Saturday, May 15, 2021

நான்உணர்ந்த பேராசிரியர் கா. சிவத்தம்பியவர்களும் எனக்குத் தெரிந்த உலகத் தமிழ் மாநாடுகளும்*

 


தமிழ்நாட்டு அரசியலில் இன்றளவும் ஆதிக்கம் செலுத்தும் திரைப்படங்கள் , உண்மையில் அரசியல் திரைப்படங்கள் அல்ல ; தரத்திலும் தருகையிலும்( quality and presentation) எந்த அழகியல் உயரத்தையும் தொடாத வெற்று நாடகப்பாணிக் கதைப்படங்கள்(dramatic narrative films) என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதியிருந்தார். இத்திரைப்படங்களினூடாக நிகழ்ந்த அரசியல் கருத்துத்தொடர்பு வெற்றிபெற்றதை வரலாற்றுப் பின்னணி, தொழில் நுட்ப வளர்ச்சி, பரவல் , சமூக உளத்தியல் முதலியன கொண்டு கல்விப்புல விவாதத்திற்காகப் பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதிய கட்டுரை  The Tamil Film as a Medium of Political Communication. அது ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் படிக்க மறுக்கப்பட்டது.அதில் ம.கோ.இரா. படங்கள் பற்றிய குறிப்புகளும் உண்டு. முற்றிலும் ம.கோ.இரா. பற்றியதன்று. ம.கோ.இரா. பற்றியனவும் ஆய்வுநோக்கினதேயன்றி, திறனாய்வு அன்று. அப்போது திரையுலகம் தந்த/ சார்ந்த தமிழக முதல்வர் மூவர். பிறர் பற்றியும் அதில் குறிப்புகள் உண்டு.அது முழுமையான கல்விப்புலக் கட்டுரை. அனுமதிக்கப்பட்டிருந்தால் பெரிய விளைவு எதையும் ஏற்படுத்தியிருக்காது. மறுக்கப்பட்டதால் நூலாகிப் பரவிற்று. பின்னரும் பெரிய விளைவொன்றும் இல்லை.


அவர் அதை நூலாக வெளியிட்டபோது ஆங்கிலம் தெரியாத நானே ஆஅஅறு ₹ கொடுத்து வாங்கினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அந்தக் காலத்தில் 56 பக்க நூலுக்கு அந்த விலை அதிகம்தான். பின்பு, அந்தப் புத்தக விற்பனை குறித்தும் அதனால் தமக்கு எதிர்பாராத அளவு கிடைத்த அரயத்தொகை(royalty) பற்றியும் பேரா.சிவத்தம்பி , சற்றே எள்ளற்குறிப்புடன் , கூறக்கேட்டு நிறைவுற்றேன். அந்தப் பதிப்பின் முன்னுரையிலும் மறுக்கப்பட்டதன் பின்னணியை  மென்னகை இழையோட எழுதியிருப்பார். 


மாநாட்டில் தடுக்கப் படாவிட்டால் இந்த அளவுப் பரவலும் பொருளும் ஓர் அறிஞருக்குக் கிடைத்திருக்காது;கல்விப்புல விவாதம் மக்கள் மன்றத்திற்கு வந்திருக்காது.நேரடியாகவோ மறைமுகமாகவோ இவற்றுக்கு ம.கோ.இரா.தானே காரணம்!


                                                                              *

 

 எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டிற்கு வந்த பேரா.சிவத்தம்பி , பேரா. சண்முகதாஸ், பேரா.பீட்டர் ஷால்க்  ஆகியோர் அப்புறப்படுத்தப்பட்டனர். பேரா.ஆ.வேலுப்பிள்ளை திருச்சியிலிருந்தே திருப்பியனுப்பப்பட்டார். இதற்குக் காரணம் இவர்களின் கட்டுரைகளல்ல; இவர்கள் விடுதலைப்புலிகளுக்கு இணக்கமானோராகக் கருதப்பட்டதுதான். தமிழ் ஆராய்ச்சி பற்றிய எந்த உணர்வுமற்ற பெருந்திரள் மக்களால் தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆய்வரங்குகள் வல்லம் வளாகத்தில். என் போன்றோர் எதிலும் கலந்துகொள்ள ஆர்வமற்றிருந்தோம். சிவத்தம்பியவர்கள் வந்திருப்பது கேட்டுத் தமிழ்ப் பல்கலை. வல்லம் வளாகம் சென்றேன். ஆனால், நான் போய்ச் சேர்வதற்குள் அவர் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டார். 

