Sunday, April 11, 2021

அஞ்சலி : பேராசிரியர் இராம. சுந்தரம்

 






அஞ்சலி : பேராசிரியர் இராம. சுந்தரம் 


1980களில் , தமிழ்ப் பல்கலைக்கழக வரவு தஞ்சை வட்டாரத்தின் கல்வியுலகில் - குறிப்பாகத் தமிழியற் கல்வியுலகில் - சிறிய அளவிலாவது   மேல்நோக்கியதொரு அசைவியக்கத்தைத் தொடங்கிவைத்தது. இந்த அசைவியக்கத்துக்குப் பல்கலைக்கழகத்துக்குள் நிகழ்ந்த கல்விசார் பணிகளை விடவும்  ,  பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர் சமூகத்தோடு கொண்ட தொடர்பே  முதற்காரணம்.  அப்படி தஞ்சைக்குக் கிடைத்த அறிஞர்களுள் ஒருவர், நாங்கள் ஆர் எம் எஸ் என்று அன்போடு அழைக்கும் ,  பேராசிரியர் இராம.சுந்தரம் .

பிற தகுதிகளிருப்பினும் , எளிதில் பழகும் அவரது இயல்பு நோக்கியே துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியம் அவரைத் தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் திட்ட இயக்குநராகப் பணியமர்த்தினார். நடைமுறையில் ,  ' அறிவியல் தமிழ்த் தொடர்பாளர் ' என்பதாகப் பேரா.இராம.சுந்தரம் அவர்களின் பணி தொடங்கியது. தொடர்ந்த பதினெட்டாண்டுகளில் சார்ந்ததன் வண்ணமாகி, ' அறிவியல் தமிழறிஞர் ' என்பதே அவரது அடையாளமாகிவிட்டது.

பேராசிரியரிடம் பேசிப் பெற்ற கேள்வி ஞானம்,  மார்க்சிய அரிச்சுவடியைப் படித்துத் தலைசுற்றி ஆடிக்கொண்டிருந்த ஆய்வு மாணவனான  என்னைக் கொஞ்சம் நிதானப்படுத்தியது. தஞ்சைப் பழைய பேருந்து நிலையக் கடையில் நின்று தேநீர் அருந்தியவாறே அவருடன் பேசிக்கொண்டிருக்கலாம். அவரது எளிமை பலரை ஈர்த்தது எனில் , எள்ளல் என்னை ஆட்கொண்டது என்றே சொல்லலாம்.

நேர் உரையாடலாயினும் மேடைப் பொழிவாயினும் மொழி வழக்கில் பெரிய வேறுபாடிருக்காது. மேடையிலும் பேச்சுவழக்குச் சாயல் மேலோங்கி நிற்கும்.




தஞ்சை பெசண்ட் சிற்றரங்கில் ஒரு கூட்டம். வையாபுரிப்பிள்ளை பற்றிப் பேரா. இராமசுந்தரம் உரையாற்றினார். ஓரிடத்தில் வையாபுரிப்பிள்ளையின் எழுத்துப்பகுதி ஒன்றை மேற்கோள் காட்டினார். அதில் 'உதய சூரியன் ' என்ற தொடர் இடம்பெற்றிருப்பதை அவருக்கேயுரிய முறையில் போகிற போக்கில் சொல்லிச் சென்றார். அவையில் அமர்த்திருந்த கழகக் கண்மணி -  அகவை முதிர்ந்த தமிழாசிரியர் - சினம் பொங்கி எழ , கூச்சலிட்டார். நல்லவேளை உரை நிறைவுக் கட்டம் அது. இராம.சுந்தரம் எள்ளல் நோக்கில் அதைச் சொல்லவும் இல்லை. இயல்பாக அடக்கமாக அவரது பேச்சில் இழையோடும் எள்ளல் தொனியை இதிலும் இருப்பதாகக் கருதிச்  சினந்தெழுந்து 'சின்ன'ப் பிரச்சினையைப் பெரிதுபடுத்திவிட்டார் தமிழாசிரியர்.

