Wednesday, October 7, 2020

நகரச் சிக்கல் 1&2

நகரச் சிக்கல்

'நகர'ச் சிக்கலும் பழனித் தலமும்
21 செப்.2018

மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்திய தமிழ் நடைமுறை இலக்கணம் பற்றிய வகுப்பில் (2006) நான் எதிர்கொண்ட, தமிழாசிரியர் பலரும் எதிர்கொள்கிற, வினா :

பழனி / பழநி எது சரி?

"நான் பழனி என்பதையே பரிந்துரைப்பேன். காரணம், அது பழந்தமிழில்  பொதினி எனப்பட்ட ஊர்ப் பெயரின் மருவிய வடிவம். பழநி என்பதும் வழக்கில் பரவலாக நிலவுவதால் அது முற்றிலும் பிழை என்று தள்ள வேண்டியதில்லை. கையாள்வோர் ஏதேனும் ஒரு வடிவத்தைச் சீராக ஆளுதல் நல்லது. பழம் நீ என்பது பழநி என மருவியது என்பது பாமரச் சொற்பிறப்பியல் கருத்து " என்றேன்.

வீட்டுக்கு வந்து சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியைப் ( TAMIL LEXICON) பார்த்தேன். அதில் பழனி மட்டுமே இருந்தது. எனக்கு நானே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.

ஆனால்,

அண்மையில் முனைவர் ப.பாண்டியராஜா அவர்களின் தமிழ் இலக்கியத் தொடரடைவைக் ( tamilconcordance.in) கண்டேன். அதன்படி, திருப்புகழில் 'பழனி' ஆறு இடங்களிலும் 'பழநி' தொண்ணூறு இடங்களிலும் வருகின்றன ('பழனி'க்கு டெப்பாசிட் காலி ; 'பழநி'க்கு அம்ம்மோக வெற்றி!)

"முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
அறுகோட் டியானைப் பொதினி "
                                         (அகநானூறு1:3-4)

"முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி "
                                        (அகநானூறு 61 :15-16)

எனப் பொதினி பற்றிய குறிப்புடைய இரு பாடல்களும் அகநானூற்றில் உள்ளன. இவற்றோடு

"ஆவியர் கோவே ! " எனும் விளியோடு முடியும் புறநானூற்றுப் பாட்டு (147:9 ) ,

"கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய
அருந்திற லணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகன் "
                     (சிறுபாணாற்றுப்படை , 85 - 87)
ஆகியன கொண்டு ஆவியர் குடி என ஒன்று இருந்ததை அறிய முடிகிறது.

ஆவினன்குடி என அக்குடியின் பேராலும் பண்டு பழனி குறிப்பிடப்பட்டதற்குப் பழந்தமிழ்ச் சான்று திருமுருகாற்றுப்படையில் ஓரிடத்தில் மட்டுமே (176) உள்ளது.

"இனிச் சித்தன் வாழ்வென்று சொல்லுகின்ற ஊர் முற்காலத்து ஆவினன்குடி என்று பெயர் பெற்றதன்றலுமாம்" என்னும் நச்சினார்க்கினியர் உரைப்பகுதியை நோக்க அவர் காலத்தில் ஆவினன்குடி என்னும் பெயர் செல்வாக்காக இல்லை என்று படுகிறது.

திருப்புகழில் ஆவினன்குடி எட்டு இடங்களில் மட்டும் பயின்றுள்ளது (tamilconcordance.in) .

நக்கீரர் உரைக்கு விளக்கம் எழுதும் பொ.வே. சோமசுந்தரனார் ஆவினன்குடி என்பதற்கேற்ற விளக்கங்கள் தந்து, நிறைவாக, "ஆவி நன்குடி - ஆவி என்பானுக்குரிய நன்குடியை உடைய ஊர் என்றலே சாலப் பொருந்துதல் அறிக" என்று முடிக்கிறார்.

திருமுருகாற்றுப்படை, நச்சர் உரை, திருப்புகழ் ஆகிய எதிலும் பாட வேறுபாடாகக் கூட, ஆவி நன்குடி இல்லை.

பழனி / பழநி
ஆவி நன்குடி/ஆவினன்குடி என்னும் இரு பெயர்களிலும்  நகர / னகரத் தடுமாற்றம் இருக்கிறது.

நச்சர் கூறும் சித்தன் வாழ்வு என்பது , பழனி   சித்தர்களோடு கொண்ட தொடர்பு பற்றிய முன்னோடிக்குறிப்பு. வையாவி என்பது - பழனியைக் குறிக்கும் மற்றொரு பெயராகிய - வையாபுரி என்று மருவியதாகச் சொல்கிறார் ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை (புறநானூறு, 141 உரை முற்குறிப்பு) .