சில தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் ஏதேனும் ஒரு வடிவில் கண்டனம் தெரிவிக்கத் துடித்தனர். அந்த வளாகத்தில் கருத்தரங்கம் நோக்கி வந்திருந்த ஒவ்வொருவரையும் கண்காணிக்க ஒருவருக்கு இரண்டு பேர் எனத்தக்க வகையில் காவலர்கள் சூழ்ந்திருந்தனர். அமர்வுகள் நடந்த அறைகள் ஒன்றிரண்டில் எழுந்த சில ஆவேசக் குரல்களைக் காவல்துறை பொருட்படுத்தவில்லை. 


பேரா.சிவத்தம்பியவர்கள் இத்தகைய நிகழ்வுகளைப் பெரிதுபடுத்தாத, வீம்பு பேணாத, நெகிழ்வான இயல்பினர். இந்த இயல்பை வெறும் சமரசம் என்றோ தந்திரம் என்றோ கருதுவது அறியாமை. இந்த இயல்பை பலவீனம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.  செம்மொழி மாநாட்டிற்கு அவரை அழைத்ததற்கு அவர் எட்டாம் உ.த.மாநாட்டில் அப்புறப்படுத்தப்பட்டதும் காரணம். அதுதான் முதற்காரணமா என்று எனக்குத் தெரியாது. நான் செம்மொழி மாநாட்டில் கட்டுரையாளனாகக் கலந்துகொண்டேன். அவரைப் பார்த்தேன். மரியாதை நிமித்தமான சில நொடி உரையாடலே வாய்த்தது.


--------------------------------------------------------------------------------


சிவத்தம்பியவர்கள் அரம்போலும் கூரிய அறிவாளர்; அதனின் மேலான மக்கட்பண்பாளர்.அவரது நெகிழ்வான எளிவந்த இயல்பிற்கு  என் போன்ற அரைகுறை முந்திரிக்கொட்டைகளைக்கூட அவர் பொறுத்துக் கொண்டு அன்புடன் உரையாடியது நான் உணர்ந்த சான்று. வாயிற்காவலர் , வண்டிப் பழக்கடைக்காரர் யாவரிடமும் இன்முகம் காட்டிப் பேசுவார். 


1982 இல் பேராசிரியர் சிவத்தம்பியவர்கள், Literary History in Tamil என்னும் தலைப்பிலான திட்டப்பணிக்காகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வந்திருந்தார்.அரண்மனை வளாகத்திலிருந்த ஓடு வேய்ந்த சிறு குடில் அவருக்கு ஒதுக்கப்பட்டது. 


அப்போது நான் ஆய்வியல் நிறைஞர் பட்ட (M.Phil)  மாணவன். பேரா. சிவத்தம்பி அவர்களிடம் தொடக்கத்தில் அணுகாது அகலாது  தொடர்பு கொண்டிருந்தேனாயினும் ,  இயல்பாயமைந்த அவரது எளிமையும் இணக்கமும் காரணமாக மிக  விரைவில் நெருக்கம்பேண முடிந்தது. 


ஒரு மாலை வேளையில் அவரைப் பார்க்கச் சென்றேன். அரண்மனை வாயிலில் நுழைந்ததும் இடப்புறம் சற்று உயரமான தளம் .  அதில் சாய்ந்தவாறு ஓய்வாகப் பேசிக் கொண்டிருந்தார். நான் ஆராய்ச்சி முறையியல் பற்றிக் கேட்டேன். 

" என்னப்பா ஒங்கட ஆக்கள் மெதொடாலஜி மெதொடாலஜி'ன்னு . மெதொடாலஜின்னா தராசு மாதிரியும் அதுல சப்ஜெக்ட போடறமாதிரியும் பேசறாங்க. அப்படி மெகானிக்கலா பாக்க முடியாதப்பா.  ஒனக்குக் கல்யாணம் ஆச்சா? " என்றார்.

நான் " இல்ல சார்" என்றேன்.  

" புத்தகத்துல படிக்கற மெதொடாலஜி கொக்கோகம் மாதிரி. கல்யாணத்துக்குப் பிறகு பயன்படாது " என்று சிரித்தார். 

" எங்கட சப்ஜெக்டப் பொறுத்ததப்பா அது . இந்த  ஃபுட் நோட் , பிப்ளியோகிரோபியெல்லாம் பிரசண்டேஷன் சம்பந்தப்பட்டது" என்றார்.


