Sunday, November 22, 2020

கணிகை மாதவியும் நடிகை கல்யாணியும்

 

கணிகை மாதவியும்  நடிகை கல்யாணியும்
(இளங்கோவடிகளின் ‘சிலப்பதிகார’ மாதவி வழி , ஜெயகாந்தனின்  ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’  கல்யாணி - செல்வாக்கும் ஒப்புமைகளும்)*

இலக்கிய வகையால் வடிவத்தால் கதையால் கதைப் பின்னலால் கருத்து நிலையால் தம்முள் வேறுபட்டவை இளங்கோவடிகளின் 'சிலப்பதிகாரமு'ம் ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளு'ம்.  இவற்றிடை பாத்திர அளவில்தானும் செல்வாக்கைக் காண முற்படுதல் ஒரு வலிந்த முயற்சியாகத் தோன்றக் கூடும்.

காலத்தால் முற்பட்ட இலக்கியங்கள் - அவற்றுள்ளும் செவ்வியல் இலக்கியங்கள் - பின் வரும் இலக்கியங்களின் மீது முற்றாகவோ சற்றுக் கூடுதல் குறைவாகவோ செல்வாக்குச் செலுத்தும் வாய்ப்பு இல்லாமலில்லை.

சிலப்பதிகாரமே கூட ஒரு வகையில்  முந்தைய செவ்வியல் இலக்கியச் செல்வாக்கில் விளைந்த புதுச் செவ்வியல் இலக்கியம் எனத் தக்கதுதான்.  என்றாலும்     தமிழின் திருப்புமுனைப் படைப்பாக நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமாக அது அங்கீகாரம் பெற்றுக்கொண்டது.

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் தொடர்நிலைச் செய்யுள்¶ ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' நாவல். இரண்டும் வடிவத்தால் வேறுபட்டவை. வடிவ வேறுபாடு தன்மை வேறுபாட்டையும் உள்ளடக்கியது.

இவ்வாறு வேறுபட்ட இலக்கியங்களுள் முந்தையதன் பாத்திரச் செல்வாக்கைப் பிந்தையதில் காண இயலுமா?
செவ்வியல் இலக்கியப் புனைவில் உருப்பெற்ற மாதவியின் செல்வாக்கு நடப்பிய இலக்கியப் பாத்திரமான  கல்யாணி உருவாக்கத்தில்  செல்வாக்குச் செலுத்த இயலுமா?

ஜெயகாந்தன் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தபோது , தமிழ்ச் சமூகத்தில் செவ்வியல் இலக்கியங்கள் மீள் எழுச்சியுற்று அலையடித்துக்கொண்டிருந்தன.
ஆர்வமும் துறுதுறுப்பும் இயல்பாகவே வாய்க்கப்பெற்ற ஜெயகாந்தன் இயன்றவரை தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் பயின்றவர்தாம்.

ஆனாலும் அதற்குத் தூண்டுதலாய்த் துணை நின்று பயிற்றுவித்ததில்
ஜெயகாந்தனின்  நண்பரும் , ஜெயகாந்தனை விட அகவையில் பத்தாண்டு மூத்தவருமான , கவிஞர்  தமிழ்ஒளிக்குப்  பங்குண்டு எனலாம்.

"எனது ஆசானும் தோழனுமாய் எனது புகழ்ச்சிக்குரிய ஓர் கவிஞனுமாய் விளங்கிய ... நண்பர் தமிழ்ஒளி"  (ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் , ப.27) எனப் போற்றும் ஜெயகாந்தன்,

" தமிழில் படிக்கத் தகுந்தவை என்று நான் எண்ணியிருந்தவை பாரதியாருக்கு முந்தைய பழந்தமிழ் இலக்கியங்கள், அப்புறம் பாரதியார் , புதுமைப்பித்தன் ஆகியோரது எழுத்துக்களை மட்டும்தான் ... படிக்கிற விஷயத்தில் இந்த எனது சனாதனத்தைக் கவிஞர் தமிழ்ஒளி அவர்கள் மிகக்கடுமையாகக் கண்டனம் செய்வார்... பாரதியார் படைப்புகளையே தாண்டி வரக்கூடாது என்றிருந்த என்னைப் புதுமைப்பித்தன் வரை இழுத்துக்கொண்டுவந்தவரே அவர்தான் " ( ௸ , ப.28) என்கிறார்.  பின்னால் அவரது நட்பை முறித்துக்கொள்ள நேர்ந்த போது, " கவிஞர் தமிழ்ஒளியை , அவரால் நான் கற்ற பல அரிய பாடங்களை - அவர் எனக்குக் கற்பித்த தமிழ்க் கல்வியை எல்லாம் நன்றியோடு நினைவுகூர்ந்தேன் " ( ௸, ப.71) என்கிறார். 

தமிழ் ஒளியின் சிலப்பதிகார ஈடுபாட்டையும், அவர் சிலப்பதிகாரத் தாக்கத்திற்குப் பெரிதும் ஆட்பட்டதையும்  அவருடைய, 'விதியோ ?வீணையோ? ' , ' மாதவி காவியம் ' ஆகியன காட்டும்.