" ஐயா, நீங்க பெரியவங்க. நீங்களே இப்படி ஆவேசப்படலாமா?" என்று சமாதானம் செய்யத்தான் நான் போனேன். சின்ன எள்ளல் காரன் படிமம் எனக்கும் உண்டாதலின் அவர் வெடித்தே விட்டார். பின்னர், பேரா.இராமசுந்தரம் அவர்களே வந்து என் சார்பில் அவரைச் சமாதானப்படுத்தியது நகைமுரண்.

அவர் போலந்து சோசலிச நாடாக இருந்த காலத்தில் வார்சா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர் (1972-1979) . குறிப்பாகப் போலந்து மக்களிடம் காணப்பட்ட படிப்பார்வம் பற்றி வியந்து விவரிப்பார். நமது பெட்டிக் கடை போன்ற சிறிய கடைகளில் கூட புத்தகங்கள் இருக்குமாம்,மக்கள் தம் அன்றாட நடவடிக்கைகளினூடாகவும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்துக்கொண்டேயிருப்பார்களாம்.

சொந்த அனுபவம் ஒன்றைச் சொன்னார்:

அங்குப் பணிபுரிந்த காலத்தில்,    அவரும் நண்பர்கள் சிலரும் ஒரு முறை மகிழுந்தில் பக்கத்து நாட்டுக்குச் சிற்றுலா சென்றனர் .போலந்தில் எரிபொருள் விலை குறைவு என்பதால் , வண்டியில் நிரப்பியது போக மேலும் சில கலன்களில் இருப்பு வைத்துக் கொண்டனர்.  எல்லையோர இராணுவச் சோதனைச் சாவடியில் வண்டி நிறுத்தப்பட்டது. இவர்கள் எதையும் மறைக்கவில்லை. என்றாலும் சிறு நடுக்கம். படை வீரர் மேல் அலுவலரிடம் அழைத்துச் சென்றார். பேராசிரியரின் பெயரைக் கேட்டதும் மேல் அலுவலர் முகத்தில் படைக் கடுமை குன்றியது. மேசை இழுப்பறையைத் திறந்து ஒரு நூலை எடுத்தார். அது போக்டன் கெபார்ஸ்கி  (Bohdan Gębarski) செய்த திருக்குறளின்போலந்து மொழிபெயர்ப்பு ; பேரா.இராமசுந்தரம் சற்றே செவ்விதாக்கம் செய்தது ; வந்த சில நாட்களுக்குள் எல்லையை எட்டி விட்டது. அதிலிருந்த பேராசிரியரின் பெயரைச் சுட்டி "நீங்களா?" என்றார் அலுவலர்  "ஆமாம்" என்றார் பேராசிரியர். "அருமையான வாழ்வியல் நூல் . மிக்க மகிழ்ச்சி .நன்றி" என்று முகம் மலரக் கை கொடுத்து அனுப்பி வைத்தார். 

வகுப்பறை அனுபவங்கள் சிலவற்றையும் சொல்லியிருக்கிறார். ' கயல்விழி ' என்கிற உவமையைக் கேட்டுப் போலந்து மாணவர்கள் சிரித்தார்களாம். அங்குக் கயல்விழி என்பது நாம் முட்டைக் கண் என்பதுபோல் கேலிக்குரியதாம்.

அவர் ஒரு சோசலிச நாட்டின் முழுதளாவிய வளர்ச்சியை நேரில் கண்டவர் ; மார்க்சியக் கொள்கையாளர்; தாம் விரும்பி அன்பு செலுத்தும் இரண்டாம் தாயகம் போலந்து  என்றெழுதியிருக்கிறார்;  ஆனாலும் விமரிசனமின்றி எதையும் ஏற்காதவர். விமரிசனங்களை எள்ளல் இழையோட வெளிப்படுத்துவது அவரது இயல்பு.அவர் பணியாற்றிய காலத்தில் அங்கு உலவிய இரும்புத்திரை நகைத்துணுக்குகளையும் சுவை சொட்டச் சொல்வார்.

அங்கு வரும் நாளேட்டுச் செய்திகளில் முழு உண்மை , பகுதி உண்மை ,  உண்மைக்கு முற்றிலும் மாறானவை  என்று மூன்றுவகை உண்டு என்பார்களாம். இரங்கல் செய்திகள் முழு உண்மை ; காலநிலை அறிக்கைகள் பகுதி உண்மை ; அரசு, அரசியல் செய்திகள்  உண்மைக்கு முற்றிலும் மாறானவையாம்.

