Wednesday, November 11, 2020

தொல்காப்பிய மாணிக்கவுரையும் தமிழ் அடையாளமும்

 தொல்காப்பிய மாணிக்கவுரையும் தமிழ் அடையாளமும்


தொல்காப்பியம் தமிழின் காலத்தால் முந்திய இலக்கணம் மட்டுமன்று ; தமிழ் மொழி, பண்பாட்டு அடையாளமுமாகும்.  தொல்காப்பியம் காலந்தோறும் இப்பண்பாட்டு முதன்மையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பினும், தொல்காப்பியப் பயிற்சியில் ஏற்றத் தாழ்வு இல்லாமலில்லை.

பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களுக்கு உரை எழுந்த ,  ஏறத்தாழப் பொதுக்காலம் (Comman Era) பதினோராம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலான, காலத்தைச்  சங்கத் தமிழுக்கு மீட்சியியக்கம் நிகழ்ந்த காலம் என்று குறிப்பிடுகிறார் வையாபுரிப்பிள்ளை¹.

i.தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தொகுக்கப்பட்ட காலம், 

ii.உரை செய்காலம்,

 iii.செவ்வியல் இலக்கியமாகக் கண்ட இருபதாம் நூற்றாண்டு - என மூன்று மீட்சி இயக்கத்தைக் கொள்ள வாய்ப்புள்ளது².


தொல்காப்பியத்திற்குக் கிடைத்துள்ள காலத்தால் முற்பட்டவுரை இளம்பூரணர் உரை.  இதுவே நூல் முழுமைக்கும் கிடைக்கும் பழையவுரையுமாகும்.  எனினும் இதுவே முதலுரை அன்று.  இளம்பூரணருக்கு முன்பும் உரைகள் இருந்தமையை அவருரையாலேயே அறியலாம்.


‘இளம்பூரண அடிகள்’ எனப்பட்ட இவ்வுரையாசிரியர் சமணர் எனக் கருத இடமுண்டு.  தொல்காப்பியம் பொருளதிகார முதல் நூற்பாவுரை இறுதியில் “இந்நூலுடையார் (தொல்காப்பியர்) காமத்துப் பயனின்மை உய்த்துணர வைத்தவாறு அறிந்து கொள்க” என்பார்அவர்.


பின்னர் வந்த சேனாவரையர், நச்சினார்க்கினியர் , தெய்வச்சிலையார் முதலியோரிடமும் சில சார்புகள்  நிலவியதைக் காணலாம்.


இவ்வாறு தொல்காப்பிய உரைகளில் - பிற நூலுரைகளிலும் - உரையாசிரியரின் சமயம் முதலியன சார்ந்த பார்வைப் பதிவுகளைக் காண முடியும்.  பார்வைப் பதிவாக மட்டுமன்றித் தத்தம் கருத்துநிலை சார்ந்த உரை விளக்கத்தின் மூலம் ஒரு நூலைத் தம்வயப்படுத்தும் முயற்சிகளும் உண்டு.  திருக்குறள் உரைகள் இப்போக்கிற்குத் தலையாய எடுத்துக் காட்டுகளாகும்.


வ. சுப. மாணிக்கம் (17.04.1917  -  25.04.1989) இயற்றிய ‘தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன் மரபும் மொழி மரபும் மாணிக்கவுரை’ (1989) வ.சுப.மா. மறைந்தபின்  தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடாக வந்தது.  இந்த உரைக்கு அவரெழுதிய உரைப் பாயிரத்தை நோக்க 06.08.1986 அன்றே நிறைவு பெற்றிருப்பதை அறிய முடிகின்றது.

