Saturday, May 15, 2021

நான்உணர்ந்த பேராசிரியர் கா. சிவத்தம்பியவர்களும் எனக்குத் தெரிந்த உலகத் தமிழ் மாநாடுகளும்*

 


தமிழ்நாட்டு அரசியலில் இன்றளவும் ஆதிக்கம் செலுத்தும் திரைப்படங்கள் , உண்மையில் அரசியல் திரைப்படங்கள் அல்ல ; தரத்திலும் தருகையிலும்( quality and presentation) எந்த அழகியல் உயரத்தையும் தொடாத வெற்று நாடகப்பாணிக் கதைப்படங்கள்(dramatic narrative films) என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதியிருந்தார். இத்திரைப்படங்களினூடாக நிகழ்ந்த அரசியல் கருத்துத்தொடர்பு வெற்றிபெற்றதை வரலாற்றுப் பின்னணி, தொழில் நுட்ப வளர்ச்சி, பரவல் , சமூக உளத்தியல் முதலியன கொண்டு கல்விப்புல விவாதத்திற்காகப் பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதிய கட்டுரை  The Tamil Film as a Medium of Political Communication. அது ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் படிக்க மறுக்கப்பட்டது.அதில் ம.கோ.இரா. படங்கள் பற்றிய குறிப்புகளும் உண்டு. முற்றிலும் ம.கோ.இரா. பற்றியதன்று. ம.கோ.இரா. பற்றியனவும் ஆய்வுநோக்கினதேயன்றி, திறனாய்வு அன்று. அப்போது திரையுலகம் தந்த/ சார்ந்த தமிழக முதல்வர் மூவர். பிறர் பற்றியும் அதில் குறிப்புகள் உண்டு.அது முழுமையான கல்விப்புலக் கட்டுரை. அனுமதிக்கப்பட்டிருந்தால் பெரிய விளைவு எதையும் ஏற்படுத்தியிருக்காது. மறுக்கப்பட்டதால் நூலாகிப் பரவிற்று. பின்னரும் பெரிய விளைவொன்றும் இல்லை.


அவர் அதை நூலாக வெளியிட்டபோது ஆங்கிலம் தெரியாத நானே ஆஅஅறு ₹ கொடுத்து வாங்கினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அந்தக் காலத்தில் 56 பக்க நூலுக்கு அந்த விலை அதிகம்தான். பின்பு, அந்தப் புத்தக விற்பனை குறித்தும் அதனால் தமக்கு எதிர்பாராத அளவு கிடைத்த அரயத்தொகை(royalty) பற்றியும் பேரா.சிவத்தம்பி , சற்றே எள்ளற்குறிப்புடன் , கூறக்கேட்டு நிறைவுற்றேன். அந்தப் பதிப்பின் முன்னுரையிலும் மறுக்கப்பட்டதன் பின்னணியை  மென்னகை இழையோட எழுதியிருப்பார். 


மாநாட்டில் தடுக்கப் படாவிட்டால் இந்த அளவுப் பரவலும் பொருளும் ஓர் அறிஞருக்குக் கிடைத்திருக்காது;கல்விப்புல விவாதம் மக்கள் மன்றத்திற்கு வந்திருக்காது.நேரடியாகவோ மறைமுகமாகவோ இவற்றுக்கு ம.கோ.இரா.தானே காரணம்!


                                                                              *

 

 எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டிற்கு வந்த பேரா.சிவத்தம்பி , பேரா. சண்முகதாஸ், பேரா.பீட்டர் ஷால்க்  ஆகியோர் அப்புறப்படுத்தப்பட்டனர். பேரா.ஆ.வேலுப்பிள்ளை திருச்சியிலிருந்தே திருப்பியனுப்பப்பட்டார். இதற்குக் காரணம் இவர்களின் கட்டுரைகளல்ல; இவர்கள் விடுதலைப்புலிகளுக்கு இணக்கமானோராகக் கருதப்பட்டதுதான். தமிழ் ஆராய்ச்சி பற்றிய எந்த உணர்வுமற்ற பெருந்திரள் மக்களால் தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆய்வரங்குகள் வல்லம் வளாகத்தில். என் போன்றோர் எதிலும் கலந்துகொள்ள ஆர்வமற்றிருந்தோம். சிவத்தம்பியவர்கள் வந்திருப்பது கேட்டுத் தமிழ்ப் பல்கலை. வல்லம் வளாகம் சென்றேன். ஆனால், நான் போய்ச் சேர்வதற்குள் அவர் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டார். 

