தமிழ்க் காப்பிய வரலாற்றினைத் தொடங்கி வைத்தவை சிலப்பதிகாரமும். மணிமேகலையும். பெருங்கதையே முன்னோடி என்னும் வையாபுரிப்பிள்ளையவர்கள் கருத்தை(காவியகாலம், ப.77) எளிதாய் மறுத்தல் இயலாதெனினும் இலக்கியச்செல்நெறி(Trend) ஒன்றன் முன்னோடியாக, இலக்கியத் தகுதி சான்றவையாக முன்னிற்பன சிலம்பும், சிலம்பைச் சார்ந்த மேகலையுமே எனல் பொருந்தும். மணிமேகலையின் மற்றொரு தனித்தன்மை அதன் கிளைக்கதைப் பன்மையாகும்.
சிலம்பு, மேகலை இரண்டும் இலக்கிய நயஞ்சான்ற தத்தம் பெயர்களாலேயே கற்போரை ஈர்த்துக் களிகொள்ளச் செய்வன. சிலம்பு என்னும் மகளிர் அணி கதையில் திருப்பு முனையாயமைகிறது . மணிமேகலை என்பது மகளிர் அணியாயினும் மணிமேகலா தெய்வத்தான் பெயரமைந்த தலைவியைச் சுட்டிக் காப்பியப் பெயராய் நிற்கிறது.
மணிமேகலையே, இக்காப்பியத்தின் தலைமையும் மைய இழையுமான மாந்தர்; குறிக்கோள் மாந்தர்; காப்பியத்தின் ஒருதனி முழுநிலை மாந்தர் (Round Character). உணர்ச்சிக் கொந்தளிப்பு, உளப்போராட்டம், குறிக்கோள் வேட்கை முதலியவற்றிடையே ஊசலாடும் மணிமேகலையை ஓரளவு உளவியல் நோக்கில் காணும் வாய்ப்பைச் சீத்தலைச் சாத்தனார் தருகிறார் என்றே சொல்லலாம்.
மாதவி, வயந்தமாலையிடம் கோவலனுற்ற கொடுந்துயரையும் பத்தினிப்பெண்டிருள்
மாறுபட்ட கண்ணகி வனமுலை திருகி மதுரையைத் தீயழற்படுத்தியதையும், மணிமேகலையை அருந்தவப்படுத்தியதையும் மாதவர் உறைவிடம் புகுந்ததையும் கூறக்கேட்டு,
வெந்துய ரிடும்பை செவியகம் வெதுப்பக்
காதல் நெஞ்சங் கலங்கிக் காரிகை
மாதர் செங்கண் வரிவனப் பழித்துப்
புலம்புநீ ருருட்டிப் பொதியவிழ் நறுமலர்
இலங்கிதழ் மாலையை இட்டுநீ ராட்ட (மலர்வனம் புக்க காதை, 5-10)
மணிமேகலையின் மென்மை புலனாகிறது.
சோழர் குல இளவரசன் உதயகுமரன் காமங்காழ்க்கொள அவளை அடைய முயன்று தோற்றுத் திரும்பியபின் மணிமேகலை, தோழி சுதமதியிடம்
கற்புத் தானிலள் நற்றவ உணர்விலள்
வருணக் காப்பிலள் பொருள்விலை யாட்டியென்
றிகழ்ந்தன னாகி நயந்தோ னென்னாது
புதுவோன் பின்றைப் போனதென் னெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத் தியற்கை
இதுவே யாயிற் கெடுகதன் றிறமென
(மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை. 86-91)
கூறும்போது மணிமேகலையின் ஊசலாட்டம் புலனாகிறது. இதனை உளவியல் நோக்கில் விளக்கலாமெனினும் சாத்தனார் முற்பிறப்புணர்வின் தொடர்ச்சியைக் காரணம் காட்டித் தம் பௌத்தக் கருத்துநிலையை நாட்ட முயல்கிறார். முற்பிறவியில் மணிமேகலை இலக்குமி என்னும் பெயரிலும், உதயகுமரன் இராகுலன் என்னும் பெயரிலும் கணவன் மனைவியராய் இணைந்தோராவர். இராகுலனின்அடாத செயலொன்றால் திட்டிவிடம் என்னும் பாம்பு தீண்டி இறந்தான். இலக்குமியும் தீப்பாய்ந்து உயிர் விட்டாள்.
