தொல்காப்பிய மாணிக்கவுரையிற் காணும் சில நுட்பங்கள்
வ.சுப. மாணிக்கனார்(17.04.1917 - 25.04.1989) அரை நூற்றாண்டுக் காலம் தமிழில் ஊறித்திளைத்ததன் முதிர் வெளிப்பாடு தொல்காப்பிய மாணிக்கவுரை. இஃது எழுத்ததிகாரத்தின் நூன்மரபும் மொழிமரபுமாகிய மூதலீரியல்களுக்கு மட்டுமே எழுதப்பெற்றுள்ளது. மாணிக்கனார் தமது உரைக்கு மாணிக்கவுரை எனப் பெயரிட்டு 06.08.1986 அன்று உரைப்பாயிரம் எழுதியிருக்கிறார். ஆனால் அக்டோபர் 1989இல் - அவரது மறைவிற்குப் பின்னர்தான் - நூல் வெளிவந்துள்ளது*. இவ்வீரியல்களுக்கான உரையிலேயே அவர் தரும் புதுத்தெளிவுகளும் நுட்பங்களும் அவரது தொல்காப்பியத் திளைப்பையும், நுட்பத்தையும் காட்டுகின்றனவெனில் முழுதும் கிடைத்திருந்தால் எத்துணைச் சிறப்புடையதாயிருக்குமென்று ஏங்கச் செய்கின்றன.
பனம்பாரானாரின் சிறப்புப் பாயிரவுரை, பாயிரச்சிறப்பு, பாயிரக் கருத்து, பாயிரம், அகலவுரை, திறனுரை, பாயிரமுடிவுரை எனும் பகுதிகளைக் கொண்டுள்ளது.
நூன்மரபு, மொழிமரபுகளுக்குத் தனித்தனியே இயல் முன்னுரை, இயற்கருத்து ஆகியன தந்து ஒவ்வொரு நூற்பாவிற்கும் அந்நூற்பா நுதலியது கூறி அகலவுரை, திறனுரை ஆகியவற்றை வ.சுப.மா. தந்துள்ளார்.
இயல்தோறும் முடிவுரையும் இடம்பெற்றுள்ளது.
பின்னிணைப்பாகத் ‘தமிழில் மொழிமுதலெழுத்துக்களின் வரம்பு’ என்னும் கட்டுரை இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரை மொழிமுதலெழுத்துமரபு, மாற்றம், வரம்பு ஆகியவற்றை விவரித்துப் புதிய வரவுகளை மரபு குன்றாமல் அமைக்கும் நெறிகளை உணர்த்துகிறது.
இவ்வுரை முழுவதுமே பற்பல புதிய தெளிவுகளும் நுட்பங்களும் ஆய்வைத் தூண்டும் ஊகங்களும், மாணிக்கனார்க்கேயுரிய தனித்த நடை நயத்தோடு, விரவிக் கிடக்கின்றன. எனக்கு எட்டிய சிலவற்றை இக்கட்டுரையில் தொகுத்துத் தந்திருக்கிறேன்.
பாயிர நுட்பம்
பாயிர உரையிலேயே நுட்பம் வாய்ந்த தெளிவுறுத்தலைத் தொடங்கி விடுகிறார். மாணிக்கனார்.
தமிழ் பேசப்படும் வழக்கு மொழியாதலின் ‘தமிழ் கூறு’ என்ற வினைச் சொல் பெய்தார். முக்காலத்தும் நிகழ் மொழியாதலின், ‘கூறு’ என வினைத்தொகை செய்தார், ‘என்றுமுள தென்றமிழ்’ என்பது கம்பர் கவிமொழி. ‘சீரிளமைத் திறம்’ என்பது சுந்தரனார் தரவு மொழி (ப.5)
பாயிரத்தில் அவர்காட்டும் பிறிதொரு நுட்பமும் ஊகமும் அவர்தம் நுண்புலமைக்குச் சான்றுகள்.
ஒன்று தமிழ்கூறு நல்லுலகம்; இரண்டு வழக்கும் செய்யுளும்; மூன்று எழுத்தும் சொல்லும் பொருளும்; நான்கு நான்மறை; ஐந்து ஐந்திரம்; பன்மை பல்புகழ் நிறுத்த. இவ்வோட்டத்தைக் காணுங்கால், நான்மறைக்குப் பின்வரும் ஐந்திரம் என்பது எவ்வாறேனும் ஐந்து என்னும் எண் குறிப்பினதாக இருத்தல் வேண்டும்(ப.13)என்கிறார் மாணிக்கனார்.