பணியாளர்களின் மெத்தனம் கண்டு, " நம்ம பாட்டாளி வர்க்கம் " என்று நகைப்பார்.அவர்களே கூட கேட்டுச் சிரித்துக்கொள்வார்கள்.கடுமையானவர்களிடம் கடமை தவறாமல் செயல்படும் பணியாளர்கள் , இவரிடம் எடுத்துக்கொள்ளும் உரிமையே மெத்தனம் என்றும் சொல்லலாம் 

 'மதி! மார்க்சிய நூல்களுக்கு அமெரிக்கப் பதிப்புகள் துல்லியமானவை ' என்று ஒருமுறை சொன்னார்.

கலாநிதி கைலாசபதியிடம் பெருமதிப்புக்கொண்டவராயினும்  கால்டுவெல், தனித்தமிழ் இயக்கம் முதலியன பற்றிய அவரது பார்வைக் கோணலைக் 'கட்சி மார்க்சிய'த்தின் விளைவு என விமரிசிக்கத் தயங்கவில்லை (கலாநிதி க. கைலாசபதி, சாகித்திய அகாதெமி, 2007, ப.113 - 115)சுந்தரம் திராவிட மொழியியலில் கைலாசபதியைவிடவும் மேம்பட்டவர் என்பது வெளிப்படை.

நகை தவழும் முகமும் பாசாங்கற்றுப் பழகுவதும் எந்த வகை இறுக்கமுமின்றி உரையாடுவதும் புலமைத் தோரணையின்றி, கலைச்சொல் அச்சுறுத்தலின்றி அறிவார்ந்து விளக்குவதும் பல்கலைக்கழகப்பணிகளில் கருத்தூன்றி உழைப்பதும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் நியாயத்தின் பக்கம் சமரசமின்றி நிற்பதும் நடையுடை பாவனைகளில் எளிமையும் இவற்றினூடே இயல்பாக  இழையோடும் அங்கதமும்தாம்  பேராசிரியர் இராம.சுந்தரம்.

                                                                  ***

சிவகங்கை மாவட்டம் அலவாக்கோட்டையில் , திருவாளர்கள் இராமனாதன் - அன்னபூரணி தம்பதியர்க்கு மகனாகப் பிறந்த சுந்தரம் அருகிலிருந்த நாட்டரசன்கோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில்

ஒளவை துரைசாமிப்பிள்ளை, மா.இராசமாணிக்கனார், அ.கி.பரந்தாமனார் , சுப. அண்ணாமலை முதலிய அக்காலத்தின் குறிப்பிடத்தக்க தமிழறிஞர்களிடம் தமிழ் பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.ஆனர்ஸ் சேர்ந்து அ.சிதம்பர நாத செட்டியார் முதலியோரிடம் பயின்றார்.

தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுநராகப் பணியாற்றி, முதுகலைப் படிப்பையும் முடித்துக்கொண்டார். அக்கல்லூரி நூலகர் திருமலை முத்துசாமி தம் நண்பரான பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியத்திடம் இராம.சுந்தரத்தை ஆற்றுப்படுதினார். திருவனந்தபுரம் சென்று அவரிடம் மொழியியல் பயின்று ,டென்மார்க் மொழியியல் அறிஞர் எம்ஸ்லெவ் (Hjelmslev) - இன் மொழிக் கூறியல் ( Glossematics) அடிப்படையில் பத்துப்பாட்டை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார் (1967).  வ.அய்.சு.அவர்களையே தம் ஞானத்தத்தையாக வரித்துக்கொண்டார் . இது  மார்க்சியம் அவரை ஈர்த்த காலமுமாகும்.

அக்காலத் தமிழகச் சூழலில், கல்வி பயின்ற சூழலில் திராவிட இயக்க ஈடுபாட்டாளராக அவர் இருந்தது இயல்பானது. இதனால் அவர் கண்டுகொள்ளாமலிருந்த வையாபுரிப்பிள்ளை , தெ.பொ.மீ. நூல்களை நல்லவேளை , ஓர் ஆசிரியரின் தூண்டுதலால் படித்தார்.  மொழியை உணர்ச்சிகரமாக மட்டும் பார்க்கக்கூடாது என்பது தெளிவாயிற்று. பின்பு பயின்று தேர்ந்த மொழியியலும் மார்க்சியமும் அவரது மொழியுணர்வைச் செழுமைப்படுத்தின.

