தில்லைத்தானம் நடராச ஐயர் இராமச்சந்திரன்!
முதுமுனைவர் சேக்கிழாரடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன்!
நாங்கள் டி என் ஆர் என அஞ்சியும் அன்புபட்டும் அகலாது அணுகாது அழைத்து மகிழ்ந்த பேராசானைக் காலம் கொண்டுவிட்டது.
தஞ்சை, செல்வம் நகர் இல்லத்தின் - ஒரு பல்கலைக்கழகம்! - தாழ்வாரத்தில் ஊசலாடியவாறே அவர் உரையாடும் காட்சி மனக்கண்ணில் நிற்கிறது; கணீர்க் குரல் நெஞ்சில் நிற்கிறது.
" ஐயாறப்பா " என நெஞ்சார வாயார அசைவு தோறும் வழிபட்டுக் கொள்வார்.தம் குல மரபில் வழுவாது ஒழுகியபோதிலும் " சைவம் நான் நெஞ்சறிந்து மேற்கொண்ட சமயமையா " என்றார் ஒருமுறை.
போப்பையரின் (G.U.Pope) நாலடியார் மொழிபெயர்ப்பின் வழியாகவே தமிழின் ஆழமுணரத் தலைப்பட்டதாக ஒருமுறை சொன்னார்.
காண்போரை வயப்படுத்தும் முகக்கனிவும் , நீறு துலங்கும் நெற்றியும் , தாம்பூலம் மணக்கும் வாயும், சொல்தோறும் தென்படும் நூலறிவார்ந்த நுண்ணறிவும் , பேச்சிலும் எழுத்திலும் தமிழெனில் தமிழே ஆங்கிலமும் அவ்வாறே என ஒன்றிலொன்று கலவாத மொழித் திறமும் , எழுத்தில் மட்டுமன்றிப் பேச்சிலும் ஒலிப்பு முறைமை பிறழாமையும் , தமிழினின்றும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும்போது இருமொழி மரபின் செம்மாப்பும் குன்றாமல் பேணுவதும் , சேக்கிழாரையும் சேக்சுபியரையும் கம்பனையும் மில்டனையும் (மாமுநி மில்டனார் என்பார்) தொடர் வகுப்புகளில் கேட்டார்ப்பிணிக்கும் தகையவாய்ப் பொழிவதுவும், இன்னும் திருமுறைகள், திவ்வியப் பிரபந்தம் முதலிய பற்பல இலக்கிய இலக்கணப் புலமையும் ,எந்நிலை அறிவினராயினும் அவரவர் உளங்கொளச் சைவ சித்தாந்தத்தை உணர்த்துவதும் , பாரதி , பாரதிதாசன் , புதுமைப்பித்தன் , திருலோக சீதாராம் (அவரது சிவாஜி இதழின் பிற்கால ஆசிரியர் டி.என்.ஆர். ) என நவீனத் தமிழ் இலக்கியங்களுக்குள்ளும் புகுந்து புறப்படுவதும் , கேட்போர் காலமென ஒன்று உண்டென்பதையே கருதாத அளவிற்குப் பல்துறை அறிவின் விரிவோடு நகை முதலாய சுவை பொதிந்த துணுக்குகளால் தடுத்தாட் கொள்ளுவதும் , இன்னும் இன்னும் என் சிற்றறிவுக் கெட்டாத மேதைமை கொண்ட பேராசான்.
அடிப்படையில் அவர் திறமான வழக்கறிஞர். ஆனால், அவரது தேர்வு இலக்கியமும் மெய்யியலும். இவைதாம் அவருக்குப் புகழ் ஈட்டித்தந்தன ; அவர்தம் அடையாளமுமாயின.
தலைமையாசிரியர் திரு. நடராசன் தம் 55 ஆம் அகவையில் தம்மினும் இளையனான என் மேற்பார்வையில் - அறிமுகத்துக்கு மேல் நான் அறியாத - சைவசித்தாந்த சாத்திர நூல்களின் உவமைகள் பற்றி ஆராய முற்பட்டார் . நான் தயங்கினேன். ஒருவழியாக
டி என் ஆர் அவர்களைச் சரணடைந்தோம். ஆய்வாளர் நெறியாளர் இருவரும் வந்தால்தான் நடத்துவேன் என்று நிபந்தனை விதித்தார் டி என் ஆர்.
ஏறத்தாழ ஆறு மாதம் அவரது நேர வசதி சார்ந்து பாடம் கேட்டோம். ஒரு நல் வாய்ப்பு.
நண்பர் பேரா. அரங்க. சுப்பையா பெரியபுராணப் பதிப்புகள் பற்றி ஆராய எடுத்துக்கொண்டதே சேக்கிழாரடிப்பொடி டி என் ஆர் வழிகாட்டலையும் அவரது இல்லத்தின் மிகுபெருநூலகத்தையும் கருத்தில் கொண்டுதான். அப்போதும் நெறியாளனான நானும் உடன் வரவேண்டும் என்பது நிபந்தனை.
இன்னும் பற்பல நிகழ்ச்சிகள்.
தமக்கென உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவராயினும் கருத்து வேறுபாடுகள் கருத்துநிலை மாறுபாடுகள் கருதாமல் உரையாடுவார் ; தம் அரும்பெரும் நூலகத்தைத் தடையின்றிப் பயன்கொள்ள இசைவார். அறிவொழுக்கம்!
கடைசியாகத் தி.ஜானகிராமன் நூல்களின் முதல் பதிப்புகள் பற்றி உசாவ அவரைச் சந்தித்து நான்காண்டுகளாகியிருக்கலாம். பாரதிதாசன் பல்கலைக் கழகப் புத்தொளிப் பயிற்சி ஒன்றிற்கு வல்லுநராக வந்திருந்தார். நான் ஓய்வு பெற்றுவிட்டேன் எனினும் அவரைச் சந்தித்திருக்கலாம். யாது காரணத்தாலோ இயலாமற் போயிற்று.
அவர் சென்னை வாசியாகிவிட்டார். சந்திக்கும் வாய்ப்புக் கிட்டத்தட்ட அற்றுப்போய்விட்டது. இனி வாய்ப்பே இல்லை.
போற்றத்தக்க வேண்டிய அரிய மனிதரை நினைவுகூர்ந்த விதம் சிறப்பு.
ReplyDelete