Friday, October 30, 2020

பாடல் பெற்ற பறவை!


 பாடல் பெற்ற பறவை!

பத்திமையில் தோய்ந்தவர்கள் பாடல்பெற்ற தலமென்பார்கள். 

எனக்கோ , சான்றோர் செய்யுள்களின் தெய்வம் உணா மா மரம் புள் பறை செய்தி முதலியன பின்னரும் தொடரக் காணும்போது சிலிர்க்கும். என்னளவில் அவைதாம் பாடல் சால் சிறப்பின. இது இலக்கியச் சிலிர்ப்பு! பண்பாட்டுச் சிலிர்ப்பு!

வானம்பாடி (1963) என்னும் படத்திற்குக் கண்ணதாசன் " தூக்கணாங் குருவிக்கூடு

தூங்கக் கண்டான் மரத்திலே ..." என்றொரு பாட்டெழுதினார். 

தூக்கணாங்குருவி , பாடல் பெற்ற பறவை.

கிரியாவின் 'தற்காலத் தமிழ் அகராதி' தற்காலப் பெருவழக்கான  தூக்கணாங்குருவி என்னும் ஒரு வடிவத்தை மட்டுமே தருகிறது. சரியானதுதான்.

சென்னைப் பல்கலை.த் தமிழ்ப்பேரகராதி (TAMIL LEXICON) , 

 தூக்கணங்குரீஇ tūkkanan-kurīi , n. "  தூக்கணங்குரீஇ ... பெண்ணைத் தொடுத்த கூடினும் (குறுந்.374)" - என அகரவரிசையில் வாய்த்த முதற் பதிவைத் தருகிறது. 

உ.வே.சாமிநாதையர் குறுந்தொகைப் பதிப்பை எடுத்து 374 ஆம் பாடலைப் பார்த்தேன். அடடா !

அந்தக் காதலர்கள் பற்றி ஊர் பலவாறு அலர் தூற்றிக்கொண்டிருந்தது. காதலியின் தோழி பெற்றோரிடம் பக்குவமாகத் தெரிவித்தாள் (அறத்தொடு நிற்றல் ) .  காதலன் வீட்டாரும் முறைப்படி  பெண் கேட்டுவந்தனர்.   பெண் வீட்டார்  ஏற்றனர். 

நன்றுபுரி கொள்கையின் ஒன்றா கின்றே

முடங்கல் இறைய தூங்கணங்* குரீஇ 

நீடிரும் பெண்ணை°த் தொடுத்த 

கூடினும்¶ மயங்கிய மையல் ஊரே

(* உ.வே.சா. தரும் பாடம் இதுவே. ° பெண்ணை = பனை .   ¶ கூட்டினும் என்பது பாட்டில் எதுகை நோக்கிக் கூடினும் எனத் திரிந்தது)

வளைந்த சிறகையுடைய தூக்கணங்குருவி உயர்ந்த பெரிய பனையில் அமைத்த கூட்டை விடவும் சிக்கலான பல்வகைக் குழப்பம் கொண்டிருந்த ஊராரும் நன்மை புரியும் மணச் செய்தியால் இப்போது  ஒன்றிய கருத்தினராகிவிட்டனர் - என்கிறது பாட்டு. 

பெரும்பாலும் உயரமான பனையில் கூடு கட்டுவது தூக்கணாங்குருவியின் இயல்பு¹. அந்தக் கூடு சிக்கல் மிகுந்ததாக இருப்பது அதன் தன்மை.

சிக்கலுக்குக் கூட்டின் பின்னல் உவமை; குழப்பத்திற்கு அதன் தொங்கல் உவமை. நுண்பொருளுக்குப் பருப்பொருள் !

சான்றோர் செய்யுள்களில் உவமை , தத்துவ இயலின் பிரமாணமோ  அலங்காரவியலின் அணியோ அன்று. அதுவே  பொருளுமாகி நிற்கும். 'உவமப்பொருள்' என்பார் தொல்காப்பியரும்.

துல்லியம் ! பிற்கால இலக்கியம் எதிலும் காண இயலாத துல்லியம்.இந்தத் துல்லியமே சான்றோர் இலக்கியத் தனித்துவம்!  இந்தத் தனித்துவமே இலக்கிய இன்பம்!

சங்கத் தமிழ் நூல்களின் இன்பம் , 'அடங்கா இன்பம்'  என்றார் பாவேந்தர் பாரதிதாசன். சும்மாவா?






ஐயர்  ' தூக்கணங் குருவியின் கூடு : புறநா.225: 11.' என்று ஒத்த பகுதி பற்றிய குறிப்பையும் தருகிறார்.

'வியத்தகு பெரும்படையும் வீரமும் கொண்ட சோழன் நலங்கிள்ளி இருந்தவரை  அவனுக்கு அஞ்சிப் பிற மன்னர்கள்  வலம்புரிச்சங்கினை  முழக்காமல் தூக்கணங்குருவியின் கூடு போலத் தொங்கவிட்டிருந்தனர். இப்போது, போர் கருதாமல் ,  அவர்களின் பள்ளியெழுச்சிக்காலத்தில் அவை முழங்கும் போதும் , நான் நோகின்றேன் ' என்னும் கருத்தமைந்தது ஆலத்தூர் கிழாரின் கையறுநிலைப் பாட்டு.

இங்கே பருப்பொருளுக்குப் பருப்பொருள் என்கிற நிலையில் தூக்கணங்குருவிக்கூடு உவமையாகிறது. குறுந்தொகை (374)நுட்பத்தை  நோக்கக் குறைந்ததாயினும்  இதுவும் துல்லிய உவமைதான்.

தூங்கு (தல்) = தொங்கு(தல்) - தன்வினை .  தூக்கு (தல்) = தொங்கச் செய்(தல்)- பிறவினை.

" தூக்கணங்குருவி tūkkanan-kuruvi , n.  தூக்கணம் + குருவி.  Weaver bird , Ploceus baya , building hanging nests ; தொங்குங் கூடுகட்டும் குருவி வகை." - சென்னைப் பல்கலை.த் தமிழ்ப்பேரகராதி (TAMIL LEXICON).

கூட்டைத் தொங்குமாறு செய்து வசிக்கும் குருவி, தூக்கணங்குருவி .இது காரணப்பெயர் .

'தூக்கணாங் குருவிக்கூடு தூங்கக் கண்டான் மரத்திலே' என்று செவ்வியல் வழக்குத் திரைத் தமிழில் கண்ணதாசனிடம் உயிர்த்தெழுந்து தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறது

என்றுமுள தென்றமிழ்!

எப்போது கேட்டாலும் இனிக்கும்.

_________________________________________

1.இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் 'மடலேறுவேன்' என்ற தலைவனின் அருள் உள்ளத்தைச் சுட்டி , 'உம்மால் இயலுமோ?' எனத் தோழி கூறுவதாக ஒரு பாட்டை எடுத்துக்காட்டியுள்ளார். 

       வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே
        அவையினும் பலவே சிறுகருங் காக்கை
        அவையினும் அவையினும் பலவே குவிமடல்
        ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த
        தூங்கணங் குரீஇக் கூட்டுள சினையே .


இதிலும் தூக்கணங்குருவி பனையின் மீது கூடுகட்டுவது கூறப்பட்டுள்ளது.


2 comments:

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...