Wednesday, November 11, 2020

தொல்காப்பிய மாணிக்கவுரையிற் காணும் சில நுட்பங்கள்

 தொல்காப்பிய மாணிக்கவுரையிற் காணும் சில நுட்பங்கள்


வ.சுப. மாணிக்கனார்(17.04.1917 - 25.04.1989) அரை நூற்றாண்டுக் காலம் தமிழில் ஊறித்திளைத்ததன் முதிர் வெளிப்பாடு தொல்காப்பிய மாணிக்கவுரை. இஃது எழுத்ததிகாரத்தின் நூன்மரபும் மொழிமரபுமாகிய மூதலீரியல்களுக்கு மட்டுமே எழுதப்பெற்றுள்ளது. மாணிக்கனார் தமது உரைக்கு மாணிக்கவுரை எனப் பெயரிட்டு 06.08.1986 அன்று உரைப்பாயிரம் எழுதியிருக்கிறார். ஆனால் அக்டோபர் 1989இல் - அவரது மறைவிற்குப் பின்னர்தான் - நூல் வெளிவந்துள்ளது*. இவ்வீரியல்களுக்கான உரையிலேயே அவர் தரும் புதுத்தெளிவுகளும் நுட்பங்களும் அவரது தொல்காப்பியத் திளைப்பையும், நுட்பத்தையும் காட்டுகின்றனவெனில் முழுதும் கிடைத்திருந்தால் எத்துணைச் சிறப்புடையதாயிருக்குமென்று ஏங்கச் செய்கின்றன.



பனம்பாரானாரின் சிறப்புப் பாயிரவுரை, பாயிரச்சிறப்பு, பாயிரக் கருத்து, பாயிரம், அகலவுரை, திறனுரை, பாயிரமுடிவுரை எனும் பகுதிகளைக் கொண்டுள்ளது.

நூன்மரபு, மொழிமரபுகளுக்குத் தனித்தனியே இயல் முன்னுரை, இயற்கருத்து ஆகியன தந்து ஒவ்வொரு நூற்பாவிற்கும் அந்நூற்பா நுதலியது கூறி அகலவுரை, திறனுரை ஆகியவற்றை வ.சுப.மா.  தந்துள்ளார்.

இயல்தோறும் முடிவுரையும் இடம்பெற்றுள்ளது.

பின்னிணைப்பாகத் ‘தமிழில் மொழிமுதலெழுத்துக்களின் வரம்பு’ என்னும் கட்டுரை இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரை மொழிமுதலெழுத்துமரபு, மாற்றம், வரம்பு ஆகியவற்றை விவரித்துப் புதிய வரவுகளை மரபு குன்றாமல் அமைக்கும் நெறிகளை உணர்த்துகிறது.

இவ்வுரை முழுவதுமே பற்பல புதிய தெளிவுகளும் நுட்பங்களும் ஆய்வைத் தூண்டும் ஊகங்களும், மாணிக்கனார்க்கேயுரிய தனித்த நடை நயத்தோடு, விரவிக் கிடக்கின்றன. எனக்கு எட்டிய சிலவற்றை இக்கட்டுரையில் தொகுத்துத் தந்திருக்கிறேன்.

பாயிர நுட்பம்

பாயிர உரையிலேயே நுட்பம் வாய்ந்த தெளிவுறுத்தலைத் தொடங்கி விடுகிறார். மாணிக்கனார்.

தமிழ் பேசப்படும் வழக்கு மொழியாதலின் ‘தமிழ் கூறு’ என்ற வினைச் சொல் பெய்தார். முக்காலத்தும் நிகழ் மொழியாதலின், ‘கூறு’ என வினைத்தொகை செய்தார், ‘என்றுமுள தென்றமிழ்’ என்பது கம்பர் கவிமொழி. ‘சீரிளமைத் திறம்’ என்பது சுந்தரனார் தரவு மொழி (ப.5)


பாயிரத்தில் அவர்காட்டும் பிறிதொரு நுட்பமும் ஊகமும் அவர்தம் நுண்புலமைக்குச் சான்றுகள்.

ஒன்று தமிழ்கூறு நல்லுலகம்; இரண்டு வழக்கும் செய்யுளும்; மூன்று எழுத்தும் சொல்லும் பொருளும்; நான்கு நான்மறை; ஐந்து ஐந்திரம்; பன்மை பல்புகழ் நிறுத்த. இவ்வோட்டத்தைக் காணுங்கால், நான்மறைக்குப் பின்வரும் ஐந்திரம் என்பது எவ்வாறேனும் ஐந்து என்னும் எண் குறிப்பினதாக இருத்தல் வேண்டும்(ப.13)என்கிறார் மாணிக்கனார்.


இலக்கணக் கொள்கை

மாணிக்கனாரின் இலக்கணக் கொள்கையை முன்வைத்துத் தொடங்குவது பொருந்தும்.

பேசக் கற்றுக் கொடுப்பது இலக்கணமன்று; காக்க ஆக்க வளர்க்க வழிவழி விளங்கத் தடங் காட்டுவதே இலக்கணம் என்று தெளிக. இலக்கணம் புறமிருந்து திணிக்கப்படும் செயற்கையன்று. மக்களின் வாய்மொழிக் கூறுகளைக் கண்டு கரையுடையாது கட்டி உயர்த்தி வளர்ப்பதே இலக்கண நோக்கம் (ப.59)

முதல் நூற்பாவுரையிலேயே மாணிக்கனார், “தமிழ் மொழிக்கு எழுத்து முப்பது என்ற செய்தியைத் தருவது தொல்காப்பியத்தின் நோக்கமன்று. இவ்வரம்பைக் கடைப்பிடித்து ஒழுகுக என்பது நூற்பாவின் பயன்”(ப.23) என்பர். இஃது அவரது கொள்கைசார் தெளிவு.


அளபும் அளவும்

அளபு - மாத்திரை, ஒலியின் காலக்கணக்கு. அளவு -தரம், கூறு. இது எண்ணளவு, நிறையளவு என வரும்(ப.26). என வேறுபாடு காட்டும் மாணிக்கனார்,

" அளபு, மாத்திரை என்ற கிளவிகள் ஒரு பொருளனவாயினும் தொடராட்சியில் வேறுபாடு உண்டு.  அளபெடை என்போம், மாத்திரையெடை என்னோம் ;  மாத்திரையளவு என்போம், அளபளவு என்னோம்.   அளபிறந்து உயிர்த்தல் என்போம், மாத்திரையிறந்து உயிர்த்தல் எண்ணோம்.  இவ்வேற்றுமைக்குக் காரணம் அளபு என்பது மாத்திரையிலும் விரிந்த தன்மையுடையது " (ப.32) என்பார்.

 ‘குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின்…’(நூ.46) என்னும் தொடர் மொழி பற்றிய நூற்பாவின் திறனுரையிலும், ‘ஈண்டு அளவு என்பது எழுத்தெண்ணிக்கையைக் குறிக்கும்’(ப.121) எனத் தெளிவு கடைப்பிடிப்பார்.


ஒற்றும்புள்ளியும் / மெய்யும் புள்ளியும்

ஒற்று என்பது மெய்ப்புள்ளி. புள்ளி என்பது மெய்ப்புள்ளி, சார்புப்புள்ளி, எகரஒகரப்புள்ளி, மகரக்குறுக்கப்புள்ளி எனப் பலவற்றையும் குறிக்கும். ஒற்று என்பது மெய்ப்புள்ளி ஒன்றனையே சுட்டும்(ப.117) என ஈரொற்றுடனிலை(நூ44) கூறும் நூற்பாவின் அகலவுரையில் தெளிவுபடுத்துகிறார்.

‘உயிர்மெய் யல்லன மொழி முதலாகா’ என்றபடி சொல்லுக்கு முதலில் புள்ளியுடைய மெய் வருவதில்லை; ஆனால் இறுதிக்கண் புள்ளியொடு பதினொரு மெய்கள் வரும். இதனைத் தெளிவிக்கவே மெய்யிறுதி என்னாமல் ‘புள்ளி யிறுதி’ என்று வடிவொடு கூறினார்   என்பார் ( நூ. 73 உரை ,ப.161) 


இடையெழுத்து - விளக்கம்

வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே

மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே

இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே

என்ற வண்ண நூற்பாக்கள் கொண்டு ‘வல்லொலிப் பிறப்புக் கூறும் மெல்லொலிப் பிறப்புக் கூறும் இயைந்த நிலை இடையெழுத்தாம்’ என்பார் மாணிக்கனார்(நூ.17-19 , ப. 47).


‘பன்னீருயிரும்’ - சிறப்பும்மை

‘பன்னீருயிரும் மொழிமுத லாகும்’ (நூ.54) என்பதன் உரையில் முதற்கண் உம்மையை முற்றும்மையாக்கிப் பொருள் கூறித் திறனுரையில் “சிறப்பும்மையாகக் கொண்டால் இவ்வாறு பதினெட்டு மெய்யும் மொழி முதலாகா என்ற குறிப்புப் பெறப்படும்” (ப.134) என்பர்.


போன்ம் - முற்றும் எச்சமும்

செய்யுளிறுதிப் ‘போன்ம்’ என்பதன் மகரம் குறுகுதல் பற்றிய நூற்பா (47)வுரையில், “செய்யுளிறுதி என இடங்கூறுவதால் போலும் என்பது செய்யும் என்ற முற்றாகும்; பெயரெச்சம் இறுதியில் நில்லாதன்றே” (ப.122) என விளக்கி, ‘பெருங்கல் லடாரும் போன்மென விரும்பி’ (புறம்.19) ‘மழையுண் மாமதி போன்மெனத் தோன்றுமே’ (சீவக.127) என்பன காட்டி இவை ஈரொற்றுமாகா; குறுகா என்பர். இது மேலாய்வைத் தூண்டும் தெளிவு.


‘அகர இகரம் ஐகார மாகும்’ (நூ.49)

‘அகர உகரம் ஔகார மாகும்’ (நூ.50)

எனும் நூற்பாக்களுக்கான திறனுரையில்,

‘செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்’ என்ற கிளவியாக்கவியலின் படி ஐகாரம் ஆகும் ஒளகாரம் ஆகும் என வினைப் படுத்தியமையால் இவை இயற்கையில எனவும், ஐகார ஒளகார ஒலியன்கட்கு இயற்கையான தனிவடிவு உண்டு எனவும் கொள்க  என்பர் மாணிக்கனார்.  (ப.129)  இதுவும் ஆய்வைத் தூண்டும் தெளிவு.


மொழிமுதற் குற்றுகரம்

முறைப்பெயர் மருங்கின் நகரமொடு முதலும் என்கிற மொழிமுதற் குற்றுகர நூற்பா(62) விளக்கத்தில் ‘உ, ஊ, ஒ, ஓ வென்னும் நான்குயிர், வவென் எழுத்தொடு வருதலில்லை’ எனும் நூற்பாவைக் காட்டி ‘வகர மெய் நான்கு உயிரொடு வாரா என்பதுவே நடையின் பொருள்’ எனத் தெளிவித்து, ‘குற்றியலுகரம் நகரமொடு முதலாகும் என்பதற்கு நகரமெய் மேல் குற்றியலுகரம் ஊர்ந்து வரும் எனவும் நகரமெய்யே மொழி முதல் எனவும் கொள்க’(ப.147) என்பார். அஃதாவது ஈண்டுக்குற்றியலுகரம் மொழி முதலன்று; நகரமே முதல். குற்றியலுகரம் நகரத்தின் மேல் ஏறி நிற்கும் என்பது கருத்து. இதனை நூற்பா நடையமைதி கொண்டு நிறுவுகிறார்.


‘இருவயின் நிலையும்’

உப்பகாரம் இருவயின் நிலையும் பொருட்டாகும்(நூ.71) என்னும் நூற்பாத் திறனுரையில் ‘இதுசெயல் வேண்டும் என்னும் கிளவி / இருவயின் நிலையும் பொருட்டாகும்மே / தன்பாலானும் பிறன்பா லானும்’ என்னும் நூற்பாவைக் காட்டி, ‘தபு என்ற சொல் தானழித்தலையோ பிறிதழிதலையோ ஒருங்கே குறிக்கும்’ என்பார் (பக்.157-58)தன்வினை, பிறவினை என்னும் இலக்கண நோக்கில் ‘தபு’ சுட்டப்படவில்லை; “தற்புகழ்ச்சி, தற்கொலை, தற்பெருமை, தற்குறி என்றாற்போல் வருவது தன்பால் எனவும் அயலாக வருவது பிறன்பால் எனவும் படும். பிறன் என்பது ஈண்டு ஒருபாற் கிளவி ஏனைப் பாலையும் இனமாகக் குறிக்கும் எனக்கொள்க” (ப.158) என்பார்.

இதனை அவர் தரும் 'வெளு' என்னும் தற்கால எடுத்துக்காட்டால் நன்கு உணரலாம்.

[ வெளுத்தான் - அவன் நிறத்தில் வெளுத்தான் (தன்பால்), துணியை வெளுத்தான் (பிறிதின்பால்)]


‘நெடிற்றொடர்’க் குற்றுகரம் என்னாமை

ஒரு மொழி, தொடர்மொழி குறித்த நூற்பாவின்(நூ.41) திறனுரையில், குற்றியலுகரப் புணரியல் நூற்பாவாகிய, ‘ஈரெழுத் தொருமொழி உயிர்த்தொடர், இடைத்தொடர்…’ என்பதைக் காட்டி, நெடிற்றொடர்க் குற்றியலுகரம் என்னாமையை விளக்குகிறார். ‘நெட்டெழுத்திம்பர் என்று குறிப்பிடுவாரேயன்றித் தொடர் என மறந்தும் கூறியதில்லை’ என்பார்(ப.111). இது தொல்காப்பிய இலக்கணக்குறித் தெளிவு. தொல்காப்பிய நெறிப்படி ஈரெழுத்தொரு மொழியேயன்றி, ஈரெழுத்துத் தொடர் மொழி இல்லை.

உயிர்மெய்

‘உயிர்மெய் - உயிரொடு கூடிய மெய், தயிர்வடை என்பது போல, வேற்றுமைத் தொகை நிலை’(ப.45) என்று சுட்டிப் பின்னரும் ‘உயிர்மெய் என்பது மூன்றாம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்க தொகையாம்… உயிரும்மெய்யும் என்ற உம்மைத் தொகையோ உயிரும் மெய்யும் கூடிய ஓரெழுத்து என்ற அன்மொழித் தொகையோ அன்று” (பக்.135-136) என்பார். தொடர்ந்தும் “உயிர்மெய் என்பதற்கு உயிரொடு கூடியமெய் என மேலே பொருளுரைக்கப்பட்டது. ‘எல்லா வுயிரொடும்’ என்ற நடை அதன் விளக்கமாகும்’(ப.138) எனத் தொல்காப்பிய நடையமைதி கொண்டு நிறுவுவார்.


இசையும் நரம்பும்

‘இசையொடு சிவணிய / நரம்பின் மறைய’ (30) என்னும் நூற்பாவின் திறனுரையில் ‘நரம்பின் மறை என்பதே இசையைக் குறிக்கக் போதுமாயிருக்க, ‘இசையொடு சிவணிய’ என்றதன் கருத்து யாது? ஈண்டு இசை என்பது மிடற்றிசை என்னும் வாய்ப்பாட்டினைக் குறிக்கும். இவ்வாயிசைக்குத் தானே எழுத்தடிப்படையுண்டு, அளவு கடந்து ஒலித்தலும் மெய்யோசை நீளலும் உண்டு’(ப.66) என்பர் மாணிக்கனார். கருவி வழி இசைக்கு எழுத்தொலி இல்லையாதலின் மாணிக்கனார் விளக்கம் பொருத்தமானதாகிறது. 