மணிமேகலை தன் முற்பிறப்புப்பற்றிப் பின்னர்ப் புத்தபீடிகையால் தெரிந்துணர்கிறாள். அதன் பின்னர்க் காயசண்டிகை கணவன் காஞ்சனனால், உதயகுமரன் வெட்டுண்ட கிடந்தபோது,
வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின்
வெவ்வினை யுருப்ப விளித்தனை யோவென
விழுமக் கிளவியின் வெய்துயிர்த்துப் புலம்பி
அழுதன ளேங்கி அயாவுயிர்த் தெழுதலும்
செல்லல் செல்லல் சேயரி நெடுங்கள்
அல்லியந் தாரோன் தன்பாற் செல்லல் (கத்திற்பாவை வருவதுரைத்த காதை, 23-28)
என உணர்ச்சி வயப்பட்டு நெருங்கிய மணிமேகலையைக் கத்திற்பாவை தடுத்து,
தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்
விடுமாறு முயல்வோய் விழுமங் கொள்ளேல்
(கந்திற்பாவை வருவதுரைத்த காதை, 33-34)
என மணிமேகலைக்கு, அவளது குறிக்கோளை நினைவுபடுத்துகிறது. இங்கும் உளவியலை பெளத்தக் கருத்துநிலை விஞ்சி வெளிப்படுதல் காணலாம்,
படிப்படியே, இன்னா செய்தார்க்கும் இனியவே செய்து மன அமைதியுற்று, தத்துவத் திறம்பெற்று, அறிவால் பிற சமயக் கணக்கரை வென்று, நிறைவாகத் தவத்திறம் பூண்டு பவத் திறமறுக என நோற்றுயர்ந்த மணிமேகலை குறிக்கோளின் உச்சத்திற்குச் செல்லக் காணலாம். தொடக்க முதல் மணிமேகலையைப் பௌத்தக் கருத்துநிலை நின்று நகர்த்திச் செல்லும் சாத்தனார், மாந்தர் படைப்பு எனும் இலக்கிய நிலை நின்று நோக்கும்போது பின்னடைவெய்துகிறார். என்றாலும் அவரது கவித்துவத்திறங் காரணமாக உணர்வு நிலைகளை ஓரளவு உளவியற்பாங்கோடு காட்டியுள்ளார் என்றே கூறுதல் வேண்டும்.
பட்டறிவும் பக்குவமும் - சுதமதி, இராசமாதேவி
மணிமேகலையின் தோழி சுதமதி கதை இருவேறு காதைகளில்(மலர்வனம் புக்க காதை, மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை) இடம்பெறுகிறது.
சண்பை நகரத்துக் கௌசிகள் என்னும் இருபிறப்பாளன் ஒரு மகளாகிய சுதமதி
ஒரு தனி அஞ்சேன் ஓரா நெஞ்சமொடு
ஆரா மத்திடை அலர் கொய்வேன்" (மலர்வனம் புக்க காதை, 31-32) எனத் தனது இளமைக் காலத்தை நினைவு கூர்கிறாள். தனித்து அச்சமற்றிருக்கக் காரணம் அவளது ஓரா நெஞ்சம் எனச் செறிவாகக் காட்டுகிறார் சாத்தனார். பழவினைப் பயத்தால் மாருதவேகன் என்னும் வித்தியாதரனோடு பிழைமணம் எய்தி, இந்திர விழாக்காலத்தில் மகிழ்ந்திருந்த நிலையில், அவன் கைவிட்டு மறைந்துவிடுகிறான். அவள் சமணப் பள்ளியில் தஞ்சம் புகுகிறாள்; தந்தையொடு, அவனது பிச்சையுணவால் உயிர் வாழ்கிறாள்; தந்தையை மாடுமுட்டியபின் சமணர் கைவிட, பௌத்த மாதவர் உறைவிடத்தில் தஞ்சம் புக்கு மாதவிக்குப் பணிபுரிந்து மணிமேகலை தோழியாகிறாள்; இந்தப் பட்டறிவினால் உலகியலுணர்ந்து மணிமேகலையை எச்சரிக்கையுடன் அழைத்துச் செல்கிறாள். கட்டற்ற வாழ்க்கை விடுத்து, கட்டுற்றுப் பிறர்க்கும் வழிகாட்டும் அளவுக்கு முதிரும் மாந்தராகச் சாத்தனார் சுதமதியைப் படைத்துள்ளார்.
