Tuesday, May 11, 2021

மருத்துவச் சூழ்ச்சி!

 மருத்துவச் சூழ்ச்சி!




இரண்டு நாளாய்ப் பல்வலி. மருத்துவரிடம் சென்றேன். 

மருத்துவமனைப் பதிவுக் கட்டணம்            ரூ.  50/-

மருத்துவர் ஆலோசனைக் கட்டணம்            ரூ. 250/-

மருந்து (தற்காலிகமாக வலியை நிறுத்த) ரூ. 150/-

போக வர ( 'ஓலா' புண்ணியத்தில் )              ரூ.    90 /-


ஊடுகதிர்ப் படம்(X-ray) எடுத்து வரச் சொல்லியிருக்கிறார்.

சிகிச்சை இனிமேல்தான். அறுவைச் சிகிச்சை. அப்போதுதான் முழுமையான சிகிச்சைக் கட்டணம் தெரியும். 


பழந்தமிழில் சூழ்ச்சி என்பது ஆலோசனையைக் குறிக்கும். இப்போது இரு பொருளிலும் ஒருங்கு கொள்ளலாம். ('இருவயின் நிலையும் பொருட்டா கும்மே' என்பார் தொல்காப்பியர். இங்கு ஓரிடத்திலேயே இருவயின் நிலையும்...)


மூன்றாண்டுக்கு முன்பே, அவரிடம்  பல்லைக் காட்டியிருக்கிறேன்.பற்கள் சிலவற்றைப் பிடுங்கியிருக்கிறார் - பணத்தையும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.செயற்கைப் பற்கள் சில பொருத்தியுமிருக்கிறார்;பழக்கமானவர்தான்; காட்சிக் கினியர்; இன்சொல்லர்; நல்லவர்.


துளையிட்டு, திருகாணி கொண்டு நுண்மின் கருவிகளின் துணையுடன் செயற்கைப் பற்களை முடுக்கினார். தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்பக் கட்டணமும் வளராதோ!

அவரைச் சொல்லிக் குற்றமில்லை. 


" டாக்டர், உறுதியா நிக்குமா?" என்று கேட்டேன். 

"கடவுள் குடுத்த பல்லே நிக்கலையே, சார்!" என்றார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஓராண்டுக்குப் பிறகு வேறு சில பற்களுக்காக, மீண்டும் போக நேர்ந்தது.

இப்போது பல் வேர்க்கால் (root canal) மருத்துவம்.

 பல் அல்லவா! அதனால் பல் நாள் நீள்கிறது. 

வலிக்கும்  பல்லைச் சுற்றி மரத்துப் போகச்செய்து, வாயை அகட்டிச்* சுரண்டியும் தேய்த்தும் குடைந்தும் தீய்த்தும் தவணை முறையில் நடக்கிறது.

நான்காம் நாள். உறை போட வாய்ப்பாகப் பல்லை இழைக்கும் போது,          "கொஞ்சம்  கொஞ்சம்   கண்ட்ரோல் பண்ணிக்குங்க" என்று சொல்லிக்கொண்டேயிருந்தார் மருத்துவர்.



' நா காக்க ! '

ஐயன் வள்ளுவன் அன்றே சொன்னதுதானே!

அது பல் மருத்துவத்துக்கும் பொருந்துவதில் வியப்பென்ன!                                     எல்லாப்பொருளும் அதன்பால் உள!


(* அகற்றி - ¹அகலமாக்கி, ² அப்புறப்படுத்தி என்னும் இரு பொருளும் குறிக்கிறது. எனவே தெளிவு கருதி அகட்டி என்னும் மருவிய வடிவத்தை ஏற்கலாம்)

      💭💭💭💭💭💭💭💭💭💭💭💭

முதன் முதலாகப் பல்வலி வந்தது நினைவிற்கு வருகிறது.


மரபுவழி மருத்துவர் (நாட்டு வைத்தியர் )திரு.  பட்டாபிராமன் அவர்கள்- பட்டு வைத்தியர் என்று வழங்கும் பெயரோடு- தஞ்சையில் புகழ் பெற்று விளங்கியவர்; எல்லையம்மன் கோவில் தெருவில் விசாலமான இல்லத்தில் கூட்டுக் குடும்பத்துடன் வசித்தார். முன்புறம் மருத்துவ மனை.எங்கள் குடும்ப மருத்துவர்;அப்பாவுக்கு நண்பர்;குடும்ப நண்பர் என்றே சொல்லலாம்.


புன்னகை மாறா முகத்தர்;அவரவர் நிதிநிலைக்கேற்பக் கட்டணம் பெறுவார்; சிற்றூர்களிலிருந்து காய்கறி விற்க வரும் எளியோர் பலரிடம் சொற்ப மதிப்புள்ள காய்கறிகளைப் பெற்றுக் கொண்டு மருத்துவம் பார்ப்பதைப் பலமுறை கண்ணாரக் கண்டிருக்கிறேன்.


பல் சீர் கெட மிகுதியான இனிப்புகள் உண்பது காரணமெனில் இப்போதும் சற்றேனும் என் பற்கள் சில எஞ்சியிருப்பது  அதிசயம்தான்.


