Thursday, October 8, 2020

நச்சினார்க்கினியரும் நடைவண்டியும்

 நச்சினார்க்கினியரும் நடைவண்டியும்

(அல்லது)

இப்படியும் ஓர் இலக்கணக் குறிப்பு!

கால் வல் தேர் - வினைத் தொகை

‘பாலோ டலர்ந்த முலைமறந்து முற்றத்துக்

கால்வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா

ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல்

போல வருமென் உயிர்” (கலி.81: 7 - 10)

'பாலால் விம்மிய முலையை மறந்து முற்றத்தில் கால்வல் தேராகிய நடைவண்டியைக் கையால் செலுத்தி நடை பயிலும், ஆலமர் செல்வனாகிய சிவபெருமானின் அழகிய மைந்தனாகிய , முருகனைப் போல வரும் என் உயிரே!' –என்பது பொருள். 

“கால்வல்தேர்” – என்பதற்கு 'வினைத் தொகையாதலின் மருவின் பாத்தியவாய் நின்றது' என்று குறிப்புத் தருகிறார் நச்சர்.

கால் வல் தேர் - எப்படி வினைத் தொகையாகும்?

“கால்வல் நெடுந்தேர்” (குறள். 496) என்ற தொடர் திருக்குறளிலும் வருகிறது.   கால் - சக்கரம், வல் – வலிய. அதாவது வலிமையான சக்கரங்கள் கொண்டதேர்என்பது பொருள்.

பொதுவாகத் தேர்ச்சக்கரங்கள் வலிமையானவை. அதனால்தான்,

"............. ................. ................ வைகல் 

எண்தேர் செய்யும் தச்சன் 

திங்கள் வலித்த காலன்னோனே” (புறம். 87)

என அதியமானின் வலிமைக்குத் தேர்ச்சக்கரத்தை உவமையாக்கினாள் ஔவை.

இக்காலத்துக் கோயில் தேர்க்கால்கள் காண்க.அவற்றின் வலிமையும் உறுதியும் உணர்க.

தலைசிறந்த கலித்தொகைப் பதிப்பை – இலக்கிய ஒப்புமை, இலக்கணவிளக்கம், பாட வேறுபாடு, தொகைகளின் விரி முதலிய பலவற்றுடன் – தந்த பேரறிஞர் இ.வை. அனந்தராமையர்தாமும் நச்சரின் இக்குறிப்பிற்கு ஐயுறவாகவே, “கால்வல் தேர் வினைத் தொகை என்பதை நோக்க வல்லினவென்றாவது வல்லுமென்றாவது இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது”  என விளக்கம் தந்துள்ளார்.

“வல்”  என்பதை வினையடியாகத் கருதிச், செய்த, செய்யும் எனும் வாய்பாட்டுள் ஒன்றால் “ வல்லின” அல்லது “வல்லும்”  என விரிக்க முற்பட்டுள்ளார் ஐயர்.

“ கால் வல்தேர்” என்பதற்கு நச்சர் தரும்பொருள்

“ உருளையோடுதல் வல்ல தேர்” என்பதாகும். 

இன்றும் நடை வண்டிச் சக்கரங்கள் ஆரங்களின்றி உருளையாயிருத்தல் வெளிப்படை.  ஆனால்  குழந்தைகள் இழுத்துச் செல்லும் நடை வண்டிச் சக்கரங்கள் நெடுந்தேர் போல் எடை மிகுந்தவையாயிருத்தல் இயலாது; கூடாது.



மேற்படி, கலித்தொகைப் பாடலில் பால் மனம் மாறாப் பச்சிளஞ் சிறுவன் செலுத்துகிறான்.  எனவே கால்கள் எளிதாக உருளத்தக்கனவாயிருத்தல் வேண்டுமல்லவா?

எனவேதான் நச்சர் “கால்” என்பதற்கு உருளை எனப் பெயர்ச்சொல்லாக அன்றி “உருளையோடுதல்” என வினைச் சொல்லாகக் கொண்டு  வினைத் தொகை எனப் பாட்டின் பொருள் சார்ந்து இலக்கணக் குறிப்புத் தந்துள்ளார். “உருள் பெருந்தேர்” (குறள்.667) எனும் குறள் தொடரை இங்கே ஒப்பு நோக்கலாம்.

நச்சர் தம் இலக்கணக் குறிப்புக்குக்  கோட்பாட்டு அடிப்படையாக ’மருவின் பாத்திய’ (தொல்காப்பியம், நூ. 482)என்பதைக்கொள்கிறார்.இதனை

அவரது தொல்காப்பிய உரை கொண்டு காணலாம்.

ஒரு தொடர் இடம் பெறும் சூழலில் அதன் பொருட் பொருத்தம் நோக்கி இலக்கணக் குறிப்புத் தருதல் வேண்டும் என்பதையும், நச்சினார்க்கினியர் பொருள் கோள் விழிப்புடன் இலக்கணக் குறிப்புத் தருவதையும் இதனால் உணரலாம் (நச்சர் வலிந்து பொருள் காண்கிறார் என்று கருதவும் இடமுண்டு; அப்படிக் கண்ட இடங்களும் உண்டு. அது தனி விவாதத்திற்குரியது. ஆனால் இது அப்படிப்பட்டதன்று).

கால் (- தல்) = உருள் (-தல்) எனக் - கால் என்பதையே வினையடியாகக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.

கால் - என்பது தற்காலத் தமிழில்  மக்கள், விலங்கு , பறவை, பூச்சி இனங்கள் போன்றவை நிற்கவும்இயங்கவும் செய்யும் உறுப்பு ;  மேசை, நாற்காலி, பந்தல், கொட்டகை முதலியவற்றைத் தாங்கும் கோல் அல்லது கழி; நான்கில் ஒரு பகுதி; மெய்யோடு கூடிய ஆகாரம் முதலியவற்றைக் காட்டும் வரிவடிவம் ஆகியவற்றைக் குறிக்கிறது;வண்டி, தேர் ஆகியவற்றின் சக்கரத்தையும் குறிக்கிறது. கடை கால், மரக்கால் போன்றவை அருகிவருகின்றன.

இவை யாவும் பெயர்ச்சொற்கள்.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) பெயர்ச்சொல் அளவில் 32 பொருள் தருகிறது.

இவையன்றிக் காற்று, பொழுது (காலம்), காலன் முதலிய பொருள்களும் தனியே தரப்பெற்றுள்ளன¹. 

கால்/காலு-தல்  என்னும் வினைக்கு மேற்படி அகராதி வெளிப்படுதல், குதித்தல்*, கக்குதல், தோற்றுவித்தல் ஆகிய நான்கு பொருள் தருகிறது. 

சான்றோர் செய்யுட்களில் , கால்  (கக்குகின்ற, குதிக்கின்ற*) , கால்கிளர  (விளக்கமுற்று இயங்க ) , கால் கிளரும்  (உலாவும்) , கான்று ( = கக்குதலாய்த் தோற்றுவித்து, வெளிப்படுத்தி) முதலியனவாக வினை வடிவங்கள் இடம்பெறுவதை எடுத்துத் தந்துள்ளார் புலவர் மணியன் ( 'சங்க இலக்கிய வினை வடிவங்கள்', பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனம், திருவனந்தபுரம்)

*" விடர் கால் அருவி" (சிறுபாண்.170) என்னும் தொடருக்கு நச்சினார்க்கினியர் , " முழைஞ்சுகளிலே குதிக்கும் அருவி " என்று பொருள் கண்டுள்ளார். இது கொண்டு கால் என்பதற்குக் குதித்தல் எனத் தமிழ்ப்பேரகராதி, 'சங்க இலக்கிய வினை வடிவங்கள்' ஆகியவற்றில் பொருள் தரப்பட்டுள்ளது.

இங்கும் கக்குகின்ற என்று பொருள் கொள்ள வாய்ப்பு மிகுதி. 

முனைவர் ப.பாண்டியராஜா அவர்கள்   விடர் என்னும் சொல்லின் சங்க இலக்கியப் பயில்வு நோக்கி 1. நிலப் பிளப்பு , fissure, cleft   2. மலை வெடிப்பு , crevice, gap in mountain slope 3. மலைச்சரிவில் ஏற்பட்ட பிளவினால் ஆகிய குகை , cave in a mountain slope  எனப்பொருள் கண்டுள்ளார் (sangacholai.in).

இதற்கு நச்சர் முழைஞ்சு எனப் பொருள் கொண்டது சரி. 

" விடர் கால் அருவி" என்பது மலையின் மேலுள்ள நிலப் பிளப்பினூடாக / மலை வெடிப்பினூடாக / மலைச் சரிவுக் குகையினூடாக விைசையுடன் நீர் வெளிப்படும் அருவியைக் குறிக்கிறது. இங்குக் கால்- என்பதற்குக் குதித்தல் என்பதைவிட விசையோடு வெளிப்படுதல் என்பதே பொருத்தமான பொருள்.



கால் - என்பது மிகப் பெரிதும் பெயராகவே அமைகிறது.

ஏதோ ஒரு வகையில் மக்கள் முதலிய உயிரினங்கள், வண்டி முதலிய ஊர்திகள் , காற்று இன்னனவற்றின் இயக்கத்தோடு தொடர்புடையதாகவே கால் என்னும் வினை அமைந்திருப்பதைக் காண முடிகிறது. 

காறி உமிழ்தல் என்பதில் உள்ள 'காறி ' என்பதை ஆடி , ஓடி, கூறி, மீறி முதலியன போல் ['காறு (தல்) + இ' என] இகர விகுதி பெற்ற வினை எச்சவடிவமாகக் கொள்ளலாம். இங்கும் (உள்ளிருந்து ) விசையோடு வெளிப்படுத்தும்  கால் (-தல்) என்பதை வேர்ச்சொல்லாக (root) கருதலாம். 

காலம் என்னும் சொல்லும் இயக்கமென்பதன் அடியாகத் தோன்றியது என்று எண்ணுவது சரியா என்பது ஆராய வேண்டியது.

எனவே கால் (- தல்) என்பதன் பொருட்புலம் இயங்கு(-தல்) எனக் கொள்ளலாம்.

நடப்பதற்குரிய உறுப்பு, உருண்டு இயங்கும் சக்கரம், அலைவுறும் காற்று ஆகியவற்றைக் குறிக்கும்  ' கால் ' என்பதை வினையடியாகப் பிறந்த பெயர்களாகக் கருத இடமுண்டு[ 'பெயரினும் வினையினும் மெய் தடுமாறி' (தொல். உரி.1: 3) ... உரிச்சொல்லின் திறவுகோல்களுள் ஒன்றோ?]