இலக்கணக் கொள்கை
மாணிக்கனாரின் இலக்கணக் கொள்கையை முன்வைத்துத் தொடங்குவது பொருந்தும்.
பேசக் கற்றுக் கொடுப்பது இலக்கணமன்று; காக்க ஆக்க வளர்க்க வழிவழி விளங்கத் தடங் காட்டுவதே இலக்கணம் என்று தெளிக. இலக்கணம் புறமிருந்து திணிக்கப்படும் செயற்கையன்று. மக்களின் வாய்மொழிக் கூறுகளைக் கண்டு கரையுடையாது கட்டி உயர்த்தி வளர்ப்பதே இலக்கண நோக்கம் (ப.59)
முதல் நூற்பாவுரையிலேயே மாணிக்கனார், “தமிழ் மொழிக்கு எழுத்து முப்பது என்ற செய்தியைத் தருவது தொல்காப்பியத்தின் நோக்கமன்று. இவ்வரம்பைக் கடைப்பிடித்து ஒழுகுக என்பது நூற்பாவின் பயன்”(ப.23) என்பர். இஃது அவரது கொள்கைசார் தெளிவு.
அளபும் அளவும்
அளபு - மாத்திரை, ஒலியின் காலக்கணக்கு. அளவு -தரம், கூறு. இது எண்ணளவு, நிறையளவு என வரும்(ப.26). என வேறுபாடு காட்டும் மாணிக்கனார்,
" அளபு, மாத்திரை என்ற கிளவிகள் ஒரு பொருளனவாயினும் தொடராட்சியில் வேறுபாடு உண்டு. அளபெடை என்போம், மாத்திரையெடை என்னோம் ; மாத்திரையளவு என்போம், அளபளவு என்னோம். அளபிறந்து உயிர்த்தல் என்போம், மாத்திரையிறந்து உயிர்த்தல் எண்ணோம். இவ்வேற்றுமைக்குக் காரணம் அளபு என்பது மாத்திரையிலும் விரிந்த தன்மையுடையது " (ப.32) என்பார்.
‘குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின்…’(நூ.46) என்னும் தொடர் மொழி பற்றிய நூற்பாவின் திறனுரையிலும், ‘ஈண்டு அளவு என்பது எழுத்தெண்ணிக்கையைக் குறிக்கும்’(ப.121) எனத் தெளிவு கடைப்பிடிப்பார்.
ஒற்றும்புள்ளியும் / மெய்யும் புள்ளியும்
ஒற்று என்பது மெய்ப்புள்ளி. புள்ளி என்பது மெய்ப்புள்ளி, சார்புப்புள்ளி, எகரஒகரப்புள்ளி, மகரக்குறுக்கப்புள்ளி எனப் பலவற்றையும் குறிக்கும். ஒற்று என்பது மெய்ப்புள்ளி ஒன்றனையே சுட்டும்(ப.117) என ஈரொற்றுடனிலை(நூ44) கூறும் நூற்பாவின் அகலவுரையில் தெளிவுபடுத்துகிறார்.
‘உயிர்மெய் யல்லன மொழி முதலாகா’ என்றபடி சொல்லுக்கு முதலில் புள்ளியுடைய மெய் வருவதில்லை; ஆனால் இறுதிக்கண் புள்ளியொடு பதினொரு மெய்கள் வரும். இதனைத் தெளிவிக்கவே மெய்யிறுதி என்னாமல் ‘புள்ளி யிறுதி’ என்று வடிவொடு கூறினார் என்பார் ( நூ. 73 உரை ,ப.161)
இடையெழுத்து - விளக்கம்
வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே
மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே
இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே
என்ற வண்ண நூற்பாக்கள் கொண்டு ‘வல்லொலிப் பிறப்புக் கூறும் மெல்லொலிப் பிறப்புக் கூறும் இயைந்த நிலை இடையெழுத்தாம்’ என்பார் மாணிக்கனார்(நூ.17-19 , ப. 47).
‘பன்னீருயிரும்’ - சிறப்பும்மை
‘பன்னீருயிரும் மொழிமுத லாகும்’ (நூ.54) என்பதன் உரையில் முதற்கண் உம்மையை முற்றும்மையாக்கிப் பொருள் கூறித் திறனுரையில் “சிறப்பும்மையாகக் கொண்டால் இவ்வாறு பதினெட்டு மெய்யும் மொழி முதலாகா என்ற குறிப்புப் பெறப்படும்” (ப.134) என்பர்.
