Friday, April 30, 2021

சிற்பியின் நரகமும் சிலை கடத்தலும்

 

சிற்பியின் நரகமும்
சிலை கடத்தலும்

2002 அல்லது 2003 இல் ஈழக் கவிஞர் அ.யேசுராசா அவர்களுடன் தஞ்சைப் பெரிய கோயில் சென்றிருந்தேன். திருச்சுற்றுச் சுவர்ப் பகுதிகளிலிருந்த கிறுக்கல்கள் கண்டு வேதனையுற்றார்.
இலங்கையின் சிறு சிறு சைவ, பெளத்தக் கோயில்கள் கூட,  பொறுப்பாகப் பேணப்படுவதையும்,  இவ்வளவு பெரிய கோயிலைப் பொறுப்பின்றிச் சிதைப்பதையும் சொல்லி அங்கலாய்த்தார்.
இத்தனைக்கும் , ஒப்பீட்டளவில் நன்கு பேணப்படும் கோயில்களுள் ஒன்று பெரிய கோயில்.

வழிபாட்டில் உள்ள, கைவிடப்பட்ட தொன்மை வாய்ந்த பல கோயில்களின்  - குறிப்பாகச் சைவக் கோயில்களின் - நிலை பரிதாபமானது .

பரிவார தேவதைகள் செல்வாக்காகவுள்ள கோயில்களின் நிலை மேலும் பரிதாபமானது. அவற்றுக்கெனத் தனிக் கட்டுமானத்தை ஏற்படுத்திக் கோயிலின் அமைப்பொழுங்கைச் சகிக்க இயலாதவாறு சிதைத்து விடுவார்கள்.

நம்பிக்கை சார்ந்த செல்வாக்கும் செல்வாக்குச் சார்ந்த வருமானப் பெருக்கமும் ஏற்பட்டுவிட்டால் வசதிகளின் பேரால் வளத்தின் அடையாளமாய்ச் செய்யப்படும் அபத்தங்களைச் சொல்லி மாளாது. கருவறை உட்சுவர்களில் வெண் சலவைக் கல் பாவி விடுவார்கள். திருச்சுற்றுத் தரையிலும் வழுவழுப்பான ஓடுகள் பதிக்கப்படும். அங்கப்பிரதட்சணம், எண்ணெய் தடவுவது , வெண்ணெய் எறிவது முதலியவற்றால் ஈரமாகிவிட்டால், கவனக்குறைவாகக் காலடி வைப்போருக்கு வீடு பேறு எளிது.

அப்புறம் ஒவ்வொரு வாயிலிலும்  நேரே நுழைந்து திருச்சுற்றுகளில் வலம் வந்து வழிபடும் கோயில் அனுபவத்தைப் பலி கொடுத்து, கும்பல் கட்டுப்பாடு கருதிச் சுற்றிச் சுழன்று நெளியும் புதிர் வரிசையில் தள்ளுண்டு நெருக் குண்டு  நகர்ந்து இறைக் காட்சி காண்பதில் அசட்டு நம்பிக்கை நிறைவு தவிரப் பயனில்லை.

வாழைப்பழத் தோலில் தீபமேற்றுவது , எலுமிச்சம் பழத் தலைமாலை அணிவது என்றெல்லாம் புதுப் புதுச் சடங்குகளை ஏதோ வேத காலத்திலிருந்தே வந்தவை போலச் சொல்லும் பிழைப்புவாதப் பூசகர்களின் தந்திரங்கள் (இவற்றுக்கு ஒத்தூதிப் பரப்பும் ஊடக வணிகர்கள் ) ஒரு பக்கம்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

கோயில் கலைச் சீர் குலைவில் வறட்டுப் பகுத்தறிவு, நாத்திகவாதிகளுக்கு இடம் - இல்லாமலில்லை - மிகக் குறைவு .

