேண்டுமென்று கருதி  உழைத்துவந்தனர். சங்கத் தமிழுக்கு மீட்சியியக்கம் (return to classicism) நிகழ்வதாயிற்று. இம்மீட்சி யியக்கத்திற்கு ஓர் அறிகுறியாக, சங்க இலக்கியங்களுக்கும் அவற்றோடொத்த பெருமையுடைய குறள்போன்ற பெருநூல்களுக்கும் செவ்விய உரைகள் எழுதப்பட்டன'³

என உரைகளின் எழுச்சியை ஓர் இலக்கியப் போக்காகக் கருதுகிறார் வையாபுரிப்பிள்ளை.


களப்பிரர் ஒடுக்குமுறையாலும் பத்தி இயக்கத்தாலும் பின்னடைவுற்ற சங்கப் பண்பாடும் இலக்கியமும் , நல்லவேளை சில குடும்பங்களில் உயிர்ப்புடன் தொடர்ந்தன. தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்கள் தலைமுறை தலைமுறையாக வாய்மொழி வடிவில் கடந்து வந்திருக்கலாம். சில காலத்திற்குப்பின் எழுத்து வடிவிலான நயம் பாராட்டலும் உரைகளும் தீவிரமாக உணரப்பட்ட நிலையில் 

இடைக்காலத்தில் அங்குமிங்குமாகத் தோன்றிய உரையாசிரியர்கள் சிலரே பழந்தமிழ் மரபின் மீட்பர்களாயினர். அவர்கள் இல்லாமற்போயிருந்தால் ஒட்டுமொத்தப் பழந்தமிழ் இலக்கியங்களும் மறைந்திருக்கலாம் அல்லது முற்றும் பொருள் விளங்காமல் போயிருக்கலாம் என்று வரலாற்றுப் பின்னணியில் வைத்து விளக்க முற்படுகிறார் கோ.சுந்தரமூர்த்தி⁴.

நூல்களைப் பேணுவதில் வாய்மொழி மரபிற்கும் கற்றல் கற்பித்தலில் மனப்பாடத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்கிருப்பினும் , தமிழுக்கேயுரிய வரிவடிவத் தொன்மையை நோக்க⁵   ஒரு கட்டத்தில் நூல்களைச்  செம்மை செய்து நிலைப்படுத்திச் சுவடிகளாகப் பேணினர் என்று கொள்ளவேண்டும். இப்போது கிடைக்கும் சான்றோர் செய்யுள்களின் செறிவு அவற்றின் எழுத்தாக்கத்தோடு தொடர்புடையது ; வாய்மொழி வழக்கின் நேர்ப்பதிவன்று⁶.

ஒரு சமூகத்தின் மதிப்பார்ந்த நூல்தொகுதி பேணப்படுவதும் கைமாறுவதுமாகிய  சமூகப்  பின்னணியையும் ஊகிக்கலாம். 



          கண்ணுதற் கடவு ளண்ணலங் குறுமுனி 

         முனைவேன் முருக னெனவிவர் முதலிய 

          திருந்துமொழிப் புலவ ரருந்தமி ழாய்ந்த 

          சங்க மென்னுந் துங்கமலி கடலு 

          ளரிதி னெழுந்த பரிபாட் டமுதம்

           ...                         ...                          ...                 ...

          மிகைபடு பொருளை நகைபடு புன்சொலிற் 

          றந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும்

           ...                         ...                          ...                    ...

           மதியின் றகைப்பு விதியுளி யகற்றி 

           ...                         ...                          ...                 ...


          இப்பாயிரம் ஆழ்வார் திருநகரித் திருமேனி இரத்தின கவிராயர் வம்சத்துத்

          தாயவலந்தீர்த்த கவிராயர் அவர்கள் வீட்டி னும், தேவர்பிரான் கவிராயரவர்கள்

          வீட்டினுமுள்ள திருக்குறட் பரிமேலழகர் உரைப்பிரதிகண் முகத்திருந்தது.

          இச்செய்யுளின் கீழ்ப் "பரிபாடற்கு உரையெழுதினான் பரிமேலழகரையன்

          என்பது  இதனான் உணர்க" என்றும் எழுதப்பட்டுள்ளது.

