Saturday, July 23, 2022

பாவேந்தரின் பரப்புரைப் புதுமைகள்

 பாவேந்தரின் பரப்புரைப் புதுமைகள்



தமிழ்க் கவிதை வரலாற்றில் கனக. சுப்புரத்தினம்(1891-1964) என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசன்  -  பாவேந்தர், புரட்சிக் கவிஞர் என்றெல்லாம் பற்றாளர்களால் போற்றப்பட்டார். அவருக்குரிய இடத்தைக் காலம் உறுதி செய்திருக்கிறது.

அவருடை ‘கவிதை’களின் இலக்கிய மதிப்பு, கருத்து நிலைகளில் நேர்ந்த மாற்றங்கள், கட்சி அரசியலின் உணர்ச்சிமேலீடு முதலியன பற்றிய அழுத்த வேறுபாடு கொண்ட விமரிசனங்கள், ஏற்பு மறுப்புகள்(மறைப்புகளும் உண்டு) எவ்வாறிருப்பினும், தம் வாழ்நாளின் அரசியல் சமூக இயக்கங்கள், போக்குகளின் மாறுதல்களுக்கு ஈடுகொடுத்து , அவற்றில் பங்கேற்றார்;எதிர்வினைகளைப் பதிவு செய்தார். அப்பதிவுகள் பல்வேறு வடிவங்களில் அமைந்தன.   

தமிழின் நவீன, ‘தூய’ இலக்கிய முயற்சிகளின் குறியீடான ‘மணிக்கொடி’ இதழில் பாரதிதாசனின் கவிதைகள் இடம் பெற்றன. தமிழில் புதிய விமரிசன வளர்ச்சி நோக்கில் தொடங்கப்பட்ட ‘எழுத்து’ இதழ், புதுக்கவிதைகயின் இரண்டாம் எழுச்சிக்குக் களம் அமைத்ததுக்கொண்டது. அத்தகு எழுத்து இதழைத் தொடங்கிய,  அலசல்முறை விமரிசகர் சி.சு. செல்லப்பா பாரதிதாசன் கவிதைப் படிமங்களைச் சிலாகித்துக் காட்டியிருக்கிறார்.

பாரதிதாசன் ஆய்வாளர் பட்டியலும் ஆய்வுகளின் பட்டியலும் விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும்.

பாரதிதாசன் யாப்புப் புதுமைகளை யாப்பியலறிஞர் ய.மணிகண்டன் விரிவாகவும் நுட்பமாகவும் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.

பாரதிதாசனிடம் காணப்படும் நாட்டுப்புற வழக்காற்றுத் தாக்கங்களை மணிகோ. பன்னீர்செல்வம் விரிவாக ஆராய்ந்துள்ளார்.

முனைவர் செ.மகேசுவரி பாரதிதாசனின் திரைத்துறைப் பங்களிப்பை முழுமையாக ஆராய்ந்துள்ளார்.

இவை குறிப்பிடத்தக்க அண்மைக்கால ஆய்வுகள். பெரியார் பேருரையாளர் ந. இராமநாதனின் 'கவிஞரும் காதலும்' முதலான முந்தைய தலைமுறையினரின் ஆய்வுகள் பல.

அரசியல், சமூகம் சாராத, இயற்கையழகின் ஈர்ப்பும் அவற்றைத் ‘தூய’ கவிதையாக்கும் ஆர்வமும் - ஏக்கமும் கூட – பாரதிதாசனிடம் இருந்தன. அவற்றை ‘அழகின் சிரிப்பு’ எனக் கவிதையாக்கித் தந்துமிருக்கிறார். என்றாலும் காலத்தின் குரலுக்கு ஈடுககொடுக்க வேண்டிய நெருக்கடியும் பதிவு செய்திருக்கிறார்.


ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட

 'என்னை எழு தென்று சொன்னது வான்! 

 ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின் 

 ஓவியந் தீட்டுக. என்றுரைக்கும்! 

 காடும் கழனியும் கார்முகிலும் வந்து 

 கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்! 

 ஆடும்மயில் நிகர் பெண்களெல்லாம் 

 உயிர் அன்பினைச் சித்திரம் செய்க, என்றார்!

 ...       ...      ...            ....இவற்றிடையே,

 இன்னலிலே, தமிழ் நாட்டினிலேயுள்ள 

 என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார். 

 அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென் 

 ஆவியில் வந்து கலந்ததுவே 

 என்று தம் கவித்துவ ஈர்ப்புக்கும் சமூக உணர்வுக்குமிடையிலான இழுபறியையும் கவிதையாக்கியிருக்கிறார் பாரதிதாசன்.

பாரதி விட்டுச் சென்ற சொத்துகளாக ஞானரதம், படைப்புக்களோடு பாரதிதாசனையும் சேர்ந்திருக்கிறார் புதுமைப்பித்தன் 

ஒருநிலையில் பாரதியிடம் கவிதையினூடாக ஆவேசம் வெளிப்படுமெனில் பாரதிதாசனிடம் ஆவேசத்தினூடாகக் கவிதை வெளிப்படும். வாழ்த்தாயினும் வசையாயினும் பாரதிதாசனிடம் உணர்ச்சி மேலிட்டு நிற்கும்.

மறுபுறம் கவிதைப் பண்பாகப் பாரதியிடம் பெருமிதம் வெளிப்பட, பாரதிதாசனிடம் எளிமை தலைகாட்டும்.

ஓர் ஒப்பீடு: 

விம்மி யழுதாள். - " விதியோ, கணவரே

அம்மி மிதித்தே யருந்ததியைக் காட்டியெனை 

வேதச் சுடர்த்தீமுன் வேண்டி மணஞ்செய்து 

பாதகர்மு னிந்நாட் பரிசழிதல் காண்பீரோ? 

என்றாள். விஜயனுட னேறுதிறல் வீமனுமே 

குன்றா மணித்தோள் குறிப்புடனே நோக்கினார்.

 தருமனுமற் றாங்கே தலைகுனிந்து நின்றிட்டான். 

 பொருமியவள் பின்னும் புலம்புவாள். - "வான்சபையில் 

கேள்வி பலவுடையோர் கேடிலாநல்லிசையோர்.

 வேள்வி தவங்கள் மிகப்புரிந்த வேதியர்கள் 

 மேலோ ரிருக்கின்றார். வெஞ்சினமேன் கொள்கிலரோ? 

 மேலோ ரெனையுடைய வேந்தர் பிணிப்புண்டார். 

 இங்கிவர்மேற் குற்ற மியம்ப வழியில்லை. 

 மங்கியதோர் புன்மதியாய்! மன்னர் சபைதனிலே

என்னைப் பிடித்திழுத்தே யேச்சுக்கள் சொல்லுகிறாய். 

நின்னை யெவரும் "நிறுத்தடா" என்பதிலர். 

