Saturday, July 31, 2021

பெயரிலிருந்து வினை : நட்டலும் முறுவலித்தலும்

 பெயரிலிருந்து வினை - 1       நட்பாராய்தல்


             நட்(பு)
நள் <
             நண்(பு)
            
பயணிப்பது பிழை , பயணம் செய்வதே சரி ! - என்பது ஒரு சாரார் வாதம். 

நட்பு என்னும் பெயரிலிருந்து 'நட்பது' - என்று உருவான வினையை வள்ளுவரே ஆண்டிருக்கிறாரே, அவ்வழியில் பயணம் என்னும் பெயரிலிருந்து வினையை உருவாக்கிப் பயணிப்பது பிழையில்லையே ! - என்பது எதிர் வாதம்.

இதனை ஒத்த , " பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் " என்னும் தொடர் திருமண அழைப்பிதழ்களில் இடம்பெற்றுவந்திருக்கிறது; இப்போதும் ஓரளவு தொடர்கிறது.

யணம் செய்வது , பயணிப்பது இரண்டுமே பிழையில்லை என்பது  என் சமரசவாதம்.

அவரவர் உளப்பாங்குக்கேற்ப ஒன்றைக் கையாளலாம். நடைப் பன்மை கருதி ஒருவரே இரண்டையும் சூழலுக்கேற்ப ஆளலாம்.

                                                                      *****

என் ஆர்வத்தைத் தூண்டியது பின்வரும் [முகநூல்]உரையாடல்:

" நட்புஎன்னும்பெயர்ச்சொல்லிலிருந்துநட்பது என்றுசொல்லாக்கம்செய்துள்ளாரே! "

" அது நள் என்னும் வினைச்சொல்லில் பிறந்ததே "

" நடு என்பதே நட்புக்குப்பகுதி. நடு→நட்டல்(குறள்)  ஒருவர்தன்னுள்ளத்தில் மற்றொருவரை  நடுவதேநட்பு.நள்பகுதியாயின் நள்ளல் என்றே வரும்.எள்ளுவது எள்ளல்என்னுமாப்போல "

" நடு+பு எப்படி நட்பு எனப்புணர்ந்தது? அங்கு பகுதி இரட்டிக்கக் காரணம் என்ன? நடு, நள் யாதாயினும் அவை வினைச்சொற்களே "

            ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தமிழின் வரலாற்றுப் போக்கை எட்டியவரை பின்னோக்கிப் பார்ப்பதென்றால் சான்றோர் செய்யுள்கள்தாம் வாய்ப்பானவை.

புலவர்மணியன் அவர்களின் , ' சங்க இலக்கிய வினை வடிவங்களை ' எடுத்தேன். நட்பு எனும் பொருள் குறிக்கும் மூன்று அடிப்படை வடிவங்கள் கிடைக்கின்றன( நட்பு எனும் பொருண்மை சார்ந்த தோழமை முதலியன பற்றி இங்குக் கருதற்க) :

நட்பின்  , நட்பினன் , நட்பினை , நட்பு , நட்பும்  - என்னும் நட்புச் சார்ந்த வடிவங்கள் பலவற்றை அவர் வினைகளாகக் கொண்டுள்ளார்.

நண்ப , நண்பினர் ,  நண்பினன் , நண்பு - என்பனவும் வினைப்பொருண்மை காட்டுவதாகக் கருதியுள்ளார்.

நள்ளாதார் - என்பதையும் வினைவடிவமாகச் சேர்த்துள்ளார். இது சான்றோர் செய்யுளுள் புறநானூற்றில் ஓரிடத்தில் மட்டுமே உள்ளது (நள்ளாதார் (1) நள்ளாதார் மிடல் சாய்ந்த - புறம் 125/5)

நள்- என்பதன் அடியாக இத்தகைய எதிர்மறை வடிவங்களே கீழ்க்கணக்கு நூல்களிலும்  உள்ளமையைப் பேரா. பாண்டியராஜன் உதவியுடன்  பார்க்கமுடிகிறது (tamilconcordance.in).

நள்ளா (1) , நள்ளாதவர்க்கும் (1) , நள்ளாதார் (1) , நள்ளாதான் (1) , நள்ளாது (1) , நள்ளாமை (1) , நள்ளார் (2) , நள்ளான் (1) - என எட்டு வடிவங்கள் ஒன்பது இடங்களில் பயின்றுள்ளன.

பயில்வு குறைவாயிருப்பினும் , எதிர்மறையில் மட்டுமே இருப்பினும்  நள்- என்னும் உரி/வினையடியிலிருந்தே நட்(பு), நண்(பு) முதலியன உருவாக வாய்ப்பிருக்கிறது.

நள்¹-(ளு)-தல் [நட்டல்] naḷ- , 5 & 9 v. tr. cf. நளி². 1. To approach, join, associate with; அடைதல். உயர்ந்தோர்தமை நள்ளி (திருவானைக். கோச் செங். 25)

- என ' நள்-(ளு)தல்  ' என்பதை வினையடியாகக் காட்டுகிறதுசென்னைப் பல்கலைக்கழகழகத் தமிழ்ப்பேரகராதி (TAMIL LEXICON) ; கச்சியப்ப சுவாமிகளின் திருவானைக்காப் புராணத்திலுள்ள ' நள்ளி ' என்னும் வினையெச்ச வடிவத்தையும் காட்டுகிறது. வேறு இலக்கியங்களிலும் இத்தகைய விதிவினை வடிவங்கள் அரிதாகவேனும் காணப்படலாம்.

புலவர்மணியன் அவர்கள் வினைவடிவங்களாகத் தந்திருக்கும் சிலவற்றைப் பற்றிய மறுபரிசீலனை தேவைப்படுகிறது என்றாலும் , நட்பு என்பதை ஒரு தொழிற்பெயர் வடிவமாக , நள்- என்னும் வினையடியிலிருந்து உருவானதாகக் கொள்ள இடமிருக்கிறது (இன்னும் சற்று விரிவாக அறிய ஆர்வமுடையோர் இறுதியிலுள்ள இணைப்பைப் பார்க்கவும்)

இத்தகைய ' தடுமாற்ற ' த்திற்குக் காரணமென்ன ?

தொல்காப்பியத்திடம்தான் போக வேண்டும்.

" உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை,
இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி,
பெயரினும் வினையினும் மெய் தடுமாறி,
ஒரு சொல் பல பொருட்கு உரிமை தோன்றினும்,
பல சொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும்,
பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி,
தம்தம் மரபின் சென்று நிலை மருங்கின்,
எச் சொல் ஆயினும், பொருள் வேறு கிளத்தல் " (உரியியல், 1)

உரிச்சொல்லின் இயல்பிலேயே ' பெயரினும் வினையினும் மெய் தடுமாறும் ' என்கிறது தொல்காப்பியம். உரிச்சொல் என்னும் வகையின் இன்றியமையாமை இதனாற் புலனாகிறது.

இளம்பூரணர் ' மெய் என்பது பொருள் ' என்கிறார். சேனாவரையர், தெய்வச்சிலையார் , நச்சினார்க்கினியர் ஆகியோர் மெய் என்பது உருபு (உருவம்) என்கின்றனர். உருவம் என்பது ஏற்புடையது.

நள் - என்பதை ஓர் உரிச்சொல் எனலாம்.

நள் - பற்றித் தொல்காப்பியம் கூறவில்லை; நளி பற்றிக் கூறியிருக்கிறது. பார்ப்போம்.

" தடவும் கயவும் நளியும் பெருமை " (உரி.23)
என வரையறுத்து, ஒவ்வொன்றும் வேறு பொருளிலும் வருவதை அடுத்தடுத்துச் சொல்லும்போது ,
" நளியென் கிளவி செறிவும் ஆகும் " (உரி. 26) என்கிறது தொல்காப்பியம்.
இளம்பூரணர் , சேனாவரையர், தெய்வச் சிலையார் ஆகியோர் ' நளியிருள் ' என்பதைக் காட்டுகின்றனர்.  நச்சினார்க்கினியர் காட்டுவது :
" சிலைப்பு வல்லேற்றின் தலைக்கை தந்துநீ
  நளிந்தனை வருதல் உடன்றன ளாகி " (பதிற். 52: 15-16)

" சிலைத்தலையுடைய  வலிய  ஏற்றினைப்  போல முதற்கை   கொடுத்து   நீ  செறிந்து
வந்தமையின் பொருட்டு , (நின் மனைவியாகிய  அரிவை) ஊடலுற்று..." (ஒளவை துரைசாமிப்பிள்ளை உரை)

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் , துணங்கைக் கூத்தில் ஆடும் மகளிர்க்குப் பெருமிதந் தோன்ற நிமிர்ந்து தலைக் கை கொடுத்து அம்மகளிரோடு இணக்கமாக நெருங்கி ஆடி வருவது கண்ட அவன் மனைவி ஊடல் கொள்ளும் காட்சி இது (பொருளொடு புணர்ந்த உவமை நயத்தைப் பிறகு பார்ப்போம்)

' நளிந்தனை வருதல்  ' என்பது நெருங்கியும் இணங்கியும் வருதலை உணர்த்துகிறது எனலாம். எனவேதான் நச்சினார்க்கினியர் பிறர் காட்டும் நெருங்கிச் செறிந்த இருளை மட்டுமே குறிக்கும் எடுத்துக்காட்டை விடுத்து,  நளி என்பதன் பொருளாகத் தொல்காப்பியம் சுட்டும் செறிவென்பது   நெருக்கம் , நட்பு இரண்டையும் குறிக்குமென்று கருதி  இதனைக் காட்டியுள்ளார் போலும்.

உரியியலின் இறுதி எட்டு நூற்பாக்களுள் சில உரியியலுக்கு மட்டுமன்றிப் பொதுவாகச் சொற்கள் அனைத்துக்கும் உரியவை. ஆனால் அவற்றை உரியியலின் ஈற்றில் வைக்க நேர்ந்தது பற்றித் தனியே பார்க்கலாம்; பார்க்க வேண்டும்.

தொல்காப்பியர் - இக்கால நிலைநின்று குறைகாணலாம் எனினும் அவற்றை மீறி - ஒரு மேதை என்பது உரியியலாலும் புலப்படுகிறது.

________________________________________________________________________

இணைப்பு

(புலவர் மணியன் சுட்டிய நூற்பெயர் , பா , அடி எண்களைத் தவிர்த்துள்ளேன். பகர அடைப்பினுள் இருப்பவை[  ] நான் சேர்த்தவை )

நட்ட - ¹நட்பு[ச்] செய்த , ²நிலைநிறுத்திய
    "     (போலும்) - நட்டுவைத்தவை போன்ற
நட்டவர் - நட்புச் செய்தவர்
நட்டனர் - ¹நட்புச் செய்தனர் , ²[(கல்) நிறுத்தினர்*]
நட்டனை - நட்புச் செய்தாய்
நட்டார்க்கு - நட்புச் செய்தவர்க்கு
நட்டு - ¹நட்புச் செய்து , ²நாட்டி/நிலைபெறுத்தி
நட்டோர் - நட்புச் செய்தோர்
நட்பின் - நட்டலினால்/நட்டால்¶
நட்பு - நட்டல் (தொழிற்பெயர்)
நட்பும்- [புணர்தலும் §]

நண்(பு) - வடிவங்கள்
——————————————
நண்ப - நட்டலுடையவனே° 
நண்பினர்♪
நண்பினன்Ω-
நண்புμ

நள்- வடிவம்
———————
நள்ளாதார்±

====================
நண்ண(உண்டு)
நண்ணாத் (தெவ்வர்)
நண்ணார் - பகைவர்
நண்ணார் (தேஎம்)
நண்ணி
நண்ணிய - அடுத்துள்ள, பொருந்திய
நண்ணியது
நண்ணியவை
நண்ணியார்
நண்ணு (வழி) - அண்ணிதான
நண்ப - நட்டலுடையவனே°
நண்(பகல்) - செறிந்த
நண்பினர்♪
நண்பினன்Ω
நண்புμ
நணி (இருந்த) - அளித்தாக
நணி (செலினும்) - அணுக
நணி/த்தந்தனை - அணித்தாகக் கொண்டுவந்தனை
நணித்து
நணித்து ( இல்லை)
நணி (நணித்து) - அணிமைத்து
நணி (பிரம்பு) - அணித்தாய் நின்ற , நண்ணியதாய
நணி (மருதம்) - அணித்தே உள்ள
நணியர் - அண்மையில் உள்ளார் (நண்ணு - பகுதி)
====================
நள் (இரும்பொய்கை)
நள் (இருள்) - செறிந்த  (நள்தல் - செறிதல்)
நள் (என் யாமம்) - செறிந்த ...(ஒலிக்குறிப்பும் ஆம்)
நள்ளாதார்
நளி^ - செறிந்த இடம் (முதல்நிலை திரிந்த தொழிலடிப்
              பெயர்)
நளி‡ (இரும் கங்குல்)- செறிந்த (நளி என்னும்
                 உரிச்சொல்லடிப்பிறந்த வினைப்பகுதி)
"  (இரும் சிலம்பு)
"  (இரும் சோலை)
"   (இரும் பரப்பு)
"    (இருள்)
"     (கடல்)
நளி/கொள்(சிமையம்)
நளி (சிலம்ப) - குளிர்ந்த... ¢
"         (சினை) - செறிந்த
நளி (சினை வேங்கை)
நளி (சுடர்) - அடர்ந்த நெருங்கிய
நளி(த் தூவல்) - செறிந்த
நளிந்தனை (வருதல்) - செறிந்து
நளிந்து (செறிந்து)
நளி (நீர்)
நளிப்பன - செறிவன
நளிப்பனன் - செறிந்தோன்
நளிப்பு - செறிவு
நளி/படு(சிலம்பு) - செறிந்த
நளி (பரப்பு)
     "    (புகை)
     "    (புணர்மார்) - இறுக ...
     "    (பெயல்) - மிக்க (நளிதல்- மிகுதல்)
     "     (மணல்) - செறிந்த
     "     (மலை)
     "      (முகை)
     "      (முந்நீர்)
     "       (முழை) - செறிந்த
     நளிய - செறிவை உடையை[உடைய]
     நளி(வாய்) - செறிந்த ...
    
__________________
குறிப்புகள்

¹ நட்புச் செய்தல் , ² நட்டுவைத்தல் எனும் பொருள் வேறுபாடு கருதி எண்ணிடப்பட்டன.

*இனி நட்டனரே கல்லும் (புறம்.264.5)

¶அகம்.12.5 . பழைய உரையிலும் அதனைப் பின்பற்றி ந.மு.வேங்கடசாமி நாட்டார் , ரா.வேங்கடாசலம்பிள்ளை இணைந்தெழுதிய உரையிலும் 'நட்பினால்' என்றே பொருள் தரப்பட்டுள்ளது. நற்றிணை (32.8 , 72.3 , 323.4)யிலும் ஓரிடத்தில் (32.8) மட்டும்,  நட்பின் அல்லது = நட்புக்கொள்ளுவதல்லது (பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை) என வினைச்சொல்லாகப் பயின்றுள்ளது.

§" நாமமார் ஊடலும் நட்பும் தணப்பும் " (பரி. 20.108) நட்பும் = புணர்தலும் என உரைகாண்கிறார் பொ.வே.சோமசுந்தரனார்.

°குறு.129.1. நட்பையுடையோய் - உ.வே.சா

♪குறு. 302.5. நட்பையுடையார் - உ.வே.சா.

Ωபுறம்.216.6 . நட்பினையுடையன் - பழையவுரை

μபுறம். 29.21 நண்பிற் பண்பு = நட்போடு கூடிய குணம் ; புறம். 71.15.நண்பிற்
                  கேளிர் =நண்பினையுடைய நட்டார் ; புறம்.212.9. பொத்து இல் நட்பிற்                                  பொத்தி = புரையில்லாத நட்பினையுடைய பொத்தி - பழையவுரை]

±புறம்.125.5. பகைவர்  பழையவுரையாசிரியர்]

^ நள் என்பதன் திரிபு நளி எனக் கொண்டுள்ளார்

‡ நளி என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த வினைப் பகுதியாகக் கொண்டுள்ளார்.

¢" மரம் பிறங்கிய நளிச் சிலம்பின் " = மரங்கள் செறிந்த குளிர்ந்த மலையில் - பழையவுரையாசிரியர். 'நளிர்' என்பது பாடமாகலாம். ஆனால் கிடைத்துள்ள சுவடி எதிலும் இப்பாடம் இல்லை போலும்.


____________________________________________________________________________________________________________________________________________________________________________________________

பெயரிலிருந்து வினை 2 - முறுவல் → முறுவல் செய்தல் → முறுவலித்தல்



பயணம் - பயணித்தல்
நிச்சயம் - நிச்சயித்தல்

எனப் பெயரையே வினையடியாக்குதல் பற்றி ஒரு விவாதம் நடந்தது. அப்போது 'நட்பு' என்னும் பெயரடியாகப் பிறந்த 'நட்பது' என்னும் வினையை வள்ளுவரே ஆண்டுள்ளாரே என்று பயணித்தல் வகையை ஆதரிப்போர் வாதிட்டனர். அதில் தலையிட்டு நட்பு என்பது நள் - என்னும் பெயரினும் வினையினும் மெய்தடுமாறிய உரிச்சொல்லடியாகப் பிறந்தது என்னும் கருத்தை முன்வைத்தேன்.

என்றாலும் அந்த விவகாரம் எனக்குள் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தது. அது குறித்த  திட்டமில்லாத துழாவலில் கைக்குக் கிடைத்தது முறுவல்¹. இது, ' பல் , எயிறு , முறுவலித்தல் ' என்னும் பொருள்கள் குறிப்பதாகப் 'பாட்டும்தொகையும்' (என்.சி.பி.எச். , இரண்டாம் பதிப்பு ,1981 ; எஸ்.ராஜம் , முதற்பதிப்பு ,1957) சுட்டுகிறது².