          இவ்வுரைச்சிறப்புப் பாயிரத்தால், கந்தியாரென்பவர் இப்பரி பாடலுட்டம்

           சொற்களை இடைமடுத்துப் பிழைபடுத்தாரென்பதும், இஃது எழுதியோராற்

           பெரிதும் பாடம் பிழைத்தலின் உண்மை நிலை காண்டல் அரிதாயிருந்த

           தென்பதும், இதனைப்படிப்போரும் ஒரெழு த்தினை மற்றோரெழுத்தாகக்

            கருதிப் பிழைபடப் படித்துப்போந்தா ரென்பதும், அக்காலத்துப் பரிமேலழகர்,

              கந்தியாரது புன்சொற் களைகளைந்து எவ்வகைப் பிழைப்பும் போக்கி

              யாவருக்கும் விளங்கச் சுருங்கியதோர் உரை இயற்றியருளினாரென்பதும்

               நன்குணரலாவன ⁷ .

கந்தியார்  என்போர் சைனப் பெண் துறவிகள் ; கல்வியாளர்கள் ⁸.  சைன மரபினர்க்கும் சான்றோர் செய்யுளுக்குமுள்ள தொடர்பையும் அவர்களிடமிருந்து வைதிக மரபினர் மீட்டதையும் இப்பாயிரம் குறிப்பாலுணர்த்துகிறது. 


தமிழ் இலக்கண வரலாற்றில் சைனத்தின் இடம் வினாக்களுக்கு அப்பாற்பட்டது ⁹. தமிழ் வரிவடிவ வரலாற்றில் - பொதுக் காலத்துக்கு முந்தைய தமிழி வரிவடிவம் தொட்டு - சைனருக்குரிய இடம்  நிறுவப்பட்ட ஒன்று ¹⁰. 


திருமாலையும் முருகக் கடவுளையும் போற்றும் பரிபாடலை அவைதிகராய சைனர் பேணியிருப்பாரா ? என்கிற தடை எழுப்பப்படலாம்.சைனர் தம் சமயம் , சமயம் சாரா உலகியற்( Secular)கலை  இரண்டையும் பயிற்றுவித்தனர் ; தம் கல்வி நிலையங்களில் நூலகங்களைப் பேணிவந்தனர் ¹¹. 


சைவம் மேலோங்கியதற்குப்பின் சைவ மடங்களிலும் சைவப் புலமை மரபினர் இல்லங்களிலும் சிந்தாமணி முதலிய வெளிப்படையான சைன இலக்கிய ஏடுகள் கிடைத்ததை  நோக்கச் சைவரும் பரசமய நூல்களைப் பயிலாவிடினும் பேணியிருப்பதை உணரமுடிகிறது ¹².


முச்சங்கம் என்னும்  தொன்மத்தினூடாகச் சான்றோர் செய்யுள்கள் சைவ மரபிற்குள் கொணரப் படுகின்றன.அவை அதற்கு முன் சைன மரபினரால் பேணப்பட்டதற்கு[பரபக்க]ச்   சான்றாகக் கிடைப்பது பரிபாடல் உரைச் சிறப்புப் பாயிரம்.


தொன்மமெல்லாம் புனைந்து தம்வயமாக்கிக்கொண்டவர்களே ,  பின்னொரு காலத்தில் கைவிட்டதுதான் வரலாற்று நகை முரண் .15 ஆம் நூற்றாண்டு தொட்டுச் சைவச் சார்பற்றவற்றின் பட்டியலில் பாட்டும் தொகையுமாகிய பழந்தமிழ்நூல்களும் சேர்க்கப்பட்டன. அவற்றின் பயிற்சி அற்றுப்போகாவிடினும் குன்றியது¹³ ; உரைமரபு இடையீடுற்றது.   அக்காலம் முதல் சித்தாந்தச் சாத்திர உரை மரபு பரவலாயிற்று. ¹⁴


19 – 20 ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் பழந்தமிழ் நூல்கள்  வேறொரு தளத்தில் எழுச்சியுற்றபோது , இடைக்காலக் கடுஞ்சைவ இறுக்கத்திற்கு எதிராக ஒரு காலத்தில் அவற்றைத் தம்வயப்படுத்தும் பொருட்டுச் சைவர் புனைந்த சங்கத் தொன்மத்தைத்  தாமே மீட்டுயிர்ப்பிக்கும் நெருக்கடிக்குத் தாராளச் சைவர்  தள்ளப்பட்டது வரலாற்றின் நகைமுரண்.


-----------------------------------------------


1.ம.பாலசுப்பிரமணியன் ,  ' முகவுரை 'சங்க இலக்கியம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும், சைவசித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1940 , பக்.xvii - xviii.