போன்ம் - முற்றும் எச்சமும்
செய்யுளிறுதிப் ‘போன்ம்’ என்பதன் மகரம் குறுகுதல் பற்றிய நூற்பா (47)வுரையில், “செய்யுளிறுதி என இடங்கூறுவதால் போலும் என்பது செய்யும் என்ற முற்றாகும்; பெயரெச்சம் இறுதியில் நில்லாதன்றே” (ப.122) என விளக்கி, ‘பெருங்கல் லடாரும் போன்மென விரும்பி’ (புறம்.19) ‘மழையுண் மாமதி போன்மெனத் தோன்றுமே’ (சீவக.127) என்பன காட்டி இவை ஈரொற்றுமாகா; குறுகா என்பர். இது மேலாய்வைத் தூண்டும் தெளிவு.
‘அகர இகரம் ஐகார மாகும்’ (நூ.49)
‘அகர உகரம் ஔகார மாகும்’ (நூ.50)
எனும் நூற்பாக்களுக்கான திறனுரையில்,
‘செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்’ என்ற கிளவியாக்கவியலின் படி ஐகாரம் ஆகும் ஒளகாரம் ஆகும் என வினைப் படுத்தியமையால் இவை இயற்கையில எனவும், ஐகார ஒளகார ஒலியன்கட்கு இயற்கையான தனிவடிவு உண்டு எனவும் கொள்க என்பர் மாணிக்கனார். (ப.129) இதுவும் ஆய்வைத் தூண்டும் தெளிவு.
மொழிமுதற் குற்றுகரம்
முறைப்பெயர் மருங்கின் நகரமொடு முதலும் என்கிற மொழிமுதற் குற்றுகர நூற்பா(62) விளக்கத்தில் ‘உ, ஊ, ஒ, ஓ வென்னும் நான்குயிர், வவென் எழுத்தொடு வருதலில்லை’ எனும் நூற்பாவைக் காட்டி ‘வகர மெய் நான்கு உயிரொடு வாரா என்பதுவே நடையின் பொருள்’ எனத் தெளிவித்து, ‘குற்றியலுகரம் நகரமொடு முதலாகும் என்பதற்கு நகரமெய் மேல் குற்றியலுகரம் ஊர்ந்து வரும் எனவும் நகரமெய்யே மொழி முதல் எனவும் கொள்க’(ப.147) என்பார். அஃதாவது ஈண்டுக்குற்றியலுகரம் மொழி முதலன்று; நகரமே முதல். குற்றியலுகரம் நகரத்தின் மேல் ஏறி நிற்கும் என்பது கருத்து. இதனை நூற்பா நடையமைதி கொண்டு நிறுவுகிறார்.
‘இருவயின் நிலையும்’
உப்பகாரம் இருவயின் நிலையும் பொருட்டாகும்(நூ.71) என்னும் நூற்பாத் திறனுரையில் ‘இதுசெயல் வேண்டும் என்னும் கிளவி / இருவயின் நிலையும் பொருட்டாகும்மே / தன்பாலானும் பிறன்பா லானும்’ என்னும் நூற்பாவைக் காட்டி, ‘தபு என்ற சொல் தானழித்தலையோ பிறிதழிதலையோ ஒருங்கே குறிக்கும்’ என்பார் (பக்.157-58)தன்வினை, பிறவினை என்னும் இலக்கண நோக்கில் ‘தபு’ சுட்டப்படவில்லை; “தற்புகழ்ச்சி, தற்கொலை, தற்பெருமை, தற்குறி என்றாற்போல் வருவது தன்பால் எனவும் அயலாக வருவது பிறன்பால் எனவும் படும். பிறன் என்பது ஈண்டு ஒருபாற் கிளவி ஏனைப் பாலையும் இனமாகக் குறிக்கும் எனக்கொள்க” (ப.158) என்பார்.
இதனை அவர் தரும் 'வெளு' என்னும் தற்கால எடுத்துக்காட்டால் நன்கு உணரலாம்.
[ வெளுத்தான் - அவன் நிறத்தில் வெளுத்தான் (தன்பால்), துணியை வெளுத்தான் (பிறிதின்பால்)]
‘நெடிற்றொடர்’க் குற்றுகரம் என்னாமை
ஒரு மொழி, தொடர்மொழி குறித்த நூற்பாவின்(நூ.41) திறனுரையில், குற்றியலுகரப் புணரியல் நூற்பாவாகிய, ‘ஈரெழுத் தொருமொழி உயிர்த்தொடர், இடைத்தொடர்…’ என்பதைக் காட்டி, நெடிற்றொடர்க் குற்றியலுகரம் என்னாமையை விளக்குகிறார். ‘நெட்டெழுத்திம்பர் என்று குறிப்பிடுவாரேயன்றித் தொடர் என மறந்தும் கூறியதில்லை’ என்பார்(ப.111). இது தொல்காப்பிய இலக்கணக்குறித் தெளிவு. தொல்காப்பிய நெறிப்படி ஈரெழுத்தொரு மொழியேயன்றி, ஈரெழுத்துத் தொடர் மொழி இல்லை.
