பெயரிலிருந்து வினை - 1 நட்பாராய்தல்
நட்(பு)
நள் <
நண்(பு)
பயணிப்பது பிழை , பயணம் செய்வதே சரி ! - என்பது ஒரு சாரார் வாதம்.
நட்பு என்னும் பெயரிலிருந்து 'நட்பது' - என்று உருவான வினையை வள்ளுவரே ஆண்டிருக்கிறாரே, அவ்வழியில் பயணம் என்னும் பெயரிலிருந்து வினையை உருவாக்கிப் பயணிப்பது பிழையில்லையே ! - என்பது எதிர் வாதம்.
இதனை ஒத்த , " பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் " என்னும் தொடர் திருமண அழைப்பிதழ்களில் இடம்பெற்றுவந்திருக்கிறது; இப்போதும் ஓரளவு தொடர்கிறது.
யணம் செய்வது , பயணிப்பது இரண்டுமே பிழையில்லை என்பது என் சமரசவாதம்.
அவரவர் உளப்பாங்குக்கேற்ப ஒன்றைக் கையாளலாம். நடைப் பன்மை கருதி ஒருவரே இரண்டையும் சூழலுக்கேற்ப ஆளலாம்.
*****
என் ஆர்வத்தைத் தூண்டியது பின்வரும் [முகநூல்]உரையாடல்:
" நட்புஎன்னும்பெயர்ச்சொல்லிலிருந்துநட்பது என்றுசொல்லாக்கம்செய்துள்ளாரே! "
" அது நள் என்னும் வினைச்சொல்லில் பிறந்ததே "
" நடு என்பதே நட்புக்குப்பகுதி. நடு→நட்டல்(குறள்) ஒருவர்தன்னுள்ளத்தில் மற்றொருவரை நடுவதேநட்பு.நள்பகுதியாயின் நள்ளல் என்றே வரும்.எள்ளுவது எள்ளல்என்னுமாப்போல "
" நடு+பு எப்படி நட்பு எனப்புணர்ந்தது? அங்கு பகுதி இரட்டிக்கக் காரணம் என்ன? நடு, நள் யாதாயினும் அவை வினைச்சொற்களே "
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழின் வரலாற்றுப் போக்கை எட்டியவரை பின்னோக்கிப் பார்ப்பதென்றால் சான்றோர் செய்யுள்கள்தாம் வாய்ப்பானவை.
புலவர்மணியன் அவர்களின் , ' சங்க இலக்கிய வினை வடிவங்களை ' எடுத்தேன். நட்பு எனும் பொருள் குறிக்கும் மூன்று அடிப்படை வடிவங்கள் கிடைக்கின்றன( நட்பு எனும் பொருண்மை சார்ந்த தோழமை முதலியன பற்றி இங்குக் கருதற்க) :
நட்பின் , நட்பினன் , நட்பினை , நட்பு , நட்பும் - என்னும் நட்புச் சார்ந்த வடிவங்கள் பலவற்றை அவர் வினைகளாகக் கொண்டுள்ளார்.
நண்ப , நண்பினர் , நண்பினன் , நண்பு - என்பனவும் வினைப்பொருண்மை காட்டுவதாகக் கருதியுள்ளார்.
நள்ளாதார் - என்பதையும் வினைவடிவமாகச் சேர்த்துள்ளார். இது சான்றோர் செய்யுளுள் புறநானூற்றில் ஓரிடத்தில் மட்டுமே உள்ளது (நள்ளாதார் (1) நள்ளாதார் மிடல் சாய்ந்த - புறம் 125/5)
நள்- என்பதன் அடியாக இத்தகைய எதிர்மறை வடிவங்களே கீழ்க்கணக்கு நூல்களிலும் உள்ளமையைப் பேரா. பாண்டியராஜன் உதவியுடன் பார்க்கமுடிகிறது (tamilconcordance.in).