எளிய சிற்றுரைகள், மாணவர்க்குரிய தெளிவுரைகள் முதலியன தவிர்த்து நோக்க மாணிக்கவுரைக்கு முன் இருபதாம் நூற்றாண்டில் பி.சா.சுப்பிரமணிய சாத்திரி (எழுத்து 1937, சொல் 1930), தி.அ. பாலசுந்தரம் பிள்ளை (அகத்திணை இயல் 1938) சோமசுந்தர பாரதி (அகத்திணை இயல், புறத்திணை இயல், மெய்ப்பாட்டியல் 1942) வே. வேங்கடராஜூலு ரெட்டியார் (எழுத்ததிகாரம் 1944) புலவர் குழந்தை (பொருளதிகார முதல் ஆறு இயல்கள், 1968) ஆகியோர்தம் உரைகள் சுயமான பார்வையில் விளைந்தவை.

சாத்திரி, ரெட்டியார் உரைகள் முறையே இந்திய மரபிலும் திராவிட மரபிலும் வைத்துத் தொல்காப்பிய எழுத்து, சொல்லதிகாரங்களைக் கண்டெழுதப் பெற்றவை.  இவற்றுக்கும் - நெஞ்சறிந்த நிலையிலன்றெனினும் - இயக்கச் சார்பு காட்ட இடமுண்டு.


தமிழர் பண்பாடு எனும் நோக்கிலான இயக்கஞ்சார் பார்வைகள் பெரும்பாலும் பொருளதிகார இயல்களுக்கே எழுந்தன.


தொல்காப்பியத்தின் முதலிரு இயல்களுக்கு மட்டுமே மாணிக்கவுரை இயற்றப்பட்டுள்ளதாயினும் பரவலாகத் தமிழ் அடையாள மீட்சியியக்கத் தாக்கத்தை அதில் காண முடிகிறது.


வாய்ப்பு நேரும் போதெல்லாம் அவர் வெளிப்படையாகவே “தொல்காப்பியத்தை முதற்கண் தமிழ்க் கண்ணோடு காண்பதுதான் செந்நெறி” (ப.69) என்கிறார். தம் உரையில் 1. மீட்பு  2. தமிழின ஒருமைப்பாடு 3. விதிமுறை இலக்கணமாகக்கருதல்  4.தமிழ்மை - ஆகிய தன்மைகளை ஆங்காங்குப் பதிந்துள்ளார்.


உரைப் பாயிரத்திலேயே இந்தக் கூறுகளையெல்லாம் தொகுத்துச் செல்லி விடுகிறார்.


" தொல்காப்பியம் என்ற உலகக் களஞ்சியம் மொழியிலும் அகவாழ்விலும் புறச்சூழலிலும் கட்டுப்பாடு, வளர்ச்சி, தூய்மை வேண்டும் வரம்புநூல் ; தொல்காப்பியம் என்ற தமிழ் முதனூல் வழிவந்த பழமைத் தடங்காட்டி, நிகழ்காலச் செவ்வி சேர்த்து, வளரும் எதிர்காலப் புதுமைப்புரட்சிக்கு இடம் வகுக்கும் இயக்கநூல் ; தொல்காப்பியம் என்ற மறைநூல் பிறப்பு மதம் பால் குழு இடம் பொருள் நிலை வேற்றுமைகளைப் பற்றாது இயற்கை, அறம், மறம், வெற்றி, அமைதி, காதல், இன்பம் என்னும் இவ்வுலகியங்களை மானிடவினத்திற்கு எடுத்துக்காட்டும் உலக வாழ்வுநூல்...

இன்று தமிழினம் ஆயிரம் பிரிவு பிளவு பட்டிருப்பினும் எல்லார்க்கும் பொது முன்னோன் தொல்காப்பியனே என்று உணர்வோமாக.  ஒருமையினவுணர்வு பெறுவோமாக " (பக்.i - ii ).உரைப் பாயிரத்தின் இக்கூறுகள் உரையினுள் ஆங்காங்கு மிளிர்கின்றன.


வெறும் அடையாள மீட்புணர்வு மட்டுமன்று புலமை நுட்பமும் மேலோங்கியது இவ்வுரை ; இலக்கண ஆர்வம் மட்டுமே கொண்டோரும் பயிலத்தக்க உரை³

உரையெங்கும் வெளிப்படையாகவும் உள்ளுறைந்தும் நீக்கமற நிறைந்துள்ள தமிழ் அடையாளக் கூறுகளுள் பதச்சோறாகச் சிலவற்றை இக்கட்டுரையில் காட்டியுள்ளேன்.