சில தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் ஏதேனும் ஒரு வடிவில் கண்டனம் தெரிவிக்கத் துடித்தனர். அந்த வளாகத்தில் கருத்தரங்கம் நோக்கி வந்திருந்த ஒவ்வொருவரையும் கண்காணிக்க ஒருவருக்கு இரண்டு பேர் எனத்தக்க வகையில் காவலர்கள் சூழ்ந்திருந்தனர். அமர்வுகள் நடந்த அறைகள் ஒன்றிரண்டில் எழுந்த சில ஆவேசக் குரல்களைக் காவல்துறை பொருட்படுத்தவில்லை. 


பேரா.சிவத்தம்பியவர்கள் இத்தகைய நிகழ்வுகளைப் பெரிதுபடுத்தாத, வீம்பு பேணாத, நெகிழ்வான இயல்பினர். இந்த இயல்பை வெறும் சமரசம் என்றோ தந்திரம் என்றோ கருதுவது அறியாமை. இந்த இயல்பை பலவீனம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.  செம்மொழி மாநாட்டிற்கு அவரை அழைத்ததற்கு அவர் எட்டாம் உ.த.மாநாட்டில் அப்புறப்படுத்தப்பட்டதும் காரணம். அதுதான் முதற்காரணமா என்று எனக்குத் தெரியாது. நான் செம்மொழி மாநாட்டில் கட்டுரையாளனாகக் கலந்துகொண்டேன். அவரைப் பார்த்தேன். மரியாதை நிமித்தமான சில நொடி உரையாடலே வாய்த்தது.


--------------------------------------------------------------------------------


சிவத்தம்பியவர்கள் அரம்போலும் கூரிய அறிவாளர்; அதனின் மேலான மக்கட்பண்பாளர்.அவரது நெகிழ்வான எளிவந்த இயல்பிற்கு  என் போன்ற அரைகுறை முந்திரிக்கொட்டைகளைக்கூட அவர் பொறுத்துக் கொண்டு அன்புடன் உரையாடியது நான் உணர்ந்த சான்று. வாயிற்காவலர் , வண்டிப் பழக்கடைக்காரர் யாவரிடமும் இன்முகம் காட்டிப் பேசுவார். 


1982 இல் பேராசிரியர் சிவத்தம்பியவர்கள், Literary History in Tamil என்னும் தலைப்பிலான திட்டப்பணிக்காகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வந்திருந்தார்.அரண்மனை வளாகத்திலிருந்த ஓடு வேய்ந்த சிறு குடில் அவருக்கு ஒதுக்கப்பட்டது. 


அப்போது நான் ஆய்வியல் நிறைஞர் பட்ட (M.Phil)  மாணவன். பேரா. சிவத்தம்பி அவர்களிடம் தொடக்கத்தில் அணுகாது அகலாது  தொடர்பு கொண்டிருந்தேனாயினும் ,  இயல்பாயமைந்த அவரது எளிமையும் இணக்கமும் காரணமாக மிக  விரைவில் நெருக்கம்பேண முடிந்தது. 


ஒரு மாலை வேளையில் அவரைப் பார்க்கச் சென்றேன். அரண்மனை வாயிலில் நுழைந்ததும் இடப்புறம் சற்று உயரமான தளம் .  அதில் சாய்ந்தவாறு ஓய்வாகப் பேசிக் கொண்டிருந்தார். நான் ஆராய்ச்சி முறையியல் பற்றிக் கேட்டேன். 

" என்னப்பா ஒங்கட ஆக்கள் மெதொடாலஜி மெதொடாலஜி'ன்னு . மெதொடாலஜின்னா தராசு மாதிரியும் அதுல சப்ஜெக்ட போடறமாதிரியும் பேசறாங்க. அப்படி மெகானிக்கலா பாக்க முடியாதப்பா.  ஒனக்குக் கல்யாணம் ஆச்சா? " என்றார்.

நான் " இல்ல சார்" என்றேன்.  

" புத்தகத்துல படிக்கற மெதொடாலஜி கொக்கோகம் மாதிரி. கல்யாணத்துக்குப் பிறகு பயன்படாது " என்று சிரித்தார். 

" எங்கட சப்ஜெக்டப் பொறுத்ததப்பா அது . இந்த  ஃபுட் நோட் , பிப்ளியோகிரோபியெல்லாம் பிரசண்டேஷன் சம்பந்தப்பட்டது" என்றார்.


