உயர் கல்வி நிலையில், தமிழ் இலக்கியப் பாடங்களில் ஒன்றாகத் தொல்காப்பியம் இடம் பெற்றுள்ளது. சில பாடத் திட்டங்களில் நோக்கங்களுள் ஒன்றாகத் 'தமிழைப் பிழையறப் பேசவும் எழுதவும் பயிற்றுவித்தல்' என்னும் பல்லவி காணப்படுகிறது.மாறாகத், தமிழைப் பயின்றோர்தாம் தொல்காப்பியம் பயில இயலும். தமிழ் மொழி கற்கத் தொல்காப்பியத் துணை தேவையில்லை.
இப்போதும் தமிழ்ப் பயிற்சியில், பயன்பாட்டு நிலையில் , நன்னூல்தான் ஓரளவு செல்வாக்குச் செலுத்தி வருகிறது. தற்காலத் தரப்படுத்தமுற்றுள்ள தமிழைக் கற்க நன்னூல் மட்டுமே போதாது. அதே வேளையில் மரபார்ந்த இலக்கணக் கலைச்சொற்களை இயன்றவரை விட்டுவிடாமல் தற்காலத் தமிழ் இலக்கணம் அமைதல் வேண்டும். (தமிழ் பயின்றபின் செழுமைக்குத் தொல்காப்பியம் முதலியன துணைபுரியலாம். இது பயில்வு நிலை கடந்து புலமை நோக்கி நடக்கும் நிலை)
சரி. வேறு எதற்காகத் தொல்காப்பியம் பயில வேண்டும்.
1 ) மரபார்ந்த பண்பாட்டு மதிப்பு
தமிழ்ச் சமூகத்தின் மரபார்ந்த கலை, இலக்கியம், பண்பாட்டுச் சின்னங்கள் முதலியவற்றின் வரிசையில் இடம் பெறத்தக்க மதிப்புடையது தொல்காப்பியம். தொல்காப்பியம் பயில்வதென்பது, அதனைப் பேணும் முறைகளுள் ஒன்று. தொல்காப்பிய முற்றோதல்முயற்சியைச் சிலர் மேற்கொண்டனர் (கொள்கின்றனர்?) .
2)பழந்தமிழ் இலக்கியப் பயிற்சிசார் பயன்பாடு
எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, திருக்குறள், இரட்டைக் காப்பியங்கள், பெருங்கதை இன்ன பிறவற்றைப் பயிலத் தொல்காப்பியம் இலக்கணம் என்னும் நிலையில் பெரிதும் துணை நிற்கும்(முற்றும் தொல்காப்பியமே போதும் என்று சொல்ல இயலாது).
3) புதிய போக்குகளை விளங்கிக் கொள்வதற்கான அடிப்படைக் கூறுகளின் இழையோட்டம்
மொழியியல், குறியியல் முதலிய அண்மைக்கால அறிவுத் துறைகளுக்குள், தொல்காப்பியப் பயிற்சியுடையோர் எளிதாக நுழைந்துவிடலாம்.
ஆனால், எல்லாம் தொல்காப்பியத்திலேயே இருக்கிறது என்று வாதிடுவது வளர்ச்சிக்குத் தடை ; தாழ்வு மனப்பான்மையின் விளைவு.
4)இன்றளவும் இழையோடும் தமிழ்த்தன்மையின் மூல ஊற்று
காலந்தோறும் மொழிமாறும் என்பதை உணர்ந்தவர்; புறனடைகளில் சுட்டியவர் ; அதே வேளையில் தமிழின் பொதுமையையும் புலப்படுத்தியவர் தொல்காப்பியர். பரணர் தமிழ் முதல் பாரதி தமிழ் வரை , 'தமிழ்' எனப்படுவதன் பொது ஊற்றுக்கண்களைத் தொல்காப்பியத்தில் காணலாம். 'என்றுமுள தென் தமிழ்' என்றான் கம்பன்.
5) உரையாசிரியர்களால் கையளிக்கப் பெற்றவற்றைப் பேணுதல்
தொல்காப்பியத்தின் பழைய உரையாசிரியர்களாகிய இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலியோர் தமக்கெனத் தனித் தகுதியுடையோர். எனவேதான், இளம்பூரணம், சேனாவரையம், பேராசிரியம், நச்சினார்க்கினியம் என்றெல்லாம் போற்றுகிறோம். இவர்தம் விளக்கங்களும், விளக்கங்களினூடான நுட்பங்களும், பங்களிப்புகளும் பயின்றுணரவும் சுவைத்து மகிழவும் தக்கவை.
6)புதிய அறிவுத்துறைகளால் துலக்குதல்
புதிய அறிவுத் துறைகளால் தொல்காப்பியம் துலங்கத் துலங்க அறிதோறறியாமை கண்டு இன்புறலாம்.
7)புதியன பெறுதற்குரிய வாய்ப்பு
தொல்காப்பியத்தைத் தேடல் சார்ந்துபயிலும்போது சில புதிய பார்வைகளைப் பெறவும் வாய்ப்புண்டு.
(தொல்காப்பியத்தை மட்டுமன்றி வேறு பல மரபிலக்கணங்களைப் பயில்வதற்கும் பேரளவு மேற்கூறிய காரணங்கள் பொருந்தும்; தமிழ்த் தொல்லிலக்கணமான தொல்காப்பியத்திற்கு முற்றிலும் பொருந்தும்)
தொல்காப்பியத்தைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தினை உண்டாக்கியுள்ளீர்கள். நன்றி.
ReplyDelete