Thursday, November 19, 2020

அவலத் தலைவியர்

 அவலத்  தலைவியர்

---------------------------------------


எந்த வகை இலக்கியத்திற்கும் வாழ்க்கையே அடிப்படை. இலக்கியங்கள் வாழ்க்கை பற்றிய உள்ளார்ந்த உணர்வுகளைப் பொதிந்துவைத்துள்ளன. ஆனால்,

இலக்கியம்   வாழ்க்கையின் எதிரொளி(reflection)யன்று; விலகொளி(refraction). இயற்பண்பிய உச்ச இலக்கியமேயாயினும் அது வாழ்க்கையை முற்றமுழுக்க உள்ளபடியே படம்பிடித்துக்காட்டுவதன்று. நனிமிகு உலகயற் புனைவேயாயினும் அதில் வாழ்க்கையின் சாயல் படியாமலிருக்காது. 

 

" பொருளியலாளனோ சமூகவியலாளனோ சமூகப்பிரச்சினையை விளங்கிக்கொள்ளுகின்ற முறையிலே எழுத்தாளன் அதனை விளங்கிக்கொள்வதில்லை. எழுத்தாளன் சமூகப்பிரச்சினை எதனையும் மனித நிலை என்ற பெருவட்டத்துள். உணர்வுப் பகைப்புலம் என்னும் ஒளிகொண்டு விளக்கப்பெறுவதாக , உணர்ச்சிகளின் போராட்டம் அல்லது கொந்தளிப்புப் பரிணமிப்பு என்பவற்றால் எடுத்துக்காட்டுவதாகவே காண்பான் " ¹


இந்த உணர்ச்சிப் போராட்டம் அல்லது கொந்தளிப்புப் பரிணமிப்பே இலக்கியத்தின் தனித்த இருப்புக்கான நியாயம். இவற்றின் நுட்பத்தைப் பொறுத்தது ஒன்றன் இலக்கிய மதிப்பு.


இலக்கியம் சமூகவியலுக்கோ பொருளியலுக்கோ வரலாற்றியலுக்கோ மாற்றன்று.




காமக்கிழத்தி


'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் /பாடல் சான்ற புலனெறி வழக்கம்' என்று தொல்காப்பியம் (அகத்திணை இயல் , 56)வரையறுப்பதையும் உளங்கொள்க. குறிப்பாகச் சான்றோர் செய்யுள்களில் தனிப்பட்ட எழுத்தாளனின் ஆளுமை கடந்து புலனெறி வழக்கின் ஆட்சி மேலோங்கியிருக்கும். அந்தப் புலனெறி வழக்கென்பது காலம் இழைத்து இழைத்து உருவாக்கிய வழக்கு ; தமிழ் வழக்கு.


தலைவன்-தலைவி என்னும் இருவர்தாம் சங்கச்சான்றோர் செய்யுள் தலைமை மாந்தர் என்பது வெளிப்படை.இந்த அகவாழ்வில்  வேறு சில பெண்களும்குறுக்கிடுகின்றனர். 

தொல்காப்பியத்தில் , (1) தொன்முறை மனைவி, ( 2) பின் முறை ஆக்கிய வதுவை என இருவரைக் காணமுடிகிறது  (' பின்முறை ஆக்கிய ...' கற்பியல் 31) .  மேலும், (3)  காமக்கிழத்தி கூற்றுக்குத் தனி நூற்பாவே உள்ளது ('புல்லுதல் மயக்கும்...' கற்பியல் 10).  (4)பரத்தையைத் தொல்காப்பியரே  'மாயப்பரத்தை' ('அவனறிவாற்ற... ' கற்பியல் 6:33) என்கிறார்.²

  

 பாடல்களின் துறை விளக்கக் குறிப்புகள் , உரையாசிரியர்கள், பிற்கால நூலாசிரியர்கள் முதலியோர்  தரும் வகைகள் விளக்கங்கள் முதலியனவும் ஆய்ந்து கொள்ளத்தக்கன.³


தலைவனுக்கு இலக்கியத்தில் (சமூகத்திலும்) சிறப்புரிமை இருந்தது.  அதனை ஏற்று அப்பெண்கள் இயங்குவதாகவும் அவர்களுக்குரிய உரிமைப்  படிநிலைகளுக்கேற்பத் தலைவன் அவர்களோடு கொள்ளும் தொடர்பு இயங்குவதாகவும் இலக்கியம் காட்டுகிறது[ தலைவியிடம் பேரன்புடன், உணர்ச்சிவயப்படாமல் , சமூக மரபுணர்ந்து , சூழலுக்கேற்ப அறிவுத்திறனை வெளிப்படுத்தும் தோழியின் இயக்கம் தனிச்சிறப்புடையது; தனித்துக் காணத் தக்கது ]சான்றோர் செய்யுள்களில் இந்த இயக்கங்களினூடான பல்வேறு புறநிலை அகநிலைமோதல்கள் உணர்ச்சிகள் முதலியன இலக்கியமாகின்றன.


