Saturday, February 12, 2022

தனித்தமிழ் என்னும் தமிழ்மரபு !

          இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர்வினை

            எனஇரண்(டு) ஆகும்  இடைஉரி அடுத்து

            நான்குமாம் திசைவட சொல்அணு காவழி (நன்னூல், 269)

  ௸ நூற்பாவில் நான்கு கருத்துக்கூறுகளைக் காணலாம்:

1. இயற்சொல் , திரி சொல் (இயல்பு).

2. பெயர், வினை (ச்சொற்கள்) என இரண்டு. அடுத்து...

3. இடை, உரி(ச்சொற்கள்) [ஆக] நான்கு.

4. திசை, வடசொற்கள் அணுகாவழி ...

 பெயர், வினை என இரண்டு; இடை, உரி அடுத்து நான்கு என இரு வகைப்படுத்தி, இவற்றுக்கு  மட்டுமே தொகை கொடுத்திருக்கிறார்  பவணந்தியார்;

இயல், திரி சொற்களுடன் திசை,வட சொற்களை ஒருங்கு கூறினாரல்லர்.

இயல்திரி சொற்களுக்குத் தொகை தராவிடினும், 'அவை அணுகாவழி' என ஒதுக்கப்படவில்லை.

இந்நூற்பாவிற்கு உரையெழுதும்போது , நன்னூலின் முதல் உரையாசிரியரான¹ மயிலைநாதர்

திசை வடசொல் அணுகாவழி ' எனவே இப்பகுதிப்படுவது தமிழ்நாட்டிற்குரிய சொல்லென்பதூஉம் , திசைச்சொல்லும் வட சொல்லும் ஈண்டுச் சேரவும்  பெறுமென்பதூஉம் , சேர்தல் ஒரு தலையன்மையின் அவற்றிற்கு இலக்கணம் ஈண்டுக்  கூறார் என்பதூஉமாயிற்று

- என விளக்குகிறார். 

" சேரவும் பெறும்" என எதிர்மறையும்மையாற் கூறுவது நோக்கத்தக்கது. திசை,வடசொற்கள் ஒருதலையல்ல (கட்டாயமல்ல)  ; காரணம்,அவை தமிழ்நாட்டிற்குரியனவல்ல.

இனித் திசைச்சொல் பற்றிய நூற்பாவிற்கு அவர் தரும் விளக்கம் காண்போம்

செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்

ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தினும்

தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப (௸,272)

செந்தமிழ்நிலத்தைச்சேர்ந்த பன்னிருநிலத்தினும் இருவகைத்தமிழாம் ஒருமொழிநிலத்தையொழிந்த பதினேழ்நிலத்தினும் தத்தங்குறிப்பினான் வழங்குவனவற்றைத் திசைச்சொல்லென்று சொல்லுவர், ஆசிரியர் என்றவாறு.

செந்தமிழ்நிலமும் அதனைச்சேர்ந்த பன்னிருநிலமும் மற்றைப் பதினேழ்நிலமுமாக நிலம்முப்பதாம்பிறவெனின், ஆகாது; பதினெண்பூமி பதினெண்மொழியென்றே உலகத்து வழங்கிவருதலின். அவற்றுள், ஈண்டொழித்த தமிழொன்றே இப்பதின்மூன்றுபாலும் பட்ட தென்க. அவற்றுள்ளும் ஒன்று செந்தமிழென்றும் அல்லன கொடுந்தமிழென்றும்கூறப்படும். 

இருவகைத்தமிழாம் ஒருமொழிநிலம் - என்பது ஓசை நயமும் வரையறைச் செறிவும் ஒருங்கமைந்த தொடர். நூற்பாவில் பன்னிரு நிலம் எனப்படினும் ஒருமொழி நிலந்தான் என வரையறுத்துத் தெளிவுபடுத்துகிறார் மயிலைநாதர். 

செந்தமிழ் நிலம் ஒன்றும் அதனைச் சேர்ந்த [கொடுந்தமிழ் வழங்கும்]பன்னிரு  நிலமும் ஆகிய பதின்மூன்று பாலும் [பகுதியும்]பட்டது ஒற்றைத் தமிழ் நிலமே என்று மேலும் தெளிவுபடுத்துகிறார். 

பிற்சோழர் காலத்தில் (பொதுக் காலம் 850 - 1270) பேரரசில் வழங்கிய மொழிகளென ஏழு மொழிகளைக் குறிப்பிடலாம்; இவை தவிரத் தென்கிழக்காசிய நாடுகளுடன் சோழப்பேரரசு கொண்டிருந்த வணிக உறவு, நட்புறவுகளால் வேறு பல இந்தோ ஆரிய, திபெத்திய பர்மிய மொழிகளும் அறிமுகமாகியிருந்தன; இவற்றுள் சிங்கள , பர்மிய மொழிகள் குறிப்பிடத்தக்கன எனக் காட்டுகிறார்   பேராசிரியர் சு.இராசாராம். மேலும் பல்லவர்காலந் தொட்டே சமயம், இலக்கியம், மெய்யியல் எனப் பண்பாட்டு நடைமுறைகளில்  சமற்கிருதச் செல்வாக்கு மேலோங்கி அது தொடர்பு மொழியின் தேவையையும் நிறைவு செய்ததாக அவர் விளக்கியிருக்கிறார்( இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும், காலச்சுவடு, 2010, பக்.203 - 217).

