Sunday, November 22, 2020

கணிகை மாதவியும் நடிகை கல்யாணியும்

 

கணிகை மாதவியும்  நடிகை கல்யாணியும்
(இளங்கோவடிகளின் ‘சிலப்பதிகார’ மாதவி வழி , ஜெயகாந்தனின்  ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’  கல்யாணி - செல்வாக்கும் ஒப்புமைகளும்)*

இலக்கிய வகையால் வடிவத்தால் கதையால் கதைப் பின்னலால் கருத்து நிலையால் தம்முள் வேறுபட்டவை இளங்கோவடிகளின் 'சிலப்பதிகாரமு'ம் ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளு'ம்.  இவற்றிடை பாத்திர அளவில்தானும் செல்வாக்கைக் காண முற்படுதல் ஒரு வலிந்த முயற்சியாகத் தோன்றக் கூடும்.

காலத்தால் முற்பட்ட இலக்கியங்கள் - அவற்றுள்ளும் செவ்வியல் இலக்கியங்கள் - பின் வரும் இலக்கியங்களின் மீது முற்றாகவோ சற்றுக் கூடுதல் குறைவாகவோ செல்வாக்குச் செலுத்தும் வாய்ப்பு இல்லாமலில்லை.

சிலப்பதிகாரமே கூட ஒரு வகையில்  முந்தைய செவ்வியல் இலக்கியச் செல்வாக்கில் விளைந்த புதுச் செவ்வியல் இலக்கியம் எனத் தக்கதுதான்.  என்றாலும்     தமிழின் திருப்புமுனைப் படைப்பாக நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமாக அது அங்கீகாரம் பெற்றுக்கொண்டது.

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் தொடர்நிலைச் செய்யுள்¶ ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' நாவல். இரண்டும் வடிவத்தால் வேறுபட்டவை. வடிவ வேறுபாடு தன்மை வேறுபாட்டையும் உள்ளடக்கியது.

இவ்வாறு வேறுபட்ட இலக்கியங்களுள் முந்தையதன் பாத்திரச் செல்வாக்கைப் பிந்தையதில் காண இயலுமா?
செவ்வியல் இலக்கியப் புனைவில் உருப்பெற்ற மாதவியின் செல்வாக்கு நடப்பிய இலக்கியப் பாத்திரமான  கல்யாணி உருவாக்கத்தில்  செல்வாக்குச் செலுத்த இயலுமா?

ஜெயகாந்தன் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தபோது , தமிழ்ச் சமூகத்தில் செவ்வியல் இலக்கியங்கள் மீள் எழுச்சியுற்று அலையடித்துக்கொண்டிருந்தன.
ஆர்வமும் துறுதுறுப்பும் இயல்பாகவே வாய்க்கப்பெற்ற ஜெயகாந்தன் இயன்றவரை தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் பயின்றவர்தாம்.

ஆனாலும் அதற்குத் தூண்டுதலாய்த் துணை நின்று பயிற்றுவித்ததில்
ஜெயகாந்தனின்  நண்பரும் , ஜெயகாந்தனை விட அகவையில் பத்தாண்டு மூத்தவருமான , கவிஞர்  தமிழ்ஒளிக்குப்  பங்குண்டு எனலாம்.

"எனது ஆசானும் தோழனுமாய் எனது புகழ்ச்சிக்குரிய ஓர் கவிஞனுமாய் விளங்கிய ... நண்பர் தமிழ்ஒளி"  (ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் , ப.27) எனப் போற்றும் ஜெயகாந்தன்,

" தமிழில் படிக்கத் தகுந்தவை என்று நான் எண்ணியிருந்தவை பாரதியாருக்கு முந்தைய பழந்தமிழ் இலக்கியங்கள், அப்புறம் பாரதியார் , புதுமைப்பித்தன் ஆகியோரது எழுத்துக்களை மட்டும்தான் ... படிக்கிற விஷயத்தில் இந்த எனது சனாதனத்தைக் கவிஞர் தமிழ்ஒளி அவர்கள் மிகக்கடுமையாகக் கண்டனம் செய்வார்... பாரதியார் படைப்புகளையே தாண்டி வரக்கூடாது என்றிருந்த என்னைப் புதுமைப்பித்தன் வரை இழுத்துக்கொண்டுவந்தவரே அவர்தான் " ( ௸ , ப.28) என்கிறார்.  பின்னால் அவரது நட்பை முறித்துக்கொள்ள நேர்ந்த போது, " கவிஞர் தமிழ்ஒளியை , அவரால் நான் கற்ற பல அரிய பாடங்களை - அவர் எனக்குக் கற்பித்த தமிழ்க் கல்வியை எல்லாம் நன்றியோடு நினைவுகூர்ந்தேன் " ( ௸, ப.71) என்கிறார். 

தமிழ் ஒளியின் சிலப்பதிகார ஈடுபாட்டையும், அவர் சிலப்பதிகாரத் தாக்கத்திற்குப் பெரிதும் ஆட்பட்டதையும்  அவருடைய, 'விதியோ ?வீணையோ? ' , ' மாதவி காவியம் ' ஆகியன காட்டும்.

' நூல்வழி' என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள விதியோ? வீணையோ? முன்னுரையில் சிலம்பையும் சிலம்பு பற்றிய சில ஆய்வுகளையும் அவர் தோய்ந்து பயின்றிருப்பதை உணரமுடியும். சிலப்பதிகாரம் ஓர் இசை நாடகம் (opera) என்கிறார்தமிழ்ஒளி. " பழந்தமிழ் நாட்டில் கூத்து நிகழ்ச்சிக்காக இயற்றிய சிலப்பதிகாரத்தின் மரபை உட்கொண்டதே " இந்நூல் (ப.22) என்று கூறும் தமிழ்ஒளி தம் இசை நாடகத்தில் சிலப்பதிகாரக் கதையைப் பெரிதும் மீறாமல் மாதவியைத் தலைவியாகக் கொண்டு,'விதியோ? வீணையோ?' ,' மாதவி காவியம் ' ஆகியவற்றைப் படைத்துள்ளார். இவை 1955 - 1958 க்கு இடைப்பட்ட காலத்தில் நிறைவு செய்யப்பெற்றுப் பல்லாண்டுகளுக்குப் பின்பு வெளியிடப்பட்டன.



கலையில் இன்பம் காணுகின்ற

           கணிகை மாதவி - தெய்வக்

           கணிகை மாதவி - விதி

வலையில் இன்று துன்பமெய்தும்

             வனிதை மாதவி - அன்பு

             வனிதை மாதவி        

- கவிக்கூற்று ( ப. 241)

வேடிக்கை வினையாவதுண்டோ? - வெறும்

வேடிக்கை வினையாவதுண்டோ

மூடிக்கை திறந்திட்டால்

முடமாவ துண்டோ?

வேடிக்கை வினையாவதுண்டோ?    

- மாதவி கூற்று (ப.248)

உள்ளம் பறித்தபின்

ஓடி வருவது

கள்ளத் தனமலவோ? - ஐயா

கள்ளத் தனமலவோ?

- வசந்தமாலை கோவலனிடம் கூறுவது(ப.269)

கணிகைக் குலமென்று

            கட்டுரைத்தார் உன் கணவர்

வணிகர் குலமென்றால்

            வார்த்தையை விற்பதுண்டோ?

- வசந்தமாலை மாதவியிடம் கூறுவது(ப.276)

இடைப்பிற வரலையும் கடந்து மற்றொன்று விரித்தல் என்னும் குற்றமெனத் தோன்றினாலும் சுவை கருதித் தமிழ்ஒளியின் 'விதியோ ?வீணையோ?' விலிருந்து
சிலவற்றைத் தருவதைத் தவிர்க்க இயலவில்லை. பொறுத்திடுக.

ஜெயகாந்தனிடம் சுயமான பார்வை இருந்தது.  '  தமிழில் எழுத்து வடிவ நாடகம் இல்லை' என்பது ஜெயகாந்தனின் உறுதியான முடிவு. சிலப்பதிகாரம் ஒரு Opera என்னும் தமிழ்ஒளி முதலியோர் கருத்திலும் அவருக்கு உடன்பாடில்லை ((ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் , ப. 89) ஆனால், சிலப்பதிகார வடிவம் பற்றித் தமிழ்ஒளி முதலியோரிடம்  ஜெயகாந்தன் கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்தியிருப்பதை உய்த்துணர முடியும்.

ஜெயகாந்தனிடம் சிலப்பதிகாரம் நேரடியாகச் செலுத்திய செல்வாக்கு, முதனிலைச் செல்வாக்கு என்க. தமிழ் ஒளியின்  செல்வாக்கை  வழிநிலைச் செல்வாக்கு எனலாம்.

ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'  சுயமான படைப்பு என்பதைக்
இங்குக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஜெயகாந்தனின் மேற்குறித்த நாவல் ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடர்கதை வடிவில் வந்து 1971இல் நூல் வடிவம் பெற்ற போது, அதன் முன்னுரையில்,

"பெண் ஏதோ ஒரு விஷயத்தில் ஆணின் தயவில் இருந்தால்தான் ஆண் வர்க்கமும், ஆண் ஏதோ ஒரு விஷயத்தில் நாயாய்க் குழைந்து பலவீனம் கொண்டிருந்தால்தான் பெண் வர்க்கமும் திருப்தியுறும். சமுதாய மாற்றங்களும் வாழ்க்கை முறைகளும் மாறினாலும் இந்த விதியினால் விளைகிற பிரச்சனைகளின் வடிவங்கள்தான் மாறும் போலும்"  (ப.12)என்கிறார் ஜெயகாந்தன்.

சிலப்பதிகாரத்தில் ஊழ் (விதி) பெறும் இடம் வெளிப்படையானது.  ஜெயகாந்தன் குறிப்பிடும் சமூக உளவியல் விதியும் இளங்கோவடிகள் கூறும் மெய்யியல் விதியும் வெவ்வேறானவை .  எனினும் மேலதிகச் சான்று ஒன்று உள்ளது.
    
" கானல் வரி யான் பாட, தான் ஒன்றின்மேல் மனம் வைத்து,
மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்’ என
யாழ் - இசைமேல் வைத்து, தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின்,
உவவு உற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்,
‘பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின், எழுதும்’ என்று உடன் எழாது,
ஏவலாளர் உடன் சூழ்தர, கோவலன்தான் போன பின்னர் "( கானல்வரி, கட்டுரை)

இங்கு, மாதவியைக் கோவலன் பிரியக் காரணமானது ஊழ்வினை என்கிறார் இளங்கோவடிகள்.

‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்  1978இல் திரைப்படமான போது அதன் நிறைவுக் கட்டத்திற்கு ஜெயகாந்தன் எழுதிய பாடலின் அடியொன்று.
“வீணை மீட்டிடும் போதிலே விதி சிரித்ததோர் காதலில்” என்பது.  



இது சிலப்பதிகாரச் செல்வாக்கில் விளைந்தது என்பதை விட அழுத்தமான நேரடித் தாக்கத்தின் விளைவு என்பதே சரி. விதி, வீணை - என்னும் மோனைகளில்  தமிழ்ஒளியின் செல்வாக்கைக் காணலாமென்று தோன்றுகிறது.

படத்தில் காட்சியுடன் இந்தப் பாட்டைக் கேட்டபோதுதான் சிலப்பதிகாரத் தாக்கம் உறைத்தது.

கண்ணகியே சிலப்பதிகாரத் தலைவி என்று கருதுவது இயல்பானது ; சரியானது.  என்றாலும் மாதவி வெறும் துணைப் பாத்திரமன்று.  வஞ்சிக் காண்டத்தில் ,

‘மாடல மறையோன் வந்து தோன்றி,
‘வாழ்க, எம் கோ! மாதவி மடந்தை
கானல்  பாணி கனக விசயர்தம்
முடித் தலை நெரித்தது; (48-51)என்கிறான்.

நேர்த்தொடர்பற்ற காரண காரிய இயைபைச் சுட்டும் போது மாதவியின் இன்றியமையாமை புலனாகின்றது.

‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலில் கல்யாணியே கதைத் தலைவி.

இளங்கோவடிகள் மாதவியைத் தம் நெஞ்சாக இழைத்துள்ளார் என்பது பேராசிரியர் கா.மீனாட்சி சுந்தரம் கருத்து.  சமுதாயப் பிணைப்பில் தோன்றி வளர்ந்த மாதவி படும் இன்ப தன்பங்களை எடுத்துக் காட்டிச் சமுதாயப் புண்ணுக்கு மருந்திடுவதே இளங்கோவின் நோக்கம் என்கிறார் அவர்(கா.மீ., பக்.115 – 116).

" மாதவி ஒரு சிக்கல் நிறைந்த பாத்திரமே; மிக நுணுக்கமாகவும் உயர்வாகவும் படைக்கப்பட்டுள்ள பாத்திரம்.  சிலம்பில் ஒன்றிநிற்கும் பாத்திரம் மாதவி.  கலையும் வாழ்வும் ஒன்றித்து நின்று சிக்கல் விளைவிப்பதை எடுத்துக் காட்டி மாற்றம் தர மாதவி பயன் பட்டுள்ளாள் " (கா.மீ., ப. 116)

சிலம்பில் தோய்ந்த கா.மீ. கண்டுணர்ந்த இக் கருத்தோடு ஜெயகாந்தன் கூறுவது ஒத்துப் போவது தற்செயலானதன்று.

" கல்யாணி மாதிரி ஸ்தூல உருவங்கள் உண்டு.  ஆனால் அதனுள் இருக்கிற சூட்சும உருவம் நான்.  அது எந்த அளவுக்கு எதார்த்தமோ அந்த அளவுக்குப் பொய்.  கல்யாணி என்கிறவள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதாக நான் காட்டுகிறேன் " (ப.8)

மாதவி அந்தக் காலக் கணிகையர் குலத்தவள்.குல வழக்கம் பற்றிய விமர்சனம் எதையும் எழுப்பவியலாத காலம் அது.  கலையிலும் அறிவிலும் முதிர்ந்தவளாயினும் அகவையில் சிறுமி எனத்தக்க நிலையிலேயே கோவலனைக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டவள் மாதவி.

கல்யாணியும் தேவதாசி குலத்தவள் எனினும் மாறிவிட்ட காலத்தவள்.

" கல்யாணிக்கு, தான் பிறப்பால் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவள் என்பதே வெகு நாட்களுக்குப் பிறகுதான் தெரியும்.  அந்த அளவுக்குக் குல மரபுகள் திருத்தப்பட்ட பிறகுதான் அவள் பிறந்தாள்.  கல்யாணியின் தாய் கல்யாணியின் தந்தையை முறைப்படி மணந்து கொள்ள முடியாமல் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி கொண்டவள் என்கிற விஷயம் கல்யாணிக்கு இன்று வரை தெரியாது, பொட்டுக் கட்டிக் கொண்டவள் என்றாலும் ‘சந்தனப் பூச்சில் நிகழ்ந்த சாந்தி உறவிலிருந்து சாகும் வரை அந்த ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்தவள்’ என்பதால் இந்தக் குடும்பத்தின் மீது அண்ணாசாமிக்கு ஓர் ஆழ்ந்த மதிப்பும் மரியாதையும் உண்டு" (ஒரு நடிகை ....ப.73)
என்கிறார் ஜெயகாந்தன். [ அண்ணாசாமி நாடகக் குழுவின் மேலாளர்; அகவையில் மூத்தவர் ; மணமானவர் ; கல்யாணியிடம் நன்மதிப்புக்கொண்டவர் ; அவளை இரண்டாம் தாரமாகக் கொள்ளலாம் என்று நல்லெண்ணத்தால் கருதியவர்; ரங்காவுடனான மணத்தை உளப்பூர்வமாக ஏற்று, அவர்கள் இனிது வாழ வேண்டும் என எதிர்பார்ப்பவர் ]

முழுவதும் மாதவி போன்ற ஒரு பாத்திரத்தைப் படைப்பது எதார்த்தவியச் செல்வாக்கு மிகுந்த இருபதாம் நூற்றாண்டில் இயலாதது மட்டுமன்றித் தேவையற்றதுமாகும்.

சிலப்பதிகாரக் காலத்துப் பதின் பருவ இளைஞன் கோவலன், அவனை விடவும் இளைய மாதவி ஆகியோரின் கூடலும் ஊடலும் இருபதாம் நூற்றாண்டின் முப்பது அகவை கடந்து முதிர்ந்த, தத்தம் சுய விருப்பத்தோடு கூடிய கல்யாணிரங்கா காதலும் முரணும் வெவ்வேறு தளத்தில் இயங்கினாலும் பிரிவு என்பதன் சில பொதுமைகளைக் காணவியலும்.

‘நிலவுப் பயன் கொள்ளும் நெடு நிலா முற்றதுக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்து, ஆங்கு;
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி,

‘ஆடலும், கோலமும், அணியும், கடைக்கொள -
ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்ப (கடலாடு காதை 74-75)

கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து,
பாடு அமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்  (௸,109 - 110)

என வாய்ப்பு நேருந்தோறும் மாதவி - கோவலன் ஊடலை இடைமிடைந்து தருகிறார் இளங்கோவடிகள்.

கல்யாணி - ரங்கா காதல் அறிவார்ந்த நிலையில் முகிழ்க்கின்றது; அறிவார்ந்த கருத்துச் சார்புகளாலேயே முரணுகிறது.  பழைய மரபான கூடலும் ஊடலும் இவர்களிடையே இல்லை.  என்றாலும் கல்யாணி - ரங்கா பதிவுத் திருமணத்திற்குப் பின், கல்யாணி பற்றிய கோட்பாடு சார்ந்த கருத்து வேறுபாட்டிலிருந்து விவாதம் தொடங்குகிறது.

“அவள் பேசுவதைக் கேட்டபோது, அவள் தன்னிடம் எந்த அளவுக்கு அடிப்படையில் முரண்படுகிறாள் என்று புரிந்து கொண்டு மன உறுத்தலுக்கு ஆளானான் ரங்கா.”    (ஒரு நடிகை....ப.162)

அந்த உறுத்தல் அப்போதைக்கு நீளாமல் நின்று விடுகிறது. ஆனாலும்,

“கல்யாணிக்கும், ரங்காவுக்கும் இடையே எழுந்த முதல் முரண்பாடு இந்த ரோஜாச் செடிகளை வைத்து உருவாயிற்று.  அவள் இதற்காக வருத்தப்படவில்லை. தன்மீது அவன் வருத்தம் கொண்டிருப்பதாக நினைக்கவுமில்லை.  ஆனாலும் ரோஜா மலரைப் பார்க்கும் போதெல்லாம் ரங்காவின் பேச்சை அவள் நினைத்துக் கொள்வாள்.” (ஒரு நடிகை ... ,ப.163)

ரோஜாச் செடியில் ஆரம்பித்த முரண்பாடு - அது ஒன்று மட்டுமல்ல என்கிற மாதிரி தொகை தொகையாய்ப் பெருகலாயிற்று (ஒரு நடிகை ... , ப.170) இவ்வாறு முற்றிய பிறகும் உறவு தொடர்கிறது.

“அவன் குளிக்கும் போது அவள் கூடவே வந்து பாத்ரூம் வாசலில் நிற்பாள்.  அவனை ஒன்றுமே செய்ய விடாமல் குழந்தை மாதிரி நிறுத்தி அவனைக் குளிப்பாட்டுவாள்.  அவனது கால் நகங்களைக் கூட விடாமல் சுத்தம் செய்து துடைப்பாள்.  அவனுக்கு மேலெல்லாம் பவுடரைக் கொட்டி, மிருதுவாகத் தடவுவாள்.  தன்னை அவள் எப்படியெல்லாம் போஷிக்கிறாள் என்ற நினைப்பில் கனிந்து போவான் அவன்.” (ஒரு நடிகை ..., .ப.179)

இத்தகு நிகழ்ச்சிகள் மாதவி - கோவலன் ஊடல் கூடல்களை யொத்து வேறு தளத்தில் நிகழ்வனவாகும்.

" மாசறு பெண்ணே வலம்புரி முத்தே
……   ………..   …..   …..
என்று அவன் பாராட்டிய பல சொற்களும் ஒரு நொடியில் பொருளற்ற சொற்கள் போல் ஆயின.
… கோவலனும் கண்ணகியும் காதலனும் காதலியுமாய் விளங்கிய காட்சி அன்றே மாறிவிட்டது.  அதன்பிறகு கோவலனும் மாதவியுமாக வாழ்ந்த காட்சியாவது மாறாமல் இருத்தல் கூடாதா? பல ஆண்டுகள் வரையில் அந்தக் காட்சி நீடித்ததற்கு மாதவியின் நிலைத்த பேரன்பே காரணம் என்று கூறவேண்டுமேயல்லாமல், கோவலனுக்கு அந்தப் பெருமை உரியது என்று கூற இடம் இல்லை " என்பார் மு.வ.( ப.52)

இதில்  கருத வேண்டியது மாதவியின் பேரன்பே உறவு நீடிக்கக் காரணம் என்பதுதான்.
மார்க்சிய அறிவாண்மையரும் ரங்காவின் நண்பருமான வழக்கறிஞர் ராகவன், ரங்காவின் பிடிவாதத்திற்காக இருவரது ஒப்புதலுடனும் கூடிய மணவிலக்குக்கு ஆலோசனை கூறும் போது,
“நீங்க செய்யறதுதாம்மா ரொம்ப சரி.  அவர் போக்குக்கே விடுங்க.. நீங்க ‘புரொடஸ்ட்’ பண்ணினீங்க காரியம் கெட்டுடும்… அவன் ஜெயிச்சுடுவான்.  கிவ் ஹிம் எ லாங் ரோப்”
என்கிறார்.