 

பொதுவாகத் தலைவனோடு தொடர்புகொள்வோரை  மனைவி(தலைவி), காமக்கிழத்தி , பரத்தை என்னும் மூன்றுவகையில் அடக்கிவிடலாம்.


மனைவிக்கு உரிமை மிகுதி; சுதந்திரம் குறைவு. 

பரத்தைக்குச் சுதந்திரம் மிகுதி; உரிமை குறைவு. 

காமக்கிழத்திக்கு உரிமை சுதந்திரம் இரண்டும் குறைவு.


மருதக்கலியில் எட்டுப் பாடல்கள் காமக்கிழத்தி கூற்றாகக் கொள்ளப்பட்டுள்ளன. 

அவற்றுள் ஒன்று கலித்தொகை 69ஆம் பாடல் . இதில் காமக்கிழத்தியின்   அவல நிலையை அவளே கூறுகிறாள்.⁴


நச்சினார்க்கினியர் தம் உரைத்திற விரகால் அதற்குள் தலைவி (மனைவி)யையும் கொண்டுவந்துவிடுகிறார். 

சற்றே மற்றொன்று விரித்தல்தான்என்றாலும் தலைவியைக் கொண்டுவரும்  நச்சினார்க்கினிய  நயத்தைப் பார்க்க வேண்டுமே!

' மணநாளன்று நாணத்தால் ஆடைக்குள் முகம் மறைக்கும் மான்விழி மடந்தையை மணந்து, மனையாளுடன் அந்தணமணமகன் தீவலம் செய்வதுபோல அன்னம் பெடையுடன் பொய்கையில் மலர்ந்த தாமரையை வலம்வரும் நீர்வளம்மிக்க நல்லூரனே '(கலி. 69: 1-7) என்று தொடங்குகிறது பாட்டு.

(டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் கலித்தொகை உரைப்பதிப்பில
 உள்ள படம்)

இதிலுள்ள வெளிப்படை உவமை வினை, பயன் இரண்டனையும் கொண்டதென்பது அவர் கருத்து. அன்னம் பெடையுடன் தாமரையை வலம்வருதல் என்பது வினையுவமை.  (உள்ளுறையல்லாத) இந்த ஏனையுவமம் மருதக் கருப்பொருளாகிய தாமரையைச் சிறப்பித்து நின்றது. 

" அந்தணன் எரிவலஞ் செய்வான்போல அக்கருத்தில்லாத அன்னம் பெடையோடே தனிமலரைச் சூழத் திரியும் ஊர என்றதனான் நீயும் அக்கருத்தின்றிக் குல மகளிரைத் தீவலஞ்செய்து வரைந்து கொண்டு பாதுகாவாது ஒழுகுகின்ற நினக்கு எம்மைப் பாதுகாத்தல் உளதாமோ எனக் காமக்கிழத்தியும் உள்ளுறையுவமங்⁵ கூறினாளாகவுரைக்க " என்கிறார். 

அக்கினி சாட்சியாக நடக்கும் திருமணத்தின் பயன் மனைவியைப் பாதுகாத்தல்.  தலைவன் அதனையும்  செய்யவில்லை எனக் காமத் கிழத்தி  கூற்றில் உள்ளுறை காண்கிறார்  நச்சர் ; இவ்வாறு  தம் உள்ளுறைக் கொள்கையைக் கருவியாகக் கொண்டு தலைவனின் பரத்தமை நாட்டம் பொறாத காமக்கிழத்தி தலைவிக்காகவும் பரிந்து பேசுகிறாள் என்று காட்ட முற்படுகிறார் நச்சர். 


தலைவன் பரத்தை ஒருத்தியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கிறான். இடையில் காமக்கிழத்தியிடமும் வந்து அவளிடம் அன்புடையவன்போல் ,  உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறான்.அப்போது  அவளைப்பற்றித் ‘துணிவிலள் இவள்... நிறை இலள் இவள்... தன் இலள் இவள்...’ என்றெல்லாம் அவன் உள்ளத்திற்குள் கருதி வெளியே நடிப்பதாக நொந்து பேசுகிறாள் காமக் கிழத்தி⁶


துணிவிலள்- அவளாக எந்த முடிவையும் எடுக்க இயலாதவள். 

நிறையிலள் - இதுவே தனக்கு அறுதியானது , இதில் உறுதியாக நிற்க வேண்டும் என்கிற நிலை இல்லாதவள். 