இவை தனியே ஆராய் தற்குரியவை; நகர னகரத் தடுமாற்றத்தோடு தொடர்பற்றவை.

திருமுருகாற்றுப்படைக்கு முன்பே நகர னகரங்கள் தடுமாறத் தொடங்கி விட்டன போலும்.                                           

    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                                                  உரையாடல்

A.Sundaram Ilangova : வைஆவிபுரிக்குளம் என்பது வையாபுரிக்குளம் என வழங்குகிறது. பழனி நகரில் உள்ளது.
ஆவியர்குடி என்பதும் ஆவியக்குடி என மருவி இன்று ஆயக்குடி எனப்பழனி அருகில் உள்ளது.  இலக்கியச்சொற்களுக்கான களச்சான்றுகள். ஆயினும் நகர னகர ஆய்வுக்குத்தொடர்பற்றவைதாம் ஐயா

மதிவாணன்: இத்தகைய கருத்துகளால் என் அறிவும்பார்வையும்  செழுமை பெறும். நன்றி ஐயா!

மணி மணிவண்ணன் : திருப்புகழ் பிற்காலத்து இலக்கியம். தமிழிலக்கண வரம்புகளை மீறியது. சந்தத்துக்காகவும் மந்திர ஒலிப்புகளுக்காகவும் ஒலிகளை மாற்றியிருக்கலாம். கிரந்த ஒலிகளை இலக்கிய வழக்கில் கொண்டுவந்தது. அதை வைத்துக்கொண்டு பழநி தான் சரி என்று சொல்ல முடியுமா?

மதிவாணன்: பழனி என்பதும் மருவிய வடிவம்தான் எனினும் , நான் இப்போதும் பரிந்துரைப்பது இதனையே. பயில்வு நோக்கிப் பெரும்பான்மையை ஏற்கும் பார்வையும் உண்டு.

மணி மணிவண்ணன்: பெரும்பான்மையை ஏற்கும் பார்வையை வரவேற்கிறேன்.  ஆனால், திருப்புகழ் பெரும்பான்மைக்குச் சான்று என்று கொள்வதில் உள்ள சிக்கலைத்தான் சுட்டுகிறேன்.  அருணகிரிநாதர் பல மரபுகளை உடைத்துப் புதிய மரபுகளைக் கொண்டு வந்தவர்.  அவரை விதிவிலக்காகத்தான் கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன்.

மதிவாணன் : திருப்புகழுக்குத் தொடரடைவு கிடைப்பதால் அதனை உரைகல்லாகக் கொண்டு்விட்டேன். அருணகிரிநாதரை விதிவிலக்காகக் கொள்ள வேண்டும் என்பதும் சரிதான்.

Cheran Rudhramoorthy :பழனி என்பதைத் தொடரலாம். பழம் நீ/ பழநி, /  என்பது கவிதைக்காகலாம்.

Murugesan Nagarajan : பழனி என்பதே சரி.இப்பதிவு பலர்க்குத் தெளிவைத் தரும்.

Karunanithi Velusamy : உங்கள் சொல்லாய்வுப் போக்குச் சரியானதே.பழனி என்பது இடப்பெயர் பழநி என்பது காரணப்பெயர் தமிழன் வாழ்வியலையும் மொழியையும் மட்டுமே கணக்கில் கொண்டான் அதனால் பழனி இலக்கிய வழக்கானது் புராணச்செல்வாக்கு இலக்கியத்தில் ஆதிக்கத் செலுந்திய போது பழநியாக மாறியது இது பதிப்பின் கோளாறாகவும் இருக்கலாமே

Brown Morgan :  'பார் போற்றும் பழனி' எனும் நூலை முனைவர்.சண்முக.செல்வகணபதி,முனைவர் செ. கற்பகம் எழுதியுள்ளனர்.அதில் பழனி என்னும் சொல்லையே குறிப்பிடுகின்றனர். பழனாபுரி,சிவகிரி,வைகாவூர்,பொதினி,பழநி என்ற பெயர்களால் இத்தலம் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் 'குலவு பழநி-மலையோனே'என்றும் "ஞானப்பழம் நீ"என்று அழைத்த புராணச்செய்தியால் பழம்நீ-பழநி-பழனி ஆகியிருக்கலாம் என்பர் எனச் சுட்டுகின்றனர்.

இளங்குமரன் தா : வணக்கம் ஐயா. இவற்றையெல்லாம் இங்கு மட்டும் பதிவிட்டால் முகநூல் வெள்ளத்தில் மீண்டும் தேடி எடுப்பது சிரமம் ஐயா. வலைப்பூவில் பதிவிட்டால் தேடுவதும், தேடியெடுத்துப் படிப்பதும் எளிது ஐயா.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நகரச் சிக்கல் 2

நானே  னானா* ?
23 செப்.2018

கந்தன், வந்தான் , மந்தி, பந்து போன்ற சொற்களை எடுத்துக் கொள்வோம்.

