'விரவும் பொருளும் விரவும்' - ஒரு திறவுகோல்
தொல்காப்பிய அகத்திணை இயலின் ,
மரபு நிலை திரியா மாட்சிய ஆகி
விரவும் பொருளும் விரவும் என்ப (48)
என்னும் நூற்பாவிற்கு இதுவரை கூறப்பட்டுள்ள உரைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதன் மூலம் , அது வேறு சில நூற்பாக்களுக்குப் பொருள் காணும் திறவுகோலாகவும் பயன்படும் என்று கருதுகிறேன்.
இயன்றவரை பல்வேறு உரைக் கருத்துகளைச் செறிவாகத் தொகுத்துக் கொண்டு வேறுபாடு மாறுபாடுகளின் ஊடாக முடிபை எட்டும் வகையிலான இக்கட்டுரை ஓர் உரைத்தொகுப்புப்போல் அமைவதைத் தவிர்க்க இயலவில்லை.
===========================================
இதற்கு முந்தைய ஏறத்தாழ இருபது நூற்பாக்கள் பாலைத்திணை பற்றியவை. அவற்றின் தொடர்ச்சியாகக் கொண்டு இதனையும் பாலைக்குரிய மரபுணர்த்தும் நூற்பா என்பார் இளம்பூரணர்.
"பாலைக்கு ஓதிய பாசறைப் புலம்பற் கண்ணும் தேர்ப்பாகற்குக் கூறுதற்கண்ணும் முதற்பொருளும் கருப்பொருளும் விரவுதலாம் . இந்நிகரன பிறவும் கொள்க " எனப் பொருள் கூறும் இளம்பூரணர் , அவ்வாறு, வினை முடித்த வழிக் கார் காலம் வந்ததாயின் ... அக்காலத்தைப் பற்றி வருதலின் மரபுநிலை திரியாதாயிற்று' எனக் காரணம் காட்டுகிறார்.
' புலனெறி வழக்கம் செய்துவருகின்ற வரலாற்று முறைமை திரியாத மாட்சியவாய் , பாலைத்திணைக்கும் கைக்கிளை பெருந்திணைக்கும் உரியவாய் விரவும் பொருளும் விரவி வரும் ' என்பார் நச்சர்.
முறைமை இயல் கெடாமலும் மாண்பு தருவனவுமாகி திணைக்குரிப் பொருளாய் ஐந்திணை ஒழுக்கத்தோடு அமைய அகத்துறைகளில் கலந்து வரத்தகுவன பிறவும் வந்து பயிலும் என்பது ச.சோ.பாரதி கருத்து. இவர் இளம்பூரணர் கருத்தை மறுக்கிறார்.
பாரதி இந்நூற்பாவுரைக்கு , ' முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே' என்னும் நூற்பாவுரையிலேயே ," இம்மூன்றுமேயன்றி இவைபோலச் சிறவாத பிற பொருளும் உளவாதல் அகத்திணையியல் ' மரபுநிலை திரியா ....' என்னும் 45 ஆம் சூத்திரத்தால் தெளியப்படும் " என்று தோற்றுவாய் செய்துவிடுகிறார்.
அகத்திணை மரபுக்கு மாறாகாத மாட்சிமையுள்ளனவாய் , புதிதாக வந்து கலக்கும் கருத்துக்களும் கலக்கும் என்கிறார் புலவர் குழந்தை.
மேலை நூற்பா வரை பிரிவொழுக்கம் ஒன்றனையே கூறினார். இந்நூற்பாவால் அப்பிரிவொழுக்கமும் ஏனைய ஒழுக்கங்களும் மயங்கிவருமாறு கூறுகின்றார் என்பது உரைவளப் பதிப்பாசிரியர் மு. அருணாசலம்பிள்ளை கருத்து.
இச்சூத்திரம் கைக்கிளை பெருந்திணைகள் அகத்திணையில் கலந்து வருமாறு கூறுகின்றது என்பது உரைவளப் பதிப்பாசிரியர் சிவலிங்கனார் கருத்து.
அகத்திணைக்குரிய மரபிலக்கணத்திற்றிரியாமல் அதற்கு மாண்பு தருவனவாய் உரிப்பொருள் நிமித்தமாக விரவி வரும் பொருள்களும் அகத்திணை மாந்தர் கூற்றினுள் விரவி வரும் என்பது பாலசுந்தரம் கருத்து.
இவ்வனைவரும் அவரவர் நோக்கில் மரபுநிலை திரியாமல் விரவுவனவாகச் சிற்சில துறைகளைச் சுட்டிக்காட்டுகின்றனர்; பலர் அவற்றுக்குரிய பாக்களையும் எடுத்துக்காட்டியுள்ளனர்.
நச்சர் பாலை , கைக்கிளை , பெருந்திணை மூன்றையும் சிவலிங்கனார் கைக்கிளை பெருந்திணையையும் கருதுகின்றனர்.
" புணர்தல் பிரிதல் ... அவற்றின் நிமித்தம் என்றிவை ... திணைக்குரிப் பொருளே " (16)
என்னும் நூற்பாவில் நிமித்தம் என்பதனுள் மேல் உரையாசிரியர் கூறும் துறைகள் பலவும் அடங்கிவிடுமென்றே தோன்றுகிறது. பாலசுந்தரம் 'உரிப்பொருள் நிமித்தமாக' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தொல்காப்பியம் விதந்து சுட்டாதவற்றை நிமித்தம் என்பதனுள் அடக்கிக்கொள்ளலாமே! போகட்டும்.
இவ்வுரைகாரர்கள் முந்தைய நூற்பாக்களின் தொடர்ச்சியாகவோ , ஐந்திணையுள் உரிப்பொருள் அல்லது கைக்கிளை , பெருந்திணை விரவுதல் பற்றியதாகவோ இதனைக் கொண்டுள்ளனர்.
இவ்வுரைகளின் வன்மை மென்மைகள் தனியே ஆராயத்தக்கன.
மேற்சுட்டிய நூற்பாவிற்குப் பிறகு பத்து நூற்பாக்களை வைத்து அகத்திணை இயலை நிறைவு செய்துள்ளார் தொல்காப்பியர்.
முந்தைய உரையாசிரியர் எவரும் மேற்படி நூற்பாவை அதன் பிந்தைய பத்து நூற்பாக்களோடு தொடர்பு படுத்தவில்லை. அவ்வாறு தொடர்பு படுத்தும் வாய்ப்பைக் கொண்டு பிந்தைய நூற்பாக்களுக்குப் பொருள் காணும் திறவுகோலாக இந்நூற்பா அமைந்துள்ளது என்பதே இக்கட்டுரையின் மைய இழை.
இந்நூற்பா தொகுத்துக்கூறல் (யாப்பருங்கல விருத்தி, நன்னூல் ஆகியவற்றில் 'தொகுத்துச் சுட்டல்' ) என்னும் உத்தியிலமைந்தது எனலாம். ஆனால் தொகுத்தது இன்னது எனச் சுட்டாமையே சிக்கலுக்குக் காரணம்.
அதே தொடர் ( " மரபுநிலை திரியா மாட்சிய வாகி" )
-------------------------------------------------------------------------------------
மரபுநிலை திரியா மாட்சிய வாகி
உரைபடு நூல்தாம் இருவகை இயல( 95 )
... ... ... ... ...
என முதலடியில் மாற்றமின்றி மரபியல் நூற்பா ஒன்றும் உள்ளது. பின்னர் வரும் நூற்பாக்களில் வகைகள் வகுத்துக் கூறப்படுகின்றன. இவ்வாறே மேற்குறித்த அகத்திணையியல் நூற்பாவைக் கொள்ளலாம்.