நள்ளா (1) , நள்ளாதவர்க்கும் (1) , நள்ளாதார் (1) , நள்ளாதான் (1) , நள்ளாது (1) , நள்ளாமை (1) , நள்ளார் (2) , நள்ளான் (1) - என எட்டு வடிவங்கள் ஒன்பது இடங்களில் பயின்றுள்ளன.
பயில்வு குறைவாயிருப்பினும் , எதிர்மறையில் மட்டுமே இருப்பினும் நள்- என்னும் உரி/வினையடியிலிருந்தே நட்(பு), நண்(பு) முதலியன உருவாக வாய்ப்பிருக்கிறது.
நள்¹-(ளு)-தல் [நட்டல்] naḷ- , 5 & 9 v. tr. cf. நளி². 1. To approach, join, associate with; அடைதல். உயர்ந்தோர்தமை நள்ளி (திருவானைக். கோச் செங். 25)
- என ' நள்-(ளு)தல் ' என்பதை வினையடியாகக் காட்டுகிறதுசென்னைப் பல்கலைக்கழகழகத் தமிழ்ப்பேரகராதி (TAMIL LEXICON) ; கச்சியப்ப சுவாமிகளின் திருவானைக்காப் புராணத்திலுள்ள ' நள்ளி ' என்னும் வினையெச்ச வடிவத்தையும் காட்டுகிறது. வேறு இலக்கியங்களிலும் இத்தகைய விதிவினை வடிவங்கள் அரிதாகவேனும் காணப்படலாம்.
புலவர்மணியன் அவர்கள் வினைவடிவங்களாகத் தந்திருக்கும் சிலவற்றைப் பற்றிய மறுபரிசீலனை தேவைப்படுகிறது என்றாலும் , நட்பு என்பதை ஒரு தொழிற்பெயர் வடிவமாக , நள்- என்னும் வினையடியிலிருந்து உருவானதாகக் கொள்ள இடமிருக்கிறது (இன்னும் சற்று விரிவாக அறிய ஆர்வமுடையோர் இறுதியிலுள்ள இணைப்பைப் பார்க்கவும்)
இத்தகைய ' தடுமாற்ற ' த்திற்குக் காரணமென்ன ?
தொல்காப்பியத்திடம்தான் போக வேண்டும்.
" உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை,
இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி,
பெயரினும் வினையினும் மெய் தடுமாறி,
ஒரு சொல் பல பொருட்கு உரிமை தோன்றினும்,
பல சொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும்,
பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி,
தம்தம் மரபின் சென்று நிலை மருங்கின்,
எச் சொல் ஆயினும், பொருள் வேறு கிளத்தல் " (உரியியல், 1)
உரிச்சொல்லின் இயல்பிலேயே ' பெயரினும் வினையினும் மெய் தடுமாறும் ' என்கிறது தொல்காப்பியம். உரிச்சொல் என்னும் வகையின் இன்றியமையாமை இதனாற் புலனாகிறது.
இளம்பூரணர் ' மெய் என்பது பொருள் ' என்கிறார். சேனாவரையர், தெய்வச்சிலையார் , நச்சினார்க்கினியர் ஆகியோர் மெய் என்பது உருபு (உருவம்) என்கின்றனர். உருவம் என்பது ஏற்புடையது.
நள் - என்பதை ஓர் உரிச்சொல் எனலாம்.
நள் - பற்றித் தொல்காப்பியம் கூறவில்லை; நளி பற்றிக் கூறியிருக்கிறது. பார்ப்போம்.
" தடவும் கயவும் நளியும் பெருமை " (உரி.23)
என வரையறுத்து, ஒவ்வொன்றும் வேறு பொருளிலும் வருவதை அடுத்தடுத்துச் சொல்லும்போது ,
" நளியென் கிளவி செறிவும் ஆகும் " (உரி. 26) என்கிறது தொல்காப்பியம்.
