Tuesday, May 11, 2021

இனிநினைந்திரங்கல்

 இனிநினைந்திரங்கல்* ( Nostalgia)




T. K.P. கோவிந்தசாமி நாயுடு பூந்திக் கடை

திருச்சி, பெரிய கடை வீதியில் பெரிய சௌராஷ்டிரா தெருவின் தொடக்கத்தில் உள்ளது. எனக்குத் தெரிந்து ஐம்பதாண்டுகளுக்கு மேல் இந்தக் கடையின் வாடிக்கையாளர் எம் குடும்பத்தார்.குடும்பத்தார் எனில், அம்மாச்சி வீட்டார்.

பூந்தியைப் பொறுத்த அளவில் நாங்கள்தாம் - அப்பாவும் நானும் - பெரு வாடிக்கையாளர்கள் .


பத்து வயதிலிருந்தே, ஆண்டுக்கு ஆறேழு முறை திருச்சி செல்வேன். தஞ்சையில் பேருந்தில் ஏற்றிவிடுவார்கள். காந்திச் சந்தை நிறுத்தத்தில் இறங்கிச் சந்தைக்குள்ளிருந்த தாத்தாவின் மளிகைக் கடைக்கு எளிதாகச் சென்று விடுவேன். கடைப் பணியாளர் அம்மாச்சி வீட்டுக்கு அழைத்துச்சென்றுவிடுவார்.அம்மாச்சி வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் தாத்தா, பூந்தி வாங்கித்தரத் தவறமாட்டார். உண்பேன். 


கடைக்குச் சென்றதுமே கடைக்காரர் உடனே ருசி பார்க்கக் கொஞ்சம் பூந்தியைச் சிறு தாளில் வைத்துத் தருவார். பூந்திப்பொட்டலத்தோடு சிறு பொட்டலமாகக் கொசுறும் உண்டு. 


தாத்தா எப்போதாவது தஞ்சை வர நேர்ந்தால் மாப்பிள்ளைக்குப் பிடிக்கும் என்று வாங்கி வருவார். அப்பாவும் நானும் மகிழ்ந்து உண்போம்; உண்டு மகிழ்வோம்.


அப்போதெல்லாம் பூந்தியை எடைபோட்டு ,  சிறு மூங்கில் பிளாச்சுகள் சிலவற்றால் பின்னப்பட்ட நெகிழ்வான கூடையில் செய்தித்தாளை உட்குழிவாகப் பரப்பி அதில் பூந்தியை நிரப்பிச்  சணலால் சுற்றிக் கட்டித் தருவார்கள். நெகிழியைத் தவிர்க்க அந்த வழக்கத்தை மீட்கலாம்.  கடை ஐம்பதாண்டுகளுக்கு முன் எப்படியிருந்ததோ அப்படியே, காலத்தை வென்று நிற்கிறது. 


இன்று காந்திச் சந்தையில் காய்கறி வாங்கிக்கொண்டு, 

பூந்திக்கடைக்குச் சென்றேன். அரைக் கிலோ வாங்கினேன். ருசிக்கான மாதிரி, பூந்திப்பொட்டலத்துடன் கொசுறு என்னும் வழக்கம் மாறவில்லை. பூந்தி கதகதப்பாக, பாகின் கசிவுடன்  ஏறத்தாழ அந்தக் காலச்சுவையில் மாறாமலிருப்பதாகத் தோன்றியது.


திருச்சி, பெரிய கடைவீதியும் கூட, பேரளவு மாறாமல் காலத்தை வென்று நிற்கிறது எனலாம். இப்போதும் பெரிய கடைவீதியில் நடக்கும்போதெல்லாம் சிறுவனாகவே  மாறிவிட்டது போன்ற , தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடப்பது போன்ற கண நேரப் பிரமை தட்டுகிறது.

____________________________


*"இனி நினைந் திரக்க மாகின்று ... " என்று இளமைக்     குறும்புகளை எண்ணி ஏங்கும்  தொடித்தலை விழுத்தண்டினார் (புறம். 243) பாட்டில் இனி என்பது இப்போது என்னும் பொருளினது. இப்போது , இனியது என்னும் இரண்டையும் இயைத்து இனி நினைந் திரங்கல்  என Nostalgia வைக் குறிக்கப் பயன்படுத்திக் கொண்டேன்.


'நினைந்தேங்கல் 'ஏன்பது nostalgia உக்குக் கச்சிதமான கலைச்சொல் -Chellaperumal Audimoolam


ஆமாம். செறிவாக ,ஒரு சொல் நீர்மைத்தாக, கையாள வாய்ப்பாக உள்ளது. நன்றி - மதிவாணன் பாலசுந்தரம்

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...