விதி விலக்காக ஒரு விதி

அவற்றுள் / ரகார ழகாரம் குற்றொற் றாகா (நூ.45) என்பதன் திறனுரையில் ‘இதுகாறும் இன்ன மெய்க்குப்பின் இன்ன மெய் வரும் என்று மெய்ம்மயக்கம் கூறிவந்த ஆசிரியர் இன்னவுயிருக்குப்பின் இன்ன மெய் வாரா என இந்நூற்பாவில் உயிரொடு மெய்ம்மங்காமை கூறும் ஒரு மொழியமைப்பைக் கற்கின்றோம்’(ப.119) என்று தெளிவுறுத்தி, ‘அர், ஆர் ப என வரூஉ மூன்றும்’, ‘இர்,ஈர், மின் என வரூஉ மூன்றும் என்பவற்றுள் அர், இர், வந்துள. ஆனால் இவை சொல்லமைப்பில் சொற்கிடையே வரும் உறுப்புக்கள். தெளிவிற்காகத் தனித்துக் காட்டப்பட்டன”(ப.119) எனத் தெளிவிக்க வந்தவற்றைத் தெளிவிக்கின்றார் மாணிக்கனார். அவர் தொல்காப்பியத்தை அணுஅணுவாய்ப் பயின்று திளைத்துள்ள பாங்கையும் இவற்றால் உணரலாம். 

மொழி முதல் மெய்களின் இறங்குவரிசை.

இலக்கணத்தில் வைப்புமுறைக்கு இடமுண்டு என்பதைப் பண்டைய உரையாசிரியன் மாரும் கூறுவர். மாணிக்கனார் பண்டையோர் கூறாத சிலவற்றையும் தெளிவு படுத்துவார்.

எல்லா உயிரொடும் செல்லும் மெய்களைக் கூறித் தொடர்ந்து, ‘ஒன்பது, எட்டு, மூன்று என்ற இறங்குவரிசையில் மெய்கள் கூறிவந்த நன்மரபுடைய தொல்காப்பியர் யகரமெய் ஓருயிரொடு மட்டும் கூடி வரும் என்று இறுதியாக இந்நூற்பாவிற் (ஆவோ டல்லது யகரம் முதலாது - 60) கூறுவர்’ என்பார்(ப.143)

நூன்மரபில் சுட்டும் வினாவும்

“நூலுக்கு மரபாக வழங்கிய குறியீடுகளைக் கூறுவது நூன்மரபாகும்”(ப.17) என இயல் முன்னுரையைத் தொடங்கும் மாணிக்கனார், “ஒலி, எண்ணிக்கை வகை, அளபு, வடிவு, மயக்கம் என்ற எழுத்தின் அறுகூறுகள் நூன்மரபில் மொழியப்பட்டன. மேலும் இந்நூன்மரபு தனியெழுத்துக்குத் தனித்தநிலையில் அதன் தன்மைகளை நுவலும்”(ப.19) என்கிறார்.

மாறாக, இவ்வியலுள் சுட்டு, வினா எழுத்துக்கள் பொருளடிப்படையில் இடம்பெற்றுள்ளன(நூ.28&29).

சுட்டுப் பொருளும்  வினாப் பொருளும் தரும் இவை நூன் மரபில் இடம்பெறலாமா? என்பது வினா. நூன்மரபு முப்பத்துமூன்று எழுத்துள் வருவனவற்றிற்கு ஓரினம் நோக்கிக் குறியீடுகள் கூறும் இயலாதலால், சுட்டும் வினாவும் இவ்வியலிற் சேர்க்கப்பட்டன. இவை சுட்டுக் குறிப்பும் வினாக் குறிப்பும் உடையவாதலின் மொழியாந்தன்மையில் ஐயமில்லை எனினும் ஈண்டு நோக்கம் குறியீடே. அதனாற்றான் சுட்டு எனவும் வினா எனவும் குறியீடுகளையே பயனிலையாக அமைத்தார் ஆசிரியர்(ப.62)

எனத்தாமே தடை எழுப்பி விடையளித்துள்ளார் மாணிக்கனார்.


சுட்டு, வினா - வேறுபடு பொருண்மை

ஆ ஏ ஓஅம் மூன்றும் வினா (29)

என்னும் நூற்பாவின் அகலவுரை நிறைவில், “முச்சுட்டில் இடவேற்றுமை யிருப்பதுபோல இம்மூன்று வினாவிலும் சில வேறுபடு பொருண்மை தொல்காப்பியர் காலத்து இருந்திருத்தல் வேண்டும்”(ப.62) என்கிறார் மாணிக்கனார். இஃது ஆய்வுக்குரிய ஊகம்.

உயிர்மெய்க்கண்ணும் மெய்க்கு மாத்திரை

“மெய்க்கு மாத்திரையுண்டென வெளிப்படையாக நூற்பித்திருக்கும் தொல்காப்பியம் உயிர்மெய்யாகுங்கால் மெய்க்கு மாத்திரையிழப்புச் சுட்டக் காணோமே.”(ப.76) என்று ‘நூன்மரபு - இயல் முடிவுரை’யில் கூறும் மாணிக்கனார், “உயிர்மெய்க் கண்ணும் மாத்திரை மெய்க்குக் கொள்ளலாம் என்பது என் கருத்து” என்று கூறும் அதேவேளையில் “என்கருத்து மேலும் சிந்தனைக் குரியது” (ப.77) என்றும் கூறிவிடுகிறார்.

வாய்ப்பும் மறுப்பும்

‘அகரத் திம்பர் யகரப் புள்ளி’(நூ.51) என்னும் நூற்பாவை யடுத்தது,

ஓரள பாகும் இடனுமா ருண்டே

தேருங் காலை மொழிவயி னான(நூ.52)

என்பது. “ஓரளபாகும் இடனாவது மேலை நூற்பாவில் கூறிய அகரத்திற்கும் பின்னே யகரப் புள்ளி வரும் நிலை”(ப.131) என விளக்கும் மாணிக்கனார் “தேருங்கால் + ஐ + மொழிவயின் என்று பிரித்து இந்நூற்பா ஐகாரம் பற்றியது என்று கூறலாம். இப்பிரிவு சிறப்பில்லை. அதிகாரத்தாற் பெறலாமாதலின் வேண்டியது மில்லை”(ப.131) என வாய்ப்பொன்றைத் தாமே சுட்டி மறுத்துரைக்கின்றார்.

இஃது ஓர் அறிமுகமே. 

கருத்து வேறுபாட்டுக்குரிய இடங்கள் இல்லாமலில்லை எனினும் தொட்ட இடமெல்லாம் நுட்பங்கள் தட்டுப்படும் உரை மாணிக்கவுரை என்பதில் ஐயமில்லை.

________________________


*மாணிக்கம், வ.சுப. (உரையாசிரியர்), தொல்காப்பிய எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1989.

- சாகித்திய அகாதெமி கருத்தரங்கில் பேசியது;  21.08.2017 அன்று கட்டுரையாக எழுதப்பட்டது;இப்போது மேலும்சற்றுச் செம்மை செய்யப்பட்டது.



Tuesday, November 10, 2020

பேராசிரியர் பார்வையில் 'இலக்கியம்' - திருக்குறளுக்கோர்* திறவுகோல்

 பேராசிரியர் பார்வையில் 'இலக்கியம்'

- திருக்குறளுக்கோர்* திறவுகோல்




பேராசிரியர் உரை தொல்காப்பியப் பொருளதிகாரப் பின்னான்கியல் தவிரப் பிறவற்றுக்குக்  கிடைக்காதது பேரிழப்பே. நல்லவேளை நச்சர் உரை  அதனை ஈடுசெய்கிறது என ஒருவாறு மகிழலாம்.

கிடைத்திருக்கும் நான்கியல் உரையிலேயே சான்றோர் செய்யுட்கள்பால் அவர் கொண்ட மதிப்பும் அவற்றில் கொண்டுள்ள ஆழ்ந்தகன்ற புலமையும் புலனாகின்றன.

இவையெல்லாம் தெரிந்தவைதாம்.

அவர் தம்  இலக்கிய உணர்திறனையும்  புலப்படுத்தாமலிருப்பாரா? முனைப்பான ஓரிடம்:

" பொருள்கருவி  காலம்  வினையிடனோ டைந்தும்

இருள்தீர  எண்ணிச்  செயல் ( குறள் . 675)  - என்பது இலக்கணம் கூறியதாகலின் பனுவலோடென்றான்.

மலர்காணின் மையாத்தி  நெஞ்சே இவள்கண்

பலர்காணும்  பூவொக்கு மென்று ( குறள். 1112) - என இது இலக்கியமாகலான் தாய பனுவல் எனப்பட்டது."¹

'நெஞ்சே! எந்த மலரைக் கண்டாலும்  பலரும் காணும் அப்பூக்களை ஒக்கும்

இவள் கண் என்று மயங்குகின்றாயே!' - என்று செறிவாகப் பொருள் காணலாம்.

அவளைக் காண ஏங்கிய காலத்தில் , நெஞ்சம் எந்தப் பூவைக் கண்டாலும் அவள் கண் இப்பூ ஒக்கும் எனக் கருதியது. அவள் கண்கள் அவனுக்கு மட்டுமே புலனாகும் தனியழகுடைய மலர்கள் அல்லவா? அவளை நேரிற் கண்டபோது , " நெஞ்சே மயங்கி விட்டாயே ! " என்று இடித்துரைக்கிறான். உரையாசிரியர்கள் வெவ்வேறுபட்ட பொருளும் நயமும் கண்டுள்ளார்கள். இலக்கியமாயிற்றே!

பொருள் கருவி காலம் என எண்ணி வினைசெயல் வகை இன்னதென வரையறுப்பது இலக்கணம்.

ஆனால், 'மலர்காணின் மையாத்தி' என்னும் காதலன் காதலியின் ' நலம் புனைந்துரை'க்கும் குறள் எதனையும் இன்னதென வரையறுக்க வில்லை. காதலுணர்வைக் காட்டுகிறது.இது இலக்கியம்.

இவ்வுரைப்பகுதி அவரது இலக்கிய உணர்திறனைப் புலப்படுத்துகிறது. நச்சினார்க்கினியரும் இந்த எடுத்துக்காட்டுகளையே தந்து பேராசிரியர் பார்வையை வழிமொழிகிறார்.

குறளில் இலக்கியமும் உண்டு; இலக்கியம் அல்லாதனவும் உண்டு என்பது அவர்கள் பார்வை. 

-------------------------

1 "வனப்பியல்  தானே வகுக்குங் காலைச்

சின்மென் மொழியால்  தாய பனுவ லோ(டு)

அம்மை  தானே அடிநிமிர்(பு) இன்றே"

(தொல். செய். 313)என்னும் நூற்பாவிற்கான உரைவிளக்கத்தில்தான் மேற்குறித்தவை வருகின்றன.

இந்நூற்பாவின் முதலடி இளம்பூரணர் கொண்ட பாடத்தில் இல்லை. இரண்டாமடி இறுசீர்களில் 'சீர்புனைந்து  யாப்பின்' என்பன பூரணர் பாடம்.

அறம் பொருளின்பம் மூன்றற்கும் இலக்கணம் கூறுதலும் வேறிடையிடை அவையன்றியும் தாய்ச் (தாவிச்) செல்வதும் எனப் பொருள் காண்கிறார் பேராசிரியர்(இதில் சொல், தொடர்க்குழப்பங்கள் உள).

பேராசிரியர் உரையில்  எடுத்துக்காட்டுகளை அடுத்து முறையே " இலக்கணங் கூறியதாகலின் பனுவல் ...." , " இலக்கியமாகலான் தாய பனுவல் ..." என்றுள்ளன.

நச்சர் உரையில் , " இலக்கணங் கூறலின் பனுவலின்...", இலக்கியமாதலில் தாய என்றார்." என்றுள்ளன.

இலக்கணப் பனுவல் = இலக்கணம் கூறும் பனுவல்

தாய பனுவல் = இலக்கணம் கூறாமல் / இலக்கணத்தினின்றும் தாய(இடையிட்ட) பனுவல் எனக் கொள்ளலாம்.

நச்சர் பனுவல் என்பதையே இங்கு இலக்கணம் என்று கொண்டுள்ளாரோ?

( * ஒரு திறவுகோல்தானே சரி ?)

- 25 அக்டோபர்,2020 இடுகை

Monday, November 9, 2020

- சின் - மின் - தும்

 - சின்  - மின் - தும்





மதுரையில் உறையும் தலைவியர் தத்தம் தலைவர்க்குத் தூதாக விடுத்த வண்டுகளின் ரீங்காரம் அவர்தம் காதலைத் தலைவர்க்குப் புலப்படுத்தின. 


தலைவர்கள் தலைவியரை நோக்கி வந்தனர். 


அவருள் ஒருவனது பரத்தையொழுக்கத்தை அறிந்த தலைவி , ' உன் உடம்பில் அயல் மகளிர் மணம் வீசுகிறது. உன் பொய்ச் சூள் (பொய்ச் சத்தியம்)தவிர்க ' என்கிறாள்.


தலைவன் பொய்ச் சூள் இல்லை எனமறுக்கிறான். 


தோழியும் தலைவிக்கு ஆதரவாகக் குறுக்கிடுகிறாள். 


வாக்குவாதம் தொடர்கிறது. ' தெய்வத்தின் பேரால்  பொய்ச்சூள் உரைக்காதே தெய்வம் வருத்தும் ' என்கிறாள் தோழி. 

' என் ஆணை பொய்யில்லை. என்றாலும் இவள் (தலைவி) சுமத்திய குற்றத்தால் என் சூள் பொய்யென்று கருதித் தெய்வம் என்னை வருத்தக்கூடும் ' என்கிறான். 


இந்த இடத்தில் ,


'அவ்வாறு வருத்து முன் நீ அவ்விறைவன் திருவடியை நெருங்கி வேண்டி அவன் சினத்தை ஆறுதல்படுத்துவாயாக' என்று தோழியிடம் வேண்டுகிறான்.


' நீங்கள் சென்று நான் கூறியவற்றை எல்லாரும் உணரும்படி கூறுங்கள் " என்று தன் ஏவலர்களை நோக்கி ஆணையிடுகிறான்.


' யாவரும் முருகப்பெருமான் திருவடிகளைத் தொழுவதற்கிடமான குளிர்ந்த திருப்பரங்குன்றத்திற்குச் சென்று ,  மலர் தூவுவோம் ; படையல்களைச் செய்வோம் ; தாளத்துடன் இசைப்பாட்டைப் பாடித் துதிப்போம் ; தடாரிப்பறை முழக்கம் எழுப்புவோம் ' எனத் தன்னையும் உட்படுத்தித் தோழி ஏவலர் அனைவரிடமும் கூறுகிறான்.

( பரிமேலழகர் உரையைப் பின்பற்றி இயன்றவரை தற்காலத் தமிழில் தந்திருக்கிறேன்)



தலைவன், தலைவி , தோழி ஆகியோர் உரையாடல் வெளிப்படையாக நிகழ்கிறது.


ஆனால் தோழியிடம் வேண்டுதல், ஏவலர்க்கு ஆணையிடல், நாம் வழிபடுவோம் என 

யார்யாரை   நோக்கிக் கூறினான் என்கிற விவரம் பாட்டில் இல்லை.


பிறகு , பரிமேலழகர் எப்படி அப்படி உரை காண்கிறார் ?


பாட்டைப் பார்த்துவிடுவோம் :( பாட்டிலுள்ள வரிசை மாறாமல், அடிகளைச் சற்றே நெகிழ்த்து , பொருளுக்காகத் தொடர்களைப் பிரித்துக் காட்டியுள்ளேன்)


" சுடும் இறை (1)

 ஆற்றிசின் அடி சேர்ந்து (2)

 சாற்றுமின் மிக (3)

 ஏற்றுதும் மலர், ஊட்டுதும் அவி , தோற்றுதும் பாணி ,      எழுதுங் கிணை (5)

 

முருகன் தாள் தொழும் தண்பரங்குன்று (4) "   [ பரிபாடல் 8 : 79 - 82]



இந்த அடிகளுக்கு அவர் பொருள் தந்து¹ பிறகு இலக்கணக் குறிப்புத் தருகிறார். நாம் முதலில்  குறிப்பைப் பார்ப்போம் , "   'ஆற்றிசின்' என்றது , தோழியை நோக்கி ;         'சாற்றுமின்' என்றது , தன் ஏவலிளையரை நோக்கி. உளப்பாடுகள் [ '-தும்'கள் ] அவளையும் அவரையும் நோக்கி. " என்கிறார்.


