Sunday, April 11, 2021

பேரா. மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்

 


பேரா. மா.ரா.அரசு:  நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்                  
-----------------------------------------------------------------------------------------------------

தாராளமும்  எதையும் தன் கட்டுக்குள்  வைத்துக் கொள்ள வேண்டும் என்னும்
தலைமைத் தன்மையும் கொண்ட  புரவலர் உள்ளம் -

எடுத்த பணியைத் துடிப்புடன் செம்மையாகச் செய்துமுடிக்கும் செயல்வேகம் -

அன்றாட நடவடிக்கை முதல்  இலக்கியப் பார்வை வரை,    எங்கும் எதிலும் ,  கச்சிதம் -

இவற்றில் அவர் கொண்டிருந்த உறுதி அல்லது பிடிவாதம்-

இவை யாவும் இயைந்த ஆளுமை  பேராசிரியர் மா.ரா.அரசு.

முன்பு  11 ஆண்டுகளில் பள்ளிக்கல்வி நிறைவு,   கல்லூரியில் ஓராண்டுப் புகுமுக வகுப்பு, அப்புறம் பட்டப்படிப்பு - என்னும் முறை இருந்தது.1970 களின் இறுதியில் பள்ளிக்கல்வியில் 10 + 2 என மாற்றம் செய்யப்பட்டது. அப்போது அரசு உதவிபெறும் தனியார் கல்லூரி ஆசிரியர் பலர் மிகை (Surplus) யாயினர். அவர்களுக்கு , ஊதியத்திலும் பணித் தரநிலையிலும் மாற்றமின்றிப் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்புத் தரப்பட்டது. ஆனால் , கல்லூரி ஆசிரியர்சங்க எதிர்ப்புக் காரணமாக, மிகை ஆசிரியர்கள் பிற தனியார் கல்லூரிகளின் காலிப் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக அனுப்பப்பட்டனர்.

அப்படி மா.ரா. அரசு அவர்கள் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலிருந்து 1980களின் தொடக்கத்தில், தஞ்சை, கரந்தைப் புலவர் கல்லாரிக்கு வந்து பணியாற்றிய காலத்தில் அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றோருள் ஒருவன் நான்.

அப்போது பேராசிரியர்கள்  சா.வளவன், க.பூரணச்சந்திரன், ஜெயராணி ராஜதுரை  முதலியோரும் புலவர் கல்லூரியில் பணியாற்ற வந்திருந்தனர். இவர்கள் நவீன இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள். பேரா.அரசு இதழியல் வரலாற்றிலும்,  ஆர்வம் கொண்டு பணியாற்றி வந்தார்.

நானும்  நவீன இலக்கிய ஈடுபாட்டாளன் என்பதாலும், கல்லூரி மாணவனாக இருந்தபோதே எனக்கொரு பார்வை வாய்த்ததனாலும் நான் அவர்களோடு - இணங்கியும் வேறுபட்டும் முரணியும் - உரையாட முடிந்தது.

கல்லூரி ஆசிரியர் அறை அன்றாடம் படிப்பு, நூல்கள், விவாதம் எனக் கல்வி சிறந்திருந்த காலம் ; மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்ட காலம்; நினைந்தேங்கும் காலம்.

பேரா.அரசு அவர்களின் ஆலோசனையை ஏற்று, எனது முனைவர் பட்டத்திற்காக ,  டி. எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் இதழியல் பணி பற்றி ஆராய்வதென்று முடிவு செய்தேன். தரவுகள் திரட்டப் பேருதவி புரிந்தார். என் ஆய்வுப்பணிகளில்  முன் பாதி அவர் ஒத்துழைப்புடன் நிறைவேறியது. அக்காலத்தில் அவர் வழி அறிமுகமான இதழாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள்,  நண்பர்கள் , நிறுவனங்களின் நினைவுகள் சில இப்போது மங்கலாக எழுந்து மறைகின்றன.

