Tuesday, April 27, 2021

'காதல் வெறும் ஏட்டுச் சுரைக்காய்' - தொல்காப்பியர் கருத்து ?

 


'அன்பொடு புணர்ந்த ஐந்திணை'க்(தொல்காப்பியம்) காதலை, ' அன்புடை நெஞ்சம் தாம்கலந்த'  (குறுந்தொகை )  காதலை, 'புவியினுக்கணியாய , சான்றோர் கவி' ( கம்பர்)கண்ட காதலை, தமிழ்க் காதலை (வ.சுப. மாணிக்கனார்) , தொல்காப்பியர் ஏட்டுச் சுரைக்காய் என்பாரா? 


                                                                   (๑♡⌓♡๑)           

                                         

தொல்காப்பியம் முழுமைக்கும் உரை கண்ட முதல் உரையாசிரியர் - 'முழுமுதல்'உரையாசிரியர் - இளம்பூரணர் . இளம்பூரண அடிகள் சமணர் என்பது பெரும்பான்மையோர் கருத்து . சமய மெய்யியல், சமய உணர்ச்சி வெளிப்பாடு முதலிய அகச் சான்றுகளால் அந்தணர் குலத்திற் பிறந்த சைவ சமயத் துறவி என்கிறார் அடிகளாசிரியர்¹.சமயம் எதுவாயினும் அவர் துறவி என்பது பொதுக்கருத்து .        


ஆனால்,


அகப்பொருள் இலக்கண உரைகூறும் போது அவர்  காதற்சுவை தோன்ற எழுதிய இடங்கள் சில  உள்ளன. 


அவற்றுள் தலையாயதாய் என்னை ஈர்த்த இடமொன்றைக் காட்டுகிறேன்.


i.தலைவனும் தலைவியும் தாமே காதல் வயப்பட்டுச் சந்தித்தல், ii.பின்னரும் பிறரறியாமல் சந்தித்துக் கொள்ளுதல், iii.தலைவனின் தோழன் மூலம் சந்தித்தல், iv.தலைவியின் தோழி மூலம் சந்தித்தல் என்கிற நான்கு கட்டங்களும் களவு எனப்படும். 

இவற்றைக் குறிக்கத் தனித்தனிக் கலைச்சொற்கள் உள்ளன. எனவேதான் இவை இலக்கணத்திற்குள் இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. 


களவு என்பது திருமணத்துக்கு முந்தையது. இந்தக் களவுக்காலத்தில் மெய்யுறு புணர்ச்சி (உடலுறவு) நிகழலாமா?

                  

தொல்காப்பியக் களவியல் முதல் நூற்பா உரை விளக்கத்தில் இளம்பூரணர் சொல்கிறார் :

" இயற்கைப் புணர்ச்சி இடையீடு பட்டுழி வரைந்தெய்தல் தக்கதன்றோ எனின், வரைந்தெய்துந் திறம் நீட்டிக்குமாயின் வேட்கை நிறுத்தல் ஆற்றாதார் புணர்ச்சி கருதி முயல்ப"


'காதலிக்கும் காலத்தில் இடையீடு நேர்ந்தால் , திருமணம் செய்து கொண்டு தலைவியைப் பெறுவதுதானே முறை என்றால், திருமண முயற்சி நீட்டிக்கு மானால், உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் உடலுறவுக்கு முயல்வார்கள்' என்பது கருத்து .


ஆக, திருமணத்துக்கு முன் மெய்யுறு புணர்ச்சிக்கு முயல்வதும் உண்டு என்கிறார் இளம்பூரணர் . அடுத்து,

" இவ்வாறு சான்றோர் செய்யுள் வந்தனவும் உளவோ எனின், சான்றோர் செய்யுளுள்ளும் இவ்வாறு பொருள் கொள்ள ஏற்பன உள" என்றும் கூறுகிறார்.


மருந்தின் தீரா மண்ணின் ஆகாது

அருந்தவ முயற்சியின் அகற்றலும் அரிதே

தான்செய் நோய்க்குத் தான்மருந் தாகிய

தேனிமிர் நறவின் தேறல் போல

நீதர வந்த நிறையருந் துயரம் நின்

ஆடுகொடி மருங்கின் அருளின் அல்லது

பிறிதின் தீரா தென்பது பின்நின்று

அறியக் கூறுதும் எழுமோ நெஞ்சே

நாடுவளங் கொண்டுபுகழ் நடுதல் வேண்டித்தன்

ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த

பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன்

கொற்கையம் பெருந்துறை குனிதிரை தொகுத்த

விளங்குமுத் துறைக்கும் வெண்பல்

பன்மாண் சாயல் பரதவர் மகட்கே



தலைவி நெய்தல் நிலத்தவள் (பரதவர் மகள்). அவளைச் சந்திப்பதில் இடையூறுகள் நேர்கின்றன. திருமணமும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. தலைவன் ஏங்கித் தவிக்கிறான். தாபம் நோயாகவே மாறிவிட்டது. மருந்து, மணி, தவம் எதனாலும் அந்நோய் தீரவில்லை.