' - சின் ' 

 'ஆற்றி' என்பதன் இறுதியில் உள்ள '- இ' முன்னிலை விகுதி;   '- சின்' முன்னிலை அசை ( தொல்.சொல். இடை. 26 " மியாஇக ... " ). -சின் அசை பெற்ற இடங்கள் முன்னிலை ஒருமை ஏவலாகவே ஆட்சி பெற்றுள்ளன என்கிறார் மோ. இசரயேல்²


'- மின்'  

என்பது முன்னிலைப் பன்மை கூறுவது (தொல்.சொல். வினை. 25 " இர்ஈர்... " )


' - தும் ' 

என்பது தன்மைப் பன்மை கூறுவது (௸. 5 " அவைதாம் அம்ஆம் எம்ஏம்... ")

இது முன்னிலையாரையும் படர்க்கையாரையும் ஒருங்கு உளப்படுத்தற்கும் தனித்தனி உளப்படுத்தற்கும் உரியது என்பர்.


இந்த - சின், மின் , தும் என்னும் இடைச்சொற்களைக் கொண்டு ஒரு காட்சியைக் கண்முன் நிறுத்துகிறார் பரிமேலழகர்


இப்பாட்டை இயற்றிய நல்லந்துவனார்க்கும் இதுவே கருத்தாக இருக்கலாம். இல்லை யெனில் இத்தொடர்கள் பாலறி கிளவி மயங்கி வழுப்பட நேரிடும். 


நல்லந்துவனார் எண்ணிச் செய்திருந்தாலும் பரிமேலழகர் எடுத்துச் சுட்டாவிடில் என்போன்றோர் இந் நாடகக்காட்சி நயம் கண்டிருக்க இயலாது.



ஆசிரியப் பாக்களால்  இயன்ற குறுந்தொகை , நற்றிணை , அகநானூறு, ஐங்குறுநூறு  ஆகிய எட்டுத்தொகை அகநூல்கள் யாவும் உலகியற் சாயல் கொண்ட , ஆனால் குறிக்கோள் நிலையிலான , இலக்கண நெறியின்பாற்பட்ட  செய்யுள்களைக் கொண்டவை; முற்றிலும் புலனெறி வழக்கின; மிகப்பெரும்பாலும் ஒருவர் கூற்றாயமைவன.


மாறாகக் கலித்தொகையும்  பரிபாடலும் உலகியற்சார்பு மிகுந்த நாடகப்பாங்கிலான பாடல்கள் விரவிய தொகுப்புகளாகும். 


கூற்று மாற்றமு மிடையிடை மிடைந்தும்

போக்கின் றாக லுறழ்கலிக் கியல்பே (செய்யுளியல் 156)


என்னும்  நூற்பாவுரையில் , " நாடகச் செய்யுட்போல வேறுவேறு துணிபொருள வாகியும் பல தொடர்ந்தமையின்..." என உறழ்கலியின் நாடக இயல்பைச் சுட்டுவார் பேராசிரியர்.  இங்கு நாடகம் எனப்படுவது கூற்றும் மாற்றமுமாகிய உரையாடற் பாங்கைக் குறிப்பது வெளிப்படை.


பரிபாடலும் கலித்தொகை போன்றது; உரையாடல் இடை மிடைந்தது ; நாடகச் செய்யுட்கு வாய்ப்பானது.


ஆனால்,  உரையாடல் அல்லாத நாடகக் காட்சியொன்று காணப்படுவதை இலக்கணத்தால் இனங்கண்டு காட்டியிருப்பது  பரிமேலழக நுட்பம்.


-----------------


1. பரிமேலழகர் தரும் பொருள்:


(1)[ என்னை ]* இறை [ துயர் மிகுமாறு ] சுடும்

(2)[ நீ சென்று ]அவன் அடியைச் சேர்ந்து ஆற்றுவாயாக

(3)[ இவ்வுரையை ] எல்லார்க்கும் அறிவிம்மின்


(4)முருகன் தாளை [ யாவரும் ]தொழும் பரங்குன்றத்தின்கண்[சென்று]


(5)மலரை ஏற்றுதும் ; அவியை ஊட்டுதும் ; பாணித் தாளத்தையுடைய பாட்டைத் தோற்றுவிப்பேம்; கிணை ஒலியை எழுவிப்பேம்


*[  ] பகர அடைப்பினுள் உள்ளவையும் பரிமேலழகர் எழுதியவைதாம். 

2. ஆ.சிவலிங்கனார் (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் -   சொல்லதிகாரம்  (உரை வளம்) இடையியல் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1986,ப.121.




Friday, November 6, 2020

'விரவும் பொருளும் விரவும்' - ஒரு திறவுகோல்

 'விரவும் பொருளும் விரவும்' - ஒரு திறவுகோல்


தொல்காப்பிய அகத்திணை இயலின் ,

மரபு நிலை திரியா மாட்சிய ஆகி

விரவும் பொருளும் விரவும் என்ப (48)

என்னும் நூற்பாவிற்கு இதுவரை கூறப்பட்டுள்ள உரைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதன்  மூலம் , அது  வேறு சில நூற்பாக்களுக்குப் பொருள் காணும் திறவுகோலாகவும் பயன்படும் என்று கருதுகிறேன்.

இயன்றவரை பல்வேறு உரைக் கருத்துகளைச் செறிவாகத் தொகுத்துக் கொண்டு வேறுபாடு மாறுபாடுகளின் ஊடாக முடிபை எட்டும் வகையிலான இக்கட்டுரை ஓர் உரைத்தொகுப்புப்போல் அமைவதைத் தவிர்க்க இயலவில்லை.

===========================================

இதற்கு முந்தைய ஏறத்தாழ இருபது நூற்பாக்கள் பாலைத்திணை பற்றியவை. அவற்றின் தொடர்ச்சியாகக் கொண்டு இதனையும் பாலைக்குரிய மரபுணர்த்தும் நூற்பா என்பார்  இளம்பூரணர்.

"பாலைக்கு ஓதிய பாசறைப் புலம்பற் கண்ணும் தேர்ப்பாகற்குக் கூறுதற்கண்ணும் முதற்பொருளும் கருப்பொருளும் விரவுதலாம் . இந்நிகரன பிறவும் கொள்க " எனப் பொருள் கூறும் இளம்பூரணர் , அவ்வாறு, வினை முடித்த வழிக் கார் காலம் வந்ததாயின் ... அக்காலத்தைப் பற்றி வருதலின் மரபுநிலை திரியாதாயிற்று' எனக் காரணம் காட்டுகிறார்.

' புலனெறி வழக்கம் செய்துவருகின்ற வரலாற்று முறைமை திரியாத மாட்சியவாய் , பாலைத்திணைக்கும் கைக்கிளை பெருந்திணைக்கும் உரியவாய் விரவும் பொருளும் விரவி வரும் ' என்பார் நச்சர்.

முறைமை இயல் கெடாமலும் மாண்பு தருவனவுமாகி திணைக்குரிப் பொருளாய் ஐந்திணை ஒழுக்கத்தோடு அமைய அகத்துறைகளில் கலந்து வரத்தகுவன பிறவும் வந்து பயிலும் என்பது ச.சோ.பாரதி கருத்து. இவர் இளம்பூரணர் கருத்தை மறுக்கிறார்.

பாரதி இந்நூற்பாவுரைக்கு , ' முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே' என்னும் நூற்பாவுரையிலேயே ," இம்மூன்றுமேயன்றி இவைபோலச் சிறவாத பிற பொருளும் உளவாதல் அகத்திணையியல் ' மரபுநிலை திரியா ....' என்னும் 45 ஆம் சூத்திரத்தால் தெளியப்படும் " என்று தோற்றுவாய் செய்துவிடுகிறார்.

அகத்திணை மரபுக்கு மாறாகாத மாட்சிமையுள்ளனவாய் , புதிதாக வந்து கலக்கும் கருத்துக்களும் கலக்கும் என்கிறார் புலவர் குழந்தை.

மேலை நூற்பா வரை பிரிவொழுக்கம் ஒன்றனையே கூறினார். இந்நூற்பாவால் அப்பிரிவொழுக்கமும் ஏனைய ஒழுக்கங்களும் மயங்கிவருமாறு கூறுகின்றார்  என்பது உரைவளப் பதிப்பாசிரியர் மு. அருணாசலம்பிள்ளை கருத்து. 

இச்சூத்திரம் கைக்கிளை பெருந்திணைகள் அகத்திணையில் கலந்து வருமாறு கூறுகின்றது என்பது உரைவளப் பதிப்பாசிரியர் சிவலிங்கனார் கருத்து.

அகத்திணைக்குரிய மரபிலக்கணத்திற்றிரியாமல் அதற்கு மாண்பு தருவனவாய் உரிப்பொருள் நிமித்தமாக விரவி வரும் பொருள்களும் அகத்திணை மாந்தர் கூற்றினுள் விரவி வரும் என்பது பாலசுந்தரம் கருத்து.

இவ்வனைவரும் அவரவர் நோக்கில் மரபுநிலை திரியாமல் விரவுவனவாகச் சிற்சில துறைகளைச் சுட்டிக்காட்டுகின்றனர்; பலர் அவற்றுக்குரிய பாக்களையும் எடுத்துக்காட்டியுள்ளனர்.

நச்சர் பாலை , கைக்கிளை , பெருந்திணை மூன்றையும்  சிவலிங்கனார் கைக்கிளை பெருந்திணையையும் கருதுகின்றனர்.

" புணர்தல் பிரிதல் ... அவற்றின் நிமித்தம் என்றிவை ... திணைக்குரிப் பொருளே " (16)

என்னும் நூற்பாவில் நிமித்தம் என்பதனுள் மேல் உரையாசிரியர் கூறும் துறைகள் பலவும் அடங்கிவிடுமென்றே தோன்றுகிறது. பாலசுந்தரம் 'உரிப்பொருள் நிமித்தமாக' என்று குறிப்பிட்டிருக்கிறார். 

தொல்காப்பியம் விதந்து சுட்டாதவற்றை நிமித்தம் என்பதனுள் அடக்கிக்கொள்ளலாமே! போகட்டும்.

இவ்வுரைகாரர்கள் முந்தைய நூற்பாக்களின் தொடர்ச்சியாகவோ , ஐந்திணையுள்  உரிப்பொருள்  அல்லது கைக்கிளை , பெருந்திணை விரவுதல் பற்றியதாகவோ இதனைக் கொண்டுள்ளனர்.

இவ்வுரைகளின் வன்மை மென்மைகள் தனியே ஆராயத்தக்கன.

மேற்சுட்டிய நூற்பாவிற்குப் பிறகு பத்து நூற்பாக்களை வைத்து அகத்திணை இயலை நிறைவு செய்துள்ளார் தொல்காப்பியர்.

முந்தைய உரையாசிரியர் எவரும் மேற்படி நூற்பாவை அதன் பிந்தைய பத்து நூற்பாக்களோடு தொடர்பு படுத்தவில்லை. அவ்வாறு தொடர்பு படுத்தும் வாய்ப்பைக் கொண்டு பிந்தைய நூற்பாக்களுக்குப் பொருள் காணும் திறவுகோலாக இந்நூற்பா அமைந்துள்ளது என்பதே இக்கட்டுரையின் மைய இழை.

இந்நூற்பா தொகுத்துக்கூறல் (யாப்பருங்கல விருத்தி, நன்னூல் ஆகியவற்றில் 'தொகுத்துச் சுட்டல்' ) என்னும் உத்தியிலமைந்தது எனலாம். ஆனால் தொகுத்தது இன்னது எனச் சுட்டாமையே சிக்கலுக்குக் காரணம்.

அதே தொடர் ( " மரபுநிலை திரியா மாட்சிய வாகி"  )

-------------------------------------------------------------------------------------

மரபுநிலை திரியா மாட்சிய வாகி

உரைபடு நூல்தாம் இருவகை இயல( 95  )

...  ...  ... ... ...

என முதலடியில் மாற்றமின்றி மரபியல் நூற்பா ஒன்றும் உள்ளது. பின்னர் வரும் நூற்பாக்களில் வகைகள் வகுத்துக் கூறப்படுகின்றன. இவ்வாறே மேற்குறித்த அகத்திணையியல் நூற்பாவைக் கொள்ளலாம். 

இரு தடைகள்  இருக்கின்றன. 

ஒன்று, தொல்காப்பியம் உரி ஒன்றனை மட்டுமே உரிப்பொருள் என்கிறது; முதல் கரு இரண்டனையும் யாண்டும் பொருள் எனச் சுட்டவில்லை¹. எனவே விரவும் பொருள் என்பது உரையாசிரியர்கள் கொண்டது போல் உரிப்பொருளே எனலாம்.

இரண்டு, மேற்குறித்த மரபியல் நூற்பாவினுள்ளேயே வகைக்குத்  தோற்றுவாய் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அகத்திணை இயல் நூற்பா குறிப்பாகக் கூட எதையும் சுட்டவில்லை. சிக்கலே அது பொத்தாம்பொதுவாக நிற்பதுதான். வெறும் தொடர் ஒருமை கொண்டு இதுவும் பிந்தைய நூற்பாக்கள் பற்றியது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. 

என்றாலும் ஒரு முயன்று பார்க்கலாம்.

ஒத்த தொடர் ( "விரவியும் வரூஉம்" )

-----------------------------------------------------------------

அகத்திணை இயலின் ' விரவும் பொருளும் விரவும்' என்னும் தொடர் அப்படியே வேறிடத்தில் வரவில்லை. ஒத்த தொடர்கள்  உள்ளன.

'வினை பயன் மெய் உரு என்ற நான்கே

வகைபெற வந்த உவமத் தோற்றம்' (உவமையியல் 1)

'விரவியும் வரூஉம் மரபின என்ப' (௸. 2) - என்னும் உவமையிலின் முதலிரண்டுள் இரண்டாவது நூற்பாத் தொடர் ஒத்த தொடராகும்.

இது முதல் நூற்பாவின்  இலக்கணத்தோடு தொடர்புடையது. அதாவது முந்தியதன் தொடர்ச்சி. வினை, பயன் முதலியவற்றைத் தனித்தனியாகவோ , ஒன்றுக்கு மேற்பட்டவற்றையோ  அடிப்படையாகக் கொண்டு உவமை அமையலாம் என்பது கருத்து.விரவியும் வரும்; விரவித்தான் வரவேண்டும் என்பதில்லை. 

இங்கேயே விரவுதல் பற்றிப் பார்த்துவிடலாம். ஒன்றன் இடத்தில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டவையோ வரலாம் என்பது விரவுதல்(கலத்தல் - ஒன்றுக்கு மேற்பட்டவை ஒருங்கிருத்தல். மயங்குதல் - ஒன்றுக்கு மேற்பட்டவை தத்தம் தனித்தன்மை கடந்து ஒன்றாதல் . கலத்தலும் மயங்கலும்  விரவுதல் என்பதனோடு ஒத்தவை;  ஒரே பொருளன அல்ல ; ஒரு பொருட்பன்மொழிகள் போல் வழங்கப்படுவதுண்டு)

ஓரளவு ஒத்த தொடர் ( "உரியவை உரிய" )

-----------------------------------------------------------------------------

இரு திணைப் பிரிந்த ஐம்பாற் கிளவிக்கும்

உரியவை உரிய பெயர்வயி னான (பெயரியல் 7)

இன்னதற்குரிய வினையீறு இன்னது என்பதுபோல் பெயர்களில் ஈறுகளை வரையறுக்க இயலாது. எனவே ஆங்காங்கு உரியவை உரிய என்பது இளம்பூரணர்,

சேனாவரையர் ஆகியோர் கருத்து. 

