Wednesday, February 16, 2022

கொஞ்சம் இலக்கணம் கொஞ்சம் கலகம் ! (ஆசிரியரைப் படிக்க வைத்த கதை)


 எங்களுக்கு _____ என்னும் ஓர் ஆசிரியர் இருந்தார் (இன்னும் சிலரும் இருந்தனர். தனியே சொல்லவேண்டும்). அவர் பயின்ற காலத்தில் நன்றாகப் படித்தவர்தான். அவருடைய ஆசிரியர்கள் சொல்லியிருக்கின்றனர். நம்பகமானதுதான்.

ஆனால்,
அவர் எங்கள் ஆசிரியர் ஆன காலத்தில் , மாணவராயிருந்து பயின்றதெல்லலாம் பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்ப் போய்விட்டது. பாவம்!

எங்களுக்கு யாப்பருங்கலக் காரிகை நடத்தினார். புத்தகத்தைத் தூக்கிக்கொண்டுவருவார்; படிப்பார் ; பொருள் சொல்வார்; புரிவது பற்றிக் கருதமாட்டார்.

மாணவர்கள் ஐயம் கேட்கக் குறுக்கிட்டால் அரட்டல் உருட்டல்கள்தான். அவருக்கு உரத்த குரல் வேறு." நேத்து நடத்துனது புரிஞ்சுதா? சொல்லு" என்பார். சொல்லிவிட்டால் முந்தாநாள், அதற்கு முந்தின நாள் என்று அதட்டலில்,  கேட்டவனைத் திக்குமுக்காட வைத்துக் கடைசியில், " உக்காரு . இலக்கணமெல்லாம் படிப்படியா புரிஞ்சுகிட்டு வரணும். போய்ப்படி. என் நேரத்த வீணாக்காதே " என்று படிக்கத் தொடங்கிவிடுவார்.

என் கல்லூரி நண்பர் கலியமூர்த்தி  எங்கள் மேலவீதியில்  அறை எடுத்துத் தங்கியிருந்தார். நானும் நண்பர் கலியமூர்த்தியும்  ஒன்றாகப் படிப்போம். ஆசிரியர்கள், பாடங்கள், தேர்வுகள் முதலியவை பற்றி அரட்டை இல்லாமலிருக்குமா? அரட்டைக்கிடையில்தான் படிப்பு என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அப்படி ஓர் அரட்டையில்  'அவரு'க்குப் பாடம் புகட்ட முடிவு செய்தோம்.

பாயிரம் , அவையடக்கம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி, முதல் காரிகை (சூத்திரம்) நடத்தி முடித்திருந்தார். இது சற்று விரிவாக நடத்த வேண்டிய காரிகை. சில வகுப்புகள் ஓடின. இதில்தான் மாணவர்கள் ஐயம் எழுப்பினார்கள்.
இரண்டாவது காரிகை நடத்த வேண்டும். அவருடைய ஆயுதம் மறைவானதல்லவே. எனவே பாயிரம் , உரை என அனைத்தையும் புரிந்துகொண்டு , உரை உட்பட , மனப்பாடமாகவும் பதியவைத்துக்கொண்டோம்.

இப்போது கொஞ்சம் இலக்கணம். கடினமில்லை. குறில் , நெடில், ஒற்று ஆகியவை தெரிந்தால் போதும் . எண்களை மட்டும் பின்பற்றுங்கள் புரியும்.

" குறிலே  நெடிலே குறிலிணை ஏனைக் குறில்நெடிலே
   நெறியே வரினும்  நிரைந்தொற்(று) அடுப்பினும் நேர்நிரைஎன்(று
   அறிவேய் புரையுமென் றோளி யுதாரணம்  ¹ஆ²ழி³வெள்⁴வேல்
   ⁵வெறியே ⁶சுறா⁷நிறம் விண்டோய் ⁸விளாம்என்று வேண்டுவரே "
     (யாப்பருங்கலக் காரிகை, 5)

இந்தக் காரிகை உதாரணத்தையும் கொண்ட காரிகை (¹ முதல்  ⁸ வரை உதாரணங்கள்)

௧) [குறில்] குற்றெழுத்துத் தனியே வரினும்                             (²ழி)*
௨)[ நெடில் ]-நெட்டெழுத்துத் தனியே வரினும்                         (¹ஆ)
௩) [குறிலும் ஒற்றும்] - குற்றெழுத்து ஒற்றடுத்து வரினும்   (³வெள்)
௪) [நெடிலும் ஒற்றும்] -நெட்டெழுத்துஒற்றடுத்து வரினும்    (⁴வேல்)    - நேர் அசை


௫)குறில் இணைந்து வரினும்                                                         (⁵வெறி)
௬)குறில் நெடில் இணைந்து வரினும்                                           (⁶சுறா)
௭)குறில் இணைந்துஒற்றடுத்து வரினும்                                     (⁷நிறம்)
௮)குறினெடில் இணைந்து ஒற்றடுத்து வரினும்                       (⁸விளாம்)   நிரை அசை.

(*²,¹ என வரிசை மாறியுள்ளது காண்க)

நாங்கள் அப்பாவித்தனமாய்ப் பாடம் கேட்டோம். ஒரே வகுப்பில் நடத்திவிட்டார். அது போதுமானது. கலியமூர்த்தி எழுந்து , " ஐயா குறிலே நெடிலே என்று இலக்கணம் கூறி உதாரணத்தில் வரிசையை மாற்றியிருப்பது ஏன்?" என்றார்.

யாப்பருங்கலக் காரிகை உரை ,  இத்தகைய வரிசை  மாற்றத்தை,   " தலை தடுமாற்றம் " என்று கூறும்.  இப்படித் தலை தடுமாற்றமாகக் கூறுவதை, " தலை தடுமாற்றம் தந்து புனைந்துரைத்தல் " என்னும் உத்தியாகக் கூறுவது மரபு. இவ்வாறான வரிசை முறை மாற்றத்தைக் கொண்டு தொடர்புடைய மேலதிகமான இலக்கணக் கூறு விளக்கப்படுவது வழக்கம். ஆனால் உரை இதுபற்றி மூச்சே விட வில்லை.

கலியமூர்த்தி வினாவுக்கு " அட, சொல்ல வந்தது புரியுதா இல்லியா? சொல்லாதத ஏன் கேக்குற ? உக்காரு " என்று ஆணையிட்டார்.
நான் எழுந்தேன் , " ஐயா தலை தடுமாற்றத்திற்குக் காரணம் இல்லாமல் இருக்காதுன்னு தோனுது " என்றேன்.


அவர் வழக்கம்போல் வினாக் கணை தொடுக்கத் தொடங்கினார் . இரண்டு வினாக்களிலேயே பயனில்லை என்பதை மட்டுமன்றி, நாங்கள் திட்டமிட்டே இதில் இறங்கியிருக்கிறோம் என்பதையும் புரிந்துகொண்டார்.

முதன் முதலாக, " பாத்து சொல்றேன் " என்று பின்வாங்கினார்.

அடுத்தடுத்த நாட்களில் அவரது வேகம் மட்டுப்பட்டது. நாங்களும் எங்கள் ஐயத்தைத் தொடர்ந்து வற்புறுத்தாமல் விட்டுவிட்டோம். ஆனால் அவ்வப்போது ஐயக்குறி தோன்றுவதுபோல் பாவனையாக அவரைப் பார்ப்பதை விளையாட்டாகச் சிலநாள் தொடர்ந்தோம்.
அவரும் அரட்டல் உருட்டல்களைக் குறைத்துக்கொண்டதோடு படித்துக்கொண்டுவந்து ஐயங்களை எதிர்கொள்ளவும் தொடங்கினார்.


குறிலே நெடிலே ...என்று வைத்து , உதாரணங்களை நெடிலும் (ஆ) , குறிலும் (ழி), எனத் தலைதடுமாற்றமாகக் கூறக் காரணம் யாப்பின் அமைப்பு (யாப்பமைதி)தான்; வேறொன்றுமில்லை.முடிந்தவரை எளிமையாகச் சொல்கிறேன். 

குறிலே  நெடிலே  குறிலிணை  யேனைக் குறினெடிலே
நெறியே  வரினு  நிரைந்தொற் றடுப்பினு நேர்நிரையென்
றறிவேய்  புரையுமென்  றோளி  யுதாரண மாழிவெள்வேல்
வெறியே சுறாநிறம் விண்டோய் விளாமென்று வேண்டுவரே
(யாப்பருங்கலக்காரிகை, 5)

மூன்றாவது அடியின் இறுதி இரு சீர்கள் : " உதாரண     மாழிவெள்வேல் "  (உதாரணம் ஆ ழி வெள் வேல் ).

உதா - குறில் நெடில்                  -நிரை அசை
ரண- குறில் இணை                   -நிரை அசை
( நிரைநிரை  என்னும் இச்சீரின் வாய்பாடு    கருவிளம்.)

மா  -  நெடில்                                          - நேர் அசை
ழிவெள் - குறில் இணை ஒற்று      - நிரை அசை
வேல் - நெடில் ஒற்று                           - நேர் அசை
(நேர்நிரைநேர்  என்னும் இச்சீரின் வாய்பாடு   கூவிளங்காய்) 

வாய்பாடுகளும்  குறிப்பிட்ட அசைச் சேர்க்கை கொண்டவையாகவே அமையும். அதனால்தான் அவை வாய்பாடுகளாகக் கொள்ளப்படுகின்றன. 

கரு|விளம்  - நிரைநிரை  

கூ|விளங்|காய் - நேர்நிரைநேர்.

உதாரண           மாழிவெள்வேல்
          ----------           ---
                  /              \
            விளம் முன் நேர்
            - ரண     →        மா -
இவ்வாறு ' விளமுன் நேர் ' என்றால்தான் அது வெண்டளை[வெண் (பா) தளை] ஆகும்.இவ்வாறு வெண்டளையாக வரவேண்டும் என்பது கட்டளைக் கலித்துறை இலக்கணம்.யாப்பருங்கலக் காரிகை கட்டளைக் கலித்துறையால் ஆனது. எனவேதான் காரிகை ஆசிரியர்  அமிதசாகரர் நெடிலும் குறிலுமாக (ஆ ழி என) வைத்துள்ளார். இந்தச் சீரைக் குறில்நெடிலாக அமைத்தால் தளை தட்டும் (தளை மாறுபடும்; பிழைபடும்).