2.சி.வை.தாமோதரம் பிள்ளை,  தாமோதரம், குமரன் பப்பிளிஷர்ஸ்,சென்னை, 2004.


3. எஸ். வையாபுரிப் பிள்ளை, தமிழ்ச் சுடர் மணிகள்,பாரி நிலையம் , சென்னை, 1959,பக்.197- 98.


4. The Sangam culture and literature went to the background following the Kalabhra suppression and the upsurge of the Bhakti movement. But fortunately the study of these neglected Sangam works should have been continued and alive in some Tamil families. These families should have patiently waited for the revival of the Sangam tradition. The appreciation and the study of the Sangam works including Tolkäppiyam might have been passed on to the next generation most probably by oral tradition. After sometime the need for a written appreciation and explanation should have been very acutely felt by those interested in the study of these works. To fulfil the most urgently and vehemently needed purpose some commentators appeared here and there in Tamilnadu in the mediaeval ages and they were the saviours of ancient Tamil tradition. Without them the entire block of ancient Tamil literature would have either been completely lost or become wholly unintelligible.

G. Sundaramoorthy, Early Literary Theories In Tamil(in comparison with Sanskrit theories),

Sarvodaya Ilakkiya Pannai, Madurai,1974.


5. ஒன்பது காரணங்களை வரிசைப்படுத்தி அசோகன் பிராமியிலிருந்து வேறுபடும்  தமிழி வடிவங்களின் தனித்தன்மை  அசோகர் காலத்திற்கு முன்பே பாகத மொழியாளருடன் தமிழகம் கொண்ட தொடர்பு , அசோகர் காலத்திற்கு முந்தைய, பொ.கா. 6 ஆம் நூற்றாண்டு அளவிலான, தமிழிப் பழமை  ஆகியன பற்றி விளக்கியுள்ளார் கா.ராஜன் .

 K.Rajan , Early Writing System - A Journey from Graffiti to Brāhmī , Panda Nadu Centre for

    Historical Research , Madurai, 2015 , p.397.


6. சான்றோர் செய்யுள்களாக இப்போது கிடைக்கும் பாட்டும் தொகையும் வாய்மொழி வாய்பாட்டுக் கூறுகள் அடங்கிய புலமைப் படைப்புகளாகும். இப்படைப்புகள் முந்தைய வாய்மொழிப் பாடல் மரபில் நினைவிற் பேணப்பட்டவற்றின் மறு ஆக்கங்கள் என்று கொள்ள வாய்ப்புண்டு - பா.மதிவாணன், தொல்காப்பியம் பால. பாடம் , அய்யா நிலையம், தஞ்சாவூர், 2014, ப.89.


 7. பத்திராசிரியர் ரா. ராகவையங்கார் , செந்தமிழ் , சுபகிருது ௵   மார்கழி௴ (1902 டிசம்பர்), பக். ௮௮ - ௮௯.


8.தமிழிக் கற்பொறிப்புப் பற்றிய குறிப்புரைப் பகுதி : 

b. kanti 'Jaina nun'.


cf. LT karanta pal anaiya kanti 'the Jaina nun (pure) as fresh milk (Civaka 2649), Kantiyar (a Jaina nun and poetess) who is said to have interpolated as many as 445 verses in Civakacintamani (Note by U.Ve. Swaminathaiyar, Civaka 1089, 2649 & 3143, 7th edn. reprint). cf. itai matutta kanti tan pilaippum 'the errors of Kanti who interpolated (some verses)' (Pari. Urai. Payiram: 9-10); kavunti atikal 'N. of a senior Jaina nun' (Cilap.11:166); kantiyai-k-käninum 'as soon as they see a kanti (Jaina nun)' (Nilakēci:323); kavunti 'Jaina nun' (Tiva.); kanti, kaunti 'id'. (Cuta.). The term ganti (variant kanti, khanti) occurs in early Kannada inscriptions as an affix to the names of Jaina nuns (A.N. Narasimhia 1941: Nos. 43 & 45). The etymology of the word is obscure. (ibid., Appendix V, and P.B. Desai 1957: p. 85, note, for different interpretations.) However, the most likely derivation is from gamthi (AMg.) one who composes a literary work (PSM). cf. ganthika (pali) hard-studying (PED) (Skt.). grantha 'book', granthin 'one who reads books, well-read' (MW). The occurrence of kanti (< Ka. ganti) in this inscription indicates Kannada influence. 