'பெயரீறுகள் சில பால் காட்டலாம். மற்றவையும் விரவி வரும்' என்று விரவு (தல்) என்னும் சொல்லைப் பயன்படுத்தி இந்(பெயரியல் 7) நூற்பாவிற்குக் கருத்துக் கூறலாம்.

இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே (எச்சவியல்,  58)

உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய (௸,59)

என்னும் அடுத்தடுத்த சொல்லதிகார நூற்பாக்களில் இரண்டாவது நூற்பாத் தொடரை  ஒத்த தொடராகக் கொள்ளலாம்.

இடைச்சொற்கள் எல்லாமே ஒருவகையில் வேற்றுமை - பொருள் வேறுபடுத்தும் - சொற்கள்தாம் (58), உரிச்சொல்லுள் வேற்றுமைச் சொல்லாதற்குரியனவும் உள ; எல்லாம் உரியன அல்ல என்பது கருத்து.

சேனாவரையரும் நச்சரும் , ' உரியன உரியவாம் . எல்லாம் உரியனவாகா' என்பர். 

அவ்வாறே,  முந்தைய முதல், கரு, உரிப்பொருள்களோடு  மரபுநிலை திரியா மாட்சியவாய்  விரவும் பொருளும் சில உள ; எல்லாம் விரவா என அகத்திணை இயல் நூற்பாவுக்கு (48)ப் பொருள் காணலாம்.

விரவுவன:

1. உள்ளுறையுவமும் ஏனையுவமும்

2. கைக்கிளைக்குறிப்பும் பெருந்திணைக் குறிப்பும்

3. கலியும் பரிபாட்டும்

விரவாதன:

1. உள்ளுறைக்கு நிலமாகிய கருப்பொருளுள் தெய்வம்

2. அகனைந்திணையுள் சுட்டிக் கூறும் பெயர்

உள்ளுறையுவமும் ஏனையுவமும்

----------------------------------------------------------------

"உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்

தள்ளாது ஆகும் திணையுணர் வகையே " (ப.49)

'உள்ளுறைக்கண் வரும் உவமும் ஒழிந்த உவமும் என இருவகையாலும் திணை உணரும் வகை தப்பாது ஆகும்' என்பது இளம்பூரணர் கருத்து. இது வெளிப்படையானது. 

உள்ளுறை உவமத்தை உணர்த்தும் நூற்பா (51) வுரையில் " வெறிகொள் இனச் சுரும்பு..." என்னும் பாட்டில் உள்ளுறை இருப்பதைக் காட்டும் இளம்பூரணர், " இதனுட் காவியும் தாமரையும் கூறுதலான் மருதமாயிற்று " எனவும் , ஏனை உவமம் உணர்த்தும் நூற்பா (52) வுரையில் " வளமலர் ததைந்த ... " (ஐங்குறுநூறு 369) என்னும் பாட்டைக் காட்டி , " இஃது ஊடற்பொருண்மைத்தேனும், வேனிற் காலத்து நிகழும் குயிற் குரலை உவமித்தலின் பாலைத்திணையாயிற்று" எனவும் கூறுகிறார்.

திணையுணர்த்தலில் இருவகை உவமைகளுமே வரலாம் என்பதை எடுத்துக்காட்டுகளாலும் வலியுறுத்துகிறார் பூரணர். 

" உள்ளுறை உவமமே திணையுணரும் உரிப்பொருட்பகுதிகளைச் சிறப்பித்தற்கு உரித்தாகும் . ஏனைய உவமம் அவ்வாறு அகவொழுக்க வகைகளுக்குச் சிறவாதாகையால் அகத்துறைகளில் திணையுணரும் பகுதிகளுக்கு அத்துணையா ஆட்சி பெறுதலில்லை.' தள்ளாதாகும் ' என்றதனால் , ஏனை உவமம் அருகிப் பயிலும் என்பதும் உள்ளுறையுவமம் அவ்வாறன்றிப் பெருவரவிற்றாம் என்பதும் பெறப்படும் " என்பார் ச.சோ.பாரதியார்.

" உள்ளுறை உவமும் அஃதல்லாத ஏனை உவமமும் ஆகிய இரண்டும் திணையுணரும் முறைமை தப்பாமல் கருவியாகி வரும் உவம வகைகளாம் ... அகத்திணையை உணர்தற்குச் சிறந்தது உள்ளுறையுவமமாதலின் அது முற்கூறப்பட்டது " என்கிறார் பாலசுந்தரம்.

உள்ளுறையுவமம் ஏனை யுவமம் இரண்டும் விரவி வந்து திணையுணர்த்தும் என்பது இவர்கள் கருத்து.

நச்சினார்க்கினியர் தமக்கேயுரிய பார்வையில், உள்ளுறையுவமமே ஏனை உவமம் எனக் கூறும்படி உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாய் நின்று , அகத்திணை உணர்தற்குக் கருவியாகிய உள்ளுறை உவமம் போல வரும் என்று பொருள் கூறுகிறார்.

மற்றொன்று விரித்தல் போல் தோன்றினாலும் சற்றே நச்சர் கருத்தை விரிவாகக் காண்போம்.

கலித்தொகை 71ஆம் பாடலைக்காட்டி ( 1 - 8) " நனி விரைந் தளித்தலின் நகுபவள் முகம் போலப் / பனியொரு திறம்வாரப் பாசடைத் தாமரைத்/ தனிமலர் தளைவிடூஉந் தண் துறை நல்ஊர!(6-8) என்பதில் ,

" துனி[ துன்பம்] மிகுதலாலே பெருக்கு மாறாது வீழ்கின்ற கண்ணீர் காமத்தீயால்சுவறி[வறண்டு] அறுதலையுடைத்தாய் [துளித்துளியாய்] ஒழுக அவ்வருத்தத்தைக் கண்டு விரைந்து கணவன் அருளுதலின் சிறிது மகிழ்பவள் முகம் போல என்ற ஏனையுவமம் தாமரை மலர் பனிவாரத் தளை விடும்[ மொட்டவிழும்] என்ற உள்ளுறை உவமத்தைத் தருகின்ற கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்து நின்றது" என்பது நச்சர் கருத்து.

இக்கலிப்பா உரையில், " பசிய இலைக்குள்ளே நின்ற தாமரையினது தனித்த மலர் தனக்கு வருத்தத்தைச் செய்யும் பனி ஒரு கூற்றிலே வடியாநிற்க[வடிய]த் தான் மிகச் செவ்வியின்றி அலரும் குளிர்ந்த துறையினை உடைய நல்ல ஊரனே " என்று உரை கண்டுள்ளார் நச்சர். 

காமக்கிழத்தி கூற்றாகக் கொள்ளும் நச்சர் , " நீ ஒருகாலத்து அளித்தலின் [ அன்பு காட்டுதலின்] சிறிது செவ்வி பெற்றாளாயிருக்கும்படி தலைவியை வைத்தாய் ; என்னை வருத்துதல் கூறவேண்டுமோ எனக் காமக்கிழத்தி உள்ளுறை உவமம் கூறினாள் " என்கிறார் நச்சர். 

'முகம் போல ' என்பது ஏனை உவமம். 'தாமரை மலர் பனிவாரத் தளைவிடும்' என்பதில் உள்ளுறை உவமம் பொதிந்துள்ளது. இஃது  ஏனை உவமத்தின் பொருளுமாகும்.

இனி, அகத்திணை இயல் உரை:" இவ் ஏனை உவமம் உள்ளுறை உவமத்திற்குச் சிறப்புக்கொடுத்து உள்ளுறையுவமம் போலத் திணையுணர்தலைத் தள்ளாது[தடுக்காமல்] நின்றவாறு காண்க " என்பது அவரது விளக்கம். 

இவ்வளவு நுட்பமும் , " நல்லிசைப் புலவர் செய்யுட் செய்யின் என்றவாறு...ஏனையோர் செய்யின்  தானுணரும் வகைத்தாய்(அகத்திணை இயல் 49) நிற்கும் என்றவாறாம் " என்பார் நச்சர். அஃதாவது , " உள்ளத்தான் உணரவேண்டாது சொல்லிய சொற்றொடரே பற்றுக்கோடாகத் தானே உணர நிற்கும் " (௸ நூற்பாவுரை) என்பார்.

நச்சரும் உள்ளுறையுவமும் ஏனையுவமும் விரவும் என்னும் கருத்தினரே. ஆனால் அது நுட்பமான தளத்தில் நிகழும் என்கிறார்.

உரை வளப் பதிப்பாசிரியர் ஆ. சிவலிங்கனார் முற்றிலும் மாறுபட்டு , " இச் சூத்திரம் உள்ளுறையுவமமே திணையுணர்த்தும் ஏனையுவமம் உணர்த்தாது என்பது கூறுகின்றது" என்கிறார்.

" பொருளைக் குறிப்பிற் காட்டுவது உள்ளுறை. பொருளும் வெளிப்படையாக அமைய வருவது ஏனையுவமம். ஏனையுவமத்திற் காணப்படும் வெளிப்படைப் பொருளே திணையுணர்த்துமாதலின். உவமம் திணையுணர்த்தத் தேவையில்லை " என்கிறார்.

இவர் கருத்தை ஏற்பதாயின் ஏனை உவமம் திணையுணர்த்தலில் விரவாப்பொருள் என ஏற்கலாம். விரவும் பொருள்தானே விரவும்!

கைக்கிளைக்குறிப்பும் பெருந்திணைக்குறிப்பும்

-------------------------------------------------------------------------------------------

" காமஞ் சாலா இளமை யோள்வயின்

ஏமஞ் சாலா இடும்பை யெய்தி

நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்

தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்

சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்

புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே "(அகத். 53)

"மேல் நடுவணைந்திணைக்குரிய பொருண்மையெல்லாம் கூறினார். இது கைக்கிளையாமாறு உணர்த்துதல் நுதலிற்று" என்கிறார் இளம்பூரணர்.

" காமம் அமையாத இளையாள்மாட்டு,  ஏமம் அமையாத இடும்பை எய்தி, புகழ்தலும் பழித்தலுமாகிய இரு திறத்தால், தன்னொடும்  தனக்கும் அவட்கும் ஒத்தன புணர்த்து, சொல் எதிர் பெறானாய்த் தானே சொல்லி இன்புறுதல்,  பொருந்தித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு "

" பொருந்தித்தோன்றும் ' என்றதனால் அகத்தொடு பொருந்துதல் கொள்க. என்னை? ' காமஞ்சாலா ' என்றதனால் தலைமைக்குக் குற்றம் வராதாயிற்று. ' புல்லித்தோன்றும் ' என்றதனால், புல்லாமற்றோன்றும் கைக்கிளையும் கொள்ளப்படும். அஃதாவது - காமஞ்சான்ற தலைமகள் மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி. அது களவியலுள் கூறப்படுகின்றது" 

களவியல் 4 ஆம் நூற்பவரையில் " காட்சி முதலாகிய இத்துணையும் கைக்கிளைக் குறிப்பாம்" என்பார். அவை: காட்சி, ஐயம், துணிவு; தலைமகனுக்கேயுரியன. இக்கருத்தை  நச்சினார்க்கினியர் 'முன்னைய நான்கும் முன்னதற் கென்ப' (அகத். 55) என்னும் சூத்திரத்தால்

 "  காட்சியும் ஐயமும் தெரிதலும் தேறலும் " என்னும் நான்கையும் கொள்வர்.

"இச்சூத்திரத்தானே கைக்கிளைக்குச் சிறந்த பொருள் இது என்பது உணர்த்துகின்றார் " என்பார் நச்சினார்க்கினியர்.ஏறத்தாழ இளம்பூரணர் கருத்தேயாயினும் நச்சர் தமக்கேயுரிய முறையில் , " அவளுந் தமருந் தீங்கு செய்தாராக ... தான் ஏதஞ் செய்யாது தீங்கு பட்டானாக ... நிரனிறையாக உரைக்க " என்பார்; " காமஞ் சான்ற இளமையோள் கண் நிகழும் கைக்கிளை இத்துணைச் சிறப்பின்று " என்பார்; " வினைவல பாங்காயினார் கண்ணும் இவ்விதி கொள்க " என்பார்.

சற்றே முந்தையோர் கருத்தினின்றும் வேறுபடினும் மாறுபாடின்றிக் " கைக்கிளை ' என்பது ஒரு மருங்கு பற்றிய குற்றமற்ற காதலாகும் " என்பர் ச.சோ.பாரதி.

பாலசுந்தரமும், " இச்சூத்திரத்தான் கைக்கிளைத் திணையை உணர்தற்குரிய பொருட்குறிப்பாமாறு கூறுகின்றார் " என்பார்.

புலவர் குழந்தை, இடும்பை எய்தலும் தருக்கிய புணர்த்தலும் சொல்லி இன்புறுதலும் என உம்மைத் தொடர்களாக எண்ணிக்கொள்வார்.

" இது, ஒத்த காமமாகிய களவொழுக்கத்திற்குப் புறம்பானதாகையால் கூடாதென்பதாம் " எனப் பிற உரையாசிரியர்களிடமிருந்து மாறுபடினும் ஒருவாறு கைக்கிளை , பெருந்திணைகளை உடன்பட்டுக் குறிப்பதை , இவரது பெருந்திணை விளக்கத்தில் காண்போம்.

அனைவரும் குறிஞ்சிக்கலிப் பாக்களையே ( கலி. 56 & 58)  எடுத்துக்காட்டுவர். இவை கைக்கிளைத்திணைப் பாடல்களா? குறிஞ்சித்திணைப் பாக்களா? கைக்கிளை விரவிய குறிஞ்சித்திணைப் பாடல்களா?

கைக்கிளை குறித்த தொல்காப்பிய இலக்கண ஆய்வு விரிப்பிற் பெருகும். இந்த அகத்திணை இயல் நூற்பாவிலும் களவியல் நூற்பாவிலும் தொல்காப்பியர் கைக்கிளைக் குறிப்பு என்றே சுட்டுவது கருதத் தக்கது.

" முதல், கரு , உரிப்பொருள் என்பவை முல்லை முதலாய திணைகளை உணர்தற்குப் பொருளாமாறு போல இது கைக்கிளைத் திணையை உணர்தற்குப் பொருளாம் என்க" என்னும் பாலசுந்தரம் கருத்து 'விரவும் பொருளும் விரவும்' என்பதற்கு இணங்கி நிற்பது நினைவில் கொள்ளத்தக்கது.

ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்

தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்

மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்

செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே(அகத்திணை இயல் 54)

இது பெருந்திணை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ஏறிய மடற்றிறமும், இளமை தீர்திறமும்,  தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமும், மிக்க காமத்து மாறாய திறனொடு கூட்டி,  சொல்லப்பட்ட நான்கு திறமும் பெருந்திணைக் கருத்து.

கைக்கிளை புணராது நிகழும் என்றமையால், இது புணர்ந்தபின் நிகழும் என்று கொள்க. ஏறிய மடற்றிறம் தலைமகற்கே உரித்து "  என, நெய்தற்கலிப்பாட்டொன்றைக் காட்டியுள்ளார்(கலி.138).

இளமை தீர் திறமாவது , இளமை நீங்கிய திறத்தின்கண் நிகழ்வது அது மூவகைப்படும் ; தலைமகன் முதியனாகித் தலைமகள் இளையளாதலும்,தலைமகள் முதியளாகித் தலைமகன் இளையனாதலும் , இவ்விருவரும் இளமைப் பருவம் நீங்கியவழி அறத்தின் மேல் மனம் நிகழ்தலன்றிக் காமத்தின்மேல் மனம் நிகழ்தலும் என - எனப் புறப்பொருள் வெண்பாமாலை, மருதக்கலி(புறப். இருபாற் பெருந்திணை, 14 , ௸ 13 , கலி.94) ஆகியவற்றிலிருந்து எடுத்துக்காட்டுகிறார்.

தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறமாவது : தெளிவு ஒழிந்த காமத்தின் கண்ணே மிகுதலும் என்றவறு. இது பெரும்பான்மை தலைமகட்கே உரித்து - என நெய்தற்கலி யிலிருந்து(கலி.142) எடுத்துக்காட்டுகிறார்.

மிக்க காமத்து மிடலாவது : ஐந்திணைக்கண் நிகழும் காமத்தின் மாறுபட்டு வருவது - எனச் சுட்டி அவற்றை விளக்கிப் புறப்பொருள் வெண்பாமாலைப் பாக்களைக் ( இருபாற்பெருந்திணை 1 & 6) காட்டுகிறார்.

" இது ...பெருந்திணை இலக்கணம் கூறுகிறது " என்னும் நச்சினார்க்கினியர்  வழக்கம்போல் பலவாறு விரிப்பினும் இளம்பூரணர் கருத்திற்கு முற்றாக முரணி ஏதும் சொல்லவில்லை ; பெரும்பாலும் கலித்தொகையிலிருந்தே எடுத்துக்காட்டுகிறார் (கலி. 139, 94 , 142 , 92 ).

பதவுரையில் பெரிதும் நச்சரைப் பின்பற்றும் ச.சோ.பாரதி " இந்த[ ஏறிய மடற்றிறம் முதலிய]நான்கும் புரைபடு காம இழிவொழுக்கத்தின் வகை " என்கிறார். 

" அறிவுடை மக்கள் தன்மைக்கு அமையாத இப்புரை ஒழுக்கத்தைப் பெரிய ஒழுக்கம் என்றது, அது ஒழுக்கத் தொடு படாது என்பது குறிக்கும் அவையல் கிளவியாகும் " என்கிறார். 

ஆனால், நற்றிணை (152), திணைமாலை நூற்றைம்பது (16), குறள் (1133), கலித்தொகை (138  , 139 , 65) ஆகியவற்றோடு  கம்பராமாயணம் , சீவக சிந்தாமணிப் பாடல்களையும் காட்டுகிறார். இவர் காட்டும்  சங்க இலக்கியப் பாக்கள் அன்பினைந்திணையுள் தொகுக்கப்பட்டவையே.

புலவர் குழந்தையும் பதவுரையில் பெரிய வேறுபாடு காட்டவில்லை ; " கைக்கிளை, பெருந்திணையாகிய இவ்விரண்டொழுக்கமும் ஐந்திணைக்குப் புறம்பாக மிகச்சிலரிடைத் தவறுதலானும் அறியாமையானும் நடைபெறினும் , இவையும் அகவொழுக்கத்தின் சார்பாகவே நடைபெறுவதால் ஒழுக்கமாகவும் , ஒத்த காமத்திற்கு ஒவ்வாத ஒருதலைக்காமமும் பெருந்திணையும் ஐந்திணைக்குப் புறம்பானதால் , 'அகப் புறம்' என்றும் ஐந்திணையை ' அகம் ' என்றும் வரையறை செய்தனர் " என்கிறார். இவரும் கலித்தொகைப்பாட்டுகளையே ( 139 , 94 , 142 , 62 ) காட்டுகிறார்.

'ஏறிய மடற்றிறம்...' என்னும் நூற்பா, " பெருந்திணையை அறிதற்குரிய குறிப்பாமாறு கூறுகின்றது " என்கிறார் பாலசுந்தரம். இவரும் கலித்தொகைப் பாக்களையே காட்டுகிறார் ;  " கைக்கிளையும் பெருந்திணையும் முற்ற முற்ற அகத்திணை ஒழுக்கங்களே என்பதை ஓராத இடைக்காலத்து நூல்களும் அவர் கொள்கையினைச் சார்ந்துரைத்த உரையாசிரியன்மார் உரைகளும் தொல்காப்பிய நெறிக்கும் தமிழ் மரபிற்கும் ஏலாதனவாகும் " என்கிறார்.

" முன்னைய நான்கும் முன்னதற் கென்ப " (அகத். 55) என்னும் நூற்பாவிற்குப் பொருள் கொள்வதில் உரையாசிரியர்களிடையே கருத்து வேறுபாடுகளும் மாறுபாடுகளும் காணப்படுகின்றன. இதற்கு பொத்தாம் பொதுவாகத் தொகை சுட்டும்  இந்நூற்பாவும் 

காரணம். இந்நூற்பாவில் இரண்டிடங்களில் இடம்பெற்றுள்ள 'முன்' என்பது இடமுன்னா காலமுன்னா ? நான்காவன எவை? என்பதில் தெளிவில்லை. 

பெருந்திணைக் குறிப்புகள் நான்குக்கும் முந்தைய நிலைகளாகிய, ஏறா மடற்றிறம் , இளமை தீராத்திறம் , தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறம் , மிக்க காமத்தின் மாறாகாத்திறம் என்பன முற்கூறப்பட்ட கைக்கிளைக்காம் என்பது இளம்பூரணர் கருத்து. பாலசுந்தரம் , இக்கருத்தையொட்டி உரைவரைந்துள்ளார்.

இயற்கைப் புணர்ச்சிக்கு முந்தைய காட்சி முதலிய நான்கையும் கைக்கிளைக்குரிய என இதனாற் கொள்வர் நச்சர். இதனைப் புலவர் குழந்தையும் உரை வளப் பதிப்பாசிரியர்கள் அருணாசலம்பிள்ளையும் சிவலிங்கனாரும் ஏற்று வழிமொழிவர்.

கைக்கிளை பெருந்திணைக் குறிப்புப் பற்றிய நூற்பாக்களுக்கு முன்னதாய 1) நிகழ்ந்தது நினைத்தல், 2) நிகழ்ந்தது கூறி நிலையல், 3)மரபுநிலை திரியாது விரவும் பொருள் விரவல், 4) உள்ளுறை உவமம் திணையுணர் வகையாதல் ஆகிய நான்கும் முற் கூறிய கைக்கிளைக்காம் என்பர் ச.சோ.பாரதி.

சிற்சில வேறுபாடுமாறுபாடுகள் இருப்பினும் 'முன்னைய நான்கும் ...' என்னும் இந்நூற்பா [அகப்பொருட்]கைக்கிளை பற்றியதென்பது அனைவர்க்கும் ஒப்ப முடிந்ததாகும்.

கைக்கிளை, பெருந்திணைக் குறிப்புகள் , அகப்பொருட்கைக் கிளை ஆகியன அன்பினைந்திணையுள் மரபுநிலை திரியா மாட்சியவாயின் விரவலாம் என்று கொள்ளலாம்.

கலியும் பரிபாட்டும்

---------------------------------

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்

கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்

உரிய தாகும் என்மனார் புலவர் (அகத். 56)

" நாடக வழக்காவது , சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல் . அஃதாவது செல்வத்தானும் , குலத்தானும் ஒழுக்கத்தானும் , அன்பினானும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும் , அவ்வழிக் கொடுப்போரு மின்றி அடுப்போருமின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும் , பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும் , பிறவும் இந்நிகரனவாகிச் சுவைபட வருவனவெல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறுதல் .

உலகியல் வழக்காவது , உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது.

பாடல் சான்ற புலன் நெறி வழக்கமாவது , இவ்விருவகையானும் பாடல் சான்ற கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்க் கூறப்படுகின்ற அகப்பொருள்.

கலியே பரிபாட்டு ஆஇருபாவினும் உரியது ஆகும் என்மனார் புலவர் என்றது , கலியும் பரிபாடலும் என்னும் இரண்டு பாவிலும் உரிமையுடைத்தாம் என்று உரைப்பர் புலவர் என்றவாறு .எனவே இவை இன்றியமையாதன என்றவாறு . ஒழிந்த பாக்கள் இத்துணை அகப்பொருட்கு உரியவாய் வருதலின்றிப் புறப்பொருட்கும் உரியவாய் வருதலின் ஓதாராயினர் . புறப்பொருள் உலகியல்பானன்றி வாராமையின் , அது நாடக வழக்கம் அன்றாயிற்று " என்கிறார் இளம்பூரணர்.

" புனைந்துரை வகையானும் உலக வழக்கத்தானும் புலவராற் பாடுதற்கமைந்த புலவராற்று வழக்கம் கலியும் பரிபாடலுமென்கின்ற அவ்விரண்டு கூற்றுச் செய்யுளி டத்தும் நடத்தற்கு உரியதாமென்று கூறுவர் புலவர் " எனப் பொருள்காணும் நச்சினார்க்கினியர்,  " அகத்திணையாகிய காமப் பொருளே புலனெறி வழக்கத்திற்குப் பொருள் " என்கிறார். 

தமக்கேயுரிய நோக்கில் , " பாடல் சான்ற என்றதனால் பாடலுள் அமைந்தன எனவே பாடலுள் அமையாதனவும் உள என்று கொள்ள வைத்தமையின் , கைக்கிளையும் பெருந்திணையும் பெரும்பான்மையும் உலகியல் பற்றிய புலனெறி வழக்காய்ச் சிறுபான்மை வரும் என்று கொள்க " என்கிறார்.

நச்சர்  i.ஐந்திணைப் பொருளாய புலனெறி வழக்கின் காமம் , ii. கைக்கிளை பெருந்திணையாகிய உலகியலே பற்றிய புலனெறி வழக்கின் காமம் என்று வகைப்படுத்துகிறார். இதிலிருந்து இவர் ஐந்திணையை நாடக வழக்காகக் கொள்வதை உய்த்துணரலாம். இவ்விரு வழக்கிலும் கலிப்பா வரும் என்பதனால் அதனை முன்வைத்ததாகக் கூறும் நச்சர்  பரிபாடல் தெய்வ வாழ்த்து உட்படக் காமப் பொருள் குறித்து உலகியலே பற்றி வரும் என்கிறார்.

ஆசிரியம், வெண்பா, வஞ்சி ஆகியன அகம்,புறம் என்னும் இரண்டிற்கும் பொதுவாய் வரும் என்னும் நச்சர் கருத்துக்குப்  பாட்டும் தொகையும் சான்றுகள்.

 " உலகியலை ஒட்டி உயர் குறிக்கோளோடு சுவைபடக் காட்டும் 'பொருநு' வகை மரபுகளோடும் உலக மக்களின் ஒழுகலாற்றொடும் சிறப்புறப் புலவரால் அமைக்கப்படும் அகத்திணை மரபுகள் கலியும் பரிபாடலுமாகிய இரு பாவகைகளிலும் சிறப்புரிமை கொண்டு பயிலும் " என்பார் ச. சோ . பாரதி. கலியும் பரிபாட்டும் அகத்திணைக்குச் சிறந்து பயில்வன; ஆசிரியம் முதலியன அக, புறத்திணைக்குப் பொதுவாய் வருவன என ஓராற்றான் நச்சர் கருத்தை வழிமொழிகிறார்.

" மக்கள் வாழ்க்கையில் இயல்பாகக் காணப்படும் ஒழுக்கம் 'உலக வழக்கம்'எனப்படும்.

அவ்வுலக வழக்கங்களிற் சிறந்தனவாயுள்ளவற்றை அறிஞர்கள் ஒன்றாகத் தொகுத்துப் பிற்கால உலக வழக்கம் திருத்தமாக நடைபெறுதற்பொருட்டுப். பாடல்களாகப் பாடி வைப்பர். அப்பாடல்களாகிய நூல் வழக்கம் - நாடக வழக்கம் எனப்படும். உலக வழக்கும் நாடக வழக்கும் சேர்ந்தே புலனெறி வழக்கம் அல்லது செய்யுள் வழக்கம் ஆகும் " என்பார் புலவர் குழந்தை. 

கலி, பரிபாட்டுகள் அகத்திற்குச் சிறந்தன. ஆசிரியம் முதலியன அகம், புறங்களுக்குப் பொது என்பதை இவரும் ஏற்கிறார்.

" கலிப்பா தொகையும் வகையுமாக விரிந்து பல்கித் தரவு முதலாகிய உறுப்புக்கள் அமைய வருதலானும் பரிபாட்டு இது பா என்னும் இயல் நெறியின்றிப் பொதுவாய் நிற்றற்கும் உரித்தாய்ப் பண்ணொடு கூடி வருதலானும் அவற்றது யாப்பருமை நோக்கி விதந்தோதி. ஏனைய பாக்களை உம்மையாற் கொள்ள வைத்தார் என்க"

என்னும் பாலசுந்தரம் கருத்தில் ஏனைய பாக்களும் கொள்ளப்படுதல் கருதத்தக்கது.

" புலனெறி வழக்காவது இலக்கண நெறியான் அமைந்துவரும் நல்லிசைப் புலவோர்தம் எழுவகைச் செய்யுள் மரபாகும். புலன் = இலக்கணம்... புலனெறி வழக்காகிய செய்யுளின்கண் அகப்பொருள் பற்றி வருவன இருவகை வழக்கும் கலந்தே வரும் " எனப் பாலசுந்தரம் கூறுவதில் , 'கலந்தே வரும்' என்பதினும் 'விரவியே வரும்' எனலாமோ!

தொல்காப்பிய உரைவளப் பதிப்பாசிரியர் சிவலிங்கனார் விளக்கம் வேறுபடுகிறது.

அவர் " நாடகச் செய்யுள் , உலகியற் செய்யுள், புலனெறி வழக்குச் செய்யுள் எனச் செய்யுள் எனச் செய்யுள் மூவகைப்படும் என்றார் ஆசிரியர் என்க " என்று கூறி முறையே மனோன்மணீயம் முதலியவற்றையும் ஐங்குறுநூறு முதலியவற்றையும் கலித்தொகை முதலியவற்றையும் மூன்றற்கும் காட்டுகிறார். 

இவ்வடிப்படையில் "  நாடக வழக்கத்தையும் உலகியல் வழக்கத்தையும் சேர்த்துப் பாடுதல் அமைந்த புலனெறி வழக்கம் என்பது கலிப்பா, பரிபாடற்பா என்னும் அவ்விருவகைப் பாக்களிலும் பாடுதற்குரியதாகும் என்பர் புலவர் " என்னும் அவரது கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முந்தைய கைக்கிளை , பெருந்திணை இலக்கணங்களுக்குப் பெரும்பாலும் அனைத்து உரையாசிரியர்களும் கலித்தொகைப் பாக்களை எடுத்துக்காட்டியிருப்பதோடு , இந்த நூற்பாவை இணைத்துப் பார்க்க வேண்டும். கைக்கிளை பெருந்திணைகளின் தொடர்ச்சியே இது. 

நிலம் என்பது செய்யுளையும் புலன் என்பது இலக்கணத்தையும் குறித்துத் தொல்காப்பியம் வழங்கியிருப்பதைச் சிறப்புப்பாயிரவுரையில் அகச் சான்றுகளால் நிறுவியுள்ளார் பாலசுந்தரம்.

புலனெறி என்பது இலக்கண நெறி.  புலன் நெறி வழக்கமாவது ... அகப்பொருள் என இளம்பூரணரும் அகத்திணையாகிய காமப் பொருளே புலனெறி வழக்கத்திற்குப் பொருள் என நச்சினார்க்கினியரும் கூறுவது அகப்பொருள் இலக்கண நெறிக்கு உட்பட்டது என்பது கருதியே. 

ஆசிரியப் பாக்களால்  இயன்ற குறுந்தொகை , நற்றிணை , அகநானூறு, ஐங்குறுநூறு  ஆகிய எட்டுத்தொகை அகநூல்கள் யாவும் உலகியற் சாயல் கொண்ட , ஆனால் குறிக்கோள் நிலையிலான இலக்கண நெறியின்பாற்பட்ட செய்யுள்களைக் கொண்டவை; முற்றிலும் புலனெறி வழக்கின.