வேறு பலவற்றிலும் என்னால் அன்று எவ்வளவு இயலுமோ அவ்வளவு தெளிவுற்றேன். பலரும் அவரைச் சந்திப்பார்கள்; அவரோடு பேச ஆர்வம் காட்டுவார்கள். அவர் சோர்வின்றி , வந்தோர் உளங்கோணாமலும் புலமைத் தரங்குன்றாமலும் உரையாடுவார். வந்தவர்கள் போன பிறகு அன்றாடம் பேரா.அ. மார்க்ஸ், திரு.பொ.வேல்சாமி முதலிய சிலர் பேசிக்கொண்டிருப்பார்கள். நான் பல நாட்கள் உடனிருப்பேன். இரவு பணியாற்றத் தொடங்குவார். 


அடுத்து, அவர் தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுக்கல்வித் துறை நிகழ்வு ஒன்றிற்காகத் தஞ்சை வந்தபோது , கரந்தைக்கல்லூரி ஆய்வியல் நிறைஞர் மாணவர்களுக்காகச் 'சமூகவியலும் இலக்கியமும்' என்னும் பொருளில் இயன்றவரை எளிமைப்படுத்தி ஏறத்தாழ இரண்டு மணி நேரம் உரையாற்றினார் (ஒலிப்பதிவு தொலைந்துவிட்டது).


அப்புறம் மதுரையில் திரு.சுபகுணராசன் அவர்கள் நடத்திய திராவிட இயக்கம் பற்றிய கருத்தரங்கில்தான் சிவத்தம்பியவர்கள் பேரா. தொ.ப. அவர்களை முதன் முதலாக நேரில் சந்தித்தார்;'இவ்வளவு நாள் எங்கய்யா இருந்திங்க' என்று போற்றினார்.[அவர் 1982இல் தஞ்சை வத்திருந்தபோதே திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கம் முதலியவற்றைச் சார்ந்தவர்களுடன் உரையாடியதில் அவ்வியக்கங்கள் பற்றிய  நியாயங்களை முன்பைவிடவும் கூடுதலாக  அவர் கணக்கில் கொள்ள நேர்ந்தது என்பது என் மனப்பதிவு.]


பேராசிரியர் வீ.அரசு அவர்களின் அரிய முயற்சியால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு அழைப்பில் தொடர் சொற்பொழிவாற்ற அவர் வந்திருந்தபோது அவரைச் சந்தித்தேன்.  அவரோடு ஆறுதலாகப் பேச முடித்தது. உடல்நலங்குன்றியிருந்தபோதும் , புதியவற்றை அறிந்து கொள்ள அவர் காட்டிய மாணவ ஆர்வம் வியப்புக்குரியது.


பாரதிதாசன் பல்கலைக்கழக, பாரதிதாசன் உயராய்வு மைய இயக்குநர்   பேரா. ச.சு. இராமர் இளங்கோ அவர்கள் தமக்கேயுரிய அழைப்பு முறையாலும், துணைவேந்தர் பேரா. மு.பொன்னவைக்கோ அவர்களின் தாராளப் போக்கினாலும்  மூன்றுநாள் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்றச் சிவத்தம்பியவர்கள் திருச்சி வந்திருந்தார். நான் அப்போது கல்லூரி ஆசிரியன். அவர் சொற்பொழிவைக் கேட்க மூன்று நாளும் பிற்பகல் தஞ்சையிலிருந்து கிளம்பித் திருச்சி வந்து சென்றேன் [இணைத்துள்ள படம் அப்போது (பிப்ரவரி 2008) எடுத்தது]


                           ----------------------×----------------------×---------------------× -----------------


*திரு. வே. மு.பொதியவெற்பன் அவர்கள் தம் முகநூல் பக்கத்தில்(Pothi) பேரா.கா. சிவத்தம்பி வாரம் பேணிய போது, தமிழவன் கருத்தொன்றைக் காட்டியிருந்தார்:

"சிவத்தம்பி  கலைஞர் கருணாநிதி அவர்களால் கோவை உலகத்தமிழ்மாநாட்டில் சிறப்புச் செய்யப்பட அழைக்கப்படும் அளவு புகழ் பெற்றவர்.அந்தப் புகழைப் பெற மிகவும் சாதுரியமாக வாழ்க்கையை அமைத்திருந்தார்."- தமிழவன்('சிற்றேடு: 14* ஏப்-ஜூன் 2014) .  ' சிவத்தம்பி பெறுமதியும் தமிழவன் சிறுமதியும் ' என்னும் தலைப்பில் தமக்கேயுரிய நடையில் பொதி அதனைக் கண்டித்திருந்தார் (15 மே 2020). அது தொடர்பாக நான் எழுதியவற்றோடு வேறு சிலவற்றையும் இணைத்துச் சற்றே விரித்துள்ளேன்.