அல் ஈற்றுத் தொழிற்பெயர் போல் காணப்பட்டாலும் முறுவல் என்பது முழுத் தனிச்சொல் ; பெயர்ச் சொல். பாட்டும் தொகையுமாகிய சான்றோர் செய்யுளுள் முறுவல் என்பது எவ்விடத்திலும் எவ்வடிவிலும் வினையாக நிற்கவில்லை (புலவர்மணியன்,  சங்க இலக்கிய வினை வடிவங்கள் , பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனம் , 2007)

சான்றோர் செய்யுளில் மட்டுமன்றிக்  கீழ்க்கணக்கிலும் சிலம்பிலும்  முறுவல் என்னும் வடிவம் பரவலாக வழங்கியுள்ளது. முறுவலள் , முறுவலாய் , முறுவலார் , முறுவலாள் என்னும் குறிப்புவினை வடிவங்கள் சில இடங்களில் ஆளப்பட்டுள்ளன.

பத்திப்பாடல்களில்தான் முறுவல் செய்தாள் , முறுவல் செய்தான் , முறுவல் செய்து ,  முறுவல் செய்ய ,  முறுவல் செய்யும் எனச் ' செய் ' என்னும்  காரியவாசகத்துடன்  வினையாவதைக் காணமுடிகிறது . முறுவலிப்பு என்னும் தொழிற்பெயர் வடிவம் அப்பர் தேவாரத்தில் ஓரிடத்தில் காணப்படுகிறது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முறுவலிக்கும் , முறுவலிப்ப என்னும் வடிவங்கள் முறையே ஒவ்வோரிடத்தில் மட்டும் காணப்படுகின்றன.

சீவக சிந்தாமணி , வில்லி பாரதம் ஆகியவற்றில் முறுவலித்து என்னும் வினையெச்ச வினை தலைகாட்டுகிறது.

பெரியபுராணத்தில் முறுவலிப்பார் என்னும் முற்றுவினை வடிவம் உள்ளது³.

முறுவல் என்னும் பெயர்  காலப்போக்கில் வினையடியாகவும் மாறி, முதலில் - செய் சேர்ந்தும் , பிறகு கால இடைநிலைகள் சேர்ந்தும் வினையாகியிருக்கிறது. இது தமிழ் உளப்பாங்கு போலும்!

இத்தகைய வேறு சொற்களையும் , அவற்றின் வரலாற்றுப்போக்கையும் இக்கால இலக்கியம் வரை கண்டு அவற்றின் வடிவ மாறுதல் போக்கைக் காணவேண்டும்.

எவ்வாறாயினும் பெயரடியிலிருந்து வினை உருவாதல் தமிழுக்குப் புதிதன்று என்பது உறுதி.

————————————————————————————————

1.காதல் என்னும் சொல்லையும் எடுத்துக்கொள்ளலாம். வடிவ அளவில் ஒத்ததுதான்.
     ஆனாலும் தொகை நூல்களுள் காலத்தால் பிற்பட்ட கலித்தொகையில் ' காதலித்து '
     என்னும் வினைவடிவம் வந்துவிட்டது. அதனோடு " காதலம் (அன்மை) -
      காதலிக்கப்படுவேம் (நற்.268:6) " என்பதையும் - இவ்விரண்டை மட்டும் - தருகிறார்
      புலவர்மணியன் ( சங்க இலக்கிய வினை வடிவங்கள் , பன்னாட்டுத் திராவிட
      மொழியியல் நிறுவனம் , 2007)

2.முறுவல் muṟuval , n. [T. murupu, K. muruva.] 1. Tooth; பல். முத்த முறுவல் (குறள், 1113). 2.
   Smile; புன்னகை. புதியதோர் முறுவல் பூத்தாள் (கம்பரா. சூர்ப்ப. 5). 3. Happiness;
    மகிழ்ச்சி. பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் (தொல். பொ. 111). 4. An ancient treatise      ondancing, not extant; இறந்துபட்டதொரு பழைய நாடகத்தமிழ் நூல். (சிலப். உரைப்        பாயிரம், பக். 9.)

     முறுவலி-த்தல் muṟuvali- , 11 v. intr. < முறுவல். To smile; புன்னகைசெய்தல். அது
     முறுவலித்துநகுதலும் அளவே சிரித்தலும் பெருகச் சிரித்தலும் என
     மூன்றென்ப (தொல். பொ. 251, உரை) - TAMIL LEXICON

3.  முனைவர் ப.பாண்டியராஜா அவர்களின் தமிழ் இலக்கியத் தொடரடைவு
      (tamilconcordance.in) இலக்கியங்களில் முறுவல் வடிவங்களைத் தொகுக்க
       முற்றிலும் துணையாகக் கொள்ளப்பட்டது. பெரு நன்றி!

-------

Raveenthiran Venkatachalam: முறுவல் தொழில்பெயரே; பகாப்பதமன்று. அது முறு(கு) என்ற வினைச்சொல்லிலிருந்து பிறந்தது. முறு என்றால் கோபித்துக்கொள் எனப்பொருள். "அவன் முறுக்கிக்கொண்டான்" என்ற வழக்கு இன்றும் உண்டு. கோபிக்காமல் புன்னகைப்பதை முறு+(அ)+அல் முறுவல் என்றனர். அகரம் புணர்ந்துகெட்ட எதிர்மறை இடைநிலை.
காது என்பது அன்புசெய் என்னும் வினை ஏவல். அது அல் விகுதி பெற்று காதல் என்னும் தொழில்பெயராகி பின்னும் பகுபத உறுப்புக்களைப் பெற்று காதலித்தல் என்றானதுபோல முறு என்னும் வினை ஏவலும் அல் விகுதிபெற்று முறுவல் என்னும் தொழில்பெயராகி பின்னும் முறுவலித்தல் ஆயிற்று. இவ்வாறே முயல் என்ற வினை முயற்சி (முயல்+சி) ஆகி பின்னர் முயற்சித்தல் ஆனது. முடிவாக முறுவல் பெயர்ப்பகுதியன்று. அது விகுதியேற்ற வினைப்பகுதியாம்.

மதிவாணன் பாலசுந்தரம் : தங்கள் கருத்து - அல் ஈற்றுத் தொழிற்பெயர் ஒழுங்கு நோக்கிய ஒரு தருக்கத்தைச் சார்ந்து நிற்கிறது ; எண்ணிப்பார்க்கத் தூண்டுகிறது . நன்றி!

நான் பொதுவாகப் புறநிலைச் சான்றுகள் சார்ந்து விளக்கமுற்படுவேன். முறு(க்கு) - என்பது சினத்தைக் குறிக்கும்போது அது உருவகமாகப் பிணக்கை அல்லது சினத்தைக் குறிக்கலாம் தோன்றுகிறது.

முறுக்கு , முறுகு ஆகிய இரண்டும் சங்க இலக்கியங்களிலும் கீழ்க்கணக்கு நூல்களிலும் சற்றே தம்முள் வேறுபட்ட பொருள்களைக் குறித்து வழங்கியுள்ளன ; உருவகமாகக் கூட, பிணக்கைக் குறிக்கவில்லை.

'கயிறு நன்றாக முறுக்கிக்கொண்டது'
'முறுகலான தோசை'
- என்னும் தற்கால வழக்கிலும் பழம்பொருட்குறிப்புத் தொடர்கிறது.

முறுக்கு - என்னும் வினையின் தற்காலப் பயன்பாடு நோக்கி,  "  4: (பிறர் தன் அருமை தெரிந்து மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற வகையில்) ஒருவித இறுக்கத்துடன் நடந்துகொள்ளுதல்; act in an affected manner; be stiff. புது மாப்பிள்ளை கொஞ்ச நாள் அப்படித்தான் முறுக்கிக்கொள்வார்! " என ஒரு பொருளும்
காட்டும் தந்துள்ளது ' க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி'.சினம் என்னும் பொருள் கொண்டாலும் தவறில்லை.

என் ஊகங்கள் : 1.முறுவல் என்பதன் முதனிலைப்பொருள் , பல்/எயிறு என்பதாகலாம் ;அதன் நீட்சியாகப் பல் தோன்றச் சிரிப்பதைக் குறித்திருக்கலாம்.

2. பல்லைக் குறித்து நகார் என்னும் சொல் சிறுபாணாற்றுப்படை  (57), கலித்தொகை (93:18) ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது. இதனை நோக்க நகு (தல்) என்பதும் பல்லைக் குறித்த சொல்லின் நீட்சியாகலாம்.

3.நகார் nagār , பெ. (n).1.முத்தையொத்த வெண்பல் ; tooth like pearls " மகாஅர் அன்ன மந்தி நகார் அன்ன நளிநீர் முத்தம் " (சிறுபாண்.57). 

[நகு →  நகார்.] 

முத்துப் பற்கள் ஒளிருதற் கருத்து வேர். நகையென்னுஞ்சொல் , முதற்கண் ஒளிருதலைக் குறித்து, அடுத்து ஒளிரும் பற்களையும் , சிரிப்பினையும் குறிக்கலாயிற்று

 -  செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி.



Thursday, July 29, 2021

கட்டளையும் குறியெதிர்ப்பையும்

 கட்டளை வலித்தலும்

டிகிரி காப்பியும்


கெட்டியான பாலைக் கொண்டு போடப்படும் சுவையான காப்பியை டிகிரி காப்பி என்று சொல்வதுண்டு.காரணம் ?

தஞ்சை, முதுமுனைவர் சேக்கிழாரடிப்பொடி தி.ந.இரா.(T.N.R) அவர்கள் ஒரு முறை , தமக்கேயுரிய பாங்கில் காரணத்தைச் சுவைபடச் சொல்லக் கேட்டு வியந்தேன்.

பாலின் அடர்த்தியறி கருவியாகிய பால் மானி (Lactometer) கொண்டு காணும் அடர்த்தியின் அளவுதான் டிகிரி.

இந்த டிகிரியால் தரம் உறுதிப்படுத்தப்பட்ட பாலில் போடப்படும் காப்பி டிகிரி காப்பி.இங்கு டிகிரி என்பதை மரபிலக்கணப்படி ஆகுபெயர்* எனலாம்.

                                   ********   ********   *******

தினமணியில் திரு.த.ஜெகதீசன் அவர்கள் எழுதிய 'கட்டளைக்கல்-பொருள் என்ன?' என்னும் கட்டுரைக் கருத்தையும் (08.07.18) அதனைத் தக்க சான்றுகளுடன் மறுத்து எ முனைவர் அ.தட்சிணாமூர்த்தி அவர்கள் தெளிவுபடுத்தியதையும் (15.07.18) படித்த பின், பாட்டும் தொகையுமாகிய சான்றோர் செய்யுட்களில் கட்டளை என்னும் சொல்லின் வருகையைப் பார்க்கும் ஆர்வம் தலைதூக்கியது.

எட்டு இடங்களுள் ஒன்று தவிரப் பிற ஏழும் தரமறியப் பொன்னை உரைத்துப் பார்க்கும் கட்டளைக்கல்லைக் குறித்தே வந்துள்ளது.

அவற்றுள், பதிற்றுப்பத்து 81 ஆம் பாட்டு சற்றே வேறுபட்டு நிற்கிறது.



"அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி

கட்டளை வலிப்பநின் தானை யுதவி"(16-17)

என்னும் அடிகளின் ஒரு தொடருக்கு மட்டும்

" கட்டளை வலித்தலென்பது இன்னார் இன்னதனைப் பெறுக என்று தரங்களை நிச்சயித்தல்" எனப் பழையவுரைகாரர் பொருள் தந்துள்ளார். இங்குக் கட்டளை என்பதே தரம் என்னும் பொருளில் ஆகுபெயராய்* நிற்கிறது எனலாம்.

டிகிரி என்பதே பாலின் அடர்த்தியைக் குறித்துத் தரமான காப்பிக்கு அடையாயிற்று.

பொன்னின் தரமறி கருவியாகிய கட்டளை இப்பதிற்றுப்பத்துப் பாட்டில் வீரர்களின் தரத்தைக் குறித்து நிற்கிறது.

(* இவற்றை ஆகுபெயர் எனலாமா? என்பது பற்றி விவாதம் எழுந்தால் என் தரப்பை விளக்குவேன்.என்றாலும் " எனலாம்" என்று நழுவிக் கொள்கிறேன்.)


வட்டார 'வழக்கு'

'கட்டளைக்கல்'லாய்வு - 2


கட்டளைக்கல்லாய்வாளர் திரு.த.ஜெகதீசன் (தினமணி, 08.07.2018)வட்டார வழக்குணர்ச்சி மீதூரப் பொருள் காண முற்பட்டிருக்கிறார்(அவர் குமரி வட்டாரத்தவராக இல்லாமலும் இருக்கலாம். யாமறியோம்)

பழம் பனுவல்களில் வட்டார வழக்காட்சி இருக்கா தென்றோ, அவ்வட்டார வழக்குணர்ந்த ஒருவர் அதனைக் கண்டு அவை அவ்வட்டாரத்தில் எழுந்தவை  என்று கூறக் கூடாதென்றோ நான் சொல்லவில்லை. ஆனால், வேறு பல அக, புறச் சான்றுகளையும் பிற வட்டாரங்களின் வழக்குகள், சான்றுகள் இருப்பின் அவற்றுக்கான காரணங்களையும் தேவையையும் கண்ட பின்னரே வட்டாரத்தை உறுதி செய்ய வேண்டும்.

சுடாத கல்லைக் கட்டளைக் கல் என்னும் வழக்கு குமரி மாவட்டத்தில் இருப்பதாலும்

வெள்ளம், நீட்டம் ஆகிய குமரி வட்டார வழக்குகள் குறளில் இருப்பதாலும் ஊர்ப்பெயர்க்காரணம் ஒன்றாலும் கட்டளைக் கல்லின் பொருளைக் கண்டிருக்கிறார் ஆய்வாளர்.

திருக்குறளில் 'குறியெதிர்ப்பை' என்றொரு சொல் இடம்பெற்றுள்ளது. இதற்கு, "அளவு குறித்து வாங்கி அவ் வாங்கியவாறே எதிர் கொடுப்பது " என்று பொருள் தருகிறார் பரிமேலழகர் (குறள்.221, உரை). 

சமையலைத் தொடங்கிய நிலையில் இன்றியமையாத ஒரு பொருள் - எடுத்துக் காட்டாகச் சர்க்கரை - இல்லாததைக் கண்டு, உடனடித்தேவை கருதி சிறு பாத்திரமொன்றில்  அக்கம்பக்கத்திலுள்ள இணக்கமான வீட்டாரிடம் அதனை இரவலாகப் பெறுவதுண்டு. பிறகு அப்பொருளை அதே பாத்திரத்தில் நிரப்பித் திருப்பிக் கொடுப்பார்கள். இதுதான் குறியெதிர்ப்பை. (பணத்தை இவ்வாறு பெற்று, வட்டி முதலியன இன்றித் திருப்பிக் கொடுப்பது கைமாற்று எனப்படும்.)

குமணனைப் பாடிப் பரிசில் பெற்று வந்த பெருஞ்சித்திரனார் தம் மனையாளிடம் சொல்லியதாக அமைந்த, " நின்னயந் துறை நர்க்கும்..." என்று தொடங்கும் பாடல்  புரவலனை விஞ்சிய புரவலராகப் புலவர் திகழ்வதைக் காட்டும் புறநானூற்றுப் பாடல் (163). இதில் 'நின் நெடுங் குறி யெதிர்ப்பை நல்கியோர்க்கும் ... கொடு' என்பார் சித்திரனார்.

பகற்பொழுதுகளில் தொடர்ந்து வந்து தலைவியைச் சந்தித்து மகிழும் தலைவன் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே காதலில் காலங் கழிக்கிறான்.

இப்போக்கைத் தடுத்து மணம் புரிந்து கொள்ளத் தூண்டும் தோழி கூறுவதாக அமைந்தது நற்றிணை 93 ஆம் பாட்டு. இது, "உயிர்க் குறியெதிர்ப்பை* பெறலருங் குரைத்தே" என்று முடிகிறது. தலைவி தன் உயிரையே தலைவனுக்குத் தந்திருக்கிறாள். விரைந்து திருமணம் செய்யா விட்டால் அவள் உயிரைத் திரும்பப் பெறுவது அரிதாகிவிடும் என்கிறாள் தோழி . இப்பாட்டின் நயம் விரிப்பிற் பெருகும்.(இந்த அடிக்குப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் தரும் உரை மறுபரிசீலனைக்கு உரியது )

மிகைக் கற்பனைகளால்  நயம் நல்கும் முத்தொள்ளாயிரப் பாடலொன்று (26)

                                                                                      கூற்றுங் 

குறியெதிர்ப்பை* கொள்ளும் தகைமைத்தே யெங்கோன் 

எறிகதிர்வேல்மாறன் களிறு 

என்று நிறைகிறது. பாண்டியனின் போர்க்களிற்றைக் கூற்றுவனே இரவல் கேட்பானாம்.

சரி, 

எதற்கு இவையெல்லாம்?

இச்சொல் இதே பொருளில் கொங்கு வட்டாரத்தில் 'குறியாப்பு' என வழங்குவதாகப் பெருமாள் முருகன் தம், கொங்கு வட்டாரச் சொல்லகராதியில் குறிப்பிட்டுள்ளார்.

குறியெதிர்ப்பை கொண்டு திருக்குறள் முதலியவற்றைக் கொங்கு வட்டார நூல் என்று சொல்லி விடலாமா?

(*குறியெதிர்ப்பு + ஐ எனப் பிரித்துப் பிறழவுணர்தல் கூடாது. குறியெதிர்ப்பை என்பது ஒரு சொல் நீர் மைத்து; எனவே தான் இரண்டாம் வேற்றுமைத் தொகைகளில் வருமொழி வல்லெழுத்தாயினும் ஒற்று மிகுவதில்லை)

________________

Perumalmurugan (முகநூலில்):

ஐயா நீங்கள் காட்டியுள்ள மேற்கோள்களை எல்லாம் காட்டிப் பல ஆண்டுகளுக்கு முன் இச்சொல்லைப் பற்றி மட்டும் கட்டுரை எழுதியிருக்கிறேன். எதில் வெளியாயிற்று என்று நினைவில்லை. 