தன் இலள் - ‘தனக்கென ஒரு நெஞ்சு உடையள் அல்லள்’ என்பது நச்சினார்க்கினியர் தரும் பொருள்.தன் இலள் - என்பது தொடர் இலக்கணநோக்கில் விதி விலக்கானது.தன் - என்பது வேற்றுமையேற்கத் திரிந்த வடிவம். இதனைத் தனியே பெயர்ச்சொல் நிலையில் நிறுத்துவது இயல்புக்கு மாறானது.


இப்பாட்டு,

“தருக்கேம் பெரும!... சூழ்ந்தவை செய்து, மற்று எம்மையும் உள்ளுவாய் " என்று முடிகிறது.

"எனக்குத் தனித்தன்மை உண்டு; உரிமையுண்டு என்றெல்லாம் தருக்கமாட்டேன். நீ நினைத்தவாறு செய்து என்னையும் நினைவில் கொள்” என்று பணிகிறாள். 


தனக்குள்ள சமூக வரம்பு காரணமாக நொந்து பணிந்து பேசும் காமக் கிழத்தி உண்மையில்  'தன்'னுடையள் என்பதைத்தான் புலப்படுத்துகிறாள்.



ஆடல் மகள் மாதவி 



மருதநில உழவுச் சமூகத்தில் உள்ளூர் வழக்கங்களுக்கு இணங்கியிருந்த எளிய பரத்தையர் போலன்றி  வணிக மேம்பாடும் நகர நாகரிகமும் பொருளொன்றே கருதிய பரத்தையரை உருவாக்கியது.⁷


இன்னொரு புறம்    செவ்வியற் கலைகளிலும் கல்வியிலும் மேம்பட்டவரும்   அரச , வணிக மேட்டுக் குடிச்சமூகத்தினரோடு தொடர்புடையவரும் அரசு மரபுகளுக்கு உட்பட்டவரும் உயர்மதிப்புடையவருமான கணிகையர்  குலத்தவர் இந்திய அளவில் உருவாயினர்.  இவருள்  தமிழில் தலையாய , செவ்வியல் பாத்திரம் மாதவி.


சிலப்பதிகாரத்தில் கோவலனை விஞ்சும் மாதவியின் ‘தன்’ உடைமையை - கலைத்திறன், அறிவுக்கூர்மை, புலமை முதலியன வெளிப்படுவதை- அவன் வன்மையாக உணரும் இடம் ‘கானல் வரி’. அப்புறம், ‘மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள்’ (கானல்வரி , 225)என்று முடிவு செய்து பிரிகிறான்கோவலன். மாதவி கடிதம் அனுப்புகிறாள். கோவலனோ   'ஆடல் மகளே ஆதலின் ஆயிழை பாடுபெற்றன அப்பைந்தொடி தனக்கு'  (வேனில் காதை, 109 - 110)   என்று  அவள் ஆடல் மகள் என்பதைப் புதிதாகக் கண்டுபிடித்ததைப் போல் தான் சுமத்திய பழிக்குக் காரணம் கற்பிக்கிறான்; அன்றிரவே புகாரிலிருந்து கண்ணகியுடன் வெளியேறுகிறான்;பின்னர், மதுரைப் புறஞ்சேரியில் கோசிகமாணி தந்த மாதவியின்

அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன் /வடியா கிளவி மனக்கொளல் வேண்டும் (சிலம்பு. புறஞ்சேரி. 87 - 88) என்னும் கடிதம்  கண்டு 'தன் தீது இலள்' என உணர்கிறான்.


 " எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும் /பண்நின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல் /போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவி " (அரங்கேற்று காதை வெண்பா)  அப்படிப்பட்ட மாதவி இப்போது தன் கிளவியை  'வடியாக் கிளவி' என்பது 'தன்'னுடைமையைத் துறந்த  துறவு உளப்பாங்கின் உச்சம்; அவலத்தின் உச்சம்.



நடிகை கல்யாணி


 நடப்புச் சூழலில் நடப்பியச் சாயலுடன் கூடிய குறிக்கோள் பாத்திரங்களை உலவவிடும் ஜெயகாந்தனின்,  'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ' இந்த வரலாற்றுப்பார்வைக்கு வாய்ப்பாக அமைகிறது.⁸

  

மாதவியை அவலத் தலைவியாகக் கொண்டு கவிஞர் தமிழ் ஒளி இயற்றிய 'விதியோ? வீணையோ?' என்னும் இசை நாடகமும், 'மாதவி காவியம்' என்னும் குறுங்காவியமும் இவ்வகையில் காணற்குரியன. தமிழ்ஒளிக்கும் ஜெயகாந்தனுக்குமிடையிலான நட்பும் இங்குக் கருதத் தக்கது.⁹


மாதவியின் நவீன வடிவத்தை ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ புதினத்தின் கல்யாணியிடம் காணலாம். இப்புதினம் படமானபோது ஜெயகாந்தன் எழுதிய 'நடிகை பார்க்கும் நாடகம்' என்ற பாட்டில் 'வீணை மீட்டிடும் போதிலே விதி சிரித்ததோர் காதலில்' என்கிற வரிகள் ‘யாழிசை மேல் வைத்துத் தன் ஊழ்வினை  வந்து உருத்ததாகலின்...’ ( கானல்வரி, 226)என்பதன் மறுஆக்கம். படத்தில் நாடகமாகக் கானல் வரிக் காட்சியே இடம் பெறும்.