Tuesday, May 11, 2021

மருத்துவச் சூழ்ச்சி!

 மருத்துவச் சூழ்ச்சி!




இரண்டு நாளாய்ப் பல்வலி. மருத்துவரிடம் சென்றேன். 

மருத்துவமனைப் பதிவுக் கட்டணம்            ரூ.  50/-

மருத்துவர் ஆலோசனைக் கட்டணம்            ரூ. 250/-

மருந்து (தற்காலிகமாக வலியை நிறுத்த) ரூ. 150/-

போக வர ( 'ஓலா' புண்ணியத்தில் )              ரூ.    90 /-


ஊடுகதிர்ப் படம்(X-ray) எடுத்து வரச் சொல்லியிருக்கிறார்.

சிகிச்சை இனிமேல்தான். அறுவைச் சிகிச்சை. அப்போதுதான் முழுமையான சிகிச்சைக் கட்டணம் தெரியும். 


பழந்தமிழில் சூழ்ச்சி என்பது ஆலோசனையைக் குறிக்கும். இப்போது இரு பொருளிலும் ஒருங்கு கொள்ளலாம். ('இருவயின் நிலையும் பொருட்டா கும்மே' என்பார் தொல்காப்பியர். இங்கு ஓரிடத்திலேயே இருவயின் நிலையும்...)


மூன்றாண்டுக்கு முன்பே, அவரிடம்  பல்லைக் காட்டியிருக்கிறேன்.பற்கள் சிலவற்றைப் பிடுங்கியிருக்கிறார் - பணத்தையும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.செயற்கைப் பற்கள் சில பொருத்தியுமிருக்கிறார்;பழக்கமானவர்தான்; காட்சிக் கினியர்; இன்சொல்லர்; நல்லவர்.


துளையிட்டு, திருகாணி கொண்டு நுண்மின் கருவிகளின் துணையுடன் செயற்கைப் பற்களை முடுக்கினார். தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்பக் கட்டணமும் வளராதோ!

அவரைச் சொல்லிக் குற்றமில்லை. 


" டாக்டர், உறுதியா நிக்குமா?" என்று கேட்டேன். 

"கடவுள் குடுத்த பல்லே நிக்கலையே, சார்!" என்றார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஓராண்டுக்குப் பிறகு வேறு சில பற்களுக்காக, மீண்டும் போக நேர்ந்தது.

இப்போது பல் வேர்க்கால் (root canal) மருத்துவம்.

 பல் அல்லவா! அதனால் பல் நாள் நீள்கிறது. 

வலிக்கும்  பல்லைச் சுற்றி மரத்துப் போகச்செய்து, வாயை அகட்டிச்* சுரண்டியும் தேய்த்தும் குடைந்தும் தீய்த்தும் தவணை முறையில் நடக்கிறது.

நான்காம் நாள். உறை போட வாய்ப்பாகப் பல்லை இழைக்கும் போது,          "கொஞ்சம்  கொஞ்சம்   கண்ட்ரோல் பண்ணிக்குங்க" என்று சொல்லிக்கொண்டேயிருந்தார் மருத்துவர்.



' நா காக்க ! '

ஐயன் வள்ளுவன் அன்றே சொன்னதுதானே!

அது பல் மருத்துவத்துக்கும் பொருந்துவதில் வியப்பென்ன!                                     எல்லாப்பொருளும் அதன்பால் உள!


(* அகற்றி - ¹அகலமாக்கி, ² அப்புறப்படுத்தி என்னும் இரு பொருளும் குறிக்கிறது. எனவே தெளிவு கருதி அகட்டி என்னும் மருவிய வடிவத்தை ஏற்கலாம்)

      💭💭💭💭💭💭💭💭💭💭💭💭

முதன் முதலாகப் பல்வலி வந்தது நினைவிற்கு வருகிறது.


மரபுவழி மருத்துவர் (நாட்டு வைத்தியர் )திரு.  பட்டாபிராமன் அவர்கள்- பட்டு வைத்தியர் என்று வழங்கும் பெயரோடு- தஞ்சையில் புகழ் பெற்று விளங்கியவர்; எல்லையம்மன் கோவில் தெருவில் விசாலமான இல்லத்தில் கூட்டுக் குடும்பத்துடன் வசித்தார். முன்புறம் மருத்துவ மனை.எங்கள் குடும்ப மருத்துவர்;அப்பாவுக்கு நண்பர்;குடும்ப நண்பர் என்றே சொல்லலாம்.