இந்த யாப்பில் எழுத்து எண்ணிக்கையும் வரையறுத்து அமையும்.

கட்டளைக்கலித்துறை இலக்கணம்:
(1)நெடிலடி நான்காய் வரும்.
(2)முதல் நான்கு சீர்களிடையில் வெண்டளை அமையும்.
(3)ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீராகவே முடியும்.
(4)அடியின் முதல்சீர் நேரசையில் தொடங்கினால் ஒற்று
நீங்க 16 எழுத்தும், நிரையசையில் தொடங்கினால் ஒற்று
நீங்க 17 எழுத்தும் வரும்.
(5)ஈற்றடியின் இறுதிச் சீர் ஏகாரத்தில் முடியும்.
( நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்)

பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்களின் சிறு தலையீடு:

யாப்பருங்கலம் நூற்பா யாப்பில் அமைகிறது; உதாரணம் கூறவில்லை. ஆனால் நேரசைக்கான நூற்பா,

நெடில்குறில் தனியாய் நின்றும்ஒற்று அடுத்தும்
நடைபெறும் நேரசை நால்வகை யானே. (யாப்பருங்கலம், 6)

என  ‘நெடில்குறில்’ என்பதில் தொடங்குகிறது. குறிலைக் கூறிப் பின் நெடிலைக் கூறுவதுதானே சரி? ஆனால் யாப்பருங்கலம் நெடிலைக் கூறிப் பின் குறிலை வைப்பது ஏன்?

காரிகையின் தலைதடுமாற்றத்திற்கும் யாப்பருங்கலம் நெடில்குறில் எனக் கூறுவதற்கும் ஒரே காரணம்தான். ‘குறில்நெடில்’ என்னும் வரிசையில் வைத்து ஒரு சொல்லை நேரசைக்கு உதாரணம் காட்ட முடியாது.  ‘ஆழி’ என்னும் சொல்லே இருநூல்களின் உரைகளிலும் உதாரணமாக வருகிறது. ஆ – தனிநெடில்; நேரசை. ழி – தனிக்குறில்; நேரசை. இதே காரிகையில்  ‘குறில்நெடில்’ வரிசையில் இரு உதாரணங்கள் வருகின்றன.  ‘சுறா’ என்னும்  சொல்  ‘குறில் நெடில்’  நிரையசைக்கான உதாரணம். ‘விளாம்’ என்பது  ‘குறில் நெடில் ஒற்று’ நிரையசை உதாரணம்.   ‘குறில் நெடில்’ என்னும் வரிசையில் உதாரணம் காட்டினால் அது நேரசைக்கான உதாரணமாக அமையாமல் நிரையசைக்கான உதாரணம் ஆகிவிடும். ‘குறில் நெடில்’ என முறைப்படி காரிகை தொடங்கினாலும் இக்குழப்பத்தைத் தவிர்க்கவே  உதாரணம் ‘நெடில் குறில்’ என்னும் வரிசையில் அமைகிறது. குறில் நெடில் என்னும் வரிசையில் உதாரணம் கூற இயலாது என்பதால் யாப்பருங்கலம் ‘நெடில் குறில்’ என்றே கூறிவிடுகிறது.

எனது விளக்கம்:
இதில் சிறிய சிக்கல் இருக்கிறது. ' ஆழிவெள்வேல் ' ஒரே சீர்.
'ஆ|ழிவெள்|வேல்' என அசைகள் அமைந்துள்ளன. எனவே இங்கும் நெடிலுக்கு மட்டுமே உதாரணமாகி, ழிவெள் என நிரையசையாகிக் குழம்ப வாய்ப்புண்டு .

Saturday, February 12, 2022

தனித்தமிழ் என்னும் தமிழ்மரபு !

          இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர்வினை

            எனஇரண்(டு) ஆகும்  இடைஉரி அடுத்து

            நான்குமாம் திசைவட சொல்அணு காவழி (நன்னூல், 269)

  ௸ நூற்பாவில் நான்கு கருத்துக்கூறுகளைக் காணலாம்:

1. இயற்சொல் , திரி சொல் (இயல்பு).

2. பெயர், வினை (ச்சொற்கள்) என இரண்டு. அடுத்து...

3. இடை, உரி(ச்சொற்கள்) [ஆக] நான்கு.

4. திசை, வடசொற்கள் அணுகாவழி ...

 பெயர், வினை என இரண்டு; இடை, உரி அடுத்து நான்கு என இரு வகைப்படுத்தி, இவற்றுக்கு  மட்டுமே தொகை கொடுத்திருக்கிறார்  பவணந்தியார்;

இயல், திரி சொற்களுடன் திசை,வட சொற்களை ஒருங்கு கூறினாரல்லர்.

இயல்திரி சொற்களுக்குத் தொகை தராவிடினும், 'அவை அணுகாவழி' என ஒதுக்கப்படவில்லை.

இந்நூற்பாவிற்கு உரையெழுதும்போது , நன்னூலின் முதல் உரையாசிரியரான¹ மயிலைநாதர்

திசை வடசொல் அணுகாவழி ' எனவே இப்பகுதிப்படுவது தமிழ்நாட்டிற்குரிய சொல்லென்பதூஉம் , திசைச்சொல்லும் வட சொல்லும் ஈண்டுச் சேரவும்  பெறுமென்பதூஉம் , சேர்தல் ஒரு தலையன்மையின் அவற்றிற்கு இலக்கணம் ஈண்டுக்  கூறார் என்பதூஉமாயிற்று

- என விளக்குகிறார். 

" சேரவும் பெறும்" என எதிர்மறையும்மையாற் கூறுவது நோக்கத்தக்கது. திசை,வடசொற்கள் ஒருதலையல்ல (கட்டாயமல்ல)  ; காரணம்,அவை தமிழ்நாட்டிற்குரியனவல்ல.

இனித் திசைச்சொல் பற்றிய நூற்பாவிற்கு அவர் தரும் விளக்கம் காண்போம்

செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்

ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தினும்

தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப (௸,272)

செந்தமிழ்நிலத்தைச்சேர்ந்த பன்னிருநிலத்தினும் இருவகைத்தமிழாம் ஒருமொழிநிலத்தையொழிந்த பதினேழ்நிலத்தினும் தத்தங்குறிப்பினான் வழங்குவனவற்றைத் திசைச்சொல்லென்று சொல்லுவர், ஆசிரியர் என்றவாறு.

செந்தமிழ்நிலமும் அதனைச்சேர்ந்த பன்னிருநிலமும் மற்றைப் பதினேழ்நிலமுமாக நிலம்முப்பதாம்பிறவெனின், ஆகாது; பதினெண்பூமி பதினெண்மொழியென்றே உலகத்து வழங்கிவருதலின். அவற்றுள், ஈண்டொழித்த தமிழொன்றே இப்பதின்மூன்றுபாலும் பட்ட தென்க. அவற்றுள்ளும் ஒன்று செந்தமிழென்றும் அல்லன கொடுந்தமிழென்றும்கூறப்படும். 

இருவகைத்தமிழாம் ஒருமொழிநிலம் - என்பது ஓசை நயமும் வரையறைச் செறிவும் ஒருங்கமைந்த தொடர். நூற்பாவில் பன்னிரு நிலம் எனப்படினும் ஒருமொழி நிலந்தான் என வரையறுத்துத் தெளிவுபடுத்துகிறார் மயிலைநாதர். 

செந்தமிழ் நிலம் ஒன்றும் அதனைச் சேர்ந்த [கொடுந்தமிழ் வழங்கும்]பன்னிரு  நிலமும் ஆகிய பதின்மூன்று பாலும் [பகுதியும்]பட்டது ஒற்றைத் தமிழ் நிலமே என்று மேலும் தெளிவுபடுத்துகிறார். 

பிற்சோழர் காலத்தில் (பொதுக் காலம் 850 - 1270) பேரரசில் வழங்கிய மொழிகளென ஏழு மொழிகளைக் குறிப்பிடலாம்; இவை தவிரத் தென்கிழக்காசிய நாடுகளுடன் சோழப்பேரரசு கொண்டிருந்த வணிக உறவு, நட்புறவுகளால் வேறு பல இந்தோ ஆரிய, திபெத்திய பர்மிய மொழிகளும் அறிமுகமாகியிருந்தன; இவற்றுள் சிங்கள , பர்மிய மொழிகள் குறிப்பிடத்தக்கன எனக் காட்டுகிறார்   பேராசிரியர் சு.இராசாராம். மேலும் பல்லவர்காலந் தொட்டே சமயம், இலக்கியம், மெய்யியல் எனப் பண்பாட்டு நடைமுறைகளில்  சமற்கிருதச் செல்வாக்கு மேலோங்கி அது தொடர்பு மொழியின் தேவையையும் நிறைவு செய்ததாக அவர் விளக்கியிருக்கிறார்( இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும், காலச்சுவடு, 2010, பக்.203 - 217).

11 ஆம் நூற்றாண்டில் -  சோழப்பேரரசன் பேரால் - வடமொழிவழித் தமிழ் இலக்கணமான வீரசோழியம் தோன்றிவிட்டது. நூலாசிரியர் புத்தமித்திரனாரின் மாணாக்கராகிய , உரையாசிரியர் பெருந்தேவனார், " தமிழ்ச் சொல்லிற்கு எல்லாம் வட நூலே தாயாகி நிகழ்கின்றமையின் , அங்குள்ள வழக்கெல்லாம் தமிழுக்குப் பெறும் " என்று அடித்துச் சொல்லிவிட்டார்.

அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் சோழப்பேரரசு சரிந்துகொண்டிருந்தது. 13ஆம் நூற்றாண்டில்  [சோழரொடு முரணியோருள் ஒருவனாகிய!] சீயகங்கன் என்னும் சிற்றரசன் வேண்டுகோளுக்கிணங்கப் பவணந்தி,   'முன்னோர் நூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்' என்கிறது சிறப்புப் பாயிரம். மயிலைநாதர் 14 ஆம் நூற்றாண்டினர். 

நன்னூல் வடமொழிச் செல்வாக்கையும் தமிழில் அதன் தடத்தையும் மறுக்கவில்லை; ஆனால், மரபில் தமிழையே பேணியது. அதனாற்போலும் அது நன்னூல் - நல்ல நூல் - எனப்பட்டது.

'தமிழ்ச் சொல்லிற்கு எல்லாம் வடநூலே தாய்' என்றதற்கு மாறாகத்  தொல்காப்பியந் தொட்டுத் தொடரும் 'முன்னோர் நூலின்' வழி நன்னூலும் வட சொல்லுக்கு  நான்காம் இடமே² தந்தது. இது தற்செயலான வைப்புமுறையன்று. 

இதனை உணர்ந்து உள்வாங்கிய மயிலைநாதரும், திசைச்சொல்லும் வட சொல்லும் சேர்தல் ஒருதலையன்று என்றார்.

தனித்தமிழ், அயல் அலைகள் பலவற்றின் கலப்பினூடாகவும் தமிழ்மரபாய்த் தலை நீட்டிக்கொண்டேயிருக்கின்றது.

இங்குள்ள சிக்கல் ஒன்றையும் கருதுதல் வேண்டும்.

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும்

தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொல். எச்ச. 4)

என்னும்தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றி, ' ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத் ' தை இடைமிடைந்து நூற்பாவாக்கியுள்ளார் பவணந்தி. பவணந்தி கால மொழிச் சூழலில் அவர் தமிழும் சங்கதமும் அல்லாத பிற மொழிகளுக்கும் இடம் தர நேர்ந்தது இயல்பானதே. இம்மொழிகளையும் உள்ளடக்கி நால்வகைச் சொற்கள் என்னும் தொல்காப்பிய மரபையும்  பேண முயன்றதுதான் சிக்கலை ஏற்படுத்திவிட்டது.  

செந்தமிழ் நிலம் சேர்ந்த பன்னிரு வட்டாரக்கிளைமொழிகளோடு , செந்தமிழ் நிலம் சேராத பிறமொழிகளையும் பவணந்தி ஒன்றாக வகைப்படுத்திவிட்டார். ' திசை வடசொல் அணுகாவழி ' என நூற்பாச்செறிவில் கருத்துச் செலுத்திய பவணந்தி, திசைச்சொல்லுள் கொடுந்தமிழும் சிக்கிக்கொண்டதைக் கருதினாரா என்று அறிய இயலவில்லை.

ஒருவேளை பவணந்தியார் கொடுந்தமிழும் அடங்கிய தனித்தமிழின்³ வேறாகக் கொடுந்தமிழ் தவிர்ந்த தூய தமிழை⁴ இயற்சொல் எனக் கருதினராகலாம் .

குறிப்புகள்

1. நன்னூலின் பழைய உரையாசிரியர் மயிலைநாதர். அவருடைய உரையில் காணப் படும், "இதற்குப் பிறவாறு சொல்லுவாரும் உளர்." (நன். 271) என்பது போன்ற சொல்லாட்சி மயிலைநாதருக்கு முன்னரோ அல்லது அவர் காலத்திலோ நன்னூலுக்கு வேறு உரை இருந்திருக்கலாம் என்ற கருத்தைத் தோற்றுவிக்கிறது. அது ஆசிரியர் மாணவர் வழியில் வாய்மொழியாக வழங்கிய உரையா? எழுத்து வடிவில் ஏட்டில் நிலவிய உரையா என்று சொல்வதற்குப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. எனவே கிடைத்துள்ள நன்னூல் உரைகளில் மயிலைநாதர் உரையே காலத்தால் முந்தியது 

- அ. தாமோதரன்(பதிப்பாசிரியர்), 'பதிப்புரை', பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் செய்து சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட புத்தம் புத்துரை என்னும் விருத்தியுரையும்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,1999, ப.21.

2. பிற இந்திய - குறிப்பாகத் தென்னிந்திய - மொழி மரபிலக்கணங்கள் பெரிதும் தற்சமம், தற்பவம் எனச் சங்கதத்திற்கு முதன்மை தந்து பின்னரே தேசியம் , கிராமியம் எனத் தத்தம் மொழிகளை வைத்தன.

3.தனித்தமிழ் = பிறமொழி கலவாத் தமிழ்

4.தூய தமிழ்    = வட்டார வழக்குத் 'திரிபு'களும் தவிர்ந்த தமிழ்




 



  

Friday, February 11, 2022

அதிகாரம் : ஊ ழல்

 


1.ஆட்சியிற் பேராற்றல் யாவுள மற்றெந்த

   சூழ்ச்சியினும் முந்துறும்ஊ  ழல்

- இதன் கருத்தாவது ஆட்சியின் ஆற்றல் ஊழலே என்பது.


2.பெற்றதனால் ஆயபய னென்கொல் பதவி

   உற்றபின்செய் யாக்கால்ஊ  ழல்

-(இ - து) பதவியால் ஆய பயன் ஊழலே என்பது.


3.அவரவர் ஆனவரை செய்யலாம் ஆமாம்

    இவரும்செய் தாலென்ஊ  ழல்

- (இ - து) ஊழலின் நடப்பியல் அறம் இன்னதென்பது.


4. வழக்கெனினென் வாட்டும் சிறையெனினென் ஆள்வார்க்(கு)

   அடிபணிந்தே செய்திடின்ஊ ழல்

- (இ-து) இடையூறு நிகழினும் பொருட்டன்று என்பது.


5.திட்டம்  நிதியொதுக்கீ  டொப்பந் தமிம்மூன்றால்

   வெட்டுக வெல்லும்ஊ  ழல்

6.பெரிதின் பெரிதாய்க் கடன்பெற்றோர்  ஓட

    உரியன செய்தலும்ஊ  ழல்

7. நடுவ ணரசின்தாள் சேர்ந்தவர் தம்வழக்கைத்

   தடுத்துத்தப் பச்செயும் ஊ  ழல்

8.வேண்டியோர்க்(கு)  ஆக்கம்  விளைய விதிவளைத்துத்

   தாம்தூயர் ஆதலும்ஊ  ழல்

- இவை நான்கும் ஊழற்கு வரைவிலக்கணம்.


9.ஊழலை ஊழலால் வெல்வர் வாழ்முறையாக் 

     கொள்வா ரதுவும்ஊ  ழல்

- (இ-து) ஊழலை வெல்லும் வழி ஊழலே என்பது.


10.சட்டம்  ஒறுப்பினும்  நீங்கினுயிர் ஈகநினை

      கட்டிடமும் நல்கும்ஊ ழல்

- (இ-து)ஊழல் ஈகப்புகழ் நினைவகம் தரும் என்பது.


[பாவிலன்றி ஊழல் பழகிலேன் நாவிலிவை 

வந்தவா  றேநவின்றேன் நான்]

கட்டுரைப் பயிற்சியும் கருப்பட்டி அல்வாவும்


 

i) 'மொழிப் பொறுப்பு' என்பதொன்று உண்டு. எந்த மொழியானாலும் பொறுப்பின்றி ஆளக் கூடாது. தமிழோ இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுக்கு மேற்பட்ட ஏடறிந்த வரலாற்றைக் கொண்டது;எத்தனையோ ஊறுகளை எதிர் கொண்டு கடந்தது; இன்றளவும் தொடர்வது.நம்மால் அதற்கு எதுவும் நேர்ந்துவிட்டால் அது பாவச்செயலாகிவிடும்.

ii)ஐந்திலிருந்து பத்து மணித்துளிகள் நம் உடல் நிலை பற்றி ஆய்ந்தறியும் மருத்துவருக்கு ஆலோசனைக் கட்டணம் நியாயமென்றால், மெய்ப்புப் பார்க்கவும், அதனின் மேலாகச் செவ்விதாக்கம் செய்யவும் கட்டணம் கோருவது நியாயமல்லவா! அந்தக் கட்டணத்தை மனமுவந்து தரவேண்டுமல்லவா! தராவிடினும் அதன் மதிப்புணர வேண்டுமல்லவா!

 -இந்த இரண்டும் என் பயிற்றுரையின் முத்தாய்ப்பு.

                 *************

மதுரைத் தமிழ்ச்சங்கச் செந்தமிழ்க் கல்லூரியும் சான்லாக் ஆய்விதழும் இணைந்து  நடத்திய,  ஆய்வுக்கட்டுரை எழுதுவதன் அடிப்படைகளைப் பயிற்றும் , அரங்கில் (10. 02.2020) பிற்பகலில்ஆய்வு நடையின் அடிப்படைகளை அறிமுகப்படுத்துவது என் பணி. 

முற்பகலைக் கோயிலில் செலவிடும் நோக்கில் துணைவியார், அவர் தோழி ,  என் தம்பி மகள் எனக் குழுவாய்ப் புறப்பட்டோம்.

மதுரைத் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வெளியே வந்ததுமே எதிர் வரிசையில் லாலா கடை . அதைக் கடந்துதான் அங்கயற்கண்ணி அம்மன் கோயில் செல்லவேண்டும். கருப்பட்டி இனிப்பில் விருப்பு மீதூர மாலையில் வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். கால்நடையாக (!)மேலக்கோபுர வாயில் அடைந்தோம் ; அம்மையையும் அப்பனையும் வழிபட்டோம்.

நான் பயிலரங்கு நோக்கிச் சென்றேன்!

                                                 *************

திரு. முருகேசபாண்டியன் அவர்களிடம் விடைபெற்றபோது, தொடர் வண்டி நிலையம் சென்று , லாலா கடை இனிப்பை வாங்கிக்கொண்டு , மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் போகும் திட்டத்தைச் சொன்னேன்.

