Thursday, October 8, 2020

நச்சினார்க்கினியரும் நடைவண்டியும்

 நச்சினார்க்கினியரும் நடைவண்டியும்

(அல்லது)

இப்படியும் ஓர் இலக்கணக் குறிப்பு!

கால் வல் தேர் - வினைத் தொகை

‘பாலோ டலர்ந்த முலைமறந்து முற்றத்துக்

கால்வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா

ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல்

போல வருமென் உயிர்” (கலி.81: 7 - 10)

'பாலால் விம்மிய முலையை மறந்து முற்றத்தில் கால்வல் தேராகிய நடைவண்டியைக் கையால் செலுத்தி நடை பயிலும், ஆலமர் செல்வனாகிய சிவபெருமானின் அழகிய மைந்தனாகிய , முருகனைப் போல வரும் என் உயிரே!' –என்பது பொருள். 

“கால்வல்தேர்” – என்பதற்கு 'வினைத் தொகையாதலின் மருவின் பாத்தியவாய் நின்றது' என்று குறிப்புத் தருகிறார் நச்சர்.

கால் வல் தேர் - எப்படி வினைத் தொகையாகும்?

“கால்வல் நெடுந்தேர்” (குறள். 496) என்ற தொடர் திருக்குறளிலும் வருகிறது.   கால் - சக்கரம், வல் – வலிய. அதாவது வலிமையான சக்கரங்கள் கொண்டதேர்என்பது பொருள்.

பொதுவாகத் தேர்ச்சக்கரங்கள் வலிமையானவை. அதனால்தான்,

"............. ................. ................ வைகல் 

எண்தேர் செய்யும் தச்சன் 

திங்கள் வலித்த காலன்னோனே” (புறம். 87)

என அதியமானின் வலிமைக்குத் தேர்ச்சக்கரத்தை உவமையாக்கினாள் ஔவை.

இக்காலத்துக் கோயில் தேர்க்கால்கள் காண்க.அவற்றின் வலிமையும் உறுதியும் உணர்க.

தலைசிறந்த கலித்தொகைப் பதிப்பை – இலக்கிய ஒப்புமை, இலக்கணவிளக்கம், பாட வேறுபாடு, தொகைகளின் விரி முதலிய பலவற்றுடன் – தந்த பேரறிஞர் இ.வை. அனந்தராமையர்தாமும் நச்சரின் இக்குறிப்பிற்கு ஐயுறவாகவே, “கால்வல் தேர் வினைத் தொகை என்பதை நோக்க வல்லினவென்றாவது வல்லுமென்றாவது இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது”  என விளக்கம் தந்துள்ளார்.

“வல்”  என்பதை வினையடியாகத் கருதிச், செய்த, செய்யும் எனும் வாய்பாட்டுள் ஒன்றால் “ வல்லின” அல்லது “வல்லும்”  என விரிக்க முற்பட்டுள்ளார் ஐயர்.

“ கால் வல்தேர்” என்பதற்கு நச்சர் தரும்பொருள்

“ உருளையோடுதல் வல்ல தேர்” என்பதாகும். 

இன்றும் நடை வண்டிச் சக்கரங்கள் ஆரங்களின்றி உருளையாயிருத்தல் வெளிப்படை.  ஆனால்  குழந்தைகள் இழுத்துச் செல்லும் நடை வண்டிச் சக்கரங்கள் நெடுந்தேர் போல் எடை மிகுந்தவையாயிருத்தல் இயலாது; கூடாது.



மேற்படி, கலித்தொகைப் பாடலில் பால் மனம் மாறாப் பச்சிளஞ் சிறுவன் செலுத்துகிறான்.  எனவே கால்கள் எளிதாக உருளத்தக்கனவாயிருத்தல் வேண்டுமல்லவா?

எனவேதான் நச்சர் “கால்” என்பதற்கு உருளை எனப் பெயர்ச்சொல்லாக அன்றி “உருளையோடுதல்” என வினைச் சொல்லாகக் கொண்டு  வினைத் தொகை எனப் பாட்டின் பொருள் சார்ந்து இலக்கணக் குறிப்புத் தந்துள்ளார். “உருள் பெருந்தேர்” (குறள்.667) எனும் குறள் தொடரை இங்கே ஒப்பு நோக்கலாம்.

