Monday, October 12, 2020

சி.சு.செல்லப்பாவின் 'வாடிவாசல்' : கட்டமைப்பு - கருத்து - கலை

                                               சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ 

                                                   கட்டமைப்பு - கலை - கருத்து

                                                                   (ஓர் அலசல்)*

ஏறுதழுவுதலின் வரலாற்றைச் சிந்துவெளியிலிருந்தே தொடங்கலாம். தமிழில் கலித்தொகை அந்த வீரவிளையாட்டை ஆயர் வாழ்வியல் பின்னணியில்  படம்பிடித்துக்காட்டுகிறது.ஆனால், அதற்குப் பின் தமிழில்  பதிவுகள் அருகியே காணப்படுகின்றன. 

'கமலாம்பாள் சரித்திரம்' நாவலினூடாகப் பாமரச் சாதிகள் ஜல்லிக்கட்டின் மீது காட்டும் ஆர்வத்தை மேட்டுக்குடி எள்ளல் பார்வையில் சித்திரித்தார் பி.ஆர்.ராஜமய்யர

அடுத்த குறிப்பிடத்தக்க பதிவு கு.ப.ராஜகோபாலனின் செறிவான சிறந்த சிறுகதைகளில் ஒன்றான 'வீரம்மாளின் காளை' .  ஒருவகையில் 'வாடிவாசலு'க்கு முன்னோடியெனினும் நான்கே பக்கச் சிறுகதையாதலின் விவரிப்பு மிகக்குறைவு ; பண்பாடு சார்ந்த பாத்திரவுணர்வுகளுக்கே அழுத்தம் மிகுதி. 

 அடுத்தது 'வாடிவாசல்' தான் ஜல்லிக்கட்டுக்கு நவீனப் புனைகதை வடிவில் ஒரு காவிய மதிப்பை ஏற்படுத்தியது. 



 “மனுஷன் இதை விளையாட்டாக நினைத்தாலும் மிருகத்துக்கு அது விளையாட்டல்ல. இதுதான் ஜல்லிகட்டு.” என முதற்பதிப்பின் முன்னுரையில் கூறும் செல்லப்பா (ப.13) “இந்த வாடிவாசலில் மனுஷ ரத்தம் சிந்தலாம்; காளை உடலில் ஒரு சொட்டு ரத்தம் காணக்கூடாது. எதன் கை ஓங்குதோ அதுதான் தூக்கும்” (௸) என நிபந்தனையையும் தெளிவுபடுத்துகிறார். இம் முன்னுரையின் நிறைவில், “இந்தப் பக்கங்களை மூடி வைத்துவிட்ட பிறகும் அந்தக் காளையும் மனிதனும் வாடிவாசலும் உங்கள் நினைவில் இருந்து கொண்டே இருக்கும். இந்தக் கதை மூலம் ஒரு புது உலகத்தையே அறிமுகப்படுத்துவதாக நான் நினைக்கிறேன்” என்கிறார்.



     சி.சு. செல்லப்பாவின் புனைவு, ஜல்லிக்கட்டைக் கண்டோர்க்கும் கலந்து கொண்டோர்க்கும் கூட, புதிய உலகத்தை அறிமுகப்படுத்தும் என்பதைப் படித்துப் பயின்ற ஒரு வாசகனாக என்னால் உறுதி கூற முடியும். அந்த உலகத்தை உணர்வதுதான் இலக்கிய அனுபவம்; இலக்கியத்தின் இருப்புக்கான நியாயமும்கூட. 

   இதனைச் சி.சு.செல்லப்பா எப்படி நிகழ்த்தியிருக்கிறார் என்பதை அவரே பரிந்துரைத்த, செய்து காட்டிய அலசல் முறை விமர்சன நோக்கில் காணலாம்.


அலசல் முறை:

    மாத்திரை முதலா அடிநிலை காறும் / நோக்குதல்… என்கிற தொல்காப்பியம் அலசல் முறையின் தமிழ் முன்னோடி. தொல்காப்பியம் பாவடிவிலான படைப்புகளைக் கொண்டு இதனை வரையறுத்திருக்கிறது. புனைகதைகளை அணுக வேறுகூறுகள் உள்ளன.

    

     I. கதைப்பின்னல் 

    II. பின்னணி 

    III.  மாந்தர் 

    IV. நோக்குநிலை 

    V. மொழிநடை 

     VI. அடிக்கருத்து 

    VII. கருத்துநிலை

ஆகியவை முக்கியமானவை. வேறு சிலபல கூறுகளையும் சேர்ப்பதுண்டு. இவற்றைக் கொண்டு புனைகதைகளை அலசி, திறன் காணவியலும். 

    

    கதைப்பின்னல்:

கதையின் காரணகாரியத் தொடர்ச்சியே கதைப்பின்னலாகும். நாவல்களில் கதைப்பின்னலுக்கான வாய்ப்பு மிகுதி; சிறுகதைகளில் காணலரிது.

‘வாடிவாசல்’ பதிப்புக் குறிப்பில் குறுநாவல் எனப்பட்டாலும், இது சிறுகதையே. சி.சு.செல்லப்பாவே தம் ' தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது ' என்னும் நூலின் இரண்டாம் பதிப்பில்(1974)  அளவால் நீண்ட சிறுகதைகள் சிலவற்றைக் குறிப்பிடும்போது அப்பட்டியலில் வாடிவாசலையும் சேர்த்திருக்கிறார்.இதனை ஒரு நெடுஞ்சிறுகதை என்று ஜெயமோகன் சொல்வது ஏற்புடையதே.


    சி.சு. செல்லப்பா மேற் குறித்த தம் நூலில் சிறுகதை, நாவல் ஆகிய இரண்டன் தொடக்கங்களை உறழ்ந்து காட்டி, “சிறுகதை ஆரம்பம் திடுதிப்பென ‘காலப்’ எடுத்த மாதிரியும் நாவல் ஆரம்பம் மெதுவாக முதல் எட்டு நகர்த்த ஆரம்பிக்கிற மாதிரியும் நம் மனதில் படும்” (ப.56) என்கிறார்.

    

    “ஜல்லிக்கட்டு ஆரம்பமாவதற்கு வெகு முன்னாடியே வாடிவாசலைச் சுற்றிக் கூட்டம் எகிறிநின்றது” என நேரே நிகழ்ச்சியை வருணிக்கும் தொடக்கம், ஒரு சிறுகதைக்குரிய தொடக்கமேயாகும். “இது சில வருசங்களுக்கு முன் சந்திரோதயம் பத்திரிகையில் வெளியானது. அதைப் பின்பு வளர்த்தி எழுதினேன்” (ப.11) என்கிறார் சி.சு.செல்லப்பா. 1947இல் வெளிவந்த ஒரு சிறுகதையின் நீட்சியே ‘வாடிவாசல்’.

    

    எனவே, வாடிவாசல் குறிப்பிடத்தக்க கதைப்பின்னல் எதையும் கொண்டிருக்கவில்லை. எதிர்பாராத் திருப்பங்கள் ,  தொங்கல் (Suspense) முதலியன இன்றிக் கதை ஆற்றொழுக்காகச் செல்கிறது; நெகிழ்வுப் பின்னல் கதை என்று சொல்லலாம்.

ஒன்பது முதன்மை நகர்வுகளாகக் கதைப்போக்கைப் பகுக்க வாய்ப்புள்ளது.


1. முதன்மைக் கதைமாந்தரான பிச்சி வெளியூரிலிருந்து மைத்துனனும் தோழனுமாகிய மருதனுடன் ஜல்லிக்கட்டுக் களத்துக்கு வருதல்.


2. முதிர்ச்சியின் நிதானமும் வீர விளையாட்டின் பெருமிதமும் கொண்ட உள்ளூர்க் கிழவன் , பிச்சிக்கு இணக்கமான கதைமாந்தராக அறிமுகமாதல்; தொடர்தல்.

3.  நாலைந்து வருஷங்களுக்கு முந்திய உசிலனூர் சல்லிக்கட்டில் மாடுபிடித்து மாண்ட வீரனின் பெயரைக்கிழவன் நினைவுகூர முயன்றநிலையில் அந்த அம்புலியின் மகனே பிச்சி எனக் கேட்டுக் கிழவன் திக்பிரமை கொள்ளுதல்.

    இதைச் சி.சு.செல்லப்பா, தொங்கலில் வைத்திருக்கலாம். கதையின் முடிவில் புதிரவிழ்ப்புச் செய்திருக்கலாம். ஆனால், அத்தகைய செயற்கை உத்திகளின்றி இயல்பாகக் கதை நகர்த்துவதனூடாக விறுவிறுப்பைத் தக்கவைத்துக் கொள்ளுவதே அவரின் சாதனை.

    காரிக்காளையை அடக்கும் பிச்சியின் நோக்கத்தால் பிச்சி X காரி என்னும் பிணக்கநிலை  இப்பகுதியில் தெரிகிறது. காரிக் காளைக்குத்  தனிப்பட்ட பகை ஏதுமில்லை.

    

4. உள்ளூரில் மாடுபிடிப்பதில் வல்ல, ஜமீன்மாரின் தயவில் வாழ்கிற, ஆனால், வஞ்சகமான - வாடிவாசல் கதையின் ஒரேஎதிர்நிலை - துணைமாந்தர் முருகுவின் அறிமுகம். முருகு பிடிக்க வேண்டிய இரண்டு முரட்டுக் காளைகளை, அவன் பின்வாங்கியதால், வென்று காட்டிய பிச்சியின் மீது முருகு வன்மம் கொள்கிறான்.

 இப்பகுதியில் முருகு X பிச்சி, ஜமீன்தார் X பிச்சி ஆகிய இரு பிணக்கநிலைகள் புலனாகின்றன.

 

5. எவராலும் பிடிக்க முடியாதென்று கருதப்பட்ட வலிமையும், ரோஷமும் மிகுந்த, பெருமிதமும் தந்திரமும் இயைந்த வாடிபுரம் காளையைப் பிச்சி களத்தில் எதிர்கொள்ள ஆயத்தமானான். “பார்வையாளர்களின் முன்வரிசைக் கூட்டம் அசைவு காட்டக்கூட பயந்து காளையின் வெறிக்கு தூபம் போடும் சமிக்ஞை எதுவும் செய்யத் துணியாமல் சவத்தை நிறுத்திவைத்தது மாதிரி பதிந்து நிற்கப் பிரயாசப்பட்ட”(ப.66) நிலையில் ‘குர்ரீ’ என்று வஞ்சமாகத் தூண்டிவிடும் முருகுவின் செயலை, ஊராரே இகழ்ந்து பேசுகிறார்கள்.