' நூல்வழி' என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள விதியோ? வீணையோ? முன்னுரையில் சிலம்பையும் சிலம்பு பற்றிய சில ஆய்வுகளையும் அவர் தோய்ந்து பயின்றிருப்பதை உணரமுடியும். சிலப்பதிகாரம் ஓர் இசை நாடகம் (opera) என்கிறார்தமிழ்ஒளி. " பழந்தமிழ் நாட்டில் கூத்து நிகழ்ச்சிக்காக இயற்றிய சிலப்பதிகாரத்தின் மரபை உட்கொண்டதே " இந்நூல் (ப.22) என்று கூறும் தமிழ்ஒளி தம் இசை நாடகத்தில் சிலப்பதிகாரக் கதையைப் பெரிதும் மீறாமல் மாதவியைத் தலைவியாகக் கொண்டு,'விதியோ? வீணையோ?' ,' மாதவி காவியம் ' ஆகியவற்றைப் படைத்துள்ளார். இவை 1955 - 1958 க்கு இடைப்பட்ட காலத்தில் நிறைவு செய்யப்பெற்றுப் பல்லாண்டுகளுக்குப் பின்பு வெளியிடப்பட்டன.



கலையில் இன்பம் காணுகின்ற

           கணிகை மாதவி - தெய்வக்

           கணிகை மாதவி - விதி

வலையில் இன்று துன்பமெய்தும்

             வனிதை மாதவி - அன்பு

             வனிதை மாதவி        

- கவிக்கூற்று ( ப. 241)

வேடிக்கை வினையாவதுண்டோ? - வெறும்

வேடிக்கை வினையாவதுண்டோ

மூடிக்கை திறந்திட்டால்

முடமாவ துண்டோ?

வேடிக்கை வினையாவதுண்டோ?    

- மாதவி கூற்று (ப.248)

உள்ளம் பறித்தபின்

ஓடி வருவது

கள்ளத் தனமலவோ? - ஐயா

கள்ளத் தனமலவோ?

- வசந்தமாலை கோவலனிடம் கூறுவது(ப.269)

கணிகைக் குலமென்று

            கட்டுரைத்தார் உன் கணவர்

வணிகர் குலமென்றால்

            வார்த்தையை விற்பதுண்டோ?

- வசந்தமாலை மாதவியிடம் கூறுவது(ப.276)

இடைப்பிற வரலையும் கடந்து மற்றொன்று விரித்தல் என்னும் குற்றமெனத் தோன்றினாலும் சுவை கருதித் தமிழ்ஒளியின் 'விதியோ ?வீணையோ?' விலிருந்து
சிலவற்றைத் தருவதைத் தவிர்க்க இயலவில்லை. பொறுத்திடுக.

ஜெயகாந்தனிடம் சுயமான பார்வை இருந்தது.  '  தமிழில் எழுத்து வடிவ நாடகம் இல்லை' என்பது ஜெயகாந்தனின் உறுதியான முடிவு. சிலப்பதிகாரம் ஒரு Opera என்னும் தமிழ்ஒளி முதலியோர் கருத்திலும் அவருக்கு உடன்பாடில்லை ((ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் , ப. 89) ஆனால், சிலப்பதிகார வடிவம் பற்றித் தமிழ்ஒளி முதலியோரிடம்  ஜெயகாந்தன் கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்தியிருப்பதை உய்த்துணர முடியும்.

ஜெயகாந்தனிடம் சிலப்பதிகாரம் நேரடியாகச் செலுத்திய செல்வாக்கு, முதனிலைச் செல்வாக்கு என்க. தமிழ் ஒளியின்  செல்வாக்கை  வழிநிலைச் செல்வாக்கு எனலாம்.

ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'  சுயமான படைப்பு என்பதைக்
இங்குக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஜெயகாந்தனின் மேற்குறித்த நாவல் ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடர்கதை வடிவில் வந்து 1971இல் நூல் வடிவம் பெற்ற போது, அதன் முன்னுரையில்,

"பெண் ஏதோ ஒரு விஷயத்தில் ஆணின் தயவில் இருந்தால்தான் ஆண் வர்க்கமும், ஆண் ஏதோ ஒரு விஷயத்தில் நாயாய்க் குழைந்து பலவீனம் கொண்டிருந்தால்தான் பெண் வர்க்கமும் திருப்தியுறும். சமுதாய மாற்றங்களும் வாழ்க்கை முறைகளும் மாறினாலும் இந்த விதியினால் விளைகிற பிரச்சனைகளின் வடிவங்கள்தான் மாறும் போலும்"  (ப.12)என்கிறார் ஜெயகாந்தன்.

சிலப்பதிகாரத்தில் ஊழ் (விதி) பெறும் இடம் வெளிப்படையானது.  ஜெயகாந்தன் குறிப்பிடும் சமூக உளவியல் விதியும் இளங்கோவடிகள் கூறும் மெய்யியல் விதியும் வெவ்வேறானவை .  எனினும் மேலதிகச் சான்று ஒன்று உள்ளது.
    
" கானல் வரி யான் பாட, தான் ஒன்றின்மேல் மனம் வைத்து,
மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்’ என
யாழ் - இசைமேல் வைத்து, தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின்,
உவவு உற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்,
‘பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின், எழுதும்’ என்று உடன் எழாது,
ஏவலாளர் உடன் சூழ்தர, கோவலன்தான் போன பின்னர் "( கானல்வரி, கட்டுரை)

இங்கு, மாதவியைக் கோவலன் பிரியக் காரணமானது ஊழ்வினை என்கிறார் இளங்கோவடிகள்.

‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்  1978இல் திரைப்படமான போது அதன் நிறைவுக் கட்டத்திற்கு ஜெயகாந்தன் எழுதிய பாடலின் அடியொன்று.
“வீணை மீட்டிடும் போதிலே விதி சிரித்ததோர் காதலில்” என்பது.  



இது சிலப்பதிகாரச் செல்வாக்கில் விளைந்தது என்பதை விட அழுத்தமான நேரடித் தாக்கத்தின் விளைவு என்பதே சரி. விதி, வீணை - என்னும் மோனைகளில்  தமிழ்ஒளியின் செல்வாக்கைக் காணலாமென்று தோன்றுகிறது.

படத்தில் காட்சியுடன் இந்தப் பாட்டைக் கேட்டபோதுதான் சிலப்பதிகாரத் தாக்கம் உறைத்தது.

கண்ணகியே சிலப்பதிகாரத் தலைவி என்று கருதுவது இயல்பானது ; சரியானது.  என்றாலும் மாதவி வெறும் துணைப் பாத்திரமன்று.  வஞ்சிக் காண்டத்தில் ,

‘மாடல மறையோன் வந்து தோன்றி,
‘வாழ்க, எம் கோ! மாதவி மடந்தை
கானல்  பாணி கனக விசயர்தம்
முடித் தலை நெரித்தது; (48-51)என்கிறான்.

நேர்த்தொடர்பற்ற காரண காரிய இயைபைச் சுட்டும் போது மாதவியின் இன்றியமையாமை புலனாகின்றது.

‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலில் கல்யாணியே கதைத் தலைவி.

இளங்கோவடிகள் மாதவியைத் தம் நெஞ்சாக இழைத்துள்ளார் என்பது பேராசிரியர் கா.மீனாட்சி சுந்தரம் கருத்து.  சமுதாயப் பிணைப்பில் தோன்றி வளர்ந்த மாதவி படும் இன்ப தன்பங்களை எடுத்துக் காட்டிச் சமுதாயப் புண்ணுக்கு மருந்திடுவதே இளங்கோவின் நோக்கம் என்கிறார் அவர்(கா.மீ., பக்.115 – 116).

" மாதவி ஒரு சிக்கல் நிறைந்த பாத்திரமே; மிக நுணுக்கமாகவும் உயர்வாகவும் படைக்கப்பட்டுள்ள பாத்திரம்.  சிலம்பில் ஒன்றிநிற்கும் பாத்திரம் மாதவி.  கலையும் வாழ்வும் ஒன்றித்து நின்று சிக்கல் விளைவிப்பதை எடுத்துக் காட்டி மாற்றம் தர மாதவி பயன் பட்டுள்ளாள் " (கா.மீ., ப. 116)

சிலம்பில் தோய்ந்த கா.மீ. கண்டுணர்ந்த இக் கருத்தோடு ஜெயகாந்தன் கூறுவது ஒத்துப் போவது தற்செயலானதன்று.

" கல்யாணி மாதிரி ஸ்தூல உருவங்கள் உண்டு.  ஆனால் அதனுள் இருக்கிற சூட்சும உருவம் நான்.  அது எந்த அளவுக்கு எதார்த்தமோ அந்த அளவுக்குப் பொய்.  கல்யாணி என்கிறவள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதாக நான் காட்டுகிறேன் " (ப.8)

மாதவி அந்தக் காலக் கணிகையர் குலத்தவள்.குல வழக்கம் பற்றிய விமர்சனம் எதையும் எழுப்பவியலாத காலம் அது.  கலையிலும் அறிவிலும் முதிர்ந்தவளாயினும் அகவையில் சிறுமி எனத்தக்க நிலையிலேயே கோவலனைக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டவள் மாதவி.

கல்யாணியும் தேவதாசி குலத்தவள் எனினும் மாறிவிட்ட காலத்தவள்.

" கல்யாணிக்கு, தான் பிறப்பால் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவள் என்பதே வெகு நாட்களுக்குப் பிறகுதான் தெரியும்.  அந்த அளவுக்குக் குல மரபுகள் திருத்தப்பட்ட பிறகுதான் அவள் பிறந்தாள்.  கல்யாணியின் தாய் கல்யாணியின் தந்தையை முறைப்படி மணந்து கொள்ள முடியாமல் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி கொண்டவள் என்கிற விஷயம் கல்யாணிக்கு இன்று வரை தெரியாது, பொட்டுக் கட்டிக் கொண்டவள் என்றாலும் ‘சந்தனப் பூச்சில் நிகழ்ந்த சாந்தி உறவிலிருந்து சாகும் வரை அந்த ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்தவள்’ என்பதால் இந்தக் குடும்பத்தின் மீது அண்ணாசாமிக்கு ஓர் ஆழ்ந்த மதிப்பும் மரியாதையும் உண்டு" (ஒரு நடிகை ....ப.73)
என்கிறார் ஜெயகாந்தன். [ அண்ணாசாமி நாடகக் குழுவின் மேலாளர்; அகவையில் மூத்தவர் ; மணமானவர் ; கல்யாணியிடம் நன்மதிப்புக்கொண்டவர் ; அவளை இரண்டாம் தாரமாகக் கொள்ளலாம் என்று நல்லெண்ணத்தால் கருதியவர்; ரங்காவுடனான மணத்தை உளப்பூர்வமாக ஏற்று, அவர்கள் இனிது வாழ வேண்டும் என எதிர்பார்ப்பவர் ]

முழுவதும் மாதவி போன்ற ஒரு பாத்திரத்தைப் படைப்பது எதார்த்தவியச் செல்வாக்கு மிகுந்த இருபதாம் நூற்றாண்டில் இயலாதது மட்டுமன்றித் தேவையற்றதுமாகும்.