சான்றோர் செய்யுட்களில்  'இயல் தேர் 'பரி நெடும் தேர் ' , ' செல்வுறு திண் தேர் ' என இயக்கம் கருதி வினைத் தொகைத் தொடரைத் தேருக்கு அடைமொழியாக்கிச் சுட்டும் போக்கைக் காண முடிகிறது.

இயல்தேர் (சிறுபாண் .49) = நடக்கின்ற தேர்(நச்சர்)

பரி நெடும் தேர்(புறம். 146:11) =செலவையுடைய  உயர்ந்த   தேர்(பழையவுரை)

செல்வுறு திண் தேர்(கலி. 85:20) = உருட்டுதலுறுகின்ற திண்ணிய தேர் (நச்சர்)                                                            

அப்பாடா!

இனி நச்சினார்க்கினியரிடம் வருவோம். 

' கால் வல் தேர் ' (கலி. 81 : 8 ) என்னும் தொடரைக் கால் (-தல்) வல் தேர் என வினைத் தொகையாகக்  கொண்டு 'உருளையோடுதல் வல்ல தேர் ' என்று விரிக்கும் வாய்ப்பைப் பொருட் பொருத்தம் கருதி அவர் கண்டுணர்ந்திருக்கிறார் எனலாமா?

அப்படி எனில் 'உருளுதல் வல்ல தேர்' என்று பொருள் கூறியிருக்கலாம். 

அவர் கால் என்பதற்கே உருளையோடுதல்  என்று பொருள் கண்டாரா? அல்லது கால் என்பதற்கு உருளை எனப் பொருள் கொண்டு , உருளை ஓடுதல்  என்பதற்கு மருவின் பாத்திய' என்கிற இலக்கண இசைவைக் காட்டுகிறாரா?


எல்லாவற்றையும் மேலும் ஆராய வேண்டும்.

___________________________________________

¹ Masilamani Nandan :மூச்சு என்றும் பொருள் உண்டு

(இது கால்> காற்று என்பதனடியாகப் பிறந்ததாகலாம்!)

- 8 அக்.2019 &9 அக்.2019 முகநூல் இடுகைகளிலிருந்து சிற்சில சேர்க்கை நீக்கங்களுடன்...




Wednesday, October 7, 2020

இலக்கணக் குறிப்பு - சில குறிப்புகள்

                             இலக்கணக் குறிப்பு - சில  குறிப்புகள் 

                                           (10ஆக.2019 &7 அக்,2019)

                                                                  ௧

அண்மையில் கல்லூரி ஆசிரியர்களுக்கான புத்தொளிப் பயிற்சியில் (06.08.2019) இலக்கணக் குறிப்புப் பற்றி உரையாட நேர்ந்தது.

இலக்கணக் குறிப்பின் நோக்கம் இலக்கணப் புலமை காட்டுவதன்று; மொழிப் புழக்கத்தில் குறிப்பிட்ட சூழலில் ஒரு சொல் / தொடரின் இலக்கண அமைதியை (அமைப்பைத்) தெளிவுபடுத்துவதும்  பொருளைப் புரிந்து கொள்ள உதவுவதும்தான்.

'ஒரு தனிச்சொல்லுக்கோ  சில சொற்களால் அமைந்த தொடருக்கோ தனித்து இலக்கணக் குறிப்புத் தரலாம்தான்.ஆனால், அவை வரும் இடம், முன் பின் தொடர்ச்சி அறிந்து  இலக்கணக் குறிப்புத் தரும் போதுதான் அது சரியானதாக அமையும்' என்றேன் நான்.

இதற்காகவே நான் கைவசம் 'மெல்லிலை' யை வைத்திருக்கிறேன். 



'மெல்லிலைக்கு இலக்கணக் குறிப்புக் கூறுங்கள்' என்றேன். பலரும் பண்புத்தொகை என்றனர். எவரும் வினைத் தொகை என்று சொல்லவில்லை.

"நச்சினார்க்கினியர் வினைத் தொகை என்கிறார்" என்றேன். 

"பண்புத்தொகை என்பது தவறா?" என்று வினவினார் ஒருவர்.

"தவறென்று சொல்ல முடியாது... " என்று இழுத்தேன் நான்.

அப்புறம்?

சீவக சிந்தாமணிப் பாட்டடியையும் உரையையும் இலக்கணக் குறிப்பையும் எடுத்துச் சொன்னேன்

அந்தச் சீவக சிந்தாமணிப்பாட்டையும் உரையையும் படமெடுத்து இங்கே  பகிர்ந்திருக்கிறேன்.


மெல்(லுதல்) + இலை = மெல்லிலை . மெல்லுதற்குரிய இலையாகிய வெற்றிலை . மெல்- வினையடி .

இதில் நச்சினார்க்கினியக் 'கைவரிசை' ஏதுமில்லை. திருத்தக்க தேவரே வெற்றிலை என்னும் பொருளில் மெல்லிலை என்பதை ஆண்டுள்ளார். 

இந்தப் பாட்டில் (62/2) முதன்முதலில் வரும்போது நச்சினார்க்கினியர் வினைத் தொகை என்று குறிப்புத் தருகிறார். பின்னரும்

நான்கு இடங்களில் மெல்லிலை இதே பொருளில் ஆளப்பட்டுள்ளது.

மென்மை+ இலை = மெல்லிலை எனில் பண்புத்தொகை .

வள்ளுவச் சொல் விளையாட்டொன்றையும் சொன்னேன். அந்தக் குறளையும், பரிமேலழகர் உரையோடு படமெடுத்துத் தந்துள்ளேன். ஒரே குறளில் இரு வேறு எதிரெதிரான பொருளில் முழுதொத்த வடிவங்களை ஆண்டுள்ளார்.



திருக்குறள் வெறும் அற நூலன்று; அற இலக்கியம். அதனைக் காட்டும் இடங்களுள் ஒன்று இது. (இத்தகு சொல் விளையாட்டுகளையே இலக்கிய அடையாளமாகச் சுட்ட முடியாதுதான். ஆனால் இவற்றுக்கும் சற்று இலக்கிய மதிப்பு இல்லாமலில்லை. சொல்லைக் கலை நுட்பங்களோடு கையாளும் இலக்கியக் கலைஞன், சொற்களோடு விளையாடுவதும் ஒரு கலை. அதிலும் அறத்தை இலக்கியமாக்குவது கல்லைப் பிசைந்து கனியாக்கும் கடும் பணி. வள்ளுவன் விளையாடிச் சோர்வு நீக்கிக் கொள்கிறான்.) 

என் + அல் 

இங்கு -அல் என்பது வியங்கோள் விகுதி. என்க/ என்று சொல்க என்பது பொருள் ;  - க என்பது வியங்கோள் விகுதி. 

- அல் தொழிற்பெயர் விகுதியாக வழங்குவது நம் காலத் தமிழில் பெரும்பான்மை. 

ஆடல், பாடல், பேசல் முதலியன தொழிற்பெயர்களாகப்   பரவலாக வழங்குகின்றன. ஆடுதல், பாடுதல், பேசுதல் என, - தல் என்னும் தொழிற்பெயர் விகுதியும் பரவலான வழக்குத்தான்.

அதே குறளில்,  எனல் = என்று சொல்லற்க (என்று சொல்லாதிருப்பீர்களாக) என்னும் பொருளிலும் இடம் பெற்றுள்ளது. இங்கு - அல் எதிர்மறை வியங்கோள் விகுதி. 

ஒன்றை உடன்பாடாகவும் (என்று சொல்லுக), மற்றொன்றை எதிர்மறையாகவும் (என்று சொல்லற்க) அவற்றை நேர்ப் பேச்சின் தொனிகளால் உணர்த்த முடியும். வேறு சில குறட்பாக்களிலும் இத்தகு பேச்சுத் தொனி உண்டு.

----------------------------------------------------------

                                                    உரையாடல்

பேரா. தெய்வசுந்தரம் நயினார்:  // 'ஒரு தனிச்சொல்லுக்கோ சில சொற்களால் அமைந்த தொடருக்கோ தனித்து இலக்கணக் குறிப்புத் தரலாம்தான்.

ஆனால், அவை வரும் இடம், முன் பின் தொடர்ச்சி அறிந்து இலக்கணக் குறிப்புத் தரும் போதுதான் அது சரியானதாக அமையும்' - பேரா.மதிவாணன் பாலசுந்தரம்.// 100 விழுக்காடு உண்மையான கருத்து. கணினிவழியாக இன்றைய தமிழை ஆராயும்போது, இதுதான் சிக்கல். 'வருகிறது ' என்பது 'மாடு வருகிறது' என்பதில் வினைமுற்று. 'அங்கு வருகிறது எது?' என்பதில் வினையாலணையும்பெயர். 'நீ வருகிறது எனக்குப் பிடிக்கவில்லை' என்பதில் தொழில்பெயர். முன்பின் வருகிற சொல்களையும் தொடர்களையும்கொண்டுதான் இங்குச் சரியான விடையைப் பெறமுடியும். மூன்றிலுமே பகுப்பாய்வில் கிடைக்கிற உறுப்புகள் ஒன்றுதான். வா { கிறு+ அது  ; சில இடங்களில் இரண்டு வேறுபட்ட உறுப்புகள் கிடைக்கும். 'வந்தவரை ' = வந்த + வரை ; வா + ந்த் + அர் + ஐ ; முதலில் கிடைப்பது வினையடையாகப் பயன்படுகிற வினையெச்சம்; இரண்டாவதில் கிடைப்பது வினையாலணையும்பெயர் + 2 ஆம் வேற்றுமை விகுதி; இதுபோன்ற சிக்கலைத் தீர்ப்பதுதான் கணினிமொழியியல். இந்த மயக்கத்தைத் தீர்ப்பதற்கான கருவிகளே இயற்கைமொழி ஆய்வுக்கருவிகள் ஆகும் Concordancer, N-gram போன்ற கருவிகள் இச்சிக்கலைத் தீர்க்கப் பயன்படுகின்றன.


Magudeswaran Govindarajan : மெல்லுதல் என்னும் வினைவழியே பெறப்படும் பண்புதான் மென்மை. கடினமாயுள்ளதை வாயிட்டு நீர்விட்டு அரைத்து மென்மையாக்கும் செயலே மெல்லுதல். மெல்லுதலால் ஒன்றின் கடுமை, திண்மை நீக்கி மென்மையாக்குகிறோம். அதனால் மென்மை என்னும் பண்புக்கும் மெல் என்னும் வினையடியே தோற்றுவாய். அதன்படி மெல்லிலை என்பதனைப் பண்புத் தொகையாய்க் கருதுவதைக் காட்டிலும் வினைத்தொகையாய்க் கொள்ளலே சிறப்பு.

மதிவாணன்: தங்கள் சொற்பிறப்பியல் முடிபு பற்றிக் கருத்துச் சொல்லும் தகுதி எனக்கில்லை. 