முனைவர் பட்ட ஆய்வேட்டை அளித்தபின்  , தெக்கணக் கல்லூரியில் பல்கலைக்கழக நல்கை ஆணையத்தின் இளநிலை ஆய்வாளராகச் சேர்ந்தார் (1964-66) ;  பேராசிரியர் காடகே (A.M.Ghatage) மேற்பார்வையில் திராவிடமொழிகளின் வகைப்பாட்டியல் (Typology) ஆய்வு முதலியவற்றை மேற்கொண்டார். தொடர்ந்து முதுநிலை ஆய்வாளராக (1969 - 71) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் வார்சா பல்கலைக்கழக இந்தியவியல் துறையில் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்து போலிஷ் மொழி பயின்றுகொண்டே அதன் வழித் தமிழும் மலையாளமும் கற்பித்தார்;  தமிழிலக்கிய வரலாறு , பல்வேறு காலகட்டத்துத் தமிழ் இலக்கியங்கள் முதலியவற்றை போலந்து மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார்.

1960களிலிருந்தே ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வந்த சுந்தரத்தின் முதலாவது நூலாக, ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பாக, அவர் வார்சாவில் பணியாற்றியபோது வந்தது , ' சொல்புதிது சுவை புதிது'. இலக்கியம் பயின்று மொழியியல் துறைக்குள் நுழைந்ததால் புறவயமான ஆனால் நயமான ஆய்வு நடை அவருக்கு வாய்த்தது.

" ஒரு தர்க்கவாதி மொழி இலக்கணத்தை அணுகுவதற்கும் , ஒரு மொழியியல்வாதி மொழி இலக்கணத்தை அணுகுவதற்கும் உள்ள வேறுபாடே சேனாவரையத்துக்கும் தெய்வச்சிலையத்துக்கும் உள்ள வேறுபாடு " (சொல்புதிது சுவை புதிது , 1978, ப.5) என்பது ஒரு சான்று.

பாரதியின் மொழித் திறனைப் பாரதியின் தொடரையே தலைப்பாகத் தந்து கட்டுரையாக்கினார். பழந்தமிழ் இலக்கணம்  தொட்டு நவீன இலக்கியம் வரை  அவருக்கிருந்த ஆய்வார்ந்த தோய்வுக்கு இத்தொகுப்பே கட்டியம் கூறி நிற்கிறது.

சொல்புதிது சுவை புதிது (1978), வையாபுரிப்பிள்ளை (1993), பொருள் புதிது வளம் புதிது (1994), தமிழக அறிவியல் வரலாறு (2004) ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க நூல்கள். தொகுக்கப்படாத -  தமிழ் , ஆங்கில, போலிஷ் - கட்டுரைகள் பல( முனைவர் க.பரிமளா அவர்கள் பேரா.இராம. சுந்தரம் அவர்கள் பற்றி எழுதி அச்சுக்குக் காத்திருக்கும் நூல். வேறு சில தகவல்களும் இதிலிருந்து எடுத்துக்கொண்டேன்.நன்றி)

போலந்தில் பணி முடித்த சுந்தரத்திற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் பணி கிடைத்தது (1979 - 81). தகுதிகாண் பருவம் (Probation period) முடியும் முன்பே,  பல்கலைக்கழக ஊழியர் சங்கப் போராட்டத்தை ஆதரித்து இயங்கியதால் பேராசிரியரின் பணி நீட்டிக்கப்படவில்லை.

அப்போதுதான் தொடங்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகம் அவர் தகுதி காட்ட வாய்ப்பளித்தது. அவரது தகுதியுணர்ந்திருந்த துணைவேந்தர் வ.அய்.சு. பணியமர்த்திக்கொண்டார். முன்பே சுந்தரம் தந்த சங்க இலக்கியப் பொருட்களஞ்சியத் திட்டத்தை ஏற்றிருந்த வ.அய்.சு. அதனை ஒத்திவைக்கச் சொன்னார்.

தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கியபோது  வ.அய்.சு. பலரைச் சந்தித்து அவர்களின் நாடி பிடித்துப் பார்த்துக்கொண்டார். அப்படி சந்தித்தவர்களுள் ஒருவர் ம.பொ.சி.     வ.அய்.சு. தமிழகத்திற்கு அவ்வளவாக அறிமுகமாகாதவர். எனவே அவரால் என்ன செய்துவிட  முடியும் என்று கருதினார் ம.பொ.சி. ஆனால் , திட்டமிட்டும் விரைவாகவும் வேலை வாங்கும் நிருவாகத்திறன்மிக்க வ.அய்.சு. ஒன்பதே மாதத்தில் உயர்கல்வி நிலையில் மருத்துவம், பொறியியல் முதலியவற்றுக்குத் தமிழில் பாட நூல்களை ஆக்கிவிட முடியும் என்று சொல்லியிருக்கிறார்.

இலக்கியம் , இலக்கணம், மொழியியல் துறைகளில் தம் திறனை நிறுவிய இராம.சுந்தரம் அறிவியல் தமிழ் என்னும் புதியதொரு துறைக்குள் நுழைந்தார். அது மிகவும் கடினமானதும் சவாலானதுமான பெரும்பணி. தமிழில் பாட நூல்களை ஆக்குவதோடு  பயிற்றுவித்து மருத்துவர்களையும் பொறியாளர்களையும் உருவாக்குவதே நோக்கம்.

அந்த அளவு அறிவியல் தெரியாததையே  தகுதியாகக்கொண்டு தம்மை வ.அய்.சு பணியமர்த்தியதாகக் குறிப்பிடுகிறார் சுந்தரம்.

(நேர்காணல்: புத்தகம் பேசுது,  செப்டம்பர் 2010)இப்பணியில் தஞ்சை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மருத்துவர் நரேந்திரன், திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரிப் (REC)பேராசிரியர் சம்பத் முதலியோர் ஒத்துழைப்பு நல்கினர். பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி, ஆய்வு நிறுவனங்கள் என ஒரு மாதம் சுற்றிச் சுழன்று முதல் இரண்டு ஆண்டுக்கான பாடத் திட்டங்களை அமைத்துக்கொண்டார் சுந்தரம். இவற்றோடு , ' கேரள சாஸ்திர சாகித்திய பரிசத் ' தை முன்மாதிரியாகக் கொண்டு பொதுமக்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் திட்டத்தையும் முன்வைத்தார்.

தமிழில் எழுத முன்வந்தோருக்கு உடனடி இடையூறு கலைச்சொற்கள். பொறியியலுக்குப் பதின்மூன்றாயிரம் , மருத்துவத்திற்குப் பன்னிரண்டாயிரம் என  முந்தைய கலைச்சொற்கள் தொகுக்கப்பட்டன. இவற்றில் சீர்மை காணக் கலைச்சொல்லியல் நோக்குத் தேவைப்பட்டது. அவ்வாறு சீராக்கியவை பாடநூல் ஆசிரியர்களுக்கு உதவியாயின. புதிய கலைச்சொற்களும் உருவாக்கப்பட்டன.

ஏறத்தாழ 1½ இலட்சம் சொற்களிலிருந்து தேர்ந்தெடுத்த 80,000 சொற்கள் ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டன.

தமிழறிஞர்கள்  நடையையும் ,பாட வல்லுநர்கள் பொருளையும் மேற்பார்த்தபின் மீண்டும் நூலாசிரியர்கள் வழியாகப் பாடநூல்கள் நிறைவுபெற்றன. முதல் இரண்டாண்டுக்கான பாடநூல்கள் ஆயத்தமாயின. பாதை போட்டுக்கொண்டே பயணம் செய்வது போன்ற பணி வெற்றிகரமாக நிறைவேறியது.

அந்நூல்கள் தமிழால் முடியும் என்பதை  நிறுவின. தமிழ்ச் சமூகத்தின் அவப்பேறாக , அவை நடைமுறைக்கு வரவில்லை. என்றாலும் நூல்கள் செலவாகிக்கொண்டிருந்தன. செவிலியர் பயிற்சியாளர்களுக்குத் தமிழ்வழி மருத்துவ நூல்கள் பெரிதும் உதவின.