குறியெதிர்ப்பையில் வரும் ஐ இரண்டாம் வேற்றுமை உருபுதான் என வாதிட்டதாகவும் நினைவு. பொதுவழக்குச் சொல் ஒன்று வட்டார வழக்காக மாறி வாழும் என எழுதிய நினைவு. இதைக் கொண்டு வள்ளுவர் கொங்கு நாட்டவர் என்று நிறுவ மறந்து போனேன். அதனால் என்ன, உலகப் பொதுமறை கொடுத்தவர் கொங்கு நாட்டவர் என்று இப்போது சொல்கிறேன்.


வள்ளுவர் காலத்து அந்நியமாதல்

 


பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று(அதிகாரம்:வரைவின் மகளிர், குறள் எண்:913)

ஒரு சார் அறிஞர்கள் , சில சமூகங்களில் இருந்த வழக்கம் காட்டிப் பிணந்தழுவுதலை விளக்கியுள்ளனர். *

'இவை ஒரு வழக்கத்தை உள்ளிட்டுரைத்தது என்பதைக் காட்டிலும் இன்பமின்று என்பதற்குக் காட்டிய இல்லாத நிகழ்ச்சியை உவமித்ததாய் அதன் இழிவை மிகுதிப் படுத்தக் கூறியதுமாகலாம் ' - எனக் கல்குளம் குப்புசாமி முதலியார் செந்தமிழ் இதழில் கட்டுரையொன்றில் விளக்கியிருப்பதாகத் திருக்குறள் உரைக் களஞ்சியத்தில் (மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிப்பு) ச.தண்டபாணி தேசிகர் குறிப்பிட்டுள்ளார்.

முதலியார் 'கூறியதுமாகலாம்' எனப் பிற வாய்ப்புகளை ஐய வாய்பாட்டால் சுட்டிக்காட்டுகிறார். இதுவே ஏற்புடையது. கிடந்தாங்குப் பொருள் கொள்ள வாய்ப்பிருக்கும் போது அரிதான வழக்கமொன்றைத் தேடி இடர்ப்பட வேண்டியதில்லை.

கிடந்தாங்குப் பொருள் கொள்வதில் ஆண் - பெண் உறவு சார்ந்த , ஒழுக்கம் என்பதற்கும் மேலான, மக்கட் பண்பொன்று புலப்படுகிறது.

காசு இருக்கிறது. கணிகை இருக்கிறாள். இவனுக்கு இன்பம்; அவளுக்குப் பொருள்.
ஒழுக்கக்கேடு என்று சொல்லலாம் (அன்றாட நடை முறை ஒழுங்குகளில் வழுவுதலும் ஒழுக்கக் கேடுகள்தாம்);  காசு காலியாகிவிடும் என்று சொல்லலாம். இவை குறைகள்தாம் ; குற்றமென்ன!

பொருட்பெண்டிர் முயக்கம் அறம் சாராதது.

'இன்பமும் பொருளும் அறனு மென்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை ... '   என்பார் தொல்காப்பியர்.

இந்த உறவு, மக்கட் பண்பு சார்ந்த உணர்வுடை மாந்தர்க்குரிய, அறம் சாராதது ; எந்திர மயமானது எனக்  கருதுகிறார்  வள்ளுவர்.



மார்க்சியம் முதலாளியக் கட்டத்தில் உற்பத்தி உறவிலும் உணர்வு நிலையிலும் காணப்பட்ட அந்நியமாதல் பற்றி விளக்கியுள்ளது. வணிகம் மேலோங்கிய கட்டத்தின் ஒரு வகை ' முன்னோடி அந்நியமாதலை ' இத்தகு குறட்பாக்கள் உணர்த்துகின்றன எனலாம்.

இது வள்ளுவ நுட்பம் .

( உடனே ' எல்லாப் பொருளும் இதன்பால் உள' என்று கிளம்பவேண்டாம். புரிதலுக்காகச் சொன்னேன்.வள்ளுவர் அந்நியமாதலைக் கோட்பாடாகக் கூறவில்லை)
__________________

*இருட்டறையில் அயலார் பிணத்தைத் தழுவுதல் என்பதற்கான சுவையான உரைகளிலிருந்து சில:
அறையிற் பிணமாயினும் ஏதிற் பிணமாயினும் அத்தினிச் சாதிப் பெண்டிர் (முரட்டுத் தன்மை நிறைந்த பெண்கள்) சிலர் விருப்பொடு தழுவுதல் கூடும் அதை நீக்குதற்பொருட்டு இருட்டறையில் என்றும், கற்புடைப்பெண்டிர் தம்கணவரிறந்துழி அப்பிணத்தையும் அன்பொடுந்தழுவுதல் உண்டாதலின் அதனை நீக்குதற்கு பொருட்டு 'எதில் பிணம்' என்றும் காட்டிற் பிணம் சிதைவுண்டும் அழுகியும் புழுத்துக் கிடக்குமாதலின் அதனை நீக்குதற்பொருட்டு 'அறையிற் பிணம்' என்றும் சொல்லப்பட்டது (அ சண்முகம் பிள்ளை).
பிணத்தைச் சூழ்ந்து அழும் பெண்களில் உறவினராயின் கட்டித் தழுவி அழுதலும், அல்லராயின் அருவருப்புடன் அழுதலும் மரபாதலின் அயற்பெண்கள் தங்கண்ணால் நோக்காது அழுதலை உளங்கொண்டு கூறியதாம் (இலக்குமணப்போற்றி).
கன்னிப்பெண் இறந்தால் அவள் கன்னிமை கழிப்பதற்காகக் காசு கொடுத்துப்பிணத்தைத் தழுவச் செய்தல் மலை நாட்டு வழக்காதலின் அதனையுட்கொண்டு கூறினது (மு ரா கந்தசாமிக் கவிராயர்).
மலையாள நாட்டில் ஒருவகை மரபில் கன்னிப்பெண் இறந்தால் அவள் பிணத்திற்குத் திருப்பூட்டு புணரச்செய்தல் வழக்கமாதலின் அதனை எண்ணிக் கூறியதாம் (அ மாதவ ஐயர்)
சாவு வீட்டிலே முன்பின் தெரியாத பிணத்தைத் தழுவி சிலர் காசுக்காக ஒப்பாரி வைப்பர். உண்மையில் அவர்களுக்கும், இறந்தவருக்கும், அல்லது அவர் குடும்பத்தினருக்கும் ஒருவித தொடர்பும் இராது. அத்தகையவரைப் போன்றோரே விலைமாதரும் – காசுக்காகக் கட்டிப்பிடித்து முயங்குவர்; அதில் உண்மையான அன்பு இராது.
ஒரு குறிப்பிட்ட வகுப்பினரிடையே, மணமாகாத பெண் இறந்துவிட்டால் அவள் பிணத்தை பேய்த்தன்மையான புணர்ச்சிக்காவது உட்படுத்த வேண்டுமென்பது குலமரபாதலால் கூலிக்காக மணந்து கொண்ட 'கணவன்' அவளைத் தழுவுவது வழக்கமாக இருந்தது; அந்த வழக்கத்தையே 'ஏதில் பிணம் தழீஇ யற்று' என்று வள்ளுவர் குறித்திருக்கிறார் (தேவநேயப்பாவாணர்).
'இருட்டறையில் கல்பிணத்தைக் கட்டி அழுபவற்கு ஒக்கும்' என்றார் (பரிதி). அதாவது ஊறின்பம் கூட பெறமுடியாத கற்பிணத்தை பொருள் கொடுத்துக் கட்டித்தழுவுதல் போல என்பது கருத்து.- http://www.kuralthiran.com/KuralThiran/KuralThiran0913.aspx

Wednesday, July 28, 2021

பனுவலின்பம்

 

பாரதிதாசனும் பார்த்- உம்



தனித்தமைந்த வீட்டிற்புத் தகமும் நானும்

       சையோகம் புரிந்ததொரு வேளை     தன்னில்,

       இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;

       இசைகேட்டேன் !மணம்மோந்தேன் ! சுவைகள் உண்டேன் !

        மனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்

        மகாசோதி யிற் கலந்த தெனது நெஞ்சும்!

        சனித்ததங்கே புத்துணர்வு! புத்த கங்கள்

         தருமுதவி பெரிது!மிகப் பெரிது கண்டீர்!   (புத்தக சாலை)

சையோகம் = கலக்கை, இரு பொருள்களின் கூடல், புணர்ச்சி - எனப் பொருள்கள் தருகிறது சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி (LEXICON)¹. பாரதிதாசன் எப்பொருளில் கையாண்டுள்ளார்? அவர் பாடல்களில் தோய்ந்தவர்கள் 'புணர்ச்சி' என்னும் பொருளில்தான் கையாண்டுள்ளார் என்பதை உணர்வர்.

வாசிப்பை இப்படியா சொல்வது!

அமைப்பியம், குறியியல், பின் அமைப்பியம் முதலியவற்றில் செல்வாக்குச் செலுத்திய ரோலண்ட் பார்த்-திடம் போவோம்.

பனுவலின்பம் ( பிரஞ்சில் Le plaisir du texte ; ஆங்கில மொழிபெயர்ப்பில் The Pleasure of the Text) என்பது  ரோலண்ட் பார்த்-தின் நூல் (1973). அவர்,

பனுவலின் விளைவுகளை , இன்பம் (plaisir - pleasure) , பேரின்பம்/கலவி உச்சம் ( jouissance- bliss\orgasm) - என இரண்டாகப் பகுக்கிறார்.

பனுவலை  படிப்பாளப் பனுவல் / படிப்புறு பனுவல்(texte lisible- readerly text/ readable text)  எழுத்தாளப் பனுவல்/ எழுத்துறு பனுவல்(texte scriptible- writerly text/writable text) என்று வகைப்படுத்துகிறார்.

பனுவலின்பம் படிப்பாளப் பனுவலோடு தொடர்புடையது.

பனுவல் பேரின்பம் எழுத்தாளப் பனுவலோடு தொடர்புடையது; இலக்கிய மரபுகளைத் தகர்த்து படிக்குநரின் தன்னிலை நோக்கை முறித்து வெளியேறச் செய்வது (நன்றி : Wikipedia)

பார்த்து -க்கு முன்பே பாரதிதாசன் பனுவலின்பக் கோட்பாட்டைக் கண்டு விட்டார் என்றோ , பாரதிதாசன் பார்த்-துக்குக் கோட்பாட்டுப் பாதை போட்ட முன்னோடி என்றோ -தாழ்வு மனப்பான்மையால் - வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டியதில்லை.

பிரஞ்சுப் புதுவையில் வாழ்ந்த பாரதி தாசன் பனுவலின்பத்தைக் கலவியின்பமாகக் கண்டிருக்கிறார் என்பது கருத வேண்டியதாகும்.

பழகிய பாரதிதாசன் வழியாகப் புதிய ரோலண்ட் பார்த்-திடம் மாணவர்களை அழைத்துச் செல்வது எளிது என்பது என் ஆசிரியப் 'பனுவல்' .

கொசுறு:பாரதிதாசன் புத்தகத்தைப் பெண்ணாக உருவகித்துச் சையோகம் புரிந்தார்.பெண்ணைப் புத்தகமாக உருவகித்துப் " புத்தம் புதிய புத்தகமே ! உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான் " என்று வாலி பின்னணிப் பாட்டெழுத , 'புரட்சி' த் தலைவர் வெண்திரையில் புரட்டுவது  தலைவரின் வழக்கமான ஆணாதிக்கம்.

------------

1.சையோகசம்பந்தம் caiyōka-campantam , n. < saṃ-yōga +. Conjunction between two objects;

    இரண்டுபொருள்கள் கூடியிருத்தலாகிய சம்பந்தம். (தருக்கசங். 31.)

    சையோகம் caiyōkam , n. < saṃ-yōga. 1. Union, absorption; கலக்கை. 2. See

    சையோகசம்பந்தம். (சி. சி.) 3. Sexual union; புணர்ச்சி. இரவுபக லேழையர்கள்

       சையோக மாயினோம் (தாயு. எங்குநிறை. 9).

      சையோகாட்சரம் caiyōkāṭcaram , n. < id. +. akṣara. Conjunct consonant in Sanskrit. See

      சம்யுக்தாட்சரம். (W.)

       சையோகி-த்தல் caiyōki- , 11 v. intr. < id. 1. To unite, mix; கலத்தல். (யாழ். அக.) 2. To

        copulate; புணர்தல்.

Monday, July 26, 2021

புணரியல்பு

 




புணரியல்பு - 1


         புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
         நட்பாங் கிழமை தரும் (குறள் 785, அதிகாரம்: நட்பு)

சற்றே தட்டிக்கொட்டிச் சிலசொற் பெய்து மொழிப் புணர்ச்சிக்கும் வளைத்துக்கொள்ளலாம்: புணர்ச்சி விதிகைளப் பயில்தல் ( பழகுதல்) வேண்டா; மொழி உணர்ச்சிதான் மொழியோடு நட்புரிமை நல்கும்.

பயிலுதல் வேண்டா எனில் , பயிலவே கூடாது என்பது கருத்தன்று. மொழியை உணர்தல் அதனினும் இன்றியமையாதது என்பதே கருத்து. இலக்கணத்தை நயங் கருதியே பயிலலாம்.

நட்புக் குறித்த வள்ளுவர் கருத்தும் அதுவே.நட்பில் உணர்வு இன்றியமையாதது என அழுத்தம் தருவதே அவர் நோக்கம். பயில்தொறும் பண்புடையாளர் நட்பு நயம் நல்கும் (783) என்ற வள்ளுவர், நட்பில் பயிலுதற்குரிய இடத்தை மறுப்பாரோ?

சரி.

இத்தொடருக்காக¶ இலக்கணக் கொத்து & உரையாசிரியராகிய சாமிநாத தேசிகரின் அவையடக்கத்தை - அவர் புலமையின் ஒரு தூசுக்கும் ஈடாகாத - நான் அப்படியே இரவல் வாங்கிக்  கொள்கிறேன் (தேசிகர் மன்னிப்பாராக!). அவையடக்கத்தைப் பொறுமையாகப் படித்தால் வியந்து சுவைக்கலாம். விட்டு விடவும் செய்யலாம்.

"பத்தொடு ஒன்பது பாடை நூல்களுள்
மாறு படுதல் வழக்கே, அன்றியும்
ஒவ்வொரு பாடையின் உள்ளே ஓரின்
பலநூல் மாறு படுமே அன்றியும்
ஒவ்வொரு நூற்கடல் உள்ளே ஓரின்
எழுத்துச் சொல்பொருள் யாப்புஅணி ஐந்தனுள்
ஒன்றனை ஒன்றே ஒழிக்கும்,அன்றியும்
ஓர்அதி காரத்து உள்ளே ஓரின்
ஓர்இயல் விதியினை ஓர்இயல் ஒழிக்கும்
ஓர்இயல் அதனின் உள்ளே ஓரின்
ஒருசூத் திரவிதி ஒருசூத் திரவிதி
தன்னைத் தடுத்துத் தள்ளும்,அன்றியும்
ஒருசூத் திரத்தின் உள்ளே ஓரின்
ஒருவிதி அதனை ஒருவிதி ஒழிக்கும்,
நூல்ஆ சிரியர் கருத்தினை நோக்காது
ஒருசூத் திரத்திற்கு ஒவ்வொர்ஆ சிரியர்
ஒவ்வொரு மதமாய் உரைஉரைக் குவரே,
அவ்வுரை யதனுள் அடுத்தவா சகங்கட்கு
அவர்கருத்து அறியாது அவர்அவர் கருத்தினுள்
கொண்ட பொருள்படப் பொருள்கூ றுவரே,
ஒருவிதி தனக்கே பலபெயர் வருமே,
ஒருபெயர் தனக்கே பலவிதி வருமே,
நூல்உரை போதகா சிரியர் மூவரும்
முக்குண வசத்தான் முறைமறந்து அறைவரே,
இம்முறை எல்லாம் எவர்பகுத்து அறியினும்
அவத்தை வசத்தால் அலைகுவர் திடனே,
அதிமதி நுட்பமோடு அதிகலை கற்பினும்
விதியது வசத்தால் விதிவிலக்கு அயர்ப்பாம்,
ஆகையால் அளவிடல் அரிதே, அன்றியும்
சொல்லின் கூட்டமும் பொருளின் கூட்டமும்
அவ்விரண் டனையும் அளவிடப் படாவே,
இந்நால் வகையினுள் என்னால் இயன்றது
சிறப்பாய் உள்ளன சிலதே டினன், அவை
மறப்பு என்னும் பகைவன் வாரிக் கொண்டனன்,
அவன்கையில் அகப்படாது அடங்கின வற்றுளும்
சிறிதினைச் சிறியேன் சிறிது சிறார்தமக்கு
உரைத்தனன்; அன்றிஈது ஒருநூல் அன்றே"

                              ***

இடக்குமடக்கான ஐயங்களை எழுப்புக.
மிகுதிக்கண் மேற்சென் றிடித்திடுக.

புணரியல்பு 1 இன் எதிர்வினை ௧

பேராசிரியர் மு.முத்துவேலு(Muthu Velu ) அவர்கள்  ' சாமிநாத தேசிகரின் இலக்கணக்கணக் கொத்தில் ஐந்து எழுத்தால் ஒரு பாடை என்று அறையவும் நாணவர் அறிவுடையோரே  என்ற   அவரது கூற்றை எப்படிப் பார்ப்பது ?' என்று வினவியுள்ளார்கள்.