ஆனால், இயங்கு நிலையில் வினையாகவும், பண்புப் பெயராகவும் காணப்படுவதால், சூழல் நோக்கி இருவேறு குறிப்புகள் தருவதே நல்லது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


                                                                       ௨

மரபிலக்கண அறிமுக வகுப்புகளில் என் கைவசமுள்ள (Stock)சில தொடர்களைக் காட்டி, வினவி, விடைகள் பெற்று அவற்றிலிருந்து அடுத்து நகர்வது என் வழக்கம். 

அவற்றுள் ஓர் இணை:

" 1.ஓடாக் குதிரை

    2.ஓடா குதிரை - இவற்றில் எது சரி?" என்பேன். 

ஏறத்தாழ எல்லோரும், " 1 சரி ; 2 தவறு" என்பார்கள்.

நான் "இரண்டுமே சரி. பொருளில் சற்றே வேறுபடும் " என்று விளக்குவேன்.

1. ஓடாத குதிரை - ஓடாத என்பதன் இறுதி (=ஈறு) கெட்டு ஓடா என்றாகிக் குதிரை என்னும் வருமொழியோடு புணரும் போது வல்லொற்று மிகும் (-க்- தோன்றும்); ஓடாக் குதிரை என்றாகும். இதற்கு,  ' ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ' என்ற நீண்ட தொடரை இலக்கணக் குறிப்பாகத் தருவார்கள்.

2.   குதிரை (கள்) ஓடா என்பது எழுவாய்த் தொடர். 

       ஓடா குதிரை (கள்) என்பது எதிர்மறை வினைமுற்றுத் தொடர். இங்கு வல்லொற்று மிகக் கூடாது.குதிரை என்பது பால்பகா அஃறிணைப் பெயர். அது ஒரு குதிரையையோ பல குதிரைகளையோ குறிக்கும். பலவின்பாலை உணர்த்தக் - கள் விகுதி சேர்க்கலாம், சேர்க்காமலும் இருக்கலாம் என்பது மரபு. [தற்காலத் தமிழில் பலவின்பாலை உணர்த்தக் - கள் விகுதி சேர்ப்பதே நல்லது].


திருச்சிப் பேருந்து நிலையத் தகவல் பலகை ஒன்றில் ' இடை நில்லா பேருந்து'  என்று உள்ளது. வாக்கியமாக இல்லாமல் இரு சொற்கள்  கொண்ட தொடர் மட்டும் இருந்தால் , இப் பேருந்துகள் இடையில் நில்லா - எனப் பொருள் கொள்ளலாம். பிழை இல்லை.

மாறாக, அதிலுள்ள வாக்கியத்தை நோக்க, இடை நில்லாப் பேருந்து - என ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாகவே கொள்ள வேண்டும். இப் பெயரெச்சம் பெயர் அடை போல அமைகிறது. 

எதிர்மறை வினை முற்றுத் தொடர் இயக்கம் குறிக்கும். ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச் சத் தொடர் இயல்பு குறிக்கும். இவற்றிடையிலான வேறுபாடு நுட்பமானது.

பேருந்து நிலைய அறிவிப்பில் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத் தொடராக அமைந்துள்ளது .எனவே வல்லொற்று மிக வேண்டும். மிகாமையால் அது பிழை. 


நகரச் சிக்கல் 1&2

நகரச் சிக்கல்

'நகர'ச் சிக்கலும் பழனித் தலமும்
21 செப்.2018

மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்திய தமிழ் நடைமுறை இலக்கணம் பற்றிய வகுப்பில் (2006) நான் எதிர்கொண்ட, தமிழாசிரியர் பலரும் எதிர்கொள்கிற, வினா :

பழனி / பழநி எது சரி?

"நான் பழனி என்பதையே பரிந்துரைப்பேன். காரணம், அது பழந்தமிழில்  பொதினி எனப்பட்ட ஊர்ப் பெயரின் மருவிய வடிவம். பழநி என்பதும் வழக்கில் பரவலாக நிலவுவதால் அது முற்றிலும் பிழை என்று தள்ள வேண்டியதில்லை. கையாள்வோர் ஏதேனும் ஒரு வடிவத்தைச் சீராக ஆளுதல் நல்லது. பழம் நீ என்பது பழநி என மருவியது என்பது பாமரச் சொற்பிறப்பியல் கருத்து " என்றேன்.

வீட்டுக்கு வந்து சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியைப் ( TAMIL LEXICON) பார்த்தேன். அதில் பழனி மட்டுமே இருந்தது. எனக்கு நானே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.

ஆனால்,

அண்மையில் முனைவர் ப.பாண்டியராஜா அவர்களின் தமிழ் இலக்கியத் தொடரடைவைக் ( tamilconcordance.in) கண்டேன். அதன்படி, திருப்புகழில் 'பழனி' ஆறு இடங்களிலும் 'பழநி' தொண்ணூறு இடங்களிலும் வருகின்றன ('பழனி'க்கு டெப்பாசிட் காலி ; 'பழநி'க்கு அம்ம்மோக வெற்றி!)

"முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
அறுகோட் டியானைப் பொதினி "
                                         (அகநானூறு1:3-4)

"முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி "
                                        (அகநானூறு 61 :15-16)

எனப் பொதினி பற்றிய குறிப்புடைய இரு பாடல்களும் அகநானூற்றில் உள்ளன. இவற்றோடு

"ஆவியர் கோவே ! " எனும் விளியோடு முடியும் புறநானூற்றுப் பாட்டு (147:9 ) ,

"கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய
அருந்திற லணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகன் "
                     (சிறுபாணாற்றுப்படை , 85 - 87)
ஆகியன கொண்டு ஆவியர் குடி என ஒன்று இருந்ததை அறிய முடிகிறது.

ஆவினன்குடி என அக்குடியின் பேராலும் பண்டு பழனி குறிப்பிடப்பட்டதற்குப் பழந்தமிழ்ச் சான்று திருமுருகாற்றுப்படையில் ஓரிடத்தில் மட்டுமே (176) உள்ளது.

"இனிச் சித்தன் வாழ்வென்று சொல்லுகின்ற ஊர் முற்காலத்து ஆவினன்குடி என்று பெயர் பெற்றதன்றலுமாம்" என்னும் நச்சினார்க்கினியர் உரைப்பகுதியை நோக்க அவர் காலத்தில் ஆவினன்குடி என்னும் பெயர் செல்வாக்காக இல்லை என்று படுகிறது.

திருப்புகழில் ஆவினன்குடி எட்டு இடங்களில் மட்டும் பயின்றுள்ளது (tamilconcordance.in) .

நக்கீரர் உரைக்கு விளக்கம் எழுதும் பொ.வே. சோமசுந்தரனார் ஆவினன்குடி என்பதற்கேற்ற விளக்கங்கள் தந்து, நிறைவாக, "ஆவி நன்குடி - ஆவி என்பானுக்குரிய நன்குடியை உடைய ஊர் என்றலே சாலப் பொருந்துதல் அறிக" என்று முடிக்கிறார்.

திருமுருகாற்றுப்படை, நச்சர் உரை, திருப்புகழ் ஆகிய எதிலும் பாட வேறுபாடாகக் கூட, ஆவி நன்குடி இல்லை.

பழனி / பழநி
ஆவி நன்குடி/ஆவினன்குடி என்னும் இரு பெயர்களிலும்  நகர / னகரத் தடுமாற்றம் இருக்கிறது.

நச்சர் கூறும் சித்தன் வாழ்வு என்பது , பழனி   சித்தர்களோடு கொண்ட தொடர்பு பற்றிய முன்னோடிக்குறிப்பு. வையாவி என்பது - பழனியைக் குறிக்கும் மற்றொரு பெயராகிய - வையாபுரி என்று மருவியதாகச் சொல்கிறார் ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை (புறநானூறு, 141 உரை முற்குறிப்பு) .

இவை தனியே ஆராய் தற்குரியவை; நகர னகரத் தடுமாற்றத்தோடு தொடர்பற்றவை.

திருமுருகாற்றுப்படைக்கு முன்பே நகர னகரங்கள் தடுமாறத் தொடங்கி விட்டன போலும்.                                           

    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                                                  உரையாடல்

A.Sundaram Ilangova : வைஆவிபுரிக்குளம் என்பது வையாபுரிக்குளம் என வழங்குகிறது. பழனி நகரில் உள்ளது.
ஆவியர்குடி என்பதும் ஆவியக்குடி என மருவி இன்று ஆயக்குடி எனப்பழனி அருகில் உள்ளது.  இலக்கியச்சொற்களுக்கான களச்சான்றுகள். ஆயினும் நகர னகர ஆய்வுக்குத்தொடர்பற்றவைதாம் ஐயா

மதிவாணன்: இத்தகைய கருத்துகளால் என் அறிவும்பார்வையும்  செழுமை பெறும். நன்றி ஐயா!

மணி மணிவண்ணன் : திருப்புகழ் பிற்காலத்து இலக்கியம். தமிழிலக்கண வரம்புகளை மீறியது. சந்தத்துக்காகவும் மந்திர ஒலிப்புகளுக்காகவும் ஒலிகளை மாற்றியிருக்கலாம். கிரந்த ஒலிகளை இலக்கிய வழக்கில் கொண்டுவந்தது. அதை வைத்துக்கொண்டு பழநி தான் சரி என்று சொல்ல முடியுமா?

மதிவாணன்: பழனி என்பதும் மருவிய வடிவம்தான் எனினும் , நான் இப்போதும் பரிந்துரைப்பது இதனையே. பயில்வு நோக்கிப் பெரும்பான்மையை ஏற்கும் பார்வையும் உண்டு.

மணி மணிவண்ணன்: பெரும்பான்மையை ஏற்கும் பார்வையை வரவேற்கிறேன்.  ஆனால், திருப்புகழ் பெரும்பான்மைக்குச் சான்று என்று கொள்வதில் உள்ள சிக்கலைத்தான் சுட்டுகிறேன்.  அருணகிரிநாதர் பல மரபுகளை உடைத்துப் புதிய மரபுகளைக் கொண்டு வந்தவர்.  அவரை விதிவிலக்காகத்தான் கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன்.

மதிவாணன் : திருப்புகழுக்குத் தொடரடைவு கிடைப்பதால் அதனை உரைகல்லாகக் கொண்டு்விட்டேன். அருணகிரிநாதரை விதிவிலக்காகக் கொள்ள வேண்டும் என்பதும் சரிதான்.

Cheran Rudhramoorthy :பழனி என்பதைத் தொடரலாம். பழம் நீ/ பழநி, /  என்பது கவிதைக்காகலாம்.

Murugesan Nagarajan : பழனி என்பதே சரி.இப்பதிவு பலர்க்குத் தெளிவைத் தரும்.