இரு தடைகள் இருக்கின்றன.
ஒன்று, தொல்காப்பியம் உரி ஒன்றனை மட்டுமே உரிப்பொருள் என்கிறது; முதல் கரு இரண்டனையும் யாண்டும் பொருள் எனச் சுட்டவில்லை¹. எனவே விரவும் பொருள் என்பது உரையாசிரியர்கள் கொண்டது போல் உரிப்பொருளே எனலாம்.
இரண்டு, மேற்குறித்த மரபியல் நூற்பாவினுள்ளேயே வகைக்குத் தோற்றுவாய் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அகத்திணை இயல் நூற்பா குறிப்பாகக் கூட எதையும் சுட்டவில்லை. சிக்கலே அது பொத்தாம்பொதுவாக நிற்பதுதான். வெறும் தொடர் ஒருமை கொண்டு இதுவும் பிந்தைய நூற்பாக்கள் பற்றியது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது.
என்றாலும் ஒரு முயன்று பார்க்கலாம்.
ஒத்த தொடர் ( "விரவியும் வரூஉம்" )
-----------------------------------------------------------------
அகத்திணை இயலின் ' விரவும் பொருளும் விரவும்' என்னும் தொடர் அப்படியே வேறிடத்தில் வரவில்லை. ஒத்த தொடர்கள் உள்ளன.
'வினை பயன் மெய் உரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமத் தோற்றம்' (உவமையியல் 1)
'விரவியும் வரூஉம் மரபின என்ப' (௸. 2) - என்னும் உவமையிலின் முதலிரண்டுள் இரண்டாவது நூற்பாத் தொடர் ஒத்த தொடராகும்.
இது முதல் நூற்பாவின் இலக்கணத்தோடு தொடர்புடையது. அதாவது முந்தியதன் தொடர்ச்சி. வினை, பயன் முதலியவற்றைத் தனித்தனியாகவோ , ஒன்றுக்கு மேற்பட்டவற்றையோ அடிப்படையாகக் கொண்டு உவமை அமையலாம் என்பது கருத்து.விரவியும் வரும்; விரவித்தான் வரவேண்டும் என்பதில்லை.
இங்கேயே விரவுதல் பற்றிப் பார்த்துவிடலாம். ஒன்றன் இடத்தில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டவையோ வரலாம் என்பது விரவுதல்(கலத்தல் - ஒன்றுக்கு மேற்பட்டவை ஒருங்கிருத்தல். மயங்குதல் - ஒன்றுக்கு மேற்பட்டவை தத்தம் தனித்தன்மை கடந்து ஒன்றாதல் . கலத்தலும் மயங்கலும் விரவுதல் என்பதனோடு ஒத்தவை; ஒரே பொருளன அல்ல ; ஒரு பொருட்பன்மொழிகள் போல் வழங்கப்படுவதுண்டு)
ஓரளவு ஒத்த தொடர் ( "உரியவை உரிய" )
-----------------------------------------------------------------------------
இரு திணைப் பிரிந்த ஐம்பாற் கிளவிக்கும்
உரியவை உரிய பெயர்வயி னான (பெயரியல் 7)
இன்னதற்குரிய வினையீறு இன்னது என்பதுபோல் பெயர்களில் ஈறுகளை வரையறுக்க இயலாது. எனவே ஆங்காங்கு உரியவை உரிய என்பது இளம்பூரணர்,
சேனாவரையர் ஆகியோர் கருத்து.
'பெயரீறுகள் சில பால் காட்டலாம். மற்றவையும் விரவி வரும்' என்று விரவு (தல்) என்னும் சொல்லைப் பயன்படுத்தி இந்(பெயரியல் 7) நூற்பாவிற்குக் கருத்துக் கூறலாம்.
இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே (எச்சவியல், 58)
உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய (௸,59)
என்னும் அடுத்தடுத்த சொல்லதிகார நூற்பாக்களில் இரண்டாவது நூற்பாத் தொடரை ஒத்த தொடராகக் கொள்ளலாம்.
இடைச்சொற்கள் எல்லாமே ஒருவகையில் வேற்றுமை - பொருள் வேறுபடுத்தும் - சொற்கள்தாம் (58), உரிச்சொல்லுள் வேற்றுமைச் சொல்லாதற்குரியனவும் உள ; எல்லாம் உரியன அல்ல என்பது கருத்து.
சேனாவரையரும் நச்சரும் , ' உரியன உரியவாம் . எல்லாம் உரியனவாகா' என்பர்.
அவ்வாறே, முந்தைய முதல், கரு, உரிப்பொருள்களோடு மரபுநிலை திரியா மாட்சியவாய் விரவும் பொருளும் சில உள ; எல்லாம் விரவா என அகத்திணை இயல் நூற்பாவுக்கு (48)ப் பொருள் காணலாம்.
விரவுவன:
1. உள்ளுறையுவமும் ஏனையுவமும்
2. கைக்கிளைக்குறிப்பும் பெருந்திணைக் குறிப்பும்
3. கலியும் பரிபாட்டும்
விரவாதன:
1. உள்ளுறைக்கு நிலமாகிய கருப்பொருளுள் தெய்வம்
2. அகனைந்திணையுள் சுட்டிக் கூறும் பெயர்
உள்ளுறையுவமும் ஏனையுவமும்
----------------------------------------------------------------
"உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்
தள்ளாது ஆகும் திணையுணர் வகையே " (ப.49)
'உள்ளுறைக்கண் வரும் உவமும் ஒழிந்த உவமும் என இருவகையாலும் திணை உணரும் வகை தப்பாது ஆகும்' என்பது இளம்பூரணர் கருத்து. இது வெளிப்படையானது.
உள்ளுறை உவமத்தை உணர்த்தும் நூற்பா (51) வுரையில் " வெறிகொள் இனச் சுரும்பு..." என்னும் பாட்டில் உள்ளுறை இருப்பதைக் காட்டும் இளம்பூரணர், " இதனுட் காவியும் தாமரையும் கூறுதலான் மருதமாயிற்று " எனவும் , ஏனை உவமம் உணர்த்தும் நூற்பா (52) வுரையில் " வளமலர் ததைந்த ... " (ஐங்குறுநூறு 369) என்னும் பாட்டைக் காட்டி , " இஃது ஊடற்பொருண்மைத்தேனும், வேனிற் காலத்து நிகழும் குயிற் குரலை உவமித்தலின் பாலைத்திணையாயிற்று" எனவும் கூறுகிறார்.
திணையுணர்த்தலில் இருவகை உவமைகளுமே வரலாம் என்பதை எடுத்துக்காட்டுகளாலும் வலியுறுத்துகிறார் பூரணர்.
" உள்ளுறை உவமமே திணையுணரும் உரிப்பொருட்பகுதிகளைச் சிறப்பித்தற்கு உரித்தாகும் . ஏனைய உவமம் அவ்வாறு அகவொழுக்க வகைகளுக்குச் சிறவாதாகையால் அகத்துறைகளில் திணையுணரும் பகுதிகளுக்கு அத்துணையா ஆட்சி பெறுதலில்லை.' தள்ளாதாகும் ' என்றதனால் , ஏனை உவமம் அருகிப் பயிலும் என்பதும் உள்ளுறையுவமம் அவ்வாறன்றிப் பெருவரவிற்றாம் என்பதும் பெறப்படும் " என்பார் ச.சோ.பாரதியார்.
" உள்ளுறை உவமும் அஃதல்லாத ஏனை உவமமும் ஆகிய இரண்டும் திணையுணரும் முறைமை தப்பாமல் கருவியாகி வரும் உவம வகைகளாம் ... அகத்திணையை உணர்தற்குச் சிறந்தது உள்ளுறையுவமமாதலின் அது முற்கூறப்பட்டது " என்கிறார் பாலசுந்தரம்.