என்செய்கேன்!" என்றே யிரைந்தழுதாள்.'


- துரியோதனன் அவையில் துகிலுரியும் சூழலில் பாஞசாலி நீதிகேட்டுப் புலம்புகிறாள்.இது பாரதி பாடிய பகுதி.


ஆவி இழக்கலாம்

ஆடை இழப்பதுண்டோ

கூவிக் குரல் இழக்கும்

வீரர்களும் மன்னர்களும்

மீட்கக் கருதீரோ!

காரிகை என் மானமுங்கள்

கண்முன் இழப்ப துண்டோ?

என்பன பாரதிதாசன் வரிகள். இவற்றில் செறிவும் எளிமையும் மிளிர்கின்றன.

பெரிதும் வியாசபாரத மொழிபெயர்ப்பாக, தமிழ்நடை தந்து பாடிய பாரதியின் வரிகளைச் சுதந்திரமாகப் பாடிய பாரதிதாசனுடன் முற்று முழுதாக ஒப்பிட்டு முடிவுகாண்பது நியாயமாகாதெனினும் இருவர்தம் கவிதைப் பண்பின் போக்குகளை ஓரளவு உணர உதவும் என்றே தோன்றுகிறது.

பாரதிதாசனின் கவிதைப் புதுமை அவரது எளிமையில் தங்கியுள்ளது ; எளிமை எல்லைமீறும் போது கவிதை சற்று நகர்ந்து கொள்வது இயல்புதானே!

பாரதிதாசனின் சமகாலத்தில் எளிமை மீதூரப் பாடிய சிலரின் - பெயர் சுட்டலைத் தவிர்க்கிறேன் - பாக்களை நோக்கப் பாரதிதாசனிடம் கவிதை விஞ்சி நிற்கிறது.

பாரதிதாசனிடம் காணும்  எளிமை சான்ற புதுமைள் சிலவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் காந்தியடிகளின் இயக்கத்திற்கு இணக்கமான, பாரதிதாசனின் கருத்துப் பரப்பல் புதுமைகளை விதந்து கூறலாம் .

பாரதிதாசன் தமிழ் பயின்றவர்; பண்டித மரபினர் ; இசையறிவுடையவர்; பள்ளித் தமிழாசிரியர். இந்தப் பின்னணியில் அவருடைய தொடக்ககாலப் பாடல்கள், படைப்புகள் அமைந்தது இயல்பானதே.

கருத்துப் பரப்பல் பாடல்களின் பரவலான பொதுப் போக்கிலொன்று முந்தைய  சனரஞ்சக மெட்டுகளில், பரப்பவேண்டிய கருத்துகளை அமைத்துப் பாடுவது. இப்போக்குப் பாரதிதாசனிடமும் காணப்படுவதில் புதுமையில்லை. 1930இல் வெளிவந்த ‘கதர் இராட்டினப் பாட்டு’த் தொகுதியில் இவ்வாறு மெட்டுக்குப் பாடிய பாடல்கள் சிலவுள்ளன.

‘ஜன்ம பூமியின் சிறப்பு’ என்ற பாடலில் ‘பறைமுழக்கம்’ எனும் ஓசையமையப்பாடும் பாரதிதாசன் ‘சுற்றும் சுற்றும் சுற்றும்’, ‘கொட்டு, கொட்டு, கொட்டு’, ‘வெல்லும் வெல்லும் வெல்லும்’, ‘சிங்கம் சிங்கம் சிங்கம்’, ‘உண்டு உண்டு உண்டு’, ‘கொண்டோம் கொண்டோம் கொண்டோம்’ என அடுக்கும்போது பறைமுழக்கச் சாயல் புலனாகிறது. உள்ளடக்கத்திற்கேற்ற ஓசையில் புனைதலும் புதுமையன்று.

‘அன்னைக்கு ஆடை வளர்க' எனும் பாடல், பாஞ்சாலியின் அவலத்தோடு பாரத மாதாவின் அவலத்தை ஒப்பிட்டு உணர்வூட்டுகிறது .

 பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’ வியாசரைப் பின்பற்றியதென்று பாரதியே கூறினும், அப்பகுதியைத் தேர்ந்ததன் பின்னுள்ள உட்பொருளை – பாரதமாதா விடுதலை, பெண்விடுதலை, முதலியனவாக - ஆய்வாளர்கள் காண அஃது இடந்தருகிறது.

 பாரதிதாசன் வெளிப்படையாகவே பாஞ்சாலியின் அவலத்தை உருவகமாக்கிவிடுகிறார். இங்கே ஆடை வளர்தலைக் கதராடையின் வளர்ச்சியாகவும் கண்ணபிரானைக் காந்தியடிகளாகவும் தோன்றச் செய்கிறார் பாரதிதாசன்.

“தீயர் துகில் பறித்துத்

தீர்க்கின்றார் என் மானம்

மாயா மலர்க் கண்ணா

வந்து துயர் தீர்த்திடுவாய்”

 என்றுரைத் திட்டாள்.

இதனைச் செவியுற்றுச்

சென்று கண்ணக் காந்தி

சித்திரஞ்சேர் ஆடை

வளர்ந்திடுக என்றான்

அறம் வளர்க்க வந்தோன் - 

வளர்க வளர்கநம் வாழ்வு

என்று பாட்டு நிறைகிறது. அன்றைய காந்திய இயக்கத்தின் பின்புலத்தில் பாமரரும் உணர்வெழுச்சி கொள்ளுமாறும் காவியத்திற்குள்ள நயங்கள் குறையாமலும் சின்னஞ்சிறு பாட்டில் பாரதிதாசன் பரப்புரைப் புதுமை செய்து காட்டியுள்ளார்.

தாலாட்டு, மரபுவழிப்பட்டதே. பாரதிதாசன் ‘தேசீயத் தாலாட்டுக்கள்’ பாடியுள்ளார். 

ஆனால், திருமணம் சார்ந்த  வடிவங்களாகிய நலங்கு, மங்களம், சோபனம், வாழ்த்து ஆகிய வடிவங்களையும் - புகழ்வாய்ந்த மெட்டுகளில்- பாரதிதாசன் பாடியிருப்பது புதுமை.

மணமக்களுக்குச் சந்தனம் பூசுதல் முதலிய வேடிக்கை விளையாட்டு நிகழ்த்திப் பாடப்பெறுவது நலங்குப் பாடல்.

மணமகள் நலங்குப் பல்லவியாக “சுபநலங் கியற்று வீரே தோ கையர் நீரே” என்பதை அமைக்கிறார்.


