Tuesday, October 27, 2020

தொல்காப்பிய வியப்பு : கிளவியாக்கமும் கிளீசனும்

 

கிளவியாக்கமும் கிளீசனும்

விளக்க மொழியியல் பயிலத் தரமான அறிமுக நூல்களுள் ஒன்று எச்.ஏ. கிளீசனின் 'An Introduction to Descriptive Linguistics'. அவரது நூலின் ஓரிடம் தொல்காப்பியம் பயின்றோரை வியப்பிலாழ்த்தும்.

சில எடுத்துக்காட்டுகளை முதலில் பார்த்துவிடுவோம்.

' பாடுகிறாள் ' என்பது ஒரு சொல். இது, ' பாடு + கிறு + ஆள் ' என்கிற மூன்று உறுப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. மொழியியலார் மூன்று உருபன்களால் (Morphemes) அமைந்தது என்பார்கள் ( மரபிலக்கண நூலாரும் மொழியியலாரும் பகுப்பதில் சில நுட்ப வேறுபாடுகள் உண்டு என்றாலும் ஏறத்தாழ ஒத்துப் போகும்)

பாடு (தல்) - வினை (செயல்)

கிறு - நிகழ்கால இடை நிலை

ஆள் - பெண்பாலைக் காட்டும் விகுதி

' பாடினான் ' என்றால் இறந்த காலம் . ' பாடு + இன் + ஆன் ' என்பதில் இடையில் உள்ள - இன் - இறந்தகால இடைநிலை.  - ஆன்  ஆண்பாலைக் காட்டும் விகுதி. இதில் பாடும் செயலைச் செய்தவன் ஆண்.

ஆக இந்த உறுப்புகள் பொருள் குறிப்பைக் கொண்டவை.

கிறுபாடாள்* (கிறு பாடு ஆள்)

ஆனின்பாடு*(ஆன் இன் பாடு)

என்றோ மாற்றிக்கொள்ள இயலாது. ஒரு சொல்லுக்குள் பகுபத உறுப்புகள்  இறுக்கமான விதிகளால் அமைகின்றன.


அடுத்துச் சொற்றொடரைப் பார்ப்போம்.

இராமன் இராவணனைக் கொன்றான் - என்பது முழுமையான வாக்கியம்.

இராமன் கொன்றான் இராவணனை

இராவணனைக் கொன்றான் இராமன்

இராவணனை இராமன்  கொன்றான்

கொன்றான் இராவணனை இராமன்

கொன்றான் இராமன் இராவணனை 

என்றெல்லாம் தமிழில் வரிசையை மாற்றலாம் . அடிப்படைப் பொருள் மாறாது.

ஆனால் ஆங்கில வாக்கிய அமைப்பு இறுக்கமானது. அது அம்மொழி இயல்பு. தமிழிலும் வாக்கியங்கள் சிலவற்றில் விருப்பம்போல் சொற்களை இடம்மாற்ற இயலாது.(அது நல்ல நூல் ✓ நல்ல நூல் அது ✓  அது நூல் நல்ல ×  நல்ல அது நூல் ×)

இந்தப் பின்னணியோடு கிளீசனிடம் போவோம்.

எச்.ஏ.கிளீசன் , சொல்லுக்குள் உருபன்களின் வைப்பு முறை,வாக்கியத்தில் சொற்களின் வைப்பு முறை ஆகியன பற்றிப் பேசிவிட்டுத் தனித்தனி வாக்கியங்களின் வைப்பு முறையும் கூட உண்டு என்று சொல்கிறார் :

'பொதுவாக , சொற்களைப் போன்ற இறுக்கமான கட்டமைப்புடையவற்றில் வைப்புமுறை கடும் விதிகளுக்குட்பட்டிருக்கும். வாக்கியங்களைப் போன்று நெகிழ்வாகப் பின்னப்பட்டவை கூடுதல் சுதந்திரமுடையவை. ஆனால் நீள் தொடர் வரிசைகளிலும்,     சில வேளை நுட்பமான வகையில்,  வைப்புமுறையில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் உள்ளன.
எடுத்துக்காட்டாக , 'ஜான் வந்தான். அவன் போனான்.' என்னும் வாக்கியங்கள், [வருதல், போதல் ஆகிய] இரண்டையும்  செய்தவன் ஜான் என்பதை உணர்த்துகின்றன. ' அவன் வந்தான். ஜான் போனான்.' என்றால் மேலுள்ளவாறு பொருள் தராது. குறிப்பான ஒருவர்  முதலில் இடம் பெற்றபின்னரே அதே நபரைக் குறிக்கும் சுட்டுப் பெயர் வரவேண்டும். இது, தருக்கத்திற்கு உடப்பட்டதன்று எனினும் , தனித்தன்மை வாய்ந்த ஆங்கிலக் கட்டமைப்பு.வேறு சில மொழிகளில் விதிகள் வேறுபடுவதால், இதனை மொழியின் பொது இயல்பு எனல் இயலாது '