- Iravatham Mahadevan, Early Tamil Epigraphy From the Earliest Times to the Sixth Century C.E.( Volume I), Central Institute of Classical Tamil, Chennai, 2014, P.629.

9.தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், சமணத் தமிழ் இலக்கிய வரலாறு, கலைக்கதிர் வெளியீடு, கோவை, 1961.


10.Iravatham Mahadevan, Early Tamil Epigraphy From the Earliest Times to the Sixth Century C.E.( Volume I), Central Institute of Classical Tamil, Chennai, 2014, PP.163 - 173.


11. Debendra Chandra Das Gupta, Jaina System of Education , Bhārathi Mahāvidyālaya , Calcutta,

1942, P.3.


12. சீவகசிந்தாமணிப் பதிப்பில் சிந்தாமணி நூற்சுவடிக் கட்டுகள் இரண்டைத் தருமபுர ஆதீனத் தலைவரும் ஒன்றைத் திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையும் தந்ததாகக் குறித்துள்ளார் உ.வே.சா. - உ.வே.சாமிநாதையர் (பதி.), திருத்தக்க தேவரியற்றிய சீவகசிந்தாமணி மூலமும் மதுரையாசிரியர் - பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும், ஸ்ரீ தியாகராச விலாச வெளியீடு, ஹேவிளம்பி ௵ சித்திரை ௴, ப.௧௨.


13.  மாணிக்கவாசகர் அறிவால் சிவனே என்பது திண்ணம். அன்றியும் அழகிய திருச்சிற்றம்பலமுடையார் அவர் வாக்கில் கலந்திரந்து அருமைத் திருக்கையாலெழுதினார். அப்பெருமையை நோக்காது சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப்பாட்டு, கொங்குவேள்மாக்கதை முதலியவற்றோடு சேர்த்துச் செய்யுட்களோடு ஒன்றாக்குவர். அங்ஙனமுமமையாது, இலக்கணமாவது தொல்காப்பியம் ஒன்றுமே ,செய்யுளாவது திருவள்ளுவர் ஒன்றுமே,  இவ்விரண்டு நீங்கலான இலக்கண இலக்கியமெல்லாம் ஒன்றற்கு ஒன்று பெருமை சிறுமை இணை என்று கொள்வார் என்பது தோன்ற இம்முறை வைத்து அடையைப் பொதுவாக்கினாம். அவர் அதுமட்டோ இறையனார் அகப்பொருள் முதலான இலக்கணங்களையும். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் ,பட்டினத்துப்பிள்ளையார்பாடல் முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணாது, நன்னூல், சின்னூல், அகப்பொருள், காரிகை, அலங்காரம் முதலிய இலக்கணங்களையும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, இராமன் கதை, நளன் கதை அரிச்சந்திரன் கதை முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணி வாணாள் வீணாள் கழிப்பர். 

- ஸ்ரீ சுவாமிநாத தேசிகர் (பதி.: ஆறுமுக நாவலர்) , இலக்கணக் கொத்து மூலமும் உரையும் , வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை , விகிர்தி௵ பங்குனி௴, (பாயிரவியல் - நூற்பா எண். 7 உரைப்பகுதி)ப.௧௪.


14.Lehmann,Thomas , ' A Survey of Classical Tamil Commentary Literature ',Between Preservation and Recreation:Tamil Traditions of Commentary, French Institute,Pondicherry,2009 ,pp.66 - 67 




*சாகித்திய அகாதெமியும் திருச்சி,தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய புலியூர்க்கேசிகன் நூற்றாண்டுக் கருத்தரங்க (26 & 27.09. 2023) நிறைவுரைக்காக எழுதிய இப்பகுதியின் மற்றொன்று விரித்தல் மிகுதி கருதி இதனைத் தவிர்த்துவிட்டேன்.


Sunday, September 24, 2023

பாடம்

 பாடம் 1 : மனப்பாடம்

📚📚📚📚📚📚📚📚📚


மனப்பாடம் என்பது  ஒரு சொல் நீர்மைத்தாக -ஒற்றைச் சொல் போல - வழங்குகிறது.

ஆனால் அது மனம், பாடம் என்னும் இருசொற்களால் அமைந்த தொடர் என்பது வெளிப்படை. 