இளம்பூரணர் , சேனாவரையர், தெய்வச் சிலையார் ஆகியோர் ' நளியிருள் ' என்பதைக் காட்டுகின்றனர். நச்சினார்க்கினியர் காட்டுவது :
" சிலைப்பு வல்லேற்றின் தலைக்கை தந்துநீ
நளிந்தனை வருதல் உடன்றன ளாகி " (பதிற். 52: 15-16)
" சிலைத்தலையுடைய வலிய ஏற்றினைப் போல முதற்கை கொடுத்து நீ செறிந்து
வந்தமையின் பொருட்டு , (நின் மனைவியாகிய அரிவை) ஊடலுற்று..." (ஒளவை துரைசாமிப்பிள்ளை உரை)
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் , துணங்கைக் கூத்தில் ஆடும் மகளிர்க்குப் பெருமிதந் தோன்ற நிமிர்ந்து தலைக் கை கொடுத்து அம்மகளிரோடு இணக்கமாக நெருங்கி ஆடி வருவது கண்ட அவன் மனைவி ஊடல் கொள்ளும் காட்சி இது (பொருளொடு புணர்ந்த உவமை நயத்தைப் பிறகு பார்ப்போம்)
' நளிந்தனை வருதல் ' என்பது நெருங்கியும் இணங்கியும் வருதலை உணர்த்துகிறது எனலாம். எனவேதான் நச்சினார்க்கினியர் பிறர் காட்டும் நெருங்கிச் செறிந்த இருளை மட்டுமே குறிக்கும் எடுத்துக்காட்டை விடுத்து, நளி என்பதன் பொருளாகத் தொல்காப்பியம் சுட்டும் செறிவென்பது நெருக்கம் , நட்பு இரண்டையும் குறிக்குமென்று கருதி இதனைக் காட்டியுள்ளார் போலும்.
உரியியலின் இறுதி எட்டு நூற்பாக்களுள் சில உரியியலுக்கு மட்டுமன்றிப் பொதுவாகச் சொற்கள் அனைத்துக்கும் உரியவை. ஆனால் அவற்றை உரியியலின் ஈற்றில் வைக்க நேர்ந்தது பற்றித் தனியே பார்க்கலாம்; பார்க்க வேண்டும்.
தொல்காப்பியர் - இக்கால நிலைநின்று குறைகாணலாம் எனினும் அவற்றை மீறி - ஒரு மேதை என்பது உரியியலாலும் புலப்படுகிறது.
________________________________________________________________________
இணைப்பு
(புலவர் மணியன் சுட்டிய நூற்பெயர் , பா , அடி எண்களைத் தவிர்த்துள்ளேன். பகர அடைப்பினுள் இருப்பவை[ ] நான் சேர்த்தவை )
நட்ட - ¹நட்பு[ச்] செய்த , ²நிலைநிறுத்திய
" (போலும்) - நட்டுவைத்தவை போன்ற
நட்டவர் - நட்புச் செய்தவர்
நட்டனர் - ¹நட்புச் செய்தனர் , ²[(கல்) நிறுத்தினர்*]
நட்டனை - நட்புச் செய்தாய்
நட்டார்க்கு - நட்புச் செய்தவர்க்கு
நட்டு - ¹நட்புச் செய்து , ²நாட்டி/நிலைபெறுத்தி
நட்டோர் - நட்புச் செய்தோர்
நட்பின் - நட்டலினால்/நட்டால்¶
நட்பு - நட்டல் (தொழிற்பெயர்)
நட்பும்- [புணர்தலும் §]
நண்(பு) - வடிவங்கள்
——————————————
நண்ப - நட்டலுடையவனே°
நண்பினர்♪
நண்பினன்Ω-
நண்புμ
நள்- வடிவம்
———————
நள்ளாதார்±
====================