அபசாரமின்றித் தாய்நாட்டத்தர் கலவைபூசி

உபகாரிக்கு நல்லாசி உரைப்பீர் மலர்வீசிச் (சுப)

என்று சரணம் தொடங்குகிறது. மாவீர மக்கட்பேறு, நூலிழைக்கும் நோன்பு, கதராடை பூணல் எனத் தேசிய இயக்கக் கருத்துகளை இடைமிடைந்து

           தாழ்வென்று தமைமற்றோர் சகத்திற்சொல் வதை வீழ்த்தி

வாழ்வென்ற ‘சுதந்திரம்’ வாய்த்திட்ட தென வாழ்த்திச்

             சுப நலங்கியற்றுவீரே…

என்று நிறைவு செய்கிறார். மணமகன் நலங்கில்,  


நிசியினும் பகலினும் நெடுநிலம் காத்திடும் வில் 

விசயனின் வழித்தோன்றல்

கசிந்திடும் பனிநீர்க் கலசம் கையேந்திக் 

காளை யுளங்குளிரக் கவிழ்ப்பீரே

என்று நாடு காக்கும் மக்கட்பேற்றை வலியுறுத்துகிறார்.

இவ்வாறு ‘மங்களம்’, ‘சோபனம்’, ‘வாழ்த்து’ ஆகிய திருமணந் தொடர்பான சடங்குகள் சாரந்து தேசியப்பாடல்களை அவர் இயற்றியுள்ளார்.

பள்ளித் தமிழாசிரியரான பாரதிதாசன், சிறுவர் சிறுமியர் இயல்புணர்ந்து விளையாட்டுப் போக்கில் அவர்கள் பயிலவும் பாடவும் தக்க சிலவற்றைப் புனைந்துள்ளார்.இவை அக்காலப் பள்ளிச் சிறாரிடம் கொண்டு செல்லப் பட்டமை பற்றித் தனியே ஆராய்தல் வேண்டுமெனினும் அவை எளிய புதுமுயற்சிகள் என்பதில் ஐயமில்லை. 

காந்தியடிகளின் வெகுமக்கள் இயக்கம் வெறும் அரசியல் இயக்கமாகவன்றி, வெகு மக்கள் பண்பாடு சார்ந்த இயக்கமாயிருந்தது. அவருக்கு முந்தைய மிதவாத, தீவிரவாத இயக்கங்களிலிருந்து வேறுபட்ட காந்தியடிகளின் இயக்கம் - மரபு வழிப் பண்பாட்டுக் கூறுகளோடு புதியதொரு நெறியை அடிப்படையாகக் கொண்டதாகும். இதில் சிறாருக்கும் இடம்தர இயலும் என்று உணர்ந்து பாட்டியற்றியவர் பாரதிதாசன்.

கதைப்பாட்டு, இயற்கை சார் பாட்டு, விளையாட்டுப் பாட்டு, விடுகவிகள் எனப் பல்வேறு வடிவங்களில் நாட்டுணர்ச்சியூட்டினார் அவர். இவையாவும் புதுமைகள்.

மெத்தைவீட்டு வெள்ளைநாய் ஒரு வளர்ப்பு நாய். தெருவில் திரியும் கறுப்பு நாய் சுதந்திரமானது. வெள்ளை நாய் தன் சுகபோகம் பற்றிக் கூறிக் கறுப்பு நாயையையும் தன்னோடிருக்க அழைக்கிறது. அதன் கழுத்து வடுவைப் பற்றிக் கறுப்புநாய் கேட்கிறது. அது கட்டி வைத்ததால் வந்தது என்கிறது வெள்ளைநாய். கறுப்புநாய் ஓடிவிடுகிறது. கதை பழையதெனினும் குழந்தைகளிடம் சுதந்திரவுணர்வூட்டும் நோக்கில் பாரதிதாசன் பாட்டாக்கியுள்ளார்.


‘நிலாப்பாட்டு’ என்பது நிலவை வினவுவதும் அது விடையிறுப்பதும் அந்த விடையிலிருந்து பிறிதொரு வினாத் தொடுப்பதுமாகத் தொடர்வது. சிறுவர்க்கேற்ற சுவையும் எளிமையும் கொண்டது.

நிலவே நிலவே எங்கெங்குப் போனாய்

உலகம் முற்றும் உலாவப் போனேன்

உலாவல் எதற்கு விலாசத் தீபமே

காடும் மலையும் மனிதரும் காண

என்று தொடரும் பாட்டின் முத்தாய்ப்பாக,

பதந்தனில் அமர வாழ்வுதான் எதற்கு?

சுதந்தர முடிவின் சுகநிலை காணவே

என்கிறார் பாரதிதாசன்.

‘தேசிய விளையாட்டு’, ‘நியாய சபை விளையாட்டு’, ‘ஓடிப் பிடிக்கும் புறா விளையாட்டு’ ஆகியவற்றில் விளையாட்டு விதிமுறைகளோடு பாடல்களைப் புனைந்து தந்திருக்கிறார்.

 ஆறுவிடுகவிகளை இயற்றியுள்ளார் பாரதிதாசன். ஆறும் வெவ்வேறு வகையின. சிறுவர்க்கான விடுகவியினூடாகத் தேசிய விடுதலைக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் முற்றிலும் புதியதாகும்.

கதைப்பாட்டு , இயற்கைசார் பாட்டு , விளையாட்டுப் பாட்டு , விடுகவிகள் எனப் பல்வேறு வடிவங்களில் நாட்டுணர்ச்சியூட்டினார் அவர் . இவை யாவும் புதுமைகள்.

ஒன்று சேர்ந்த 'தரை' ஆக்க

ஒன்று சேர்ந்த 'வலை' கொண்டார்

ஒன்று சேர்ந்த 'படம்' அறியார்

உடனே தமது கண் முன்னே

இன்று பாரதம் விடுபட்டால்

இரண்டு சேர்ந்த 'வகை' கொள்வார்.

என்றேன் இதனை விவரித்தால்

எட்டுச்சேர்ந்த 'வலை' அளிப்பேன்

எனும் விடுகதை தமிழ் எண்களின் வரிவடிவை உட்கொண்டது. (ஒன்று = க;  இரண்டு = உ; எட்டு = அ)


உலகிற் பிறந்துநான் கண்டபயன் ஒன்றில்லை

உற்றஇள வயது தூண்ட

ஒருத்தியை மணந்தவுடன் அவளோடு தொடர்ந்தவைகள்

ஒருகோடி யாம் விசாரம்

என ‘மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம்’ எனும் நூலைத் தொடங்குகிறார் பாரதிதாசன். இதில் இல்வாழ்க்கையை ‘விசாரம்’ என்பது மரபின் தொடர்ச்சியேயன்றிப் பாரதிதாசனின் உள்ளார்ந்த உணர்வன்று. இஃது அவரது தொடக்ககாலப் போக்கு. பிற்காலத்தில் காதற்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவர் அவர். அவை தமிழ் அகப்பொருள் தோய்வும் அவர்தம் அகத்து இயல்பும் இரண்டறக் கலந்து முகிழ்த்தவை.