உள்ளுறையுவமம் ஏனை யுவமம் இரண்டும் விரவி வந்து திணையுணர்த்தும் என்பது இவர்கள் கருத்து.
நச்சினார்க்கினியர் தமக்கேயுரிய பார்வையில், உள்ளுறையுவமமே ஏனை உவமம் எனக் கூறும்படி உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாய் நின்று , அகத்திணை உணர்தற்குக் கருவியாகிய உள்ளுறை உவமம் போல வரும் என்று பொருள் கூறுகிறார்.
மற்றொன்று விரித்தல் போல் தோன்றினாலும் சற்றே நச்சர் கருத்தை விரிவாகக் காண்போம்.
கலித்தொகை 71ஆம் பாடலைக்காட்டி ( 1 - 8) " நனி விரைந் தளித்தலின் நகுபவள் முகம் போலப் / பனியொரு திறம்வாரப் பாசடைத் தாமரைத்/ தனிமலர் தளைவிடூஉந் தண் துறை நல்ஊர!(6-8) என்பதில் ,
" துனி[ துன்பம்] மிகுதலாலே பெருக்கு மாறாது வீழ்கின்ற கண்ணீர் காமத்தீயால்சுவறி[வறண்டு] அறுதலையுடைத்தாய் [துளித்துளியாய்] ஒழுக அவ்வருத்தத்தைக் கண்டு விரைந்து கணவன் அருளுதலின் சிறிது மகிழ்பவள் முகம் போல என்ற ஏனையுவமம் தாமரை மலர் பனிவாரத் தளை விடும்[ மொட்டவிழும்] என்ற உள்ளுறை உவமத்தைத் தருகின்ற கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்து நின்றது" என்பது நச்சர் கருத்து.
இக்கலிப்பா உரையில், " பசிய இலைக்குள்ளே நின்ற தாமரையினது தனித்த மலர் தனக்கு வருத்தத்தைச் செய்யும் பனி ஒரு கூற்றிலே வடியாநிற்க[வடிய]த் தான் மிகச் செவ்வியின்றி அலரும் குளிர்ந்த துறையினை உடைய நல்ல ஊரனே " என்று உரை கண்டுள்ளார் நச்சர்.
காமக்கிழத்தி கூற்றாகக் கொள்ளும் நச்சர் , " நீ ஒருகாலத்து அளித்தலின் [ அன்பு காட்டுதலின்] சிறிது செவ்வி பெற்றாளாயிருக்கும்படி தலைவியை வைத்தாய் ; என்னை வருத்துதல் கூறவேண்டுமோ எனக் காமக்கிழத்தி உள்ளுறை உவமம் கூறினாள் " என்கிறார் நச்சர்.
'முகம் போல ' என்பது ஏனை உவமம். 'தாமரை மலர் பனிவாரத் தளைவிடும்' என்பதில் உள்ளுறை உவமம் பொதிந்துள்ளது. இஃது ஏனை உவமத்தின் பொருளுமாகும்.
இனி, அகத்திணை இயல் உரை:" இவ் ஏனை உவமம் உள்ளுறை உவமத்திற்குச் சிறப்புக்கொடுத்து உள்ளுறையுவமம் போலத் திணையுணர்தலைத் தள்ளாது[தடுக்காமல்] நின்றவாறு காண்க " என்பது அவரது விளக்கம்.
இவ்வளவு நுட்பமும் , " நல்லிசைப் புலவர் செய்யுட் செய்யின் என்றவாறு...ஏனையோர் செய்யின் தானுணரும் வகைத்தாய்(அகத்திணை இயல் 49) நிற்கும் என்றவாறாம் " என்பார் நச்சர். அஃதாவது , " உள்ளத்தான் உணரவேண்டாது சொல்லிய சொற்றொடரே பற்றுக்கோடாகத் தானே உணர நிற்கும் " (௸ நூற்பாவுரை) என்பார்.
நச்சரும் உள்ளுறையுவமும் ஏனையுவமும் விரவும் என்னும் கருத்தினரே. ஆனால் அது நுட்பமான தளத்தில் நிகழும் என்கிறார்.
உரை வளப் பதிப்பாசிரியர் ஆ. சிவலிங்கனார் முற்றிலும் மாறுபட்டு , " இச் சூத்திரம் உள்ளுறையுவமமே திணையுணர்த்தும் ஏனையுவமம் உணர்த்தாது என்பது கூறுகின்றது" என்கிறார்.
" பொருளைக் குறிப்பிற் காட்டுவது உள்ளுறை. பொருளும் வெளிப்படையாக அமைய வருவது ஏனையுவமம். ஏனையுவமத்திற் காணப்படும் வெளிப்படைப் பொருளே திணையுணர்த்துமாதலின். உவமம் திணையுணர்த்தத் தேவையில்லை " என்கிறார்.
இவர் கருத்தை ஏற்பதாயின் ஏனை உவமம் திணையுணர்த்தலில் விரவாப்பொருள் என ஏற்கலாம். விரவும் பொருள்தானே விரவும்!
கைக்கிளைக்குறிப்பும் பெருந்திணைக்குறிப்பும்
-------------------------------------------------------------------------------------------
" காமஞ் சாலா இளமை யோள்வயின்
ஏமஞ் சாலா இடும்பை யெய்தி
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே "(அகத். 53)
"மேல் நடுவணைந்திணைக்குரிய பொருண்மையெல்லாம் கூறினார். இது கைக்கிளையாமாறு உணர்த்துதல் நுதலிற்று" என்கிறார் இளம்பூரணர்.
" காமம் அமையாத இளையாள்மாட்டு, ஏமம் அமையாத இடும்பை எய்தி, புகழ்தலும் பழித்தலுமாகிய இரு திறத்தால், தன்னொடும் தனக்கும் அவட்கும் ஒத்தன புணர்த்து, சொல் எதிர் பெறானாய்த் தானே சொல்லி இன்புறுதல், பொருந்தித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு "
" பொருந்தித்தோன்றும் ' என்றதனால் அகத்தொடு பொருந்துதல் கொள்க. என்னை? ' காமஞ்சாலா ' என்றதனால் தலைமைக்குக் குற்றம் வராதாயிற்று. ' புல்லித்தோன்றும் ' என்றதனால், புல்லாமற்றோன்றும் கைக்கிளையும் கொள்ளப்படும். அஃதாவது - காமஞ்சான்ற தலைமகள் மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி. அது களவியலுள் கூறப்படுகின்றது"
களவியல் 4 ஆம் நூற்பவரையில் " காட்சி முதலாகிய இத்துணையும் கைக்கிளைக் குறிப்பாம்" என்பார். அவை: காட்சி, ஐயம், துணிவு; தலைமகனுக்கேயுரியன. இக்கருத்தை நச்சினார்க்கினியர் 'முன்னைய நான்கும் முன்னதற் கென்ப' (அகத். 55) என்னும் சூத்திரத்தால்
" காட்சியும் ஐயமும் தெரிதலும் தேறலும் " என்னும் நான்கையும் கொள்வர்.
"இச்சூத்திரத்தானே கைக்கிளைக்குச் சிறந்த பொருள் இது என்பது உணர்த்துகின்றார் " என்பார் நச்சினார்க்கினியர்.ஏறத்தாழ இளம்பூரணர் கருத்தேயாயினும் நச்சர் தமக்கேயுரிய முறையில் , " அவளுந் தமருந் தீங்கு செய்தாராக ... தான் ஏதஞ் செய்யாது தீங்கு பட்டானாக ... நிரனிறையாக உரைக்க " என்பார்; " காமஞ் சான்ற இளமையோள் கண் நிகழும் கைக்கிளை இத்துணைச் சிறப்பின்று " என்பார்; " வினைவல பாங்காயினார் கண்ணும் இவ்விதி கொள்க " என்பார்.