நண்ண(உண்டு)
நண்ணாத் (தெவ்வர்)
நண்ணார் - பகைவர்
நண்ணார் (தேஎம்)
நண்ணி
நண்ணிய - அடுத்துள்ள, பொருந்திய
நண்ணியது
நண்ணியவை
நண்ணியார்
நண்ணு (வழி) - அண்ணிதான
நண்ப - நட்டலுடையவனே°
நண்(பகல்) - செறிந்த
நண்பினர்♪
நண்பினன்Ω
நண்புμ
நணி (இருந்த) - அளித்தாக
நணி (செலினும்) - அணுக
நணி/த்தந்தனை - அணித்தாகக் கொண்டுவந்தனை
நணித்து
நணித்து ( இல்லை)
நணி (நணித்து) - அணிமைத்து
நணி (பிரம்பு) - அணித்தாய் நின்ற , நண்ணியதாய
நணி (மருதம்) - அணித்தே உள்ள
நணியர் - அண்மையில் உள்ளார் (நண்ணு - பகுதி)
====================
நள் (இரும்பொய்கை)
நள் (இருள்) - செறிந்த (நள்தல் - செறிதல்)
நள் (என் யாமம்) - செறிந்த ...(ஒலிக்குறிப்பும் ஆம்)
நள்ளாதார்
நளி^ - செறிந்த இடம் (முதல்நிலை திரிந்த தொழிலடிப்
பெயர்)
நளி‡ (இரும் கங்குல்)- செறிந்த (நளி என்னும்
உரிச்சொல்லடிப்பிறந்த வினைப்பகுதி)
" (இரும் சிலம்பு)
" (இரும் சோலை)
" (இரும் பரப்பு)
" (இருள்)
" (கடல்)
நளி/கொள்(சிமையம்)
நளி (சிலம்ப) - குளிர்ந்த... ¢
" (சினை) - செறிந்த
நளி (சினை வேங்கை)
நளி (சுடர்) - அடர்ந்த நெருங்கிய
நளி(த் தூவல்) - செறிந்த
நளிந்தனை (வருதல்) - செறிந்து
நளிந்து (செறிந்து)
நளி (நீர்)
நளிப்பன - செறிவன
நளிப்பனன் - செறிந்தோன்
நளிப்பு - செறிவு
நளி/படு(சிலம்பு) - செறிந்த
நளி (பரப்பு)
" (புகை)
" (புணர்மார்) - இறுக ...
" (பெயல்) - மிக்க (நளிதல்- மிகுதல்)
" (மணல்) - செறிந்த
" (மலை)
" (முகை)
" (முந்நீர்)
" (முழை) - செறிந்த
நளிய - செறிவை உடையை[உடைய]
நளி(வாய்) - செறிந்த ...
__________________
குறிப்புகள்
¹ நட்புச் செய்தல் , ² நட்டுவைத்தல் எனும் பொருள் வேறுபாடு கருதி எண்ணிடப்பட்டன.
*இனி நட்டனரே கல்லும் (புறம்.264.5)
¶அகம்.12.5 . பழைய உரையிலும் அதனைப் பின்பற்றி ந.மு.வேங்கடசாமி நாட்டார் , ரா.வேங்கடாசலம்பிள்ளை இணைந்தெழுதிய உரையிலும் 'நட்பினால்' என்றே பொருள் தரப்பட்டுள்ளது. நற்றிணை (32.8 , 72.3 , 323.4)யிலும் ஓரிடத்தில் (32.8) மட்டும், நட்பின் அல்லது = நட்புக்கொள்ளுவதல்லது (பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை) என வினைச்சொல்லாகப் பயின்றுள்ளது.
§" நாமமார் ஊடலும் நட்பும் தணப்பும் " (பரி. 20.108) நட்பும் = புணர்தலும் என உரைகாண்கிறார் பொ.வே.சோமசுந்தரனார்.
°குறு.129.1. நட்பையுடையோய் - உ.வே.சா
♪குறு. 302.5. நட்பையுடையார் - உ.வே.சா.