'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளி'ல் சிலப்பதிகாரத்தின் , குறிப்பாகக் கல்யாணியிடம் மாதவியின்  செல்வாக்கைக் காணமுடிகிறது. கல்யாணியும் தேவதாசி குலத்தில் பிறந்தவள். தேவதாசி மரபின் தொடர்ச்சிக்கான சமூகத்தேவை மறைந்த நிலையில் , கல்யாணி நாடக நடிப்பைத் தன் வாழ்க்கைத்தொழிலாகக் கொள்கிறாள்.


இதழியலாளன் ரங்கா , உறவில் அமைந்த முதல் மனைவியை இழந்தவன். அம்மனைவி பற்றிப் பொருட்படுத்ததத் தக்க குறிப்பு எதுவும் கதையில் இல்லை. பின்னர்,  கல்யாணியும் ரங்காவும் அறிவார்ந்த காதலால் மணக்கின்றனர். இருவரும் அகவையாலும் பட்டறிவாலும் முதிர்ந்தவர்கள்; அறிவாண்மையர்.


காலப்போக்கில் கல்யாணியின் ‘தன்’ - உடைமையை அவ்வாறே ஏற்றுக்கொள்வதில் நவீன 'ஆண்'மகனாகிய ரங்காவுக்கும் நெருடல் ஏற்படுகிறது. அவளுக்கு எந்த நெருடலும் இல்லை; நிபந்தனையும் இல்லை. ஒரு கட்டத்தில் ரங்கா மணவிலக்குப் பெற எண்ணுகிறான். அவளிடம் அன்பைத்தவிர ஏதுமில்லை; ‘தன்’மையை விட்டுக் கொடுக்கும் பேரத்திலும் உடன்பாடில்லை. அவளால் என்ன செய்துவிடமுடியும்?


 ஓராண்டு பிரிந்திருந்தால்தான் மணவிலக்கு என்பது சட்ட நிபந்தனை. அவன் வறட்டுப் பிடிவாதத்தோடு வலிந்து பிரிந்து செல்கிறான்.

அவள் உடல் நிலை குன்றுகிறது. அதற்குப் பிரிவாற்றாமை காரணமில்லை.   

பின்னர், அவளால் நடக்க இயலவில்லை என்பதறிந்த ரங்கா இரக்கம் மீதூர , மணவிலக்குப் பிடிவாதத்தைக் கைவிட்டு அவளைக் காண வருகிறான்; அவளுடனேயே வாழத் தலைப்படுகிறான்.


நவீன இலக்கியமாதலின் கல்யாணி கதைத்தலைவியாக முடிந்தது.


ஜெயகாந்தன்,  கல்யாணி பாத்திரத்தின் இறுதிநிலையை முன்னுரையில் வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறார் , " கல்யாணி வெறும் லட்சியப்படைப்பு. அதைப் பறந்து போகாமலிருக்கும் பொருட்டே, தரையில் காலூன்றும் பொருட்டே, காலை ஒடித்துப் போடுகிற கொடுமையில் கதைக்கு முடிவு கண்டேன். நெஞ்சு ஒடிவதைவிட இது கொடுமை குறைந்த விபத்தல்லவா? எல்லோருக்கும் - ரங்காவுக்கும் கூட அவள்பால் திருப்தியும் அநுதாபமும் ஏற்பட்டு விடுகிறதல்லவா? பாவம்! மனித இயல்பு அப்படித்தான் ஆகிவிட்டது " (பக்.11-12)


மாதவி கோவலனையிழந்து துறவு மனநிலையில் இறுகி மகளையும் துறவியாக்கினாள். கல்யாணி நடையிழந்து நாடகம் துறந்து ரங்காவைப் பெற்று நிறைவடைகின்றாள். 


மாதவி அவலத்தின் தீவிரத்தைக் கல்யாணி மூலமே நான் கண்டுணர்ந்தேன்.


கலித்தொகையும் சிலப்பதிகாரமும் பழஞ்செவ்வியல் இலக்கியங்கள். 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' நவீனச் செவ்வியல் இலக்கியம். அந்தத் தளத்திலும் தரத்திலும் நுண்ணுணர்வுகளை இவை பொதிந்து காட்டுகின்றன.¹⁰


உரிமை மனைவியரை விடவும் காதலாற் கலந்த காமக்கிழத்தியும் கணிகை மாதவியும் நடிகை கல்யாணியும்தாம் அவலத் தலைவியர் .