    இங்கே ஒரு பதற்றம் உருவாகிறது. சிற்சில அலைமோதல்களோடு நடந்து வந்த நிலை மாறிக் கல்பொருதிரங்கு மல்லற் பேரியாறாய்க் கதை விசையுறுகிறது.

    படிக்கிறவர்கள் சி.சு. செல்லப்பாவின் எடுத்துரை (Narration)என்பதைக் கடந்து கதைக்குள் கலந்து நின்று இழுவிசையை (Tension) அனுபவிக்க நேர்கிறது.

    

6. பிச்சி மரபுப்படி மூன்று தாவல்களையும் தாக்குப்பிடித்துக் காளையை வெல்லுதலும் பின்னரும் போராடி மெடல், தங்க நகைகள் கோத்த சங்கிலியுடன் கூடிய பட்டுத்துணியைக் கைப்பற்றுதலும் உச்சம்.

7.  காளைஆவேசமடைதல்; பிச்சி தப்ப முயலுதல்; உயிர் தப்பினாலும் தொடையில் ‘சதக்’ எனக் கொம்பு பாய்தல்.

    காளையின் ரோஷம் வெறியாயிற்று. பத்துப்பேர் காயம் அடைந்தனர்; இருவர் செத்தனர்; ஆற்றைநோக்கி ஓடியபின்னும் வெறியடங்கவில்லை.

8. விளையாட்டின் விதியும் மரபும் உணர்ந்து ஜமீன்தார் பிச்சியைப் பாராட்டுவதும், பிச்சியின் பணிவும்.

9. ஜமீன்தார் காரிக்காளையைச் சுட்டுக் கொல்லுதல். “என்ன இருந்தாலும் அது மிருகம்தானே” எனும் மக்களின் குரல்.

 


நோக்குநிலை :

    ‘வாடிவாசல்’ ஆசிரியர் நோக்குநிலையிலிருந்து, படர்க்கைக் கூற்றாகவே எடுத்துரைக்கப்படுகிறது. ஆசிரியர் தனது நோக்குநிலையிலிருந்து எடுத்துரைக்கும்போது அவருக்குச் சுதந்திரம் மிகுதி. ஆனால் எல்லாவற்றிலும் தம்மை முன்னிறுத்திக் கொண்டால், படிப்பவர் சுதந்திரமாக உணர இயலாது.

    

    மாறாகச் செல்லப்பா ஜல்லிக்கட்டை உற்று நோக்கியுணர்ந்து திளைத்து காட்சிகளையும், நிகழ்ச்சிகளையும், மாந்தர்களையும், உணர்வுகளையும் தம் வருணனைத் திறத்தாலும் உரையாடலாக்கத் திறத்தாலும் இயன்றவரை தம்மைத் துருத்திக் கொள்ளாமல் எடுத்துரைக்கும்போது படிப்பவர் தாமே கதைக்குள் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

    

பின்னணி:

    ‘செல்லாயி சல்லிக்கட்டு’ என ஊர்த்தெய்வத்தின் பெயரால் சுட்டும் செல்லப்பா, அந்த ஊரின் பெயரைச் சொல்லவில்லை. பிச்சியும் மருதனும் கிழக்கத்தியான்கள் என்று உள்ளூரார் சொல்கின்றனர். பிச்சியின் ஊர் உசிலனூர் என்று குறிப்பிடப்படுகிறது.

    ஜல்லிக்கட்டுப் பரவலாக நடக்கும் மதுரை, ராமநாதபுரம் வட்டாரம் சார்ந்த ஓர் இடம் கதை நிகழிடம். அதனுள்ளும் ஜல்லிக்கட்டுக் களமே இக்கதையின் பின்னணி. முற்றிலும் ஜல்லிக்கட்டுக்களம் தவிர வேறு எந்த இடமும் இடம் பெறவில்லை. கடந்த கால நினைவு கூரலில், உசிலனூர் ஜல்லிக்கட்டுக் களம் போகிற போக்கில் சுட்டப்படுகிறது.

    சி.சு. செல்லப்பா ஜல்லிக்கட்டுக் களத்தை அதன் இயக்க நிலையில் திறம்படக் காட்டியிருக்கிறார்.

    

    இவ்வொற்றைக் கதைக்களத்தாலும் இது சிறுகதை என்பது உறுதியாகிறது.

  

    உயிரல் பொருட் சூழலை விடவும் உயிரியக்கத்தையே பெரிதும் காட்டுகிறார் செல்லப்பா. கொட்டம் , அணைமரம், உள்தொழுவம், திட்டி, உள்வாடி, திட்டிவாசல், மரக்கட்டையடைப்புவேலி, வாசலை விட்டு வெளியேறிய காளை அணைகிறவன் கைக்குத்தப்பி வழிதேடாமல் நேராகப் போக வழிவிட்டுப் பாதை காட்டி நிற்கும் கூட்டம் ஆகியவற்றையெல்லாம் நிகழ்வு விவரணைகளுக்கூடாகத்தான் சொல்கிறார்; காலத்தையும் இயக்கநிலையில்தான் காட்டுகிறார்.

   " வெயில்பட்டுக் காச்சுப்போன, மூடி இராத அந்த அத்தனை கறுப்பு முதுகுகளையும் இன்னும் தகிப்பு தணியாத பிற்பகல் சூரியனின் கிரணங்கள் துளைத்துக்கொண்டிருந்தன. "

    இவ்வாறு இட, காலப் பின்னணியை நிகழ்ச்சிகளினூடாக அவர் அறிமுகப்படுத்துவது படிப்போர் அந்தக் களத்தை, காலத்தை - வெறும் தகவல்களாகத் தெரிந்து கொள்ளாமல் - உற்றுணர வாய்ப்பாகிறது.

    

மாந்தர்: 


பிச்சி

    ‘வாடிவாசலில்’ பிச்சி, வாடிபுரம் காளையாகிய காரிக் காளை இருவரையும் முதன் மாந்தர் என்று சொல்லலாம். அஃறிணையாயினும் காரியும் ஒரு வகையில் முதன்மை மாந்தரே.

" இரண்டிலொரு முடிவைக் காணத்தான் பிச்சியும் அன்று திட்டிவாசலை அடுத்த அடைப்பின் வலது பக்கத்து விளும்போரம் பதித்திருந்த கனத்த, பருத்த இடுப்புயர அணைமரத்தின் மீது நெஞ்சைப் பதித்துச் சாய்ந்துகொண்டு, உள்ளே இருக்கும் பனியன் வெளித்தெரியும்படியான அல்வாந்துணி குடுத்துணியும் முண்டாசுமாக நின்றுகொண்டிருந்தான். அவனை ஒட்டினாற்போல நின்றுகொண்டிருந்தான், அதேமாதிரி உடுத்த மருதன் - பிச்சியின் சகபாடி; அவன் மச்சானும்கூட. மாப்பிள்ளையும் மச்சினனும் பிரிந்து ஒரு ஜல்லிக்கட்டுக்கு போனது கிடையாது."

என்று பிச்சி, இணைபிரியா மருதனோடு அறிமுகப்படுத்தப்படுகின்றான். பின்னர் பிச்சியின் உறுதியை,

" வம்ச பரம்பரையாக வரும் மாடு பிடிக்கிற தொழிலைக் கையாண்டு வருகிற பிச்சி அதுபற்றிய பரம்பரை ஞானம் நிறைந்த ஒரு தன்னிச்சயத்துடன் அங்கே நிலை எடுத்துக் கொண்டிருந்தான்"  எனச் செல்லப்பா குறிப்பிடும்போது பரம்பரை ஞானத்தை விதந்தோதுவதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

    பிச்சியும் மருதனும் ‘வாடிபுரம் களுதே’(காரி) வராதோ எனத் தமக்குள் எகத்தாளமாகப் பேசிக் கொண்டனர். இது கேட்ட உள்ளூர்க் கிழவன் கண்டிக்கும் பாவனையில் பேசியபோது, சமாதானத் தொனியில் ‘உள்ளுர்க் காரர்களோடு எதுவும் தகராறு வந்துவிடக் கூடாதே என்ற சிரத்தை குரலில் தொனிக்க”(ப.25) பேசுகிறான் பிச்சி.

    இளமைத்துடிப்பும் காரியத்தில் கண்ணும் ஒருங்கிணைந்தவன் பிச்சி என்பதும் அதற்கு இசைவானவன் மருதன் என்பதும் தொடர்ந்தும் பேணப்படுகிறது.

    கிழவனால் பாராட்டப்பட்ட, உசிலனூர் ஜல்லிக்கட்டில் காரிக்காளையைப்பிடிக்க முயன்று உயிரீந்த அம்புலியின் மகன் பிச்சி எனக் கேட்ட கிழவன் திக்பிரமை பிடித்து நின்ற நிலையில்

பிச்சியின் கண்களில் நீர் தேங்கி நிற்பதைக் கிழவன் கவனித்தான். திடீரென்று வந்து எதோ அமுக்கனதுபோல அந்த கிழவனுக்கு அந்த அளைஞனிடம் ஒரு பாசம் ஏற்பட்டுவிட்டது. “அம்புலிக்கு பிறக்கக் குடுத்து வச்ச பயடா நீ!” என்று கிழவன் உணர்ச்சிப் பெருக்கால் நாக்குழறப் பாராட்டினான். “பிச்சித் தம்பி!” என்று தோளை அமுக்கி கிழவன் சேர்த்தான். “மனுஷனும் சரி மாடும் சரி, வாடிவாசல்லே கண்ணீரு சிந்தப்படாது. மறச்சாதிக்கு அது சரியில்லே - அதுவும் அம்புலியை அப்பனா படைச்சவனுக்கு!”(ப.35) என்னும்போது பிச்சியின் உணர்ச்சிவயப்பாடும் சாதிப் பண்பும் ஒருங்கு விதந்து கூறப்படுகின்றன. அப்பன் அம்புலித்தேவனை நினைவு கூர்கிறான் பிச்சி:

“என்ன ஆனாலும், நீ குறுக்கே விளுந்தராதே. அப்பன் ஆணைடா. எனக்கப்புறம் இந்த வாடியெல்லாம் ஒன் ராச்யம்தான், பொறுத்துக்க. காரி உனக்கு இப்போ இல்லை,” என்று எச்சரித்து, “பையனை விட்டுடாதீங்க வாடிவாசல்லே,” என்று பக்ககத்தில் நின்றவர்களிடம் தன்னைச் சிறைப்படுத்திவிட்டு காரி மேலே பாய்ந்ததை நினைத்துக் கொண்டான். அப்பன் குடல் வெளியே வந்தபோது ஊற்றாக பெருகி வழிந்த ரத்த வாசனை இப்போது அவன் மூக்கில் நெடியேறிற்று"

பிச்சியின் உறுதியை ஓர் உரையாடலின் ஊடாகப் புலப்படுத்துகிறார் செல்லப்பா.