Karunanithi Velusamy : உங்கள் சொல்லாய்வுப் போக்குச் சரியானதே.பழனி என்பது இடப்பெயர் பழநி என்பது காரணப்பெயர் தமிழன் வாழ்வியலையும் மொழியையும் மட்டுமே கணக்கில் கொண்டான் அதனால் பழனி இலக்கிய வழக்கானது் புராணச்செல்வாக்கு இலக்கியத்தில் ஆதிக்கத் செலுந்திய போது பழநியாக மாறியது இது பதிப்பின் கோளாறாகவும் இருக்கலாமே

Brown Morgan :  'பார் போற்றும் பழனி' எனும் நூலை முனைவர்.சண்முக.செல்வகணபதி,முனைவர் செ. கற்பகம் எழுதியுள்ளனர்.அதில் பழனி என்னும் சொல்லையே குறிப்பிடுகின்றனர். பழனாபுரி,சிவகிரி,வைகாவூர்,பொதினி,பழநி என்ற பெயர்களால் இத்தலம் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் 'குலவு பழநி-மலையோனே'என்றும் "ஞானப்பழம் நீ"என்று அழைத்த புராணச்செய்தியால் பழம்நீ-பழநி-பழனி ஆகியிருக்கலாம் என்பர் எனச் சுட்டுகின்றனர்.

இளங்குமரன் தா : வணக்கம் ஐயா. இவற்றையெல்லாம் இங்கு மட்டும் பதிவிட்டால் முகநூல் வெள்ளத்தில் மீண்டும் தேடி எடுப்பது சிரமம் ஐயா. வலைப்பூவில் பதிவிட்டால் தேடுவதும், தேடியெடுத்துப் படிப்பதும் எளிது ஐயா.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நகரச் சிக்கல் 2

நானே  னானா* ?
23 செப்.2018

கந்தன், வந்தான் , மந்தி, பந்து போன்ற சொற்களை எடுத்துக் கொள்வோம்.

ம்அ ந்த் இ= மந்தி,
ப்அ ந்த் உ= பந்து   முதலியவற்றின் உயிர், மெய்களைப் பகுத்து, இச்சொற்களில் -ந்த் - என அடுத்தடுத்து மெய்கள் நிற்பதை மெய்ம்மயக்கம் என்பார்கள். உங்களுக்குத் தெரிந்ததுதான்.

இவ்வாறு - ந்த் - என்னும் மெய்ம் மயக்க நிலையில் மட்டுமே  ந் (n ) என்பது தனக்கேயுரிய இயல்பான ஒலியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

1 )அந்நாள், முந்நூறு முதலிய தமிழ்  சந்நிதி, அந்நியன் முதலிய சங்கத(சமற்கிருத)ச் சொற்களில் - ந்ந் - என இரட்டிக்கும்போது பெரும்பாலும் -ன்ன்- என்றே ஒலிக்கப்படுகிறது.

2)நலம், நாள், நிலம், நீர் ... எனவும் நதி, நிதி, நீதி... எனவும் தமிழ், சங்கதச் சொற்களுக்கு முதலிலும்,

3)பெறுநர், தேநீர் முதலிய தமிழ்  அநாகரிகம், அநியாயம், அநீதி முதலிய சங்கதச் சொற்களுக்கு இடையிலும் உயிர்மெய்யாக வரும் போது ஏறத்தாழ 'ன்' என்கிற னகரமாகவே ஒலிக்கப்படுகிறது.

1)- ந்ந் - இரட்டித்தல்
2)   ந் -   சொல்லுக்கு முதலில் உயிர்மெய்
3 )- ந் -   சொல்லுக்கு இடையில்         "

என்னும் மூன்று இடங்களிலும் வரிவடிவில் -எழுத்தில் -   ந்  இருப்பது மரபின் வலிமையைக் காட்டுகிறது. ஆனால், ஒலிப்பு ன கரம்தான்.

அநேகம்/அனேகம், அநாயாசம் / அனாயாசம் போன்ற சங்கதச் சொற்கள் இரு வடிவங்களிலும் வழங்குகின்றன.

ஞானி, முனி முதலிய தமிழ் மயப்பட்ட சொற்களைச் சங்கத மரபு / தூய்மை கருதி  (சங்கதத்தில் ன கரம் இல்லை), சிலர் ஞாநி ,முநி எனவும் எழுதுவதுண்டு. ஆனால் ஒலிக்கப்படுவதென்னவோ ன கரமாகத்தான்.



ந்  (n ) என்பது பல்லொலி (Dental)
ன்(n̠) என்பது நுனிநா நுனியண்ண ஒலி (alveolar)

(பொதினி>) பழனி > பழநி யாவது சங்கதத் தாக்கத்தின் விளைவு எனக் கருதலாம். திருப்புகழில் இவ்வடிவம் மிகுந்துள்ளதை இவ்வாறு காணலாம் எனக் காட்டிய திரு. மணி மணிவண்ணன் அவர் களுக்கு நன்றி.

ஆவிநன்குடி > ஆவினன்குடியானது பழந்தமிழ் ஒலிப்பு மாற்றத்திற்குப் பிந்தைய  மிகைபடு திருத்தம் (hypercorrection) எனலாம் (இது மேலும் ஆராய்தற்குரியது).

நிறைவாக, இயக்குனர், அனுப்புனர் முதலிய பிழை வழக்குகள் ஒலிச்சிக்கலாலும் மரபறியாமையாலும் ஏற்படுகின்றன.

இவற்றின் ந கரத்தைப் பெயரிடைநிலை என்கின்றன மரபிலக்கணங்கள் .

இயக்குநர் ,அனுப்புநர் ... என்பதே சரி. இயக்குனர் ... வகையாரைக் குற்றம் சொல்ல வேண்டியதில்லை.

சரி, பழந்தமிழில் எல்லா இடங்களிலும் நகரம் பல்லொலியாகவே இருந்ததா?
  (இந்த இடுகை பற்றிய உரையாடலில் விவாதக் குறிப்பு ஏதுமில்லை)


Tuesday, October 6, 2020

குற்றியலுகரமும் குரங்கும்

 குற்றியலுகரமும் குரங்கும்

(அக்.7, 2018 முகநூல் இடுகை - கலந்துரையாடலுடன்)

அன்றாடம் நம் பேச்சில் புழங்கும் சில சொற்றொடர்களைப் பார்ப்போம் :

1. பசுவ வச்சி அரசியல் பன்றானுங்க 

     ( பசு + ஐ = பசுவை)

2. காச எறிஞ்சா கால்'ல உழுவானுங்க

     ( காசு + ஐ = காசை)

3. வாரிசா நீ?(வாரிசு + ஆ = வாரிசா)

4. சொத்தப் பெருக்கு (சொத்து + ஐ =

     சொத்தை)

5. பந்தாடு (பந்து + ஆடு = பந்தாடு)

6. மார்புல சுடு (மார்பு + இல் = மார்பில்)


பசு, காசு - இரண்டும்  - சு வில் முடிகின்றன;

இன்னும் சரியாகச் சொல்வதானால்(ச் + உ)

-உவில் முடிகின்றன. 

ஆனால்,

இரண்டு -உ வும் வேறு வேறு. எப்படி?

பசு   + ஐ =    பசுவை  மாறாகக் 

காசு + ஐ = *காசுவை இல்லை ; காசை.   

ஏன்?

பசு வில் உள்ளது உகரம்.

காசில் உள்ளது குற்றியலுகரம் (குற்று + இயல் + உகரம்) குன்றிய / குறுகிய / குறைந்த  இயல்பை உடைய உகரம்.

2 முதல் 6 முடியவுள்ள காசு, வாரிசு, சொத்து, பந்து, மார்பு  என்பவற்றின் இறுதியில் இருப்பவை குற்றியல் உகரங்களே.

கண்ணாடி முன் நின்று ( டார்வினைத் தியானித்து)  குரங்கு என்று இயல்பாகச் சொல்லிப், பாருங்கள். முதல் கு- விற்கு உதடுகள் குவியும்; இறுதிக் - கு விற்கு  உதடுகள் விரிந்திருக்கும்.



¶ஒலிக்கும் கால அளவும் வேறுபடும் . முதல் உ - 1 மாத்திரை (நொடி), இறுதியில் உள்ள குற்றியல் உகரம் - 1/2 மாத்திரை.

மாத்திரையளவில் குறுகுவதால் குற்றியலுகரம் என்பது மரபு.

குற்றியலுகரத்திற்கு மூன்று நிபந்தனைகள்  உண்டு :


1.^ வல்லின மெய்யோடு நிற்கும்.

2. √ சொல்லின் இறுதியில் நிற்கும்.

3. °தனிக் குறில் எழுத்துக்கு அடுத்து 

      நிற்காது.

^க், ச், ட், த், ப், ற் - ஆறும் வல்லின மெய்கள். இவற்றோடு - உகரம் சேர்ந்த(க் + உ=கு, ச் + உ=சு, ட் + உ=டு, த் + உ= து, ப்+உ= பு, ற் + உ=று ) கு,சு, டு,து, பு, று ஆகிய ஆறும்தாம் குற்றியலுகரங்களாக முடியும்.

√குற்றியலுகரம் நிற்கும் இடத்தின் அடிப்படையில் ஆறாக வகைப்படுத்துவது மரபு(சற்று வேறாக வகைப் படுத்துவதும் உண்டு) . பேச்சில் புழங்கும் என்று மேலே நாம் பார்த்தவற்றையே எடுத்துக் கொள் வோம்;சொல்லின் இறுதியில் நிற்பதை நோக்குவோம் :

1.நெடில் தொடர்க் குற்றியலுகரம்(காசு)

2. உயிர்த்தொடர்க்            "                 (வாரிசு)

3. வன்றொடர்க்                 "                 (சொத்து)

4. மென்றொடர்க்               "                 ( பந்து)

5. இடைத்தொடர்க்            "                  (மார்பு)

6. ஆய்தத்தொடர்க்           "                   (எஃகு)

(பேச்சு வழக்கில் இப்போது ஆய்தம் இல்லை. வகைக்கான காரணத்தைப் பிறகு பார்ப்போம்)

°பசு என்பதில், சொல்லின் இறுதியில் (ச் +உ) வல்லின மெய்யோடு உகரம் இறுதியில் நிற்கிறது. ஆனால் இது குற்றியலுகரமில்லை. ஏனென்றால், தனிக் குறிலை / தனிக் குற்றெழுத்தை அடுத்து நிற்கிறது ( அ, இ, உ, எ, ஒ ஐந்தும் உயிர்க் குறில்கள். இவை  க் முதல் ன் முடியவுள்ள 18 மெய்களோடு சேர்ந்து க, கி, கு, கெ, கொ ... என உயிர்மெய்க் குறில்களாகும்).

நம் அன்றாடப் பேச்சிலும் குற்றியலுகரம் தொடர்கிறது . காரணம் அதன் இயல்பு.