பேரா.அரசு எப்போதும் தம்மைச் சென்னைக்காரராகவே உணர்ந்தார். ஆண்டுக்கணக்கில் தஞ்சையில் பணிபுரிய நேர்ந்த போதும் , தஞ்சைப் புதாற்றுக் கரையில் பிலால் உணவகத்திற்குப் பக்கத்தில் இருந்த ராஜராஜன் விடுதியில்தான் தங்குவார். வார இறுதியிலும் பிற விடுமுறை நாட்களிலும் சென்னை சென்றுவிடுவார்.

அப்போது கல்லூரி மாலை 04.15க்கு முடியும். முதல்வர் பேரா.பி.விருத்தாசலம் ஐயா அதன் பிறகும் ஓரிரு மணிநேரம் பல்வேறு பணிகளின் பொருட்டு இருப்பார்.

பேரா.அரசு அவர்களும் ஆசிரியர் அறையிலிருந்து சில பணிகளை மேற்கொள்வார். திருவாளர்கள் சார. செந்தில்குமார், மோ. தமிழ்மாறன், இரா.குணசேகரன், த.திலிப்குமார் , துரை.பன்னீர்செல்வம் முதலிய மாணவர் குழாம் அவருடன் இருக்கும். திரு.ஆ.இளங்கோவன்  சில பல நாட்கள் அவருடன் விடுதியிலேயே தங்கிவிடுவார் (இவர்கள் பின்னர் பேராசிரியர்களாக அரசு அலுவலர்களாக ஆயினர் ). பேரா.மு.செல்லன்  அவர்களையும் (இவர் சென்னையில் பேரா.அரசு அவர்களின் மாணவராயிருந்தவர்) என்னையும் மாணவர் குழாத்தினர் என்றே சொல்லிவிடலாம்.

இளைஞர்களை ஊக்குவிப்பதில் இனிமை கண்டவர் பேரா.அரசு. இதழ்களில் எழுத, வானொலியில் உரையாற்ற, நூல்கள் இதழ்கள் வெளியிட வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். வெவ்வேறு அளவில் கருத்தரங்குகள் நடத்துவிப்பார்.

எனது ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேட்டை நூலாக்கத் தூண்டித்துணை நின்றார். துணை என்றால், அவருடைய நூலொன்றை வெளியிடுவது போன்றே ஓவியர் அமுதோனை அறிமுகப்படுத்தி, அட்டைப்படம் வரைவித்து, அச்சுக்கட்டை செய்வித்து அச்சகத்தையும் ஏற்பாடு செய்து தந்தார் (நான் இற்றைப்படுத்த முயன்றேன். முடியவில்ல. நூல் வராமலேயே போயிற்று. அவருக்கு வருத்தம்)

பெரும்பாலான நாட்கள் மாலை 05.30 மணியளவில் கல்லூரியிலிருந்து பேசிக்கொண்டே நடப்போம். நான் கொடிமரத்து மூலையில் திரும்பி வடக்கு வீதி வழியாக வீட்டுக்குப் போகவேண்டும். ஆனால், பேசிக்கொண்டே  பேருந்துநிலையம் வரை போகலாம் என்று கொடிமரத்து மூலையில் முடிவாகும்.   தஞ்சை (பழைய) பேருந்துநிலையத்தை ஒட்டிய உணவகங்களில் மாலைச் சிற்றுண்டி உபசாரம். பிறகும் நடந்துகொண்டே பேசுவோம். ராஜராஜன் விடுதி வாயிலிலேயே பேச்சுத் தொடரும். இரவு உணவும் அவருடன் உண்பதுண்டு. நள்ளிரவு அல்லது விடியலில் கூட மிதிவண்டியில் வீடு திரும்புவேன்

பேரா.அரசு உணவில் நுண்சுவைப் பேரன்பர். ஒரே வேளையில் ஓர் உணவகத்தில் இட்லி சாம்பாருடன்;பிறிதோர் உணவகத்தில் தோசை சட்னியுடன்;பிலால் உணவகத்தில் தம் தேனீர் (Dum tea) .மறுநாள் உணவு வகை மாறும். ஆனாலும் ஒன்றுக்கு மேற்பட்ட உணவகங்களில்தான்.