ஒரே வாக்கியத்தில் சொல்வதெனில் , சாமிநாத தேசிகர் கூற்று மொழிகளின் - குறிப்பாக எழுத்துகளின்- இயல்பை உணராத மூடத்தனத்தின் வெளிப்பாடு. அவர் காலச்சூழல் அப்படி.
ஆனால், அவரது புலமையைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை.

களப்பிரர், பல்லவர் காலங்களிலிருந்தே - பொதுக் காலம் [கி.பி.] ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே -  தமிழகத்தில் அரசியல், சமய ஆதிக்க மொழிகளாகப் பாகத(பிராகிருத), சங்கத(சமற்கிருத ) மொழிகள் தலையெடுத்துவிட்டன. பொதுக் காலம் 11 ஆம் நூற்றாண்டில் யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் வடநூல் வழித் தமிழாசிரியர் என ஒரு பிரிவினரைச் சுட்டு மளவுக்குத் தமிழ்ப் பயில்வில் சங்கதம் செல்வாக்குப் பெற்றுவிட்டது. அதே நூற்றாண்டில் வடநூல் வழித் தமிழ் இலக்கணமாக வீரசோழியம் எழுந்தது.

தொடர்ந்தும் வடமொழி மேலாதிக்கம் குன்றாமல் தொடர்ந்ததன் விளைவுகள் பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து முதலியன. இவற்றின் வரலாற்றுப் பின்புலம், கோட்பாட்டு அடிப்படை முதலியவற்றைப் பேராசிரியர் சு.இராசாராம் (இலக்கணவியல் - மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்) நிதானமாக ஆய்ந்தெழுதியுள்ளார்.

எல்லீசனார் (F.W.Ellis) தென்னிந்திய மொழிகள் தனிக்குடும்பம் சார்த்தவை; வடமொழியின் வேறானவை எனச் சான்றுகளுடன் முன்மொழிந்து (1816) இரு நூறாண்டுகளாகிவிட்டன. கால்டுவெல் அந்தக் குடும்ப மொழிகளை ஒப்பிலக்கண நோக்கில் மிக விரிவாக ஆராய்ந்து நிறுவி (1856) நூற்றைம்பது ஆண்டுகளாகிவிட்டன. இருநூறாண்டுகளுக்கு மேலான திராவிட மொழிக்குடும்ப ஆய்வுகள் கால்டுவெல்லைப் பன்மடங்கு கடந்து சென்று திராவிட மொழிக்குடும்ப இருப்பை ஐயந்திரிபற நிறுவிவிட்டன.

ஆனால், இருபத்தோராம் நூற்றாண்டின் இருபதுகளிலும் சங்கதமே (சமற்கிருதமே) உலக மொழிகளின் தாய் எனப் பார  தீய 'பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையம் ' சொல்கிறது. சங்கதத்திற்கு மக்களாட்சி வரிப்பணம் கொட்டிக்கொடுக்கப்படுகிறது. இந்திய அறிஞர்களை விடுங்கள் தமிழக அறிஞர்தாமும் இதற்கு எதிராக , வன்மையாகக் கூட வேண்டாம், அறிவியல் அடிப்படையிலான உண்மையாகவாவது சொல்லலாம். ஆனால் சொல்லவில்லை.

மறுபுறம் , இழந்த ஆதிக்கத்தை மீட்டு நிலைநாட்டப் பிழைப்புவாத 'அறிஞர் ' கள் புறப்பட்டுவிட்டனர்.

பாவம் பதினேழாம் நூற்றாண்டுத் தேசிகர் !

----------------------------------------------------------------------------------

பேரா. முனைவர் மருதூர் அரங்கராசன் அவர்கள் கருத்து:

ஒலியன் (phoneme) பற்றிய அடிப்படைப் புரிதல் இல்லை.

ஒரே ஒலியன்கள் பலமொழிகளிலும் வழங்கும் என்ற
தெளிவு இல்லை.

சம்ஸ்கிருதமொழியைத் தேவபாஷை என்று நம்பிவிட்டார்.

சம்ஸ்கிருதத்தில் இல்லாமல்,
தமிழில் உள்ள ஒலியன்களான
எ,ஒ,ழ,ற,ன -
என்னும் ஐந்து மட்டுமே தமிழுக்குரியதாகக் கருதிவிட்டார்.

சம்ஸ்கிருத இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழுக்கு இலக்கணம் படைக்க முன்வந்த நூல்களுள் குறிப்பிடத்தக்கவை:
வீரசோழியம்,
இலக்கணக்கொத்து,
பிரயோகவிவேகம்,
குவலயானந்தம்,
ஆரணச்சைலர்
அலங்கார பஞ்சகம்,
அரங்கரலங்கார மாலை ......

எனவேதான்,
சாமிநாத தேசிகர்,

"ஐந்தெழுத்தால்
ஒரு பாடை என்று
அறையவே நாணுவர்
அறிவுடை யோரே!"

என்று பாயிரத்தில் அறியாமையால் குறிப்பிட்டுவிட்டார். இதைத்தான்

"தமிழ்நாட்டுப்
பருப்பையும் நெய்யையும் சாப்பிட்டுவிட்டு,
தமிழின் சிறப்பைக்
குறைத்துக்கூற
இவருக்கு
எப்படி மனம் வந்தது?"

என்று கேட்கிறார்
அறிஞர் மு.வ.

இலக்கணக்கொத்து தந்த ஒரே நன்கொடை:

சம்ஸ்கிருத இலக்கணக் கலைச்சொற்களுக்குத் தூயதமிழில் கலைச்சொற்களை உருவாக்கியமை.

புணரியல்பு - 2

௧.  நிறுத்த சொல் , ௨. நிறுத்தச் சொல்

எது சரி?

இரண்டும் சரிதான்.

ஆனால் பொருள் வேறு.  ஒன்றைக் குறிக்க மற்றொன்றைப் பயன்படுத்தினால் பிழையாகிவிடும்.

'நிறுத்த சொல்' என்பது வழக்கற்றுப்போய்விட்டது. ஆனால் அது தொல்காப்பியப் புகழ்வாய்ந்தது.

௧.நிறுத்த சொல் = நிறுத்திய சொல் ( நிறுத்த - செய்த என்னும் வாய்பாட்டில் அமைந்த, பெயரெச்ச வினை. சொல் - பெயர்ச்சொல்)

௨.நிறுத்தச் சொல் = நிறுத்துமாறு சொல் (நிறுத்த - செய என்னும் வாய்பாட்டில் அமைந்த, வினையெச்ச வினை. சொல் - வினைச்சொல்)

                /பெயரெச்சம்
நிறுத்த
               \வினையெச்சம்
              

             / பெயர்ச்சொல்
சொல்
             \ வினைச்சொல்

நம் காலத்தில் நிறுத்த என்னும் வினையெச்சம் மட்டுமே புழக்கத்தில் உள்ளது.

நிறுத்த சொல், குறித்துவரு கிளவி என்னும் தொல்காப்பியக் கலைச்சொற்களை  முறையே நிலைமொழி, வருமொழி என்பது பெருவழக்காகிவிட்டது.

கொஞ்சம் தொல்காப்பியம் (இரண்டாம் பகுதியிலேயே பாட நூல் பாதைக்குத் திரும்பிவிட்டது. தவிர்க்க முடியவில்லை. சலிப்பூட்டலாம்தான். வேண்டாம் என்பவர்கள் அறுவைக் கோட்டுக்கு 🔪அப்பால் தொடரலாம்).

🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪

உயிர் இறு சொல் முன் உயிர் வரு வழியும்,
உயிர் இறு சொல் முன் மெய் வரு வழியும்,
மெய் இறு சொல் முன் உயிர் வரு வழியும்,
மெய் இறு சொல் முன் மெய் வரு வழியும், என்று
இவ் என அறியக் கிளக்கும் காலை-
நிறுத்த சொல்லே, குறித்து வரு கிளவி, என்று
ஆயீர் இயல-புணர் நிலைச் சுட்டே (புணரியல் 5)

என்னும் , எழுத்து அடிப்படையிலான புணரியல் நூற்பாவுக்குத் தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகையுரையாசிரியர் ச.பாலசுந்தரம் அவர்கள் தரும் உரைவிளக்கம்:

"புணர்ச்சி என்பது நின்ற சொல்லின் ஈற்றெழுத்தும் அதன்   எதிர்வரும்சொல்லின்     முதலெழுத்தும்      இயையும்     நிலைமைத்தெனினும்,நிறுத்த சொல்லின்     திணைபால்வகை    முதலியவற்றானும்     குறித்து
வருகிளவியின் திணைபால் வகை முதலியவற்றானும்  அல்வழி,  வேற்றுமைஎன்னும் பொருள் நோக்கினானும், அவை இயல்பும் திரிபுமாகிய நிலைகளை
எய்துதலான், புணர்ச்சி இலக்கணம் சொற்களை அடிப்படையாகக் கொண்டே நிகழும் என்பதனை உணர்த்த 'நிறுத்த சொல்லே குறித்து வருகிளவி என்று
ஆயீ ரியல ' என்றார்

" ஒருவர்    ஒருகருத்தைத்    தொடர்மொழியாற்     கூறமுற்படுங்கால் அடுத்தடுத்து   வரும்   சொல்லின்  பொருள்நிலைக்கேற்ப முதற்சொல்லை
அமைத்துக் கூறுவராதலின் நின்றசொல் என்னாது ‘‘நிறுத்தசொல்’’ என்றும், அவ்வாற்றானே எதிர்வரும் சொல்லையும்   குறித்து வருகிளவி  என்றும்
குறியீடு   செய்தார்.   இக்குறியீடுகளின்   நுண்மையை       இடைக்காலஇலக்கணநூலார் ஓராராயினர்"
                                      ___________
                                     
நிறுத்த சொல், குறித்து வருகிளவி என்பன நுட்பமானவை எனினும் கையாள எளிதாயிருப்பதால் நிலைமொழி, வருமொழி என்னும் வழக்கு நிலைத்துவிட்டது.  அது, இயல்பானது; சரியானது. மேலும்,

அ, ஆ,  உ, ஊ,  ஏ, ஒள என்னும்
அப்பால் ஆறன் நிலைமொழி முன்னர்,
வேற்றுமை உருபிற்கு இன்னே சாரியை.

எனத் தொல்காப்பியத்திலேயே உருபியல் முதல் நூற்பா வில் ' நிலைமொழி ' என்பது ஆளப்பட்டுள்ளது ( ஆராய்ச்சிக் காண்டிகையுரையாசிரியர் பாலசுந்தரம் கவனத்திற்கு வந்திருந்தால், ௸  நூற்பாவின் இரண்டாமடியை, ' அப்பால் ஆறன் நிறுத்த சொல்முன் ' என்று மாற்றிக்,  கொண்டிருப்பார்😀) நிற்க.

அவற்றுள்,
நிறுத்த சொல்லின் ஈறு ஆகு எழுத்தொடு
குறித்து வரு கிளவி முதல் எழுத்து இயைய,
பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்,
பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும்,
தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும்,
தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும்,
மூன்றே திரிபு இடன், ஒன்றே இயல்பு என
ஆங்கு அந் நான்கே-மொழி புணர் இயல்பே(புணரியல் 6)

அவைதாம்,
மெய் பிறிது ஆதல், மிகுதல், குன்றல், என்று
இவ்' என மொழிப-திரியும் ஆறே (புணரியல் 7)

வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும்,
வேற்றுமை-அல்வழிப் புணர்மொழி நிலையும்,-
எழுத்தே சாரியை ஆயிரு பண்பின்,
ஒழுக்கல் வலிய-புணரும் காலை(புணரியல் 10)

என்னும் இவை புணர்ச்சியின் பொருள் அடிப்படைகளை வரையறுக்கிறது.

🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪

                                               ௧
நிலை, வருமொழிகளின் ஈறும் முதலுமாகிய உயிர், மெய்
(1)ஒலிகள் மட்டுமன்றிப் (புணரியல் 5)
(2)பொருளும் புணர்ச்சிக்கு இன்றியமையாதது என்று தொல்காப்பியம் தெளிவுபடுத்துகிறது (புணரியல் 6, 7, 10)

                                                 ௨
தொல்காப்பியம் அகப் புணர்ச்சியை(Internal sandhi), அதாவது ஒரு சொல்லின் உள்ளுறுப்புகள் சேர்வது பற்றிய பகுபத உறுப்பிலக்கணத்தைக் கருதவில்லை (இது பற்றிப் பிறகு பார்ப்போம்).

தொடரியல் நோக்கிலான புறப்புணர்ச்சியையும்(External sandhi) அதற்கு இன்றியமையாதனவற்றையுமே அது பெரிதும் விவரிக்கிறது.

மீண்டும் நிறுத்த + சொல்.
எழுத்து/ ஒலி அடிப்படை மட்டும் புணர்ச்சிக்கு அடிப்படையாயிருந்தால் நிறுத்த சொல் என்றோ,
நிறுத்தச் சொல் என்றோ இரண்டில் ஒன்று மட்டுமே அமைந்திருக்கும்.
ஆனால்,
இரண்டும் வெவ்வேறு பொருள் கொண்ட தொடர்கள்.
அவற்றை நாம் மேலே பார்த்தோம்.

இயல்பு புணர்ச்சி
நிறுத்த ( நிலைமொழி)+ சொல் (வருமொழி) =நிறுத்த சொல் (எந்த மாறுதலும் இன்றி இரண்டும் இயல்பாக அமைந்துள்ளன) இதனை இயல்பு புணர்ச்சி என்பர்.

திரிபு புணர்ச்சி
நிறுத்த+சொல்=நிறுத்தச் சொல் - மிகுதல்¹ (நிலைமொழி வருமொழிகளுக்கிடையில் - ச் - என்பது புதிதாக மிகுகிறது  )

தொழில் + சாலை = தொழிற்சாலை     - மெய் பிறிதாதல்² ( நிலைமொழியின் இறுதியில் உள்ள ல் - என்னும் மெய் , ற் - என்னும் பிறிதொரு (மற்றொரு) மெய்யாகியிருக்கிறது)

மாநிலம்+ வருவாய்= மாநில வருவாய் - குன்றல்³ (நிலைமொழி இறுதியில் உள்ள - ம் மறைந்துவிட்டது)

தமிழிலக்கணக் கல்வியில்  நன்னூல் செல்வாக்குச் செலுத்துவதாலும் சுருக்கம் கருதியும் ௸ மூன்றையும் 1.தோன்றல், 2. திரிதல், 3. கெடுதல் என்பது பயிற்சியில் உள்ளது
கலைச்சொற்களும் சலிப்பூட்டுபவைதாம். அதிலும், ஒன்றைக் குறிக்க வெவ்வேறு சொற்கள் என்றால் மாறிமாறித் தலைசுற்றும். இப்போதைக்கு வெறுமனே தெரிந்துகொள்வோம். மல்லுக்கட்ட வேண்டாம்.

இந்தப் பகுதியை முடிப்பதற்கு முன் ...

நிறுத்த சொல் - என இயல்பாக இணைந்தால் ஒரு பொருள்; ஒருவகைத் தொடர்.

நிறுத்தச் சொல் - எனத் திரிந்து இணைந்தால் வேறு பொருள்; வேறு வகைத் தொடர்.

அப்படித்தானே?

ஒரு புதிர்: பத்துமணி+செய்திகள் = பத்துமணிச்செய்திகள் - என்றால் என்ன பொருள்?

புணரியல்பு 3

பத்துமணிச் செய்திகள்

இத்தொடரில் பத்து, மணி, செய்திகள் ஆகிய மூன்று சொற்கள் உள்ளன.

௧.பத்து மணி  செய்திகள்
     I            I                l  
     ------------                l         
              I                    l   
              ------------------

௨. பத்து  மணி செய்திகள்
           I          I              I
           I            ------------
           |                  |
            ---------------                   
          
௧. பத்துமணிக்குரிய செய்திகள் (பத்துமணிக்கு ஒலி / ஒளி பரப்பாகும் செய்திகள். இது வேற்றுமைத் தொடர்)

௨. பத்து   மணியான / மணி போன்ற செய்திகள்
(மணியான செய்திகள் எனில் மணி பெயரடை .
மணி போன்ற செய்திகள் எனில் மணி உவமை.
இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
இரண்டும் பொதுவாக 'முக்கியமான' / 'சிறந்த' (செய்திகள்)
என்பதையே குறிக்கின்றன. நுட்ப வேறுபாடு விடுத்து வசதி கருதி அடைத்தொடர் என்றே கொள்வோம். இது, அல்வழித் தொடர்)

வலி மிகல், மிகாமைகளால் இவற்றின் பொருளை வேறுபடுத்த இயலாது.
அப்படி வேறுபடுத்தலாம் என்று சிலர் சொல்லக் கேட்டதுண்டு.

இரண்டு தொடர்களிலும் மரபிலக்கணப்படி
மணிச் செய்திகள் என்றே வலி மிகுதல் வேண்டும்.

ஆராய்ச்சிக் குறிப்புகளுடன், கொஞ்சம் இலக்கணம் பார்ப்போம். அறிமுகம்தான்.  வேண்டாம் என்போர் அறுவைக் கோட்டைத் 🔪 தாண்டித்தொடரலாம்.

🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪

1.முருகன் காப்பான் (தமிழை என்னிடமிருந்து😀) -எழுவாய்த் தொடர்/முதலாம் வேற்றுமை
8.முருகா! காப்பாற்று(                            ௸                  ) - விளித் தொடர்/எட்டாம் வேற்றுமை
இவ்விரண்டும் வேற்றுமைகள்தாம் என்றாலும், புணர்ச்சி இலக்கணப்படி (வேற்றுமை அல்லாத) அல்வழித் தொடர்கள் எனப்படும். பின் வரும் வேற்றுமைத்தொடர்கள் அல்லாத வேறு பலவும் அல்வழித் தொடர்கள் எனப்படும். நன்னூல் அவை 14 என்று வரிசைப்படுத்தும்.