Ωபுறம்.216.6 . நட்பினையுடையன் - பழையவுரை
μபுறம். 29.21 நண்பிற் பண்பு = நட்போடு கூடிய குணம் ; புறம். 71.15.நண்பிற்
கேளிர் =நண்பினையுடைய நட்டார் ; புறம்.212.9. பொத்து இல் நட்பிற் பொத்தி = புரையில்லாத நட்பினையுடைய பொத்தி - பழையவுரை]
±புறம்.125.5. பகைவர் பழையவுரையாசிரியர்]
^ நள் என்பதன் திரிபு நளி எனக் கொண்டுள்ளார்
‡ நளி என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த வினைப் பகுதியாகக் கொண்டுள்ளார்.
¢" மரம் பிறங்கிய நளிச் சிலம்பின் " = மரங்கள் செறிந்த குளிர்ந்த மலையில் - பழையவுரையாசிரியர். 'நளிர்' என்பது பாடமாகலாம். ஆனால் கிடைத்துள்ள சுவடி எதிலும் இப்பாடம் இல்லை போலும்.
____________________________________________________________________________________________________________________________________________________________________________________________
பெயரிலிருந்து வினை 2 - முறுவல் → முறுவல் செய்தல் → முறுவலித்தல்
பயணம் - பயணித்தல்
நிச்சயம் - நிச்சயித்தல்
எனப் பெயரையே வினையடியாக்குதல் பற்றி ஒரு விவாதம் நடந்தது. அப்போது 'நட்பு' என்னும் பெயரடியாகப் பிறந்த 'நட்பது' என்னும் வினையை வள்ளுவரே ஆண்டுள்ளாரே என்று பயணித்தல் வகையை ஆதரிப்போர் வாதிட்டனர். அதில் தலையிட்டு நட்பு என்பது நள் - என்னும் பெயரினும் வினையினும் மெய்தடுமாறிய உரிச்சொல்லடியாகப் பிறந்தது என்னும் கருத்தை முன்வைத்தேன்.
என்றாலும் அந்த விவகாரம் எனக்குள் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தது. அது குறித்த திட்டமில்லாத துழாவலில் கைக்குக் கிடைத்தது முறுவல்¹. இது, ' பல் , எயிறு , முறுவலித்தல் ' என்னும் பொருள்கள் குறிப்பதாகப் 'பாட்டும்தொகையும்' (என்.சி.பி.எச். , இரண்டாம் பதிப்பு ,1981 ; எஸ்.ராஜம் , முதற்பதிப்பு ,1957) சுட்டுகிறது².
அல் ஈற்றுத் தொழிற்பெயர் போல் காணப்பட்டாலும் முறுவல் என்பது முழுத் தனிச்சொல் ; பெயர்ச் சொல். பாட்டும் தொகையுமாகிய சான்றோர் செய்யுளுள் முறுவல் என்பது எவ்விடத்திலும் எவ்வடிவிலும் வினையாக நிற்கவில்லை (புலவர்மணியன், சங்க இலக்கிய வினை வடிவங்கள் , பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனம் , 2007)
சான்றோர் செய்யுளில் மட்டுமன்றிக் கீழ்க்கணக்கிலும் சிலம்பிலும் முறுவல் என்னும் வடிவம் பரவலாக வழங்கியுள்ளது. முறுவலள் , முறுவலாய் , முறுவலார் , முறுவலாள் என்னும் குறிப்புவினை வடிவங்கள் சில இடங்களில் ஆளப்பட்டுள்ளன.
பத்திப்பாடல்களில்தான் முறுவல் செய்தாள் , முறுவல் செய்தான் , முறுவல் செய்து , முறுவல் செய்ய , முறுவல் செய்யும் எனச் ' செய் ' என்னும் காரியவாசகத்துடன் வினையாவதைக் காணமுடிகிறது . முறுவலிப்பு என்னும் தொழிற்பெயர் வடிவம் அப்பர் தேவாரத்தில் ஓரிடத்தில் காணப்படுகிறது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முறுவலிக்கும் , முறுவலிப்ப என்னும் வடிவங்கள் முறையே ஒவ்வோரிடத்தில் மட்டும் காணப்படுகின்றன.