சரி.சொல்லுக்கு முதலில் குற்றியலுகரம் வருமா? வராது.

விதிவிலக்காகத் தொல்காப்பியம் மட்டும் ஒரே ஒரு சொல்லில் குற்றியலுகரம் ஒரு மெய்யோடு சேர்ந்து முதலில் வரும் என்கிறது.

ந் என்னும் எழுத்தை , அதன் பழைய ஒலிப்பை, விளங்கிக் கொள்ளத்தான் குற்றியலுகரம் பற்றிப் பார்க்க வேண்டியதாகிவிட்டது.

————————————————————————————————

                              உரையாடல்

 பேரா. தங்கப்பா செங்கதிர்:

¶ துளிர் சீனிவாசன் என்ற கணிப்பொறி அறிவியலாளர், கணிப்பொறியின் துணை கொண்டு உகரம் பலுக்கப்படும் காலத்தை அளவிட்டிருக்கிறார். குற்றியலுகரம் குறைந்த மாத்திரை அல்ல என்பதும் ஆனால் ஒலியின் வலிமை intensity குறைவு என்பதும் அவருடைய கருத்து .

பேரா.தெய்வசுந்தரம் நயினார்:

இத்துடன் ஒரு கருத்தையும் முன்வைக்கிறேன். குற்றியலுகரத்திற்கு ஒரு வரலாறு உண்டு என்று நினைக்கிறேன். ஒரு காலக்கட்டத்தில் தமிழில் வல்லின ஒற்றுகள்( காற்று தடைசெய்யப்படுவதால் பிறக்கும் பேச்சொலிகள்) வெளியிடுவதற்காக இணைந்த ஒன்றே குற்றியலுகரமாக இருக்கலாம். (பேரா. தெ.பொ.மீ அவர்களின் கருத்து என்று நினைக்கிறேன்.)  பின்னர் ஒற்றுகளில் முடியாமல் அவற்றை விடுவிக்க வந்த ஒலி குற்றியலுகரமாக இருக்கலாம். இன்று பேச்சுவழக்கில் வல்லினம் அல்லாத  மெய் ஒற்றுகள் ( மெல்லினம், இடையினம்) சொல் இறுதியில் வந்தாலும், அவற்றுடன் ஏதாவது ஒரு உயிர் சேரும். (பெரும்பாலும் இ, குற்றியலுகரம்) . கண் - கண்ணு, தேன் - தேனு, கால்- காலு, தேள்-  தேளு, கூழ்- கூழு, வாய்- வாயி, அவர் - அவரு, . ஆனால் ம் ஒற்றுமட்டும் மறைந்து, அதனுடைய மூக்கினப் பண்பு, முந்தைய உயிரை மூக்கொலித்தன்மையுடையதாக மாற்றும். மரம், வரம் சொல்லிப் பாருங்கள். மேலும் புணர்ச்சியில் நிலைமொழி இறுதியில் ஒரு உயிர் (குற்றியலுகரம் அல்லாத உயிர்கள்)  வந்து, வருமொழி முதலில் ஒரு உயிரும் வந்தால், இடையில் உடம்படுமெய்கள் சேர்கிறது. வாழை+இலை = வாழையிலை, தெரு+இல்= தெருவில். ஆனால் குற்றியலுகரம் நிலைமொழியின் இறுதியில் வந்து, வருமொழியில் வேறு ஒரு உயிர் வந்தால், குற்றியலுகரம் , மறைந்துவிடும். 'விட்டு ஓடி விடும்'. ஏனென்றால் நிலைமொழியின் மெய் ஒற்றை விடுவிக்க வருமொழியில் ஒரு உயிர் வந்துவிடுகிறது. ஆனால் முற்றியலுகரம் சொல்லின் பகுதியாக ( மெய்யை விடுவிக்கும் உயிராக இல்லாமல்) வருவதால், வருமொழியில் மற்றொரு உயிர் வரும்போது உ, விட்டு ஓடாமல், நிற்கிறது. பசு+இல் = பசுவில், தெரு+இல் = தெருவில்.  எனவே குற்றியலுகரம் தற்காலிகமாகச் சொல் இறுதியில் வல்லின ஒற்றுக்கு உதிவ செய்யவருகிறது. ஆனால் வருமொழியில் ஒரு உயிர் வந்துவிட்டால், நிலைமொழி இறுதி ஒற்றுகளுக்கு உதவி தேவையில்லை. இப்படியும் சிந்தித்துப் பார்க்கலாம் அல்லவா?

மதிவாணன்:

ஆம்.  " புனைதா ரகலம் புல்லு" என்பன போலச் செய்யுளிலும் ஒலித் துணை உகரம் நிற்பதுண்டு. "முற்றுமற் றொரோவழி " எனச் சில முற்றுகரங்கள் (எ.கா. கதவு) உயிர் வரின் கெடுவதையும் மரபிலக்கணம் பேசியுள்ளது. பிறமொழிச் சொற்களையும் புக் > புக்கு, ரோட்> ரோடு, ஹால் > ஹாலு ... என ஒலிப்பதும் ஒலித்துணையே .

பேரா.தெய்வசுந்தரம்:

முற்றுகரமும் சில இடங்களில் கெடுகிறது. ஆனால் குற்றியலுகரத்திற்கு விதிவிலக்கே கிடையாது. 

மதிவாணன்:

தற்காலத்தில் வடிவமுழுமை கருதி,  கொழும்புவில் என்பது போல எழுதுகிறார்கள். காலச்சுவடில் எனக் குற்றுகரம் ஏறிய வல்லெழுத்து இரட்டாமல் எழுதுவதையும் பார்க்க முடிகிறது. 


பேரா.முல்லை ஆதவன்:

பேராசிரியர் தெ.பொ மீ -=  குற்றியலுகரம்  என்பது குறுகிய உகரம் அல்ல என்ற கருத்துடையவர் என்பது என் அறிதல் -- அது உகரத்திற்கு அப்பாலான ஒரு ஒலிப்பு - அது Release Function -க்காக வந்தது =   என்று அவர் கருதியதாக நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.


பேரா.தெய்வசுந்தரம்:

உண்மை ஐயா. பேரா. தெ.பொ.மீ. கருத்து அதுதான். அதைத்தான் நானும் கூறியுள்ளேன். ஆனால் அது வல்லின மெய்யொற்றுகளான தடையொலிகளுக்கு உதவிசெய்யவே வருகிறது என்பதில் ஐயமில்லை. மேலும் எனக்கு ஒரு ஐயம். குற்றியலுகரம் சொல்லிறுதியில் வருகிறது என்று கூறுகிறோம். காடு, நாடு.. இவை 'கள்' என்ற பன்மை விகுதிகள் இணைக்கப்படும்போது, காடுகள், நாடுகள் என்று ஆகின்றன. இப்போது  குற்றியலுகரம் இடையில் வருகிறது என்று கூறலாமா? அல்லது குற்றியலுகர விதியானது  அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லுக்கு மட்டுமே உரியது என்று கூறலாமா? எனவே நாடுகள் என்பதில்  இடையில் உள்ள உகரம் குற்றுகரம் இல்லை என்று கூறலாமா? இந்த ஐயம் எனக்குக் கணினியில் வேலைசெய்யும்போது ஏற்பட்டது. சொல்லின் இறுதியில்தான் குற்றியலுகரம் என்று விதியை மென்பொருளில் சேர்த்தால், நாடுகள் என்பதில் உகரம் இறுதியில் வராததால் அது முற்றியலுகரம் என்று கூறுகிறது. இது சரியா?

மதிவாணன்:

ஐயா, மரபிலக்கண உரையாசிரியர்களிடமே இது பற்றிய கருத்து வேறுபாடு உள்ளது.

" அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்

எல்லா விறுதியும் உகர நிறையும்"   

                                       (தொல். 409)

என்னும் குற்றியலுகரப் புணரியல் நூற்பாவிற்கு "அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண்ணும் ஆறீற்றுக் குற்றியலுகரமும் நிறைந்தே நிற்கும் " என்கிறார் இளம்பூரணர் . நிலை மொழியில் குற்றியலுகர ஈறாக இருப்பினும் புணர் மொழிகளில் உகரம் நிறைந்து - முற்றியலுகரமாக - நிற்கும் என்பது அவர் கருத்து எனத் தெரிகிறது. 

இந் நூற்பாவிற்கு "உகரம் நிலையும்" என்று பாடங்கொண்ட நச்சினார்க்கினியர் , இளம்பூரணர் (முதலியோர்?) கருத்தை மறுக்கிறார். 


                                                        

நடைப் பழமை கண்டார் உரைப் புதுமை காணார்

 நடைப் பழமை கண்டார்

 உரைப் புதுமை காணார்


பேராசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 'காலங்கள்' தமிழக அரசின் பரிசு பெற்றது. அதற்காக ஒரு பாராட்டு விழா நடத்தத் தஞ்சை , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

வெறும் பாராட்டால் பயன் என்ன? அந்த நூல் அறிமுகமும் நடந்தால் விழாவிற்கு வளம் சேர்க்கும் என்றேன். ஆலோசனையாளன் தலையில் அறிமுகப்பணி சுமத்தப்பட்டது.

மகிழ்ந்து ஏற்றேன். 


12.07.2003 அன்று ஐம்பதின்மர் அளவில் கூடிய ஒரு சிற்றரங்கில் விழா. 

' பாவலர் பாலசுந்தரனாரின் [ அப்பாவின்] தொல்காப்பிய உரை , எழுதிய அவருக்கு அத்துபடி. அடுத்து அந்த உரையின் ஐந்து தொகுதிகளையும் முழுமையாகப் படித்தவர் ஐந்துக்கும் ஆய்வு முன்னுரை எழுதிய பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர் மட்டுமாகத்தான் இருப்பார் .  




'காலங்கள்' பற்றியும் அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.இந்த நூலை எழுதியவர் என்பதால் பேரா. சுபாஷ் ஐயாவுக்கு நூல் அத்துபடியாயிருக்கும் . அடுத்து இந்நூலை முழுமையாகப் படித்தவர் அணிந்துரை எழுதிய பேராசிரியர் பி. விருத்தாசலம்[பி.வி.] ஐயா  . மூன்றாவதாக முழுமையாகப் படித்தவன் நானாகத்தான் இருக்கும். காரணம் இலக்கணம் , மொழியியல் இரண்டிலும் ஓரளவாவது அறிமுகமில்லாமல் இதற்குள் நுழையவே இயலாது' - என்று அதன் அருமை உணர்த்தும் நோக்கில் தொடங்கினேன்[வாய்க் கொழுப்பு!]