2.முருகனைக் கண்டேன் (முருகன்+ஐ)                       - இரண்டாம் வேற்றுமை                                
3. முருகனொடு வந்தவள்ளி (முருகன் + ஒடு)          - மூன்றாம் வேற்றுமை
4. முருகனுக்குப் படையல் (முருகன் + கு)                  - நான்காம் வேற்றுமை
5. முருகனின் (முருகனை விட) அழகன் இல்லை    - ஐந்தாம் வேற்றுமை
                                                          (முருகன் + இன்)
6. முருகனது திருமலை(முருகன் + அது)                    - ஆறாம் வேற்றுமை
7. முருகனிடம் ஆசை வைத்தேன் (முருகன் + இடம்) - ஏழாம் வேற்றுமை

  ஐ, ஒடு,கு, இன், அது, கண் ஆகியன வேற்றுமை உருபுகள். முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை (எடுத்துக்காட்டில் இடம் என உள்ளதும் ஏழாம் வேற்றுமை உருபுதான்)
தமிழ் மரபில் எழுவாய்க்கு உருபு இல்லை. முருகன் ஆனவன், முருகன் ஆகப்பட்டவன் என்பன போன்றவை பிற்காலத்தன; வடமொழிச் செல்வாக்கின் விளைவாகலாம். உருபு இல்லா முதல் வேற்றுமையில் வேற்றுமைத்தன்மை என்ன இருக்கிறது?

பெயர்ச் சொல்லாயினும் , ஒரு தொடரின் பயனிலைக்குரியதாகத் தோன்றி நிற்கும் போதுதான்  முருகன் எழுவாய். அதனால்தான் தொல்காப்பியம்,

"எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே" ( வேற்றுமையியல் 4) என்கிறது.

"அஃதேல், பெயர் என அமையும், தோன்றும் நிலை என்றதனான் பயன் என்னை எனின், பெயர் கண்டுழி எல்லாம் வேற்றுமை என்று கொள்ளற்க என்பது அறிவித்தற்கு எனக் கொள்க" எனத் தெளிவுபடுத்துவார் தெய்வச்சிலையார்.

எழு(தல்) + வாய் = எழுவாய் . இங்கு '-வாய்' என்பது ஒருவகைத் தொழிற்பெயர் விகுதி.
கழு(வுதல்) + வாய் = கழுவாய், இறு(தல்) + வாய் = இறுவாய், தோற்று (தல்) + வாய் = தோற்றுவாய் முதலியன காண்க.

எட்டே வேற்றுமை என்பது மரபு. இது, அறிமுகம்தான். இவற்றில் வேறு பல விவகாரங்கள் உள்ளன. ஒரு விவகாரம் இங்கேயே இருக்கிறது.

பத்துமணிச் செய்திகள்- பத்துமணிக்கு உரிய செய்திகள் / பத்துமணிக்கு ஒலி/ஒளி பரப்பாகும் செய்திகள் என்று குறிப்பிட்டிருந்தேன்.  - கு என்பது நான்காம் வேற்றுமை உருபு.  பத்துமணிக்கு ஒலி/ஒளிபரப்பும் பொருட்டுத்தொகுக்கப்படும் செய்திகள் எனில்,

"அதற்குவினை யுடைமையின் அதற்குடம் படுதலின்
அதற்குப்படு பொருளின் அதுவாகு கிளவியின்
அதற்கியாப் புடைமையின் அதற்பொருட் டாதலின்
நட்பிற் பகையிற் காதலிற் சிறப்பினென்
றன்ன பிறவும் அதன்பால என்மனார்" ( வேற்றுமையியல்12)

என்னும் நான்காம் வேற்றுமைப் பொருள்களுள் அதற் பொருட்டு என்பதில் அடங்கும்.

ஆனால், இத்தொடரை ஏழாம் வேற்றுமைத்தொடர் என்றும் சொல்லலாம். பத்துமணியின் கண் - பத்துமணி என்கிற நேரத்தில்- ஒலி/ஒளிபரப்பப்படும் செய்தி என்று கொண்டால்,

"ஏழாகுவதே,
கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே "
                                              (வேற்றுமையியல் 15)
என்னும் நூற்பா காலத்தின் என்பதனால் அது, ஏழாம் வேற்றுமைத் தொடராகும்.

                                                           *******************

வேற்றுமைத் தொடரில் இகர இறுதிப் பெயர்ச் சொல்(மணி=  ம் +அ+ண் + இ) வல்லெழுத்தை முதலாகவுடைய சொல்லோடு (ச் + எ +ய்+த்+ இ) புணரும்போது வல்லெழுத்து மிகும் என்பது விதி (- இ+ச்- > - இ+ச் +ச்-).

"இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே "(தொல். உயிர் மயங்கியல் 33)

இகர ஐகார ஈற்றுச் சொற்கள் அல்வழியில் இயல்பாகவும், மிகுந்தும், இரண்டும் உறழ்ந்தும் புணரும் என்கிறது விதி (தொல்.தொகைமரபு 16).

" எழுவாய்த் தொடர்கள் பெரும்பான்மையும் இயல்பாயும் [மணி பெரியது]¹சிறுபான்மை உறழ்ந்தும் [கிளி குறிது√, கிளிக் குறிது√]² வரும். உவமத்தொகை[மணிச் செய்திகள்- ௨]³ , இரு பெயரொட்டுப்பண்புத்தொகை [மார்கழித் திங்கள் ]⁴ இவை பெரும்பான்மையும் மிக்கு வரும் " என்று தெளிவுபடுத்துகிறார் தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகையுரையாசிரியர் ச.பாலசுந்தரம்.

1,3,4- நான் தந்த எடுத்துக்காட்டுகள்
2- இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் தந்தவை. கிளிக் குறிது என எழுவாய்த்தொடரில் வலி மிகுதல் தமிழ் இயல்பிற்கு மாறானது. 'இரண்டும் சரி' என்னும் உறழ்ச்சி பற்றி ஆராய வேண்டும்; ஆராய்ந்திருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪

'பத்துமணிச் செய்திகள்' போலப் புணர்ச்சியில் ஒத்திருந்து பொருள் வேறுபட்டால் உணர்வது எப்படி?

அதையும் தொல்காப்பியம் சொல்லியிருக்கிறது

புணரியல்பு 4

ஊக்கமது கைவிடேல்

ஒளவையாரின்.,"ஊக்கமது கைவிடேல் " என்பதற்கு 'ஊக்கத்தைக் கைவிட்டுவிடாதே' என்பது
பொருள். ஊக்கம் + அது + கைவிடேல் என்று பிரிக்கலாம். கைவிடேல் என்பது (எதிர்மறை) வியங்கோள். 'அது' என்பது ஓசை நிறைப்பதற்காக நிற்கிறதெனினும், ஊக்கமாகிய அதனைக் கைவிடாதே என்று கொள்வதில் தவறில்லை. இது, நல்ல அறிவுரைதானே!

"நான் நாள் தோறும் ஒளவையார் வாக்கைக் கடைப்பிடிக்கிறேன். ஆம். ஒளவையார் 'ஊக்க  மது கைவிடேல்' என்றாரே! " என்றாராம் மதுப்'பிரியர்' ஒருவர் .

                                               ஊக்கம் + அதுகைவிடேல்
                                               /
ஊக்கமது கைவிடேல்
                                              \
                                                ஊக்க + மது கைவிடேல்

திருமுருக கிருபானந்தவாரியார்  நல்ல அறவுரைகளை அல்லனவாகப் பொருள் கொள்வோர் பற்றிச் சொல்லும்போது இவ்வாறு வேடிக்கையாகக் குறிப்பிடுவார்.

 

செம்பொன்பதின்றொடி¹
குன்றேறாமா²

1. செம்பொன் +பதின் தொடி,     செம்பு     +ஒன்பதின் தொடி
2. குன்று + ஏறு + ஆமா,  குன்று + ஏறா+ மா

இவையெல்லாம் பிரிமொழிச் சிலேடைத் தொடர்கள். இத்தொடர்களிலுள்ள  சொற்களைப் பிரிப்பதற்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வரும்.

1.1.செம்பொன்பதின்றொடி என்பதை ,
செம்பொன் (தங்கம்)  பதின் ( பத்துத்) தொடி ( எடையளவு)= தங்கம் பத்துத் தொடி
1.2.செம்பு ஒன்பதின் (ஒன்பது) தொடி= செம்பு ஒன்பது தொடி என இரு பொருள்படப் பிரிக்கலாம்.

2.1.குன்று  ஏறு  ஆமா =குன்றில் ஏறும் காட்டுப்பசு
2.2.குன்று  ஏறா மா =குன்றில் ஏறாத விலங்கு என இரு பொருள் படப்பிரிக்கலாம்.

சரி. இவை ஏன் இங்கு ?

மேலே கொடுத்துள்ள எடுத்துக்காட்டுகள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர் உரைகளிலிருந்து எடுத்தவை. எதற்குரிய எடுத்துக்காட்டுகள் இவை?

" எழுத்து ஓரன்ன பொருள்தெரி புணர்ச்சி
  இசையின்  திரிதல் நிலைஇய பண்பே "
                                              (புணரியல்  39 )
" எழுத்து ஒரு தன்மையான, பொருள்விளங்க நிற்கும் புணர்மொழிகள் ஓசைவேற்றுமையான் புணர்ச்சி வேறுபடுதல் நிலைபெற்ற பண்பு" என்பார் இளம்பூரணர். நச்சினார்க்கினியரும் ஏறத்தாழ இவ்வாறே உரைப்பார்.

நூற்பாவில் புணர்ச்சி என்னும் சொல் உள்ளது ; புணர்மொழிகள் என்பது வெளிப்பட இடம்பெறவில்லை. உரையாசிரியர் இருவரும் 'புணர் மொழிகள்' (பூரணர்)/பொருள் மொழிகள் (நச்சர்)என்பதை எவ்வாறு கொண்டனர் என்பது விளங்கவில்லை.

எழுத்து முழுதொத்த, பொருள் வேறுபட்ட,  புணர்ச்சி ஓசையால் திரிதல் நிலைத்த பண்பு  - என நூற்பாக் கிடந்தாங்குச் சொல்லுக்குச் சொல்பொருள் காணலாம்.

இதற்குப் பிரிமொழிச் சிலேடைகளை மட்டுமே எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டியதில்லை.

பத்துமணிச்செய்திகள்- போன்றவையும் எடுத்துக் காட்டுகள்தாம்.

சொற்களை இடம்விட்டு எழுதுவதன் மூலம், தொல்காப்பியர் கூறும் இசைத் திரிபை எழுத்தில் காட்டலாம்.

பத்துமணிச்   செய்திகள் (பத்துமணிக்குரிய...)
பத்து  மணிச்செய்திகள் (பத்து மணியான...)

இத் தொடர்களில் 'மணி' என்பது எழுத்தால் முழுதொத்த, ஆனால் வெவ்வேறு பொருள்தரும் சொல்லாகும். அகராதியில் இருவேறு சொற்களாகவே பதிவுறும். சொற்பொருள் வேறுபாடு காரணமாகவே இரு தொடர்களிலும் பொருள் வேறுபடுகிறது.

மற்றொரு தொடரைப் பார்ப்போம்.

பழைய புத்தகக் கடை-  இது, ஒரு மயங்குநிலைத் (ambiguous) தொடர். இதில் எந்தச் சொல்லும் இருவேறு பொருள் குறிக்காத நிலையிலும், தொடராகும்போது இருவேறு பொருள் தருகின்றன. இடம்விட்டு எழுதுவதன் மூலம் இத்தகு தொடர்களின் பொருள் வேறுபாட்டையும் காட்டலாம்.

௧.பழைய   புத்தகக்கடை (பழமையான  புத்தகக்கடை)
௨.பழையபுத்தகக்  கடை (பழைய புத்தகங்கள் விற்கும் கடை)

அண்மையுறுப்புப் பகுப்பாய்வு (Immediate Constituent Analysis) முறையில் பின் வருமாறு இரு தொடர்களையும்
அமைத்துக்  காட்டலாம்.

௧.பழைய புத்தகக்கடை
        |            |             |
        |            ------|-----
        -----------------|

௨.பழைய புத்தகக்  கடை
         |           |                 |
           --------                  |
                 |------------------           

சரி. முடிவுக்கு வருவோம்.

புணர்ச்சி வேறுபாடுகளால் மட்டுமே பொருள் வேறுபாடுகளைக் காட்ட இயலாது.

எனவேதான்,புணரியல்பை உணராமலோ, பொருட்படுத்தாமலோ நேரும் புணர்ச்சிப் பிழைகள் பெரும்பாலும் பொருளைப் புரிந்துகொள்வதற்கு இடையூறாக இருப்பதில்லை.




29.05.2020 இந்து தமிழ்[த்]திசை யின் திருச்சிப் பதிப்பில் முதற்பக்க முக்கியச்செய்தித் தலைப்பிலேயே மிக வேண்டிய இடத்தில் வலி மிகவில்லை. ஆனால், செய்திப்பத்தியில் அதே தொடர் பிழையின்றி அமைந்துள்ளது. முதல் களத்தில் (column) மட்டும் எட்டு இடங்களில் வலிமிகாப் பிழைகள் காணப்படுகின்றன. ஏடு நடந்துகொண்டுதானே இருக்கிறது!

கோவிட் 19 அச்சுறுத்திக்கொண்டிருக்கும்போதே பொறுப்பின்றி நடந்துகொள்ளும் நாம் , உடல் துன்பத்திற்கோ உயிர் இறுதிக்கோ காரணமாகாத மொழியிடம் பொறுப்பாக நடந்துகொள்வோமா ? நடந்துகொள்ள வேண்டுமா என்ன!

புணரியல்பு 4 இன் எதிர்வினை ௧

இது, இலக்கண ஈடுபாட்டாளர்களுக்கு மட்டும் உரியது. இவ்விடுகை முழுதும் அறுவைக்🔪 கோட்டுள் அடங்குவதாதலின் தனித்துப் பிரித்துக்காட்டப்படவில்லை.

புணரியல்பு 4 இல் நான் எழுதிய ஒன்று பற்றிப் பேராசிரியர் சத்தியநாராயணன் (Sathya Narayanan) எதிர்வினையாற்றியுள்ளார்:

பழைய புத்தகக் கடை, பத்து மணிச் செய்திகள் ஆகியவற்றிற்கும் செம்பொன்பதின்றொடிக்கும் வேறுபாடு உள்ளதே. ஒலியழுத்தம் நுவன்முறையால் வேறுபடலாம்.
ஆனால் பழைய (1) புத்தகம் (2) கடை (3) ஆகியன முழுவடிவச் சொற்கள். அவற்றை முற் சொல்லுடனோ பிற்சொல்லுடனோ இயைத்துக் கூறுதலில் பொருள் வேறுபடும். மொழியியல் கூறும் மயக்கத் தொடர்கள். 

ஆனால் செம்பொன்பதின்றொடி அவ்வாறன்றே. செம்பு என்றும் செம்பொன் என்றும் ஒன்பதின் என்றும் பதின் என்றும் வேறுபடுமே;புணர்ச்சியுற்ற தொடரைப் பிரித்திசைக்கும் விதத்தில்தான் சொல் எதுவென்றே புலனாகும்.

பொன்னாழி> பொன்+ ஆழி பொன்+ நாழி என்பன போல் வேறுபடும்.  
எழுத்தோரன்ன என்று தொடங்கும் நூற்பா தோற்றத்தால் ஒரு வடிவின என்று சொல்லும்போதும் இசையில் திரிதல் என்பது கருத்துணர்த்தலில் நேரும் ஒலியழுத்தம் ஆகாது என்று கருதுகின்றேன். புணர்ச்சியில் ஒரு வடிவமுற்ற ஒலிகளால் அமைந்த புணர் தொடரைப் பகுக்கும்போது ஒலிகள் வேறு வேறு (எழுத்து) ஒலிகளாகத் திரிதல் என்று கொள்ளவேண்டும் என்பது என் எண்ணம். இதில் பிழையிருப்பின் சுட்டிக் காட்டுக.
-- --- --- --- --- -----
என் விளக்கம்:
தொல்காப்பியர் என்ன கருதினாரோ தெரியவில்லை.

சற்றுக் கூர்ந்து நோக்கினால் , ௧.செம்பு+ஒன்பதின் தொடி, செம்பொன் + பதின்றொடி
என்பனவும்,  ௨.பத்துமணி+செய்திகள், பத்து + மணிச் செய்திகள் என்பனவும் ஒருங்கே இடைவெளியின்றிச் சொல்லுதல் , பொருள் வேறுபாட்டிற்கேற்ப முன் பின் சொற்களுடன் இயைதல் என்பதில் பொதுத்தன்மையவே.

இங்கும், பத்துமணி என்பதில் 'மணி' நேரத்தையும், மணிச் செய்திகள் என்பதில் 'மணி' அணியும் மணியையும் குறித்து வேறுபடுகின்றன.
அப்புறம், முற்சொல்லுடனோ, பிற் சொல்லுடனோ இயைதல்தானே புணர்ச்சி?
என் விளக்கத்தில் பிரிமொழிச்சிலேடைகளை ஏற்று, பிறவும் இசையில் திரிவனவுள என்னும் வகையில் இவற்றைத் தந்துள்ளேன்.
௧,௨ - ஆகிய இரண்டும் , தொடராகும்போது,எழுத்தோரன்னவைதாமே !