சீவக சிந்தாமணி , வில்லி பாரதம் ஆகியவற்றில் முறுவலித்து என்னும் வினையெச்ச வினை தலைகாட்டுகிறது.
பெரியபுராணத்தில் முறுவலிப்பார் என்னும் முற்றுவினை வடிவம் உள்ளது³.
முறுவல் என்னும் பெயர் காலப்போக்கில் வினையடியாகவும் மாறி, முதலில் - செய் சேர்ந்தும் , பிறகு கால இடைநிலைகள் சேர்ந்தும் வினையாகியிருக்கிறது. இது தமிழ் உளப்பாங்கு போலும்!
இத்தகைய வேறு சொற்களையும் , அவற்றின் வரலாற்றுப்போக்கையும் இக்கால இலக்கியம் வரை கண்டு அவற்றின் வடிவ மாறுதல் போக்கைக் காணவேண்டும்.
எவ்வாறாயினும் பெயரடியிலிருந்து வினை உருவாதல் தமிழுக்குப் புதிதன்று என்பது உறுதி.
————————————————————————————————
1.காதல் என்னும் சொல்லையும் எடுத்துக்கொள்ளலாம். வடிவ அளவில் ஒத்ததுதான்.
ஆனாலும் தொகை நூல்களுள் காலத்தால் பிற்பட்ட கலித்தொகையில் ' காதலித்து '
என்னும் வினைவடிவம் வந்துவிட்டது. அதனோடு " காதலம் (அன்மை) -
காதலிக்கப்படுவேம் (நற்.268:6) " என்பதையும் - இவ்விரண்டை மட்டும் - தருகிறார்
புலவர்மணியன் ( சங்க இலக்கிய வினை வடிவங்கள் , பன்னாட்டுத் திராவிட
மொழியியல் நிறுவனம் , 2007)
2.முறுவல் muṟuval , n. [T. murupu, K. muruva.] 1. Tooth; பல். முத்த முறுவல் (குறள், 1113). 2.
Smile; புன்னகை. புதியதோர் முறுவல் பூத்தாள் (கம்பரா. சூர்ப்ப. 5). 3. Happiness;
மகிழ்ச்சி. பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் (தொல். பொ. 111). 4. An ancient treatise ondancing, not extant; இறந்துபட்டதொரு பழைய நாடகத்தமிழ் நூல். (சிலப். உரைப் பாயிரம், பக். 9.)
முறுவலி-த்தல் muṟuvali- , 11 v. intr. < முறுவல். To smile; புன்னகைசெய்தல். அது
முறுவலித்துநகுதலும் அளவே சிரித்தலும் பெருகச் சிரித்தலும் என
மூன்றென்ப (தொல். பொ. 251, உரை) - TAMIL LEXICON
3. முனைவர் ப.பாண்டியராஜா அவர்களின் தமிழ் இலக்கியத் தொடரடைவு
(tamilconcordance.in) இலக்கியங்களில் முறுவல் வடிவங்களைத் தொகுக்க
முற்றிலும் துணையாகக் கொள்ளப்பட்டது. பெரு நன்றி!
-------
Raveenthiran Venkatachalam: முறுவல் தொழில்பெயரே; பகாப்பதமன்று. அது முறு(கு) என்ற வினைச்சொல்லிலிருந்து பிறந்தது. முறு என்றால் கோபித்துக்கொள் எனப்பொருள். "அவன் முறுக்கிக்கொண்டான்" என்ற வழக்கு இன்றும் உண்டு. கோபிக்காமல் புன்னகைப்பதை முறு+(அ)+அல் முறுவல் என்றனர். அகரம் புணர்ந்துகெட்ட எதிர்மறை இடைநிலை.
