Wednesday, August 4, 2021

அவளா இவள் !


திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரித் தமிழ் முதுகலை மாணவர்களிடையே உரையாற்ற நேர்ந்தது (02.08.2019) . ஒரு காலத்து ஆசிரியனான என்பால், அக்கல்லூரித் தமிழ்த்துறை ஆசிரியர் மூவரும் (பிற ஆசிரியர்களும்)அன்பைப் பொழிந்தனர். 


ஒப்பியல் இலக்கியம் குறித்த ஒன்றரை மணி நேர உரை. 


" இதனாற் பயன் என்னை மதிப்பதோ எனின், புலன் அல்லாதன புலனாதலும் அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம் பயத்தலும் " என்று இளம்பூரணர் உவமைக்குச் சொன்னவற்றை அப்படியே ஒப்பிலக்கியத்திற்கும் கொள்ளலாம் என்று தொடங்கினேன்; என்றாலும் மிகை எளிமைப்படுத்திவிடக் கூடாதென்று எச்சரித்தேன்.


கோட்பாடுகளைத் தொட்டுக் காட்டி , ஒப்பிலக்கியத்தின் ( இலக்கிய ஒப்பியல் எனலாம் என்பார் பேரா. கா.சிவத்தம்பி) காத்திரத்தை விட்டுவிடாமல்  , ஒப்பு நோக்க வாய்ப்பான இலக்கியப் பகுதிகள் சிலவற்றை இயன்றவரை சுவை குன்றாமல் சொல்வதற்கு மிகுந்த நேரம் எடுத்துக் கொண்டேன். 




குறுந்தொகைப் பாடலொன்றுடன், மராட்டியப் பிராகிருதத்தில் இயற்றப்பட்ட காதா சப்த சதிப் பாடலை ஒப்பு நோக்கிச் சற்றே அலசினேன். 


ஜகந்நாதராஜா பா யாப்பில் தமிழாக்கியிருக்கிறார்.

அதனால் கவித்துவம் சற்றுக் கை நெகிழ்ந்திருப்பதாகத்

தோன்றுகிறது. அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா மொழியாக்கம் கவித்துவ நெருக்கம் கொண்டதாகத் தோன்றுகிறது. இவற்றை வைத்து நானும் தமிழாக்கிப் பார்த்தேன். அதிகப்பிரசங்கித்தனம்தான். ஆசை வெட்கமறியாது.


குறுந்தொகை   

                          

(312. தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறிக் கொள்கிறான்)


இரண்டறி கள்விநங் காத லோளே 

முரண்கொள் துப்பிற் செவ்வேன் மலையன் 

முள்ளூர்க் கான நாற வந்து 

நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள் 

கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச் 

சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி 

அமரா முகத்த ளாகித் 

தமரோ ரன்னள் வைகறை யானே. 

                                                                - கபிலர்

 [ நம்  காதலி இரண்டும் தெரிந்த கள்ளி. 

 

 நள்ளிரவில் 

 - பகை வெல்லும் வேலினை உடைய மலையனின்முள்ளூர்க் காடு போல் மணக்கும்படி வந்து -  நமக்கேற்ப நடந்து கொள்வாள்.

 

விடியலில்

நாம்  சூட்டிவிட்ட மலர்கள் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டுத் தலையில் எண்ணெய் தடவிச் சீவி முடித்துக்கொண்டு , 

நம்மைக் கண்டும் காணாதவள் போல், தன்னைச் சார்ந்தவர்களோடு இருந்துகொள்வாள்.]


                                                                


                                 (❛‿❛) 

                                 

                    காதா சப்த சதி

                       (பாடல் 23)                      


                         I

களித்தின் புறுங்கால் கன்னம் மின்னக்

கட்டளை நூறிடும் காரிர வினிலே!

பகலில் குனிந்த தலைநிமி ராதே!

அவளே இவளென நம்புத லரிதே!                


                       

                     

                         II


At night , cheeks blushed

     With joy , making me do

A hundred different things ,

     And in the morning too shy

To even look up , I don't believe

     It's the same woman.

     

                       

                       

                          III

                     

இரவில் 


கன்னஞ் சிவக்கக்

காதலில் திளைத்து


நூற்றுக் கணக்கில்


என்னென்னவோ செய்ய

என்னைப் பணித்தாள்


விடியலில்


காணவும் தவிர்த்து 

நாணம் மிகுத்தாள்


அவளா இவள்!


I.   மு.கு.ஜகந்நாதராஜா

ll . Arvind Krishna Mehrotra

III. [தன்னடக்கம். ஈஇ! நான்]

1 comment:

  1. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக உள்ளது.

    ReplyDelete

வேரில் வெந்நீர் விடவேண்டாம்!*

  எனது மொழியியல் அறிவு பாமர அளவினது . நான் அறிந்தவரை விளக்க மொழியியல் என்பது சமகால/ஒருகால மொழியமைப்பை விளக்குவது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்...