1.மீட்பு :

ஆறாவது ஆங்கிலவொலிக்கு[F] நிகராக ஆய்தத்தை மொழிமுதலாகக் கையாளும் போக்கு ஒருபகட்டாகப் பெருகி வருகின்றது.  புல்லிய இப்போக்கால் ஆறாவது ஒலியுடைய பல ஆங்கிலச் சொற்கள் அப்படியே தமிழெனப் புகுத்தப்படுகின்றன.  விசிறி, கடை, நிதியகம், திரைப்படம், நிலைவைப்பு, சீட்டுக்கடை, கத்தி, படிப்புதவி, படிவம், கோப்பு, குளிர்பொறி, தூயாலை, தொழிற்சாலை, அழகி, தந்தை, தீப்பெட்டித்தொழில், நிதி முடக்கம் என்ற பொருளுடைய ஆங்கிலச் சொற்கள் எல்லாம் ஆய்தத்தை முதலாகக் கொண்டு ஒருவாறு தமிழெழுத்தால் எழுதப்படுகின்றன.  இவ்வொரு ஒலிக்களையால் அண்மைக் காலத்துத் தமிழுக்கு விளையும் ஊறுகள் பல.  

 fan , firm   முதலிய ஆங்கிலச் சொற்களை ஃபேன், ஃபர்ம் முதலியனவாகத் தமிழ் வரி வடிவங்களால் எழுதுவதை அவர் ஏற்கவில்லை.

“மொழிக் காப்பு என் உரை நோக்கங்களுள் ஒன்றாதலின் ஆய்தப் போக்கினைச் சுட்டி நெறிப்படுத்துவது என் கடமையாயிற்று "(ப. 103) என்கிறார் வ.சுப.மா.

தொழில்நுட்பம் இன்னும் வளருங்கால் இன்றைய தமிழ் எழுத்து வடிவங்கள் அப்படியே எளிமை செய்யும் புதுப்பொறிகள் கண்டு பிடிக்க முடியும் என்பது என் நம்பிக்கை.  எவ்வாறாயினும் மொழி என்ற நிலைக்கருவியைக் காலந்தோறும் சடுதியில் மாறும் நிலையில்லாச் செய்பொறிகட்கு வணக்கக்கூடாது.  வணக்கின், உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்ற கதையாகிவிடும் (ப.82)

என எழுத்துச் சீர்திருத்தத்தை அவர் எதிர்க்கிறார்.  

அவர் கூற்றுப்  பழமையை நிலை நிறுத்தம் மீட்புவாத நோக்கினதாயினும், அவர் நம்பியவாறே தொழில் நுட்பம் மேம்பட்ட நிலையில் எழுத்துச் சீர்திருத்தத் தேவை குன்றி வருவதை நம்மால் உணர முடிகிறது.

மெய்ம்மயக்கம் பற்றிய நூற்பா விளக்கத்தின் போது, " பேசக்கற்றுக் கொடுப்பது இலக்கணமன்று; காக்க ஆக்க வளர்க்க வழிவழிவிளங்கத் தடங்காட்டுவதே இலக்கணம் என்று தெளிக.  இலக்கணம் புறமிருந்து திணிக்கப்படும் செயற்கையன்று.  மக்களின் வாய்மொழிக் கூறுகளைக்கண்டு கரையுடையாது கட்டி உயர்த்தி வளர்ப்பதே இலக்கண நோக்கம் " (ப.59) என்கிறார்.


இருப்பதைக் காப்பது மட்டுமன்றி இறந்த வழக்குகளையும் மீட்டுப் பயன்படுத்த வேண்டுமென்பதும்  வ.சுப.மா. கருத்து. 