சற்றே முந்தையோர் கருத்தினின்றும் வேறுபடினும் மாறுபாடின்றிக் " கைக்கிளை ' என்பது ஒரு மருங்கு பற்றிய குற்றமற்ற காதலாகும் " என்பர் ச.சோ.பாரதி.
பாலசுந்தரமும், " இச்சூத்திரத்தான் கைக்கிளைத் திணையை உணர்தற்குரிய பொருட்குறிப்பாமாறு கூறுகின்றார் " என்பார்.
புலவர் குழந்தை, இடும்பை எய்தலும் தருக்கிய புணர்த்தலும் சொல்லி இன்புறுதலும் என உம்மைத் தொடர்களாக எண்ணிக்கொள்வார்.
" இது, ஒத்த காமமாகிய களவொழுக்கத்திற்குப் புறம்பானதாகையால் கூடாதென்பதாம் " எனப் பிற உரையாசிரியர்களிடமிருந்து மாறுபடினும் ஒருவாறு கைக்கிளை , பெருந்திணைகளை உடன்பட்டுக் குறிப்பதை , இவரது பெருந்திணை விளக்கத்தில் காண்போம்.
அனைவரும் குறிஞ்சிக்கலிப் பாக்களையே ( கலி. 56 & 58) எடுத்துக்காட்டுவர். இவை கைக்கிளைத்திணைப் பாடல்களா? குறிஞ்சித்திணைப் பாக்களா? கைக்கிளை விரவிய குறிஞ்சித்திணைப் பாடல்களா?
கைக்கிளை குறித்த தொல்காப்பிய இலக்கண ஆய்வு விரிப்பிற் பெருகும். இந்த அகத்திணை இயல் நூற்பாவிலும் களவியல் நூற்பாவிலும் தொல்காப்பியர் கைக்கிளைக் குறிப்பு என்றே சுட்டுவது கருதத் தக்கது.
" முதல், கரு , உரிப்பொருள் என்பவை முல்லை முதலாய திணைகளை உணர்தற்குப் பொருளாமாறு போல இது கைக்கிளைத் திணையை உணர்தற்குப் பொருளாம் என்க" என்னும் பாலசுந்தரம் கருத்து 'விரவும் பொருளும் விரவும்' என்பதற்கு இணங்கி நிற்பது நினைவில் கொள்ளத்தக்கது.
ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே(அகத்திணை இயல் 54)
இது பெருந்திணை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
ஏறிய மடற்றிறமும், இளமை தீர்திறமும், தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமும், மிக்க காமத்து மாறாய திறனொடு கூட்டி, சொல்லப்பட்ட நான்கு திறமும் பெருந்திணைக் கருத்து.
கைக்கிளை புணராது நிகழும் என்றமையால், இது புணர்ந்தபின் நிகழும் என்று கொள்க. ஏறிய மடற்றிறம் தலைமகற்கே உரித்து " என, நெய்தற்கலிப்பாட்டொன்றைக் காட்டியுள்ளார்(கலி.138).
இளமை தீர் திறமாவது , இளமை நீங்கிய திறத்தின்கண் நிகழ்வது அது மூவகைப்படும் ; தலைமகன் முதியனாகித் தலைமகள் இளையளாதலும்,தலைமகள் முதியளாகித் தலைமகன் இளையனாதலும் , இவ்விருவரும் இளமைப் பருவம் நீங்கியவழி அறத்தின் மேல் மனம் நிகழ்தலன்றிக் காமத்தின்மேல் மனம் நிகழ்தலும் என - எனப் புறப்பொருள் வெண்பாமாலை, மருதக்கலி(புறப். இருபாற் பெருந்திணை, 14 , ௸ 13 , கலி.94) ஆகியவற்றிலிருந்து எடுத்துக்காட்டுகிறார்.
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறமாவது : தெளிவு ஒழிந்த காமத்தின் கண்ணே மிகுதலும் என்றவறு. இது பெரும்பான்மை தலைமகட்கே உரித்து - என நெய்தற்கலி யிலிருந்து(கலி.142) எடுத்துக்காட்டுகிறார்.
மிக்க காமத்து மிடலாவது : ஐந்திணைக்கண் நிகழும் காமத்தின் மாறுபட்டு வருவது - எனச் சுட்டி அவற்றை விளக்கிப் புறப்பொருள் வெண்பாமாலைப் பாக்களைக் ( இருபாற்பெருந்திணை 1 & 6) காட்டுகிறார்.
" இது ...பெருந்திணை இலக்கணம் கூறுகிறது " என்னும் நச்சினார்க்கினியர் வழக்கம்போல் பலவாறு விரிப்பினும் இளம்பூரணர் கருத்திற்கு முற்றாக முரணி ஏதும் சொல்லவில்லை ; பெரும்பாலும் கலித்தொகையிலிருந்தே எடுத்துக்காட்டுகிறார் (கலி. 139, 94 , 142 , 92 ).
பதவுரையில் பெரிதும் நச்சரைப் பின்பற்றும் ச.சோ.பாரதி " இந்த[ ஏறிய மடற்றிறம் முதலிய]நான்கும் புரைபடு காம இழிவொழுக்கத்தின் வகை " என்கிறார்.
" அறிவுடை மக்கள் தன்மைக்கு அமையாத இப்புரை ஒழுக்கத்தைப் பெரிய ஒழுக்கம் என்றது, அது ஒழுக்கத் தொடு படாது என்பது குறிக்கும் அவையல் கிளவியாகும் " என்கிறார்.
ஆனால், நற்றிணை (152), திணைமாலை நூற்றைம்பது (16), குறள் (1133), கலித்தொகை (138 , 139 , 65) ஆகியவற்றோடு கம்பராமாயணம் , சீவக சிந்தாமணிப் பாடல்களையும் காட்டுகிறார். இவர் காட்டும் சங்க இலக்கியப் பாக்கள் அன்பினைந்திணையுள் தொகுக்கப்பட்டவையே.
புலவர் குழந்தையும் பதவுரையில் பெரிய வேறுபாடு காட்டவில்லை ; " கைக்கிளை, பெருந்திணையாகிய இவ்விரண்டொழுக்கமும் ஐந்திணைக்குப் புறம்பாக மிகச்சிலரிடைத் தவறுதலானும் அறியாமையானும் நடைபெறினும் , இவையும் அகவொழுக்கத்தின் சார்பாகவே நடைபெறுவதால் ஒழுக்கமாகவும் , ஒத்த காமத்திற்கு ஒவ்வாத ஒருதலைக்காமமும் பெருந்திணையும் ஐந்திணைக்குப் புறம்பானதால் , 'அகப் புறம்' என்றும் ஐந்திணையை ' அகம் ' என்றும் வரையறை செய்தனர் " என்கிறார். இவரும் கலித்தொகைப்பாட்டுகளையே ( 139 , 94 , 142 , 62 ) காட்டுகிறார்.
'ஏறிய மடற்றிறம்...' என்னும் நூற்பா, " பெருந்திணையை அறிதற்குரிய குறிப்பாமாறு கூறுகின்றது " என்கிறார் பாலசுந்தரம். இவரும் கலித்தொகைப் பாக்களையே காட்டுகிறார் ; " கைக்கிளையும் பெருந்திணையும் முற்ற முற்ற அகத்திணை ஒழுக்கங்களே என்பதை ஓராத இடைக்காலத்து நூல்களும் அவர் கொள்கையினைச் சார்ந்துரைத்த உரையாசிரியன்மார் உரைகளும் தொல்காப்பிய நெறிக்கும் தமிழ் மரபிற்கும் ஏலாதனவாகும் " என்கிறார்.