கூடத்திலே மனப்பாடத்திலே - விழி

கூடிக் கிடந்திடும் ஆணழகை

ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் அவள்

 உண்ணத் தலைப்படு நேரத்திலே 

பாடம் படித்து நிமிர்ந்த விழி தனில்

பட்டுத் தெறித்தது மானின் விழி 

ஆடைதிருத்தி நின்றாள் அவள்தான் – இவன்

ஆயிரம் ஏடு திருப்புகிறான்

என்பது போன்ற காட்சியும், உணர்வும். மெய்ப்பாடும், அணிநயமும், ஓசையமைதியும் ஒருங்கிணைந்த காதற் கவிதைகள் பாரதிதாச முத்திரைக் கவிதைகள் என்றே சொல்லலாம்.

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்

மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்

எனச் செறிவாகவும் காதலைப் பாடுவார் அவர்.பாவேந்தருக்கேயுரிய இந்த 'காதல் கவி' முத்திரையைத் தொடங்க காலத்திலேயே, அதுவும்தேசியப் பரப்புரைப் பாடலிலேயே அவர் பதித்திருக்கிறார்.

ஆளை மயக்கிடும் மாதொருத்தி -உடல்

அத்தனையும் பொன்னை ஒத்திருந்தாள் - அவள் 

பாளை பிளந்த சிரிப்பினிலே என்னைப் 

பார்த்துரைத்தாள் “எந்த நாளையிலே - உன்றன்

தோளைத் தழுவிடக் கூடும் என்றே - "அடி

சுந்தரி உன்பெயர் ஊர் எதெ"ன்றேன் 

அவள் "காளி யனுப்பிய கன்னி"யென்றாள்- என்றன்

காதற் சுதந்தர மங்கையன்றோ

எனும் போது -  'சுதந்தர மங்கை' எனும் உருவகக் குறிப்புத்தவிர இதனைக் காதல் பாட்டாகவே கொள்ளத் தடையில்லை.முழுப்பாட்டையும் பயிலும்போது காதற்சுவை சுதந்தரவேட்கை இரண்டும் பின்னிப் பிணைத்த அனுபவத்தைப் பெற முடியம். இஃ தொரு கவிதைச் சாதனை; புதுமை.


துணை நூற்பட்டியல்


1. கல்லாடன், சுரதா (தொகுப்பாசிரியர்). 2011 பாரதிதாசன் கவிதைகள் மணிவாசகர் நூலகம், சிதம்பரம்.


2 குருசாமி. ம.ரா.போ., 2001, பாரதி பாடல்கள்(ஆய்வுப் பதிப்பு), தமிழ்ப்

   பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்.


3. சதீஷ் , அ.,(பதிப்பாசிரியர்),குபரா. கட்டுரைகள், அடையாளம், புத்தாநத்தம்.


4. வேங்கடாசலபதி, ஆ.இரா. (பதிப்பாசிரியர்), புதுமைப்பித்தன் கட்டுரைகள்

     காலச்சுவடு நாகர்கோவில்,


Tuesday, July 19, 2022

தமிழ்ப் புத்திலக்கியங்கள்

 தமிழ்ப் புத்திலக்கியங்கள்

மாண்பமை  நாடாளுமன்ற உறுப்பினர்

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

மதிப்பிற்குரிய தஞ்சை மாவட்ட ஆட்சியர்

சரசுவதிமகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் முனைவர் மணி.மாறன்

தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் முனைவர் சி.சுந்தரேசன்

அரசர் மேனிலைப்பள்ளித் தமிழாசிரியர் முனைவர் பழ.பிரகதீசு

தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் கா. பொ. இராசேந்திரன்

ஆகியோர்க்கு நன்றி .

அவையில் வீற்றிருக்கும் பெருமக்கள் அனைவர்க்கும் வணக்கம்.




நான் மேடைப்பேச்சாளன் அல்லன் ; ஆசிரியன். அதேவேளையில் இந்த உரையை எல்லாவற்றையும் திணித்துப் பாடப்பகுதியை முடிக்கிற  வெறும் வகுப்பறைப் பாடமாகவும் நிகழ்த்தப்போவதில்லை.

 தமிழில் புத்திலக்கியங்கள் என்பதைச் சில எடுத்துக்காட்டுகளால்    தொட்டுக் காட்டி,   முந்தைய தமிழிலக்கியத் தொடர்ச்சியில் புத்திலக்கியத்தின் இடத்தைச் சுட்டிக்காட்டுவதாக , அதாவது அறிமுகமாக , உரையை அமைத்துக்கொண்டிருக்கிறேன்.

மேடைப் பேச்சின் சுவையையும்  நயத்தையும் இந்த உரையில் எதிர்பார்க்க வேண்டாம். என்னையும் மீறிச் சுவையும் நயமும் உங்களுக்குத் தென்பட்டால் உள்ளார்ந்த நன்றியை இப்போதே தெரிவித்து விடுகிறேன்.

இரண்டு அண்மைக் கவிதைகளிலிருந்து என் உரையைத் தொடங்குகிறேன். ஒன்று இந்த ஆண்டில் வந்தது. மற்றொன்று இந்த மாதம் வந்தது. இரண்டும் மிக அண்மைக் கவிதைகள்.

மற்றதெல்லாம் விஷயமேயில்லை

கவிதை எழுத எனக்கு 

நாள்நட்சத்திரம் வேண்டாம்

நேரம் காலம் வேண்டாம்.

எனக்கே எனக்கான அறை 

மேலதிக வசதிதான்


ஏன், பத்திரிகை வேண்டாம்.

பேஸ்புக் போதும்


பூசலார் நாயனார் மனதுக்குள்ளேயே

கட்டிக் காட்டியிருக்கிறார் 

விமானத்தையும் சிகரத்தையும்

மதிலையும் திருக்குளத்தையும்


கவிதையின் கோயில்

அவ்வாறே அமைகிறது.


ஒரு கவிஞருக்கு வேண்டியதெல்லாம்

உள்ளே

அப்பாலான

கோபுரத்திலிருந்து

அழைக்கப்படும்போது

எங்கே பறந்துகொண்டிருந்தாலும் திரும்பத் தயாராக இருப்பது மாத்திரமே

ஆனால் அதற்கு நீ

முதலில் ஒரு புறாவாக இருக்கவேண்டும்.

- பெருந்தேவி, மணல்வீடு, பிப்ரவரி 2022,ப.42.


இது எளிய கவிதைதான்.


எனக்கு என்று தன்மையில் தொடங்கி , 

ஒரு கவிஞருக்கு என்று படர்க்கைக்குப் போய்

நீ புறாவாக இருக்க வேண்டும் என்று முன்னிலையில் முடிவதும்


புறா என்கிற உருவகத்தைக் கொண்டிருப்பதும்


பூசலார் நாயனார் தொன்மத்தை இடைமிடைந்ததும்

அந்தத் தொன்மத்திற்கு இயைபாகக் கவிதையின் கோயில் எனும் படிமத்தை ஆக்குவதும்

புறா என்னும் உருவகத்திற்கு இயைபாகக் கோயில் கோபுரத்தைக் காட்டுவதும்

அந்தக் கோபுரம் உள்ளே அப்பாலானது என நுண்மையாக்குவதுமாகிய

கவிதை பற்றிய இக்கவிதையை

 விளக்கலாம் ; விமரிசிக்கலாம் ; அலசி ஆராயலாம்.