    “பார்த்தியா பிச்சி, வாடிபுரம் காளைக்கு வந்திருக்கிற மவுசை?” என்றான் மருதன் கிண்டலாக.

    “பார்த்துடலாம்,” என்று பிச்சி ஒரே வார்த்தைதான் சொன்னான், அதுவும் மெதுவாக. கிழவன் அதை உன்னிப்பாகக் கேட்டுவிட்டான். அந்த வார்த்தையைப் பிச்சி அழுத்தின விதம் கிழவனை ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டது.

    “என்ன தம்பி, விளையாட்டுக்கு பேசறியா, இல்ல…” என்று குரல் தடுமாறக் கலவரத்துடன் பார்த்துக் கிழவன் கேட்டான். பிச்சியின் வார்த்தைக்கு ஒரே அர்த்தம்தான் உண்டு. அந்த அர்த்தத்தில்தான் அவன் சொல்லியிருக்கிறான் என்பதைக் கேட்டும் அவனால் நம்பமுடியவில்லை.

    முருகு, பிச்சியைச் சீண்டும்போதும் உறுதியோடு கட்டுப்படுத்திய குரலில்  பதிலடி கொடுக்கிறான் பிச்சி.

    பிச்சி மாடு பிடிக்கும் திறனை - அவன் ஆடுசாகுடி பில்லைக் காளையையும், பளையூர் காளை கொராலையும் மருதனின் செயலிசைவுடன் வெற்றி கொண்டதிலிருந்து - கண்டவர்கள் குறிப்பான மாடுகளுக்குத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என உணர்ந்தனர்; ஜமீன்தார் உணர்ந்தார்.

    ஜமீன்தார், “டேய், வாடிபுரம் காளையை புடிச்சிப் பாக்கிறயா?” என்று உறுதி குலைந்து கேட்க. “உறுதியாச் சொல்ல முடியாதுங்க” என்று தலைகுனிந்து பிச்சி இழுத்தது நுட்பமான இடம்.

    ஜமீன்தாரிடம் பணிவு குன்றாமல் நடந்த அதே வேளையில் பழிவாங்கும் தன் கடமையை நிறைவேற்றும் உறுதியும் இருந்தது. ஜமீன்தார் புரிந்து கொண்டதால், அவர் பின்னால் அமர்ந்திருந்த காரியஸ்தர் உசிலனூர் ஜல்லிக்கட்டில் செத்தவன் மகனான இவன் இதைப் பிடிக்கவே வந்திருக்கிறானாம் என்றபோது “அவன்தான் நெஞ்சைத் திறந்த என்கிட்டவே பேசிட்டானே” என்கிறார் ஜமீன்தார்.

    பின்னர், பிச்சி வாடிபுரம் காளையோடு நிகழ்த்தும் விளையாட்டின் உத்தி நுட்பங்களையும், காளையும் சளைக்காமல் எதிர்கொள்வதையும் இறுதி வெற்றியைப் பிச்சி எய்துவதையும் காணும் போது மிகையின்றி மிக இயல்பாகத் தலைவனாக உயர்வதை உணரமுடிகிறது.

    கதை முழுதும் தோய்ந்து பயின்றால் நாம் பிச்சியைக் கண்டு கேட்டு உற்றுணரலாம். இது நெடுஞ்சிறுகதை. சிறுகதையில் மாந்தர்கள் வார்க்கப்படுகின்றனர்; வளரக்கப்படுவதில்லை. மாறாக இக்கதையில் பிச்சியின் வளர்நிலை நோக்கிய கூறுகளை உயிர்த்துடிப்புடன் காணமுடிகின்றது.

    

காரிக்காளை

    வாடிபுரம் காளை வரும் முன்னரே, ஓர் எதிர்பார்ப்புத் தூண்டப்படுகிறது. கிழவன் பிச்சியிடம், காரிக்காளை பற்றித்தான் பேசுகிறார்களா எனத் தெளிவுபடுத்திக் கொள்கிறான்.

“மீசை மொளச்சவனெல்லாம், அதை தொளுவத்துக்குள்ளற இருந்து கொண்டிட்டு வந்து, உள்வாடியிலே மூக்குக்கவுத்தை அவுக்கிறபோதே பம்மிருவானுங்க - வயக்காட்டு எலி வங்குலே இளுத்துக்கிறாப்போலே! நின்னு பார்க்கப் போறியே, அது ஆடப்போற ஆட்டத்தை! அதுமோண்ட இடத்திலேகூட காலை வைக்க பயப்படுவாங்க!(ப.32)

என்று கிழவன் அறிமுகப்படுத்துகிறான்; வரலாற்றுப் பின்னணியையும் சொல்கிறான்.

" வாடிவாசல்லே அதை அவுத்து விடறதுக்கே நடுக்கமாப் போச்சுங்க. அந்தப் பேரு நிக்கவும் தானே, அதே ஜோர்லே சமீன்தாரு வந்து கேக்கறப்போ இரண்டு முளு நோட்டுக்கு தள்ளிட்டாரு தேவரு "

இந்த வாடிபுரம் காளையின் வருகையையும் கிழவனாரே சுட்டிக்காட்டுகிறார்.

“நல்லா கூட்டத்திலே பாரு தம்பி, சமீன்தாருக்குப் பின்னாடி,” என்று கிழவன் அழுத்திச் சொன்னான். “ஒரு கரும் பய பிடிச்சுக்கிட்டு வாரான் பாரு, அதான். அவரு கிட்டே உள்ள உசந்த மாட்டை சமீன்தாரு தன் கூடவேதான் கொண்டிட்டு வருவாரு.”

வயதானவையும், சுமாரானவையும், கொஞ்சம் நல்லவையுமாகக் காளைகள் களத்துக்கு வரவர அவரவர் தகுதிக்கேற்பப் பிடிக்க முயன்றார்கள்.

    பில்லை, கொரால் ஆகிய முரட்டுக் காளைகளும் பிடிபட்ட பின், காரியை ஒரு தலைவனைப் போல் மக்கள் வரவேற்பதைக் காட்டுகிறார் செல்லப்பா.

வாடிபுரம் காளை!

    வாடிவாசலையும் தொழுவத்தையும் பிரித்து நிற்கும் ஆள் உயர வேலி அடைப்பின்மீது உட்கார்ந்து இருந்த ஒரு பையன் கத்தினான்.

    

“வாடிபுரம் காளை!”

“கருப்புப் பிசாசு!”

“ராட்சசக் காரி!”


    கத்திய அத்தனை குரல்களிலும் ஒரு நடுக்கம், திகில் வெடித்துப் பரவியது. வாடிவாசல் அமர்க்களப்பட்டது. சில விநாடிகளில் வாடிவாசலிலே முண்டியடித்து எக்கி நின்ற கூட்டம் போன இடம் தெரியவில்லை.

கூடிநிற்கும் கூட்டம் பிச்சி சாகப்போவதாக இரக்கப்படுகிறது.

அடைப்புக்குள் காரியின் மூக்கணாங்கயிற்றை அந்த மாட்டுக்காரச் சிறுவன் அவிழ்ந்துக் கொண்டிருந்தான். அந்த சிறுவன் ஒருவன்தான் அதை சிறுவயது முதல் கைமேய்ச்சலாக வளர்த்தவன். அவனுக்குத்தான் அது கட்டுப்படும். அவன் எங்கிருந்து கூப்பிட்டாலும் பசுக்கணக்காகப் போகும்.

இயல்பான நிகழ்வாயினும் சிறுவன் பற்றிய குறிப்பு பின்னர் தொடர்வதற்காகவே இங்கு வைக்கப்படுகிறது. இது சிறுகதைச் செறிவுக் கூறுகளில் ஒன்று. தொடர்ந்து செல்லப்பா, “திட்டிவாசலில் காரி ராஜாங்கமாக நின்றது” என்று தம் கூற்றிலேயே கதைத் தலைமைக்குரியதாக்கிவிடுகிறார். மேலும் “சும்மா நிற்பவர்களை வெறிபிடித்துத் தாக்கும் காளையல்ல அது. அதை நோக்கி வந்தவனைத் தான் அது மதிக்கும்”(ப.67) என அதன் பெருமிதம் கூறப்படுகிறது. இதில் முரண் குறிப்பொன்றும் உள்ளது.

    வீர விளையாட்டுத் தொடங்கியது; தொடர்ந்தது; விளையாட்டின் விதிப்படி அது தோற்றுவிட்டது. ஆனால், அதற்கு அது தெரியாது; மோதலைத் தொடர்கிறது; பிச்சியின் நெஞ்சுக்குழிக்கு நேராகக் கொம்புகள்; பிச்சியும் தப்ப இயலாமல் போராடுகிறான். விளையாட்டின் விதிக்குட்பட்டு மருதன் உயிர் காக்கும் நோக்கில் துணைக்கு வருகிறான். என்றாலும் பிச்சியின் தொடையில் ‘சதக்’ என்று கொம்பைப் பாய்ச்சுகிறது.