புதினம் முழுவதும் கல்யாணியின் - தன்னிலையிழக்காத , பெருந்தன்மையோடு கூடிய, சமரசமற்ற -  விட்டுக் கொடுத்தலால் அவர்களது உறவு நீள்வதைக் காண முடிகிறது.
கோவலன் பிரிந்து சென்றபோது, மாதவி காதற் சுவை சொட்டும் கடிதமொன்றை அனுப்புகிறாள், கோவலன்
“ஆடல் மகளே ஆதலின், ஆய் இழை!
பாடு பெற்றன அப் பைந்தொடி - தனக்கு’ என "  (வேனில் காதை,109-110)
என்று மறுத்து விடுகிறான்.

கோவலனைப் போல் கடுமையான முரண்பாடு கொள்ளவில்லையெனினும் ரங்காவிடமும் அத்தகைய மனப்பான்மையே காணப்படுகிறது.
“பரவாயில்லையே… அண்ணாசாமி மாதிரி ‘நாடகமே வாழ்க்கை’ன்னு ஆகாமே – வாழ்க்கையை நாடகமா புரிஞ்சுக்கிட்டு இருக்கியே நீ” என்று பரிகாசமாகச் சொன்னான் ரங்கா. (ஒரு நடிகை ..., 267). அவளது நடிப்புத்திறம் அவன் மனத்தில் ஆழப்பதிந்துள்ளது.

வழக்கறிஞர் ராகவனோடு உரையாடுமிடத்தில்.“கல்யாணி பெருந்தன்மெயோடு சிரித்துக் கொண்டாள். அந்தச் சிரிப்பைப் பார்த்த ரங்கா ‘இவள் எவ்வளவு அற்புதமான நடிகை’ என்று அந்த வினாடி நினைத்தான்" (ஒரு நடிகை..., ப.285-286)
இது பாராட்டுணர்ச்சி மட்டுமன்று.

கோவலன், மாதவி வாழ்வில் மகப்பேறு வாய்த்ததைச் சிலப்பதிகாரமே காட்டுகிறது. கண்ணகியோடு கோவலன் மதுரை செல்லும் வழியில் எதிர்ப்பட்ட மாடலன்

" அணி மேகலையார் ஆயிரம் கணிகையர்
'மணிமேகலை' என வாழ்த்திய ஞான்று;
மங்கல மடந்தை மாதவி – தன்னோடு
செம்பொன் மாரி செங் கையின் பொழிய (அடைக்கலக்காதை, 38-41)
என்கிறான். இங்குக் கல்யாணியின் நிலையைச் சற்று விரிவாகக் காணவேண்டும்.

" அவள் தன்னைப்பற்றியும் எண்ணிப் பார்த்தாள். யாரையும் கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் குழந்தையென்ற பந்தங்களில் தன்னைப் பிணைத்துக் கொள்கிற தன்மையும் தகுதியும் இல்லையென்றே அவளுக்குத் தோன்றியது " (ஒரு நடிகைப ..., .87)

" பணக்காரர்களின், படத் தயாரிப்பாளர்களின், செல்வ மமதை கொண்டவர்களின், காமுகர்களின் ‘ஆசைநாயகி’யாக வாழ்ந்து, வைப்பாட்டி என்ற பேரெடுத்து அதன் மூலம் லோகாயத – பொருளாதார ரீதியான சௌகரியங்கள் எவ்வளவு கிடைத்தாலும் அதன் மூலம் தன் ஆத்மா சீரழிந்து, பின்னர் தனது புறவாழ்க்கையும் கூடச் செல்லரித்துப் போய்விடும் என்று அஞ்சியதால் அவள் மிக ஜாக்கிரதையாகவே, இந்த உலகத்தில் பழகி வந்தாள் " (ஒரு நடிகை ..., ப. 88)

மாதவியும் மங்கல மடந்தையே யெனினும் அவள் குலம் பற்றிக் குறுகிய பார்வை கோவலனிடம் புலப்படுகிறது.

"    ...                 ...                 ...       யாவும்
சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி,
குலம் தரு வான் பொருள் - குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு’என்ன " (சிலப். 68-71)

கோவலன் போன்று குறுகிய பார்வையுடையவனல்லனெனினும் மரபான குடும்பம் பற்றிய உடன்பாட்டுணர்வு ரங்காவிடம் தலையெடுத்தது.
தனது சாதியினர் வாழ்ந்து வருகிற – அவன் கல்யாணியை மணப்பதற்கு முன் வசித்த – தெருவுக்குச் செல்லநேர்ந்த போது,

“இவர்களிடம் பொய்யான ரசனைகளும், போலித்தனமான ஆடமபரங்களும் இல்லை. ரோஜாச் செடிகளுக்காகவும் குரோட்டன்ஸுக்காகவும் ஆயிரக் கணக்கில் பணத்தை அள்ளியிறைக்கும் அநியாயத்தை இவர்களால் சகித்துக் கொள்ள முடியாது; அப்படிப்பட்ட ரசனைகள் இவர்களுக்குப் புரியாது. புருஷனுக்காக இவர்கள் எதையும் விட்டுக் கொடுப்பார்கள்” (ஒரு நடிகை..., ப.216)என்று நினைக்கிறான்.
கல்யாணியிடமே,".கல்யாணி நீ எவ்வளவு சொன்னாலும் நான் எதிர்பார்க்கிற அளவுக்கு உன் மனசிலே நம்ப உறவுக்கு நீ இடம் கொடுக்கலேன்னுதான் எனக்குத் தோணுது. நான் இவ்வளவு வெளிப்படையாப் பேசறது நாகரிகமில்லேதான். ஆனாலும் சொல்றேன் நீ ரொம்பவும் ‘ஸெல்ஃப் ஸென்ட்டர்ட் வுமன்’ (ஒரு நடிகை...' ப. 232)

மாதவி, கலைப்புலமை சார்ந்து தன் அறிவு நுட்பம் காட்டுதல் - அவளது ஆளுமையாக – வெளிப்படுகிறது.

ஆங்கு, கானல் வரிப் பாடல் கேட்ட மான் நெடுங் கண் மாதவியும்
‘மன்னும் ஓர் குறிப்பு உண்டு  இவன் தன்நிலை மயங்கினான்’ எனக் 
கலவியால் மகிழ்ந்தாள்போல், புலவியால் யாழ் வாங்கித் 
தானும் ஓர் குறிப்பினள் போல், கானல் வரிப்பாடல் - பாணி,
நிலத்தெய்வம் வியப்பு எய்த, நீள் நிலத்தோர் மனம் மகிழ,
கலத்தோடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடத் தொடங்கும்மன். (கட்டுரை 24)

கல்யாணியிடம்  முதிர்ந்த அறிவார்ந்த - மேன்மேலும் சமரசம் செய்து கொண்டே போவது சுயமரியாதைக்கு இழுக்கு மட்டுமன்று இளக்காரமானதுமாகும் என்கிற – தெளிவு இருந்தது.

" நான் நடிக்கிறதை நாடகக் கம்பெனி நடத்தறதையெல்லாம் விட்டு விட்டு அவரோடு போயி இப்ப அவர் இருக்காரே அங்கே குடும்பம் நடத்தினால் அவர் சந்தோஷப்படுவார்னு வெச்சுக்குங்களேன். நான், அது முடியாதுங்கறேன். அப்படியெல்லாம் பேரம் பேசறது எனக்குப் பிடிக்காது. ஏன்னா அப்படி ஆரம்பிக்கிற பேரங்கள் எதுவும் அதோட நிக்கிறதில்லேன்னு நான் நெனக்கிறேன்… நீங்க சொல்கிறபடி செய்தா, என் ஒரு வாழ்க்கை மட்டுமில்லே – அவரோட வாழ்க்கையும் கெட்டுப் போகும்னு நான் நினைக்கிறேன்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள் கல்யாணி. (ஒரு நடிகை ..., ப.256-257)

ஆண் ஆதிக்க மனநிலையை இயல்பாகவே கொண்ட கோவலனும் அறிவுமட்டத்தில் இல்லையெனினும் உணர்வுநிலையில் கொண்டிருந்த ரங்காவும் தூய அன்பை உணரும் கட்டமும் இல்லாமல் இல்லை.

கோசிக மாணியின் கூற்றும் கடிதமும் கொண்டு
‘தன் தீது இலள்’ எனத் தளர்ச்சி நீங்கி,
‘என் தீது’ என்றே எய்தியது உணர்ந்து – ஆங்கு ( புறஞ்சேரி இறுத்த காதை,94-95)
தெளிகிறான் கோவலன்.

கோவலன் போல் முற்றாக முறித்துக் கொள்ளாமல் திருமண உறவை மட்டும் முறித்துத் தன் தனித்தன்மை பேண முயன்ற ரங்கா,
“இவளை விட்டுப் பிரிந்திருந்தாலும் இவளை என்னால் வெறுத்து விடவோ, நெஞ்சிலிருந்து இவளைப் பற்றிய இனிய நினைவுகளை அகற்றி விடவோ முடியுமா? அவ்விதம் முடியாதவரை இவளை விட்டு நான் பிரிந்திருப்பது  என்பதற்கு என்ன பொருள்?” (ஒரு நடிகை ..., ப.341)என்று நினைத்துப் பார்க்கிறான்.

மாதவி, கல்யாணியிடையே சில நுண்மையான ஒப்புமைகளையும் காண முடிகிறது. கோவலன் பிரிந்தவுடனேயே கையற்றுப் பசலையட நின்ற மாதவி,

" அதிரா மரபின் யாழ் கை வாங்கி
மதுர கீதம் பாடினள், மயங்கி (வேனில் காதை,23-24)
என இசையால் ஆறுதலடைய முயல்வதைக் காட்டுகிறார் இளங்கோவடிகள்.

கல்யாணியும் " நான் நடிக்க வந்ததுக்கு நெஜமாலும் காரணம், இந்தச் சுய – ரசனைதான்னு நான் நெனைக்கிறேன் "  (ப.63)என்கிறாள்.

இருவருமே சுயரசனையுடையவர்கள். கோவலன் மறைவுக்கு முன்பே மாதவி துறவு மனநிலை எய்திவிட்டதை அவளது இரண்டாவது கடிதத்தினூடாக உணரலாம். நிறுவனமயப்பட்ட துறவுநிலைக்கு மணிமேகலையை ஆட்படுத்திவிடுகிறாள்.

" யாது நின் கருத்து? என் செய்கோ?” என
மாதவி நற்றாய் மாதவிக்கு உரைப்ப-
“வருக, என் மட மகள் மணிமேகலை!” என்று
உருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு
விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய,
கோதைத் தாமம் குழலோடு களைந்து,
போதித்தானம் புரிந்து, அறம்படுத்தனள்(வரந்தரு காதை , 22-29)

ஜெயகாந்தன் ,  கல்யாணி பாத்திரத்தின் இறுதிநிலையை முன்னுரையில் வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறார்.

" கல்யாணி வெறும் லட்சியப்படைப்பு. அதைப் பறந்து போகாமலிருக்கும் பொருட்டே, தரையில் காலூன்றும் பொருட்டே, காலை ஒடித்துப் போடுகிற கொடுமையில் கதைக்கு முடிவு கண்டேன். நெஞ்சு ஒடிவதைவிட இது கொடுமை குறைந்த விபத்தல்லவா? எல்லோருக்கும் - ரங்காவுக்கும் கூட அவள்பால் திருப்தியும் அநுதாபமும் ஏற்பட்டு விடுகிறதல்லவா? பாவம்! மனித இயல்பு அப்படித்தான் ஆகிவிட்டது" (ப.11-12)

மதுரைப் புறஞ்சேரியில் கோசிகமாணி தந்த மாதவியின் கடிதம்,
" அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன் /வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்" (புறஞ்சேரி இறுத்த காதை, 87 - 88) என்று தொடங்குகிறது .

 " எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும் /பண்நின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல் /போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவி " (அரங்கேற்று காதை வெண்பா) . அப்படிப்பட்ட மாதவி இப்போது தன் கிளவியை  'வடியாக் கிளவி' என்பது 'தன்'னுடைமையைத் துறந்த  துறவு உளப்பாங்கின் உச்சம்; அவலத்தின் உச்சம்.

மாதவி கோவலனையிழந்து துறவு மனநிலையில் இறுகி மகளையும் துறவியாக்கினாள். கல்யாணி நடையிழந்து நாடகம் துறந்து ரங்காவைப் பெற்று நிறைவடைகின்றாள்.

ஜெயகாந்தனைப் போல் இளங்கோவடிகளிடம் உணர்வு விவரிப்புகளோ விரிவான விவாதங்களோ காணப்படாவிடினும் சில சொல்லிப் பல உணர்த்திப் பிந்தைய படைப்புகள் மீது செல்வாக்கு/தாக்கம்செலுத்தும் செவ்வியல் வன்மை கொண்டிருப்பதை உணரலாம்.
மறுபுறம் மாதவி அவலத்தின் - கண்ணகியை விடவும் தீவிரமான அவலத்தின் - ஆழத்தை ஜெயகாந்தனின் கல்யாணி வழியே நவீன வாசகன் உணரமுடியும்.
__________________________________

* 'அவலத் தலைவியர் ' என்னும் எனது கட்டுரையோடு தொடர்புடையது இக்கட்டுரை:
     தொடர்ச்சி எனலுமாம்.

¶ " இவ் ஆறு-ஐந்தும்
     உரை இடையிட்ட பாட்டு உடைச் செய்யுள்" ( சிலப்பதிகாரம், பதிகம், 86-87)
" மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு
ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனன்என் " (மணிமேகலை, பதிகம், 97 - 98)
-எனச் சிலம்பும் மேகலையும் ஆறைம் (6x5=30 முப்பது) பாட்டுகள் என்று அவற்றின் பதிகங்கள் கூறுகின்றன (காதை = பாட்டு. பாகதச் சிதைவு). பத்துப்பாட்டு , தனித்தனிப் பத்துப் பாட்டுகளின் தொகுப்பு. அதன் வளர்நிலையான  சிலம்பும் மேகலையும் கதைத்தொடர்ச்சியுடைய பாட்டுகளால் ஆன  தொடர்நிலைச் செய்யுள்கள்.

இவற்றுள் சிலம்பு தமிழ்ச் சான்றோர் செய்யுள் உள்ளடக்கத்தையும் ஏற்ற பெற்றி

சீவகசிந்தாமணிதானும் காப்பியமன்று ; தொடர் நிலைச் செய்யுள் - அதனுள்ளும் 'தோல்' -என்கிறார் நச்சினார்க்கினியர் :

இத் தொடர்நிலைச் செய்யுள் தேவர் செய்கின்ற காலத்து நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் ஆதலானும், ‘முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி‘ (தொல் - சிறப்பு) என்றதனால், அகத்தியத்தின் வழிநூல் தொல்காப்பிய மாதலானும் , பிறர் கூறிய நூல்கள் நிரம்பிய இலக்கணத்தன அன்மையானும், அந்நூலிற் கூறிய இலக்கணமே இதற்கிலக்கண மென்றுணர்க.
 
   அவ்விலக்கணத்திற் செய்யுளியலின் கண்ணே ஆசிரியர் பா நான்கென்றும், அவற்றை அறம் பொருளின்பத்தாற் கூறுக என்றும் கூறிப் பின்பு அம்மை முதலிய எட்டும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கணம் என்று கூறுகின்றுழி, ‘இழுமென் மொழியால் விழுமியது நுவலினும்‘ (தொல். செய். 238) என்பதனால் , மெல்லென்ற சொல்லான் அறம் பொருளின்பம் வீடென்னும் விழுமிய பொருள் பயப்பப் பழையதொரு கதைமேற் கொச்சகத்தாற் கூறின், அது தோல் என்று கூறினமையின், இச் செய்யுள் அங்ஙனங் கூறிய தோலா மென்றுணர்க.
 
   இச் செய்யுள் முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண் பகுதியாம்; (தொல் - புறத்- 27). இதனானே, ‘யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது‘ (தொல் - செய். 149) என்பதற்குத் தேவபாணியும் காமமுமே யன்றி வீடும் பொருளாமென்பது ஆசிரியர் கருத்தாயிற்று.
 
   முந்து நூல்களிற் காப்பியம் என்னும் வடமொழியால் தொடர்நிலைச் செய்யுட்குப் பெயரின்மையும் இதற்குப் பிறகு கூறிய நூல்கள் இதற்கு விதியன்மையும் உணர்க.

முதன்மைச் சான்றாரங்கள்


இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் (பதிப்பு & உரை : ப.சரவணன்) சத்தியா பதிப்பகம், சென்னை, 2008.
தமிழ்ஒளி, கவிஞர் தமிழ்ஒளி காவியங்கள் , கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு, சென்னை, 2016.
ஜெயகாந்தன், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை , 2012.

ஜெயகாந்தன் , ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் , ஸ்ரீ செண்பகா பதிப்பகம் , சென்னை, 2000.

துணைமைச் சான்றாதாரங்கள்


மீனாட்சிசுந்தரம், கா., சிலம்பில் பாத்திரங்களின் பண்பும் பங்கும், ருக்மணி
     இராமநாதன் அறக்கட்டளை, காரைக்குடி, 2007.
வரதராசன் , மு. , மாதவி, பாரி நிலையம், சென்னை , 2005.
                                                          xxxxxxxxx

- திருச்சிராப்பள்ளி பெரியார் ஈ .வெ.ரா. கல்லூரித் தமிழாய்வுத்துறை , செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவன நிதி நல்கை பெற்று, பிற்காலப் பனுவல்களில் சிலப்பதிகாரத் தாக்கம்  என்னும் பொருளில் நடத்திய கருத்தரங்கில் (பிப்பிரவரி, 2015) ,  'சிலப்பதிகார' மாதவியும் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' கல்யாணியும் - செல்வாக்கும் ஒப்புமைகளும்  என்னும் தலைப்பில் படித்த கட்டுரை. இப்போது திருத்தி விரிவாக்கப் பட்டுள்ளது. இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.காசிமாரியப்பன் அவர்களுக்கு நன்றி.


Saturday, November 21, 2020

நகார் என்னும் பல்

 

நகார் என்னும் பல்



சான்றோரிலக்கியங்களில் 'நகார்' எனும்  சொல்  இரண்டிடத்தும்  (ஐங்குறுநூறு,85:5;  கலித்தொகை , 93:18) அளபெடை  பெற்ற  நகாஅர்  (சிறுபாணாற்றுப்படை, 57)  எனும்  வடிவம் ஓரிடத்தும்  வருகின்றன.
ஐங்குறுநூற்றில் (நகு+ஆ+ர்) எதிர்மறையாக நகைக்கமாட்டார் எனும் பொருளில் வருகிறது.
நம் நற்பேறு பத்துப்பாட்டு , கலித்தொகை இரண்டிற்கும் நச்சினார்க்கினியர் உரை கிடைத்திருப்பது.

" ...             ...            ...      மடவோர்
நகாஅர் அன்ன, நளி நீர் முத்தம் " (சிறுபாண். 56 - 57) என்பது மதுரை வளங் குறித்தது.

" மடப்பத்தையுடைய மகளிருடைய எயிற்றை[பற்களை]யொத்த செறிந்த நீர்மையையுடைய முத்து " என்பது நச்சர் தரும் பொருள்.

93 ஆம் கலிப்பாட்டு சுவையான மருதத்திணைப் பாட்டு.
பரத்தையிற் பிரிந்த தலைவன் , தலைவிக்கு அஞ்சிக் கடவுளைக் கண்டு புறத்தே தங்கியதாகப் புனைந்துரைக்கிறான். அது கேட்ட தலைவி எள்ளலாக நீ கண்ட கடவுளர் இவர்தாமோ என வினவுகிறாள்.

" பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்பப்
பறி முறை நேர்ந்த நகாராகக் கண்டார்க் (கு)
இறு முறை செய்யும் உருவொடு, நும் இல்
செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ? " (கலி. 93:17 - 20)

உன்னைப் பெறும் ஆசையால் , [பிறர் அறியாதவாறு] நீ குறிப்பிட்ட  இடத்திற்குத் தவறாமல் வந்து , கண்டவர்  மயங்கிவிழச்செய்யும் வடிவழகுடன் , விழுந்து முளைத்த பற்களையுடையராக [இளையராக] உன் இல்லத்திற்கு வரும் வழக்கத்தோடு வந்த கடவுள்களை நீ கண்டாயோ¹ - என எள்ளுகிறாள்.
' நகார் - ஆகுபெயர் ' என இலக்கணக் குறிப்புத் தருகிறார் நச்சர்.
' நகார்  ' என்பதன் ஆர் பலர்பால் விகுதி அன்று. அது பல் என்னும் பொருளைக் குறிக்கும் பெயர்ச் சொல்.
இங்கு நகார் என்பது பல்லை உடைய மகளிரைக் குறித்தலின் ஆகுபெயர் என்கிறார்.² 

" nakāar tooth, as appearing in laughter "³ எனத் திராவிட வேர்ச்சொல் அகராதி (DED) விளக்கம் தருகிறது. இதற்கு வாய்ப்பிருக்கிறது. எனினும் ஆய்வுக்குரியது.

