Tuesday, April 27, 2021

மனைவி உயர்வும் கணவன் பணிவும் - தொல்காப்பியம் !

 

"ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை"

"ஆணும் பெண்ணும் நிகர் " - முதலியவை இருபதாம் நூற்றாண்டு முழக்கங்கள்.


ஆனால்,


தொல்காப்பியர் மனைவி உயர்வையும் கணவன் பணிவையும் அன்றே சொன்னாரா? 


ஆம்.

 

காமக் கடப்பினுட் பணிந்த கிளவி

காணுங் காலைக் கிழவோற் குரித்தே

(தொல்காப்பியம், கற்பியல்)


காமக் கடப்பு = காம உணர்ச்சி கைமீறிப் போதல் ; பணிந்த கிளவி = பணிவாகப் பேசுதல் ;கிழவோற்கு = கிழவோன் (தலைவன்) + கு = தலைவனுக்கு


மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்

நினையுங் காலைப் புலவியுள் உரிய

(தொல்காப்பியம், பொருளியல் ) 


புலவி = ஊடல் (புலவி, ஊடல், துனி இவற்றிடையே சிறு சிறு வேறுபாடு உண்டு என்பார்கள்)


இவ்வாறு தொல்காப்பியம் கூறுவன கற்புக் காலம் கருதி.


இந் நூற்பாக்களுக்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் நடப்பியற் சாயலுள்ள கலித்தொகையிலிருந்தே எடுத்துக் காட்டுகள் தருகின்றனர். 


இவற்றில் உச்ச நிலை எது தெரியுமா? மனைவி காலிலேயே கணவன்  விழுந்து விடுவதுதான். தொல்காப்பியரே சொல்கிறார் :"அடிமேல் வீழ்ந்த கிழவன்" (' அவனறி வாற்ற... ' என்னும் தொல்., கற்பியல் நூற்பா).


எப்போது? தலைவன் பரத்தையிடம் சென்று திரும்பி வந்து தலைவியிடம் தன்னை ஏற்குமாறு கெஞ்சும் போது.


இதற்குப் பூரணரும் நச்சரும் கலித்தொகை 95 ஆம் பாட்டையே எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.


இதில் தலைவன், தப்பு செய்துவிட்டேன். கருணை காட்டு ("பிழைத்தேன் அருள் இனி " )என்று கெஞ்சுகிறான்


இவையெல்லாம் திருமணத்திற்குப் பிந்தைய கற்புக் காலத்தில் .


இளம்பூரணர் காட்டும்," மருந்திற் றீராது மணியினாகாது" என்னும் பாட்டின்  ( 'காதல் வெறும் ஏட்டுச் சுரைக்காய்' என்னும் எனது கட்டுரை காண்க) "ஆடு கொடி மருங்கின் அருளின் அல்லது பிறிதின் தீராது" என்பதில் தலைவனின் மெய்யுறு புணர்ச்சி வேட்கையை உணர்ந்து சுட்டுகிறார் இளம்பூரணர் .அது திருமணத்துக்கு முந்தைய களவுக்காலம்.


சொல்லளவில் அன்றி, பொறுக்கவியலாத காதல் நோய் காரணமாகத் தலைவன் இரந்து கெஞ்சி , தலைவியின் அருள் வேண்டும் களவுக்காலப் பாடல்கள் சிலபலவுள.


உண்மையில் நம் சங்கச் சான்றோர்தம் செவ்வியல் இலக்கியங்களில், குறிப்பாகக் குறிக்கோள் நிலை மீதூர்ந்த - குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகைப் பாடல்களில் -களவிலும் கற்பிலும் தலைவி தலைவனின் அருளை வேண்டி நிற்குமிடங்கள்தாம்  நனி மிகுதி. விதிவிலக்குகள் மிகச் சிலவே.


" வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்

  மனையுறை மகளிர்க் காடவர் உயிர் "

                                (குறுந்தொகை , 135 )

                                           

என்னும் இக் குறுந்தொகைப் பாட்டின் முதல் இரண்டடிகள் , இலக்கிய மெருகினூடாகச் சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமான இடத்தையும் உணர்வையும் செறிவாக வரையறுத்துச் சொல்லிவிடுகின்றன.


தொல்காப்பியரும் , மனைவி உயர்ந்து கணவன் பணிவதை விதிவிலக்காகவே விதிக்கிறார்.


                                                                ♥╣[-_-]╠♥

                                 


இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகத்தின் வெகுசனநிலைப் பார்வையில், குறிப்பாக ஆணாதிக்கம் நீக்கமற நிறைந்து கிடந்த , கிடக்கிற தமிழ்த் திரைக் கேளியுலகின் பார்வையில், பெரிய மாற்றம் ஒன்றுமில்லை. '  இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள ' என வலியுறுத்தப்பட்டது ( பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி ; படம் : விவசாயி ; கதைத் தலைவராக நடித்தவர் : 'புரட்சித் தலைவர்' ம.கோ.இரா.)


