Thursday, April 15, 2021

சேர்ப்பதா ? பிரிப்பதா ? - துணைவினைச் சிக்கல்

 சேர்ப்பதா ? பிரிப்பதா ? - துணைவினைச் சிக்கல்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°




" தனித்து + இருப்பதாய் + சொன்ன = தனித்திருப்பதாய்ச்  சொன்ன (அல்லது) தனித்திருப்பதாய்ச்சொன்ன என்று எழுதலாமா? (மூன்று சொற்களைச் சேர்க்கக் கூடாது என்று ஒருவர் கூறுகின்றார்) விளக்கம் வேண்டும் " என்று கேட்டிருந்தார்    தா.இளங்குமரன் அவர்கள்.

                                                            ~~~~~~~~~~~~


தனி - (செயப்படுபொருள் குன்றிய) வினை¹

தனித்து - வினையெச்ச வடிவம்

இரு - துணைவினை²

தனித்திரு - வினையடி

தனித்திருப்பது - தொழிற்பெயர்

ஆய் - வினையெச்ச ஈறு


இவற்றை, தனித்திருப்பதாய் என்று  சேர்த்தெழுதவேண்டும்.


தனித்திருப்பதாய்ச் சொன்ன - என்பது சரியானது.


அமரர் வ.பொன்முடி அவர்கள் ,  ' தனித்திருப்பதாய்ச்சொன்ன ' என்று ஒரே தொடராய் எழுதவேண்டும் என்பார். ஒருவகையில் இது சரிதான் என்றாலும் அச்சு வசதி நோக்கிக் கண்சோர்வு தவிர்க்க, ' சொன்ன ' என்பதைத் தனியாக எழுதலாம் ; அச்சிடலாம்.


தனித்திரு என்பதை மேலும் எளிமை கருதி, தனித்து இரு-(இதனடியாக உருவாகும் தனித்து இருந்தான் முதலிய முற்றுகள், தனித்து இருந்த, தனித்து இருந்து ஆகிய எச்சங்கள் முதலியன) என எழுதும் வழக்கம் உள்ளது. 


இத்தகையவற்றைப் பிரிப்பப்பிரியா வினையடியாகக் கொள்வது ஏற்புடையது.


பிரித்தால் என்ன ? வழக்காடு மன்றக் காட்சி ஒன்றைப் பார்ப்போம்:







தொடுப்பவர்: மாண்பமை நடுவர் அவர்களே , இதோ சான்று.

(வழக்குமன்ற உதவியாளர் சட்டியை நடுவரிடம் காட்டுகிறார். செம்பளிங்குபோன்ற பரப்பினுள் கரண்டி சிக்கியிருக்கிறது)

நடுவர் : சொல்லுங்கள்.

தொடு. : ஐயா, குற்றவாளிக்கூண்டில் நிற்கிறாரே[கு.கூ.நி.]மடை மன்னாரு அவரு     

                   எழுதிய புத்தகத்தைப் பார்த்து, சாப்பிடும் ஆர்வத்தோடு அல்வா செய்தேன்.

                   சட்டி , கரண்டி , அல்வா எல்லாம் போச்சு. அவர் இழப்பீடு தரவேண்டும்.

நடு. : (கூண்டில் நிற்பவரைப் பார்த்து) நீங்கள் சொல்லுங்கள்.

கு.கூ. நி. : மா. நடுவர் அவர்களே, என் புத்தகத்தைத் தங்கள் மேலான பார்வைக்கு முன் 

                 வைக்கிறேன் (வ. மன்ற உதவியாளர் புத்தகத்தைக் காட்டுகிறார்)

நடு. : இது நீங்கள் எழுதியதுதானே ?

கு.கூ. நி. : ஆம்.

நடு. : அல்வா செய்முறை உங்களுடையதுதானே ?

கு.கூ. நி.: ஆம்.

நடு. : வழக்குத் தொடுத்தவர் இதே முறையில்தானே செய்திருக்கிறார் ?

கு.கூ. நி .: ஆம்.

நடு. : அப்படியானால் குற்றத்தை ஒத்துக்கொள்கிறீர்கள் ?

கு.கூ. நி. : இல்லை.

நடு. : ஏன்?

கு.கூ.நி. : மா.நடுவர் அவர்களே புத்தகத்தின் தலைப்பைப் பார்க்குமாறு வேண்டுகிறேன்.

