Monday, October 5, 2020

தமிழ் இலக்கண வரலாற்றில் ஓர் அவல நாடகம் !

 தமிழ் இலக்கண வரலாற்றில் ஓர் அவல நாடகம் !


பண்டிதர் க. வீரகத்தி அவர்கள் (04.10.1922 — 09.10.1996) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகச் சிறப்பாய்வாளராக இருந்து (1983 - 1986) 15.06.1986 அன்று அளித்த ஆய்வுரை - அவரது மறைவிற்குப்  பின் - 2011இல்      'பிற்கால இலக்கண மாற்றங்கள்[எழுத்து]'   என நூலாக வெளிவந்திருக்கிறது



              



(௸ நூலில் முன்னிணைக்கப்பட்டுள்ள அவரது வாழ்க்கைக் குறிப்புகளை இணைத்துள்ளேன்).




ஆய்வுரை நிறைவு செய்யப்பட்டுக் கால் நூற்றாண்டுக்குப் பின்  நூலாக வெளிவருவது தமிழ்ச் சமூக அவலமெனில், கையிலிருந்தும் பயிலாதது என் குற்றமென்றே சொல்வேன்.எப்போது வாங்கினேன் என்று தெரியவில்லை. வேறொன்றைத் தேடும்போது இது கிடைத்தது. நல்லவேளை இப்போதாவது கிடைத்தது.


அறிமுகமேயாதலின் , 'நான் கலக்காமல்' எழுதியுள்ளேன்.

----------

தமிழ் மரபிலக்கணங்களில் ஆழங்காற்பட்ட புலமையும் , சுயமான பார்வையும் முயங்கி முகிழ்த்த நூல் இது. அரிதினும் அரிதாக மொழியியல் கலைச்சொற்கள் சில காணப்படினும் அவை பொருட்படுத்தத் தக்கன அல்ல. முற்றிலும் மரபிலக்கணப் புலமை வழிநின்று ஆய்வார்ந்த  புதுநெறிகாட்டியிருப்பதே இந்நூலின் சாதனை.


பொதுக் காலம் 11 - 19ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து, தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம் ஆகிய பத்து நூல்களை முதன்மையாகக் கொண்டு வீரகத்தியார் ஆய்வு நிகழ்த்தியுள்ளார் (பொருளடக்கப் பக்கங்களை இணைத்துள்ளேன்)




தம் பயிற்றாசிரியப் பட்டறிவால் மொழித் திறன் முனைப்புற ஆங்காங்கே இயல்பாக விரவியுள்ள அவருடைய  உணர்வுகளும் உவமைகளும் பிறவும் இலக்கண வகுப்பொன்றில் நேரே பயில்வது போன்ற உணர்வைத் தருகின்றன. 


'நான்கு நூறு ஆண்டுகள்' என்னும் முதல் அத்தியாயம் (பொ.கா. 7 - 10) பிற்கால இலக்கண நூல்களின் தோற்றத்திற்கான முற்கால அரசியல் சமுதாய பண்பாட்டுப் பின்புலத்தை , " வடமொழி என்னும் பேராழியிலிருந்து ஏககாலத்தில் நஞ்சும் அமிழ்தும் எழுந்த "(ப.6) கதையைவறட்டு வரலாறாக அன்றிச் சுவையாக அறிமுகப்படுத்துகிறது.


" யாப்பிலக்கணத் துறை தமிழியல் தழுவிய தொல்காப்பிய மதம், தமிழியல் தழுவிய காக்கைபாடினியார் அவிநயனார் மதம், வடமொழி வழித் தமிழாசிரியர் மதம் என மூன்று கோட்பாட்டு அடிப்படையில் வளர்ச்சி பெற்றுள்ளதை " (ப.16) தொடர்புடைஇடைப்பிறவரலாய் வீரகத்தியார் சுட்டுவது விரித்தாராய்தற்குரிய களமாகும். இன்னும் சில களங்கள் இந்த அத்தியாயத்தில் அறிமுகமாகின்றன.


இரண்டாவது அத்தியாயத்தில் , 1.நன்னூல், இலக்கண விளக்கம்...  2. பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து... 3. தொன்னூல் விளக்கம் என மூவகைப்படுத்தி " மூவகைப்படும் இந்நூல்களுக்கெல்லாம்  வீரசோழியம் ஒரு முன்னோடி நூல் " (பக்.25-26) என்று இனங்காண்கிறார்.