புன்னகை மாறா முகத்தர்;அவரவர் நிதிநிலைக்கேற்பக் கட்டணம் பெறுவார்; சிற்றூர்களிலிருந்து காய்கறி விற்க வரும் எளியோர் பலரிடம் சொற்ப மதிப்புள்ள காய்கறிகளைப் பெற்றுக் கொண்டு மருத்துவம் பார்ப்பதைப் பலமுறை கண்ணாரக் கண்டிருக்கிறேன்.


பல் சீர் கெட மிகுதியான இனிப்புகள் உண்பது காரணமெனில் இப்போதும் சற்றேனும் என் பற்கள் சில எஞ்சியிருப்பது  அதிசயம்தான்.


 என் இருபதாம் வயதில் , கோடை விடுமுறைக்குக்  கிருஷ்ணகிரியில் இருந்த மாமா வீட்டிற்குச் சென்றிருந்தேன். மூன்றாம் நாள் நள்ளிரவில் முதன் முதலாகப் பற்கள் இனிப்புக்கு எதிர்வினையாற்றத் தொடங்கின:கடும் வலி;உயிர் போகும் வலி; உறக்கமில்லை;சித்திர வதைதான். விடியற்காலை, மாமா தம் கைவசமிருந்த கிராம்புத் தைலத்தை வைத்தார். கடுகடுப்புச் சற்றுக் குறைந்தது . அங்குள்ள மருத்துவரிடம் செல்லலாம் என்றார். நான் தஞ்சைக்கே போய்விடுகிறேன் என்று உறுதியாகச் சொன்னேன்.

 அவருக்கு வேறு வழியில்லை. பேருந்தில் ஏற்றிவிட்டார்.


வழக்கம் போல் அப்பா பட்டு வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்


வைத்தியரும் வலிக்கும் பல்லில்  சிறிது கிராம்புத் தைலம் வைத்தார். மெல்ல மெல்ல வலி பொறுத்துக் கொள்ளும் அளவுக்குச் சற்றே குறைந்தது.


வைத்தியர் அப்பாவுடன் பேசியாவாறே - அன்றாடம் உரையாடுவது அவர்கள் வழக்கம்- கலுவத்திலிட்டுப் 'பச்சிலை'எதையோ அரைத்துக் கொண்டிருந்தார். 


ஒரு வழியாக உரையாடலும் அரைத்தலும் முடிவை எட்டின.


அரைத்ததை உருட்டி எடுத்தார்- கரும்பச்சை உருண்டை.


" வீட்டுக்குப் போய், தூங்கறதுக்கு முன்னாடி காலை நல்லா  கழுவித் துடைத்து, இடது உள்ளங் காலில் வைத்து, - வலி வலது மேற் கடைவாய்ப்பல்லில் - வெற்றிலையால் மூடித் துணிக்கட்டு போட்டுக்க " என்று வழ வழப்பான தாளில் மடித்துக் கொடுத்தார்.


"இது மாதிரி மூனு ராத்திரி கட்டணும். நாளைக்கும் நாளன்னைக்கும் வா" என்றார்.


" இப்ப பல் வலி கூடிக்கிட்டுப் போற மாதிரி இருக்கே ?" என்று பதற்றத்துடன் கேட்டேன். பல் வலிச் சித்திரவதையில் உழன்ற எனக்குப் பச்சிலை உருண்டை மீது நம்பிக்கையில்லை. 'இன்னும் இரண்டு நாள் வேறு வரணுமாமே!'


வைத்தியர் வீட்டில் இரவு உணவு .


வீட்டுக்கு வந்து மருந்தைக் கட்டிக் கொண்டேன். முந்தைய இரவு உறக்கம் கெட்டதால், நல்ல உறக்கம். காலையில் விழித்தபோது வலியின் சுவடே இல்லை.


அதிசயம்!


என்றாலும் எஞ்சிய இரண்டு நாளும் மருந்து வைத்துக் கட்டியாகவேண்டும் என்றார் ; கட்டினார். வாரக்கணக்கில் உள்ளங்காலில் கறுப்புக் கறை இருந்தது.


ஏறத்தாழப் பத்தாண்டுகள் பல்வலி தலை காட்டவே இல்லை.


அவர் அரைத்துக் கட்டியது சித்திர மூல வேர் என்பதைப் பின்னர்,  பெயரளவில் தற்செயலாகத் தெரிந்து கொண்டேன். அவரிடம் சொன்னேன்."இதெல்லாம் உனக்கு ஏன், மறந்துடு" என்றார் செல்லமாக .


மீண்டும் பல் வலித்தபோது அவர் இல்லை.