------------------
குறிப்புகள்

1." நின்னைப் பெறுதலை நச்சின ஆசையாலே நீ செய்த குறியிடத்தே தப்பாமல் வந்த கடவுள்; கண்டவர்களுக்கு இறந்துபடும் நிலைமையைச் செய்யும் வடிவோடே விழுந்தெழுந்த முறைமை சேர்ந்த எயிற்றினையுடையராய் நும்மனையிடத்தே சேரும் முறைமையோடே வந்த கடவுளரை நீ கண்டாயோ வென்றாள் " - நச்சினார்க்கினியர்.

2. பல் , பல்லை உடையவர்க்கு ஆகி வருவதால் சினையாகுபெயர்.

சிறுபாணாற்றுப்படையில்  அச்சொல்லுக்கு  இலக்கணக்  குறிப்புத்  தராத  நச்சினார்க்கினியர் கலித்தொகையில் 'ஆகுபெயர் ' எனக் குறிப்புத் தருகிறார். காரணம் சிறுபாணாற்றுப்படையில் அது பல் என்னும் நேர்ப்பொருளில் வருவதுதான்.
இதனை உணராமல் நச்சினார்க்கினியர் தடுமாறியதாகக் கூறுவாரும் உள்ளனர்.
தடுமாற்றம் நச்சினார்க்கினியரிடம் இல்லை.

3. https://dsalsrv04.uchicago.edu/cgi-bin/app/burrow_query.py?page=321

Thursday, November 19, 2020

அவலத் தலைவியர்

 அவலத்  தலைவியர்

---------------------------------------


எந்த வகை இலக்கியத்திற்கும் வாழ்க்கையே அடிப்படை. இலக்கியங்கள் வாழ்க்கை பற்றிய உள்ளார்ந்த உணர்வுகளைப் பொதிந்துவைத்துள்ளன. ஆனால்,

இலக்கியம்   வாழ்க்கையின் எதிரொளி(reflection)யன்று; விலகொளி(refraction). இயற்பண்பிய உச்ச இலக்கியமேயாயினும் அது வாழ்க்கையை முற்றமுழுக்க உள்ளபடியே படம்பிடித்துக்காட்டுவதன்று. நனிமிகு உலகயற் புனைவேயாயினும் அதில் வாழ்க்கையின் சாயல் படியாமலிருக்காது. 

 

" பொருளியலாளனோ சமூகவியலாளனோ சமூகப்பிரச்சினையை விளங்கிக்கொள்ளுகின்ற முறையிலே எழுத்தாளன் அதனை விளங்கிக்கொள்வதில்லை. எழுத்தாளன் சமூகப்பிரச்சினை எதனையும் மனித நிலை என்ற பெருவட்டத்துள். உணர்வுப் பகைப்புலம் என்னும் ஒளிகொண்டு விளக்கப்பெறுவதாக , உணர்ச்சிகளின் போராட்டம் அல்லது கொந்தளிப்புப் பரிணமிப்பு என்பவற்றால் எடுத்துக்காட்டுவதாகவே காண்பான் " ¹


இந்த உணர்ச்சிப் போராட்டம் அல்லது கொந்தளிப்புப் பரிணமிப்பே இலக்கியத்தின் தனித்த இருப்புக்கான நியாயம். இவற்றின் நுட்பத்தைப் பொறுத்தது ஒன்றன் இலக்கிய மதிப்பு.


இலக்கியம் சமூகவியலுக்கோ பொருளியலுக்கோ வரலாற்றியலுக்கோ மாற்றன்று.




காமக்கிழத்தி


'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் /பாடல் சான்ற புலனெறி வழக்கம்' என்று தொல்காப்பியம் (அகத்திணை இயல் , 56)வரையறுப்பதையும் உளங்கொள்க. குறிப்பாகச் சான்றோர் செய்யுள்களில் தனிப்பட்ட எழுத்தாளனின் ஆளுமை கடந்து புலனெறி வழக்கின் ஆட்சி மேலோங்கியிருக்கும். அந்தப் புலனெறி வழக்கென்பது காலம் இழைத்து இழைத்து உருவாக்கிய வழக்கு ; தமிழ் வழக்கு.


தலைவன்-தலைவி என்னும் இருவர்தாம் சங்கச்சான்றோர் செய்யுள் தலைமை மாந்தர் என்பது வெளிப்படை.இந்த அகவாழ்வில்  வேறு சில பெண்களும்குறுக்கிடுகின்றனர். 

தொல்காப்பியத்தில் , (1) தொன்முறை மனைவி, ( 2) பின் முறை ஆக்கிய வதுவை என இருவரைக் காணமுடிகிறது  (' பின்முறை ஆக்கிய ...' கற்பியல் 31) .  மேலும், (3)  காமக்கிழத்தி கூற்றுக்குத் தனி நூற்பாவே உள்ளது ('புல்லுதல் மயக்கும்...' கற்பியல் 10).  (4)பரத்தையைத் தொல்காப்பியரே  'மாயப்பரத்தை' ('அவனறிவாற்ற... ' கற்பியல் 6:33) என்கிறார்.²

  

 பாடல்களின் துறை விளக்கக் குறிப்புகள் , உரையாசிரியர்கள், பிற்கால நூலாசிரியர்கள் முதலியோர்  தரும் வகைகள் விளக்கங்கள் முதலியனவும் ஆய்ந்து கொள்ளத்தக்கன.³


தலைவனுக்கு இலக்கியத்தில் (சமூகத்திலும்) சிறப்புரிமை இருந்தது.  அதனை ஏற்று அப்பெண்கள் இயங்குவதாகவும் அவர்களுக்குரிய உரிமைப்  படிநிலைகளுக்கேற்பத் தலைவன் அவர்களோடு கொள்ளும் தொடர்பு இயங்குவதாகவும் இலக்கியம் காட்டுகிறது[ தலைவியிடம் பேரன்புடன், உணர்ச்சிவயப்படாமல் , சமூக மரபுணர்ந்து , சூழலுக்கேற்ப அறிவுத்திறனை வெளிப்படுத்தும் தோழியின் இயக்கம் தனிச்சிறப்புடையது; தனித்துக் காணத் தக்கது ]சான்றோர் செய்யுள்களில் இந்த இயக்கங்களினூடான பல்வேறு புறநிலை அகநிலைமோதல்கள் உணர்ச்சிகள் முதலியன இலக்கியமாகின்றன.


 

பொதுவாகத் தலைவனோடு தொடர்புகொள்வோரை  மனைவி(தலைவி), காமக்கிழத்தி , பரத்தை என்னும் மூன்றுவகையில் அடக்கிவிடலாம்.


மனைவிக்கு உரிமை மிகுதி; சுதந்திரம் குறைவு. 

பரத்தைக்குச் சுதந்திரம் மிகுதி; உரிமை குறைவு. 

காமக்கிழத்திக்கு உரிமை சுதந்திரம் இரண்டும் குறைவு.


மருதக்கலியில் எட்டுப் பாடல்கள் காமக்கிழத்தி கூற்றாகக் கொள்ளப்பட்டுள்ளன. 

அவற்றுள் ஒன்று கலித்தொகை 69ஆம் பாடல் . இதில் காமக்கிழத்தியின்   அவல நிலையை அவளே கூறுகிறாள்.⁴


நச்சினார்க்கினியர் தம் உரைத்திற விரகால் அதற்குள் தலைவி (மனைவி)யையும் கொண்டுவந்துவிடுகிறார். 

சற்றே மற்றொன்று விரித்தல்தான்என்றாலும் தலைவியைக் கொண்டுவரும்  நச்சினார்க்கினிய  நயத்தைப் பார்க்க வேண்டுமே!

' மணநாளன்று நாணத்தால் ஆடைக்குள் முகம் மறைக்கும் மான்விழி மடந்தையை மணந்து, மனையாளுடன் அந்தணமணமகன் தீவலம் செய்வதுபோல அன்னம் பெடையுடன் பொய்கையில் மலர்ந்த தாமரையை வலம்வரும் நீர்வளம்மிக்க நல்லூரனே '(கலி. 69: 1-7) என்று தொடங்குகிறது பாட்டு.

(டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் கலித்தொகை உரைப்பதிப்பில
 உள்ள படம்)

இதிலுள்ள வெளிப்படை உவமை வினை, பயன் இரண்டனையும் கொண்டதென்பது அவர் கருத்து. அன்னம் பெடையுடன் தாமரையை வலம்வருதல் என்பது வினையுவமை.  (உள்ளுறையல்லாத) இந்த ஏனையுவமம் மருதக் கருப்பொருளாகிய தாமரையைச் சிறப்பித்து நின்றது. 

" அந்தணன் எரிவலஞ் செய்வான்போல அக்கருத்தில்லாத அன்னம் பெடையோடே தனிமலரைச் சூழத் திரியும் ஊர என்றதனான் நீயும் அக்கருத்தின்றிக் குல மகளிரைத் தீவலஞ்செய்து வரைந்து கொண்டு பாதுகாவாது ஒழுகுகின்ற நினக்கு எம்மைப் பாதுகாத்தல் உளதாமோ எனக் காமக்கிழத்தியும் உள்ளுறையுவமங்⁵ கூறினாளாகவுரைக்க " என்கிறார். 

அக்கினி சாட்சியாக நடக்கும் திருமணத்தின் பயன் மனைவியைப் பாதுகாத்தல்.  தலைவன் அதனையும்  செய்யவில்லை எனக் காமத் கிழத்தி  கூற்றில் உள்ளுறை காண்கிறார்  நச்சர் ; இவ்வாறு  தம் உள்ளுறைக் கொள்கையைக் கருவியாகக் கொண்டு தலைவனின் பரத்தமை நாட்டம் பொறாத காமக்கிழத்தி தலைவிக்காகவும் பரிந்து பேசுகிறாள் என்று காட்ட முற்படுகிறார் நச்சர். 


தலைவன் பரத்தை ஒருத்தியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கிறான். இடையில் காமக்கிழத்தியிடமும் வந்து அவளிடம் அன்புடையவன்போல் ,  உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறான்.அப்போது  அவளைப்பற்றித் ‘துணிவிலள் இவள்... நிறை இலள் இவள்... தன் இலள் இவள்...’ என்றெல்லாம் அவன் உள்ளத்திற்குள் கருதி வெளியே நடிப்பதாக நொந்து பேசுகிறாள் காமக் கிழத்தி⁶


துணிவிலள்- அவளாக எந்த முடிவையும் எடுக்க இயலாதவள். 

நிறையிலள் - இதுவே தனக்கு அறுதியானது , இதில் உறுதியாக நிற்க வேண்டும் என்கிற நிலை இல்லாதவள். 

தன் இலள் - ‘தனக்கென ஒரு நெஞ்சு உடையள் அல்லள்’ என்பது நச்சினார்க்கினியர் தரும் பொருள்.தன் இலள் - என்பது தொடர் இலக்கணநோக்கில் விதி விலக்கானது.தன் - என்பது வேற்றுமையேற்கத் திரிந்த வடிவம். இதனைத் தனியே பெயர்ச்சொல் நிலையில் நிறுத்துவது இயல்புக்கு மாறானது.


இப்பாட்டு,

“தருக்கேம் பெரும!... சூழ்ந்தவை செய்து, மற்று எம்மையும் உள்ளுவாய் " என்று முடிகிறது.

"எனக்குத் தனித்தன்மை உண்டு; உரிமையுண்டு என்றெல்லாம் தருக்கமாட்டேன். நீ நினைத்தவாறு செய்து என்னையும் நினைவில் கொள்” என்று பணிகிறாள். 


தனக்குள்ள சமூக வரம்பு காரணமாக நொந்து பணிந்து பேசும் காமக் கிழத்தி உண்மையில்  'தன்'னுடையள் என்பதைத்தான் புலப்படுத்துகிறாள்.



ஆடல் மகள் மாதவி 



மருதநில உழவுச் சமூகத்தில் உள்ளூர் வழக்கங்களுக்கு இணங்கியிருந்த எளிய பரத்தையர் போலன்றி  வணிக மேம்பாடும் நகர நாகரிகமும் பொருளொன்றே கருதிய பரத்தையரை உருவாக்கியது.⁷


இன்னொரு புறம்    செவ்வியற் கலைகளிலும் கல்வியிலும் மேம்பட்டவரும்   அரச , வணிக மேட்டுக் குடிச்சமூகத்தினரோடு தொடர்புடையவரும் அரசு மரபுகளுக்கு உட்பட்டவரும் உயர்மதிப்புடையவருமான கணிகையர்  குலத்தவர் இந்திய அளவில் உருவாயினர்.  இவருள்  தமிழில் தலையாய , செவ்வியல் பாத்திரம் மாதவி.


சிலப்பதிகாரத்தில் கோவலனை விஞ்சும் மாதவியின் ‘தன்’ உடைமையை - கலைத்திறன், அறிவுக்கூர்மை, புலமை முதலியன வெளிப்படுவதை- அவன் வன்மையாக உணரும் இடம் ‘கானல் வரி’. அப்புறம், ‘மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள்’ (கானல்வரி , 225)என்று முடிவு செய்து பிரிகிறான்கோவலன். மாதவி கடிதம் அனுப்புகிறாள். கோவலனோ   'ஆடல் மகளே ஆதலின் ஆயிழை பாடுபெற்றன அப்பைந்தொடி தனக்கு'  (வேனில் காதை, 109 - 110)   என்று  அவள் ஆடல் மகள் என்பதைப் புதிதாகக் கண்டுபிடித்ததைப் போல் தான் சுமத்திய பழிக்குக் காரணம் கற்பிக்கிறான்; அன்றிரவே புகாரிலிருந்து கண்ணகியுடன் வெளியேறுகிறான்;பின்னர், மதுரைப் புறஞ்சேரியில் கோசிகமாணி தந்த மாதவியின்

அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன் /வடியா கிளவி மனக்கொளல் வேண்டும் (சிலம்பு. புறஞ்சேரி. 87 - 88) என்னும் கடிதம்  கண்டு 'தன் தீது இலள்' என உணர்கிறான்.


 " எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும் /பண்நின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல் /போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவி " (அரங்கேற்று காதை வெண்பா)  அப்படிப்பட்ட மாதவி இப்போது தன் கிளவியை  'வடியாக் கிளவி' என்பது 'தன்'னுடைமையைத் துறந்த  துறவு உளப்பாங்கின் உச்சம்; அவலத்தின் உச்சம்.



நடிகை கல்யாணி


 நடப்புச் சூழலில் நடப்பியச் சாயலுடன் கூடிய குறிக்கோள் பாத்திரங்களை உலவவிடும் ஜெயகாந்தனின்,  'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ' இந்த வரலாற்றுப்பார்வைக்கு வாய்ப்பாக அமைகிறது.⁸

  

மாதவியை அவலத் தலைவியாகக் கொண்டு கவிஞர் தமிழ் ஒளி இயற்றிய 'விதியோ? வீணையோ?' என்னும் இசை நாடகமும், 'மாதவி காவியம்' என்னும் குறுங்காவியமும் இவ்வகையில் காணற்குரியன. தமிழ்ஒளிக்கும் ஜெயகாந்தனுக்குமிடையிலான நட்பும் இங்குக் கருதத் தக்கது.⁹


மாதவியின் நவீன வடிவத்தை ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ புதினத்தின் கல்யாணியிடம் காணலாம். இப்புதினம் படமானபோது ஜெயகாந்தன் எழுதிய 'நடிகை பார்க்கும் நாடகம்' என்ற பாட்டில் 'வீணை மீட்டிடும் போதிலே விதி சிரித்ததோர் காதலில்' என்கிற வரிகள் ‘யாழிசை மேல் வைத்துத் தன் ஊழ்வினை  வந்து உருத்ததாகலின்...’ ( கானல்வரி, 226)என்பதன் மறுஆக்கம். படத்தில் நாடகமாகக் கானல் வரிக் காட்சியே இடம் பெறும்.


'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளி'ல் சிலப்பதிகாரத்தின் , குறிப்பாகக் கல்யாணியிடம் மாதவியின்  செல்வாக்கைக் காணமுடிகிறது. கல்யாணியும் தேவதாசி குலத்தில் பிறந்தவள். தேவதாசி மரபின் தொடர்ச்சிக்கான சமூகத்தேவை மறைந்த நிலையில் , கல்யாணி நாடக நடிப்பைத் தன் வாழ்க்கைத்தொழிலாகக் கொள்கிறாள்.


இதழியலாளன் ரங்கா , உறவில் அமைந்த முதல் மனைவியை இழந்தவன். அம்மனைவி பற்றிப் பொருட்படுத்ததத் தக்க குறிப்பு எதுவும் கதையில் இல்லை. பின்னர்,  கல்யாணியும் ரங்காவும் அறிவார்ந்த காதலால் மணக்கின்றனர். இருவரும் அகவையாலும் பட்டறிவாலும் முதிர்ந்தவர்கள்; அறிவாண்மையர்.


காலப்போக்கில் கல்யாணியின் ‘தன்’ - உடைமையை அவ்வாறே ஏற்றுக்கொள்வதில் நவீன 'ஆண்'மகனாகிய ரங்காவுக்கும் நெருடல் ஏற்படுகிறது. அவளுக்கு எந்த நெருடலும் இல்லை; நிபந்தனையும் இல்லை. ஒரு கட்டத்தில் ரங்கா மணவிலக்குப் பெற எண்ணுகிறான். அவளிடம் அன்பைத்தவிர ஏதுமில்லை; ‘தன்’மையை விட்டுக் கொடுக்கும் பேரத்திலும் உடன்பாடில்லை. அவளால் என்ன செய்துவிடமுடியும்?


 ஓராண்டு பிரிந்திருந்தால்தான் மணவிலக்கு என்பது சட்ட நிபந்தனை. அவன் வறட்டுப் பிடிவாதத்தோடு வலிந்து பிரிந்து செல்கிறான்.

அவள் உடல் நிலை குன்றுகிறது. அதற்குப் பிரிவாற்றாமை காரணமில்லை.   

பின்னர், அவளால் நடக்க இயலவில்லை என்பதறிந்த ரங்கா இரக்கம் மீதூர , மணவிலக்குப் பிடிவாதத்தைக் கைவிட்டு அவளைக் காண வருகிறான்; அவளுடனேயே வாழத் தலைப்படுகிறான்.


நவீன இலக்கியமாதலின் கல்யாணி கதைத்தலைவியாக முடிந்தது.


ஜெயகாந்தன்,  கல்யாணி பாத்திரத்தின் இறுதிநிலையை முன்னுரையில் வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறார் , " கல்யாணி வெறும் லட்சியப்படைப்பு. அதைப் பறந்து போகாமலிருக்கும் பொருட்டே, தரையில் காலூன்றும் பொருட்டே, காலை ஒடித்துப் போடுகிற கொடுமையில் கதைக்கு முடிவு கண்டேன். நெஞ்சு ஒடிவதைவிட இது கொடுமை குறைந்த விபத்தல்லவா? எல்லோருக்கும் - ரங்காவுக்கும் கூட அவள்பால் திருப்தியும் அநுதாபமும் ஏற்பட்டு விடுகிறதல்லவா? பாவம்! மனித இயல்பு அப்படித்தான் ஆகிவிட்டது " (பக்.11-12)


மாதவி கோவலனையிழந்து துறவு மனநிலையில் இறுகி மகளையும் துறவியாக்கினாள். கல்யாணி நடையிழந்து நாடகம் துறந்து ரங்காவைப் பெற்று நிறைவடைகின்றாள். 


மாதவி அவலத்தின் தீவிரத்தைக் கல்யாணி மூலமே நான் கண்டுணர்ந்தேன்.


கலித்தொகையும் சிலப்பதிகாரமும் பழஞ்செவ்வியல் இலக்கியங்கள். 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' நவீனச் செவ்வியல் இலக்கியம். அந்தத் தளத்திலும் தரத்திலும் நுண்ணுணர்வுகளை இவை பொதிந்து காட்டுகின்றன.¹⁰


உரிமை மனைவியரை விடவும் காதலாற் கலந்த காமக்கிழத்தியும் கணிகை மாதவியும் நடிகை கல்யாணியும்தாம் அவலத் தலைவியர் .



------------------------------------------------------------------------------------


குறிப்புகள்

1. சிவத்தம்பி, இலக்கியமும் கருத்துநிலையும் , ப.29 


2.தொல்காப்பியப் பொருளதிகாரம்  , வறட்டுத்தனமான வகைகளும் விதிகளுமாக அன்றி,  வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம்   இலக்கிய உயிரோட்டம் பேணுவதைக் காணலாம்.

பின் முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவை

தொல் முறை மனைவி எதிர்ப்பாடு ஆயினும்

இன் இழை புதல்வனை வாயில் கொண்டு புகினும்

இறந்த  துணைய  கிழவோன் ஆங்கண்

கலங்கலும் உரியன் என்மனார் புலவர் (கற்பியல் - 31)

' இறந்தது நினைஇ' (அடி 4. நச்சர் பாடம்) என்பதே பொருட் பொருத்தமுடைய பாடம் என்பது உரை வளப் பதிப்பாசிரியர் க.வெள்ளைவாரணன் கருத்து. 