 " நடுமை காட்டும் உகரச் சுட்டு இன்று பெரும்பான்மை வழக்கில் இல்லை; எனினும் இடைநிலையான நடுவிடம் உண்மையின் அதற்கு ஓர் சொல் வேண்டுமன்றோ? பொருளிருப்பச் சொல் வீழ்தல், வீழவிடுதல் அறியாமையாகும்.  இன்றோ இப்பகுதியைக் குறிப்பதற்கு மெய்ப்பாடு காட்டித் தடுமாறுகின்றோம்.  ஆதலின் உகரச்சுட்டுக் கிளவிகளையெல்லாம் பெருவழக்காற்றுப்படுத்தல் நல்லது.  கல்வியாலும் எழுத்தாலும் உயிர்ப்பிக்க வேண்டியன இவை " (ப.61)

 

பழைய மரபுகள் பிறழ உணரப்படுவதையும் வ.சுப.மா. திருத்துகிறார்.

 

" அளபெடையைச் சொல்லுவதிலும் எழுதுவதிலும் இன்று நடைமுறைப்பிழை மலிந்து வருகின்றது.  நூற்பாவின்படி கூடுதல் ஒலியைக் கூட்டிநீட்டிச் சொல்லவேண்டுமேயன்றிப் பிரித்துத் தனித்துச் சொல்லவும் கூடாது.  எழுதவும் கூடாது " (ப.30)

அளபெடை இவ்வாறு ஒலிக்கப்பட்டது எனக் கூறாமல், இனியும் இன்னவாறு ஒலித்தல் வேண்டும் என் விதிக்கிறார் வ.சுப.மா.


தமிழ் எண்களில் பழைய வடிவத்தையும் பேணிக் காத்தல் வேண்டும் என்பது அவரது விருப்பம்.

" எட்டினொடு இரண்டும் அறியேனையே’ என்ற திருவாசகமும், ‘அ உ அறியா அறிவில் இடைமகனே’ என்ற யாப்பு மேற்கோளும்’ ‘எட்டேகால் லட்சணமே’ என்ற தனிப்பாடலும் எழுத்தொடு எண்ணுக்கு வடிவுத் தொடர்பு சட்டல் காண்க.  தமிழுக்கத் தனிமதிப்பு நிறுவும் எழுத்து வடிவு போலத் தனிமதிப்புச் சுட்டும் எண் வடிவையும் பதிப்புத் துறையிலும் பிறவிடங்களிலும் நல்வழக்கிற் பேணிக் காத்தல் நற்றமிழர் கடன் " (ப.67)

மொழி மரபின் இயல் முன்னுரையில், “எல்லா மொழிகளுள்ளும் பழந்தமிழ் மொழி உலக வழக்கு அழித்தொழிந்து சிதையாமல் சீரிளமைத் திறம் குன்றாமல் இன்னும் புது மொழியாக வாழ்வதற்கு உரிய காரணங்களுள் இரண்டு, மொழி முதலெழுத்துக் கட்டுப்பாடும் மொழியிறுதியெழுத்துக் கட்டுப்பாடும் ஆகும்” (ப.90) என்கிறார் வ.சுப.மா.

இக்கட்டுப்பாடுகள் காலப் போக்கில் தளர்ந்து, மாறி வருவதற்கு நன்னூல் விதிகளே சான்று.  பின்னும் மாறியுள்ளன என்பதை இன்றைய தமிழால் உணரலாம்.  பழமையை உயிர்ப்பிக்க வேண்டுமென்பதே வ.சுப.மா. கருத்து.

மொழிக் காப்பைத் தமிழினக் காப்பாகவும் தமிழகத்தின் எல்லைக் காப்பாகவும் காண்கிறார் வ.சுப.மா.