சிலப்பதிகாரக் காலத்துப் பதின் பருவ இளைஞன் கோவலன், அவனை விடவும் இளைய மாதவி ஆகியோரின் கூடலும் ஊடலும் இருபதாம் நூற்றாண்டின் முப்பது அகவை கடந்து முதிர்ந்த, தத்தம் சுய விருப்பத்தோடு கூடிய கல்யாணிரங்கா காதலும் முரணும் வெவ்வேறு தளத்தில் இயங்கினாலும் பிரிவு என்பதன் சில பொதுமைகளைக் காணவியலும்.

‘நிலவுப் பயன் கொள்ளும் நெடு நிலா முற்றதுக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்து, ஆங்கு;
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி,

‘ஆடலும், கோலமும், அணியும், கடைக்கொள -
ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்ப (கடலாடு காதை 74-75)

கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து,
பாடு அமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்  (௸,109 - 110)

என வாய்ப்பு நேருந்தோறும் மாதவி - கோவலன் ஊடலை இடைமிடைந்து தருகிறார் இளங்கோவடிகள்.

கல்யாணி - ரங்கா காதல் அறிவார்ந்த நிலையில் முகிழ்க்கின்றது; அறிவார்ந்த கருத்துச் சார்புகளாலேயே முரணுகிறது.  பழைய மரபான கூடலும் ஊடலும் இவர்களிடையே இல்லை.  என்றாலும் கல்யாணி - ரங்கா பதிவுத் திருமணத்திற்குப் பின், கல்யாணி பற்றிய கோட்பாடு சார்ந்த கருத்து வேறுபாட்டிலிருந்து விவாதம் தொடங்குகிறது.

“அவள் பேசுவதைக் கேட்டபோது, அவள் தன்னிடம் எந்த அளவுக்கு அடிப்படையில் முரண்படுகிறாள் என்று புரிந்து கொண்டு மன உறுத்தலுக்கு ஆளானான் ரங்கா.”    (ஒரு நடிகை....ப.162)

அந்த உறுத்தல் அப்போதைக்கு நீளாமல் நின்று விடுகிறது. ஆனாலும்,

“கல்யாணிக்கும், ரங்காவுக்கும் இடையே எழுந்த முதல் முரண்பாடு இந்த ரோஜாச் செடிகளை வைத்து உருவாயிற்று.  அவள் இதற்காக வருத்தப்படவில்லை. தன்மீது அவன் வருத்தம் கொண்டிருப்பதாக நினைக்கவுமில்லை.  ஆனாலும் ரோஜா மலரைப் பார்க்கும் போதெல்லாம் ரங்காவின் பேச்சை அவள் நினைத்துக் கொள்வாள்.” (ஒரு நடிகை ... ,ப.163)

ரோஜாச் செடியில் ஆரம்பித்த முரண்பாடு - அது ஒன்று மட்டுமல்ல என்கிற மாதிரி தொகை தொகையாய்ப் பெருகலாயிற்று (ஒரு நடிகை ... , ப.170) இவ்வாறு முற்றிய பிறகும் உறவு தொடர்கிறது.

“அவன் குளிக்கும் போது அவள் கூடவே வந்து பாத்ரூம் வாசலில் நிற்பாள்.  அவனை ஒன்றுமே செய்ய விடாமல் குழந்தை மாதிரி நிறுத்தி அவனைக் குளிப்பாட்டுவாள்.  அவனது கால் நகங்களைக் கூட விடாமல் சுத்தம் செய்து துடைப்பாள்.  அவனுக்கு மேலெல்லாம் பவுடரைக் கொட்டி, மிருதுவாகத் தடவுவாள்.  தன்னை அவள் எப்படியெல்லாம் போஷிக்கிறாள் என்ற நினைப்பில் கனிந்து போவான் அவன்.” (ஒரு நடிகை ..., .ப.179)

இத்தகு நிகழ்ச்சிகள் மாதவி - கோவலன் ஊடல் கூடல்களை யொத்து வேறு தளத்தில் நிகழ்வனவாகும்.