தற்காலத் தமிழ் அகராதி (க்ரியா) பாடம் என்பதற்குத் தரும் பொருள் :


பாடம்1 பெ. 1: (மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும்) குறிப்பிட்ட ஒரு துறையின் அறிவைத் தருவதாக அமையும் பிரிவு/மேற்குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த நூலின் பகுதி; subject/lesson (in a subject).  


 2: (காவியம், நாடகம், செய்யுள் போன்றவற்றின்) மூலத்தின் தரப்படுத்தப்பட்ட எழுத்து வடிவம்; (written) text (of a literary composition).  

 

 3: குறிப்பிட்ட ஒன்றை உணர்த்துவதாக அமையும் அனுபவம் அல்லது உண்மை; படிப்பினை; lesson (that one learns by experience or by observation). 

 

 4: மனப்பாடம்; text committed to memory. 

 

பாடம்2 பெ. 1: (மனித உடல், விலங்கின் தோல், புகையிலை முதலியவை) கெட்டுப் போகாமல் நீண்ட நாள் நிலைக்கும்படி மேற்கொள்ளப்படும் முறை; (of body) embalming; (of leather, tobacco, etc.) tanning, curing, etc. 


கற்பிக்கப்படும்/ நடத்தப்படும்  பாடம் (1.1) என்பதே பரவலான வழக்கு.

தரப்படுத்தப்பட்ட எழுத்து வடிவம் (1.2) என்பது நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிற - புலமையுலகம் சார்ந்த வழக்கு .


ஒன்றை உணர்த்தும் அனுபவம் (1.3) என்னும் பொருள் நடத்தப்படும் பாடத்தோடு (1.1) தொடர்புடையது.மனப்பாடம் என்பதன் சுருக்க வடிவமாகவும் (1.4) பாடம் என்னும் சொல் வழங்கிவருகிறது.


ஒன்றை  நிலைத்திருக்குமாறு பொதிந்துவைத்தலாகிய பாடம் செய்தல் (2)என்பது சற்று வேறுபட்டது ; எனினும் ஏட்டிலோ மனத்திலோ ஒன்றைப் பதிந்துவைப்பதோடு தொடர்புடையது.


புரிந்தோ புரியாமலோ மனப்பாடம் செய்தல் என்பதும் கல்வியோடு தொடர்புடையதுதான். சொல் வரலாற்று நோக்கில் அது 

" தரப்படுத்தப்பட்ட எழுத்து வடிவம் (1.2)" என்பதோடு தொடர்புடையது.


காகிதமும் அச்சும் பரவுவதற்கு முந்தைய காலத் தமிழகத்தில் நூல்களும் ஆவணங்களும் கடிதங்களும் மிகப்பெரும்பாலும் பனையோலைச் சுவடிகளில்தான் எழுதிப் பேணப்பட்டன. அவற்றைப் படியெடுத்துப் பரவலாக்குவது எளிதன்று.


திண்ணைப் பள்ளிகளில் தொடக்க நிலையில் மணற்பரப்பில் விரலால் எழுதச் செய்து எழுத்தறிவித்தார்கள். காகிதக் காலத்தில் கூட,  சடங்காக மணலில் எழுதச் செய்வது தொடர்ந்தது. தொடக்க நிலையில் மாணவர்கள் ஆத்திசூடி , கொன்றைவேந்தன் முதலிய எளிய அறநூல்களை மனப்பாடமாக்கிக்கொள்வார்கள் ; உடன் பொருளையும் பயில்வார்கள்.


அடுத்த கட்டத்தில் நிகண்டுகள்  நன்னூல் முதலியவற்றை மனப்பாடமாக்கிக்கொள்வார்கள். 

அதாவது அந்நூற் பாடங்களை (1.2) மனத்தில் ஏற்றிக்கொள்வார்கள். மனம் இங்கு சுவடி போல் இயங்கும். 


சுவடியில் எழுதப்படும் பாடம் சுவடிப்பாடமெனில், மனத்தில் 'எழுத'ப்படும் பாடம் மனப்பாடம்.


கட்புலன் குன்றி மனப்பாடத்தாலேயே புலமை பெற்ற வீரராகவ முதலியார் தம்மை

'ஏடாயிரங்கோடி எழுதாது தன்மனத் தெழுதிப்படித்த விரகன்' என்று குறிப்பிட்டுக்கொண்டார்.


மனப்பாடமாக்கிக் கொண்ட  பின்னர் அவ்வந் நூல் வல்ல ஆசிரியர்களிடம் பொருளறிந்து நூலை உள்வாங்குவார்கள். நிகண்டுகளை மனப்பாடம் செய்வது அகராதிகளை மனப்பாடம் செய்வதுபோல்தான்.


பொருளுணராமல்  சொல்வதை  நாப்பாடம் என்கிறது நாலடியார்.


நாப்பாடம் சொல்லி நயமுணர்வார் போல்செறிக்கும்

தீப்புலவர் சேரார் செறிவுடையார் தீப்புலவன்

கோட்டியுள் குன்றக் குடிபழிக்கும் அல்லாக்கால்

தோள்புடைக் கொள்ளா எழும்(நாலடியார் 32, அவையறிதல்: 2)


பாடம், உரை, நூல் தொகுத்தல் ஆகிய பலவற்றையும் பற்றித் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முதலில் விரிவாகக் கூறும் நூல் நாலடியார்தான். பாடம் பற்றியவற்றை மட்டும் இங்குத் தருகிறேன். இவற்றின் பொருளையும் உரை முதலியன பற்றியும் படித்துணர்ந்துகொள்க.


கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்

பெற்றதாம் பேதைஓர் சூத்திரம் மற்றதனை

நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன்

புல்லறிவு காட்டி விடும்(நாலடியார் 32, அவையறிதல்: 4)


பாடமே ஓதி பயன் தெரிதல் தேற்றாத

மூடர் முனிதக்க சொல்லுங்கால் கேடரும்சீர்

சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்றவரை

ஈன்றாட்கு இறப்பப் பரிந்து(நாலடியார் 32, அவையறிதல்: 6)


தொடர்பு கருதி நன்னூல் பொதுப் பாயிரம் கூறும் செய்திகளையும் பார்த்துவிடுவோம். இப்பொதுப்பாயிரம் ஒரு கல்வி மரபின் பதிவு ; முற்றும் பவணந்தியார் இயற்றியதல்ல. இம்மரபின் காலத்தால் முந்தைய பதிவை இறையனார் களவியலுரை தொட்டுக் காண்பது வழக்கம்; ஆராய வேண்டும்.


பாடம் கருத்தே சொல்வகை சொற்பொருள்

தொகுத்துரை உதாரணம் வினாவிடை விசேடம்

விரிவதிகாரம் துணிவு பயனோடு

ஆசிரிய வசனமென்(று) ஈரேழ் உரையே (நன்னூல், பொதுப் பாயிரம், 21)


நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கறிதல்

பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்

ஆசான் சார்ந்(து)அவை அமைவரக் கேட்டல்

அம்மாண் (பு) உடையோர் தம்மொடு பயிறல்

வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை

கடனாக் கொளினே மடம்நனி இகக்கும்(நன்னூல், பொதுப் பாயிரம், 41)


பழந்தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள் தோன்றியதற்கு இம்மனப்பாடக் கல்வியும் காரணம். நூலைப் பயிற்றும் ஆசிரியர் தக்க பாடத்தைத் தேர்ந்து உரைக்க வேண்டும்.

எனவே பாடம் என்பது உரையின் இலக்கணத்தில் முதலிடம் பிடித்துக்கொண்டது.


தொல்காப்பியம் உரையிலக்கணத்தில் பாடம் பற்றிக் கூறாமை அதன் காலப்பழமை காட்டும். விரிப்பிற் பெருகும்.மற்றொன்று விரித்தலை நிறுத்திக்கொள்கிறேன்.


பண்டைக் கல்விசார்ந்த மனப்பாடம் இன்று தேவையில்லை . ஆனால் வலிந்து முயலாமல்  பொருளுணர்ந்து  இயல்பாக அமையும் மனப்பாடம் நல்லது ; மேன்மேலும் ஆராயவும் நயங்காணவும் துணை செய்வது.


பாடம் 2 : மூலபாடத் திறனாய்வு  திறனாய்வாகுமா ?

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️


நான் மூலபாடத் திறனாய்வியல் பயின்றவனல்லன்.

எஸ்.எம்.கத்ரே என்னும் பெயர் தெரியும். பாடவேறுபாடுகளுடன் கூடிய தமிழ்ப் பதிப்புகளின் அறிமுகமுண்டு. தமிழறிஞர் சிலரின் மூலபாடத் திறனாய்வியல் நூல்களைப் படித்திருக்கிறேன். பாடவேறுபாடுகள் பற்றி எழுதியுமிருக்கிறேன் (தமிழ்கூறு நல்லுலகம் எதையும் தாங்கும்😃).அவ்வளவுதான்.