                (உதவியாளர் மேலட்டை தெரியுமாறு காட்டுகிறார்)

நடு. : சமைத்துப்  பார்!³(வினாக்குறியுடன் நிமிர்கிறார்)

கு.கூ. நி. : சமைத்து , பார்க்கத்தான் எழுதியிருக்கிறேன் ; சாப்பிட அல்ல.


                                      [ வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது ]

                                      

ஆவணச் சான்றின்படி வழக்கைத் தள்ளுபடி செய்வதைத் தவிர வேறு வழியில்லை😀.


ஒரு வேளை நூலின் தலைப்பு ஒரே தொடராகச்  'சமைத்துப்பார்' என்று இருந்திருந்தால் தீர்ப்பு வேறாகியிருக்கும். இதிலுள்ள பார் என்பது தனி வினையன்று ; துணைவினை. 


சமைத்திருக்கிறார் , சமைத்துவிட்டார் , சமைத்துப்பார்த்தார் - என ஒவ்வொன்றும் (அடிப்படையில் சமைத்தலே ஆயினும்) வேறு வேறு பொருட்கூறு உணர்த்துதல் காண்க. இவற்றைச்  சமைத்து / இருக்கிறார், சமைத்து/  விட்டார்சமைத்துப் /பார்த்தார் - என்று பிரித்து எழுதக்கூடாது.


சமைத்திரு -

சமைத்துவிடு-

சமைத்துப்பார் -

 என்பனவே வினையடிகள். இவற்றில் உள்ள இரு , விடு , பார் முதலியன தனி வினைகள் அல்ல. ஒரு துணைவினை வடிவமே ஒன்றுக்கு மேற்பட்ட கூறுகளை உணர்த்தலாம்.

 

- இரு என்னும் துணைவினையைப் பார்ப்போம்:


அவர் ஏற்கெனவே சமைத்திருக்கிறார். அஞ்சாமல் சாப்பிடு .

- என்கிற தொடரில் அனுபவ நிலை புலப்படுகிறது.


நான் கூட எதிர்பார்க்கவில்லை. அவர் நன்றாகச் சமைத்திருக்கிறார் .

- என்கிற தொடரில் நிறைநிலை புலப்படுகிறது.




இத்தகைய பலவற்றை முனைவர் பொற்கோ அவர்கள் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார்கள். அவற்றுள் வினைக் கூறுகளை (ASPECTS) உணர்த்துவன :


1. கொண்டிரு(தொடர் நிலை) - வந்து கொண்டிருந்தார்

2. இரு ( நிறை நிலை)                  - வந்திருந்தார்

3. விடு(உறுதிநிலை)                    - வந்துவிட்டார்

4. பார்(சோதிப்பு நிலை)              - எழுதிப்பார்த்தார்

5. காட்டு (உணர்த்து நிலை)      - படித்துக்காட்டினார்

6. கொள் I  (தன்வசநிலை)         - வாங்கிக்கொண்டார்

7. கொள் II (பரிமாற்ற நிலை)   - அடித்துக்கொண்டார்கள்

8. போ (தற்செயல் நிலை)          - தொலைந்துபோயிற்று

9. தொலை (வெறுப்பு நிலை)   - வந்துதொலைத்தார்

10. வை (காப்பு நிலை)                  - வாங்கிவைத்தார்

11. அருள் (வழங்கு நிலை)         - வழங்கியருளினார்

12. வா (வழக்கநிலை)                    - ஆண்டுவந்தார்


இவற்றோடு கொடு , உதவு , உள் முதலியனவும் துணைவினைகளாக ஆளப்படுகின்றன என்கிறார்⁴. 


'முதலியனவும்'  என்றது கருதத்தக்கது. ஒரு துணுக்கு. நடந்த நிகழ்ச்சி.


" ஐயா, கவிதை நூல் வெளியிட்டு விழாவுக்கு வருவீங்கன்னு பாத்தேன் " என்றார்

    கவிஞர்.

" வந்திருப்பேன் . வேறொரு தொந்தரவு " என்றேன் நான்.

 " பத்து வருசத்துக்கு முன்னாலே என் முதல் கவிதைத் தொகுப்பு வெளியிட்டப்ப ,

   வந்திருந்திங்க " - கவிஞர்.

    " வந்திருப்பேன் . நினைவில்ல " - நான்.

" இந்தாங்க " என்று வெளியிட்ட கவிதை நூலைக் கொடுத்தார் கவிஞர். 

" எவ்வளவு ? " என்றேன் நான்.

" ஐயா , பணமெல்லாம் வேணாம். படிச்சுக் கருத்து சொல்லுங்க " என்றார் கவிஞர்.