நச்சர் தம் இலக்கணக் குறிப்புக்குக்  கோட்பாட்டு அடிப்படையாக ’மருவின் பாத்திய’ (தொல்காப்பியம், நூ. 482)என்பதைக்கொள்கிறார்.இதனை

அவரது தொல்காப்பிய உரை கொண்டு காணலாம்.

ஒரு தொடர் இடம் பெறும் சூழலில் அதன் பொருட் பொருத்தம் நோக்கி இலக்கணக் குறிப்புத் தருதல் வேண்டும் என்பதையும், நச்சினார்க்கினியர் பொருள் கோள் விழிப்புடன் இலக்கணக் குறிப்புத் தருவதையும் இதனால் உணரலாம் (நச்சர் வலிந்து பொருள் காண்கிறார் என்று கருதவும் இடமுண்டு; அப்படிக் கண்ட இடங்களும் உண்டு. அது தனி விவாதத்திற்குரியது. ஆனால் இது அப்படிப்பட்டதன்று).

கால் (- தல்) = உருள் (-தல்) எனக் - கால் என்பதையே வினையடியாகக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.

கால் - என்பது தற்காலத் தமிழில்  மக்கள், விலங்கு , பறவை, பூச்சி இனங்கள் போன்றவை நிற்கவும்இயங்கவும் செய்யும் உறுப்பு ;  மேசை, நாற்காலி, பந்தல், கொட்டகை முதலியவற்றைத் தாங்கும் கோல் அல்லது கழி; நான்கில் ஒரு பகுதி; மெய்யோடு கூடிய ஆகாரம் முதலியவற்றைக் காட்டும் வரிவடிவம் ஆகியவற்றைக் குறிக்கிறது;வண்டி, தேர் ஆகியவற்றின் சக்கரத்தையும் குறிக்கிறது. கடை கால், மரக்கால் போன்றவை அருகிவருகின்றன.

இவை யாவும் பெயர்ச்சொற்கள்.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) பெயர்ச்சொல் அளவில் 32 பொருள் தருகிறது.

இவையன்றிக் காற்று, பொழுது (காலம்), காலன் முதலிய பொருள்களும் தனியே தரப்பெற்றுள்ளன¹. 

கால்/காலு-தல்  என்னும் வினைக்கு மேற்படி அகராதி வெளிப்படுதல், குதித்தல்*, கக்குதல், தோற்றுவித்தல் ஆகிய நான்கு பொருள் தருகிறது. 

சான்றோர் செய்யுட்களில் , கால்  (கக்குகின்ற, குதிக்கின்ற*) , கால்கிளர  (விளக்கமுற்று இயங்க ) , கால் கிளரும்  (உலாவும்) , கான்று ( = கக்குதலாய்த் தோற்றுவித்து, வெளிப்படுத்தி) முதலியனவாக வினை வடிவங்கள் இடம்பெறுவதை எடுத்துத் தந்துள்ளார் புலவர் மணியன் ( 'சங்க இலக்கிய வினை வடிவங்கள்', பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனம், திருவனந்தபுரம்)

*" விடர் கால் அருவி" (சிறுபாண்.170) என்னும் தொடருக்கு நச்சினார்க்கினியர் , " முழைஞ்சுகளிலே குதிக்கும் அருவி " என்று பொருள் கண்டுள்ளார். இது கொண்டு கால் என்பதற்குக் குதித்தல் எனத் தமிழ்ப்பேரகராதி, 'சங்க இலக்கிய வினை வடிவங்கள்' ஆகியவற்றில் பொருள் தரப்பட்டுள்ளது.

இங்கும் கக்குகின்ற என்று பொருள் கொள்ள வாய்ப்பு மிகுதி. 

முனைவர் ப.பாண்டியராஜா அவர்கள்   விடர் என்னும் சொல்லின் சங்க இலக்கியப் பயில்வு நோக்கி 1. நிலப் பிளப்பு , fissure, cleft   2. மலை வெடிப்பு , crevice, gap in mountain slope 3. மலைச்சரிவில் ஏற்பட்ட பிளவினால் ஆகிய குகை , cave in a mountain slope  எனப்பொருள் கண்டுள்ளார் (sangacholai.in).

இதற்கு நச்சர் முழைஞ்சு எனப் பொருள் கொண்டது சரி. 