நாட்டு வைத்தியம் முற்றிலும் மோசடி என்று சொல்ல மாட்டேன்;முடியாது.நாட்டு மருந்துகளின் நன்மைகளைப் பயன் கொண்டுணர்ந்தவன் நான்.


ஆனால் , எல்லா மருந்தும் இதன்பால் உள என்று நாட்டு வைத்தியத்தை மட்டுமே பிடித்துத் தொங்காமல் அவர் நோயின் தன்மையைப் பொறுத்து அலோபதி அல்லது ஓமியோபதி மருந்தும் தருவார்;அரிதாக ஊசி கூட போடுவார்- நெறியில்லை என்றாலும் .


அலோபதி மருத்துவம் பன்னாட்டுப் பெரு வணிக நிறுவன மயமாகிச் சுரண்டுவோர் கைகளுக்குச் சென்றுவிட்டாலும், மருத்துவ ஆய்வுகள்தாமும் அந்நிறுவனங்கள் தயவில் சுரண்டலுக்குப் புதுப் புது வழிகளைத் தேட வாய்ப்பளித்தாலும்,  அலோபதியின் புறவயமான அறிவியல் அடிப்படை வலுவானது என்றே கருதுகிறேன்.


நாட்டு வைத்தியம் சில பல வேளைகளில் வெறும் அதிசயமாகவும் பூடகமாகவும் நிற்கும் நிலையிலிருந்து விடுபடுவது நல்லது என்பது என் கருத்து. புறவயமான ஆய்வுகளை மேற்கொண்டு முறைப்படுத்துவது நல்லது.

அப்படி நடந்து வருகிறதென்று நினைக்கிறேன்.


புற்றுநோய் முதல் புல் தடுக்கிய காயம் வரை கோமியமே பார  தீய ஒளடதம் என்று கட்டாயச் சட்டம் வரும் வரையிலாவது, ' நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை' என்னும் பல்லவியிடம் சரணடைய என்னால் முடியாது.

(2019 சனவரி 7 & 2020 சனவரி 28 - முகநூல் இடுகைகள்)


இனிநினைந்திரங்கல்

 இனிநினைந்திரங்கல்* ( Nostalgia)




T. K.P. கோவிந்தசாமி நாயுடு பூந்திக் கடை

திருச்சி, பெரிய கடை வீதியில் பெரிய சௌராஷ்டிரா தெருவின் தொடக்கத்தில் உள்ளது. எனக்குத் தெரிந்து ஐம்பதாண்டுகளுக்கு மேல் இந்தக் கடையின் வாடிக்கையாளர் எம் குடும்பத்தார்.குடும்பத்தார் எனில், அம்மாச்சி வீட்டார்.

பூந்தியைப் பொறுத்த அளவில் நாங்கள்தாம் - அப்பாவும் நானும் - பெரு வாடிக்கையாளர்கள் .


பத்து வயதிலிருந்தே, ஆண்டுக்கு ஆறேழு முறை திருச்சி செல்வேன். தஞ்சையில் பேருந்தில் ஏற்றிவிடுவார்கள். காந்திச் சந்தை நிறுத்தத்தில் இறங்கிச் சந்தைக்குள்ளிருந்த தாத்தாவின் மளிகைக் கடைக்கு எளிதாகச் சென்று விடுவேன். கடைப் பணியாளர் அம்மாச்சி வீட்டுக்கு அழைத்துச்சென்றுவிடுவார்.அம்மாச்சி வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் தாத்தா, பூந்தி வாங்கித்தரத் தவறமாட்டார். உண்பேன். 


கடைக்குச் சென்றதுமே கடைக்காரர் உடனே ருசி பார்க்கக் கொஞ்சம் பூந்தியைச் சிறு தாளில் வைத்துத் தருவார். பூந்திப்பொட்டலத்தோடு சிறு பொட்டலமாகக் கொசுறும் உண்டு. 


தாத்தா எப்போதாவது தஞ்சை வர நேர்ந்தால் மாப்பிள்ளைக்குப் பிடிக்கும் என்று வாங்கி வருவார். அப்பாவும் நானும் மகிழ்ந்து உண்போம்; உண்டு மகிழ்வோம்.


அப்போதெல்லாம் பூந்தியை எடைபோட்டு ,  சிறு மூங்கில் பிளாச்சுகள் சிலவற்றால் பின்னப்பட்ட நெகிழ்வான கூடையில் செய்தித்தாளை உட்குழிவாகப் பரப்பி அதில் பூந்தியை நிரப்பிச்  சணலால் சுற்றிக் கட்டித் தருவார்கள். நெகிழியைத் தவிர்க்க அந்த வழக்கத்தை மீட்கலாம்.  கடை ஐம்பதாண்டுகளுக்கு முன் எப்படியிருந்ததோ அப்படியே, காலத்தை வென்று நிற்கிறது. 