    பிச்சி, மருதன் இருவருமே தப்பியதால் வெறிகொண்டு கூட்டத்திற்குள் பாய்கிறது. பத்துப்பேரைக் குத்தி, இரண்டு பேரைச் சாகடித்து ஆற்றை நோக்கி ஓடுகிறது; வெறியடங்கவில்லை. ஜமீன்தாரின் இரட்டைக் குண்டுகளால் துளைக்கப்பட்ட காரியின் உயிர்ப்போராட்டம்:

" காளையின் கால் கிளறல் சடக்கென நின்றது. கொம்பலைப்பும் நின்று தொட்டில் மாதிரி முன்னும் பின்னும் முழு உடலோடு ஆடியது. வயிற்றுக்கடியில் கால்கள் துவண்டு கொடுத்தன. புட்டாணிப்பக்கம் சரிந்து பின் கால்களால் உட்காரப்போவது போல சாய்ந்து, தடாரென்று கீழே அட்டத்தில் தொப்பென விழுந்தது. விலுக் விலுக்கென்று கால்களை உதைத்துக் கொண்டு, முகத்தை மணலில் தேய்த்துக்கொண்டு கொம்பு மணலுக்குள் இழுபட வாய் வழியே வேகமாக மூச்சுவிட்டது. அதன் கடைவாய் ஓரமாக ரத்தம் வழிந்து மணலில் ஓடியது. வாய் பிளந்தது. ஒரு கடைசி உதைப்பு. விலுக்… அடங்கிவிட்டது.


காரி ஓர் அவலத் தலைவன் !


மருதன்

    பிச்சியின் மைத்துனனும் நண்பனுமாகிய மருதன் ஓர் இணைமாந்தர். பிச்சி மாடு அணையச் செல்லும் போதெல்லாம் இணைபிரியாமல் உடன் செல்பவன்; பிச்சியை விட இரண்டுமூன்று வயது இளையவன் .  இருவரும் உரையாடுவதில் உளமொன்றிய நெருக்கம் புலப்படுகிறது.

    மாடு அணையும்போது மரபார்ந்த விதிகளுக்கு உட்பட்டுப் பிச்சிக்கு உதவுவதன்றி, மருதன் மாடு அணைவதில்லை. பில்லை, குரால் இரண்டையும் வெல்லும் போது பிச்சிக்கு இசைவாகச் செயல்படுவதைச் செல்லப்பா, உரிய கலைச்சொற்களோடு விவரிக்கிறார்.

    காரியிடமிருந்த வென்ற பிச்சியை மருதன் காப்பாற்றும் ஆட்டத்தைச் சற்று விரிவாகவே பார்க்கலாம்:

    

    ‘ஒரு மாட்டுக்கு ஒருத்தன்’ என்கிற பரம்பரை விதியை அனுசரிக்கும் பரம்பரையில் வந்த மருதனுக்கு, மாட்டை அடக்குவதற்கான உதவிக்காரன் என்ற தோரணையில் இல்லாமல், உயிரைக் காப்பாற்றுவதற்கு மட்டும் வாடிவாசலுக்குள் இன்னொருவன் கை போட்ட காளையை விரட்ட எப்போது இறங்க வேண்டும் என்பது தெரியும். அந்தக் கணம் வந்துவிட்டதை அவன் உணர்ந்துவிட்டான் - எது வந்தாலும் சரி என்று.

    குபுக்கென்று, முன் வரிசையிலிருந்து பாய்ந்த காளையின் வால் குஞ்சத்துக்கு மேலாகப் பிடித்து, புறங்கையில் சுற்றிக் கொண்டு சுண்டி இழுத்தான். சுரீர் வலியால் காளை தன் ஆகாரத்தை விட்டுவிட்டு, வாலுப்பக்கம் திரும்பத் தலையை உயர்த்தியது. உயர்த்திய வேகத்தில் கொம்பை இறுக்கிப் பிடித்திருந்த பிச்சியும் தரையிலிருந்து உயர்ந்தான். வசப்பிடியை உதறிவிட்டு அப்படியே கீழே கிடக்க அவகாசம் இல்லை. காளை பளிச்சென திரும்பவும் ‘சதக்’ என்ற சப்தம் கேட்டது. எப்படியோ எசைகேடாக அவன் அடித் தொடையில் கொம்பு பாய்ந்துவிட்டது. மாடு முழுக்கத் திரும்பவும் கொம்போடு தொடை உயர்ந்தது. தொடை கிழிபட, திருகி சரிந்து விழுந்தான் பிச்சி.

    திரும்பிய காளை மருதனை, வாலைப் பிடித்தவனைச் சுழட்டிக் குத்தச் சுற்றியது. மாடு சுற்றவும் இறுக்கிப் பிடித்த வால்பிடியோடு மருதனும் கூடவே சுற்றினான். மாடும் அவனும் ஐந்தாறு சுற்றுகள் பம்பரமாகச் சுற்றிவிட்டார்கள். காளை அவனைக் குத்தப் பார்க்க, அவன் சமயம் பார்த்து விட்டு விலகித் தப்பிக்கப் பார்க்க, மருதன் தன்னைச் சுற்றி ஒரு தரம் பார்த்து,  வாடிவாசலிலிருந்து பிச்சி அப்புறப்படுத்தப் பட்டுவிட்டதைத் தெரிந்துகொண்டு காளையின் வாலைத் திருகி வலுவாக சுண்டி இழுத்துவிட்டு பளிச்செனக் கையுதறிக் கொண்டு விசிறி பின்னடித்து கூட்டத்தோடு சேர்ந்துகொண்டான். 

     தொடையில் கொம்பு பாய்ந்த  வலி பொறுக்க முடியாமல் பல்லைக் கடித்து வாய்க்குள் முனகிக் கொண்டே யாரையோ தேடுவது போல் பார்த்தான் பிச்சி

“இந்தா இருக்கேன் பிச்சி!” என்று உணர்ச்சியுடன் மருதன் அவன் அருகில் குனிந்தான். “பளி வாங்கிட்டே பிச்சி! அப்பன் மானத்தை காப்பத்திட்டே!(ப.76)

என்கிறான் மருதன். பிச்சிக்கு மருதனொரு பாகன் என்றே சொல்ல வேண்டும்.

கிழவன்

    மருதனும் பிச்சியும் வாடிபுரம் காளையாகிய காரியின் வருகை பற்றி ஏளனமாகப் பேசியது கேட்டுத் துணுக்குற்றுத் திரும்புகிறான் பாட்டையா என ஊராரால் அன்போடு அழைக்கப்படும் கிழவன். கிழவனும் இணை மாந்தரே.

    “உழுத வயல் மாதிரி, சுருக்கம் விழுந்த ஒரு கிழட்டு முகத்தில் கண்குழி ஆழத்திலிருந்து கிளம்பிய தீட்சண்யமான பார்வை அவர்களை ஒரு தரம் ஏற இறங்கப் பார்த்தது” என்பதில் கிழவன் அறிமுகமாகிறான்.

    உடன் பிச்சியும் மருதனும் பாட்டையாவிடம் பணிந்து போகிறார்கள். கிழவனும் சற்றே ஆறுதலடைந்து உரையாடல் தொடர, அவர்கள் உசிலனூர்க்காரர்கள் என்பதறிந்து பாராட்டுகிறான். பதிலுக்கு கிழக்கத்தி இளைஞர்களும் புகழ்ச்சி பாராட்டும் போது, “தம்பி கிளவனை அப்படியெல்லாம் பேசி மயக்கிற முடியாது. இளம்புள்ளே நீ. தெரியுதா?” என்கிறான். பேச்சுத் தொடர்ந்து விரைவில் இயல்பான இணக்கநிலை உருவாகும்போது, புகழ்ச்சியை ஏற்கவும் செய்கிறான்.

    காளைகளை, காளைகள் தேர்ந்தெடுக்கும் ஜமீன்தாரின் திறமையை, காளை ஒவ்வொன்றன் போக்குகளையெல்லாம் விவரிக்கும் போதே உள்ளுர்ச் சிறுவன் தாத்தாவிடம் செல்லமாக இடக்குக் காட்டுவதும் நடக்கிறது.

    பேச்சுப்போக்கில் முன்பு நடந்த உசிலனூர் ஜல்லிக்கட்டில் வீரமரணித்தவன் பற்றிப் பாட்டையா பேச, அந்த அம்புலித்தேவன் மகன்தான் பிச்சி என்றறிந்து திக்பிரமை கொண்டு, கண்ணீர் தேங்கிநிற்கும் பிச்சிக்கு ஆறுதல் சொல்லி மறச்சாதிக்கு அது சரியில்லை என்கிறான்.

    அவர்களோடு கிழவன் வெற்றிலையைப் பகிர்ந்து கொள்கிறான். வெற்றிலையின் பண்பாட்டுப் பங்கினைநோக்கக் கிழக்கத்தி இளைஞர்களைச் சமமாக மதித்து விருந்து பேணும் நுட்பம் புலனாகிறது.

    பிச்சி வாடிபுரம் காளையை அணையப்போவதாகக் கூறியது கேட்டுக் குலுங்கும் கிழவன், சாதிப் பெருமிதம் தோன்ற எச்சரிப்பதில் வாஞ்சை வழிகிறது.

பிச்சியின் தோளைப் பாசத்தோடு பிடித்து அமுக்கிச் சொன்னான். “தம்பி! கிளவன் பேச்சு உனக்கு எப்படிப் படுதோன்னு நான் நினைச்சுப் பார்த்துக்கிட முடியல்லே. அப்பனுக்கு மகன் சரியாகத்தான் பேரெடுக்கணும். நம்ப சாதிக்குணம் அதுதான். ஆனா நல்லா ரோசனை பண்ணிக்கிட்டு காரியத்துலே இறங்கு - ஒரு தடவைக்கு நாலு தடவையா. குறுத்து நல்லா வளந்து பெரிசாகணும் தம்பி. இந்தான்னு உசிரை கையிலே கொண்டே கொடுக்கிறது வேறே.”(ப.44-45)



கிழவன் காளைகளின் போக்குப் பற்றிச் சொல்லும் நுட்பங்கள் பிச்சியின் வெற்றிக்கு உறுதுணையாகின்றன. அடுத்தடுத்து பில்லை, கொரால் ஆகியவற்றைப் பிடித்து ஜமீன்தார் தரும் பரிசுத் தொகையைக் கிழவனிடமே - குரு தட்சணைபோல் - தந்துவிடுகிறான் பிச்சி.