அந்தணர் அருமறை மன்றல் எட்டுப்பற்றி விளக்கும் இறையனார் அகப்பொருள் உரையாசிரியர்

" அவ்வெட்டும் உலகியலில் உள்ளன; இஃது அன்னது அன்று; இல்லது இனியது நல்லது என்று புலவரால்

நாட்டப்பட்டதோர் ஒழுக்கமாகலின், இதனை உலக வழக்கத்தினோடு இயையான் என்பது "( நூற்பா 1 உரை)

என்கிறார். இவர் புலனெறி வழக்கைச் சமயநெறி நோக்கிக் கொண்டு செல்கிறார். அது தொல்காப்பிய நெறியன்று ; ஆயினும் புலனெறி வழக்கு உலக வழக்கு அன்று என்னும் அளவில்  பொருந்துவதேயாம்.

மாறாகக் கலித்தொகையும்  பரிபாட்டும் உலகியற்சார்பு மிகுந்த நாடகப்பாங்கிலான பாடல்களின் தொகுப்புகளாகும். 

நாடக வழக்கு , உலகியல் வழக்கு என்பன நாட்டிய சாத்திரத்தின்  நாட்டிய தர்மி , லோக தர்மி என்பனவற்றின் தமிழாக்கங்கள் என வையாபுரிப்பிள்ளை கருதுவதைச் சுட்டி,

தொல்காப்பியம் புலனெறி வழக்குப் பற்றியும் பேசுகிறது. புலனெறி வழக்கு நாடக உலகியல் வழக்குகளிலிருந்து வேறானது என்கிறார் சிவத்தம்பி² . மேலும்

" கலியாப்பு      நடனத்திற்கும் நாடகத்துக்குமிடையே தொடர்புகளைக் கொண்டிருந்தது என்பதை ஆதாரபூர்வமாக அறியமுடிகிறது. மேலும் அவ்வகைக் கலியின் முன்மாதிரியாக நிகழ்த்தப்பட்ட நாட்டிய நாடகங்கள் இக்காலத்துக்கு[நிலப்பிரபுத்துவ மேலாண்மைக் காலம் என அவர் கொள்ளும் காலத்துக்கு] மட்டும் உரியன எனக் கொள்ள முடியாது . அவை நீண்டகாலமாக வழக்கிலிருந்து வருவதுடன் விறலியரும் கோடியரும். மற்றையவரும் நிகழ்த்திய நடனங்களில் அவற்றின் உள்ளடக்கம் பற்றியோ யாப்புப் பற்றியோ எதுவும் தெரியாவிட்டாலும் , அவர்களாற் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.  கலி அவ்வகையான நிகழ்வுகளிலிருந்தே தோன்றி வளர்ச்சி பெற்றது³என்கிறார். அவர்தம் ஆய்வுக் கருத்துகள் ஈண்டு விரிப்பிற் பெருகும்.

நாடக, உலகியல் வழக்கு மேலோங்கி  நிகழ்கலை சார்ந்து உருப்பெற்றுப்  புலனெறியில் உள்வாங்கப்பட்டுச் செம்மையுற்ற வடிவங்களாகக் கலித்தொகை பரிபாடல்களைக் கொள்ளலாம்.

இவை பாடல் சான்ற- அதாவது பாடுதற்கு அமைந்த - புலனெறி வழக்கின எனவே பாடல் சாலாதனவும் உள என்பது பெறப்படுகிறது. 

புலனெறியில் நாடக உலகியல் வழக்குகள் விரவலாம் என்பதும் அவற்றின் பாவகைகள் இவை என்பதும்  இந்நூற்பாவால் விளங்குகிறது.

உள்ளுறையும் தெய்வமும்

--------------------------------------------------

உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு, எனக்

கெடல் அரு மரபின் உள்ளுறை ஐந்தே (பொருளியல் 46) 

என ஐந்தில்   ஒன்றாக (உள்ளுறை) உவமமும் இடம்பெற்றுள்ளது. 

இங்கு, " உள்ளுறையாவது பிறிதொரு பொருள் புலப்படுமாறு நிற்பதொன்று. அது கருப்பொருள் பற்றி வருமென்பது அகத்திணை இயலுள் கூறப்பட்டது" என ஐந்துக்கும் பொதுவான வரையறை தந்துள்ளார் இளம்பூரணர். 

" ஒன்றனை உள்ளுறுத்து ... வெளிப்படாமற் கூறலின் ...உள்ளுறை " எனக் கூறும் நச்சரும் உடனுறை, உவமம், சுட்டு, சிறப்பு நான்கும்  கருப்பொருள் சார்ந்து தோன்றும் என்றே கருதுகிறார். நகைபற்றித் தெளிய இயலவில்லை. 

பாலசுந்தரம் சற்றே வேறுபட்டு இவற்றை விளக்கினாலும் , உள்ளுறை பற்றிய பொதுக்கருத்தில் மாறுபாடில்லை.

'மரபுநிலை திரியா மாட்சி' என்பதையொத்த ," கெடலரு மரபின் ..." என்னும் அடைத்தொடரை இங்கும் ஆளுகிறார் தொல்காப்பியர். இது மேலும் ஆராய்தற்குரியது.

உவமையியலில் பத்துக்கு மேற்பட்ட நூற்பாக்களைக் கொண்டு உள்ளுறை உவமத்தை விளக்கியுள்ளார் பேராசிரியர். ஏறத்தாழப் பேராசிரியரைப் பின்பற்றியுள்ளார் பாலசுந்தரம். 

திணையுணர்தற்கு உள்ளுறையுவமமும் ஏனையுவமமும் விரவலாம் என்பதைக் கூறிய அள அளவில், உள்ளுறையையும் தொடர்பு கருதி அகத்திணை இயலிலேயே வரையறுக்கிறது தொல்காப்பியம். இவ்வரையறையில் விரவலாகாது என்னும் விலக்கு விதந்தோதப்படுவதே இங்குக் கருதத்தக்கது. 

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் எனக்

கொள்ளும்' என்ப குறி அறிந்தோரே (அகத். 50)

உள்ளுறுத்து இதனொடு ஒத்துப் பொருள் முடிக' என

உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம் (௸.51)

என்னும் அடுத்தடுத்த நூற்பாக்களில் முதலில் உள்ளுறைக்கான  அடிப்படை (நிலம்)  -  விரவாதென விலக்கிய தெய்வத்தைச் சுட்டுவதன் மூலம் - கரு (ப் பொருள்) எனப் பெற வைப்பது ஒரு நயமுமாம். 

உள்ளுறையில் தெய்வம் விரவுதல் கூடாது.


அகனைந்திணையும் பெயர் கொளும் முறையும்

-------------------------------------------------------------------------------------------

மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்

சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர் (அகத். 57)

புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது

அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே (௸.58)

'அகன் மக்கள் நுதலிய ஐந்திணையும் ' என மொழிமாற்றிக்கொண்டு , இளம்பூரணர். 

" அகத் திணையுள் கைக்கிளை பெருந்திணை ஒழிந்த ஐந்திற்கும் உரியவாகிய நிலமும் காலமும் கருப்பொருளுமன்றி மக்களைப்பற்றி வரும் புணர்தலும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும் ஊடலும் என்று சொல்லப்பட்ட ஐந்து பொருண்மையும், சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார் (அவ்வைந்திணைக் கண்ணும் தலை மகனாகப் புலனெறி வழக்கம் செய்ய வேண்டின்) நாடன் ஊரன் சேர்ப்பன் என்னும் பொதுப்பெயரானன்றி ஒருவர்க்கு உரித்தாகி வரும் பெயர் கொள்ளப்பெறார் புலவர்" என 57ஆம் நூற்பாவிற்குப் பொருள் காண்கிறார் இளம்பூரணர். 

அடுத்த நூற்பாவிற்கு," ஒருவர் பெயர் புறத்திணை மருங்கிற் பொருந்தினல்லது,   அகத்திணை மருங்கின் வருதல் இல்லை. இதனாற் சொல்லியது ஒருவர்க்குரித்தாகி வரும்பெயர் அகத்திணை பற்றி வரும் கைக்கிளை பெருந்திணையினும் வரப் பெறாது என்பதூஉம், புறத்திணையுள் வரும் என்பதூஉம். ஆண்டும் பாடாண் பாட்டுக் காமம் பொருளாக வரின் அவ்வழி வரூஉம் என்பதூஉம் கூறியவாறு. இதனான் அகப்பொருள் ஒருவரைச் சாராது பொதுப்பட வருமென்பது கொள்க"  என்று பொருள் காண்கிறார்.

ஆக அன்பின் ஐந்திணையுள் மட்டுமன்றி அகத்திணை பற்றி வரும் கைக்கிளை பெருந்திணையுள்ளும் பொதுப்பெயரானன்றி ஒருவர்க்கு உரித்தாகிவரும் பெயரால் சுட்டப்பெறார் என்கிறார் பூரணர்.

" நடுவணைந்திணைக்கண்ணும் திணைப் பெயரான் கூறினன்றி  ஒருவனையும் ஒருத்தியையும் விதந்து கூறி அவரது இயற்பெயர் கொள்ளப்பெறார்... ... இது பெயரெனப்பட்ட கருப்பொருளாதலின் கூற்றிற்குரிய தோழியும் பாங்கனும் முதலிய வாயிலோரையும் பொதுப்பெயரானன்றி இயற்பெயர்த் தொடக்கத்தன கூறப்பெறா ரென்று கொள்க " என நச்சர் நன்கு வரையறுக்கிறார். 

அடுத்த நூற்பாவிற்கு, " புறத்திணை கருப்பொருளாயும், அது தான் உவமமாயும் அகத்திணையுட் கலக்கும் " என விளக்கம் தருகிறார். 

புலவர் குழந்தை பெரிதும் நச்சரை ஏற்கிறார். 

'மக்கள் நுதலிய...' என்னும் நூற்பாவிற்கு " ஐந்திணையும் (உம்மையான்) கைக்கிளையும் பெருந்திணையும் புலனெறி வழக்காகி வருமிடத்து. இவராவார் இவர் எனத் தெரிந்துணருமாறு தலைமக்களின் இயற்பெயர் கொள்முதலைப் பெறமாட்டா " என்பது முந்தைய உரையாசிரியர் வழி நின்று பாலசுந்தரம் வரைந்த உரை.

" பெயர் சுட்டிக் கூறப்படும் காமம் பற்றிய நிகழ்ச்சி புறத்திணைப் பகுதியுள் அதற்குரிய துறையாகப் பொருந்திவரினல்லது ஒருவரை வரைந்துணர்த்தும் இயற்பெயர்கள் அகத்திணைப் பகுதிக்கண் அளவுதல் இல " என்பது அடுத்து நூற்பாவிற்கான அவது உரை.

ச. சோ.பாரதி காப்பியங்களையும் உட்கொண்டு அளவுதல் என்பதற்கு அளவளாவுதல் எனப் பொருள் கண்டு தலைவன் தலைவியர் அளவளாவுமிடத்துப் பெயர் சுட்டார்; பிற இடங்களில் சுட்டப்பெறுவர் எனக் கூறுவது பொருந்தாது.

பாரதி தவிரப் பிறர் தம்முள் சிற்சிலவாறு வேறுபட்டாலும் அடிப்படையில் அகத்திணையுள் சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார் என்பதில் ஒருமித்த கருத்தினரே.

அஃதாவது அகத்திணையுள் சுட்டிக் கூறும் பெயர் விரவுதல் - அளவுதல் - இல்லை.

முடிபுகள்:

மரபு நிலை திரியா மாட்சிய ஆகி

விரவும் பொருளும் விரவும் என்ப (அகத்.48) என்னும்

மேற்குறித்த நூற்பா,  தொடர்ந்துவரும் பிந்தைய பத்து நூற்பாக்களின்,  விரவுவன இவை  விரவாதன இவை என்னும்  வரையறுப்பின், அடிப்படை நெறியைத் 'தொகுத்துக் கூறல்' என்னும் உத்தியிலமைத்து முன்னிறுத்துவது என்பது இந்த ஆய்வின் முடிபு.

இந்நூற்பாத் தொடர் பிறிதொரு நூற்பாவிலும் , ஒத்த தொடர்கள் பிற சில நூற்பாக்களிலும் ஆளப்பட்டிருப்பது இந்நூற்பாவின் பொருள்காண ஓரளவு உதவுகின்றது.

மரபுநிலை திரியாமலும் மாட்சிமை உடையனவாகவும் அகத்திணையுள் விரவும் பொருளும் சில உள ; எல்லாம் விரவா என்பது கருத்து. அவ்வாறு விரவுவன விரவாதன இவையிவை எனப் பிந்தைய நூற்பாக்களில் வரையறுக்கப்படுகின்றன.

௧) முதல், கரு, உரி என்ற மூன்றே முறை சிறந்தன (அகத். 3)என வரையறுத்த பின் , உள்ளுறையுவமம் ஏனையுவமம் ஆகியனவும்திணை உணர்த்தற்கு தள்ளாதாகும் என்பதால் அம்மூன்றுடன் இவ்வுவமைகளும் விரவும் என்பதாயிற்று.

பொருளியலில் 'உள்ளுறை ஐந்து' என்னும்போதும் 'கெடலரு மரபின்' என்று அடைகொடுத்திருப்பது ' 'மரபுநிலை திரியா மாட்சியவாகி' என்பதை நினைவூட்டுதல் காண்க.

௨)கைக்கிளைக்குறிப்பு, பெருந்திணைக் குறிப்பு ஆகியன பற்றிய நூற்பாக்களும் 'முன்னைய நான்கும்...' என்னும் நூற்பாவும் அன்பினைந்திணையுள் கைக்கிளை , பெருந்திணைகள், ' மரபுநிலை திரியா மாட்சிய ' வாயின் விரவலாம் என்கின்றன.

அவ்வாறு கைக்கிளை, பெருந்திணை விரவுதற்கு உரையாசிரியர்கள் மிகப்பெரும்பாலும் கலித்தொகைப் பாக்கள் சிலவற்றையே காட்டியிருப்பது தற்செயலன்று.

௩) புலனெறி என்பது இலக்கண நெறி. அகப்பொருளிலக்கண நெறி பிறழாப் பாடல்கள் ஆசிரியப் பாவால் இயன்றுள்ளன.

நாடக, உலகியல் வழிப்பட்ட பாடல்களுள் புலனெறியில் பாடுதற்கமைந்தன கலி, பரிபாட்டுகளால் இயன்றுள்ளன.

இவை நாடகமரபில் வந்த வடிவங்கள் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை அகத்திணையுள் விரவும்.

'பாடல் சான்ற' என்றதனால் , பாடல் சாலாதனவும் உள .  அவை புலனெறி வழக்குக்கு மாறானவை; மரபுநிலை திரிந்தவை; மாட்சியற்றவை; எனவே அகத்திணையுள் விரவா - என உய்த்துணர முடிகிறது.

௪) கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட உள்ளுறையுள், கருப்பொருளுள் முதலாவதாகிய 'தெய்வம்' விரவுதல் கூடாது. 

௫) அன்பினைந்திணையுள்ளும் மரபுநிலை திரியாது ஐந்திணையுள் விரவும் கைக்கிளை பெருந்திணைகளுள்ளும்  அகத்திணை மாந்தர் இன்னார் எனச் சுட்டிப் பெயர் கூறப்பெறார் ; சார்த்து வகையாலன்றி விதந்தோதும் பெயர்கள் விரவுதல் கூடாது.

இவ்வரையறைகளோடு அகத்திணை இயல் நிறைவுறுகிறது.

__________________________________________________


குறிப்புகள்

1. வாணி அறிவாளன்,'  செவ்விலக்கியப் புரிதல்கள், பக்.9 - 21.

நெஞ்சறிந்த நிலையில் முதலும் கருவும் பொருளாகா என்னும் நிலைநின்று இந்நூற்பாவுக்கு உரையாசிரியர்கள் பொருள் கண்டனர் எனக் கூறவியலாது .

உரையாசிரியர்கள் முதல், கரு, உரி மூன்றையுமே பொருள் என ஆண்டுள்ளனர். 

2. சிவத்தம்பி, பண்டைய தமிழ்ச்சமூகத்தில் நாடகம் , ப.100.

3. ௸.ப.261.


