Thursday, November 12, 2020

தோசை தின்றதுண்டு ஓசை தின்றதுண்டா?


 

தோசை தின்றதுண்டு
ஓசை தின்றதுண்டா?

வாயிலை அடைத்துக் கொள்ளாத பேரில்லமே !(சிறிய அரண்மனை ?) இடையறாது வந்தவர்க்கெல்லாம் கலம் குறைவுபடாமல் வண்டுகள் சூழ மணக்கும் கள்ளோடு அளவின்றிச் சோற்றையும் வழங்கியதால் நீரற்ற ஆற்றின் ஓடம்போல முற்றம் செப்பமின்றிக்¹கிடக்க , மண்ணகங் காக்கும் பெருவேந்தர்தம் வளமான பெரிய அரண்மனைகளில் மதங்கொண்ட யானை பெருமூச்சு விடுவதுபோலக் கொதிக்கின்ற எண்ணை²(எண்ணெய்)யில் போடும் ஆட்டிறைச்சியின் ஓசையுடைய பொரியலைப் புதிதாக வருவோரின் சோர்ந்த கண்கள் மாந்தும்படி உண்டாக்கிக்கொண்டிருந்தாய் முன்பு !

அது போயிற்று !

கரந்தைப் பூச்சூடி , பகைவரை வென்று ஆநிரை (பகைவர் கவர்ந்த பசுக்கூட்டத்தை ) மீட்ட காரியாதி³ நடுகல்லானான்.
தலைவனை இழந்ததால் அணிகலன் களைந்த பெண்ணைப்போலப் பேரில்லமே நீ இப்போது  பொலிவிழந்து கிடக்கிறாய் !

- என்பது ஆவூர் மூலங்கிழாரின் கையறுநிலைப் பாட்டு (புறநானூறு , 261)

இப்பாட்டின் , " நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை "(௸, அடி. 8) என்பதற்கு " நெய் காய்கின்ற உலையின்கண் சொரியப்பட்ட ஆட்டிறைச்சியினது ஓசையுடைய பொரியல் " என்று பொருள் கூறும் பழையவுரையாசிரியர் , " ஓசை என்றது ஆகுபெயரான் ஓசையையுடைய கறியை ; இஃது ஒரு திசைச்சொல் " என்று குறிப்புகள் தருகிறார்.

ஆகுபெயர் என்பது பெயரிலக்கணம் சார்ந்த இலக்கணக் குறிப்பு.

திசைச்சொல் என்பது செய்யுள் ஈட்டச் சொல்வகை சார்ந்த இலக்கணக் குறிப்பு.

புறநானூற்றுப் பழையவுரையாசிரியர் காலத்தில் ( பொதுக் காலம் 12ஆம் நூற்றாண்டு) ஓசை  என்பது ஒரு வட்டார/கிளைமொழி வழக்காக இருந்திருக்கவேண்டும். இல்லையெனில் அவர் அவ்வாறு எழுதமாட்டார் என்பதை அவர் உரை இயல்பறிந்தோர் உணர்வர்.

திசைச்சொல் என்பதை, வடசொல் அல்லாத பிறமொழிச் சொற்களையும் உள்ளடக்கியதாகக் கருதும் பிற்கால வழக்கப்படி , புறநானூற்று உரையாசிரியர் தமிழல்லாத மொழியொன்றின் வழக்கைச் சுட்டியதாகவும் கொள்ளலாம்.

அது , இறைச்சியையோ, இறைச்சிப் பொரியலையோ குறித்து வழங்கியிருக்கவேண்டும். இப்போது தொடர்கிறதா என்று தெரியவில்லை.

கொசுறு1.
மையல் யானை அயாவுயிர்த் தன்ன
நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை (௸, அடி. 7-8)
என்று கொதிக்கும் எண்ணையில் ஆட்டிறைச்சி தளபுள என்று பொரிவதற்கு உவமை சொல்கிறார் ஆவூரார். சாதாரணமாகவே யானை தளபுளஎன்று மூச்சுவிடும். மதம்பிடித்தால் கேட்கவே வேண்டாம்.



 சான்றோர் செய்யுள்களில் உவமை , தத்துவ இயலின் பிரமாணமோ  அலங்காரவியலின் அணியோ அன்று. அதுவே  பொருளுமாகி நிற்கும். 'உவமப்பொருள்' என்பார் தொல்காப்பியரும் 




கொசுறு 2.

நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆர(௸, அடி. 8 - 9)


9 ஆம் அடிக்கு, " புதுமாந்தருடைய ஒளி மழுங்கின கண்கள் நிறைய " என்று பொருள் காண்கிறார் பழையவுரையாசிரியர்.

ஆர் (தல்) - உண்(ணுதல் ) என்னும் பொருளும் உண்டு. 'கண்கள் சுவைக்க' என்று இங்குப் பொருள் காணலாம்.
கண் உண்ணுமா?உண்ணாது ; ஆனால் சுவையுணரும். உண்ணுதல் செயல். சுவைத்தல் உணர்வு. உண்டு சுவையுணரும் முன்பே , கண்டு சுவையுணரலாம் என்கிறது அண்மை ஆய்வு ஒன்று⁴.
ஆவூரார் அப்போதே ஆய்ந்து கண்டதாக நான் சொல்லவில்லை ; சொல்ல முடியாது ; கூடாது. ஆனால் உற்று நோக்கிப் பதிவு செய்வதில் சங்கச் சான்றோர் நுண்மாண் நுழைபுலத்தினர். பிற்காலத்தமிழிலக்கியங்களில் காண அரிதான துல்லியப் பதிவுகளைச் சான்றோர் செய்யுள்களில் காணலாம். அப்படியொரு பதிவு இது.
------------------------------------------------
குறிப்புகள்
1.'முரிவாய் முற்றம்' (புறம். 261: 3) என்பதற்கு 'முரிந்த குறட்டையுடைய' என்பது பழைய  உரையாசிரியர் உரை. பலரும் இடையறாது வந்து செல்வதால் தேய்ந்து சிதைந்து செப்பனிடப்படாமல் , செப்பனிட இயலாமல் கிடந்த முற்றம் என்க.
2. எண்ணை என்னும் ஒரு சொல் நீர்மைத்தாய , மருவிய வடிவத்தையே கையாளலாம். இது இக்காலத் தமிழ்.
3. சுவடியில் பாடப்பட்டோன் பெயர் சிதைந்துள்ளது. அது காரியாதி என்பது ஒளவை சு.துரைசாமிப்பிள்ளையவர்களின் ஊகம்
4.' Seeing' the flavour of foods before tasting them https://www.sciencedaily.com/releases/2013/04/130411194017.htm

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...