இன்று காந்திச் சந்தையில் காய்கறி வாங்கிக்கொண்டு, 

பூந்திக்கடைக்குச் சென்றேன். அரைக் கிலோ வாங்கினேன். ருசிக்கான மாதிரி, பூந்திப்பொட்டலத்துடன் கொசுறு என்னும் வழக்கம் மாறவில்லை. பூந்தி கதகதப்பாக, பாகின் கசிவுடன்  ஏறத்தாழ அந்தக் காலச்சுவையில் மாறாமலிருப்பதாகத் தோன்றியது.


திருச்சி, பெரிய கடைவீதியும் கூட, பேரளவு மாறாமல் காலத்தை வென்று நிற்கிறது எனலாம். இப்போதும் பெரிய கடைவீதியில் நடக்கும்போதெல்லாம் சிறுவனாகவே  மாறிவிட்டது போன்ற , தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடப்பது போன்ற கண நேரப் பிரமை தட்டுகிறது.

____________________________


*"இனி நினைந் திரக்க மாகின்று ... " என்று இளமைக்     குறும்புகளை எண்ணி ஏங்கும்  தொடித்தலை விழுத்தண்டினார் (புறம். 243) பாட்டில் இனி என்பது இப்போது என்னும் பொருளினது. இப்போது , இனியது என்னும் இரண்டையும் இயைத்து இனி நினைந் திரங்கல்  என Nostalgia வைக் குறிக்கப் பயன்படுத்திக் கொண்டேன்.


'நினைந்தேங்கல் 'ஏன்பது nostalgia உக்குக் கச்சிதமான கலைச்சொல் -Chellaperumal Audimoolam


ஆமாம். செறிவாக ,ஒரு சொல் நீர்மைத்தாக, கையாள வாய்ப்பாக உள்ளது. நன்றி - மதிவாணன் பாலசுந்தரம்

Sunday, May 9, 2021

அம்மாச்சி வீட்டுக் காப்பி என்னும் காப்பி மான்மியம்

 

எனக்கு அரசியல், ஆன்மீக இன்ன பிற அம்மாக்கள் கிடையாது. அம்மா என்பது என்னைப் பெற்ற நற்றாயை மட்டுமே குறிக்கும். 


வேறொரு தேவை கருதிப் பழைய படங்களின் தொகுப்புகளைத் துழாவியபோது


 அம்மாவும் நானும்


 இருக்கும் இந்தப் படம்

கிடைத்தது.




அம்மா பிறந்து வளர்ந்தது திருச்சியில். தாத்தா - அம்மாவின் அப்பா- வுக்குப் பூர்வீகம் துவாக்குடி ( துழாய்க்குடி?)க்கு அருகிலுள்ள வாழவந்தான் கோட்டை( வழக்கில் வளந்தான் கோட்டை).திருச்சி காந்தி சந்தையில் மளிகைக் கடை நடத்திவந்தார். சிறிது நிலமும் ஊரில் ஒரு வீடும் உண்டு. பின்னாளில் திருச்சியில் இரட்டை வீடு கட்டினார்.

ஒத்திக்குக் குடியிருந்த வீட்டையும் வாங்கினார்.


தஞ்சையில்,அப்பாவின் குடும்பம் ஓரளவு வசதியாயிருந்து சற்றே நொடித்துப் போயிருந்தது. அம்மாவின் பிறந்த வீட்டுடன் ஒப்பிடுகையில் அப்பா குடும்பம் வசதிக் குறைவானதுதான்.


திருமணம் 1950 இல். நான் 1957இல் பிறந்தேன். எனக்கு விவரம் தெரிந்தபின்னும் நிலைமை மாறவில்லை. ( பிற்காலத்தில் 1970களிலிருந்து மெல்ல மெல்ல எங்கள் குடும்பப் பொருளாதாரம் ஏறுமுகங் கண்டது தனிக்கதை.)