 ஆனால்

 இந்தக் கவிதையை இருபதாண்டுக்குமுன் எவரும் எழுதியிருக்க முடியாது என்பதையே நான் இங்குச்  சுட்டிக்காட்ட விரும்புகிறேன் . ஏன்?

Facebook என்கிற 

– இன்று உலகம் முழுதும் 200 கோடிப் பேருக்குமேல் பயன்படுத்துகிற,

சமூக வலைப்பின்னல்  (Social network)2004இல்தான் தொடங்கப்பட்டது.

Facebook ஐ இந்தக் கவிதை குறிப்பிடுகிறது. 

சரி. இது ஒரு காலக் குறிப்புதானே!  தகவல்தானே ! அந்தத் தகவலை நீக்கினாலும் கவிதைக்கு இழப்பில்லையே! 

ஆம். பெரிய இழப்பொன்றுமில்லை.


ஆனால் இது வெறும் காலக் குறிப்பு மட்டுமல்ல இலக்கிய வரலாற்றின் ஒரு கால மாற்றத்தைப் பற்றிய குறிப்பு.

இலக்கியத்தின் வாயில்/ஊடக (medium)மாற்றம் என்பது வரலாற்றின் ஒரு திருப்பம்.

இந்தக் கவிதையில்  Facebook என்னும் குறிப்புப் போகிற போக்கில் இடம்பெற்றிருந்தாலும் , கவிதையின் முழுமையில் அதற்குரிய இடம் பொருட்படுத்தத் தக்கதல்ல என்றாலும் 

ஏன் இடம்பெற்றது?

கவிதை இயற்ற நாள்  நட்சத்திரம் , நேரம் காலம், அறை வசதி  எதுவும் வேண்டாம் என்று சொல்கிற கவிஞர் , " ஏன், பத்திரிகை கூட வேண்டாம் " என்கிறார். 

அச்சுப் பத்திரிகைகளும் , நூல்களும் முந்தைய ஓலைச்சுவடிகளுக்குப் பதிலீடாக வந்து எழுத்தைத் தாங்கும் வெற்றுக் கொள்கலன்கள் அல்ல . அச்சுப் பண்பாடு (Print culture) என்று , அச்சுக்குள் வந்துவிட்ட அனைத்துச் சமூகங்கள் பற்றியும் ஆராய்கிறார்கள்.

 அச்சு வருகைக்குப் பின்தான் எழுத்தறிவு பரவலாயிற்று ; கல்வி முறை எளிதாயிற்று . எழுதுவோர்க்கு வெளியீட்டு வாய்ப்பு விரியலாயிற்று. எழுத்தை நுகர்வோரின் சமூகத்தளம் மாறலாயிற்று.

எளிய பதங்கள் , எளிய நடை , எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு , இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன்.நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள  தமிழ் மக்களெல்லோருக்கும்  நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்.

 - என்று பாஞ்சாலி சபத  முகவுரையில் எழுதினான் பாரதி.


சுவைபுதிது  நயம்புதிது வளம்புதிது

    சொற்புதிது ஜோதி கொண்ட

நவகவிதை யெந்நாளு மழியாத

     மஹாகவிதை யென்று நன்கு

பிரான்ஸென்னு முயர்ந்தபுகழ்  நாட்டிலுயர்

       புலவோரும் பிறகு மாங்கே

விராவுபுக ழாங்கிலத்தீங் கவியரசர்

          தாமுமிக வியந்து கூறிப்

பராவியென்றன் தமிழ்ப்பாட்டை மொழிபெயர்த்துப்

            போற்றுகிறார் (பாரதி பாடல்கள், தமிழ்ப் பல்கலை, 2011, ப. 517. எழுதிய நாள் 02.05.1919)

என்றான் பாரதி . 

சுவை, நயம், வளம், சொல் எல்லாம் புதிது. எனவே கவிதையும் புதிது (நவ = புதுமையான) 

வெகுமக்களை நோக்கிப் பாடினான்; எளிமையாகப் பாடினான் ; தரங்குன்றாமல் பாடினான்; எளிமை கடந்த நுட்பங்களையும் தொட்டான். 

தமிழில் புத்திலக்கியம் முகிழ்த்தது.

புது இலக்கியமல்ல ; புத்திலக்கியம்.

புது இலக்கியம் என்பது காலத்தால் புதியது .

புத்திலக்கியம் என்பது காலத்தால் மட்டுமன்றித் தன்மையாலும் புதியது .

இந்த இடத்திலே ஒன்றைச் சொல்லவேண்டும்.

தமிழின் பெருமைகளாகப் பேசப்படுவன பல. அவற்றுள் சில உணர்ச்சி மீதூரப் பெற்றவை.

தமிழின் பெருமைகளுள் தலையாயது காலத்துக்கும் ஊடகங்களுக்கும் ஈடுகொடுத்து இயங்கும் அதன் தொடர்ச்சி. 

ஒப்ப முடிந்த புறநிலைச் சான்றுகளின்படி 2500 ஆண்டுக்கு மேலான இடையறாத் தொடர்ச்சியுடைய எழுத்துப் பதிவுகளைக் கொண்டது தமிழ். இரண்டாயிரமாண்டுக்கு முன்பே இலக்கண வரையறையால் தன்னை நிறுவிக்கொண்டது தமிழ். இரண்டாயிரம் ஆண்டுக்குக் குறையாத இலக்கிய வரலாற்றையும் வளத்தையும் கொண்டது தமிழ்.

தமிழைப் பயின்ற ஒருவர் தமிழிலேயே தமிழின்   தொல்சீர் செவ்வியல் இலக்கியம் முதல் இன்றைய பின்னவீனவிய இலக்கியம் வரை நுகர முடியும். 

எனவே, தமிழில் கவிதையைப் புத்தம்புதிதாக்குவது எளிதல்ல. தமிழின் செம்மாந்த கவிதை மரபு அத்தகையது.பாரதி அந்த மரபை உணர்ந்து உள்வாங்கிக்கொண்டவன்.

'சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும் 

திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின் 

ஆழமும் விரிவு மழகுங் கருதியும்,

"எல்லையொன் றின்மை" யெனும்பொரு ளதனைக்

 கம்பன் குறிகளாற் காட்டிட முயலு

 முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச் 

 சாதியை யமரத் தன்மைவாய்ந் ததுவென்' 

 றுறுதிகொண் டிருந்தேன் (௸, ப.810)

என்கிறான்.