இதில் முதல் மனைவியும் பின்பு மணந்தவளும் குறிக்கப்படுகின்றனர் ( மூத்த தாரம், இரண்டாம் தாரம் என வழங்குவர்). 


இருவகைத் தலைவியரையும் கைவிட்டுப் பரத்தமை செய்து ஒழுகியவற்றை நினைந்து, ஆங்கட் கலங்கலும் உரியன் என்பது பொருள். 

நச்சர்,  'கலங்கலும் உரியன் ' என்பதற்கு 'அப்பரத்தையர்கண் நிகழ்கின்ற காதல் நிலைகுலைந்து மீளுதலும் உரியன்' எனப்பொருள் கொள்கிறார். இளம்பூரணர் இவ்வாறு விரித்தெழுதாவிடினும் , அவர் தரும் எடுத்துக்காட்டால், இப்பொருளே கொள்கிறார் எனக் கருதலாம். 


ஆனால், கலங்கல் என்பது உள்ளங்கலங்கல்தான்.  அவ்வாறு உளங்கலங்கியதன்  விளைவே பரத்தையைக் கைவிடல். இது உணர்ச்சிகரமான நிலை; இலக்கியத்திற்கு வாய்ப்பான நிலை. 

மீளுதல் என்பதற்கு நூற்பாவில் இடமில்லை. நச்சர், ' உம்மை எதிர்மறையாகலான் மீளாமையும் உரித்து ' என்கிறார். இது நடப்பு. 



காமக்கிழத்தி தலைவன் குறை மறந்து தாய் போல் தழுவி , இடித்துரைத்து மனைவியுடன் பொருந்தி வாழச் செய்வாள் என்கிறார் தொல்காப்பியர்(கற்பியல் 10) ; 

தலைவியும் தலைவனைத் தாய் போல் இடித்துரைத்துத் தழுவிக் கொள்ளுதல் உண்டு என்கிறார் (கற்பியல் 32)


இனி, (4)பரத்தை. பரத்தையைத் தொல்காப்பியரே ஓரிடத்தில் 'மாயப்பரத்தை' என அடையொடு சுட்டுகிறார். சுருங்கவுரைக்கும் இளம்பூரணர்தாமும் , " மாயமென்பது பரத்தைக்குப் பண்பாகி இனஞ்சுட்டாது வந்தது " என்று தெளிவுறுத்துகிறார். அதாவது பரத்தை இயல்பிலேயே மாயத்தன்மை உடையவள் என்பது கருத்து.


" கற்புவழிப் பட்டவள் பரத்தையை ஏத்தினும் 

   உள்ளத் தூடல் உண்டென மொழிப " (பொருளியல், 37) .

   'கற்புக் காரணமாகத் தலைவனது பரத்தமைக்கு உடன்பட்டாலும் தலைவியின்உள்ளத்தில் ஊடல் நிகழும்' என்பது பூரணர் கருத்து. ஏறத்தாழ நச்சரும் இக்கருத்தினரே.


பரத்தையரே , ' தம்முறுவிழுமம்'(தலைவனால் தாமுற்ற துன்பம்) தலைவியிடம் கூறுவதுண்டு என்கிறது தொல்காப்பியம்(பொருளியல் 39) . இதற்குப் பூரணரும் நச்சரும் ,


" நின்னணங் குற்றவர் நீ செய்யும் கொடுமைகள்

  என்னுழை வந்துநொந் துரையாமை பெறுகற்பின்" (கலி. 77) என்பதை எடுத்துக்காட்டுகின்றனர்.



3.i. துறைக்குறிப்புகளில்  அடையின்றிப் பரத்தை என்னும் சொல் ஆங்காங்குக் காணப்படுகிறது. இதுவன்றிக் காதற்பரத்தை, இற்பரத்தை , இல்லிடப் பரத்தை , நயப்புப் பரத்தை , அயற்பரத்தை என்பன உள [குறுந்தொகை - காதற்பரத்தை (164) ; ஒரு பரத்தை தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட இற்பரத்தை (364)/ அகநானூறு - இல்லிடப் பரத்தை (186) ; நயப்புப் பரத்தை இற்பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது (336) ; காதற்பரத்தை (376 & 396)/ ஐங்குறுநூறு - காதற் பரத்தை ( 37 , 40 , 87 , 89 , 90) ; அயற்பரத்தையர் பலரும் கூறினார் என்பது கேட்ட காதற்பரத்தை (40)/ நற்றிணை - பரத்தை மட்டுமே]

3.ii.இற்கிழத்தி, காமக்கிழத்தி, காதற்பரத்தை - என வரிசைப்படுத்தும் இளம்பூரணர், 

" காமக்கிழத்தியராவார் பின்முறை ஆக்கிய கிழத்தியர் . அவர் மூவகைப்படுவர் ; ஒத்த கிழத்தியரும் இழிந்த கிழத்தியரும் வரையப் பட்டாரும் என . ஒத்த கிழத்தியர் முந்துற்ற மனையாளன்றிக் காமம் பொருளாகப் பின்னுந் தன் குலத்துள்ளாள் ஒருத்தியை வரைதல் . இழிந்தாராவார் - அந்தணர்க்கு அரச குலத்தினும் வணிககுலத்தினும் வேளாண் குலத்தினும் கொடுக்கப்பட்டாரும் , அரசர்க்கு ஏனையிரண்டு குலத்தினுங் கொடுக்கப்பட்டாரும் , வணிகர்க்கு வேளாண்குலத்திற் கொடுக்கப்பட்டாரும் , வரையப்பட்டார் - செல்வராயினார் கணிகைக் குலத்தினுள்ளார்க்கும் இற்கிழமை கொடுத்து வரைந்து கோடல் . அவர் கன்னியில் ` வரையப்பட்டாரும் அதன் பின்பு வரையப் பட்டாரும் என இருவகையர் . அவ்விருவரும் உரிமை பூண்டமையாற் காமக் கிழத்தியர்பாற் பட்டனர் . பரத்தையராவார் யாரேனின் , அவர் ஆடலும் பாடலும் வல்லராகி அழகு மிளமையுங் காட்டி இன்பழும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டுந் தங்காதார் " என நால்வருணம் சார்ந்தும் பொருள் நிலை சார்ந்தும் வகைப்படுத்துகிறார்.


3.iii.தலைவனின்  புறத்தொழுக்கத் தொடர்பினராகப் பரத்தையர் என்னும் ஒருவகையினரை மட்டுமே சுட்டுகிறது இறையனார் அகப்பொருள்.

(1)பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தி , (2) காமக்கிழத்தி , (3) குலப் பரத்தையர் , (4) காதற்பரத்தை , (5) சேரிப் பரத்தை (அகப்பொருள் விளக்கம், நூ.59, 113 , 114) என்போரைப் பொதுக் காலம் 12ஆம் நூற்றாண்டின் ,  நாற்கவிராச நம்பி இலக்கியங்கண்டு  வகைப்படுத்தியுள்ளர் . 

(1) காதற்பரத்தை, (2) பின் முறைவது வைப்பெருங்குலக்கிழத்தி, (3) காமக்கிழத்தி என மூவரைக் கூறுகிறது 'மாறனகப் பொருள்' .


3.iv.சான்றோர் செய்யுள்களில் 'விலை நலப் பெண்டிர்' , 'விலைக் கணிகை' , 'கொண்டி மகளிர்' என்னும் குறிப்புகள் பரத்தையர்க்கும் பொருட்குமுள்ள உறவைக் காட்டும்' என்று கூறும் அ. தட்சிணாமூர்த்தி , 'பரிபாடலில் இடம் பெறும் ஒரு குறிப்பைத்தவிரப் பரத்தையர்க்கும் தலைவனுக்குமிடையே பொருட் பரிமாற்றம் இருந்தமைக்குரிய சான்றில்லை ' என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார் ( சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள், பக். 94 & 110). 



4.காமக்கிழத்தி கூற்றைத் தலைவி கொண்டெடுத்து மொழிந்ததுபோல் தோன்றுமாறு இதன் பழைய கூற்று விளக்கக் குறிப்புக் காணப்படுகிறது. நச்சினார்க்கினியரின் கலித்தொகை உரை காமக்கிழத்தி கூற்று எனக் கொள்ள இடந்தந்தாலும் , அவர் காட்டும் தொல்காப்பிய நூற்பா ( பொருளதிகாரம் 241) உரையை நோக்கத்  தலைவி கூற்றெனவும் கொள்ள வைக்கிறது.

இளவழகனாரும் (உரைவிளக்கம் ,ப. ௫௩)  மர்ரே எஸ்.ராஜம் வெளியிட்ட பதிப்பின் ஆசிரியக்குழுவினரும் 'காமக்கிழத்தி கூற்று' என்றே குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இப்பாட்டின் உணர்வு காமக்கிழத்தி கூற்றாகக் கொள்ளவே இடந்தருகிறது.


5. " உள்ளுறை யுவமம் ஏனை யுவமமெனத்

       தள்ளா தாகும் திணையுணர் வகையே " (தொல்காப்பியம்,அகத்திணையியல், 49)

நச்சினார்க்கினியர் தமக்கேயுரிய பார்வையில், உள்ளுறையுவமமே ஏனை உவமம் எனக் கூறும்படி உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாய் நின்று , அகத்திணை உணர்தற்குக் கருவியாகிய உள்ளுறை உவமம் போல வரும் என்று பொருள் கூறுகிறார்.


6. துணிவிலள், நிறையிலள், தன்னிலள் என்று அவன் பரத்தையைச் சுட்டுவதாக இளவழகனார் கருதுகிறார். ஆனால் 'இவள்' என்னும் அண்மைச் சுட்டு காமக்கிழத்தியைக் குறித்தலே இயல்பு. 


7. நுண்பூண் ஆகம் வடுக்கொள முயங்கி

மாயப்பொய் பலகூட்டிக் கவவுக் கரந்து

சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த 

இளம் பல் செல்வர் வளம் தப வாங்கி 

நுண் தாது உண்டு வறும் பூ துறக்கும் 

மென் சிறை வண்டு இனம் மானப் 

புணர்ந்தோர் நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து

பழம் தேர் வாழ்க்கைப் பறவை போலக்

கொழும் குடி செல்வரும் பிறரும் மேஎய 

மணம் புணர்ந்து ஓங்கிய அணங்கு உடை நல் இல் 

ஆய் பொன் அவிர் தொடி பாசிழை மகளிர் (மதுரைக்காஞ்சி 569 - 579)


 " புறமண்டலத்தாரும் உள்ளூரிலுள்ளாருமாய்த் தம்முடைய வடிவழகை விரும்பிவந்த இளையராகிய பல செல்வத்தையுடையாரை,

பல வஞ்சனைகளையுடைய பொய்வார்த்தைகளாலே முதற்கூட்டிக்கொண்டு அவருடைய நுண்ணிய பூண்களையுடைய மார்பைத் தம்மார்பிலே வடுப்படும்படியாக முயங்கிப் பின்னர்,அன்புடையார்போலே முயங்கினமுயக்கத்தை அவர்பொருள் தருமளவும் மறைத்து அவருடைய செல்வமெல்லாம் கெடும்படியாக வாங்கிக்கொண்டு,

பூ அலருங்காலமறிந்து அதன் நுண்ணிய தாதையுண்டு தாதற்ற வறுவியபூவைப் பின்னர் நினையாமல் துறந்துபோம் மெல்லிய சிறகையுடைய வண்டின் திரளையொப்ப,

தம்மை நுகர்ந்தோருடைய நெஞ்சு கலக்கமுறும்படி அவரிடத்து இனிய கூட்டத்தை நேராகக் கைவிட்டு, பழுமரமுள்ள இடந்தேடிச் சென்று, அவற்றின் பழத்தையே ஆராய்ந்து வாங்கி நுகர்தலைத் தமக்குத் தொழிலாகவுடைய புள்ளினம்போல,

வளவிய குடியிற்பிறந்த செல்வரும் அவர்களாற்றோன்றிய பிறசெல்வரும் மேவப்பட்ட இல்லுறை தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களில் " - நச்சினார்க்கினியர்.



 ...                                ...                     ...               காம

மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை 

பெண்மைப் பொதுமைப் பிணையிலி ஐம் புலத்தைத்

துற்றுவ துற்றும் துணை இதழ் வாய்த் தொட்டி 

முற்றா நறுநறா மொய்புனல் அட்டிக் 

காரிகை நீர்ஏர்வயல் காமக்களி நாஞ்சில் 

மூரி தவிர முடுக்கு முது சாடி 

மடமதர் உண்கண் கயிறுஆக வைத்துத்

தட மென் தோள் தொட்டுத் தகைத்து மட விரலால் 

இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையைத்

தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி (பரிபாடல் 20: 48 - 58)


' [தலைவியிடமிருந்து காணாமற் போனதாகக் கருதப்பட்ட வளையையும் ஆரத்தையும் அணிந்திருந்த கணிகையைக் கண்ட  தோழியர் , தலைவிக்கு ஆதரவாகப் பரத்தையை ஏசுகின்றனர்] காமத்தைப் பொய்யொடு கலந்து விற்கும் கணிகையே! பொதுமகளே! காமுகப்பன்றிகள் நுகரும் தொட்டியே! வனப்பாகிய வயலிலே கள்ளாகிய

நீரைவிட்டுக் காமமாகிய கலப்பையாலே எம்முடைய எருது சோம்பிக்

கிடவாமல் உழுகின்ற பழைய சாலே! பொருள் வழங்குவோரைக்

கண்ணாகிய கயிற்றாலே தோளாகிய தறியில் கட்டி காமவின்பம்

மிகும் பொருட்டு இசையினையும், எம்பாற் களவுகொண்ட அணிகளை

அணிந்து கொண்ட அவ்வழகையும், ஊட்டாநின்ற பொதுமகளே! ' 

- பொ.வே. சோமசுந்தரனார் தரும் பொருட் சுருக்கம் .


மாலை அணிய விலை தந்தான் மாதர் நின் 

கால சிலம்பும் கழற்றுவான் சால (௸, 79 - 80 )


[அதுகேட்ட கணிகை] " இவ்வணிகளை எமக்கு

விலையாக அவன் தந்தான், இன்னும் நின் சிலம்புகளையும் கழற்றி

எனக்குத் தருவான் "[ என்றாள்]

- பொ.வே. சோமசுந்தரனார் தரும் பொருட் சுருக்கம் .


வள்ளுவர் இத்தகைய பொருட்பெண்டிர் தொடர்பைத்தான் கண்டிக்கிறார் என்று தோன்றுகிறது. அது தனி ஆய்வு .


8.கு.ப.ராஜகோபாலன் , தி.ஜானகிராமன் முதலியோர் புனைகதைகளுள் சிலவும் இவ்வகைப் பார்வைக்கு உகந்தவைதாம் என்றாலும் சிலம்பின் செல்வாக்கைக் காட்டுகிற ' ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ' வரலாற்றுப்போக்கின் இழையைக் கொண்டிருப்பதால் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.


9.தமிழ்ஒளியின் இப்படைப்புகள் சிலம்பு வழிப் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை. மாதவிபால் பரிவுடன் , பெரும்பாலும் சிலப்பதிகார மாதவியையே தலைவியாக்கிக் கருத்தும் உணர்ச்சியும் மேலோங்கிய சிறு காப்பியங்களாக்கினார் தமிழ் ஒளி. தமிழ்ஒளியின் இந்தப் பரிவையும் உணர்ச்சியையும்  ஜெயகாந்தன் உடனிருந்து உணர்ந்திருப்பார் என்றும் இந்த உணர்வும்  கல்யாணி உருவாக்கத்தில் சற்றே செயல்பட்டிருக்கலாம் என்றும் கருத இயலுமாயினும் , கல்யாணியிடம் மாதவி செல்வாக்கைக் காண முடியுமாயினும் , கல்யாணி தனித்தன்மை வாய்ந்த பாத்திரம்.

'கணிகை மாதவியும்  நடிகை கல்யாணியும்' என்னும் எனது கட்டுரை , ' ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ' புதினத்தில் சிலப்பதிகாரம் செலுத்தியுள்ள செல்வாக்குப் பற்றிய விரிவான தனிக் கட்டுரை.



10.நவீன இயற்பண்பிய , நடப்பியப் புனைகதைகளில் ஆடவர்தம்  மணப்புறம்பான   தொடர்புடைய பெண் பாத்திர உணர்வுகளும் பலப்பல. இவை தனி ஆய்வுக்குரியன.



- 31 அக்.2018 முகநூல் இடுகை (அன்று முதல் இன்று வரை அவலத் தலைவியர் ) விரிவுபடுத்தப்பட்டுள்ளது.





Tuesday, November 17, 2020

தமிழ் மறுமலர்ச்சியும் பண்டித ம. கோபாலகிருஷ்ணையரும்

 

தமிழ் மறுமலர்ச்சியும் பண்டித ம. கோபாலகிருஷ்ணையரும்
————————————————————————————————————————

தமிழக உயர்கல்வி வரலாற்றில் முத்திரை பதித்துவருகிற திருச்சிராப்பள்ளி, தேசியக்கல்லூி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நிகழும் , இந்த அறக்கட்டளைச் சொற்பொழிவினை ஆற்ற எனக்கு வாய்ப்புக் கிடைத்ததை ஒரு பேறாக எண்ணுகிறேன்.
இதற்காகக் கல்லூரிச் செயலாளர் உள்ளிட்ட மேலாண்மையர், கல்லூரி முதல்வர் உள்ளிட்ட நிருவாகத்தினர், பரிந்துரைத்த தமிழ்த்துறையினர் ஆகிய அனைவர்க்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்கூறு நல்லுலகில் ‘ஐயர்’ என்பது மகாமகோபாத்தியாய, தாக்ஷிணாத்திய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களையே பெரிதும் குறிக்கும். ஆயினும் எனது இந்த உரையில் பண்டித ம. கோபாலகிருஷ்ணையர் அவர்களையே குறிக்குமாறு அமைத்துக் கொண்டிருக்கிறேன்.




இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இடையறாத் தொடர்ச்சியுடைய தமிழ் இலக்கிய வரலாற்றில் எண்ணிலடங்காப் புலவர்களும் கவிஞர்களும் அருளாளர்களும் அறிஞர்களும் தம் படைப்புகளால் தமிழுக்கு வளம் சேர்த்துள்ளனர். இந்தப் பெரும் பரப்புக் காரணமாகவே அறிஞர் பலர் அதிகம் பேசப்படாமற்போயினர். அவர்களுள் ஒருவர் நம் ஐயரவர்கள்.
நல் ஊழாக ஐயரவர்களின் பெயர்த்தியாரும் ஆங்கிலப் பேராசிரியருமாகிய முனைவர் உஷா மகாதேவன் அவர்கள் ஐயரவர்களின் படைப்புகளை மீட்டெடுத்து நல்கியிருக்கிறார்கள்; மேலும் ஒரு தொகுதியளவிற்கு ஐயரவர்களின் எழுத்துகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றையும் வெளியிட இருப்பதாகவும் கூறுகிறார்கள்.அதற்காகத் தமிழுலகின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐயரவர்கள், திருவாளர்கள் மகாதேவையர் –பிரவர்த்த ஶ்ரீமதி அம்மையார் இணையருக்கு மகவாக 1878இல் பிறந்தார்.
              


சோழவந்தானூர் அரசஞ்சண்முகனாரிடம் தமிழ் பயின்று தேர்ந்தார்; ஆங்கிலத்திலும் புலமைபெற்றார்; போதகாசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், இதழாசிரியர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் ,  பாவலர் ,  நாட்டுப்பற்றும் மொழிபற்றும்மிக்க செயல்வீரர் , பெண்கள் மேம்பாட்டில் அக்கறைகொண்ட சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர் எனத் தம் பன்முகத்திறன்களையும் நிறுவி 1927இல் மறைந்தார்.
ஐயரவர்களின் எழுத்துகள் 1896இலிருந்தே – அவரது பதினெட்டாம் அகவையிலிருந்தே – வெளிவரத் தொடங்கிவிட்டன.
அவர்கள் தமிழாக்கித் தந்த ஆங்கிலப் பாக்கள், அவரே இயற்றியளித்த தமிழ்ப் பாக்கள், அறிவியல் மேலோங்கித் திகழும் பல்துறைக் கட்டுரைகள் ஆகியன ‘அரும்பொருட்டிரட்டு’ என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
இவையன்றி, ‘விவேகோதயம்’ என்னும் திங்கள் இதழில் தொடராக எழுதிய ‘புதல்வர் கடமை’ சிறு நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
வாசக நடை என்று சொல்லக்கூடிய அகவற்பாவாலான ‘விசுவநாதன் அல்லது கடமை முரண்’ என்னும் செய்யுள் நாடகம், உரைநடையாலியன்ற ‘மௌன தேசிகர்’ என்னும் நகைச்சுவை நாடகம் ஆகிய யாவும் 680 பக்க அளவில் களஞ்சியமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
அரும்பொருட்டிரட்டுகள் மூன்றையும் ஒழுங்கு சேர்த்த அளவைப்போல் மேலும் மூன்று மடங்கு படைப்புகள் நூலாக்கம் பெறாமல் இருப்பதாக ஐயரவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
இவையாவற்றையும் எனது ஓர் உரையில் விரிப்பிற் பெருகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் நீலகண்டன் ஓரிருமுறை தொலைபேசியில் தலைப்புக் கேட்டார். இனியும் தள்ளிப்போட இயலாது என்ற நிலையில் ‘தமிழ் மறுமலர்ச்சியும் பண்டித ம. கோபாலகிருஷ்ணையரும்’ என்னும் தலைப்பைச் சொன்னேன்.