பலனை எதிர்பாராக் கடமையாளராகச் சுந்தரம் பணியாற்றினார். முன்னரே மொழிபெயர்ப்பில் இறங்கிய அவர், 'உடல்நலம்' , 'பாலூட்டிகள்', 'மூலிகைகள்'  முதலிய அறிவியல்சார்ந்த நூல்களையும் மொழிபெயர்த்துத் தந்தார்.

சர்வாதிகாரி எனத் தக்க  வ.அய்.சு. வின் நம்பிக்கைக்குரியவராக, நடைமுறையிலும் அவர் எண்ணியாங்கு இயங்கிய செயல்வீரராக இருந்த சுந்தரம் , வ. அய்.சு. காலத்திலேயே பல்கலைக்கழக நிருவாகத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களில் கலந்துகொள்ளவும் செய்தார்.

அடுத்து வந்த துணைவேந்தர் பேராசிரியர் ச. அகத்தியலிங்கம் காலத்தில் தொடங்கப்பட்ட (1987) அறிவியல் தமிழ்க் கழகத்தின் செயலாளராகப் பல்லாண்டுகள் பணியாற்றிக் கருத்தரங்குகளை நடத்தி, கட்டுரைத் தொகுப்புகளை வெளிக்கொணர்ந்தார். அக்கட்டுரைகள் வெவ்வேறு தரநிலைகளில் அமைந்தாலும் , அறிவியல் தமிழ் பற்றிய உணர்வை விரிவாக்க உதவின.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்  அறிவியல் களஞ்சியத் (Encyclopaedia) தொகுப்புகளுக்குக் கலைச்சொல்லாக்கம், அறிவியல் தமிழ் மன்றம் ஆகியவற்றின் பணிகள் உறுதுணையாயின. சுந்தரம் அவர்களே அறிவியல் களஞ்சியத் தொகுதிகள் சிலவற்றுக்கு முதன்மைப் பதிப்பாசிரியராக இருந்து பதிப்பித்துள்ளார்.

' தமிழக அறிவியல் வரலாறு ' என்னும் அவரது ஆய்வு நூலின் (2004)முன்னுரையில்,

" நிலவுடைமைச் சமுதாயத்தில் இடம் பெற்ற அறிவியல் - தொழில்நுட்ப அறிவும் , தொழில்மயமான முதலாளித்துவ சமுதாயத்தில் இடம் பெற்ற அறிவியல் - தொழில்நுட்ப அறிவும் ஒன்றாக இருக்க முடியாது. பல்வேறு சோதனைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் பயன்படுத்தலுக்கும் ஆளான முதலாளித்துவ அறிவியலுக்கு,

சோதனைக்கு அதிகம் ஆளாகாத அனுபவத்தாலும் கூர்ந்த நோக்காலும் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலவுடைமை அறிவியல் ஈடுகொடுக்க முடியாது " (ப.i) என்கிறார்.

" தமிழர்களின் அறிவியல் உணர்வும் தொழில்நுட்பச் செயல்பாடுகளும் இந்தியப் பின்புலத்தில் வைத்துக் காணவேண்டியவைகளாகும் ; தனித்துப் பார்க்க இயலாதவை. அதேபோல பண்டைய இந்திய அறிவியல் - தொழில்நுட்பச் சிந்தனைகளை அக்காலத்திய அரேபிய - கிரேக்க - ரோமானியச் சிந்தனைகளோடு ஒப்ப வைத்துக் காணவேண்டியுள்ளது. அப்படி ஒப்பிடும்போதுதான் அறிவியலின் உலகளாவிய தன்மை வெளிப்படுகிறது " (௸,ப.ii) என்கிறார்.

மேலும் , தொல்காப்பியர் உயிர்களை ஆறாக வகைப்படுத்துவது உமாஸ்வாதி என்ற சைனரின் தத்துவார்த்திகம சூத்திரக் கருத்தோடும் , திருக்குறளின் ' மருந்து ' சரக சம்ஹிதை கூறும் குறிப்புகளோடும் ஒத்திருப்பதைச் சுட்டுகிறார்; ' தனதாக்கம் ' என்கிற போக்கில் இவை தமிழ்மயமாகியிருக்கின்றன என்கிறார்.