இந்த வாக்கியவரிசைக் கட்டமைப்பைத் தமிழில் கண்ட முன்னோரை வழிமொழிந்து  அப்போதே சொல்லியிருக்கிறார் தொல்காப்பியர்.

இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப் பெயர்க் கிளவியும்

வினைக் கொருங் கியலும் காலம் தோன்றின

சுட்டுப்பெயர்க்  கிளவி முற்படக்  கிளவார்

இயற்பெயர் வழிய என்மனார் புலவர் (கிளவியாக்கம் 38)


இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப் பெயர்க் கிளவியும் - A specific reference to a person...a pronoun சுட்டுப் பெயர்க் கிளவி முற்படக் கிளவார் இயற்பெயர் வழிய - a person must precede a pronoun வினைக்கொருங்கியலும் - (John) did both


ஏறத்தாழத் தொல்காப்பிய நூற்பாவின் தொடர்கள் கிளீசன் தொடர்களோடு ஒத்துப்போகின்றன.

தொல்காப்பியம் கண்டு கிளீசன் எழுதவில்லை. கிளீசனைக் கண்டு தொல்காப்பியர் விதித்தார் என்று கற்பனை கூட செய்ய முடியாது. இந்த வியத்தகு ஒற்றுமை எப்படி?

This is a peculiarity of English structure என்கிறார் கிளீசன்.   இந்த peculiarity தமிழுக்கும் உரியதாகும். இன்றல்ல ,ஏறத்தாழ இரண்டாயிரமாண்டுகளுக்கு முன் - தமக்கு முந்தைய புலவர் கண்டதை - தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார் . இரு மொழிகளிலும் உள்ள ஒத்த வாக்கிய வரிசைக் கட்டமைப்புத்தான் -  தொல்காப்பியரும் கிளீசனும் ஒருவரையொருவர் காணாமல் , தத்தம் மொழியியல்பு கண்டதுதான் -  ஒத்துப்போதற்குக் காரணம்.

என்றாலும் வியப்புதான்!

எடுத்துக்காட்டிலும் வியப்புத் தொடர்கிறது. சேனாவரையர் 'சாத்தன் வந்தான். அவன் போயினான்' என்று எடுத்துக் காட்டியிருக்கிறார். கிளீசன் John Came. He went away என்ற எடுத்துக் காட்டைத் தருகிறார்.

சேனாவரையர் எடுத்துக்காட்டின் தழுவல் போல் தோன்றுகிறது கிளீசனின் எடுத்துக்காட்டு.
மறுதலை எடுத்துக்காட்டுத் தந்து வேறுபாட்டை விளக்கியுள்ளார் நச்சினார்க்கினியர்.
" அவன் வந்தான் . சாத்தற்குச்¹ சோறு கொடுக்க². எனின், அவனும் சாத்தனும் வேறாய் , அவன் வருந்துணையும் சாத்தன் சோறு பெறாதிருந்தானாவான்³ செல்லும்." அதாவது பொருள் மாறிவிடும் என்கிறார். (¹ சாத்தனுக்கு , ² கொடுத்திடுக , ³ பெறாதிருந்தவன் ஆவான்  என்னும் பொருள் நோக்கிச் செல்லும்)
" But  He came.John went away. certainly could not have that meaning " என்று கிளீசனும் விளக்கியுள்ளார்.
மறுதலையில் கிளீசன் நச்சரைத் தழுவியது போல் காணப்படுகிறது.

கிளீசனை இங்கே நிறுத்திவிட்டு இதனோடு தொடர்புடைய  தொல்காப்பியத்தின் அடுத்த  இரு நூற்பாக்களையும் பார்க்கவேண்டும் என்பது என் ஆசை .

வாக்கிய வரிசை பற்றி விதித்த தொல்காப்பியர் விலக்குகளைத் தொடர்கிறார்.
'முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே' (கிளவியாக்கம் 39)
இதன் நயத்தை , " முற்கூறலாகாது எனப்பட்ட சுட்டுப் பெயர் மொழி மாற்றியும் பொருள் கொள்ளும் நயம் செய்யுட் கண் உண்மையான் அதனகத்தாயின் அமையும் என்று நேர்ந்தவாறாயிற்று" என்னும் கல்லாடர் உரை கொண்டு உணர வேண்டும்.

