Monday, November 9, 2020

- சின் - மின் - தும்

 - சின்  - மின் - தும்





மதுரையில் உறையும் தலைவியர் தத்தம் தலைவர்க்குத் தூதாக விடுத்த வண்டுகளின் ரீங்காரம் அவர்தம் காதலைத் தலைவர்க்குப் புலப்படுத்தின. 


தலைவர்கள் தலைவியரை நோக்கி வந்தனர். 


அவருள் ஒருவனது பரத்தையொழுக்கத்தை அறிந்த தலைவி , ' உன் உடம்பில் அயல் மகளிர் மணம் வீசுகிறது. உன் பொய்ச் சூள் (பொய்ச் சத்தியம்)தவிர்க ' என்கிறாள்.


தலைவன் பொய்ச் சூள் இல்லை எனமறுக்கிறான். 


தோழியும் தலைவிக்கு ஆதரவாகக் குறுக்கிடுகிறாள். 


வாக்குவாதம் தொடர்கிறது. ' தெய்வத்தின் பேரால்  பொய்ச்சூள் உரைக்காதே தெய்வம் வருத்தும் ' என்கிறாள் தோழி. 

' என் ஆணை பொய்யில்லை. என்றாலும் இவள் (தலைவி) சுமத்திய குற்றத்தால் என் சூள் பொய்யென்று கருதித் தெய்வம் என்னை வருத்தக்கூடும் ' என்கிறான். 


இந்த இடத்தில் ,


'அவ்வாறு வருத்து முன் நீ அவ்விறைவன் திருவடியை நெருங்கி வேண்டி அவன் சினத்தை ஆறுதல்படுத்துவாயாக' என்று தோழியிடம் வேண்டுகிறான்.


' நீங்கள் சென்று நான் கூறியவற்றை எல்லாரும் உணரும்படி கூறுங்கள் " என்று தன் ஏவலர்களை நோக்கி ஆணையிடுகிறான்.


' யாவரும் முருகப்பெருமான் திருவடிகளைத் தொழுவதற்கிடமான குளிர்ந்த திருப்பரங்குன்றத்திற்குச் சென்று ,  மலர் தூவுவோம் ; படையல்களைச் செய்வோம் ; தாளத்துடன் இசைப்பாட்டைப் பாடித் துதிப்போம் ; தடாரிப்பறை முழக்கம் எழுப்புவோம் ' எனத் தன்னையும் உட்படுத்தித் தோழி ஏவலர் அனைவரிடமும் கூறுகிறான்.

( பரிமேலழகர் உரையைப் பின்பற்றி இயன்றவரை தற்காலத் தமிழில் தந்திருக்கிறேன்)



தலைவன், தலைவி , தோழி ஆகியோர் உரையாடல் வெளிப்படையாக நிகழ்கிறது.


ஆனால் தோழியிடம் வேண்டுதல், ஏவலர்க்கு ஆணையிடல், நாம் வழிபடுவோம் என 

யார்யாரை   நோக்கிக் கூறினான் என்கிற விவரம் பாட்டில் இல்லை.


பிறகு , பரிமேலழகர் எப்படி அப்படி உரை காண்கிறார் ?


பாட்டைப் பார்த்துவிடுவோம் :( பாட்டிலுள்ள வரிசை மாறாமல், அடிகளைச் சற்றே நெகிழ்த்து , பொருளுக்காகத் தொடர்களைப் பிரித்துக் காட்டியுள்ளேன்)


" சுடும் இறை (1)

 ஆற்றிசின் அடி சேர்ந்து (2)

 சாற்றுமின் மிக (3)

 ஏற்றுதும் மலர், ஊட்டுதும் அவி , தோற்றுதும் பாணி ,      எழுதுங் கிணை (5)

 

முருகன் தாள் தொழும் தண்பரங்குன்று (4) "   [ பரிபாடல் 8 : 79 - 82]



இந்த அடிகளுக்கு அவர் பொருள் தந்து¹ பிறகு இலக்கணக் குறிப்புத் தருகிறார். நாம் முதலில்  குறிப்பைப் பார்ப்போம் , "   'ஆற்றிசின்' என்றது , தோழியை நோக்கி ;         'சாற்றுமின்' என்றது , தன் ஏவலிளையரை நோக்கி. உளப்பாடுகள் [ '-தும்'கள் ] அவளையும் அவரையும் நோக்கி. " என்கிறார்.