    எங்கே மெடல், பட்டு உருமா எல்லாம் எனக் கூட்டம் குரலெழுப்பியபோது “இந்தா மவனே,” என்று மகனாகவே ஏற்று உணர்ச்சிப் பெருக்கால் நாத் தடுமாறக் கொள்ளைப் பொருளைப் பிச்சியின் கைகளில் வைக்கிறான் கிழவன்(ப.76)

    

ஜமீன்தார்

    செல்லாயி சல்லிக்கட்டை நடத்துபவரே பெரியபட்டி ஜமீன்தார்தான். ஜமீன்தாரை ஜல்லிக்கட்டில் களத்தில் இறங்காத, ஆனால் முக்கியமான, பங்கேற்பாளர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வட்டாரத்தின் ‘மவராசா’ அவர்தான். கொட்டு, மேளம், தம்பட்ட ஓசையுடன், பரிவாரங்கள் அணிவகுக்க முன் வரிசையில் ஜமீன்தாரும் சப்கலெக்டரும் வருவதைச் செல்லப்பா காட்டும் போது அரசவைக்கு வரும் தோற்றமாகவே அறிமுகமாகிறார் ஜமீன்தார். அவரது காளைகள் குறிப்பாக வாடிபுரம் காளை செல்லாயி சல்லிக்கட்டில் மாடுபிடிப்போருக்குச் சவால்; அவருக்கு வெற்றிப் பெருமித அடையாளம்.

    “என்ன தம்பி, பாக்றே? கொஞ்சம் ஒருமாதிரி மாடா இருந்தா நிமிசம் உதறிடுவாரு. வேற எந்தப் பயலுக்கு அப்படித் தெரியும்? சுழி, சுத்தம், குணம், ரோஷம் பார்த்து அம்சமா பொறுக்கிறதிலே மன்னன்(ப.38) என்று கிழவன் பிச்சியிடம் பேசும்போது ஜமீன்தாரின் நுட்பத்தேர்வு புலப்படுகிறது.

    காரிக் காளையை அடக்க முயன்றோர் உண்டு; வென்றதில்லை என்பதையும் எடுத்துக்காட்டுகிறான் கிழவன் .

    ஜல்லிக்கட்டுத் தொடங்குவதற்குமுன்பே, காரிக்காளை களத்திற்கு அறிமுகப்படுத்தப்படுகிறது:

    “ஈரேழு உலகம், அஷ்டதிக்குகளிலும் ஜயக்கொடி நாட்டிய தீர வீர பராக்கிரம பெரியபட்டி சமீன்தார் எசமானுடைய இந்த காரிக்காளை கொம்புக்கு நடுவே நெத்தித் திட்டுலே ரெண்டு பவுனு தங்கமா நடுவே கோத்துத் தொங்கவிட்டு இருக்குது. மாடு அணைகிறவன்னு சொல்லிக்ககிட்டு, அப்பன், முப்பாட்டன் பெருமையைப் பேசிக்கிட்டு இருக்கிற ஆம்புளெ மீசை முறுக்கிகள், பெண்சாதி பிள்ளை குட்டி இல்லாதவங்க, திறமிருந்துச்சுன்னா பொஞ்சாதியை அணையறாப்லே இந்த காரியை அணஞ்சு அதை அவுத்துக்கிடலாம். அத்தோடே புடிச்ச அந்த வீரனுக்கு சமீன்தாரு தன் கையாலே ஒரு சரிகை துப்பட்டாவும் இனாமாக் கொடுப்பாரு. ஆம்புளையா இருந்தா புடுச்சிக்க, பொம்புளையா இருந்தா ஓடிப்போ!”

ஜமீன்தாரின் இசைவு கேட்டு அவர் தலையசைப்புக்குப் பின்னரே ஜல்லிக்கட்டுத் தொடங்குகிறது .

    “பிச்சி ஜமீன்தார் முகத்தைப் பார்த்தான். அவரது கண்களும் முகமும் ஒரே பெருமையில் மூழ்கி இருந்தன”  என்று செல்லப்பா, பொடிவைத்து, குவிமையப்படுத்திக் காட்டுகிறார். பிச்சி ஜமீன்தாரைப் பார்க்கும்போது, ஜமீன்தாருக்கு அவன் பொருட்படுத்தத் தக்கவனாக இல்லை என்பது இயல்பானதே.

    ஜமீன்தாரின் முரட்டுக் காளையாகிய, ‘பில்லை’யைப் பிச்சி அடக்கியபோது, ஜமீன்தார் அவனை அழைப்பிக்கிறார்(நேரே அழைக்கவில்லை); ஒரு ஐந்து ரூபாய் நோட்டை அவன் கைக்குப் பறந்துவிழ எறிகிறார். பிச்சி மலர்ந்த முகத்துடன் ஏந்திப்பிடித்து, ஒரு கும்பிடும் போடுகிறான்.

    அடுத்து மற்றொரு முரட்டுக் காளையாகிய ‘கொராலை’ப் பிடித்தபோது ஜமீன்தாரே நேரடியாக, ‘ஏ, கிழக்கத்தியான்’ என்று குரல் கொடுக்கிறார்.

   " ஜமீன்தார் தன் ஆசனத்திலிருந்து முன் சாய்ந்து, பத்து ரூபாய் நோட்டு ஒன்றை அவனுடைய நடுங்கும் விரல்களில் வைத்தார். அவன் கண்களையே உறுத்துப் பார்த்துச் சிரித்தார். பிச்சியும் அவரைத் தீர்க்கமாகப் பார்த்து நன்றி ததும்ப கும்பிட்டான. மறுகணம் அவர் முகத்தில் இருந்த ஒரு சந்தோஷம் மறைவதையும் ஒரு தீவிரத்துடன் அவர் ஏதோ அவனைக் கேட்க வாயெடுப்பதையும் கவனித்தான். அவன் முகமும் சடக்கென மாறியது "

    பிச்சியை நேரே அழைத்து, ஐந்துக்குப் பத்தாய்ப் பரிசை உயர்த்தி, அவன் விரல்களில் வைத்து, அவனைப் பொருட்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஜமீன்தார் ஆட்பட்டதை - அந்த மாற்றத்தை - கதைப்போக்கிலேயே காட்டியிருப்பது செல்லப்பாவின் திறன்.

    வாடிபுரம் காளையைப் பிடிக்கும் நோக்கமும் பிச்சியிடம் இருப்பதைக் கேட்டுச் சுணங்கிப் போகிறார். இதை உணர்ந்து பிச்சியிடம் கூறும் கிழவனுடனான உரையாடல்:

    “நீயும் கவனிச்சியா? வேலைக்காரன்னு தெரிஞ்சா மதிப்பாரு. அவரு குணம்,” என்றான்   கிழவன்.

    “ஆனா, தன் மாடுன்னா அந்த நினைப்பு வேறேதான் பாட்டயா,” என்றான் பிச்சி.

    “ஒத்துக்கிடறேன் தம்பி,” என்று கிழவன் சொன்னான். 

இறுதியில் பிச்சி, காரிக்காளையை அடக்கிவிடுகிறான். தொடையில் குத்துப்பட்டு விழுந்து கிடக்கும் பிச்சியைக் காணத் தாமே வருகிறார் ஜமீன்தார்; அவனை மெச்சியதாகக் காட்டிக் கொண்டு ஒரு மனம் திறந்த புன்னகையுடன் ஜரிகைத் துப்பட்டாவை அவன் நீட்டிய கைகளில் வைத்து அதன்மீது ஒரு நூறு ரூபா நோட்டையும் வைக்கிறார்.

    பிச்சி தன் தந்தை வாக்கைக் காப்பாற்றவே காரியைப் பிடித்ததாகவும் ஜமீன் மாட்டைப் பிடிப்பது நோக்கமில்லை என்றும் தாழ்ந்து பணிந்தபோது

“அதெல்லாம் வேணாம்டா! அப்பன் ரத்தம் மகனுக்குள்ளே ஓடல்லேன்னா…” அவனை அர்த்தத்துடன் பார்த்து மெச்சிய சிரிப்பு சிரித்தார். “தூக்குங்க ஆஸ்பத்திரிக்கு. சமீன் வண்டிக்கு கொண்டுட்டு போங்க!”(ப.78)என்கிறார். 

ஜமீன் வண்டிக்குக் கொண்டு போகச் சொல்வதில் ஜமீன்தார் பிச்சியை அங்கீகரித்து அவன்பால் கொண்ட மதிப்புணர்த்தும் குறிப்பை வைக்கிறார் செல்லப்பா.

    இறுதியில் காரிக்காளையை நோக்கி ஆற்றுக்குச் செல்கிறார். “இன்னும் உனக்கு செறுமல் வேறயா?” என வாய்விட்டுச் சிரித்தார் ஜமீன்தார். அவர் கையிலிருந்து ரிவால்வார் நீண்டு உயர்ந்து காளைமீது குறியாக இரண்டுதரம் வெடித்தது”.

    காரியின் மூச்சு, இறுதி வாதைகளுடன், நின்றபோது “அவர் முகத்தில் ஒரு திடீர் நிம்மதி ஏற்பட்டது சிரித்துக் கொண்டார்”.

    ஜமீன்தாருக்குப் பிச்சியிடம் சற்றும் வெறுப்பில்லை; பகையில்லை; மதிப்பே இருந்தது. ஜமீன்தார் பெருந்தன்மையின் அடையாளமாகவே திகழ்கிறார்.