11 ஆம் நூற்றாண்டில் -  சோழப்பேரரசன் பேரால் - வடமொழிவழித் தமிழ் இலக்கணமான வீரசோழியம் தோன்றிவிட்டது. நூலாசிரியர் புத்தமித்திரனாரின் மாணாக்கராகிய , உரையாசிரியர் பெருந்தேவனார், " தமிழ்ச் சொல்லிற்கு எல்லாம் வட நூலே தாயாகி நிகழ்கின்றமையின் , அங்குள்ள வழக்கெல்லாம் தமிழுக்குப் பெறும் " என்று அடித்துச் சொல்லிவிட்டார்.

அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் சோழப்பேரரசு சரிந்துகொண்டிருந்தது. 13ஆம் நூற்றாண்டில்  [சோழரொடு முரணியோருள் ஒருவனாகிய!] சீயகங்கன் என்னும் சிற்றரசன் வேண்டுகோளுக்கிணங்கப் பவணந்தி,   'முன்னோர் நூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்' என்கிறது சிறப்புப் பாயிரம். மயிலைநாதர் 14 ஆம் நூற்றாண்டினர். 

நன்னூல் வடமொழிச் செல்வாக்கையும் தமிழில் அதன் தடத்தையும் மறுக்கவில்லை; ஆனால், மரபில் தமிழையே பேணியது. அதனாற்போலும் அது நன்னூல் - நல்ல நூல் - எனப்பட்டது.

'தமிழ்ச் சொல்லிற்கு எல்லாம் வடநூலே தாய்' என்றதற்கு மாறாகத்  தொல்காப்பியந் தொட்டுத் தொடரும் 'முன்னோர் நூலின்' வழி நன்னூலும் வட சொல்லுக்கு  நான்காம் இடமே² தந்தது. இது தற்செயலான வைப்புமுறையன்று. 

இதனை உணர்ந்து உள்வாங்கிய மயிலைநாதரும், திசைச்சொல்லும் வட சொல்லும் சேர்தல் ஒருதலையன்று என்றார்.

தனித்தமிழ், அயல் அலைகள் பலவற்றின் கலப்பினூடாகவும் தமிழ்மரபாய்த் தலை நீட்டிக்கொண்டேயிருக்கின்றது.

இங்குள்ள சிக்கல் ஒன்றையும் கருதுதல் வேண்டும்.

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும்

தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொல். எச்ச. 4)

என்னும்தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றி, ' ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத் ' தை இடைமிடைந்து நூற்பாவாக்கியுள்ளார் பவணந்தி. பவணந்தி கால மொழிச் சூழலில் அவர் தமிழும் சங்கதமும் அல்லாத பிற மொழிகளுக்கும் இடம் தர நேர்ந்தது இயல்பானதே. இம்மொழிகளையும் உள்ளடக்கி நால்வகைச் சொற்கள் என்னும் தொல்காப்பிய மரபையும்  பேண முயன்றதுதான் சிக்கலை ஏற்படுத்திவிட்டது.  

செந்தமிழ் நிலம் சேர்ந்த பன்னிரு வட்டாரக்கிளைமொழிகளோடு , செந்தமிழ் நிலம் சேராத பிறமொழிகளையும் பவணந்தி ஒன்றாக வகைப்படுத்திவிட்டார். ' திசை வடசொல் அணுகாவழி ' என நூற்பாச்செறிவில் கருத்துச் செலுத்திய பவணந்தி, திசைச்சொல்லுள் கொடுந்தமிழும் சிக்கிக்கொண்டதைக் கருதினாரா என்று அறிய இயலவில்லை.

ஒருவேளை பவணந்தியார் கொடுந்தமிழும் அடங்கிய தனித்தமிழின்³ வேறாகக் கொடுந்தமிழ் தவிர்ந்த தூய தமிழை⁴ இயற்சொல் எனக் கருதினராகலாம் .

குறிப்புகள்

1. நன்னூலின் பழைய உரையாசிரியர் மயிலைநாதர். அவருடைய உரையில் காணப் படும், "இதற்குப் பிறவாறு சொல்லுவாரும் உளர்." (நன். 271) என்பது போன்ற சொல்லாட்சி மயிலைநாதருக்கு முன்னரோ அல்லது அவர் காலத்திலோ நன்னூலுக்கு வேறு உரை இருந்திருக்கலாம் என்ற கருத்தைத் தோற்றுவிக்கிறது. அது ஆசிரியர் மாணவர் வழியில் வாய்மொழியாக வழங்கிய உரையா? எழுத்து வடிவில் ஏட்டில் நிலவிய உரையா என்று சொல்வதற்குப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. எனவே கிடைத்துள்ள நன்னூல் உரைகளில் மயிலைநாதர் உரையே காலத்தால் முந்தியது 

- அ. தாமோதரன்(பதிப்பாசிரியர்), 'பதிப்புரை', பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் செய்து சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட புத்தம் புத்துரை என்னும் விருத்தியுரையும்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,1999, ப.21.

2. பிற இந்திய - குறிப்பாகத் தென்னிந்திய - மொழி மரபிலக்கணங்கள் பெரிதும் தற்சமம், தற்பவம் எனச் சங்கதத்திற்கு முதன்மை தந்து பின்னரே தேசியம் , கிராமியம் எனத் தத்தம் மொழிகளை வைத்தன.

3.தனித்தமிழ் = பிறமொழி கலவாத் தமிழ்

4.தூய தமிழ்    = வட்டார வழக்குத் 'திரிபு'களும் தவிர்ந்த தமிழ்




 



  

No comments:

Post a Comment

வேரில் வெந்நீர் விடவேண்டாம்!*

  எனது மொழியியல் அறிவு பாமர அளவினது . நான் அறிந்தவரை விளக்க மொழியியல் என்பது சமகால/ஒருகால மொழியமைப்பை விளக்குவது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்...