" விடர் கால் அருவி" என்பது மலையின் மேலுள்ள நிலப் பிளப்பினூடாக / மலை வெடிப்பினூடாக / மலைச் சரிவுக் குகையினூடாக விைசையுடன் நீர் வெளிப்படும் அருவியைக் குறிக்கிறது. இங்குக் கால்- என்பதற்குக் குதித்தல் என்பதைவிட விசையோடு வெளிப்படுதல் என்பதே பொருத்தமான பொருள்.



கால் - என்பது மிகப் பெரிதும் பெயராகவே அமைகிறது.

ஏதோ ஒரு வகையில் மக்கள் முதலிய உயிரினங்கள், வண்டி முதலிய ஊர்திகள் , காற்று இன்னனவற்றின் இயக்கத்தோடு தொடர்புடையதாகவே கால் என்னும் வினை அமைந்திருப்பதைக் காண முடிகிறது. 

காறி உமிழ்தல் என்பதில் உள்ள 'காறி ' என்பதை ஆடி , ஓடி, கூறி, மீறி முதலியன போல் ['காறு (தல்) + இ' என] இகர விகுதி பெற்ற வினை எச்சவடிவமாகக் கொள்ளலாம். இங்கும் (உள்ளிருந்து ) விசையோடு வெளிப்படுத்தும்  கால் (-தல்) என்பதை வேர்ச்சொல்லாக (root) கருதலாம். 

காலம் என்னும் சொல்லும் இயக்கமென்பதன் அடியாகத் தோன்றியது என்று எண்ணுவது சரியா என்பது ஆராய வேண்டியது.

எனவே கால் (- தல்) என்பதன் பொருட்புலம் இயங்கு(-தல்) எனக் கொள்ளலாம்.

நடப்பதற்குரிய உறுப்பு, உருண்டு இயங்கும் சக்கரம், அலைவுறும் காற்று ஆகியவற்றைக் குறிக்கும்  ' கால் ' என்பதை வினையடியாகப் பிறந்த பெயர்களாகக் கருத இடமுண்டு[ 'பெயரினும் வினையினும் மெய் தடுமாறி' (தொல். உரி.1: 3) ... உரிச்சொல்லின் திறவுகோல்களுள் ஒன்றோ?]

சான்றோர் செய்யுட்களில்  'இயல் தேர் 'பரி நெடும் தேர் ' , ' செல்வுறு திண் தேர் ' என இயக்கம் கருதி வினைத் தொகைத் தொடரைத் தேருக்கு அடைமொழியாக்கிச் சுட்டும் போக்கைக் காண முடிகிறது.

இயல்தேர் (சிறுபாண் .49) = நடக்கின்ற தேர்(நச்சர்)

பரி நெடும் தேர்(புறம். 146:11) =செலவையுடைய  உயர்ந்த   தேர்(பழையவுரை)

செல்வுறு திண் தேர்(கலி. 85:20) = உருட்டுதலுறுகின்ற திண்ணிய தேர் (நச்சர்)                                                            

அப்பாடா!

இனி நச்சினார்க்கினியரிடம் வருவோம். 

' கால் வல் தேர் ' (கலி. 81 : 8 ) என்னும் தொடரைக் கால் (-தல்) வல் தேர் என வினைத் தொகையாகக்  கொண்டு 'உருளையோடுதல் வல்ல தேர் ' என்று விரிக்கும் வாய்ப்பைப் பொருட் பொருத்தம் கருதி அவர் கண்டுணர்ந்திருக்கிறார் எனலாமா?

அப்படி எனில் 'உருளுதல் வல்ல தேர்' என்று பொருள் கூறியிருக்கலாம். 

அவர் கால் என்பதற்கே உருளையோடுதல்  என்று பொருள் கண்டாரா? அல்லது கால் என்பதற்கு உருளை எனப் பொருள் கொண்டு , உருளை ஓடுதல்  என்பதற்கு மருவின் பாத்திய' என்கிற இலக்கண இசைவைக் காட்டுகிறாரா?


எல்லாவற்றையும் மேலும் ஆராய வேண்டும்.

___________________________________________

¹ Masilamani Nandan :மூச்சு என்றும் பொருள் உண்டு

(இது கால்> காற்று என்பதனடியாகப் பிறந்ததாகலாம்!)

- 8 அக்.2019 &9 அக்.2019 முகநூல் இடுகைகளிலிருந்து சிற்சில சேர்க்கை நீக்கங்களுடன்...




No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...