" ஏன் அலைகிறீர்கள் . மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எதிரிலேயே ஒரு கடை திறந்துவிட்டார்கள் " என்று என் இனிப்புத்தேடலுக்கும் வழிகாட்டினார்.

என் நலனுக்கெதிர் இரைப்பும் ¹ கொழுப்பும் ² ; நல்லவேளை இனிப்பு ³ இல்லை. மதுரை, மதுரை கடந்து தென் தமிழகம் செல்வதெனில்  நாட்டுப்புற இனிப்புகளின் நினைப்பே நாவூறச்செய்துவிடும்.

பிரேமா விலாசில் , முதலில் 50 கிராம் ... தணியவில்லை.(நான் மட்டும்) மேலும் 50 கிராம் - 100 கிராமையும் இடைப் பிற வராமல் அல்ல்ல்வாவாகவே உண்டேன். ' சூடும் சுவையும் ' என்கிற பிரிவிலாத் தொடரின் பொருள் நாக்கில் கரைய உள்ளம் உணர்ந்தது. அப்புறம் 25 கிராம் அளவு மிளகு காரச்சேவும் வடி காப்பியும்... அடடா!

கருப்பட்டி அல்வாவைப் பொட்டலமாகவும் வாங்கிக் கொண்டேன். 

                                      ************,****

திரு நீறும் குங்குமமும் இட்ட நெற்றியோடுதான் பயிலரங்கிற்குச் சென்றேன். முற்பகல் 11.00 மணியளவில் இட்டவை, வீடு திரும்பி ஆடியில் பார்த்தபோது, இரவு 09.00 மணிக்கும் எந்தமிழ் போல் அழியாது துலங்கின. ஆய்வாளர்களால் தமிழுக்கு ஒன்றும் ஆகிவிடாது என்ற நம்பிக்கையோடு துயிலத் தொடங்கினேன்.

------------------

1. Wheezing  2.Cholesterol , 3.Diabetes

(ஆய்வு நடை பற்றிப் பேசிவிட்டு அடிக்குறிப்பு இல்லையென்றால் எப்படி!)

Thursday, February 10, 2022

இல்லம் : உணர்வு, இலக்கியம், இலக்கணம், வழக்கு

 



 இல்லம் என்பது வெறும் இருப்பிடமன்று. அதற்கு ஒரு பண்பாட்டுப் பின்புலம் உண்டு. 

நண்பர் சலபதி (பேரா.ஆ.இரா.வேங்கடாசலபதி) மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபோது பாளையங்கோட்டையில் ,  வசித்துவந்தார். 

நான் நெல்லை செல்ல நேரும்போது  முந்தைய நாள்  "நாளைக்கு உங்கள் அறைக்கு வந்துவிடட்டுமா?" என்பேன். " ஏங்க, அறையா? வீடுங்க " என்பார். 

உண்மை. வரவேற்புக்கூடம், படுக்கையறை, வசிப்பறை,சமையலறை, வழிபாட்டு அறை யாவும் கொண்ட  முழுவீடு .ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் இதனை ஒத்த உரையாடல் நிகழ்ந்திருக்கிறது.

ஆனால், என் மனத்தில்  அது, ஓர் அறையாகவே பதிந்திருந்தது. ஆம். அப்போது அவருக்கு மணமாகவில்லை.   

பேரா. ய. மணிகண்டன் மீட்டுக் கொணர்ந்த பாரதியாரின் 'திமிழ்' என்னும்  கட்டுரை (காலச்சுவடு, டிசம்பர் 2019) தமிழ்ச் சொல்லாய்வுகள் , இலக்கணச் சிலம்பாட்டங்கள் முதலியன பற்றிய எள்ளற் கட்டுரை. தொடர்பில்லாத வேர்களையும் விளக்கங்களையும் வருவிக்கும் பண்டிதச் சாமர்த்தியத்தைப் புலவர் நெட்டைப் பனை முதலியார்- சீடப்பிள்ளை கும்பகர்ண முதலியார் உரையாடலின் ஊடாகத் தமக்கேயுரிய முறையில் பாரதி நகையாடியிருப்பார். 

ஓரிடத்தில், " வீடு என்பதைக் கும்பகர்ணன்  மனைவி  என்றான் " என்று எழுதுகிறார்  பாரதி.

சரி. நாம் கலித்தொகைப் பாட்டின் (8: 19 - 23) வழியாக நச்சினார்க்கினியரிடம் போவோம். 

தலைவன், தலைவியிடம் சொன்னால் வருந்துவாள் என்று கருதி, சொல்லாமலே பொருள் தேடப் பிரிந்து செல்ல முடிவு செய்கிறான். அதனை உணர்ந்த தோழி , பொருளின் நிலையாமையை விளக்கி, இல்வாழ்க்கையே பொருள் என்று சுட்டி, அவன் பிரிந்து செல்லாமல் தடுக்கிறாள். இது பாலைக் கலிப் பாட்டு. 

நிறைவுப்பகுதி :

நச்சல் கூடாது² பெரும¹ இச்செல

வொழிதல் வேண்டுவல்⁴ சூழிற் பழியின்று³

மன்னவன் புறந்தர வருவிருந்தோம்பித்

தன்னகர் விழையக் கூடின்

இன்னுறழ் வியன்மார்ப அதுமனும் பொருளே

¹தலைவா, ²பொருளை விரும்பாதே.³எண்ணிப் பார்த்து, பழி நேராத வகையில்,  ⁴நீ தலைவியைப் பிரிந்து செல்வதைக் கைவிட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.மன்னன் ,  தம்மைக்  காக்கவேண்டி வரும் விருந்தினரைப் பேணித் தன் மனைவி விரும்பும்படி அவளுடன் கூடியிருந்தால், இனிய தழுவலையுடைய அகன்ற மார்பனே! அதுதான் நிலையான பொருள்(கருத்து நச்சினார்க்கினியருடையது.நடை என்னுடையது)

நகர்= பேரில்( மாளிகை), இல்லம்(நகர் என்பது கோயில், நகரம் என்னும் பொருள்களையும் குறிக்கும்)

ஆனால், இங்கு , மனைவி என்று பொருள் கொண்டு , " நகர் : ஆகுபெயர் " என்று இலக்கணக் குறிப்புத் தருகிறார் நச்சர்.

இக்காலத்திலும் இவ் வழக்கு உண்டு.

மணமான ஒருவர் " வீட்'ல பேசிக்'கிட்டு சொல்'றேன்" என்றால் , "மனைவியிடம் கலந்தாலோசித்துச் சொல்கிறேன்" என்பது பொருள்.

'வீடு' என்பதற்கு 'மனைவி' என்று பொருள் கொள்வதை எள்ளிநகையாட வேண்டியதில்லை. 'திமிழி'ன் வேறு சிலவும் எள்ளலுக்குரியனவல்ல.

மனைவி இல்லாத - ஆனால், எல்லா வசதிகளையும் கொண்ட- வெற்று இருப்பிடம் இல்லமாகாது.மனைவி இருந்தால் ஓர் அறையே கூட இல்லமாகும்.

அவள் இல்லாள். இதற்கு இணையான ஆண்பால் இல்லை (பெண்ணியத்தார் என்ன சொல்வரோ! அறியேன். நான் மாற்றத்திற்கு எதிரியல்லன் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன்)



தப்பட் '* என்னும் இந்தித் திரைப்படத்தைச் சற்றே பார்ப்போம்.

அமிர்தா  செவ்வியல் நடனத்தில் தேர்ந்தவள். கணவன் விக்ரம் டெல்லியிலுள்ள கார்ப்பரேட் கம்பெனியில் பணியாற்றுகிறான். இயல்பாய் , இனிதாய்த் தொடங்கி நகர்கிறது இல்லறம். அவன் கனவு கண்டவாறே -  நடுத்தர வர்க்கக்  கார்ப்பரேட் குழுமப் பணியாளர்களின் கனவுதான் - மேல் அலுவலர் பதவிக்கு உயர்கிறான். பணி இலண்டனில். மனைவியோடு இலண்டனில் நடத்தும் வாழ்க்கை, குறிப்பாக இலண்டன் இல்லம் பற்றி மகிழ்ச்சி அலையடிக்கிறது. அதனைக் கொண்டாடச் சிறு கூடுகை (பார்ட்டி). 

 இலண்டன் போய்ப் பணியாற்றலாம் ஆனால் பதவி உயர்வு இல்லை என்று கூடுகையின்போது தெரிகிறது. காரணம் அலுவலக உள்ளரசியல். கூடுகையிலேயே உடன் பணியாளனுடன் சச்சரவு. தடுக்கப்போகிறாள் அமிர்தா. கனவு சிதைந்ததால் உணர்ச்சிவயப்பட்டிருந்த விக்ரம் சுற்றமும் நட்பும் சூழ்த்திருந்த கூடுகையில்  அவளை அறைந்துவிடுகிறான்(* தப்பட்= அறை) . அவள் ஒரு மனிதப் பிறவியாக, தன்மான இழப்பில்  நிலைகுலைந்துபோகிறாள். ஆனால், அவன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவளது முரண் மெல்ல மெல்ல முற்றுகிறது.

மணவிலக்குக் கேட்டு வழக்குமன்றத்தில் முறையிடுகிறாள். அவள் கருவுற்றிருப்பது தெரியவருகிறது. விக்ரம் அவளைச் சமாதானப்படுத்த முயன்று தோற்கிறான்.

மாமியார் தன் மருமகளின் உணர்வைப் புரிந்துகொள்கிறாள். அவர்களிடையே முரணில்லை. 

விக்ரம் தனியே இலண்டன் செல்கிறான். 

மண விலக்குக் கிடைக்கிறது. தன் தவறுணர்ந்த விக்ரம் அன்று வழக்குமன்றத்தில் அமிர்தாவிடம் மனம்விட்டுப் பேசுகிறான். அது, உள்ளார்ந்தது என்று அமிர்தாவும் உணர்கிறாள். மீண்டும் புதிதாக நட்பிலிருந்து தொடங்கலாம் என்கிறான்.

கதையையோ உணர்ச்சிப் பன்மைகளை, மோதல்களை  அடக்கமான நடிப்பாற்றலால் புலப்படுத்தியிருக்கும் நடிகர்களின் திறனையோ பிறவற்றையோ விவரிக்கப்போவதில்லை.ஆனால், பார்க்க வேண்டிய படம் என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன். 

வேறு ஒன்றைச் சொல்லத்தான் இத்தனை முன்கதை . 

நிறைவுக் காட்சியில் விக்ரம் அமிர்தாவிடம் பேசும்போது, " இலண்டன் வாழ்க்கை, பணி எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். நீலக் கதவுடைய கனவு இல்லம் , இல்லமாகவே இல்லை. உண்மையில் நீதான் என் இல்லம்" என்கிறான். 

கார்ப்பரேட் காலத்து இந்தியாவிலும் மனைவிதான் இல்லம்.





Saturday, November 27, 2021

புதுமனை புகுவிழா

புதுமனை புகுவிழா 

சடங்குமுறைகள்

 


                                                பாவலர் ச.பாலசுந்தரம்


பதிப்புரை

அப்பா ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடத்திவைத்திருக்கிறார்கள். விதிவிலக்காக, அவர் புதுமனை புகுவிழாவை நடத்தவேண்டிய நெருக்கடி ஒன்று வந்தது:

தஞ்சாவூர், பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் திரு. இரத்தினகிரி அவர்கள்  ஒரு நாள் மாலை எங்கள் இல்லத்திற்கு வந்தார் ;அப்பா புதுமனை புகுவிழா ஒன்றை மறுநாள் விடியலில் நடத்தி வைக்க வேண்டும் என்றார்.

சிங்கப்பூரில் வாழும் அவர் தங்கையார் தஞ்சையில் ஒரு திருமண அரங்கைக் கட்டினார். கட்டுமானம் முழுதும் திரு. இரத்தினகிரி அவர்கள் பொறுப்பில் நிறைவேறியது. புகுவிழா சடங்குகளுடன் நிகழவேண்டுமென்பது தங்கை விருப்பம்.நல்லநாளும் குறிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுவிட்டது.திரு. இரத்தினகிரி அவர்களுக்குச் சடங்குகளில் உடன்பாடில்லை , அதைவிடவும்  அவற்றைப் பிராமணரை வைத்து நடத்துவதை அவரால் கற்பனையில் கூட அனுமதிக்க இயலாது. எனவே ஒதுங்கியிருக்க முடிவு செய்தார்.

தங்கைக்கு ஓர் இக்கட்டான நிலை.

சிங்கையில் இசுலாமியர், சீனர் முதலியோர்க்குப் புதுமனை புகுவிழா மரபுகள் உள்ளன. அம்மரபுகள் அவர்தம் பண்பாட்டில் தோய்ந்தவை.  நிலைப் படங்களாக இருந்த நிலைமாறி இயங்கு படங்களாகச் சடங்குகள் பதிவுசெய்யப்படும் காலமும் வந்துவிட்டது. தங்கை சிங்கை செல்லும்போது புகுவிழாப் பதிவுகளுடன் செல்லவில்லையெனில், தமிழர்க்குப் பண்பாட்டு மரபில்லை என்றாகிவிடக்கூடும்.

மறுபுறம், முற்று முழுதாய்ப் பொறுப்பெடுத்துக் கட்டுமானத்தை நிறைவேற்றிய அண்ணன் இல்லாமல் விழா நடத்தவும் மனம் இடந்தரவில்லை.பிராமணர் இல்லாமல், சங்குகளுடன் விழா நடத்தலாம் எனஒரு சமரசம் எட்டப்பட்டது.

அதன்படி நடத்த, அப்பாவை அணுகி நிலைமையை விவரித்தார் திரு. இரத்தினகிரி.இந்த உரையாடலின்போது நான் உடனிருந்தேன்.அப்பா சற்றே தயங்கினாலும் நிலையுணர்ந்து , ஏற்றுக்கொண்டு,இரவே, நடைமுறையில் இருந்த வைதிக மாதிரியைக் கொண்டு   சடங்கு முறைமையொன்றைத் தொகுத்து ஒரு தாளில் குறித்துக்கொண்டு, மறுநாள் சென்று நடத்திவைத்தார்.

பழைய கோப்புகளைத் தூசிதட்டியபோது பாக்களோடு கூடிய கையகலக் குறிப்பேடு கிடைத்தது. பின்னர் விரித்தெழுதியது போலும். பேரளவு முழுமை காணப்படுகிறது.திருமுறை, (ஓரளவு)திவ்வியப் பிரபந்தப் பாக்களைக் கொண்ட தமிழ் முறை என்று சொல்லலாம். 

திருமண முறைகள் பற்றிய அப்பாவின் கருத்தை இங்குச் சொல்லவேண்டும்.சில  நடைமுறைகள் சடங்குகள் முதலியவற்றுடன் கூடிய ஒரு நிகழ்வாகத் திருமணம் நினைவில் பதிய வேண்டுமென்பார்;திருமணத்தைப் பரப்புரை மேடையாக்கக் கூடாதென்பார். வைதிகத் திருமண முறையிலிருந்து மாறிய காலகட்டத்தில் சீர்திருத்த , தமிழ் மணம் பற்றி அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது.அதன் பின்னணியில் கொள்கை இருந்தது. அவற்றை விளக்க நேர்ந்தது. புதிய மணமுறை பரவலாகி இயல்பாக ஏற்கப்பெற்ற நிலையில் எந்தப் பரப்புரையும் தேவையில்லை என்பார்.

ஒரு முறை, "தமிழ்த் திருமணச் செய்முறையை விளக்கி எழுதுங்க ளேன்" என்றேன்.

" ஏற்கெனவே இருந்த வைதிக மணமுறைகளிலிருந்து மாறியிருக்கிறோம்.வைதிக முறையும் இடையில் வந்ததுதான்.இப்போதைய ' தமிழ் ' மணமுறையும் மாறலாம். இதை எழுதி எந்திரமயமாக நிலைநிறுத்த வேண்டியதில்லை" என்றார்

ஆனாலும், இக்கையேட்டில் செய்முறைகளைச் சற்று விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றியது.

                                                                                                                    பா.மதிவாணன்

                                                                                                                          23.11.2021


புதுமனை புகுவிழா

சடங்கு முறைகள்


1.மேடை -விநாயகர்-அம்மையப்பர்-அமைத்தல்

2.ஓம குண்டம் - குத்துவிளக்கு அமைத்தல் -மணல் - உமி - சமித்து

3.நவதானியம் சூழ அமைத்தல்- உரிய பூசனைப் பொருள்களை அணுக்கமாக வைத்திருத்தல்

4.பசுவும் கன்றும் ஆயத்தம் செய்து வைத்தல்

5.மனைக்குரியவர்களை அமரச்செய்துவிளக்கேற்ற வைத்துப் பூசனை தொடங்குதல் – மங்கலவாச்சியம் - கோமியம்

6.விநாயகர்- அம்மையப்பர் வழிபாடு செய்து மனைக்கு உரியவர்களைக் கொண்டு குடநீரையும் கோசலத்தையும்  தெளித்துத் தூய்மை செய்யச் சொல்லுதல் - பாடல் மந்திரம்

7. மனைக்கு உரியவர்களைக் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து வரச் செய்தல் -  மங்கல மகளிர் ஐந்து குடங்களில்நீரும் வரிசைப் பொருள்களும் ஏந்திவர, பசுவும் கன்றும் மங்கல வாச்சியத்துடன் வரச் செய்தல்

8. பசுவுக்கு மாலையிட்டு ஆரத்தியெடுத்து முறையாக  உட்புகச் செய்தல்     மேடையில் நீர்க் குடங்களையும் வரிசைப் பொருள்களையும் வைக்கச் செய்தல் -பாடல் மந்திரம்

9. மனைக்கு உரியவர்களைக் கிழக்கு நோக்கி அமர்த்தி, சம்பந்தியாரை மாலை அணிவிக்கச் செய்து புத்தாடை கொடுத்து உடுத்திவரச்  செய்தல் - மந்திரப் பாடல்

10. வேள்வித்தீ வளர்த்து  மந்திரம் ஓதல் மனைக்கு உரியவர்களை நெய் வார்க்கச் செய்தல் - வேள்விக்குப் பின் உள்ளறையில் விளக்கேற்றச் செய்தல். பெரியோரை வழிபடச் செய்தல் - பசுவுக்கு வாயுறை தரச் செய்தல்

 11.பாலுக்கு வழிபாடு இயற்றி , அடுப்பிற்கு அலங்காரம் செய்யச் சொல்லி வேள்வித்தீயில் தீ மூட்டி காய்ச்சச் சொல்லுதல் - உரியவர் முதலில் அருந்த பின் எல்லோருக்கும் வழங்கல்

 12.கட்டிடக் கலைஞர்களுக்கு மரியாதை

 13.ஆசிரியனுக்கு மரியாதை செய்து  ஆசி பெறச் சொல்லுதல்

 14.ஆரத்தி எடுத்துக் கண்ணேறு கழித்தல்-எலுமிச்சம் பழத்தைப் பலியிட்டு வீசுதல்

 15.பூசணிக்காயை முற்றத்தில் கட்டச் செய்தல்

 16.மொய் எழுதுதல் முதலிய சிறப்புச் செய்தல்










பொருள்கள்


மஞ்சள் ( சாந்து விரவி)

குங்குமம்,திருநீறு

சந்தனம், விடு பூ ,சரம் ,மாலை

தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, 

எலுமிச்சம் பழம்

சூடம் ,சாம்பிராணி, பத்தி, திரிநூல்

நவதானியம், உப்பு ,கல்கண்டு,சீனி

நெய், எண்ணெய் ,பால், கோசலம்

பச்சையரிசி

வாழை இலை ,மாவிலை

அருகம்புல் , தருப்பை, சமித்து

பூசணிக்காய்

புதுப்பாய் , சமக்காளம்

செங்கல், மணல் ,

சிறு செம்பு 2, சிறு குடம் 5

தாம்பாளம், தூபக்கால்

குத்துவிளக்கு 2 + 1, மனைப் பலகை

ஆசிரியன், கட்டிடக் கலைஞர்களுக்குப் பரிசு, புத்தாடை












விநாயகர் அகவல் 

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப்

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே!

முப்பழ நுகரும் மூஷிக வாகன! 

இப்பொழுது வந்தெமக் கருள்தர வேண்டும்

சித்தி விநாயக சரணம் சரணம்

வித்தக விநாயக விரைகழல் சரணம்

(விநாயகர் அகவலின் முற்பகுதி - இதன் இறுதி மூன்றடிகளில் மாற்றம் , சேர்க்கை)

இல்லத்திற் புகுங்காலை மகளிர் மலர் தூவிவரவேற்றல்

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல 

பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனிஎல்லாம் விளங்க

அன்னநடை மடவா ளுமைகோன் அடி யோமுக்கருள் புரிந்து 

பின்னைப்பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே

(சேந்தனார், கோயில், ஒன்பதாந்திருமுறை)

கோயிலிலிருந்து மங்கலப் பொருள்  சீர்வரிசைகளுடன் மனைக்குரியவர் மங்கலப் பெண்டிர் ஐவர் நீர்க்குடத்துடன் பசுவொடுங்கன்றொடும் வருதல்.  மலர்தூவிவரவேற்றல். கோசலங்கொண்டு தெளித்து மனைக்குரியவர் தூய்மை செய்தல்.



தலைமக்கன் உள்ளேவந்தபின்  திருவுடையார் வாழ்த்திவரவேற்றல் 

நல்குரவும் இன்பமும் நலங்கள் அவையாகி 

வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிடம் என்பார் 

மல்கும் அடியார்கள் படியார இசை பாடிச்

செல்வ மறையோர்உறை திருப்புகலி யாமே (திருஞானசம்பந்தர், சீர்காழி)

அமர்தல்

ஒளிவிளக்கின் முன் தலைமக்களைக் கிழக்கு நோக்கி அமரச்செய்து வழிபாடு செய்யச் செய்தல்:

ஆசிரியன் வணக்கம் : ஐந்து கரத்தனை யானை முகத்தனை

                                           இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

                                            நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்

                                           புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே (விநாயகர் காப்பு, திருமந்திரம்)

கோள் வழிபாடு           : உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து 

                                                உமையோடும்   வெள்ளை விடைமேல்

                                            முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் 

                                                    உளமே  புகுந்த அதனால்

                                            திருமகள் கலையதூர்தி செயமாது பூமி

                                                    திசைதெய்வ மான பலவும்

                                            அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல

                                                     அடியா ரவர்க்கு மிகவே (திருஞானசம்பந்தர், கோளறுபதிகம்)

குடநீர் தெளித்தல்         : ஈறான கன்னி குமரியே காவிரி

                                             வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுள்

                                              பேறான வேதா கமமே பிறத்தலான்

                                               மாறாத தென்திசை வையகஞ் சுத்தமே

                                                      (திருமந்திரம், ஒன்பதாம் தந்திரம், பொற்றில்லைக்கூத்து)

மந்திரம்                             : மந்திரம் நான்மறை யாகி வானவர்

                                               சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன

                                               செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு

                                               அந்தியுள் மந்திரம் ஐந்தெழுத் தாமே

                                                      (திருஞானசம்பந்தர், பஞ்சாக்கரத் திருப்பதிகம்)


தலைமக்களை              சிறையார் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர்க் கொன்றை

அமரச்செய்து...             மறையார் பாடல் ஆடலோடு மால் விடை மேல் வருவார

                                                 இறையார் வந்தென் இல்புகுந்தென் எழில்நலமும் கொண்டார்

                                              கறையார் சோலைக் கானூர் மேய பிறையார் சடையாரே

                                                   (திருஞானசம்பந்தர், திருக்கானூர் )

                                                 

மாமன் மாமி

புத்தாடை வழங்கல்        :பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்

                                                            போகமும் திருவும் புணர்ப்பானைப்

                                              பின்னை என் பிழையைப் பொறுப்பானைப்

                                                              பிழையெலாம் தவிரப் பணிப்பானை

                                               இன்ன தன்மையன் என்றறிவு வொண்ணா 

                                                             எம்மானை, எளி வந்த பிரானை,

                                                அன்னம் வைகும் வயற்பழனத்தணி 

                                                              ஆரூரானை, மறக்கலும் ஆமே? (சுந்தரர், திருவாரூர்)


பெற்றோரை                    அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ

வணங்கச்                                 அன்புடைய மாமனும் மாமி யும்நீ

செய்தல்                            ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ

                                                      ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ

மாமன் மாமியை              துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ

அவையோரை                            துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ

வணங்கச் செய்தல்           இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ   

                                                         இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே (திருநாவுக்கரசர்)



திருவிளக்கு                        திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொணெய்தல்

வழிபாடு, பூசனை            குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றைவன்னி

                                                மருவமர் நீள்கொடி மாட மலிமறை யோர்கணல்லூர்

                                                 உருவமர் பாகத் துமையவள் பாகனை யுள்குதுமே 

                                                        (திருநாவுக்கரசர், திருநல்லூர்)



மலரிட்டு                          நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம்

வணங்கச்                          வேறு வேறு விரித்த சடையிடை

செய்தல்                            ஆறு கொண்டுகந் தான்திரு மீயச்சூர்

                                             ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.

                                                    (திருநாவுக்கரசர், திருமீயச்சூர்)



ஆசிரியன்                  களித்துக் கலந்ததொர் காதற் கசிவொடு காவிரிவாய்க்

வாழ்த்து                      குளித்துத் தொழுதுமுன் னின்றவிப் பத்தரைக் கோதில்செந்தேன்

                                       தெளித்துச் சுவையமு தூட்டி யமரர்கள் சூழிருப்ப

                                       அளித்துப் பெருஞ்செல்வ மாக்குமை யாற னடித்தலமே

                                              (திருநாவுக்கரசர், திருவையாறு)



பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்

    பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற

நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்

    நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்

பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றிப்

    பிரியாது பலநாளும் வழிபட் டேத்தும்

சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்

    சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே

                                        (திருநாவுக்கரசர், திருச்சிவபுரம்)



எழுமைக்கும் எனதாவிக்கு இன்னமுதத்தினை எனதாருயிர்

கெழுமிய கதிர்ச்சோதியை மணிவண்ணனைக் குடக்கூத்தனை

விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற்கனியினைத்

தொழுமின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே (நம்மாழ்வார்)



பால் காய்ச்ச ஆணையிடல்

செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்தஅக் காரம் நறுநெய் பாலால்

பன்னிரண் டுதிரு வோணம் அட்டேன் பண்டும் இப்பிள் ளைபரி சறிவன்

இன்ன முகப்பன்நா னென்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்

உன்மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே.

(பெரியாழ்வார் திருமொழி)

பாலைக் கறந்து அடுப்பேற வைத்து

   பல்வளையாள் என் மகளிருப்ப

மேலையகத்தே நெருப்பு வேண்டிச் சென்று

   இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்

சாளக்கிராமமுடைய நம்பி

   சாய்த்துப் பருகிட்டுப் போந்துநின்றான்

ஆலைக் கரும்பின் மொழியனைய 

    அசோதைநங்காய் உன்மகனைக் கூவாய்!

                                 (பெரியாழ்வார் திருமொழி)

பால் பொங்குக   

பொங்குக உலையே பொங்குக பாலே

பொங்குக பொருளே பொங்குக இன்பம்

தங்குக வளமே தழைக நல்லறமே

பொங்குக இறைவன் அருள் நிறை புகழே.

வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க

        மலிவளம் சுரக்க மன்னன்

கோன்முறை அரசு செய்க

        குறைவிலாது உயிர்கள் வாழ்க

நான்மறை அறங்கள் ஓங்க

        நற்றவம் வேள்வி மல்க

மேன்மைகொள் சைவ நீதி

        விளங்குக உலக மெல்லாம்.

(கச்சியப்பர், கந்தபுராணம்)

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்,

நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை,

கலியும் கெடும்கண்டு கொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,

மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம் (நம்மாழ்வார், திருவாய்மொழி)





வேள்வி மந்திரம்

மந்திர நான்மறையாகி வானவர்  

சிந்தையுள் நின்று அவர் தம்மை ஆள்வன 

செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு 

அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே¹


நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!

புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!²


ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!

தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!

சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

மான்நேர் நோக்கி மணாளா போற்றி

வான்அகத்து அமரர் தாயே போற்றி

பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி

அருவமும் உருவமும் ஆனாய் போற்றி

மருவிய கருணை மலையே போற்றி

ஆளா னவர்கட்கு அன்பா போற்றி

ஆரா அமுதே அருளா போற்றி

பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 

சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி

மந்திர மாமலை மேயாய் போற்றி

எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி

ஒழவற நிறைந்த ஒருவ போற்றி

செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி

புரம்பல எரித்த புராண போற்றி

பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி

போற்றி போற்றி புயங்கப் பெருமான்

போற்றி போற்றி புராண காரண

போற்றி போற்றி சய சய ³

1. பஞ்சாக்கரத் திருப்பதிகம், ௨ - திருஞான சம்பந்தர்

2. சிவபுராணம் - மாணிக்க வாசகர் (முற்பகுதி மட்டும்)

3. போற்றித் திரு அகவல் - மாணிக்க வாசகர் (இடையிட்டுத் தொகுத்த பகுதி)


                                                        


Sunday, November 21, 2021

'மணிமேகலை'க் காப்பிய மாந்தர் உளவியல் நோக்கில் அணுகும் வாய்ப்புகள்

 தமிழ்க் காப்பிய வரலாற்றினைத் தொடங்கி வைத்தவை சிலப்பதிகாரமும். மணிமேகலையும். பெருங்கதையே முன்னோடி என்னும் வையாபுரிப்பிள்ளையவர்கள் கருத்தை(காவியகாலம், ப.77)  எளிதாய் மறுத்தல் இயலாதெனினும் இலக்கியச்செல்நெறி(Trend) ஒன்றன் முன்னோடியாக, இலக்கியத் தகுதி சான்றவையாக முன்னிற்பன சிலம்பும், சிலம்பைச் சார்ந்த மேகலையுமே எனல் பொருந்தும். மணிமேகலையின் மற்றொரு தனித்தன்மை அதன் கிளைக்கதைப் பன்மையாகும்.

