Thursday, July 29, 2021

கட்டளையும் குறியெதிர்ப்பையும்

 கட்டளை வலித்தலும்

டிகிரி காப்பியும்


கெட்டியான பாலைக் கொண்டு போடப்படும் சுவையான காப்பியை டிகிரி காப்பி என்று சொல்வதுண்டு.காரணம் ?

தஞ்சை, முதுமுனைவர் சேக்கிழாரடிப்பொடி தி.ந.இரா.(T.N.R) அவர்கள் ஒரு முறை , தமக்கேயுரிய பாங்கில் காரணத்தைச் சுவைபடச் சொல்லக் கேட்டு வியந்தேன்.

பாலின் அடர்த்தியறி கருவியாகிய பால் மானி (Lactometer) கொண்டு காணும் அடர்த்தியின் அளவுதான் டிகிரி.

இந்த டிகிரியால் தரம் உறுதிப்படுத்தப்பட்ட பாலில் போடப்படும் காப்பி டிகிரி காப்பி.இங்கு டிகிரி என்பதை மரபிலக்கணப்படி ஆகுபெயர்* எனலாம்.

                                   ********   ********   *******

தினமணியில் திரு.த.ஜெகதீசன் அவர்கள் எழுதிய 'கட்டளைக்கல்-பொருள் என்ன?' என்னும் கட்டுரைக் கருத்தையும் (08.07.18) அதனைத் தக்க சான்றுகளுடன் மறுத்து எ முனைவர் அ.தட்சிணாமூர்த்தி அவர்கள் தெளிவுபடுத்தியதையும் (15.07.18) படித்த பின், பாட்டும் தொகையுமாகிய சான்றோர் செய்யுட்களில் கட்டளை என்னும் சொல்லின் வருகையைப் பார்க்கும் ஆர்வம் தலைதூக்கியது.

எட்டு இடங்களுள் ஒன்று தவிரப் பிற ஏழும் தரமறியப் பொன்னை உரைத்துப் பார்க்கும் கட்டளைக்கல்லைக் குறித்தே வந்துள்ளது.

அவற்றுள், பதிற்றுப்பத்து 81 ஆம் பாட்டு சற்றே வேறுபட்டு நிற்கிறது.



"அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி

கட்டளை வலிப்பநின் தானை யுதவி"(16-17)

என்னும் அடிகளின் ஒரு தொடருக்கு மட்டும்

" கட்டளை வலித்தலென்பது இன்னார் இன்னதனைப் பெறுக என்று தரங்களை நிச்சயித்தல்" எனப் பழையவுரைகாரர் பொருள் தந்துள்ளார். இங்குக் கட்டளை என்பதே தரம் என்னும் பொருளில் ஆகுபெயராய்* நிற்கிறது எனலாம்.

டிகிரி என்பதே பாலின் அடர்த்தியைக் குறித்துத் தரமான காப்பிக்கு அடையாயிற்று.

பொன்னின் தரமறி கருவியாகிய கட்டளை இப்பதிற்றுப்பத்துப் பாட்டில் வீரர்களின் தரத்தைக் குறித்து நிற்கிறது.

(* இவற்றை ஆகுபெயர் எனலாமா? என்பது பற்றி விவாதம் எழுந்தால் என் தரப்பை விளக்குவேன்.என்றாலும் " எனலாம்" என்று நழுவிக் கொள்கிறேன்.)


வட்டார 'வழக்கு'

'கட்டளைக்கல்'லாய்வு - 2


கட்டளைக்கல்லாய்வாளர் திரு.த.ஜெகதீசன் (தினமணி, 08.07.2018)வட்டார வழக்குணர்ச்சி மீதூரப் பொருள் காண முற்பட்டிருக்கிறார்(அவர் குமரி வட்டாரத்தவராக இல்லாமலும் இருக்கலாம். யாமறியோம்)

பழம் பனுவல்களில் வட்டார வழக்காட்சி இருக்கா தென்றோ, அவ்வட்டார வழக்குணர்ந்த ஒருவர் அதனைக் கண்டு அவை அவ்வட்டாரத்தில் எழுந்தவை  என்று கூறக் கூடாதென்றோ நான் சொல்லவில்லை. ஆனால், வேறு பல அக, புறச் சான்றுகளையும் பிற வட்டாரங்களின் வழக்குகள், சான்றுகள் இருப்பின் அவற்றுக்கான காரணங்களையும் தேவையையும் கண்ட பின்னரே வட்டாரத்தை உறுதி செய்ய வேண்டும்.

சுடாத கல்லைக் கட்டளைக் கல் என்னும் வழக்கு குமரி மாவட்டத்தில் இருப்பதாலும்

வெள்ளம், நீட்டம் ஆகிய குமரி வட்டார வழக்குகள் குறளில் இருப்பதாலும் ஊர்ப்பெயர்க்காரணம் ஒன்றாலும் கட்டளைக் கல்லின் பொருளைக் கண்டிருக்கிறார் ஆய்வாளர்.