------------------------------------------------------------------------------------


குறிப்புகள்

1. சிவத்தம்பி, இலக்கியமும் கருத்துநிலையும் , ப.29 


2.தொல்காப்பியப் பொருளதிகாரம்  , வறட்டுத்தனமான வகைகளும் விதிகளுமாக அன்றி,  வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம்   இலக்கிய உயிரோட்டம் பேணுவதைக் காணலாம்.

பின் முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவை

தொல் முறை மனைவி எதிர்ப்பாடு ஆயினும்

இன் இழை புதல்வனை வாயில் கொண்டு புகினும்

இறந்த  துணைய  கிழவோன் ஆங்கண்

கலங்கலும் உரியன் என்மனார் புலவர் (கற்பியல் - 31)

' இறந்தது நினைஇ' (அடி 4. நச்சர் பாடம்) என்பதே பொருட் பொருத்தமுடைய பாடம் என்பது உரை வளப் பதிப்பாசிரியர் க.வெள்ளைவாரணன் கருத்து. 

இதில் முதல் மனைவியும் பின்பு மணந்தவளும் குறிக்கப்படுகின்றனர் ( மூத்த தாரம், இரண்டாம் தாரம் என வழங்குவர்). 


இருவகைத் தலைவியரையும் கைவிட்டுப் பரத்தமை செய்து ஒழுகியவற்றை நினைந்து, ஆங்கட் கலங்கலும் உரியன் என்பது பொருள். 

நச்சர்,  'கலங்கலும் உரியன் ' என்பதற்கு 'அப்பரத்தையர்கண் நிகழ்கின்ற காதல் நிலைகுலைந்து மீளுதலும் உரியன்' எனப்பொருள் கொள்கிறார். இளம்பூரணர் இவ்வாறு விரித்தெழுதாவிடினும் , அவர் தரும் எடுத்துக்காட்டால், இப்பொருளே கொள்கிறார் எனக் கருதலாம். 


ஆனால், கலங்கல் என்பது உள்ளங்கலங்கல்தான்.  அவ்வாறு உளங்கலங்கியதன்  விளைவே பரத்தையைக் கைவிடல். இது உணர்ச்சிகரமான நிலை; இலக்கியத்திற்கு வாய்ப்பான நிலை. 

மீளுதல் என்பதற்கு நூற்பாவில் இடமில்லை. நச்சர், ' உம்மை எதிர்மறையாகலான் மீளாமையும் உரித்து ' என்கிறார். இது நடப்பு. 



காமக்கிழத்தி தலைவன் குறை மறந்து தாய் போல் தழுவி , இடித்துரைத்து மனைவியுடன் பொருந்தி வாழச் செய்வாள் என்கிறார் தொல்காப்பியர்(கற்பியல் 10) ; 

தலைவியும் தலைவனைத் தாய் போல் இடித்துரைத்துத் தழுவிக் கொள்ளுதல் உண்டு என்கிறார் (கற்பியல் 32)


இனி, (4)பரத்தை. பரத்தையைத் தொல்காப்பியரே ஓரிடத்தில் 'மாயப்பரத்தை' என அடையொடு சுட்டுகிறார். சுருங்கவுரைக்கும் இளம்பூரணர்தாமும் , " மாயமென்பது பரத்தைக்குப் பண்பாகி இனஞ்சுட்டாது வந்தது " என்று தெளிவுறுத்துகிறார். அதாவது பரத்தை இயல்பிலேயே மாயத்தன்மை உடையவள் என்பது கருத்து.


" கற்புவழிப் பட்டவள் பரத்தையை ஏத்தினும் 

   உள்ளத் தூடல் உண்டென மொழிப " (பொருளியல், 37) .

   'கற்புக் காரணமாகத் தலைவனது பரத்தமைக்கு உடன்பட்டாலும் தலைவியின்உள்ளத்தில் ஊடல் நிகழும்' என்பது பூரணர் கருத்து. ஏறத்தாழ நச்சரும் இக்கருத்தினரே.


பரத்தையரே , ' தம்முறுவிழுமம்'(தலைவனால் தாமுற்ற துன்பம்) தலைவியிடம் கூறுவதுண்டு என்கிறது தொல்காப்பியம்(பொருளியல் 39) . இதற்குப் பூரணரும் நச்சரும் ,


" நின்னணங் குற்றவர் நீ செய்யும் கொடுமைகள்

  என்னுழை வந்துநொந் துரையாமை பெறுகற்பின்" (கலி. 77) என்பதை எடுத்துக்காட்டுகின்றனர்.