' - சின் ' 

 'ஆற்றி' என்பதன் இறுதியில் உள்ள '- இ' முன்னிலை விகுதி;   '- சின்' முன்னிலை அசை ( தொல்.சொல். இடை. 26 " மியாஇக ... " ). -சின் அசை பெற்ற இடங்கள் முன்னிலை ஒருமை ஏவலாகவே ஆட்சி பெற்றுள்ளன என்கிறார் மோ. இசரயேல்²


'- மின்'  

என்பது முன்னிலைப் பன்மை கூறுவது (தொல்.சொல். வினை. 25 " இர்ஈர்... " )


' - தும் ' 

என்பது தன்மைப் பன்மை கூறுவது (௸. 5 " அவைதாம் அம்ஆம் எம்ஏம்... ")

இது முன்னிலையாரையும் படர்க்கையாரையும் ஒருங்கு உளப்படுத்தற்கும் தனித்தனி உளப்படுத்தற்கும் உரியது என்பர்.


இந்த - சின், மின் , தும் என்னும் இடைச்சொற்களைக் கொண்டு ஒரு காட்சியைக் கண்முன் நிறுத்துகிறார் பரிமேலழகர்


இப்பாட்டை இயற்றிய நல்லந்துவனார்க்கும் இதுவே கருத்தாக இருக்கலாம். இல்லை யெனில் இத்தொடர்கள் பாலறி கிளவி மயங்கி வழுப்பட நேரிடும். 


நல்லந்துவனார் எண்ணிச் செய்திருந்தாலும் பரிமேலழகர் எடுத்துச் சுட்டாவிடில் என்போன்றோர் இந் நாடகக்காட்சி நயம் கண்டிருக்க இயலாது.



ஆசிரியப் பாக்களால்  இயன்ற குறுந்தொகை , நற்றிணை , அகநானூறு, ஐங்குறுநூறு  ஆகிய எட்டுத்தொகை அகநூல்கள் யாவும் உலகியற் சாயல் கொண்ட , ஆனால் குறிக்கோள் நிலையிலான , இலக்கண நெறியின்பாற்பட்ட  செய்யுள்களைக் கொண்டவை; முற்றிலும் புலனெறி வழக்கின; மிகப்பெரும்பாலும் ஒருவர் கூற்றாயமைவன.


மாறாகக் கலித்தொகையும்  பரிபாடலும் உலகியற்சார்பு மிகுந்த நாடகப்பாங்கிலான பாடல்கள் விரவிய தொகுப்புகளாகும். 


கூற்று மாற்றமு மிடையிடை மிடைந்தும்

போக்கின் றாக லுறழ்கலிக் கியல்பே (செய்யுளியல் 156)


என்னும்  நூற்பாவுரையில் , " நாடகச் செய்யுட்போல வேறுவேறு துணிபொருள வாகியும் பல தொடர்ந்தமையின்..." என உறழ்கலியின் நாடக இயல்பைச் சுட்டுவார் பேராசிரியர்.  இங்கு நாடகம் எனப்படுவது கூற்றும் மாற்றமுமாகிய உரையாடற் பாங்கைக் குறிப்பது வெளிப்படை.


பரிபாடலும் கலித்தொகை போன்றது; உரையாடல் இடை மிடைந்தது ; நாடகச் செய்யுட்கு வாய்ப்பானது.


ஆனால்,  உரையாடல் அல்லாத நாடகக் காட்சியொன்று காணப்படுவதை இலக்கணத்தால் இனங்கண்டு காட்டியிருப்பது  பரிமேலழக நுட்பம்.


-----------------


1. பரிமேலழகர் தரும் பொருள்:


(1)[ என்னை ]* இறை [ துயர் மிகுமாறு ] சுடும்

(2)[ நீ சென்று ]அவன் அடியைச் சேர்ந்து ஆற்றுவாயாக

(3)[ இவ்வுரையை ] எல்லார்க்கும் அறிவிம்மின்


(4)முருகன் தாளை [ யாவரும் ]தொழும் பரங்குன்றத்தின்கண்[சென்று]


(5)மலரை ஏற்றுதும் ; அவியை ஊட்டுதும் ; பாணித் தாளத்தையுடைய பாட்டைத் தோற்றுவிப்பேம்; கிணை ஒலியை எழுவிப்பேம்


*[  ] பகர அடைப்பினுள் உள்ளவையும் பரிமேலழகர் எழுதியவைதாம். 

2. ஆ.சிவலிங்கனார் (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் -   சொல்லதிகாரம்  (உரை வளம்) இடையியல் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1986,ப.121.




No comments:

Post a Comment

வேரில் வெந்நீர் விடவேண்டாம்!*

  எனது மொழியியல் அறிவு பாமர அளவினது . நான் அறிந்தவரை விளக்க மொழியியல் என்பது சமகால/ஒருகால மொழியமைப்பை விளக்குவது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்...