அவனணங்கு  நோய்செய்தான்  ஆயிழாய் வேலன்
விறன்மிகுதார்ச் சேந்தன்பேர்  வாழ்த்தி - முகனமர்ந்து
அன்னை  யலர்கடப்பந் தாரணியில் என்னைகொல்
பின்னை  யதன்கண் விளைவு

'அவன்' என்னும் சுட்டுப் பெயருக்குப் பின் 'சேந்தன்' என்னும் இயற்பெயர் வரும் இந்த ஒரே பாட்டை  இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் , [பெயர் தெரியத] ஒருவர் - என அனைவரும் காட்டுகின்றனர்.

" இதனாற் சொல்லியது , முற்கூறலாகாது எனப்பட்ட சுட்டுப்பெயர்  மொழிமாற்றியும் பொருள் கொள்ளும் நயம் செய்யுட்கண் உண்மையான் அதனகத்தாயின் அமையும் என்று நேர்ந்தவாறாயிற்று" எனக் கல்லாடர் காட்டும்  நயமான காரணம் பிற உரையாசிரியர் காட்டாதது மட்டுமன்று பொருத்தமானதுமாகும்.

தொல்காப்பிய நோக்கில் ,  செய்யப்பட்ட - பாட்டு, உரை முதலிய - யாவும் செய்யுள்தாம்; இலக்கியம்தாம்.நவீனப் புனைகதைகளுக்கும் கூட சுட்டு முற்கூறும் நயம் பொருந்தும்.

" சுட்டுமுத லாகிய காரணக் கிளவியும்
  சுட்டுப்பெய ரியற்கையின்செறியத்தோன்றும்"
                                                              (கிளவியாக்கம் 40)

என்னும் அடுத்த நூற்பாவைவிட, எடுத்துக்காட்டுகள் சுவையானவை.

சாத்தன் கையெழுதுமாறு⁴ வல்லன் அதனால் தன் ஆசிரியன் உவக்கும்⁵; தந்தை உவக்கும் - இளம்பூரணர்.
( ⁴கையெழுத்தில்/ கையால் எழுதுவதில்.  ⁵உவக்கிறான்/மகிழ்கிறான்)

சாத்தன் கையெழுதுமாறு வல்லன் அதனால் தந்தை உவக்கும் , சாத்தி சாந்தரைக்குமாறு⁶ வல்லள் அதனால் கொண்டான்⁷ உவக்கும் (⁶சந்தனம்;  ⁷கணவன்) - சேனாவரையர்.

தெய்வச் சிலையார் தவிர நச்சினார்க்கினியர், கல்லாடர்,
ஒருவர் ஆகியோரும் , சேனாவரையர் எடுத்துக்காட்டையே
தந்துள்ளனர் (உரை வேறுபாடுகள் பற்றி இப்போது வேண்டியதில்லை).
போற்றப் படுபவை சாத்தனின் கல்வித் திறமையும், சாத்தியின் ஒப்பனைத் திறமையும்.
சாத்தனின் கையெழுத்துத்திறமையால் மகிழ்கிறவன் தந்தை. சாத்தியின் சாந்தரைக்கும் திறமையால் மகிழ்கிறவன் கணவன்.
இவை ஆணும் பெண்ணும் சமூகத்தில் வகித்த பங்கையும் , சமூகப் பார்வையையும் சுவைபடக் காட்டுகின்றன.

எடுத்துக் காட்டுகள் வெறும் இலக்கணப் புரிதலுக்கு மட்டுமன்றி வேறு பயனும் சுவையும் கொண்டவையும் கூட.
-----------------
¶ In general , the more intimate constructions , like words , have the most rigidly fixed order , and the less closely knit constructions , like sentences , allow more freedom.But even longer sequences have some definite restrictions on order , sometimes of a subtle sort. For example John came . He went away. might imply that John did both. But  He came.John went away.
certainly could not have that meaning. A specific reference to a person must precede a pronoun reference to the same person , unless some special device is used. This is a peculiarity of English structure, not of logic. nor of the general nature of speech, since some other languages have quite different rules- H.A.Gleason, An Introduction to Descriptive Linguistics , Oxford & IBH Publishing Co., New Delhi , II edition , 1979, p.57.

- 28 அக்.2017 முகநூல் இடுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...