நான் ஒரே கட்டுரையிலேயே , ' மிகு பெரு நூலகம் ' , ' அரும்பெரும் நூலகம் ' என்னும் தொடர்களைக் கைப்பழக்கத்தில் எழுதிவிட்டேன்;பிறகுதான் பார்த்தேன். இலக்கண மரபின்படி பெருநூலகம் என்பதே சரியானது.ஆனால் அரும் பெரும் நூலகத்தைத் 'திருத்த' முற்படவில்லை.
பெரு(மை)* என்னும் பண்புப்பெயர் நின்று நாற்கணங்களும் வரும்போது புணரும் மரபைப் பார்ப்போம்.
உயிர்க் கணம்
பெரு(மை) + அணி = பேரணி
பெரு(மை) + ஆசிரியர் = பேராசிரியர்
பெரு(மை) + இடி = பேரிடி
- இவற்றில் வருமொழி முதலில் நிற்பவை உயிரெழுத்துகள் (அ , ஆ , இ ...)
வன்கணம்
பெரு(மை)+ கடல் = பெருங்கடல்
பெரு(மை) + சிறப்பு =பெருஞ்சிறப்பு
பெரு(மை) + தன்மை =பெருந்தன்மை
பெரு(மை) + புகழ் =பெரும்புகழ்
- இவற்றில் வருமொழிமுதலில் நிற்பவை வல்லெழுத்துகள் ( க் , ச் , த் , ப்).
மென்கணம்
பெரு(மை) + ஞானம் =பெரு ஞானம்
பெரு(மை) + நகர் =பெரு நகர்
பெரு(மை) + மன்றம் =பெரு மன்றம்
இவற்றில் வருமொழிமுதலில் நிற்பவை மெல்லெழுத்துகள் ( ஞ் , ந் , ம்).
இடைக்கணம்
பெரு(மை) + யாறு= பேரியாறு°
பெரு(மை) + வாழ்வு =பெரு வாழ்வு
இவற்றில் வருமொழிமுதலில் நிற்பவை இடையெழுத்துகள் ( ய், வ்).
முப்பெரு விழா என்பது மரபு. முப்பெரும் விழா என்பது வழக்கில் பெருகி விட்டது; குற்றமன்று. முப்பெருவிழா எனலே நல்லது.
ஆனால், அரும்பெரு நூலகம் என்றால் சமனிலையின்றி, ஓசை குன்றுவதாகத் தோன்றுகிறது. அரும் , பெரும் என்னும் எதுகை நடையில் இறுதி மகரங்கள் நின்று சமனிலை பேணுகின்றன ; ஓசை நயம் நல்குகின்றன.
-------------
* நன்னூல் நெறியில் பண்புப் பெயர் நிலை மொழிகள் மை விகுதிபெறும். இதுபற்றிக் கருத்து வேறுபாடு உண்டு.
° நம் காலத்தில் இவ்வாறு யகர வருமொழி வரின் (குற்றியல்) இகரம் பெறுதல் வழக்கில் இல்லை (பேரியாறு →பெரியாறு என்றாகி , பெரியாறு→பெரியார் எனத் திரிந்து பிழைபட்டது)
No comments:
Post a Comment