சிலம்பு, மேகலை இரண்டும் இலக்கிய நயஞ்சான்ற தத்தம் பெயர்களாலேயே கற்போரை ஈர்த்துக் களிகொள்ளச் செய்வன. சிலம்பு என்னும் மகளிர் அணி கதையில் திருப்பு முனையாயமைகிறது . மணிமேகலை என்பது மகளிர் அணியாயினும் மணிமேகலா தெய்வத்தான் பெயரமைந்த தலைவியைச் சுட்டிக் காப்பியப் பெயராய் நிற்கிறது.

மணிமேகலையே, இக்காப்பியத்தின் தலைமையும் மைய இழையுமான மாந்தர்; குறிக்கோள் மாந்தர்; காப்பியத்தின் ஒருதனி  முழுநிலை மாந்தர் (Round Character). உணர்ச்சிக் கொந்தளிப்பு, உளப்போராட்டம், குறிக்கோள் வேட்கை முதலியவற்றிடையே ஊசலாடும் மணிமேகலையை ஓரளவு உளவியல் நோக்கில் காணும் வாய்ப்பைச் சீத்தலைச் சாத்தனார் தருகிறார் என்றே சொல்லலாம். 

மாதவி,  வயந்தமாலையிடம் கோவலனுற்ற கொடுந்துயரையும் பத்தினிப்பெண்டிருள்

மாறுபட்ட கண்ணகி வனமுலை திருகி மதுரையைத் தீயழற்படுத்தியதையும், மணிமேகலையை அருந்தவப்படுத்தியதையும் மாதவர் உறைவிடம் புகுந்ததையும் கூறக்கேட்டு, 

வெந்துய ரிடும்பை செவியகம் வெதுப்பக்

காதல் நெஞ்சங் கலங்கிக் காரிகை 

மாதர் செங்கண் வரிவனப் பழித்துப்

புலம்புநீ ருருட்டிப் பொதியவிழ் நறுமலர் 

இலங்கிதழ் மாலையை இட்டுநீ ராட்ட (மலர்வனம் புக்க காதை, 5-10)

மணிமேகலையின்  மென்மை புலனாகிறது.


சோழர் குல இளவரசன் உதயகுமரன் காமங்காழ்க்கொள அவளை  அடைய முயன்று தோற்றுத் திரும்பியபின் மணிமேகலை, தோழி சுதமதியிடம்

கற்புத் தானிலள் நற்றவ உணர்விலள் 

வருணக் காப்பிலள் பொருள்விலை யாட்டியென்

றிகழ்ந்தன னாகி நயந்தோ னென்னாது 

புதுவோன் பின்றைப் போனதென் னெஞ்சம்

இதுவோ அன்னாய் காமத் தியற்கை

இதுவே யாயிற் கெடுகதன் றிறமென

(மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை. 86-91)

கூறும்போது மணிமேகலையின் ஊசலாட்டம் புலனாகிறது. இதனை உளவியல் நோக்கில் விளக்கலாமெனினும் சாத்தனார் முற்பிறப்புணர்வின் தொடர்ச்சியைக் காரணம் காட்டித் தம் பௌத்தக் கருத்துநிலையை நாட்ட முயல்கிறார். முற்பிறவியில் மணிமேகலை இலக்குமி என்னும் பெயரிலும், உதயகுமரன் இராகுலன் என்னும் பெயரிலும் கணவன் மனைவியராய் இணைந்தோராவர். இராகுலனின்அடாத செயலொன்றால் திட்டிவிடம் என்னும் பாம்பு தீண்டி இறந்தான். இலக்குமியும் தீப்பாய்ந்து உயிர் விட்டாள்.  


மணிமேகலை தன் முற்பிறப்புப்பற்றிப் பின்னர்ப் புத்தபீடிகையால் தெரிந்துணர்கிறாள். அதன் பின்னர்க் காயசண்டிகை கணவன் காஞ்சனனால், உதயகுமரன் வெட்டுண்ட கிடந்தபோது,


வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின் 

வெவ்வினை யுருப்ப விளித்தனை யோவென

விழுமக் கிளவியின் வெய்துயிர்த்துப் புலம்பி 

அழுதன ளேங்கி அயாவுயிர்த் தெழுதலும்

செல்லல் செல்லல் சேயரி நெடுங்கள் 

அல்லியந் தாரோன் தன்பாற் செல்லல் (கத்திற்பாவை வருவதுரைத்த காதை, 23-28)

என  உணர்ச்சி வயப்பட்டு நெருங்கிய மணிமேகலையைக் கத்திற்பாவை தடுத்து,

தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்

விடுமாறு முயல்வோய் விழுமங் கொள்ளேல்

 (கந்திற்பாவை வருவதுரைத்த காதை, 33-34)

என மணிமேகலைக்கு, அவளது குறிக்கோளை நினைவுபடுத்துகிறது.  இங்கும் உளவியலை பெளத்தக் கருத்துநிலை விஞ்சி வெளிப்படுதல் காணலாம், 

படிப்படியே, இன்னா செய்தார்க்கும் இனியவே செய்து மன அமைதியுற்று, தத்துவத் திறம்பெற்று, அறிவால் பிற சமயக் கணக்கரை வென்று, நிறைவாகத் தவத்திறம் பூண்டு பவத் திறமறுக என நோற்றுயர்ந்த மணிமேகலை குறிக்கோளின் உச்சத்திற்குச் செல்லக் காணலாம். தொடக்க முதல் மணிமேகலையைப் பௌத்தக் கருத்துநிலை நின்று நகர்த்திச் செல்லும் சாத்தனார், மாந்தர் படைப்பு எனும் இலக்கிய நிலை நின்று நோக்கும்போது பின்னடைவெய்துகிறார். என்றாலும் அவரது கவித்துவத்திறங் காரணமாக உணர்வு நிலைகளை ஓரளவு உளவியற்பாங்கோடு காட்டியுள்ளார் என்றே கூறுதல் வேண்டும்.


பட்டறிவும் பக்குவமும் - சுதமதி, இராசமாதேவி 

மணிமேகலையின் தோழி சுதமதி கதை இருவேறு காதைகளில்(மலர்வனம் புக்க காதை, மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை) இடம்பெறுகிறது.

சண்பை நகரத்துக் கௌசிகள் என்னும் இருபிறப்பாளன் ஒரு மகளாகிய சுதமதி

ஒரு தனி அஞ்சேன் ஓரா நெஞ்சமொடு

ஆரா மத்திடை அலர் கொய்வேன்" (மலர்வனம் புக்க காதை, 31-32) எனத் தனது இளமைக் காலத்தை நினைவு கூர்கிறாள். தனித்து அச்சமற்றிருக்கக் காரணம் அவளது ஓரா நெஞ்சம் எனச் செறிவாகக் காட்டுகிறார் சாத்தனார். பழவினைப் பயத்தால் மாருதவேகன் என்னும் வித்தியாதரனோடு பிழைமணம் எய்தி, இந்திர விழாக்காலத்தில் மகிழ்ந்திருந்த நிலையில், அவன் கைவிட்டு மறைந்துவிடுகிறான். அவள் சமணப் பள்ளியில் தஞ்சம் புகுகிறாள்; தந்தையொடு, அவனது பிச்சையுணவால் உயிர் வாழ்கிறாள்; தந்தையை மாடுமுட்டியபின் சமணர் கைவிட, பௌத்த மாதவர் உறைவிடத்தில் தஞ்சம் புக்கு மாதவிக்குப் பணிபுரிந்து மணிமேகலை தோழியாகிறாள்; இந்தப் பட்டறிவினால் உலகியலுணர்ந்து மணிமேகலையை எச்சரிக்கையுடன் அழைத்துச் செல்கிறாள். கட்டற்ற வாழ்க்கை விடுத்து, கட்டுற்றுப் பிறர்க்கும் வழிகாட்டும் அளவுக்கு முதிரும் மாந்தராகச் சாத்தனார் சுதமதியைப் படைத்துள்ளார். 

சுதமதி கதை சுருக்கமானதெனின், இராசமாதேவி மனமாற்றம் மிகச் சுருக்கமானதெனலாம். சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய மணிமேகலைபால் ஈடுபாடு கொள்வதும், மகனைக் கொல்லக் காரணமானவள்  எனக்கருதி மணிமேகலைக்குக் கொடுமை இழைப்பதும், மணிமேகலை தன் தவ வலிமையால் மீளக்கண்டு

செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன்  

என்மகற்கு உற்ற இடுக்கண் பொறாது  

பொன்நேர் அனையாய் பொறுக்கென்று அவள்தொழ(சிறைவிடு காதை,64-66) யாவும்  மிக விரைந்து நடந்தவிடுகின்றன. கதைப் போக்கில் வேகம் காணப்படுகின்றதேயன்றி உளவியல் நுட்பமில்லை.


 ஒருநிலை மாந்தர்(Flat Character) 

 

 தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் 

மணிமே கலையொடு மாதவி வாராத் 

தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வரச்

சித்திராபதிதான் செல்லலுற் றிரங்கி, 

வயந்த மாலையை வெருகெனக் கூஉய்ப் 

பயங்கெழு மாநகர் அலர்எடுத் துரை (ஊரலர் உரைத்த காதை, 3 -9)

என்கிறாள் மாதலியின் தாய் சித்திராபதி. மலர் கொய்யக் சென்ற மணிமேகலையை வந்து புறஞ்சுற்றிய கம்பலை மாக்கள்

அணியமை தோற்றத் தருந்தவப் படுத்திய 

தாயோ கொடியன் தகவிலள் (மலர் வனம் புக்க காதை. 149-150)எனக்  கூறுவதாகச் சமூக உளவியல்பைப் புலப்படுத்துகிறார் சாத்தனார். 