" முன்னைய நான்கும் முன்னதற் கென்ப " (அகத். 55) என்னும் நூற்பாவிற்குப் பொருள் கொள்வதில் உரையாசிரியர்களிடையே கருத்து வேறுபாடுகளும் மாறுபாடுகளும் காணப்படுகின்றன. இதற்கு பொத்தாம் பொதுவாகத் தொகை சுட்டும் இந்நூற்பாவும்
காரணம். இந்நூற்பாவில் இரண்டிடங்களில் இடம்பெற்றுள்ள 'முன்' என்பது இடமுன்னா காலமுன்னா ? நான்காவன எவை? என்பதில் தெளிவில்லை.
பெருந்திணைக் குறிப்புகள் நான்குக்கும் முந்தைய நிலைகளாகிய, ஏறா மடற்றிறம் , இளமை தீராத்திறம் , தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறம் , மிக்க காமத்தின் மாறாகாத்திறம் என்பன முற்கூறப்பட்ட கைக்கிளைக்காம் என்பது இளம்பூரணர் கருத்து. பாலசுந்தரம் , இக்கருத்தையொட்டி உரைவரைந்துள்ளார்.
இயற்கைப் புணர்ச்சிக்கு முந்தைய காட்சி முதலிய நான்கையும் கைக்கிளைக்குரிய என இதனாற் கொள்வர் நச்சர். இதனைப் புலவர் குழந்தையும் உரை வளப் பதிப்பாசிரியர்கள் அருணாசலம்பிள்ளையும் சிவலிங்கனாரும் ஏற்று வழிமொழிவர்.
கைக்கிளை பெருந்திணைக் குறிப்புப் பற்றிய நூற்பாக்களுக்கு முன்னதாய 1) நிகழ்ந்தது நினைத்தல், 2) நிகழ்ந்தது கூறி நிலையல், 3)மரபுநிலை திரியாது விரவும் பொருள் விரவல், 4) உள்ளுறை உவமம் திணையுணர் வகையாதல் ஆகிய நான்கும் முற் கூறிய கைக்கிளைக்காம் என்பர் ச.சோ.பாரதி.
சிற்சில வேறுபாடுமாறுபாடுகள் இருப்பினும் 'முன்னைய நான்கும் ...' என்னும் இந்நூற்பா [அகப்பொருட்]கைக்கிளை பற்றியதென்பது அனைவர்க்கும் ஒப்ப முடிந்ததாகும்.
கைக்கிளை, பெருந்திணைக் குறிப்புகள் , அகப்பொருட்கைக் கிளை ஆகியன அன்பினைந்திணையுள் மரபுநிலை திரியா மாட்சியவாயின் விரவலாம் என்று கொள்ளலாம்.
கலியும் பரிபாட்டும்
---------------------------------
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உரிய தாகும் என்மனார் புலவர் (அகத். 56)
" நாடக வழக்காவது , சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல் . அஃதாவது செல்வத்தானும் , குலத்தானும் ஒழுக்கத்தானும் , அன்பினானும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும் , அவ்வழிக் கொடுப்போரு மின்றி அடுப்போருமின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும் , பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும் , பிறவும் இந்நிகரனவாகிச் சுவைபட வருவனவெல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறுதல் .
உலகியல் வழக்காவது , உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது.
பாடல் சான்ற புலன் நெறி வழக்கமாவது , இவ்விருவகையானும் பாடல் சான்ற கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்க் கூறப்படுகின்ற அகப்பொருள்.
கலியே பரிபாட்டு ஆஇருபாவினும் உரியது ஆகும் என்மனார் புலவர் என்றது , கலியும் பரிபாடலும் என்னும் இரண்டு பாவிலும் உரிமையுடைத்தாம் என்று உரைப்பர் புலவர் என்றவாறு .எனவே இவை இன்றியமையாதன என்றவாறு . ஒழிந்த பாக்கள் இத்துணை அகப்பொருட்கு உரியவாய் வருதலின்றிப் புறப்பொருட்கும் உரியவாய் வருதலின் ஓதாராயினர் . புறப்பொருள் உலகியல்பானன்றி வாராமையின் , அது நாடக வழக்கம் அன்றாயிற்று " என்கிறார் இளம்பூரணர்.
" புனைந்துரை வகையானும் உலக வழக்கத்தானும் புலவராற் பாடுதற்கமைந்த புலவராற்று வழக்கம் கலியும் பரிபாடலுமென்கின்ற அவ்விரண்டு கூற்றுச் செய்யுளி டத்தும் நடத்தற்கு உரியதாமென்று கூறுவர் புலவர் " எனப் பொருள்காணும் நச்சினார்க்கினியர், " அகத்திணையாகிய காமப் பொருளே புலனெறி வழக்கத்திற்குப் பொருள் " என்கிறார்.
தமக்கேயுரிய நோக்கில் , " பாடல் சான்ற என்றதனால் பாடலுள் அமைந்தன எனவே பாடலுள் அமையாதனவும் உள என்று கொள்ள வைத்தமையின் , கைக்கிளையும் பெருந்திணையும் பெரும்பான்மையும் உலகியல் பற்றிய புலனெறி வழக்காய்ச் சிறுபான்மை வரும் என்று கொள்க " என்கிறார்.
நச்சர் i.ஐந்திணைப் பொருளாய புலனெறி வழக்கின் காமம் , ii. கைக்கிளை பெருந்திணையாகிய உலகியலே பற்றிய புலனெறி வழக்கின் காமம் என்று வகைப்படுத்துகிறார். இதிலிருந்து இவர் ஐந்திணையை நாடக வழக்காகக் கொள்வதை உய்த்துணரலாம். இவ்விரு வழக்கிலும் கலிப்பா வரும் என்பதனால் அதனை முன்வைத்ததாகக் கூறும் நச்சர் பரிபாடல் தெய்வ வாழ்த்து உட்படக் காமப் பொருள் குறித்து உலகியலே பற்றி வரும் என்கிறார்.
ஆசிரியம், வெண்பா, வஞ்சி ஆகியன அகம்,புறம் என்னும் இரண்டிற்கும் பொதுவாய் வரும் என்னும் நச்சர் கருத்துக்குப் பாட்டும் தொகையும் சான்றுகள்.
" உலகியலை ஒட்டி உயர் குறிக்கோளோடு சுவைபடக் காட்டும் 'பொருநு' வகை மரபுகளோடும் உலக மக்களின் ஒழுகலாற்றொடும் சிறப்புறப் புலவரால் அமைக்கப்படும் அகத்திணை மரபுகள் கலியும் பரிபாடலுமாகிய இரு பாவகைகளிலும் சிறப்புரிமை கொண்டு பயிலும் " என்பார் ச. சோ . பாரதி. கலியும் பரிபாட்டும் அகத்திணைக்குச் சிறந்து பயில்வன; ஆசிரியம் முதலியன அக, புறத்திணைக்குப் பொதுவாய் வருவன என ஓராற்றான் நச்சர் கருத்தை வழிமொழிகிறார்.
" மக்கள் வாழ்க்கையில் இயல்பாகக் காணப்படும் ஒழுக்கம் 'உலக வழக்கம்'எனப்படும்.
