Sunday, February 4, 2024

' மட்டையாட்ட மான்மியம் '

 ' மட்டையாட்ட மான்மியம் ' 



 2015ஆம் ஆண்டு டென்னிசு விளையாட்டாளர்  மரியா சரபோவா, ' சச்சின் டெண்டுல்கர் யாரென்று தெரியாது ' என்று சொல்லப்போக  அப்போது  அவரைச் சமூக ஊடகங்களில் மாற்றி மாற்றி வறுத்தெடுத்துவிட்டனராம்.  

இப்போது  ' உழவர் போராட்டம் எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை '  என்றும் ' இந்திய இறையாண்மை ' என்றும்  டெண்டுல்கர் கீச்சிட , போராட்ட  ஆதரவு உணர்வுடன்,    அப்போது  ‘சச்சினைத் தெரியாது’ என்று கூறிய மரியா சரபோவாவிடம் மன்னிப்புக் கேட்டுச் சரமாரியாகக் கீச்சிடுகிறார்களாம். இது செய்தி.


இனிக் கதை !


நாங்கள் தஞ்சாவூர் வடக்கு வீதியில் வசித்துவந்தோம். இருபுறமும் நான்கைந்து மணித்துளிகளில் நடந்து சென்றடைய வாய்ப்பாகத் தூய பேதுரு பள்ளி, கலியாண சுந்தரம் பள்ளி ஆகிய புகழ்மிகு பள்ளிகள் இருந்தன. 


ஆனால், ஏறத்தாழ இருபது மணித்துளிகளுக்குக் குறையாமல் நடந்து செல்லும் தொலைவிலிருந்த , நகரம் சிற்றூர் இரண்டுக்கும் இடைப்பட்ட, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் உமாமகேசுவரர் பள்ளியில் நான் படித்தேன். சங்கம் நடத்திய புலவர் கல்லூரியில் பணியாற்றியதால் அப்பா என்னையும் உடன் அழைத்துச் சென்றார்கள்.


எனக்குப் பள்ளி நண்பர்கள் வேறு; தெரு நண்பர்கள் வேறு. 


உமாமகேசுவரர் பள்ளியில் அப்போது சாஃப்ட் பால் அல்லது பேஸ்பால் எனப்படும் குண்டாந்தடி ஆட்டத்தில் வல்ல உடற்பயிற்சி ஆசிரியர் இருந்ததால் அதுவே பயிற்றுவிக்கப்பட்டது.


நான் வேடிக்கை பார்ப்பேன். விளையாடியதில்லை.


தூய பேதுரு பள்ளி விளையாட்டுத் திடலில் இக்பால் அரங்கில் , ஆண்டுதோறும் ஒருவார காலத்திற்குக் குறையாமல்  நடக்கும் அனைத்திந்திய அளவிலான கூடைப்பந்துப் போட்டிகளைத் தவறாமல் பார்ப்பேன்.  கூடைப்பந்தில் ஆர்வமிக்க பார்வையாளர்கள் கணிசமாக வருவார்கள். ஆனால் ,தெரு நண்பர் எவருக்கும் அதில் ஆர்வமில்லை. நான் தனியாகத்தான் செல்வேன்.பெரிய அளவுக்கு விதிகளோ ஆட்ட நுணுக்கங்களோ தெரியாவிட்டாலும் அதன் விறுவிறுப்பு என்னை ஈர்த்தது. 


கோலிக்குண்டு , கிட்டிப்புள் , பம்பரம் (தலையாரி என்றொரு ஆட்டம் விறுவிறுப்பானது) முதலியவற்றில் தெரு நண்பர்களோடு நானும் விளையாடுவேன் ; குறிப்பாகக் கிட்டிப்புள் நன்றாக ஆடுவேன். கிட்டிப்புள்ளில் இருந்துதான் கிரிக்கெட் வந்தது என்று கலைச்சொல்லறியாக் காலத்திலேயே பண்பாட்டாராய்ச்சிப் பகடி செய்திருக்கிறேன்.


அப்போது, தெருவில் சந்து பொந்துகளில் எல்லாம் சிறுவர்கள் தாமே அமைத்துக் கொண்ட  சிறுசிறு மட்டையாட்டக் குழுக்கள்  இருக்கும். ஒவ்வொரு குழுவுக்கும் நீள் வடிவ ஓவிய ஏடு  ஆட்டப் பதிவேடாக இருக்கும் . குழுக்களுக்குள் கையெழுத்துப் பந்தயம்(மேட்ச்)நடக்கும். ஓட்டங்களும் விக்கெட்டுகளும் இன்ன பிறவும் முறையாகப் பதிவாகும். இரு அணியின் வெற்றி தோல்விகள் பதிவாகும். ஆட்டம் உணர்ச்சிகரமாக இருக்கும். சண்டை சச்சரவுகள் சிலவேளை அடிதடியாகக் கூட முற்றிவிடும்.


தெருக் குழுக்களில் வேறுபாடற்றுச் சிறுவர்கள் உறுப்பினர்களாக இருந்தார்கள். என்றாலும் என் விருப்பின்மைக்கு விறுவிறுப்பின்மை மட்டுமல்ல , மட்டையாட்டம் மேட்டுக்குடி/மேற் சாதிச் சார்புடையது என்று உள்ளத்தில் பதிந்து போனதே  காரணம்.