சுதமதி கதை சுருக்கமானதெனின், இராசமாதேவி மனமாற்றம் மிகச் சுருக்கமானதெனலாம். சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய மணிமேகலைபால் ஈடுபாடு கொள்வதும், மகனைக் கொல்லக் காரணமானவள் எனக்கருதி மணிமேகலைக்குக் கொடுமை இழைப்பதும், மணிமேகலை தன் தவ வலிமையால் மீளக்கண்டு
செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன்
என்மகற்கு உற்ற இடுக்கண் பொறாது
பொன்நேர் அனையாய் பொறுக்கென்று அவள்தொழ(சிறைவிடு காதை,64-66) யாவும் மிக விரைந்து நடந்தவிடுகின்றன. கதைப் போக்கில் வேகம் காணப்படுகின்றதேயன்றி உளவியல் நுட்பமில்லை.
ஒருநிலை மாந்தர்(Flat Character)
தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்
மணிமே கலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வரச்
சித்திராபதிதான் செல்லலுற் றிரங்கி,
வயந்த மாலையை வெருகெனக் கூஉய்ப்
பயங்கெழு மாநகர் அலர்எடுத் துரை (ஊரலர் உரைத்த காதை, 3 -9)
என்கிறாள் மாதலியின் தாய் சித்திராபதி. மலர் கொய்யக் சென்ற மணிமேகலையை வந்து புறஞ்சுற்றிய கம்பலை மாக்கள்
அணியமை தோற்றத் தருந்தவப் படுத்திய
தாயோ கொடியன் தகவிலள் (மலர் வனம் புக்க காதை. 149-150)எனக் கூறுவதாகச் சமூக உளவியல்பைப் புலப்படுத்துகிறார் சாத்தனார்.
மணிமேகலை தவநெறியில் மேம்பட்டுப் பசிப்பிணி தீர்க்கும் பெரும்பணியில் ஈடுபட்ட நிலையிலும் சித்திராபதி கணிகையர் இயல்புகளும் செயல்களும்
துறவுநெறிக்கு இயையாதன எனக்கொதித்து, உதயகுமரன் மூலம் கணிகையர்
குலத்தொழிற்படுத்துவேன் எனச் சூளுரைத்து உதயகுமரனைத் தூண்டிவிடுகிறாள்.
சிலப்பதிகாரந் தொட்டுத் தொடரும் ஒருநிலை மாந்தராக மாதவியின் தாய் சித்திராபதியைக் காணலாம். வகைமாதிரி(Typical) சமூக உளவியல் நோக்கில் காணத்தக்க வரலாற்று வகைமாதிரி(Typical) சித்திராபதி எனவும் கூறுதல் தகும்.இருபதாம் நூற்றாண்டின் நவீனத் தமிழ்ப் படைப்புகளிலும் சித்திராபதி வகையிலான மாந்தரைக் காண இயல்வது, சாத்தனாரின் இலக்கியத்துள் நிகழ்ந்த சீரதிருத்தம் சமூக அளவில் வெற்றி பெறாததைக் காட்டுகிறது. கு.ப.ராஜகோபாலனின் தனபாக்கியத்தின் தொழில், குந்துமணி ஆகிய கதைகளிலும், தி. ஜானகிராமனின் ரசிகரும் ரசிகையும் முதலிய கதைகளிலும்
தேவதாசி மரபினராகிய தாயர், தம் பெண் மக்கள் குலத்தொழில் செய்தல் வேண்டும்
என வற்புறுத்துவதையும், மாறாகப் பெண்மக்கள் விலகிவிட விரும்புதலையும்
காணமுடிகிறது. கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள்
இவ்வகைப்பட்ட வெகுசன நாவலாகும்.
மணிமேகலைக் காப்பியத்தின் மற்றொரு ஒருநிலை மாந்தர்உதயகுமரன். காப்பியத் தொடக்கத்தில், மணிமேகலைமேல் மாறாக் காமம் மீதூர அவளை அடையத் துடித்த உதயகுமரனுக்கும் மறுத்த சுதமதிக்கும் நிகழும் உரையாடல்:
குருகுபெயர்க் குன்றங் கொன்றோ னன்னநின்
முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால்
பருகா ளாயினிப் பைந்தொடி நங்கை
ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி
காமற் கடந்த வாய்மைய ளென்றே
தூமலர்க் கூந்தற் சுதமதி யுரைப்பச்
சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழி
நிறையு முண்டோ காமங் காழ்க்கொளின்
செவ்விய ளாயினென் செவ்விய ளாகென
அவ்விய நெஞ்சமோ டகல்வோ னாயிடை
(மணிமேகலையை தெய்வம் வந்து தோன்றிய காதை, 13-22) மணிமேகலை தவத்தள், சாபசரத்தி, வாய்மையளெனக் கேட்டபின்னும் அவன் மனம் மாறவில்லை.
பின்னரும் சித்திராபதியால் தூண்டப்பட்டு மணிமேகலையைத் தேடி வருகிறான்; சம்பாபதித் தெய்வத்திடம் 'மணிமேகலை ஒழியப் போகேன்' எனச் சூளுரைக்கிறான். மேலும் " ... அத் தோட்டார் குழலியை/ மதியோ ரெள்ளினும் மன்னவன் காயினும் என் பொற்றேரேற்றிக்" (உதயகுமரனை வாளாலெறிந்த காதை. 13-16)) கொணர்வேன் என்கிறான்.
உதயகுமரன் காமத்தால் உந்தப்பட்டு நள்ளிரவில் சம்பாபதி கோயிலுள் நுழைந்ததைச் சாத்தனார்
ஊர்துஞ்சு யாமத்து ஒருதனி எழுந்து
வேழம் வேட்டுஎழும் வெம்புலி போலக்
கோயில் கழிந்து வாயில் நீங்கி
ஆயிழை இருந்த அம்பலம் அணைந்து
வேக வெந்தீ நாகம் கிடந்த
போகுஉயர் புற்றுஅளை புகுவான் போல
ஆகம் தோய்ந்த சாந்துஅலர் உறுத்த
ஊழ்அடி இட்டுஅதன் உள்அகம் புகுதலும்
(உதயகுமரனை வாளாலெறிந்த காதை , 94-101)
என்று படம்பிடித்துக் காட்டும் போது அவனது உணர்வின் தீவிரத்தை உணர்த்த உலமைகளின் உதவியேற்கிறார் சாத்தனார் ; புற நடத்தைகளால் அவனது அகம் புலப்படுத்துகிறார். இவ்வாறு புகுந்த உதயகுமரன் விஞ்சையனால் கொல்லப்படும்வரை குணத்தை மாற்றிக்கொள்ளவேயில்லை.
மணிமேகலை மாந்தர்
1.துச்சயன் 31.காகந்தி 61. பரதன்
2. அசலன் 32. காஞ்சனை 62. பிரச்சோதனன்
3. இரவிவர்மன் 33.காயசண்டிகை 63. பிரமதருமன்
4. அத்திபதி 34. கிள்ளிவளவன் 64.பீலிவளை
5. நீலபதி 35.கேசகம்பளர் 65. வளைவணன்
6. இராகுலன் 36.கோதமை 66.புண்ணிய ராசன்
7. அபஞ்சிகன் 37.கோமுகி 67. பூதி
8. சாலி 38. கோவலன் 68.மண்முகன்
9. அமர சுந்தரி 39.கௌசிகன் 69.மணிமேகலை
10. பூமி சந்திரன் 40. சங்க தருமர் 70. மதுராபதி
11. அமுத பதி 41. சந்திர தத்தன் 71. மருதி
12. தாரை 42. சனமித்திரன் 72. மாசாத்துவான்
13. வீரை 43. சாது சக்கரன் 73. மாதவி
14. இலக்குமி 44. சாதுவன் 74. மாருதவேகன்
15. அறவணர் 45. சார்ங்கலன் 75. மாவண்கிள்ளி
16. ஆதிரை 46. சித்திராபதி 76. மாரன்
17. இமயவரம்பன் 47. சிந்தாதேவி 77. பௌகந்தராயணன்
நெடுஞ்சேரலாதன் 48.சிருங்கி யூகியந்தணன்
18. இராசமாதேவி 49. சீதரன் 78. வயந்தமாலை
19. இளங்கிள்ளி 50. சீர்த்தி 79. வாசந்தவை
20. உதயகுமரன் 51. சுதமதி 80.வாச மயிலை
21. எட்டிகுமரன் 52. செங்குட்டுவன் 81. விசாகை
22. ககந்தன் 53. தருமசாவகன் 82. விரிஞ்சி
23. காந்தன் 54. தருமதத்தன் 83. விருச்சிகன்
24. கண்ணகி 55.திேலோத்தமை (வையாபுரிப்பிள்ளை, ப.111-113)
25. கபிலை 56. தீவதிலகை
26. சம்பாவதி 57. தூங்கெயிலெறிந்த
27. மயன் தொடித்தோட் செம்பியன்
28. துவதிகன் 58. தொடுகழற்கிள்ளி
29. கரிகால்வளவன் 59. நெடுஞ்செழியன்
30. கவேரர் 60. நெடுமுடிக்கிள்ளி
இம்மாந்தருள் எவரும் உளவியல் தன்மை தோன்றப் புனையைப் பெற்றிலர் என்றே
கூறவேண்டும்.பௌத்தக் கருத்துநிலை சான்ற கதைச்சுவையே மணிமேகலையில் விஞ்சிநிற்கிறது.
மணிமேகலை தவிரப் பிற மாந்தர் யாவரும் - சற்றே விதிவிலக்காகச் சுதமதி,அரசமாதேவி, சித்திராபதி, உதயகுமரன் ஆகியோரைச் சொல்லலாம் உளவியல் நோக்கில் காணற்குரியரல்லர்.
மாந்தர் படைப்பை விடவும்பௌத்தக் கருத்துநிலைக்கு முதன்மை தந்தமையால் கவித்திறமுடையரேனும் சீத்தலைச் சாத்தனார் சிலப்பதிகாரம் போன்ற நெஞ்சையள்ளும் காப்பியத்தை ஆக்க இயலவில்லை.சமூகச் சீரதிருத்த இலக்கியமாக மணிமேகலைக்காப்பியம் மாண்புற்றுத் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.
முதன்மை ஆதாரம்
சீத்தலைச் சாத்தனார்,2009, மணிமேகலை (உரையாசிரியர்கள்: நாவலர் ந.மு.வேங்கடசாமிநாட்டார். ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை), இளங்கணிபதிப்பகம், சென்னை.
துணைமை ஆதாரங்கள்
1.கோவிந்தன், புலவர் கா., 1973,சாத்தன் கதைகள், வள்ளுவர் பண்ணை,சென்னை.
2.வையாபுரிப்பிள்ளை, எஸ், 1991 காவிய காலம், நூற்களஞ்சியம்: தொகுதி - 3, வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், சென்னை
மணிமேகலையின் சிறப்புக்கூறுகளைப் பகிர்ந்த விதம் சிறப்பு.
ReplyDelete