அவ்வுலக வழக்கங்களிற் சிறந்தனவாயுள்ளவற்றை அறிஞர்கள் ஒன்றாகத் தொகுத்துப் பிற்கால உலக வழக்கம் திருத்தமாக நடைபெறுதற்பொருட்டுப். பாடல்களாகப் பாடி வைப்பர். அப்பாடல்களாகிய நூல் வழக்கம் - நாடக வழக்கம் எனப்படும். உலக வழக்கும் நாடக வழக்கும் சேர்ந்தே புலனெறி வழக்கம் அல்லது செய்யுள் வழக்கம் ஆகும் " என்பார் புலவர் குழந்தை.
கலி, பரிபாட்டுகள் அகத்திற்குச் சிறந்தன. ஆசிரியம் முதலியன அகம், புறங்களுக்குப் பொது என்பதை இவரும் ஏற்கிறார்.
" கலிப்பா தொகையும் வகையுமாக விரிந்து பல்கித் தரவு முதலாகிய உறுப்புக்கள் அமைய வருதலானும் பரிபாட்டு இது பா என்னும் இயல் நெறியின்றிப் பொதுவாய் நிற்றற்கும் உரித்தாய்ப் பண்ணொடு கூடி வருதலானும் அவற்றது யாப்பருமை நோக்கி விதந்தோதி. ஏனைய பாக்களை உம்மையாற் கொள்ள வைத்தார் என்க"
என்னும் பாலசுந்தரம் கருத்தில் ஏனைய பாக்களும் கொள்ளப்படுதல் கருதத்தக்கது.
" புலனெறி வழக்காவது இலக்கண நெறியான் அமைந்துவரும் நல்லிசைப் புலவோர்தம் எழுவகைச் செய்யுள் மரபாகும். புலன் = இலக்கணம்... புலனெறி வழக்காகிய செய்யுளின்கண் அகப்பொருள் பற்றி வருவன இருவகை வழக்கும் கலந்தே வரும் " எனப் பாலசுந்தரம் கூறுவதில் , 'கலந்தே வரும்' என்பதினும் 'விரவியே வரும்' எனலாமோ!
தொல்காப்பிய உரைவளப் பதிப்பாசிரியர் சிவலிங்கனார் விளக்கம் வேறுபடுகிறது.
அவர் " நாடகச் செய்யுள் , உலகியற் செய்யுள், புலனெறி வழக்குச் செய்யுள் எனச் செய்யுள் எனச் செய்யுள் மூவகைப்படும் என்றார் ஆசிரியர் என்க " என்று கூறி முறையே மனோன்மணீயம் முதலியவற்றையும் ஐங்குறுநூறு முதலியவற்றையும் கலித்தொகை முதலியவற்றையும் மூன்றற்கும் காட்டுகிறார்.
இவ்வடிப்படையில் " நாடக வழக்கத்தையும் உலகியல் வழக்கத்தையும் சேர்த்துப் பாடுதல் அமைந்த புலனெறி வழக்கம் என்பது கலிப்பா, பரிபாடற்பா என்னும் அவ்விருவகைப் பாக்களிலும் பாடுதற்குரியதாகும் என்பர் புலவர் " என்னும் அவரது கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
முந்தைய கைக்கிளை , பெருந்திணை இலக்கணங்களுக்குப் பெரும்பாலும் அனைத்து உரையாசிரியர்களும் கலித்தொகைப் பாக்களை எடுத்துக்காட்டியிருப்பதோடு , இந்த நூற்பாவை இணைத்துப் பார்க்க வேண்டும். கைக்கிளை பெருந்திணைகளின் தொடர்ச்சியே இது.
நிலம் என்பது செய்யுளையும் புலன் என்பது இலக்கணத்தையும் குறித்துத் தொல்காப்பியம் வழங்கியிருப்பதைச் சிறப்புப்பாயிரவுரையில் அகச் சான்றுகளால் நிறுவியுள்ளார் பாலசுந்தரம்.
புலனெறி என்பது இலக்கண நெறி. புலன் நெறி வழக்கமாவது ... அகப்பொருள் என இளம்பூரணரும் அகத்திணையாகிய காமப் பொருளே புலனெறி வழக்கத்திற்குப் பொருள் என நச்சினார்க்கினியரும் கூறுவது அகப்பொருள் இலக்கண நெறிக்கு உட்பட்டது என்பது கருதியே.
ஆசிரியப் பாக்களால் இயன்ற குறுந்தொகை , நற்றிணை , அகநானூறு, ஐங்குறுநூறு ஆகிய எட்டுத்தொகை அகநூல்கள் யாவும் உலகியற் சாயல் கொண்ட , ஆனால் குறிக்கோள் நிலையிலான இலக்கண நெறியின்பாற்பட்ட செய்யுள்களைக் கொண்டவை; முற்றிலும் புலனெறி வழக்கின.
அந்தணர் அருமறை மன்றல் எட்டுப்பற்றி விளக்கும் இறையனார் அகப்பொருள் உரையாசிரியர்
" அவ்வெட்டும் உலகியலில் உள்ளன; இஃது அன்னது அன்று; இல்லது இனியது நல்லது என்று புலவரால்
நாட்டப்பட்டதோர் ஒழுக்கமாகலின், இதனை உலக வழக்கத்தினோடு இயையான் என்பது "( நூற்பா 1 உரை)
என்கிறார். இவர் புலனெறி வழக்கைச் சமயநெறி நோக்கிக் கொண்டு செல்கிறார். அது தொல்காப்பிய நெறியன்று ; ஆயினும் புலனெறி வழக்கு உலக வழக்கு அன்று என்னும் அளவில் பொருந்துவதேயாம்.
நாடக வழக்கு , உலகியல் வழக்கு என்பன நாட்டிய சாத்திரத்தின் நாட்டிய தர்மி , லோக தர்மி என்பனவற்றின் தமிழாக்கங்கள் என வையாபுரிப்பிள்ளை கருதுவதைச் சுட்டி,
தொல்காப்பியம் புலனெறி வழக்குப் பற்றியும் பேசுகிறது. புலனெறி வழக்கு நாடக உலகியல் வழக்குகளிலிருந்து வேறானது என்கிறார் சிவத்தம்பி² . மேலும்
" கலியாப்பு நடனத்திற்கும் நாடகத்துக்குமிடையே தொடர்புகளைக் கொண்டிருந்தது என்பதை ஆதாரபூர்வமாக அறியமுடிகிறது. மேலும் அவ்வகைக் கலியின் முன்மாதிரியாக நிகழ்த்தப்பட்ட நாட்டிய நாடகங்கள் இக்காலத்துக்கு[நிலப்பிரபுத்துவ மேலாண்மைக் காலம் என அவர் கொள்ளும் காலத்துக்கு] மட்டும் உரியன எனக் கொள்ள முடியாது . அவை நீண்டகாலமாக வழக்கிலிருந்து வருவதுடன் விறலியரும் கோடியரும். மற்றையவரும் நிகழ்த்திய நடனங்களில் அவற்றின் உள்ளடக்கம் பற்றியோ யாப்புப் பற்றியோ எதுவும் தெரியாவிட்டாலும் , அவர்களாற் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும். கலி அவ்வகையான நிகழ்வுகளிலிருந்தே தோன்றி வளர்ச்சி பெற்றது³என்கிறார். அவர்தம் ஆய்வுக் கருத்துகள் ஈண்டு விரிப்பிற் பெருகும்.
நாடக, உலகியல் வழக்கு மேலோங்கி நிகழ்கலை சார்ந்து உருப்பெற்றுப் புலனெறியில் உள்வாங்கப்பட்டுச் செம்மையுற்ற வடிவங்களாகக் கலித்தொகை பரிபாடல்களைக் கொள்ளலாம்.