தமிழ் வளர்ச்சி வரலாற்றில் ஒரு தேக்கம் பின்னடைவு இருப்பதை உணர்ந்து அதைக் கடந்து முன்னேற முகிழ்த்த சிந்தனையை, செயல்பாட்டைத் தமிழ் மறுமலர்ச்சி எனலாம்.

‘அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என்பது போல ஐயர் அருளாலேயே இத்தலைப்பை நான் எய்தினேன்.
‘தமிழ் மொழியின் தாழ்நிலைக்குக் காரணமும் அதை விருத்தி செய்யும் விதமும்’ என்னும் அவரது கட்டுரையே இத்தலைப்பைத் தந்தது.
தலைப்பைத் தந்தது மட்டுமன்று, அவரது பெருங்களஞ்சியத்துள் உழன்று கருத்துகளைத் தொகுத்தும் வகுத்தும் பொழிவை அமைக்கும் இடர்ப்பாட்டையும் களைந்தது அக்கட்டுரை. தமிழின் தாழ்ச்சிக்கான காரணங்கள் உயர்ச்சிக்கான வழிமுறைகள் இரண்டையும் அவர் எண்ணிட்டு வரிசைப்படுத்தியிருக்கிறார். அந்த அடைவிலேயே அவர்தம் சிந்தனைகளையும் செயல்பாட்டையும், சாதனைகளையும் சொல்ல முயல்கிறேன்.

மறைமுதற் கிளந்த வாயன் மதிமுகிழ் முடித்த வேணி
இறைவர் தம் பெயரை நாட்டி இலக்கணம் செய்யப் பெற்றே
அறைகடல் வரப்பிற் பாஷை அனைத்தும்வென் றாரியத்தோ
டுறழ்தரு தமிழ்த் தெய்வத்தை உள்நினைந் தேத்தல் செய்வாம். (ப.426)

என்று அக் கட்டுரையைத் தொடங்குகிறார் ஐயர்.
தேசாபிமானம், பாஷாபிமானம் இன்மை, உத்தியோகம், பதவி, பொருளீட்டல் நோக்கி அந்நிய மொழி மோகம், தமிழறியாமையே கௌரவம் என எண்ணுதல், தமிழில் பேசவும் இயலாமை, தமிழை இழிவு செய்தல், ஆத்திசூடிகூட அறியாமல் தமிழைப் பழுதுகூறல், தமிழின் அருமை பெருமையை அறியாமை இவற்றையெல்லாம் முன்னுரை போல அடுக்குகிறார் ஐயர்.

“சரித்திரங்களையும் சாஸ்திரங்களையும் தமிழில் மொழிபெயர்க்கலாம் என்றால் சில விஷயங்களை அறிவிக்க ஏற்ற மொழிகள் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கிறது” என்று சொல்லுவதற்கு “ஹீஸ்ட்ரீகளையும் ஸயன்ஸ்களையும் டமில் லாங்கவேஜில் டிரான்ஸ்லேட் பண்ணலாம். ‘நா’ செல திங்ஸ்களை எக்ஸ்பரஸ் பண்ண டெக்கினிக்கல் டர்ம்ஸ்களை ப(f))யிண்ட் அவுட் ‘பண்றது’ ரொம்ப டிபிகல்ட்டாக இருக்கு” (ப.427)
என்று சொல்வார்களாம். ஐயரவர்கள் நடைமுறையை நகைச்சுவையுணர்வுடன் பதிவு செய்கிறார்.

தமிழ் தளர்நிலை அடைந்ததற்கான பதினைந்து காரணங்களை அவர் அடுக்கியிருக்கிறார். நான் சுருக்கிச் சொல்கிறேன்.

1. ஆயிரக்கணக்கான அரிய தமிழ் ஏடுகள் மறைவு.
2. அயலவர் தமிழகத்தை அடிமைப்படுத்தியது.
3. தமிழை ஆதரிப்போர் அருகியது.
4. சீத்தலைச் சாத்தனார் போன்ற அபிமானிகள் இன்மை.
5. கம்பர் போன்ற கவிஞர் தோன்றாமை.
6. இராமபாணம் முதலியவற்றால் நூல்கள் அழிந்தமை.
7. நெருப்பாலும் நீராலும் ஏடுகள் அழிந்தமை.
8. பண்டைநூல், உரை ஏடுகள் வைத்திருப்போரின் பதுக்கல்.
9. போலிப் பண்டை ஏடுகள் உருவாக்கும் சாதுரியத் திருட்டுத்தனம்.
10. மத உணர்ச்சியால் பாடங்களைத் திருத்துதல்; நீக்குதல்.
11. தற்கால அறிவிலிகளின் நூல்களைப் பண்டைநூல்போல் பரப்புதல்.
12ஆவது காரணத்தை ஐயரவர்களின் மொழியிலேயே பார்ப்போம்:
அற்ப சந்தோஷிகளிற் சிலர், தமிழ் மொழிகள்யாவும் ஸம்ஸ்கிருதத்தின் திரிபென்று சாதிக்கிறார்கள். வேறு பெருமூடர் ஸம்ஸ்கிருத பதங்கள் எல்லாம் தமிழின் திரிபுகள் என்று பிரசித்திப்படுத்தி அவ்வாறு கூறற்கு, அச்சமின்றி அருவருக்கத்தக்கதும் சுத்த அபத்தமானதுமான காரணங்களைக் கற்பித்துத் தம் போன்ற குருட்டபிமானிகளின் துதி பெற்றுக் காலங்கழிப்பாராயினர். இவ்விரு திறத்த கூபமண்டூகங்களும் நாணித் தலைகவிழ்ந்து வாயடங்கி நிற்குங் காலமே தமிழ்க்கு ஷேம காலமாகும். நிற்க (ப.432)
ஐயரது நடுநிலைநோக்கின் ஆவேசத்தை இதனால் உணரலாம். இக்கட்டுரையின்
தொடக்கப்பகுதியில் “கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய பாஷைகளுக்குப் பெற்றோர் நிலைமையிலிருந்து பேருதவி புரிந்துவரும் பெருமையை யுடையதும் திராவிட தேச முழுதும் ஏகசக்திராதிபத்தியம் செலுத்திவந்ததுமான நம் தமிழ்மொழி (ப.428)” என்கிறார். ‘நம் தமிழ்மொழி’ என்பதில் பொதிந்துள்ள உரிமையை உணர வேண்டும்.
தமிழ் திராவிட மொழிக் குடும்பத்துள் மூத்தது எனலாமேயன்றி, இக்கால ஒப்புமொழியியல் நோக்கில் பிற திராவிட மொழிகளின் தாய் எனக் கூற இயலாது. எனினும் மனோன்மணீயம் சுந்தரனார் முதலிய அக்கால அறிஞர் அவ்வாறு கருதியதை ஏற்கிறார் ஐயர்.


13. தமிழ் வழிக் கல்வியின்மை.


14. ஒட்டக்கூத்தர் முதலிய கடும்புலவோர் போட்டியுணர்வால் தமிழ் கற்றபோக்கு இக்காலத்தில் இல்லாமை.


15. “இஃதொரு உயர்தனிச் செம்மொழி என்றும் சாமானியர் மட்டுமேயன்றிச் சர்வகலாசாலைச் சங்கத்தாரும் தமிழ் மணமறியா அந்நிய துரைத்தனதாரும் அறிந்து கொள்ளாததே கடைசிக் காரணமாகும்” என்று முடிக்கிறார் ஐயர்.

அடுத்துத் தமிழை வளர்க்க என்ன செய்யவேண்டும் என விளக்குகிறார். அதில் பதினாறு அமிசங்களை வரிசை எண்ணிட்டு விளக்கியுள்ளார்.


௧.  சங்கங்கள் ஏற்படுத்துதல். பிரசங்கங்கள் நடத்துவித்தல்.ஐயரவர்கள் 1901ஆம் ஆண்டிலேயே ‘மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கம்’ என்னும் பெயரில் ஒரு சங்கத்தைத் தொடங்கியிருக்கிறார். இதில் ஒன்றாக ‘நச்சினார்க்கினியர் ஞாபகச் சின்னம்’ என ஒன்றையும் அமைத்திருக்கிறார். இந்த ஞாபகச் சின்ன சபை மதுரையில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணாக்கர்க்குத் தமிழறிவு மிகும் பொருட்டுத் தேர்வுகள் நடத்தி, தேறியோர்க்குச் சான்றிதழ் வழங்கிவருந்திருக்கிறது.

தமிழ் உயர்கல்வி வரலாற்றின் பின்னணியில் நோக்கும்போதுதான் அந்தக் காலத்திய இந்த முயற்சி ஒரு சாதனை என்பது விளங்கும். அதே ஆண்டில் தொடங்கப்பட்ட மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராவும், அதன் தமிழ் ஆங்கிலத் தேர்வுகளுக்குத் தேர்வாளராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.


௨.  'கற்றோரேயன்றி மற்றோரும் உணருமாறு எளியநடையில் பேசுதல்'.

இது மறுமலர்ச்சி நோக்கில் இன்றியமையாத ஒன்று எதனையும் தரங்குன்றாமல் வெகுமக்களிடம் கொண்டு செல்லுதல். பாரதியாரின் பாஞ்சாலி சபத முன்னுரையில் இக்குரலைக் கேட்கலாம். இது சனநாயகத்தின் குரலுமாகும்.
நம் ஐயரவர்கள் தம் பண்டித நடை பற்றிய சுயவிமரிசனப் பார்வை கொண்டிருந்தார்.
தம் படைப்புகள் அகராதியோ விளக்கவுரைகளோ வேண்டாதவாறு சொல்லாழமிக்க நடையோடு சற்றும் விரசமோ தரக்குறைவோ இல்லாமல் அமைந்ததற்குத் தம் சகோதரிகளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக ஓரிடத்தில் எழுதியுள்ளார்.(ப.xcvi).

பண்டித நடையும் கடின சந்தியும் அரிதாக அவர் நடையில் தென்படாமல் இல்லை என்றாலும் அவை இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தவை என்பதை உளங்கொண்டு காணும்போது பொருட்படுத்த வேண்டாதவை என்று தெளியலாம்.
மேலும், ஐயரவர்கள் இலக்கண இலக்கியங்கடந்து அறிவியல், பொதுஅறிவு சார்ந்த பல்வேறு கட்டுரைகளை எழுதித் தமிழுக்கும் புதுவளம் சேர்க்க முனைந்தார். அவற்றுக்குப் புதுப்புதுச் சொல்லாக்கங்களும் சொற்சேர்க்கைகளும் தேவைப்பட்ட நிலையில் , அவரே அப்புதுமைகளைத் தமிழ்மயப்படுத்திக் கொடுத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. இவற்றுக்கு அவரது புலமை பெருந்துணை புரிந்திருக்கிறது.
பவளம் பற்றிய கட்டுரையொன்றில், அஃது உயிரினத்திலிருந்து உருவாவதை விளக்கும்போது அதன் உறுப்பு ஒன்றைப் பற்றி, “இவை, மூக்கின்றி மணங்கவர்ந்து, காலின்றி நடத்தல் செய்து, நோக்கின்றிக் கண்டு, நனி நுவல்தாய நாக்கின்றி அறுசுவையும் அருந்துகின்ற சிற்றுயிர்க் கிருமியாகிய அமீபா (Amoeba) அல்லது வெண்குருதியணு(White corpuscles)வைப் பற்றி நினைவூடாமற் போகா (ப.222).” என்கிறார்.
பிறவியிலேயே பார்வையற்ற சிப்பாய்க் கறையான்கள் மூர்க்கமாகப் போரிடக் கூடியவை. “செயங்கொண்டார் மட்டும் இவற்றின் சண்டையைக் கவனித்துப் பார்த்திருப்பாராயின் இவற்றின் போரைச் சிறப்பித்தும் ஓர் பரணி பாடியே இருப்பார்” என்று வருணிக்கிறார் ஐயர்.
“எறும்புப் புற்றைச் சேதித்துச் சோதித்தால் அதில் மூன்றுவகை எறும்புகள் இருக்கக் காணலாம்” என்னும்போது இயல்பாக எதுகை நயம் அமைகிறது.

தாவரங்கள் பரவும் விதத்தை விளக்கும்போது
" ….. … ….. நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்”
என்னும் ஔவையாரின் நல்வழி அடிகளை எடுத்தாளுகிறார். அறிவியல் மட்டுமே அறிந்தோர்க்கு இஃது இயலாது.
ஆங்காங்கே இலக்கிய மேற்கோள்கள், தொடர்கள், பழமொழிகள், மரபுத்தொடர்கள் முதலியவற்றை ஐயரவர்கள் கையாளும் பாங்கை விரிப்பிற் பெருகும். தனித்துப் பேசற்குரிய பகுதி அது.


௩. சங்கங்களின் அங்கத்தினராகி நமக்குத் தெரிந்ததைப் பிறர்க்குரைத்து, பிறர் உரைகளைக் கேட்டிடுக என்கிறார்.
ஐயரவர்கள் இதனைக் கடைப்பிடித்ததை மேலே கண்டோம். தமிழ்ச் சங்கங்கள் பலவற்றை வாழ்த்திப் பாடிய பாக்கள் அரும்பொருட்டிரட்டில் உள்ளன.


௪.  பிழைப்பின் பொருட்டு ஆங்கிலம் கற்றாலும் இயன்றவரை தமிழில் – சுத்தத் தமிழில் – பேச வேண்டும் என்கிறார். சுத்தத் தமிழ் என்று அவர் சுட்டுவது பேச்சு வழக்கில் வழுவி வருவனவற்றை விலக்கிய தமிழ். இப்போக்குக் காலப்போக்கில் தமிழைச் சிதைக்கும் என்று கருதியிருக்கலாம். இது விவாதத்திற்குரியது என்பதை மட்டும் இங்கே சொல்லி நிறுத்துகிறேன்.


௫ . தமிழ் உபாத்தியாயரின் போதனா சக்திக் குறைவு, தமிழ் அபிமானமின்மை, அசிரத்தை முதலியவற்றைக் கடந்து மாணாக்கர் கற்றோரைத் தேடி, தாமே ஈடுபட்டுத் தமிழ் கற்க வேண்டும் என்கிறார் ஐயர். அவர் காலத்தினும் நம் காலத்திற்கு இது மிகப் பொருந்தும்.


௬.  கீழ் வகுப்புத் தமிழ்ப் பாடங்களையும் நன்கு கற்றால் மேல் வகுப்பிற்குப் போகப் போக அவற்றின் நுட்பம் விளங்கும்.


௭. இலக்கியப் பயிற்சி வன்மையால் இலக்கணப் பயிற்சி எளிதாகும். இலக்கணப் பிழையின்றி எழுதலாம்.


௮. தமிழின் நல்லிலக்கியங்களைத் தக்காரைக் கொண்டோ தாமாகவோ கற்க வேண்டும் என்கிறார் ஐயர். இஃது உயர் கல்வியில் தமிழைப் பாடமாகப் பயிலாத பிறருக்குரிய அறிவுரை.


௯. எளிய இனிய செந்தமிழ்க் கவிகள் இயற்றுக.


௧0. தமிழில் செய்யுள் நூல்கள் மிகுதி. எனவே வசன நடையில் நாடகங்கள், நவீனக் கதைகள் முதலியன எழுதவும் எழுதச் செய்யவும் வேண்டும் என்கிறார் ஐயர்.
ஐயரவர்கள் மரபுவழியில் இனிய பாக்களை இயற்றியதோடு வசனநடை நாடகத்தையும் இயற்றியிருக்கிறார். ‘நவீனக் கதை’ என்று ஐயரவர்கள் சுட்டியிருப்பது விதந்து கூறத்தக்கது.
தமிழில் நவகவிதை வரலாற்றைத் தொடங்கிய பாரதியின் பெரும்பாலான கவிதைகள் மரபுவழிப் பாக்களில் புதுமை செய்யும் முயற்சியே. கதைகளில் நவீனத்தை ஏறத்தாழ முற்றிலும் முயன்ற முன்னோடி புதுமைப்பித்தன்.
பாரதி, நம் ஐயரைவிட அகவையில் இளையவர்; ஐயருக்கு நண்பர்; ஐயரால் சுதேசமித்திரன் ஏட்டில் பணியாற்றப் பரிந்துரைக்கப் பெற்றவர். ஒருவகையில் பாரதி நவீனச் சிறுகதைக்கும் முன்னோடி என்பதைச் சி.சு. செல்லப்பா பின்னர் இனங்கண்டு விளக்கினார் (தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது, இரண்டாம் பதிப்பு).
பாரதியோ, புதுமைப்பித்தனோ ஐயரின் சிந்தனைத் தாக்கத்தால்தான் நவீன இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டனர் என்பதன்று; ஐயர் மறுமலர்ச்சியின் அமிசங்களுள் ஒன்றாக அதனைத் தம் சிந்தனையளவில் இனங்கண்டார் என்பதே கருதவேண்டியது.


௧௧.  பிற மொழிகளிலும் தன்மொழியிலும் புலமை உள்ளவர்கள் தமிழில் அரியனவற்றைப் பிற மொழிகளிலிருந்தும், பிறமொழிகளில் அரியனவற்றைத் தமிழிலிருந்தும் பெயர்த்தல் வேண்டும என்கிறார் ஐயர்; குறிப்பாக அறிவியல் துறைகளாகிய “பௌதிக பூகோள, கிருஷகணித, இரசாயன சாஸ்திரங்களை இயன்றவரை இன்னோர் மொழிபெயர்க்க முயன்றுதீர வேண்டும்” என்கிறார்.
குறிப்பாகச் சொல்லாக்கங்களில் அவர் கருத்துச் செலுத்தியுள்ளார். இதுபற்றிச் சற்று விரிவாகச் சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன். என்னைப் பொறுத்த அளவில் ஐயரவர்களின் கலைச்  சொல்லாக்க முயற்சியை - எண்ணிக்கை குறைவாகத் தோன்றினாலும் - குறிப்பிடத்தக்க சாதனை என்பேன்.
அவரது களஞ்சியத்திலமைந்துள்ள கட்டுரைகளின் வரிசைப்படி கிடந்தாங்கு விளக்குகிறேன்.

[floats]* – மிதப்பான் (மீன்பிடி வலைகளில் உள்ளவை)
[Top] –அடைப்பான் (புட்டிகளின் கார்க் மூடி)
[Life Jacket] – உயிர்ச் சட்டை
[Life Belt] – உயிர்க்கச்சு
[Life Boat] – சேமப்படகுகள் அல்லது ஜீவரஷா ஓடங்கள்
[Bung] – பருமுளை. பீப்பாய்களின் பக்கவாட்டில் பெரிதாக அமைந்த மூடியை ஒத்த  ஒன்று
[Naturalist] – பிரகிருதா சாஸ்திரி
[Botanist] – தாவர சாஸ்திரி
Parasitic plants – தொத்துச் செடி
Delta – கழிமுகத்தெதிர் நிலம்
Butter - wort – வெண்ணெய்ப் பூண்டு
Sun dew – கதிர்ப்பனிப் பூண்டு
Bladder – wort – துருத்திப் பூண்டு
Fly – trap – ஈப் பொறிப் பூண்டு
Pitcher – plant – கமண்டலப் பூண்டு
Birds of paradise – எருத்துவாற் குருவி ( நேர்ப் பெயர்ப்பாக அன்றித் தன்மை கண்டு செய்த தமிழாக்கம்)
[Offensive weapon?] – அடுபடை
[Defensive weapon??] – தடுபடை

* பகர அடைப்பினுள் உள்ள ஆங்கிலச் சொற்கள் ஐயர் சுட்டியன அல்ல. நான் கண்டு தந்திருப்பவை.

இந்த அடுபடை, தடுபடை என்னும் எதுகை நயமுடைய சொற்கள் மூன்று இடங்களில் (ப.196, 221, 258) காணப்படுகின்றன. ஒன்றைப் பார்ப்போம், “இப்பூச்சியின் [பவளப் பூச்சியின்] கரங்களிடத்து அதற்கு வேண்டிய ‘அடுபடை’களும் ‘தடுபடை’களும் அமைக்கப்பட்டுள்ளன (ப.221)” என்றெழுதுகிறார் ஐயர். படை என்பது ஆயுதம் என்னும் பழம்பொருளில் இங்கு ஆளப்பட்டுள்ளது.
தமிழ்ப் புலமை ஊற்றம் இல்லாத ஒருவர் இவ்வாறான சொல்லாக்கத்தைத் தரவியலாது என்பது வெளிப்படை.
பவளப்பூச்சியிடம் காணும் அடுபடைகளுள் ஒன்றன் இயக்கத்தை ஐயரவர்கள் விளக்கியுள்ளார்; அதில், [(coiled venomous) thread (with a barb)] “நூலறை” என ஒன்றைக் குறிப்பிடுகிறார். ஆங்கிலத்தில் ஒரு சொல்லால் அல்லது தொடரால் குறிக்கப்படாததைத் தமிழில் தம் வசதி கருதி உருவாக்கிக் கொள்கிறார்.
White Corpuscles – வெண் குருதியணு
[Diving]   – குளிகாரர்(இது வழக்கில் உள்ள சொல்)
[Diving Bells]   – குளிமணி – மணி போன்ற மிகப்பெரிய குடுவையில் அமர்ந்து,     முத்துக்குளிக்கக் கடலில் இறங்குவார்கள்.