கண்ணுறும் அன்பர்கள் கருத்துக்கூறும் பொருட்டு இதனை எழுதுகிறேன்.


திறனாய்வு பற்றிய ஒரு நூலின் பொருளடக்கத்தைப் பார்த்தேன். அதில் மூல பாடத்திறனாய்வும் திறனாய்வு வகைகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருந்தது. அது Textual Criticism என்பதன் தமிழாக்கப் புழக்கம். இதில் குற்றமில்லை ; இயல்புதான். 


மூலபாடத் திறனாய்வைத் திறனாய்வு வகையில் சேர்க்கலாமா? (ஆங்கிலம் பற்றி அம்மொழி வல்லார்வாய்க் கேட்டுணர்க).


சொற்றொடரின் மூலத்தைப் பிடித்துத் தொங்கவேண்டியதில்லை. தமிழில் புழக்கம் குறிக்கும் பொருளே பொருள். தமிழுக்கு இயையுமா என்பதுதான் வினா.


" Textual Criticismஐ பாடவிமர்சனம் / பாடத் திறனாய்வு/பாட ஆய்வியல் எனக் கொள்ளலாம்"¹ என்கிறார்  சிவத்தம்பி.கலைச் சொற்களில் மிக (மிகை?)த் துல்லியும் நாடும் அவர் சாய்கோடுகளிட்டு மூன்று வாய்ப்புகளைத் தருகிறார்.


சரி!


தற்காலத் தமிழ் அகராதி (க்ரியா, 2020) திறனாய்வு , திறனாய்வாளர் ஆகியவற்றுக்குத் தரும் பொருள்களைப் பார்ப்போம் :


           திறனாய்வு பெ.(புத்தகங்கள், கட்டுரை போன்றவற்றின்)

            குறைநிறைகளை

           ஆராய்ந்து செய்யும் மதிப்பீடு; evaluation. 


            திறனாய்வாளர் பெ. திறனாய்வு செய்பவர்; (literary) critic.

             

'குணம் குற்றம் நாடி மிக்கது கொண்டு' மதிப்பிடுதல் என்று (வள்ளுவர் துணை! ) செறிவாகச் சொல்லலாம். 


இன்னும் செறிவாகச் சொல்வதானால் , மதிப்பீடு!


மூலபாடத் திறனாய்வில்  மதிப்பீடு இல்லை என்றே சொல்லிவிடலாம் ; தேர்ந்தெடுப்பு உண்டு.


உயர்வு /இனிது - அழகியல் அலசல்


பாரதி பாடல்களின் பாடவேறுபாடுகள் சிலவற்றை  எடுத்துக்காட்டி ,அச்சில் வந்த ,அண்மைக்கால இலக்கியங்களும் மூலபாடத் திறனாய்வுக்குரியவை என்பதைச் சற்று விளக்கி முதன்முதலில் விவாதித்தவர் புதுமைப்பித்தன்.  அவற்றுள் ஒன்று :


சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத் 

தொழுது படித்திடடி பாப்பா

செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் - அதைத்

தினமும் புகழ்ந்திடடி பாப்பா (பரலி சு.நெல்லையப்பர் , 1917)

 

சொல்லில் இனிது தமிழ்ச்சொல்லே - அதைத்

தொழுது படித்திடடி பாப்பா

செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் — அதைத் 

தெய்வமென்று கொண்டாடு பாப்பா!(ஞானபானு, 1915)


'சொல்லில் இனிது தமிழ்ச் சொல்லே' ...  'உயர்வு' என்று பா. பி. பிரசுரத்தில் காணப்படும் வார்த்தையைவிட நயமானதும் அந்தரங்க பாவமானதுமாகும் இனிது என்ற பதம். என்னதான் விதேசி இலக்கியத்தின் அழகுகள் நம்மைப் பிரமிக்க வைத்தாலும், நம் வீட்டுக் குத்துவிளக்கு, நாம் பேசும் பேச்சு இவற்றின் குழைவை நாம் மறக்க முடியாது. இது ஓர் இயற்கையான மனோபாவம். இதைத்தான் கவி கூற முயலுகிறார்.²


புதுமைப் பித்தன் இதைத்-தான் என்று அழுத்தமாகக் கூறிமுடிக்கிறார். 


இரண்டு பாடங்களுள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க ஓர் அழகியல் அலசலை -திறனாய்வு அமிசத்தை - மேற்கொள்கிறார் புதுமைப்பித்தன்.