இவை பாடல் சான்ற- அதாவது பாடுதற்கு அமைந்த - புலனெறி வழக்கின எனவே பாடல் சாலாதனவும் உள என்பது பெறப்படுகிறது.
புலனெறியில் நாடக உலகியல் வழக்குகள் விரவலாம் என்பதும் அவற்றின் பாவகைகள் இவை என்பதும் இந்நூற்பாவால் விளங்குகிறது.
உள்ளுறையும் தெய்வமும்
--------------------------------------------------
உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு, எனக்
கெடல் அரு மரபின் உள்ளுறை ஐந்தே (பொருளியல் 46)
என ஐந்தில் ஒன்றாக (உள்ளுறை) உவமமும் இடம்பெற்றுள்ளது.
இங்கு, " உள்ளுறையாவது பிறிதொரு பொருள் புலப்படுமாறு நிற்பதொன்று. அது கருப்பொருள் பற்றி வருமென்பது அகத்திணை இயலுள் கூறப்பட்டது" என ஐந்துக்கும் பொதுவான வரையறை தந்துள்ளார் இளம்பூரணர்.
" ஒன்றனை உள்ளுறுத்து ... வெளிப்படாமற் கூறலின் ...உள்ளுறை " எனக் கூறும் நச்சரும் உடனுறை, உவமம், சுட்டு, சிறப்பு நான்கும் கருப்பொருள் சார்ந்து தோன்றும் என்றே கருதுகிறார். நகைபற்றித் தெளிய இயலவில்லை.
பாலசுந்தரம் சற்றே வேறுபட்டு இவற்றை விளக்கினாலும் , உள்ளுறை பற்றிய பொதுக்கருத்தில் மாறுபாடில்லை.
'மரபுநிலை திரியா மாட்சி' என்பதையொத்த ," கெடலரு மரபின் ..." என்னும் அடைத்தொடரை இங்கும் ஆளுகிறார் தொல்காப்பியர். இது மேலும் ஆராய்தற்குரியது.
உவமையியலில் பத்துக்கு மேற்பட்ட நூற்பாக்களைக் கொண்டு உள்ளுறை உவமத்தை விளக்கியுள்ளார் பேராசிரியர். ஏறத்தாழப் பேராசிரியரைப் பின்பற்றியுள்ளார் பாலசுந்தரம்.
திணையுணர்தற்கு உள்ளுறையுவமமும் ஏனையுவமமும் விரவலாம் என்பதைக் கூறிய அள அளவில், உள்ளுறையையும் தொடர்பு கருதி அகத்திணை இயலிலேயே வரையறுக்கிறது தொல்காப்பியம். இவ்வரையறையில் விரவலாகாது என்னும் விலக்கு விதந்தோதப்படுவதே இங்குக் கருதத்தக்கது.
உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் எனக்
கொள்ளும்' என்ப குறி அறிந்தோரே (அகத். 50)
உள்ளுறுத்து இதனொடு ஒத்துப் பொருள் முடிக' என
உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம் (௸.51)
என்னும் அடுத்தடுத்த நூற்பாக்களில் முதலில் உள்ளுறைக்கான அடிப்படை (நிலம்) - விரவாதென விலக்கிய தெய்வத்தைச் சுட்டுவதன் மூலம் - கரு (ப் பொருள்) எனப் பெற வைப்பது ஒரு நயமுமாம்.
உள்ளுறையில் தெய்வம் விரவுதல் கூடாது.
அகனைந்திணையும் பெயர் கொளும் முறையும்
-------------------------------------------------------------------------------------------
மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர் (அகத். 57)
புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது
அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே (௸.58)
'அகன் மக்கள் நுதலிய ஐந்திணையும் ' என மொழிமாற்றிக்கொண்டு , இளம்பூரணர்.
" அகத் திணையுள் கைக்கிளை பெருந்திணை ஒழிந்த ஐந்திற்கும் உரியவாகிய நிலமும் காலமும் கருப்பொருளுமன்றி மக்களைப்பற்றி வரும் புணர்தலும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும் ஊடலும் என்று சொல்லப்பட்ட ஐந்து பொருண்மையும், சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார் (அவ்வைந்திணைக் கண்ணும் தலை மகனாகப் புலனெறி வழக்கம் செய்ய வேண்டின்) நாடன் ஊரன் சேர்ப்பன் என்னும் பொதுப்பெயரானன்றி ஒருவர்க்கு உரித்தாகி வரும் பெயர் கொள்ளப்பெறார் புலவர்" என 57ஆம் நூற்பாவிற்குப் பொருள் காண்கிறார் இளம்பூரணர்.
அடுத்த நூற்பாவிற்கு," ஒருவர் பெயர் புறத்திணை மருங்கிற் பொருந்தினல்லது, அகத்திணை மருங்கின் வருதல் இல்லை. இதனாற் சொல்லியது ஒருவர்க்குரித்தாகி வரும்பெயர் அகத்திணை பற்றி வரும் கைக்கிளை பெருந்திணையினும் வரப் பெறாது என்பதூஉம், புறத்திணையுள் வரும் என்பதூஉம். ஆண்டும் பாடாண் பாட்டுக் காமம் பொருளாக வரின் அவ்வழி வரூஉம் என்பதூஉம் கூறியவாறு. இதனான் அகப்பொருள் ஒருவரைச் சாராது பொதுப்பட வருமென்பது கொள்க" என்று பொருள் காண்கிறார்.
ஆக அன்பின் ஐந்திணையுள் மட்டுமன்றி அகத்திணை பற்றி வரும் கைக்கிளை பெருந்திணையுள்ளும் பொதுப்பெயரானன்றி ஒருவர்க்கு உரித்தாகிவரும் பெயரால் சுட்டப்பெறார் என்கிறார் பூரணர்.
" நடுவணைந்திணைக்கண்ணும் திணைப் பெயரான் கூறினன்றி ஒருவனையும் ஒருத்தியையும் விதந்து கூறி அவரது இயற்பெயர் கொள்ளப்பெறார்... ... இது பெயரெனப்பட்ட கருப்பொருளாதலின் கூற்றிற்குரிய தோழியும் பாங்கனும் முதலிய வாயிலோரையும் பொதுப்பெயரானன்றி இயற்பெயர்த் தொடக்கத்தன கூறப்பெறா ரென்று கொள்க " என நச்சர் நன்கு வரையறுக்கிறார்.
அடுத்த நூற்பாவிற்கு, " புறத்திணை கருப்பொருளாயும், அது தான் உவமமாயும் அகத்திணையுட் கலக்கும் " என விளக்கம் தருகிறார்.
புலவர் குழந்தை பெரிதும் நச்சரை ஏற்கிறார்.
'மக்கள் நுதலிய...' என்னும் நூற்பாவிற்கு " ஐந்திணையும் (உம்மையான்) கைக்கிளையும் பெருந்திணையும் புலனெறி வழக்காகி வருமிடத்து. இவராவார் இவர் எனத் தெரிந்துணருமாறு தலைமக்களின் இயற்பெயர் கொள்முதலைப் பெறமாட்டா " என்பது முந்தைய உரையாசிரியர் வழி நின்று பாலசுந்தரம் வரைந்த உரை.
" பெயர் சுட்டிக் கூறப்படும் காமம் பற்றிய நிகழ்ச்சி புறத்திணைப் பகுதியுள் அதற்குரிய துறையாகப் பொருந்திவரினல்லது ஒருவரை வரைந்துணர்த்தும் இயற்பெயர்கள் அகத்திணைப் பகுதிக்கண் அளவுதல் இல " என்பது அடுத்து நூற்பாவிற்கான அவது உரை.