உயிர்மெய்
‘உயிர்மெய் - உயிரொடு கூடிய மெய், தயிர்வடை என்பது போல, வேற்றுமைத் தொகை நிலை’(ப.45) என்று சுட்டிப் பின்னரும் ‘உயிர்மெய் என்பது மூன்றாம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்க தொகையாம்… உயிரும்மெய்யும் என்ற உம்மைத் தொகையோ உயிரும் மெய்யும் கூடிய ஓரெழுத்து என்ற அன்மொழித் தொகையோ அன்று” (பக்.135-136) என்பார். தொடர்ந்தும் “உயிர்மெய் என்பதற்கு உயிரொடு கூடியமெய் என மேலே பொருளுரைக்கப்பட்டது. ‘எல்லா வுயிரொடும்’ என்ற நடை அதன் விளக்கமாகும்’(ப.138) எனத் தொல்காப்பிய நடையமைதி கொண்டு நிறுவுவார்.
இசையும் நரம்பும்
‘இசையொடு சிவணிய / நரம்பின் மறைய’ (30) என்னும் நூற்பாவின் திறனுரையில் ‘நரம்பின் மறை என்பதே இசையைக் குறிக்கக் போதுமாயிருக்க, ‘இசையொடு சிவணிய’ என்றதன் கருத்து யாது? ஈண்டு இசை என்பது மிடற்றிசை என்னும் வாய்ப்பாட்டினைக் குறிக்கும். இவ்வாயிசைக்குத் தானே எழுத்தடிப்படையுண்டு, அளவு கடந்து ஒலித்தலும் மெய்யோசை நீளலும் உண்டு’(ப.66) என்பர் மாணிக்கனார். கருவி வழி இசைக்கு எழுத்தொலி இல்லையாதலின் மாணிக்கனார் விளக்கம் பொருத்தமானதாகிறது.
விதி விலக்காக ஒரு விதி
அவற்றுள் / ரகார ழகாரம் குற்றொற் றாகா (நூ.45) என்பதன் திறனுரையில் ‘இதுகாறும் இன்ன மெய்க்குப்பின் இன்ன மெய் வரும் என்று மெய்ம்மயக்கம் கூறிவந்த ஆசிரியர் இன்னவுயிருக்குப்பின் இன்ன மெய் வாரா என இந்நூற்பாவில் உயிரொடு மெய்ம்மங்காமை கூறும் ஒரு மொழியமைப்பைக் கற்கின்றோம்’(ப.119) என்று தெளிவுறுத்தி, ‘அர், ஆர் ப என வரூஉ மூன்றும்’, ‘இர்,ஈர், மின் என வரூஉ மூன்றும் என்பவற்றுள் அர், இர், வந்துள. ஆனால் இவை சொல்லமைப்பில் சொற்கிடையே வரும் உறுப்புக்கள். தெளிவிற்காகத் தனித்துக் காட்டப்பட்டன”(ப.119) எனத் தெளிவிக்க வந்தவற்றைத் தெளிவிக்கின்றார் மாணிக்கனார். அவர் தொல்காப்பியத்தை அணுஅணுவாய்ப் பயின்று திளைத்துள்ள பாங்கையும் இவற்றால் உணரலாம்.
மொழி முதல் மெய்களின் இறங்குவரிசை.
இலக்கணத்தில் வைப்புமுறைக்கு இடமுண்டு என்பதைப் பண்டைய உரையாசிரியன் மாரும் கூறுவர். மாணிக்கனார் பண்டையோர் கூறாத சிலவற்றையும் தெளிவு படுத்துவார்.
எல்லா உயிரொடும் செல்லும் மெய்களைக் கூறித் தொடர்ந்து, ‘ஒன்பது, எட்டு, மூன்று என்ற இறங்குவரிசையில் மெய்கள் கூறிவந்த நன்மரபுடைய தொல்காப்பியர் யகரமெய் ஓருயிரொடு மட்டும் கூடி வரும் என்று இறுதியாக இந்நூற்பாவிற் (ஆவோ டல்லது யகரம் முதலாது - 60) கூறுவர்’ என்பார்(ப.143)
நூன்மரபில் சுட்டும் வினாவும்
“நூலுக்கு மரபாக வழங்கிய குறியீடுகளைக் கூறுவது நூன்மரபாகும்”(ப.17) என இயல் முன்னுரையைத் தொடங்கும் மாணிக்கனார், “ஒலி, எண்ணிக்கை வகை, அளபு, வடிவு, மயக்கம் என்ற எழுத்தின் அறுகூறுகள் நூன்மரபில் மொழியப்பட்டன. மேலும் இந்நூன்மரபு தனியெழுத்துக்குத் தனித்தநிலையில் அதன் தன்மைகளை நுவலும்”(ப.19) என்கிறார்.