3.i. துறைக்குறிப்புகளில்  அடையின்றிப் பரத்தை என்னும் சொல் ஆங்காங்குக் காணப்படுகிறது. இதுவன்றிக் காதற்பரத்தை, இற்பரத்தை , இல்லிடப் பரத்தை , நயப்புப் பரத்தை , அயற்பரத்தை என்பன உள [குறுந்தொகை - காதற்பரத்தை (164) ; ஒரு பரத்தை தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட இற்பரத்தை (364)/ அகநானூறு - இல்லிடப் பரத்தை (186) ; நயப்புப் பரத்தை இற்பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது (336) ; காதற்பரத்தை (376 & 396)/ ஐங்குறுநூறு - காதற் பரத்தை ( 37 , 40 , 87 , 89 , 90) ; அயற்பரத்தையர் பலரும் கூறினார் என்பது கேட்ட காதற்பரத்தை (40)/ நற்றிணை - பரத்தை மட்டுமே]

3.ii.இற்கிழத்தி, காமக்கிழத்தி, காதற்பரத்தை - என வரிசைப்படுத்தும் இளம்பூரணர், 

" காமக்கிழத்தியராவார் பின்முறை ஆக்கிய கிழத்தியர் . அவர் மூவகைப்படுவர் ; ஒத்த கிழத்தியரும் இழிந்த கிழத்தியரும் வரையப் பட்டாரும் என . ஒத்த கிழத்தியர் முந்துற்ற மனையாளன்றிக் காமம் பொருளாகப் பின்னுந் தன் குலத்துள்ளாள் ஒருத்தியை வரைதல் . இழிந்தாராவார் - அந்தணர்க்கு அரச குலத்தினும் வணிககுலத்தினும் வேளாண் குலத்தினும் கொடுக்கப்பட்டாரும் , அரசர்க்கு ஏனையிரண்டு குலத்தினுங் கொடுக்கப்பட்டாரும் , வணிகர்க்கு வேளாண்குலத்திற் கொடுக்கப்பட்டாரும் , வரையப்பட்டார் - செல்வராயினார் கணிகைக் குலத்தினுள்ளார்க்கும் இற்கிழமை கொடுத்து வரைந்து கோடல் . அவர் கன்னியில் ` வரையப்பட்டாரும் அதன் பின்பு வரையப் பட்டாரும் என இருவகையர் . அவ்விருவரும் உரிமை பூண்டமையாற் காமக் கிழத்தியர்பாற் பட்டனர் . பரத்தையராவார் யாரேனின் , அவர் ஆடலும் பாடலும் வல்லராகி அழகு மிளமையுங் காட்டி இன்பழும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டுந் தங்காதார் " என நால்வருணம் சார்ந்தும் பொருள் நிலை சார்ந்தும் வகைப்படுத்துகிறார்.


3.iii.தலைவனின்  புறத்தொழுக்கத் தொடர்பினராகப் பரத்தையர் என்னும் ஒருவகையினரை மட்டுமே சுட்டுகிறது இறையனார் அகப்பொருள்.

(1)பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தி , (2) காமக்கிழத்தி , (3) குலப் பரத்தையர் , (4) காதற்பரத்தை , (5) சேரிப் பரத்தை (அகப்பொருள் விளக்கம், நூ.59, 113 , 114) என்போரைப் பொதுக் காலம் 12ஆம் நூற்றாண்டின் ,  நாற்கவிராச நம்பி இலக்கியங்கண்டு  வகைப்படுத்தியுள்ளர் . 

(1) காதற்பரத்தை, (2) பின் முறைவது வைப்பெருங்குலக்கிழத்தி, (3) காமக்கிழத்தி என மூவரைக் கூறுகிறது 'மாறனகப் பொருள்' .


3.iv.சான்றோர் செய்யுள்களில் 'விலை நலப் பெண்டிர்' , 'விலைக் கணிகை' , 'கொண்டி மகளிர்' என்னும் குறிப்புகள் பரத்தையர்க்கும் பொருட்குமுள்ள உறவைக் காட்டும்' என்று கூறும் அ. தட்சிணாமூர்த்தி , 'பரிபாடலில் இடம் பெறும் ஒரு குறிப்பைத்தவிரப் பரத்தையர்க்கும் தலைவனுக்குமிடையே பொருட் பரிமாற்றம் இருந்தமைக்குரிய சான்றில்லை ' என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார் ( சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள், பக். 94 & 110). 