" பணமே கொடுத்திடறேனே " என்றேன் நான்.

                                                                😀😀😀

                                                                

              " வந்திருப்பேன் . வேறொரு தொந்தரவு " என்பதில் ,  - இருப்பு- இயலாமைக்

                 குறிப்புடையது.

                " வந்திருப்பேன் . நினைவில்ல " என்பதில் - இருப்பு - ஐயக் குறிப்புடையது.

எப்படியெல்லாம் துணைவினைகள் வரக்கூடும் என்பதற்கு இவை மாதிரிக்காட்டுகள்.


இவையன்றி வினைநோக்கு (MODALS) உணர்த்தும் துணைவினைகள் சிலவற்றையும் முனைவர் பொற்கோ தந்துள்ளார். இவை செயவென் எச்சத்தின்பின் வரும் என்கிறார்⁵.

போ(எதிர்பார்ப்பு நிலை) -  வரப்போகிறது

பார்( முயற்சி நிலை) -  ஓடப்பார்த்தான்

கூடு(ம்) ( வாய்ப்பு நிலை) - வரக்கூடும்

வேண்டு(ம்) ( யாப்புறவு - பார்க்க வேண்டும் 

- முதலியன.


ஒரு முதல்வினை ஒன்றுக்கு மேற்பட்ட துணைவினைகள் பெற்று நீளக்கூடும். பார்ப்போம்.


பற - என்னும் வினைப்பகுதி தன்மைப் பன்மையில்,

I  )பறந்தோம்         (இறப்பு)

II )பறக்கிறோம்     (நிகழ்வு)

III)பறப்போம்           (எதிர்வு)  - முக்காலத்திலும் வரும். 


i  )நாங்கள் நேற்று இந்நேரம் விமானத்தில் பறந்துகொண்டிருந்தோம்.

ii )நாங்கள்  இப்போது  விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறோம்.

iii)நாங்கள் நாளை இந்நேரம் விமானத்தில் பறந்துகொண்டிருப்போம்.


என்னும் தொடர்கள் (கொண்டு + இரு என்னும் இரண்டும் இணைந்து ஒன்றான) கொண்டிரு என்னும் துணைவினையால் தொடர்நிகழ்வை உணர்த்துகின்றன ; மரபான கால இடைநிலைகளைத் தக்கவைத்துக்கொண்டுள்ளன.


பறந்து / கொண்டு / இருந்தோம், பறந்து  / கொண்டிருந்தோம் - என்றெல்லாம் - தொடர்நிகழ் பொருளில் - பிரித்தெழுதக்கூடாது .


பதினைந்துக்கு மேற்பட்ட எழுத்துகளாலான ஒரே வினை! 


இப்போது மேலும் சில , இயலக்கூடிய ,  தொடர்களைப் பார்ப்போம் :


௧)அன்று நாங்கள் விமானத்தில் பறந்துகொண்டிருந்திருக்கிறோம் ( ஆனால் அதை நாங்கள் உணரவேயில்லை)


௨)நேற்று இந்நேரம் நாங்கள் விமானத்தில் பறந்துகொண்டிருந்திருப்போம் (ஆனால், பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் முடியாமல் போய்விட்டது)


௩)நேற்று இந்நேரம் நாங்கள் விமானத்தில் பறந்துகொண்டிருந்திருக்கவேண்டும் (ஆனால், பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் முடியாமல் போய்விட்டது )


க - இறப்பில் தொடர்நிகழ்வு . வினை நிகழ்ந்திருக்கிறது. நிகழ்கால இடைநிலை வடிவம் தக்கவைக்கப்பட்டுள்ளது. ஆனால் இறந்தகால நிகழ்ச்சி. மரபிலக்கண நிலைநின்று காலமயக்கம் என்று கொள்ளலாம்.


௨ &௩ - இறப்பில் தொடர்நிகழ்வு .ஆனால் நிகழவில்லை.


௨ - பறந்துகொண்டிருந்திருப்போம் ( கொண்டிருந்து + இருப்பு + ஓம்) - என்பதில் உள்ள 

         ' இருப்பு ' என்பது துணைவினை என மேலே பார்த்தோம். இரு +ப் + ஓம் எனப்

          பகுக்கக் கூடாது. இதில் - ப் - கால இடைநிலையில்லை. - இருப்பு - என்னும்

           இயலாமைக் குறிப்புடைய துணைவினை.

         

          III)பறப்போம்

          

          iii) பறந்துகொண்டிருப்போம்    என்பவற்றில் உள்ள - ப் - எதிர்கால   இடைநிலை.

