Thursday, July 29, 2021

வள்ளுவர் காலத்து அந்நியமாதல்

 


பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று(அதிகாரம்:வரைவின் மகளிர், குறள் எண்:913)

ஒரு சார் அறிஞர்கள் , சில சமூகங்களில் இருந்த வழக்கம் காட்டிப் பிணந்தழுவுதலை விளக்கியுள்ளனர். *

'இவை ஒரு வழக்கத்தை உள்ளிட்டுரைத்தது என்பதைக் காட்டிலும் இன்பமின்று என்பதற்குக் காட்டிய இல்லாத நிகழ்ச்சியை உவமித்ததாய் அதன் இழிவை மிகுதிப் படுத்தக் கூறியதுமாகலாம் ' - எனக் கல்குளம் குப்புசாமி முதலியார் செந்தமிழ் இதழில் கட்டுரையொன்றில் விளக்கியிருப்பதாகத் திருக்குறள் உரைக் களஞ்சியத்தில் (மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிப்பு) ச.தண்டபாணி தேசிகர் குறிப்பிட்டுள்ளார்.

முதலியார் 'கூறியதுமாகலாம்' எனப் பிற வாய்ப்புகளை ஐய வாய்பாட்டால் சுட்டிக்காட்டுகிறார். இதுவே ஏற்புடையது. கிடந்தாங்குப் பொருள் கொள்ள வாய்ப்பிருக்கும் போது அரிதான வழக்கமொன்றைத் தேடி இடர்ப்பட வேண்டியதில்லை.

கிடந்தாங்குப் பொருள் கொள்வதில் ஆண் - பெண் உறவு சார்ந்த , ஒழுக்கம் என்பதற்கும் மேலான, மக்கட் பண்பொன்று புலப்படுகிறது.

காசு இருக்கிறது. கணிகை இருக்கிறாள். இவனுக்கு இன்பம்; அவளுக்குப் பொருள்.
ஒழுக்கக்கேடு என்று சொல்லலாம் (அன்றாட நடை முறை ஒழுங்குகளில் வழுவுதலும் ஒழுக்கக் கேடுகள்தாம்);  காசு காலியாகிவிடும் என்று சொல்லலாம். இவை குறைகள்தாம் ; குற்றமென்ன!

பொருட்பெண்டிர் முயக்கம் அறம் சாராதது.

'இன்பமும் பொருளும் அறனு மென்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை ... '   என்பார் தொல்காப்பியர்.

இந்த உறவு, மக்கட் பண்பு சார்ந்த உணர்வுடை மாந்தர்க்குரிய, அறம் சாராதது ; எந்திர மயமானது எனக்  கருதுகிறார்  வள்ளுவர்.



மார்க்சியம் முதலாளியக் கட்டத்தில் உற்பத்தி உறவிலும் உணர்வு நிலையிலும் காணப்பட்ட அந்நியமாதல் பற்றி விளக்கியுள்ளது. வணிகம் மேலோங்கிய கட்டத்தின் ஒரு வகை ' முன்னோடி அந்நியமாதலை ' இத்தகு குறட்பாக்கள் உணர்த்துகின்றன எனலாம்.

இது வள்ளுவ நுட்பம் .

( உடனே ' எல்லாப் பொருளும் இதன்பால் உள' என்று கிளம்பவேண்டாம். புரிதலுக்காகச் சொன்னேன்.வள்ளுவர் அந்நியமாதலைக் கோட்பாடாகக் கூறவில்லை)
__________________

*இருட்டறையில் அயலார் பிணத்தைத் தழுவுதல் என்பதற்கான சுவையான உரைகளிலிருந்து சில:
அறையிற் பிணமாயினும் ஏதிற் பிணமாயினும் அத்தினிச் சாதிப் பெண்டிர் (முரட்டுத் தன்மை நிறைந்த பெண்கள்) சிலர் விருப்பொடு தழுவுதல் கூடும் அதை நீக்குதற்பொருட்டு இருட்டறையில் என்றும், கற்புடைப்பெண்டிர் தம்கணவரிறந்துழி அப்பிணத்தையும் அன்பொடுந்தழுவுதல் உண்டாதலின் அதனை நீக்குதற்கு பொருட்டு 'எதில் பிணம்' என்றும் காட்டிற் பிணம் சிதைவுண்டும் அழுகியும் புழுத்துக் கிடக்குமாதலின் அதனை நீக்குதற்பொருட்டு 'அறையிற் பிணம்' என்றும் சொல்லப்பட்டது (அ சண்முகம் பிள்ளை).
பிணத்தைச் சூழ்ந்து அழும் பெண்களில் உறவினராயின் கட்டித் தழுவி அழுதலும், அல்லராயின் அருவருப்புடன் அழுதலும் மரபாதலின் அயற்பெண்கள் தங்கண்ணால் நோக்காது அழுதலை உளங்கொண்டு கூறியதாம் (இலக்குமணப்போற்றி).
கன்னிப்பெண் இறந்தால் அவள் கன்னிமை கழிப்பதற்காகக் காசு கொடுத்துப்பிணத்தைத் தழுவச் செய்தல் மலை நாட்டு வழக்காதலின் அதனையுட்கொண்டு கூறினது (மு ரா கந்தசாமிக் கவிராயர்).
மலையாள நாட்டில் ஒருவகை மரபில் கன்னிப்பெண் இறந்தால் அவள் பிணத்திற்குத் திருப்பூட்டு புணரச்செய்தல் வழக்கமாதலின் அதனை எண்ணிக் கூறியதாம் (அ மாதவ ஐயர்)
சாவு வீட்டிலே முன்பின் தெரியாத பிணத்தைத் தழுவி சிலர் காசுக்காக ஒப்பாரி வைப்பர். உண்மையில் அவர்களுக்கும், இறந்தவருக்கும், அல்லது அவர் குடும்பத்தினருக்கும் ஒருவித தொடர்பும் இராது. அத்தகையவரைப் போன்றோரே விலைமாதரும் – காசுக்காகக் கட்டிப்பிடித்து முயங்குவர்; அதில் உண்மையான அன்பு இராது.
ஒரு குறிப்பிட்ட வகுப்பினரிடையே, மணமாகாத பெண் இறந்துவிட்டால் அவள் பிணத்தை பேய்த்தன்மையான புணர்ச்சிக்காவது உட்படுத்த வேண்டுமென்பது குலமரபாதலால் கூலிக்காக மணந்து கொண்ட 'கணவன்' அவளைத் தழுவுவது வழக்கமாக இருந்தது; அந்த வழக்கத்தையே 'ஏதில் பிணம் தழீஇ யற்று' என்று வள்ளுவர் குறித்திருக்கிறார் (தேவநேயப்பாவாணர்).
'இருட்டறையில் கல்பிணத்தைக் கட்டி அழுபவற்கு ஒக்கும்' என்றார் (பரிதி). அதாவது ஊறின்பம் கூட பெறமுடியாத கற்பிணத்தை பொருள் கொடுத்துக் கட்டித்தழுவுதல் போல என்பது கருத்து.- http://www.kuralthiran.com/KuralThiran/KuralThiran0913.aspx

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...