Friday, April 30, 2021

இலக்கணவியல் - நூலறிமுகம்

 இலக்கணவியல்






தமிழ்கூறு 'நல்'லுலகில் கோட்பாட்டு நோக்கில் ஆராய்கிறேன் என்று , அரைகுறையாகச் சில சொற்களைச் செவிமடுத்ததே தகுதியாய்க் கிளம்பி அஞ்சறைப்பெட்டியில் பிரித்துப்போடுவது அல்லது அடாவடியாக அடித்து நொறுக்குவது என்கிற போக்கைக் கண்டு கண்டு கோட்பாடு என்னும் சொல்லின் மீதே ஓர் ஒவ்வாமை எனக்குண்டு.


பேரா.சு.இராசாராம் அவர்களின் 'இலக்கணவியல்- மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்' என்னும் நூல் 2010இலேயே வந்துவிட்டது. அப்போதே நானும் வாங்கிவிட்டேன். என்றாலும் படிக்கவில்லை . இரண்டு காரணங்கள். 1. அது கோட்பாட்டு நூல்.  2.அப்போது நானும் 'பேர்' ஆசிரியனாகக் குழுக்கூட்டம் அறிக்கை, அறிக்கை  அறிக்கை குழுக்கூட்டம், குழுக்கூட்டம் குழுக்கூட்டம் அறிக்கை ... ...என்று பேராசிரியப் பணியிலிருந்தேன் ( இடையிடையே பாடமும் நடத்தலாம், நடத்தினேன்!)


பிறகு ? 


அப்படியொன்றும் எடுத்தேன் படித்தேன் என்கிற வகைப்பட்ட நூலாக இது இல்லை. எடுத்தேன் வைத்தேன் என்று சில நாட்களான பின், துண்டுத்துக்காணிகளாய்ப் படிப்பதும் எழுதுவதுமாய்- முகநூலில்தான் - இது புத்தக அடுக்குகளுக்குள் மறைந்துபோனது. இப்படிப்போனவை பல. போகட்டும்.


கடந்த நாலைந்து நாளாய்ச் சில இடையீடுகளையும் கடந்து படித்து முடித்துவிட்டேன் (முள்முடித்தொற்றுநோய் - 19க்கு நன்றி என்று சொல்வது குரூரமாயிருக்கும்)


ஆழ்ந்த தமிழிலக்கணப் புலமையுடனும்பரந்த மொழியியல் அறிவுடனும் ஆன்றவிந்தடங்கிய நிதானத்துடனும் ஆற்றொழுக்கான நடையில் 500 பக்க நூலை எப்படித்தான் எழுதினாரோ! என்னும் வியப்பே விஞ்சியது.


இது வழக்கமாக மொழியியல் நோக்கில் எழுதப்படும் மரபிலக்கண ஆய்வு நூலன்று ; மரபிலக்கணங்களைப் பயில்வதற்கும் ஆராய்வதற்குமான இலக்கணவியல் என்கிற புதிய  துறைப்படிப்பை (discipline) நிலைப்படுத்துகிற நூல்.


------------------------------------------------


" கோட்பாடு என்றால் என்ன? கருத்தியலான கொள்கைகள் அடங்கியதும் , சாதாரண அறிவுக்கு எட்டாததும், யதார்த்த நிகழ்வுகளிலிருந்து தள்ளி நிற்பதுமான ஒரு கட்டுமானப் புதிர் கோட்பாடு என்று நாம் பொதுவாகக் கருதுகிறோம். இது தவறு. எந்த யதார்த்த நிகழ்வுகளிலிருந்து கோட்பாடு அப்பாற்பட்டது என்று கருதுகிறோமோ அதே யதார்த்த நிகழ்வுகளை மையமாகக் கொள்வது என்பதுதான் அதற்குரிய யதார்த்தமான விளக்கம்.

" ஒரு கோட்பாடு சிறந்த கோட்பாடு என ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் அது நம்மைச் சுற்றி நிகழும் மொழி மெய்நிகழ்வுகளைக் குறித்துச் சிந்திக்க வேண்டும்" என்கிறார் பேரா. இராசாராம்(ப.410).


என் போன்ற கோட்பாட்டு ஒவ்வாமையரை - என் போன்ற என்ன, என்னை - இடித்துரைப்பதுபோலவே உணர்ந்தேன். ஆம், இதுதான் கோட்பாடு. இந்த அடிப்படையில்  மரபிலக்கண மீக்கோட்பாடொன்றைக் கண்டடைந்து இலக்கணவியல் என்னும் துறைப்படிப்பை இந்நூலில் முன்வைக்கிறார்.