துணை நூல்கள்

————————


அருணாசலம்பிள்ளை, மு. (ஆய்வுரை), தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணை இயல் உரைவளம் , மதுரைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வெளியீடு, மதுரை , 1975.


குழந்தை, புலவர் (உரை.), தொல்காப்பியம் பொருளதிகாரம் குழந்தையுரை , வேலா பதிப்பகம், ஈரோடு , 1968.


சிவலிங்கனார், ஆ. (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் - சொல்லதிகாரம் (உரைவளம்) பெயரியல் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை , 1984.


சிவத்தம்பி,கார்த்திகேசு  ,  பண்டைய தமிழ்ச்சமூகத்தில் நாடகம் (மொ.பெ.அம்மன்கிளி முருகதாஸ்), குமரன் புத்தக இல்லைம், கொழும்பு-சென்னை, 2004.


சிவலிங்கனார், ஆ. (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் - சொல்லதிகாரம் (உரைவளம்) எச்சவியல் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை , 1988.


சிவலிங்கனார், ஆ. (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் - பொருளதிகாரம் (உரைவளம்) அகத்திணையியல் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை , 1991.

நக்கீரனார் (உரையாசிரியர்), களவியல் என்ற இறையனார் அகப்பொருள் , திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953.


பாலசுந்தரம், பாவலரேறு ச. (உரை.) , தொல்காப்பியம் எழுத்ததிகாரம் ஆராய்ச்சிக்காண்டிகையுரை, பெரியார் பல்கலைக்கழகம் , சேலம் , 2012.


பாலசுந்தரம், பாவலரேறு ச. (உரை.) , தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சிக்காண்டிகையுரை, அகத்திணையியல் - புறத்திணையியல் , பெரியார் பல்கலைக்கழகம் , சேலம் , 2012.


பாலசுந்தரம், பாவலரேறு ச. (உரை.) , தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சிக்காண்டிகையுரை, களவியல்-கற்பியல்-பொருளியல்- மெய்ப்பாட்டியல்-உவமவியல் , பெரியார் பல்கலைக்கழகம் , சேலம் , 2012.


வாணி அறிவாளன், செவ்விலக்கியப் புரிதல்கள், அருண் அகில் பதிப்பகம், சென்னை, 2020.


வெள்ளைவாரணன், க(ஆய்வுரை), தொல்காப்பியம் பொருளியல் உரைவளம், பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1983.


வெள்ளைவாரணன், க(ஆய்வுரை), தொல்காப்பியம் உவமையியல் உரைவளம், பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1985.


வெள்ளைவாரணன், க(ஆய்வுரை), தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியல் உரைவளம், பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1994.


- திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் புதன் வட்டக் கருத்தரங்கில் ( டிசம்பர் 2014) இதன் செறிவான வடிவம் முன்வைக்கப்பட்டது.





Friday, October 30, 2020

பாடல் பெற்ற பறவை!


 பாடல் பெற்ற பறவை!

பத்திமையில் தோய்ந்தவர்கள் பாடல்பெற்ற தலமென்பார்கள். 

எனக்கோ , சான்றோர் செய்யுள்களின் தெய்வம் உணா மா மரம் புள் பறை செய்தி முதலியன பின்னரும் தொடரக் காணும்போது சிலிர்க்கும். என்னளவில் அவைதாம் பாடல் சால் சிறப்பின. இது இலக்கியச் சிலிர்ப்பு! பண்பாட்டுச் சிலிர்ப்பு!

வானம்பாடி (1963) என்னும் படத்திற்குக் கண்ணதாசன் " தூக்கணாங் குருவிக்கூடு

தூங்கக் கண்டான் மரத்திலே ..." என்றொரு பாட்டெழுதினார். 

தூக்கணாங்குருவி , பாடல் பெற்ற பறவை.

கிரியாவின் 'தற்காலத் தமிழ் அகராதி' தற்காலப் பெருவழக்கான  தூக்கணாங்குருவி என்னும் ஒரு வடிவத்தை மட்டுமே தருகிறது. சரியானதுதான்.

சென்னைப் பல்கலை.த் தமிழ்ப்பேரகராதி (TAMIL LEXICON) , 

 தூக்கணங்குரீஇ tūkkanan-kurīi , n. "  தூக்கணங்குரீஇ ... பெண்ணைத் தொடுத்த கூடினும் (குறுந்.374)" - என அகரவரிசையில் வாய்த்த முதற் பதிவைத் தருகிறது. 

உ.வே.சாமிநாதையர் குறுந்தொகைப் பதிப்பை எடுத்து 374 ஆம் பாடலைப் பார்த்தேன். அடடா !

அந்தக் காதலர்கள் பற்றி ஊர் பலவாறு அலர் தூற்றிக்கொண்டிருந்தது. காதலியின் தோழி பெற்றோரிடம் பக்குவமாகத் தெரிவித்தாள் (அறத்தொடு நிற்றல் ) .  காதலன் வீட்டாரும் முறைப்படி  பெண் கேட்டுவந்தனர்.   பெண் வீட்டார்  ஏற்றனர். 

நன்றுபுரி கொள்கையின் ஒன்றா கின்றே

முடங்கல் இறைய தூங்கணங்* குரீஇ 

நீடிரும் பெண்ணை°த் தொடுத்த 

கூடினும்¶ மயங்கிய மையல் ஊரே

(* உ.வே.சா. தரும் பாடம் இதுவே. ° பெண்ணை = பனை .   ¶ கூட்டினும் என்பது பாட்டில் எதுகை நோக்கிக் கூடினும் எனத் திரிந்தது)

வளைந்த சிறகையுடைய தூக்கணங்குருவி உயர்ந்த பெரிய பனையில் அமைத்த கூட்டை விடவும் சிக்கலான பல்வகைக் குழப்பம் கொண்டிருந்த ஊராரும் நன்மை புரியும் மணச் செய்தியால் இப்போது  ஒன்றிய கருத்தினராகிவிட்டனர் - என்கிறது பாட்டு. 

பெரும்பாலும் உயரமான பனையில் கூடு கட்டுவது தூக்கணாங்குருவியின் இயல்பு¹. அந்தக் கூடு சிக்கல் மிகுந்ததாக இருப்பது அதன் தன்மை.

சிக்கலுக்குக் கூட்டின் பின்னல் உவமை; குழப்பத்திற்கு அதன் தொங்கல் உவமை. நுண்பொருளுக்குப் பருப்பொருள் !

சான்றோர் செய்யுள்களில் உவமை , தத்துவ இயலின் பிரமாணமோ  அலங்காரவியலின் அணியோ அன்று. அதுவே  பொருளுமாகி நிற்கும். 'உவமப்பொருள்' என்பார் தொல்காப்பியரும்.

துல்லியம் ! பிற்கால இலக்கியம் எதிலும் காண இயலாத துல்லியம்.இந்தத் துல்லியமே சான்றோர் இலக்கியத் தனித்துவம்!  இந்தத் தனித்துவமே இலக்கிய இன்பம்!

சங்கத் தமிழ் நூல்களின் இன்பம் , 'அடங்கா இன்பம்'  என்றார் பாவேந்தர் பாரதிதாசன். சும்மாவா?






ஐயர்  ' தூக்கணங் குருவியின் கூடு : புறநா.225: 11.' என்று ஒத்த பகுதி பற்றிய குறிப்பையும் தருகிறார்.

'வியத்தகு பெரும்படையும் வீரமும் கொண்ட சோழன் நலங்கிள்ளி இருந்தவரை  அவனுக்கு அஞ்சிப் பிற மன்னர்கள்  வலம்புரிச்சங்கினை  முழக்காமல் தூக்கணங்குருவியின் கூடு போலத் தொங்கவிட்டிருந்தனர். இப்போது, போர் கருதாமல் ,  அவர்களின் பள்ளியெழுச்சிக்காலத்தில் அவை முழங்கும் போதும் , நான் நோகின்றேன் ' என்னும் கருத்தமைந்தது ஆலத்தூர் கிழாரின் கையறுநிலைப் பாட்டு.

இங்கே பருப்பொருளுக்குப் பருப்பொருள் என்கிற நிலையில் தூக்கணங்குருவிக்கூடு உவமையாகிறது. குறுந்தொகை (374)நுட்பத்தை  நோக்கக் குறைந்ததாயினும்  இதுவும் துல்லிய உவமைதான்.

தூங்கு (தல்) = தொங்கு(தல்) - தன்வினை .  தூக்கு (தல்) = தொங்கச் செய்(தல்)- பிறவினை.

" தூக்கணங்குருவி tūkkanan-kuruvi , n.  தூக்கணம் + குருவி.  Weaver bird , Ploceus baya , building hanging nests ; தொங்குங் கூடுகட்டும் குருவி வகை." - சென்னைப் பல்கலை.த் தமிழ்ப்பேரகராதி (TAMIL LEXICON).

கூட்டைத் தொங்குமாறு செய்து வசிக்கும் குருவி, தூக்கணங்குருவி .இது காரணப்பெயர் .

'தூக்கணாங் குருவிக்கூடு தூங்கக் கண்டான் மரத்திலே' என்று செவ்வியல் வழக்குத் திரைத் தமிழில் கண்ணதாசனிடம் உயிர்த்தெழுந்து தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறது

என்றுமுள தென்றமிழ்!

எப்போது கேட்டாலும் இனிக்கும்.

_________________________________________

1.இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் 'மடலேறுவேன்' என்ற தலைவனின் அருள் உள்ளத்தைச் சுட்டி , 'உம்மால் இயலுமோ?' எனத் தோழி கூறுவதாக ஒரு பாட்டை எடுத்துக்காட்டியுள்ளார். 

       வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே
        அவையினும் பலவே சிறுகருங் காக்கை
        அவையினும் அவையினும் பலவே குவிமடல்
        ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த
        தூங்கணங் குரீஇக் கூட்டுள சினையே .


இதிலும் தூக்கணங்குருவி பனையின் மீது கூடுகட்டுவது கூறப்பட்டுள்ளது.


Wednesday, October 28, 2020

தொல்காப்பிய வியப்பு 2: உறழ் துணைப் பொருளும் ஆய்வுரை நடையும்

 

தொல்காப்பிய வியப்பு 2: உறழ் துணைப் பொருளும் ஆய்வுரை நடையும்

ஆராய்ச்சி மொழிநடை பற்றிச் சில சொல்லவேண்டிய தேவை கருதி, ஆங்கெலிக்கா  எச் . ஹோஃப்மன்  அம்மையாரின்  SIENTIFIC WRITING AND COMMUNICATION-PAPERS , PROPOSALS, AND PRESENTATIONS¹ என்னும் நூலைப் புரட்டிக் கொண்டிருந்தேன். 


அதிலுள்ள, FAULTY COMPARISONS என்னும் பகுதியைப் படித்த போது , அட! என வியந்தேன். நூற்பா முந்துற்றது.

செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக்(கு)
அப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே " (கிளவியாக்கம்16)

எடுத்துக்காட்டுகளைப் பொறுமையாகப் பார்த்துவிட்டு நூற்பாவின் பொருளுக்குப் போகலாம்.

I.செப்பு
    1) இவள் கண்ணின் இவள் கண் பெரிய ----------சினை - உறழ்ச்சி
    2) இவள் கண் ஒக்கும் இவள் கண் ------------------------௸   - துணை
   
     3) நும் அரசனின்  எம் அரசன் முறை செய்யும்---முதல் - உறழ்ச்சி
     4) எம் அரசனை ஒக்கும் நும் அரசன் ----------------------௸ - துணை

II. வினா
     5) இவள் கண்ணின் இவள் கண் பெரியவோ?-----சினை - உறழ்ச்சி
     6) இவள் கண் ஒக்குமோ இவள் கண்?-------------------௸ - துணை

     7) எம் அரசனின் நும் அரசன் முறை செய்யுமோ?---முதல் - உறழ்ச்சி
     8) எம் அரசனை ஒக்குமோ நும் அரசன்?-------------------௸ - துணை
    
[ எ.கா. 1 & 2 .கண்ணின் = கண்களை விட ;  பெரிய = பெரியவை ; ஒக்கும் = ஒத்திருக்கின்றன .
எ.கா. 3&4 அரசனின் = அரசனை விட ; முறை செய்யும் = முறை(ப்படி ஆட்சி) செய்கிறான் ; ஒக்கும் = ஒத்திருக்கின்றான் . எ.கா. 1-4 இன் பொருள்  5 - 8 க்கும்...]

சேனாவரையர் தந்த எடுத்துக்காட்டுகளை , வசதி கருதி வரிசை மாற்றித் தந்துள்ளேன்.

செப்பு (தல்) - சொல்லுதல், தெரிவித்தலாகிய வாக்கிய வகை (declaration or statement as a sentence type)²
வினா -  வினவுதல் ( தெரிந்த பொருள்தான்)

சினை - உறுப்பு (கண் ஓர் உறுப்பு)
முதல் - உறுப்பை உடைய முழுமை( அரசன் முழுமை-யானவன்)³

உறழ் பொருள் - [ஒன்றுக்கொன்று] மாறுபடக் கூறப்படுவது( சேனா. & நச்.)
துணைப் பொருள்   - ஒப்புமை கூறப்படுவது                                  (              ௸      )

அப்பொருள் - " அவ்வப்பொருட்கு அவ்வப்பொருளே " (என்னும்,  தெய்வச்சிலையார் தரும் பொருள் சுருக்கமும் தெளிவும் உடையது. அதை எடுத்துக்கொள்வோம்)

செப்போ வினாவோ சினையைச் சினையோடு உறழவேண்டும் அல்லது ஒப்பிட வேண்டும் என்பது விதி.

வேறு வகையாகவும் ஒப்பிடல் -  உவமை - இலக்கியங்களில் காணப்படுகின்றனவே!
ஆம். உரையாசிரியர்கள் அவை பற்றிப் பேசாமல் இருப்பார்களா? பேசியிருக்கிறார்கள்.

' அவை அணியியலுள் பெறப்படும் என்றும்,  வழக்கிலும் வருகின்றனவே ? என்பதற்கு அவை உரை என்னும் செய்யுள் ' என்றும் கூறும் சேனாவரையர் விளக்கத்தை மட்டும் மாதிரிக்காகத் தந்து நிறுத்திக்கொள்கிறேன்.

உரையாசிரியர்களிடையிலான கருத்துவேறுபாடுகளும் , அவரவர் கூறும் தொடர்புடைய பிற அமைப்புகளும் காணத்தக்கவைதாம் . இப்போது வேண்டாம். 

ஆங்கெலிக்கா அம்மையாரின் , ஆய்வு நடை  பற்றிய அடிப்படை விதி 21க்குப்
( BASIC RULE 21: Avoid faulty comparisons) போவோம்.  



இளம்பூரணர், கல்லாடனார்,[பெயர் தெரியாத ] ஒருவர் - ஆகிய மூவரும் உறழ், துணை இரண்டையும் உள்ளடக்கிய பொதுச் சொல்லாகப்  பொரூஉ என்பதைக் கொண்டுள்ளனர். இந்தப் பொரூஉதான் comparison.

Faulty comparisons can arise because of ambiguous comparisons and incomplete comparisons.

Ambiguous comparison

👎Example
Our conclusions are consistent with Tamseela et al.(2013)

Comparisons such as this are confusing for the reader, as they compare unlike things.To avoid such Ambiguous Comparisons, make sure that you are comparing like items.

தொல்காப்பியம் " அப்பொருள்" என்று சொல்வது, "like items" எனப்படுகிறது. கீழே அவர் திருத்தமாகத் தரும் எடுத்துக் காட்டில், conclusions  'அப்பொருளா'கிய conclusions உடனேயே ஒப்புக் கூறப்பட்டுள்ளது காண்க:

👍Revised Example
Our conclusions are consistent with the conclusions of Tamseela et al.(2013)

இனி, உறழ் பொருளைப் பார்ப்போம்.