4.காமக்கிழத்தி கூற்றைத் தலைவி கொண்டெடுத்து மொழிந்ததுபோல் தோன்றுமாறு இதன் பழைய கூற்று விளக்கக் குறிப்புக் காணப்படுகிறது. நச்சினார்க்கினியரின் கலித்தொகை உரை காமக்கிழத்தி கூற்று எனக் கொள்ள இடந்தந்தாலும் , அவர் காட்டும் தொல்காப்பிய நூற்பா ( பொருளதிகாரம் 241) உரையை நோக்கத்  தலைவி கூற்றெனவும் கொள்ள வைக்கிறது.

இளவழகனாரும் (உரைவிளக்கம் ,ப. ௫௩)  மர்ரே எஸ்.ராஜம் வெளியிட்ட பதிப்பின் ஆசிரியக்குழுவினரும் 'காமக்கிழத்தி கூற்று' என்றே குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இப்பாட்டின் உணர்வு காமக்கிழத்தி கூற்றாகக் கொள்ளவே இடந்தருகிறது.


5. " உள்ளுறை யுவமம் ஏனை யுவமமெனத்

       தள்ளா தாகும் திணையுணர் வகையே " (தொல்காப்பியம்,அகத்திணையியல், 49)

நச்சினார்க்கினியர் தமக்கேயுரிய பார்வையில், உள்ளுறையுவமமே ஏனை உவமம் எனக் கூறும்படி உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாய் நின்று , அகத்திணை உணர்தற்குக் கருவியாகிய உள்ளுறை உவமம் போல வரும் என்று பொருள் கூறுகிறார்.


6. துணிவிலள், நிறையிலள், தன்னிலள் என்று அவன் பரத்தையைச் சுட்டுவதாக இளவழகனார் கருதுகிறார். ஆனால் 'இவள்' என்னும் அண்மைச் சுட்டு காமக்கிழத்தியைக் குறித்தலே இயல்பு. 


7. நுண்பூண் ஆகம் வடுக்கொள முயங்கி

மாயப்பொய் பலகூட்டிக் கவவுக் கரந்து

சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த 

இளம் பல் செல்வர் வளம் தப வாங்கி 

நுண் தாது உண்டு வறும் பூ துறக்கும் 

மென் சிறை வண்டு இனம் மானப் 

புணர்ந்தோர் நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து

பழம் தேர் வாழ்க்கைப் பறவை போலக்

கொழும் குடி செல்வரும் பிறரும் மேஎய 

மணம் புணர்ந்து ஓங்கிய அணங்கு உடை நல் இல் 

ஆய் பொன் அவிர் தொடி பாசிழை மகளிர் (மதுரைக்காஞ்சி 569 - 579)


 " புறமண்டலத்தாரும் உள்ளூரிலுள்ளாருமாய்த் தம்முடைய வடிவழகை விரும்பிவந்த இளையராகிய பல செல்வத்தையுடையாரை,

பல வஞ்சனைகளையுடைய பொய்வார்த்தைகளாலே முதற்கூட்டிக்கொண்டு அவருடைய நுண்ணிய பூண்களையுடைய மார்பைத் தம்மார்பிலே வடுப்படும்படியாக முயங்கிப் பின்னர்,அன்புடையார்போலே முயங்கினமுயக்கத்தை அவர்பொருள் தருமளவும் மறைத்து அவருடைய செல்வமெல்லாம் கெடும்படியாக வாங்கிக்கொண்டு,

பூ அலருங்காலமறிந்து அதன் நுண்ணிய தாதையுண்டு தாதற்ற வறுவியபூவைப் பின்னர் நினையாமல் துறந்துபோம் மெல்லிய சிறகையுடைய வண்டின் திரளையொப்ப,

தம்மை நுகர்ந்தோருடைய நெஞ்சு கலக்கமுறும்படி அவரிடத்து இனிய கூட்டத்தை நேராகக் கைவிட்டு, பழுமரமுள்ள இடந்தேடிச் சென்று, அவற்றின் பழத்தையே ஆராய்ந்து வாங்கி நுகர்தலைத் தமக்குத் தொழிலாகவுடைய புள்ளினம்போல,

வளவிய குடியிற்பிறந்த செல்வரும் அவர்களாற்றோன்றிய பிறசெல்வரும் மேவப்பட்ட இல்லுறை தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களில் " - நச்சினார்க்கினியர்.