ம்அ ந்த் இ= மந்தி,
ப்அ ந்த் உ= பந்து   முதலியவற்றின் உயிர், மெய்களைப் பகுத்து, இச்சொற்களில் -ந்த் - என அடுத்தடுத்து மெய்கள் நிற்பதை மெய்ம்மயக்கம் என்பார்கள். உங்களுக்குத் தெரிந்ததுதான்.

இவ்வாறு - ந்த் - என்னும் மெய்ம் மயக்க நிலையில் மட்டுமே  ந் (n ) என்பது தனக்கேயுரிய இயல்பான ஒலியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

1 )அந்நாள், முந்நூறு முதலிய தமிழ்  சந்நிதி, அந்நியன் முதலிய சங்கத(சமற்கிருத)ச் சொற்களில் - ந்ந் - என இரட்டிக்கும்போது பெரும்பாலும் -ன்ன்- என்றே ஒலிக்கப்படுகிறது.

2)நலம், நாள், நிலம், நீர் ... எனவும் நதி, நிதி, நீதி... எனவும் தமிழ், சங்கதச் சொற்களுக்கு முதலிலும்,

3)பெறுநர், தேநீர் முதலிய தமிழ்  அநாகரிகம், அநியாயம், அநீதி முதலிய சங்கதச் சொற்களுக்கு இடையிலும் உயிர்மெய்யாக வரும் போது ஏறத்தாழ 'ன்' என்கிற னகரமாகவே ஒலிக்கப்படுகிறது.

1)- ந்ந் - இரட்டித்தல்
2)   ந் -   சொல்லுக்கு முதலில் உயிர்மெய்
3 )- ந் -   சொல்லுக்கு இடையில்         "

என்னும் மூன்று இடங்களிலும் வரிவடிவில் -எழுத்தில் -   ந்  இருப்பது மரபின் வலிமையைக் காட்டுகிறது. ஆனால், ஒலிப்பு ன கரம்தான்.

அநேகம்/அனேகம், அநாயாசம் / அனாயாசம் போன்ற சங்கதச் சொற்கள் இரு வடிவங்களிலும் வழங்குகின்றன.

ஞானி, முனி முதலிய தமிழ் மயப்பட்ட சொற்களைச் சங்கத மரபு / தூய்மை கருதி  (சங்கதத்தில் ன கரம் இல்லை), சிலர் ஞாநி ,முநி எனவும் எழுதுவதுண்டு. ஆனால் ஒலிக்கப்படுவதென்னவோ ன கரமாகத்தான்.



ந்  (n ) என்பது பல்லொலி (Dental)
ன்(n̠) என்பது நுனிநா நுனியண்ண ஒலி (alveolar)

(பொதினி>) பழனி > பழநி யாவது சங்கதத் தாக்கத்தின் விளைவு எனக் கருதலாம். திருப்புகழில் இவ்வடிவம் மிகுந்துள்ளதை இவ்வாறு காணலாம் எனக் காட்டிய திரு. மணி மணிவண்ணன் அவர் களுக்கு நன்றி.

ஆவிநன்குடி > ஆவினன்குடியானது பழந்தமிழ் ஒலிப்பு மாற்றத்திற்குப் பிந்தைய  மிகைபடு திருத்தம் (hypercorrection) எனலாம் (இது மேலும் ஆராய்தற்குரியது).

நிறைவாக, இயக்குனர், அனுப்புனர் முதலிய பிழை வழக்குகள் ஒலிச்சிக்கலாலும் மரபறியாமையாலும் ஏற்படுகின்றன.

இவற்றின் ந கரத்தைப் பெயரிடைநிலை என்கின்றன மரபிலக்கணங்கள் .

இயக்குநர் ,அனுப்புநர் ... என்பதே சரி. இயக்குனர் ... வகையாரைக் குற்றம் சொல்ல வேண்டியதில்லை.

சரி, பழந்தமிழில் எல்லா இடங்களிலும் நகரம் பல்லொலியாகவே இருந்ததா?
  (இந்த இடுகை பற்றிய உரையாடலில் விவாதக் குறிப்பு ஏதுமில்லை)


2 comments:

  1. வணக்கம் ஐயா. அணுப்புநர் (டண்ணகரம்) என்பதே சரி என்கின்றனரே...

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை அணுகு - தல் என்பதிலிருந்து அணுப்பு-தல் என்பதைக் கொண்டிருக்கலாம்.
      எனக்குத் தெரிந்து இப்படி ஒரு சொல்லாட்சி இல்லை.

      Delete

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...