           

பறந்து கொண்டு இருந்து இருக்க வேண்டும்  என்பதில்  பற(ந்து), கொள் ( கொண்டு ) , இரு (ந்து) ,  இரு (க்க) - ஆகிய நான்கும் வினையெச்ச வடிவில் நின்று வேண்டும் என்பதோடு முற்றுகின்றன. பற - முதல் வினை ; பிற யாவும் துணைவினைகள்.


இருபதுக்குமேற்பட்ட எழுத்துகளாலான துணைவினைகள் பல சேர்ந்த ஒரே வினை!! 

சேர்த்துத்தான் எழுதவேண்டும்😡

அச்சில் வாய்ப்புக்கேற்பச் சற்றே சமரசம் செய்துகொள்ளலாம்.


விவாதம்

×××××××××


சேர்ப்பதா ? பிரிப்பதா ? என்பதைக் கடந்து துணைவினைகள் தேவையா ?  என்பது பற்றி விவாதம் விரிந்துவிட்டது.


திரு. இரவீந்திரன் வேங்கடாசலம்Raveenthiran Venkatachalam :

பழந்தமிழில் துணைவினைகொண்டு எழுதும் வழக்கம் இல்லை. அது ஆங்கிலத்தின் continuous tense ,  perfect tense ஆகியவற்றைத் தமிழில் எழுத முயன்ற அபத்தம். பம்மல் சம்பந்த முதலியார்க்கு உவேசா இதைப் போதித்த வரலாறு ஒன்று உண்டு. 



மதிவாணன் பாலசுந்தரம் :

" பொதுவாகத் துணைவினைகள் பழந்தமிழில் காணப்படுவதில்லை என்றும் தற்காலத் தமிழில்தான் காணப்படுகின்றன என்றும் அறிஞர்கள் சிலர் எண்ணியிருந்தனர். இதற்குக் காரணம் மேனாட்டு மொழிகளின் செல்வாக்கு என்பர். ஆனால் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராயின் துணைவினைகளில் சில அன்றே தமிழ் மொழியில் வழக்கில் இருந்துள்ளன என்பது தெரியவரும். இன்றைய தமிழில் காணப்படும் வளர்ச்சி அன்று இல்லையாயினும் அக்காலத்தில் துணைவினைகள் இருந்திருந்தன என்பதும் காலப்போக்கில் மிக வளர்ந்து உள்ளன என்பதும் தெரியவரும் "⁶ - என்று முனைவர் ச.அகத்தியலிங்கம் அவர்கள் தக்க சான்றுகளோடு எழுதியுள்ளார். 



நீங்கள் அபத்தம் என்கிறீர்கள். அகத்தியலிங்கனார் வளர்ச்சி என்கிறார். நான் காலப்போக்கில், அகநிலையாலும் புறத்தாக்கங்களாலும் , நேர்ந்த மாறுதல்கள் என்பேன்.


திரு. இரவீந்திரன் வேங்கடாசலம்Raveenthiran Venkatachalam :

திரு. அகத்தியலிங்கம் எழுதியதை நான் படிக்கவில்லை. "பழங்காலத்தில் பெரும்புலவர்கள் இருந்திருக்கிறார்கள்" என்பது அபத்தமல்லவா? ஏன் இரண்டு "இருத்தல்" வரவேண்டும்? "இப்போது கம்பராமாயண பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்" என்பதை "இப்போது க.ரா பாடம் சொல்கிறார்கள்" எனலாமே? ஏன் "கொண்டு"கூட்ட வேண்டும்? இது "Now they are teaching kambaramayanam" என்ற ஆங்கிலத்தைத் தமிழாக்கிய அவலமல்லால் வேறென்ன? துணைவினைகள் சங்கத்தமிழில் அரிதாகவே காணப்படுகிறது. அகம் புறம் நற்றிணை ஆகியவற்றில் நான் பார்த்ததில்லை. கலித்தொகையில் மட்டும் அரிதாகப் பார்த்திருக்கிறேன். தமிழின் கால இலக்கணம் விரிவாக ஆராயப்பட வேண்டும். ஆங்கிலத்தைப்போல perfect tense, continuous tense, முதலியவை தமிழில் கிடையாது என்பது என் கருத்து. தாங்கள் சொல்வதுபோல் 15க்கும் மேற்பட்ட எழுத்துக்களால் வார்த்தைக்கோப்பு (word string) அமைவது தமிழின் ஒலிப்பினிமையைக் குலைப்பதாகக் கருதுகிறேன். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு இலக்கண மரபு உண்டு; அது பேணப்படவேண்டும் என்பதே நான் வலியுறுத்த விழைவது. மரபழித்த மாற்றம் வளர்ச்சியன்று என்பேன்.