மாறாக, இவ்வியலுள் சுட்டு, வினா எழுத்துக்கள் பொருளடிப்படையில் இடம்பெற்றுள்ளன(நூ.28&29).
சுட்டுப் பொருளும் வினாப் பொருளும் தரும் இவை நூன் மரபில் இடம்பெறலாமா? என்பது வினா. நூன்மரபு முப்பத்துமூன்று எழுத்துள் வருவனவற்றிற்கு ஓரினம் நோக்கிக் குறியீடுகள் கூறும் இயலாதலால், சுட்டும் வினாவும் இவ்வியலிற் சேர்க்கப்பட்டன. இவை சுட்டுக் குறிப்பும் வினாக் குறிப்பும் உடையவாதலின் மொழியாந்தன்மையில் ஐயமில்லை எனினும் ஈண்டு நோக்கம் குறியீடே. அதனாற்றான் சுட்டு எனவும் வினா எனவும் குறியீடுகளையே பயனிலையாக அமைத்தார் ஆசிரியர்(ப.62)
எனத்தாமே தடை எழுப்பி விடையளித்துள்ளார் மாணிக்கனார்.
சுட்டு, வினா - வேறுபடு பொருண்மை
ஆ ஏ ஓஅம் மூன்றும் வினா (29)
என்னும் நூற்பாவின் அகலவுரை நிறைவில், “முச்சுட்டில் இடவேற்றுமை யிருப்பதுபோல இம்மூன்று வினாவிலும் சில வேறுபடு பொருண்மை தொல்காப்பியர் காலத்து இருந்திருத்தல் வேண்டும்”(ப.62) என்கிறார் மாணிக்கனார். இஃது ஆய்வுக்குரிய ஊகம்.
உயிர்மெய்க்கண்ணும் மெய்க்கு மாத்திரை
“மெய்க்கு மாத்திரையுண்டென வெளிப்படையாக நூற்பித்திருக்கும் தொல்காப்பியம் உயிர்மெய்யாகுங்கால் மெய்க்கு மாத்திரையிழப்புச் சுட்டக் காணோமே.”(ப.76) என்று ‘நூன்மரபு - இயல் முடிவுரை’யில் கூறும் மாணிக்கனார், “உயிர்மெய்க் கண்ணும் மாத்திரை மெய்க்குக் கொள்ளலாம் என்பது என் கருத்து” என்று கூறும் அதேவேளையில் “என்கருத்து மேலும் சிந்தனைக் குரியது” (ப.77) என்றும் கூறிவிடுகிறார்.
வாய்ப்பும் மறுப்பும்
‘அகரத் திம்பர் யகரப் புள்ளி’(நூ.51) என்னும் நூற்பாவை யடுத்தது,
ஓரள பாகும் இடனுமா ருண்டே
தேருங் காலை மொழிவயி னான(நூ.52)
என்பது. “ஓரளபாகும் இடனாவது மேலை நூற்பாவில் கூறிய அகரத்திற்கும் பின்னே யகரப் புள்ளி வரும் நிலை”(ப.131) என விளக்கும் மாணிக்கனார் “தேருங்கால் + ஐ + மொழிவயின் என்று பிரித்து இந்நூற்பா ஐகாரம் பற்றியது என்று கூறலாம். இப்பிரிவு சிறப்பில்லை. அதிகாரத்தாற் பெறலாமாதலின் வேண்டியது மில்லை”(ப.131) என வாய்ப்பொன்றைத் தாமே சுட்டி மறுத்துரைக்கின்றார்.
இஃது ஓர் அறிமுகமே.
கருத்து வேறுபாட்டுக்குரிய இடங்கள் இல்லாமலில்லை எனினும் தொட்ட இடமெல்லாம் நுட்பங்கள் தட்டுப்படும் உரை மாணிக்கவுரை என்பதில் ஐயமில்லை.
________________________
*மாணிக்கம், வ.சுப. (உரையாசிரியர்), தொல்காப்பிய எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1989.
- சாகித்திய அகாதெமி கருத்தரங்கில் பேசியது; 21.08.2017 அன்று கட்டுரையாக எழுதப்பட்டது;இப்போது மேலும்சற்றுச் செம்மை செய்யப்பட்டது.
No comments:
Post a Comment