" வடமொழியே மொழிகளுக்கெல்லாம் தாய் என்று பெருந்தேவனாரால் கூறப்பட்ட கருத்து ஆய்வாளர் சிலரால் புத்தமித்திரனார் தலையில் சுமத்தப்பட்டுவிட்டது. இவையெல்லாம் சேர்ந்து இலக்கண ஆர்வலர்களுக்கும் வீரசோழியத்துக்கும் இடையில் ஒரு வித 'சீனப்பெருஞ்சுவரை' எழுப்பிவிட்டன " (ப.34) என்கிறார்.


" வடமொழிமரபை நூற்றுக்கு நூறு பின்பற்றிய - தமிழ்மொழிக்கு ஒவ்வாத இந்த [ வீரசோழிய]நிலைப்பாடு அருவருப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்துவது நியாயமே. இருந்தாலும் சேறு கலந்த தாமரை மூலத்தையும் களிம்பு கொண்ட தங்கத்தையும் ஒதுக்கிவிட முடியுமா ? சேற்றைக் கழுவியும் தங்கத்தைப் புடம்போட்டும் எடுத்துக்கொண்டார் மதிநுட்பம்மிக்க நன்னூலார் " (ப.36) எனக் கூறும் வீரகத்தியார் தாமரையும் தங்கமுமாய் மலர்ந்து மிளிரும்    வீரசோழியத்தின்  பகுதிகளை நன்கு காட்டுகிறார்.


நுதலிய முறை, இலக்கணம் சொல்ல எடுத்துக்கொண்ட கட்டளைக்கலித்துறை ஆகியன பற்றி விமரிசித்துள்ளார்.

" இலக்கணத்துறையில் கட்டளைக் கலித்துறை நூற்பா செய்து வெற்றிகண்டவர் யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் ஒருவரே. யாப்பிலக்கணச் செய்திகள் பரப்பில் மிகக் குறைந்தன ஆதலின் அவருக்கு அது வெற்றி தந்துவிட்டது" (ப.39) என்பது இடைப்பிறவந்த நுட்பம்.


வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனாரும் வீரகத்தியாரின் விமரிசனப் பார்வையிலிருந்து தப்பவில்லை . ஆனால் பாராட்டே விஞ்சிநிற்கிறது.

" அவர் கருத்துக்களை எடுத்தாளாத உரை ஆசிரியர்களே இல்லை எனலாம்... ஆனால் எந்த இலக்கண உரையாசிரியராவது வீரசோழியத்தையோ பெருந்தேவனார் உரையையோ எங்குமே குறிப்பிடவில்லை . இது வியப்புக்கும் வேதனைக்கும் உரியது " (ப.40) என்கிறார். நன்னூலார் பெருந்தேவனார் உரையிலுள்ள அனேகமான செய்திகளை ஏற்று விதி செய்துள்ளதாகவும் , இளம்பூரணரைப் பின்பற்றவில்லை என்றும் சுட்டுகிறார் ( பக்.41 - 42).


வீரசோழியத்திற்கு முந்தைய தொல்காப்பியமதம், அவிநயமதம் என்னும் இருபெரும் கிளைகளை பெருந்தேவனார் உரை கொண்டு உய்த்தறிகிறார்.


புதிய வீரசோழியப் பதிப்பின் தேவையையும் உணர்த்தியுள்ளார்.


" தொல்காப்பியத்துக்குப் பின் நீண்டகால இடைவெளியில்

ஏற்பட்ட மொழியமைப்பில் இழையோடிய புதிய இலக்கண அமசங்களைப் பொதுமைப்படுத்திச் சேர்த்து எளிமையும் தெளிவும் கொண்ட நூற்பாக்களில் அமைத்துக்கொண்ட ஒரேயொரு இலக்கண நூல் நன்னூல் ஆகும்" (ப. 48) எனப் போற்றுகிறார். குறைகளைச் சுட்டாமலுமில்லை என்பதைச் சொல்லவேண்டியதில்லை.


நன்னூல் பற்றி ஆராயும்போது, " வைதிக மதத்தினர் வட மொழி மதச் செய்திகளைத் தமிழ் மொழியில் புகுத்தப் புகுத்த , சைனர்கள் அல்லவா தமிழியலைக் கட்டிக்காத்து வளர்த்தெடுத்துப் பிற் சந்ததியினரிடம் ஒப்படைத்தவர்கள்" (பக். 52-53) என்கிறார்.


நன்னூல் உரையாசிரியர்தம் வன்மை மென்மைகளையும்

வீரகத்தியார் விதந்தோதியுள்ளார்.


பிற இலக்கண நூல்களில் கொள்வன கொண்ட வீரகத்தியார், " வடமொழியே இந்தியப் பெருங்கண்டத்து மக்கள் அனைவருக்கும் தாய்மொழி என்றும், ஏனைய மொழிகளெல்லாம் திசை மொழிகள் என்றும் கருதிக் கொண்ட இவரிடமிருந்து தமிழ் இலக்கண இயல்  நுட்பங்கள் எவற்றையும் எதிர்பார்க்க முடியாது " (ப.60) என்று சுப்பிரமணிய தீட்சிதரின் பிரயோக விவேகத்தை முற்றாகத் தள்ளிவிடுகிறார்.