 

அவள் தந்த நோய்க்கு அவள்தான் மருந்து. நோய் துயரமாக முற்றிவிட்டது. தலைவியிடம் "அசைகின்ற கொடிகளின் பக்கத்திலே , நின் அருளால் அன்றி என் நோய் தீராது என்று கூறிவிடுவோம் ; வா போவோம்" என்று தன் நெஞ்சத்திடம் கூறிக்கொள்கிறான் தலைவன்.


இதில், மெய்யுறு புணர்ச்சி பற்றி எதுவுமில்லையே ? என்று தோன்றும் . எனவேதான் இளம்பூரணர் சுட்டிக்காட்டுகிறார் : " ஆடு கொடி மருங்கின் " . அசைகின்ற  கொடிகளின் பக்கத்தில் (மருங்கு = பக்கம் )  என்பது நேர்ப் பொருள். அசைகின்ற கொடி போன்ற இடையால் (மருங்கு = இடை) என்று உவமைத் தொகையை விரித்து வேறொரு பொருளும் கொள்ளலாம். இனியும் நான் விரித்துரைக்க வேண்டியதில்லை; கூடாது.




அவர் எடுத்துக் காட்டிய பாடலையும் அப்பாட்டில் அவர் சுட்டிக்காட்டிய அடிகளையும் படித்துணர்ந்தபோது, காதல் பாட்டில் தோய்ந்து தலைவனின் மெய்யுறு புணர்ச்சி வேட்கையை நுட்பமாக இனங்கண்டு காட்டுகிற  அடிகள் (!)  சமணரோ சைவரோ துறவிதானா?  


இவ்வாறுதான் பொருள் கொள்ள வேண்டும் என்று அடித்துச் சொல்லாமல், "இவ்வாறு பொருள் கொள்ள ஏற்பன உள" என்பதில் புலப்படும் ஆன்றவிந்தடங்கிய நிதானமும், 

மெய்யுறு புணர்ச்சியை விழையும் தலைவன் கூறுவதில் பொதிந்துள்ள சான்றோர் கவிமரபின் நாகரிக நுண்மையை இனங்காட்டலும் 

இளம்பூரணர் துறவைத் துறவாமலேயே இலக்கியக் காதலில் ஈடுபட வல்லவர் என்பதைப் புலப்படுத்துகின்றன.


ஆனால், 


" இந் நூலகத்து [தொல்காப்பியத்தில்] ஒருவனும் ஒருத்தியும் நுகருங் காமத்திற்குக் குலனும் குணனும் செல்வமும் ஒழுக்கமும் இளமையும் அன்பும் ஒருங்கு உளவழி இன்பம் உளதாம் எனவும் கைக்கிளை ஒருதலை வேட்கை எனவும் பெருந்திணை ஒவ்வாக் கூட்டமாய் இன்பம் பயத்தல் அரிதெனவும் கூறுதலான் , இந்நூலுடையார்[தொல்காப்பியர்] காமத்துப்° பயனின்மை உய்த்துணர வைத்தவாறு அறிந்து கொள்க" என்று பொருளதிகார முதல் நூற்பாவுரையின் இறுதியில் தம் கோட்பாட்டை நிறுத்துகிறார். (° காமம் = காதல்)


காதல் இன்பம் என்பது ஏட்டுச் சுரைக்காய். அது கறிக்கு உதவாது என்பது தொல்காப்பியர் கருத்தென்று இளம்பூரணர் உய்த்துணர்கிறார். அவர் துறவி. 

நுண்ணிய நூல்பல கற்பினும் உண்மையறிவே மிகும்.


தமிழ் அகப்பொருள் மரபிலும் சான்றோர் செய்யுள் வழக்கிலும்  உடல் கடந்த  காதல் (Love)  x  உடல் சார்ந்த காமம்(Lust) என்னும் முரண்நிலையோ, ஒன்றுக்கு மட்டும் அழுத்தம் தருவதோ இல்லை. காமம் என்ற சொல்லும் பழந்தமிழ் இலக்கண,இலக்கியங்களில் காதல் என்னும் பொருளையே குறித்தது.


மெய்யுறு புணர்ச்சி இழிந்ததன்று . கலவி எழுத்து (pornography) கலை நுட்பமற்ற புலனின்ப எழுத்து; மதிப்புக் குறைவானது.பாலுணர்விலக்கியம் (erotic literature) உள்ளத்தின் ஈடுபாட்டையும் கோருவது; கலவி எழுத்தினும் மேலானது; தனக்கேயுரிய வகையில் இலக்கிய மதிப்புடையது. இவை இந்திய மரபில் இல்லாதனவல்ல ; ஆனால், பழந்தமிழில் ஏறத்தாழ இல்லையென்றே சொல்லிவிடலாம்.


--------------------------------------------------------------------------------------------------------------

1. அடிகளாசிரியன் (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை , 1969 , ப.xxvi.

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...