பேராசிரியர் பார்வையில் 'இலக்கியம்'
- திருக்குறளுக்கோர்* திறவுகோல்
பேராசிரியர் உரை தொல்காப்பியப் பொருளதிகாரப் பின்னான்கியல் தவிரப் பிறவற்றுக்குக் கிடைக்காதது பேரிழப்பே. நல்லவேளை நச்சர் உரை அதனை ஈடுசெய்கிறது என ஒருவாறு மகிழலாம்.
கிடைத்திருக்கும் நான்கியல் உரையிலேயே சான்றோர் செய்யுட்கள்பால் அவர் கொண்ட மதிப்பும் அவற்றில் கொண்டுள்ள ஆழ்ந்தகன்ற புலமையும் புலனாகின்றன.
இவையெல்லாம் தெரிந்தவைதாம்.
அவர் தம் இலக்கிய உணர்திறனையும் புலப்படுத்தாமலிருப்பாரா? முனைப்பான ஓரிடம்:
" பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல் ( குறள் . 675) - என்பது இலக்கணம் கூறியதாகலின் பனுவலோடென்றான்.
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கு மென்று ( குறள். 1112) - என இது இலக்கியமாகலான் தாய பனுவல் எனப்பட்டது."¹
'நெஞ்சே! எந்த மலரைக் கண்டாலும் பலரும் காணும் அப்பூக்களை ஒக்கும்
இவள் கண் என்று மயங்குகின்றாயே!' - என்று செறிவாகப் பொருள் காணலாம்.
அவளைக் காண ஏங்கிய காலத்தில் , நெஞ்சம் எந்தப் பூவைக் கண்டாலும் அவள் கண் இப்பூ ஒக்கும் எனக் கருதியது. அவள் கண்கள் அவனுக்கு மட்டுமே புலனாகும் தனியழகுடைய மலர்கள் அல்லவா? அவளை நேரிற் கண்டபோது , " நெஞ்சே மயங்கி விட்டாயே ! " என்று இடித்துரைக்கிறான். உரையாசிரியர்கள் வெவ்வேறுபட்ட பொருளும் நயமும் கண்டுள்ளார்கள். இலக்கியமாயிற்றே!
பொருள் கருவி காலம் என எண்ணி வினைசெயல் வகை இன்னதென வரையறுப்பது இலக்கணம்.
ஆனால், 'மலர்காணின் மையாத்தி' என்னும் காதலன் காதலியின் ' நலம் புனைந்துரை'க்கும் குறள் எதனையும் இன்னதென வரையறுக்க வில்லை. காதலுணர்வைக் காட்டுகிறது.இது இலக்கியம்.
இவ்வுரைப்பகுதி அவரது இலக்கிய உணர்திறனைப் புலப்படுத்துகிறது. நச்சினார்க்கினியரும் இந்த எடுத்துக்காட்டுகளையே தந்து பேராசிரியர் பார்வையை வழிமொழிகிறார்.
குறளில் இலக்கியமும் உண்டு; இலக்கியம் அல்லாதனவும் உண்டு என்பது அவர்கள் பார்வை.
-------------------------
1 "வனப்பியல் தானே வகுக்குங் காலைச்
சின்மென் மொழியால் தாய பனுவ லோ(டு)
அம்மை தானே அடிநிமிர்(பு) இன்றே"
(தொல். செய். 313)என்னும் நூற்பாவிற்கான உரைவிளக்கத்தில்தான் மேற்குறித்தவை வருகின்றன.
இந்நூற்பாவின் முதலடி இளம்பூரணர் கொண்ட பாடத்தில் இல்லை. இரண்டாமடி இறுசீர்களில் 'சீர்புனைந்து யாப்பின்' என்பன பூரணர் பாடம்.
அறம் பொருளின்பம் மூன்றற்கும் இலக்கணம் கூறுதலும் வேறிடையிடை அவையன்றியும் தாய்ச் (தாவிச்) செல்வதும் எனப் பொருள் காண்கிறார் பேராசிரியர்(இதில் சொல், தொடர்க்குழப்பங்கள் உள).
பேராசிரியர் உரையில் எடுத்துக்காட்டுகளை அடுத்து முறையே " இலக்கணங் கூறியதாகலின் பனுவல் ...." , " இலக்கியமாகலான் தாய பனுவல் ..." என்றுள்ளன.
நச்சர் உரையில் , " இலக்கணங் கூறலின் பனுவலின்...", இலக்கியமாதலில் தாய என்றார்." என்றுள்ளன.
இலக்கணப் பனுவல் = இலக்கணம் கூறும் பனுவல்
தாய பனுவல் = இலக்கணம் கூறாமல் / இலக்கணத்தினின்றும் தாய(இடையிட்ட) பனுவல் எனக் கொள்ளலாம்.
நச்சர் பனுவல் என்பதையே இங்கு இலக்கணம் என்று கொண்டுள்ளாரோ?
( * ஒரு திறவுகோல்தானே சரி ?)
- 25 அக்டோபர்,2020 இடுகை
No comments:
Post a Comment