Incomplete comparisons

👎Example
This study tested 24 subjects compare to Menon's study

👍Revised Example
a      This study tested 24 subjects; Menon's study tested only 8 subjects.

b       In this study, the number of subjects tested (24 subjects) was three times that of Menon's    
          study (8 subjects)
         
இங்கு உறழப்படும் 'அப்பொருள்'  number of subjects tested  என்பது.

தொல்காப்பியர் முன்பே சொன்னவற்றைத்தாம் ஆங்கெலிக்கா இப்போது சொல்கிறார் என்று சாதிப்பது என் நோக்கமன்று. ஆறு பகுதிகள் ( Parts)கொண்ட அம்மையார் நூலின் முதல் பகுதியை மட்டும் நுனிப்புல் மேய்ந்த அளவிலேயே பிரமித்தேன்.

ESL( English as a Second Language) advice :
In certain foreign languages , incomplete Comparisons occur often.Avoid these when writing in English என்று விதந்து சுட்டுகிறார் .

தொல்காப்பியம் தெரிந்த ஒருவருக்கு , அம்மையார் கூறும் பொரூஉ ( Comparison ) விவகாரம் புதியதாகத் தோன்றாது.

மறுபுறம்,
தொடக்கநிலை மாணவருக்குப் புரியவைப்பது போன்ற ,  மரபுரையாசிரியர்களின் எளிய, எடுத்துக்காட்டுகள் வழிப்பட்ட புரிதலைக் கடந்து மேம்பட்ட தளத்தில் இந்த நூற்பாவைக் காணவேண்டிய நுட்பத்தை நோக்கி இட்டுச் சென்றிருக்கிறார் அம்மையார்.

- - - - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - - - - - - - -

1.Angelika H. Hofmann, SIENTIFIC WRITING AND COMMUNICATION-PAPERS , PROPOSALS, AND        PRESENTATIONS, OUP, New York,2010.

2.க.பாலசுப்பிரமணியன் ,தொல்காப்பியச் சொற்பொருளடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் , 2016.

3. முதல், சினை என்பன ஒப்பீட்டளவிலானவை. இவையெல்லாம் முதல், இவையெல்லாம் சினை என்னும் நிலைத்த வரையறையில்லை.
சாத்தன் - முதல் எனில் , கை - சினை; கை - முதல் எனில் விரல் - சினை.
" முதலும் சினையும் பொருள்வேறு படாஅ
  நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே " (வேற்றுமை மயங்கியல், 6)
  என்று தொல்காப்பியமே அதனைத் தெளிவுபடுத்துகிறது.

- 8 நவம். 2018 முகநூல் இடுகை இப்போது சற்று விரிவாக...

Tuesday, October 27, 2020

தொல்காப்பிய வியப்பு : கிளவியாக்கமும் கிளீசனும்

 

கிளவியாக்கமும் கிளீசனும்

விளக்க மொழியியல் பயிலத் தரமான அறிமுக நூல்களுள் ஒன்று எச்.ஏ. கிளீசனின் 'An Introduction to Descriptive Linguistics'. அவரது நூலின் ஓரிடம் தொல்காப்பியம் பயின்றோரை வியப்பிலாழ்த்தும்.

சில எடுத்துக்காட்டுகளை முதலில் பார்த்துவிடுவோம்.

' பாடுகிறாள் ' என்பது ஒரு சொல். இது, ' பாடு + கிறு + ஆள் ' என்கிற மூன்று உறுப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. மொழியியலார் மூன்று உருபன்களால் (Morphemes) அமைந்தது என்பார்கள் ( மரபிலக்கண நூலாரும் மொழியியலாரும் பகுப்பதில் சில நுட்ப வேறுபாடுகள் உண்டு என்றாலும் ஏறத்தாழ ஒத்துப் போகும்)

பாடு (தல்) - வினை (செயல்)

கிறு - நிகழ்கால இடை நிலை

ஆள் - பெண்பாலைக் காட்டும் விகுதி

' பாடினான் ' என்றால் இறந்த காலம் . ' பாடு + இன் + ஆன் ' என்பதில் இடையில் உள்ள - இன் - இறந்தகால இடைநிலை.  - ஆன்  ஆண்பாலைக் காட்டும் விகுதி. இதில் பாடும் செயலைச் செய்தவன் ஆண்.

ஆக இந்த உறுப்புகள் பொருள் குறிப்பைக் கொண்டவை.

கிறுபாடாள்* (கிறு பாடு ஆள்)

ஆனின்பாடு*(ஆன் இன் பாடு)

என்றோ மாற்றிக்கொள்ள இயலாது. ஒரு சொல்லுக்குள் பகுபத உறுப்புகள்  இறுக்கமான விதிகளால் அமைகின்றன.


அடுத்துச் சொற்றொடரைப் பார்ப்போம்.

இராமன் இராவணனைக் கொன்றான் - என்பது முழுமையான வாக்கியம்.

இராமன் கொன்றான் இராவணனை

இராவணனைக் கொன்றான் இராமன்

இராவணனை இராமன்  கொன்றான்

கொன்றான் இராவணனை இராமன்

கொன்றான் இராமன் இராவணனை 

என்றெல்லாம் தமிழில் வரிசையை மாற்றலாம் . அடிப்படைப் பொருள் மாறாது.

ஆனால் ஆங்கில வாக்கிய அமைப்பு இறுக்கமானது. அது அம்மொழி இயல்பு. தமிழிலும் வாக்கியங்கள் சிலவற்றில் விருப்பம்போல் சொற்களை இடம்மாற்ற இயலாது.(அது நல்ல நூல் ✓ நல்ல நூல் அது ✓  அது நூல் நல்ல ×  நல்ல அது நூல் ×)

இந்தப் பின்னணியோடு கிளீசனிடம் போவோம்.

எச்.ஏ.கிளீசன் , சொல்லுக்குள் உருபன்களின் வைப்பு முறை,வாக்கியத்தில் சொற்களின் வைப்பு முறை ஆகியன பற்றிப் பேசிவிட்டுத் தனித்தனி வாக்கியங்களின் வைப்பு முறையும் கூட உண்டு என்று சொல்கிறார் :

'பொதுவாக , சொற்களைப் போன்ற இறுக்கமான கட்டமைப்புடையவற்றில் வைப்புமுறை கடும் விதிகளுக்குட்பட்டிருக்கும். வாக்கியங்களைப் போன்று நெகிழ்வாகப் பின்னப்பட்டவை கூடுதல் சுதந்திரமுடையவை. ஆனால் நீள் தொடர் வரிசைகளிலும்,     சில வேளை நுட்பமான வகையில்,  வைப்புமுறையில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் உள்ளன.
எடுத்துக்காட்டாக , 'ஜான் வந்தான். அவன் போனான்.' என்னும் வாக்கியங்கள், [வருதல், போதல் ஆகிய] இரண்டையும்  செய்தவன் ஜான் என்பதை உணர்த்துகின்றன. ' அவன் வந்தான். ஜான் போனான்.' என்றால் மேலுள்ளவாறு பொருள் தராது. குறிப்பான ஒருவர்  முதலில் இடம் பெற்றபின்னரே அதே நபரைக் குறிக்கும் சுட்டுப் பெயர் வரவேண்டும். இது, தருக்கத்திற்கு உடப்பட்டதன்று எனினும் , தனித்தன்மை வாய்ந்த ஆங்கிலக் கட்டமைப்பு.வேறு சில மொழிகளில் விதிகள் வேறுபடுவதால், இதனை மொழியின் பொது இயல்பு எனல் இயலாது '

இந்த வாக்கியவரிசைக் கட்டமைப்பைத் தமிழில் கண்ட முன்னோரை வழிமொழிந்து  அப்போதே சொல்லியிருக்கிறார் தொல்காப்பியர்.

இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப் பெயர்க் கிளவியும்

வினைக் கொருங் கியலும் காலம் தோன்றின

சுட்டுப்பெயர்க்  கிளவி முற்படக்  கிளவார்

இயற்பெயர் வழிய என்மனார் புலவர் (கிளவியாக்கம் 38)


இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப் பெயர்க் கிளவியும் - A specific reference to a person...a pronoun சுட்டுப் பெயர்க் கிளவி முற்படக் கிளவார் இயற்பெயர் வழிய - a person must precede a pronoun வினைக்கொருங்கியலும் - (John) did both


ஏறத்தாழத் தொல்காப்பிய நூற்பாவின் தொடர்கள் கிளீசன் தொடர்களோடு ஒத்துப்போகின்றன.

தொல்காப்பியம் கண்டு கிளீசன் எழுதவில்லை. கிளீசனைக் கண்டு தொல்காப்பியர் விதித்தார் என்று கற்பனை கூட செய்ய முடியாது. இந்த வியத்தகு ஒற்றுமை எப்படி?

This is a peculiarity of English structure என்கிறார் கிளீசன்.   இந்த peculiarity தமிழுக்கும் உரியதாகும். இன்றல்ல ,ஏறத்தாழ இரண்டாயிரமாண்டுகளுக்கு முன் - தமக்கு முந்தைய புலவர் கண்டதை - தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார் . இரு மொழிகளிலும் உள்ள ஒத்த வாக்கிய வரிசைக் கட்டமைப்புத்தான் -  தொல்காப்பியரும் கிளீசனும் ஒருவரையொருவர் காணாமல் , தத்தம் மொழியியல்பு கண்டதுதான் -  ஒத்துப்போதற்குக் காரணம்.

என்றாலும் வியப்புதான்!

எடுத்துக்காட்டிலும் வியப்புத் தொடர்கிறது. சேனாவரையர் 'சாத்தன் வந்தான். அவன் போயினான்' என்று எடுத்துக் காட்டியிருக்கிறார். கிளீசன் John Came. He went away என்ற எடுத்துக் காட்டைத் தருகிறார்.

சேனாவரையர் எடுத்துக்காட்டின் தழுவல் போல் தோன்றுகிறது கிளீசனின் எடுத்துக்காட்டு.
மறுதலை எடுத்துக்காட்டுத் தந்து வேறுபாட்டை விளக்கியுள்ளார் நச்சினார்க்கினியர்.
" அவன் வந்தான் . சாத்தற்குச்¹ சோறு கொடுக்க². எனின், அவனும் சாத்தனும் வேறாய் , அவன் வருந்துணையும் சாத்தன் சோறு பெறாதிருந்தானாவான்³ செல்லும்." அதாவது பொருள் மாறிவிடும் என்கிறார். (¹ சாத்தனுக்கு , ² கொடுத்திடுக , ³ பெறாதிருந்தவன் ஆவான்  என்னும் பொருள் நோக்கிச் செல்லும்)
" But  He came.John went away. certainly could not have that meaning " என்று கிளீசனும் விளக்கியுள்ளார்.
மறுதலையில் கிளீசன் நச்சரைத் தழுவியது போல் காணப்படுகிறது.

கிளீசனை இங்கே நிறுத்திவிட்டு இதனோடு தொடர்புடைய  தொல்காப்பியத்தின் அடுத்த  இரு நூற்பாக்களையும் பார்க்கவேண்டும் என்பது என் ஆசை .

வாக்கிய வரிசை பற்றி விதித்த தொல்காப்பியர் விலக்குகளைத் தொடர்கிறார்.
'முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே' (கிளவியாக்கம் 39)
இதன் நயத்தை , " முற்கூறலாகாது எனப்பட்ட சுட்டுப் பெயர் மொழி மாற்றியும் பொருள் கொள்ளும் நயம் செய்யுட் கண் உண்மையான் அதனகத்தாயின் அமையும் என்று நேர்ந்தவாறாயிற்று" என்னும் கல்லாடர் உரை கொண்டு உணர வேண்டும்.

அவனணங்கு  நோய்செய்தான்  ஆயிழாய் வேலன்
விறன்மிகுதார்ச் சேந்தன்பேர்  வாழ்த்தி - முகனமர்ந்து
அன்னை  யலர்கடப்பந் தாரணியில் என்னைகொல்
பின்னை  யதன்கண் விளைவு

'அவன்' என்னும் சுட்டுப் பெயருக்குப் பின் 'சேந்தன்' என்னும் இயற்பெயர் வரும் இந்த ஒரே பாட்டை  இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் , [பெயர் தெரியத] ஒருவர் - என அனைவரும் காட்டுகின்றனர்.

" இதனாற் சொல்லியது , முற்கூறலாகாது எனப்பட்ட சுட்டுப்பெயர்  மொழிமாற்றியும் பொருள் கொள்ளும் நயம் செய்யுட்கண் உண்மையான் அதனகத்தாயின் அமையும் என்று நேர்ந்தவாறாயிற்று" எனக் கல்லாடர் காட்டும்  நயமான காரணம் பிற உரையாசிரியர் காட்டாதது மட்டுமன்று பொருத்தமானதுமாகும்.

தொல்காப்பிய நோக்கில் ,  செய்யப்பட்ட - பாட்டு, உரை முதலிய - யாவும் செய்யுள்தாம்; இலக்கியம்தாம்.நவீனப் புனைகதைகளுக்கும் கூட சுட்டு முற்கூறும் நயம் பொருந்தும்.

" சுட்டுமுத லாகிய காரணக் கிளவியும்
  சுட்டுப்பெய ரியற்கையின்செறியத்தோன்றும்"
                                                              (கிளவியாக்கம் 40)

என்னும் அடுத்த நூற்பாவைவிட, எடுத்துக்காட்டுகள் சுவையானவை.

சாத்தன் கையெழுதுமாறு⁴ வல்லன் அதனால் தன் ஆசிரியன் உவக்கும்⁵; தந்தை உவக்கும் - இளம்பூரணர்.
( ⁴கையெழுத்தில்/ கையால் எழுதுவதில்.  ⁵உவக்கிறான்/மகிழ்கிறான்)

சாத்தன் கையெழுதுமாறு வல்லன் அதனால் தந்தை உவக்கும் , சாத்தி சாந்தரைக்குமாறு⁶ வல்லள் அதனால் கொண்டான்⁷ உவக்கும் (⁶சந்தனம்;  ⁷கணவன்) - சேனாவரையர்.

தெய்வச் சிலையார் தவிர நச்சினார்க்கினியர், கல்லாடர்,
ஒருவர் ஆகியோரும் , சேனாவரையர் எடுத்துக்காட்டையே
தந்துள்ளனர் (உரை வேறுபாடுகள் பற்றி இப்போது வேண்டியதில்லை).
போற்றப் படுபவை சாத்தனின் கல்வித் திறமையும், சாத்தியின் ஒப்பனைத் திறமையும்.
சாத்தனின் கையெழுத்துத்திறமையால் மகிழ்கிறவன் தந்தை. சாத்தியின் சாந்தரைக்கும் திறமையால் மகிழ்கிறவன் கணவன்.
இவை ஆணும் பெண்ணும் சமூகத்தில் வகித்த பங்கையும் , சமூகப் பார்வையையும் சுவைபடக் காட்டுகின்றன.

எடுத்துக் காட்டுகள் வெறும் இலக்கணப் புரிதலுக்கு மட்டுமன்றி வேறு பயனும் சுவையும் கொண்டவையும் கூட.
-----------------
¶ In general , the more intimate constructions , like words , have the most rigidly fixed order , and the less closely knit constructions , like sentences , allow more freedom.But even longer sequences have some definite restrictions on order , sometimes of a subtle sort. For example John came . He went away. might imply that John did both. But  He came.John went away.
certainly could not have that meaning. A specific reference to a person must precede a pronoun reference to the same person , unless some special device is used. This is a peculiarity of English structure, not of logic. nor of the general nature of speech, since some other languages have quite different rules- H.A.Gleason, An Introduction to Descriptive Linguistics , Oxford & IBH Publishing Co., New Delhi , II edition , 1979, p.57.

- 28 அக்.2017 முகநூல் இடுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வள்ளுவன் கள்வன்*

 வள்ளுவன் கள்வன்* ————————————--- காமம் என்பது பழந்தமிழில் காதலைக் குறித்தது. திருக்குறள் மூன்றாம் பாலின் சொல்லாட்சி எண்ணிக்கையில் வாக்கெடுப...