பணி ஓய்வுக்குப் பின்னரும் பல்கலைக்கழகம் சார்ந்தும் சாராமலும் அறிவியல் தமிழ்ப் பணிகளில் ஈடுபாடு காட்டினார். பின்வந்தோரும் அவரை மதித்துப் போற்றினார்கள்.

பாடநூலாக்கம், கலைச்சொல் தொகுப்பு, அறிவியல் தமிழ்க் கட்டுரை & நூல் விவரத் தொகுப்பு முதலியன கடந்து ' அறிவியல் தமிழ் ' என்பது, பெயரளவிலன்றி ,  தனியொரு துறையாகவே கொள்ளத் தகுதியானது என்பதை  நிறுவினார் சுந்தரம். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவர் வழி காட்டலில் அறிவியல் தமிழ் சார்ந்தே முனைவர் , ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பல்கலைக்கழகப் பணிநிறைவுக்குப் பிந்தைய அவரது குறிப்பிடத்தக்க சாதனை ,

'திராவிடச் சான்று - எல்லிஸும் திராவிட மொழிகளும் ' (2007)என்னும் மொழிபெயர்ப்பு நூல்.  தாமஸ் டிரவுட்மன் அவர்களின்  Languages and Nations : The Dravidian Proof in Colonial Madras' என்னும் நூல் ஆங்கிலத்தில் அச்சாவதற்கு முன்பே , தட்டச்சு வடிவத்தைக் கொண்டு தமிழாக்கினார் சுந்தரம்.

" இந்நூல் எளிதில் மொழி பெயர்க்கக்கூடியது அல்ல - முக்கியமாக முதல் இரண்டு இயல்கள். மொழியியல், மானிடவியல், வரலாறு முதலான துறைகளில் புரிதலும் பயிற்சியும் வேண்டும் பணி இது. மொழியியலில் ஆழங்கால்பட்டவரும், திராவிட மொழிக்குடும்பம் என்ற கருத்தாக்கத்தின் புலமை நியாயத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவருமான பேராசிரியர் இராம. சுந்தரம் இந்நூலை மொழிபெயர்த்துள்ளது மிகப் பொருத்தமானது " (௸ நூல்,ப.21)என்கிறார் அறிஞர் ஆ.இரா.வேங்கடாசலபதி .

உண்மை.

நூல் அச்சாகும் முன்பு அதன் தமிழ் நடையோட்டத்தைப் பார்க்கும் பணி எனக்கு.அதற்குமேல் பொருள் நுட்பம் குன்றாமல் தமிழாக்குவது அரிது. நூல் வெளிவந்த பின்னர்தான் எனது இந்தப் பணி பற்றி அறிந்து வழக்கம் போல் என்னிடம் மனந்திறந்த மகிழ்ச்சியுடன் பேசினார்.

                                                                             ***

தஞ்சை வட்டாரத் தமிழியற் கல்வியுலகின், தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்ந்த மேல்நோக்கிய அசைவியக்கம்  இப்போது பெரும்பாலும் பணி நிறைவுற்றோரால்தான்  தொடர்ந்து கொண்டிருக்கிறது.  அவர்கள் உதிர உதிர அந்த இயக்கம் குன்றிவருகிறது. அந்த வகையில் தஞ்சைக்கும் தமிழ்கூறு நல்லுலகிற்கும் பேராசிரியரின் மறைவு  ஈடுசெய்ய முடியாத இழப்பேயாகும்.

தமிழ்ப் பல்கலைக்கழக நாடக விழாவொன்றில் (மார்ச், 2019) நேரில் சந்தித்தபோது நிரந்தரமான தஞ்சைவாசியாகிவிட்டதாகச் சொன்னார். இனிச் சந்திப்பது எளிது என்று நம்பி , மகிழ்ந்து சொன்னேன். வெறும் நம்பிக்கையாகவே போய்விட்டது. காலம் தன் கடமையை ஆற்றாமலிருக்குமா.

தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டிய ஆளுமை பேராசிரியர் முனைவர் இராம.சுந்தரம் !



No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...