    

முருகு

    பிச்சியும் மருதனும் நிற்கும் அணைமரத்தின் எதிர் அணைமரத்துப் பக்கமிருந்து எழுந்து,  “வேடிக்கை பாக்கவா கிளக்குச் சீமையிலேயிருந்து இம்மாந்தூரம் வந்திருக்கே? ஹெஹ்ஹே!” என்னும் ஏளனக் குரல் கேட்டுப் பிச்சி கிழவனிடம் “அது யாருங்க?” என்றான். அவன்தான் உள்ளுரில் பெரிய மாடுபிடி வீரன் என்றறிகிறான். முருகு மீது மரியாதை குன்றாமல் ஏளனத்துக்குப்பதிலடி கொடுக்கிறான் பிச்சி. ஒருவரையொருவர் தூண்டும் விதமாக உரையாடல் தொடர்கிறது(பக்.48-49)

“அது, சமீன் சோறும் உப்பும் சாப்பிட்டு இப்பம் வளர்ர இளம் பய,” என்றான் கிழவன். “தலைப் பிரட்டாத்தான் பேசுவான்.இந்த வட்டத்திலே அவனை அடிச்சுக்கிற ஆள் இல்லேல்ல. பேசமாட்டான்? சமீன்தார் காதுலே விளணும்னுதான் அப்படி பலக்கப் பேசுதான்.”(ப.49)

    பிச்சியோடு வாய் மோதல் நிகழ்த்துதலினூடாக முருகு ஜமீன்தார் ஆள் என்பது உணர்த்தப்படுகிறது.

    பில்லைக் காளை வாடிவாசலில் தலைநீட்டிய கணத்தில் கூட, முருகு பிச்சியை ஏளனம் செய்தான். கிழவன் “முருகு! நீ பிடிச்சிக்கிரப்பா” என்று கத்தினான் .

    முருகு முயல்வதும், மருதன் கொம்புக்குத் துளாவுவதும், “அவன் அணஞ்சிகரட்டும்” என்ற கிழவன்  குரல் கேட்டு மருதன் சற்று விலகுவதும், பில்லைக் காளை திறம்பட நின்று விளையாடுவதும், முருகுவின் பிடிக்குத் தப்புவதுமாகத் தொடரும் போராட்டத்தினூடே,

“என்ன அண்ணே, காளையையா புடிக்கிறே?” என்று மருதன் கேட்டான். “இல்லாட்டி பசலைக் கண்ணுக்கு முட்டுப் பளக்கிறியா?” சுற்றி எங்கும் சிரிப்பு எழுந்தது. முருகுக்கு ரோஸம் பொத்துக் கொண்டு வந்தது”

முருகு, இனிப் பிடிக்க முடியாதென்றும் காளை எவருக்கும் அகப்படாமல் தப்பிவிடும் என்றும் உறுதியான முடிவுக்கு வந்த அதே கணத்தில் பிச்சி பாய்ந்து கொம்புகளைப் பிடித்துப் பில்லையைத் திணறடித்து, “முருகு அண்ணே, எங்கிட்டு இருக்கே? இந்தா கொம்புல இருக்கிறதையெல்லாம் அவுத்துக்க” என்று கத்தினான். முருகு அசையவில்லை(ப.52)

    பார்வையாளர்கள் கிழவன் ஆகியோரின் ஏளனத்துக்கு இலக்கானான் முருகு. “அவமானம் பிடுங்கித் தின்ன முருகு இன்னும் பின்னாடி போய்விட்டான்”. பார்வையாளர்களால் போற்றப்பட்டு ஜமீன்தாரிடமும் பரிசு பெறுகிறான் பிச்சி.

    பின்னகர்ந்த முருகு மீண்டும் தென்படுவது, பிச்சி காரிக் காளையை அணைய முயலும் திகிலான கட்டத்தில்தான். பிச்சி ஆயத்தமாக இருந்த இடத்திற்குக் காளையைத் திருப்பிவிட, முருகு வஞ்சமாக, “டுர்ரீ” காட்டி விடுகிறான்.

“சீ, நீயும் ஒரு மாடு அணைகிறவனா?”

“பொம்பளையா பிறந்தருக்கணும் நீ!”

“பேடிப்பய!”

இதெல்லாம் மீறி “ஜமீன்தாருக்கு நல்லா பேர வாங்கிக் கொடுத்திருவேடா தெற்கத்தியான்!” என்று கிழவன் கத்தல்தான் கடைசி வரிசையிலிருந்து எழுந்தது. “நாயைப் போய் நடு உள்ளே வச்சாரு பாரு!” கிழவன் எச்சலைக் காறித்துப்புகிற பாவனை காட்டினான்.(ப.67)

    இங்கு ஊரே இழிவுபடுத்தும் நிலைக்கு ஆளானதோடு, ஜமீன்தாரின்பெயருக்கும் களங்கம் நேரும் என்பது புலப்படுத்தப்படுகிறது. ஜமீன்தாரின் பெருமிதக் கூறுகளுள் ஒன்று காரிக்காளை என்றாலும் அவர் விளையாட்டின் விதிமீறிய வஞ்சகத்தை ஏற்பதில்லை என்பது கதைப்போக்கில் புலப்படுத்தப்படுகிறது.

    பிச்சியின் பெருந்தன்மை, ஜமீன்தாரின் பெருமிதம் இரண்டையும் புலப்படுத்துமாறு உறழ்ந்து நோக்க வாய்ப்பான, ‘வாடிவாசலின்’ ஒரே எதிர்நிலைத் துணைமாந்தர் முருகு.

     ஜல்லிக்கட்டு நுட்பமறிந்து நிதானந் தவறாத  பிச்சி என்னும்     இளைஞனின் வீர வெளிப்பாட்டுக்குத் தூண்டுதலாக இருந்தது அவன் தந்தை அம்புலித்தேவனின் வீரமும் சூளுரையும் என்றாலும் அம்புலித்தேவனை நினைவு கூரலில் இடம்பெறுகின்ற ஒரு தோன்றாத் துணைமாந்தராகவே கொள்ள வேண்டும்.

     

" உங்க பக்கத்திலே பேரு பெத்த மாடு பிடிக்கிறவன் ஒருத்தன் இருந்தானப்பா. தொண்டைக்குள்ளாரா நிக்குது பேரு… அட, சீ, …சில்லாரியா, கருவலா, கொஞ்சம் வயசானவன்… இரு இரு, பிச்சித் தம்பி சாயலா இருப்பான் " என்று கிழவன் கூற்றில் அறிமுகமாகிறார் அம்புலி. அம்புலி சாகும்போது கூறியதை மருதன் நினைவுகூர்கிறான்.

“அவுங்க அப்பன் சொல்லிச் செத்தாரு: வயசுக் காலத்திலே இல்லாமே வயசான காலத்திலே இல்லெ இந்தக் காரிக்களுதை கண்ணிலே பட்டிருச்சு. இல்லாட்டி அந்த ஒரு பிடியிலே சகதியிலே அமுக்கிறாப்லே அமுக்கி இருப்பேன். இப்போ, மொக்கையத் தேவர் காரிகிட்ட அம்புலித்தேவன் உலுப்பி விளுந்தான்கிற பேச்சுல்ல சாகறப்போ நிலைச்சுப் போச்சு.”(ப.40)

    தந்தையின் அந்த மனக்குறையைத் தீர்க்கும் வாய்ப்பைப் பெற்றான் பிச்சி.

    அந்த ஊரின் ஜல்லிக்கட்டு ஊர்த்தெய்வத்தின் பெயரால் செல்லாயி சாட்டு என்றே வழங்கப்படுகிறது . முதல் காளையை உருவி விடுவதற்கு முன்பு கிராமத்துத்தேவதை செல்லாயி அம்மனுக்கும் பிற ஊர்க்காப்பு தேவதைகளுக்கும் பூசை போட வேண்டும்.(ப

    ஜல்லிக்கட்டிலேயும் செல்லாயி கோயில், காளை கலந்து கொள்கிறது. ஆனால் சுவாமி மாட்டை யாரும் தொடமாட்டார்கள்.  சுவாமி மாட்டைத் தவிரப் பிற மாடுகள் எவருடையன எனினும் பிடிக்கலாம் என்பது குறிப்பு.

    காரிக்காளையை அணையப் பிச்சியும் மருதனும் ஆயத்தமாகும்போது கிழவன், “செல்லாயி ஆத்தா காப்பா! ஆனா ஒன்று என்மக்களா? போறபோது அவளைக் கும்பிட்டுட்டு போகாமா போயிராதிங்க” என்கிறான்(ப.62)

    செல்லாயி அம்மன் வினையின் நீங்கி விளங்கித் தோன்றும் தெய்வமாந்தர்; ஒரே பெண் மாந்தர். மற்றபடி, வாடிவாசல் முற்றுமுழுதாக ஆண்களின் உலகம் சார்ந்தது.

    அனைவதற்குரிய பில்லை, குரால் ஆகிய காளைக்களும் துணை மாந்தரேயாவர்

    முதன் முதலாகக் காரிக்காளை வரும் காட்சியில், “ஒரு கரும்பய பிடிச்சுக்கிட்டு வாரான் பாரு” என்ற கிழவன், பிச்சிக்கு அடையாளம் காட்டும்போது, காரியைக் கைமேய்ச்சலாக வளர்ந்த சிறுவனும் அறிமுகப்படுத்தப் படுகிறான். காரிக்களை அவனுக்குத்தான் கட்டுப்படும் என்பதைக் களத்துக்கு வரும்போது கிழவன் சொல்கிறான். இறுதியில் “இன்னும் வெறியடங்கல்லே. அந்தப் பயலைக் கூட கிட்ட அண்டவிட மாட்டேங்குது” என்று பார்வையாளர்கள் பேசிக் கொள்ளும்போது சிறுவன் இடம்பெறுவதன் இன்றியமையாமை புலனாகிறது. இதுவும் செல்லப்பாவின் திறன்.

    மேற்குறித்த முதன்மை, இணை, துணைமாந்தர்களின்றி ஆங்காங்கே இடம்பெறும் மாந்தர் பலருக்கும் கூட, குறிப்பான  பங்கு உண்டு.

    காரிக் காளையின் முந்தைய உரிமையாளர் மொக்கையத்தேவர், காளை அணைவதில் வல்ல சங்கிலி, சவுரி, ஜமீன் காரியஸ்தர், சப்கலெக்டர் முதலியோரும் காளைகளுள் கரம்பை, செவலை முதலியனவும் இடையிடை வரும் மாந்தர்களாவர்.

    

மொழிநடை:

    ஜல்லிக்கட்டுக் களம் சார்ந்த கொட்டம் முதலிய சொற்கள் முன்பே காட்டப்பட்டுள்ளன. காரி, பில்லை, குரால் முதலியனவாகக் காளைக்கு வழங்கும் செயர்கள், காளையின் இயல்புபற்றிய ‘நின்னுகுத்திக்காளை’ முதலிய சொற்கள் ஆகியவை கதையின் பாடுபொருள் சார்ந்த துறைச் சொற்கள்.