திருக்குறளில் 'குறியெதிர்ப்பை' என்றொரு சொல் இடம்பெற்றுள்ளது. இதற்கு, "அளவு குறித்து வாங்கி அவ் வாங்கியவாறே எதிர் கொடுப்பது " என்று பொருள் தருகிறார் பரிமேலழகர் (குறள்.221, உரை). 

சமையலைத் தொடங்கிய நிலையில் இன்றியமையாத ஒரு பொருள் - எடுத்துக் காட்டாகச் சர்க்கரை - இல்லாததைக் கண்டு, உடனடித்தேவை கருதி சிறு பாத்திரமொன்றில்  அக்கம்பக்கத்திலுள்ள இணக்கமான வீட்டாரிடம் அதனை இரவலாகப் பெறுவதுண்டு. பிறகு அப்பொருளை அதே பாத்திரத்தில் நிரப்பித் திருப்பிக் கொடுப்பார்கள். இதுதான் குறியெதிர்ப்பை. (பணத்தை இவ்வாறு பெற்று, வட்டி முதலியன இன்றித் திருப்பிக் கொடுப்பது கைமாற்று எனப்படும்.)

குமணனைப் பாடிப் பரிசில் பெற்று வந்த பெருஞ்சித்திரனார் தம் மனையாளிடம் சொல்லியதாக அமைந்த, " நின்னயந் துறை நர்க்கும்..." என்று தொடங்கும் பாடல்  புரவலனை விஞ்சிய புரவலராகப் புலவர் திகழ்வதைக் காட்டும் புறநானூற்றுப் பாடல் (163). இதில் 'நின் நெடுங் குறி யெதிர்ப்பை நல்கியோர்க்கும் ... கொடு' என்பார் சித்திரனார்.

பகற்பொழுதுகளில் தொடர்ந்து வந்து தலைவியைச் சந்தித்து மகிழும் தலைவன் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே காதலில் காலங் கழிக்கிறான்.

இப்போக்கைத் தடுத்து மணம் புரிந்து கொள்ளத் தூண்டும் தோழி கூறுவதாக அமைந்தது நற்றிணை 93 ஆம் பாட்டு. இது, "உயிர்க் குறியெதிர்ப்பை* பெறலருங் குரைத்தே" என்று முடிகிறது. தலைவி தன் உயிரையே தலைவனுக்குத் தந்திருக்கிறாள். விரைந்து திருமணம் செய்யா விட்டால் அவள் உயிரைத் திரும்பப் பெறுவது அரிதாகிவிடும் என்கிறாள் தோழி . இப்பாட்டின் நயம் விரிப்பிற் பெருகும்.(இந்த அடிக்குப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் தரும் உரை மறுபரிசீலனைக்கு உரியது )

மிகைக் கற்பனைகளால்  நயம் நல்கும் முத்தொள்ளாயிரப் பாடலொன்று (26)

                                                                                      கூற்றுங் 

குறியெதிர்ப்பை* கொள்ளும் தகைமைத்தே யெங்கோன் 

எறிகதிர்வேல்மாறன் களிறு 

என்று நிறைகிறது. பாண்டியனின் போர்க்களிற்றைக் கூற்றுவனே இரவல் கேட்பானாம்.

சரி, 

எதற்கு இவையெல்லாம்?

இச்சொல் இதே பொருளில் கொங்கு வட்டாரத்தில் 'குறியாப்பு' என வழங்குவதாகப் பெருமாள் முருகன் தம், கொங்கு வட்டாரச் சொல்லகராதியில் குறிப்பிட்டுள்ளார்.

குறியெதிர்ப்பை கொண்டு திருக்குறள் முதலியவற்றைக் கொங்கு வட்டார நூல் என்று சொல்லி விடலாமா?

(*குறியெதிர்ப்பு + ஐ எனப் பிரித்துப் பிறழவுணர்தல் கூடாது. குறியெதிர்ப்பை என்பது ஒரு சொல் நீர் மைத்து; எனவே தான் இரண்டாம் வேற்றுமைத் தொகைகளில் வருமொழி வல்லெழுத்தாயினும் ஒற்று மிகுவதில்லை)

________________

Perumalmurugan (முகநூலில்):

ஐயா நீங்கள் காட்டியுள்ள மேற்கோள்களை எல்லாம் காட்டிப் பல ஆண்டுகளுக்கு முன் இச்சொல்லைப் பற்றி மட்டும் கட்டுரை எழுதியிருக்கிறேன். எதில் வெளியாயிற்று என்று நினைவில்லை. 

குறியெதிர்ப்பையில் வரும் ஐ இரண்டாம் வேற்றுமை உருபுதான் என வாதிட்டதாகவும் நினைவு. பொதுவழக்குச் சொல் ஒன்று வட்டார வழக்காக மாறி வாழும் என எழுதிய நினைவு. இதைக் கொண்டு வள்ளுவர் கொங்கு நாட்டவர் என்று நிறுவ மறந்து போனேன். அதனால் என்ன, உலகப் பொதுமறை கொடுத்தவர் கொங்கு நாட்டவர் என்று இப்போது சொல்கிறேன்.


No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...