அசைவ வகைகளாயினும் அப்படித்தான்.காரணம் ஒவ்வோர் உணவகத்தில் ஒவ்வொரு வகை உணவும் தொட்டுக் கொள்வனவும் சுவையில் மேம்பட்டிருப்பதுதான். பெரும்பாலும் மாறாதது பிலால் தேனீர்.

இதில் நிகழ்ச்சிச் சுவைகளும் உண்டு.

ஒருமுறை பரிமாறுகிறவரைப்(server) பக்கத்தில் அழைத்து , " மொறுமொறு என்று நடுவில் மாவு தேங்காமல் பொன்னிறமாக ரவா தோசை . போய் , சொல்லிப் போட்டுக்கொண்டு வாப்பா " என்றார்.
பரிமாறுகிறவர் உடன் , " நாலு ரவா " என்று குரல் கொடுத்தார்.
இவருக்குச் சினம் தலைக்கேறி முகம் சிவந்து விட்டது. " ஏம்பா, இவ்வளவு சொல்றேன். நீ இங்கிருந்தே கத்துறியே?" என்றார்.
" சார் ! அது அந்த டேபிளுக்கு. உங்களுக்கு உள்ள போய் சொல்றேன் சார் " என்றார் பரிமாறுகிறவர் ; எத்தனை பேரைப் பார்த்திருப்பார். இது போல் பரிமாறுகிறவரை முறைத்த சூழல்கள் பல - சென்னையிலும்.

அவர் இல்லத்தில் விருந்தினர்களுடன் - பெரும்பாலும் உடன் தாம் உண்ணாமல் -  அமர்ந்துவிடுவார்; விருந்தினரின் முகக் குறிப்பில் சுவையுணர்ந்து , பார்த்துப் பார்த்துப் பரிமாறுவார். " என்பொடு தடிபடும் இடமெல்லாம் எமக்கீயும் மன்னே! " என்கிற அதியமான் உணர்விலான விருந்துபசாரம்.

சில நாட்கள் பெரிய கோயில் புல்தரையில் வட்டமாக அமர்ந்து, பிரசாதக்கடையில் வாங்கிய கொறிப்பு வகைகளை அசைபோட்டுக் கொண்டே உரையாடுவோம்.அது பின்னர், 'கொறிப்பு' என்னும் இலக்கிய அமைப்பாக உருப்பெற்றது. அதே பெயரில் ஒரு தட்டச்சு இதழும் கொணரச்செய்தார்.

இளையோரின் சாதனைகளைப் போற்றுவது, படைப்புகளை வெளியிடுவது என்னும் நோக்கில் 'இளமையின் குரல்' என்னும்  அச்சு இதழும் அவர் முயற்சியால் வந்தது.

ஒருமுறை 'கொறிப்பு'க்கூட்டத்தில் எழுத்தாளர் சி. எம்.முத்து அவர்களின் 'நெஞ்சின் நடுவே' நாவல் பற்றி விவாதம் எழுந்தது. பேரா. அரசு  'ஆபாசம்' மேலோங்கியிருப்பதாக ஒட்டுமொத்த நாவலையும் மறுத்தார்.  நான் சி.எம்.முத்து அவர்களையே 'கொறிப்பு'க்கு அழைத்துப் பேசலாம் என்றேன். முத்து வந்தார். அவரது நாவலின் ஆபாசம் பற்றி வினவினோம்.
" ஆமாங்க ஆமாங்க " என்று தம் தாம்பூலச் செந்நாவால் ஆமோதித்தார்.
"ஆமாவா?" என்றோம்.
" ஆமாங்க ஒழிக்கணுங்க " என்றார்.
" நீங்க தானே எழுதிருக்கிங்க." என்றார் பேராசிரியர் எரிச்சலுடன்.
  " அங்க நடக்கறது ஒழிஞ்சா என் எழுத்துலயும் ஒழிஞ்சு போய்டுங்க" என்றார் முத்து.ஒழுக்க சீலராக வாழ்கிற , ஒழுக்கவாதியான பேராசிரியருக்கு உடன்பாடில்லை என்றாலும் விருந்தினரை முறைப்படி போற்றி வழியனுப்பிவைத்தார்.