" மாசறு பெண்ணே வலம்புரி முத்தே
……   ………..   …..   …..
என்று அவன் பாராட்டிய பல சொற்களும் ஒரு நொடியில் பொருளற்ற சொற்கள் போல் ஆயின.
… கோவலனும் கண்ணகியும் காதலனும் காதலியுமாய் விளங்கிய காட்சி அன்றே மாறிவிட்டது.  அதன்பிறகு கோவலனும் மாதவியுமாக வாழ்ந்த காட்சியாவது மாறாமல் இருத்தல் கூடாதா? பல ஆண்டுகள் வரையில் அந்தக் காட்சி நீடித்ததற்கு மாதவியின் நிலைத்த பேரன்பே காரணம் என்று கூறவேண்டுமேயல்லாமல், கோவலனுக்கு அந்தப் பெருமை உரியது என்று கூற இடம் இல்லை " என்பார் மு.வ.( ப.52)

இதில்  கருத வேண்டியது மாதவியின் பேரன்பே உறவு நீடிக்கக் காரணம் என்பதுதான்.
மார்க்சிய அறிவாண்மையரும் ரங்காவின் நண்பருமான வழக்கறிஞர் ராகவன், ரங்காவின் பிடிவாதத்திற்காக இருவரது ஒப்புதலுடனும் கூடிய மணவிலக்குக்கு ஆலோசனை கூறும் போது,
“நீங்க செய்யறதுதாம்மா ரொம்ப சரி.  அவர் போக்குக்கே விடுங்க.. நீங்க ‘புரொடஸ்ட்’ பண்ணினீங்க காரியம் கெட்டுடும்… அவன் ஜெயிச்சுடுவான்.  கிவ் ஹிம் எ லாங் ரோப்”
என்கிறார்.

புதினம் முழுவதும் கல்யாணியின் - தன்னிலையிழக்காத , பெருந்தன்மையோடு கூடிய, சமரசமற்ற -  விட்டுக் கொடுத்தலால் அவர்களது உறவு நீள்வதைக் காண முடிகிறது.
கோவலன் பிரிந்து சென்றபோது, மாதவி காதற் சுவை சொட்டும் கடிதமொன்றை அனுப்புகிறாள், கோவலன்
“ஆடல் மகளே ஆதலின், ஆய் இழை!
பாடு பெற்றன அப் பைந்தொடி - தனக்கு’ என "  (வேனில் காதை,109-110)
என்று மறுத்து விடுகிறான்.

கோவலனைப் போல் கடுமையான முரண்பாடு கொள்ளவில்லையெனினும் ரங்காவிடமும் அத்தகைய மனப்பான்மையே காணப்படுகிறது.
“பரவாயில்லையே… அண்ணாசாமி மாதிரி ‘நாடகமே வாழ்க்கை’ன்னு ஆகாமே – வாழ்க்கையை நாடகமா புரிஞ்சுக்கிட்டு இருக்கியே நீ” என்று பரிகாசமாகச் சொன்னான் ரங்கா. (ஒரு நடிகை ..., 267). அவளது நடிப்புத்திறம் அவன் மனத்தில் ஆழப்பதிந்துள்ளது.

வழக்கறிஞர் ராகவனோடு உரையாடுமிடத்தில்.“கல்யாணி பெருந்தன்மெயோடு சிரித்துக் கொண்டாள். அந்தச் சிரிப்பைப் பார்த்த ரங்கா ‘இவள் எவ்வளவு அற்புதமான நடிகை’ என்று அந்த வினாடி நினைத்தான்" (ஒரு நடிகை..., ப.285-286)
இது பாராட்டுணர்ச்சி மட்டுமன்று.

கோவலன், மாதவி வாழ்வில் மகப்பேறு வாய்த்ததைச் சிலப்பதிகாரமே காட்டுகிறது. கண்ணகியோடு கோவலன் மதுரை செல்லும் வழியில் எதிர்ப்பட்ட மாடலன்

" அணி மேகலையார் ஆயிரம் கணிகையர்
'மணிமேகலை' என வாழ்த்திய ஞான்று;
மங்கல மடந்தை மாதவி – தன்னோடு
செம்பொன் மாரி செங் கையின் பொழிய (அடைக்கலக்காதை, 38-41)
என்கிறான். இங்குக் கல்யாணியின் நிலையைச் சற்று விரிவாகக் காணவேண்டும்.

" அவள் தன்னைப்பற்றியும் எண்ணிப் பார்த்தாள். யாரையும் கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் குழந்தையென்ற பந்தங்களில் தன்னைப் பிணைத்துக் கொள்கிற தன்மையும் தகுதியும் இல்லையென்றே அவளுக்குத் தோன்றியது " (ஒரு நடிகைப ..., .87)

" பணக்காரர்களின், படத் தயாரிப்பாளர்களின், செல்வ மமதை கொண்டவர்களின், காமுகர்களின் ‘ஆசைநாயகி’யாக வாழ்ந்து, வைப்பாட்டி என்ற பேரெடுத்து அதன் மூலம் லோகாயத – பொருளாதார ரீதியான சௌகரியங்கள் எவ்வளவு கிடைத்தாலும் அதன் மூலம் தன் ஆத்மா சீரழிந்து, பின்னர் தனது புறவாழ்க்கையும் கூடச் செல்லரித்துப் போய்விடும் என்று அஞ்சியதால் அவள் மிக ஜாக்கிரதையாகவே, இந்த உலகத்தில் பழகி வந்தாள் " (ஒரு நடிகை ..., ப. 88)

மாதவியும் மங்கல மடந்தையே யெனினும் அவள் குலம் பற்றிக் குறுகிய பார்வை கோவலனிடம் புலப்படுகிறது.