வேறு பலவற்றிலும் என்னால் அன்று எவ்வளவு இயலுமோ அவ்வளவு தெளிவுற்றேன். பலரும் அவரைச் சந்திப்பார்கள்; அவரோடு பேச ஆர்வம் காட்டுவார்கள். அவர் சோர்வின்றி , வந்தோர் உளங்கோணாமலும் புலமைத் தரங்குன்றாமலும் உரையாடுவார். வந்தவர்கள் போன பிறகு அன்றாடம் பேரா.அ. மார்க்ஸ், திரு.பொ.வேல்சாமி முதலிய சிலர் பேசிக்கொண்டிருப்பார்கள். நான் பல நாட்கள் உடனிருப்பேன். இரவு பணியாற்றத் தொடங்குவார். 


அடுத்து, அவர் தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுக்கல்வித் துறை நிகழ்வு ஒன்றிற்காகத் தஞ்சை வந்தபோது , கரந்தைக்கல்லூரி ஆய்வியல் நிறைஞர் மாணவர்களுக்காகச் 'சமூகவியலும் இலக்கியமும்' என்னும் பொருளில் இயன்றவரை எளிமைப்படுத்தி ஏறத்தாழ இரண்டு மணி நேரம் உரையாற்றினார் (ஒலிப்பதிவு தொலைந்துவிட்டது).


அப்புறம் மதுரையில் திரு.சுபகுணராசன் அவர்கள் நடத்திய திராவிட இயக்கம் பற்றிய கருத்தரங்கில்தான் சிவத்தம்பியவர்கள் பேரா. தொ.ப. அவர்களை முதன் முதலாக நேரில் சந்தித்தார்;'இவ்வளவு நாள் எங்கய்யா இருந்திங்க' என்று போற்றினார்.[அவர் 1982இல் தஞ்சை வத்திருந்தபோதே திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கம் முதலியவற்றைச் சார்ந்தவர்களுடன் உரையாடியதில் அவ்வியக்கங்கள் பற்றிய  நியாயங்களை முன்பைவிடவும் கூடுதலாக  அவர் கணக்கில் கொள்ள நேர்ந்தது என்பது என் மனப்பதிவு.]


பேராசிரியர் வீ.அரசு அவர்களின் அரிய முயற்சியால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு அழைப்பில் தொடர் சொற்பொழிவாற்ற அவர் வந்திருந்தபோது அவரைச் சந்தித்தேன்.  அவரோடு ஆறுதலாகப் பேச முடித்தது. உடல்நலங்குன்றியிருந்தபோதும் , புதியவற்றை அறிந்து கொள்ள அவர் காட்டிய மாணவ ஆர்வம் வியப்புக்குரியது.


பாரதிதாசன் பல்கலைக்கழக, பாரதிதாசன் உயராய்வு மைய இயக்குநர்   பேரா. ச.சு. இராமர் இளங்கோ அவர்கள் தமக்கேயுரிய அழைப்பு முறையாலும், துணைவேந்தர் பேரா. மு.பொன்னவைக்கோ அவர்களின் தாராளப் போக்கினாலும்  மூன்றுநாள் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்றச் சிவத்தம்பியவர்கள் திருச்சி வந்திருந்தார். நான் அப்போது கல்லூரி ஆசிரியன். அவர் சொற்பொழிவைக் கேட்க மூன்று நாளும் பிற்பகல் தஞ்சையிலிருந்து கிளம்பித் திருச்சி வந்து சென்றேன் [இணைத்துள்ள படம் அப்போது (பிப்ரவரி 2008) எடுத்தது]


                           ----------------------×----------------------×---------------------× -----------------


*திரு. வே. மு.பொதியவெற்பன் அவர்கள் தம் முகநூல் பக்கத்தில்(Pothi) பேரா.கா. சிவத்தம்பி வாரம் பேணிய போது, தமிழவன் கருத்தொன்றைக் காட்டியிருந்தார்:

"சிவத்தம்பி  கலைஞர் கருணாநிதி அவர்களால் கோவை உலகத்தமிழ்மாநாட்டில் சிறப்புச் செய்யப்பட அழைக்கப்படும் அளவு புகழ் பெற்றவர்.அந்தப் புகழைப் பெற மிகவும் சாதுரியமாக வாழ்க்கையை அமைத்திருந்தார்."- தமிழவன்('சிற்றேடு: 14* ஏப்-ஜூன் 2014) .  ' சிவத்தம்பி பெறுமதியும் தமிழவன் சிறுமதியும் ' என்னும் தலைப்பில் தமக்கேயுரிய நடையில் பொதி அதனைக் கண்டித்திருந்தார் (15 மே 2020). அது தொடர்பாக நான் எழுதியவற்றோடு வேறு சிலவற்றையும் இணைத்துச் சற்றே விரித்துள்ளேன்.



No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...