    ஒரு வட்டாரம் சார்ந்த கதையெனினும், சி.சு.செல்லப்பா சிற்சில வட்டடார அடையாளங்களோடு கூடிய பொதுப் பேச்சு வழக்கையொட்டியே மாந்தர்தம் பேச்சைக் கையாளுகிறார்.

    ஆசிரியர் கூற்றாக வரும் பகுதிகளில் சற்றே பேச்சு வழக்குச் சாயல் கொண்ட தற்கால எழுத்துத் தமிழைக் கையாள்கிறார். 

    வட்டார வழக்கே உயிர்ப்புடையது என அதற்கு மிகையழுத்தம் தரும் போக்கினின்றும் வேறுபட்ட ஒரு சமரச நடை செல்லப்பாவுடையது.

    இந்நடை மூலமே கதையை உயிர்ப்புடன் நடத்த இயலும் என்பதை அவர் நிகழ்த்திக் காட்டுகிறார்.

    வெயில் பட்டுக் காச்சுபோன(காய்த்துப்போன) - ப.19

    காளைகிட்ட(காளையிடம்) - ப.21

    விளும்போரம்(விளிம்போரம்) - ப.22

    “அப்பன் ஆசைக்கு மட்டுமின்றி உசிருக்கே (உயிருக்கே) உலைவைத்த காரி…”  (ப.41) முதலியன செல்லப்பாவின் எடுத்துரை வருணனையுள் இடம்பெறும் வழக்குச் சாயல் பெற்ற சொற்கள்.

    இக்கதை விறுவிறுப்புடன் இயங்க ஒலிக்குறிப்புகளும், இரட்டைக்கிளவிகளும், அடுக்குகளும் கைகொடுக்கின்றன.

    சலங்கையின் கலீர் ஒலி    - ப.23

    சடக்கெனப் பிச்சி பக்கம்    - ப.34

    சரக்கென நேர்பின்னால்    -ப.66

    குபுக்கென்ற            - ப.74 

என்பன ஒலிக்குறிப்புகள். ஒலிகளையே, ஒத்த எழுத்துகளால் காட்டமுற்படுமிடங்கள்:

    ஹூய் ஹாய் போட்டு விரட்டினார்கள்     - ப.45

    சதக் என்ற சத்தம்                - ப.74

    (காளையின் கொம்புகள் வெறியோடு சதையில் பாய்வதைக் காட்டும ஒலி இது.)

    விலுக்விலுக்கென்று                - ப. 80.

    

கதையின் உச்சமான திகில் காட்சியொன்று:

    ஜமீன்தாரின் காரிக்காளை அவிழ்த்து விடப்பட்டுவிட்டது. பார்வையாளர்கள் மூச்சுவிடாமல் பீதியில் நின்றனர். “அப்போது நேர்பாதையைப் பார்த்து நின்ற காளை சரக்கென நேர்பின்னால் சுழன்று திரும்பி கொம்பையலைத்து ஒரு எட்டு முன்வைத்தது. ஏதோ ஒரு நிழலசைவோடு குர்ரீ என்ற சப்தமும் தன் பின் கிளம்பியது கண்டுதான் அப்படி முறைத்து திரும்பியது” வஞ்சமாக முருகு காளையை , பிச்சியும் மருதனும் இருந்த திசைநோக்கித் திருப்பி விட்டுவிட்டான். இது ஆட்டமரபுக்கு எதிரானது.

    மாலைகளின் கலகல சப்தம்        - ப.23

    படபடக்கும் கைகளை        - ப.50

என்பன இரட்டைக்கிளவிகள்.

    செல்லப்பா தமக்கேயுரியதெனத்தக்க சில உவமைகளைப் பொருட்புலப்பாட்டு நோக்கில் புனைந்துள்ளார்.

    உழுதவயல் மாதிரி, சுருக்கம் விழுந்த ஒரு கிழட்டு முகத்தில்     - ப.24

    ரெண்டு சீனிக்கிழங்கை குத்திவச்ச மாதிரி(கொம்புகள்)        - ப.30

    கொம்பலைப்பும் நின்று தொட்டில் மாதிரி முன்னும் பின்னும்

    முழு உடலோடு ஆடியது                        - ப.80

என்பன சி.சு.செல்லப்பாவின் விவரணங்களில் வரும் உவமைகள்

    உள்வாடியில மூக்குக்கவுத்தை அவுக்கிறபோதே பம்மிருவானுங்க     

    - வயக்காட்டு எலி வங்குல இளுத்துக்கிராப்புல            - ப.32

    உங்கப்பன் காரன் என்ன லாவகமா கைபோட்டானாமே இந்த

    காளை மேலே, கொசு உக்கார்ராப்லே…”                - ப.40

    கூட்டம் அசைவுகாட்டப் பயந்து… சவத்தை நிறுத்தி வைத்த

    மாதிரி, பதிந்து நிற்கப் பிரயாசைப்பட்டது                - ப.66

    “அட! விராலு மாதிரி துள்ளுதுடா”                    - ப.69

    புளியம் பழத்தை உலுப்பிறாப்பிலே உறுபப் பாக்குது டோய்    - ப.71

என்பன மக்கள் பேசுவதன் பதிவுகள்.

    செல்லப்பாவின் விவரணை நடைத்திறம் தொட்ட இடமெல்லாம் தட்டுப்படும். சான்றுக்கு, பிச்சி முரட்டுக் காளைகளுள் ஒன்றாகிய கொராலை அடக்கும் காட்சி:

    

காளையின் மடிந்த பின்கால்கள் பிச்சி நின்ற இடத்துக்கு நேராக இருந்தன. பாயப்போகிறவன் மாதிரி காலையெடுத்து வைத்தவன் தடாரென நெடுஞ்சாங்கிடையாக கீழே படுத்தான். அவனது வலது கை காளையின் வலது கால் பிடிக்கு வசமாக நெருங்கி வந்தது. கையை வீசி குளம்புக்கு மேலே அடிக்கணுக் காலைப் பிடித்து மறு கையை தரையில் பதித்து உந்தி எழுந்து காளையின் காலை இழுத்தான். இமைப்பொழுதில் நடந்தது இது . தன் கால் பிடித்து இழுக்கப்படுவதை உணர்ந்து காளை விர்ரென்று உதைக்க முற்படுவதற்கு நேரம் இல்லாதபடி , மூன்று கால்களால் திரும்பி, காலை இழுத்தவனை குத்தப் பார்த்த காளை, கால் சுண்டப்பட்ட வேகத்தில் நிலைக்க முடியாமல் பரு உடலுடன் முன்கால்கள் மடிய இடது பக்கமாக சரிந்தது. காளையின் காலை உதறிவிட்டு, பிச்சி கொம்புக்குப் பாய்ந்தான். காலை மண்டியிட்டு கொம்பு இரண்டையும் சேர்த்து அது அசைக்க முடியாமல் பிடித்து அமுக்கி வலது கையால் உருமால் சுருக்கை உருவினான். பொலபொலவென அவிழ்ந்து புரண்ட உருமாலைக் கையில் இடுக்கிக்கொண்டு மாடு முண்டி எழுந்திருக்கும் முன்பே பிச்சி பின்பாய்ந்து விட்டான்.


உரையாடல் திறனும் பரவலாகக் காணக்கிடைக்கிறது. முனைப்பான ஓரிடம்:


“என்னண்ணே, முண்டாசைக் கூட அவுக்காமே நின்னுகிட்டு இருக்கே? வேடிக்கை பாக்கவா கிளக்குச் சீமைலேயிருந்த இம்மாந்தூரம் வந்திருக்கே? ஹெஹ்ஹே!” 

…    …    …    …    …    …

சப்தம் வந்த பக்கம் திருப்பினான் பிச்சி… 

“அது யாருங்க” என்று கேட்டான்.

“கடவுளெ! அவனைத் தெரியாதா உனக்கு!” என்று கிழவன் ஒரு அமுத்தல் சிரிப்புடன் சொன்னான் 

“அவன்தான் முருகு”

பிச்சி ஒரு கணம் நிதானித்தான். “தெற்கே இருந்தா?”

“ஆமாம். அதே பயதான். இங்கே இருக்கிறவனுங்களுக்குள்ளே பெரிய பிடுங்கி.” கிழவன் கத்திவிட்டான்.

“என்ன மாமா, அப்படிப் பேசிட்டே? கிழவன் வார்த்தைக்கு பதில் பேசினான் முருகு. ‘கிளக்கேயிருந்து வந்துட்டா மட்டும்…?’ அவன் பக்கத்தில் நின்ற குரல்கள் கிளுகிளுத்தன.

கிழவனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. “அட சரிதான்டா, வாடிவாசல்லே தானே ரெண்டு பேரும் நிக்கிறீங்க. என்ன இப்போ?”

“பாட்டயா, செத்தே சும்மா இருங்க. நான் பேசிக்கிடறேன்,” என்று கிழவனை அமர்த்தினான் பிச்சி.

“அண்ணே, உங்களைப் பத்திக் கேட்டிருக்கேன்” என்றான் முருகுவைப் பார்த்து. “முதக்க இப்பத்தான் சந்திச்சுக்கிடறோம்.”

“உங்கப்பனோட உன்னை நான் பாத்திருக்கேன் ஒரு தவா… உங்க சல்லியட்டுக்கு வந்திருந்தப்போ.”

“விளையாட்டுப் பாக்கவா?” பிச்சி பதிலுக்குக் கேட்டுவிட்டான். “சும்மா கேக்கரேன். மாடுக மேலே விளுந்ததாகத் தெரியல்லயேன்னு."


இன்னும் உருவகம் முதலிய சில கூறுகளாலும் படிப்பை அனுபவமாக்கியிருக்கிறார் செல்லப்பா.


அடிக்கருத்து(Theme):


    புனைகதையில் இழையோடும் அடிக்கருத்து வெளிப்படையாகவோ குறிப்பாகவோ புலப்படும். செல்லப்பா வாடிவாசலில் கூர்ந்து நோக்கிக் கொள்ளும் வகையில் அடிக்கருத்தைச் சொல்லால் சுட்டியுள்ளார்.