                        * * * * * * * *
புதுமைப்பித்தனின் அற்புதமான சிறுகதைகளுள் ஒன்று 'சிற்பியின் நரகம்'. அந்தக் காலக் காவிரிப்பூம்பட்டின அந்திமாலைக் கடற்கரைக் காட்சிகளின் இயக்கப் பின்னணியில் யவனனும் நிரீசுவரவாதியுமாகிய பைலார்க்கஸ் அமர்ந்திருப்பதைச் சொல்லிக் கதையைத் தொடங்குவார் பு.பி.
அடுத்து நீறு துலங்கும் நெற்றியுடன் வரும் சைவச் சந்நியாசி. இருவரும் தத்தம் கருத்து நிலை நின்று முரண்படும் உரையாடலுடனும் கருத்து முரண் கடந்த நட்புணர்வுடனும் கதை நகரும். பைலார்க்கஸ் பேச்சில் புதுமைப்பித்தன் சாயலை - கேலியை - காணலாம்.
இருவரும் சிற்பி சாத்தனைப் பார்க்க நாளங்காடி நோக்கிப் புறப்படும்போது எதிரே, எண்பது வயதிலும் வலிமையும் தீட்சண்யமும் குன்றாத சாத்தனே வந்து விடுகிறான். சிற்பியும் சைவ சமய நம்பிக்கையாளன்தான்.
மூவரும் இரட்டைமாட்டு வண்டியில் போகும் போதே சாத்தன் தனது ஆடல்வல்லான் (நடராசன்) படிம உருவாக்கத்தில் தாக்கம் செலுத்திய தோற்றங்களை விளக்கி நிறைவாக, பின்னிருந்து ஓர் அர்த்தமுள்ள வஸ்து தூண்டியதால் படைப்பு சாத்தியமாயிற்று என்கிறான்.

அதை மறுத்து, " நீதான் சாதித்தாய்... நீதான் பிரம்மா ! நீதான் சிருஷ்டித் தெய்வம்" என்று பைலார்க்கஸ் அடுக்கிக் கொண்டேபோகிறான்.
                                        *

மூவரும் படிம அறைக்குள் நுழைகின்றனர்.

மங்கிய தீப ஒளியில் ஜீவத் துடிப்புடன் ஆடல்வல்லான் படிமம்!
சந்நியாசி பாடத் தொடங்கிவிடுகிறார் 

குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிழ்சிரிப்பும் 

பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண் ணீறும் 

இனித்தங் கசிய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால் 

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

(  திருநாவுக்கரசர் பாட்டை இரவல் வாங்கிப் பயன்படுத்துகிறார் பு. பி.)

படிமத்தை அரசன் அமைக்கும் கோயிலில் வைக்கப் போவதாகச் சொல்கிறான் சிற்பி.



" என்ன! இந்த அசட்டுத்தனத்தை விட்டுத் தள்ளு... அரசனுடைய அந்தப்புர நிர்வாண
உருவங்களின் பக்கலில் இதை வைத்தாலும் அர்த்தம் உண்டு... இதை உடைத்துக் குன்றின் மேல் எறிந்தாலும் அந்தத் துண்டுகளுக்கு அர்த்தம் உண்டு..."
என்று வெறிபிடித்தவன் போல் பேசினான் பைலார்க்கஸ். பேச்சில் முரண்பாடு முற்ற பைலார்க்கஸ் சினத்துடன் வெளியேறி விடுகிறான்.
                                                          * * *
பெருவிழாக் கொண்டாட்டங்களுடன் படிமம் கோயிலில் நிறுவப்படுகிறது. அதில் பங்கேற்க பைலார்க்கஸ் உயிருடன் இல்லையே என்ற வருத்தம் மேலிடத் திரும்புகிறான் சிற்பி. சோர்வு .கண்ணயர்வு .
                                                         * * *
கோயிலில் எவரும் சிலையை ஏறிட்டுப் பார்க்கவில்லை. எனக்கு மோட்சம்! எனக்கு மோட்சம்' என்று குனிந்து வணங்கும் கூட்டம்.

கதை முடிவு :

நாட்கள், வருஷங்கள், நூற்றாண்டுகள் அலைபோல் புரள்கின்றன. அந்த அனந்த கோடி வருஷங்களில் ஒரு சாயையாவது ஏறிட்டுப் பார்க்கவேண்டுமே!

"எனக்கு மோட்சம்...!" இதுதான் பல்லவி, பாட்டு, எல்லாம்!

சாத்தன் நிற்கிறான்...

எத்தனை யுகங்கள்! அவனுக்கு வெறி பிடிக்கிறது. "உயிரற்ற மோட்சச் சிலையே! உன்னை உடைக்கிறேன்! போடு! உடை! ஐயோ, தெய்வமே! உடைய மாட்டாயா! உடைந்துவிடு! நீ உடைந்து போ! அல்லது உன் மழு என்னைக் கொல்லட்டும். அர்த்தமற்ற கூத்து...!" இடி இடித்த மாதிரி சிலை புரள்கிறது - சாத்தனது ஆலிங்கனத்தில், அவன் ரத்தத்தில் அது தோய்கிறது... ரத்தம் அவ்வளவு புனிதமா! பழைய புன்னகை!...