பரிசு பெற்ற ஒரு நாவலை அறிமுகப்படுத்த வந்திருந்த மருத்துவர் இளங்கோவன் அவர்கள் உடன் குறுக்கிட்டு, ' உண்மைதான் .  'காலங்கள்' நூலையும் படித்துவிடலாம் என்று கொஞ்சம் நுழைந்து பார்த்தேன். ஆனால் அவ்வளவு எளிதில்லை என்பதால் விட்டுவிட்டேன் ' என்று ஆமோதித்தார்


ஆனால், அரங்கில் அமர்ந்திருந்த பேரா. பி. வி. ஐயா சினத்துடன் குறுக்கிட்டு , " யோவ் அவர் உரையப் படிக்கலேன்னு சொல்ல வந்திட்டியா! போய்ப்படிய்யா'என்றார் அவருக்கேயுரிய உரத்த குரலில்.


அரங்கம் சில நொடிகள் அமைதியில் ஆழ்ந்து மீண்டது. பி.வி. ஐயா எம் கல்லூரி முதல்வர். ஆனால் நான் தொடக்கப் பள்ளிச் சிறுவனாக அந்த வளாகத்தில் உலவிய காலந்தொட்டு என்னை உணர்ந்தவர். உரிமையோடு கண்டிப்பவர். இது இயல்பான நிகழ்வுகளில் ஒன்று என்பதை அரங்கில் உள்ளோர் அறியாராதலின் அந்த அமைதி.


நான் தொடர்ந்தேன் [அப்பாவின் உரையை இப்போதும் முழுமையாகப் படிக்கவில்லை].

————————————————————————————————————

அண்மையில் (செப்.12),   தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம. திருமலை ஐயா ( Thirumalai Mahalingam)"இந்நூல் தொல்காப்பிய ஆர்வலர்கள் படிக்க வேண்டியது.மிக மிக நுட்பமான உரை! வியப்புடன் படித்துக் கொண்டிருக்கிறேன்." என்று முகநூலில் அப்பாவின் உரை பற்றிக் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். திரு. பொதியவெற்பன் ( Pothi)அவர்கள் , அதில் என்னைக் கொளுவியிருந்தார். நான் ஏதும் சொல்லவில்லை. அவரது உரைக்கான கடும் மறுப்புகளிலும் நியாயம் இருக்கலாம். அப்பாவின் உரைக்கு நான் வக்காலத்து இல்லை. 

ஆனால்,

அவர் தமக்கென ஒரு பார்வையுடன் அந்த உரையை எழுதினார்; தொல்காப்பியப் பித்தர் என்று சொல்லுமளவுக்கு உணர்ச்சிகரமான  ஈடுபாடு கொண்டிருந்தார். அதன் நடைப்பழமை கண்டு உரைப்புதுமை காணாதார் அதில் ஒன்றுமில்லை என்று சொன்னதுண்டு.  கோபாலையர் அவர்களின் ஆய்வு முன்னுரைகளைப் படித்தாலே அப்பாவின் புதுப் பார்வை புலப்படும். நானும் என் பங்குக்கு அவர் கொண்ட புதிய பாடங்களைத் தொகுத்து 'தொல்காப்பியம் - பால. பாடம்' என்று ஒரு நூல் ( கட்டுரைதான்)எழுதினேன்.



————————————————————————————————————

இப்போது,


இலக்கண - மொழியியல் அறிஞர் பேராசிரியர் முனைவர் க. பாலசுப்பிரமணியன் அவர்களின் 'தொல்காப்பியத்தின் ஒருமையும் முழுமையும்' படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ,


முன்னிலை தன்மை ஆயீ ரிடத் தொடு

மன்னா தாகும் வியங்கோட் கிளவி 


என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு எழுதிய உரைவிளக்கத்தை எடுத்து விவாதித்து,

" பாலசுந்தரனாரின் இவ்வுரையும் விளக்கமும் தொல்காப்பியரின் வினை பற்றிய விதிகள் அனைத்தையும் உட்கொண்டு, அவை கூறப்படும் வரிசையையும் கருத்திற் கொண்டவை. அவை தெளிவாகத் தொல்காப்பிய விதிக்கும் அவர் மொழிப் பயன்பாட்டிற்கும் எவ்வித முரணும் இல்லை ; பழைய உரையாசிரியரும் அவர்களை ஒட்டி இன்றைய ஆய்வாளரும். விதியின் பொருளைப் புரிந்துகொண்டதே தவறு என்பதைக் காட்டுகின்றன " என்கிறார் பேரா. பாலசுப்பிரமணியன் அவர்கள். 



உரைவிளக்கத்தின் பொருத்தம் ஒருபக்கம் இருக்கட்டும், படிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது.





Monday, October 5, 2020

தமிழ் இலக்கண வரலாற்றில் ஓர் அவல நாடகம் !

 தமிழ் இலக்கண வரலாற்றில் ஓர் அவல நாடகம் !


பண்டிதர் க. வீரகத்தி அவர்கள் (04.10.1922 — 09.10.1996) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகச் சிறப்பாய்வாளராக இருந்து (1983 - 1986) 15.06.1986 அன்று அளித்த ஆய்வுரை - அவரது மறைவிற்குப்  பின் - 2011இல்      'பிற்கால இலக்கண மாற்றங்கள்[எழுத்து]'   என நூலாக வெளிவந்திருக்கிறது



              



(௸ நூலில் முன்னிணைக்கப்பட்டுள்ள அவரது வாழ்க்கைக் குறிப்புகளை இணைத்துள்ளேன்).




ஆய்வுரை நிறைவு செய்யப்பட்டுக் கால் நூற்றாண்டுக்குப் பின்  நூலாக வெளிவருவது தமிழ்ச் சமூக அவலமெனில், கையிலிருந்தும் பயிலாதது என் குற்றமென்றே சொல்வேன்.எப்போது வாங்கினேன் என்று தெரியவில்லை. வேறொன்றைத் தேடும்போது இது கிடைத்தது. நல்லவேளை இப்போதாவது கிடைத்தது.


அறிமுகமேயாதலின் , 'நான் கலக்காமல்' எழுதியுள்ளேன்.

----------

தமிழ் மரபிலக்கணங்களில் ஆழங்காற்பட்ட புலமையும் , சுயமான பார்வையும் முயங்கி முகிழ்த்த நூல் இது. அரிதினும் அரிதாக மொழியியல் கலைச்சொற்கள் சில காணப்படினும் அவை பொருட்படுத்தத் தக்கன அல்ல. முற்றிலும் மரபிலக்கணப் புலமை வழிநின்று ஆய்வார்ந்த  புதுநெறிகாட்டியிருப்பதே இந்நூலின் சாதனை.


பொதுக் காலம் 11 - 19ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து, தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம் ஆகிய பத்து நூல்களை முதன்மையாகக் கொண்டு வீரகத்தியார் ஆய்வு நிகழ்த்தியுள்ளார் (பொருளடக்கப் பக்கங்களை இணைத்துள்ளேன்)




தம் பயிற்றாசிரியப் பட்டறிவால் மொழித் திறன் முனைப்புற ஆங்காங்கே இயல்பாக விரவியுள்ள அவருடைய  உணர்வுகளும் உவமைகளும் பிறவும் இலக்கண வகுப்பொன்றில் நேரே பயில்வது போன்ற உணர்வைத் தருகின்றன. 


'நான்கு நூறு ஆண்டுகள்' என்னும் முதல் அத்தியாயம் (பொ.கா. 7 - 10) பிற்கால இலக்கண நூல்களின் தோற்றத்திற்கான முற்கால அரசியல் சமுதாய பண்பாட்டுப் பின்புலத்தை , " வடமொழி என்னும் பேராழியிலிருந்து ஏககாலத்தில் நஞ்சும் அமிழ்தும் எழுந்த "(ப.6) கதையைவறட்டு வரலாறாக அன்றிச் சுவையாக அறிமுகப்படுத்துகிறது.


" யாப்பிலக்கணத் துறை தமிழியல் தழுவிய தொல்காப்பிய மதம், தமிழியல் தழுவிய காக்கைபாடினியார் அவிநயனார் மதம், வடமொழி வழித் தமிழாசிரியர் மதம் என மூன்று கோட்பாட்டு அடிப்படையில் வளர்ச்சி பெற்றுள்ளதை " (ப.16) தொடர்புடைஇடைப்பிறவரலாய் வீரகத்தியார் சுட்டுவது விரித்தாராய்தற்குரிய களமாகும். இன்னும் சில களங்கள் இந்த அத்தியாயத்தில் அறிமுகமாகின்றன.


இரண்டாவது அத்தியாயத்தில் , 1.நன்னூல், இலக்கண விளக்கம்...  2. பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து... 3. தொன்னூல் விளக்கம் என மூவகைப்படுத்தி " மூவகைப்படும் இந்நூல்களுக்கெல்லாம்  வீரசோழியம் ஒரு முன்னோடி நூல் " (பக்.25-26) என்று இனங்காண்கிறார்.


" வடமொழியே மொழிகளுக்கெல்லாம் தாய் என்று பெருந்தேவனாரால் கூறப்பட்ட கருத்து ஆய்வாளர் சிலரால் புத்தமித்திரனார் தலையில் சுமத்தப்பட்டுவிட்டது. இவையெல்லாம் சேர்ந்து இலக்கண ஆர்வலர்களுக்கும் வீரசோழியத்துக்கும் இடையில் ஒரு வித 'சீனப்பெருஞ்சுவரை' எழுப்பிவிட்டன " (ப.34) என்கிறார்.


" வடமொழிமரபை நூற்றுக்கு நூறு பின்பற்றிய - தமிழ்மொழிக்கு ஒவ்வாத இந்த [ வீரசோழிய]நிலைப்பாடு அருவருப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்துவது நியாயமே. இருந்தாலும் சேறு கலந்த தாமரை மூலத்தையும் களிம்பு கொண்ட தங்கத்தையும் ஒதுக்கிவிட முடியுமா ? சேற்றைக் கழுவியும் தங்கத்தைப் புடம்போட்டும் எடுத்துக்கொண்டார் மதிநுட்பம்மிக்க நன்னூலார் " (ப.36) எனக் கூறும் வீரகத்தியார் தாமரையும் தங்கமுமாய் மலர்ந்து மிளிரும்    வீரசோழியத்தின்  பகுதிகளை நன்கு காட்டுகிறார்.


நுதலிய முறை, இலக்கணம் சொல்ல எடுத்துக்கொண்ட கட்டளைக்கலித்துறை ஆகியன பற்றி விமரிசித்துள்ளார்.

" இலக்கணத்துறையில் கட்டளைக் கலித்துறை நூற்பா செய்து வெற்றிகண்டவர் யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் ஒருவரே. யாப்பிலக்கணச் செய்திகள் பரப்பில் மிகக் குறைந்தன ஆதலின் அவருக்கு அது வெற்றி தந்துவிட்டது" (ப.39) என்பது இடைப்பிறவந்த நுட்பம்.


வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனாரும் வீரகத்தியாரின் விமரிசனப் பார்வையிலிருந்து தப்பவில்லை . ஆனால் பாராட்டே விஞ்சிநிற்கிறது.

" அவர் கருத்துக்களை எடுத்தாளாத உரை ஆசிரியர்களே இல்லை எனலாம்... ஆனால் எந்த இலக்கண உரையாசிரியராவது வீரசோழியத்தையோ பெருந்தேவனார் உரையையோ எங்குமே குறிப்பிடவில்லை . இது வியப்புக்கும் வேதனைக்கும் உரியது " (ப.40) என்கிறார். நன்னூலார் பெருந்தேவனார் உரையிலுள்ள அனேகமான செய்திகளை ஏற்று விதி செய்துள்ளதாகவும் , இளம்பூரணரைப் பின்பற்றவில்லை என்றும் சுட்டுகிறார் ( பக்.41 - 42).


வீரசோழியத்திற்கு முந்தைய தொல்காப்பியமதம், அவிநயமதம் என்னும் இருபெரும் கிளைகளை பெருந்தேவனார் உரை கொண்டு உய்த்தறிகிறார்.


புதிய வீரசோழியப் பதிப்பின் தேவையையும் உணர்த்தியுள்ளார்.


" தொல்காப்பியத்துக்குப் பின் நீண்டகால இடைவெளியில்

ஏற்பட்ட மொழியமைப்பில் இழையோடிய புதிய இலக்கண அமசங்களைப் பொதுமைப்படுத்திச் சேர்த்து எளிமையும் தெளிவும் கொண்ட நூற்பாக்களில் அமைத்துக்கொண்ட ஒரேயொரு இலக்கண நூல் நன்னூல் ஆகும்" (ப. 48) எனப் போற்றுகிறார். குறைகளைச் சுட்டாமலுமில்லை என்பதைச் சொல்லவேண்டியதில்லை.


நன்னூல் பற்றி ஆராயும்போது, " வைதிக மதத்தினர் வட மொழி மதச் செய்திகளைத் தமிழ் மொழியில் புகுத்தப் புகுத்த , சைனர்கள் அல்லவா தமிழியலைக் கட்டிக்காத்து வளர்த்தெடுத்துப் பிற் சந்ததியினரிடம் ஒப்படைத்தவர்கள்" (பக். 52-53) என்கிறார்.


நன்னூல் உரையாசிரியர்தம் வன்மை மென்மைகளையும்

வீரகத்தியார் விதந்தோதியுள்ளார்.


பிற இலக்கண நூல்களில் கொள்வன கொண்ட வீரகத்தியார், " வடமொழியே இந்தியப் பெருங்கண்டத்து மக்கள் அனைவருக்கும் தாய்மொழி என்றும், ஏனைய மொழிகளெல்லாம் திசை மொழிகள் என்றும் கருதிக் கொண்ட இவரிடமிருந்து தமிழ் இலக்கண இயல்  நுட்பங்கள் எவற்றையும் எதிர்பார்க்க முடியாது " (ப.60) என்று சுப்பிரமணிய தீட்சிதரின் பிரயோக விவேகத்தை முற்றாகத் தள்ளிவிடுகிறார்.


" இலக்கணத்துக்குத் தெளிவும் நுட்பமும் விரிவும் விளக்கமும் தந்த சுவாமிநாத தேசிகர் ..." (ப.63) என இலக்கணக்கொத்து ஆசிரியரைப் பாராட்டுகிறார்.


'வீரசோழியத்தைப் போல் அறுவகை இலக்கணமும் வாழும் தமிழை வளர்க்க விரும்புகிறது' (ப.86) என்கிறார்.


இலக்கண நூல்களின் பின்னணி , வழி, நூலமைப்பு அதாவது வைப்பு முறை, இலக்கணம் கூறும் முறை, கூறும் இலக்கணம் ஆகிய அனைத்தின் வன்மை மென்மைகளையும் அலசுகிறார். இவற்றில் விவாதத்திற்கிடனாவை உண்டு என்பது வெளிப்படை.


" தொல்காப்பியம் 'சார்ந்து வரல் மரபின் மூன்று' எனக் கூறியது சார்பு என நன்னூலில்

குறியீடு பெற்றுக்கொண்டது . காஞ்சியில் நெய்யும் பட்டு என்றார் ஒருவர் ; காஞ்சிப் பட்டு என்றார் மற்றவர். இவ்வளவுதான் வேறுபாடு " (ப. 103)


" குற்றியலுகரம் உயிரா மெய்யா என்பது அது வேறு பிரச்சினை. முருகனைப்போல் உரைப் பிரபஞ்சம் அனைத்தையும் வலம் வர வேண்டியதில்லை. தொல்காப்பியரிடமிருந்து நேரே மாங்கனியைப் பெற்றுக்கொள்ளலாம் " (ப . 105)


" நன்னூலார் முதல் சார்பு எனக் குறியீடு செய்யாமல் முதல், அன் முதல் என முதல் எழுத்துக்கள் அல்லாத எழுத்துக்கள் என்ற அடிப்படையில் குறியீடு செய்திருந்தால் 'பாட்டி'க்கு இன்று அவல் கிடைக்காமல் போயிருக்கும் " (ப. 108)


" என்றுமுள தென்றமிழ்க்கு என்றுமுள்ள  ஆய்வுப் பொருளாகச் சார்பெழுத்தை வைத்த பெருமை தொல்காப்பியனாருக்கு உரியது. அதுவும் சார்பெழுத்தில் ஒன்றாகிய ஆய்தம், என்றும் பதினாறு வயது மார்க்கண்டேயனாகப் பெருவரம் பெற்றுள்ளது போலும் " (ப. 119)


" இலக்கண விளக்கம் வழக்கம்போல் நன்னூலாரைக் குடுமிச் சண்டைக்கு இழுக்கிறது. அளபெடையின் பெற்றி அறிந்திலர் போலும் , எனக்கூறி, நெட்டெழுத்து தத்தம் ஒத்த குற்றெழுத்தோடு அளபெழும் என்று கூறும். இங்கே தொல்காப்பிய வாடை வீசுகிறது" (பக் . 144 - 145)


" தொல்காப்பிய ஒலிநுட்பம் வர வர மாமி கழுதையான கதையாகிவிட்டது. ஏகாரத்தைப் பொறுத்த வரையில் கழுதையும் இல்லை " (ப.154)


மயக்கம், போலி, விகாரம் ஆகியவற்றிடையே இலக்கண நூல்களில் காணும் குழப்பத்தைச் சுட்டி, " இவை எல்லாம் போலிக் குழப்பங்கள் அல்ல உண்மையான குழப்பங்கள் " (ப.173) என்பார்.


சமணரோடு தொடர்புடைய மாகதி, அர்த்தமாகதி மொழிகளில் ர் > ல் மாற்றம் பற்றி ஏ.எல்.பசாம் எழுதியிருப்பதைக் காட்டி பந்தர் /பந்தல் என்பன போன்ற ஈற்றுப்போலிக்கு அந்தச் செல்வாக்குக் காரணமாகலாம் என்கிறார் (ப. 174)


'மெய்ம்மயங் குடனிலை' என்னும் தொல்காப்பியத் தொடரை (22:2) மெய்ம்மயக்கம், உடனிலை மயக்கம் என உம்மைத்தொகையாகக் கொண்டு இளம்பூரணர் பொருளுரைப்பது பொருந்தாது; மெய்ம்மயக்காகிய உடனிலை எனப் பண்புத்தொகையாகப் பொருள் கொள்ள வேண்டும் என்பது வீரகத்தியார் கருத்து ( ப. 185).


ஒரு மொழி, தொடர்மொழி என்னும் தொல்காப்பியத் தொடர்வகைப்பாடு தமிழ்மொழியமைப்பை ஒட்டியது என்பதை நிறுவி, அவ்வகைப்பாடு வடநூல் வழிப்பட்ட தென்பாரை மறுத்துள்ளார் வீரகத்தியார்." யாப்பருங்கலக் காரிகையில் மேற்கோளாகக் காணப்படும் நூலறுந்த நூற்பா ஒன்று வடநூல் இரண்டல்லவை பல எனக் கூறும் என்றது " (ப. 207) என எள்ளிநகையாடுகிறார்.


ஒரு மொழி, தொடர்மொழி என்னும் தொல்காப்பியப் பாகுபாட்டின் பயன்களையும்  அவற்றை நன்னூலார் கொள்ளாமைக்கான காரணத்தையும் ஆய்ந்து சொல்கிறார்.

பதவியலுக்கும் தொடர் வகைக்குமான தொடர்பைக் காட்டுகிறார்.

 " வீரசோழிய சிந்தனைகளையும் கால வளர்ச்சியால் ஏற்பட்ட கருத்துக்களையும் மூலதனம் ஆக்கி, சுயமான சிந்தனை வன்மையினால் தேவையைப் பூர்த்தி செய்வதான மொழிப் பாகுபாடு கண்டு , அதுவே ஆதாரமாக இலக்கண உலகில் பதவியலை முன்வைத்து அழியாத பெருமையைத் தேடிக்கொண்ட புகழ் நன்னூல் ஒன்றுக்கே உரியதாகும். குறைந்த மூலதனத்துடன் மிகக் கூடுதலான இலாபம் பெற்றுக்கொண்டது " (ப. 211)


" வீரசோழியத்தின் தத்திதம், தாது , தொழிற்பதப் படலங்கள் என்னும் மூன்று முடிச்சு

நன்னூலில் பதவியல் என்னும் ஒரு முடிச்சு ஆனது; அதுவே புதுமை நிறைந்த மாற்றுயர்ந்த பொன் முடிச்சும் ஆயிற்று " (ப. 213)


" வீரசோழியத்துக்குப் பிற்பட்ட இலக்கணங்கள் அனைத்தும் கூறும் சொற்கூறுகள் பற்றிய சிந்தனைகள் பலவற்றுக்கும், வீரசோழியமும் பெருந்தேவனார் உரையுமே ஊற்றிடமாகக் காண்கிறோம். வழிப்பறி நடத்தி விட்டு ஆளை முடித்து விடுதல்போல் வேண்டிய இலக்கணச் செய்திகளை எடுத்துவிட்டு வீரசோழியம் இருட்டடிப்புக்குள்ளாக்கப்பட்டுவிட்டது " (ப.231) என்று  தமிழிலக்கண வரலாற்றின் ஓர் அவல நாடகத்தை அரங்கத்திற்குக் கொண்டுவருகிறார் வீரகத்தியார்.


இது வீரசோழியத்தைப் பயிலவேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.


பேராசிரியர் டாக்டர் சு. இராசாராம் அவர்கள் வீரசோழிய இலக்கணக் கோட்பாட்டை விளக்கும் தனி  நூலொன்றை எழுதியுள்ளார்.