"    ...                 ...                 ...       யாவும்
சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி,
குலம் தரு வான் பொருள் - குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு’என்ன " (சிலப். 68-71)

கோவலன் போன்று குறுகிய பார்வையுடையவனல்லனெனினும் மரபான குடும்பம் பற்றிய உடன்பாட்டுணர்வு ரங்காவிடம் தலையெடுத்தது.
தனது சாதியினர் வாழ்ந்து வருகிற – அவன் கல்யாணியை மணப்பதற்கு முன் வசித்த – தெருவுக்குச் செல்லநேர்ந்த போது,

“இவர்களிடம் பொய்யான ரசனைகளும், போலித்தனமான ஆடமபரங்களும் இல்லை. ரோஜாச் செடிகளுக்காகவும் குரோட்டன்ஸுக்காகவும் ஆயிரக் கணக்கில் பணத்தை அள்ளியிறைக்கும் அநியாயத்தை இவர்களால் சகித்துக் கொள்ள முடியாது; அப்படிப்பட்ட ரசனைகள் இவர்களுக்குப் புரியாது. புருஷனுக்காக இவர்கள் எதையும் விட்டுக் கொடுப்பார்கள்” (ஒரு நடிகை..., ப.216)என்று நினைக்கிறான்.
கல்யாணியிடமே,".கல்யாணி நீ எவ்வளவு சொன்னாலும் நான் எதிர்பார்க்கிற அளவுக்கு உன் மனசிலே நம்ப உறவுக்கு நீ இடம் கொடுக்கலேன்னுதான் எனக்குத் தோணுது. நான் இவ்வளவு வெளிப்படையாப் பேசறது நாகரிகமில்லேதான். ஆனாலும் சொல்றேன் நீ ரொம்பவும் ‘ஸெல்ஃப் ஸென்ட்டர்ட் வுமன்’ (ஒரு நடிகை...' ப. 232)

மாதவி, கலைப்புலமை சார்ந்து தன் அறிவு நுட்பம் காட்டுதல் - அவளது ஆளுமையாக – வெளிப்படுகிறது.

ஆங்கு, கானல் வரிப் பாடல் கேட்ட மான் நெடுங் கண் மாதவியும்
‘மன்னும் ஓர் குறிப்பு உண்டு  இவன் தன்நிலை மயங்கினான்’ எனக் 
கலவியால் மகிழ்ந்தாள்போல், புலவியால் யாழ் வாங்கித் 
தானும் ஓர் குறிப்பினள் போல், கானல் வரிப்பாடல் - பாணி,
நிலத்தெய்வம் வியப்பு எய்த, நீள் நிலத்தோர் மனம் மகிழ,
கலத்தோடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடத் தொடங்கும்மன். (கட்டுரை 24)

கல்யாணியிடம்  முதிர்ந்த அறிவார்ந்த - மேன்மேலும் சமரசம் செய்து கொண்டே போவது சுயமரியாதைக்கு இழுக்கு மட்டுமன்று இளக்காரமானதுமாகும் என்கிற – தெளிவு இருந்தது.

" நான் நடிக்கிறதை நாடகக் கம்பெனி நடத்தறதையெல்லாம் விட்டு விட்டு அவரோடு போயி இப்ப அவர் இருக்காரே அங்கே குடும்பம் நடத்தினால் அவர் சந்தோஷப்படுவார்னு வெச்சுக்குங்களேன். நான், அது முடியாதுங்கறேன். அப்படியெல்லாம் பேரம் பேசறது எனக்குப் பிடிக்காது. ஏன்னா அப்படி ஆரம்பிக்கிற பேரங்கள் எதுவும் அதோட நிக்கிறதில்லேன்னு நான் நெனக்கிறேன்… நீங்க சொல்கிறபடி செய்தா, என் ஒரு வாழ்க்கை மட்டுமில்லே – அவரோட வாழ்க்கையும் கெட்டுப் போகும்னு நான் நினைக்கிறேன்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள் கல்யாணி. (ஒரு நடிகை ..., ப.256-257)

ஆண் ஆதிக்க மனநிலையை இயல்பாகவே கொண்ட கோவலனும் அறிவுமட்டத்தில் இல்லையெனினும் உணர்வுநிலையில் கொண்டிருந்த ரங்காவும் தூய அன்பை உணரும் கட்டமும் இல்லாமல் இல்லை.

கோசிக மாணியின் கூற்றும் கடிதமும் கொண்டு
‘தன் தீது இலள்’ எனத் தளர்ச்சி நீங்கி,
‘என் தீது’ என்றே எய்தியது உணர்ந்து – ஆங்கு ( புறஞ்சேரி இறுத்த காதை,94-95)
தெளிகிறான் கோவலன்.

கோவலன் போல் முற்றாக முறித்துக் கொள்ளாமல் திருமண உறவை மட்டும் முறித்துத் தன் தனித்தன்மை பேண முயன்ற ரங்கா,
“இவளை விட்டுப் பிரிந்திருந்தாலும் இவளை என்னால் வெறுத்து விடவோ, நெஞ்சிலிருந்து இவளைப் பற்றிய இனிய நினைவுகளை அகற்றி விடவோ முடியுமா? அவ்விதம் முடியாதவரை இவளை விட்டு நான் பிரிந்திருப்பது  என்பதற்கு என்ன பொருள்?” (ஒரு நடிகை ..., ப.341)என்று நினைத்துப் பார்க்கிறான்.