இளங்கோ, கம்பன், வள்ளுவன், ஒளவை, தாயுமானவர், இராமலிங்க சுவாமிகள், ஆழ்வார்கள், நாயன்மார் முதலிய பழந்தமிழ்க் கவிகளை மட்டுமன்றிப் பண்டைய வேத முனிவரையும், காளிதாசன் போன்ற வடமொழிக் காவியக் கர்த்தாக்களையும், இரவீந்திரநாத் தாகூர் போன்ற சமகால இந்தியக் கவிஞரையும் ஆர்வத்தோடு சுவைத்தார் பாரதி  என்கிறார் கைலாசபதி.

தமிழகம் , இந்தியம் கடந்து உலகளாவிய கவிதைகளால் ஊற்றம் பெற்றவன் பாரதி. இவற்றுக்குப்  பெரிதும் காரணம் அச்சுப்பனுவல்களே.

பாரதியைக் கவர்ந்த மேனாட்டுப் புலவர்களைத் தொகுத்துப் பார்க்கும்போது ஏறத்தாழ ஏழு புலவர்கள் நம்முன் தோன்றுகின்றனர். அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன், பெண்பாற் புலவர் மிஸ் ரீஸ், ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி, பைரன், கீட்ஸ், வேர்ட்ஸ்வர்த்து, பெல்ஜியக் கவிஞரான எமில் வெர்ஹரேன் ஆகியோர் பல வழிகளில் பாரதியின் கவிதா வெறிக்குத் தூபமிட்டுள்ளனர். 

- க. கைலாசபதி, பாரதி ஆய்வுகள்,   ( முதற்பதிப்பு 1984) காலச்சுவடு, 2018, ப.79 &81.

சங்கப் புலவோரையும் பாரதி பயின்றதற்குச் சான்றுகள் உள்ளன.

மரபு, மரபில் புதுமை , புத்தம் புதுமை என்கிற மூன்று நிலைகளில் பாரதி கவிதைகளைப் பார்க்கலாம். 

சரி. இப்போது இந்த மாதக் கவிதையைப் பார்ப்போம் :

அறிவுப்பூக்கள்

மெதுவாய் இரண்டடடி முன் நகர்ந்த

பாலகுமாரன் 

பெருந்தொற்று முடிந்தது

என்றதும் ஆமோதிப்பாய்த் தலை 

அசைத்தார் அறிவியல் புத்தகமாய்

அமர்த்திருந்த சுஜாதா


எத்தனை நேரம் இருட்டிலே

அமர்த்திருப்பது 

முணுமுணுப்புச் சத்தம் வந்தது

புதுமைப்பித்தனிடம்

யாரும் தொடுவதில்லையென அசோகமித்திரனும் சுந்தர ராமசாமியும் ஆமோதிப்பாய்த் தலையசைத்தார்கள்.

சந்தா கட்டியவர்களைத்

தேடிய போது வெறும்

நாற்காலிகளே அமர்த்திருந்தன.

கண்ணில்பட்டவர்களும்

திரைப்படப் பத்திரிகையில்

நுனிப்புல் மேய்ச்சல்...

நல்ல வேளையாய் ஜெயகாந்தன்

கோபப்படவில்லை.

இலக்கியப் புதையல்களை

அடைகாத்து நாமிருக்க

'ஒளித்தோற்ற விளையாட்டில்' தொலைந்த தலைமுறைக்கு 

இன்னொரு 'ஆலாபனை' பாடவேண்டும் என்றார்

கவிக்கோ!

கூட்டங்கள் தொலைந்த 

நூலகத்தை எப்படி

உயிர்ப்பிப்பது என் விவாதிக்கத் தொடங்கினார்கள் கண்ணதாசனும்

பாரதிதாசனும்

படிக்கும் பயிற்சியை

வயிற்றிலிருந்தே 

தொடங்கலாம் என்றார் லா.ச.ரா.

கொஞ்சம் காலடித் தடங்கள்

சத்தம் 'சிறுவர் பகுதி'யில்

கேட்க உற்சாகமாய்ப் பாப்பா பாட்டுடன் படிக்கும் பயிற்சியைத்

துவக்கினார் பாரதி

எனக்கு நம்பிக்கை வத்திருக்கிறது 

என்றார் தி.ஜா...

- ஆனந்த் குமார், காலச்சுவடு, ஜூலை 2022,ப.77.

மூன்றாண்டுக்கு முன் இந்தக் கவிதையை எழுதியிருக்க இயலாது. ஏன்? 

இதிலும் பெருந்தொற்று என்னும் காலக் குறிப்பு.

பெருந்தொற்று  ஒரு நூற்றாண்டு கண்டிராத அளவுக்குப்  பல்வேறு சமூகப் பிரிவினரின் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளைப் புரட்டிப்போட்டுவிட்டது. பெருந்தொற்றுச் சார்ந்த காத்திரமான இலக்கியப் பனுவல்கள் பற்றித் தேட வேண்டும். 

பெருந்தொற்றால் பெரிதும் பின்னடைவுற்ற துறைகளில் முன்னிற்பது கல்வி. மாணாக்கரின் கல்வி இடையீடு ஓர் அவலம் என்றால் சுயநிதிப் பள்ளி, கல்லூரி ஆசிரியர் நிலை பேரவலம்.

 பொதுவான கல்வியே நெருக்கடிக்குள்ளான நிலையில் இலக்கிய வாசிப்பின் கதியைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை.

புற நிலையில் புத்தக வெளியீடு, விநியோகம்,  வணிகம் யாவும் சரிந்தன. 

சென்னைப் புத்தகக் கண்காட்சி, விற்பனை களைகட்டும் ஒரு திருவிழாவாகவே திகழ்ந்தது; ஆண்டுதோறும் மேம்பட்டது . சமயக் கடமை போல் அந்தக் கண்காட்சிக்குப் பரவசத்துடன் செல்வோர் இருந்தனர். எல்லாமும் தடைப்பட்டன.

புத்தக வாசிப்பின் அகநிலை நெருக்கடியைத் தமிழ்ப் புத்திலக்கிய நிலை நின்று பேசுகிறது இந்தக் கவிதை.

எழுத்தறிவில் முதிர்ந்து , எழுத்தறிவு கடந்து மேம்பட்டது இலக்கிய வாசிப்பு நிலை.

அதை மீட்டெடுக்கவும், புதிய தலைமுறையை ஆயத்தப்படுத்தவும்  முயல்வதை இக்கவிதை காட்சிப்படுத்துகிறது.

மரபிலக்கணக்குறிப்புத் தருவதென்றால் பாலகுமாரன் , சுஜாதா, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், கவிக்கோ, கண்ணதாசன், பாரதிதாசன், லா.ச.ரா., பாரதி , தி.ஜா. ஆகிய யாவும் கருத்தா ஆகுபெயர்கள் எனலாம்.