" பன்னெடுங்காலம் தமிழகமாக இருந்த சேர நாட்டுப்பகுதியும் வேங்கடப்பகுதியும் அயல்நிலமானது படையெடுப்பாலன்று, பண்பாட்டு மாற்றத்தாலன்று, ஆட்சி வேறுபாட்டாலன்று, ஒரேஒரு காரணம் அயலொலி அயலெழுத்துக் கலந்த அயல்மொழிக் கலப்பாலாகும். தமிழகத்தின் எல்லைப் பகுதிகளை விழிப்போடு தமிழாகக் காத்துக் கொள்ளத்தவறியதாலும்,  அயல் மொழிகள் எல்லார்தம் செவிவாய்களில் நிரம்பப் புகுந்தமையாலும், அம்மொழிகளைத் தொல்காப்பியம் முதலான இலக்கணங்கள் கூறியபடி தமிழ்வடிவாக்கிக் கொள்ளாது விட்டமையாலும், அயலொலிகளோடு அயல்வரிவடிவங்களும் எழுத்து வழக்கில் இடம் பெற்றமையாலும் தமிழுக்கு உள்ள இடம் சுருங்கிற்று; அயலுக்கு இடம் பெறுகிற்று; எனவே மொழியொலிக் கலப்பு தமிழுக்கு இடவிழப்பு; பிற மொழிகட்கு இடவிரிப்பு.  இவ்வரலாற்று நிலையை இனியேனும் தமிழினத்தார் எண்ணி உள்ள தமிழ் நிலத்தை யாவது எம்மொழிக்கலப்பும் எவ்வொலிக் கலப்பும் எவ்வெழுத்துக் கலப்பும் புகவிடாது காத்துக் கொள்ள வேண்டாமா? கண்காண இழந்தும் அறிவுணர்வு வேண்டாமா? "(ப.15)


2.ஒருமைப்பாடு :


தொல்காப்பியப் பாயிரவுரையில் வ.சுப.மா.,

" தொல்காப்பியக் காலத் தமிழ்ப் பெருநிலம் அரசுவகையால் முத்திறப்பட்டிருந்தது என்ற நிலை “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” எனவும் “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூ” எனவும் கூறப்படும் அகச் சான்றுகளால் விளங்கும்.  வேந்து வகையால் முப்பிரிவுப் படினும் தமிழ் என்ற ஒரு மொழியடிப்படையில் தமிழகம் என்றும் ஒருமைப்பாடு மன்னியது என்ற பேருண்மையைத் ‘தமிழ்கூறு நல்லுலகம்’ என்ற பாயிரத்தால் உணரலாம் " (ப.4)

என அரசியல் வேறுபடினும் தமிழக ஒருமைப்பாடு நிலவியதைக் காண்கிறார்.  தொல்காப்பியப் பாயிரம் மட்டுமன்று இருபதாம் நூற்றாண்டுப் பாரதியும் அவ்வொருமை மரபுப் பேணுவதை எடுத்துக் காட்டுகிறார்.

" தமிழ்கூறு உலகம் என்றளவில் சொல்லாமல் ‘நல்லுலகம்’ என்று சொல்லிய அடைப்புணர்ப்பு நாட்டுப்பற்றுக்கும் மொழிப் பற்றுக்கும் அடையா ஊற்றுக்கண்ணாம்.  பனம்பாரனார் பாயிரத்தை அடியொற்றிய மாக்கவி பாரதியார் “குமரியெல்லை வடமாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு” என்று அள்ளூரப்பாடுவார் ; ‘ஆயிடை’ என்பதனை ‘இவற்றிடையே’ எனவும் ‘நல்லுலகம்’ என்பதைப் ‘புகழ் மண்டிக்கிடக்கும்’ எனவும் விரிவுபடுத்துவர் " (ப.5)


3.விதிமுறை இலக்கணம்:


வ.சுப.மா. தொல்காப்பியத்தை ஒரு விதிமுறை   இலக்கணமாகவே காண்கிறார். “பண்பட்ட தமிழுக்கு முப்பது ஒலியன் என்பது முடிந்தவரம்பு.  அயலொலியன் வந்து கூடுதற்குத் தமிழில் இடனில்லை, தமிழுக்கு இயற்கையில்லை”(ப.21) எனக் கூறும் அவர் “தமிழ் மொழிக்கு எழுத்து முப்பது என்ற ஒரு செய்தியைத் தருவது தொல்காப்பியத்தின் நோக்கமன்று.  இவ்வாறு இவ்வரம்பைக் கடைப்பிடித்து ஒழுகுக என்பது நூற்பாவின் பயன் " (ப. 23)என உறுதிபட மொழிகிறார்.