தமிழ் - ஏன் இந்திய - திரையுலகில் ஒலி, ஒளி, இசை, காமிராக்கோணம் முதலிய கூறுகளில் ஒன்றாகப் பாடலும், காட்சிச் சூழலுக்கும் இசை மெட்டுக்கும் கட்டுப்பட்டு , உருப்பெற்றது. பாடலாசிரியர்களும் ஒரு வகைத்தொழில் நுட்பப் பணியாளர்தாம் ( திரைப்பட விவரங்கள் தரும் விக்கிப்பீடியா கட்டுரைகள் பலவற்றில் பாடலாசிரியர் பெயர் இல்லை)


ஆனால் பாடல்கள் திரைக்கதையிலிருந்து விலகிய தனித்த இயக்கமும் கொண்டவை.பாடற் காட்சிகளையே  தனித்துப் பார்க்கும் வாய்ப்புப் பெருகிவிட்ட இந்தக் காலக்திலும்  காட்சியிலிருந்து தனித்து இயங்கும் பாடல்களின் வலிமை குன்றிவிடவில்லை.


இந்தப் பின்னணியில் கண்ணதாசன் அவர்களைப் பார்க்க வேண்டும். அநாயாசமான திரைப்பாடலாக்கச் செய்நேர்த்தி கைவரப் பெற்ற கண்ணதாசன், தம் பாடல்களில் கவிதையின் வண்ணங்களைக் குழைத்தளித்தார்; கவிதையேயாகவும் சிலபல தந்தார்.


" நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே!" என்ற ஒன்று போதாதா?


வாழ்வின் பல்வேறு நிலைகளில் உணர்ச்சி முனைப்பான தருணங்களில் உள்ளம் முணுமுணுக்கும் பாடலடிகளைத் தந்தவர் கண்ணதாசன்("ஆலம் விழுதுகள்போல் உறவு ஆயிரம் வந்துமென்ன, வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடா திருந்தேன்" என்னும் அடிகளை என் உள்ளம் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது)


வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் மட்டுமன்றி, பயின்று ஊறிய இலக்கிய உணர்வுகளும் அவர் பாடல்களுக்கு மெருகேற்றின. 


" அத்திக்காய் காய் காய் " முதலிய சொல் விளையாட்டுகள், "கண்வண்ணம் அங்கே கண்டேன், கை வண்ணம் இங்கே கண்டேன்" முதலிய சொற்பின் வருநிலைகள், " வீடு வரை மனைவி வீதி வரை உறவு" முதலிய கருத்து எளிமையாக்கங்கள் என்னும் இவற்றில் அவர் பயின்ற இலக்கியங்களைச் சமகாலத்தமிழில் வெகுசன ஊடகத்திற்கேற்ப எடுத்தாண்டிருப்பார். சற்றே முயன்றால் இவை போன்ற வெளிப்படையான செல்வாக்குக் காணப்படும் இடங்களைத் தொகுத்து விடலாம் .


உள்ளார்ந்த இடங்களும் உண்டு. அதில் ஒன்றைச் சொல்லத்தான் இந்தச் சுற்றி வளைப்பு. 




சீழ்க்கையொலி இடைமிடைந்த , எனக்குப் பிடித்த (காட்சியில் புகைத்தல் எரிச்சலூட்டுவது) 'பார் மகளே பார்' படப்பாடலின் அடிகள் :


தலைவன் : " நான் காதலென்னும் 

                          கவிதை தந்தேன்

                          கட்டிலின் மேலே

தலைவி    :    " அந்தக்

                          கருணைக்கு நான்

                          பரிசு தந்தேன்

                          தொட்டிலின் மேலே "

                          

 தலைவி 'கவிதைக்கு நான் பரிசு தந்தேன்' என்று பாடியிருந்தால் இயல்பானது; ஓசைகுன்றாதது ; தருக்க ரீதியிலானது;சமத்துவமானது; எனவே, சரியானது.


கண்ணதாசன் கருத்தளவில் மட்டுமன்றி நடை முறையிலும் ஆண் மேன்மையை ஏற்றவர் என்பதை நான் நிறுவ வேண்டியதில்லை.


கட்டிலில் தலைவனின் (படத்தில் கணவன் ) 'காதல்' அவனுக்குக் கவிதை; ஆனால் தலைவிக்கு (மனைவிக்கு) அவன் காட்டும் கருணை .


ஐயத்திற்கிடமின்றி இந்தப் பாட்டடிகள் 'காதலில்' ஆண் மேன்மையைப் பொதிந்துவைத்துள்ளன.


இதற்குக் காலநிலையும் கண்ணதாசனின் கருத்து நிலையும் மட்டுமே காரணங்களா?


சான்றோர் செய்யுட்களின் அருள், கண்ணதாசனிடம் கருணையாகியிருக்கிறது.

1 comment:

  1. ஊடல் நிகழ்த்தும் காலத்தே தலைவிக்கு தலைவன் பணிவான். மற்ற இடத்தில் அப்படி தலைவன் இருப்பதாக தொல்காப்பிய நூற்பா இல்லை..

    ReplyDelete

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...