" இலக்கணத்துக்குத் தெளிவும் நுட்பமும் விரிவும் விளக்கமும் தந்த சுவாமிநாத தேசிகர் ..." (ப.63) என இலக்கணக்கொத்து ஆசிரியரைப் பாராட்டுகிறார்.


'வீரசோழியத்தைப் போல் அறுவகை இலக்கணமும் வாழும் தமிழை வளர்க்க விரும்புகிறது' (ப.86) என்கிறார்.


இலக்கண நூல்களின் பின்னணி , வழி, நூலமைப்பு அதாவது வைப்பு முறை, இலக்கணம் கூறும் முறை, கூறும் இலக்கணம் ஆகிய அனைத்தின் வன்மை மென்மைகளையும் அலசுகிறார். இவற்றில் விவாதத்திற்கிடனாவை உண்டு என்பது வெளிப்படை.


" தொல்காப்பியம் 'சார்ந்து வரல் மரபின் மூன்று' எனக் கூறியது சார்பு என நன்னூலில்

குறியீடு பெற்றுக்கொண்டது . காஞ்சியில் நெய்யும் பட்டு என்றார் ஒருவர் ; காஞ்சிப் பட்டு என்றார் மற்றவர். இவ்வளவுதான் வேறுபாடு " (ப. 103)


" குற்றியலுகரம் உயிரா மெய்யா என்பது அது வேறு பிரச்சினை. முருகனைப்போல் உரைப் பிரபஞ்சம் அனைத்தையும் வலம் வர வேண்டியதில்லை. தொல்காப்பியரிடமிருந்து நேரே மாங்கனியைப் பெற்றுக்கொள்ளலாம் " (ப . 105)


" நன்னூலார் முதல் சார்பு எனக் குறியீடு செய்யாமல் முதல், அன் முதல் என முதல் எழுத்துக்கள் அல்லாத எழுத்துக்கள் என்ற அடிப்படையில் குறியீடு செய்திருந்தால் 'பாட்டி'க்கு இன்று அவல் கிடைக்காமல் போயிருக்கும் " (ப. 108)


" என்றுமுள தென்றமிழ்க்கு என்றுமுள்ள  ஆய்வுப் பொருளாகச் சார்பெழுத்தை வைத்த பெருமை தொல்காப்பியனாருக்கு உரியது. அதுவும் சார்பெழுத்தில் ஒன்றாகிய ஆய்தம், என்றும் பதினாறு வயது மார்க்கண்டேயனாகப் பெருவரம் பெற்றுள்ளது போலும் " (ப. 119)


" இலக்கண விளக்கம் வழக்கம்போல் நன்னூலாரைக் குடுமிச் சண்டைக்கு இழுக்கிறது. அளபெடையின் பெற்றி அறிந்திலர் போலும் , எனக்கூறி, நெட்டெழுத்து தத்தம் ஒத்த குற்றெழுத்தோடு அளபெழும் என்று கூறும். இங்கே தொல்காப்பிய வாடை வீசுகிறது" (பக் . 144 - 145)


" தொல்காப்பிய ஒலிநுட்பம் வர வர மாமி கழுதையான கதையாகிவிட்டது. ஏகாரத்தைப் பொறுத்த வரையில் கழுதையும் இல்லை " (ப.154)


மயக்கம், போலி, விகாரம் ஆகியவற்றிடையே இலக்கண நூல்களில் காணும் குழப்பத்தைச் சுட்டி, " இவை எல்லாம் போலிக் குழப்பங்கள் அல்ல உண்மையான குழப்பங்கள் " (ப.173) என்பார்.


சமணரோடு தொடர்புடைய மாகதி, அர்த்தமாகதி மொழிகளில் ர் > ல் மாற்றம் பற்றி ஏ.எல்.பசாம் எழுதியிருப்பதைக் காட்டி பந்தர் /பந்தல் என்பன போன்ற ஈற்றுப்போலிக்கு அந்தச் செல்வாக்குக் காரணமாகலாம் என்கிறார் (ப. 174)


'மெய்ம்மயங் குடனிலை' என்னும் தொல்காப்பியத் தொடரை (22:2) மெய்ம்மயக்கம், உடனிலை மயக்கம் என உம்மைத்தொகையாகக் கொண்டு இளம்பூரணர் பொருளுரைப்பது பொருந்தாது; மெய்ம்மயக்காகிய உடனிலை எனப் பண்புத்தொகையாகப் பொருள் கொள்ள வேண்டும் என்பது வீரகத்தியார் கருத்து ( ப. 185).