மாதவி, கல்யாணியிடையே சில நுண்மையான ஒப்புமைகளையும் காண முடிகிறது. கோவலன் பிரிந்தவுடனேயே கையற்றுப் பசலையட நின்ற மாதவி,

" அதிரா மரபின் யாழ் கை வாங்கி
மதுர கீதம் பாடினள், மயங்கி (வேனில் காதை,23-24)
என இசையால் ஆறுதலடைய முயல்வதைக் காட்டுகிறார் இளங்கோவடிகள்.

கல்யாணியும் " நான் நடிக்க வந்ததுக்கு நெஜமாலும் காரணம், இந்தச் சுய – ரசனைதான்னு நான் நெனைக்கிறேன் "  (ப.63)என்கிறாள்.

இருவருமே சுயரசனையுடையவர்கள். கோவலன் மறைவுக்கு முன்பே மாதவி துறவு மனநிலை எய்திவிட்டதை அவளது இரண்டாவது கடிதத்தினூடாக உணரலாம். நிறுவனமயப்பட்ட துறவுநிலைக்கு மணிமேகலையை ஆட்படுத்திவிடுகிறாள்.

" யாது நின் கருத்து? என் செய்கோ?” என
மாதவி நற்றாய் மாதவிக்கு உரைப்ப-
“வருக, என் மட மகள் மணிமேகலை!” என்று
உருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு
விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய,
கோதைத் தாமம் குழலோடு களைந்து,
போதித்தானம் புரிந்து, அறம்படுத்தனள்(வரந்தரு காதை , 22-29)

ஜெயகாந்தன் ,  கல்யாணி பாத்திரத்தின் இறுதிநிலையை முன்னுரையில் வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறார்.

" கல்யாணி வெறும் லட்சியப்படைப்பு. அதைப் பறந்து போகாமலிருக்கும் பொருட்டே, தரையில் காலூன்றும் பொருட்டே, காலை ஒடித்துப் போடுகிற கொடுமையில் கதைக்கு முடிவு கண்டேன். நெஞ்சு ஒடிவதைவிட இது கொடுமை குறைந்த விபத்தல்லவா? எல்லோருக்கும் - ரங்காவுக்கும் கூட அவள்பால் திருப்தியும் அநுதாபமும் ஏற்பட்டு விடுகிறதல்லவா? பாவம்! மனித இயல்பு அப்படித்தான் ஆகிவிட்டது" (ப.11-12)

மதுரைப் புறஞ்சேரியில் கோசிகமாணி தந்த மாதவியின் கடிதம்,
" அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன் /வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்" (புறஞ்சேரி இறுத்த காதை, 87 - 88) என்று தொடங்குகிறது .

 " எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும் /பண்நின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல் /போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவி " (அரங்கேற்று காதை வெண்பா) . அப்படிப்பட்ட மாதவி இப்போது தன் கிளவியை  'வடியாக் கிளவி' என்பது 'தன்'னுடைமையைத் துறந்த  துறவு உளப்பாங்கின் உச்சம்; அவலத்தின் உச்சம்.

மாதவி கோவலனையிழந்து துறவு மனநிலையில் இறுகி மகளையும் துறவியாக்கினாள். கல்யாணி நடையிழந்து நாடகம் துறந்து ரங்காவைப் பெற்று நிறைவடைகின்றாள்.

ஜெயகாந்தனைப் போல் இளங்கோவடிகளிடம் உணர்வு விவரிப்புகளோ விரிவான விவாதங்களோ காணப்படாவிடினும் சில சொல்லிப் பல உணர்த்திப் பிந்தைய படைப்புகள் மீது செல்வாக்கு/தாக்கம்செலுத்தும் செவ்வியல் வன்மை கொண்டிருப்பதை உணரலாம்.
மறுபுறம் மாதவி அவலத்தின் - கண்ணகியை விடவும் தீவிரமான அவலத்தின் - ஆழத்தை ஜெயகாந்தனின் கல்யாணி வழியே நவீன வாசகன் உணரமுடியும்.
__________________________________

* 'அவலத் தலைவியர் ' என்னும் எனது கட்டுரையோடு தொடர்புடையது இக்கட்டுரை:
     தொடர்ச்சி எனலுமாம்.

¶ " இவ் ஆறு-ஐந்தும்
     உரை இடையிட்ட பாட்டு உடைச் செய்யுள்" ( சிலப்பதிகாரம், பதிகம், 86-87)
" மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு
ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனன்என் " (மணிமேகலை, பதிகம், 97 - 98)
-எனச் சிலம்பும் மேகலையும் ஆறைம் (6x5=30 முப்பது) பாட்டுகள் என்று அவற்றின் பதிகங்கள் கூறுகின்றன (காதை = பாட்டு. பாகதச் சிதைவு). பத்துப்பாட்டு , தனித்தனிப் பத்துப் பாட்டுகளின் தொகுப்பு. அதன் வளர்நிலையான  சிலம்பும் மேகலையும் கதைத்தொடர்ச்சியுடைய பாட்டுகளால் ஆன  தொடர்நிலைச் செய்யுள்கள்.