முத்து பற்றிய கட்டுரையில் பண்டைய நம்பிக்கை சார்ந்த கருத்துகளை மென்மையாக மறுத்துத் தம் காலத்த அறிவியல் ரீதியான விளக்கங்களை அளிக்கிறார் ஐயர். இஃது அவரது வழக்கமும் ஆகும்.
Natural Pearls form when an irritant – usually a Parasite and hot the proverbial grain of sand – works its way into an oyster… As a defense mechanism, a fluid is used to coat the irritant – (https://pearls.com) என்கிறது முத்துகளின் உருவாக்கத்தை விளக்கும் ஒரு கட்டுரை இதில் சொல்லப்பட்டுள்ள, Fluid – பொசிநீர் என ஐயரவர்களால் தமிழாக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கண நோக்கில் ‘பொசிநீர்’ என்பது வினைத்தொகை. ‘பொசி(-தல்)’ என்பது வினையடி இதற்கு “To ooze out. Percolate; கசிதல்” எனப் பொருள் தருகிறது  சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி (TAMIL LEXICON) . வெறுமனே ‘திரவம்’ என்னாமல், அந்தத் திரவம் உருவாதலையும் எண்ணிப் ‘பொசிநீர்’ எனப் பொருளுணர்ச்சியோடு முற்றுந் தமிழாக்கியுள்ளார் ஐயர்.



Tennel – தரைக்கீழ்ப் பாதை (சுரங்கம் என்னாதது ஆய்தற்குரியது)
Pyramid – கூர்நுனிக் கோபுரம்
[Antenna] – ஸ்பரிசனி (எறும்பு பற்றிய கட்டுரை)
[aphids – small sap – sucking insects] – எறும்புப் பசுக்கள்
இஃது ஒரு உருவக ஆக்கம். உவமை ஆகுபெயர் என்றும் கூறலாம். aphid எனும் சிற்றுயிரை எறும்புகள் ரோஜா மலரில் வைத்துப் பேணி வளர்த்து, அவற்றினின்றும் தேனை நக்கி உண்ணும். மக்கள் பாலுக்காகப் பசுக்களைப் பேணுவது போன்றதாதலின் ஐயர் இவற்றை எறும்புப் பசுக்கள் – அஃதாவது எறும்புகளால் பேணி வளர்க்கப்படும் பசுக்கள் என உருவகமாக்கிக் கொள்கிறார்.
Driver Ants – வெருட்டு எறும்புகள்
வெருட்டு(-தல்) என்பது வெருள்(-தல்) / அஞ்சு(-தல்) என்பதன் பிறவினை வடிவம் அச்சமுறச் செய்தல் என்பது பொருள். Driver Ants  கொடிய கட்டெறும்பினத்தவை. அவை படையெடுத்து வந்தால் பல சிற்றுயிர்கள் பூச்சிகள் முதலியவை நொடிக்குள் குத்திக் கிழித்து உண்ணப்பட்டுவிடும். இவற்றின் அச்சுறுத்தும் விரைவு கருதி ஐயரவர்கள் மிகப் பொருத்தமாக வெருட்டு எறும்புகள் என்று தமிழாக்கியுள்ளார்.




Brush – பூசுகோல். தூரிகை என்கிற சொல் இருந்தாலும் இதனைப் புதிதாக முற்றிலும் தமிழில் ஆக்கியிருக்கிறார் ஐயர். இங்கு ஓவியம் வரைவதற்குரிய பூசுகோலைக் குறித்தே வழங்குகிறது. இதனை Brush என்பதன் பிற பொருளுக்கும் நீட்டி வழங்கலாம். பூசு(-தல்) என்பதற்குத் தூய்மை செய்(-தல்) என்னும் பொருளும் உண்டு.

ஐயரவர்கள் கட்டுரைகளில் காணப்படும் கலைச்சொற்கள் பெரும்பாலானவற்றை இங்குத் தந்துள்ளேன் எனினும் மேலும் தொகுக்கவும் விளக்கவும் வேண்டிய சொற்கள் உள்ளன. மொழிபெயர்ப்பு, ஒப்புமையாக்கம், பகுதி மொழிபெயர்ப்பு, உருவக / உவமையாகு பெயராக்கம், தூய தமிழ், தமிழ் + வடமொழி, வடமொழி முதலியனவாக வகைப்படுத்தி ஐயரவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
ஐயரவர்களின் காலத்தைக் கருத்தில் கொண்டு நோக்கினால் இவை தமிழின் மறுமலர்ச்சிக்கு எத்தகைய பங்களிப்பை ஆற்றியிருக்கின்றன என உணரலாம்.
இனி விட்ட இடத்திலிருந்து அவரது தமிழ் வளர்ச்சிப் பணிப் பார்வையைத் தொடர்வோம்.


௧௨.  தமிழில் பத்திரிகைகள் பல தோன்ற வேண்டும்; புத்தக சாலைகள் ஏற்படுத்த    வேண்டுமென்கிறார்.
கந்தசாமிக் கவிராயருடன் கூட்டாசிரியராயிருந்து ‘வித்யாபாநு’ என்னும் இதழில் பணியாற்றிய ஐயரவர்கள் தாமே ‘விவேகோதயம்’ (1916), ‘நச்சினார்க்கினியன்’ என்னும் இதழ்களை நடத்தினார்.


௧௩.  தக்க அறிஞரைக் கொண்டு உரையில்லாப் பழந்தமிழ் நூல்களுக்கு உரை    செய்வித்தல் வேண்டும் என்கிறார்.
 ஐயர் தம் ஆசிரியராகிய அரசஞ்சண்முகனார் இயற்றிய  வள்ளுவர் நேரிசைக்கு   உரை எழுதியுள்ளார்.


௧௪.  பண்டைத் தமிழ் நூலாசிரியர், உரையாசிரியர்கட்கு அவரவர் ஊரில் ஞாபகச் சின்னம்    அமைக்க வேண்டும் என்று கூறும் ஐயரவர்கள் நச்சினார்க்கினியர் பெயரால்   கருத்தளவில் ஞாபகச் சின்னம் அமைத்து நடத்தினார்.


௧௫. தொன்னூல்கள், உரைகள் கிடைத்தால் மகாமகோபாத்தியாய உ.வே.சா. அவர்களுக்கோ மதுரைத் தமிழ்ச்சங்கத்திற்கோ அனுப்புக. (இது 1920களில் எழுதியது என்பதைக் கருத்தில் கொள்க.)


௧௬. சுபாஷாபிமானம் கொண்டு பிற பாஷாத்துவேஷம் அற்றிடுக.
சமயம் வாய்க்கும்போதெல்லாம் பிறரையும் தமிழ் மறுமலர்ச்சிப் பணிகளில் ஊக்குவித்துள்ளார். சான்றாக, திண்டுக்கல் அரசினர் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி ஆண்டு விழாவில் ஆசிரியர்களுக்கு இதனை வலியுறுத்தியுள்ளார் (ப.454).
தமிழ் மறுமலர்ச்சி நோக்கில், தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதி மனப்பான்மை பற்றியும் ஐயர் பேசியிருக்கிறார்.

“யாம் சீரியதாய ஆரிய குலத்திற்றோன்றினேம் எனினும் ஆரியமொழி கற்றுணரும் பாக்கியம் வாய்ந்திலேம் (ப.305)” என்கிறார் ஓரிடத்தில். இஃது இரண்டு செய்திகளைத் தருகிறது: i. தம் குலம் சீரியதெனும் பெருமிதம் ii. ஆரிய மொழி அக்குலத்திற்கு உரிமையுடையது என்பது.
இந்த நம்பிக்கையுடைய ஐயரவர்கள் ‘அந்தணரும் செந்தமிழும்’ என்னும் கட்டுரையொன்றை எழுதி, அதனை ‘மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கத்து நச்சினார்க்கினியர் ஞாபகச் சின்ன வருஷோத்ஸவ'த்தன்று வாசித்திருக்கிறார்.

அக்கட்டுரையில்,
" பழமையும் பெருமையும் படைத்த உயர்தனிச் செம்மொழியாகிய தமிழ்மொழியின் உண்மையை அறிய ஆவலும் அக்கறையும் ஆற்றலுமற்ற அந்தணர் அநேகர், தாம் ஆரிய பாஷைக்கே அருகரென்றும், தமிழ் தமக்குச் சிறிதும் சம்பந்தமே இல்லாத ஓர் பாஷையென்றும், அதனால் வடமொழியை அபிமானித்தலே பொருந்துமென்றும் கருதித் தமிழைப் புறக்கணிக்கின்றனர். இவர்களது அபிப்பிராயத்தை மெய்யென நம்பியோ அல்லது வெளிவேஷத்திற்காகவோ இவரது மக்களும் தமிழை இழித்துக்கூறி அநாதரவு செய்கின்றனர். ஆங்கில கலாசாலைகளிற் பயிலும் அந்தண மாணவர்களில் வடமொழி கற்போர் மட்டுமேயன்றித் தமிழ்மொழி கற்போரும், தமிழை இவ்வெண்ணம் கொண்டு உபேட்சை செய்து வருவது எவ்வளவு தவறான காரியம்! இத்தகைய அந்தணர்களும் அவர்களது மக்களும் வடமொழியை அபிமானித்தல் முற்றும் பொருந்துமாயினும் தமிழைப் பற்றிய இவர்களது அபிப்பிராயம் முற்றிலும் தவறானதே " (ப.439).
திராவிடக் கட்சிகள் வலிமை  பெறாத அந்தக் காலத்திலேயே அந்தணர்தம் இந்தப் போக்கை உடனிருந்து உணர்ந்து ஐயர் சொல்லியிருக்கிறார். இன்னும் இந்தநிலை மாறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனைய வருணத்தாரினும் அந்தணரே தமிழின் நாகரீக வளர்ச்சிக்கும் முக்கியக் காரணர் என்று பட்டப் பகலாக நிரூபிக்கக்கூடுமேயானால்,


அதன் பின்னராவது, இன்னோர் ஆரிய பாஷைக்கேயன்றிக் தமிழ்க்கும் பலவிதத்திலும் உரிமைபூண்டு தம் முன்னோர் வழி நடக்கமாட்டார்களா என்று வெகுநாளாக எண்ணியிருந்தேன் "(பக்.439-440).என்கிறார் ஐயர். தொடர்ந்து அக்கட்டுரையில், தமிழ் அநாதிகாலமாயுள்ள தனிப்பாஷை,  அந்தணர் தென்னகம் வருவதற்கு முன்பே இருந்தது ,  இந்த ஆதிகாலத்தில் பிராமணர்களுக்குத் தமிழோடு எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால் சீர்திருத்தம் செய்வதற்கு ஏற்றநிலையில் இருந்த ஓர் சிறந்த மொழியாகிய தமிழை வடக்கிலிருந்து வந்த அகஸ்திய முனிவர் வடமொழிப் போக்கைத் தழுவியும் தமிழ் முறையைக் கையாண்டும் அகத்தியத்தை இயற்றினாரென்கிறார் ஐயர்.

அகத்தியர் மாணாக்கர் பன்னிருவர் தொட்டுச் சங்கப் புலவோருள் நக்கீரர், கபிலர்,  பரணர்,  பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் முதலியோரைத் தொடர்ந்து நாயன்மார், ஆழ்வார் முதலிய அருளாளர்கள் இளம்பூரணர், சேனாவரையர் , பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்கள் வில்லிப்புத்தூரார்,  செவ்வைச்சூடுவார் முதலிய காப்பிய ஆசிரியர்களிடம் வந்து மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையரிடம்  நிறுத்துகிறார்.

இவர்களுள் அகத்தியர்,  அவர்தம் மாணாக்கர் பற்றிய தொன்மப் புனைவுகளுக்குக் குறைந்த பட்ச வரலாற்றுச் சுவடுகள் கூட இல்லை.

ஐயரவர்களேஇ “இதுகாறும் நான் சொல்லியவற்றால் ஏனை ஜாதியார்க்கும் தமிழ்க்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்பது எனது எண்ணம் என்று எவரும் எண்ணற்க "  (ப.445) என்று கூறுவதோடு, 

“சிந்தாமணியின் நந்தாப் பெருமையும் மணிமேகலையின் அணிகெழுபோக்கும் ,  சிலப்பதிகாரத்திலக்கியச் செறிவும், திருவள்ளுவரின் ஒரு மொழி நயமும் , கம்பன் கவியின் செம்பொருளின்பமும் ,  கல்லாடத்தின் எல்லாச் சிறப்பும்இ இன்னோரன்ன பன்னூல் மாண்பும் , நானே முற்றக் கற்றிராவிடினும் கற்றார் மூலம் சிறிதேனும் அறிந்துளேன். நான் சொல்லவந்ததெல்லாம் ஏனைச் சாதியாரினும் அந்தணரே தமிழின் நாகரீக வளர்ச்சிக்கு ஆதி முதல் முக்கிய காரணராயிருந்தோர் என்பதே"  (ப.445). எனப் பிறசாதித் தமிழ்ச் சாதனையாளர் சிலரையும் நயமான நடையில் அடுக்கி,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்ப தறிவு

என்று நிறைவு செய்துவிடுகிறார்.

எவ்வாறாயினும் அந்தணர்க்குத் தமிழ் உரிமையானது என்பதில் ஐயமில்லை. இதனை வலியுறுத்தித் தமிழ் மறுமலர்ச்சியில் அவர்களையும் ஈர்ப்பதே ஐயரவர்களின் நன்னோக்கம்.

ஒட்டுமொத்தமாக ஐயரவர்களின் தமிழ் மறுமலர்ச்சிப் பணிகளை நோக்குபோது என் அளவில் இரண்டு சாதனைகளை உணர்கிறேன்.

ஒன்று,  ஆங்கிலக் கவிதைகளைத் தமிழின் தன்மை குன்றாமல் தமிழாக்கியது. இச்சாதனையைப் பற்றிப்பேசுவது என் தகுதிக்கு மீறியது. ஜி. யு.போப் எழுதியதை ஐயரவர்களே தந்துள்ளார்:


The late lamented G.U.Pope wrote to say that if he had not read Sir Walter Scott, he should have pronounced my piece “Patriotism” the original and Sir Walter Scott’s the translation. And this comes from a Tamil erudite personally not known to me and therefore he had no motive to flatter me (P.xci) 



மகாகவி பாரதியாரும் ,

" இதைநாம் வாசித்தவுடன் மொழிபெயர்ப்பென்றே நினைக்கவில்லை. சாராரணமாய் மொழிபெயர்க்கப்பட்ட வசனங்கள்,  விஷேசமாய்ச் செய்யுள்கள் , பாறைக் காட்டில் குதிரை வண்டி போவதுபோல கடபுடவென்று ஒலிக்கும். ஆனால் நமது ஐயர் செய்திருக்கும் மொழிபெயர்ப்பானது தெரிந்தவர்களன்றி மற்றவர்க்கு மொழிபெயர்ப்பெனவே தோன்றாது "  என்கிறார். இவ்விரு மேதைகள் சொல்வதற்குமேல் நான் சொல்ல எதுவுமில்லை.

ஐயர்தம் சாதனைகளுள் இரண்டாவது,  வெகுமக்களுக்கேற்றவாறுஇ தமிழ்ச் சமூகத்தின் முந்தைய கருத்துகளையும் இயைத்துத் தரங்குன்றா வகையில்,  தக்க கலைச்சொற்களை உருவாக்கித் தமிழுக்கு அறிவியல் துறைகளை அறிமுகப்படுத்தியது.

ஒப்பீட்டளவில் எனது இந்தச் சொற்பொழிவில் இரண்டாவது சாதனையையே சற்று விரித்துக் காட்டியுள்ளேன். 

நன்றி.

வணக்கம்.

துணை:

ம.கோ. களஞ்சியம், காவ்யா, சென்னை, 2014.



*    23.09.2019 அன்று நிகழ்த்திய  ,    திருச்சிராப்பள்ளி, தேசியக் கல்லூரி(தன்னாட்சி) தமிழாய்வுத் துறையின் முதல் தலைவர் பண்டித ம. கோபாலகிருஷ்ணையர்  அறக்கட்டளைச்  சொற்பொழிவின் , உரைப் போக்கில் வெளிப்படும் உணர்ச்சிக்குறிப்புகளை மட்டுப்படுத்தி ,  பிழை நீக்கிக் கட்டுரையாக்கிய வடிவம்.


எழுதி வழித்தல்

 புனைஞாண்

புனை, புனைகதை , புனைந்துரை , புனைபெயர் , புனைவு - ஆகிய  புனை - என்பதனடியாகப் பிறந்த சொற்கள் ; கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் உள்ளன. 

புனைசுருட்டு போன்றவையும் புழக்கத்தில் உள்ளன.புனைவியல் - என்பது தமிழ்க்கல்வியுலகில் புழங்குகிறது. இவை அருஞ்சொற்களல்ல.

தமிழில் புனை - தலுக்குச் சங்கச் சான்றோரிலக்கியந் தொட்டுத் தொடர்ச்சியான வரலாறுண்டு. பொருள் மாற்றங்களும் பொருள் வழக்கு விடுபடல்களும் இயல்புதான்.

கலித்தொகையில் ஓர் இடத்தைப் பார்ப்போம். தலைவன் தன் வில்லை ஆயத்தப்படுத்துகிறான்; அம்புகளைத் தேர்ந்தெடுக்கிறான் ; தேர்ச்சக்கரத்தின்[மூட்டு] வாயை நீவுகிறான். 

இவற்றைக் கண்ட தோழி அவன் பொருள் தேடிச் செல்ல முயல்வதை உணர்கிறாள். ' நீ முயன்று செய்யும் பொருள் இவள் இன்னுயிர் தருமோ?' என வினவுகிறாள். அவன் தலைவியைப் பிரிந்தால் , தலைவியின் உயிர் பிரியும் என உணர்த்தி , அவன் செல்வதைத் தடுப்பதே தோழியின் நோக்கம்.


" நீயே        ...                           ...            நின்

கைபுனை வல்வில் ஞாணுளர் தீயே "(கலி. 7: 5-6)

என்பதற்கு " நீ ... நின்னுடைய கையாலே எழுதி வழித்த வலிதாகிய வில்லின் நாணைத் தடவாநின்றாய்[தடவுகின்றாய்]" என்று பொருள் தருகிறார் நச்சினார்க்கினியர். 

சான்றோர் செய்யுள்களில் புழங்கும் புனை (-தல்) என்னம் சொல்லுக்கு, புலமைக் கூர்மையும் உழைப்புத் திறமும் மிக்க அறிஞர்கள் இயன்றவரை பொருள் கண்டு தொகுத்துள்ளனர் (அவை அடியில் இணைக்கப்பட்டுள்ளன)ஆனால்  நச்சர் தந்துள்ள மேற்குறித்த , 'எழுதி வழித்த(ல்)' என்னும் பொருள் இடம்பெறவில்லை.

இங்கு எழுதி வழித்தல் என்றால் ?


வில்லின் நாணை மெழுகால் மெருகிட வேண்டும். இன்றும் விளையாட்டுத் துறையாளர்களின் வில் நாண்கள் முறைப்படி மெருகிடப்படுகின்றன(waxing).

மெழுகால் முதலில் நன்றாக இழைத்துக்கொண்டு பிறகு பிசிறில்லாமல் வழித்தெடுக்க வேண்டும். இப்படி மெருகிடும் செயல்முறையைத்தான் நச்சர் எழுதி வழித்தல் என்கிறார். 

எழுதுதல் என்கிற சொல் பரந்த பொருளுடையது. தோலில் வலியுடன் கொப்புளம் தோன்றும் அக்கி என்னும் நோய்க்குச் செம்மண் குழம்பால் மெழுகும் மரபுவழி மருத்துவத்தை  அக்கி எழுதுதல் என்பார்கள். நான் சிறுவனாக இருந்தபோது இதை நேரில் கண்டிருக்கிறேன். 

பொதுக் காலம் 14 ஆம் நூற்றாண்டினராகிய நச்சினார்க்கினியர் வில்லின் நாண் எழுதிவழிக்கப்படுவதை நன்கு அறிந்திருக்க வாய்ப்புண்டு.

புனை (தல்) என்னும் சொல்லைக் கொண்டு வில்லை ஆயத்தப்படுத்தும் ' எழுதி வழித்தல் ' என்னும் நடைமுறையைச் சொல்வது நச்சினார்க்கினியப் புலமைத்திறம்.  புனை (தல்) என்பதற்கு எழுதி வழித்தல் நேர்ப்பொருளன்று.

ஒரு சொல் பல பொருள் குறிக்கலாம். அவற்றின் அடிப்படை வேறுபாடு கருதலாமேயன்றி, வழக்கில் விரிந்து தரும் பல்வேறு பொருள்களையும் கருத இயலாது.