மற்றொரு பக்கம்  கல்வி, இலக்கியம், புத்தக விநியோகம் யாவும் இணையத்தை இடமாகக் கொண்டு புதிய உலகிற்குள் நுழைந்திருக்கின்றன. 

அச்சு நூல்களை இணையவழி வாங்கலாம், மின்னூல்களாக  வாங்கலாம். அச்சில் இல்லாமல் முழுவதும் மின்னூல்களாகவே வெளியிடப்படுவனவும் உள்ளன.

பத்திரிகை வேண்டாம்.

பேஸ்புக் போதும்

- என்கிற கவிஞரின் கூற்றில் பேஸ்புக் என்பது குறைந்தபட்ச வெளியீட்டு ஊடகம் போலக் குறிப்பிடப்பட்டாலும், அது ஒரு புதுவகை ஊடகம். சுடச்சுட வெளியிடலாம் . சுடச்சுட எதிரூட்டங்களைப் பெறலாம் ; விவாதிக்கலாம்; விளக்கமளிக்கலாம் ; செப்பம் செய்துகொள்ளலாம். 

ஃபேஸ் புக் முற்றிலும் சுதந்திர ஊடகமில்லைதான். அது போனாலும் ஒத்த ஒன்று உருவாகாமல் போகாது. 

அச்சு நூல்களும் தணிக்கைகள், தடைகளுக்கு உட்பட்டவைதாமே !

‘ கற்றிலன் ஆயினும் கேட்க ‘(குறள் 414) என்னும் குறள் புதுப் பொருளில் புத்துயிர் பெற்றிருக்கிறது. ஒலிநூல்கள் ( audiobooks) வந்துவிட்டன. வானொலி ஏற்கெனவே அறிமுகமான ஊடகம். அதன் இணைய வடிவமாக ஒலிநூல்கள். ஏன், வானொலியே கூட இப்போது இணையத்துக்குள் நுழைந்துவிட்டது.

சில மணித்துளியளவிலான கருத்துரைகளைக் கைப்பேசி வழியாகவே வானொலிப் பதிவுக்கு அனுப்பிவிடலாம். நானே அனுப்பியிருக்கிறேன்.

வரிவடிவங்கள் வழியாக உருப்பெறும் உளப் படிமங்கள் தரும் வாசிப்பு அனுபவம் ஒருவகை மாயாசாலம் என்றால்,ஒலி நூல்கள் அச்சில் இயலாத சில எல்லைகளைத் தொட இயலும்.

மீண்டும் ஒரு  தமிழ்க் கவிதை. அச்சில் வந்தது என்றாலும் நான் படித்தது முகநூலில் வந்த நகல்.

பாரதியின் வசன கவிதை போட்ட பாதையில் தொடங்கி , புறத்தாக்கங்களையும் உள்வாங்கி ஊடகம், உருவம், உணர்த்துமுறை உத்தி  உள்ளடக்கம் இயங்கள்  முதலியவற்றால் வேறுபட்ட வகைமை வளம் சான்ற புத்தம் புதிய கவிதைகள் தமிழில் நிரம்பியுள்ளன.

விண்ணப்பம்

ஓய்வில் கிடந்த என்

ஓய்வூதியக்கோப்பு

கவலைக்கிடமாகிவிடாமல் இருக்க

காந்தியுடன் அந்த

கருப்பு அலுவலகத்திற்கு 

வெறுப்புடன் சென்றேன்.

இன்றாவது

பொறுப்புடன் வந்தீர்களே

என்ன? என்றார்கள் ஏளனமாக...

அய்யா, அனுப்புநர்:

நான் என்றேன்.

அட பெறுநர்:

நாங்கள் என்றார்கள்!

மதிப்பிற்குரிய ஐயா, என்றேன்.

பொருள்: இருக்கிறதா? என்றார்கள்

பார்வைக்கு வைத்தேன்....

மதிப்பிற்குரிய ஐயா!

நீங்கள்தான் என்றார்கள்

இழு தள்ளு! என்று பணிகளை

இனி இழுக்க மாட்டீர்களே?

எனக் கேட்டேன்,

அதான் தள்ளிவிட்டீர்களே! என்றார்கள். 

தங்கள் உண்மையுள்ள, என்றேன்.

நம்பிக்கையுள்ள, என்றார்கள்!

இணைப்பாக ஒன்று என்றேன் 

என்ன? என்றார்கள்

கிடப்பில் கிடந்த

அறிவிப்புப்பலகையைக் காண்பித்தேன்!

திருத்திக் கொள்ளுங்கள்:

'பவுடர் தடவி கொடுப்பதும் குற்றம்

வாங்குவதும் குற்றம்' என்றனர்.

மொக்கையாகச் சிரித்தபடி 

பொங்கையாக...

காந்தியுடன் நானும்!

- அய்யாறு. ச புகழேந்தி

அலுவலகக் கடித அமைப்பைப் பகடி(Parody)யாக்கிக் கவிதை வடித்திருக்கிறார் ஐயாறு ச. புகழேந்தி.இந்தக் கவிதை என் பட்டறிவில் உறைத்ததது. 

ஓய்வு பெற்று நான்காண்டு கடந்தும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. சில இலட்சங்களை இழந்தேன். போகட்டும். கையூட்டு இங்கே நயமான எள்ளலாகி இலக்கிய மதிப்புப் பெற்றுவிட்டது.

ஐயாறு புகழேந்தியை மட்டுமல்ல இன்னும் பற்பல கவிஞர்களை எழுத்தாளர்களைத் தஞ்சை தொடர்ந்து ஈன்று கொண்டிருக்கிறது. ஓரளவுக்காவது முழுப்பட்டியல் தயாரிக்காமல் சிலரைச் சொல்வது பிறரைத் தவிர்ப்பது போலாகிவிடும். விட்டுவிடுகிறேன்.

தஞ்சை எழுத்தாளர்களையே பட்டியலிட இயலவில்லை என்றால் தமிழகத்திலும், பிற நாடுகளிலும் புலம்பெயர்ந்தும் வாழ்கிற, தமிழ்ப் புத்திலக்கிய உலகில் உலவுகிற எண்ணற்ற எழுத்தாளர்கள் எத்தனை !எத்தனை !

இந்த இடத்தில் மாண்பமை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு ஒரு கோரிக்கை:சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாயில் முதல் அரங்கு வரையிலான பாதையின் இருமருங்கிலும் எழுத்தாளர் படங்கள் நெகிழிப்பதாகைகளில் இடம்பெற்றிருக்கும். அவ்வாறே தஞ்சை சார்ந்த மூத்த எழுத்தாளர் முதல் இளம் எழுத்தாளர் வரை படங்களுடன் கூடிய பதாகைகளில் இடம்பெற வேண்டும். 