ஆராய்ச்சி 


1.'இனிது ' எனில் உணர்ந்து / விழைந்து ... படிக்கலாம் ; தொழுது படிக்க

   வேண்டியதில்லை . பு.பி.யின் தருக்கம் இடிக்கிறது. உயர்வு எனில் தொழுது

   படிக்கலாம் .

2. இனிது என்பது காலத்தால் முந்தைய பாடம். உயர்வு என்பது பிந்தைய பாடம். இது

     பாரதி வாழ்ந்த காலத்திலேயே நேர்ந்திருக்கிறது.

3. பாரதி நோக்கில் தமிழ்ச் சொல் உயர்வு என்தற்கு அகச்சான்றும் காட்டலாம். 


The Occult Element in Tamil Speech³ என்னும் கட்டுரையொன்றை எழுதியுள்ளார் பாரதியார். அதனை,


Among few typical languages with which I am acquainted, the Tamil language seems to to be unique in possessing an extraordinary number of words that have more occult suggestion in them than secular significance  


என்று தொடங்குகிறார். தொடர்ந்து,


உட்கார்- உட்கு+ஆர்' within thyself rest'/' be self composed ஒக்கார் (in.common speech) ஒக்க + ஆர் " Get into harmony, Set thy spirit in unison with mine " , அகம் இல்லம் / உள்ளம் ; துணி - " cloth ", " courage " என்றெல்லாம் உள்ளுறை பொருள்கள் பற்றி விவரிக்கிறார்; Symbolic speech, psychological and metaphysical expression பற்றியெல்லாம் பேசுகிறார்; தம் குருவிடம் விவாதித்ததாக விளக்குகிறார்.


இவற்றின் வன்மை மென்மைகள் ஒருபுறமிருக்க , பாரதி தமிழ்ச் சொற்கள் குறித்துக் கொண்டிருந்த உயர்மதிப்பே இங்குக் கருதத்தக்கது. எனவே,


        சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத் 

        தொழுது படித்திடடி பாப்பா

        

என்னும் ' நிறைவேறியபாடமே '⁴பொருந்தும்.

ஆக, பாடத்திறனாய்வு ( மூலபாடத் திறனாய்வன்று) என்பது திறனாய்வு ஆய்வு இரண்டாலும் இயல்வது என்ற முடிவுக்கு வரலாம்; ஆனாலும் மற்ற திறனாய்வு வகைகளில் சேர்க்க இயலாது.


___________________________________


1. கார்த்திகேசு சிவத்தம்பி, ' தமிழில் இலக்கியப் பாட மீட்பு ' , உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம் ( தொகுப்பு : பெருமாள் முருகன்), காலச்சுவடு, நாகர்கோவில் ,2007 , ப.138.

2. மணிக்கொடி,15.11.1937 &01.12.1937(ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பு, புதுமைப்பித்தன் கட்டுரைகள், காலச்சுவடு, நாகர்கோவில் ,2007 , ப.153)

3. 'The Occult Element in Tamil Speech ' , The Commonweal, 27-02-1920, pp. 121-122 

- சீனி.விசுவதாதன் (பதி.), கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள், பதினொன்றாந் தொகுதி, சீனி.விசுவநாதன் (வெளியீடு), சென்னை 2010, பக்.30-34.

4. மூலபாடமென்பது original textஐயே கருதும். அதனால் ஒரு பாடம் பற்றிய முதல் வடிவமே மூலபாடம் எனும் நிலையைப் பெறலாம். ஆனால் ஒரு textஇல் வழங்கும் நிலையில் சாதார ணமான அதன் பாடமாகக் கொள்ளப்படுவது எல்லா வேளைகளிலும் முதலில் அல்லது முதற்தடவையில் எழுதப்பட்டவையல்ல. ஆசிரியரே தான் கொண்ட 'நிறைவேறிய பாட'த்தில் தனது முதற்பாடத்தைக் கைவிடலாம் ...

இக்கட்டுரைக்கான சிற்றாய்வினை மேற்கொண்டபொழுது பாடமூலம் எனும் தொடர் பற்றியும் சிந்திக்க வேண்டியதாயிற்று 'பாடமூலம்' என்பது பாடத்தின் மூலமாகும். மூல பாடமென்பதும் பாடமூலமென்பதும் ஒரே பொருள்தரா- கார்த்திகேசு சிவத்தம்பி, ௸, பக். 137 - 38.

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...