 என் இருபதாம் வயதில் , கோடை விடுமுறைக்குக்  கிருஷ்ணகிரியில் இருந்த மாமா வீட்டிற்குச் சென்றிருந்தேன். மூன்றாம் நாள் நள்ளிரவில் முதன் முதலாகப் பற்கள் இனிப்புக்கு எதிர்வினையாற்றத் தொடங்கின:கடும் வலி;உயிர் போகும் வலி; உறக்கமில்லை;சித்திர வதைதான். விடியற்காலை, மாமா தம் கைவசமிருந்த கிராம்புத் தைலத்தை வைத்தார். கடுகடுப்புச் சற்றுக் குறைந்தது . அங்குள்ள மருத்துவரிடம் செல்லலாம் என்றார். நான் தஞ்சைக்கே போய்விடுகிறேன் என்று உறுதியாகச் சொன்னேன்.

 அவருக்கு வேறு வழியில்லை. பேருந்தில் ஏற்றிவிட்டார்.


வழக்கம் போல் அப்பா பட்டு வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்


வைத்தியரும் வலிக்கும் பல்லில்  சிறிது கிராம்புத் தைலம் வைத்தார். மெல்ல மெல்ல வலி பொறுத்துக் கொள்ளும் அளவுக்குச் சற்றே குறைந்தது.


வைத்தியர் அப்பாவுடன் பேசியாவாறே - அன்றாடம் உரையாடுவது அவர்கள் வழக்கம்- கலுவத்திலிட்டுப் 'பச்சிலை'எதையோ அரைத்துக் கொண்டிருந்தார். 


ஒரு வழியாக உரையாடலும் அரைத்தலும் முடிவை எட்டின.


அரைத்ததை உருட்டி எடுத்தார்- கரும்பச்சை உருண்டை.


" வீட்டுக்குப் போய், தூங்கறதுக்கு முன்னாடி காலை நல்லா  கழுவித் துடைத்து, இடது உள்ளங் காலில் வைத்து, - வலி வலது மேற் கடைவாய்ப்பல்லில் - வெற்றிலையால் மூடித் துணிக்கட்டு போட்டுக்க " என்று வழ வழப்பான தாளில் மடித்துக் கொடுத்தார்.


"இது மாதிரி மூனு ராத்திரி கட்டணும். நாளைக்கும் நாளன்னைக்கும் வா" என்றார்.


" இப்ப பல் வலி கூடிக்கிட்டுப் போற மாதிரி இருக்கே ?" என்று பதற்றத்துடன் கேட்டேன். பல் வலிச் சித்திரவதையில் உழன்ற எனக்குப் பச்சிலை உருண்டை மீது நம்பிக்கையில்லை. 'இன்னும் இரண்டு நாள் வேறு வரணுமாமே!'


வைத்தியர் வீட்டில் இரவு உணவு .


வீட்டுக்கு வந்து மருந்தைக் கட்டிக் கொண்டேன். முந்தைய இரவு உறக்கம் கெட்டதால், நல்ல உறக்கம். காலையில் விழித்தபோது வலியின் சுவடே இல்லை.


அதிசயம்!


என்றாலும் எஞ்சிய இரண்டு நாளும் மருந்து வைத்துக் கட்டியாகவேண்டும் என்றார் ; கட்டினார். வாரக்கணக்கில் உள்ளங்காலில் கறுப்புக் கறை இருந்தது.


ஏறத்தாழப் பத்தாண்டுகள் பல்வலி தலை காட்டவே இல்லை.


அவர் அரைத்துக் கட்டியது சித்திர மூல வேர் என்பதைப் பின்னர்,  பெயரளவில் தற்செயலாகத் தெரிந்து கொண்டேன். அவரிடம் சொன்னேன்."இதெல்லாம் உனக்கு ஏன், மறந்துடு" என்றார் செல்லமாக .


மீண்டும் பல் வலித்தபோது அவர் இல்லை.


நாட்டு வைத்தியம் முற்றிலும் மோசடி என்று சொல்ல மாட்டேன்;முடியாது.நாட்டு மருந்துகளின் நன்மைகளைப் பயன் கொண்டுணர்ந்தவன் நான்.


ஆனால் , எல்லா மருந்தும் இதன்பால் உள என்று நாட்டு வைத்தியத்தை மட்டுமே பிடித்துத் தொங்காமல் அவர் நோயின் தன்மையைப் பொறுத்து அலோபதி அல்லது ஓமியோபதி மருந்தும் தருவார்;அரிதாக ஊசி கூட போடுவார்- நெறியில்லை என்றாலும் .


அலோபதி மருத்துவம் பன்னாட்டுப் பெரு வணிக நிறுவன மயமாகிச் சுரண்டுவோர் கைகளுக்குச் சென்றுவிட்டாலும், மருத்துவ ஆய்வுகள்தாமும் அந்நிறுவனங்கள் தயவில் சுரண்டலுக்குப் புதுப் புது வழிகளைத் தேட வாய்ப்பளித்தாலும்,  அலோபதியின் புறவயமான அறிவியல் அடிப்படை வலுவானது என்றே கருதுகிறேன்.


நாட்டு வைத்தியம் சில பல வேளைகளில் வெறும் அதிசயமாகவும் பூடகமாகவும் நிற்கும் நிலையிலிருந்து விடுபடுவது நல்லது என்பது என் கருத்து. புறவயமான ஆய்வுகளை மேற்கொண்டு முறைப்படுத்துவது நல்லது.

அப்படி நடந்து வருகிறதென்று நினைக்கிறேன்.


புற்றுநோய் முதல் புல் தடுக்கிய காயம் வரை கோமியமே பார  தீய ஒளடதம் என்று கட்டாயச் சட்டம் வரும் வரையிலாவது, ' நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை' என்னும் பல்லவியிடம் சரணடைய என்னால் முடியாது.

(2019 சனவரி 7 & 2020 சனவரி 28 - முகநூல் இடுகைகள்)


No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...