அச்சுப் பண்பாட்டில் உதித்தெழுந்த , தானும் தமிழ் அச்சு ஊடகங்களில் பணியாற்றி மேம்படுத்தியது தனி வரலாறு.

நவீன உரைநடையிலும் பாரதி சாதனை படைத்தான். எனினும் உரைநடையில் தமிழ்ப் புத்திலக்கியம் படைத்த பாரதிக்கும் முந்தைய முன்னோடிகள் இல்லாமலில்லை.

1889 இல் , மாயூரம் வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் தமிழின் முதல் உரைநடை நாவலாக வெளிவந்தது. அது புத்திலக்கிய முயற்சி என்கிற தெளிவோடு வேதநாயகர் எழுதியிருப்பதை முன்னுரை காட்டுகிறது.

சிலப்பதிகாரத்தைக் காப்பியம் என்பதைவிட, தொடர்நிலைச் செய்யுள் என்பது பொருந்தும். வடமொழிகளின் செல்வாக்கால் தமிழில் பெருங்காப்பியங்கள் தோன்றின.

பெருங்காப்பியம் , நாவல் இரண்டும் கதை தழுவியவை என்றாலும் பா, உரை நடை என்னும் யாப்பு வேறுபாடு மட்டுமன்றித் தன்மை வேறுபாடும் கொண்டவை.

சமகால மொழியில் சமகால வாழ்வை – தத்தம் கோணத்தில் தத்தம் நடையில் – பெரிதும் நடப்பிய நிலை நின்று படைக்கப்பட்டவை நாவல்கள். 

தமிழில் புனைவியம் எனப்படுகிற Romanticism நாவல்களில் தூக்கலாக இருந்தது என்பதையும் பார்க்கலாம். Romanticism என்பதைச் சி.சு.செல்லப்பா காவிய இயல் என்றே எழுதினார். நாவலை விடுங்கள் வாழ்க்கை வரலாறு என்கிற பெயரில் கூட நாம் புனைவியக் கதைகளையே எழுதினோம். தமிழரின் தலைமை வழிபாட்டு மோகம் மக்களாட்சிக்கே முரணானது. இப்போது அரசியல் சமூக வரலாற்றுக்கும் அந்த ஆபத்து விரிந்துவிட்டது. அரசியலாக விரிக்க இது இடமில்லை. நிற்க.

நாவலைக் காப்பியத்தோடு உறழ்ந்து – முரண்கள் கொண்டு – விளக்குவதைவிடவும்

ஒப்புமை கண்டு உணர்வது நுட்பமானது.


பெயர் சுட்டாத மரபில் வரும்   கலித்தொகைத் தனிப்பாடல் தலைவி (பா.69)

காப்பிய மரபில் இணைத்தலைவியாக வரும் மாதவி

நடப்பிய நாவலில் வரும் தலைவியாகிய கல்யாணி 

என மூவரையும் ஒப்பிட்டு அவலத் தலைவியர் என்றொரு கட்டுரை எழுதினேன்.

மாதவியின் தாக்கத்தில் உருவான பாத்திரம்தான் கல்யாணி. ஆனால் புத்திலக்கியப் பாத்திரம். 

தமிழின்  தொடர்ச்சியினூடாகப் புலப்படுகிற கால வேறுபாட்டின் சுவடுகளையும் இலக்கிய நுகர்ச்சியில் நேர்கிற நயங்களையும் இந்த ஒப்பீட்டில் உணர்ந்தேன்.

ஜெயகாந்தனைப் போல் இளங்கோவடிகளிடம் உணர்வு விவரிப்புகளோ விரிவான விவாதங்களோ காணப்படாவிடினும் சில சொல்லிப் பல உணர்த்திப் பிந்தைய படைப்புகள் மீது செல்வாக்கு/தாக்கம்செலுத்தும் செவ்வியல் வன்மை கொண்டிருப்பதை உணரலாம்.

மறுபுறம் மாதவி அவலத்தின் - கண்ணகியை விடவும் தீவிரமான அவலத்தின் - ஆழத்தை ஜெயகாந்தனின் கல்யாணி வழியே நவீன வாசகன் உணர முடியும்என்பதே கட்டுரையின் முடிவு. 

தமிழ் இலக்கியப் பயிற்சி புத்திலக்கியத்திலிருந்து பின்னோக்கிச் செய்வது நல்லது என்பது என் கருத்து.

இன்னும் இன்னும் இன்னும் பலப்பல சொல்லலாம்.

தமிழ் இனி 2000  என்கிற தொகை நூலின் முதன்மைத் தலைப்புகளை மட்டும் படிக்கிறேன்.


1. கவிதை  

அ.மரபுக்கவிதை 

ஆ.நவீன கவிதை 

2. சிறுகதை

3. நாவல்

4. அறிவியல் புனைகதை

5. அரங்கம் / நாடகம்

6. இலக்கியமும் சமுதாயமும் (மலேசிய, சிங்கப்பூர்ப் படைப்புகள்)

7. குழந்தை இலக்கியம்

8. வாழ்க்கை வரலாற்றிலக்கியம்

9. நாட்டுப்புற இலக்கியம்

10. தேசியமும் இலக்கியமும்

11. திராவிட இயக்கமும் இலக்கியமும்

12. மார்க்சியமும் இலக்கியமும்

13. தலித் இலக்கியம் 

14. பெண்ணியமும் இலக்கியமும்

15. நவீன /தவீனத்துவ பின் நவீனத்துவ இலக்கியம்

16. எதிர்ப்பிலக்கியம்

17. வெகுசன இலக்கியம்

18. இதழியலும் இலக்கியமும்

19. மலையக இலக்கியம்

20. இலக்கிய விமர்சனம்

21. மொழிபெயர்ப்பு

22. மொழியும் இலக்கியமும்

23. தமிழ் வழிக் கல்வியும் இலக்கியமும் 

24. இலக்கியமும் பிற கலைகளும்

25. கணினியும் தமிழும்

26. இணையத் தமிழ்

27. சில தமிழ் இலக்கிய அமைப்புகள்


இவற்றுக்கு மேல் பல உள் தலைப்புகள் உண்டு. நூல் ஏ4 அளவில் ஆயிரம் பக்கங்கள் கொண்டது. அவற்றுள்ளும் தனித்தமிழ் இலக்கியம் முதலியன விடுபட்டுள்ளன (விடுபட்டதற்கு நானே காரணம்.இந்தப் பொறுப்பு என்னிடம்தான் தரப்பட்டது)

இதற்குப் பிந்தைய இருபதாண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள்...

என்றுமுள தென்றமிழ் இனியும் தொடர வேண்டும்.

நன்றி. வணக்கம்.


தஞ்சாவூர்ப் புத்தகத்திருவிழாவின் ஒரு பகுதியான இலக்கியத்திருவிழாவின் தொடக்கநாளில் (15.07.2022) ஆற்றியவுரை.

































-


இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...