Thursday, February 10, 2022

இல்லம் : உணர்வு, இலக்கியம், இலக்கணம், வழக்கு

 



 இல்லம் என்பது வெறும் இருப்பிடமன்று. அதற்கு ஒரு பண்பாட்டுப் பின்புலம் உண்டு. 

நண்பர் சலபதி (பேரா.ஆ.இரா.வேங்கடாசலபதி) மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபோது பாளையங்கோட்டையில் ,  வசித்துவந்தார். 

நான் நெல்லை செல்ல நேரும்போது  முந்தைய நாள்  "நாளைக்கு உங்கள் அறைக்கு வந்துவிடட்டுமா?" என்பேன். " ஏங்க, அறையா? வீடுங்க " என்பார். 

உண்மை. வரவேற்புக்கூடம், படுக்கையறை, வசிப்பறை,சமையலறை, வழிபாட்டு அறை யாவும் கொண்ட  முழுவீடு .ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் இதனை ஒத்த உரையாடல் நிகழ்ந்திருக்கிறது.

ஆனால், என் மனத்தில்  அது, ஓர் அறையாகவே பதிந்திருந்தது. ஆம். அப்போது அவருக்கு மணமாகவில்லை.   

பேரா. ய. மணிகண்டன் மீட்டுக் கொணர்ந்த பாரதியாரின் 'திமிழ்' என்னும்  கட்டுரை (காலச்சுவடு, டிசம்பர் 2019) தமிழ்ச் சொல்லாய்வுகள் , இலக்கணச் சிலம்பாட்டங்கள் முதலியன பற்றிய எள்ளற் கட்டுரை. தொடர்பில்லாத வேர்களையும் விளக்கங்களையும் வருவிக்கும் பண்டிதச் சாமர்த்தியத்தைப் புலவர் நெட்டைப் பனை முதலியார்- சீடப்பிள்ளை கும்பகர்ண முதலியார் உரையாடலின் ஊடாகத் தமக்கேயுரிய முறையில் பாரதி நகையாடியிருப்பார். 

ஓரிடத்தில், " வீடு என்பதைக் கும்பகர்ணன்  மனைவி  என்றான் " என்று எழுதுகிறார்  பாரதி.

சரி. நாம் கலித்தொகைப் பாட்டின் (8: 19 - 23) வழியாக நச்சினார்க்கினியரிடம் போவோம். 

தலைவன், தலைவியிடம் சொன்னால் வருந்துவாள் என்று கருதி, சொல்லாமலே பொருள் தேடப் பிரிந்து செல்ல முடிவு செய்கிறான். அதனை உணர்ந்த தோழி , பொருளின் நிலையாமையை விளக்கி, இல்வாழ்க்கையே பொருள் என்று சுட்டி, அவன் பிரிந்து செல்லாமல் தடுக்கிறாள். இது பாலைக் கலிப் பாட்டு. 

நிறைவுப்பகுதி :

நச்சல் கூடாது² பெரும¹ இச்செல

வொழிதல் வேண்டுவல்⁴ சூழிற் பழியின்று³

மன்னவன் புறந்தர வருவிருந்தோம்பித்

தன்னகர் விழையக் கூடின்

இன்னுறழ் வியன்மார்ப அதுமனும் பொருளே

¹தலைவா, ²பொருளை விரும்பாதே.³எண்ணிப் பார்த்து, பழி நேராத வகையில்,  ⁴நீ தலைவியைப் பிரிந்து செல்வதைக் கைவிட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.மன்னன் ,  தம்மைக்  காக்கவேண்டி வரும் விருந்தினரைப் பேணித் தன் மனைவி விரும்பும்படி அவளுடன் கூடியிருந்தால், இனிய தழுவலையுடைய அகன்ற மார்பனே! அதுதான் நிலையான பொருள்(கருத்து நச்சினார்க்கினியருடையது.நடை என்னுடையது)

நகர்= பேரில்( மாளிகை), இல்லம்(நகர் என்பது கோயில், நகரம் என்னும் பொருள்களையும் குறிக்கும்)

ஆனால், இங்கு , மனைவி என்று பொருள் கொண்டு , " நகர் : ஆகுபெயர் " என்று இலக்கணக் குறிப்புத் தருகிறார் நச்சர்.

இக்காலத்திலும் இவ் வழக்கு உண்டு.

மணமான ஒருவர் " வீட்'ல பேசிக்'கிட்டு சொல்'றேன்" என்றால் , "மனைவியிடம் கலந்தாலோசித்துச் சொல்கிறேன்" என்பது பொருள்.