மேலும், புணரியல் என்பது, நிலை  வரு மொழிகள் புணர்தல் பற்றியதேயன்றிப் புணர்ந்து நிற்கும் தொடர்களைப் பிரித்துப் பொருள் கொள்ளும் பொருள்கோள் பற்றியதில்லையே?
இங்குப் புணர்ச்சியில் நிலைபெற்ற (நிலைஇய )ஒரு பண்பு கூறப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.  தடுமாறு தொழிற்பெயர் சற்று வேறுபட்டது.
———————————————————————————————————————————————————
இதனோடு தொடர்புடைய வேறு சிலவற்றையும் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி 
இசையின் திரிதல்¹ நிலைஇய பண்பே

என்பதை மட்டுமே புணரியல்பு 4 இல் காட்டியிருந்தேன். அடுத்த நூற்பா:

அவைதாம்,
முன்னப் பொருள* புணர்ச்சிவாயின்
இன்ன என்னும் எழுத்துக் கடன் இல²வே

(*முன்னப்பொருள= குறிப்பால் உணரும் பொருண்மையை உடையன )

செம்பொன்பதின்றொடி  முதலிய உதாரணங்களைத் தரும் பூரணரும் நச்சரும்  இவற்றைப் பிரித்துக்காட்டி  விளக்கவில்லை(1)'இசையின் திரிதல் ' என்றது ஒலியெழுத்திற்கு எனவும் (2)'எழுத்துக் கடன் இல'  என்றது வரி வடிவிற்கு எனவும் , பூரணரும் நச்சரும் கொள்வர்[பொதுவாகவே பண்டை உரையாசிரியர்கள் சொற்களைப் பிரித்து எழுதி விளக்கும் வழக்கம் இல்லை. இட நெருக்கடி காரணமாகச் சுவடிகளில் அதற்கு வாய்ப்பில்லை போலும். நேரிற் பாடஞ்சொல்லுங்கால் விளக்கியிருப்பர் எனலாம். முனைவர் கி. செம்பியன் அவர்கள் தொல்காப்பிய எழுத்ததிகார எடுத்துக்காட்டுகளைப் பிரித்து விளக்கும், பயனுள்ள, கருவிநூலொன்றை ஆக்கியுள்ளார்].

பின்னுள்ள நூற்பா உரைவிளக்கத்தில், " ஒலியெழுத்தின் செல்வுழிப்பொன் ஆராய்ச்சி உள்வழிப் பொன் எனவும், செம்பு ஆராய்ச்சி உள்வழிக் செம்பு எனவும் குறிப்பான் உணரப்பட்டது " என்பர் பூரணர். நச்சரும் வழிமொழிவர்.

" முன்னருள்ள சூத்திரத்தில் பல பொருளுள்ள ஒரு தொகைமொழி ஓசை வேற்றுமையால் மாறுபடுமெனக் கூறப்பட்டமையான் , அப்பொருள் வேற்றுமை எதனாற் புலப்படுமென ஐயந் தோன்ற, குறிப்பான் உணரப்படும் என இச்சூத்திரம் ஐயம் அகற்றிற்று எனக் கூறின் , குற்றமென்னை? " என வினா எழுப்புகிறார் பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் (தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - குறிப்புரை, 1937)

ஓசையால் பொருள் வேறுபடுமெனின் ஒலியெழுத்தில் முன்னம் எதற்கு?

ஓலைச் சுவடியெழுத்துக் காலத்தில் சொற்களைப் பிரித்தெழுதும் வழக்கமில்லை (மேலும், பிரித்தெழுதல் பாவோசையமைதிக்கு மாறானதுமாகும்) எனவே, 'இசையின் திரி'ந்து , வேறுபடும் பொருள்களைக் காட்டும் வரி வடிவ எழுத்துமுறைமைகள் இல்லை;இடைவெளியின்றி எழுதப்படும் ஓலைச்சுவடிகளில் காணும் , எழுத்தோரன்ன புணர்ச்சியில் பொருள் வேறுபடுமாயின் , உணர முன்னம் தேவை என்பது பின்னுள்ள நூற்பாவின் பொருளாகலாம்

அச்செழுத்துக் காலத்தில் பிரித்து அச்சிடும் வசதி வந்து, கையழுத்திலும் செல்வாக்குச் செலுத்துகிறது.

ஒலியெழுத்தாலோ, வரி வடிவ எழுத்தாலோ காட்ட முடியாத எழுத்தோரன்ன பொருள்தெரி புணர்ச்சிகளும் உள்ளன.

அமரர் மருத்துவர் வ.பொன்முடி நினைவிற்கு வருகிறார். முகநூலில் பொன்முடி வடிவேல் என்னும் பெயரில் [வடிவேல் அவருடைய தந்தையார் பெயர்] இயங்கிவந்தார்.அவரது கடும் பிடிவாதம் காரணமாக அவரோடு கருத்துவேறுபட்டு , முகநூல் வழி உரையாடலை முறித்துக்கொண்டேனாயினும் , அவரது மிகைநுட்ப இலக்கண ஆர்வத்தை நான் மதித்தேன்.அவரிடம் கொண்டிருந்த மதிப்பைச் சுட்டியே உரையாடலை முறித்தேன். ஆனால், அவரது  அகாலமரணம் எதிர்பாராத அவலம்.
இலக்கண ஆய்வாளர்கள் அவரது (ஒரே)நூல்,  முகநூல் இடுகைகள் வழி அவரது கொள்கையை ஆராயலாம்; ஆராய வேண்டும்.
சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுவதன் வழி, பொருள் வேறுபடுதலுக்கும் , அவ்வேறு பாட்டிற்கேற்ற - வலிமிகுதல், மிகாமை முதலிய- புணர்ச்சி வேறுபடுதலுக்கும் மிகைநுட்ப முதன்மை தந்தார் அவர். ஒரு முறை முகநூல் வழி உரையாடலின்போது,

௧. வடிவேல் - வடித்த வேல் (வினைத்தொகை - முக்காலமும் மறைதல் பற்றி வேறுபட்ட கருத்துண்டு)
௨. வடிவேல் - அழகிய வேல் (அடைத்தொடர்)
௩. வடிவேல் - முருகனைக் குறிப்பது (ஆகுபெயர்/அன்மொழித்தொகை? )
௪. வடிவேல் - இறைவன் பெயரால் ஒருவற்கு இடப்பெறும் இயற்பெயர்
௫. வடி! வேல் - ஏவல் வினைத்தொடர்
௬. வடிவு + ஏல் - ('வடிவு ஏற்றிடுக ' என்னும் ) வியங்கோள்

இவற்றை எவ்வாறு பொருள் வேறுபட, சேர்த்தும் இடம்விட்டும் எழுதிக் காட்டுவது? என்று கேட்டேன். அவரது மிகைநுட்ப இலக்கணக் குதர்க்கத்திற்கு எதிரான எனது குதர்க்கம் x குதர்க்கம் = குதர்க்கம்² வாதம் இது. 'வடிவு ஏல்' தவிர்ந்த பிற யாவும் செம்மொழிச் சிலேடையொத்தவை.
போகட்டும்.
வடிவு ஏல்  என்பதைப் பிரித்தெழுதிவிடலாம். இக்காலத்தில் நிறுத்தற்குறிகளால் சிலவற்றை வேறுபடுத்தி உணர்த்தலாம். எல்லாவற்றையும் ஒலியாலோ , எழுத்தாலோ, நிறுத்தற்குறியாலோ வேறுபடுத்த இயலாது; முன்னம்தான் வழி.

பொருள் தெரிதல்
இசையின் திரிதல் -  ஆகியன பற்றியும் சில சொல்லவேண்டும். இப்போது வேண்டாம்.

நான் இலக்கண ஆய்வாளனல்லென். ஆய்வாளர்கள் மெய்ப்பொருள் காண்பாராக.

புணரியல்பு 4 இன் எதிர்வினை க.௨(தொடர்ச்சி)

அவர் வழி தனி வழி!

எந்தச் சொல்லுக்கும் பொருள் இல்லை
ஆனால்,
எல்லாச் சொல்லும் எல்லாப் பொருளையும் குறிக்கும் !

தொல்காப்பியப் பெயரியலின் முதல் நூற்பா:
'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே'

இதற்கு, " உலகத்தாரான் வழங்கப்பட்ட எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன, என்றவாறு " என்று பொருள் கூறுவார் தெய்வச்சிலையார் ; சொற்பொருள் பற்றிய உலகப் பொதுவான வரைவிலக்கணமாக இதனைக் கொள்வார்.

நிறைவாக, " எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன'  என்பதற்குப் பொருள், 'எல்லாச் சொல்லும் எல்லாப் பொருளையும் குறித்து நிற்கும்' என்றவாறு. எனவே, இச் சொல் இப்பொருள் உணர்த்தும் உரிமையில என்றவாறாம் .
என்னை உரிமையிலவாகியவாறு எனின், உலகத்துப்பொருள் எல்லாவற்றையும் பாடைதோறும் தாம் அறிகுறியிட்டு ஆண்ட துணையல்லது இவ்வெழுத்தினான் இயன்ற சொல் இப்பொருண்மையுணர்த்தும் என எல்லாப் பாடைக்கும் ஒப்ப முடிந்ததோர் இலக்கணம் இன்மையான் என்க.
எனவே பொருள் பற்றி வரும் பெயரெல்லாம் இடுகுறி என்பது பெறப்பட்டது. இவ்விடு குறியால் அடிப்பட்ட சொல்லோடு ஒட்டி மற்றொரு பொருட்கும் பெயராகி வருவது காரணக்குறியாம்" - என்பார் தெய்வச்சிலையார்.

வூ¹ , இயெ² ,மேய்சன்³, சிலோய் தொம்⁴ இவையெல்லாம் என்ன? ஒரே பொருளைக் குறிக்கிற வெல்வேறு மொழிச்சொற்கள் . இவை முறையே  1.சீனம்2.யப்பானியம், 3.பிரெஞ்சு4.உருசிய மொழிகளில் வீடு என்பதைக் குறிப்பன (கூகுள் மொழிபெயர்ப்புத் துணை). ஒரு பொருள் குறிப்பினும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை. அப்படியானால் சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் தொடர்பில்லை.
இதைத்தான் தெய்வச்சிலையார், " பாடைதோறும் தாம் அறிகுறியிட்டு ஆண்ட துணையல்லது இவ்வெழுத்தினான் இயன்ற சொல் இப்பொருண்மையுணர்த்தும் என எல்லாப் பாடைக்கும் ஒப்ப முடிந்ததோர் இலக்கணம் இன்மை " என்கிறார்.

சொல் , பொருளைக் குறிக்குமேயன்றி, பொருளைக் கொண்டிருப்பதில்லை. சொல்லுக்கும் பொருளுக்குமான தொடர்பு தன்னிச்சையானது (arbitrary) ;   ஒரு சொல், பொருளைக் குறிப்பது அவ்வம்மொழி மரபுசார்ந்தது; காரணமற்றது. எனவேதான், " எல்லாச் சொல்லும் எல்லாப் பொருளையும் குறித்து நிற்கும்' என்றவாறு. எனவே, இச் சொல் இப்பொருள் உணர்த்தும் உரிமையில "  என்றார் தெய்வச்சிலையார்.

சொல்லுக்கும் குறிக்கும் பொருளுக்குமான தொடர்பின்மையைப் புதிது புதிதான குழுஉக் குறிகள், குறுமொழிகள்  முதலியன காட்டும்.
'டுபாக்கூர்' என்பது ஏமாற்றுவோரைக் குறிக்கும் சென்னை வட்டாரக் குறுமொழி. இதன் வேர் பற்றிய சில கருத்துகள் உள்ளன. திரைப்படத்தின் வழியாக இது, அறிமுகமாகி விட்டது. இதன் பரவலைப் பொறுத்துத் தற்காலத் தமிழ் அகராதியில் சேர்க்க வேண்டியிருக்கலாம்.

சொற்பொருள் மாற்றப் போக்கில் , முன்பு குறித்த பொருளன்றி அதற்கு மாறான பொருளைக்கூட ஒரு சொல் குறிக்கலாம். 'நாற்றம்' ஒரு காலத்தில் நல்ல மணத்தைக் குறித்தது. இப்போது தலைகீழாக மாறிவிட்டது. சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் தொடர்பிருந்தால் இப்படி மாறாது.

நிற்க.

பெயரியலின் அடுத்த நூற்பா வருமாறு:

'பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்' (பெயரியல் 2)

இளம்பூரணர், சேனாவரையர், கல்லாடர் ஆகியோர் , ' சொல்லின் வேறாகிய பொருள் அறியப்படுதல், சொல்தானே அறியப்படுதல் இரண்டும் சொல்லால் ஆகும்' என்னும் கருத்துப்பட உரை கூறுவர்.

"சொல்லினாற் குறிக்கப்பட்ட பொருளின் தன்மை ஆராய்தலும், சொல்லின் தன்மை ஆராய்தலும் சொல் தன்னானே ஆகும் "என்பார் தெய்வச்சிலையார்.

இவர் இரண்டு நிலைகளில் வேறுபடுகிறார்.
க. பொருண்மை , சொன்மை என்பவற்றுக்கு நூற்பாவைப் பின்பற்றிப் பொருளின் தன்மை, சொல்லின் தன்மை என்கிறார்.
௨. தெரிதல் என்பதற்கு ஆராய்தல் என்று பொருள் காண்கிறார்.

நச்சினார்க்கினியரும் பொருள் தன்மை, சொல் தன்மை
என்கிறார். ஆனால், தெரிதல் என்பதற்கு அறியப்படுதல் என இளம்பூரணர் முதலியோர் கொள்ளுமாறு பொருள் கூறியுள்ளார்.

இனி, மூன்றாவது நூற்பாவுக்குப் போவோம்.

தெரிபுவேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும்
இருபாற் றென்ப பொருண்மை நிலையே (பெயரியல் 3)

"பொருண்மை நிலையானது இச் சொற்குப் பொருள் இதுவென உணரப் பலபொருளிலும் தெரிந்து வேறாகி நிற்றலும், சொற்படு பொருளன்றிச் சொல்லுவான் குறிப்பினாற் பிறிது பொருள்பட நிற்றலும் என இருபகுதியை உடைத்து என்று சொல்லுவர்" என்பார் தெய்வச்சிலையார்.

'தெரிபுவேறு நிலையல்' என்பதற்குச் சிலையார் கொள்ளும், " பலபொருளிலும் தெரிந்து வேறாகி நிற்றல்" என்பது பிறர் கூறாதது.

இதனை விளக்கும் தொல்காப்பிய உரைவளப் பதிப்பாசிரியர் ஆ.சிவலிங்கனார் கருத்தைப் பார்ப்போம்.

" கனி என்பது ஒரு சொல்; ஒருவனிடம் கனி எடுத்துவா என்றால் அவன் காய், இலை, பூ , கனி ஆகியவை உள்ள இடம் சென்று காய், இலை, பூ, ஆகியவற்றின் வேறாகி உள்ள கனியை எடுத்துவருவான் . எனவே கனி என்ற சொல் காய் முதலிய பல பொருளின் வேறான பழத்தை உணர்த்துவதே தெரிபு வேறு நிலையல் ஆம் "

சிலையார் கருத்து அத்துணைச் சிறப்புடையதன்று என்பது சிவலிங்கனார் கருத்து.

சிலையார் காட்டும் எடுத்துக்காட்டுகளைப் பார்த்துவிடுவோம்.

"தெரிபு வேறு நின்றன’ நிலம், நீர், தீ, வளி எனப் பொருள் உணர்த்துவனவும்; உண்டான், தின்றான் எனத் தொழில் உணர்த்துவனவும். குறிப்பிற் றோன்றின--இவன் நெருப்பு, இவன் பசு எனக் குணம் பற்றியும், தீமை செய்தாரை 'நன்மை செய்தீர்'எனவும்; கொடுமை செய்தாரை 'வாழ்வீராக' எனவும் அப்பொருள் பயவாது பிற பொருள் பயப்ப வருவன "

வியப்புக்குரிய ஒன்று, தெய்வச்சிலையார் பார்வை, பெர்டிணாண்ட் த சசுயூரின் அமைப்பியப் பார்வையை ஒத்திருப்பது.

சசுயூர் மொழியைக் குறிகளின்(sign)ஒருங்கமைவாகக் கண்டார், குறிப்பான்(signifier) , குறிப்பீடு (signified) என்பன குறிப்பிட்ட சொல்லையும் அதன் பொருண்மையை (அர்த்தத்தை)யும் ஒத்தவை. சசுயூர் சொல்லின் பொருண்மை தன்னிச்சையானது என்றார். தெய்வச்சிலையார் இடுகுறி என்றதும் அதனை ஒத்ததேயாம்.

இவை எல்லாவற்றையும்விட , சசுயூர் கருத்துப்படி, சொல்லின் பொருண்மை என்பது உறவு நிலைசார்ந்தது (relational) ; தொடர்புறவுடைய சொற்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்வதால் அமைவது . தெரிபு வேறு நிலையல் என்பதைத் தெய்வச்சிலையாரும் ஏறத்தாழ அவ்வாறே விளக்கியுள்ளார்.

இது, எப்படி முடிந்தது? இந்தியத் தத்துவ மரபுக்கும் இலக்கண மரபிற்குமான உறவிலிருந்து தெய்வச்சிலையார் பார்வைக்கான பின்னணியை நாம் விளங்கிக்கொள்ள முயலலாம்.

இந்தியத் தத்துவ மரபு, தமிழிலக்கண மரபு, உரை மரபு, அமைப்பியம் முதலிய இயங்கள் ஆகியன பற்றிய பொது அறிவு மட்டுமே கொண்ட என்னால் மேலும் நுட்பம் காட்ட இயலாது.

ஆனால், புணரியலில் " எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி " என்பதற்கும், பெயரியலின் " பொருண்மை    தெரிதல் ", " தெரிபு வேறு நிலையல்" ஆகியவற்றுக்கும் தொடர்புண்டு என்று தோன்றுகிறது.