இதற்குப் பின்னரும் கோட்பாட்டு ஒவ்வாமையாளர் இருப்பின் அவர்கள் தொல்காப்பியந் தொட்டுத் தொடரும் தமிழ் மரபிலக்கணங்களின் திறனாய்வு நோக்கிலான வரலாறாக இந்நூலின் பகுதிகளைப் பயில முடியும். தொல்காப்பியத்திற்கு முந்தைய அகத்திய, ஐந்திர மரபுகளின் தடங்களையும் தேடி இணைக்கும் முயற்சியையும் இதில் காணலாம்.





மேலை - கிரேக்க, இலத்தின் - இலக்கண வரலாறு, இந்திய - சமற்கிருத, பிராகிருத - இலக்கண வரலாறு,ஆகியவற்றின் போக்கைத் தமிழோடு ஒப்புநோக்குகிறார்;

சமற்கிருத இலக்கண மரபு இந்திய மொழிகளின் மீது செலுத்திய தாக்கம், தமிழின் மீது செலுத்திய செல்வாக்குஆகியன பற்றி விவாதிக்கிறார்; இவையன்றி வேறு சில மொழிகளோடும் தமிழ் ஊடாட நேர்ந்ததையும் கணக்கில் கொள்கிறார்; உலகெங்கும் இலக்கண உருவாக்கத்தில் தத்துவப் பார்வைக்கு இடமிருந்ததையும்  

 மேலோட்டமாகவோ ஆழமாகவோ சமயச் சார்பு இருந்ததையும் சுட்டுகிறார்.


இத்தகு தாக்கம், செல்வாக்கு , தொடர்பு ஆகியவை சமூக, அரசியல் சார்ந்த புற அழுத்தங்களின் விளைவு என்று சான்றுகளுடன் நிறுவ முற்படுகிறார்;ஓர் அரசின் ஆட்சிப்பரப்புப் பல்வேறு மொழியாளர் பகுதிகளில் பரவும்போது மொழி பற்றிய பார்வை அரசுக்குத் தேவைப்படுவதையும் தத்தம் தன்மைக்கேற்ப அரசுகள் மொழிகளைக் கையாள்வதையும்  சுட்டுகிறார்.


இவற்றின் பின்னணியில் தமிழிலக்கண மரபுகளாக 1) அகத்திய மரபு, 2) தொல்காப்பிய மரபு, 3) வீரசோழிய மரபு, 4) பிரயோக விவேக மரபு ஆகியவற்றைக் கண்டடைகிறார்.


தொல்காப்பியம் ஒரு தனி நிலைக் கோட்பாட்டு இலக்கணம் (pure/ theoretical grammar) ,பிந்தைய தமிழிலக்கண நூல்கள் யாவும் பயனாக்கக் கோட்பாட்டு இலக்கணங்கள்(applied grammar), வீரசோழியம் புடை மாற்று ஒப்புமைக்கோட்பாட்டைத் (theory of transfer) தழுவியது, பிரயோக விவேகம் கொடைமொழி ஒப்புமை இலக்கணம் (Donor language based comparative grammar) என்று விரிவான தரவுகளைக் கொண்டு விவாதித்து, தமிழ் இலக்கண நூல்களின் கோட்பாட்டு அடிப்படைகளை ஆராய்ந்து நிறுவுகிறார்.


இந்தக் கோட்பாடுகள் இன்ன பிற கோட்பாடுகள் அனைத்தையும் கொண்டு ஒரு மீக்கோட்பாட்டை உருவாக்கி அந்த மீக்கோட்பாடு கொண்டு மரபிலக்கணங்களை - தமிழ் இலக்கணங்களை மட்டுமன்றிப் பேரளவு பிறமொழி மரபிலக்கணங்களையும்  கூட - ஆராயும் ஒரு துறைப்படிப்பாக (discipline) இலக்கணவியல் என்பதை இந்நூல் நிலைப்படுத்த முனைகிறது.


---------------------------------------------


இந்நூலுக்குப் பேராசிரியர் இ.அண்ணாமலை அவர்கள் எழுதிய அணிந்துரையை இப்படி நிறைவு செய்திருப்பார்: " இலக்கணவியலை அறிவியல் ஆய்வாகப் பார்க்கும் போக்கு இலக்கண ஆராய்ச்சிக்குப் பலரை ஈர்த்தால் இந்த நூலின் பயன் நிறைவடையும்"


பத்தாண்டுகளுக்குப் பின்பும் , எனக்குத் தெரிந்து ஓரிரு சிறு முயற்சிகள் தவிரக் காத்திரமான ஆய்வுகள் நிகழவில்லை என்றே தோன்றுகிறது (அப்படி நிகழ்ந்திருக்குமானால், பேரா.சு.இராசாராம் அவர்களை விடவும் நான் மகிழ்வேன். அவற்றைப் பெரியமனத்துடன் எனக்குத் தெரிவித்தால் நன்றியென்)இலக்கணமும் மொழியியலும் பயின்ற அறிஞர் வட்டம் கூட (தமிழுலகில் இந்த வட்டம் சிறியதுதான்) போதிய அளவு இந்நூலைப் பொருட்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...