பேரா.அரசு அவர்களின் இலக்கியம் பற்றிய பார்வை, கு.ப.ரா. சொன்ன கலைமகள் மனப்பான்மையில் உருப்பெற்றது : " கற்பனையிலும் வாழ்க்கையிலும் பெருமையையும் பேரையும் அந்தஸ்தையும் கௌரவத்தையும் போற்றுவது இதன் இயற்கை" (கு.ப.ரா.)

கச்சிதம் அவருடைய அசைவுகள் அனைத்திலும் துலங்கும். புத்தகப் பேணலில் இருக்காதா !  பழைய நூல்கள் கூட கட்டுவிடாமல் மூலை மடங்காமல் உறைநெகிழாமல் இருக்கும். "இவ்வே பீலியணிந்து..." என்னும் தொண்டைமான் படைக்கலங்கள்தாம். ஆனால் , படிப்பார். முக்கியமென்று கருதும் வரிகளின் கீழ் அளவுகோல் வைத்துத்தான் அடிக்கோடிடுவார் . கோடு இம்மியும் முன்பின் பிசகாது.

இழுப்பறை இல்லாத சிறிய மேசைகள் கொண்ட ஆசிரியர் அறையில் - எண்மர் இருக்கும் அறை - தம் மேசை மீது புத்தகங்களின் நீள அகலம் பார்த்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைத்திருப்பார். அது மேசையின் நீள அகலத்திற்கு இசைவாக ஒரு பக்கத்தில் இருக்கும்.
ஒருமுறை வகுப்பிலிருந்து திரும்பி வந்து " என்னப்பா இந்த ஊர்ல எல்லாம் காட்டானா இருப்பானா? " என்றார்.
" ஐயா, என்னங்கையா? " என்றேன்.
" புத்தகத்த எவனோ கலச்சிருக்காம்பா " என்றார்.
ஒரு நூலிழையளவு நகர்ந்திருக்கலாம். ஆனால், அவரால் அதை உணரமுடியும். கச்சிதம் !

சிறிய , தட்டச்சிடப்பட்ட , ஒரு பக்க அளவிலான , தமிழ்த் துறைக்குள் மட்டுமே சுற்றுக்கு விடப்படும் அழைப்பிதழாயினும் அமைப்பழகில் கூர்ந்து கருத்துச் செலுத்துவார். கையில் எழுதுகோலைச் சற்றே அசைத்துக்கொண்டு மெய்ப்புப் பார்க்கும்போது , எதுவும் தப்பிவிடாமல் குறிபார்த்து அம்பு எய்ய முனையும் வேட்டைத் துல்லியம் தென்படும்.தட்டச்சர், நண்பர் நவநீதம் படும்பாடு சொல்லிமாளாது.

புத்தகம், மலர் முதலியவற்றைக் கொணர்வதில் அவர் எதிர்பார்க்கும் நேர்த்தி உருவாகும் வரை  பரபரப்புடன்  பணியாற்றுவார்.