மணிமேகலை தவநெறியில் மேம்பட்டுப்  பசிப்பிணி தீர்க்கும் பெரும்பணியில் ஈடுபட்ட நிலையிலும் சித்திராபதி கணிகையர் இயல்புகளும் செயல்களும்

துறவுநெறிக்கு இயையாதன எனக்கொதித்து, உதயகுமரன் மூலம் கணிகையர்

குலத்தொழிற்படுத்துவேன் எனச்  சூளுரைத்து உதயகுமரனைத் தூண்டிவிடுகிறாள். 


சிலப்பதிகாரந் தொட்டுத் தொடரும் ஒருநிலை மாந்தராக  மாதவியின் தாய் சித்திராபதியைக் காணலாம். வகைமாதிரி(Typical)    சமூக உளவியல் நோக்கில் காணத்தக்க வரலாற்று வகைமாதிரி(Typical)  சித்திராபதி எனவும் கூறுதல் தகும்.இருபதாம் நூற்றாண்டின் நவீனத் தமிழ்ப் படைப்புகளிலும் சித்திராபதி வகையிலான மாந்தரைக் காண இயல்வது, சாத்தனாரின் இலக்கியத்துள் நிகழ்ந்த சீரதிருத்தம் சமூக அளவில் வெற்றி பெறாததைக் காட்டுகிறது. கு.ப.ராஜகோபாலனின்  தனபாக்கியத்தின் தொழில், குந்துமணி  ஆகிய கதைகளிலும், தி. ஜானகிராமனின் ரசிகரும் ரசிகையும் முதலிய கதைகளிலும்

தேவதாசி மரபினராகிய தாயர், தம் பெண் மக்கள் குலத்தொழில் செய்தல் வேண்டும்

என வற்புறுத்துவதையும், மாறாகப் பெண்மக்கள் விலகிவிட விரும்புதலையும்

காணமுடிகிறது. கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள்

இவ்வகைப்பட்ட வெகுசன நாவலாகும்.


மணிமேகலைக் காப்பியத்தின் மற்றொரு ஒருநிலை மாந்தர்உதயகுமரன்.  காப்பியத் தொடக்கத்தில், மணிமேகலைமேல் மாறாக் காமம் மீதூர அவளை அடையத் துடித்த உதயகுமரனுக்கும் மறுத்த சுதமதிக்கும் நிகழும் உரையாடல்: 

குருகுபெயர்க் குன்றங் கொன்றோ னன்னநின் 

முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால் 

பருகா ளாயினிப் பைந்தொடி நங்கை 

ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி 

காமற் கடந்த வாய்மைய ளென்றே 

தூமலர்க் கூந்தற் சுதமதி யுரைப்பச்

சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழி 

நிறையு முண்டோ காமங் காழ்க்கொளின்

செவ்விய ளாயினென் செவ்விய ளாகென 

அவ்விய நெஞ்சமோ டகல்வோ னாயிடை 

(மணிமேகலையை தெய்வம் வந்து தோன்றிய காதை, 13-22) மணிமேகலை தவத்தள், சாபசரத்தி, வாய்மையளெனக் கேட்டபின்னும் அவன் மனம் மாறவில்லை.

பின்னரும் சித்திராபதியால் தூண்டப்பட்டு மணிமேகலையைத் தேடி வருகிறான்; சம்பாபதித் தெய்வத்திடம் 'மணிமேகலை ஒழியப் போகேன்' எனச் சூளுரைக்கிறான். மேலும் " ... அத் தோட்டார் குழலியை/ மதியோ ரெள்ளினும் மன்னவன் காயினும் என் பொற்றேரேற்றிக்" (உதயகுமரனை வாளாலெறிந்த காதை. 13-16)) கொணர்வேன் என்கிறான்.

உதயகுமரன் காமத்தால் உந்தப்பட்டு நள்ளிரவில் சம்பாபதி கோயிலுள் நுழைந்ததைச் சாத்தனார்

ஊர்துஞ்சு யாமத்து ஒருதனி எழுந்து  

வேழம் வேட்டுஎழும் வெம்புலி போலக்  

 கோயில் கழிந்து வாயில் நீங்கி  

ஆயிழை இருந்த அம்பலம் அணைந்து  

வேக வெந்தீ நாகம் கிடந்த  

போகுஉயர் புற்றுஅளை புகுவான் போல  

ஆகம் தோய்ந்த சாந்துஅலர் உறுத்த  

 ஊழ்அடி இட்டுஅதன் உள்அகம் புகுதலும்

 (உதயகுமரனை வாளாலெறிந்த காதை , 94-101)

என்று படம்பிடித்துக் காட்டும் போது அவனது உணர்வின் தீவிரத்தை உணர்த்த உலமைகளின் உதவியேற்கிறார் சாத்தனார் ;  புற நடத்தைகளால் அவனது அகம் புலப்படுத்துகிறார். இவ்வாறு புகுந்த உதயகுமரன் விஞ்சையனால் கொல்லப்படும்வரை குணத்தை மாற்றிக்கொள்ளவேயில்லை.

மணிமேகலை மாந்தர்

1.துச்சயன்                        31.காகந்தி                              61. பரதன்               

2. அசலன்                          32. காஞ்சனை                      62. பிரச்சோதனன்

3. இரவிவர்மன்                 33.காயசண்டிகை                63. பிரமதருமன்

4. அத்திபதி                         34. கிள்ளிவளவன்             64.பீலிவளை

5. நீலபதி                              35.கேசகம்பளர்                   65. வளைவணன்

6. இராகுலன்                       36.கோதமை                         66.புண்ணிய ராசன்

7. அபஞ்சிகன்                      37.கோமுகி                            67. பூதி

8. சாலி                                  38. கோவலன்                       68.மண்முகன்

9. அமர சுந்தரி                     39.கௌசிகன்                      69.மணிமேகலை

10. பூமி சந்திரன்                  40. சங்க தருமர்                   70. மதுராபதி

11. அமுத பதி                           41. சந்திர தத்தன்              71. மருதி

12. தாரை                                 42. சனமித்திரன்               72. மாசாத்துவான்

13. வீரை                                  43. சாது சக்கரன்               73. மாதவி

14. இலக்குமி                          44. சாதுவன்                       74. மாருதவேகன்

15. அறவணர்                         45. சார்ங்கலன்                  75. மாவண்கிள்ளி

16. ஆதிரை                              46. சித்திராபதி                 76. மாரன்

17. இமயவரம்பன்                   47. சிந்தாதேவி                 77. பௌகந்தராயணன்

       நெடுஞ்சேரலாதன்         48.சிருங்கி                                யூகியந்தணன்

18. இராசமாதேவி                   49. சீதரன்                            78. வயந்தமாலை

19. இளங்கிள்ளி                       50. சீர்த்தி                           79. வாசந்தவை

20. உதயகுமரன்                       51. சுதமதி                           80.வாச மயிலை

21. எட்டிகுமரன்                          52. செங்குட்டுவன்           81. விசாகை

22. ககந்தன்                                53. தருமசாவகன்             82. விரிஞ்சி

23. காந்தன்                                 54. தருமதத்தன்                83. விருச்சிகன்

24. கண்ணகி                              55.திேலோத்தமை           (வையாபுரிப்பிள்ளை, ப.111-113)

25. கபிலை                                   56. தீவதிலகை

26. சம்பாவதி                                57. தூங்கெயிலெறிந்த

27. மயன்                                              தொடித்தோட் செம்பியன்

28. துவதிகன்                                58. தொடுகழற்கிள்ளி

29. கரிகால்வளவன்                     59. நெடுஞ்செழியன்

30. கவேரர்                                       60. நெடுமுடிக்கிள்ளி


இம்மாந்தருள்  எவரும் உளவியல் தன்மை தோன்றப் புனையைப் பெற்றிலர் என்றே

கூறவேண்டும்.பௌத்தக் கருத்துநிலை சான்ற கதைச்சுவையே மணிமேகலையில் விஞ்சிநிற்கிறது.

 மணிமேகலை தவிரப் பிற மாந்தர் யாவரும் - சற்றே விதிவிலக்காகச் சுதமதி,அரசமாதேவி, சித்திராபதி, உதயகுமரன் ஆகியோரைச் சொல்லலாம்   உளவியல் நோக்கில் காணற்குரியரல்லர். 

மாந்தர் படைப்பை விடவும்பௌத்தக் கருத்துநிலைக்கு முதன்மை தந்தமையால் கவித்திறமுடையரேனும் சீத்தலைச் சாத்தனார் சிலப்பதிகாரம் போன்ற நெஞ்சையள்ளும் காப்பியத்தை ஆக்க இயலவில்லை.சமூகச் சீரதிருத்த இலக்கியமாக  மணிமேகலைக்காப்பியம் மாண்புற்றுத் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.

முதன்மை ஆதாரம்

சீத்தலைச்  சாத்தனார்,2009, மணிமேகலை (உரையாசிரியர்கள்: நாவலர் ந.மு.வேங்கடசாமிநாட்டார். ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை), இளங்கணிபதிப்பகம், சென்னை.

துணைமை ஆதாரங்கள்

1.கோவிந்தன், புலவர் கா., 1973,சாத்தன் கதைகள், வள்ளுவர் பண்ணை,சென்னை.

 2.வையாபுரிப்பிள்ளை, எஸ், 1991 காவிய காலம், நூற்களஞ்சியம்: தொகுதி - 3, வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், சென்னை








வள்ளுவன் கள்வன்*

 வள்ளுவன் கள்வன்* ————————————--- காமம் என்பது பழந்தமிழில் காதலைக் குறித்தது. திருக்குறள் மூன்றாம் பாலின் சொல்லாட்சி எண்ணிக்கையில் வாக்கெடுப...