புனை¹-தல் - 3. To make ready; சித்தஞ்செய்தல் என்னும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி (TAMIL LEXICON) இங்குப் பொருந்தும்.

அகராதியாக்கப் பணி  சுவையும் சோர்வும் ஒருங்கு தரும் அரும்பணி. நூற்றுக்குநூறு எல்லாப் பொருளும்  குறிக்கும் அகராதி என்பது  எட்ட வியலாக் குறிக்கோள்.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி (TAMIL LEXICON),  கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி போன்றவை சாதனைகள். அதிலும் கிரியா அகராதி இரண்டாவது முறையாகச் சேர்க்கை , செப்பங்களுடன் மூன்றாம் பதிப்பாக வருவது அருஞ்சாதனை. சென்னைப் பல்கலை. பேரகராதியின் புதிய பதிப்பு இரண்டு பகுதிகள் (?) வந்து நின்றுபோய்விட்டது அவலம்.

இந்த அகராதிகளில் குறை காணலாம் , குற்றங் கூட சாற்றலாம். ஆனால் ஈடுபட்டுப்பார்த்தால்தான் இடையூறுகள் மலைமலையாய் எதிர்ப்படுவதை உணரமுடியும். பயன்படுத்திப் பார்க்கப் பார்க்கத்தான் அவற்றின் பின்னுள்ள உழைப்புப் புலப்படும்.

__________________________________________


புனை¹-தல் puṉai- , 4 v. tr. [M. punayuga.] 

1. To dress, put on, as clothes, garlands, jewels; தரித்தல். பூமாலை புனைந்தேத்தி (தேவா. 727, 3). 

2. To adorn, decorate; அலங்கரித்தல். புனை தேர் பண்ணவும் (புறநா. 12).

 3. To make ready; சித்தஞ்செய்தல். 

 4. To paint; சித்திர மெழுதுதல். புனையா வோவியங் கடுப்ப (நெடுநல். 147). 

 5. To plait, as an ola basket; முடைதல். போழிற் புனைந்த வரிப்புட்டில் (கலித். 117). 

 6. To string, bind; கட்டுதல். ஆய்பூ வடும்பி னலர்கொண்டு . . . கோதை புனைந்த வழி (கலித். 144).

  7. To wear; சூடுதல். அவன்கண்ணி நீ புனைந்தாயாயின் (கலித். 116).

   8. To put in order; ஒழுங்காக அமைத்தல். படைபண்ணிப் புனையவும் (கலித். 17). 

   9. To use laudatory language, praise; சிறப்பித் துக் கூறுதல். புனையினும் புல்லென்னு நட்பு (குறள், 790). 

10. To exaggerate; கற்பித்தல். புனைந்து பேசி (தேவா. 1224, 3). 

11. To compose, as poetry; செய்யுளமைத்தல். நாவிற்புனைந்த நன்கவிதை (பரிபா. 6, 8).     12. To make, form; செய்தல். வரிமணற் புனைபாவைக்கு (புறநா. 11).

  புனை² puṉai , n. < புனை-. 

1. Beauty; அழகு. (பிங்.) 

2. Attractive appearance; பொலிவு. (பிங்.) 

3. Decoration; அலங்காரம். (பிங்.)

4. Ornament, jewel; ஆபரணம். கைபுனை புனைந்தும் (கல்லா. 84, 3).

5.  5. Fetters, shackles; தளைக்கும் விலங்கு. புனைபூணும் (குறள், 836).

6. Cloth, vestment; சீலை. (W.) 7. Newness, recency; புதுமை. (W.)


 புனை³ puṉai , n. cf. புனல்¹. Water, flood; நீர். அமுதளாவிய புனைவர வுயிர்வரு முலவை (கம்ப ரா. அகத். 4).

புனைகுழல் puṉai-kuḻal , n. < புனை- +. See புனைகோதை. (W.)

புனைகோதை puṉai-kōtai , n. < id. +. Lady, as having beautiful locks; கூந்தலழகுள்ள பெண். (W.)

புனைசுருட்டு puṉai-curuṭṭu , n. < id. +. Deceitful conduct, underhand dealing; மோசம்.

புனைந்துரை puṉainturai , n. < id. +. 1. Rhetorical language or poetic embellishment; அலங்கரித்துரைக்கும் வாசகம்.(நம்பியகப். 2.)2. Preface, introduction;பாயிரம்.(நன்.2.)

புனைந்தோர் puṉaintōr , n. < id. Artisans, mechanics; கம்மாளர். (சூடா.)

புனைபெயர் puṉai-peyar , n. < id. +. Pen-name, pseudonym; கற்பித்துக்கொண்ட பெயர். Mod.

புனைமொழி puṉai-moḻi , n. < id. +. Rhetorical expression; அலங்காரச் சொல். Loc.

புனையல் puṉaiyal , n. < id. Garland, necklace; மாலை. உருத்திரமாமணிப் புனையல் (உபதேசகா. சிவநாம. 173).

புனையிழை puṉai-y-iḻai , n. < id. +. Lady, as wearing beautiful ornaments; சிறந்த பெண். புனையிழை யிழந்தபின் (பு. வெ. 10, சிறப்பிற்பொது, 3, கொளு). (சூடா.)

புனையிறும்பு puṉai-y-iṟumpu , n. < id. +. Grove; செய்காடு. புதைந்திருடூங்கும் புனையிறும்பு (திருக்கோ. 148).

புனைவன் puṉaivaṉ , n. < id. Mechanic, artisan, architect; கம்மியன். (திவா.) வானவர் புனைவற்கொண்டே . . . பாசறை புனைவித்து (கந்தபு. யுத்தகாண். வரவுகேள். 26).

புனைவிலி puṉaivili , n. < புனைவு +. The thing chosen for comparison; உபமானப் பொருள். (W.)

புனைவிலிபுகழ்ச்சி puṉaivili-pukaḻcci , n. < புனைவிலி +. (Rhet.) A figure of speech. See பிறிதுமொழிதல். (அணியி. 27, பக். 17.)

புனைவு puṉaivu , n. < புனை-. 1. Beauty; அழகு. 2. Ornament, decoration; அலங்காரம். 3. Fertility, fruitfulness; செழிப்பு. 4. Making, producing; செய்கை. (அக. நி.)

புனைவுப்பெயர் puṉaivu-p-peyar , n. < புனைவு +. See புனைபெயர்.

புனைவுளி puṉaivuḷi ,n.< id. +.The object described by a simile; உவமேயப்பொருள்.(W.)

TAMIL LEXICON

 - - - - - - - - - - - - -- - - - - - - - - - -

புனைதல் - அலங்கரித்தல் , சித்திரம் எழுதுதல் , கட்டுதல் , சூடுதல் , ஒழுங்காக அமைத்தல் , செய்யுள் அமைத்தல் , செய்தல், முடைதல் , கைசெய்தல் , பொத்துதல்

புனைமாண் அம்பு - புனைதல் மாட்சிமைப்பட்ட அம்பு

பாட்டும் தொகையும் , 'சொல், தொடர் விளக்கம்' , சாந்தி சாதனா (மர்ரே ராஜம்), ப.124.

- - - - - - - - - - - - - -- - - - - - - - - - - -

புனை (தல்) - சூடுதல் , கட்டப்படுதல் , கை செய்தல் - அலங்கரித்தல் , பாராட்டல் , செய்யப்படுதல் , நிரம்புதல் , அணிசெய்தல் , அணிதல் , சூட்டுதல்

— புலவர்மணியன்,சங்க இலக்கிய வினை வடிவங்கள் (என்னால் தொகுத்துத் தரப்பட்டுள்ளது)

- - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - -

புனை - (வி)

 1. (உடை, மாலை,ஆபரணம் முதலியவை) அணி, தரி, உடுத்து, put on (as clothes, garland,      jewels)

 2. சூடு, wear

 3. அலங்கரி, decorate, adorn 

 4. செய், படை, உருவாக்கு, make, create 

 5. ஓவியம் தீட்டு, paint, draw 

 6. செய்யுள் அமை, கவிதை, கதை ஆகியவை இயற்று, compose a poetry, write fiction

  7. கட்டு, string, bind 

  8. முடை, பின்னு, plait, as an ola basket 

  9. (பூக்கள் போன்றவற்றைத்)தொடு, link together; to string, as beads; 10. உண்டாகு, ஏற்படு, come into existence

புனைஇழை - (பெ) அன்மொழித்தொகை, transferred epithet

புனைவு - (பெ) 1. வேலைப்பாடு, உருவாக்கம், workmanship, making 2. ஒப்பனை, அலங்காரம், ornamentation, decoration

— முனைவர் ப.பாண்டியராஜா, சங்கச் சோலை, ' சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம் (sangacholai.in)

Thursday, November 12, 2020

தோசை தின்றதுண்டு ஓசை தின்றதுண்டா?


 

தோசை தின்றதுண்டு
ஓசை தின்றதுண்டா?

வாயிலை அடைத்துக் கொள்ளாத பேரில்லமே !(சிறிய அரண்மனை ?) இடையறாது வந்தவர்க்கெல்லாம் கலம் குறைவுபடாமல் வண்டுகள் சூழ மணக்கும் கள்ளோடு அளவின்றிச் சோற்றையும் வழங்கியதால் நீரற்ற ஆற்றின் ஓடம்போல முற்றம் செப்பமின்றிக்¹கிடக்க , மண்ணகங் காக்கும் பெருவேந்தர்தம் வளமான பெரிய அரண்மனைகளில் மதங்கொண்ட யானை பெருமூச்சு விடுவதுபோலக் கொதிக்கின்ற எண்ணை²(எண்ணெய்)யில் போடும் ஆட்டிறைச்சியின் ஓசையுடைய பொரியலைப் புதிதாக வருவோரின் சோர்ந்த கண்கள் மாந்தும்படி உண்டாக்கிக்கொண்டிருந்தாய் முன்பு !

அது போயிற்று !

கரந்தைப் பூச்சூடி , பகைவரை வென்று ஆநிரை (பகைவர் கவர்ந்த பசுக்கூட்டத்தை ) மீட்ட காரியாதி³ நடுகல்லானான்.
தலைவனை இழந்ததால் அணிகலன் களைந்த பெண்ணைப்போலப் பேரில்லமே நீ இப்போது  பொலிவிழந்து கிடக்கிறாய் !

- என்பது ஆவூர் மூலங்கிழாரின் கையறுநிலைப் பாட்டு (புறநானூறு , 261)

இப்பாட்டின் , " நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை "(௸, அடி. 8) என்பதற்கு " நெய் காய்கின்ற உலையின்கண் சொரியப்பட்ட ஆட்டிறைச்சியினது ஓசையுடைய பொரியல் " என்று பொருள் கூறும் பழையவுரையாசிரியர் , " ஓசை என்றது ஆகுபெயரான் ஓசையையுடைய கறியை ; இஃது ஒரு திசைச்சொல் " என்று குறிப்புகள் தருகிறார்.

ஆகுபெயர் என்பது பெயரிலக்கணம் சார்ந்த இலக்கணக் குறிப்பு.

திசைச்சொல் என்பது செய்யுள் ஈட்டச் சொல்வகை சார்ந்த இலக்கணக் குறிப்பு.

புறநானூற்றுப் பழையவுரையாசிரியர் காலத்தில் ( பொதுக் காலம் 12ஆம் நூற்றாண்டு) ஓசை  என்பது ஒரு வட்டார/கிளைமொழி வழக்காக இருந்திருக்கவேண்டும். இல்லையெனில் அவர் அவ்வாறு எழுதமாட்டார் என்பதை அவர் உரை இயல்பறிந்தோர் உணர்வர்.

திசைச்சொல் என்பதை, வடசொல் அல்லாத பிறமொழிச் சொற்களையும் உள்ளடக்கியதாகக் கருதும் பிற்கால வழக்கப்படி , புறநானூற்று உரையாசிரியர் தமிழல்லாத மொழியொன்றின் வழக்கைச் சுட்டியதாகவும் கொள்ளலாம்.

அது , இறைச்சியையோ, இறைச்சிப் பொரியலையோ குறித்து வழங்கியிருக்கவேண்டும். இப்போது தொடர்கிறதா என்று தெரியவில்லை.

கொசுறு1.
மையல் யானை அயாவுயிர்த் தன்ன
நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை (௸, அடி. 7-8)
என்று கொதிக்கும் எண்ணையில் ஆட்டிறைச்சி தளபுள என்று பொரிவதற்கு உவமை சொல்கிறார் ஆவூரார். சாதாரணமாகவே யானை தளபுளஎன்று மூச்சுவிடும். மதம்பிடித்தால் கேட்கவே வேண்டாம்.



 சான்றோர் செய்யுள்களில் உவமை , தத்துவ இயலின் பிரமாணமோ  அலங்காரவியலின் அணியோ அன்று. அதுவே  பொருளுமாகி நிற்கும். 'உவமப்பொருள்' என்பார் தொல்காப்பியரும் 




கொசுறு 2.

நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆர(௸, அடி. 8 - 9)


9 ஆம் அடிக்கு, " புதுமாந்தருடைய ஒளி மழுங்கின கண்கள் நிறைய " என்று பொருள் காண்கிறார் பழையவுரையாசிரியர்.

ஆர் (தல்) - உண்(ணுதல் ) என்னும் பொருளும் உண்டு. 'கண்கள் சுவைக்க' என்று இங்குப் பொருள் காணலாம்.
கண் உண்ணுமா?உண்ணாது ; ஆனால் சுவையுணரும். உண்ணுதல் செயல். சுவைத்தல் உணர்வு. உண்டு சுவையுணரும் முன்பே , கண்டு சுவையுணரலாம் என்கிறது அண்மை ஆய்வு ஒன்று⁴.
ஆவூரார் அப்போதே ஆய்ந்து கண்டதாக நான் சொல்லவில்லை ; சொல்ல முடியாது ; கூடாது. ஆனால் உற்று நோக்கிப் பதிவு செய்வதில் சங்கச் சான்றோர் நுண்மாண் நுழைபுலத்தினர். பிற்காலத்தமிழிலக்கியங்களில் காண அரிதான துல்லியப் பதிவுகளைச் சான்றோர் செய்யுள்களில் காணலாம். அப்படியொரு பதிவு இது.
------------------------------------------------
குறிப்புகள்
1.'முரிவாய் முற்றம்' (புறம். 261: 3) என்பதற்கு 'முரிந்த குறட்டையுடைய' என்பது பழைய  உரையாசிரியர் உரை. பலரும் இடையறாது வந்து செல்வதால் தேய்ந்து சிதைந்து செப்பனிடப்படாமல் , செப்பனிட இயலாமல் கிடந்த முற்றம் என்க.
2. எண்ணை என்னும் ஒரு சொல் நீர்மைத்தாய , மருவிய வடிவத்தையே கையாளலாம். இது இக்காலத் தமிழ்.
3. சுவடியில் பாடப்பட்டோன் பெயர் சிதைந்துள்ளது. அது காரியாதி என்பது ஒளவை சு.துரைசாமிப்பிள்ளையவர்களின் ஊகம்
4.' Seeing' the flavour of foods before tasting them https://www.sciencedaily.com/releases/2013/04/130411194017.htm

Wednesday, November 11, 2020

தொல்காப்பிய மாணிக்கவுரையும் தமிழ் அடையாளமும்

 தொல்காப்பிய மாணிக்கவுரையும் தமிழ் அடையாளமும்


தொல்காப்பியம் தமிழின் காலத்தால் முந்திய இலக்கணம் மட்டுமன்று ; தமிழ் மொழி, பண்பாட்டு அடையாளமுமாகும்.  தொல்காப்பியம் காலந்தோறும் இப்பண்பாட்டு முதன்மையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பினும், தொல்காப்பியப் பயிற்சியில் ஏற்றத் தாழ்வு இல்லாமலில்லை.

பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களுக்கு உரை எழுந்த ,  ஏறத்தாழப் பொதுக்காலம் (Comman Era) பதினோராம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலான, காலத்தைச்  சங்கத் தமிழுக்கு மீட்சியியக்கம் நிகழ்ந்த காலம் என்று குறிப்பிடுகிறார் வையாபுரிப்பிள்ளை¹.

i.தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தொகுக்கப்பட்ட காலம், 

ii.உரை செய்காலம்,

 iii.செவ்வியல் இலக்கியமாகக் கண்ட இருபதாம் நூற்றாண்டு - என மூன்று மீட்சி இயக்கத்தைக் கொள்ள வாய்ப்புள்ளது².


தொல்காப்பியத்திற்குக் கிடைத்துள்ள காலத்தால் முற்பட்டவுரை இளம்பூரணர் உரை.  இதுவே நூல் முழுமைக்கும் கிடைக்கும் பழையவுரையுமாகும்.  எனினும் இதுவே முதலுரை அன்று.  இளம்பூரணருக்கு முன்பும் உரைகள் இருந்தமையை அவருரையாலேயே அறியலாம்.


‘இளம்பூரண அடிகள்’ எனப்பட்ட இவ்வுரையாசிரியர் சமணர் எனக் கருத இடமுண்டு.  தொல்காப்பியம் பொருளதிகார முதல் நூற்பாவுரை இறுதியில் “இந்நூலுடையார் (தொல்காப்பியர்) காமத்துப் பயனின்மை உய்த்துணர வைத்தவாறு அறிந்து கொள்க” என்பார்அவர்.


பின்னர் வந்த சேனாவரையர், நச்சினார்க்கினியர் , தெய்வச்சிலையார் முதலியோரிடமும் சில சார்புகள்  நிலவியதைக் காணலாம்.


இவ்வாறு தொல்காப்பிய உரைகளில் - பிற நூலுரைகளிலும் - உரையாசிரியரின் சமயம் முதலியன சார்ந்த பார்வைப் பதிவுகளைக் காண முடியும்.  பார்வைப் பதிவாக மட்டுமன்றித் தத்தம் கருத்துநிலை சார்ந்த உரை விளக்கத்தின் மூலம் ஒரு நூலைத் தம்வயப்படுத்தும் முயற்சிகளும் உண்டு.  திருக்குறள் உரைகள் இப்போக்கிற்குத் தலையாய எடுத்துக் காட்டுகளாகும்.


வ. சுப. மாணிக்கம் (17.04.1917  -  25.04.1989) இயற்றிய ‘தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன் மரபும் மொழி மரபும் மாணிக்கவுரை’ (1989) வ.சுப.மா. மறைந்தபின்  தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடாக வந்தது.  இந்த உரைக்கு அவரெழுதிய உரைப் பாயிரத்தை நோக்க 06.08.1986 அன்றே நிறைவு பெற்றிருப்பதை அறிய முடிகின்றது.

எளிய சிற்றுரைகள், மாணவர்க்குரிய தெளிவுரைகள் முதலியன தவிர்த்து நோக்க மாணிக்கவுரைக்கு முன் இருபதாம் நூற்றாண்டில் பி.சா.சுப்பிரமணிய சாத்திரி (எழுத்து 1937, சொல் 1930), தி.அ. பாலசுந்தரம் பிள்ளை (அகத்திணை இயல் 1938) சோமசுந்தர பாரதி (அகத்திணை இயல், புறத்திணை இயல், மெய்ப்பாட்டியல் 1942) வே. வேங்கடராஜூலு ரெட்டியார் (எழுத்ததிகாரம் 1944) புலவர் குழந்தை (பொருளதிகார முதல் ஆறு இயல்கள், 1968) ஆகியோர்தம் உரைகள் சுயமான பார்வையில் விளைந்தவை.

சாத்திரி, ரெட்டியார் உரைகள் முறையே இந்திய மரபிலும் திராவிட மரபிலும் வைத்துத் தொல்காப்பிய எழுத்து, சொல்லதிகாரங்களைக் கண்டெழுதப் பெற்றவை.  இவற்றுக்கும் - நெஞ்சறிந்த நிலையிலன்றெனினும் - இயக்கச் சார்பு காட்ட இடமுண்டு.


தமிழர் பண்பாடு எனும் நோக்கிலான இயக்கஞ்சார் பார்வைகள் பெரும்பாலும் பொருளதிகார இயல்களுக்கே எழுந்தன.


தொல்காப்பியத்தின் முதலிரு இயல்களுக்கு மட்டுமே மாணிக்கவுரை இயற்றப்பட்டுள்ளதாயினும் பரவலாகத் தமிழ் அடையாள மீட்சியியக்கத் தாக்கத்தை அதில் காண முடிகிறது.


வாய்ப்பு நேரும் போதெல்லாம் அவர் வெளிப்படையாகவே “தொல்காப்பியத்தை முதற்கண் தமிழ்க் கண்ணோடு காண்பதுதான் செந்நெறி” (ப.69) என்கிறார். தம் உரையில் 1. மீட்பு  2. தமிழின ஒருமைப்பாடு 3. விதிமுறை இலக்கணமாகக்கருதல்  4.தமிழ்மை - ஆகிய தன்மைகளை ஆங்காங்குப் பதிந்துள்ளார்.


உரைப் பாயிரத்திலேயே இந்தக் கூறுகளையெல்லாம் தொகுத்துச் செல்லி விடுகிறார்.


" தொல்காப்பியம் என்ற உலகக் களஞ்சியம் மொழியிலும் அகவாழ்விலும் புறச்சூழலிலும் கட்டுப்பாடு, வளர்ச்சி, தூய்மை வேண்டும் வரம்புநூல் ; தொல்காப்பியம் என்ற தமிழ் முதனூல் வழிவந்த பழமைத் தடங்காட்டி, நிகழ்காலச் செவ்வி சேர்த்து, வளரும் எதிர்காலப் புதுமைப்புரட்சிக்கு இடம் வகுக்கும் இயக்கநூல் ; தொல்காப்பியம் என்ற மறைநூல் பிறப்பு மதம் பால் குழு இடம் பொருள் நிலை வேற்றுமைகளைப் பற்றாது இயற்கை, அறம், மறம், வெற்றி, அமைதி, காதல், இன்பம் என்னும் இவ்வுலகியங்களை மானிடவினத்திற்கு எடுத்துக்காட்டும் உலக வாழ்வுநூல்...

இன்று தமிழினம் ஆயிரம் பிரிவு பிளவு பட்டிருப்பினும் எல்லார்க்கும் பொது முன்னோன் தொல்காப்பியனே என்று உணர்வோமாக.  ஒருமையினவுணர்வு பெறுவோமாக " (பக்.i - ii ).உரைப் பாயிரத்தின் இக்கூறுகள் உரையினுள் ஆங்காங்கு மிளிர்கின்றன.


வெறும் அடையாள மீட்புணர்வு மட்டுமன்று புலமை நுட்பமும் மேலோங்கியது இவ்வுரை ; இலக்கண ஆர்வம் மட்டுமே கொண்டோரும் பயிலத்தக்க உரை³

உரையெங்கும் வெளிப்படையாகவும் உள்ளுறைந்தும் நீக்கமற நிறைந்துள்ள தமிழ் அடையாளக் கூறுகளுள் பதச்சோறாகச் சிலவற்றை இக்கட்டுரையில் காட்டியுள்ளேன்.



1.மீட்பு :

ஆறாவது ஆங்கிலவொலிக்கு[F] நிகராக ஆய்தத்தை மொழிமுதலாகக் கையாளும் போக்கு ஒருபகட்டாகப் பெருகி வருகின்றது.  புல்லிய இப்போக்கால் ஆறாவது ஒலியுடைய பல ஆங்கிலச் சொற்கள் அப்படியே தமிழெனப் புகுத்தப்படுகின்றன.  விசிறி, கடை, நிதியகம், திரைப்படம், நிலைவைப்பு, சீட்டுக்கடை, கத்தி, படிப்புதவி, படிவம், கோப்பு, குளிர்பொறி, தூயாலை, தொழிற்சாலை, அழகி, தந்தை, தீப்பெட்டித்தொழில், நிதி முடக்கம் என்ற பொருளுடைய ஆங்கிலச் சொற்கள் எல்லாம் ஆய்தத்தை முதலாகக் கொண்டு ஒருவாறு தமிழெழுத்தால் எழுதப்படுகின்றன.  இவ்வொரு ஒலிக்களையால் அண்மைக் காலத்துத் தமிழுக்கு விளையும் ஊறுகள் பல.  

 fan , firm   முதலிய ஆங்கிலச் சொற்களை ஃபேன், ஃபர்ம் முதலியனவாகத் தமிழ் வரி வடிவங்களால் எழுதுவதை அவர் ஏற்கவில்லை.

“மொழிக் காப்பு என் உரை நோக்கங்களுள் ஒன்றாதலின் ஆய்தப் போக்கினைச் சுட்டி நெறிப்படுத்துவது என் கடமையாயிற்று "(ப. 103) என்கிறார் வ.சுப.மா.

தொழில்நுட்பம் இன்னும் வளருங்கால் இன்றைய தமிழ் எழுத்து வடிவங்கள் அப்படியே எளிமை செய்யும் புதுப்பொறிகள் கண்டு பிடிக்க முடியும் என்பது என் நம்பிக்கை.  எவ்வாறாயினும் மொழி என்ற நிலைக்கருவியைக் காலந்தோறும் சடுதியில் மாறும் நிலையில்லாச் செய்பொறிகட்கு வணக்கக்கூடாது.  வணக்கின், உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்ற கதையாகிவிடும் (ப.82)

என எழுத்துச் சீர்திருத்தத்தை அவர் எதிர்க்கிறார்.  

அவர் கூற்றுப்  பழமையை நிலை நிறுத்தம் மீட்புவாத நோக்கினதாயினும், அவர் நம்பியவாறே தொழில் நுட்பம் மேம்பட்ட நிலையில் எழுத்துச் சீர்திருத்தத் தேவை குன்றி வருவதை நம்மால் உணர முடிகிறது.

மெய்ம்மயக்கம் பற்றிய நூற்பா விளக்கத்தின் போது, " பேசக்கற்றுக் கொடுப்பது இலக்கணமன்று; காக்க ஆக்க வளர்க்க வழிவழிவிளங்கத் தடங்காட்டுவதே இலக்கணம் என்று தெளிக.  இலக்கணம் புறமிருந்து திணிக்கப்படும் செயற்கையன்று.  மக்களின் வாய்மொழிக் கூறுகளைக்கண்டு கரையுடையாது கட்டி உயர்த்தி வளர்ப்பதே இலக்கண நோக்கம் " (ப.59) என்கிறார்.


இருப்பதைக் காப்பது மட்டுமன்றி இறந்த வழக்குகளையும் மீட்டுப் பயன்படுத்த வேண்டுமென்பதும்  வ.சுப.மா. கருத்து. 


 " நடுமை காட்டும் உகரச் சுட்டு இன்று பெரும்பான்மை வழக்கில் இல்லை; எனினும் இடைநிலையான நடுவிடம் உண்மையின் அதற்கு ஓர் சொல் வேண்டுமன்றோ? பொருளிருப்பச் சொல் வீழ்தல், வீழவிடுதல் அறியாமையாகும்.  இன்றோ இப்பகுதியைக் குறிப்பதற்கு மெய்ப்பாடு காட்டித் தடுமாறுகின்றோம்.  ஆதலின் உகரச்சுட்டுக் கிளவிகளையெல்லாம் பெருவழக்காற்றுப்படுத்தல் நல்லது.  கல்வியாலும் எழுத்தாலும் உயிர்ப்பிக்க வேண்டியன இவை " (ப.61)

 

பழைய மரபுகள் பிறழ உணரப்படுவதையும் வ.சுப.மா. திருத்துகிறார்.

 

" அளபெடையைச் சொல்லுவதிலும் எழுதுவதிலும் இன்று நடைமுறைப்பிழை மலிந்து வருகின்றது.  நூற்பாவின்படி கூடுதல் ஒலியைக் கூட்டிநீட்டிச் சொல்லவேண்டுமேயன்றிப் பிரித்துத் தனித்துச் சொல்லவும் கூடாது.  எழுதவும் கூடாது " (ப.30)

அளபெடை இவ்வாறு ஒலிக்கப்பட்டது எனக் கூறாமல், இனியும் இன்னவாறு ஒலித்தல் வேண்டும் என் விதிக்கிறார் வ.சுப.மா.


தமிழ் எண்களில் பழைய வடிவத்தையும் பேணிக் காத்தல் வேண்டும் என்பது அவரது விருப்பம்.

" எட்டினொடு இரண்டும் அறியேனையே’ என்ற திருவாசகமும், ‘அ உ அறியா அறிவில் இடைமகனே’ என்ற யாப்பு மேற்கோளும்’ ‘எட்டேகால் லட்சணமே’ என்ற தனிப்பாடலும் எழுத்தொடு எண்ணுக்கு வடிவுத் தொடர்பு சட்டல் காண்க.  தமிழுக்கத் தனிமதிப்பு நிறுவும் எழுத்து வடிவு போலத் தனிமதிப்புச் சுட்டும் எண் வடிவையும் பதிப்புத் துறையிலும் பிறவிடங்களிலும் நல்வழக்கிற் பேணிக் காத்தல் நற்றமிழர் கடன் " (ப.67)

மொழி மரபின் இயல் முன்னுரையில், “எல்லா மொழிகளுள்ளும் பழந்தமிழ் மொழி உலக வழக்கு அழித்தொழிந்து சிதையாமல் சீரிளமைத் திறம் குன்றாமல் இன்னும் புது மொழியாக வாழ்வதற்கு உரிய காரணங்களுள் இரண்டு, மொழி முதலெழுத்துக் கட்டுப்பாடும் மொழியிறுதியெழுத்துக் கட்டுப்பாடும் ஆகும்” (ப.90) என்கிறார் வ.சுப.மா.

இக்கட்டுப்பாடுகள் காலப் போக்கில் தளர்ந்து, மாறி வருவதற்கு நன்னூல் விதிகளே சான்று.  பின்னும் மாறியுள்ளன என்பதை இன்றைய தமிழால் உணரலாம்.  பழமையை உயிர்ப்பிக்க வேண்டுமென்பதே வ.சுப.மா. கருத்து.

மொழிக் காப்பைத் தமிழினக் காப்பாகவும் தமிழகத்தின் எல்லைக் காப்பாகவும் காண்கிறார் வ.சுப.மா.

" பன்னெடுங்காலம் தமிழகமாக இருந்த சேர நாட்டுப்பகுதியும் வேங்கடப்பகுதியும் அயல்நிலமானது படையெடுப்பாலன்று, பண்பாட்டு மாற்றத்தாலன்று, ஆட்சி வேறுபாட்டாலன்று, ஒரேஒரு காரணம் அயலொலி அயலெழுத்துக் கலந்த அயல்மொழிக் கலப்பாலாகும். தமிழகத்தின் எல்லைப் பகுதிகளை விழிப்போடு தமிழாகக் காத்துக் கொள்ளத்தவறியதாலும்,  அயல் மொழிகள் எல்லார்தம் செவிவாய்களில் நிரம்பப் புகுந்தமையாலும், அம்மொழிகளைத் தொல்காப்பியம் முதலான இலக்கணங்கள் கூறியபடி தமிழ்வடிவாக்கிக் கொள்ளாது விட்டமையாலும், அயலொலிகளோடு அயல்வரிவடிவங்களும் எழுத்து வழக்கில் இடம் பெற்றமையாலும் தமிழுக்கு உள்ள இடம் சுருங்கிற்று; அயலுக்கு இடம் பெறுகிற்று; எனவே மொழியொலிக் கலப்பு தமிழுக்கு இடவிழப்பு; பிற மொழிகட்கு இடவிரிப்பு.  இவ்வரலாற்று நிலையை இனியேனும் தமிழினத்தார் எண்ணி உள்ள தமிழ் நிலத்தை யாவது எம்மொழிக்கலப்பும் எவ்வொலிக் கலப்பும் எவ்வெழுத்துக் கலப்பும் புகவிடாது காத்துக் கொள்ள வேண்டாமா? கண்காண இழந்தும் அறிவுணர்வு வேண்டாமா? "(ப.15)


2.ஒருமைப்பாடு :


தொல்காப்பியப் பாயிரவுரையில் வ.சுப.மா.,

" தொல்காப்பியக் காலத் தமிழ்ப் பெருநிலம் அரசுவகையால் முத்திறப்பட்டிருந்தது என்ற நிலை “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” எனவும் “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூ” எனவும் கூறப்படும் அகச் சான்றுகளால் விளங்கும்.  வேந்து வகையால் முப்பிரிவுப் படினும் தமிழ் என்ற ஒரு மொழியடிப்படையில் தமிழகம் என்றும் ஒருமைப்பாடு மன்னியது என்ற பேருண்மையைத் ‘தமிழ்கூறு நல்லுலகம்’ என்ற பாயிரத்தால் உணரலாம் " (ப.4)

என அரசியல் வேறுபடினும் தமிழக ஒருமைப்பாடு நிலவியதைக் காண்கிறார்.  தொல்காப்பியப் பாயிரம் மட்டுமன்று இருபதாம் நூற்றாண்டுப் பாரதியும் அவ்வொருமை மரபுப் பேணுவதை எடுத்துக் காட்டுகிறார்.

" தமிழ்கூறு உலகம் என்றளவில் சொல்லாமல் ‘நல்லுலகம்’ என்று சொல்லிய அடைப்புணர்ப்பு நாட்டுப்பற்றுக்கும் மொழிப் பற்றுக்கும் அடையா ஊற்றுக்கண்ணாம்.  பனம்பாரனார் பாயிரத்தை அடியொற்றிய மாக்கவி பாரதியார் “குமரியெல்லை வடமாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு” என்று அள்ளூரப்பாடுவார் ; ‘ஆயிடை’ என்பதனை ‘இவற்றிடையே’ எனவும் ‘நல்லுலகம்’ என்பதைப் ‘புகழ் மண்டிக்கிடக்கும்’ எனவும் விரிவுபடுத்துவர் " (ப.5)


3.விதிமுறை இலக்கணம்:


வ.சுப.மா. தொல்காப்பியத்தை ஒரு விதிமுறை   இலக்கணமாகவே காண்கிறார். “பண்பட்ட தமிழுக்கு முப்பது ஒலியன் என்பது முடிந்தவரம்பு.  அயலொலியன் வந்து கூடுதற்குத் தமிழில் இடனில்லை, தமிழுக்கு இயற்கையில்லை”(ப.21) எனக் கூறும் அவர் “தமிழ் மொழிக்கு எழுத்து முப்பது என்ற ஒரு செய்தியைத் தருவது தொல்காப்பியத்தின் நோக்கமன்று.  இவ்வாறு இவ்வரம்பைக் கடைப்பிடித்து ஒழுகுக என்பது நூற்பாவின் பயன் " (ப. 23)என உறுதிபட மொழிகிறார்.

வரிவடிவம் பற்றிய நூற்பாக்களை விளக்குமிடத்துத் தமிழ்த் தொன்மையை ஏற்றவாறு நெறிப்படுத்துகிறார் வ.சுப.மா.

" மெய்யினியற்கை’ என்றதுபோல ‘எகர வொகரத்தியற்கை’ என்பதனால் மெய்போல இவையும் புள்ளியொடு நிற்றல் தொன்மரபு என்பது தெளிவாம்... ஆதலின் பிறமொழிகளைச் சார்த்தித் தமிழ் மொழியின் ஒலியன் வடிவன்களைக் கணிப்பது அறிவுடைமையாகாது " (ப.40)

இங்கு ‘இயற்கை’ என்பதைத் தமிழுக்கேயுரிய இயல்பு - அஃதாவது பிறமொழி கண்டு ஆக்கப்பட்ட செயற்கை யன்று - என வலியுறுத்துகிறார்.  இயற்கை, செயற்கைப் பொருள்கள் பற்றிய கிளவியாக்க நூற்பாக்களை நோக்கத் தொல்காப்பியர் இங்கு இயற்கை எனப் பயன்படுத்தியிருப்பதை வ.சுப.மா.வின் விளக்கம் தெளிவுபடுத்திவிடுகிறது.

தமிழின் ஒலி, வரி வடிவங்கள் மட்டுமன்றி மெய்ம்மயக்க அமைப்பையும் பேண விழைகிறார் வ.சுப.மா.

எழுத்து மயக்கத்தில் மெய்யொடு மெய் ஒன்றிநிற்கும் மயக்கமே தமிழ்மொழியின் அமைப்பைக் காட்டுவது.  வரம்புடையது, பிறழாது கடைப்பிடிக்கவேண்டியது, புணர்ச்சியிலக்கணத்திற்கும் தளமாவது.  வரிவடிவத்திலும், தமிழ் எண்களின் பண்டை வடிவங்களைப் பேண வேண்டும், மீண்டும் பயன் பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்கிறார் அவர் (ப.67).

இவை, ஒருவகையில் மீட்பு மாகும்.


4.தமிழ்மை :


தமிழ் தனக்கேயுரிய தனித்தன்மைகள் கொண்டதென்பதையும், தமிழ் வெறும் மொழி மட்டுமன்று மொழிசார் பண்பாடென்பதையும் வ.சுப.மா. வலியுறுத்துகிறார்.

" செந்தமிழ் என்பது தமிழுக்கு இயற்கையுடை; அன்புத்தாய், நல்லருள், என்பது போல, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ எனவும், ‘வாழிய செந்தமிழ்’ எனவும், ‘செந்தமிழ் நாட்டுப் பொருநர்’ எனவும் பாரதியார் இயல்பாகப் பாடுதல் காண்க.  செந்தமிழியற்கை என்னும்போது மொழியியல்பை மட்டும் பாயிரம் சுட்டவில்லை.  வாழ்க்கை வழக்கையும் குழும வழக்கையும் நாகரிகத்தையும் சேர்த்துச் சுட்டுகின்றது.  தமிழ் என்ற சொல் பண்டைக்காலத்துத் தமிழினத் தொடர்பான தமிழ்மை பலவற்றையும் குறித்துவரும் ஒரு பொதுப்பெயர்.  ‘தமிழ்தலை மயங்கிய தலையாலங்கானத்து’ என்ற (19) புறநானூறும், ‘கொண்டிமிகைபடத் தண்டமிழ் செறித்து’ என்ற (63) பதிற்றுப்பத்தும், ‘அருந்தமிழாற்றல் அறிந்திலர்’ என்ற சிலப்பதிகாரமும் தமிழ்ப் படையைக் குறிக்கும்.  ‘நற்றமிழ் முழுதறிதல் (50) என்ற புறமும் ‘தமிழ் முழுதறிந்த தன்மையன்’ என்ற சிலம்பும் தமிழறிவைக் குறிக்கும்.  ‘தமிழ் நிலை பெற்ற’ என்ற சிறுபாண் தமிழ்ச் சங்கத்தினையம் ‘தமிழ்தழிய சாயல்’ என்ற சிந்தாமணி தமிழ்ப் பண்பையும் தமிழ்மருந்து தமிழிசை என்ற தொடர் தமிழ்க்கலைகளையும் குறிக்கும்.  பிறவுமன்ன " (ப.7)

தொல்காப்பியப் பனம்பாரனார் பாயிரவுரையில் இடம் பெறும் நான்மறை என்பது அந்தணர் ஒதும் நான்கு வேதங்களைக் குறிக்கும் என்பது பழைய உரையாசிரியர்களின் கருத்து.

நான்மறை என்பது அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கனையும் குறிக்கும் என்பதற்கு,  

‘அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கனையும்

இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடி’

என்ற திருவாசகமும் ஒரு சான்று என்கிறார் (ப.9)

இங்கு வ.சுப.மா. வெறும் கருத்துச் சார்புநிலை காட்டாமல் சான்றும் காட்டியுள்ள புலமைத்திறம் நோக்குதற்குரியது.

‘ஐந்திரம் நிறைந்த’ எனும் பாயிரத் தொடருக்கு “ஐந்திணை இலக்கணம் சொல்லும் ஆற்றல் நிறைந்த” என்று பொருள் காணும் வ.சுப.மா. அதனை வலியுறுத்தச் சுட்டும் தருக்க நெறி, அவரது பார்வை நுட்பம் காட்டும்.

" இப்பாயிரத்தில் வரும் எண்ணிக்கை தொடர்பான ஓரமைப்பைச் சுட்டிக் காட்ட விரும்புவன்.  ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து பன்மை என்ற எண்ணிக்கை நாட்டம் பனம்பாரனார்க்கு இருந்தமை தெளிவாகின்றது.  ஒன்று தமிழ் கூறு நல்லுலகம் ; இரண்டு வழக்கும் செய்யுளம் ; மூன்று எழுத்தும் சொல்லும் பொருளும் ; நான்கு நான்மறை; ஐந்து ஐந்திரம் ; பன்மை பல்புகழ் நிறுத்த, இவ்வோட்டத்தைக் காணுங்கால், நான்மறைக்குப் பின் வரும் ஐந்திரம் என்பது எவ்வாறேனும் ஐந்து என்னும் எண்குறிப்பினதாக இருத்தல் வேண்டும்.  ஒருசாரார் உரை கூறுவதுபோல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐந்திணைக் கொள்ளலாம் எனிளும் எழுத்தும் சொல்லும் பொருளும் என முப்பாகுபாடே அன்றிருந்த வழக்காதலானும், மெய்ப்பாடு விடுபட்டுப்போதலானும் அவ்வுரை பிற்காலச்சாயலது " (ப.13) என்கிறார்.


இன்னும் பல இடங்கள் உள்ளன.

குறிப்புகள்:

1. எஸ்.வையாபுரிப்பிள்ளை, தமிழ்ச் சுடர் மணிகள், பக்.197 - 198.

2. பா.மதிவாணன், தொல்காப்பியம் பால. பாடம் , ப.90.

3.பா.மதிவாணன்,'தொல்காப்பிய மாணிக்கவுரையிற்காணும் சிலநுட்பங்கள்'  (mathipuu.blogapot.com)


முதன்மைச் சான்று:

மாணிக்கம், வ. சுப. , தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை, தமிழ்ப் பல்கலைக்கழகம் , தஞ்சாவூர், 1989.

துணை நூல்கள்:

மதிவாணன், பா., தொல்காப்பியம் பால. பாடம் , அய்யா நிலையம், தஞ்சாவூர், 2014.

வையாபுரிப்பிள்ளை, எஸ்., தமிழ்ச் சுடர்மணிகள், பாரி நிலையம், சென்னை, 1959 


இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...