 ...                                ...                     ...               காம

மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை 

பெண்மைப் பொதுமைப் பிணையிலி ஐம் புலத்தைத்

துற்றுவ துற்றும் துணை இதழ் வாய்த் தொட்டி 

முற்றா நறுநறா மொய்புனல் அட்டிக் 

காரிகை நீர்ஏர்வயல் காமக்களி நாஞ்சில் 

மூரி தவிர முடுக்கு முது சாடி 

மடமதர் உண்கண் கயிறுஆக வைத்துத்

தட மென் தோள் தொட்டுத் தகைத்து மட விரலால் 

இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையைத்

தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி (பரிபாடல் 20: 48 - 58)


' [தலைவியிடமிருந்து காணாமற் போனதாகக் கருதப்பட்ட வளையையும் ஆரத்தையும் அணிந்திருந்த கணிகையைக் கண்ட  தோழியர் , தலைவிக்கு ஆதரவாகப் பரத்தையை ஏசுகின்றனர்] காமத்தைப் பொய்யொடு கலந்து விற்கும் கணிகையே! பொதுமகளே! காமுகப்பன்றிகள் நுகரும் தொட்டியே! வனப்பாகிய வயலிலே கள்ளாகிய

நீரைவிட்டுக் காமமாகிய கலப்பையாலே எம்முடைய எருது சோம்பிக்

கிடவாமல் உழுகின்ற பழைய சாலே! பொருள் வழங்குவோரைக்

கண்ணாகிய கயிற்றாலே தோளாகிய தறியில் கட்டி காமவின்பம்

மிகும் பொருட்டு இசையினையும், எம்பாற் களவுகொண்ட அணிகளை

அணிந்து கொண்ட அவ்வழகையும், ஊட்டாநின்ற பொதுமகளே! ' 

- பொ.வே. சோமசுந்தரனார் தரும் பொருட் சுருக்கம் .


மாலை அணிய விலை தந்தான் மாதர் நின் 

கால சிலம்பும் கழற்றுவான் சால (௸, 79 - 80 )


[அதுகேட்ட கணிகை] " இவ்வணிகளை எமக்கு

விலையாக அவன் தந்தான், இன்னும் நின் சிலம்புகளையும் கழற்றி

எனக்குத் தருவான் "[ என்றாள்]

- பொ.வே. சோமசுந்தரனார் தரும் பொருட் சுருக்கம் .


வள்ளுவர் இத்தகைய பொருட்பெண்டிர் தொடர்பைத்தான் கண்டிக்கிறார் என்று தோன்றுகிறது. அது தனி ஆய்வு .


8.கு.ப.ராஜகோபாலன் , தி.ஜானகிராமன் முதலியோர் புனைகதைகளுள் சிலவும் இவ்வகைப் பார்வைக்கு உகந்தவைதாம் என்றாலும் சிலம்பின் செல்வாக்கைக் காட்டுகிற ' ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ' வரலாற்றுப்போக்கின் இழையைக் கொண்டிருப்பதால் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.


9.தமிழ்ஒளியின் இப்படைப்புகள் சிலம்பு வழிப் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை. மாதவிபால் பரிவுடன் , பெரும்பாலும் சிலப்பதிகார மாதவியையே தலைவியாக்கிக் கருத்தும் உணர்ச்சியும் மேலோங்கிய சிறு காப்பியங்களாக்கினார் தமிழ் ஒளி. தமிழ்ஒளியின் இந்தப் பரிவையும் உணர்ச்சியையும்  ஜெயகாந்தன் உடனிருந்து உணர்ந்திருப்பார் என்றும் இந்த உணர்வும்  கல்யாணி உருவாக்கத்தில் சற்றே செயல்பட்டிருக்கலாம் என்றும் கருத இயலுமாயினும் , கல்யாணியிடம் மாதவி செல்வாக்கைக் காண முடியுமாயினும் , கல்யாணி தனித்தன்மை வாய்ந்த பாத்திரம்.

'கணிகை மாதவியும்  நடிகை கல்யாணியும்' என்னும் எனது கட்டுரை , ' ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ' புதினத்தில் சிலப்பதிகாரம் செலுத்தியுள்ள செல்வாக்குப் பற்றிய விரிவான தனிக் கட்டுரை.



10.நவீன இயற்பண்பிய , நடப்பியப் புனைகதைகளில் ஆடவர்தம்  மணப்புறம்பான   தொடர்புடைய பெண் பாத்திர உணர்வுகளும் பலப்பல. இவை தனி ஆய்வுக்குரியன.



- 31 அக்.2018 முகநூல் இடுகை (அன்று முதல் இன்று வரை அவலத் தலைவியர் ) விரிவுபடுத்தப்பட்டுள்ளது.





2 comments:

  1. அவலத்தலைவியர் என்ற சொல்லை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
    ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் திரைப்படம் நான் ரசித்த படங்களில் ஒன்று. நாயகன், நாயகி இருவரின் உள்ள வெளிப்பாடும் திரையில் சிறப்பாகக் காணப்படும்.
    மனைவி, பரத்தை, காமக்கிழத்தி ஆகியோரின் குணநலன்களைக் கூறியவிதம் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா! விரைவில் வெளிவரவுள்ள 'கணிகை மாதவியும் நடிகை கல்யாணியும்' என்னும் கட்டுரையையும் படித்துக் கருத்துச் சொல்ல வேண்டுகிறேன்.

      Delete

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...