'வீடு' என்பதற்கு 'மனைவி' என்று பொருள் கொள்வதை எள்ளிநகையாட வேண்டியதில்லை. 'திமிழி'ன் வேறு சிலவும் எள்ளலுக்குரியனவல்ல.

மனைவி இல்லாத - ஆனால், எல்லா வசதிகளையும் கொண்ட- வெற்று இருப்பிடம் இல்லமாகாது.மனைவி இருந்தால் ஓர் அறையே கூட இல்லமாகும்.

அவள் இல்லாள். இதற்கு இணையான ஆண்பால் இல்லை (பெண்ணியத்தார் என்ன சொல்வரோ! அறியேன். நான் மாற்றத்திற்கு எதிரியல்லன் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன்)



தப்பட் '* என்னும் இந்தித் திரைப்படத்தைச் சற்றே பார்ப்போம்.

அமிர்தா  செவ்வியல் நடனத்தில் தேர்ந்தவள். கணவன் விக்ரம் டெல்லியிலுள்ள கார்ப்பரேட் கம்பெனியில் பணியாற்றுகிறான். இயல்பாய் , இனிதாய்த் தொடங்கி நகர்கிறது இல்லறம். அவன் கனவு கண்டவாறே -  நடுத்தர வர்க்கக்  கார்ப்பரேட் குழுமப் பணியாளர்களின் கனவுதான் - மேல் அலுவலர் பதவிக்கு உயர்கிறான். பணி இலண்டனில். மனைவியோடு இலண்டனில் நடத்தும் வாழ்க்கை, குறிப்பாக இலண்டன் இல்லம் பற்றி மகிழ்ச்சி அலையடிக்கிறது. அதனைக் கொண்டாடச் சிறு கூடுகை (பார்ட்டி). 

 இலண்டன் போய்ப் பணியாற்றலாம் ஆனால் பதவி உயர்வு இல்லை என்று கூடுகையின்போது தெரிகிறது. காரணம் அலுவலக உள்ளரசியல். கூடுகையிலேயே உடன் பணியாளனுடன் சச்சரவு. தடுக்கப்போகிறாள் அமிர்தா. கனவு சிதைந்ததால் உணர்ச்சிவயப்பட்டிருந்த விக்ரம் சுற்றமும் நட்பும் சூழ்த்திருந்த கூடுகையில்  அவளை அறைந்துவிடுகிறான்(* தப்பட்= அறை) . அவள் ஒரு மனிதப் பிறவியாக, தன்மான இழப்பில்  நிலைகுலைந்துபோகிறாள். ஆனால், அவன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவளது முரண் மெல்ல மெல்ல முற்றுகிறது.

மணவிலக்குக் கேட்டு வழக்குமன்றத்தில் முறையிடுகிறாள். அவள் கருவுற்றிருப்பது தெரியவருகிறது. விக்ரம் அவளைச் சமாதானப்படுத்த முயன்று தோற்கிறான்.

மாமியார் தன் மருமகளின் உணர்வைப் புரிந்துகொள்கிறாள். அவர்களிடையே முரணில்லை. 

விக்ரம் தனியே இலண்டன் செல்கிறான். 

மண விலக்குக் கிடைக்கிறது. தன் தவறுணர்ந்த விக்ரம் அன்று வழக்குமன்றத்தில் அமிர்தாவிடம் மனம்விட்டுப் பேசுகிறான். அது, உள்ளார்ந்தது என்று அமிர்தாவும் உணர்கிறாள். மீண்டும் புதிதாக நட்பிலிருந்து தொடங்கலாம் என்கிறான்.

கதையையோ உணர்ச்சிப் பன்மைகளை, மோதல்களை  அடக்கமான நடிப்பாற்றலால் புலப்படுத்தியிருக்கும் நடிகர்களின் திறனையோ பிறவற்றையோ விவரிக்கப்போவதில்லை.ஆனால், பார்க்க வேண்டிய படம் என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன். 

வேறு ஒன்றைச் சொல்லத்தான் இத்தனை முன்கதை . 

நிறைவுக் காட்சியில் விக்ரம் அமிர்தாவிடம் பேசும்போது, " இலண்டன் வாழ்க்கை, பணி எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். நீலக் கதவுடைய கனவு இல்லம் , இல்லமாகவே இல்லை. உண்மையில் நீதான் என் இல்லம்" என்கிறான். 

கார்ப்பரேட் காலத்து இந்தியாவிலும் மனைவிதான் இல்லம்.





No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...