ஒரு மொழி, தொடர்மொழி என்னும் தொல்காப்பியத் தொடர்வகைப்பாடு தமிழ்மொழியமைப்பை ஒட்டியது என்பதை நிறுவி, அவ்வகைப்பாடு வடநூல் வழிப்பட்ட தென்பாரை மறுத்துள்ளார் வீரகத்தியார்." யாப்பருங்கலக் காரிகையில் மேற்கோளாகக் காணப்படும் நூலறுந்த நூற்பா ஒன்று வடநூல் இரண்டல்லவை பல எனக் கூறும் என்றது " (ப. 207) என எள்ளிநகையாடுகிறார்.


ஒரு மொழி, தொடர்மொழி என்னும் தொல்காப்பியப் பாகுபாட்டின் பயன்களையும்  அவற்றை நன்னூலார் கொள்ளாமைக்கான காரணத்தையும் ஆய்ந்து சொல்கிறார்.

பதவியலுக்கும் தொடர் வகைக்குமான தொடர்பைக் காட்டுகிறார்.

 " வீரசோழிய சிந்தனைகளையும் கால வளர்ச்சியால் ஏற்பட்ட கருத்துக்களையும் மூலதனம் ஆக்கி, சுயமான சிந்தனை வன்மையினால் தேவையைப் பூர்த்தி செய்வதான மொழிப் பாகுபாடு கண்டு , அதுவே ஆதாரமாக இலக்கண உலகில் பதவியலை முன்வைத்து அழியாத பெருமையைத் தேடிக்கொண்ட புகழ் நன்னூல் ஒன்றுக்கே உரியதாகும். குறைந்த மூலதனத்துடன் மிகக் கூடுதலான இலாபம் பெற்றுக்கொண்டது " (ப. 211)


" வீரசோழியத்தின் தத்திதம், தாது , தொழிற்பதப் படலங்கள் என்னும் மூன்று முடிச்சு

நன்னூலில் பதவியல் என்னும் ஒரு முடிச்சு ஆனது; அதுவே புதுமை நிறைந்த மாற்றுயர்ந்த பொன் முடிச்சும் ஆயிற்று " (ப. 213)


" வீரசோழியத்துக்குப் பிற்பட்ட இலக்கணங்கள் அனைத்தும் கூறும் சொற்கூறுகள் பற்றிய சிந்தனைகள் பலவற்றுக்கும், வீரசோழியமும் பெருந்தேவனார் உரையுமே ஊற்றிடமாகக் காண்கிறோம். வழிப்பறி நடத்தி விட்டு ஆளை முடித்து விடுதல்போல் வேண்டிய இலக்கணச் செய்திகளை எடுத்துவிட்டு வீரசோழியம் இருட்டடிப்புக்குள்ளாக்கப்பட்டுவிட்டது " (ப.231) என்று  தமிழிலக்கண வரலாற்றின் ஓர் அவல நாடகத்தை அரங்கத்திற்குக் கொண்டுவருகிறார் வீரகத்தியார்.


இது வீரசோழியத்தைப் பயிலவேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.


பேராசிரியர் டாக்டர் சு. இராசாராம் அவர்கள் வீரசோழிய இலக்கணக் கோட்பாட்டை விளக்கும் தனி  நூலொன்றை எழுதியுள்ளார்.


வீரகத்தியார் நூலின் உள்ளே விவாதத்திற்குரிய கருத்துகள் விரவியிருப்பினும் ஒன்றரைப் பக்கமேயான முடிவுரையில் , " இந்த ஆய்வு முயற்சியின் விளைவாகத் தோன்றிய சில கருத்துக்களை அறிவுலகின் முன் வைப்பது அவசியம்.  கொள்ளுவதும் தள்ளுவதும் அதனைப் பொறுத்தது" (ப.258) என்று  ஐந்து முடிபுகளை மட்டும் கூறி  நூலை நிறைவு செய்துவிடுகிறார்.


இது தமிழ் இலக்கண வரலாறு , மரபு, கோட்பாடு முதலியவற்றில் ஆர்வமுடையோர் யாவரும்   பயிலவேண்டிய சுவையான நூல்.










4 comments:

  1. உங்கள் வலைப்பூவினைக் காணும் வாய்ப்பினை இன்றுதான் பெற்றேன். அரிய செய்திகளை நாங்கள் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ஆய்வுரை நிறைவு செய்யப்பட்டுக் கால் நூற்றாண்டுக்குப் பின் நூலாக வெளிவருவது வேதனைதான் ஐயா

    ReplyDelete

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...