வரிவடிவம் பற்றிய நூற்பாக்களை விளக்குமிடத்துத் தமிழ்த் தொன்மையை ஏற்றவாறு நெறிப்படுத்துகிறார் வ.சுப.மா.

" மெய்யினியற்கை’ என்றதுபோல ‘எகர வொகரத்தியற்கை’ என்பதனால் மெய்போல இவையும் புள்ளியொடு நிற்றல் தொன்மரபு என்பது தெளிவாம்... ஆதலின் பிறமொழிகளைச் சார்த்தித் தமிழ் மொழியின் ஒலியன் வடிவன்களைக் கணிப்பது அறிவுடைமையாகாது " (ப.40)

இங்கு ‘இயற்கை’ என்பதைத் தமிழுக்கேயுரிய இயல்பு - அஃதாவது பிறமொழி கண்டு ஆக்கப்பட்ட செயற்கை யன்று - என வலியுறுத்துகிறார்.  இயற்கை, செயற்கைப் பொருள்கள் பற்றிய கிளவியாக்க நூற்பாக்களை நோக்கத் தொல்காப்பியர் இங்கு இயற்கை எனப் பயன்படுத்தியிருப்பதை வ.சுப.மா.வின் விளக்கம் தெளிவுபடுத்திவிடுகிறது.

தமிழின் ஒலி, வரி வடிவங்கள் மட்டுமன்றி மெய்ம்மயக்க அமைப்பையும் பேண விழைகிறார் வ.சுப.மா.

எழுத்து மயக்கத்தில் மெய்யொடு மெய் ஒன்றிநிற்கும் மயக்கமே தமிழ்மொழியின் அமைப்பைக் காட்டுவது.  வரம்புடையது, பிறழாது கடைப்பிடிக்கவேண்டியது, புணர்ச்சியிலக்கணத்திற்கும் தளமாவது.  வரிவடிவத்திலும், தமிழ் எண்களின் பண்டை வடிவங்களைப் பேண வேண்டும், மீண்டும் பயன் பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்கிறார் அவர் (ப.67).

இவை, ஒருவகையில் மீட்பு மாகும்.


4.தமிழ்மை :


தமிழ் தனக்கேயுரிய தனித்தன்மைகள் கொண்டதென்பதையும், தமிழ் வெறும் மொழி மட்டுமன்று மொழிசார் பண்பாடென்பதையும் வ.சுப.மா. வலியுறுத்துகிறார்.

" செந்தமிழ் என்பது தமிழுக்கு இயற்கையுடை; அன்புத்தாய், நல்லருள், என்பது போல, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ எனவும், ‘வாழிய செந்தமிழ்’ எனவும், ‘செந்தமிழ் நாட்டுப் பொருநர்’ எனவும் பாரதியார் இயல்பாகப் பாடுதல் காண்க.  செந்தமிழியற்கை என்னும்போது மொழியியல்பை மட்டும் பாயிரம் சுட்டவில்லை.  வாழ்க்கை வழக்கையும் குழும வழக்கையும் நாகரிகத்தையும் சேர்த்துச் சுட்டுகின்றது.  தமிழ் என்ற சொல் பண்டைக்காலத்துத் தமிழினத் தொடர்பான தமிழ்மை பலவற்றையும் குறித்துவரும் ஒரு பொதுப்பெயர்.  ‘தமிழ்தலை மயங்கிய தலையாலங்கானத்து’ என்ற (19) புறநானூறும், ‘கொண்டிமிகைபடத் தண்டமிழ் செறித்து’ என்ற (63) பதிற்றுப்பத்தும், ‘அருந்தமிழாற்றல் அறிந்திலர்’ என்ற சிலப்பதிகாரமும் தமிழ்ப் படையைக் குறிக்கும்.  ‘நற்றமிழ் முழுதறிதல் (50) என்ற புறமும் ‘தமிழ் முழுதறிந்த தன்மையன்’ என்ற சிலம்பும் தமிழறிவைக் குறிக்கும்.  ‘தமிழ் நிலை பெற்ற’ என்ற சிறுபாண் தமிழ்ச் சங்கத்தினையம் ‘தமிழ்தழிய சாயல்’ என்ற சிந்தாமணி தமிழ்ப் பண்பையும் தமிழ்மருந்து தமிழிசை என்ற தொடர் தமிழ்க்கலைகளையும் குறிக்கும்.  பிறவுமன்ன " (ப.7)