அவர் நடத்தும் கருத்தரங்குகளில் மேடை அணிகள், மேடை இருக்கையமைப்பு, பார்வையாளர் இருக்கை வரிசை, நிழற்படக்காரர், வரவேற்பு மேசை ,  சிற்றுண்டி பேருண்டி , உரையாளர் வரிசை , கால அளவு யாவற்றிலும் தரமும் முறையும் நிலவும். இதனை  இதனால் இவர் முடிப்பார் என்று ஆய்ந்து பணிகளை ஒப்படைப்பார். சிறு குறைபாடெனினும் சினம் தலைக்கேறிவிடும். பெரும்பாலும் நண்பர்களும் அன்பர்களும் சீடர்களும்,   தாம் முந்துற்றுப் பணியாற்றுவர்.

அவர்  பச்சையப்பன் கல்லூரிப் பணிக்கு மீண்டபின் , 1980 களின் பிற்பகுதியில் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தமிழ் இதழியல் தொடர் கருத்தரங்கு அவருடைய சாதனைகளுள் ஒன்று. இவற்றில் முன்வைக்கப்பட்ட கட்டுரைகளைப் பத்துக்கு மேற்பட்ட தொகுதிகளாக நூலாக்கினார்.

ஆராய்ச்சி என்பது மெய்ம்மைகளைத் தேடித் தொகுத்து முறைப்படுத்திக் கொடுப்பதே என்பது அவர் கருத்து. கடுமையாக உழைத்துத் தேடித்தரவுகள் திரட்டுவார். விளக்குறுத்தல்கள்(interpretation) - அவற்றுள்ளும் கோட்பாட்டு நோக்கு விளக்குறுத்தல்கள் - வழியாக  முடிவுகளை எட்டுவது  நடுநிலைப் பிறழ்வுகள்; ஆய்வாகா என்பார்.

ஆனால், தரவுகளையும் மெய்ம்மைகளையும் அடுக்கும்  ஆய்வுரைகளையும் கூட கச்சித அழகியல் நோக்கிலான நடையில் நயமாகத் தருவார். உரையாற்றுவதிலும்   அந்தக் கச்சித அழகியல் இழையோடச் செய்வார்.  கம்பீரமான குரல். அரிய மொழித்திறன் வாய்க்கப்பெற்ற அறிஞர்.

அவர் வ.உ.சி . ஆய்வு முன்னோடிகளுள் ஒருவர். சாகித்திய அகாதமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் வந்த 'வ.உ.சிதம்பரனார்' , வ.உ.சி. கட்டுரைகள், இலங்கை வீரகேசரி இதழில் தொடராக வந்ததன் தொகுப்பான,  வ.உ.சி.யின் 'திலக மகரிஷி' முதலியன அவரது குறிப்பிடத்தக்க நூல்கள். 'திலக மகரிஷி'யை வெளியிட்டுப் பேசிய தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் இது ஒரு வரலாற்று ஆவணம் என்று மதிப்பிட்டார்.

தமிழ்ப் பேரறிஞர் மா.இராசமாணிக்கனாரின் மைந்தர் என்பதும்  அவர் மதிப்பிற்கு மதிப்பைச் சேர்ப்பது இயல்புதானே!

அவர் 06.09.2020 அன்று மறைந்துவிட்டார் . அதைக் கேள்வியுற்றதிலிருந்து என் நினைவில் நிழலாடிய  அவரோடு பழகிய காலத்து  நிகழ்வுகளை மனம் அசைபோட்டது. அவருடைய அன்பு மாணாக்கராகிய பேராசிரியர் மு.செல்லன் அவர்களிடம் உடன் என் இரங்கலைத் தெரிவித்தேன்; குடும்பத்தார்க்குத் தெரிவிக்க வேண்டினேன். அவரும் துக்கம் மீதூர்ந்திருந்தார்.

அண்மையில்  பேரா. மா.ரா.அரசு அவர்களைச் சந்திக்க ஓரிரு வாய்ப்புகள் நேர்ந்தன. ஆனால், முடியாமல் போனது என்னுள் குற்ற உணர்ச்சியைத் தூண்டுகிறது.


         ------------------------- x ---------------------------------------------------x ---------------
 

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...