சாத்தன் திடுக்கிட்டு விழித்தான். வெள்ளி முளைத்துவிட்டது. புதிய கோவிலின் சங்கநாதத்துடன் அவனது குழம்பிய உள்ளம் முட்டுகிறது.

"என்ன பேய்க் கனவு, சீ!" என்று விபூதியை நெற்றியில் அணிந்து கொள்கிறான்.

"பைலார்க்கஸ் - பாவம் அவன் இருந்தால்..." சாத்தனின் மனம் சாந்தி பெறவில்லை.

                                                      *

 'சில்பியின் நரகம்' என்ற பெயரில் மணிக்கொடியின்  25-08-1935 ஆம் நாள் இட்ட இதழில் இக்கதை வெளியாகி உள்ளது. அதற்குப் பத்து மாதங்களுக்கு முன்பே புதுமைப்பித்தன்  ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அந்தக் கட்டுரை இந்தக் கதையின் திறவுகோல்.

தமிழர்கள்தான் கலையின் மேதையை, அதன் உன்னதத்தை அறிந்தவர்கள். அவர்கள்தான் சிருஷ்டியின் ரகஸியத்தைக் கலையினால் இதற்கு முன்னும், இதற்குப் பின்னும் செய்கின்றவண்ணம், கலையின் முடிவுச் சிகரமாகச் சிருஷ்டித்து விட்டார்கள். அதுதான் நடராஜ விக்கிரகம். கலையின் மேதையை எவ்வளவாகப் பாவித்தார்கள் தமிழர்கள் என்பதற்குப் பின்வரும் பாட்டே சான்று

என்று 'குனித்த புருவமும் ... ' என்னும் நாவுக்கரசர் பாட்டைத் தருகிறார். 

ஒரு பக்தன். அவன் கவிஞன், கலைஞன். உலகத்தை விட்டுவிடுவது பந்தத்தைக் களைவது என்பதெல்லாம் சாதாரண உணர்ச்சி. மனிதப் பிறவி வேண்டாம் என்று பாடிவிடுவது எளிது.  இந்தக் கவிஞனுக்கு அப்படிப்படவில்லை. மனிதப் பிறவியின் அவசியத்தை அவன் பாடுகிறான். எதற்காக?.... ...மனிதப் பிறவி வீண் என்று அழுவதில் அர்த்தமில்லை. மனிதப் பிறவி எடுக்காவிட்டால் நடராஜ விக்கிரகத்தின் கலையழகை அனுபவிக்க முடியுமா? அதற்காகவே மனிதப் பிறவி அவசியம் என்கிறான் கவிஞன்.

இதுதான் தமிழ்நாட்டின் கலை இலட்சியம். சமய உணர்ச்சி. இந்த நாடியின் ரகஸியத்தை அறிந்தால் தமிழ் இலக்கியத்தை அனுபவிக்க முடியும்.

ஆனந்த குமாரசாமியின்  Dance of Siva கலை அனுபவத்தில் தோய்ந்த ஆய்வுக்கட்டுரை.

சிற்ப சாத்திரங்கள் ஆடல் வல்லான் சிலை நுட்பங்களை விளக்கியுள்ளன.

நாட்டிய சாத்திரங்கள் அவிநயங்களையும் மெய்ப்பாடுகளையும் காட்டியுள்ளன.

மெய்யியல்  நூல்கள் உள்ளார்ந்த கருத்துகளைப் புலப்படுத்தியுள்ளன.

ஆனால் திருநாவுக்கரசர் இப்பாட்டில் கலையாக உணர்ந்து இலக்கியமாகப் பதிவு செய்திருக்கிறார்.

புதுமைப்பித்தன் அதைத் தம்  பார்வையில் மீட்டுருவாக்கி நவீன இலக்கிய உயிர் கொடுத்திருக்கிறார்.

நம்மூர் நம்பிக்கையாளர்களின் கோயில்களை விட , நிரீசுவர வாத பைலார்க்கஸ்களின் மேலை அருங்காட்சியகங்களில் சிற்பங்கள் பேணப்படுவது நல்லதுதானோ!


No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...