புணரியல் 4 எதிர்வினை ௧.௩(தொடர்ச்சி)

புணர்ச்சியும் பொருள்கோளும்*

எழுத்ததிகாரம்
—————————
எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி
இசையின் திரிதல் நிலைஇய பண்பே (புணரியல் 39)

அவைதாம்,
முன்னப் பொருள புணர்ச்சிவாயின்
இன்ன என்னும் எழுத்துக் கடன் இலவே (௸ 40)

சொல்லதிகாரம்
——————————
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (பெயரியல் 1)

பொருண்மை தெரிதலும், சொன்மை தெரிதலும்,
சொல்லின் ஆகும்' என்மனார் புலவர்(௸ 2)

தெரிபு வேறு நிலையலும், குறிப்பின் தோன்றலும்,
இரு பாற்று' என்ப 'பொருண்மை நிலையே(௸ 3)

பொருளதிகாரம்
——————————
இசை திரிந்து இசைப்பினும் இயையுமன் பொருளே;
அசை திரிந்து இசையா' என்மனார் புலவர்(பொருளியல் 1)

பொருள் தெரி(எழுத்து) , பொருண்மை தெரிதல் , தெரிபு வேறு நிலையல் (சொல்)

இசையின் திரிதல் (எழுத்து) , இசை திரிந்து இசைத்தல் (பொருள்)

ஆகிய ஒத்த தொடர்களைக் காணும்போது  எழுத்து, சொல், பொருளதிகாரத் தொடர்பை உணரமுடியும்.
                                                                 *******

'இசைதிரிந் திசைப்பினும்' என்னும் பொருளியல் நூற்பாவிற்கு இளம்பூரணர்,

" இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், தொடர் மொழிக்கட்பொருள் இயையுமாறு உணர்த்திற்று.

இசைதிரிந்து ஒலிப்பினும் பொருள் இயையும்; அவ்வழி அச்சொற்கு அங்கமாகிய அசை திரிந்தொலியா என்றவாறு.

என்றது சொல்லொடுசொல் தொடர்வுபடும் வாய்பாட்டால் தொடராது பிறிதோ ர் வாய்பாட்டால் தொடுப்பினும் பொருட்டொடர்பு உண்டாயிற் பொருள் இயையும்வழி அசைச்சொற்கள் திரியாது நின்ற நிலையே பொருள்படுமா றாயிற்று " என உரை காண்பர்.

[நச்சினார்க்கினியர் முற்றிலும் வேறான பொருள் காண்பார் ( 'இசை திரிந்து இசைப்பினும் , அசை திரிந்து இயலா இசைப்பினும் மன் பொருள் இயையும் என்மனார் புலவர்' என்று நூற்பாத் தொடர்களைத் தமக்கேயுரிய வழக்கப் படி  சிக்கலான ஆசனம் போடவைத்து விளக்கம் சொல்வார்)]
                                                                  *******

இளம்பூரணர் கருதும், ' தொடர்மொழிக்கண் பொருள் இயைதல்' என்பது பொருத்தமாகத் தோன்றுகிறது. தொடர்மொழி இலக்கணம் சொல்லதிகாரத்தில் இடம்பெறவேண்டியதன்றோ?  பொருளதிகாரத்தில் அதற்கென்ன வேலை? என்ற தடை எழலாம்.

பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் ஆகியன யாவும் அன்றாடப் பேச்சின் வேறான யாப்புள் அடங்குவன (செய்யுளியல் 77). யாப்பு என்பது கட்டமைக்கப்பட்டது. செய்யுள் என்பதன் ' - உள் ' தொழிற்பெயர் விகுதி. செய்யுள் = செய்யப்பட்டது .
தொல்காப்பியத்தை - பிற மரபிலக்கணங்களையும் - பொறுத்த அளவில் ' வழக்கு ' என்பதும் அன்றாடப் பேச்சுவழக்கன்று. 'வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே'(மரபியல் 94) என்கிறது தொல்காப்பியம்.

பொருளதிகாரத்தில் தொடர்மொழி பற்றிப் பேசுவது , சொல்லதிகாரத்தில் தொடரமைதியின் பொது இலக்கணம் போலன்றி, கூடுதலாகச் செய்யுளுக்கேயுரிய  தொடரமைதி பற்றிப் பேசுவது எனலாம்.

இக்காலத் தமிழிலும் புணரியல்பு பற்றிப் பேசும்போது  தரநிலைப்பட்ட மொழி கருதியே பேசுகிறோம். தரநிலைப்பாடு என்னும்போதே யாப்பு / செய்யுள் தன்மை அதில் மேலோங்கியிருக்கும். அதிலும் எழுத்து மொழி சற்றுக் கூடுதல் இறுக்கமுடையதாதல் இயல்பு. புணரியல்பு 5 இல் 'இடர்ப்பட்டுக் கற்க வேண்டியதில்லை.சொல்லிப் பார்த்தால் போதும்' என்கிற வாதம் தவறானது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அன்றாடப் பேச்சைப் புணரியல்புக்குச் சான்றாகக் கொள்ளக்கூடாது.

                                                                     *******
சொற்கு அங்கமாகிய அசை என இளம்பூரணர் கூறுவது பற்றி அறிஞர் க.வெள்ளைவாரணனார், " சொல்லுக்கு அங்கமாகிய அசையாவன சொல்லின் கூறுகளாகிய பகுதி விகுதி இடைநிலை முதலிய சொல்லுறுப்புக்கள்" என்கிறார்  (தொல்காப்பியம் - பொருளியல் - உரைவளம், பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 2005)

இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளை நோக்கப் பெயரும் வினையும் தவிர்ந்த இடை, உரிச்சொற்களைச் சொற்கு அங்கமாகிய அசையுள் அடக்கலாம்.

பத்துமணிச்செய்திகள் - என்பது நேரங் குறித்ததாயின் பத்துமணிக்கு ஒலி/ஒளி பரப்படும் செய்திகள் என வேற்றுமைத்தொடராக , அதற்குரிய உருபை (அசையை)த் தந்து விரிக்கவேண்டும்;
தன்மை குறித்ததாயின் பத்து மணியான செய்திகள் என அடைத்தொடராக விரிக்க வேண்டும்.

"புணரியல் என்பது நிலை வரு மொழிகள் புணர்தல் பற்றியதேயன்றி, புணர்ந்து நிற்கும் தொடர்களைப் பிரித்துப் பொருள் கொள்ளும் பொருள்கோள் பற்றியதில்லையே?
இங்குப்[புணரியலில்] புணர்ச்சியில் நிலைபெற்ற (நிலைஇய )ஒரு பண்பு கூறப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்" என்று (புணரியல்பு 4 எதிர்வினை ௧ இல்) எழுதியிருந்தேன்.

பொருளியல் முதல் நூற்பா அத்தகு பல்வேறு தொடர்களைப் பிரித்துப் பொருள் கொள்வது பற்றியது .

புணர்ச்சிக்கும் பொருள்கோளுக்குமான வேறுபாடு இங்குப் புலப்படுவதாக நான் கருதுகிறேன்.

* பொருள்கோளை மொழிபுணரியல்பு (எச்சவியல் 8) என்கிறது தொல்காப்பியம். இன்னும் பரந்த பொருளில் இங்குப் 'பொருள்கோள்' என்பது ஆளப்பட்டுள்ளது..



புணரியல்பு 5

சொல்லிப் பார்த்தால்...

பேச்சுமொழி, கிளைமொழி முதலியவற்றின் உயிரோட்டத்தை நான் மறுக்கவில்லை.
" பேசுற மாதிரியே எளுதணும்" என்று சொல்லிவருகிற, அதற்கு இப்போதைய தமிழ் எழுத்துகள் போதுமானவையல்ல என்று அங்கலாய்க்கிற முதுபெரும் எழுத்தாளர் ஒருவர் வெகுசன இதழில் தொடர் எழுதினார். அவர் அதில் தம் வட்டாரவழக்குச் சாயலைக் கொணரத் தவறவில்லை என்றாலும், தரநிலைப்பட்ட தற்கால எழுத்துத் தமிழ்ப் பாங்கையும் கைக்கொண்டார்.

பொதுத் தமிழின் தேவையை மறுக்க இயலாது. பேச்சில் புழங்கும் எல்லா ஒலிகளையும் எழுத்தில் காட்டும் இயற்கை மொழி எதுவுமில்லை.

தமிழின் சிறப்புகளுள் ஒன்று - தலையாயது என்று கூட, சொல்லலாம் - அதன் தொடர்ச்சி.

உயிர்ப்போடு கூடிய நெடுந்தொடர்ச்சியின் தவிர்க்கவியலாத் தலைவிதி ,
மாற்றம். கால, சூழல் மாற்றங்களுக்கேற்பத் தமிழ் தன்னைத் தகவமைத்துக்கொண்டுவருகிறது.

ஒலி, வரிவடிவம் (எழுத்து), சொல் வடிவம், தொடரமைப்பு,சொற்பொருள் முதலிய பலவும் மாறியுள்ளன. அப்படியெனில் இலக்கணத்திலும் மாற்றம் நிகழும்தானே. இந்த மாற்றத்தையும் நடை வேறுபாடுகளையும் கருதாமல் வழக்கிறந்த விதிகளையும் மரபுகளையும் பிடித்துக் கொண்டு தொங்குவதில் பயனில்லை.

நடைமுறைத் தேவைகருதிய சில நெகிழ்வுகள், மாற்றங்களைக் குற்றமாகப் பார்க்கக் கூடாது.
பிழைகளைப் பெரிதுபடுத்தவும் வேண்டியதில்லை.

புறநானூற்றில் அறம் , குறுந்தொகை நறுஞ்சுவை , குறளின் இறையியல்  என்றெல்லாம் மொழிப்பிழையின்றி மாவரைக்கலாம். சிந்தனையும் படைப்புணர்வும் மிக்குப் புதிது புதிதாக எழுதும்போதும், தமிழில் முன்னில்லாத துறைகளில் எழுதும்போதும் மொழி நெகிழும். இலக்கணப்பிழையற்ற அரைத்த மாவை விட , பிழைகள் சில பல இருப்பினும் இப் புதிய எழுத்துகளே தமிழுக்கு வளம்.

1980களில் வானொலி நேர்காணலொன்றில் எழுத்தாளர் சிவசங்கரி கேட்டார், " தமிழ்'ல எழுதறவாளுக்கு, தமிழ் இலக்கணம் தெரிஞ்சிருக்கணுமா என்ன?" என்று.
"ஏன் தெரித்திருக்கக் கூடாதா என்ன?" என்று எதிர் வினாவை விடையாகத் தந்தார் ஜெயகாந்தன்.

1990களின் பிற்பகுதி என்று நினைவு. சுந்தர ராமசாமி அவர்களின் இல்லம் சென்றிருந்தேன்; அவரது மேசையில் ஒற்றுப் பிழையின்றி எழுதுவது பற்றிய நூலைக் கண்டேன். நூலை எழுதியவர் , கல்லூரியில் உடன்பணியாற்றும் நண்பர் பேரா.அரங்கசுப்பையா அவர்கள்.
சு.ரா. விடம், " சார், இது அன்பளிப்பாக வந்ததா?" என்று கேட்டேன். " இல்லை வரவழைத்தேன்"
என்றார்.அவர் தமிழ் உலகில் தம்மை நடை நுட்பங்களால் நிறுவி நிறைந்த காலம் அது. ஆனாலும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவரிடம் இருந்தது.

'நாங்கள் இதுவரை தமிழில் இல்லாததைக் கொண்டுவருகிறோம், இதில் -க்- இல்லை -ச்- இல்லை, ஒருமை இல்லை பன்மை இல்லை என்றால் எப்படி? ' என்னும் மேட்டிமை வாதமும் முறையற்றது. எந்த மொழியானாலும் , அவ்வக்காலம் சார்ந்து, இலக்கண வரம்பொன்று இருப்பதை இவர்கள் கணக்கில் கொள்ள வேண்டும்.

நடைமுறை மொழியறிந்து எழுதுகிற ஒருவருக்கு இக்கால இலக்கணத்தைக் கூட, கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாமல் போகலாம். கற்றுக்கொள்ளவே மாட்டேன் என்பது பொறுப்பின்மை. கல்லாமையை நியாயப்படுத்துவது __ தனம்.

இரண்டுக்கும் இடைப்பட்ட நழுவல் வாதம் ஒன்று உள்ளது. அதுதான் 'சொல்லிப்பார்த்தால் போதும் ; இடர்ப்பட்டுக் கற்கவேண்டியதில்லை ' என்பது.

போட + சொன்னால் = போடச் சொன்னால்
நிறுத்த+சொல் = நிறுத்தச் சொல்
போட -  , நிறுத்த- இரண்டுமே , செய என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள்தாம். வருமொழிமுதல் வல்லெழுத்தாயின் வலி மிக வேண்டும்.

ஒரு திரைப்பாடல் பகுதி, ஒரு திரை உரையாடல் பகுதி ஆகியவற்றை இணைத்துள்ளேன்.

https://www.facebook.com/balasundaram.mathivanan.3/videos/1463334270517427/



பாட்டில் போடச் சொன்னால் என்பது சரியாக ஒலிக்கப்படுகிறது. உரையாடலில் நிறுத்த சொல் என்றே ஒலிக்கப்படுகிறது. உரையாடலில் தவறாக ஒலிக்கப் படுகிறது என்று சொல்லமாட்டேன். 
நானே பேசும்போது, " அவர் எழுதுற தொடர நிறுத்த சொல்லுப்பா" என்றுதான் சொல்வேன்.
(படத்தில் வேலு நாயக்கர் வெற்றிலைக்குதப்பலுடன் பேசுவதும் காரணமாகலாம்!). தற்காலத் தமிழில் எழுதுவதானாலும்  பேச்சை  எழுத்துக்கு விதியாக்க இயலாது.

புணரியல்பு 6

பருப்பு + கடை ?

Ramasamy Selvaraj அவர்கள் ஒரு சிக்கலைப் போனவாரம் எழுப்பியிருந்தார்.

"பழைய புத்தகக் கடை நல்ல காட்டு. புணர்ச்சியால் மட்டும் பொருள்வேறுபாடுகளைக் காட்ட முடியாது என நன்கு விளக்கியிருக்கிறீர்கள். அந்த எடுத்துக்காட்டைச் சற்றே நீட்டித்து, 'பழைய பருப்புக் கடை' என்று எண்ணிப் பார்த்தேன். கடை என்பது வினை, பெயர் என்று பொருள் மாறுபட்டு வேறு செய்திக்குக் காட்டாக இருக்கிறது. இதை நீங்கள் முன்பே சுட்டியிருக்கிறீர்கள்.  இங்கே இரண்டாம் வேற்றுமைத் தொகை என்று வலிமிகாதென்றாலும் வன்றொடர்க்குற்றுகரம் என்று மிகுந்தே வருமன்றோ? மீண்டும் ஒரே எழுத்துக்கூட்டல் கொண்ட இருவேறு பொருள் தரும் சொற்றொடரை வேறுபடுத்துவதும் சிக்கல் தானே. (இந்த இ.வே.தொகை .எதிர். வன்றொடர்க்குற்றுகரம் பற்றிப் பலர் கண்டுகொள்வதில்லை)"

வன்றொடர்க்குற்றியலுகர ஈறு நின்று வருமொழியில் வல்லெழுத்து வரும்போது
௧. நிலைமொழி உயர்திணைப் பெயராகவோ ( நல்லமுத்து சென்றார்)
௨. வினைத்தொகையில் நிலைமொழியாகவோ (அரங்கேற்று காதை)
௩. சில வினைமுற்றுத் தொடர்ககளில் நிலைமொழியாகவோ ( நடத்து தமிழ்/ நடத்து தலைவா!)இன்ன பிறவாறோ அமைந்தால்  வலி மிகுவதில்லை. பிற இடங்கள் யாவற்றிலும் வலி மிக வேண்டும் என்பார்கள்.

மேற்காட்டியவை அல்வழித் தொடர்கள். அல்வழியில் 14 வகைத் தொடர்களை நன்னூல் தொகுத்துத் தருகிறது. புணர்ச்சியில் இவை பதினான்கும் ஒத்து இயங்குவதில்லை; இயங்க இயலாது.

வேற்றுமையிலும் எல்லாவற்றுக்கும் பொதுவான புணர்ச்சிவிதி கொள்ள முடியாது.

மற்றொரு சிக்கல் யாப்பில், குறிப்பாகப் பா யாப்பில் இடம்பெறும் ஓசையும் மரபும் சார்ந்த புணர்ச்சிகளை இக்காலத் தமிழுக்குக் கொள்ள இயலாது; அல்லது கொள்ள இயலாமலிருக்கிறது.

உயர்திணையோ அஃறிணையோ எந்த ஈறாயினும் எழுவாயாக நிற்கும்போது வல்லெழுத்தை முதலாகவுடைய சொல் வந்தால் வலி மிகாதிருத்தலே தமிழ்ப் பண்பாக நான் உணர்கிறேன். 

கொக்கு பறக்கும் - என்றெழுதுவதையே நான் பரிந்துரைப்பேன். பிடிவாதமாக மரபு பேணுவோர்  கொக்குப் பறக்கும் என்பதே சரியெனச் சாதிப்பார்கள்.
வன்றொடர்க்குற்றுகர ஈற்றுச்சொற்களில் மட்டுமன்று; வேறு பல ஈற்று எழுவாய் நிலைமொழிகளிலும் இச்சிக்கல் உள்ளது. பிறகு பார்ப்போம்.

எனவேதான் எனது தொடரைப் 'புணரியல்' என்று இலக்கணமாகச் சொல்லாமல் 'புணரியல்பு' என இயல்பு கருதிச் சொன்னேன்.

இப்போது 'பருப்பு + கடை'க்கு வருவோம்.
  i. பருப்பு +(ஐ) + (விற்கும்) + கடை . 
  இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  பெயர்த்தொடர்;  ஒரு வாக்கியத்தில் பெயராக இயங்கும்.
  ii. பருப்பு +(ஐ) + கடை .
   இரண்டாம் வேற்றுமைத் தொகை.
   வாக்கியம்.  [ (நீ) பருப்பைக் கடை . நீ (தோன்றா) எழுவாய்] 
 
நிலைமொழியாகிய பருப்பு என்பதன் பொருள் ஒன்றே. வருமொழியில் i. முன்னது பெயர்ச்சொல் ii. அடுத்தது (ஏவல்) வினைச்சொல்.