அம்மாச்சி வீட்டுக்கு, திருச்சிக்கு , வருவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

அம்மாச்சி வீட்டில் மின்வசதி உண்டு. மார்க்கோனி என்னும் பெயரிலேயே பெரிய வானொலிப் பெட்டி உண்டு . தாத்தா வீட்டு வசதியை விடவும் திருச்சி நகரம் என்னை ஈர்த்தது.ஆனால் இரண்டு இரவுக்கு மேல் திருச்சியில் தங்க என் இளைப்புநோய் இடந்தராது.ஆனாலும் திருச்சி பிடிக்கும். அந்த ஏக்கம் சற்றே தீரும் வகையில் இப்போது நான் திருச்சிவாசியாகிவிட்டேன்.நிற்க.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அப்பா ஒரு நிகழ்ச்சியைச் சொல்வார். அவர்களுக்குத் திருமணமான புதிது. அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு அம்மாச்சி வீட்டுக்குச் சென்றாராம்.

(அப்போது, பேருந்தில் சென்றால், வண்டி செங்கிப் பட்டி, காச நோய் மருத்துவ மனை சென்று பத்து மணித்துளி நின்று திரும்பவும் வந்து திருச்சி நோக்கிச் செல்லும்.

இரண்டு மணிநேரப் பயணம். ஒரு வசதி, காந்தி சந்தை நிறுத்தத்தில் இறங்கி, சந்தைக்குள் நுழைந்து எங்கள் அம்மாச்சி வீட்டுக்கு, பத்து மணித்துளியளவில் நடந்து சென்றுவிடலாம்.) வீட்டுக்குள் முழுதாக நுழையக் கூட இல்லையாம் அம்மா, " ஒரு வாய் காப்பி குடு" என்று அம்மாச்சியிடம் கேட்டார்களாம். 


தஞ்சைப் பேருந்து நிலையத்திலோ, செங்கிப்பட்டியிலோ கேட்டிருந்தால் அப்பாவாங்கிக்கொடுத்திருப்பாராம். ( அம்மாவின் செயல் அவரது கௌரவத்துக்கு இழுக்கு என்பதும் அந்தக் காலத்தில்  அம்மாவின் போக்கு அப்படியிருந்தது என்பதும் குறிப்பு. வெளிப்படையாகச் சொல்லமாட்டார்.)


எனக்கு விவரம் தெரிந்தபின் அம்மா செய்ததே இயல்பானது; சரியானது என்று உணர்ந்தேன்.


அம்மாச்சி வீட்டில் மாடுகள் இருந்தன. காப்பிக்கு வீட்டுப் பால்தான். பச்சைக் காப்பிக் கொட்டை வாங்கி வைத்திருப்பார்கள். காப்பி போடவேண்டுமென்றால் தேவையான அளவு கொட்டையை எடுத்து வாணலியிலிட்டு வறுத்துக் கொள்வார்கள்;சுவரில் பொருத்தியிருக்கும்  சிறிய எந்திரத்தில் இட்டு , கைப்பிடியைச் சுழற்றிப் பொடியாக்குவார்கள்; பிறகு வடிப்பானில்( filter ) மெத்தென்று பரப்பி வெந்நீர் உகுத்து , காப்பிச் சாற்றை(decoction) வடித்தெடுப்பார்கள்; வீட்டுப் பாலைக் கொதிக்க வைத்து அளவாகச் சாறு கலந்து சர்க்கரை சேர்த்து நுரைக்க நுரைக்க ஆற்றி வெண்கல லோட்டாவில் தருவார்கள்.


எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வதுபோல் தோன்றினாலும்  அம்மாச்சியின் அநாயாசமான கைப்பக்குவத்திற்கு ஈடு இணை இல்லை.


காப்பி அனுபவம், வறுக்கும் போது வரும் மணத்திலேயே தொடங்கிவிடும் , படிப் படியே மேலேறிக் கள்ளிச் சொட்டுக் காப்பி நாக்கில் படப்பட உச்சத்திற்குப் போகும். 


அப்படியொரு காப்பியை அன்று அப்பாவால் வாங்கித் தந்திருக்கவே

முடியாது. எங்கள் வீட்டிலும் போட்டிருக்கவே முடியாது.இன்றும் இனியும் அப்படியொரு காப்பிக்கு வாய்ப்பே இல்லை.


அந்தக் காலத்து அம்மாச்சி வீட்டுக் காப்பி இல்லாவிட்டாலும் காப்பிப் பழக்கம்  காப்பி போதையாகித் தொடர்கிறது.


அம்மாவிடம் பிறந்த வீட்டு வசதிபற்றிய மேட்டிமையுணர்வு இருந்ததேயில்லை. கடுகடுவென்றிருப்பார். அது, அவரது உறுதியின் வெளிப்பாடு.

இருப்பதில் நிறைவு கொண்டிருந்தார். வசதி மேம்பாடு குறித்தோ, பிறரோடு ஒப்பிட்டோ அப்பாவை நச்சரித்ததில்லை.

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...