காது என்பது அன்புசெய் என்னும் வினை ஏவல். அது அல் விகுதி பெற்று காதல் என்னும் தொழில்பெயராகி பின்னும் பகுபத உறுப்புக்களைப் பெற்று காதலித்தல் என்றானதுபோல முறு என்னும் வினை ஏவலும் அல் விகுதிபெற்று முறுவல் என்னும் தொழில்பெயராகி பின்னும் முறுவலித்தல் ஆயிற்று. இவ்வாறே முயல் என்ற வினை முயற்சி (முயல்+சி) ஆகி பின்னர் முயற்சித்தல் ஆனது. முடிவாக முறுவல் பெயர்ப்பகுதியன்று. அது விகுதியேற்ற வினைப்பகுதியாம்.
மதிவாணன் பாலசுந்தரம் : தங்கள் கருத்து - அல் ஈற்றுத் தொழிற்பெயர் ஒழுங்கு நோக்கிய ஒரு தருக்கத்தைச் சார்ந்து நிற்கிறது ; எண்ணிப்பார்க்கத் தூண்டுகிறது . நன்றி!
நான் பொதுவாகப் புறநிலைச் சான்றுகள் சார்ந்து விளக்கமுற்படுவேன். முறு(க்கு) - என்பது சினத்தைக் குறிக்கும்போது அது உருவகமாகப் பிணக்கை அல்லது சினத்தைக் குறிக்கலாம் தோன்றுகிறது.
முறுக்கு , முறுகு ஆகிய இரண்டும் சங்க இலக்கியங்களிலும் கீழ்க்கணக்கு நூல்களிலும் சற்றே தம்முள் வேறுபட்ட பொருள்களைக் குறித்து வழங்கியுள்ளன ; உருவகமாகக் கூட, பிணக்கைக் குறிக்கவில்லை.
'கயிறு நன்றாக முறுக்கிக்கொண்டது'
'முறுகலான தோசை'
- என்னும் தற்கால வழக்கிலும் பழம்பொருட்குறிப்புத் தொடர்கிறது.
முறுக்கு - என்னும் வினையின் தற்காலப் பயன்பாடு நோக்கி, " 4: (பிறர் தன் அருமை தெரிந்து மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற வகையில்) ஒருவித இறுக்கத்துடன் நடந்துகொள்ளுதல்; act in an affected manner; be stiff. புது மாப்பிள்ளை கொஞ்ச நாள் அப்படித்தான் முறுக்கிக்கொள்வார்! " என ஒரு பொருளும்
காட்டும் தந்துள்ளது ' க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி'.சினம் என்னும் பொருள் கொண்டாலும் தவறில்லை.
என் ஊகங்கள் : 1.முறுவல் என்பதன் முதனிலைப்பொருள் , பல்/எயிறு என்பதாகலாம் ;அதன் நீட்சியாகப் பல் தோன்றச் சிரிப்பதைக் குறித்திருக்கலாம்.
2. பல்லைக் குறித்து நகார் என்னும் சொல் சிறுபாணாற்றுப்படை (57), கலித்தொகை (93:18) ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது. இதனை நோக்க நகு (தல்) என்பதும் பல்லைக் குறித்த சொல்லின் நீட்சியாகலாம்.
3.நகார் nagār , பெ. (n).1.முத்தையொத்த வெண்பல் ; tooth like pearls " மகாஅர் அன்ன மந்தி நகார் அன்ன நளிநீர் முத்தம் " (சிறுபாண்.57).
[நகு → நகார்.]
முத்துப் பற்கள் ஒளிருதற் கருத்து வேர். நகையென்னுஞ்சொல் , முதற்கண் ஒளிருதலைக் குறித்து, அடுத்து ஒளிரும் பற்களையும் , சிரிப்பினையும் குறிக்கலாயிற்று
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி.
No comments:
Post a Comment