இரண்டும் வேற்றுமைத்தொடர்கள்தாம்.

மரபிலக்கணப்படி இரண்டிலும் வலி மிகும். பின்வருமாறு எழுத்தில் சமாளிக்கலாம். நான் இவ்வாறுதான் எழுதுவேன்.
i. பருப்புக்கடை    (பெயர்த்தொடர்)
ii. பருப்புக்  கடை ( ஏவல் வாக்கியம்)

அவ்வாறன்றி, i. பருப்புக்கடை,  ii. பருப்பு கடை என்றெழுதிப் புணர்ச்சியிலேயே வேறுபடுத்தலாமே!எனில், பிழையென்றோ குற்றமென்றோ நான் சொல்லமாட்டேன். இவற்றில் மொழிப்பண்பு பற்றிய ஓர் உணர்வு காணப்படுகிறது.

ஆனால்,

i. பருப்பு விற்கும் கடையைப்  பருப்புகடை× எனில் பிழை. ஏனெனில், இத்தொடரின் சொற்கள் இரண்டும்  ஒரு பெயர்த்தொடராக இயைந்து நிற்கின்றன. வலிமிகுதலால்தான் அந்த இயைபு நேர்கிறது.

புணரியல்பு 7  'தடுமாறு தொழிற்பெயர்'
(4 இன் எதிர்வினை ௧.௩. இன் தொடர்ச்சியுமாம்)

தொல்காப்பியர் கூறும் 'எழுத்தோரன்ன பொருள்தெரி புணர்ச்சி'க்கு (புணரியல் 39), குன்றேறாமா (குன்று + ஏறு + ஆமா/ குன்று + ஏறா+மா) , செம்பொன்பதின்றொடி ( செம்பொன் + பதின்+தொடி/ செம்பு+ஒன்பதின் + தொடி) முதலிய பிரிமொழிச் சிலேடைகளை உதாரணங்காட்டுவர். பத்துமணிச்செய்திகள் (பத்துமணிச்    செய்திகள்/ பத்து   மணிச்செய்திகள்) முதலிய மயங்குநிலைத் (ambiguous) தொடர்களையும் காட்டலாம் என்பது என் கருத்து.

இது குறித்து எழுந்த விவாதத்தில்,

பொருள்தெரி(எழுத்து,புணரியல்39),பொருண்மை தெரிதல்,தெரிபுவேறு நிலையல்(சொல்2&3)
இசையின் திரிதல் (எழுத்து, ௸) , இசை திரிந்து இசைத்தல் (பொருள், பொருளியல் 1)
ஆகிய ஒத்த தொடர்களைக் காணும்போது  எழுத்து, சொல், பொருளதிகாரத் தொடர்பை உணரமுடியும் - என்று காட்டிப் புணர்ச்சியும் பொருள்கோளும் வெவ்வேறானவை என்ற கருத்தை விளக்க முயன்றேன்.

அவற்றை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்க.

அந்த விவாதத் தொடர்ச்சியில், பேராசிரியர் இராஜா(Raja Rajendiran),"இவற்றுடன் தடுமாறு தொழிற்பெயர்க்கு உள்ள தொடர்பையும் விளக்கினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்" என்று புணரியல்பு 4- எதிர்வினை ௧.௩.(தொடர்ச்சி) இல் எழுதியிருந்தார்(4 Jun). அப்போதே தொடர நினைத்தேன். சின்னக் கவலைகளும்  வேறு ஆர்வங்களும் குறுக்கிட்டுவிட்டன.

ஆர்வமுள்ளோர்க்கும் சோர்வு தட்டுமளவுக்குக் கால இடைவெளி நீண்டுவிட்டது. பொறுத்திடுக.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

'புலி கொல் யானை' , அல்லது 'புலி கொன்ற யானை' என்னும் தொடரை

௧.'புலியைக் கொன்ற யானை' ( புலி + ஐ + கொன்ற யானை:யானை - வினை முதல்  ; புலி -  செயப்படுபொருள் = கொன்றது யானை; செத்தது புலி)

௨.'புலியால் கொல்லப்பட்ட யானை' (புலி + ஆல்+கொல்லப்பட்ட யானை:புலி - வினைமுதல்  ; யானை - செயப்படுபொருள் = கொன்றது புலி ; செத்தது யானை)

என இரண்டாம் (ஐ) வேற்றுமைத்தொடராகவும், மூன்றாம் (ஆல்) வேற்றுமைத்தொடராகவும் விரிக்கலாம்.

தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும்
கடிவரை இலவே பொருள்வயி னான
என்னும் நூற்பாவில் இந்தத் தடுமாற்றத்தைச் சொல்கிறது தொல்காப்பியம் (வேற்றுமை மயங்கியல், 12 ). பழைய உரையாசிரியர்களின் உதாரணத்தையே மேலே தந்துள்ளேன்.

புதைநிலையில் இருவேறு தொடர்களான இவை புறநிலையில் ஒன்றாகத் தோன்றுகின்றன என மாற்றிலக்கணவியலார் விளக்கலாம். வல்லார் வாய்க் கேட்டறிக.

புணரியல்பு நோக்கில் பார்ப்போம்.
புலிகொல்   யானை
புலி    கொல்யானை
புலி  கொல்  யானை

என இடைவெளி வேறுபாடுகளாலோ, நிறுத்தற் குறிகளாலோ முற்றாகத் தடுமாற்றம் தீர்க்க இயலாது.

ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின்
வேற்றுமை தெரிப உணரு மோரே (௸ , 13 )

என்னும் அடுத்த நூற்பா பொருள் வேறுபாடுணரும் வாய்ப்பைச் சுட்டுகிறது.

'புலி கொல் யானைக் கோடு வந்தது' எனில் புலியால் கொல்லப்பட்ட யானையினது கோடு (தந்தம்) வந்தது எனப் பொருள் தெளிவுறும்.

'புலி கொல் யானை ஓடுகின்றது' எனில் புலியைக் கொன்ற யானை ஓடுகின்றது எனப்பொருள் தெளிவுறும்.

புலி கொல்யானை - எனும் தொடரில் ஈற்றுப்பெயர் யானை. அந்த யானை என்னும் சொல்லை அடுத்து (அடுத்து வருவதை "முன்னர்" எனல். இதனை இடமுன் என்பர்) வரும் சொல்/தொடரால் (மெய்யறி பனுவல்) பொருள் வேற்றுமை உணரவியலும் என்று உரையாசிரியர்கள் மேற்குறித்த உதாரணங்கள் தந்து விளக்கியுள்ளனர்.

இதனால் மீண்டும் வலியுறுவது புறத்தே புலனாக நிற்கும் புணர்ச்சியால் மட்டுமே பொருள் வேறுபாடுணர்த்த இயலாதென்பதாம்.

அடுத்து வரும் மெய்யறி பனுவலாலும் பொருள் வேறுபாடறிய வாய்ப்பின்றிப் போகலாம் என்கின்றனர் உரையாசிரியர்கள்.

'புலி கொல் யானை கிடந்தது' எனில் புலியைக் கொன்ற யானை கிடந்தது, புலியாற் கொல்லப்பட்ட யானை (செத்துக்) கிடந்தது என அவர்களே உதாரணமும் ஓதியுள்ளனர்.
இங்கு ஒட்டுமொத்தச் சூழலால்தான் பொருள் வேறுபாடுணர முடியும்.

தடுமாறு தொழிற்பெயர்'களும் மயங்குநிலைத் ( ambiguous ) தொடர்களே. ஆனால், சற்று வேறுபட்டவை; சூழலால் அன்றிப் பொருள் வேறுபாடு விளங்க வாய்ப்பே அற்றவை.
எனவே,தடுமாறு தொழிற்பெயரின் இலக்கணம் பொருள்கோள் பற்றியது; புணர்ச்சி பற்றியதன்று.

எனினும்   நிலைமொழி வருமொழிகளாய்ச் சொல்லொடு சொல் தொடருமிடத்துப் புணரியல்பு நோக்கிலும் காணலாம்.

ஆர்வமுள்ளோர் அறுவைக்கோடு தாண்டித் தொடரலாம்.

🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪

இனி சற்றே இலக்கணம் சார்வோம்.

மேற்குறித்த வேற்றுமை மயங்கியல் நூற்பாக்களின் 'தொழிற்பெயர்' , 'மெய்யறி பனுவல்' ஆகியன பற்றி முதலில் பார்ப்போம்.

தொல்காப்பியம் தொழிற்பெயர் என்னும் ஒற்றைக் குறியைத் தொழிலின் பெயர் ( நடை), தொழில் நிகழ் பெயர் (நடத்தல்), வினையாலணையும் பெயர் (நடந்தவர்) மூன்றற்கும் உரியதாக ஆள்கிறது.

புள்ளி மயங்கியலில் தொழிற்பெயர் என்பது முதனிலைத் தொழிற்பெயரைக் குறித்தே வழங்கப்பட்டுள்ளது; விளிமரபில் ஓரிடத்தில் மட்டும் வினையாலணையும் பெயரைக் குறிக்கிறது.

தடுமாறு தொழிற்பெயர் என்பதற்குப் பொருள் கொள்வதில் பழைய உரையாசியர்களிடையே சற்று வேறுபாடு காணப்படுகிறது.

இளம்பூரணர் : தடுமாறுதல் என்பது இரண்டற்கு[ம்] உரித்தாய்ச் சென்று வருதல்; கோறல் தொழில் இரண்டற்கும் ஒக்கும் ( வேற்றுமை மயங்கியல், 12 இன் உரை)

கல்லாடர்: கொல்லுதல் தொழில் இரண்டிற்கும் சென்று வருதலின் தடுமாறு தொழிற்பெயர் எனப்பட்டது.

'ஒருவர்' : தடுமாறு தொழிற்கு ஒத்த தொழில் இரண்டற்கும் சேறல். (ஒத்த= ஏற்ற)

இம் முவரும் தடுமாறுதற்கு வாய்ப்பான வினைச் சொற்களைக் குறிக்கும் பொதுக்குறியாக இவ்விடத்தில் தொழிற்பெயர் என்பதைக் கருதுகின்றனர் (போலும்!).

சேனாவரையர் : தனக்கே உரித்தாய் நில்லாது ஒருகால் ஈற்றுப்பெயரோடும் சென்று தடுமாறு தொழிலொடு தொடர்ந்த பெயர்
நச்சினர்க்கினியர்: [சேனாவரையரை அப்படியே வழிமொழிந்துள்ளார்]
தெய்வச்சிலையார் : இரண்டு பொருட்கண் தடுமாறிவரும் தொழிலையுடைய பெயர்

இவ்விருவரும் சொல்லளவில் சிற்சில வேறுபாடிருப்பினும் ஏறத்தாழச் சேனாவரையர் கருத்துடையராய்த் தடுமாறு தொழிலொடு தொடர்புடைய பெயரைக் குறிப்பது தடுமாறு தொழிற்பெயர் என்கின்றனர்.

'புலி கொல் யானை' என்னும் தொடரில் புலி என்பது கொன்ற என்பதனைத் தழுவுகின்றமையான் தடுமாறு தொழிற்பெயர் புலி என்ற சொல்லேயாகும் - என்று பி.சா.சுப்பிரமணிய சாத்திரியார் விளக்கிச் சொல்கிறார்.

இந்நூற்பாவின் பொருள்நோக்கச் சேனாவரையர் முதலியோர் கருத்தே பொருத்தமாகத் தோன்றுகிறது. இளம்பூரணர் முதலியோர் தொழிற்பெயர் என்பதைப் பொதுவான இலக்கணக் குறியாகக் கொண்டு, இங்கும் அப்பொருள் குறிப்பதாகவே விளக்க முயல்கின்றனர்.

அடுத்தது மெய்யறி பனுவல்.

இளம்பூரணர் : பொருளறிய வருஞ்சொல்
கல்லாடர்:[இளம்பூரணரை வழிமொழிந்துள்ளார்]

சேனாவரையர்: பொருள் வேறுபாடுணர்த்தும் சொல்
நச்சினார்க்கினியர்:[சேனாவரையரை வழிமொழிந்துள்ளார்]
'ஒருவர்': [சேனாவரையரை வழிமொழிந்துள்ளார்]

தெய்வச்சிலையார் : பொருள் அறியவரும் உரை

தொல்காப்பியத்தில் 'மெய்' என்பது பற்பல பொருள் குறித்து வந்துள்ளது. திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனத் 'தொல்காப்பியச் சிறப்பகராதி' ,  மெய்யெழுத்து, சொற்பொருள், பொருள், வடிவம், உண்மை, நிலை, இயல்பு, வழக்கு, உருபு, உடல் முதலிய பொருள்களில் அச்சொல் பயன்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

உரையாசிரியர் அனைவரும் மெய் என்பதற்குப் 'பொருள்' எனப்பொருள் கொண்டுள்ளது ஏற்புடைத்தே.

பனுவல் என்னும் சொல்லை இவ்வோரிடத்தில் மட்டுமே பாடமாகக் கொள்கிறார் இளம்பூரணர்.

சின்மென் மொழியான் சீர் புனைந்து யாப்பின்
அம்மை தானே அடி நிமிர்வு இன்றே

என்பது 'அம்மை'யின் இலக்கணம் கூறும் நூற்பாவிற்கு இளம்பூரணர் கொள்ளும் பாடம்.

பேராசிரியரும் அவரை அடியொற்றி நடந்த நச்சினார்க்கினியரும் முறையே

சின்மென் மொழியான் தாய பனுவலோ(டு)
அம்மை தானே அடி நிமிர்வு இன்றே

சின்மென் மொழியான் தாய பனுவலின்
அம்மை தானே அடிநிமிர்வு இன்றே

என்று 'அம்மை' இலக்கணம் கூறும் நூற்பாவிற்குப் பாடம் கொண்டுள்ளனர்.

"தாய பனுவலோடு என்றது, அறம் பொருள் இன்பமென்னும் மூன்றற்கும் இலக்கணம் சொல்லுப[போன்று]* வேறு இடையிடை அவை அன்றியும் தாய்[தாவி]ச் செல்வதென்றவாறு " என்பார் பேராசிரியர்.[* புன்னாலைக் கட்டுவன் வித்துவான்  சி.கணேசையர் கருத்து]

பனுவல் என்பதற்கு 'இலக்கணம்' எனப்பொருள் கூறியுள்ளார். அவர் தரும் எடுத்துக்காட்டை (குறள். 675) நோக்க ஒன்றன் தன்மையை  வரையறுத்துக் கூறுவனவற்றை இலக்கணம் எனக் கொண்டுள்ளமை புலனாகிறது.

அவ்வாறன்றி நயம் பொதிந்தவற்றை - அவர் தரும் எடுத்துக்காட்டு குறள்.1112 - இலக்கியம் எனச் சுட்டி அவற்றைத் தாய பனுவல் என்கின்கிறார்.

நச்சினார்க்கினியர் பேராசிரியரை வழிமொழிந்துள்ளார்.

தடுமாறு தொழிற்பெயர்ப் பொருளின் தெளிவு பற்றிய 'மெய்யறி பனுவல்' என்பதில் பனுவல் = சொல் என்று நச்சர் சேனாவரையரை வழிமொழிந்துவிடுவது ஆய்வுக்குரியது.

வேற்றுமை மயங்கியலின் பனுவல் என்பது எதைக் குறிக்கிறது? தெய்வச்சிலையார் பனுவல் = உரை என்கிறார். இது சொல் என்பதைக் கடந்த ஒன்றை - ஒட்டுமொத்தச் சூழலை -கருதுகிறதா?

குறிப்பிட்ட தடுமாறு தொழிற்பெயர்த் தொடருக்கு முந்தைய சூழலாலும் பொருள் தெளிவுறலாம்.
1.அந்தக் கொம்பன் யானையின் வலிமைக்கு எல்லையில்லை. அது புலி கொல் யானை.
2.கூர்ங்கோட்டதாயினும் புலி தாக்குறின் என்ன ஆகும். பாவம்! இது புலி கொல் யானை.

1. புலியைக் கொல்லும் யானை
2. புலியால் கொல்லப்பட்ட யானை.

எனவே ஈற்றுப்பெயரை அடுத்துத்தான் ( "முன்னர் " -இதனை இடமுன் என்பார்கள்) மெய்யறி பனுவல் வரவேண்டுமா? அல்லது அது பெரும்பான்மைப் புழக்கம் கருதிய இலக்கணமா?

இன்னொன்றையும் பார்ப்போம். புலி கொல் யானை (வினைத் தொகை),
                                                                          
                                                              புலி கொன்ற யானை (பெயரெச்சம்)

ஆகியவற்றில் ஈற்றுப்பெயர் யானை. (தடுமாறு தொழிற்பெயர் புலி எனலாம்)
                                                                          
'இப்புலி யானை கொன்றது' என வினைமுற்றில் முடியும் தொடரிலும் தடுமாறு தொழிற்பெயர் காணமுடியும். இங்கு ஈற்றில் உள்ளது வினைமுற்று. அவ்வாறெனில் இதிலும் ஈற்றுப்பெயர் யானையா?

உரையாசிரியர்கள் சொல்வதுதான் இந்த வேற்றுமை மயங்கியல் நூற்பாக்களின் பொருளா?

-------------------

¶' தொடராகப் புணரியல்பு பற்றி எழுதுவதில் எனக்கொரு மனத்தடை உள்ளது. ஒரு கட்டத்தில் - மிக விரைவிலேயே கூட - அது வழக்கமான பாடநூல் பாதையில் இறங்கிவிடும்; சலித்துவிடும். எனவே , சுவையானவை; நுட்பமானவை என்று நான் கருதுவனவற்றை வரிசைத் தொடர்ச்சி இன்றி அவ்வப்போது எழுதிப் பின்பு தொகுத்து இடைவெளிகளை நிரவலாம் என்று எண்ணுகிறேன். பார்ப்போம்.' என்ற குறிப்போடு முகநூலில் எழுதிய தொடர்



இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...