அலட்டுவார்கள். 


ஆனால் , தெருக் குழுக்களின் பந்தயங்களில் பார்வையாளனாக மணிக்கணக்கில் கலந்துகொள்வேன்.  அப்போது , திரைப்படச் செய்திக்காட்சியில் சில மணித்துளிகள் பெரிய ஆட்டத்தின் முனைப்பான காட்சிகளைக் காண்பது தவிர , ஏடுகளில் வரும் படங்களும் வானொலி நேர்முக வருணனைகளும்தாம் வடிகால்கள். 


மட்டையடி, பந்துபிடி முதலியன இயக்க விறுவிறுப்புடன் காட்சி வடிவில் ஏடுகளில்  இடம்பெறும். அவற்றைக் கத்தரித்து விவரங்களுடன் ஏட்டில் ஒட்டி மட்டையடிப் படத்தொகுப்புகளாகப் பலரும் வைத்திருப்பார்கள். எம் தெருச் சிறுவர்கள் அத்தகு நிலைக் காட்சிகளை உளங்கொண்டு , பந்தை அடித்தல் பிடித்தல் முதலியவற்றின்போது சில நொடிகள் நிலைக்காட்சியில் உறைந்திருப்பார்கள்.சிறுவர்களின் பாவனைகள் - அவர்களையொத்தவனே ஆனாலும் - எனக்குக் கேலிக்கூத்தாய் நகை நல்கும் ; கிண்டலடித்துக்கொண்டிருப்பேன். அதுஎன் இரசனை. மற்றபடி அந்த ஆட்டம் பற்றித்  தானாக வந்து சேர்ந்ததற்கு மேல்  நான் ஏதும் தெரிந்துகொள்ள முயலவில்லை. (என் இரசனை முறையால் நண்பர்கள் எரிச்சலுறுவார்கள் . வாயாலாகாதவர்கள் கை ஓங்குவதும் உண்டு. எனினும்  என்னைத் தவிர்க்க மாட்டார்கள்) இன்றளவும் தொலைக்காட்சியில் போகிறபோக்கில் கூட அதைப் பார்ப்பதில்லை.


அந்தக் காலத்தில் வானொலிப் பெட்டியில் நேர்முக வருணனை கேட்காத மட்டையாட்டப் பித்தர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம். 


கல்லூரி மாணவர் சிலர் கையடக்க வானொலியை ஒய்யென வருணனை  இரையக் காதில் வைத்துக்கொண்டு போவார்கள். 'முற்போக்காளர்' கள் சிலர் கூட இதற்கு விதிவிலக்கில்லை. கையடக்க வானொலி அரிதான காலத்தில் ,

பித்து இல்லையென்றாலும் கொஞ்சம் தொற்று உள்ளவர்கள் ஓட்ட எண்ணிக்கை , விக்கெட் வீழ்ச்சி பற்றியெல்லாம் ' அவல் மெல்லு 'மளவுக்காவது கேட்டறிவார்கள். அதுவும் தெரியாதவர்கள்  

நவீன இந்திய வாழ்க்கைக்கே இலாயக்கற்றவர்களாகிவிடுவார்களே ! இந்த மனநிலையிலிருந்துதான் மரியா சரபோவாவை அன்று பார்த்திருக்கிறார்கள்.


கையடக்க வானொலிக் கால்நடைகளைக் கண்டால் பற்றிக்கொண்டு வரும். கல்லூரிக் காலத்தில் ,கையடக்கக் குறள் நூல் எனக்குக் கைகொடுத்தது. அதைக் கைக்குட்டையில் சுற்றிக் காதருகே பிடித்துக்கொண்டு உற்றுக் கேட்பது போன்ற பாவனையில் ( மட்டையடி வருணனை கேட்பதற்கென்றே வியப்பை, அதிர்ச்சியை இன்ன பிறவற்றைக் காட்டும் ஒரு பாவனை உண்டு)  நடப்பேன். பின்தொடர்வோர்   சிலர் பலராகி " ஃபிரண்டு ரன் எத்தன? " என்பார்கள் . எதுவும் சொல்லாமல் கைக்குட்டையைப் பிரித்துக் குறளைப் பிற புத்தகங்களோடு சேர்த்துக்கொண்டு நடப்பேன். வக்கிரம் !


ஊடகங்களில் என்னை மீறிப் புலன்களில் படும் பட்டோடி நவாப் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை பெயரளவில் மட்டுமே சிலரை அறிவேன். இப்போது தமிழ்நாட்டு நடராசனை மேட்டிமை ஊடகங்கள் கையாளும் முறை பற்றி மட்டுமே கருத்துச் செலுத்தினேன். மற்றபடி மிக மிக மிகப் பெரும்பாலான மட்டையாடுநரை இன்றளவும் எனக்குத் தெரியவே தெரியாது.


வாணாள் வீணாள் கழித்துவிட்டேன். அகவை அறுபத்துமூன்று கடந்துவிட்டது.

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...