ச. சோ.பாரதி காப்பியங்களையும் உட்கொண்டு அளவுதல் என்பதற்கு அளவளாவுதல் எனப் பொருள் கண்டு தலைவன் தலைவியர் அளவளாவுமிடத்துப் பெயர் சுட்டார்; பிற இடங்களில் சுட்டப்பெறுவர் எனக் கூறுவது பொருந்தாது.
பாரதி தவிரப் பிறர் தம்முள் சிற்சிலவாறு வேறுபட்டாலும் அடிப்படையில் அகத்திணையுள் சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார் என்பதில் ஒருமித்த கருத்தினரே.
அஃதாவது அகத்திணையுள் சுட்டிக் கூறும் பெயர் விரவுதல் - அளவுதல் - இல்லை.
முடிபுகள்:
மரபு நிலை திரியா மாட்சிய ஆகி
விரவும் பொருளும் விரவும் என்ப (அகத்.48) என்னும்
மேற்குறித்த நூற்பா, தொடர்ந்துவரும் பிந்தைய பத்து நூற்பாக்களின், விரவுவன இவை விரவாதன இவை என்னும் வரையறுப்பின், அடிப்படை நெறியைத் 'தொகுத்துக் கூறல்' என்னும் உத்தியிலமைத்து முன்னிறுத்துவது என்பது இந்த ஆய்வின் முடிபு.
௧) முதல், கரு, உரி என்ற மூன்றே முறை சிறந்தன (அகத். 3)என வரையறுத்த பின் , உள்ளுறையுவமம் ஏனையுவமம் ஆகியனவும்திணை உணர்த்தற்கு தள்ளாதாகும் என்பதால் அம்மூன்றுடன் இவ்வுவமைகளும் விரவும் என்பதாயிற்று.
பொருளியலில் 'உள்ளுறை ஐந்து' என்னும்போதும் 'கெடலரு மரபின்' என்று அடைகொடுத்திருப்பது ' 'மரபுநிலை திரியா மாட்சியவாகி' என்பதை நினைவூட்டுதல் காண்க.
௨)கைக்கிளைக்குறிப்பு, பெருந்திணைக் குறிப்பு ஆகியன பற்றிய நூற்பாக்களும் 'முன்னைய நான்கும்...' என்னும் நூற்பாவும் அன்பினைந்திணையுள் கைக்கிளை , பெருந்திணைகள், ' மரபுநிலை திரியா மாட்சிய ' வாயின் விரவலாம் என்கின்றன.
அவ்வாறு கைக்கிளை, பெருந்திணை விரவுதற்கு உரையாசிரியர்கள் மிகப்பெரும்பாலும் கலித்தொகைப் பாக்கள் சிலவற்றையே காட்டியிருப்பது தற்செயலன்று.
௩) புலனெறி என்பது இலக்கண நெறி. அகப்பொருளிலக்கண நெறி பிறழாப் பாடல்கள் ஆசிரியப் பாவால் இயன்றுள்ளன.
நாடக, உலகியல் வழிப்பட்ட பாடல்களுள் புலனெறியில் பாடுதற்கமைந்தன கலி, பரிபாட்டுகளால் இயன்றுள்ளன.
இவை நாடகமரபில் வந்த வடிவங்கள் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை அகத்திணையுள் விரவும்.
'பாடல் சான்ற' என்றதனால் , பாடல் சாலாதனவும் உள . அவை புலனெறி வழக்குக்கு மாறானவை; மரபுநிலை திரிந்தவை; மாட்சியற்றவை; எனவே அகத்திணையுள் விரவா - என உய்த்துணர முடிகிறது.
௪) கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட உள்ளுறையுள், கருப்பொருளுள் முதலாவதாகிய 'தெய்வம்' விரவுதல் கூடாது.
௫) அன்பினைந்திணையுள்ளும் மரபுநிலை திரியாது ஐந்திணையுள் விரவும் கைக்கிளை பெருந்திணைகளுள்ளும் அகத்திணை மாந்தர் இன்னார் எனச் சுட்டிப் பெயர் கூறப்பெறார் ; சார்த்து வகையாலன்றி விதந்தோதும் பெயர்கள் விரவுதல் கூடாது.
இவ்வரையறைகளோடு அகத்திணை இயல் நிறைவுறுகிறது.
__________________________________________________
குறிப்புகள்
1. வாணி அறிவாளன்,' செவ்விலக்கியப் புரிதல்கள், பக்.9 - 21.
நெஞ்சறிந்த நிலையில் முதலும் கருவும் பொருளாகா என்னும் நிலைநின்று இந்நூற்பாவுக்கு உரையாசிரியர்கள் பொருள் கண்டனர் எனக் கூறவியலாது .
உரையாசிரியர்கள் முதல், கரு, உரி மூன்றையுமே பொருள் என ஆண்டுள்ளனர்.
2. சிவத்தம்பி, பண்டைய தமிழ்ச்சமூகத்தில் நாடகம் , ப.100.
3. ௸.ப.261.
துணை நூல்கள்
————————
அருணாசலம்பிள்ளை, மு. (ஆய்வுரை), தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணை இயல் உரைவளம் , மதுரைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வெளியீடு, மதுரை , 1975.
குழந்தை, புலவர் (உரை.), தொல்காப்பியம் பொருளதிகாரம் குழந்தையுரை , வேலா பதிப்பகம், ஈரோடு , 1968.
சிவலிங்கனார், ஆ. (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் - சொல்லதிகாரம் (உரைவளம்) பெயரியல் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை , 1984.
சிவத்தம்பி,கார்த்திகேசு , பண்டைய தமிழ்ச்சமூகத்தில் நாடகம் (மொ.பெ.அம்மன்கிளி முருகதாஸ்), குமரன் புத்தக இல்லைம், கொழும்பு-சென்னை, 2004.
சிவலிங்கனார், ஆ. (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் - சொல்லதிகாரம் (உரைவளம்) எச்சவியல் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை , 1988.
சிவலிங்கனார், ஆ. (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் - பொருளதிகாரம் (உரைவளம்) அகத்திணையியல் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை , 1991.
நக்கீரனார் (உரையாசிரியர்), களவியல் என்ற இறையனார் அகப்பொருள் , திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953.
பாலசுந்தரம், பாவலரேறு ச. (உரை.) , தொல்காப்பியம் எழுத்ததிகாரம் ஆராய்ச்சிக்காண்டிகையுரை, பெரியார் பல்கலைக்கழகம் , சேலம் , 2012.
பாலசுந்தரம், பாவலரேறு ச. (உரை.) , தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சிக்காண்டிகையுரை, அகத்திணையியல் - புறத்திணையியல் , பெரியார் பல்கலைக்கழகம் , சேலம் , 2012.
பாலசுந்தரம், பாவலரேறு ச. (உரை.) , தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சிக்காண்டிகையுரை, களவியல்-கற்பியல்-பொருளியல்- மெய்ப்பாட்டியல்-உவமவியல் , பெரியார் பல்கலைக்கழகம் , சேலம் , 2012.
வாணி அறிவாளன், செவ்விலக்கியப் புரிதல்கள், அருண் அகில் பதிப்பகம், சென்னை, 2020.
வெள்ளைவாரணன், க(ஆய்வுரை), தொல்காப்பியம் பொருளியல் உரைவளம், பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1983.
வெள்ளைவாரணன், க(ஆய்வுரை), தொல்காப்பியம் உவமையியல் உரைவளம், பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1985.
வெள்ளைவாரணன், க(ஆய்வுரை), தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியல் உரைவளம், பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1994.
- திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் புதன் வட்டக் கருத்தரங்கில் ( டிசம்பர் 2014) இதன் செறிவான வடிவம் முன்வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment