Tuesday, November 17, 2020

தமிழ் மறுமலர்ச்சியும் பண்டித ம. கோபாலகிருஷ்ணையரும்

 

தமிழ் மறுமலர்ச்சியும் பண்டித ம. கோபாலகிருஷ்ணையரும்
————————————————————————————————————————

தமிழக உயர்கல்வி வரலாற்றில் முத்திரை பதித்துவருகிற திருச்சிராப்பள்ளி, தேசியக்கல்லூி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நிகழும் , இந்த அறக்கட்டளைச் சொற்பொழிவினை ஆற்ற எனக்கு வாய்ப்புக் கிடைத்ததை ஒரு பேறாக எண்ணுகிறேன்.
இதற்காகக் கல்லூரிச் செயலாளர் உள்ளிட்ட மேலாண்மையர், கல்லூரி முதல்வர் உள்ளிட்ட நிருவாகத்தினர், பரிந்துரைத்த தமிழ்த்துறையினர் ஆகிய அனைவர்க்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்கூறு நல்லுலகில் ‘ஐயர்’ என்பது மகாமகோபாத்தியாய, தாக்ஷிணாத்திய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களையே பெரிதும் குறிக்கும். ஆயினும் எனது இந்த உரையில் பண்டித ம. கோபாலகிருஷ்ணையர் அவர்களையே குறிக்குமாறு அமைத்துக் கொண்டிருக்கிறேன்.




இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இடையறாத் தொடர்ச்சியுடைய தமிழ் இலக்கிய வரலாற்றில் எண்ணிலடங்காப் புலவர்களும் கவிஞர்களும் அருளாளர்களும் அறிஞர்களும் தம் படைப்புகளால் தமிழுக்கு வளம் சேர்த்துள்ளனர். இந்தப் பெரும் பரப்புக் காரணமாகவே அறிஞர் பலர் அதிகம் பேசப்படாமற்போயினர். அவர்களுள் ஒருவர் நம் ஐயரவர்கள்.
நல் ஊழாக ஐயரவர்களின் பெயர்த்தியாரும் ஆங்கிலப் பேராசிரியருமாகிய முனைவர் உஷா மகாதேவன் அவர்கள் ஐயரவர்களின் படைப்புகளை மீட்டெடுத்து நல்கியிருக்கிறார்கள்; மேலும் ஒரு தொகுதியளவிற்கு ஐயரவர்களின் எழுத்துகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றையும் வெளியிட இருப்பதாகவும் கூறுகிறார்கள்.அதற்காகத் தமிழுலகின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐயரவர்கள், திருவாளர்கள் மகாதேவையர் –பிரவர்த்த ஶ்ரீமதி அம்மையார் இணையருக்கு மகவாக 1878இல் பிறந்தார்.
              


சோழவந்தானூர் அரசஞ்சண்முகனாரிடம் தமிழ் பயின்று தேர்ந்தார்; ஆங்கிலத்திலும் புலமைபெற்றார்; போதகாசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், இதழாசிரியர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் ,  பாவலர் ,  நாட்டுப்பற்றும் மொழிபற்றும்மிக்க செயல்வீரர் , பெண்கள் மேம்பாட்டில் அக்கறைகொண்ட சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர் எனத் தம் பன்முகத்திறன்களையும் நிறுவி 1927இல் மறைந்தார்.
ஐயரவர்களின் எழுத்துகள் 1896இலிருந்தே – அவரது பதினெட்டாம் அகவையிலிருந்தே – வெளிவரத் தொடங்கிவிட்டன.
அவர்கள் தமிழாக்கித் தந்த ஆங்கிலப் பாக்கள், அவரே இயற்றியளித்த தமிழ்ப் பாக்கள், அறிவியல் மேலோங்கித் திகழும் பல்துறைக் கட்டுரைகள் ஆகியன ‘அரும்பொருட்டிரட்டு’ என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
இவையன்றி, ‘விவேகோதயம்’ என்னும் திங்கள் இதழில் தொடராக எழுதிய ‘புதல்வர் கடமை’ சிறு நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
வாசக நடை என்று சொல்லக்கூடிய அகவற்பாவாலான ‘விசுவநாதன் அல்லது கடமை முரண்’ என்னும் செய்யுள் நாடகம், உரைநடையாலியன்ற ‘மௌன தேசிகர்’ என்னும் நகைச்சுவை நாடகம் ஆகிய யாவும் 680 பக்க அளவில் களஞ்சியமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
அரும்பொருட்டிரட்டுகள் மூன்றையும் ஒழுங்கு சேர்த்த அளவைப்போல் மேலும் மூன்று மடங்கு படைப்புகள் நூலாக்கம் பெறாமல் இருப்பதாக ஐயரவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
இவையாவற்றையும் எனது ஓர் உரையில் விரிப்பிற் பெருகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் நீலகண்டன் ஓரிருமுறை தொலைபேசியில் தலைப்புக் கேட்டார். இனியும் தள்ளிப்போட இயலாது என்ற நிலையில் ‘தமிழ் மறுமலர்ச்சியும் பண்டித ம. கோபாலகிருஷ்ணையரும்’ என்னும் தலைப்பைச் சொன்னேன்.

தமிழ் வளர்ச்சி வரலாற்றில் ஒரு தேக்கம் பின்னடைவு இருப்பதை உணர்ந்து அதைக் கடந்து முன்னேற முகிழ்த்த சிந்தனையை, செயல்பாட்டைத் தமிழ் மறுமலர்ச்சி எனலாம்.

‘அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என்பது போல ஐயர் அருளாலேயே இத்தலைப்பை நான் எய்தினேன்.
‘தமிழ் மொழியின் தாழ்நிலைக்குக் காரணமும் அதை விருத்தி செய்யும் விதமும்’ என்னும் அவரது கட்டுரையே இத்தலைப்பைத் தந்தது.
தலைப்பைத் தந்தது மட்டுமன்று, அவரது பெருங்களஞ்சியத்துள் உழன்று கருத்துகளைத் தொகுத்தும் வகுத்தும் பொழிவை அமைக்கும் இடர்ப்பாட்டையும் களைந்தது அக்கட்டுரை. தமிழின் தாழ்ச்சிக்கான காரணங்கள் உயர்ச்சிக்கான வழிமுறைகள் இரண்டையும் அவர் எண்ணிட்டு வரிசைப்படுத்தியிருக்கிறார். அந்த அடைவிலேயே அவர்தம் சிந்தனைகளையும் செயல்பாட்டையும், சாதனைகளையும் சொல்ல முயல்கிறேன்.

மறைமுதற் கிளந்த வாயன் மதிமுகிழ் முடித்த வேணி
இறைவர் தம் பெயரை நாட்டி இலக்கணம் செய்யப் பெற்றே
அறைகடல் வரப்பிற் பாஷை அனைத்தும்வென் றாரியத்தோ
டுறழ்தரு தமிழ்த் தெய்வத்தை உள்நினைந் தேத்தல் செய்வாம். (ப.426)

என்று அக் கட்டுரையைத் தொடங்குகிறார் ஐயர்.
தேசாபிமானம், பாஷாபிமானம் இன்மை, உத்தியோகம், பதவி, பொருளீட்டல் நோக்கி அந்நிய மொழி மோகம், தமிழறியாமையே கௌரவம் என எண்ணுதல், தமிழில் பேசவும் இயலாமை, தமிழை இழிவு செய்தல், ஆத்திசூடிகூட அறியாமல் தமிழைப் பழுதுகூறல், தமிழின் அருமை பெருமையை அறியாமை இவற்றையெல்லாம் முன்னுரை போல அடுக்குகிறார் ஐயர்.

“சரித்திரங்களையும் சாஸ்திரங்களையும் தமிழில் மொழிபெயர்க்கலாம் என்றால் சில விஷயங்களை அறிவிக்க ஏற்ற மொழிகள் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கிறது” என்று சொல்லுவதற்கு “ஹீஸ்ட்ரீகளையும் ஸயன்ஸ்களையும் டமில் லாங்கவேஜில் டிரான்ஸ்லேட் பண்ணலாம். ‘நா’ செல திங்ஸ்களை எக்ஸ்பரஸ் பண்ண டெக்கினிக்கல் டர்ம்ஸ்களை ப(f))யிண்ட் அவுட் ‘பண்றது’ ரொம்ப டிபிகல்ட்டாக இருக்கு” (ப.427)
என்று சொல்வார்களாம். ஐயரவர்கள் நடைமுறையை நகைச்சுவையுணர்வுடன் பதிவு செய்கிறார்.

தமிழ் தளர்நிலை அடைந்ததற்கான பதினைந்து காரணங்களை அவர் அடுக்கியிருக்கிறார். நான் சுருக்கிச் சொல்கிறேன்.

1. ஆயிரக்கணக்கான அரிய தமிழ் ஏடுகள் மறைவு.
2. அயலவர் தமிழகத்தை அடிமைப்படுத்தியது.
3. தமிழை ஆதரிப்போர் அருகியது.
4. சீத்தலைச் சாத்தனார் போன்ற அபிமானிகள் இன்மை.
5. கம்பர் போன்ற கவிஞர் தோன்றாமை.
6. இராமபாணம் முதலியவற்றால் நூல்கள் அழிந்தமை.
7. நெருப்பாலும் நீராலும் ஏடுகள் அழிந்தமை.
8. பண்டைநூல், உரை ஏடுகள் வைத்திருப்போரின் பதுக்கல்.
9. போலிப் பண்டை ஏடுகள் உருவாக்கும் சாதுரியத் திருட்டுத்தனம்.
10. மத உணர்ச்சியால் பாடங்களைத் திருத்துதல்; நீக்குதல்.
11. தற்கால அறிவிலிகளின் நூல்களைப் பண்டைநூல்போல் பரப்புதல்.
12ஆவது காரணத்தை ஐயரவர்களின் மொழியிலேயே பார்ப்போம்:
அற்ப சந்தோஷிகளிற் சிலர், தமிழ் மொழிகள்யாவும் ஸம்ஸ்கிருதத்தின் திரிபென்று சாதிக்கிறார்கள். வேறு பெருமூடர் ஸம்ஸ்கிருத பதங்கள் எல்லாம் தமிழின் திரிபுகள் என்று பிரசித்திப்படுத்தி அவ்வாறு கூறற்கு, அச்சமின்றி அருவருக்கத்தக்கதும் சுத்த அபத்தமானதுமான காரணங்களைக் கற்பித்துத் தம் போன்ற குருட்டபிமானிகளின் துதி பெற்றுக் காலங்கழிப்பாராயினர். இவ்விரு திறத்த கூபமண்டூகங்களும் நாணித் தலைகவிழ்ந்து வாயடங்கி நிற்குங் காலமே தமிழ்க்கு ஷேம காலமாகும். நிற்க (ப.432)
ஐயரது நடுநிலைநோக்கின் ஆவேசத்தை இதனால் உணரலாம். இக்கட்டுரையின்
தொடக்கப்பகுதியில் “கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய பாஷைகளுக்குப் பெற்றோர் நிலைமையிலிருந்து பேருதவி புரிந்துவரும் பெருமையை யுடையதும் திராவிட தேச முழுதும் ஏகசக்திராதிபத்தியம் செலுத்திவந்ததுமான நம் தமிழ்மொழி (ப.428)” என்கிறார். ‘நம் தமிழ்மொழி’ என்பதில் பொதிந்துள்ள உரிமையை உணர வேண்டும்.
தமிழ் திராவிட மொழிக் குடும்பத்துள் மூத்தது எனலாமேயன்றி, இக்கால ஒப்புமொழியியல் நோக்கில் பிற திராவிட மொழிகளின் தாய் எனக் கூற இயலாது. எனினும் மனோன்மணீயம் சுந்தரனார் முதலிய அக்கால அறிஞர் அவ்வாறு கருதியதை ஏற்கிறார் ஐயர்.


13. தமிழ் வழிக் கல்வியின்மை.


14. ஒட்டக்கூத்தர் முதலிய கடும்புலவோர் போட்டியுணர்வால் தமிழ் கற்றபோக்கு இக்காலத்தில் இல்லாமை.


15. “இஃதொரு உயர்தனிச் செம்மொழி என்றும் சாமானியர் மட்டுமேயன்றிச் சர்வகலாசாலைச் சங்கத்தாரும் தமிழ் மணமறியா அந்நிய துரைத்தனதாரும் அறிந்து கொள்ளாததே கடைசிக் காரணமாகும்” என்று முடிக்கிறார் ஐயர்.

அடுத்துத் தமிழை வளர்க்க என்ன செய்யவேண்டும் என விளக்குகிறார். அதில் பதினாறு அமிசங்களை வரிசை எண்ணிட்டு விளக்கியுள்ளார்.


௧.  சங்கங்கள் ஏற்படுத்துதல். பிரசங்கங்கள் நடத்துவித்தல்.ஐயரவர்கள் 1901ஆம் ஆண்டிலேயே ‘மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கம்’ என்னும் பெயரில் ஒரு சங்கத்தைத் தொடங்கியிருக்கிறார். இதில் ஒன்றாக ‘நச்சினார்க்கினியர் ஞாபகச் சின்னம்’ என ஒன்றையும் அமைத்திருக்கிறார். இந்த ஞாபகச் சின்ன சபை மதுரையில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணாக்கர்க்குத் தமிழறிவு மிகும் பொருட்டுத் தேர்வுகள் நடத்தி, தேறியோர்க்குச் சான்றிதழ் வழங்கிவருந்திருக்கிறது.

தமிழ் உயர்கல்வி வரலாற்றின் பின்னணியில் நோக்கும்போதுதான் அந்தக் காலத்திய இந்த முயற்சி ஒரு சாதனை என்பது விளங்கும். அதே ஆண்டில் தொடங்கப்பட்ட மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராவும், அதன் தமிழ் ஆங்கிலத் தேர்வுகளுக்குத் தேர்வாளராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.


௨.  'கற்றோரேயன்றி மற்றோரும் உணருமாறு எளியநடையில் பேசுதல்'.

இது மறுமலர்ச்சி நோக்கில் இன்றியமையாத ஒன்று எதனையும் தரங்குன்றாமல் வெகுமக்களிடம் கொண்டு செல்லுதல். பாரதியாரின் பாஞ்சாலி சபத முன்னுரையில் இக்குரலைக் கேட்கலாம். இது சனநாயகத்தின் குரலுமாகும்.
நம் ஐயரவர்கள் தம் பண்டித நடை பற்றிய சுயவிமரிசனப் பார்வை கொண்டிருந்தார்.
தம் படைப்புகள் அகராதியோ விளக்கவுரைகளோ வேண்டாதவாறு சொல்லாழமிக்க நடையோடு சற்றும் விரசமோ தரக்குறைவோ இல்லாமல் அமைந்ததற்குத் தம் சகோதரிகளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக ஓரிடத்தில் எழுதியுள்ளார்.(ப.xcvi).

பண்டித நடையும் கடின சந்தியும் அரிதாக அவர் நடையில் தென்படாமல் இல்லை என்றாலும் அவை இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தவை என்பதை உளங்கொண்டு காணும்போது பொருட்படுத்த வேண்டாதவை என்று தெளியலாம்.
மேலும், ஐயரவர்கள் இலக்கண இலக்கியங்கடந்து அறிவியல், பொதுஅறிவு சார்ந்த பல்வேறு கட்டுரைகளை எழுதித் தமிழுக்கும் புதுவளம் சேர்க்க முனைந்தார். அவற்றுக்குப் புதுப்புதுச் சொல்லாக்கங்களும் சொற்சேர்க்கைகளும் தேவைப்பட்ட நிலையில் , அவரே அப்புதுமைகளைத் தமிழ்மயப்படுத்திக் கொடுத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. இவற்றுக்கு அவரது புலமை பெருந்துணை புரிந்திருக்கிறது.
பவளம் பற்றிய கட்டுரையொன்றில், அஃது உயிரினத்திலிருந்து உருவாவதை விளக்கும்போது அதன் உறுப்பு ஒன்றைப் பற்றி, “இவை, மூக்கின்றி மணங்கவர்ந்து, காலின்றி நடத்தல் செய்து, நோக்கின்றிக் கண்டு, நனி நுவல்தாய நாக்கின்றி அறுசுவையும் அருந்துகின்ற சிற்றுயிர்க் கிருமியாகிய அமீபா (Amoeba) அல்லது வெண்குருதியணு(White corpuscles)வைப் பற்றி நினைவூடாமற் போகா (ப.222).” என்கிறார்.
பிறவியிலேயே பார்வையற்ற சிப்பாய்க் கறையான்கள் மூர்க்கமாகப் போரிடக் கூடியவை. “செயங்கொண்டார் மட்டும் இவற்றின் சண்டையைக் கவனித்துப் பார்த்திருப்பாராயின் இவற்றின் போரைச் சிறப்பித்தும் ஓர் பரணி பாடியே இருப்பார்” என்று வருணிக்கிறார் ஐயர்.
“எறும்புப் புற்றைச் சேதித்துச் சோதித்தால் அதில் மூன்றுவகை எறும்புகள் இருக்கக் காணலாம்” என்னும்போது இயல்பாக எதுகை நயம் அமைகிறது.

தாவரங்கள் பரவும் விதத்தை விளக்கும்போது
" ….. … ….. நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்”
என்னும் ஔவையாரின் நல்வழி அடிகளை எடுத்தாளுகிறார். அறிவியல் மட்டுமே அறிந்தோர்க்கு இஃது இயலாது.
ஆங்காங்கே இலக்கிய மேற்கோள்கள், தொடர்கள், பழமொழிகள், மரபுத்தொடர்கள் முதலியவற்றை ஐயரவர்கள் கையாளும் பாங்கை விரிப்பிற் பெருகும். தனித்துப் பேசற்குரிய பகுதி அது.


௩. சங்கங்களின் அங்கத்தினராகி நமக்குத் தெரிந்ததைப் பிறர்க்குரைத்து, பிறர் உரைகளைக் கேட்டிடுக என்கிறார்.
ஐயரவர்கள் இதனைக் கடைப்பிடித்ததை மேலே கண்டோம். தமிழ்ச் சங்கங்கள் பலவற்றை வாழ்த்திப் பாடிய பாக்கள் அரும்பொருட்டிரட்டில் உள்ளன.


௪.  பிழைப்பின் பொருட்டு ஆங்கிலம் கற்றாலும் இயன்றவரை தமிழில் – சுத்தத் தமிழில் – பேச வேண்டும் என்கிறார். சுத்தத் தமிழ் என்று அவர் சுட்டுவது பேச்சு வழக்கில் வழுவி வருவனவற்றை விலக்கிய தமிழ். இப்போக்குக் காலப்போக்கில் தமிழைச் சிதைக்கும் என்று கருதியிருக்கலாம். இது விவாதத்திற்குரியது என்பதை மட்டும் இங்கே சொல்லி நிறுத்துகிறேன்.


௫ . தமிழ் உபாத்தியாயரின் போதனா சக்திக் குறைவு, தமிழ் அபிமானமின்மை, அசிரத்தை முதலியவற்றைக் கடந்து மாணாக்கர் கற்றோரைத் தேடி, தாமே ஈடுபட்டுத் தமிழ் கற்க வேண்டும் என்கிறார் ஐயர். அவர் காலத்தினும் நம் காலத்திற்கு இது மிகப் பொருந்தும்.


௬.  கீழ் வகுப்புத் தமிழ்ப் பாடங்களையும் நன்கு கற்றால் மேல் வகுப்பிற்குப் போகப் போக அவற்றின் நுட்பம் விளங்கும்.


௭. இலக்கியப் பயிற்சி வன்மையால் இலக்கணப் பயிற்சி எளிதாகும். இலக்கணப் பிழையின்றி எழுதலாம்.


௮. தமிழின் நல்லிலக்கியங்களைத் தக்காரைக் கொண்டோ தாமாகவோ கற்க வேண்டும் என்கிறார் ஐயர். இஃது உயர் கல்வியில் தமிழைப் பாடமாகப் பயிலாத பிறருக்குரிய அறிவுரை.


௯. எளிய இனிய செந்தமிழ்க் கவிகள் இயற்றுக.


௧0. தமிழில் செய்யுள் நூல்கள் மிகுதி. எனவே வசன நடையில் நாடகங்கள், நவீனக் கதைகள் முதலியன எழுதவும் எழுதச் செய்யவும் வேண்டும் என்கிறார் ஐயர்.
ஐயரவர்கள் மரபுவழியில் இனிய பாக்களை இயற்றியதோடு வசனநடை நாடகத்தையும் இயற்றியிருக்கிறார். ‘நவீனக் கதை’ என்று ஐயரவர்கள் சுட்டியிருப்பது விதந்து கூறத்தக்கது.
தமிழில் நவகவிதை வரலாற்றைத் தொடங்கிய பாரதியின் பெரும்பாலான கவிதைகள் மரபுவழிப் பாக்களில் புதுமை செய்யும் முயற்சியே. கதைகளில் நவீனத்தை ஏறத்தாழ முற்றிலும் முயன்ற முன்னோடி புதுமைப்பித்தன்.
பாரதி, நம் ஐயரைவிட அகவையில் இளையவர்; ஐயருக்கு நண்பர்; ஐயரால் சுதேசமித்திரன் ஏட்டில் பணியாற்றப் பரிந்துரைக்கப் பெற்றவர். ஒருவகையில் பாரதி நவீனச் சிறுகதைக்கும் முன்னோடி என்பதைச் சி.சு. செல்லப்பா பின்னர் இனங்கண்டு விளக்கினார் (தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது, இரண்டாம் பதிப்பு).
பாரதியோ, புதுமைப்பித்தனோ ஐயரின் சிந்தனைத் தாக்கத்தால்தான் நவீன இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டனர் என்பதன்று; ஐயர் மறுமலர்ச்சியின் அமிசங்களுள் ஒன்றாக அதனைத் தம் சிந்தனையளவில் இனங்கண்டார் என்பதே கருதவேண்டியது.


௧௧.  பிற மொழிகளிலும் தன்மொழியிலும் புலமை உள்ளவர்கள் தமிழில் அரியனவற்றைப் பிற மொழிகளிலிருந்தும், பிறமொழிகளில் அரியனவற்றைத் தமிழிலிருந்தும் பெயர்த்தல் வேண்டும என்கிறார் ஐயர்; குறிப்பாக அறிவியல் துறைகளாகிய “பௌதிக பூகோள, கிருஷகணித, இரசாயன சாஸ்திரங்களை இயன்றவரை இன்னோர் மொழிபெயர்க்க முயன்றுதீர வேண்டும்” என்கிறார்.
குறிப்பாகச் சொல்லாக்கங்களில் அவர் கருத்துச் செலுத்தியுள்ளார். இதுபற்றிச் சற்று விரிவாகச் சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன். என்னைப் பொறுத்த அளவில் ஐயரவர்களின் கலைச்  சொல்லாக்க முயற்சியை - எண்ணிக்கை குறைவாகத் தோன்றினாலும் - குறிப்பிடத்தக்க சாதனை என்பேன்.
அவரது களஞ்சியத்திலமைந்துள்ள கட்டுரைகளின் வரிசைப்படி கிடந்தாங்கு விளக்குகிறேன்.

[floats]* – மிதப்பான் (மீன்பிடி வலைகளில் உள்ளவை)
[Top] –அடைப்பான் (புட்டிகளின் கார்க் மூடி)
[Life Jacket] – உயிர்ச் சட்டை
[Life Belt] – உயிர்க்கச்சு
[Life Boat] – சேமப்படகுகள் அல்லது ஜீவரஷா ஓடங்கள்
[Bung] – பருமுளை. பீப்பாய்களின் பக்கவாட்டில் பெரிதாக அமைந்த மூடியை ஒத்த  ஒன்று
[Naturalist] – பிரகிருதா சாஸ்திரி
[Botanist] – தாவர சாஸ்திரி
Parasitic plants – தொத்துச் செடி
Delta – கழிமுகத்தெதிர் நிலம்
Butter - wort – வெண்ணெய்ப் பூண்டு
Sun dew – கதிர்ப்பனிப் பூண்டு
Bladder – wort – துருத்திப் பூண்டு
Fly – trap – ஈப் பொறிப் பூண்டு
Pitcher – plant – கமண்டலப் பூண்டு
Birds of paradise – எருத்துவாற் குருவி ( நேர்ப் பெயர்ப்பாக அன்றித் தன்மை கண்டு செய்த தமிழாக்கம்)
[Offensive weapon?] – அடுபடை
[Defensive weapon??] – தடுபடை

* பகர அடைப்பினுள் உள்ள ஆங்கிலச் சொற்கள் ஐயர் சுட்டியன அல்ல. நான் கண்டு தந்திருப்பவை.

இந்த அடுபடை, தடுபடை என்னும் எதுகை நயமுடைய சொற்கள் மூன்று இடங்களில் (ப.196, 221, 258) காணப்படுகின்றன. ஒன்றைப் பார்ப்போம், “இப்பூச்சியின் [பவளப் பூச்சியின்] கரங்களிடத்து அதற்கு வேண்டிய ‘அடுபடை’களும் ‘தடுபடை’களும் அமைக்கப்பட்டுள்ளன (ப.221)” என்றெழுதுகிறார் ஐயர். படை என்பது ஆயுதம் என்னும் பழம்பொருளில் இங்கு ஆளப்பட்டுள்ளது.
தமிழ்ப் புலமை ஊற்றம் இல்லாத ஒருவர் இவ்வாறான சொல்லாக்கத்தைத் தரவியலாது என்பது வெளிப்படை.
பவளப்பூச்சியிடம் காணும் அடுபடைகளுள் ஒன்றன் இயக்கத்தை ஐயரவர்கள் விளக்கியுள்ளார்; அதில், [(coiled venomous) thread (with a barb)] “நூலறை” என ஒன்றைக் குறிப்பிடுகிறார். ஆங்கிலத்தில் ஒரு சொல்லால் அல்லது தொடரால் குறிக்கப்படாததைத் தமிழில் தம் வசதி கருதி உருவாக்கிக் கொள்கிறார்.
White Corpuscles – வெண் குருதியணு
[Diving]   – குளிகாரர்(இது வழக்கில் உள்ள சொல்)
[Diving Bells]   – குளிமணி – மணி போன்ற மிகப்பெரிய குடுவையில் அமர்ந்து,     முத்துக்குளிக்கக் கடலில் இறங்குவார்கள்.



முத்து பற்றிய கட்டுரையில் பண்டைய நம்பிக்கை சார்ந்த கருத்துகளை மென்மையாக மறுத்துத் தம் காலத்த அறிவியல் ரீதியான விளக்கங்களை அளிக்கிறார் ஐயர். இஃது அவரது வழக்கமும் ஆகும்.
Natural Pearls form when an irritant – usually a Parasite and hot the proverbial grain of sand – works its way into an oyster… As a defense mechanism, a fluid is used to coat the irritant – (https://pearls.com) என்கிறது முத்துகளின் உருவாக்கத்தை விளக்கும் ஒரு கட்டுரை இதில் சொல்லப்பட்டுள்ள, Fluid – பொசிநீர் என ஐயரவர்களால் தமிழாக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கண நோக்கில் ‘பொசிநீர்’ என்பது வினைத்தொகை. ‘பொசி(-தல்)’ என்பது வினையடி இதற்கு “To ooze out. Percolate; கசிதல்” எனப் பொருள் தருகிறது  சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி (TAMIL LEXICON) . வெறுமனே ‘திரவம்’ என்னாமல், அந்தத் திரவம் உருவாதலையும் எண்ணிப் ‘பொசிநீர்’ எனப் பொருளுணர்ச்சியோடு முற்றுந் தமிழாக்கியுள்ளார் ஐயர்.



Tennel – தரைக்கீழ்ப் பாதை (சுரங்கம் என்னாதது ஆய்தற்குரியது)
Pyramid – கூர்நுனிக் கோபுரம்
[Antenna] – ஸ்பரிசனி (எறும்பு பற்றிய கட்டுரை)
[aphids – small sap – sucking insects] – எறும்புப் பசுக்கள்
இஃது ஒரு உருவக ஆக்கம். உவமை ஆகுபெயர் என்றும் கூறலாம். aphid எனும் சிற்றுயிரை எறும்புகள் ரோஜா மலரில் வைத்துப் பேணி வளர்த்து, அவற்றினின்றும் தேனை நக்கி உண்ணும். மக்கள் பாலுக்காகப் பசுக்களைப் பேணுவது போன்றதாதலின் ஐயர் இவற்றை எறும்புப் பசுக்கள் – அஃதாவது எறும்புகளால் பேணி வளர்க்கப்படும் பசுக்கள் என உருவகமாக்கிக் கொள்கிறார்.
Driver Ants – வெருட்டு எறும்புகள்
வெருட்டு(-தல்) என்பது வெருள்(-தல்) / அஞ்சு(-தல்) என்பதன் பிறவினை வடிவம் அச்சமுறச் செய்தல் என்பது பொருள். Driver Ants  கொடிய கட்டெறும்பினத்தவை. அவை படையெடுத்து வந்தால் பல சிற்றுயிர்கள் பூச்சிகள் முதலியவை நொடிக்குள் குத்திக் கிழித்து உண்ணப்பட்டுவிடும். இவற்றின் அச்சுறுத்தும் விரைவு கருதி ஐயரவர்கள் மிகப் பொருத்தமாக வெருட்டு எறும்புகள் என்று தமிழாக்கியுள்ளார்.




Brush – பூசுகோல். தூரிகை என்கிற சொல் இருந்தாலும் இதனைப் புதிதாக முற்றிலும் தமிழில் ஆக்கியிருக்கிறார் ஐயர். இங்கு ஓவியம் வரைவதற்குரிய பூசுகோலைக் குறித்தே வழங்குகிறது. இதனை Brush என்பதன் பிற பொருளுக்கும் நீட்டி வழங்கலாம். பூசு(-தல்) என்பதற்குத் தூய்மை செய்(-தல்) என்னும் பொருளும் உண்டு.

ஐயரவர்கள் கட்டுரைகளில் காணப்படும் கலைச்சொற்கள் பெரும்பாலானவற்றை இங்குத் தந்துள்ளேன் எனினும் மேலும் தொகுக்கவும் விளக்கவும் வேண்டிய சொற்கள் உள்ளன. மொழிபெயர்ப்பு, ஒப்புமையாக்கம், பகுதி மொழிபெயர்ப்பு, உருவக / உவமையாகு பெயராக்கம், தூய தமிழ், தமிழ் + வடமொழி, வடமொழி முதலியனவாக வகைப்படுத்தி ஐயரவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
ஐயரவர்களின் காலத்தைக் கருத்தில் கொண்டு நோக்கினால் இவை தமிழின் மறுமலர்ச்சிக்கு எத்தகைய பங்களிப்பை ஆற்றியிருக்கின்றன என உணரலாம்.
இனி விட்ட இடத்திலிருந்து அவரது தமிழ் வளர்ச்சிப் பணிப் பார்வையைத் தொடர்வோம்.


௧௨.  தமிழில் பத்திரிகைகள் பல தோன்ற வேண்டும்; புத்தக சாலைகள் ஏற்படுத்த    வேண்டுமென்கிறார்.
கந்தசாமிக் கவிராயருடன் கூட்டாசிரியராயிருந்து ‘வித்யாபாநு’ என்னும் இதழில் பணியாற்றிய ஐயரவர்கள் தாமே ‘விவேகோதயம்’ (1916), ‘நச்சினார்க்கினியன்’ என்னும் இதழ்களை நடத்தினார்.


௧௩.  தக்க அறிஞரைக் கொண்டு உரையில்லாப் பழந்தமிழ் நூல்களுக்கு உரை    செய்வித்தல் வேண்டும் என்கிறார்.
 ஐயர் தம் ஆசிரியராகிய அரசஞ்சண்முகனார் இயற்றிய  வள்ளுவர் நேரிசைக்கு   உரை எழுதியுள்ளார்.


௧௪.  பண்டைத் தமிழ் நூலாசிரியர், உரையாசிரியர்கட்கு அவரவர் ஊரில் ஞாபகச் சின்னம்    அமைக்க வேண்டும் என்று கூறும் ஐயரவர்கள் நச்சினார்க்கினியர் பெயரால்   கருத்தளவில் ஞாபகச் சின்னம் அமைத்து நடத்தினார்.


௧௫. தொன்னூல்கள், உரைகள் கிடைத்தால் மகாமகோபாத்தியாய உ.வே.சா. அவர்களுக்கோ மதுரைத் தமிழ்ச்சங்கத்திற்கோ அனுப்புக. (இது 1920களில் எழுதியது என்பதைக் கருத்தில் கொள்க.)


௧௬. சுபாஷாபிமானம் கொண்டு பிற பாஷாத்துவேஷம் அற்றிடுக.
சமயம் வாய்க்கும்போதெல்லாம் பிறரையும் தமிழ் மறுமலர்ச்சிப் பணிகளில் ஊக்குவித்துள்ளார். சான்றாக, திண்டுக்கல் அரசினர் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி ஆண்டு விழாவில் ஆசிரியர்களுக்கு இதனை வலியுறுத்தியுள்ளார் (ப.454).
தமிழ் மறுமலர்ச்சி நோக்கில், தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதி மனப்பான்மை பற்றியும் ஐயர் பேசியிருக்கிறார்.

“யாம் சீரியதாய ஆரிய குலத்திற்றோன்றினேம் எனினும் ஆரியமொழி கற்றுணரும் பாக்கியம் வாய்ந்திலேம் (ப.305)” என்கிறார் ஓரிடத்தில். இஃது இரண்டு செய்திகளைத் தருகிறது: i. தம் குலம் சீரியதெனும் பெருமிதம் ii. ஆரிய மொழி அக்குலத்திற்கு உரிமையுடையது என்பது.
இந்த நம்பிக்கையுடைய ஐயரவர்கள் ‘அந்தணரும் செந்தமிழும்’ என்னும் கட்டுரையொன்றை எழுதி, அதனை ‘மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கத்து நச்சினார்க்கினியர் ஞாபகச் சின்ன வருஷோத்ஸவ'த்தன்று வாசித்திருக்கிறார்.

அக்கட்டுரையில்,
" பழமையும் பெருமையும் படைத்த உயர்தனிச் செம்மொழியாகிய தமிழ்மொழியின் உண்மையை அறிய ஆவலும் அக்கறையும் ஆற்றலுமற்ற அந்தணர் அநேகர், தாம் ஆரிய பாஷைக்கே அருகரென்றும், தமிழ் தமக்குச் சிறிதும் சம்பந்தமே இல்லாத ஓர் பாஷையென்றும், அதனால் வடமொழியை அபிமானித்தலே பொருந்துமென்றும் கருதித் தமிழைப் புறக்கணிக்கின்றனர். இவர்களது அபிப்பிராயத்தை மெய்யென நம்பியோ அல்லது வெளிவேஷத்திற்காகவோ இவரது மக்களும் தமிழை இழித்துக்கூறி அநாதரவு செய்கின்றனர். ஆங்கில கலாசாலைகளிற் பயிலும் அந்தண மாணவர்களில் வடமொழி கற்போர் மட்டுமேயன்றித் தமிழ்மொழி கற்போரும், தமிழை இவ்வெண்ணம் கொண்டு உபேட்சை செய்து வருவது எவ்வளவு தவறான காரியம்! இத்தகைய அந்தணர்களும் அவர்களது மக்களும் வடமொழியை அபிமானித்தல் முற்றும் பொருந்துமாயினும் தமிழைப் பற்றிய இவர்களது அபிப்பிராயம் முற்றிலும் தவறானதே " (ப.439).
திராவிடக் கட்சிகள் வலிமை  பெறாத அந்தக் காலத்திலேயே அந்தணர்தம் இந்தப் போக்கை உடனிருந்து உணர்ந்து ஐயர் சொல்லியிருக்கிறார். இன்னும் இந்தநிலை மாறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனைய வருணத்தாரினும் அந்தணரே தமிழின் நாகரீக வளர்ச்சிக்கும் முக்கியக் காரணர் என்று பட்டப் பகலாக நிரூபிக்கக்கூடுமேயானால்,


அதன் பின்னராவது, இன்னோர் ஆரிய பாஷைக்கேயன்றிக் தமிழ்க்கும் பலவிதத்திலும் உரிமைபூண்டு தம் முன்னோர் வழி நடக்கமாட்டார்களா என்று வெகுநாளாக எண்ணியிருந்தேன் "(பக்.439-440).என்கிறார் ஐயர். தொடர்ந்து அக்கட்டுரையில், தமிழ் அநாதிகாலமாயுள்ள தனிப்பாஷை,  அந்தணர் தென்னகம் வருவதற்கு முன்பே இருந்தது ,  இந்த ஆதிகாலத்தில் பிராமணர்களுக்குத் தமிழோடு எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால் சீர்திருத்தம் செய்வதற்கு ஏற்றநிலையில் இருந்த ஓர் சிறந்த மொழியாகிய தமிழை வடக்கிலிருந்து வந்த அகஸ்திய முனிவர் வடமொழிப் போக்கைத் தழுவியும் தமிழ் முறையைக் கையாண்டும் அகத்தியத்தை இயற்றினாரென்கிறார் ஐயர்.

அகத்தியர் மாணாக்கர் பன்னிருவர் தொட்டுச் சங்கப் புலவோருள் நக்கீரர், கபிலர்,  பரணர்,  பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் முதலியோரைத் தொடர்ந்து நாயன்மார், ஆழ்வார் முதலிய அருளாளர்கள் இளம்பூரணர், சேனாவரையர் , பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்கள் வில்லிப்புத்தூரார்,  செவ்வைச்சூடுவார் முதலிய காப்பிய ஆசிரியர்களிடம் வந்து மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையரிடம்  நிறுத்துகிறார்.

இவர்களுள் அகத்தியர்,  அவர்தம் மாணாக்கர் பற்றிய தொன்மப் புனைவுகளுக்குக் குறைந்த பட்ச வரலாற்றுச் சுவடுகள் கூட இல்லை.

ஐயரவர்களேஇ “இதுகாறும் நான் சொல்லியவற்றால் ஏனை ஜாதியார்க்கும் தமிழ்க்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்பது எனது எண்ணம் என்று எவரும் எண்ணற்க "  (ப.445) என்று கூறுவதோடு, 

“சிந்தாமணியின் நந்தாப் பெருமையும் மணிமேகலையின் அணிகெழுபோக்கும் ,  சிலப்பதிகாரத்திலக்கியச் செறிவும், திருவள்ளுவரின் ஒரு மொழி நயமும் , கம்பன் கவியின் செம்பொருளின்பமும் ,  கல்லாடத்தின் எல்லாச் சிறப்பும்இ இன்னோரன்ன பன்னூல் மாண்பும் , நானே முற்றக் கற்றிராவிடினும் கற்றார் மூலம் சிறிதேனும் அறிந்துளேன். நான் சொல்லவந்ததெல்லாம் ஏனைச் சாதியாரினும் அந்தணரே தமிழின் நாகரீக வளர்ச்சிக்கு ஆதி முதல் முக்கிய காரணராயிருந்தோர் என்பதே"  (ப.445). எனப் பிறசாதித் தமிழ்ச் சாதனையாளர் சிலரையும் நயமான நடையில் அடுக்கி,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்ப தறிவு

என்று நிறைவு செய்துவிடுகிறார்.

எவ்வாறாயினும் அந்தணர்க்குத் தமிழ் உரிமையானது என்பதில் ஐயமில்லை. இதனை வலியுறுத்தித் தமிழ் மறுமலர்ச்சியில் அவர்களையும் ஈர்ப்பதே ஐயரவர்களின் நன்னோக்கம்.

ஒட்டுமொத்தமாக ஐயரவர்களின் தமிழ் மறுமலர்ச்சிப் பணிகளை நோக்குபோது என் அளவில் இரண்டு சாதனைகளை உணர்கிறேன்.

ஒன்று,  ஆங்கிலக் கவிதைகளைத் தமிழின் தன்மை குன்றாமல் தமிழாக்கியது. இச்சாதனையைப் பற்றிப்பேசுவது என் தகுதிக்கு மீறியது. ஜி. யு.போப் எழுதியதை ஐயரவர்களே தந்துள்ளார்:


The late lamented G.U.Pope wrote to say that if he had not read Sir Walter Scott, he should have pronounced my piece “Patriotism” the original and Sir Walter Scott’s the translation. And this comes from a Tamil erudite personally not known to me and therefore he had no motive to flatter me (P.xci) 



மகாகவி பாரதியாரும் ,

" இதைநாம் வாசித்தவுடன் மொழிபெயர்ப்பென்றே நினைக்கவில்லை. சாராரணமாய் மொழிபெயர்க்கப்பட்ட வசனங்கள்,  விஷேசமாய்ச் செய்யுள்கள் , பாறைக் காட்டில் குதிரை வண்டி போவதுபோல கடபுடவென்று ஒலிக்கும். ஆனால் நமது ஐயர் செய்திருக்கும் மொழிபெயர்ப்பானது தெரிந்தவர்களன்றி மற்றவர்க்கு மொழிபெயர்ப்பெனவே தோன்றாது "  என்கிறார். இவ்விரு மேதைகள் சொல்வதற்குமேல் நான் சொல்ல எதுவுமில்லை.

ஐயர்தம் சாதனைகளுள் இரண்டாவது,  வெகுமக்களுக்கேற்றவாறுஇ தமிழ்ச் சமூகத்தின் முந்தைய கருத்துகளையும் இயைத்துத் தரங்குன்றா வகையில்,  தக்க கலைச்சொற்களை உருவாக்கித் தமிழுக்கு அறிவியல் துறைகளை அறிமுகப்படுத்தியது.

ஒப்பீட்டளவில் எனது இந்தச் சொற்பொழிவில் இரண்டாவது சாதனையையே சற்று விரித்துக் காட்டியுள்ளேன். 

நன்றி.

வணக்கம்.

துணை:

ம.கோ. களஞ்சியம், காவ்யா, சென்னை, 2014.



*    23.09.2019 அன்று நிகழ்த்திய  ,    திருச்சிராப்பள்ளி, தேசியக் கல்லூரி(தன்னாட்சி) தமிழாய்வுத் துறையின் முதல் தலைவர் பண்டித ம. கோபாலகிருஷ்ணையர்  அறக்கட்டளைச்  சொற்பொழிவின் , உரைப் போக்கில் வெளிப்படும் உணர்ச்சிக்குறிப்புகளை மட்டுப்படுத்தி ,  பிழை நீக்கிக் கட்டுரையாக்கிய வடிவம்.


No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...