தொல்காப்பியப் பனம்பாரனார் பாயிரவுரையில் இடம் பெறும் நான்மறை என்பது அந்தணர் ஒதும் நான்கு வேதங்களைக் குறிக்கும் என்பது பழைய உரையாசிரியர்களின் கருத்து.

நான்மறை என்பது அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கனையும் குறிக்கும் என்பதற்கு,  

‘அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கனையும்

இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடி’

என்ற திருவாசகமும் ஒரு சான்று என்கிறார் (ப.9)

இங்கு வ.சுப.மா. வெறும் கருத்துச் சார்புநிலை காட்டாமல் சான்றும் காட்டியுள்ள புலமைத்திறம் நோக்குதற்குரியது.

‘ஐந்திரம் நிறைந்த’ எனும் பாயிரத் தொடருக்கு “ஐந்திணை இலக்கணம் சொல்லும் ஆற்றல் நிறைந்த” என்று பொருள் காணும் வ.சுப.மா. அதனை வலியுறுத்தச் சுட்டும் தருக்க நெறி, அவரது பார்வை நுட்பம் காட்டும்.

" இப்பாயிரத்தில் வரும் எண்ணிக்கை தொடர்பான ஓரமைப்பைச் சுட்டிக் காட்ட விரும்புவன்.  ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து பன்மை என்ற எண்ணிக்கை நாட்டம் பனம்பாரனார்க்கு இருந்தமை தெளிவாகின்றது.  ஒன்று தமிழ் கூறு நல்லுலகம் ; இரண்டு வழக்கும் செய்யுளம் ; மூன்று எழுத்தும் சொல்லும் பொருளும் ; நான்கு நான்மறை; ஐந்து ஐந்திரம் ; பன்மை பல்புகழ் நிறுத்த, இவ்வோட்டத்தைக் காணுங்கால், நான்மறைக்குப் பின் வரும் ஐந்திரம் என்பது எவ்வாறேனும் ஐந்து என்னும் எண்குறிப்பினதாக இருத்தல் வேண்டும்.  ஒருசாரார் உரை கூறுவதுபோல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐந்திணைக் கொள்ளலாம் எனிளும் எழுத்தும் சொல்லும் பொருளும் என முப்பாகுபாடே அன்றிருந்த வழக்காதலானும், மெய்ப்பாடு விடுபட்டுப்போதலானும் அவ்வுரை பிற்காலச்சாயலது " (ப.13) என்கிறார்.


இன்னும் பல இடங்கள் உள்ளன.

குறிப்புகள்:

1. எஸ்.வையாபுரிப்பிள்ளை, தமிழ்ச் சுடர் மணிகள், பக்.197 - 198.

2. பா.மதிவாணன், தொல்காப்பியம் பால. பாடம் , ப.90.

3.பா.மதிவாணன்,'தொல்காப்பிய மாணிக்கவுரையிற்காணும் சிலநுட்பங்கள்'  (mathipuu.blogapot.com)


முதன்மைச் சான்று:

மாணிக்கம், வ. சுப. , தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை, தமிழ்ப் பல்கலைக்கழகம் , தஞ்சாவூர், 1989.

துணை நூல்கள்:

மதிவாணன், பா., தொல்காப்பியம் பால. பாடம் , அய்யா நிலையம், தஞ்சாவூர், 2014.

வையாபுரிப்பிள்ளை, எஸ்., தமிழ்ச் சுடர்மணிகள், பாரி நிலையம், சென்னை, 1959 


No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...