இவற்றுள் சிலம்பு தமிழ்ச் சான்றோர் செய்யுள் உள்ளடக்கத்தையும் ஏற்ற பெற்றி

சீவகசிந்தாமணிதானும் காப்பியமன்று ; தொடர் நிலைச் செய்யுள் - அதனுள்ளும் 'தோல்' -என்கிறார் நச்சினார்க்கினியர் :

இத் தொடர்நிலைச் செய்யுள் தேவர் செய்கின்ற காலத்து நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் ஆதலானும், ‘முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி‘ (தொல் - சிறப்பு) என்றதனால், அகத்தியத்தின் வழிநூல் தொல்காப்பிய மாதலானும் , பிறர் கூறிய நூல்கள் நிரம்பிய இலக்கணத்தன அன்மையானும், அந்நூலிற் கூறிய இலக்கணமே இதற்கிலக்கண மென்றுணர்க.
 
   அவ்விலக்கணத்திற் செய்யுளியலின் கண்ணே ஆசிரியர் பா நான்கென்றும், அவற்றை அறம் பொருளின்பத்தாற் கூறுக என்றும் கூறிப் பின்பு அம்மை முதலிய எட்டும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கணம் என்று கூறுகின்றுழி, ‘இழுமென் மொழியால் விழுமியது நுவலினும்‘ (தொல். செய். 238) என்பதனால் , மெல்லென்ற சொல்லான் அறம் பொருளின்பம் வீடென்னும் விழுமிய பொருள் பயப்பப் பழையதொரு கதைமேற் கொச்சகத்தாற் கூறின், அது தோல் என்று கூறினமையின், இச் செய்யுள் அங்ஙனங் கூறிய தோலா மென்றுணர்க.
 
   இச் செய்யுள் முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண் பகுதியாம்; (தொல் - புறத்- 27). இதனானே, ‘யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது‘ (தொல் - செய். 149) என்பதற்குத் தேவபாணியும் காமமுமே யன்றி வீடும் பொருளாமென்பது ஆசிரியர் கருத்தாயிற்று.
 
   முந்து நூல்களிற் காப்பியம் என்னும் வடமொழியால் தொடர்நிலைச் செய்யுட்குப் பெயரின்மையும் இதற்குப் பிறகு கூறிய நூல்கள் இதற்கு விதியன்மையும் உணர்க.

முதன்மைச் சான்றாரங்கள்


இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் (பதிப்பு & உரை : ப.சரவணன்) சத்தியா பதிப்பகம், சென்னை, 2008.
தமிழ்ஒளி, கவிஞர் தமிழ்ஒளி காவியங்கள் , கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு, சென்னை, 2016.
ஜெயகாந்தன், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை , 2012.

ஜெயகாந்தன் , ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் , ஸ்ரீ செண்பகா பதிப்பகம் , சென்னை, 2000.

துணைமைச் சான்றாதாரங்கள்


மீனாட்சிசுந்தரம், கா., சிலம்பில் பாத்திரங்களின் பண்பும் பங்கும், ருக்மணி
     இராமநாதன் அறக்கட்டளை, காரைக்குடி, 2007.
வரதராசன் , மு. , மாதவி, பாரி நிலையம், சென்னை , 2005.
                                                          xxxxxxxxx

- திருச்சிராப்பள்ளி பெரியார் ஈ .வெ.ரா. கல்லூரித் தமிழாய்வுத்துறை , செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவன நிதி நல்கை பெற்று, பிற்காலப் பனுவல்களில் சிலப்பதிகாரத் தாக்கம்  என்னும் பொருளில் நடத்திய கருத்தரங்கில் (பிப்பிரவரி, 2015) ,  'சிலப்பதிகார' மாதவியும் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' கல்யாணியும் - செல்வாக்கும் ஒப்புமைகளும்  என்னும் தலைப்பில் படித்த கட்டுரை. இப்போது திருத்தி விரிவாக்கப் பட்டுள்ளது. இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.காசிமாரியப்பன் அவர்களுக்கு நன்றி.


1 comment:

  1. மாதவியும் கல்யாணியும் பல நிலைகளில் ஒத்துபோவதாகவே எனக்குத் தெரிகிறது.குறிப்பாக அன்பை வெளிப்படுத்தும் நிலைகளில் இரு கதாபாத்திரங்களுமே உச்சத்தைத் தொடுகின்றன. பிரிவு நிலையில் இரு கதாபாத்திரங்களும் வேறுபட்டபோதிலும் இருவருமே நம் மனதில் ஆழப் பதிந்துவிடுகின்றார்கள் என்பதே உண்மை. காப்பியத்தைப் படிக்கும்போதும், திரைப்படத்தைப் பார்க்கும்போதும் (முறையே கோவலன், ரங்கா) இருவருமே ஒரு பேரிழப்பை சந்திக்கிறார்கள் என்னும்போது நம் மனம் சற்று கனக்கவே செய்யும். அதற்குக் காரணம் இருவரும் தம் நாயகர்பால் வைத்திருந்த அதீத அன்பே.

    ReplyDelete

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...