வீரகத்தியார் நூலின் உள்ளே விவாதத்திற்குரிய கருத்துகள் விரவியிருப்பினும் ஒன்றரைப் பக்கமேயான முடிவுரையில் , " இந்த ஆய்வு முயற்சியின் விளைவாகத் தோன்றிய சில கருத்துக்களை அறிவுலகின் முன் வைப்பது அவசியம்.  கொள்ளுவதும் தள்ளுவதும் அதனைப் பொறுத்தது" (ப.258) என்று  ஐந்து முடிபுகளை மட்டும் கூறி  நூலை நிறைவு செய்துவிடுகிறார்.


இது தமிழ் இலக்கண வரலாறு , மரபு, கோட்பாடு முதலியவற்றில் ஆர்வமுடையோர் யாவரும்   பயிலவேண்டிய சுவையான நூல்.










Thursday, October 1, 2020

அனுமன் தேடிய மோதிரமும் ஆயிரக்கணக்கான இராமாயணமும்

 

அனுமன்  தேடிய மோதிரமும் ஆயிரக்கணக்கான இராமாயணமும்*



ஒரு நாள் இராமபிரான் தம் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த போது அவரது மோதிரம் கழன்று விழுந்து தரையைத் துளைத்துக் கொண்டு மறைந்து போயிற்று.அவரது காலடியில் அமர்ந்திருந்த  அன்புத்தொண்டன் அனுமனிடம்," தொலைந்து போன என் மோதிரத்தைத் தேடிக் கொண்டு வா" என்று ஆணையிட்டார் இராம பிரான்.

மிகச்சிறிதினும் சிறிதாகவும் மிகப் பெரிதினும் பெரிதாகவும்  மாறும் ஆற்றல் கொண்ட அனுமன் சிற்றுருவம் கொண்டு துளையினுள் புகுந்து கீழாக இன்னும் இன்னும் கீழாகப்போய்த் திடீரெனப் பாதாளலோகத்தில் வீழ்ந்தான்.அங்கிருந்த பெண்கள் சிலர்"பாருங்கள் இந்தக் குட்டிச்சிறு குரங்கை...மேலேயிருந்து விழுந்திருக்கிறது " என்று,அதனை ஒரு தட்டில் ஏந்தி,விலங்கிறைச்சி உண்ணும் ஆர்வமுடைய பாதாளலோகத் தலைவன் வழக்கமாக உண்ணும் உணவுடன் சேர்த்து         அனுப்பினார்கள்.                                                                        

பாதாளலோகம் இவ்வாறிருக்க பூவுலகில் இராமபிரானின் அவைக்குவசிட்டமுனியும் பிரமனும் வருகை புரிந்து,
"  நாங்கள் உன்னிடம் தனியாகப் பேச வேண்டும்.நாங்கள் பேசுவதைப் பிறர் யாரும். கேட்டு விடக்கூடாது;எந்த க் குறுக்கீடும்கூடாது.சரியா?" என்றனர்.
"அப்படியே ஆகட்டும்.நாம் பேசுவோம்" என்றான் இராம பிரான்.                                  
பிறகு அவர்கள்," நாம் பேசிக்கொண்டிருக்கும் போது எவரேனும் குறுக்கிட்டால் அவர் தலை துண்டிக்கப் பட வேண்டும் " என்றனர்.
"அப்படியே ஆகட்டும்" என்றான் இராம பிரான்.                                                            

அனுமன் மோதிரம் தேடப் போய்விட்டான்.நம்பககமான வாயிற்காப்பாளனாகத் தக்கவர் யார்?இலக்குவனே நம்பகமானவன் எனத் துணிந்து  "எவரையும் உள்ளே விட வேண்டாம்" என்று ஆணையிட்டான் இராமபிரான்.   இலக்குவன் வாயில் காத்து நிற்கும் வேளையில் அங்கு வந்த விசுவாமித்திர முனிவர் ,
"நான் உடனே இராமனைப்பார்க்க வேண்டும் .அவசரம்.எங்கே இராமன் சொல்?" என்றார்.                                                                                            
"இப்போது வேண்டாம்.அவர் சிலருடன் முக்கியமான விஷயம் பேசிக்கொண்டிருக்கிறார்" என்று இலக்குவன் தடுத்தான்.                                                               "என்னிடமே இராமன் மறைக்கத் தக்கது என்ன இருக்கிறது?நான் இப்போதே உள்ளே போகிறேன்" என்றார்.                                                                
"நான் அனுமதி பெற்று வருகிறேன்" என்றான் இலக்குவன்.                                                              "சரி,போய்க் கேட்டுவா"                                            
" இராமபிரான் வெளியே வந்தாலன்றி நான் கேட்க முடியாது.தாங்கள் காத்திருந்துதான் ஆக. வேண்டும்"                                    
"நீ உள்ளே சென்று என் வருகையைத் தெரிவிக்காவிட்டால் அயோத்தி ராச்சியத்தையே என் சாபத்தால் எரித்து விடுவேன்" என்றார்விசுவாமித்திரர்.                                  
'நான் உள்ளே சென்றால் இறப்பது உறுதி.செல்லாவிட்டால்  சினந்து  நிற்கும் விசுவாமித்திரர் சாபத்தால் இராச்சியமே பற்றியெரியும்;குடிகளும் பிற உயிர்களும் இறந்து படும்.அதற்குநான் ஒருவன் மட்டும் சாவதேமேல் ' என்று கருதி இலக்குவன் உள்ளே சென்றான்.                                                                      
"என்ன விஷயம்" என்றான் இராமபிரான்.                                                                                "விசுவாமித்திரர் வந்திருக்கிறார்".                          
" உள்ளே வரட்டும்".                                                      
 விசுவாமித்திரர் நுழையும் முன்பே 'இராமா மானுடவுலகில் உன் பணி நிறைவுற்றது.உனது இராமாவதாரம்  முடிந்துவிட்டது.இம்மேனி துறந்து கடவுளருள் மீண்டும் கலந்திடுக.' எனப் பிரமனும் வசிட்டரும்சொல்லிமுடித்து விட்டனர்.                           "என் தலையைத் துண்டித்துவிடுங்கள்" என்று இராமனை வேண்டினான் இலக்குவன்.    "நாங்கள் பேசி முடித்துவிட்டோம்.இனி உன் தலையை ஏன் துண்டிக்கவேண்டும்?".             " தாங்கள் என் தமையன்.தங்களால் இயலாதுதான்.ஆனால்,அது தங்கள் வாய்மைக்கு இழுக்காகிவிடும்.தங்கள் மனையாளையே காட்டுக்கு அனுப்பினீர்களே.நான் தண்டிக்கப்பட வேண்டியவன்.போகிறேன் "என ஆதி சேடனின் அவதாரமாகிய இலக்குவன் சரயூ நதியில் மூழ்கி மறைந்தான்.                                                
இராமன் , வீடணன் சுக்கிரீவன் முதலியோரை அழைத்து,லவ குசராகிய தம் மக்களுக்கு முடி சூட்ட ஏற்பாடு செய்து விட்டுத் தானும் சரயூ நதியில் இறங்கினான்.        

அதே வேளையில் பாதாளலோகத்தில்   ராம நாமத்தை இடைவிடாமல் ஓதிக்கொண்டிருந்தஅனுமன் அதன் தலைவன் முன் நிறுத்தப்பட்டான்.                                     "யார் நீ?".                                                                          
"அனுமன்".                                                                        
"அனுமன்? இங்கு ஏன் வந்தாய்?".                              
" இராமபிரான் மோதிரத்தை மீட்க".                        
தலைவன் ஒரு தட்டைச்சுட்டிக்காட்டினான்.அதில்  ஆயிரக்கணக்கான மோதிரங்கள்கள். அனைத்தும் இராமனுடையவை.அத் தட்டை அனுமனிடம்தாழ்த்தி "உன் இராமனின் மோதிரத்தை எடுத்துக்கொள்" என்றான்.அவை யாவும் ஒரே மாதிரி இருந்தன.
" எது என்று தெரியவில்லை" எனத் தலை குலுக்கினான் அனுமன்.                                               "இந்தத் தட்டில் எத்தனை மோதிரங்கள் உள்ளனவோ அத்தனை இராமாயணங்கள் உள்ளன.நீ மண்ணுலகிற்குச் செல்லும்போது இராமனைக் காண முடியாது.இந்த ராமனின் அவதாரம் முடிந்து விட்டது.அவ்வாறு முடியும் தறுவாயில் அவன் மோதிரம் கழன்று வீழும்.அவற்றை நான் சேகரித்து வைப்பேன்.நீ போகலாம்" என்றான் பாதாளலோகத்தலைவன்அனுமன் அகன்றான்.                                                                      
                                                                            ***                                                        
இக்கதை இந்தி நாட்டுப்புறக் கதைகளில் ஒன்று.தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களையும் பக்திப் பனுவல்களையும் ஆங்கில ஆக்கங்கள் வழி அகிலம் அறியச்செய்த ஏ.கே.இராமானுஜன் அவர்கள் தம் ,Three Hundred Ramayanas:Five Examples and Three Thoughts on Translation( The Collected Essays of A.K.Ramanujan, Edited by Vinay Dharwadker , Oxford University press, New Delhi ,2013 , pp.131 - 160)என்னும் கட்டுரையை இக் கதையிலிருந்துதான் தொடங்குகிறார்.இக்கட்டுரை தில்லிப் பல்கலைக்கழக வரலாற்று மாணவர்களுக்குத் துணைப் பாடமாயிருந்து, எதிர்க்கப்பட்டு,வழக்குமன்றக் கருத்தின்படி,அறிஞர் குழு ஆய்ந்து ஏற்ற பின்னும் பாடத்திலிருந்து துணைவேந்தரால் நீக்கப்பட்டது. (இப்போது வழக்குமன்றமே நீக்கிவிடுமோ!)



இராமபிரான் பிறப்பிடம் இப்போதைய - அதுவும் 'சர்ச்சை'க்குரிய மசூதி இருந்த இடம்தான் என்று நம்பிக்கை அடிப்படையில் உச்ச வழக்கு மன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

எந்த இராமாயண நம்பிக்கையின்படி?

ஒரே தேசம் ஒரே இராமன்!

*இது  17.10.2015 அன்று,  எனது கைவிடப்பட்ட வலைப்பூவில் ,வந்தது.

அனுமன் படம்-நன்றி: https://encrypted-tbn0.gstatic.com/images

வள்ளுவன் கள்வன்*

 வள்ளுவன் கள்வன்* ————————————--- காமம் என்பது பழந்தமிழில் காதலைக் குறித்தது. திருக்குறள் மூன்றாம் பாலின் சொல்லாட்சி எண்ணிக்கையில் வாக்கெடுப...