“மிருகத்தை  ரோசப்படுத்தி அதன் எல்லையைக் கண்டுவிட்டு, பிறகு அதை மனிதன் அடக்கி வசப்படுத்தி வெற்றி காட்டத் துணிவதை ஒரு கலையாக சாதகம் செய்திருக்கிறார்கள் அவர்கள் அத்தனை பேர்களும்” 

என்று முதன்முதலில் கதையின் பாடுபொருளையும் அடிக்கருத்தையும் கதைப்போக்கினூடாகச் சுட்டுகிறார்.

ரோசம் என்னும் சொல் தமிழில் 1. மானம் 2. கோபம் ஆகியவற்றைக் குறிப்பதாகச் சென்னைப் பல்கலைக்கழத் தமிழப் பேரகராதி(Tamil Lexcon) பொருள் தருகிறது. ஆங்கிலத்தில் தரும் பொருள் மேலும் தெளிவுபடுத்தும் 1. Keen sensiblity; high sense of honour 2. Anger.  இவ்விரு பொருள்களும் இயைந்ததாக ‘வாடிவாசல்’ ரோஷத்தைக் காணமுடிகிறது.


    ஜல்லிக்கட்டுக் காளைகளைத் தேர்ந்தெடுக்கும் அளவுகோல்களில் ஒன்று ரோஷம்  என்பதை ஜமீன்தாரின் திறன் பற்றிய இடத்தில் செல்லப்பா சுட்டுகிறார்.

    “அததுக்கு வயசுன்னு இருக்கிறப்போ,  ஊக்கமா அந்த வயசுலே அது மேலே போய் விழுந்தானேப்பா! அப்படியென்னப்பா ரோஷம்” என்று அம்புலித்தேவன் பற்றிக் கிழவன் குறிப்பிடுகிறான்.

    “இரண்டு பவுன் நகைக்கு ஆசைப்பட்டு எவன் தெரிஞ்சு உசிரை விடுவான். அதுவும் இந்த ரோஷம் கெட்ட மண்ணுலே பிறந்த பயலுக!” என்று காரிக்காளையின் பெருமை பேசத் தன் ஊர்க்காரர்களை இறக்கிப் பேசுகிறான் கிழவன்.

“என்ன அண்ணே, காளையையா புடிக்கிறே?” என்று மருதன் கேட்டான். “இல்லாட்டி பசலைக்கன்னுக்கு முட்டுப் பளக்கிறியா?” சுற்றி எங்கும் சிரிப்பு எழுந்தது.

முருகுக்கு ரோஸம் பொத்துக்கொண்டு வந்தது. காளையோ, அவன் கையை உதறிவிட்டுக் கொண்டே தன் திமிலையும் வெளியே நீட்டிவிட்டது என்று முருகுவின் ரோஷம் தூண்டப்படுவதைக் காட்டுகிறார் செல்லப்பா.

    கதையின் இறுதியில் ஜமீன்தார் காரிக்காளையைச் சுட்டுக் கொன்றதைக் கண்டோர் “மிருகத்துக்கு ரோஸம் வந்தாலும் போச்சு. மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு”என்று ஜமீன்தாரின் ரோஷம் பற்றிப் பேசுகின்றனர்.

    ஆனால், பிச்சியின் ரோஷம் எங்கும் சொல்லால் சுட்டப்படவில்லை. காரிக்காளையை அடக்கி, தொடையில் குத்துப்பட்டுக் கிடக்கும் நிலையில், மருதன் “பளி வாங்கிட்டே பிச்சி! அப்பன் மானத்தை காப்பாத்திட்டே!” என்கிறான்.

    பிச்சி காப்பாற்றியது அப்பன் அம்புலித்தேவன் ரோஷத்தை.


    கருத்துநிலை : 

    ‘வாடிவாசல்’ 1950களில் எழுதப்பட்டது. இது தொழில்மயமாதல் (Industrialization), நகர்மயமாதல் (Urbanisation), நவீனமயமாதல் (Modernisation) முதலிய மாறுதல்களை இந்தியச் சமூகம் கண்டு கொண்ட, மாறிவந்த காலம்; பழைய நிலவுடைமை, சாதிய சமூகங்களில் ஓரளவு அதிர்வை ஏற்படுத்திய காலம். ஆனால், செல்லப்பாவின் வாடிவாசலில் இவற்றின் சாயலே இல்லை. நுட்பமாகப் பார்க்கும்போது செல்லப்பா என்கிற எழுத்தாளர் மாறிவரும் சமூகத்தின் பிரதிநிதியாக, ஆனால் மாற்றங்களை எதிர்மறையாகப் பார்க்கிற ஒருவராகக் கதை சொல்வதை உணரலாம்.

    ‘வாடிவாசலி’ல் தென்படும் நவீனக் கருவி கதையின் இறுதியில் இடம்பெறும் ஜமீன்தாரின் ரிவால்வார் மட்டும்தான். அது கொலைக்கருவி. வேறு எந்த நவீனச் சாதனமும் நவீன வாழ்க்கைப் போக்கும் கதையில் இடம்பெறவே இல்லை.

    “அப்பனுக்கு மகன் சரியாகத்தான் பேரெடுக்கணும் நம்ப சாதிக் குணம் அதுதான்” - 

    “பிச்சி, உசிரு லச்சியமில்லை மறசாதிக்கு. ரத்தம் தண்ணி சிந்துதாப்லேதான்” 

முதலிய  கிழவன் கூற்றுகளில் வரும் சாதிப்பெருமிதம் நவீனத்திற்கு முந்தைய சமூகம் பற்றிய செல்லப்பாவின் இணக்கவுணர்வின் வெளிப்பாடென்றே சொல்லலாம்.

    வீர விளையாட்டுக் களத்தின் விதியறிந்தவர் ஜமீன்தார். சாமிமாடு தவிர எதையும் பிடிக்கத் தடையில்லை என்பது அவருக்குத் தெரியும்.

“நந்திதேவனேயல்லவா அவதாராமா வந்திருந்ததது. அதைப்போய்… பாவிப்பய!” என்று தம் காரிக்காளையை அவதாரமாகவே கருதி வாய்விட்டும் சொல்லிவிடுகிறார் ஜமீன்தார். அவர் நம்பிக்கை அது. என்றாலும் 

“ஹும், பிடி” என்பது போலத் தலையாட்டிப் பிச்சிக்கு அனுமதியும் கொடுக்கிறார். பிச்சியும் ஒரு அவசர கும்பிடு போட்டுத்தான் இறங்குகிறான்.

    ஜமீதாரின் அதிகாரம் எங்குமே கேள்விக்குட்படவில்லை. செல்லப்பா - சற்று வலிந்து என்று கூறுமளவுக்குப் - பிச்சியின் பணிவைத் தொடர்ந்து விவரிப்பதன் மூலம் ஜமீன்தாரின் அதிகாரத்திற்குச் சிறிதும் ஊறு நேராமல் பார்த்துக் கொள்கிறார்.

    ஜமீன்தார் அப்பன் ரத்தம் மகனுக்குள் ஓடுவதைப் போற்றுவதோடு காயம்பட்ட பிச்சியைத் தம் வண்டியிலேயே மருத்துவமனைக்குச் கொண்டு செல்ல ஆணையிடுகிறார்.

    மொத்தத்தில் சி.சு.செல்லப்பாவின் கருத்து நிலை நவீனத்திற்கு முந்தைய காலத்தின் மேன்மைகளில் திளைக்கும் , அம்மேன்மைகளைத் தக்கவைத்துக்கொள்ள முனையும் புனைவியப்(romanticism) பார்வையாகும். 

    இதனைப் பிற்போக்கான பார்வை என்று சொல்லிவிடலாம். ஆனால் அது வடிவாசலின் இலக்கிய மதிப்பைக் குறைத்துவிடாது.

    

செதுக்கிச் செதுக்கி இழைத்து இழைத்து உள்ளார்ந்த குறிப்புகளோடு ,  ஆனால் செதுக்கல் இழைப்புகளின் சுவடே இல்லாமல் இயல்பாக உருப்பெற்ற படைப்பு

 'வாடிவாசல்'.

ஜல்லிக்கட்டைக் காணாதவர்கள்  , உயிரும் உருவும் உணர்வுமாக 'வாடிவாசலி'ல்

கண்டு அனுபவிக்கலாம். ஏற்கெனவே பார்த்துப் பழகியவர்கள் கூட 'வாடிவாசலி'ல்

புதிய அனுபவம் பெறலாம்.   சொல்லால் கண்கூடாக்கும்  சித்து வேலை செய்துகாட்டியிருக்கிறார் சி.சு.செல்லப்பா.

வெறும் விளையாட்டை மட்டும் காட்டவில்லை ; ஒரு வாழ்முறையின் நறுக்கைத் தந்திருக்கிறார்.

நவில் தொறும் வயப்படும் அந்த நயத்தை , இந்த அலசலில் போதிய அளவுக்குக் கொண்டுவரவில்லை என்னும் ஆதங்கத்துடன் நிறைவு செய்கிறேன். இதற்கு என் திறமைக் குறைவு மட்டுமன்றி அலசல் முறையின் பலவீனமும் காரணம்

-------

*  பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை , புதன் வட்டத்தில்  27.09.2017 அன்று     படிக்கப்பட்டது.

படிக்கும்போது சான்றுக் குறிப்புகள் சேர்க்க இயலவில்லை. இப்போது கட்டுரையின் மூலப்படி கிடைக்கவில்லை. 'வாடி வாசல்'மிகச்சிறிய நூலாதலின் அதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. உரையில் பாடமாக நடத்தும் ஆசிரியத்தனம்  விரவியிருக்கும்.பொறுத்திடுக.

  





2 comments:

  1. படித்து நிறைவு செய்யும்போது வகுப்பறையில் ஒரு மணி நேரம் அமர்ந்து பொறுமையாக, மாணவனாக கவனித்த நிறைவு ஏற்பட்டது.

    ReplyDelete
  2. மகிழ்ச்சி ஐயா. பாட நோக்கிலான வறட்டுத்தனம் இடைமிடைந்த கட்டுரை.
    படித்ததற்கு நன்றி.

    ReplyDelete

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...