மதிவாணன் பாலசுந்தரம் :

௧. " சில , இயலக்கூடிய ,  தொடர்களைப் பார்ப்போம் " என்றுதான் எழுதியுள்ளேன். அத்தகு நெடுவினைகளைப் பரிந்துரைப்பது என் நோக்கமன்று. 


௨. ஒலிப்பினிமை என்பது மொழி நடை குறித்தது;நல்லது.இலக்கணம், இயலக்கூடிய ,  அனைத்து வகைத் தொடர்களையும் கருதுவது.


௩. மொழி இடத்தாலும் காலத்தாலும் மாறுதல்களுக்கு ஆளாவது , கண்டுணரப் பட்ட இலக்கண வரம்புகளுக்கு அப்பாலும் சிலபல கூறுகளுக்கான சாத்தியம் கொண்டது என்பதனால்தான் , விதிமுறை சார்ந்த மரபிலக்கண நூல்களிலும் புறனடைகள் இடம்பெறுகின்றன.


இதுபற்றி அவரிடம் பேசுகிறேன்*

( *இங்கு இறப்பல்கால வினையாக எதிர்வு குறித்து நிற்கிறது; விரைவு குறித்த காலமயக்கமாகவும் கொள்ளலாம்)

இதுபற்றி அவரிடம் பேசியிருக்கிறேன்/பேசியுள்ளேன்

இதுபற்றி அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்

இதுபற்றி அவரிடம் பேசிக்கொண்டேயிருக்கிறேன்

இது பற்றி அவரிடம் பேசிக்கொண்டுதானிருக்கிறேன்

இதுபற்றி அவரிடம் பேசிக்கொள்கிறேன்

இதுபற்றி அவரிடம் பேசிப்பார்க்கிறேன்

இதுபற்றி அவரிடம் பேசிப்பார்த்திருக்கிறேன்

இதுபற்றி அவரிடம் பேசிவிடுகிறேன்

இதுபற்றி அவரிடம் பேசிப்பார்த்துவிடுகிறேன்

இதுபற்றி அவரிடம் பேசிவருகிறேன்

...     ...         ...            ...


- இவற்றின் அடிப்படை பேசுதல்தான் என்றாலும் ஒவ்வொன்றுக்கும் பொருட்குறிப்பில் வேறுபாடு உண்டு; நடைப் பன்மைக்கும் நல்வாய்ப்பு.

பழந்தமிழில் இல்லை என்பதற்காகப் பயின்று கலந்துவிட்ட இவற்றை விட்டுவிடவேண்டியதில்லை என்பது என் கருத்து.



குறிப்புகள்


1)சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி (Tamil Lexicon): 


தனி²-த்தல் taṉi- , 11 v. intr. < தனி¹. 

1. To be alone, single, solitary; ஒன்றியாதல். (W.) 2. To be separate, detached from company; ஏகாந்தமாதமல். தனித்தே யொழிய (கலித். 114). 

3. To have no equal or match; நிகரற்றிருத்தல்.

4. To be deserted, forsaken, helpless, as by the departure or death of friends; உதவியற்றிருத்தல். (W.)


2)இரு - என்னும் துணைவினை , ஒரு செயலின் நிறைநிலை காட்டுவது என்பார் முனைவர் பொற்கோ அவர்கள்(இக்காலத் தமிழ் இலக்கணம், பூம்பொழில் வெளியீடு, சென்னை 2002 , ப.56)


3)  சமைத்துப் பார் - என்பது ஒரு காலத்தில் தமிழகத்தின் பிரபலமான சமையல்

     புத்தகம். அதற்கும் இந்த வழக்குக்கும் பெயரளவில் மட்டுமே தொடர்பு. அதன்

      படத்தை மட்டும்  நன்றியோடு எடுத்துக்கொண்டேன்.

4)  பொற்கோ , ௸ , பக்.52 - 62

5)  ௸, பக்.64 - 68.

6) சங்கத்தமிழ் 4, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , சென்னை , இரண்டாம் பதிப்பு 2010(முதற்பதிப்பு 1984) , ப. 104.

- ஏப்பிரல் 13-15 , 2021 முகநூல் இடுகைகளின் செவ்விதாக்கிய தொகுப்பு






No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...